ஏகாந்த இரவில் வா தேவதா
[20]
அடுத்த நாள் காலை.
முந்தைய நாள் இரவு மனைவி.. பித்துப் பிடித்தவள் போல நடந்து கொண்டதில்… இன்னும் அவள் பால் ஊடலுற்றவனாக, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிந்து கொண்டிருந்தான் சத்யாதித்தன்.
தன் அன்புக் கணவனின் கோபத்தின் காரணம் இன்னதென்று அறியாமல்.. அவனை மலையிறக்குவதற்காக.. முன்பு போல் அவளை கண்களாலேயே காதல் செய்யும் அந்தப் பழைய சத்யாதித்தனை மீளவும் வரவழைப்பதற்காக படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள் யௌவனா.
சத்யனோ.. இன்னும் சீற்றம் மட்டுப்படாமல் இருந்தவன் ஆகையால்.. மனைவி கண்களாலேயே மன்னிப்பை யாசித்து நின்ற போதும், முகம் திருப்பிய படியே தான் வளைய வந்து கொண்டிருந்த நேரம் தான்..
சத்யாதித்தனைத் தேடி வந்தான் பக்கா ‘கார்ப்பரேட் கிரிமினல்’ மிஸ்டர். பிரபாகர்.
தம்பதிவனத்தில் இருநூறு வருடங்களுக்கும் மேலாக.. அள்ள அள்ள குறையாத புதையல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அரிய இரகசியத்தை அறிந்து,
அரசாங்கத்தின் கண்ணிலும், ஊர் மக்களின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு, ‘அகழ்வாராய்ச்சி செய்கிறேன்’ பேர்வழி என்று..
புதையல் தேடும் அதே பிராபகர்.
அன்று அவன் சிரித்த முகமாகவே யௌவனாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, அந்த புன்னகைத்த கண்களுக்குள்.. ஒரு தீவிர வன்மமும், நயவஞ்சகமும் ஒளிந்திருந்ததை அவ்வளவு சீக்கிரம் யாரும் கண்டுபிடிப்பது அரிதாகவே இருந்தது.
வெள்ளை முழுநீளக்கை சட்டையும், பேன்ட்டும் அணிந்திருந்த அந்த நெடியவன், சட்டைக்கு மேலாக அணிந்திருந்த ப்ளேசர்.. அவனது ‘ஜென்டில்மேன் லுக்’ ஆடைக்கு இன்னும் நேர்த்தி சேர்ப்பது போல இருந்தது.
வீட்டு வாசலில் நின்றிருந்தவன் கண்களோ.. ஹாலினுள் அமர்ந்து ஐபேட்டில் தீவிரமாக எதையோ நோண்டிய வண்ணம் அமர்ந்திருந்த சத்யாதித்த ‘இராஜசிங்கனை’ விஷமத்துடன் பார்த்தது.
‘இராஜசிங்கன்’.. இந்த பரம்பரையில் வந்தவன் என்ற ஒரே காரணத்திற்காகத் தானே.. பிரபாகர்.. இத்தனைக் கீழிறங்கி.. நல்லவன் போல வேஷமாடி.. இந்த சத்யனை நம்ப வைக்க வேண்டியிருக்கிறது?
உண்மையில் பிரபாகருக்கு.. இப்படி நல்லதனமாகப் பேசி பழக்கமேயில்லை. தனக்கு வேண்டியதை வன்முறையாக பறித்தெடுத்துக் கொள்பவன் அவன்.
இன்று..தன்னெதிராளி..தன்னை விட உடலளவிலும், பொருளளவிலும் ‘பலவான்’ என்றானதும் நயமாக நாடகமாடி நினைத்ததை சாதிக்க முயல்கிறான். அவ்வளவே!!
கூடவே அவன் பக்கத்தில் புதுப் பணியாளன் ஒருவனும் நின்றிருந்தான்.
அவனது வலது கையான.. இந்த ஊரைச் சேர்ந்த அத்தனை தகவல்களையும் தந்துதவிய பகீரதன்.. அகால மரணமடைந்ததன் பின்னர்.. அவனது இடத்தை நிரப்ப யாரும் இருக்கவில்லையாயினும் கூட..
இந்த ஊரில் இருக்கும் ஏழைக்குடியானவன் ஒருத்தனை.. தன்னருகில் பகீரதனுக்கு பதிலாக பணிக்கு அமர்த்தியிருந்தான் பிரபாகர்.
அந்த கார்ப்பரேட் காரனின் புதிய வலதுகையின் பெயர் ‘ராஜகோபாலன்’. பிரபாகர் விட்டெறிந்த காசுக்கும் மேலாக.. விசுவாசம் காட்டுவதில் வல்லவனாகவும் இருந்தான் ராஜகோபாலன்.
கோபாலன் கையில், தட்டுநிறைய பூ, பழம், பட்டுப்புடவை, குங்குமச் சிமிழ் என்று மங்களகரமான பொருட்கள் அடைக்கலமாகியிருக்க,
தன் பேன்ட் பாக்கெட்டுக்குள் இரு கைகளையும் நுழைத்த வண்ணம், வலிய வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.. ஹாலினுள் நடந்தவன்,
ஐ பேட்டிலிருந்த சத்யாதித்தனின் கவனம் கலைக்கும் முகமாக சற்றே பெருங்குரலில்,
“ஹல்லோ.. சத்யாதித்தன்.. உள்ளே வரலாமுங்களா??”என்று கேட்க, ஐபேட்டில் இருந்து பார்வையை எடுத்து.. சத்தம் வந்த திசையைப் பார்த்த சத்யனின் வதனம்.. வெள்ளந்தியாக மலர்ந்தது.
‘அரசாங்கத்தினால் நிதியொதுக்க முடியாத அகழ்வாராய்ச்சியை.. தன் சொந்த நிதியில் தொடரும்.. வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ள இளம் வாலிப வர்த்தகன்’ பிரபாகர் என்பதில்,
சத்யனுக்குள் இயல்பாகவே அந்நெடியவன் மீதிருந்த மரியாதையும், அன்பும் தலை தூக்கவே,
வாய் கொள்ளா புன்னகையுடன், “வாங்க வாங்க பிரபாகர்..” என்று மனமார வரவேற்றான் சத்யன்.
