ஏகாந்த இரவில் வா தேவதா
[18]
மஞ்சத்தில் அமர்ந்திருந்த நந்தினிக்கோ, அவன் தொடுகை அவளது ஆத்மா உள்ளூற ஓர் அருவெறுப்பைக் கொடுக்கலானது.
அவள் அருகே அமர்ந்திருப்பது… இருநூறு வருடங்களாக அவள் வன்மம் வைத்து காவு வாங்கக் காத்திருக்கும்.. அதே இராஜசிங்கன்!!
அவளுக்கென்றிருந்த ஒரே உறவான அவள் கணவனை, அவளிடம் இருந்து பிரித்து, கணவன் காட்டிய உன்னத அன்பில் விளைந்த முத்தான வாரிசையும் அழித்த.. அவளது பரம எதிரி இராஜசிங்கன்.
சத்யாதித்தன் வேறு.. அரசன், ‘ஸ்ரீ விக்கிர இராஜசிங்கனி’ன் முகசாயலே கொண்டிருக்க.. சாந்தியடையாத ஆத்மாவான நந்தினிக்கு.. அவன் தொடுகையை தானும் எங்கணம் தாங்க முடியும்?
அவளுள் கோபம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே போக.. யௌவனா உடலுக்குள் இருந்த மாய நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தலைதூக்க ஆரம்பித்த நேரம் அது.
வானம் இருண்ட பிறகு மாத்திரமே.. தனக்கிருக்கும் வல்லமையால்.. யௌவனாவின் உடலுக்குள் புக முடிந்த.. அந்த மாய நந்தினி.. சத்யனை காவு வாங்கக் காத்திருக்கும் அந்த உன்னத நொடிகளை வெறுமனே விடவும் கூடுமோ?
அவள் மனக்கண் முன்.. இருநூறு வருடங்களுக்கு முன்பு நடந்தேறிய.. தன்னை இந்நிலைமைக்கு இழுத்து வந்த இராஜசிங்கனின் இறுதிக் கட்டளையும், அதன் பின்னான நிகழ்வுகளும் ஓடலாயிற்று.
உண்மை விசுவாசியான மகாசேனரைக் கொல்ல உத்தரவிட, அந்த ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனுக்கும் எப்படி மனசு வந்தது??
கணவனின் நிலையைக் கேள்விப்பட்டு, கரு சுமந்த வயிற்றுடன் தன் தாலி பாக்கியத்தைக் காப்பாற்ற.. ஓடி வந்து புத்திர பாக்கியத்தை இழந்து நின்றாளே அவள்!!
அதையும் அவள் எங்கணம் மறப்பதாம்??
அங்கணம் அடிபட்ட வயிற்றிலிருந்து கசிந்த இரத்தம்.. இன்றும் தன் மேனியில் இருந்து தொடைகளுக்கு நடுவில் ஒழுகுவது போலவே இருந்தது நந்தினிக்குள்.
வஞ்சம் வைத்துக் காத்திருக்கும் நல்லபாம்பும், நந்தினியும் ஒன்று.. இரண்டுமே விட்ட பகையை தொட்ட குறையாக மறக்காத வகையறாக்கள்.
அந்தக் கற்திடலில் அன்று வீசிய சூறைக்காற்று கூட அவள் மேனியில் பட்டுத் தொடுவது போல.. அன்றைய நாளின் அத்தனையும்.. அணு விடாமல்.. ஞாபகத்துக்கு வந்து போக நந்தினியின் விழிகளில் கண்ணீர் பொங்கியது.
அவள் மௌனக் கண்ணீர்.. கொஞ்சம் கொஞ்சமாக தேம்பலாகி, அந்தத் தேம்பல்… பின்பு கொஞ்சம் கொஞ்சமாக ஓலமிட்டு அழும் அழுகையாக மாறிப் போனது.
அவள் தேற்றுவாரின்றி.. அழுது கொண்டே போக, இது தன் மனைவியல்ல அழுவது. மனைவியின் உடலுக்குள் இருக்கும் ஒரு தீய ஆத்மா என்பதை அறிந்திராத சத்யாதித்த இராஜசிங்கன்.. சற்றே பதறித் தான் போனான்.
மனைவியின் அழுகை… சத்யனின் புருவங்களை இடுங்கச் செய்ய, ஆண்கர்வம் மறந்து தாய் அழுவதைக் காண சகிக்க மாட்டாத ஒரு சேய் போல ஆகிப் போனான் ஆறரையடிக் குழந்தை.
அவள் நாடியை தன் கைளால்.. அவனை நோக்கிப் பட்டென்று திருப்பியவனுக்கு, குனித்த இமைகளில் நின்றும் வழியும் கண்ணீர் அமைதியின்மையைக் கொடுக்கலானது.
நந்தினியோ.. தன்னெதிரே அமர்ந்திருக்கும் இராஜசிங்கனின் முகத்தைப் பார்க்கக் கூட பிரியப்படாமல்.. குனித்த இமைகளுடன்.. இருக்க..
பதறிப் போன சத்யன் மிக மிக மென்மையான குரலில் கேட்டான், “ஹேய் என்னாச்சுமா?”என்று.
அவனது மனைவி யௌவனாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. மாறாக, ‘இது உன் மனைவி அல்ல சத்யா’ என்று அவனுக்கு எடுத்துச் சொல்வோரும் அங்கு இல்லை.
தன் இமைகளைக் குனித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் யௌவனா.
ஆனால் அவளது நீண்ட இமைமுடிகள் கொண்ட அழகு நயனங்கள் கண்ணீரின் ஈரத்தில் நனைந்திருந்தது. மழையில் நனைந்த மயில்த்தோகை போல.
சத்யனுக்கோ உள்ளுக்குள் இன்னும் ஒரு கவலை ஒருபடி மேலாக சூழ்ந்து கொள்ள, அவ்வழகு நயனங்களை இரசிக்கும் தோரணையுடன் தலை சரித்துப் பார்த்தவன்,
அவளுக்கு மட்டும் கேட்கும் ஹஸ்கி குரலில், “ஹேய் பொண்டாட்டி.. வீட்டுல அண்ணன் யாராவது.. ஏதாவது சொன்னாங்களா?”என்று கனிவாகக் கேட்டான் அவன்.
அவனது தாரத்தின் கண்ணீருக்கான காரணம் அறிந்து, அதைக் களைந்து.. அவள் வதனத்தில் ஒரு குறுஞ்சிரிப்பைக் கண்டிட..எதையும் செய்ய நாடி.. துடியாய்த் துடித்தது அவன் இதயம்.
அவளது கண்ணீருக்கு காரணம் அவன் தான் என்பதை அறிந்தால்? அவள் உதட்டில் சிரிப்பு மலர.. இவன் உயிர் தான் வேண்டும் என்பதையும் அவன் அறிந்தால்?
அவள் அப்போதும் எதுவும் பேசவில்லை. அமைதியாக அவனது முகம் பாராமல்.. தாழ்த்திய இமைகளுடனேயே.. கையினால் படுக்கையின் போர்வையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.
மனைவியின் மௌனத்தில் இன்னும் குழம்பிப் போனவன், “அப்புறம் என்னமா??? உடம்புக்கு ஏதும்.. முடியலையா என்ன?” என்று கனிவுடன் கேட்டான் அவன்.
முதன் முதலாக, அவன் கேள்விக்கு பதிலாக அவள் செவ்வாய் திறந்து, “ம்ஹூஹூம்” என்று மட்டும் தலையாட்டிச் சொன்னவள், மீண்டும் தேம்பித் தேம்பியழத் தொடங்க,
அப்போதும் அவளை பொறுமையாகவே கைக்கொள்ள நாடினான் சத்யன்.
அவனுக்குள் ஒரு மன முரண்டல் தோன்ற, வதனத்தில் ஒரு இருள் சூழ்ந்து கொள்ள, “அப்புறம் என்ன? நான் தொட்டது உனக்குப் பிடிக்கலையா ? இல்லை.. என்னையே உனக்குப் பிடிக்கலையா?” என்று கேட்டதும் தான் தாமதம்,
இத்தனை நேரம் தாழ்த்தியிருந்த இமைகளைப் பட்டென்று உயர்த்தினாள் அவள்.
தன்னெதிரே அதே இளமை குன்றாத முகத்துடன் இருக்கும், “ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனைக்” காணக் காண.. அவள் உடலெங்கும் பழிவெறி இரத்தத்துடன் இரத்தமாக ஏறலாயிற்று.
சத்யாதித்தனின் மையல் விழிகளை.. நோண்டி எடுக்க வேண்டும் என்று ஒரு வித மூர்க்கத்தனமான வெறி கிளம்பியது அவளுள்.
அவனது விழிகளையே பார்த்தவளின் விழிகளின் விழிவெண்படலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செவ்வரியோடத் தொடங்கியது.
இதுவரை வழிந்த கண்ணீர்… சற்றே காய்ந்து உவர்நீர் கோடுகளாக மாறத் தொடங்கியிருந்தது.
அவளது தனங்கள்.. ஏகத்துக்கும் ஏறி இறங்க நெடு மூச்சுக்கள் வாங்கியவளின் உஷ்ணம், அவனது கையைச் சுட்டுக் கொண்டிருந்தது.
அவனைப் பார்வையினாலேயே சுட்டெரித்து விடுவது போல பார்த்து வைத்தாள் அவள்.
சத்யாதித்தனோ நெற்றியில் சிந்தனை இரேகைகள் படர மனைவியின் மாற்றத்திற்கான காரணம் அறியாது பார்த்திருக்க,
நந்தினியோ… அங்கணம் ஓர் எரிமலைக்குழம்பு போல வெடிக்கவாரம்பித்தாள்.
அவள் முகத்தில் இருந்த அதே ஆதங்கமும், ஆத்திரமும், ரௌத்திரமும்.. அவள் குரலிலேயும் நன்கே வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
செவ்வரியோடிய நயனங்களை விரித்தவள், அழுத்தமான உணர்ச்சிக் குரலில், கண்களில் கண்ணீர் அதுபாட்டுக்கு வழிய, “ஆமாஆ.. உன்னை எனக்கு ப்பிடிக்கலை… என் வ்வாழ்க்கைய்ய.. ஒட்டும்மொத்தமா பாழ்… ப்படுத்திய… உன்னை எப்படி எனக்கு பிடிக்கூஊஊம்?? . என் சந்தோஷம், ந்நிம்மதி.. என் க்க.. னவு.. எல்லாத்தையும் என்கிட்டேயிருந்து பறிச்ச..உன்னை எப்படி எனக்கு பிடிக்கூஊஊம்??”என்று அவள் கேட்க, சத்யாதித்தன் திகைத்தான்.
இவள் என்ன சொல்கிறாள் என்ற ஒரு குழப்பம் புறம் இருந்தாலும், அவள் சொற்களில் அந்த வாலிபனின் மனம் காயப்பட்டுப் போனது.
அவன் மனம் காயப்பட வேண்டும் என்று தானே அவளும் அவ்வாறு சொன்னாள்?
ஆண்களின் மனம் படும் காயம்… அநேக சந்தர்ப்பங்களில் கோபமாகவே வெடிக்கக் கூடும். அன்றும் அப்படித்தான்.
மாய நந்தினி உதிர்த்த கேள்வியில், சத்யாதித்தன் சீற்றத்தின் வசம் ஆட்படலானான்.
அவளை தீவிரமான பார்வை பார்த்தவன், “யௌவனா இந்த கல்யாணம் வேணும்னா உன் இஷ்டத்துக்கு மாறா நடந்திருக்கலாம்.. ஆனா… ஆனால் என் கூட உன் வாழ்க்கை?? .. அந்த வாழ்க்கை ஒரு நொடி கூட சந்தோஷம் அனுபவிக்கலையா என்ன? நமக்குள்ள என்ன மிஸ்அன்டர்ஸ்டேன்டிங் இருந்தாலும்.. நான் உன்னை ஒரு பூவைப் போலத் தானே பார்த்துக்கிட்டேன்..?”என்று தன்னுள்ளத்தில் உள்ளதைக் கொட்டினான் அவன்.
