ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா 

[21]

அன்று மதியம், தான் ஏற்கனவே திட்டமிட்டது போல இந்தியா செல்ல நாடியவன், தன் லக்கேஜில்.. உடைகளை அடுக்கி வைப்பதிலேயே மும்முரமாக இருந்தான். 

அவனுடைய லக்கேஜ்.. யௌவனாவின் மஞ்சத்தில் , “ஆ”வென்று திறந்திருக்க, வார்ட்ரோப்பிலிருந்து அவனது உடைகளை எடுத்து வந்து.. லக்கேஜிக்குள் திணிப்பதும், மீண்டும் வார்ட்ரோப்பை நோக்கி நடைபயில்வதுமாக இருந்தான் சத்யன். 

இன்று மாலை அவன் இலங்கையை விட்டும் இந்தியா செல்லப் போகிறான். அதுவும் தனக்கென்று சொந்தமான ‘பீகாக் ஏர்லைன்ஸ்” விமானத்தில். 

திருமணம் முடித்த கையுடன், புது மாப்பிள்ளையாக யௌவனாவுடன்… இலங்கையில் இருந்தும் இந்தியா செல்ல விழைந்த போது இருந்த சந்தோஷம், திருப்தி, நிம்மதி… இம்முறை அவன் இந்தியா செல்ல நாடிய போது அவனில் இல்லை. 

மாறாக அவனுள் இனம்புரியாத ஓர் கோபம் ஒன்று மாத்திரமே நிலைத்திருந்தது. 

‘இந்தியா போகிறேன்’ என்று முடிவெடுத்தது அவன் தான்.

 இருப்பினும் அந்த முடிவே.. அவன் முகத்தை கடுகடுவென்றாக்கியிருக்க, வாட்ரோப்புக்கும், லக்கேஜூக்குமாக அசுரவேகத்தில் மாறி மாறி போய் வந்து கொண்டிருந்தவனில் களைப்பு என்பது ஒரு சிறிதும் இல்லவேயில்லை. 

அந்த நேரம் பார்த்து அவனுடைய செல் சிணுங்கத் தொடங்கியதும், யாரென்று செல்லின் திரையை எடுத்து நோக்கியவனுக்கு, அழைப்பெடுப்பது தாயார் என்பது புரிந்து விடவே, 

இடுப்பில் கை வைத்து நின்று ஒரு பெருமூச்சு விட்டவாறு தன் கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டவன், முடிந்தளவுக்கு சாதாராணமாக குரலில், அவசரமாக, 

“ஹலோ அம்மா.. நான் இன்னைக்கு நைட் இந்தியா வந்துருவேன்மா.. வந்ததும் பேசிக்கலாம்”என்று தன் நிலவரத்தைச் சொல்லி முடித்த கணம், மறுமுனையில் இருந்த வசுந்தராதேவியம்மாள் கேட்டது தன் மருமகளைப் பற்றித் தான். 

ஏனெனில் மகனுடன் அந்த உலக அழகி பட்டத்தைத் தவற விட்ட இந்திய அழகி சுஷ்மிதா ஷெட்டியை இணைத்து வைத்து.. சந்தேகப்பட்டு, ஊடல் கொண்டு இலங்கை சென்றவளாயிற்றே அவள்?? 

அதனால் இடைப்பட்ட இந்த காலத்தில்.. மருமகளின் ஊடல் தீர்ந்ததா இல்லையா என்பதை நாசூக்காக அறிவதற்காக, 

“என் மருமகளும் கூட வர்றாளாப்பா?”என்று கேட்டார் வசுந்தராதேவியம்மாள். 

இத்தனை நேரம் அடக்கி வைக்கப்பட்டிருந்த சீற்றம், தாயார் யௌவனாவைப் பற்றிக் கேட்டதும் மீண்டும் முடக்கி விடப்பட, சலித்துக் கொண்டவனாக, 

“ப்ம்ச்… உன் மகன் மட்டும் வந்தா போதாதாமா? உன் மருமகளுக்கு உன்ன விட பிடிவாதம் ஜாஸ்தி..அவள் வரமாட்டாள்.. இப்போ எதுவும் என்கிட்ட கேட்காதே.. முதல்ல நான் கெளம்பி வர்றேன்… மத்தது எல்லாம் நான் அங்கே வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்.. நீ ஃபோன வை.. எனக்கு கெளம்ப டைமாச்சு”என்று தாயிடம் இலேசாக சிடுசிடுத்துக் கொண்டவன், 

செல்லை அணைத்து பாக்கெட்டில் போட்டவாறே மீண்டும் வாட்ரோப்பை நாடிச் செல்ல … அவன் திரும்பிய போது தான்.. 

