ATM Tamil Romantic Novels

ஏகாந்த இரவில் வா தேவதா! – 24&25 (விஷ்ணுப்ரியா)

ஏகாந்த இரவில் வா தேவதா 

[24]

மனைவி கருவுற்றிருப்பது அறிந்த கணம்… சத்யாதித்தனோ ‘சின்ராசைக் கையிலேயே பிடிக்க முடியாது’ என்பதைப் போலத் தான் நடந்து கொண்டான். 

விளைநிலத்திற்கு வெகு அருகாமையில் இருக்கும் வீட்டில் தங்கியிருந்த வேல்பாண்டி – வாசுகி தம்பதியினருக்கு விஷயம் சொல்லப்பட.. அடுத்த நொடி.. தம்பதிவனத்தின் டவுன் சந்தைக்குச் சென்று, 

அரை டஜன் பட்டுப்புடவை, தங்க வளையல், மோதிரம் என்று வாங்கி வந்து.. தங்கைக்கு அணிவித்து…. அந்த வீட்டையே அல்லோலகல்லோலப்படுத்திக் கொண்டிருந்தார் அந்த வெள்ளந்தி வேல்பாண்டி. 

அவருக்குத் தான் கடவுள் புத்திர பாக்கியத்தைக் கொடுக்கவில்லையாயினும் கூட, தங்கைக்கு அந்த மாபெரும் தாய்மை வரம் வாய்க்கப் பெற்றதில்.. அவ்வின்பத்தை, தான் துய்த்த இன்பமாகவே கொண்டு.. 

தன் விளைநிலத்தில் பணிபுரியும் வேலையாட்களுக்கு எல்லாம் அரைநாளோடு விடுப்பும், போனஸ் சம்பளமும் அன்றே கொடுத்து.. தன் மகிழ்வான மனதைக் காட்டி அதகளப்படுத்திக் கொண்டிருந்தார் வேல்பாண்டி. 

வாசுகி அண்ணியோ.. இன்னும் ஒருபடி மேலே போய்.. அவளை ஒருவேலை கூட செய்யக்கூடாது என்று அன்புக்கட்டளையிட்டவராக… யௌவனாவுக்கு மிகப் பிடித்த பால்பாயாசம் செய்து அசத்த… யௌவனாவுக்கோ.. உறவுகளின் அன்பில்.. மனம் வானலோகத்தில் பறப்பது போல அப்படியே பூரித்துப் போனது. 

அங்கே சத்யனோ.. வீடியோ அழைப்பெடுத்து.. மனைவி கருவுற்றிருக்கும் விஷயத்தை… யௌவனாவுடன் இணைந்து.. தாயிடம் பகிர்ந்து கொள்ள, தன் உடல் நிலையைக் கூட கருத்தில் கொள்ளாத வசுந்தராதேவியம்மாளோ, இன்னும் பத்து வயது குறைந்தவர் போன்ற உற்சாகம் நிரம்பி வழிந்த குரலில், “ஐய்யோ என் பேரனைப் பார்க்க.. இப்பவே கெளம்பி வந்துர்றேன்டா”என்று இலங்கை வர.. ஆசை மல்கத் தவித்தவரை.. 

‘வர வேண்டாம்.. கூடிய சீக்கிரம் நாம் அங்கு வருகிறோம்’ என்று தாயாரை சமாதானப்படுத்துவதற்குள், ‘போதும்.. போதும்’ என்றாகிவிட்டது சத்யனுக்கு. 

தன்னுடைய வாணிபப் பங்குதாரன் பிரபாகர்.. ஓர் முக்கியமான விடயத்தைக் காட்டவும், சொல்லவும் தான் தன்னை அழைத்திருக்கிறான் என்பதைக் கூட மறந்து போனவன், 

அடுத்த நாள் காலை.. முழுத் தம்பதிவனத்துக்குமே…தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள… விருந்து படைக்க நாடியதில், 

அவன் இன்று மதியத்திலிருந்து பம்பரமாக சுழல வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனால் பிரபாகரை சந்திக்கும் நிலைமையும் தடைப்பட்டுப் போனது. 

அந்த ஊர் மக்கள்… சத்யனுக்கு வாரிசு வரப்போவதை..தங்களின் சமஸ்தானத்திற்கு யுவராஜன் வரப்போகிறான் என்று கொண்டனரோ?? 

ஆம், அப்படித் தான் போலும். 

சத்யனுக்கு உயிரையும் ஈய்ந்தளிக்கத் தயாராகவிருந்த அந்த அன்புடைய நெஞ்சம் கொண்ட மக்கள், சத்யனின் சந்தோஷத்தை.. தன் சந்தோஷம் போல ஏற்றுக் கொள்ளலாயினர்.

அடுத்த நாள் காலை.. வாழையிலை விருந்துடன்.. பாரம்பரிய கூத்துக்களும், நடனங்களும் என… அந்தத் தம்பதிவன மக்களுக்கு.. திருவிழா வந்தது போல பண்டிகை நாளாகவே கழிய… யௌவனாவின் நெஞ்சமோ… தான் கருவுற்றதுக்கு இந்த ஊர்மக்கள் காட்டும் அன்பில் நெகிழ்ந்து போனது. 

இந்த சந்தோஷமான விஷயத்தில்.. திருவிழாக்கோலம் பூண்ட அந்தத் தம்பதிவனக் கிராமம்.. மீண்டும் தன் வழமையான நிலையை அடைய.. இரண்டு நாட்கள் தேவைப்பட்டது. 

இரண்டு நாட்களின் பின்னர்.. அந்த வியாபார வர்த்தகனுக்கு… தன்னுடைய சுற்றுலாத்தலத்தையும் விருத்தி செய்யும் செயல்திட்டம்… அப்போது தான் நினைவு வர… அன்று தான் பிரபாகரை நாடிப் போக எண்ணம் கொண்டான் சத்யன். 

ஆனால் அதற்கும் ஓர் சின்னத் தடங்கலாக.. எதிர்பாராமல் விழுந்த இழவு வீட்டுக்கு… வேல்பாண்டியோ தன் மனைவி சகிதம் கொழும்பு செல்ல வேண்டிய சூழ்நிலை தோன்ற, வேல்பாண்டியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, 

விளைநிலத்தில் அறுவடை செய்யப்பட்ட காய்கறி லோடுக் கணக்கு, வழக்குகளை மேற்பார்வை செய்ய வேண்டிய ஓர் கட்டாயப் பொறுப்பு விழுந்தது சத்யாதித்தனின் மேல். 

தன் அன்பு மச்சானுக்காக..அந்த வேலையை மனமார ஏற்றுக் கொண்டவன்.. வேல்பாண்டியின் தலைமை அலுவலகத்தில் அமர்ந்து.. அன்றைய மாதத்தின் காய்கறி லோடுகளின் கணக்கு, வழக்குகளை மேற்பார்வை செய்தவனாக அமர்ந்திருந்த போது தான் வந்தான் அவன். 

அவன்?? முருகேசன்!! 

வேல்பாண்டியின் வலது கையான அதே முருகேசன். தன் தாய்வழி உறவுக்கு.. திருமணமென்று.. வைபவத்துக்கு சென்றிருந்த அதே முருகேசன். 

ஆயினும் அவன் மூன்று மாதங்களின் பின் திரும்பி வந்த போது.. கொஞ்சம் என்ன? ரொம்பவுமே காலம் கடந்திருந்தது. 

பேரேடுகளில் எழுதப்பட்டிருந்த கணக்குகளில் பார்வை பதித்திருந்த சத்யாதித்தனின் செவிகளில், படாரென்று கதவு திறக்கப்படும் ஒலியும், கால்த்தட ஒலியும் நாராசமாக காதில் விழவே.. சட்டெனத் திரும்பிப் பார்த்த போது அங்கே நின்றிருந்தான் அவன். 

வேல்பாண்டிக்கும், வாசுகிக்கும் வரும் வழியில் விபத்தென்று பொய்ச்சாட்டுக்கள் சொல்லி.. சத்யாதித்தனை பாதிவழியில் காட்டில் கை விட்டு விட்டுப் போன முருகேசன். 

முருகேசுவின் உருவில் தீயசக்தி வந்திருந்தாலுமே கூட.. அது சத்யாதித்தனின் பார்வையில்.. முருகேசன் தானே?? 

சத்யனின் பார்வை மெல்ல நிமிர்ந்து.. பணியாளன் முருகேசனின் பார்வையை சந்தித்தது. இடைப்பட்ட இந்த மூன்று மாதத்தில் முற்றுமுழுதாக மாறிப்போயிருந்தான் முருகேசன். 

எப்போதும் வேஷ்டி சட்டை என்று அணிந்து.. அசல் கிராமத்தானாக இருப்பவன்.. தற்போது டெனிம், ஷேர்ட் என்று கொஞ்சம் பட்டிணத்தார் ஸ்டைலும்.. அவன் உடைகளில் வாசம் வீசுவதை அவதானிக்க முடியுமானதாகவே இருந்தது. 

அவன் முகம்.. வெகுமணிநேரமாக பயணம் செய்து வந்ததால்.. வாடிப் போயிருக்க.. அவன் முகம் போலவே.. அவன் தோள்களில் தொங்கிக் கொண்டிருந்தது ஓர் பயணப்பை. 