அவளோ.. அந்த இராஜசிங்க வம்சத்தின் கடைசி வாரிசை.. இதழ்கள் சுளிக்க, பார்வையில் வெறுப்பு உமிழ இளக்காரமாகப் பார்வை பார்த்து வைக்க,
சத்யாதித்தன் மனம் புண்பட்டது.
தன்னைத் திகட்டத் திகட்டப் பார்த்து இரசிக்கும் காதல்ப்பெண்ணின் பார்வையா இது?
ஐயமும் தோன்றியது அவனுக்கு.
அவளோ அசிங்கத்தைப் பார்த்தது போன்ற வெறுப்புடன், “சந்தோஷமாஆ?? இந்த உலகத்திலேயே நான் வ்வெறுக்குற ஒருத்தன் கூட சந்தோஷமா?? உன் கூட நான் சந்தோஷமா தான் இருந்தேன்னு நீயே எப்படி ம்முடிவு பண்ணலாஆஆம்??”என்று அவள் கேட்ட கேள்வியில் சுருசுருவென்று ஆத்திரம் பொங்க, சட்டென்று மஞ்சத்தில் இருந்தும் எழுந்து கொண்டவனின் கைகளில் கோபத்தின் விளைவாக நரம்போடிக் கொண்டிருந்தது.
கைமுஷ்டி மடக்கி நின்றவனின் தோள்புஜங்கள் இரண்டும் ஏறி இறங்க.. மூச்சு வாங்கியவனுக்கு இன்னும் சிறிது நேரம் அங்கிருந்தால்.. யௌவனா பேசும் பேச்சினைத் தாங்கமாட்டாமல் கை நீட்டி விடுவோமோ என்ற ஐயம் எழுந்தது அவனுக்கு.
இங்கு வரும் முன்னம்.. தாய்க்கு செய்து கொடுத்த சத்தியம் ஞாபகத்துக்கு வர, பற்களைக் கடித்துக் கொண்டு சமாளித்து நின்றவன், ஏதும் பேசாமல் அறையை விட்டும் கிளம்பலானான்.
அதற்கு விடுவாளா நந்தினி?
அவனும் தான் அறையை விட்டு வெளிச்சென்றானேயானால்.. இவளும் தான் யௌவனா உடலை ‘இரவு மட்டும்’ வாடகைக்கு எடுத்திருப்பதன் அவசியமும் தான் யாது?
அதனால் கதவின் தாழ்ப்பாளில் கைவைத்தவனை மேற்கொண்டு நகர விடாமல், ஓடி வந்து, அவனது சட்டையை பின்புறமாகக் கிழித்தெறிய, அதிர்ச்சியில் மனைவியை திரும்பிப் பார்த்தான் சத்யன்.
அங்கே நின்றிருந்தது.. அவன் இதுவரை கண்டிராத யௌவனா.
அவளது கேசம்.. வளியில் எழுந்து அலைபாய்ந்து கொண்டிருக்க, அவளது மாயக்கண்களின் ஜோதி.. சத்யனை ஈர்க்கத்தக்கதாக இருந்தது.
தன்னெதிரே இருக்கும் பரம எதிரியின் முகத்தை.. தன் நகங்களால் கீறி விடும் எண்ணத்துடன், நீண்ட அவளது கையை,
அதற்கு விடாமல் அவளது முன்னங்கைப் பிடித்து தடுத்தான் சத்யன்.
அவனுள் சொற்ப நேரத்துக்கு முன்னர் மனைவி பேசிய பேச்சுக்கள் தந்த கோபம் அகன்று, அவளின் மூர்க்கனத்தை எப்படி கையாள்வது என்றே சிந்தனை சென்றது சத்யனுக்கு.
யௌவனா அன்று.. சத்யனிடம் வெறி வந்தவள் போலத் தான் நடந்து கொண்டாள். அவள் எப்படியாவது சத்யனைக் காயப்படுத்தி, அவன் உடலில் ஓடும் குருதியை.. பூமிக்கு அர்ப்பணிப்பது என்ற வெறியுடனேயே நடந்து கொண்டாள்.
அவன் யௌவனாவின் ஒரு கையைப் பிடித்துக் கொள்ள, சுயாதீனமாக இருந்த மறுகையால், சத்யனின் முகத்தை பிராண்டப் போக, சட்டென ஓரெட்டு பின்னோக்கி நகர்ந்தான் சத்யன்.
அவ்வாறு நகருகையில், சத்யனின் வலிமையான கழுத்தில் அவளது மூவிரல் நகங்களின் சிராய்ப்பும் ஏற்பட்டு விட, எரிவுடன் எட்டிப் பார்த்தது கீற்றான இரத்தம்.
சத்யனின் உடலில் இரத்தத்தைக் கண்டதும், யௌவனாவின் உடலில் இருக்கும் நந்தினிக்கு.. இன்னும் அந்த வன்ம வெறி அதிகமானது.
அடுத்த கையையும்.. தன் கைகளால் பிடித்து நிறுத்தியவன், பதற்றமான குரலில், “யௌவனா வாட் ஹேப்பன்ட் டூ யூ?கம் டு யோர் சென்ஸஸ்” என்று சொல்ல, அது ஒன்றும் யௌவனாவை நடப்புக்குக் கொண்டு வரவில்லை.
யௌவனாவின் கண்களில் ஓடிய செவ்வரி நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே போக, அவளது மென்மையான தேகம், ஒரு கல் போல விறைத்துக் கொண்டே போகவாரம்பித்தது.
தேவதாவோ.. மனைவியின் அதிரடியிலிருந்து சத்யனைக் காக்கும் வழிவகையறியாது கல்லாய் சமைந்து நின்றிருக்கத் தலைப்பட்டான்.
ஆத்மாவாக இருக்கும் போது மனைவியைத் தீண்ட, கைக்கொள்ள, அவளது பழிமுயற்சிகளை வீணடிக்க அவனால் முடியும்.
ஆனால் நந்தினியிருப்பது வெறுமனே ஆத்மாவாக அல்ல. மாற்றான் மனைவியின் உடல் கொண்ட உக்கிரமான ஓர் ஆத்மாவாக.
தன் அரசரின் மனைவி உடலில்…. அதுவும் அரசிக்கு நிகரான மரியாதை கொடுக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கும் யௌவனா உடலில்.
அப்படியிருக்க மனைவியின் தாக்குதல்களை தடுக்க, யௌவனாவை அவன் தீண்டியே ஆக வேண்டும். உண்மையான விசுவாசி.. உயர் நிலையில் இருப்பவளை எங்கணம் தீண்டுவான்?
யௌவனாவின் உடலில் அவள் நுழைய.. தேவதா… முற்று முழுதாக தடையாக இருக்கக் கூடும் என்பதை அறிந்து… சத்யனுடன் தன்னை இந்தப்பக்கம் அனுப்பி விட்டு… சாமர்த்தியமாக யௌவனா உடலுக்குள் புகுந்து கொண்ட விந்தையை எண்ணி வியப்பதா? கோபிப்பதா என்று இருவேறு சிந்தனைக்கு ஆட்பட்டிருந்தான் அவன்.
சத்யனுக்கோ மனைவிக்கு, ‘என்னானது?’ என்று தெரியாத நிலை, அவளை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவது என்று புரியாமல்.. சில நேரம் அவளது கைகளையே அவன் தடுத்து வைத்திருக்க, பொல்லாத நந்தினி சுயாதீனமாக இருந்த வாய் மூலம் தன் சேஷ்டைகளைப் புரியவாரம்பித்தாள் அவள்.
சட்டெனப் பாய்ந்து.. தோளுக்கு கீழான அவனது தசைப்பகுதியை.. அவள் தன் பலம் கொண்ட மட்டும் அழுத்திக் கடிக்க, அவனுக்கோ தசையுடன் இணைந்து, அவனது நரம்புகளும் சேர்ந்து கடிபடுவது போல… சுருசுருவென்று ஓர் வலி உடல் முழுக்க பரவ ஆரம்பிக்க,
அவளைத் தன்னிலிருந்தும் தள்ளிவிட்டான் சத்யன்.
வலி தாங்கமாட்டாமல்.. அவள் கடித்த இடத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டே, “ஸ்ஸ்… ஆஆ… ராட்சசீ.. நீ மனுஷியா?? இல்ல பேயா.. இந்த கடி கடிக்குற?” என்று அவன் அவளை கடிந்து கொண்டவனுக்கு, நிஜமாகவே அவள் பேய் தான் என்று புரியவில்லை.
அவன் தள்ளலில் இரண்டெட்டு பின்னே நகர்ந்தவள், வெறித்த கண்களுடன் வந்தாள் அவனை நோக்கி. அவன் மீண்டும் அவளது கைகளைப் பிடித்துத் தள்ளிவிட முனைந்த கணம், இம்முறை சமநிலை தடுமாறி கீழே விழுந்து விட நேரிடும் என்று புரிய,
சட்டென சத்யனின் முன்னங்கையைப் பிடித்தாள் அந்த மாய நந்தினி.
அவளது வலுவான பிடியில்.. திடகாத்திரமான சத்யனும் சேர்ந்து நகர, இருவரும் சமநிலை தடுமாறி வீழ்ந்தனர் மஞ்சத்தில்.
அவனது அழகு யௌவனா கீழே. திடகாத்திரமான ஆறரையடி உயர சத்திரியின் மேலே.
தனக்கு சொந்தமான உடலை சத்யன் தீண்டிக் கொண்டிருப்பதை அணுவும் விரும்ப மாட்டாத நந்தினி..தன் கைகளைக் கொண்டு வெகு அருகாமையில் இருக்கும் அவனது கழுத்தை நெரிக்க.. நாட்டங் கொண்டாள்.
சத்யனோ சட்டென சுதாரித்து அவள் கைகளை பிடித்து.. மஞ்சத்தில் அழுத்திப் பிடித்துக் கொண்டு, “ப்போனா ப்போகுதேஏ… என் ப்பொண்டாட்டியாச்சேன்னு ப்பார்த்தா.. என் பொறுமையை ரொம்ப தான் சீண்டுற ய்யௌவனா.. இப்போ என்ன செய்றேன் ப்பாரு” என்று கறுவிக் கொண்டே, யௌவனாவின் இதழ்களை நாடிப் போனான் அவன்.
அவளோ… ‘மூசு மூசு’ என்று சர்ப்பம் போல மூச்சு வாங்கிக் கொண்டு, தலையை அப்புறமும், இப்புறமும் ஆட்டிக் கொண்டு தன் மறுப்பைத் தெரிவிக்க,
இவனோ, “பொண்டாட்டியையே ரேப் பண்ணிட்டான்டான்னு ஊர் சொன்னா.. அதுக்கு முழு காரணம் நீயா தான் இருப்ப? உன் கொட்டத்தை அடக்கணும்னா..இதைத் தவிர வேற… வழியில்லை” என்றவனுக்கு, அவளது மூர்க்கத்தனத்தை வன்மையாக அடக்காமல், அன்பால், காதலினால் அடக்கிப் பார்க்கலாம் என்ற எண்ணம் பிறந்தது.
அது அவனது மனைவியாக இருந்தால் அவன் காட்டப்போகும் அன்புக்கும், காதலுக்கும் கட்டுப்படலாம். இவள் தான் நந்தினியாயிற்றே?
இந்த நந்தினியை அன்பால் மஞ்சத்தில் வெல்ல முடியுமான ஆண்மகன் தேவதா ஒருத்தன் தானே?