வீட்டுக்குள் புது நபர் நுழைந்ததை உணர்ந்து கொண்ட வேல்பாண்டியும், வாசுகி அண்ணியும்… ஹாலுக்கு வந்து சேர.. சத்யனின் அருமை மனைவி மட்டும் எங்கே போனாளாம்?
அவள் எங்கும் போகவில்லை. சத்யன் இத்தனை நேரம் ஐபேட்டுடன் அமர்ந்திருந்த சொகுசு சோபாவிற்கு பக்கத்தில் இருந்த..
மிகவும் கலைநயம் மிகுந்த தூணைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தன் தலைவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் யௌவனா.
‘நாளை மறுநாள் இந்தியா செல்லப் போகிறேன்’ என்றான் கணவன் நேற்று.
இன்று அந்த நாளை வந்து விட்டதே. அப்படியானால் நாளை.. அவளை விட்டும் சென்று விடுவானா? என்ற பதைபதைப்பு மீதூற, இம்மியளவும் அவனை விட்டும் நீங்காமல்..
கிடைத்த இடைவெளியில் எல்லாம் கண்களாலேயே அவனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தாள் அவனது காதல் கிழத்தி.
பிரபாகர்.. தன்னைத் தவிரவும் தன்னைச் சூழ நின்ற இதர மாந்தர்களை அதிகப்படியான ஆர்வத்துடன் பார்ப்பதை அறிந்து கொண்ட சத்யன், தன் மனைவி வழி சொந்தங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி நாடினான் போலும்.
அதற்கு முன்னர், தன் அழகு மனைவியை அறிமுகப்படுத்த நாடியவன், தூணிற்கு பின்னால் நின்று கொண்டு.. எதுவுமே தெரியாத அப்பாவி போல.. ‘விட்டால் அழுது விடுவேன்’ என்பது போல பார்த்த படி நின்ற மனைவியை.. விழிகளாலேயே, ‘இங்கே வா’ என்பது போல தன்னருகில் அழைத்தான் சத்யாதித்தன்.
அவனது ஒற்றைக் கண்ணசைப்பில்…. முழுமதி போல வதனம் பிரகாசிக்க, சிரித்துக் கொண்டே அவனருகில் விரைந்து வந்து நின்றாள் யௌவனா.
அந்தப் பதிவிரதையின் பார்வை முழுவதும்.. தன் கொண்டானின் முகத்திலேயே மையலுடன் பதிந்திருக்க, சத்யாதித்தனோ, அந்த கார்ப்பரேட் காரனிடம்,
“மீட் மை வைஃப் யௌவனா..” என்று, யௌவனாவை அறிமுகப்படுத்தி வைக்க,
தன் இரு தளிர்க்கரங்களைக் கூப்பியவள், “வணக்கம்” என்று சொல்ல, யௌவனாவை உச்சாதி பாதம் வரை சட்டென்று ஓர் மின்னல் பார்வை பார்த்தான் பிரபாகர்.
உண்மையிலேயே யௌவனா.. ஒரு குறை சொல்ல முடியாத அப்பழுக்கில்லாத அழகு!! அது மனதளவிலும் சரி. உடலளவிலும் சரி.
இப்பேர்ப்பட்ட பேரழகை அடைய… சத்யாதித்தன் கடல் கடந்து வந்ததில், ஊர்ப்பஞ்சாயத்துக்கு இலஞ்சம் கொடுத்ததில்.. இன்னும் ஏன் அவனது தாயைக் கூட எதிர்த்து நின்றதில் தப்பேயில்லை என்று தோன்றியது பிரபாகருக்கு.
அதிகப்படியாக யௌவனாவைப் பார்த்து வைப்பதை.. தன் புதையலின் திறவுகோலான சத்யன்.. தவறாக எண்ணிக் கொண்டு விடுவானோ என்று பயந்தவன்,
யௌவனாவை நோக்கி, “உங்களை பார்த்தா என் தங்கச்சியை பார்க்கிற மாதிரியே இருக்கு சிஸ்டர்”என்று ஒரு பிட்டைப் போட்டான் அவன்.
பெரும்பாலும் கணவனோடு வீடு வரும் ஆண்கள்.. மனதுக்குள் என்ன தான் பல தில்லுமுல்லு எண்ணங்கள் இருந்த போதிலும், ‘உங்களை பார்த்தா என் தங்கச்சியை பார்க்கிற மாதிரியே இருக்கு’ என்று சொல்வதானது,
அதன் பின் என்ன நடந்தாலும்.. அந்த ஆடவன் ‘சகோதர பாசம்’ காட்டுகிறான் என்ற பார்வையில் தானே பார்க்க வேண்டிய கட்டாய நிலையை ஏற்படுத்தும்??
மற்ற மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் மனம் தோன்றாது அல்லவா??
அதனால் பிரபாகரும் கூட.. ஒரு பாதுகாப்பான வளையத்தில், காய் நகர்த்திச் செல்ல நாடி.. அவ்வாறு முன்கூட்டியே சொல்லி வைக்கவும் செய்தான்.
அதனை வெள்ளை மனதுடன், ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட சத்யன், அடுத்து வேல்பாண்டி, வாசுகி அண்ணியைக் காட்டி, “இது அவங்க அண்ணா வேல்பாண்டி.. என்ட் இது அவரோட மிஸஸ் வாசுகி அக்கா..” என்று அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்க, அனைவரையும் நோக்கி பொதுவாக கைகூப்பியவன்,
“வணக்கம்… நான் பிரபாகர்” என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொள்ள விழைந்த போது, சட்டென இடையில் குறுக்கிட்டார் வெள்ளந்தி வேல்பாண்டி.