அவனது உடை மாற்றத்தையும், பயணப்பையையும், சோர்ந்த முகத்தையும் கூர்ந்து கவனித்த சத்யன், இடுங்கிய புருவங்களுடன், அதிர்ச்சிக் குரலில், “முருகேசா…” என்று அழைத்தான். 

முருகேசனோ.. உச்சபட்ச களேபரத்துடன், நிதானமேயின்றி அறைக்குள் நடந்து வந்தவனாக, “ஐயா உங்க கிட்ட முக்கியமான விஷயம் பேசணுங்கய்யா” என்று சொல்ல, பேரேடுகளை மூடி வைத்து விட்டு, 

தன் கையிலிருந்த பேனையை.. சட்டைப்பாக்கெட்டில் நேர்த்தியாக கொழுவிய வண்ணமே.. இருந்த இடத்தை விட்டும் எழுந்தவன்.. மேசையை சுற்றி வளைத்து.. முருகேசனை நாடி வந்தான். 

சத்யாதித்தன் முகத்தில் அன்றைய நாள்… இரவின் ஏமாற்றத்துக்கான கோபம் அப்பட்டமாகவே தெரிந்தது. 

அவனை கூர்ந்து நோக்கியவன், “வாசுகி அக்காவுக்கும், மச்சானுக்கும் ஆக்ஸிடென்ட் நடந்த நாள் அன்னைக்கு.. நான் ராசா.. இன்னைக்கு ‘ஐயா’வா?” என்று அவனது அழைப்பு மாறுபாடுகளை சுட்டிக்காட்டிக் கேட்டான் சத்யன். 

முருகேசனுக்கோ, ‘சத்யன் என்ன சொல்கிறான்?’என்று சுத்தமாக புரியவில்லையாயினும் கூட.. அவன் தெய்வமாக மதிக்கும் வேல்பாண்டி முதலாளிக்கு, ‘விபத்து’ என்று கேட்ட ஒற்றைச்சொல்லில் கிடுகிடுத்து அடங்கியது அவனது மொத்த உடலும். 

அந்த துணுக்கம் அவனது குரலையும் பிடித்துக் கொள்ள, “வேல்பாண்டி ஐ.. ஐய்யாவுக்கு என்னாச்சுங்கய்யா?”என்று கேட்க, அது நடிப்பா? உண்மையா? என்பதறியாமல்.. மேலிருந்து கீழ் வரை ஓர் ஆராய்ச்சிப் பார்வை பார்த்து வைத்தான் சத்யன். 

பிறகு தீர்க்கமான குரலில், “அப்படீன்னா அன்னைக்கு ராத்திரி என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியாது? அப்படித்தானே?? கல்யாண வீட்டில் சுகமா இருந்தவங்களுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிருச்சுன்னு பொய் சொல்லி.. என்னை கையோடு கூட்டிப் போனது உனக்குத் தெரியாது? அப்படித்தானே? .. பாதி வழியில் நட்டநடு ராத்திரியில் என்னை அப்படியே விட்டுட்டு ஓடிப் போனது கூட உனக்குத் தெரியாது..? அப்படித்தானே??” என்று சத்யன் அடுக்கடுக்காக கேட்டுக் கொண்டே போக, 

சத்யன் என்ன உளறுகிறான்? என்பது போன்ற பார்வையுடன் தலைகுனிந்து யோசனையுடன் நின்றிருந்தான் முருகேசன். 

அதனை குற்றவுணர்வுப் பார்வையாகக் கொண்ட சத்யனோ.. தன் பேன்ட் பாக்கெட்டினுள் இரு கைகளை இட்டு நின்ற வண்ணம், இதுக்கெல்லாம் என்ன காரணம் சொல்லப் போகிறான் முருகேசன் என்பது போலவே ஊடுருவும் பார்வை பார்த்தான். 

சட்டென தலைநிமிர்த்திய முருகேசனோ.. “நான் எப்…” என்று ஏதோ சொல்ல விழைந்த கணம்.. அதற்கு தடையிடும் முகமாக இடையிட்டவன், 

“நான் பண்ணது ப்ரேங்க்கு.. தப்பு தான்.. என்னை மன்னிச்சிடுங்க’ன்னு சொல்லப் போறீயா?”என்று அப்போதும் கோபம் தாளாத குரலிலேயே கேட்க, தலை, வால் புரியாமல் நின்றிருந்தான் முருகேசு. 

“என்ன ப்ரேங்க்குங்க ஐயா.. ஒண்ணுமே புரிய மாட்டேங்குது?” என்று தலையைப் பிய்த்துக் கொள்ளாத குறையாக முருகேசன் கேட்க, அவனது நடிப்பைக் காணக் காணப் பற்றியெரிந்தது சத்யனுக்கு. 

அன்றிரவு.. அவனைத் தேடி வந்த அருமை மனைவியும் பேச்சுமூச்சற்று ஊர்க்கோயில் வாசலில் விழுந்து கிடக்க நேரிட்டதும் இவனால் தானே? என்று தோன்ற சத்யனின் ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே போனது. 

முருகேசுவின் சட்டைக்காலரைப் பற்றி, பற்களை நறுநறுவென கடித்துக் கொண்டு, “ஹேய் ந்நடிக்காதே..”என்று கர்ஜித்தவன், 

அவனை இழுத்துக் கொண்டு போய் சுவற்றில் சாய்த்த வண்ணம், அவனின் கழுத்தை நெரிக்காத குறையாக, சட்டைக்காலரை நெருக்கிப் பிடித்த வண்ணம், 

“அன்னைக்கு ராத்திரி மச்சானுக்கும், அக்காவுக்கும் ஆக்ஸிடென்ட்டாயிருச்சுன்னு.. சொல்லி கூட்டிப்போய்.. பாதியில கழட்டி விட்டது.. நீ… இல்லைன்னு சொல்லப்போறீயா..? உன் விளையாட்டுத் தனத்தால.. அன்னைக்கு ந்நாஆஆன் ய்யௌவ்வனாவைக் கூட இழந்திருப்பேஏஏன்ன்!!”என்று இரைந்து கத்தவும் செய்தான் சத்யன். 

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் அதைப்பற்றி அச்சம் கொள்ளாத பணியாளனோ, “ஐயா நீங்க சொன்னாலும், சொல்லலைன்னாலும் அது தான் உண்மை.. நீங்க பேசுறது எதுவுமே எனக்குத் தெரியாது..ஏன்னா நான் அன்னைக்கு ஊரிலேயே இல்லை.. இது தான் சத்தியம்”என்று ஆணித்தரமாகச் சொல்ல, மெல்ல இடுங்கியது சத்யனது புருவங்கள். 

இருந்தாலும் தன் பிடியைத் தளர்த்தாமல், “என்ன சொல்ற?”என்று அவன் கேட்டது தான் தாமதம். 

பணியாளனோ படபடத்த குரலில், “ஆமா.. இந்த மூணு மாசமா நான் இங்கேயே இல்லை.. நான் இருந்தது கொழும்பில்… எதுக்கு போனேன் தெரியுமா? இங்கே எவ்வளவு பெரிய கொடூரமும், கண்துடைப்பும் நடந்துட்டிருக்கு தெரியுமா?”என்று கேட்க, முருகேசுவின் குரலில் இருந்த பிசிரற்ற தன்மையே.. சத்யாதித்தனின் கோபத்தை மெல்ல மெல்ல இறக்கப் போதுமானதாக இருந்தது. 

பணியாளனின் சட்டையில் இருந்த பிடி மெல்ல தளர்ந்து போக, “என்ன உளர்ற?”என்று சற்றே நிதானமாகக் கேட்டான் சத்யன். 

சத்யனின் கோபம் ஆசுவாசப்பட்டு விட்டது என்பதையும், அவன் அனைத்தையும் கேட்கத் தயாராகி விட்டான் என்பதையும் உணர்ந்து கொண்ட பணியாளனும், “ஆமா…. இந்த ஊரிலுள்ள இயற்கை வளங்களை அழிச்சு.. அதன் பேரில் ஒரு அகழ்வாராய்ச்சின்னு ஒண்ணு நடக்குதே..அதைப்பத்தித் தேடத் தான் நான் கொழும்பு போயிருந்தேன்..” என்று மெல்லத் தொடங்கினான் தன் கதையை. 

சத்யாதித்தனுள் ஓடுவது இராஜ இரத்தம் அல்லவா? எதிராளியாகவே இருந்தாலும்.. அவர் தம் தன்னிலை விளக்கங்களையும் கேட்கக் கூடிய மனப்பக்குவம்.. சத்யாதித்தனுக்கு இயல்பிலேயே இருந்தது. 

அதனால் அமைதியாக… பணியாளன் சொல்வது பொய்யா? மெய்யா என்பது போல அவனையே கூர்ந்து பார்த்தபடி நிற்கலானான். 

முருகேசுவோ தொடர்ந்து சொன்னான். 

“இந்த ஊருல.. தம்பதிவனக்காட்டுக்குள்ள.. ஓர் அகழ்வாராய்ச்சி நடக்குதே… அந்த அகழ்வு இடத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு தொல்லியலாளரோ இல்லை ஒரு அதிகாரியையோ நீங்க பார்த்திருக்கீங்களா ஐயா?”என்று கேட்க, அது அவனை சிந்திக்க வைத்தது. 