அவளுக்கோ சத்யனின் மூச்சுக்காற்று கூட.. அவளுக்குள் நெருப்பில் ஊற்றிய நெய் போல சுருசுருவென பற்றியெரியச் செய்தது.
சத்யன்.. அவள் இதழ்களை சிறை செய்ய நாடுவதிலேயே குறியாக இருக்க, அவனிடம் சிறைப்பட்ட கையை மெல்ல விலக்கி, டிராயர் மீதிருந்த கைக்கு அகப்படும் பொருளை எடுத்தாள் நந்தினி.
சத்யனின் ஆகாத நேரமோ என்னவோ?
பால் அருந்தி முடித்த பித்தளைச் செம்பு.. நந்தினியின் கைகளில் அகப்பட, அதனை எடுத்து.. சத்யனின் நெற்றிக்கே ஒன்று போட்டாள் நந்தினி.
நந்தினி அடித்த அடியில்.. “சொய்ங்க்க்”என்று ஒலி கேட்டு அடங்க, ஒரு கணம் விம்பங்கள் எல்லாம் இரண்டிரண்டாகக் கலங்கித் தெரியலானது.
அதன் தாக்குதலில் இருந்தும் வெளி வந்தவன், எழுந்து நின்று கொண்டு, நெற்றியைப் பிடித்து தேய்த்து விட, அங்கே நீலம் பூத்து விம்மிப் புடைத்திருந்தது நெற்றி.
ஒருவாறு சமாளித்துக் கொண்டு, விழிகள் திறந்து பார்த்த போது, அவளது கைகள் மீண்டும் அவன் கழுத்தை நோக்கி வருவதைக் கண்ட சத்யன்.. ஒரு சில கணங்கள் திகைத்துப் போய் நின்றிருந்தான்.
இறுதியில் நொடியில் சமாளித்து, அவளது கையை.. ஒரு கையால் கொத்தாகப் பற்றி..முதுகுக்குப் பின்புறம் இழுத்து வந்து அவன் வைத்துக் கொள்ள,
அவளோ தன் வெறி இன்னும் அடங்கமாட்டாதவளாக, “ஹேய் விடுடா.. என்னை விடூஊஊ” என்று கத்திக் கொண்டே.. திணறித் திமிறி.. அவனது பிடியிலிருந்தும் வெளிவர முயற்சித்தாள் நந்தினி.
சத்யனோ.. அவள் கைகளை பின்புறம் இழுத்து வைத்த வண்ணமே, சுற்றுமுற்றும் கட்டும் கயிறு அல்லது துணி தேட பொறுமையற்று..அவள் உடுத்தியிருந்த சேலை முந்தானையை ஒரே உருவலில் உருவி எடுத்து,
அவள் அசைய முடியாத வண்ணம்.. கைகளை இறுகிக் கட்ட, யௌவனாவோ வெறும் ஜாக்கெட் மற்றும் பாவாடையுடன் நிற்கத் தலைப்பட்டாள்.
நந்தினிக்கோ தன் முயற்சிகள் அனைத்தும் வீணாகிக் கொண்டே போவதில், ஆத்திரம் தலைக்கேறியது.
தன்னைத் தடுக்கும் இராஜசிங்கனின் உடலில் பெரும் காயத்தையாவது இப்போது ஏற்படுத்தி விட நாடியவள், கால்களால் அவன் தொடைகளுக்கு மத்தியில் எத்தப் போக, பட்டென்று விலகி அடி ஏற்படாதவாறு தடுத்தவன்,
ஓரெட்டில் அவளை நாடி வந்து, அவளை அப்படியேத் தூக்கி.. தன் தோள்களில் தூக்கிப் போட்டுக் கொண்டு மஞ்சம் நோக்கி நகரலானான்.
முரட்டு நந்தினியோ… இது தான் சந்தர்ப்பம் என்று குனிந்து.. அவனது முதுகுத்தசையை பற்களால் அழுத்திக் கடிக்க, வலி தாளாமல் அவன், அவளை இறக்கி விட்டதும் தான் தாமதம், தாழ்ப்பாளிடப்பட்ட கதவுகளை நாடி ஓடிச்சென்றாள் நந்தினி.
அவனுக்கோ.. முழு உடலும் வியர்த்துப் போக அவசரமான குரலில், “ஹே.. ஹேய்.. அப்படியே வெளியே போகாதேடி.. உன் நெலமய புபார்த்தா.. நான் தான் உன்னை கட்டி வைச்சு கொடுமைப்படுத்துறதா த்தப்பா நெனச்சிக்கப் போறாருடி உன் அண்ணன்” என்று சொல்லச் சொல்லக் கேட்காமல், அவள் கதவைத் தட்டப் போக,
அவளை நாடி வந்து.. பின்னிருந்தே.. வாயை இறுகப் பொத்தியவனாக, அவள் திமிறத் திமிற இழுத்து வந்து மஞ்சத்தில் கிடத்தியவன்.. அடுத்து ரொம்பவும் அதிரடியாகவே செயல்படத் தொடங்கினான்.
அறையின் சாளர திரைச்சீலையை எடுத்தவன்.. அதை இரண்டாகப் பிரித்து.. அவள் எழும்பும் முன்னம்.. கால்கள் இரண்டையும் கோர்த்து இறுக்கிக் கட்டியவன்,
அவள் அடுத்துக் கத்தத் தொடங்கவும், மீதி திரைச்சீலையை அவள் வாய்க்குள்ளும் அடைத்து கத்த முடியாத படி, நகர முடியாதபடி.. அவளை செய்ததன் பின்பு தான் ஆசுவாசமாக பெருமூச்சு விட்டான் சத்யன்.
அவளோ அப்போதும் விடாமல்.. அவன் தலையைக் கொய்து இரத்தம் பார்த்து விடும் கொலைவெறியுடன், அவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்க,
இடுப்பைப் பிடித்துக் கொண்டு எழுந்த சத்யாதித்தனும், மூச்சிறைக்க இறைக்க, “சத்யமாஹ் என்னால முடியலைடீஈஈஹ்… பேசாம அம்மா பார்க்குற பொண்ணையேஹ் கட்டியிருந்தாஹ் கூட இப்டியெலாம் கஷ்டப்பட்டிருப்பேனா தெரியலஹ்? .. அத விட்டுட்டு.. இல்ல கனவுல வந்தஹ்… பொண்ண தான் கட்டிப்பேன்னு… கடல் கடந்து உன்னை தேடி வந்து.. கஷ்டப்படறேன் பாரு.. இதுவும் வேணும்..எனக்கு இன்னமும் வேணும்டீஹ்.. யப்பாஆஹ் முடியலஹ்.. ”என்று பெருமூச்சு விட்டபடியே குப்புற வீழ்ந்தான் மஞ்சத்தில்.
உடல் முழுவதும், மனைவியுடன் போராடிய அசதி அடித்துப் போட்டாற் போன்று இருந்த போதிலும், தூக்கம் கண்களைச் சுழற்றிய போதிலும் கூட,
எங்கே கொஞ்சம் அயர்ந்தாலும், கண்களில் மண்ணைத் தூவி விட்டு, ஏதாவது பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்வாளோ என்று அச்சம் எழுந்ததால்.. தூங்காமல் மனைவிக்கு ஒரு காவற்காரனாகவும் ஆகிப் போனான் சத்யன்.
யௌவனாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்தபடியே இருந்தவனுக்கு.. இரவெல்லாம் விழித்திருந்ததால்.. சத்யனின் விழிகளிலும் கூட செவ்வரி ஓடத் தொடங்கியது.
அவள் அப்போதும் கட்டிடடப்பட்ட கை, கால்களுடன் நகர முயன்று தோற்றுத் தோற்று.. அந்த ஆத்திரத்தில் சத்யனை எரித்து விடுவது போல பார்த்திருக்க,
காதல்க் கணவன் சத்யனோ, அவள் முறைக்க முறைக்க அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே, “யௌவனா.. உனக்கு ஒண்ணுமில்லைமா.. எல்லாம் சரியாயிடும்.. நான் இருக்குற வரை ஒண்ணும் ஆகாது.. அமைதியா தூங்கு.. ப்ளீஸ் கொஞ்சம் கண்ணை மூடி.. அமைதியா இரு.. அப்புறம் தானா தூக்கம் வந்துரும்..” என்று இறுதிவரை தேறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான் சத்யன்.
அவனுள் ஆயிரம் கேள்விகள் எழுந்து அலைக்கழிக்கவாரம்பித்தது. திருமணமாகி ஒன்றரை மாதங்கள் கடந்து விட்ட இத்தனை இரவுகளில் இல்லாத மாற்றம்..? இந்த வெறி!! இந்த ஆக்ரோஷம் எதனால்??
திடீர் திருமணம் என்பதால் ஒத்துக் கொண்டவளுக்கு.. அடிமனதில் அவன் மீது வெறுப்பு இருப்பது தான் காரணமா?
மனநோயாளி போல தன்னிலை மறந்து அவள் நடந்து கொள்வதைப் பார்த்தால், ஏதாவது மனதைப் பாதிக்கும் சம்பவங்கள் சிறு வயதில் நிகழ்ந்திருக்கக் கூடுமோ?
ஆரம்பத்தில் சந்தேகத்தினால் இழந்த இன்ப நாட்கள், இப்போது இந்த புதுவிதமான பிரச்சினையால் முழுவதுமாக இல்லாது போய் விடுமோ? என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு.
ஆயினும் எந்த சந்தர்ப்பத்திலும்.. தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணை நீங்காது.. உடனிருப்பது என்று முடிவெடுத்துக் கொண்டவன், அப்போதும்.. அவள் உச்சந்தலையை வருடுவதை விடவேயில்லை.
நேரம்.. மின்னலைப் போல வேகமாக கடக்கவாரம்பிக்க, விடிகாலை மூன்றரை நான்கு மணிக்கெல்லாம்.. அவள் உடலில் இருந்த விறைப்புத் தன்மையும், அவள் எடுத்து விட்டுக் கொண்டிருந்த சர்ப்ப மூச்சும் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட, கண்கள் சொருக.. ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றாள் யௌவனா.
என்ன தான் தீய சக்திகள் ஊடுருவும் இரவின் ஆரம்பப் பகுதியில் யௌவனாவின் உடலை தன்வசப்படுத்திக் கொண்ட மாய நந்தினிக்கு, தேவதாக்கள் வல்லமை புரியும் விடியலின் ஆரம்பப் பகுதியில்.. யௌவனா உடலில் தரித்திருக்க முடியவில்லை.
நந்தினி.. யௌவனா உடலில் இருந்து மெல்ல நீங்கியதும் தான்.. அவள் உடலின் விறைப்புத்தன்மை மெல்ல அகன்று, தூக்கம் அவளைப் பீடித்துக் கொண்டது.
விடிகாலை நான்கு மணிக்கு மனைவியின் உடல் மெல்ல மெல்ல சமரசநிலையை அடைந்து துயில்வதைக் கண்டவன், இதற்கு மேலும் அவளைக் கட்டிட்டு வைக்கப் பிரியப்படாமல்.. மெல்ல அந்தக் கட்டுக்களை அவிழ்த்து விட்டான். வாயில் அடைத்து வைத்த துணியையும் நீக்கினான்.
அவள் திமிறத் திமிறக் கட்டிய கட்டல்லவா? அவன் இறுக்கிக் கட்டியதில் முன்னங்கை, கால்கள் எங்கிலும் இரத்தம் கட்டி நின்று.. நீலம் பூத்திருந்தது அவளுக்கு.
அவற்றைக் காணவும் உள்ளூற ஒரு வலி.. அதுவும் அவளது மூர்க்கத்தனத்தை அடக்கும் வழியறியாது முரட்டுத்தனமாக இவன் செய்தது என்று தோன்ற, கைகளைத் தடவி விட்டவன், அன்புடன் முத்தம் வைக்கவும் செய்தான்.