அணிந்திருந்த சேலையின்… சேலைத்தலைப்பு நுனியைப் பற்றித் திருகிய வண்ணம், தரை பார்க்கும் கருது போல.. தரை பார்த்துக் குனிந்து நின்றிருக்கும் அவனது மனைவியைக் கண்டான் அவன். 

அந்த இறுதித் தருவாயிலும், ‘நானும் உன் கூட வர்றேன்.. என்னையும் கூட்டிப்போ’ என்று மனைவி சொல்ல மாட்டாளா?? என்ற நப்பாசையில் தவித்தது கொண்டானின் உள்ளம். 

இருந்தாலும் ஆடைகள் அடுக்கும் வரை வராதவள், ஆடை அடுக்கி முடித்த கணம் தன்னை நாடி வந்திருப்பதில், சத்யனிடம் மீண்டும் அந்த சிடுசிடு பாவம் தலை தூக்கவே,. 

“என்ன?” என்று கடுப்புடனேயே கேட்டான் சத்யன். 

அவளுக்கு கணவனின் தொனியே, ஒரு சின்ன மனச்சறுக்கலைக் கொடுக்க, அவளுக்கே கேட்காத மிக மெல்லிய தொனியில், “சத்யா.. இன்னைக்கே கெளம்பித் தான் ஆகணுமா?”என்று கேட்டாள் யௌவனா. 

கணவனின் ஊடலின் காரணம் தெரியாது தவிப்பவள், அவன் மேலிருக்கும் அத்தனை சந்தேகக் குற்றச்சாட்டையும் ஒதுக்கி வைத்து விட்டு.. தூய நேசம் வைத்திருப்பவள்.. அங்கு தான் ஒரு பிழை செய்தாள். 

‘சத்யா.. ப்ளீஸ் என்னையும் கூட்டிப்போ’ அல்லது ‘ப்ளீஸ் என்கூடவே இருந்துரேன்’என்று இரண்டில் ஒன்று கேட்காமல்… அவள் தயங்கித் தயங்கி மேற்கூறியவாறு கேட்டது, அவள் பால் கோபத்தில் இருப்பவனுக்கு, அவள் கேட்கும் கால அவகாசம் கூட தீதாகவே பட்டது. 

இடுப்பில் இரு கைவைத்து நின்றவன், ஏதும் உடனடியாக பதில் சொல்லாமல், அவளது விழிகளையே சீற்றத்துடன் உறுத்து விழித்தவனாக, “ஏன்??.. என்னை தீர்த்துக்கட்ட இன்னும் நாள் தேவைப்படுதோ??”என்று எகிறும் குரலில் கேட்க, 

இத்தனை நேரம் தரை பார்த்திருந்தவள், பட்டென நிமிர்ந்து தன் கொண்டவனின் முகத்தை அவஸ்தையுடன் பார்த்தாள். 

அவன் அபசகுனமாக பேசியதைத் தாளமாட்டாதவளின் கண்களில் கண்ணீர் சுரந்து, விழித்திரைகள் எல்லாம் இரண்டிரண்டாக தெரியவாரம்பிக்க, 

“ஏன் இப்படியெல்லாம் பேசு… றீங்க? சத்தியமா உங்க கோபத்தைக் கிளறி விட்ற அளவுக்கு என்ன நடந்திச்சுன்னே புரியல சத்யன்.. எனக்கு எதுவுமே ஞாபகமில்லை..?என்னை நம்புங்க.. ”என்று இயலாமை நிறைந்த குரலில் மன்றாடினாள் யௌவனா. 

அதைக் கேட்டதும்..குறிப்பாக அவள் விழிநீர் கண்டதும்.. அவன் மேலேயே ஓர் கோபம் ஊற்றெடுக்க கை முஷ்டி மடக்கி தன் தொடைக்கு தானே ஓர் குத்து விட்டவன், 

பற்களை கடித்துக் கொண்டு, “ப்புர்ரியலை? என்ன நடந்துச்சுன்னே ஞாபகம் இல்லை??”என்று எகிறி எகிறிக் கேட்க, அந்த ஒவ்வொரு எகிறலுக்கும் இதயம் தூக்கிவாரிப்போட்டு போட்டு அடங்கியது அவளுக்கு. 