குளத்தில் விழுந்த கல்லினால் எழும் நீர்வட்டம்.. அகலமாகிக் கொண்டே போவது போல.. அவனது சிந்தனாவட்டத்தையும் அகலமாக்கியது பணியாளன் கேட்ட கேள்வி. 

முருகேசனோ தீவிரக்குரலில் “ சரி அதுவும் வேண்டாம்… பிரதேச சபை அதிகாரியாவது மேற்பார்வைக்காக வந்து நின்னதை.. நீங்க கவனிச்சிருக்கீங்களா?” என்று.. சிந்தனையைத் தூண்டும் ஓர் கேள்வியை முருகேசு கேட்க, விதிர் விதிர்த்துப் போய் நின்றிருந்தான் அவன். 

சத்யாதித்தன் இலங்கையிலேயே பிறந்து வளர்ந்தவன் அல்லவே? அவன் தான் இந்தியாக்காரனாயிற்றே.

 இந்தியாவின் தலைநகரான தில்லியையே.. தன் சமஸ்தானமாகக் கொண்டு ஆட்சி செய்பவனுக்கு, ஓர் அகழ்வாராய்ச்சியின் போது… அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி ‘சைட் விசிட்’என்ற பெயரில் வந்திருக்கவே வேண்டுமே? என்ற கேள்வி அப்போது தான் தோன்றவாரம்பித்தது. 

உண்மையில் சொல்லப்போனால்.. மனைவி மீதிருந்த பித்துப் பிடிக்க வைக்கும் ஊடல் தீர்ந்து.. மனம் இலேசானதும் தான்.. சத்யாதித்தனின் அகக்கண்கள் எல்லாம் திறக்கவாரம்பித்தது. 

குழப்பத்துடன் வாய் திறந்த சத்யட், “அது.. அது.. இந்த அகழ்வாராய்ச்சி… அது மேலிருக்கற ஆர்வத்துனால.. பிரபாகராகவே முன்னின்று பண்றது…கவர்மென்ட்டால ஒரு ஆர்க்கியோலஜிஸ்ட் அசிஸ்ட் பண்ணாமலும்.. சுயமாக பண்ணலாம் இல்லையா? … அது பிரபாகரின் விருப்பத்தைப் பொறுத்துத் தானிருக்கு.. ஏன்னா நிதியுதவி அளிக்குறது பிரபாகர்.. ”என்று தன் மனதில் முன்கூட்டி.. இந்த அகழ்வுப்பணி சம்பந்தமாக பிரபாகர் தந்திருந்த தரவுகளை எடுத்துச் சொன்னான் சத்யன். 

சத்யன் பேசியதிலிருந்தே.. அவன் இலங்கையின் சட்ட நடைமுறைகள் எதுவும் அறியாத.. அயல்நாட்டு பிரஜையாகவே இருந்திருக்கிறான் என்று புரிந்து போனது பணியாளனுக்கு. 

அதனாலும் அனைத்தையும் தெளிவுபடுத்த நாடியவன், “இருந்தாலும் ஒரு தொல்பொருளாளர் இல்லாமலா.. இதுவெல்லாம் நடக்கும்..?? ஐயா.. இலங்கையில் பிறந்து வளராததினால.. இலங்கை நடைமுறை உங்களுக்குத் தெரியல.. அதை சாதகமா பயன்படுத்திக்கிட்டு அந்த கேடி பிரபாகர்.. இத்தனை நாளா உங்களையும், இந்த அப்பாவி ஊர்மக்களையும் ஏமாத்திட்டிருக்குறதும் யாருக்கும் புரியல”என்று சரியாகவே நேர்ப்பேச்சு பேசினான் அவன். 

முருகேசனோ அடுத்து சற்றே உணர்ச்சிவசப்பட்டவனாக, “ஏன்னா..இலங்கை அரசு.. எப்பவுமே தன்னோட தொல்பொருளியல் சான்றாதாரங்கள் கிடைக்கும்னு நம்பப்படுற நிலங்களை.. தனியார் வசம் ஒப்படைக்குறது இல்லை.. நிதிப் பற்றாக்குறை வந்தா… அந்த திட்டம் காலம்தாழ்த்தி செய்யப்படுமே ஒழிய.. ஒருகாலும் கார்ப்பரேட்க்கு தூக்கிக் கொடுக்காது… ஏன்னா இலங்கை அரசோட இறைமை அப்படி.. கொள்கை அப்படி”என்று தெளிவுற எடுத்துச் சொல்லலானான். 

குழம்பிப் போனவனாக இடையிட்ட சத்யன், “அப்படீன்னா.. எப்படி கார்ப்பரேட்டான பிரபாகர்.. இவ்வளவு தைரியமா அரசாங்கத்தை ஏமாத்தி உள்ளே வந்திருக்க முடியும்?”என்று கேட்க, முருகேசுவோ இலகுதமிழில் ஒற்றை வார்த்தை தான் சொன்னான். 

நமுட்டுச் சிரிப்புடன், “பணம்!!!”என்று மட்டும் தான் சொன்னான். 

சத்யாதித்தன் விழியகலப் பார்க்க, முருகேசுவோ, “இந்தியாவில் மட்டுமல்ல பணம் பாதாளம் வரை பாயும்..இலங்கையிலும் தான் .. இந்த ஊர் மக்களுக்கு மட்டும் தான்.. இது தனியார்துறை எடுத்து நடத்தும் அகழ்வுப்பணி.. ஆனால் இந்த ஊரை விட்டு வெளியே வசிக்குற இலங்கை மக்களுக்கு.. இது அரசாங்கம் எடுத்து நடத்துற அகழ்வுப்பணி… தொல்லியல் டிபார்ட்மெண்ட் பியூனிலிருந்து.. மினிஸ்டர் வரை…பெட்டி பெட்டியா பணம் போயிருக்கு.. அதனால இந்த உண்மை… யாருக்கும் கடைசி வரை தெரியப் போறதில்லை..இது மீடியாக்களும், அரசியல்வாதிகளும்.. அந்த பிரபாகருடன் சேர்ந்து செய்யுற ஓர் இருட்டடிப்பு நாடகம்!! ..”என்று சொல்ல, 

தன்னையும் இதற்குள் பிரபாகர் இழுத்து விடவேண்டிய அவசியம் என்ன? என்ற யோசனை சத்யனை ஆக்கிரமிக்கலானது. 

அதுவுமில்லாமல்.. இந்த ஊரின் மக்கள் அறியாததை இந்த முருகேசு எப்படி அறிந்தான்? என்று அவன் யோசிக்க, அடுத்து இயல்பாகவே அதைத் தான் சொல்ல வாய் திறந்தான் முருகேசு. 

“அகழ்வாராய்ச்சின்னு வந்த முதல் நாளே.. பிரபாகர் மரங்களை வெட்டும் போதே.. எனக்கு சந்தேகம் ஆரம்பமாச்சுது.. அதான்.. அந்த திருமண வீட்டுக்குப் போறாப்புள நான் கொழும்பு தொல்பொருளியல் திணைக்களம் போனேன்.. இந்த மூணு மாசம்.. என்னோட அயராத முயற்சியால.. இங்கே நடக்குறது சட்டவிரோதமான அகழ்வுப்பணின்னு நான் தெரிஞ்சிக்கிட்டேன்”என்றவன், 

தன் பயணப்பையிலிருந்து ஒரு கோப்பை எடுத்து, அதிலிருக்கும் சில காகிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து நீட்டி, “.. இந்த ப்ராஜெக்ட்டை தடை பண்ண.. தடையுத்தரவு பிறப்பித்த மினிஸ்டர் கடுதாசி இது…”என்ற ஒன்றை காட்ட, அதை எடுத்துப் பார்த்தவன், அது ஒரு வருடத்துக்கு முன்னர் இருந்த.. முன்னாள் மந்திரி.. தடையுத்தரவு பிறப்பித்த ஆணைக்கடிதம் என்பதை அவதானித்தான் சத்யன். 

அதற்குள் இன்னொரு லெட்டரை எடுத்துப் போட்ட பணியாளன், உண்மையை சொல்லிவிடும் ஆர்வம் நிறைந்த குரலில், , “ அப்புறம் இது திரும்பவும் அகழ்வுப்பணிக்கு சம்மதம் கொடுத்த கடுதாசி..”என்று சொல்ல, 

அதை எடுத்துப் பார்த்த போது.. இது இந்த வருடம்.. புது மந்திரியின் கையெழுத்திட்டு அச்சாகியிருப்பதைப் பார்த்தான் சத்யன். 

அப்படியானால் தன் வேலையை முடித்துக் கொள்ள, ஆட்சியைக் கவிழ்த்து.. தேர்தல் மூலம்.. புது கெபினட்டைக் கூட நியமிக்கக் கூடிய அளவுக்கு, தரம் தாழ்ந்து வேலை பார்த்திருக்கிறானா பிரபாகர்? 

பிரபாகர்.. தன்னிடம் இத்தனை நாளாடிய கபடநாடகம் பிடிபட்டு விட..பொய்வலை வீசி.. தன்னையும் திட்டத்துக்குள் இழுத்த அவன் மேல் பொல்லாத கொலைவெறி மிகுந்தது சத்யனுக்கு. 