அவள் கைகள் சுதந்திரமடையவும்.. ஆசை மனைவியோ.. பட்டென்று அவன் புறம் விழிகளை மூடிக் கொண்டே நகர்ந்து வர, மீண்டும் கடிக்கத் தான் வருகிறாளோ? என்று பதறி நிற்க,
அவளோ.. கணவனின் மார்பில் ஒரு கோழிக்குஞ்சு போல சுருண்டபடியே.. அடித்துப் போட்டாற் போன்ற அசதியில் உறங்கிப் போனாள்.
மனைவியின் நெருக்கம்.. தன்னிலை மறந்த நிலையிலும் அவள் கையணைப்பு என எல்லாமும் அவனை காதல் வலைக்குள் இன்னும் இன்னும் இழுக்கவே செய்தது.
மனைவி ஆசுவாசம் அடைந்ததும் தான்… விழிகள் ஒரு பெரும் துயிலை ஆராதிக்க… மனையாளை அணைத்துக் கொண்டே உறங்கிப் போனான் சத்யன்.
சாளரம் தாண்டி வந்த சூரியக் கிரணங்கள் பட்டு.. அவள் தூக்கம் கலைந்து எழுந்த போது, யௌவனாவின் உடல் அசதி இன்னும் இன்னும் அதிகமாகியிருந்தது.
அதிலும் சேலை முந்தானை இல்லாமல்.. வெறும் ஜாக்கெட் பாவாடையுடன்,தலையில் சூடியிருந்த மல்லிப்பூ எல்லாம் மெத்தையில் உதிர்ந்து கிடக்க, நேற்றிரவு நடந்ததை ‘இனிய கூடலின்’ எச்சங்களாக எண்ணிக் கொண்டாள் யௌவனா.
என்ன முயன்று பார்த்தும்.. அந்த இனிய நினைவுகள் சிந்தைக்கு வராது போனாலும், கையில் இருக்கும் சேலை முந்தானை கட்டியதால் விளைந்த சிவந்த தழும்புகளை… கணவன் தந்த கூடலின் தழும்புகள் என்று எண்ணிக் கொண்ட யௌவனாவுக்கோ,
முகத்தில் நாணத்தின் இரேகைகள் படர்ந்தது வெகு அழகாக.
தன் தலைவன் சத்யாதித்த இராஜசிங்கனைப் பார்த்தாள் அவள். ‘மஞ்சத்தில் அவளை வென்ற களைப்பில் உறங்கும் தன்னவன்’என்ற பெருமிதமான எண்ணம் தோன்ற,
மெல்ல குனிந்து.. அவன் கன்னத்தை எச்சில் படுத்தி ஈரமாக்கியவள், புன்னகையுடனேயே குளியலறை நாடிச் சென்றாள்.
சத்யனோ எதையும் அறியாமல்.. சிறுபிள்ளையென ஆழ்ந்த நித்திரையின் வசம் இருக்க,
காவல் தெய்வமான தேவதாவோ அங்கே வேறுபட்ட மனநிலையில் மூழ்கியிருந்தான்.
முதன்முதலாக சந்திராகிரகண வேளையில்… நந்தினியிடம் அன்பினால் ஏமாந்து நின்றான்; முந்தைய நாள் மனைவியிடம் சூட்சுமத்தினால் ஏமாந்து நின்றான்.
இனியும் ஏமாற முடியாது என்று திண்ணமாக முடிவு செய்து கொண்டான் தேவதா.
மனைவி செய்வதைப் பார்த்துக் கொண்டு. பொறுத்துப் போவதை விடுத்து, தானும் கோதாவில் குதித்தால் தான்.. இந்த சடுகுடு ஆட்டத்துக்கு.. சீக்கிரம் விமோசனம் கிட்டும் என்பதை ஐயந்திரிபற அறிந்து கொள்ளவும் செய்தான் தேவதா.
அவனுள் விவரிக்க முடியாத ஆதங்கமும், ஆத்திரமும் எழ.. அவன் ஒரு முக்கிய முடிவுக்கு வந்திருந்தான். அது நந்தினியின் பழிவெறியையும் சற்று அசைத்துப் பார்க்கவே செய்தது.
ஏகாந்த இரவில் வா தேவதா
[19]
இன்று காலை தன்னவனுக்காக காபி கலந்து எடுத்துக் கொண்டு.. சத்யாதித்தன் துயின்று கொண்டிருக்கும் அறையை நோக்கி நடந்தாள் யௌவனா.
முகத்திலே ஒளிர்ந்து கொண்டிருந்த லட்சுமி கடாட்சமும், புன்னகையும் யௌவனாவை இன்னும் யௌவனமாகவே காட்டிக் கொண்டிருந்தது.
காலை.. அவள் துயிலெழுந்த கணம்.. கணவனின் முறுக்கேறிய திண்ணிய கைச்சந்தின் அணைப்பில் தான் பாந்தமாக அடங்கி.. சுருண்டு படுத்திருந்ததை எண்ணும் போது.. அப்பாவி யௌவனாவுக்குள் ஒரு நாணப்புன்னகை ஓடி மறைந்தது.
அவன் மூச்சுக்காற்று.. அவள் நுரையீரல் அடைய, அவனது வலிய கைகள்..அவள் இடுப்பைச் சுற்றி வளைத்திருக்க, அவனது வலிய கன்னத்தாடைகளின் உராய்வை தன் மெல்லிய கன்னத்தில் அனுபவித்துக் கொண்டே.. இன்று காலை துயில் களைந்தது அதுவொரு உணர்வுபூர்வமான நிகழ்வு!!
தலைவன் இன்னும் துயின்று கொண்டிருக்கும் மஞ்சத்தை அடைந்தவளுக்கு, தன் திண்ணிய கைச்சந்தின் வனப்பு தெரிய.. அயர்ந்து தூங்கும் அவனைக் கண்டதும், முன்னைய ஊடல்கள் மறந்து.. அன்பு சுரந்தது அவன் பால்.
அதிலும் தென்றலுக்கு அசைந்தாடிக் கொண்டிருந்த செம்பட்டை நிற கேசம்.. காற்றுக்கு அசைந்தாடும் சின்னஞ்சிறு செடிகளை ஒத்திருந்ததை நினைவு கூர்ந்தாள் மங்கை.
கணவனின் வனப்பு .. அந்த யௌவனச்சிலையின் கண்களை கட்டிப் போட.. கைகள் தாமாக விரைந்தன கேசத்தைக் கோதி விடுவதற்காக.
காபிக்கப்பை டிராயர் மீது வைத்தவள், அவன் பக்கத்திலேயே அமர்ந்து.. வாஞ்சையுடன் அவனது தலையை தென்றலை விடவும் மென்மையாக வருடி விட ஆரம்பித்தாள் யௌவனா.
யௌவனா அந்நொடி யௌவனாவாகவே இருந்தாள். கடல் கடந்து வந்த அந்த சத்திரிய வம்ச ராஜகுமாரனை.. அவனுக்காகவே நேசித்தாள்.
மனைவியின் கைகள் தன்னை இதமாக வருடுவதை தூக்கத்திலிருந்தே சுகித்த சத்யனுக்கு.. அவள் உடலின் வாசம் வேண்டும் என்ற எண்ணம் பிறக்க, கண்களை மூடிக் கொண்டே குப்புறப் புரண்டவன்,
மெத்தையிலேயே.. நத்தை போல ஊர்ந்து வந்து அரைக்கண் தூக்கத்துடனேயே.. அவளது மடியில் முகம் புதைத்து.. அவள் தன்னை விட்டும் நகராமல் இருக்க, மனைவியின் இடையை தன் வலிய கரங்கள் கொண்டு.. சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டான்.
கணவனின் செய்கையில்.. யௌவனாவிற்கோ.. அவன் பால் இன்னும் அன்பு அதிகமாக… வளர்ந்த ஆறரையடிக் குழந்தையின் செய்கைகளை.. தாய்மைக் கண்களுடன் இரசித்துப் பார்த்திருந்தாள் அவள்.
அப்போதும் அவளது தலை கோதல் நிற்கவேயில்லை.
இன்னும் விழிகள் திறக்காத தன் குழந்தையின் பிடரி மயிரை.. அவள் புன்னகையுடன் வருடி விட்டுக் கொண்டேயிருந்தாள்.
அவன் மேல்.. நகரும் ஒவ்வொரு நொடிக்கும் அன்பு அதிகமாக ஆக.. அந்த கோதலும் அதிகமாகவே செய்தது. வருடலின் அதிகரிப்பில் சத்யனின் அரைக்கண் தூக்கமும் முற்றாகக் கலைய,
நேற்றைய இரவின் தாக்கத்தில் இருந்தபடியே கண்விழித்தவனுக்கு, அவளது காதல் செயல்.. அது தன் கேசத்தை இழுத்து துன்புறுத்தச் செய்யும் வன்முறைச் செயலாகத் தோன்றவாரம்பித்தது.
பின்னே நள்ளிரவு என்ன பாடு படுத்தினாள் ராட்சசி?? அவனுக்குள் இயல்பான திடுக்குறல் ஏற்படுவது சகஜம் தானே??
பதற்றத்துடன், அவளது கைகளை தன்னிலிருந்தும் தள்ளி விட்டபடியே அதிர்ந்து தலை உயர்த்தி.. அவளை அண்ணாந்து பார்த்தான் சத்யன்.
அவனது மருண்ட பார்வையும், அவளது மருண்ட பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன.
‘நேற்றிரவு பட்டபாடு போதாதென்று இப்போ என்ன காத்திருக்கிறது?’ என்ற அச்சத்தால் விளைந்த பார்வை அவனுடையது.
‘தலைமுடி தானே கோதினேன்.. தலையையா கொய்தேன்? பயப்படும் படி என்ன தான் ஆயிற்று?’என்ற குழப்பத்தால் விளைந்த பார்வை அவளுடையது.
சத்யாதித்தன்.. ஒரு கணங்கள்.. தன் மனைவியின் விழிகளையே.. புரியாமல்.. பார்த்தபடியே இருந்தான்.
அவள் கண்களில் இரவு போல செவ்வரி இல்லை. சாதாரணமாகவே இருந்தது. அவன் எஞ்ஞான்றும் இரசிக்கும் அப்பாவித்தனத்தை அந்த விழிகளில் மீளவும் கண்டான் சத்யாதித்தன்.
அதன் பின்பே மெல்ல மெல்ல ஆசுவாசம் அடைந்தவனாக பெருமூச்சு விட்டுக் கொண்டவன், மஞ்சத்தின் விளிம்பில் எழுந்தமர்ந்த போது…
நேற்று இரவு.. ஆண்கள் போலவே சமபலம் கொண்ட ஓரு தீய ஆத்மாவுடன் போராடியதாலோ என்னவோ.. தலை விண்விண்ணென்று தெறிக்கத் தொடங்கவே..
நெற்றியைக் கைகளால் தாங்கிப் பிடித்தவாறு அமர்ந்து விட்டான் சத்யன்.
காலையில் எழுந்ததுமே கணவன்… அவளைக் கண்டு ஐயுற்றது;கண்களால் அவளை ஆராதிக்கும் அந்தக் காதல் விழிகளில்.. சுத்தமாக உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது; இப்போது தலையைத் தாங்கிப் பிடித்த வண்ணம் அமர்ந்திருப்பது என அனைத்தும் ஒரு பெரும் ஆற்றாமையைக் கிளறி விட்டது மங்கைக்குள்.
இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவனை மெல்ல நெருங்கி வந்து, அவன் தோளில் ஆதரவாக கைவைத்தவள்,
காதோரம் கிசுகிசுப்பாக, காதல் கமழும் குரலில், “என்னாச்சு சத்யன்? ரொம்ப தலைவலிக்குதா? நான் வேணும்னா டேப்லெட்ஸ் எடுத்து வரட்டா? ”என்று கேட்டுக் கொண்டிருந்த கணம், இத்தனை நேரம் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்த சத்யனின் உடல் சிறுகச் சிறுக விறைக்கவாரம்பித்தது.