அச்சத்தைப் போக்க, தன் சேலையின் இருமுனைகளையும் கையில் அதக்கிக் கொண்டு, தலைவனைப் பார்த்தவள், திக்கிய குரலில், “ம்ஹூஹூம் தெரியாது… எதுவுமே ஞாபகமில்லை சத்யன்” என்ற அடுத்த நொடி, 

தன் செல்லை எடுத்து, அதிலிருக்கும் ஓர் வீடியோவை ஒளிபரப்பாக்கி அவள் கைகளில் திணித்தவன், “இதைப்பாரு.. என் கோபம் ஞாயமானதுன்னு ப்புரியும்” என்றான் சத்யன். 

முதலில் ஏதும் புரியாமல் சத்யனையும், பின்பு காணொளியையும் பார்த்த யௌவனா.. அந்த வீடியோவில் அன்றிரவு, ‘அவளுக்கு எதுவுமே ஞாபகமற்ற அவ்விரவு’ என்னென்ன கொடுமைகளை.. கணவனுக்கு அவள் நிகழ்த்தியிருக்கிறாள் என்பதைப் பார்த்து, 

திறந்த அதரங்களை கையினால் மூடி மறைத்து.. வாயடைத்து நின்று போனாள் யௌவனா. 

அன்றிரவு அவள் ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாடல் என்ன? இது போதாதென்று அவள் போட்ட கூத்துக்கள் தான் என்ன?? அவனது கழுத்தை அவள் நெரிக்க வருவது என்ன? அவன் தலைமுடியை ஆவேசத்துடன் பிடித்தாட்டுவது என்ன? சட்டையைக் கிழித்தது என்ன?? 

எல்லாமே என ஒன்று விடாமல் அந்தக் காணொளியில் பதிவாகியிருக்கக் கண்டவளுக்கு, இறுதியில் அவளை அடக்கும் வழிவகையறியாது.. கணவன் அந்தச் சேலையாலேயே கையினைக் கட்டிப் படுக்க வைப்பதுவும் புரிந்தது. 

இது அறியாமல்.. காலை கண் விழித்ததும் அவள் சேலை முந்தானை களைந்திருப்பது கண்டு, அது ஓர் இனிய கூடல் என்றல்லவா நினைத்திருந்தாள்? 

அத்தனையையும் நம்ப முடியாத விழிகளுடன்… அதிர்ச்சியுடன் பார்த்திருந்தவள், “இ.. இது நானா..??”என்று கேட்க, 

இவனோ அதே பழைய கடுகடுப்பு மாறாமல், “பின்ன நானா??”என்று கேட்டான் சத்யன். 

அன்றிரவு, மின்குதையில் (plug) சார்ஜரில் போட்டிருந்த செல்லில் தற்செயலாக திறந்திருந்த வீடியோ பதிவு முறையில், நடந்தது அத்தனையும்.. தெய்வாதீனமாக பதிவாகியிருக்க, அதைத் தான் மனைவியிடம் எதையும் ‘எடிட்’ செய்யாமல் காட்டியிருந்தான் அவன். 

யௌவனாவோ.. விழிகளை இறுக மூடித் திறந்து, தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக… என எப்படி யோசித்த போதும், அவளால்.. ஒரு பித்துப் பிடித்தது போல கணவனிடம் நடந்து கொண்டதை நினைவு கூர முடியாமலேயே போனது. 

ஆனால் சத்யாதித்தனோ.. அவளது அமைதியை, கையும், களவுமாக பிடிபட்டதன் பின்னர் என்ன சொல்லி சமாளிப்பது?? என்று தீவிர சிந்தனை வசப்பட்டிருப்பதாக, 

தவறாக கற்பிதம் செய்து கொண்டவன், அன்றைய தாக்கத்தின் விளைவால், மனமுடைந்து போன குரலில், “நீய்யே.. உன் வ்வாயால… என் கூட நீ வ்வாழ்ற.. வ்வாழ்க்கையில சந்தோஷம் இல்லைன்னு சொன்னதுக்கப்பறம் நான் எதுக்கு உன் கூட இருக்கணும்?? ..” என்றவனுக்கு அடுத்து பேசும் போது விழிகள் இலேசாக கலங்க, 

விழிகளும், இதழ்களும் அதிகபட்ச ஆத்திரத்தில் துடித்து துடித்து அடங்கியது சத்யனுக்கு. 