கண்களில் கனிவுடன், “அட உங்களுக்கு எதுக்கு சார் அறிமுகம் எல்லாம்? உங்களைத் தான் இந்த ஊருக்கே நல்லா தெரியுமே சார்… நம்ம ஊரில்.. சொந்த செலவுல அகழ்வாராய்ச்சி பண்றவங்களை எப்படி தெரியாமல் போகும்… அறிமுகமே இல்லைன்னாலும்… நல்லா பழகின மாதிரி முகம் சார் உங்களுக்கு”என்று சொல்ல,
வேல்பாண்டி தன்னை மலை போல நம்புவது கண்டு.. வந்த காரியம் இலகுவாகி விடும் போல இருந்தது பிரபாகருக்கு.
அதனால் ஒரு குறும்புன்னகை ஒன்றை உதிர்த்தவன், “என்னை சார்ன்னு எல்லாம் கூப்பிடத் தேவையில்லை வேல்பாண்டி.. ஜஸ்ட் பிரபாகர்னு கூப்ட்டா போதும்” என்று சொன்னமையானது,
வேல்பாண்டியை உச்சிகுளிர வைக்கவே, மனைவியை நோக்கி, “அடியேய்.. இன்னும் என்ன பார்த்துட்டிருக்க?? போ.. பிரபாகர் தம்பிக்கு ஒரு காபி கொண்டா” என்று ஏவ, வாசுகி அண்ணியும் கணவனின் கட்டளையை தலைமேல் கொண்டு.. சமையலறை நோக்கி விரையலானார்.
அதற்கு அவசியமற்றவன் போல, விரையப் போன வாசுகி அண்ணியை தடுத்து நிறுத்தியவன், “அதுக்கெல்லாம் அவசியமில்லை பாண்டி.. நான் வந்த விஷயத்தை முடிச்சிட்டு சீக்கிரம் கெளம்பலாம்னு இருக்கேன்” என்றவன், தற்போது தான் தன்னுடன் வந்த பணியாளன் ராஜகோபாலனைப் பார்த்தான்.
அவனும் தன் எஜமானனின் ஒற்றைப் பார்வையின் விவரம் அறிந்து கொண்டவனாக, கையோடு கொணர்ந்த தட்டை.. பிரபாகரின் கைகளில் ஒப்படைக்கவும் செய்தான்.
மங்களத் தட்டுடன், சத்யனைப் பார்த்தவன், “எனக்கு தெரியும் சத்யன்.. உங்களுக்கு சாமி, பூதம்னு எதிலேயும் அவ்வளவா நம்பிக்கையில்லைன்னு.. ஆனா நான் அப்படி கிடையாது.. எனக்கு அமானுஷ்ய விஷயங்களில் எல்லாம் நம்பிக்கை ஜாஸ்தி.. அகழ்வாராய்ச்சி எந்த தடையும் இல்லாம நடக்கணும்னா.. எல்லையம்மனுக்கு ஒரு பூஜை பண்ணனும்னு ஜோசியர் சொன்னாரு.. அதுவும் இன்னைக்கு ராத்திரி.. பூரணை நிலவு வர்ற சமயத்துல.. இந்த ஊரைச் சேர்ந்த ராஜபரம்பரை உங்க கையாலே தான் அந்த பூஜை நடக்கணும்னு சொன்னாரு.. தயவு செய்து நீங்க உங்க குடும்பத்தோடு வந்து முடிச்சுக் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்.. ப்ளீஸ்.. இது என்னோட ஹம்பிள் ரிக்வஸ்ட்” என்றவன்,
சத்யனை நோக்கி அந்த மங்களத் தட்டை வாங்கிக் கொள்ளும்படி ஏந்தி நிற்க, திக்குமுக்காடிப் போனான் சத்யன்.
ஓர் நல்ல மனிதனுக்காக..சத்யனது நம்பிக்கையின்மையை தூக்கியெறிந்து விட்டு.. பூஜை செய்வதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை தான்.
இருப்பினும் நடுநிசியில் வெறி வந்தவள் போலாகி.. ஆளே மாறிப் போனவளாக நடந்து கொள்ளும் மனைவி.. எல்லையம்மன் ஆலயத்தில் வைத்தும் அப்படி நடந்து கொண்டால்?? என்ன செய்வது?? என்று யோசிக்கலானான் அவன்.
நேற்றிரவு அந்த மாதிரி மனைவி.. ஏதும் பித்துப் பிடித்தது போல நடந்து கொள்ளவில்லையாயினும், ஒரு பொட்டுக் கண் மூடாமல்.. அவளையே பார்த்த வண்ணம் அவஸ்தையுடன் கழித்த இராப்பொழுது அவன் சிந்தனையில் வந்து போனது.
இன்றிரவும்.. அவள் பித்துப் பிடித்தது போல நடவாதிருந்தால் நலம்’என்று எண்ணிக் கொண்டவன், தன் அரை மனதை மறைத்து, ஏக மனதுடன் தட்டை வாங்குவது போல புன்னகையுடன்,
“ஓ தாராளமா..”என்று வாங்கிக் கொண்ட பின்னர், பிரபாகரின் முகம்.. இதுவரை இல்லாத மகிழ்ச்சியைக் காட்ட, “ஓ.. எங்கே நீங்க மறுத்துடுவீங்களோன்னு நினைச்சேன்.. தேங்க்ஸ் தேங்க்ஸ் சத்யன்”என்று சந்தோஷத்தில் கூவவும் செய்தான் கார்ப்பரேட் கிரிமினல்.
எப்பேர்ப்பட்ட தந்திரம் செய்தாவது, அந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை அடைய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் பிரபாகருக்குள்ளும், ஓர் நரித்திட்டம் இருக்கத் தான் செய்தது.
புதையல் இருப்பதாக கணிக்கப்பட்ட இடத்தில்.. அதாவது அகழ்வாராய்ச்சி இடத்திற்கு கொஞ்சம் தள்ளி.. ரொம்பவும் பழைமை வாய்ந்த ஓர் அம்மன் சிலையொன்று உண்டு.
ஊரின் காட்டுப்புற எல்லையில் அந்த அம்மன் சிலை அமைந்திருப்பதால்.. அது, தம்பதிவன ஊர் மக்களால் “எல்லையம்மன்” என்று வழங்கப்படுவதுண்டு.