விறைப்பின் உச்சத்தில்.. அவனது தோள்புஜங்கள் இரண்டும் ஏகத்துக்கும் ஏறி இறங்கத் தொடங்க,
பட்டென்று.. அவள் கைகளைத் தள்ளி விட்டு எழுந்து கொண்டவனுக்கு தோன்றியதெல்லாம், “குழந்தையையும் கிள்ளிவிட்டு.. தொட்டிலையும் ஆட்டிவிட்டு… என்னமா நடிக்கிறாள் என் மனைவி?” என்று தான்.
நேற்றிரவு கணவனுக்கு இழைத்த கொடுமைகளை அறியாதது போல, அப்படியொன்றுமே நடக்காதது போலவே நடந்து கொள்ளும் மனைவியின் கண்களை கூர்ந்து பார்த்தவன்,
“இவள் நிஜமாக நடிக்கிறாளா?இல்லை அம்னீசியா நோயாளி போல அனைத்தையும் மறந்து விட்டாளா? ” என்பது போல பார்வை பார்த்து வைத்தான் அவன்.
அவள் உடலில்.. குறிப்பாக கண்களில்.. நேற்றிரவு முழுவதும் சத்யாதித்தனுடன் மல்லுக்கட்டிய களைப்பு நன்றாகவே தெரிந்தது.
சத்யாதித்தன்… தன் மனையாளின் முகத்தையே.. இன்னும் சில நொடிகள் கூர்ந்து கவனித்தான்.
சற்று நேரத்திற்கு முன்பு தான் குளித்து விட்டு வந்திருக்கிறாள் போலும். அரையும், குறையுமாக உலர்ந்து கொண்டிருந்த கூந்தலில் இருந்த வந்த ஷாம்பூ நறுமணம்… அந்த இடம் முழுவதையும் நிரப்புவதை உணர்ந்தான் சத்யன்.
கண்களுக்கு அவள் இட்டிருந்த செங்காந்தள் மலரினை ஒத்த அஞ்சன மை.. அவளது விழிகளின் வனப்பை இன்னும் கூட்டிக் காட்ட, நெற்றி வகிட்டில் குங்குமத்துடன், கழுத்தில் தாலிக் கயிற்றுடன்… அவனையே மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள் யௌவனா.
கணவன் விழித்ததில் இருந்து.. அவளை ஒத்தி வைத்ததில், அவள் கீழிமையோரம் மல்கி நின்றது கண்ணீர்ப் பெருந்துளியொன்று.
சத்யனுக்கோ நேற்றிரவு மனைவி, ‘அவனுடன் வாழ்ந்த வாழ்க்கையில் துளியளவும் சந்தோஷம் இல்லை’ என்று பகர்ந்ததிலேயே மனம் நிலைக்குத்தி நிற்க,
அவளது கண்ணீரைக் கண்டதும் வலியோடு எரிச்சல் மிக.. தலை திருப்பிக் கொண்டவன் அலைப்புறுதலுடன், பெருமூச்சு விட்டவனாக தலை கோதவும் செய்தான்.
யௌவனாவுக்கோ கணவனின் கோபமான பாராமுகம் வலியைக் கொடுக்க, கண்ணீரை அடக்கியவள், தழுதழுத்த குரலில், “ச.. ச… சத்யன்.. உங்களுக்காக காபி..”என்று சொன்ன கணம், அவனிடமிருந்து விருட்டென்று வந்தது முகத்தில் அடித்தாற் போன்று ஒரு பதில்.
“அதுல என்ன… விஷம் கலந்திருக்கீயா?” என்று அவன் கேட்ட கணம், அப்பாவி யௌவனாவுக்கோ.. இருதயத்தில் அடைத்து.. நின்றது அழுகை. உருவமில்லா ஒரு வாயுச்சுமை போல.
நேற்றிரவு முழுக்க… மனைவியின் கோபாவேச வெறியை அனுபவித்தவன்.. அப்படிக் கேட்டது சாதாரணமே!!
ஆனால் யௌவனாவுக்கு?
நந்தினி தன் உடலை விட்டும் அகன்ற யௌவனாவுக்கு நடந்த விஷயங்கள் ஒரு அணுவளவேனும் கூட தெரியாதே? ஆகையால்… அது பெரும் துன்பத்தை மூட்ட.. அது அசாதாரணமே.
மனைவியின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் அவன் குளியலறை நோக்கி வேகமாக நகர முனைய, இவளோ அவன் கோபித்த வண்ணம் செல்வது தாங்க மாட்டாமல், சட்டென்று அவனது முரட்டு முன்னங்கைப் பற்றி, “சத்யன்?”என்றாள் மென்மையாக.
‘சத்யன்’ என்னும் அவளது அழைப்பு.. அவனுக்கு இன்னும் கோபத்தைக் கொடுக்க, தன் கைகளை அவளிடமிருந்து இழுத்து விடுவித்துக் கொண்டு.. குளியலறை நோக்கி விரைந்தவன்,
அவள் முகத்தில் அடித்தாற் போன்று.. குளியலறைக்கதவை அறைந்து சாத்தலானான்.
அந்த செய்கையில்.. மனதுக்குள் அடிபட்டவளுக்கோ.. ‘நாம்.. கணவனுக்கு என்ன குறை வைத்தோம்?’ என்று கவலையுடன், மூளையைக் கசக்கிப் பிழிந்து யோசித்த போதும், எதுவும் சிந்தைக்கு வராமலேயே போனது.
நேற்றிரவு மஞ்சத்தில் அவன் தன்னை கொஞ்சி.. வென்றிட்ட போது.. அவன் மனம் நோக ஏதேனும்.. அவள் செய்திருப்பாளோ??
அப்படித்தான் போலும் என்று எண்ணிக் கொண்டவளுக்கு.. இந்தியாவிலிருந்து இலங்கை வர ஏதுவான.. “சுஷ்மிதா ஷெட்டியால்” விளைந்த ஊடல் அறவே மறந்து போனது.
எப்படியாவது கணவனின்.. வெள்ளந்தியான நேசத்தை மீண்டும் பெற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டவள், அன்று சத்யனை தன் காதல்மழையில் குளிப்பாட்டவே நாடினாள்.
சத்யன்.. குளித்து முடித்து விட்டு வெளியே வந்த போது… நேற்றைய தாக்கமும், களைப்பும் களைந்து… புத்துணர்ச்சியுடன் இருந்தான்.
கறுப்பு நிற முழுநீளக்கை ஷேர்ட்டுடனும், வெள்ளை ஜீன்ஸூடனும் .. கையில் துண்டுடன் தலைதுவட்டிக் கொண்டே ஹாலுக்கு வந்தான் அவன்.
செம்பட்டை நிற கேசம்.. ஹாலில் பாவிக் கொண்டிருந்த சூரிய ஒளியில்.. ஒருவித பளபளப்புடன் மினுங்க, காதுவழி வழிந்த ஒரு சொட்டு நீர்,
அவனது மலைக்குன்றுக்கு உவமிக்கக் கூடிய வலிமையான தோளில் தொப்பென்று விழுந்து.. நான்கு மணிகள் போல சிதறி உடைந்து .. அதில் ஓர் துளி.. அவனது திண்ணிய தனத்தினூடாக.. ஷேர்ட்டுக்குள் இறங்கிய அழகை,
அவனுக்கு சற்று தள்ளி இருந்த சாப்பாட்டு மேசையில் நின்றிருந்த யௌவனாவின் கண்கள் கிறக்கத்துடன் பார்த்திருந்தது.
எப்படியெல்லாம் மனைவி தன்னை பார்த்து இரசிக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் ஆசை வைத்தானோ.. அது போலவே மனைவி இரசிக்கும் பார்வை பார்த்த போதிலும்.. அதை இரசிக்க மனம் கூடவில்லை அவனுக்கு.
இந்த கிறக்கப் பார்வையின் பின்னர் என்ன வஞ்சம் ஒளிந்திருக்கிறதாம்? என்றே மனம் சென்றது இராஜசிங்கனுக்கு.
சாப்பாட்டு மேசையில்.. சத்யனுக்காக காத்திருந்த வேல்பாண்டியோ, சத்யனைக் கண்டதும் வாய் கொள்ளா புன்னகையுடன் “வாங்க மாப்ள.. உங்களுக்காக தான் தங்கச்சியும், நாங்களும் வெயிட்டிங்க்” என்று அழைக்க, அந்த அழைப்பை தட்ட முடியாமல்.. போய் மேசையில் அமர்ந்து கொண்டான் சத்யன்.
எப்போதும் அனைவருக்கும் பார்த்துப் பார்த்து பரிமாறும் வாசுகி அண்ணியை.. இன்று வலுக்கட்டாயமாக பிடித்து வைத்து அமர்த்தியிருந்த யௌவனா.. அவருக்கும் சேர்த்து.. மொத்தம் மூவருக்குமாக தன் கையால் இட்லி பரிமாறலானாள்.
இட்லியைச் சட்னியுடன் விண்டு சுவைத்த வேல்பாண்டியோ.. அதன் சுவையில் உச்சுக் கொட்டி ருசித்தவராக, “ஆஹா.. என் தங்கச்சி இட்லி.. என்னமா இருக்கு பாருங்களேன் மாப்ள.. அப்டியே பூ மாதிரி.. அவ்ளோ சாஃப்ட்டால்ல?”என்றபடியே சாப்பிட,
‘என்ன இது அவள் செய்ததா?’ என்று இரண்டு நிமிடம் திக்குமுக்காடிப் போனான் சத்யன்.
கணவனின் மனம் வெல்ல.. ஓர் மங்கை மஞ்சத்தோடு.. அவன் வயிறையும் திருப்தியாக்க நினைப்பது உலக வழக்காறு தான். யௌவனாவின் செய்கையில் ஒளிந்து கிடந்தது நெஞ்சு நிறை அன்பு மாத்திரமே.
ஆனால் இவன் தான்.. அதையும் காபி போல எண்ணி… நஞ்சோ என்றும் ஐயுற்றான் சத்யன்.
அண்ணியும், அண்ணனும் திருப்தியாக சாப்பிடுவதைக் கண்ட பின்னரே.. அரைமனதாக இட்லியில் கை வைக்கவும் செய்தான் அவன்.
யௌவனாவுக்கோ… அவள் மேல் சீற்றமுற்றிருக்கும் சத்யாதித்தனை எப்படியாவது மலையிறக்க நாடிய எண்ணம் இதயம் முழுவதும் விரவிப் பரவியிருக்க, அங்கணம் கொஞ்சம் கிறுக்குத் தனமாகவே நடந்து கொண்டாள் அவள்.
உணவு பரிமாற சேலைத்தலைப்பு இடையூறாகக் கொண்டு.. அதை சுற்றியெடுத்து இடுப்பில் சொருகுகிறேன் பேர்வழி என்று தன் ஒரு பாதி இடையை.. கணவனுக்கு நன்றாகவே தரிசனம் கொடுத்தாள் அவள்.
அவளது வெண்சந்தன இடை.. அதன் அருகில் உணவருந்திக் கொண்டிருந்த சத்யாதித்தனின் விழிகளில் நன்கே விழலாயிற்று.
ரொம்பவும் சிவந்த… நெளிந்த மாமல்லபுரச்சிற்பி செதுக்கிய வளைவான இடை போன்ற சிற்றிடை யௌவனாவுக்கு.
கணவனின் கண்கள் உணவில் பதியாமல்… அவளது இடையிலேயே கடைக்கண் பதித்திருப்பதைக் கண்டவளுக்கு, தன்னழகு ஆராதிக்கப்படுவதில்.. சின்னக் கர்வப் புன்னகையும் தோன்றி மறைந்தது .