அவளை வெறித்துப் பார்த்தவன், “நான் உன்னை.. ம்மனசார காதலிச்சேன்.. உன்னை நான் கனவில்.. க்காண ம்முன்னாடி நான் வேணா ப்ளேபாயா இருந்திருக்கலாம்.. ஆனா.. என்னைக்கு.. நீ கனவுல வந்து… நான் உன்னை காதலிக்க ஆரம்பிச்சேனோ… அன்னையிலிருந்து ஏகபத்தினி வ்விரதன்டி நானு..”என்று தன் மாரில் கைவைத்துக் கொண்டு, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்.. உணர்ச்சி வசப்பட்டவனாகப் பேச, 

யௌவனாவோ.. அவன் வார்த்தைகளை.. அதிர்ந்து போனவளாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அவனோ மனதில் இருப்பது அத்தனையும் அன்று அவளிடம் கொட்டி விட நாடி, “நீ தான் என் உலகம்னு சுத்தி சுத்தி வந்தேன்.. என்னோட அன்பு உனக்கு சில்றத்தனமா ப்போச்சுல?? .. உன்னைத் தேடி, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு… ஸ்ரீ லங்கா வந்தேன்…எல்லாம் உனக்கா!! க… உன் மேல தூய அன்பு மட்டுமே காட்டின எனக்கு நீ கொடுத்த பட்டம்… ‘பொம்பளைப் பொறுக்கி.. குடிகாரன்’.. கடைசி வரை என் அன்பை.. ந்நீஈஈ புரிஞ்சிக்கவேயில்லைல??.. உலகத்துல எந்த ஆம்பளையும் என் லெவலுக்கு இறங்கி வந்து, பிஸினஸ், சொத்து, ஆஸ்தி எல்லாத்தையும் விட்டுட்டு வந்து… இப்படி பொண்டாட்டிக்காக… நாள் கணக்கா, வாரக்கணக்காக மாமியார் வீட்டுல நின்னு.. இரவும், பகலுமா பொண்டாட்டிக்கிட்ட கெஞ்சியிருப்பானான்னு எனக்கு தெரியாதுடீஈஈ??ஆனா நான் செய்தேன்.. உனக்காக.. அப்படியாவது உன் மனசு மாறாதான்னு செய்தேன்?” என்று அவன் இரைந்து கத்த, 

சட்டென இடையிட்டவள், “சத்யன் ப்ளீஸ்.. லிஸின்”என்று சொல்லிக் கொண்டிருந்த வேளை, 

உச்சஸ்தாயியில் பட்டென்று, “ஹேய் பேசாதேடீஈஈ”என்று கத்த, தந்தை அதட்டும் குழந்தை போல மனதளவில் முடங்கிப் போனாள் அவள். 

அவனோ விழிகள் செந்நிறம் கொள்ள, “நீ ம்மூஞ்ச த்தூக்கி வ்வைச்சிக்க.. வ்வைச்சிக்க உன் ப்பின்னாலேயே தானே வுவந்தேன்… அதையே புரிஞ்சுக்க முடியாத உன்னால என் காதலையும் புரிஞ்சுக்க முடியாது!!.. சந்தோஷமில்லாத வாழ்க்கையை நீயும் வாழ வேண்டிய அவசியமில்லை.. உன்னை.. நான் இங்கேயே விட்டுட்டுப் போறேன்…” என்றவன், 

தொண்டையில் மீன் முள் அகப்பட்டது போன்ற அவஸ்தையுடன், “உனக்கு என்கிட்டேயிருந்து வ்விவாகரத்து தானே வேணும்?? அதையும் கொடுக்க த்தயாரா இருக்கேன்..”என்று சொல்ல, 

அவளுக்கோ, ‘விவகாரத்து’ என்னும் சொல்லிலேயே மனம் தொங்க, ஆசுவாசம் கொள்ள முடியாமல் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் அவள். 

அவனோ, ஒருவார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை, ‘விவாகரத்து எல்லாம் வேண்டாம்.. நீ தான் வேண்டும்’ என்று சொல்கிறாளா? பாரேன் என்று மனம் கசக்க, வாய் விட்டு, “ச்சே”என்று அலுத்துப் போனவனாக, அங்கிருந்து விரைந்ததன் பின்பு தான் சிந்தை தெளிந்தாள் அப்பாவி யௌவனா. 