இதுவரை எல்லையம்மனுக்கு சுற்றிவர இருக்கும் வட்டாரத்தில், இரவு நேரத்தில் நுழைந்த எந்த உயிரும், திரும்பவும் மீள ஊருக்குள் உயிருடன் வந்ததாக சரித்திரமேயில்லை.
போனவர்கள் வந்தது எல்லாம் சடலமாகத் தான்.
அதற்குக் காரணமாக, அந்த இடத்தில், பல நூறு வருடங்களுக்கும் மேலாக, யாரும் அறியாமல் புதைத்து வைத்த புதையல் இருக்கின்றது என்றும்,
அந்தப் புதையல் புதைத்தவரின் வம்சாவளியினர் வந்து கேட்கும் வரை..அந்தப் புதையலை ஒரு பூதம் காவல் காக்கிறது என்றும்,
அந்தப் பூதம் தான்.. இரவு நேரங்களில் அவ்விடத்திற்கு வரும் மானுடர்களைக் கொல்கின்றது என்றும்.. தம்பதிவன ஊர் மக்களிடையே கட்டுக்கதைகளும் உண்டு.
தன் அமைதியை குலைக்கும் மாந்தர்களை கொல்வது தீய ஆத்மாவான நந்தினி என்பதை அறியாத…
கார்ப்பரேட் கிரிமினலான பிரபாகரும்.. இந்தக் கட்டுக்கதை, வதந்திகள் ஆகியவற்றை நம்பாமல்.. தன் ஆராய்ச்சியை முன்னெடுத்துச் சென்ற போது தான்..
அவனது வலதுகையான பகீரதன் அகால மரணமடைந்த சம்பவம் பிராபகரின் இராத்திரி தூக்கத்தைக் கெடுத்தது.
அதிலும் இறந்த பகீரதனின் சடலத்தில்.. முதுகின் பின்புறம்.. ஒரு கரிய கையச்சொன்று.. எந்தவிதமான இரேகைகளும் இன்றி பதிந்திருப்பது.. அவனை இன்னும் இன்னும் யோசிக்க வைத்தது.
இது ஓர் கொலையென்று கருதி போலீஸ் உள்நுழைந்தால்.. அவனது அகழ்வாராய்ச்சிப் பணிக்கு இடையூறாக அமையும் என்றெண்ணி, காவல்துறையினருக்கு பல ‘ல’கரங்களைக் கொடுத்து,
அதிக குடியினால் விளைந்த “கார்டியக் அரெஸ்ட்” என்று சொல்லி, பகீரதனின் ஃபைலை.. அவன் மூடியிருந்தாலும், உண்மை அறிந்தவன் கொஞ்ச நாட்களாக ஓய்வின்றியே திரிந்தான்.
கைரேகை இல்லாத கையச்சு எப்படி பகீரதனின் உடலில் வந்தது? அது அமானுஷ்ய சக்தியா?? இல்லை இந்த ஊர்மக்களின் கட்டுக்கதைகள் பொய்யல்ல. நிஜம் தானா?
புதையலை பூதம் காவல் காக்கிறதோ? அதுவும் உரியவன் வரும் வரை??
பிரபாகர் இரவு பகலாக தன் தூக்கம் தொலைத்து, உணவு தொலைத்து சிந்தித்தான். அந்த நீங்கா சிந்தனையின் முடிவில் உதித்த அதிமிதமான யோசனையே இது.
நிஜமாகவே அந்த இடத்தில்.. அதுவும் இரவில் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டம் இருக்கின்றதா என்பதை அறிய நாடி, ஒரு சின்னப் பரிசோதனை வைத்துப் பார்த்தான் பிரபாகர்.
கார்ப்பரேட் அல்லவா?? .. உயிர் இருந்தால் தானே அனுபவிக்க முடியும்..?? புதையலை நாடிப் போய்.. அவன் உயிர் பிரிந்தால்… அத்தனையையும் அவனால் அனுபவிக்கவும் முடியுமோ??
அதனால்.. தன் திட்டங்களை எல்லாம் பூரணமாக செயல்படுத்தும் வகையில் ஒரு பக்கா திட்டமொன்றைப் போட்டான் பிரபாகர்.
முதலில் அவ்வூரிலுள்ள.. நிரம்பவும் கடன் தொல்லையின் வசம் ஆட்பட்டு.. அமைதியின்றி தவிக்கும், ஏழைக்குடியானவனைப் பிடித்து, நிறைய பணம் கொடுத்து, சத்யனுக்குச் சொன்னது போலவே நயமாகச் சொல்லி, ஊர் எல்லையம்மன் கோயிலுக்கு.. நடுநிசியில் பூஜை செய்ய அனுப்பி வைத்தான் பிரபாகர்.
நடுநிசியில் சென்ற குடியானவன்…விடிகாலையில்..ஊரோடு ஒட்டி ஓடும் மகாவலி கங்கை ஆற்றில் சடலமாக மிதந்து வந்தது.. அங்கே ஓர் வலிய அமானுஷ்ய சக்தியிருப்பதை ஊர்ஜிதமாக்கியது அவனுக்கு.
அந்த அமானுஷ்ய சக்தி தான்.. அவனது வலதுகையான பகீரதனையும் கொன்றிருக்க வேண்டும் என்று ஊர்ஜிதமாக நம்பினான் அவன்.
அவ்வூர் மக்களின் கட்டுக்கதைகள் பிரகாரம் பார்த்தால்… அந்தப் பூதம் காத்திருப்பது அந்தப் புதையலின் சொந்தக்காரனுக்காக.
அந்தச் சொந்தக்காரனான சத்யாதித்த இராஜசிங்கனும் அதிர்ஷ்டவசமாக தம்பதிவனத்திலேயே இருக்க, கையிலேயே நெய்யிருக்க.. வெண்ணெய் தேடி அலைவானேன்? என்று யோசித்தவன், அடுத்த ஒரு பொல்லாத திட்டத்தையும் தீட்டினான்.