அதிலும் அவளது அண்ணன், அண்ணி இருக்கும் தருவாயில்.. மனைவி இப்படி நடந்து கொள்வதில்.. ஒரு அவஸ்தையும் தோன்ற, அதற்கு மேல் சாப்பிட பிடிக்காமல்.. தண்ணீர் பருகி விட்டு எழுந்து விட நாடி
சற்றே கை நீட்டி தண்ணீர்க்குவளை எடுக்க முனைந்தான் சத்யாதித்தன்.
இந்தப் பொல்லாத இராட்சசியும் இது தான் சாக்காக, அண்ணிக்கு இட்லி எடுத்து வைப்பது போல சற்றே எட்டி, அவன் கையோடு.. தன்னிடையை தாராளாமாக உரசி.. அவனை உசுப்பேற்றச் செய்தாள் யௌவனா.
சத்யனுக்கோ… தன் மயிரடர்ந்த கை.. அவளது பஞ்சு போன்ற இடையுடன் உரசியதில்.. ஓர் மின்சாரம் பாய்ந்தது போல தோன்ற, அவன் கையில் இருக்கும் மயிர்க்கால்கள் எல்லாம் செக்கனில் புஸ்ஸென்று சிலிர்த்து.. குத்திட்டு நிற்கவாரம்பித்தது.
முழு உடல் முழுவதும் புது இரத்தம் பாய்ந்து உடல் விறைத்துக் கொள்வது போல மாயை எழ, தண்ணீர்க்குவளையை எடுக்காமலேயே கைகளை விருட்டென்று இழுத்துக் கொண்டவன், சரியாக சாப்பிடாமல்.. உட்காருமிடத்தில் சூடு வைத்தது போல..பட்டென்று எழுந்தான்.
அவன் இறுகிய முகத்துடன், யாரையும் பாராமல் கைகளை கழுவ எழுந்து செல்ல, பதறிப்போயினர் வாசுகி அண்ணியும், வெள்ளந்தி வேல்பாண்டியும்.
வாசுகி அண்ணியோ, பதைபதைப்புடன், “ஏனுங்க தம்பி.. ஒழுங்கா சாப்பிட்றதுக்குள்ள எழுந்திருச்சிட்டீங்க?”என்று கேட்க,
சத்யாதித்தனோ, வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், “நைட் சாப்பிட்டதே இன்னும் டைஜெஸ்ட் ஆகலை.. இன்னும் கொஞ்சம் நேரத்தில் நல்லா பசியெடுத்ததும் சாப்பிட்டுக்குறேன்”என்றுரைத்து விட்டு, சமையலறை நோக்கிச் செல்ல,
யௌவனாவுக்கோ.. தன்னவன் அரைகுறை வயிற்றுடன் எழுந்து கொண்டது மனமுரண்டலைக் கொடுத்தது.
அவன் பாதியில் எழக் காரணம்.. அவள் செய்த சில்மிஷம் தானே?
அவளது சேட்டைத்தனத்தை கொஞ்சம் அடக்கி வைத்திருந்தால்.. அவளது மன்னன் வயிறார சாப்பிட்டிருப்பானோ?
உள்ளம் வாட.. அவள் நின்றிருப்பதைக் கண்ட வாசுகி அண்ணி குறிப்புணர்ந்து, “நாங்கபோட்டு சாப்பிட்டுக்குறோம். நீ முதல்ல போய் மாப்ளய கவனி..”என்று அனுப்பி வைக்க, அவளும் இது தான் சந்தர்ப்பம் என்று.. தலைவனை நாடி விரைந்தாள் .
அவன் புருவ மத்தியில் விழுந்த முடிச்சுடன் கைகழுவி விட்டுத் திரும்பிய போது, அவனையே குறுகுறுவென பார்த்தபடி நின்றிருந்தாள் அவன் உருகி உருகிக் காதலித்த கனவு மங்கை.
சோர்ந்த முகத்துடன், அவனது விழிகள் பாராமல்.. தாடையைப் பார்த்த வண்ணம், சரிவர எழாத குரலில் தன் வாய்க்குள்ளாகவே அவள் முணுமுணுப்பாக,
“ஏன் பாதியிலேயே எழுந்துருச்சீட்டீங்க? நா.. நான் பண்ணது பிடிக்கலையா?? கொஞ்சம் டேஸ்ட் கம்மியா இருந்தாலும் கூட.. முகத்துக்கே நேராகவே சொல்லியிருக்கலாம்.. இப்படி பாதியில விருட்டுன்னு எழுந்துக்குறது.. அத விட கஷ்டமா இருக்கு”என்று அவள் சொல்ல,
அவனது புருவமத்தியில் விழுந்த முடிச்சு தளர்ந்து மீண்டும் விழுந்தது.
பட்டென்று தன் நீண்ட கை சேர்ட் பட்டனைக் கழற்றி.. அவன் இதுகாறும் மறைத்து வைத்திருந்த.. அவள் தந்த நகக் காயத்தடத்தைக் கோப விழிகளுடன் காட்டியவன்,
“இதையெல்லாம் நெஜமாவே நேத்து ராத்திரியே மறந்துட்டீயா? இல்ல நீ மறந்த மாதிரி நடிக்கிறீயா? சத்யமா எனக்குப் புரியல.. ”என்று சொன்னான் தவிப்புடன்.
இதுவரை கணவனின் விழிகளை காதலுடன் ஏறிட்டிருந்தவளுக்கு, ஒருகணம் திருட்டுவிழி வந்து போனது.
நேற்று இராத்திரியை பிரத்தியேகமாக ஞாபகப்படுத்தும் அளவுக்கு, இந்த நகத் தடம் அவனுடலில் பதியும் அளவுக்கு என்ன நடந்திருக்கக் கூடும்?
பார்வையை தாழ்த்திய படி.. நிமிடத்துக்கும் மேலாக அவள் சிந்தித்த போதும் கூட.. ஒன்றும் சிந்தைக்கு எட்டவேயில்லை அவளுக்கு.
ஆனால் கணவன் தன்னை இமைகளுக்குள்ளும் ஊடுருவிப் பார்ப்பது போலத் தோன்ற, எங்கே அவள்.. எதுவுமே ஞாபகத்தில் இல்லையென்றால்.. இன்னும் கோபப்படுவானோ என்ற பயம் பிறந்தது.
அதனால் உண்மையை மறைத்தவளின் கன்னக்கதுப்புக்கள் இரண்டும் அழகாகச் சிவக்க, கணவனை இமைகள் படபடக்க நாணத்துடன் பார்த்தவளுக்கு,
அந்த நகத்தடம் காதலின் கூடலின் உச்சத்தில் இவள் ஏற்படுத்திய தழும்பு என்று கொண்டாள் போலும்.
“அதெப்படி மறக்க முடியும்?நீங்க மட்டும் ஒழுங்கா என்ன?”என்றவள்,
சட்டென்று தன் ஜாக்கெட்டை இழுத்து.. முன்னழகின் மெதுமெதுப்பான தொடக்கத்திலும்,சேலை மூடியதால் மறைக்கப்பட்டிருந்த மறுபாதி இடையிலும் பூத்திருந்த அவனது கைவிரல் தடத்தை திறந்து காட்டியவள்,
“என் மேல ஆசை இருக்கலாம்.. அதுக்காக இப்படியா? காய்ஞ்ச மாடு கம்புல விழுந்த மாதிரி பாய்ஞ்சா..?? பண்றதெல்லாம் நீங்க பண்ணிட்டு.. என்னை குத்தம் சொல்றீங்களா சத்யன்? இன்னும் வலிச்சிட்டே இருக்கு தெரியுமா?”என்று அவள் திரும்பக் கேட்க,
சத்யாதித்தனுக்கோ ஒரு தரம் நின்று வரும் போல இருந்தது மூச்சு.
அவள் கைகளிலும், கால்களிலும் கட்டிட்டதால் உருவான தழும்பு.. சாதாரணமாக வெளித்தெரிவதால் அவன் அறிந்தே வைத்திருந்தான்.
ஆனால் அவளது அந்தரங்கமான இடங்களிலும் தழும்பு உருவாகியிருப்பதை.. அவளாகவே காட்டும் வரை அறியாதவன், அவள் காட்டியதும் அதைக்கண்டு அதிர்ந்து தான் போனான் சத்யன்.
நேற்று அவள் தாக்குதலில் இருந்து தன்னைத் தானே சமாளித்துக் கொள்ள.. அவள் தேகத்தில் எங்கெங்கெல்லாமோ.. கை பதிந்ததில்.. அங்கும் கூட வலுவாக பதிந்திருக்கும் என்று தோன்ற,
அவள் காயம் கண்டு.. அவள் மேல் கழிவிரக்கம் பிறந்தது அவனுக்கு.
அதேசமயம்… அவளுக்கு எதுவுமே ஞாபகமில்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிந்து விட, அவளையே ஒற்றைப்புருவம் மாத்திரம் உயர்த்திப் பார்த்தவன்,
“அப்படின்னா.. நேத்து ராத்திரி நடந்த எதுவுமே ஞாபகமில்லை.. அப்படித்தானே?”என்று அவன் உறுத்துக் கேட்டு விழிக்க,
அந்தப் பார்வையின் வீரியம் தாங்க முடியாமல் தலைகுனித்தபடி நின்றாள் யௌவனா.
குழம்பிப் போயிருந்த சத்யாதித்தனோ, மேற்கொண்டு ஏதும் பேசாமல்.. விறைத்த முகத்துடனேயே அங்கிருந்து வெளியேறிப் போனான்.
அன்று முற்பகல் வேளை… வீட்டிலேயே அடைந்து கிடக்கப் பிரியப்படாத சத்யாதித்தன், மச்சான் வேல்பாண்டியுடன்.. அவருக்கென்று இருக்கும் விளைநிலத்துக்கு ஒத்தாசையாகச் சென்றது.. நேற்றிரவின் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் மன நிம்மதி கொடுப்பதாகவே இருந்தது அவனுக்கு.
அந்த சாய்வான இரு மலைகளுக்கு இடையில் அமைந்திருந்த பள்ளத்தாக்கில்.. பாரிய நிலப்பரப்பில்… கேரட், பீட்ரூட், லீக்ஸ், உருளைக்கிழங்கு என.. பிரித்து பிரித்து பயிரிடப்பட்டிருக்க… மும்முரமாக வேலையாட்களும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தான் சூரியன் உச்சிக்கு ஏறத்தொடங்கியதில்.. காலை வரை இருந்த பனியும், சூரியனும் இணைந்து செய்த ஜாலத்தில்.. ஒரு இதமான காலநிலை நிலவிக் கொண்டிருந்தது அங்கே.
வேல்பாண்டியின் தலைமையகத்தில் இருந்த மேல்மாடி டெராஸில் இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டியவாறு….
தூரத்தில் தெரிந்த விளைநிலங்களின் வனப்பையும், தொழிலாளர்களின் சுறுசுறுப்பையும் கண்கள் இலக்கேயற்று பார்த்திருந்தான் அவன்.
ரொம்ப கைதேர்ந்த வேலையாட்கள் போலும். கேரட் பயிரிடப்பட்டிருக்கும் நீண்ட பாத்தியில் இருந்து.. ஒருவகை கோலால்.. அடித்து அடித்து உச்சி இலையோடு.. ஃப்ரஷ் கேரட்டை மண்ணிலிருந்து பிடுங்கி பிடுங்கி… நீண்ட கூடையில் போட்டுக் கொண்டே செல்வதை வியந்து பார்த்தான் சத்யன்.
கேரட் பிடுங்கியவாற்றைக் கண்ட போதும் கூட.. அவனுக்கு, இதயம் முழுவதும் அவள் ஞாபகமே.