கிளம்ப எத்தனிக்கும் அவனை நிறுத்தி விட நாடி அவள் வெளியேற முற்பட்ட கணம், முற்றத்தில்.. உறுமிய ஜீப்.. சீறிப்பாய்ந்து கொண்டு செல்லும் சத்தம் புரிய, அறையிலேயே கல்லாய் சமைந்து நின்றாள் அவள். 

அவனது லக்கேஜ் அப்படியே மஞ்சத்திலேயே தான் இருந்தது. வீடு விட்டு கிளம்பியவன், எப்படியும் வருவான் என்று அவளுக்கு நம்பிக்கை இருந்த போதிலும் கூட, 

யௌவனாவின் கண்களில் மீண்டும் அந்த காணொளிக் காட்சிகளே ஓடிக் கொண்டேயிருந்தது. 

அவளால் அவள் கண்களையே நம்ப முடியாத ஓர் நிலை. அவள் இதயம் திரும்பத் திரும்பக் கேட்டது? அவள் கையில் இருந்த செல்லில் ஓடும் காணொளியில் இருப்பது அவளா?? 

அவளே தானா இது? .. காதலுடன் வந்து அவள் தோளில் கைவைக்கும் அவனிடம்.. இப்படி நடந்து கொண்டது அவள் தானா? 

ஏன் எதுவுமே அவளுக்கு சிந்தனையில் ஞாபகத்தில் இல்லை. அவளுக்கு ஏதாவது மனோவியாதியா? 

‘ஸ்பிலிட் பர்சனாலிட்டி டிசோடர்’ என்பார்களே? ஒரு நேரத்தில் அம்பி போலவும், இன்னொரு நேரத்தில் அந்நியன் போலவும்.. நடந்து கொள்கிறாளோ அவள்?? 

அது போக இன்று அவள் முன் செந்நிற விழிகளுடன், உணர்ச்சுப் பிழம்பாகக் கொதித்த தலைவனின் முகம் வேறு அவளை வாட்டலானது. 

ஆமாம்.. எந்த கணவன் தான் அத்தனையையும் விட்டு விட்டு மனைவிக்கா வருவான்? 

சென்னையிலிருந்து கொழும்புக்கு விமானம் ஏறிய கணத்தில் இருந்து பின்னோடு மன்றாடிய படியே வந்த அவனது ஏக்க முகம் வந்து போனது. 

என்ன தான் சந்தேகக் குற்றச்சாட்டு இருந்தாலும், இத்தனையும் பார்க்கும் போது அவள் தான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டாளோ? என்று தோன்றியது அவளுக்கு. 

இறுதியில் கணவன், “விவாகரத்து” பற்றி பேசியது.. அந்த அப்பாவி யௌவனாவை உலுக்கிப் போட, கன்னத்திலிருந்தும் வழிந்த கண்ணீர், 

அவளது கொங்கைகள் வரை நனைக்கத் தொடங்க.. அழுது அழுது விழிகள் மரத்துப் போனவளுக்கு வீடு கசந்தது.

மனதுக்குள் அலைக்கழிப்பான எண்ணங்கள் தோன்றிக் கொண்டேயிருக்க, சுரத்தையற்றவள் போல நிமிர்ந்தவள், வீட்டில் இருக்கும் ஒரே நபரான வாசுகி அண்ணியின் விழிகளில் கூட விழாது.. பித்துப் பிடித்தவள் போல தெருவில் இறங்கி நடந்தாள். 

அவளது கண்கள் விட்டத்தை வெறித்துப் பார்த்திருக்க, இத்தனை நேரம் அழுததால் இதயத்திலோ ஓர் விம்மல் அடிக்கடி வந்து போக, அவளது பாதங்களோ.. மன அமைதியைத் தேடி இலக்கேயற்று நடந்தன. 

இந்த உலகில் நன்மாதருக்கு மிகவும் நெருங்கிய உறவு கொண்டவன் ஒருவனே. அவன் அன்பையும் புரிந்து கொள்ளாமல்.. அவன் வெறுப்பை சம்பாதித்த பின்னர்… அவள் இருந்து என்ன பயன்? இறந்து என்ன பயன்? என்று தோன்ற, 

அடுத்தடுத்தாக அவள் உள்ளத்தில் பல பொல்லாத எண்ணங்கள் முகிழ்க்கவாரம்பித்தது. 