முருகேசனோ.. தன் அரசர் தன் மேல் கொண்டிருக்கும் பிழையான விம்பத்தை அகற்றுவதே பெரும் குறிக்கோளாகக் கொண்டவனாக, “இது எல்லாமே இங்கே சட்டவிரோதமா நடக்குது.. அதைத் தேடலாம்னு போன நான் எப்படி இங்கே இருக்க முடியும்?” என்றவன், 

தன்னை சத்யன் நம்ப வேண்டும் என்பதற்காக, கொழும்பில் அவன் இதுகாறும் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணம், பேருந்து கட்டணம் என எல்லாவற்றையும் எடுத்து மேசையில் இட்டவனாக, “இதுக்கு மேலேயும் எ‌ன்னை நம்பலைன்னா.. இது தான் நான் ஊரிலேயே இல்லைன்றதுக்கான சான்று.. இதைப் பார்த்தப்பறமும் நான் சொல்றது பொய்யி.. அன்னைக்கு ராத்திரி ப்ரேங்க்கு பண்ணது நான் தான்னு நினச்சீங்கன்னா…. ”என்றவன் மேற்கொண்டு முடிக்காமல்.. அமைதியாக தலையைக் குனித்துக் கொண்டான். 

இத்தனை விளக்கங்களுக்கும் பிறகு.. அன்று இரவில் வந்தது முருகேசு என்று நம்பவும் முடியுமா அவனால்? 

அப்படியானால் அன்றிரவு நடந்த அத்தனை குழப்பங்களுக்கும் காரணகர்த்தாவாக வந்தது யார்? என்ற சிந்தனை ஒருபுறம் இருந்தாலும், 

அதற்கு முன் தன்னையும் இந்த நாசகார திட்டத்துக்குள் இழுத்து விட்டு, அப்பாவி ஊர்மக்களை இரவு பகல் பாராமல் கசக்கிப் பிழிந்து, பல உயிர்களை காவு கொடுத்து.. அந்தப் பொல்லாத பிராபகர் செய்த.. தில்லுமுல்லு எல்லாவற்றையும்..

 அவன் சட்டைக்காலரைப் பிடித்துக் கேட்க வேண்டும் போல வெறி எழுந்தது சத்யனுக்கு. 

அவனது பணத்தை பல பொய்க்காரணங்கள் கூறி சூறையாடியதையும், மோசடி செய்ததையும் கூட அவ்வளவாக பொருட்படுத்தாதவன், இந்த ஊர் மக்கள் பலரினை.. கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி.. இந்தத் திட்டத்துக்காக பலிக்கடா ஆக்கியது தான் பிடிக்காமல் போனது அவனுக்கு. 

தன் மணிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த செப்புக்காப்பை முழங்கை வரை மேலேற்றிக் கொண்டவன், விழிகள் இரண்டும் கோபத்தில் சிவக்க பற்களைக் கடித்துக் கொண்டு நின்றதெல்லாம் சொற்ப கணங்கள் தான். 

.. விறுவிறுவென முற்றத்தை நாடிப் போனவனின் ஒவ்வொரு எட்டுக்களும் அழுத்தமாகப் பதிய நடந்தவன்.. அங்கே நின்றிருந்த ஜீப்பை ஸ்டார்ட்டாக்கி உறுமச் செய்தான் சீற்றத்துடன். 

அவன் பின்னாலேயே ஓடி வந்து பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்த முருகேசுவை நோக்கியவன், கியரை அழுத்தியவாறு, 

தீவிரமான விழிகளுடன், “ வ்வண்டியில் ஏறு..”என்றதும் தான் தாமதம், அரசரின் கட்டளைக்கு அடிபணிவது போல.. விறுவிறுவென ஓடி வந்து.. ஜீப்பில் ஏறிக் கொண்டான் அவன். 

முருகேசு ஏறிக் கொண்டதும், சத்யாதித்தனின் கோபம் போலவே கோபம் காட்டிய ஜீப்பும், உறுமிக் கொண்டே சீறிப்பாய்ந்து.. அந்த வளைவான மலைப்பாதையைக் கடந்து இறங்கி… அசுர வேகத்தில் சென்றது. 

பிரபாகரின் நாசகாரத் திட்டங்களுக்குப் பின்னுள்ள ஒரு வியாபார அரசியல் இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட.. கார்ப்பரேட் கிரிமினலான பிரபாகர் இந்த அகழ்வுப் பணியை இத்தனை மும்முரமாக முன்னெடுக்கும் உண்மைகெ காரணம்.. சிறுகச் சிறுகச் சத்யாதித்தனின் மூளைக்குப் புலப்படும் போல இருந்தது. 

இந்நேரம் அந்தப் பொல்லாத பிரபாகர்.. அகழ்வுப் பணி நடந்த இடத்தில் இருக்கக் கூடும் என்று அனுமானித்தவன், நேரே அங்கு தான் சென்றான். 

அவ்விடத்தில் இருந்த பணியாளர்களோ… பிரபாகர் இருக்குமிடம் என்று.. ஒரு சுரங்கத்தின் நுழைவாயிலை கைகாட்ட, அதைக் கண்டதும்.. முதன்முறையாக அதைப் பார்த்த சத்யாதித்தனின் விழிகள் அகலத் திறந்தன. 

அந்த சுரங்க நுழைவாயிலின் கற்படிகளைக் கடந்து.. உள்ளே இறங்கிப் போக.. அவனைப் பின்தொடர்ந்து இறங்கினான் பணியாளன் முருகேசு. 

அந்த சுரங்க வாயிலைக் கண்டதுமே… பிரபாகர் இத்தனையும் செய்வதற்கான காரணம் தெளிவாகும் போல இருக்க, சத்யாதித்தனின் ஆத்திரமும், கோபமும் இன்னும் இன்னும் அதிகமாகும் போலவே இருந்தது அவனுக்கு. 

அந்த இடத்தின் படிகளைக் கடந்து பளிங்குத் தரையில் கால் பதித்தவனுக்கு.. அவனையும் அறியாமலேயே, “இது என் முன்னோர்களின் சொத்து”என்று உரிமை மீதூறவாரம்பித்தது. 

அங்கே.. இரண்டு நாட்களுக்கு முன்னர் தரையில் மண்டிக்கிடந்த பாம்புகள் எல்லாம்.. வீரியம் மிக்க இரசாயனப்புகை அடித்துக் கொல்லப்பட்டு.. அந்த இடம் முழுவதும் சுத்தமாக்கப்பட்டிருந்தது. 

முன்பு இருள் மண்டிக்கிடந்த சுரங்கத்தின் நுழைவாயிலில்.. சூரியஒளி இலேசாக விழுந்தாலும் கூட.. கல்லைக் குடைந்து செய்யப்பட்ட அந்த சுரங்கத்தின் சுவர்களில்.. ஆங்காங்கே தீப்பந்தம் ஏற்றப்பட்டு.. ஜகஜோதியாகவே இருந்தது முழு இடமும். 

சத்யாதித்தன்.. அந்த சுவர்களில் சொருகப்பட்டிருந்த தீப்பந்தங்களினையும், பளிங்குத்தரையினையும்.. அதற்கு நேரேதிரே இருக்கும் தங்கக் கதவினையும் பார்த்து அதிசயித்துப் போனவனாக நின்ற வேளை…

இத்தனை நேரம் அந்த சுரங்கத்துக்குள்ளாகவே.. தன் அசிஸ்டெண்ட் கணேஷூடன் பேசியவாறே.. புறமுதுகிட்டு நின்றிருந்த பிரபாகரும்.. அரவம் கேட்டு மெல்ல திரும்பினான். 

தானே வரவழைத்து.. காட்ட நாடிய இடத்தில்.. தானாகவே.. அந்த தங்கக்கதவின் திறவுகோலான சத்யாதித்தன் வந்திருப்பது கண்டு பெரும் மகிழ்ச்சி முகிழ்க்க, 

வாயெல்லாம் பல்லாக, “வாட் அ சர்ப்பரைஸ்… வெல்கம் பார்ட்னர்..”என்று அவன் போலி அன்புடன் வரவேற்க, அந்த வரவேற்பு எதுவும் சத்யாதித்தனின் மனதைக் கலைக்கவேயில்லை. 

தன்னை நாடி வந்து.. தன் தோள்புஜத்தைப் பிடித்துக் கொண்ட பிரபாகரின் கையினைத் தட்டிவிட்டவன், கோபம் முட்டும் விழிகளுடன், “ப்போதும்… உன் ந்நடிப்பை இத்தோட நிறுத்திக்க”என்று கையுயர்த்தி கர்ஜித்ததும் கூட ராஜகர்ஜனையாகவே இருந்தது. 

பிரபாகருக்கோ.. உள்ளுக்குள் எதுவோ ஒன்று புரிபடுவது போல இருந்தாலும்.. அதனை வெளிக்காட்டாமல், “என்ன சொல்றீங்க பார்ட்னர்.. எனக்கு ஏதும் புரியலை??” என்று அப்பாவி முகபாவத்துடனேயே கேட்டான் அவன். 