அது இந்தப் புதையல்களுக்கு சொந்தக்காரனனா சத்தியனை அழைத்துக் கொண்டு.. காட்டு எல்லைக்குள் போனால் உயிர் பலி நேருமா?? நேராதா என்று அவதானிக்கும் திட்டம் தான் அது.
அதனால் தான்.. சத்யனை மட்டும் அழைப்பதை விடுத்து, அவனது முழுக் குடும்பத்தையும் கூட.. அந்தப் பூஜைக்கு அழைத்திருந்தான் பிரபாகர்.
பிரபாகரின் பொல்லாத எண்ணத்தையும், நாசகார திட்டத்தையும் அறியாத சத்யாதித்தனோ, ஒரு நற்பணிக்காக.. மற்றவரின் நம்பிக்கையைக் குலைக்காத வண்ணம்.. பூஜையை முடித்துக் கொடுக்க நாடினான்.
*******
அன்றிரவு..
இலங்கையின், கண்டி மாவட்டத்தில் உள்ள, தம்பதிவன கிராமத்தின் காட்டினுள்… நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது “தம்பதிவன எல்லையம்மன் கோவில்”.
பஞ்சுப் பொதி போன்ற மேகங்கள்.. அவ்வளவாக இல்லாது… பூரணை முகத்துடன் காட்சி தந்து கொண்டிருந்த நிலவுடனும், ஒரு சில நட்சத்திரங்களுடனும் தெளிந்திருந்தது அன்றைய நடுநிசிவானம்.
அந்த கானகம் தன்னிலே… கொடிய சூரிய வெயிலும் கூட.. நுழைய கஷ்டப்படும் அவ்விடத்தில்… இருந்த சமதரையில் அமைந்திருந்த ஒரு கல்மேடையில்.. அநாயசமாக விழுந்து கொண்டிருந்தது சந்திரனின் ஒளிக்கற்றைகள்!!
அந்த கும்மிருட்டில்… பூச்சிக்கள் மட்டும் இரையும் சத்தம் நாராசமாகக் கேட்டுக் கொண்டிருக்க, அசையாமல் நின்றிருந்த மரங்கள் எல்லாம் பெரும் பெரும் அரக்கர்களைப் போல அபாயகரமானதாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.
பட்டு வேஷ்டி, சட்டை சகிதம், கூடவே பட்டுப்புடவையில் மிளிரும் தங்கத் தாரகையாக அவன் மனைவி.. அவள் உறவுகளுடன்.. எல்லையம்மன் கோயிலில் நடுநிசியில் நின்றிருந்தான் சத்யன்.
சும்மாவே பனி சூழ்ந்த குளிர் நிலவும் காடு அது. அதுவும் நடுநிசிப் பூஜை என்றால்?? அவன் அணிந்திருந்த வேஷ்டி, சட்டை வேறு.. இலகுவான உடையாக இருக்க.. சத்யனின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக குளிர் ஊடுருவித் தாக்கலானது.
ஆனால் கார்ப்பரேட் கிரிமினலான பிரபாகரோ.. தம்பதிவனக் காட்டின் இரவு நேர நிலைமையை நன்கறிந்திருந்ததாலோ என்னவோ.. எதற்கும் முன்னாயத்தமாக.. தன் சட்டைக்கும் மேலாக.. ஸ்வெட்டர் அணிந்த படியே தான் வந்திருந்தான்.
அதற்கும் மேலாக அவனது நயவஞ்சகமான கண்களோ, அந்த நடுநிசியில்… அமானுஷ்ய சக்திகளின் ஊசலாட்டத்தின் அறிகுறிகள் தென்படுகின்றனவா? என்று கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றினாற் போன்று பார்த்திருந்தது.
தன் அரசர்.. இந்தக் கடுங்குளிரினால் அவஸ்தைப்படுவதைக் கண்ட தேவதாவோ..இராஜசிங்கர்களின் உண்மை விசுவாசி அல்லவா??
அவனா தாங்குவான்??
தனக்கென்றிருக்கும் மாய சக்திகளினால்..மானுடக் கண்களுக்கு புலப்படாத.. ஒரு பெரும் தீப்பந்தலை…கை விரல்களால் சுடக்கிட்ட அடுத்த நொடி உருவாக்க.. சத்யாதித்தனோ தன்னையும் அறியாமல் கதகதப்பாக உணரலானான்.
சத்யாதித்தனைப் பாதுகாக்கும் தேவதாவின் மாயையின் விளைவால்… சத்யனுடன் நின்றிருக்கும் அனைவரும்.. அந்த மாயத் தீப்பந்தலால் கதகதப்பாக உணரலாயினர்.
பிரபாகரினால் அழைத்து வரப்பட்டிருந்த ஐயரோ, சத்யனின் பெயரில்.. அம்மனுக்கு பூஜை நமஸ்காரங்களைத் தொடங்க, நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் கருங்கல்லினாலான எல்லையம்மன்.
மலர்க்கொடி அலங்காரத்தினாலான நான்கு கற்றூண்கள்.. பாம்பு போல வளைந்து, நெளிந்து உச்சியை நோக்கி சென்றிருக்க, அதன் படியில் நான்கு துவாரபாலகர்கள் தூணைத் தாங்குவது போல செதுக்கப்பட்டிருந்தது.
அந்தக் கல்மேடை நடுவே.. முழுதும் கருங்கல்லினாலான ஓர் பத்ம மலரில்.. நான்கு கரங்களுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தாள் எல்லையம்மன்.
அவளது இடது மேல் கையில் சூலத்துடனும், வலது மேல் கையில் உடுக்கையுடனும் மற்ற இரு கைகளில் அபயம் மற்றும் வரத கரத்துடனும், வலது காலை மடித்து, இடது காலினை மகிஷன் தலை மீது வைத்தபடியும் அருள்புரிந்தபடி சாந்தமாக அமர்ந்திருந்தாள் தேவி.