***

 

மனைவியின் மனதில் எழுந்திருக்கும் கோர எண்ணங்களை அறியாது அவன் வீடு திரும்பிய போது, சூரியன் மேற்கில் சாய்ந்து அஸ்தமித்துக் கொண்டிருந்த நேரம் அது. 

அவனுக்கோ இன்னும் சொற்ப நேரத்தில் இங்கிருந்து செல்லப் போவது குறித்து, வேல்பாண்டியிடமும், வாசுகி அண்ணியிடமும் எப்படி சொல்வது என்ற மனமுரண்டலுடனேயே வீடு திரும்பிய போதும் கூட, அவன் மனதின் ஒரு ஓரம், 

என்ன தான் இருந்தாலும் அவளிடம் ‘விவாரகத்து’ பற்றி பேசியிருக்க கூடாதோ? என்று சின்ன கவலை மிகுந்து கொண்டேயிருந்தது. 

அவன் கோபத்தில் கத்திய போது அதிர்ந்து அதிர்ந்து விழித்த அவள் முகம் வேறு அவனை அலைக்கழிக்க, அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடனேயே, 

அவள் வீட்டு முற்றத்தில், ஜீப்பை தரித்து விட்டு இறங்கியதுமே, வாசலிலேயே அமர்ந்திருந்த வேல்பாண்டி பதற்றத்துடன் அவனை நாடி வந்தார். 

அவர் பார்வையோ அவனையும் தாண்டி, ஜீப்புக்குள் இரண்டாவது நபர் இருப்பது போல ஆராய, புரியாமல் பார்த்த சத்யனிடம், “என்ன மாப்ள நீங்க மட்டும் தனியா வர்றீங்க? தங்கச்சி எங்கே?”என்று கேட்க, இன்னும் கொஞ்சம் குழம்பிப் போனான் சத்யன். 

அவரைப் பார்த்து திருதிருவென விழித்தவன், “தங்கச்சியா?? யௌவனா என் கூட வரலையே மச்சான்.. நான் தனியா தானே போனேன்?”என்று சொன்னவனுக்கு இதயத்தில் கிடுக்கிப்பிடி போட்டாற் போன்று வலியெடுக்க, 

இருண்ட முகத்துடன், “ஏன் மச்சான்.. வீட்டில் யௌவனா இல்லையா?”என்று கேட்டான். 

வேல்பாண்டியும் தன் நெஞ்சையும் தலையையும் மாறி மாறி தடவிக் கொண்டே அவஸ்தையுடன்,

 “அப்படின்னா நீங்க கூட்டி போகலையா மாப்ள? இன்னைக்கு தோட்டத்துக்கு போயிருந்தப்ப.. ‘ஜம்புக்காய்’ காய்ச்சு தொங்கிட்டிருஞ்சு.. சரி தான்.. நம்ம தங்கச்சிக்கு பிடிக்குமேன்னு ஆட்களை விட்டு ஆஞ்செடுத்துட்டு வந்து தங்கச்சியை தேடினா.. யௌவனாவை வீட்டுக்குள் எங்கே தேடியும் காணலை மாப்ள.. அவள் ஃபோனும் வீட்ல தான் இருக்கு.. வாசு தான் உங்க கூட கிளம்பிப் போயிருப்பான்னு சொன்னா. உங்களுக்கு கோல் பண்ணா.. உங்க ஃபோனும் வீட்ல தான் இருக்கு.. நீங்க சொல்றதை வைச்சுப் பார்த்தா.. தங்கச்சி உங்க கூடயும் இல்லை .. வீட்லேயும் இல்லை.. அப்படின்னா.. எங்கே போயிருப்பான்னு தெரியலையே?.. பொழுது வேற சாய்ஞ்சிருச்சு” என்றவரின் முகம், 

திருவிழாவில் குழந்தையை தொலைத்த தாய்முகம் போல பரிதவித்திருந்தது. 

(ஜம்புக்காய் என்பது.. இலங்கையில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மாத்திரம் விளையும் ஒரு வகை காய் வகை. ஆங்கிலத்தில் “ரோஸ்ஆப்பிள்’என்று அழைக்கப்படும். ) 

வேல்பாண்டி.. அவளுக்கு தாய் போல என்றால், சத்யாதித்தன் அவளுக்கு ‘உடையவன்’ அல்லவா?