அவனுடைய நடிப்பு இன்னும் கொஞ்சம் சினத்தை மூட்ட, ஓரெட்டில் தாவி சட்டைக்காலரைப் பிடித்துக் கொண்ட சத்யன், “இதுக்காக.. இந்த அற்பப் ப்புதையலுக்காக… நீ ப்போட்ட வேஷம் எல்லாம் தெரியாதுன்னு ந்நினைச்சிக்கிட்டீயா?? .. கோடி கணக்கான பணம் இதுக்காக.. ப்போட்டதை நான் கேட்க வ்வரலை.. இதுக்காக.. எத்தனை மக்களை ந்நீ சாகடிச்ச..?? ர்ராஸ்கல்..உனக்காக வேலை பார்த்து.. அநியாயம்மாஆ உயிரை விட்டவங்களுக்காக ஞாயம் கேட்க வந்திருக்கிறேன்..?? சொல்லூஊ… அவங்களுக்கு எல்லாம் நீ என்ன பதில் சொல்லப்போற சொல்லூஊஊ?”என்று கேட்டவனின் இதயத்தில் நீதி மட்டுமே இருந்தது. 

‘புதையல்’ என்ற ஒற்றை வார்த்தை கேட்டதும் துணுக்குற்றது பிரபாகரின் வஞ்சக எண்ணம் கொண்ட இதயம். 

ஆக, சத்யாதித்தன் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொண்டு விட்டான் என்று தோன்றினாலும் அழுந்த மூடிய இதழ்களுடன் நின்றிருந்தான் அவன். 

ஆம். ஒருமுறை பீலி சென்று வந்த போது.. மனைவி சொன்ன ‘புதையல் காக்கும் பூதக்கதையுடன்’, புதைபொருள் ஆராய்ச்சியையும் முடிச்சுப் போட்டுப் பார்த்த சத்யாதித்தனுக்கு.. புதையலுக்காகத் தான் பிரபாகர்.. இத்தனை நாசகாரியங்களையும் செய்வதாகவே தோன்றியது. 

அது தான் உண்மையும் கூட. 

இராஜ பரம்பரையில் வந்தவனுக்கு… எதிரியின் மாரோடு மார் மோதி நிற்க.. ஞாயம் கேட்பது.. துளியளவு அச்சத்தையும் கொடுக்கவில்லை. 

எதிரியை ஒழிப்பது.. அல்லது வீரமரணம் எய்தும் நோக்கில் அங்கேயே செத்து மடிவது என்று இருப்பவர்களாயிற்றே சத்திரியர்கள்??

சத்திரிய வம்சத்தில் வந்த சத்யனுக்கும் கூட… அவற்றில் எது கிடைத்தாலும் திருப்தியே.அதைக்காட்டிலும் அவனது அகழ்வுப்பணிக்காக உயிர்நீத்த உறவுகளுக்கு ஓர் நீதி கிடைக்க வேண்டும் என்று நினைத்தான் அவன். 

பிரபாகரோ விதிர் விதிர்த்துப் போய் நிற்க, இன்னும் சட்டைக்காலரை விடாதவனாக, “எத்தனை உயிர் ப்போயிருக்கு உன்னால .. அதுக்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆகணும்..!!” என்று சட்டையை உலுக்கிக் கேட்க, தன் இருண்ட முகபாவனையை ஒரு போலிப் புன்னகை உதிர்த்து மாற்றிக் கொண்டான் பிரபாகர். 

பிறகு தன் சட்டையில் இருக்கும், சத்யனின் கைகளை அப்புறப்படுத்திக் கொண்டவன், முன்பிருந்த போலிப்புன்னகை மாறாமல், “இங்கே பாரு… நான் ஒண்ணும் நல்லவன் கிடையாது… ஒத்துக்குறேன்… ஆனா நீ எனக்கு ஒத்துழைக்குற வரை நானும் கெட்டவன் கிடையாது… எப்படி வசதி?? …”என்று மறைமுகமாக மிரட்டலும் விடுத்தான் அவன். 

சத்யாதித்தனோ மிடுக்காக தன் ஒற்றைப்புருவம் உயர்த்தியவனாக, “என்ன.. மிரட்டுறீயா?”என்று கேட்க, அந்தக் கேடி பிரபாகரின் முகம் அப்படியே அகோரமாக மாறியது. 

அவனை ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டே பிரபாகர், “ நீ வேணா.. உன்னோட பூர்வீக வரலாறு தெரியாத முட்டாளாக இருக்கலாம்.. ஆனால் நான் அப்படி கிடையாது..”என்றவன், அந்தத் தங்கக் கதவைச் சுட்டிக்காட்டிவாறு, 

“இந்த கதவுக்குப் பின்னாடியிருக்குற… ஒவ்வொரு குண்டூசி மணி கூட எத்தனை பெறுமதியானதுன்னு உனக்குத் தெரியாமல் இருக்கலாம்.. ஆனா.. எனக்கு தெரியும்.. அதனால இனி நீ நடக்கப் போறத மட்டும் வேடிக்கை பாரு”என்று சொல்ல, 

சத்யாதித்தனாவது.. பிரபாகருக்கு அடிபணிவதாவது..?? 

ஆத்திரம் தாளாமல் தன் தலையால் எத்தி.. பிரபாகரின் நெற்றியை இடிக்க, நெற்றிச்சருமம் கிழிந்து பொளபொளவென கொட்டவாரம்பித்தது பிரபாகருக்கு இரத்தம். 

***

அங்கே அந்த மாயப்பொறியிலிருந்து விடுதலையாகி வந்த நந்தினிக்கோ.. இராஜசிங்கர்களின் வம்சம்… இன்னும் விருத்தியாகிக் கொண்டு போவது பிடிக்கவேயில்லை. 

நந்தினியின் பழிவெறிப் பட்டியலில் ‘சத்யாதித்தனுக்குப் பிறகு, அவனது குழந்தை” மற்றும் அவளது உறைவிடத்தின் அமைதியைக் குலைக்க வந்திருக்கும் அந்த ‘பிரபாகர்’ என்று பெயர்.. நீடித்துக் கொண்டே செல்ல.. முதலில் யாரை அணுகுவது என்று தெரியாமல் நின்றிருந்தாள் நந்தினி. 

ஆனால்.. சத்யாதித்தனின் மொத்த உறவுகளும்.. புது உறவின் வருகைக்காக கூடிக் களித்திருப்பதைக் காணும் போதெல்லாம் திகுதிகுவென்று பற்றியெரிந்து கொண்டிருந்தது அவளது உள்ளம். 

சத்யாதித்தன் அன்புடன் மனைவியை அரவணைக்கும் நேரமெல்லாம், தேவதாவும் சத்யனுக்கு காவல் இருப்பதால்.. சத்யனையும், அவன் வாரிசையும் நெருங்க முடியாமல் போனது வேறு அவளை இன்னும் இன்னும் அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. 

மனதுக்குள்ளேயே கறுவியவளாக, “என் ங்வாரிசை அழித்து விட்டு… உன் வாரிசை மட்டும் காக்கும் எண்ணமோ..?? அந்த சிசுவை என் க்காளிமாதாவுக்கே அர்ப்பணமாக்குவேன்”என்று சபதமெடுத்துக் கொண்டே, 

சத்யனோடு தேவதா வெளியில் சென்றிருந்த நேரம்.. யௌவனாவை நெருங்கியது தான் நந்தினி செய்த மாபெரும் குற்றமாகப் போயிற்று.

ஓர் தோப்பில், ஒரு இளமையான மாமரம் உண்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன். 

அந்த மரத்தில்.. மா பிஞ்சு தோன்றும் காலத்தில்..அதிலிருந்து வரும் அவ்விடத்தையே மதிமயக்கச் செய்யும் வாசத்தினால்.. ஊரே மணக்கும். 

மா பிஞ்சு வாசத்தினாலேயே ஈர்க்கப்பெற்ற அணில்களும், பறவைகளும்… அந்த மாமரத்தை நாடி வரும். அந்த மாபிஞ்சைக் கொறித்துத் தின்னவும் நாடும். 

அது போலத் தான் புத்தம் புதிதாக கருவுற்றிருக்கும் பெண்ணும். 

சிசு தாங்கிய பெண்களின்.. இரத்த வாடை தீய ஆத்மாக்களையும் சுண்டி இழுக்கும். 

அதிலும் மூன்று மாதத்தில்.. தாயின் கருவறையில் இரத்தமும், சதையுமாக.. ஒட்டிக் கொண்டிருக்கும் தசைப்பிண்டம் போல இருக்கும் குழந்தையின் இரத்த வாடை… மிகக் கொடிது. 

சத்யனின் குழந்தையைக் கொல்ல வந்தவளின் நாசியோ.. துரதிர்ஷ்டவசமாக.. குழந்தையின் இரத்தவாசனையை நிரடி விட, சத்யாதித்தனின் வாரிசை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் போய், 

அந்தக்குழந்தையை.. இரத்தமும், சதையுமாக பிய்த்துத் தின்ன வேண்டும் என்ற கோர எண்ணத்தை அவளுள் கொடுக்கலானது. 

அநேகமாக எல்லா பிரேதாத்மாக்களுக்கும்.. சாதாரண மானுடர்களிடம் இருக்கும்.. எல்லா கொடிய எண்ணங்களும் அபரிமிதமாகவே இருக்கும். 

கொலைவெறி எண்ணமாக இருக்கட்டும். பழிவெறி எண்ணமாக இருக்கட்டும். ஒரு பொருளின் மீது ஆசை வைக்கும் எண்ணமாகவே இருக்கட்டும். 