வேல்பாண்டி, வாசுகி அண்ணி, யௌவனா மற்றும் வேல்பாண்டி அனைவரும் விழிகள் மூடி, கரங்கள் கூப்பி தெய்வத்தை வழிபட்டுக் கொண்டிருக்க,
அங்கே தன் சக்திகள் அதிகரிக்கப்பட்டிருக்கும்.. எல்லையில் சத்யனின் காலடித்தடம் பட்டிருப்பதை, தன் மாய சக்தியால் உணர்ந்து கொண்டாள்.. அந்தப் பாழும் நிலவறையிலேயே தஞ்சமடைந்திருக்கும் நந்தினி!!
அவள் காவு வாங்க நினைக்கும்.. அவளது பரம எதிரியான சத்யனின் உயிர் வாசம்… அந்தப் பொல்லாத நிலவறையில் இருக்கும் நந்தினியின் நாசியை நெருடுகிறது.
அவனது தலையைக் கொய்து.. சத்யாதித்தனின் இரத்ததைக் குடிக்க வேண்டும் போல.. ஒரு பொல்லாத வெறியும்.. அவளுள் எழுந்து பரவுகிறது.
அவளது கூந்தல்.. அந்த தாபத்தின் விளைவாக.. அந்தரத்தில் எழுந்து அலை பாய, தனங்கள் ஏறி இறங்க, மூசு மூசுவென்று மூச்சு வாங்கியவள், சத்யனைக் கொன்று விட நாடி.. வெளிவர எத்தனித்த வேளை தான்..
சத்யன் குளிர்காய மாயத் தீப்பந்தல் உருவாக்கி… சேவகம் செய்து கொண்டிருக்கும் தன் தலைவன் தேவதாவும் அங்கிருப்பதைக் கண்டாள் நந்தினி.
அவளுள் ஆத்திரம் தலைக்கேறியது. அவளது கணவன்..சத்யனுக்கு அரணாக இருக்கும் வரை மாய நந்தினியால் ஏதும் செய்து விட முடியாது.
அதனால் உண்டான கோபத்தில்.. நிலவறையே அதிர, “ஆஆஆஆஆ” என்று கத்தியவள், அந்த நிலவறையின் குறுக்கும், நெடுக்குமாக அசுரவேகத்தில் நடைபயிலலானாள்.
நந்தினி அடிக்கடி தன் கைகளை பிசைந்து விட்டுக் கொண்டாள்;கை முஷ்டி மடக்கி தன் தொடைக்கு ஆற்றாமை தாங்காமல் குத்து விடவும் செய்தாள்.
மாயையில் தெரியும் கணவனின் முகத்தைப் பார்த்து, சீற்றம் தாளாது.. பற்களை நறுநறுவென கடித்துக் கொண்டே, “உங்கள் வ்வாரிசை இல்லாது.. செய்தவனின் வ்வாரிசை க்காக்கிறீரே?? இது தான் தர்மமாஆஆ?? இது தாஆஆன் ஞாயமாஆஆ?”என்று இரைந்து கேள்வி கேட்டாள் அவள்.
மனைவி நிலவறையில் இருந்து புலம்பும் ஒலி புரிந்தாலும்.. அமைதியாக.. அதனை அசட்டை செய்தவனாக.. தன் திண்ணிய மார்புக்கு குறுக்கே கைகட்டியவனாக நின்றிருந்தான் ஈசனின் அம்சமான ஜடாமுடிக் காரன்.
அம்மனின் மனம் குளிரும் வகையில், சத்யாதித்தனின் கையால் பாலாபிஷேகமும், மஞ்சளபிஷேகமும் சுபீட்சமாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்த கணம்,
சத்யாதித்தனை நெருங்க முடியாத நந்தினிக்கோ… கணவன் தீப்பந்தல் அமைத்து சத்யனைக் காப்பது எரிச்சலை மூட்டியது.
அவளது கைகள் இரண்டும் அந்தரத்தில் எழ, நிலவறையின் உத்திரத்தை அண்ணாந்து பார்த்தவளின் விழிகளின் கருமணிகள் போய் மேல் சொருகிய நேரம்,
சத்யாதித்தின் நின்றிருந்த எல்லையம்மன் கோவிலில் கற்றூண்களுக்கு இடையில் கட்டப்பட்டிருந்த மணிகள் எல்லாம் இசைத்துக் கொண்டு தாறுமாறாக ஆடவாரம்பித்தது.
அதனால் எழுந்த காற்றில்.. அந்தத் தீப் பந்தல் அணைந்து முடித்த கணம்.. மீண்டும் முளைத்தது தீப்பந்தல்.
அணைக்க அணைக்க.. திரும்பப் திரும்ப முளைக்கும் தீப்பந்தல் அது என்பதை அறியாத நந்தினி மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்க,
அங்கே மானுடர்களோ..ஒரு நிமிடம் ஓய்வதும், மறுநிமிடம் சுழன்றடிப்பதுமான காற்றில் சற்றே கலங்கித்தான் போயினர்.
பிரபாகர் மட்டும்.. அந்த அசாதாரண காற்றுவீச்சையும்.. துல்லியமாக கவனித்துக் கொண்டேயிருந்தான். அந்த சின்ன சகுனம்.. அது அமானுஷ்ய சக்தியின் வேலையோ என்ற சந்தேகத்தையும் கொடுத்தது அவனுக்கு.
பூஜைமுடித்து விட்டு.. அம்மன் பாதத்தில் வைக்கப்பட்ட மலர்மாலையுடன் வந்த ஐயர், “தம்பி.. இந்தக் கோயில்.. இப்போ வேணும்னா.. கவனிப்பாரற்று கிடக்கலாம்… ஆனா இருநூறு வருடங்களுக்கு முன்னால.. இலங்கைக்கு வந்த சீன தேச சஞ்சாரி ‘பாதுஹேன்’ கூட தரிசிட்டுப் போகுமளவுக்கு இது பிரசித்தமான கோயிலா ஒரு காலத்துல இருந்திருக்குன்னு தெரியுமோ? இந்த எல்லையம்மன் கோயிலுக்கும், உங்களுக்கும் இருக்க தொடர்பு என்னான்னு தெரியுமோ??”என்று கேட்க,
குழம்பிப் போனது சத்யன் மட்டுமல்ல. அங்கிருந்த அனைவரும் தான்.