 மனைவியைக் காணவில்லை என்றதும் உள்ளத்திலிருந்து ஓர் பதற்றம் எழ, அவனுக்கு அவளது தூக்கிவாரிப்போட்ட முகம் மனக்கண் முன் வந்து போனது. 

அவன் எல்லை மீறி ரொம்ப எகிறியதால் தான்.. வீட்டை விட்டு கிளம்பிச் சென்றாளா?? 

வேல்பாண்டிக்கும், வாசுகிக்கும் வேண்டுமானால், யௌவனா வீட்டில் இல்லாதது சுமூகமான பதற்றத்தைக் கொடுக்கலாம்.

 ஆனால் அவர்களுக்கிடையே இருக்கும் ஊடல் அறிந்தவனுக்கு அது பெரும் களேபரத்தை உண்டு பண்ண, 

உள்ளே ஓடிச்சென்று தன் செல்லை எடுத்து வந்தவன், வேல்பாண்டியிடம், “மச்சான்.. நீங்க வீட்லயே இருங்க.. அவள் ஒருவேளை வீட்டுக்கு வந்தான்னா.. எனக்கு கால் பண்ணுங்க.. நா.. நான் அவளைத் தேடிக் கெளம்புறேன்” என்றவன், வந்த வேகத்திலேயே ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பலானான். 

சத்யாதித்தன் ஓட்டிக் கொண்டிருந்த ஜீப்.. அந்த தம்பதிவன கிராமத்தில் இருக்கும் நான்கு தெருக்களையும் நாற்பது முறை சுற்றி வந்திருக்கும். 

மனைவியின் உடலமைப்பை ஒத்த… தெருவில் செல்லும் பெண்களை எல்லாம், இது யௌவனா தானோ.. என்றெண்ணி விழிகளும் ஏமாந்திருக்கும். 

ஆனால் அவனது மனைவி மட்டும் கிடைக்கவேயில்லை.

 ஊர்க்கோயில் தெருமுன்பாக வண்டியை சோர்ந்து போனவனாக நிறுத்தியவன், ஜீப்பின் ஸ்டியரிங் வீலிலேயே முகம் புதைத்துக் கொண்டு… இறுக கண்கள் மூடியவனாக அவன் இருந்த நேரமும் கூட மனமெங்கிலும் அவள் ஞாபகமே.

எங்கே சென்றாள் அவள்??

அவன் இதழ்களோ தானாகவே, “ ஐ வில் நெவர் யெல் அட் யூ யௌவனா.. ப்ளீஸ் என்கிட்டேயே வந்துரு”என்று மனமார பிரார்த்தித்துக் கொண்டிருந்த நேரம் இருள் சூழத் தொடங்கியிருந்தது. 

திரும்பவும் வீட்டுக்கே சென்றிருப்பாளோ? என்று தோன்ற, வேல்பாண்டியின் செல்லுக்கு நிமிடத்துக்கொரு அழைப்பெடுத்து, “மச்சான் யௌவனா வந்துட்டாளா? யௌவனா வந்துட்டாளா?’ என்று சலிக்காமல் கேட்டுக் கொண்டேயிருக்கவும் செய்தான் அவன். 

ஆனால் தேடல் பூஜ்ஜியத்திலேயே முடியவும்.. நெற்றியைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, விழிகள் மூடி அவன் தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டிருந்த நேரம், 

அன்றொரு நாள் மனைவி, அவனைத் தேடி காட்டுக்கு சென்றதைச் சொன்னது பற்றி நினைவு வந்து போனது. 

அப்படியானால் இம்முறையும் அவள் கானகத்துக்குள் சென்றிருப்பாளா? 

இந்த ஊரில் அவன் தேடாத எல்லை கானக எல்லை மட்டும் தான் என்று மனம் வேறு இடித்துரைக்க, மீண்டும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து கியரைப் போட்டவன், வண்டியை விட்டான் கானக எல்லையை நோக்கி. 

கானகத்தின் ஓர் எல்லைக்கு அப்பால்.. ஜீப்பின் மூலம் செல்ல முடியாது என்பதை அறிந்தவன், வண்டியை அங்கேயே நிறுத்தி விட்டு இறங்கியவனுக்கு, 

நிலவின் வெளிச்சம் இருந்த போதிலும் அது போதாதது போலவே தோன்றியது. 