எல்லாமும்.. சகலதுவும் அபரிமிதமான தீய எண்ணங்களாகவே இருக்கும் அவைகளுக்கு. 

ஆனால் என்று ஓர் பிரேதாத்மா.. நரமாமிசத்தையும், அதன் இரத்தத்தையும் சுவைக்க வேண்டும் என்ற பேராசை கொண்டதாக மாறுமோ.. அங்கணம் அந்த ஆத்மா கோர பிசாசாக மாறும். 

அது தன் எண்ணங்களும், ஆசையும் தீர்ந்த பின்னும் கூட.. முக்தியடையாத.. மோட்சம் எட்டாத ஓர் நிலைமையை ஆத்மாக்களுக்குள் உருவாக்கிவிடும்.

அதே ஓர் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டாள் நந்தினியும்.

 இராஜசிங்க வம்சத்தின் இரத்தத்தினால் தன் காளிமாதாவின் பொற்பாதங்களை அர்ச்சிப்பேன் என்று சபதம் எடுத்திருப்பவள், 

இந்த காணிக்கையான குழந்தையையும்.. அதன் வாசனையால் ஈர்க்கப்பட்டு அவளே எடுத்துக் கொண்டால்?? 

ஆனால் அந்த குழந்தை வாசனை அவளைக் கட்டுப்படுத்தி இருக்கச் செய்யுமா?? 

இல்லை எல்லை மீறி.. யௌவனாவுக்கு கருக்கலைப்பை உண்டு பண்ணி.. அதன் மூலம் வெளிவரும் சிசுவை பிய்த்துப் பிய்த்துத் தின்னும் ஓர் நாவூறும் பேராசையை கொடுக்குமா? 

விடுதலையடைந்து வந்த நந்தினிக்கு.. குழந்தையின் வாசம்.. இன்னபிற செயல்களையும் மழுங்கடித்து விட, சத்யனையும், பிரபாகரையும் கதை முடிப்பதைக் கூட விட்டு விட்டு, முப்பொழுதும் யௌவனாவின் பின்னாலேயே திரியலானாள் நந்தினி. 

அந்தச் சிசுவின் இரத்தத்தோடு இணைந்த சதைப்பிண்டத்தை வெளியில் எடுத்து, கைகளில் அதன் இரத்தம் வழிய வழிய.. சுவையான பொருளை சுவைப்பது போல.. 

அதைப்பிய்த்துத் தின்ன வேண்டும்;அதன் இரத்தத்தை நக்கிச் சுவைக்க வேண்டும் என்ற வெறி அவளில் அதிகமாகிக் கொண்டே போனது ஒரு புறம். 

அந்தப் பழிவெறி அதிகமான தருணமெல்லாம்.. எல்லை மீறினால்.. பழிவெறி தீர்ந்த பின்.. தேவதாவுடன் இணைந்து மோட்சம் கிடைக்காமல் போகுமோ என்ற பயம் மறுபுறம். 

இருவேறுபட்ட மனநிலையில்.. தன் மனதினைக் கட்டுப்படுத்தவும், கட்டுப்படுத்த முடியாததுமான ஓர் நிலைமையில்… யௌவனாவின் முன்னும், பின்னும் நந்தினி சுற்றிக் கொண்டிருந்த நேரம் தான் அது நடந்தேறியது. 

******

அந்த முற்பகல் வேளையில்.. வெயில் கொஞ்சம் ஏறத் தொடங்கியதும்.. சுளகு நிறைய மிளகாய் எடுத்துப் போட்டுக் கொண்டு யௌவனா முற்றத்துக்கு வந்த நேரம், 

அவர்கள் முற்றத்துக்கு சற்று தள்ளியிருந்த வேலிக்கு அருகாமையில் அவளையே.. உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் ஓர் மலைவாழ் கிழவிக் குறத்தியொருத்தியைக் கண்டாள் யௌவனா. 

அந்தக் கிழவிக் குறத்தியின் கிழிந்த காதுகளில் இறப்பரினாலான தொங்கு வளையம் ஆடிக் கொண்டிருக்க, அவள் நடுநெற்றியில் சிவந்த பொட்டின் கீழே “ ஃ”ன்னா வடிவிலான பொட்டுக்கள் நெற்றியிலும், நாடி முடிவிலும் இருக்கக் கண்டாள் யௌவனா. 

அவரது மூக்கிலே ஓர் மூக்குத்தி வளையம் சென்றிருக்க… கண்களிலே கன்னங்கரேரென்று அடர்த்தியான கண்மை பூசியிருந்தார் அவர். 

அவரது தோள்கள் ரொம்பவும் சுருங்கி, தலைமுடியெல்லாம் நரைத்து, வயது ஐம்பத்தைந்து, அறுபது வயது மதிக்கத்தக்கதாகவே இருந்தாலும் கூட.. களையாகவே இருந்தது அவர் முகம். 

கழுத்திலே பலவித மணி மாலைகள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, உணவேந்தித் தின்பதற்காக இடைக்கச்சையில் ஓர் தகரப்பேணி தொங்கிக் கொண்டிருந்தது. கூடவே ஓர் தோளில் ஓர் பையும் வழிந்து கொண்டிருந்தது. 

செழுமையில்லாத சேலையையே அவர் அணிந்திருந்தாலும் கூட.. நேர்த்தியாகவே இருந்தது அவர் உடையும். 

அந்தத் தெருவால் வயதான குறத்தி நடந்து போனதைக் கண்டு, வெளியிலிருந்த மாதர்கள் எல்லாம் உள்ளே ஓடிச்சென்று.. முகத்தில் அடித்தாற் போன்று… பட்பட்டென்று கதவை மூடலாயினர் தம்பதிவனக் கிராமப் பெண்கள். 

குறத்திகள் என்றால் குறி சொல்பவர்கள் என்ற எண்ணம் போய்.. எதையாவது பாதகமாக செய்து விட்டுப் போகிறவர்கள் என்ற கெட்டெண்ணமும், ஒரு பயமும், பீதியும், பதற்றமும் அவர்களுள் தோன்றியிருந்தது இப்போதெல்லாம். 

ஆகையால் பெரும்பாலும் இலங்கை மக்கள் யாருமே அவர்களை ஏற்கத் தயாரில்லை.

வந்தவர்கள் எல்லாம் முகத்தில் அடித்தது போல செய்ய, உள்ளுக்குள் அந்த அவமரியாதையைக் கண்டு மனம் துவண்டு போயிருந்தாலும் கூட.. உணர்ச்சி துடைத்த முகத்துடனேயே ஒவ்வொரு வீடுகளையும் கடந்து கொண்டேயிருந்தார் அந்த வயசான மலைக்குறத்தி. 

 அந்த வயதான குறத்தி, வாசலில் மிளகாய் காய வைத்துக் கொண்டிருந்த யௌவனா.. தன்னைக் கண்டதும் கதவடைக்காமல் இருக்கும் ஆச்சரியம் கண்டு.. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டேயிருக்க, 

அந்த வயதான பெண்மணிக்குப் பசிக்கிறது போலும். அதை வாய் திறந்து கேட்க முடியாமல்.. அவஸ்தையில் நிற்கிறார் போலும் என்று எண்ணிக் கொண்டாள் யௌவனா. 

அமைதியாக உள்ளே சென்று அன்று வடித்த சுடுசாதத்தையும் குழம்பையும் ஒரு பாத்திரம் நிறைய எடுத்து வந்து அவளிடம் கொடுக்க, அதைக் கண்டதும், அந்த வயதான குறத்தியின் மனம் எல்லாம் கரைந்து போயிற்று. 

ரொம்பவும் வயதான குறத்தி அல்லவா? எத்தனையோ சமூகப் பிரிவினை காரணமாகத் தோன்றிய அவலங்களை அவள் அனுபவித்ததுண்டு!! 

அப்படி தாராளமாக கொடுப்பவர்கள் கூட.. பழைய சாதத்தை.. அந்தத் தகரப்பேனியில் வேண்டாவெறுப்பாகக் கொட்டி விட்டு அகல, யௌவனாவோ.. சுடுசாதமும், குழம்பும்.. வீட்டுப் பாத்திரத்தில் கொணர்ந்து வந்து பவ்யமாக நீட்ட.. இளகிய மனத்தின் காரணமாக… கண்களெல்லாம் கண்ணீரில் நிறையவாரம்பித்தது. 

ஆனாலும் அதை ஏற்க மறுத்த வயதான குறத்தியும், “ம்ஹூஹூம் வேணாம்மா..ஏதாவது பழைய சோறு இருந்தா கொடு போதும்”என்று பின்வாங்க, யௌவனாவோ முகம்மலர புன்னகையுடன், 

“ஐயோ இந்தக் காலத்துல போய்.. என்ன இப்படி கேட்டுக்கிட்டு.. இதை எடுத்துக்குங்கம்மா..”என்று வற்புறுத்தித் திணிக்க முயல, அதை ஏற்க வேண்டுமாயின் ஒரு நிபந்தனை விதிக்கலானாள். 

“நான் உன் அன்னதானத்தை ஏத்துக்கணுமுன்னா.. நீ என்கிட்ட குறி கேக்கோணும்.. அப்ப தான் உன் தானத்த.. என் மனம் மனசார ஏத்துக்கும்” என்று சொன்னார் அவர். 