அதிர்ச்சியுடன் வாய் திறந்தவன், “நான் இந்தியாவில பிறந்து வளர்ந்தவன் சாமி.. எனக்கும், இந்த கோயிலுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும்? நான் இங்கே வந்தது கூட இது தான் முதல்முறை”என்று அவன் புரியாமல் கேட்க,
ஐயரோ, “தொடர்பு இருக்கு தம்பி…உங்க குலதெய்வம் நிசும்பசூதனியா இருக்கலாம்.. ஆனா எல்லையம்மனும் கிட்டதட்ட உங்க குலதெய்வம் தான்.. இது உங்க முன்னோரால் கட்டப்பட்ட கோயில் தம்பி ”என்றவர், அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் புதுத்தகவலாக ஒரு பழம்பெரும் கதை சொன்னார்.
அதைக் கேட்டு, தன் முன்னோர்களின் பெருமையைக் கேட்டு பரவசநிலைக்குத் தான் போனான் சத்யன்.
ஐயரோ, அது நடுநிசியென்றும் பாராது, பக்திப் பரவச கண்களுடன், “ இலங்கையின் கடைசி மன்னான “ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கன்” ஆள்றதுக்கு முன்னாடி இருந்த ராஜா தான் “கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன்”. பிறப்பில இந்துவாகவும், அப்புறம் பௌத்தராகவும் ஆன உங்க முன்னோர் தான் அவரு.. கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் செல்லமா ஒரு நாய் வளர்த்தார்.. எங்கே போறதுன்னாலும் அந்த நாயும் ராஜா கூட போகும்.. ஒரு நாள் அந்த நாய் கூடவே.. இந்த தம்பதி வனக் காட்டுக்கு வேட்டையாட வந்தச்ச.. வேட்டையாடுற ஆர்வத்தில், தம்பதி வனக்காட்டோட வெகு தொலைவுக்கு வந்துட்டார் ராஜா. திரும்பிப் போற வழியும் ராஜாவுக்கு தெரியலை. ராஜாவுக்கு ரொம்ப களைப்பு ஒரு பக்கம்.. தாகம் ஒரு பக்கம். சுற்றுமுற்றும் தேடியும் ஒரு நீர் நிலையையும் கண்ணுல விழலை. ஒருவித மயக்கத்துடன் மரத்தில் சாய்ஞ்சு அமர்ந்திருந்தார் மன்னர்.
இதைக் கண்ட நாய்… அரசரின் நிலையறிந்து வருந்தி.. நீண்ட தொலைவு தூரம் போய் அலைஞ்சு திரிஞ்சு.. காட்டுக்குள் ஓடுற மகாவலி கங்கை ஆற்றைக் கண்டுபிடிச்சு வந்து… மன்னரை எழுப்பி அவருக்கு வழிகாட்டிச்சு. ஆற்றைக் கண்ட மன்னர் அகமகிழ்ந்து ஜலத்தைப் பருக ஆரம்பிச்சப்போ.. அவருக்கு அருகில் எலுமிச்சம் பழம் ஒன்று மிதந்து வந்திச்சு. அதை உத்து பார்த்தப்போ ஆற்றில் இருந்து.. சிலை ஒன்று எழுந்தருளுவதைக் கண்டு அதிசயிச்சுப் போனார் மன்னர்.
இதே நேரத்தில் மன்னரைத் தேடி பரிவாரங்கள் காட்டுக்குள் வந்து சேர… மன்னரின் உத்திரவுப்படி அவர்கள் சிலையை நீரிலிருந்து வெளியே எடுத்தாங்க… அப்புறம் அம்மனுக்கு அங்கேயே கோயில் எழுப்பினார் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன். தம்பதிவனக் காட்டு எல்லைப்பகுதியில் கிடைச்சதால் இந்த அம்மன் ‘எல்லையம்மன்’னு அழைக்கப்பட்டாள்.” என்றவர்,
அங்கிருந்த அனைவருக்கும் பிரசாதம் கொடுத்து விட்டு, யௌவனாவிடம் வந்து, ஒரு சின்னத் தொட்டிலைக் கொடுத்து,
“இதை.. பக்கத்துல இருக்குற அலரி மரத்துல நல்லெண்ணத்தோடு கட்டும்மா.. கூடிய சீக்கிரம் அந்த அம்பாளே உனக்கு மகளா பிறப்பாள்” என்று தெய்வீகம் ஒளிரும் விழிகளுடன் சொல்ல, யௌவனாவுக்கோ.. சத்யாதித்தனின் “குழந்தை” என்ற நினைவிலேயே, முகமெல்லாம் செம்மை பூக்கத் தொடங்கியது.
ஐயர் சொன்னது போலவே.. பக்கத்தில் இருக்கும் அலரி மரக்கிளையில்… கட்டி விட்டு வந்தவளின் கண்கள்.. சத்யனை விட்டும் அங்குமிங்கும் அசையவேயில்லை.
சத்யனோ.. குழந்தை பற்றிய பேச்சு கனிவைக் கொடுத்தாலும், மனைவி தன்னை கிளுகிளுப்பான விழிகளுடன் பார்த்தாலும்.. அதை கண்டு கொள்ளாதவனாகவே, பூஜையை நிறைவேற்றி விட்டு நகர்ந்தான்.
கூடவே அவன் மனம் வேறு, ‘பக்கத்திலேயே விடமாட்டேன் என்பவள்.. இப்படி எல்லாம் செய்வது அதிகப்படி…’என்று ஒரு பக்கம் பொருமலானது.
முதன் முதல் நந்தினி.. . தன்னெல்லையை மிதித்து விட்டுச் சென்ற மானுடர்களை ஏதும் செய்யாமல்.. தன் கணவனான தேவதா இருப்பதால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டாள்.
ஆனாலும்.. அவளது பழிவெறி மட்டும் அப்போதும் நீர்த்துப் போகாமல்.. அந்த மாயத் தீப்பந்தல் போல கொளுந்து விட்டெரிந்து கொண்டேயிருந்தது.