ஒரு துளி சேதாரம் இல்லாமல்.. கேரட்டை மண்ணில் இருந்து பிடுங்கி எடுப்பது போல, ‘உன்னுடனான வாழ்க்கை அது மகிழ்ச்சியில்லை’என்று சொல்லி.. கத்தியின்றி, இரத்தமின்றி.. அவனது இதயத்தையும் அல்லவா பிடுங்கி எறிந்து விட்டாள்??
அவன் விழிகளில் ஆற்றாமையும், களைப்பும் சேர்ந்து கொள்ள மேகம் மூடிய மலைகளையே.. வெறித்துப் பார்த்த வண்ணம் நின்றிருந்தான் சத்யன்.
ஏன் மனைவி முன்னுக்குப் பின் முரணாக நடந்து கொள்கிறாள்? என்று யோசனையுடனேயே இருந்தவனுக்கு சட்டென செவியோரம் ஒலித்தது.. அன்று கோயிலில் வைத்து சித்தர் சொன்ன தேவவாக்கு.
இதயம் கிடுகிடுங்கச் செய்யும் கணீர்க் குரலில,
“மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்
சத்திரிய குலத்தோன்றலான…
உனக்கு யானெடுத்துரைப்பேன்.
உள் உருகி காதல் செய்வோனே…!!
உனக்கு பாவம் விழையப் போவது..
நீ ஆசைவைக்கும் பொருளில் தான்..” என்றவர், அவனது மனைவியைப் பார்த்து, “இதோ இவள் கூட உன் பாவமாகப் போகலாம்”என்றது நினைவுக்கு வந்து போனது.
மனைவியின் மனம் பிறழ்வான நடத்தையைத் தான்.. சித்தர் அன்று சொல்ல விழைந்தாரா??
‘என் பாவம் அவளா?’என்று பலதரப்பட்ட எண்ணங்கள் அவன் சிந்தனையை ஆக்கிரமிக்கலானது.
தன்னுடன் வந்த மாப்பிள்ளை வழமையான துடிப்புடனும், உற்சாகத்துடனும் இல்லாமல் இருப்பதைக் கவனித்த வேல்பாண்டிக்கும் கூட அது ஒருவகையான கவலையைக் கொடுக்கவே.. மெல்ல அவனை நாடிப் போனார் வேல்பாண்டி.
எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கும் தங்கை.. இன்று சத்யனை விழுந்து விழுந்து கவனித்ததையும், வழமைக்கு மாறாக.. நிலைமை தலைகீழாக மாறிப் போக.. இவன் இன்று பாராமுகம் காட்டியதையும் கவனித்துக் கொண்டு தானிருந்தார் வேல்பாண்டி.
அதனால், “இந்த இளசுகளுக்குள் என்ன பிரச்சினை?” என்று அறிய நாடியவர், தனக்கு புறமுதுகிட்டு நிற்கும் சத்யனை நாடி வந்து, “என்ன மாப்ள யோசனை?”என்று கேட்ட வண்ணமே, அவன் முதுகில் கை வைக்க,திரும்பிப் பாராமலேயே நின்றிருந்தான் அவன்.
முதலில், ‘எதுவும் இல்லை’ என்று மறுக்கப் போனவனாக திரும்பியவன், வேல்பாண்டியின் விழிகளில் இருக்கும் தீவிரத்தைக் கண்டு, அமைதியாகிப் போனான்.
காலையில் ஒரு யௌவனாவாகவும், மாலையில் ஒரு யௌவனாவாகவும் இருப்பவளை மாறி மாறி கண்டிருப்பவன் ஆயிற்றே அவன்??
அதனால் மனைவிக்கு ஏதாவது மனோவியாதிகளோ என்ற சிந்தனை அவனுக்குள்.
எத்தனை செலவழித்தாவது.. அவளை குணப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் பிறந்ததே ஒழிய, அவளை விட்டும் நீங்கி விடும் எண்ணம் அப்போது பிறக்கவில்லை அவனுக்கு.
வாழ்க்கைப் பாடத்தில் அனுபவம் இருக்கும் மூத்த தம்பதிகளான வாசுகி அண்ணியோ, வேல்பாண்டி அண்ணனோ.. செவ்வரியோடிய விழிகளும், விறைத்த உடலும் கொண்ட யௌவனாவைக் கண்டிருந்திருப்பின்,
“தங்கைக்குப் பேய் பிடித்திருக்கிறது ” என்பதை பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொண்டிருப்பர்.
ஆனால் வேல்பாண்டி தான் நடந்ததை பார்க்கவில்லையே? வெளியே சத்தம் வந்து.. ஊர் கூடினால் அவமானம் என்றல்லவா அவனும் அவளைக் கட்டிப் போட்டான்??
இதனால் தங்கையின் உண்மை நிலையை அறியாது போனார் அவர்.
ஆனால்.. பேய், பிசாசுகளில் சுத்தமாக நம்பிக்கை இல்லாத சத்யாதித்தனோ.. மனைவியின் மனம் இளவயதில் ஏதோ ஒரு சமயத்தில் வன்மையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என்றே நம்பினான்.
அதனை தெளிவுபடுத்திக் கொள்ள நாடியவன், வேல்பாண்டி மச்சானிடம், “இல்ல மச்சான்… யௌவனாவுக்கு சின்ன வயசுல மனசை பாதிக்கற மாதிரி ஏதும் நடந்திருக்கா?ஐ மீன் செக்ஸூவல் ஹராஸ்மென்ட்.. இந்த மாதிரி ஏதாவது..? ”என்று நாசூக்காக கேட்டுப் பார்த்தான் அவன்.
அவன் அப்படி கேட்கவும் வலிய காரணம் இருந்தது. சத்யாதித்தன் ஆசையோடு அவளை நெருங்க விழையும் தருவாயிலில் தானே.. இத்தனை கோபாவேச வெறிகளும் அரங்கேறியது?
அதனால் தான்..சிறுவயதில்..அப்படி ஏதாவது நடந்திருக்கிறதா? என்று கேட்டான் சத்யாதித்தன்.
தாடையை சொறிந்து கொண்டே சத்யனைப் பார்த்தவருக்கு, மாப்பிள்ளை அவ்வாறு கேட்பதன் காரணம் புரியவில்லையாயினும், அவரிடமிருந்து உடனடியாக வந்தது பதில்.
நிஜமாகவே அப்படி பாலியல் வன்கொடுமைகள் நடந்திருந்தால் தானே வேல்பாண்டி யோசிக்கக் கூடும்?
அப்படியெதுவும் தான் நடக்கவேயில்லையே?
அதனால் பளிச்சென்ற முகத்துடன், “அப்படியெதுவும் இல்லையே மாப்ள.. அப்படி என் தங்கச்சி கிட்ட நெருங்க நினைக்குற எந்த ஆணையும் கூட நான் சும்மா விட்டதில்ல மாப்ள.. ஏன் கேட்குறீங்க?”என்று கேட்க,
உண்மை தகவலைச் சொல்லாமல், மழுப்பும் நோக்கத்துடன், குழம்பிய வதனத்துடன், “இல்லை.. என் மனைவியைப் பத்தி பூரணமா தெரிஞ்சிக்கலாம்னு தான்…” என்றவன்..
ஏதும் பேசாமல்.. அந்த மேட்டை விட்டும் அகன்று … காய்கறிகள் பயிரிடப்படும் இடத்தினை அடைய நாடி.. அந்தப் பள்ளத்தாக்கில் இறங்கலானான்.
****
அதே சமயம்..
அந்தப் பட்டப் பகலில்.. மானிட ஜோடிக்கள் ஊடல் கொண்டது போலவே.. ஒரு அமானுஷ்ய ஜோடியும் ஊடல் கொண்டிருந்தது.
மானிட ஜோடியும் சரி.. அமானுஷ்ய ஜோடியும் சரி.. இந்த இரு ஜோடிகளினதும் ஊடலுக்குக் காரணமாக அமைந்தது.. இருநூறு வருடங்களாகியும் பழிவெறி நீர்த்துப் போகாமல்.. சத்யனின் உயிரை காவு வாங்க… இராஜசிங்கன் வம்சத்தைக் கருவறுக்கக் காத்திருக்கும் நந்தினியே தான்.
தேவதாக்கள் மாத்திரம் நீராடும்… அந்த மாயநீர்வீழ்ச்சியில்…அன்றும் போல இன்றும் நீராட நாடியவன், தன் வெண்ணிறப் புரவியை விட்டும் இறங்கி…. அந்த மாயக் கானக வழிப்பாதையில் நடந்து கொண்டிருந்தான் தேவதா.
ஈசனின் அம்சமான தேவதாவுக்கோ.. தன் ரௌத்திரப் பார்வதி.. எல்லை மீறி.. ஒரு தீர்க்க சுமங்கலியின் உடலில் புகுந்து.. இளம் தம்பதியினரின் தாம்பத்தியத்தைக் கெடுக்கப் பார்த்தது ஒரு அதிமிதமான கோபத்தைக் கொடுக்கலானது.
எப்போதும் நிதானம் இலங்கும் அவனது நடை.. இன்று அழுத்தமான காலெட்டுக்கள் பதித்த ஓர் அதிவேக நடையாக மாறிப் போயிருந்தது.
அவன் கண்கள் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடியிருக்க, கோபத்துடன் அவன் நடந்த கணம்.. அவன் நாசி நுகர்ந்தது.. சித்தத்தை பித்தங் கொள்ளச் செய்யும் ஒருவகையான மல்லிகைப்பூ வாசனையை.
அதை முகர்ந்த கணம் புரிந்தது… வந்திருப்பது தேவதாவின் நந்தினியென்று.அவன் இதயத்தில் வைத்து கொண்டாடிய ஆசை நந்தினியென்று.
காற்றிலே கலந்திருக்கும் மனைவி முகத்தைக் காணப் பிடிக்காதவன் நடந்தான்.. முன்னரை விட வேகமாக.
அந்த கணம்.. அவனது நடையை நிறுத்துமாக.. ஒரு பஞ்சுப்பொதி வந்து மோதியது அவன் முதுகோடு. மெல்லிய கரங்கள் இழுத்துப் பிடித்து அணைத்துக் கொண்டது அவனது வயிற்றை.
அவள் அணைக்க அணைக்க.. இறுகி விறைக்க விறைக்க நின்றிருந்தான் தேவதா.
தேவதாவுக்கு மனைவியின் அணைப்பு கசந்ததுவோ? இல்லை மனைவியே கசந்தாளோ?
தன் வயிற்றில் கோர்த்திருந்த அவள் கையை அழுத்தமாகப் பற்றியிழுத்து..தன்னெதிரே இட்டவன் முகம் சினத்தில் செம்மையாகச் சிவந்திருந்தது.
அவளை சுட்டெரித்து விடுவது போல நோக்கியவன், தன் பற்களைக் கடித்துக் கொண்டு , “என்னைத் த்தொடாதேஏஏ!! ”என்று இரைந்து கத்தினான் தேவதா.
நந்தினிக்கோ.. தேவதாவின் சினம்.. இதயத்தை தூக்கிவாரிப் போடச் செய்தாலும் கூட, அடுத்த கணம் தன் தொடுகையை தவிர்த்த கணவன் மேல் உரிமைக் கோபம் மிகுந்தது அவளுக்கு.
அழகு கொஞ்சும் கோபத்துடன் சிணுங்கியவளாக.. அவன் கழுத்தில் மாலை போல கோர்த்து, மயக்கும் மாயக் குரலில், “உங்கள் மனைவி.. நந்தினி… நான்.. உங்களைத் தொடக்கூடாதா? என்னைத் தவிர இந்த உரிமை இந்த அவனியில் யாருக்குண்டு?” என்று கேட்க, தேவதா கைமுஷ்டியை மடக்கி நின்றவாற்றில், அவனுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிப் போனது.