கர்ப்பிணிப் பெண்ணான யௌவனா , அதற்கு விருப்பப்படவில்லையாயினும் அவள் கொணர்ந்த உணவை வயதான குறத்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, “சரி உள்ளே வாங்க” என்று உள்ளே அழைத்தாள். 

மெல்ல ஆடி அசைத்து வந்த குறத்தியம்மாள், ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள, அவரைத் தொடர்ந்து வெறுந்திண்ணையில் அமரப்போன யௌவனாவை தடுத்து நிறுத்தியவராக, 

“இரும்மா.. புள்ளைத்தாச்சி பொண்ணு.. இப்படித் திண்ணை தரையில் உட்காரக்கூடாதுமா..” என்றவர், தன் பையிலிருந்த ஒரு கம்பளி ஜமுக்காளம் விரித்து, “இந்தா துணியில் உட்கார்ந்துக்க..”என்று சொல்ல, அமைதியாக அமர்ந்தவளின் முகத்தில் ஆயிரம் ஆச்சரிய ரேகைகள். 

‘இவர் எப்படி நான் கர்ப்பிணி என்பதைக் கண்டுபிடித்தார்?’ ஆச்சரியக் கண்களுடன் நோக்க, 

அவரோ தன் அதே பையிலிருந்து ஒரு கோலை எடுத்தவராக, அதை தன் நடுநெற்றி, மூக்கு, இதழ்கள், நெஞ்சு என நான்கும் சங்கமிக்கும் படி செங்குத்தாக வைத்தவராக, 

விழிகளை மூடிக் கொண்டு, தன் குலதெய்வத்தை மனதினுள் மனமார நினைத்துக் கொள்ளலானார். 

மிக மிக, உறுதியான குரலில், “ஆத்தா.. அங்காள பரமேஸ்வரி ஆத்தா.. உள்ளதை சொல்லு.. உம்.. உம்..”தூக்கிவாரிப்போட்டது போல ஒருமுறை எக்களிக்க, அடுத்த நிமிடம் அந்த வயதான குறத்தியின் வாயிலிருந்து உதிர்ந்தவை யாவும் சத்திய முத்துக்கள். 

அவரது காதுகளுக்குள்.. யௌவனாவைப் பற்றி சகலதுமும் சொல்வது போல ஒரு ஓதல் குரல் கேட்க,அதை அப்படியே ஒரு நகல் விடாமல் சொல்லவாரம்பித்தார் அவர். 

இறுதிவரை விழிகளைத் திறக்காமலேயே அந்தக் குறத்திப் பெண்மணியும், எதுகை, மோனை அணியுடன் ஓர் பாட்டு போல, 

“உன் மாமனுக்கு சொந்த ஊரு.. பல்லவன் வாழ்ந்த ஊரு..” என்றவர்… ஒரு காலத்தில் சென்னையும் பல்லவ அரசர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த ஊர் என்பதை பூடகமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் அந்த மலைக்குறத்தி. 

இலேசாக மீண்டும் ஒருமுறை ஆடி அடங்கியவள், “பூர்வீகமோ.. இந்த ஊரு.. வாட்டசாட்டமான ஆளு.. தொட்டதெல்லாம் துலங்கும் இராசியான ராசா அவரு.யார் வம்பு தும்புக்கும் போகமாட்டாரு.. வந்த வம்ப விடவும் மாட்டாரு.. சத்தியம் தவறாத உத்தமரு.. அதனால அவங்க ஆத்தா வைச்ச பேரு சத்யரு.. சரிதானுங்களாம்ணி..”என்று கேட்க, அத்தனையும் பிட்டு பிட்டுவைக்கிறாரே இந்தம்மா என்று அதிசயமாகப் பார்த்தாள் யௌவனா. 

“ம் ஆமா”

சத்யனின் அகக்கண்களைத் திறக்க.. கடவுள் தெய்வாதீனமாக முருகேசனை அனுப்பி வைத்தது போல.. தனக்கு என்ன நடந்தது? நடக்கிறது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த யௌவனாவின் ஞானக்கண்களைத் திறப்பதற்காகத் தான் இந்த வயதான மலைக்குறத்தியை அனுப்பி வைத்தாரோ கடவுள்? 

அப்படித்தான் போலும். 

அவரோ அந்த கோலை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்தவாறு ஆடிக் கொண்டே, “உன்னைப் புடிச்சது.. உன் புருஷனையும், உன்னையும் பிரிச்சது சந்தேகப்பேய்னு.. நீ நெனச்சிருப்பே.. அது தான் இல்ல… உன்னையும், உன் புருஷனையும் பிரிச்சது.. உன் வயித்துல வளர்ற வாரிசையும் அழிக்க நெனக்குறது… ஒரு பொம்பளப்பேயீஈஈ…”என்று அவர்களிடையில் இதுவரை நடந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் ஓர் அமானுஷ்ய சக்தி தான் என்பதைப் போட்டுடைக்க, திகைப்பூண்டை மிதித்தது போலானாள் சத்யனின் மனைவி. 

“என்ன சொல்றீங்கம்மா..?”என்று குழம்பிய விழிகளுடன் புரியாது கேட்டாள் அவள். 

அவரோ.. மீண்டுமொருமுறை ஒரு அகோர ஒலியுடன் உடல் தூக்கிவாரிப்போட, “என் ஆத்தா அங்காளப் பரமேஸ்வரி.. மேல சத்யமா சொல்றேன். உன் புருஷன் உயிரையும் உன் வயித்துல வளர்ற வ்வாரிசையும் காவு வாங்க ஒரு ஆத்மா துடிச்சிட்டிருக்கூஊ.. உன் ம்மனசுல.. அந்த வ்வெளிநாட்டு பொம்பளை பத்தி சந்தேகத்தை தூண்டி விட்டது அது தான்.. நீ அவனை கோவிச்சிக்கிட்டு.. வ்.. வந்தா.. உன்புருஷனும்… இங்கே வருவான்னு அந்தப் பேய்க்கு தெரிஞ்சிருக்கூ.. அதான் உங்களுக்கிடையில்.. பிரிவினையை மூட்டிவிட்டு.. இங்கே உன் புருஷனை வர வைச்சிருக்கூஊஊ.. கனவுல வந்து உன் அழகைக் காட்டி மயக்கினதும் அது தான்.. உன் புருஷனுக்கு நடந்த அத்தன ஆபத்தக்கு காரணமும் அது தான்..” என்று ஓர் அகோர ஆத்மாவைப் பற்றிச் சொல்ல, இதயத்தில் கிடுக்கிப்பிடி போட்டாற் போன்று வலித்தது அவளுக்கு. 

யௌவனா அப்படியே சத்யனுக்கு எதிர்மாறு. இந்த சாமி, பூதம் அனைத்திலும் இருபத்தோராம் நூற்றாண்டு மங்கையாக இருந்த போதிலும்.. நம்பிக்கை அதிகம் அவளுக்கு. 

அவளுள் நடந்து கொண்டிருந்த மனக்குழப்பங்கள் வேறு.. மலைக்குறத்தி சொன்னது தான் உண்மையாக இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக நம்ப வைத்தது அவளை. 

அப்படியானால் கணவன் எந்த குற்றமும் செய்யாதவனா? வயதான குறத்தி உரைத்த “அந்த வெளிநாட்டு பொம்பளை பத்தி சந்தேகத்தை தூண்டி விட்டது அது தான்.”என்ற அந்த வெளிநாட்டுப் பெண்.. சுஷ்மிதா ஷெட்டியா? 

அது கூட ஓர் ஆத்மாவின் வினையா? துர்ச்செயலா? 

அது அறியாமல் கணவனை எந்தளவுக்குப் பாடுபடுத்தியிருக்கிறாள் அவள்? கண்களில் நீர் மல்க.. இருகரம் கூப்பி நின்றவளாக, மலைக்குறத்தி சொல்வது அத்தனையையும் கேட்க ஆயத்தமானாள் அவள். 

குறி சொல்லும் குறத்தியோ.. அவளுக்கும், அவள் தலைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயங்களை அடுக்கிக் கொண்டே போக.. அவளது ஊகங்கள் அனைத்தும் ஊர்ஜிதமாகிக் கொண்டே போனது. 

ஆங்காரமான தொனியில், “நீயும், உன் புருஷனும் மட்டும் ஒரு தடவை பீலிக்குப் போனப்போ..விரியன் பாம்பு தீண்டினதுக்கு காரணம் அது தான்.. கோயில்படியில் கால் தடுக்கி.. விரல் அடிப்பட்டதுக்கு காரணமும் அது தான்.. இன்னும் ஏன்… உன்னை தப்பான நோக்கத்துல அண்ட வந்தவனைக் கொன்னு உன்ன காப்பாத்தினதும் அது தான்..!! உனக்குள்ள புகுந்து உன் புருஷன பாடாய்ப்படுத்தினதும் அதுவே தாஆன்” என்று சொன்ன கணம் அகலத்திறந்தது அவள் விழிகள். 

அ.. அப்படியானால்… வீடியோவில் அவன் காட்டியது போல.. பைத்தியம் பிடித்தவள் போல நடந்து கொண்டதுவும் அந்த துர் ஆத்மாவின் காரணமாகவா?? 