செல்லின் டார்ச் ஒலியையும் பயன்படுத்தினால்…பேட்டரி சார்ஜ் தீர்ந்து.. அவசர நேரத்தில் கைசேதப்பட்டு நிற்க வேண்டி வரும் என்று தோன்ற, கானகத்தில் இருந்து ஒரு பச்சைமரக்குச்சியைத் தேடி எடுத்தவன், 

நிமிடமும் யோசியாமல் தன் சட்டையைக் கழற்றி மரக்குச்சி முனையில் சுத்தி, வண்டியில் இருக்கும் பெற்றோல் கொஞ்சம் அதற்கு தெளித்தவன், லைட்டர் எடுத்து அதனைப் பற்ற வைத்தான். 

அவனது சட்டை தாங்கிய மரக்குச்சி குபுகுபுவெனப் பற்றி எரிந்து.. அந்த கானகத்தின் பாரிய பரப்பெல்லையை பிரகாசமாக்கத் தொடங்க, 

உள்ளே அணிந்திருந்த வெறும் கையில்லாத பெனியன் மற்றும் ஜீன்ஸ் சகிதம்.. கானகத்துக்குள் அவளைத் தேடி நுழைந்தான் சத்யாதித்தன். 

அவன் விழிகளில் ஓர் பதற்றம். இதழ்களில் ஓர் உச்சரிப்பு. அது அவள் பெயரின் உச்சரிப்பு. அந்த அடர்ந்த கானகம் எங்கிலும் நிலவிய குளிர்காலநிலைக்கும் மேலாக வியர்க்கவாரம்பிக்க, 

“ய்யௌவனா..ய்யௌவனாஆஆ”என்று கத்திக் கொண்டே, அந்தக் கானகம் எங்கிலும் தேடிப் போனான் அவன். 

அவன் அந்தக் கானகத்தின் ஆழத்துக்கு ஆழத்துக்குச் செல்ல, அவனில் தன்னுயிர் பற்றிய பயம் அகன்று, அவளது உயிர் பற்றிய பயமே மிகுந்திருந்தது. 

தம்பதிவனக்காடு.. அது ஓர் ஆழமான பொக்கிஷம். தோண்டத் தோண்ட பொக்கிஷம் வருவது போல. அதன் ஆழத்துக்குச் செல்ல செல்ல பலவித தரைத்தோற்ற மாறுபாடுகள் உண்டு. 

அந்தக் கானகத்தில் ‘பீலி’ என்று சிங்கள மக்களால் அழைக்கப்படும் சிறிய நீர்வீழ்ச்சி உண்டு. அதைச் சுற்றி ஓடும் மகாவலி கங்கை உண்டு. அங்கே தான் நந்தினிக்கு கொடுமை நடந்தேறிய கற்திடலும் உண்டு. இன்னும் யார் கண்ணுக்கும் புலப்படாத நிலவறையும் உண்டு. யார் கையிலும் அகப்படாத புதையலும் உண்டு. 

அங்கே சத்யன் பதைபதைப்புடன் தேடிக் கொண்டே சென்ற போது.. ஒரு சின்ன கல்மலைக்கு மேலே… ஒரு மேடை போன்ற ஒரு கல் இருப்பதைப் பார்த்தான் அவன். 

அதனை அவன் கூர்ந்து கவனித்த பொழுது.. அதன் உச்சியில் அவனது மனைவி நின்றிருப்பது புரிய, பதைபதைப்புடன் அதன் உச்சியிலிருந்து கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருந்த.. 

காட்டுமரங்களின் விழுது பிடித்து ஏறி… தன் களைப்பையும், மூச்சிறைப்பையும் கூட சட்டை செய்யாதவனாக உச்சிக்குப் போனான் சத்யன். 

அவளோ உலகம் பற்றிய சிந்தனையே அற்று, கல்மேடையின் விளிம்பில் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு நின்றிருக்க, 

அவளை நோக்கி உச்சபட்ச களேபரத்துடன், ஓடி வந்தவன், , மனம் பதற, “யௌவனாஆஆ.. இங்கே இருந்து என்னடி பண்ற?”என்று கேட்டவனாக அவளை அடைந்தான் சத்யன். 

சத்யன் வருவது அவளுக்குப் புரிந்தாலும்.. அவனது காலடிச்சத்தம் கேட்டு பளிச்சென்று மலர்ந்தது அவளது விழிகள். 

அவள் யௌவனாவா? இல்லை அவளா? 

 

1 thought on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 21 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top