தன் கழுத்தில் இருக்கும் அவள் கையைத் தட்டிவிட்டு, அவளை விட்டும் ஈரெட்டுப் பின்வாங்கியவன், கோபக் குரலில், “நான் உன் ம்மேல் வ்வைத்த அன்பையும், உனக்கு க்கொடுத்த அவகாசத்தையும் வைத்து அது ‘உர்ரிமை’ என்று அர்த்தம் கற்பித்துக் கொண்டாயோ? இனி நீ என் கண் முன் வ்வராதே..என் சீற்றத்தைக் கிளப்புமுன் சென்று வ்விடு நந்தினி.” என்றவன்… அவளைப் பாராமல்.. அழுத்தமான எட்டுக்கள் எடுத்து வைத்து வேகநடை நடந்து கொண்டே போனான்.
கணவனை ஏமாற்றி.. அவனுடன் கூடிய போது.. அவனுள் உண்டாகாத சீற்றம்.. இப்போது மட்டும் ஏது??
கணவனின் புறக்கணிப்பும், பாராமுகமும் கவலையைக் கொடுக்கவே, அவனைக் கூவி கூவி அழைத்த வண்ணம், மனம் பதறப் பதறப் பின்னாலேயே சென்றாள் நந்தினி.
அவனோ.. அவளை இம்மியளவும் மதிக்காதவன் போல், பேருக்குக் கூட தன் மனைவியைத் திரும்பிப் பார்க்கவேயில்லை.
இவளும் விடாமல், தொடர்ந்து சென்று, பேசும் போது.. இயல்பாகவே அந்தப் பதிவிரதையின் கண்களில் கண்ணீர் கோர்க்கத் தொடங்கியது.
அதனால் விளைந்த தழுதழுத்த குரலில், “ம.. மகா.. மகாசேனரே.. மகாசேனரே.. இது தான் நும் முடிவாஆஆ? …காற்றின்றி உயிர்க.. ளால் இருந்திட முடியாது…. அது போல நானி… ன்றி உம்மால் இருந்திட முடியுமா? இந்தப் பழிவாங்குதல்… எல்லாமே.. நான் நும் மேல் கொண்ட காதலுக்.. காகத் தா…. னே??… அதைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீரே?”என்று கேட்டாள் அவள்.
அவளிடமிருந்து கேட்ட ‘காதல்’ என்னும் ஒற்றைச் சொல்லில் தேவதாவின் மின்னல் நடையும் தடைப்பட்டு நின்றது.
சட்டெனத் திரும்பி, மனைவியை அடிபட்ட வலியைக் கண்களில் தேக்கி நோக்கியவன், “எனக்காகவ்வாஆஆ? ஒரு இளம் தம்பதியினரின்.. தாம்பத்தியத்தைக் கெடுப்பதற்குப் பேர் தான் காதலாஆஆ?? .. இது தான் காதலாஆஆ?? என்னைக் கண்டதும் உன் பழிவெறியைத் துறந்து.. ‘நானே தஞ்சம்’ என்று நீ வந்திருப்பாயாயின்.. அது தான் தூய நேசம்…அது தான் க்காதல்..”என்றவனுக்கு, நந்தினியின் முகத்தை மேற்கொண்டு பார்த்திருப்பது கூட முடியாத காரியமாகிப் போக, இறுகிய முகத்துடன் மீண்டும் திரும்பி.. அசுர நடை நடந்தான் தேவதா.
நந்தினிக்கோ…. தான் அவன் மேல் வைத்திருக்கும் தூய காதலை விடவும், உடம்பில் ஓடும் அடிமை இரத்தம் முக்கியமாகிப் போனதில்… சுருசுருவென்று கோபம் பொங்கியெழ,
அவனது புறுமுதுகைப் பார்த்து, இரைந்த குரலில், “இந்த நந்தினியை உங்களால் முமறக்கவும் முடியுமோஓஓ? என்னை ஒதுக்கித் தள்ளவும் முடியுமோஓஓ?”என்று கேட்க, தேவதாவின் நடை.. அவள் சொற்களில் அப்படியே தடைப்பட்டு நின்றது.
அவளை நோக்கித் திரும்பியவன், அவள் விழிகளுக்குள் எதையோ ஊடுருவித் தேடுபவன் போல, பார்த்தவன், சீற்றக் குரலில், “ எக்கணம்.. ம்மாற்றான் ம்மனைவியின் உடலுக்குள் நுழைந்தாயோ.. அக்கணத்திலிருந்து… நீ எனக்கு எச்சில் ப்பண்டம்!! … நீ இழந்தது என்னோடு இருக்கும் உரிமையை மட்டுமல்ல.. உறவையும் தான்!!! ”என்றவன், அதற்கு மேலும் அவளுக்கு தரிசனம் தரப் பிரியப்படாமல்.. அவளைப் பார்த்த வண்ணமே காற்றோடு காற்றாகிப் போனான் தேவதா.
கணவன் உதிர்த்து விட்டுச் சென்ற “எச்சில்பண்டம்” என்ற சொல்லில், நந்தினியின் சப்த நாடியும் அடங்கிப் போக, மனம் காயமுற, கல்லாய் சமைந்து நின்றவளின் விழியோரம் நீர் மல்கியது.
அவளது தனங்கள்.. அந்த வார்த்தையின் வீரியம் தாங்க மாட்டாமல், ஏறி இறங்கிப் பெருமூச்சு வாங்க, கழுத்து நரம்பு புடைத்து வெளித் தெரிய நின்றிருந்தவளோ,
காற்றை வெறித்துப் பார்த்த வண்ணம், “நா… நானா உமக்கு எச்சில் பண்டம்?? நானா எச்சில் பண்… டம்??”என்று சொன்னவளின் விழியிலிருந்து வழிந்தது கண்ணீர்த்துளியொன்று.
கணவனின் அன்பு தன்னை விட்டும் தூரமாகிப் போனதில் நிலைகுலைந்து நிற்கத் தலைப்பட்டாள் மாய நந்தினி.
அந்தப் பொல்லாத பொய்வேஷக்கார நந்தினிக்கோ.. சத்யனின் உயிரைக் காவு வாங்குவதோடு, புதையலுக்காக தன் எல்லையை வந்தடைந்திருக்கும் பிரபாகரைப் பின்வாங்கச் செய்விப்பதுடன்.. இன்னொரு வேலையும் கூடிப் போனது.
அது ஊடலுற்ற தன் தேவதாவை.. மீண்டும் அவளை நேசமுற வைப்பது.
நடக்குமா? பிடித்த பிடியில் உடும்பாக நிற்கும் தேவதாவின் வீம்பு தளருமா?
மீண்டும் அவளை அவன் தன்னோடு இணைய அனுமதி தருவானா? கலங்கிப் போனாள் நந்தினி.
*****
அன்று மாலை…
அண்ணனுடன் விளைநிலம் சென்று வீடு வந்தவன்.. யௌவனா இருக்கும் திசையைக் கூடப் பார்க்காமல்.. முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருக்க,
ஊடல் மறந்து ஒரு குழந்தை போல அவன் பின்னாடியே சென்ற யௌவனா, மிருதுவான குரலில், “ஏன் என் முகத்தைப் பார்க்கக் கூட மாட்டேங்குறீங்க சத்யன்?”என்று கேட்க, யௌவனாவை ஏகத்துக்கும் முறைத்துப் பார்த்தான் சத்யன்.
நேத்து ராத்திரி அவனை அந்தப் பாடுபடுத்தி விட்டு.. அப்பாவி போல கேள்வியையும் பாரேன் என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவன்,
அவளைத் தீர்க்கமானப் பார்வை பார்த்தவன், ‘தன் முடிவு இது தான்’ என்பது போல திட்டவட்டமான குரலில், “இங்கே பாரு யௌவனா.. உன் மேல் உள்ள அளவு கடந்த காதலுக்காகத் தான்.. இதுவரை எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்தேன்…நீ இந்தியாவில் இருந்து இலங்கை வந்தப்போவும்.. உன்னை… எப்படியாவது உன் மனசை மாத்தி திரும்பவும் சென்னை கூட்டிப் போயிரலாம்னு நினைச்சேன்.. ஆனால் அது நடக்காதுன்னு நேத்து ராத்திரி நல்லாவே புரிய வைச்சுட்ட.. என் கூட தான் வாழ்றது உனக்குப் பிடிக்கலையே.. அப்புறம் எதுக்கு நான் உன்னை தொந்தரவு பண்ணனும்?”என்று அவளுக்கு தலையும் இல்லாது, வாலும் இல்லாது போல பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போக, அதிர்ந்து விழித்தாள் அவள்.
‘அவனுடன் வாழ்வது பிடிக்கவில்லை என்றாளா? எப்போது?’ என்று அச்சமும், பீதியும் பிறக்க, திடுக்கிட்டவளாக, “நா.. நான் எப்போ அப்படி சொன்னேன்?”என்று கேட்டாள் யௌவனா.
அவளுக்காக தேசாந்திரம் கடந்து வந்த ராஜாவை..இலங்கை இளவரசிக்கும் பிடிக்காமல் போகுமோ???
அவனை நேற்றிரவு நடந்ததை வார்த்தைகளால் விபரிக்க மனமற்று,
அவளை சலிப்புடன் நோக்கியவன், “உன் மனசைக் கேட்டுப்பாரு புரியும்… அம்மா வேற…இன்னைக்கு காலையில இருந்து கால் மேல கால் போட்டு… இந்தியா கிளம்பி வந்துடச் சொல்லி நச்சரிச்சிட்டே இருக்காங்க.. என் பொறுமையின் எல்லையும் அளவு கடந்தாச்சு.. நான் பார்த்திருந்தது எல்லாம் போதும்.. நாளை மறுநாள்.. நீ வர்றியோ.. இல்லையோ.. நான் இந்தியா கெளம்பிப் போயிருவேன்.. நீ வர்றதுன்னா வா… இல்லை இங்கேயே இருக்குறதுன்னா இரு.. அது உன் இஷ்டம்.. ஆனா என் அம்மாவுக்கு பதில் சொல்ல தயாரா இரு…”என்று கோபமாக மொழிந்து விட்டு, அறையை விட்டும் வெளிக்கிளம்பிச் செல்ல,
கைகளைப் பிசைந்து கொண்டு கண்ணீர் மல்க நின்றாள் அவள்.
நேற்று இரவு ஏதோ.. அவள் வாழ்க்கையின் தலையெழுத்தையே மாற்றிப் போடும் வண்ணம் நடந்திருக்கிறது என்று புரிந்தாலும், அந்த பொல்லாத சம்பவம் எது என்று அறியாமல் தான் குழம்பிப் போனாள் அவள்.
அதேசமயம் வசுந்தராதேவியம்மாளின் நினைவில் சின்ன அச்சம் எட்டிப் பார்த்தது அவளுக்குள்.
எந்த மனைவியரும் கணவனை தலையணை மந்திரம் போட்டு சமாளித்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த மாமியார்களை?? … சின்ன வழுவுநெறி தவறினாலும்… மனதளவில் குத்திக் கிழிக்கும் சொற்களாலும், செய்கைகளாலும் பாடாய்ப்படுத்தும் இந்த மாமியார்களை எங்கணம் சமாளிப்பது?
அத்தையைப் பற்றி நினைக்குப் போது அச்சம் எழ… யௌவனாவின் நிலையோ பரிதாபமாகரமாகிப் போனது.
இந்த முறை.. நந்தினி.. சத்யாதித்தனின் பயணத்தைத் தடை செய்ய தேவையேயற்று.. அதற்காகவே வந்தான் பிரபாகர். ஒரு நாசகார திட்டத்துடன்.
தேவதா வருவான்.
Pavam yavvaana sis 💞
ivcpZYlELdCKDJq
VCXcvpDGnMHN