******
அடுத்த நாள் காலை… சத்யாதித்தன்… மனைவியை பயமுறுத்துவதற்காக.. இந்தியா செல்லப் போகிறேன் என்று வலியுறுத்திய காலக்கெடுவும் வந்திருந்த காலை அது.
தன்னுடையை எல்லாம் அவன் அடுக்கி வைக்க ஆயத்தமாகி.. அறைக்குள் நுழையப் போன கணம் தான்.. தன் பணியாளன் சகிதம் நேற்று போலவே வந்தான் பிரபாகர்.
போனமுறை பணியாளன் மங்களத்தட்டு சுமந்து வந்திருந்தான். இன்று ஒரு நகல்த்திட்டம் ஒன்றினை சுமந்து வந்திருந்தான்.
இந்தப் புதையலை வெளியெடுப்பதற்கு.. தன் மிகப்பெரிய ரக்ஷை ‘சத்யாதித்தன்’ தான் என்பதை… ஐயந்திரிபற அறிந்து கொண்ட பிரபாகர்..சத்யனை சும்மா விட்டு விடுவானா என்ன??
அவனைத் தன்னுடனேயே இருத்திக் கொள்ள நாடியவன்.. தன் கார்ப்பரேட் மூளையை உபயோகிக்கவே நாடினான்.
சத்யாதித்தனும்… வர்த்தகனாக இருந்த போதும் பசப்பு வார்த்தைகளுக்கும், பேராசைக்கும் மயங்காத நல்லவனாக இருந்தது, பிரபாகருக்கு.. சத்யாதித்தனை சம்மதிக்க வைக்க முடியாமல் போகுமோ?? என்ற யோசனை இருந்த போதிலும்,
பிரபாகர் மாற்று யோசனைகளையும் வைத்திருந்தான்.
அந்த யோசனை தான்.. ‘மக்களுக்கு நல்லது விளையும்’ என்றால்.. இயல்பிலேயே சத்திரிய இரத்தம் ஊறிப் போன, சத்யாதித்தன் எதையும் செய்ய முன்வருவதை.. ஒரு அஸ்திரமாக உபயோகித்துக் கொள்ள நாடினான் பிரபாகர்.
சத்யனிடம் பேசி, ஒரு பத்து நிமிட நேர அவகாசம் வாங்கியவன், நடுக்கூடத்தில் இருந்த மேசையில் நகல்த்திட்டத்தை விரித்துக் காட்டினான்.
அது தற்போது அகழ்வாராய்ச்சித் தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் இடம்!!
அவ்விடத்தைச் சூழ பலவிதமான ரெஸ்டாரென்ட், ஹோட்டலுடன் கூடிய நீச்சல் தடாகங்கள், கூடவே தீம் பார்க் என்பவற்றுக்கான திட்டங்களைத் தீட்டியிருந்தான் பிரபாகர்.
சத்யாதித்தன் திட்டத்தை ஆராய்ந்ததும் அனைத்தையும் உய்த்துணர்ந்தாலும், பிரபாகர் சொல்லட்டுமெனக் காத்திருக்க,
பிரபாகரும், “லுக் சத்யன்.. இது இப்போதைக்கு எக்ஸ்கவேஷன் சைட்டா இருக்கலாம்.. பட் முழுமையான அகழ்வுகள் நடந்ததுக்கு அப்புறம்.. இது ஒரு சுற்றுலாத் தளமாக மாற்றலாம்..ஹோட்டல், ரெஸ்டாரென்ட், தீம்பார்க் எட்ஸெட்ரா எட்ஸெட்ரா.. எல்லாமே.. எல்லாமே கொண்டு வரலாம்… இதுக்கு கண்டிப்பா உங்க உதவியும் தேவை..இதில் உங்க உதவியும் வந்ததுன்னா இந்த குக்கிராமத்த.. நிவ்யோர்க் மாதிரி மாத்தலாமெ… என்னோட திட்டத்தில் வரும் லாபத்தில்.. டுவென்டி ஃபைவ் பர்சன்ட் எனக்கு போதும்.. உங்களுக்கு டுவென்டி ஃபைவ்.. பட் மீதி.. ஃபிப்டி பர்சன்ட் லாபம் மக்களுக்காக.. ஊர் முன்னேற்றத்துக்காக… அதை உபயோகிச்சுக்கலாம்.. என்ன சொல்றீங்க சத்யன்..??”என்று பேராசை விழிகளுடன்.. புருவமுயர்த்திக் கேட்க,
‘மக்களுக்காக’ என்ற வாசகத்தில் கவரப்பட்ட சத்யாதித்தன் மறுக்க வாய் திறந்தும் முடியாமல் நின்றான்.
இன்று மாலை அவனுக்கென்று சொந்தமான பீகாக் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பிச் செல்வதா??
இல்லை இங்கேயே இன்னும் கொஞ்சம் காலம் இருந்து இந்த அருமையான திட்டத்தை அமுல்படுத்துவதா??
தாடையை சொறிந்து கொண்டே யோசித்தவன், “நான் இன்னைக்கு ஈவ்னிங்க் இண்டியா கெளம்பலாம்னு இருக்கேன் பிரபாகர்.. இருந்தாலும் உங்களுக்காக.. ஒருமுறை யோசிச்சு சொல்றேன்”என்று சொல்ல,
‘ஐயோ இவன் சென்றால் எப்படி அவன் திட்டத்தை நிறைவேற்றுவது?’ என்ற கவலையுடன், முகம் தொங்கிப் போக நின்றான் அவன்.
இருந்தாலும் தன் முடிவைக் கைவிடாது, புன்னகையுடன், “கண்டிப்பா நல்ல முடிவா சொல்லுங்க சத்யன்..ஐல் பீ வெயிட்டிங்க் ஃபார் யூ”என்று விட்டு நகர, சத்யாதித்தன் முகம் சிந்தனை வயப்பட்டது.
சத்யாதித்தன் என்ன முடிவு எடுக்கப் போகிறான்?? இருப்பானா?? இல்லை சென்று விடுவானா??
Very interesting sis
zXGSAlCiLuNUk
QjrGgLTBVqNvRE
ezQhakEVu
bhNiFXSjD
cBpYLMHar