பகீரதனைக் கொன்றது அந்த ஆத்மா தான் என்று குறத்தி சொன்னதும்.. மூளைக்குள் மின்னல் வெட்டினாற் போன்று வந்து போனது அந்த அழகு முகம்!! 

அவள் கண்ட பேரழகு முகம்!! 

அந்.. அந்த அழகான.. சுரூபினிப் பெண் தான்.. அமானுஷ்ய ஆத்மாவா??? அதை அவள் கண்கூடாக கண்டிருக்கிறாள் என்ற நினைப்பிலேயே அவள் வெளவெளத்துப் போயிருந்தாள். 

தழுதழுத்த குரலில் வாய் திறந்தவள், “அ.. அம்.. அம்மா.. இதையெல்லாம் ஏன் அது செ.. செய்யணும்? நானும் சரி.. என் புருஷனும் சரி.. யாருக்கும் எந்த பாவமும் பண்ணதில்லை.. யே?”என்று கேட்க, 

இரு பெண்கள் பேசுவது போல இரட்டைக்குரலில், “உன் புருஷனோட முன்னோர்.. ஒரு பதிவிரதைக்கு செய்த ப்பாஆஆவம்… அவன் வம்சத்தையே கருவறுக்க காத்திட்டிருக்கூஊஊ”என்று சொல்ல, மூளைக்குள் மின்னல் மின்னி அடங்கியது அவளுக்கு. 

அவன் முன்னோர்.. ஓர் பதிவிரதைக்குச் செய்த பிழையா?

குறத்தி அப்படிச் சொன்னதும், இருநூறு வருடங்கள் கழித்தும் அந்தத் தம்பதிவனக்கிராமத்தில் சொல்லப்படும் ‘அவள்’ பெயர் ஞாபகம் வர, 

தன்னையும் மீறி, “நந்தி.. னீஈஈ?? ” என்றாள் ஈனஸ்வரத்தில். 

அவள் பெயரைக் கேட்டதும் வெடுக்கென்று விழிகள் திறந்த அந்த வயதானவர், வெறித்த பார்வையுடன், “அது பேரக் கூட சொல்லாதேமா.. உன் புள்ள உயிர காவு வாங்க இங்கேயே தான் சுத்திட்டிருக்கு அதூஊஊ..”என்று சொன்னதும், தாயல்லவா??? குழந்தையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்தோட அனிச்சையாக வயிற்றை அணைத்துக் கொண்டது அவள் கைகள். 

அந்த கணம்.. ஓர் ஆத்மாவிடமிருந்து தன் மகனைக் காப்பாற்ற, வசுந்தராதேவியம்மாள் பட்டபாட்டின் மனநிலை அப்பட்டமாக தெரிந்தது அவளுக்கு. 

அந்தத் தாயுள்ளமும் இப்படித்தானே பதறியிருக்கும் என்று புரிந்தது அவளுக்கு. 

குறியை மட்டும் சொல்லி விட்டு அங்கிருந்த அந்தக் கிளம்பாமல், அவள் இட்ட அன்னத்திற்கு நன்றிக்கடனாக, ‘நந்தினிப் பேயை அடக்கும் வழிமுறை சொல்கிறேன் பேர்வழி’ என்று, தன் பையிலிருந்து ஒரு விளக்கை எடுத்துக் கொடுத்த குறத்தி, யௌவனாவின் காதுகளில் அவள் மட்டும் அறியும் வண்ணம் எதையோ கிசுகிசுத்து விட்டு அகன்றார் அவர். 

தன் இரகசியத்தை எல்லாம்.. யார் அறிந்திராமல் இருப்பது நலம் என்று நினைத்திருந்தாளோ நந்தினி.. அவளிடமே அனைத்தையும் பிட்டு பிட்டு வைத்து விட்டு… நந்தினியிலிருந்து கழன்று கொள்ளும் உபாயமும்.. அந்தக் கிழவிக் குறத்திச் சொன்னதில் பொல்லாத கோபம் போனது நந்தினிக்கு. 

தனது விலா என்புகள் ஏறி இறங்க, கண்களில் இருந்து அக்னிச்சுவாலை பறக்க… நின்றிருந்தவள்…தன் வல்லமையை உபயோகித்து என்ன செய்தாளோ? 

அந்த இரகசியத்தைச் சொன்ன கிழவிக்குறத்தி.. ஊர் எல்லை அடைந்ததும்.. அதைத் தாண்டி ஓரெட்டு நடக்க முடியாத வண்ணம், மூச்சுக்குழல் அடைத்தது போல நெஞ்சைப் பிடித்துக் கொண்டவள்.. இரத்தம் கக்கி வாந்தி எடுத்துக் கொண்டே தரையில் வீழ்ந்தாள். 

கிழவியின் கண்கள் மேலே சொருகியிருக்க, உயிரோ உடலை விட்டும் பிரிந்திருந்தது. 

இரகசியம் சொன்ன கிழவிக்குறத்திக்கே இந்த கதியென்றால்.. அந்த இரகசிய வழிமுறையை நடைமுறைப்படுத்தப் போகும் யௌவனாவின் கதி??

இதுவரை யௌவனா மீது அத்தனை கொலைவெறி கொண்டிராதவளின் தீயெண்ணம் முழுக்கவும் யௌவனாவின் உயிரை எடுப்பதில் குவியலானது . 

ஏகாந்த இரவில் வா தேவதா 

[25]

திருமணமான இரண்டாவது கிழமை… யௌவனாவின் மனத்தில் சந்தேகத்தீயும் கொழுந்து விட்டெரியத் தொடங்கியதும், பல வாய்த்தர்க்கங்களுக்கு வித்திட்டு.. இறுதியில் கணவனைப் பிரிந்து.. அவனைத் தூக்கியெறிந்து விட்டு இலங்கை வரச் செய்ததும் அந்தக் கொடூர சம்பவம் தான். 

அது.. இனி தன் வாணாளில் வரவேகூடாத ஓர் நாள் என்று..அவள் கடவுளிடம் திரும்பத் திரும்ப மன்றாடும் நாள் அது!! 

எந்த மனைவியரும்.. இப்படியான கோலத்தில் கணவனை கண்டு விடவே கூடாது என்று.. அத்தனைத் துயரிலும்.. அவள் கண்ணீர் கன்னத்தோடு வழிய.. கேட்டுக் கொண்ட நாள் அது!!! 

அன்றைய நாள்… அவளது தலையெழுத்தையே தலைகீழாக மாற்றிப்போட்ட நாள்!! 

கணவனே கண் கண்ட தெய்வமாக நினைத்திருந்தவளுக்கு.. கணவன் என்னும் நாமம் கேட்டாலே, அருவெறுப்பு மீதூறச் செய்த நாள் அது. 

அந்த நாளில் அப்படி என்ன தான் நிகழ்ந்தேறியது? இதோ நிகழ்ந்தேறியவை எல்லாம் இவை தாம். 

அது பாலிவுட்டில் பெரிதாகக் கலக்கிக் கொண்டிருந்த.. வயது நாற்பத்தைந்து தாண்டியிருக்கும் ஓர் பிலபல இளம் (?) நடிகரின்.. இரண்டாவது திருமணம். 

டில்லியில் இருக்கும்.. ஹில்டன் ஹோட்டல் முழுவதும் வாடகைக்கு எடுக்கப்பட்டு… அந்தத் தலம் முழுவதும்.. சினிமாத் துறை பிரபலங்கள், வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள் என்று கோலாகலமாக மக்கள் குழுமியிருந்த இடத்தில் தான்… தலைவனும், தலைவியும் இருந்தனர் அன்று. 

அங்கே மணமகனுக்கும் மேலாக.. அனைவரது கண்ணையும், கருத்தையும் கவரும் முகமாக இருந்தது.. இந்தியாவின் மிக முக்கிய வர்த்தகனான சத்யாதித்தனின் அழகு மனைவி!! 

உயர்தட்டு வர்க்க திருமண வைபவத்துக்கு ஏற்றாற் போன்று… அதே சமயம்.. யார் கண்ணையும் உறுத்தாத அளவுக்கு…. நாகரீகமாக உடை அணிந்திருந்தாள் யௌவனா. 

அந்த இரவு நேர திருமண வைபவத்திற்கு.. அந்த வெண்ணிலவு தான் தரையிறங்கி வந்ததோ என்று ஐயுறத்தக்களவுக்கு.. தன் வெண்ணிற சருமத்தை பளிச்சென்று வெட்டிக்காட்டும்.. கறுப்பு நிற சேலையில்.. வெள்ளை நிற கல்வேலைப்பாடு அமைந்த.. அவள் அணிந்திருந்த சேலையும் சரி, 

அழகாக தன் மயிர்களை எல்லாம் அள்ளிச்சுருட்டி.. அதன் மேல் ஓர் மல்லிகைச்சரத்தை அவள் வட்டவடிவமாக சூடியிருந்ததும் சரி.. 

கூந்தல் வகிட்டில்.. தான் சுமங்கலி என்பதை பறைசாற்றும் முகமாக அவள் இட்டிருந்த திரட்சியான குங்குமம் சரி, 

செங்காந்தள் மலரினை நிகர்த்த நிறத்தில்.. அவள் பூசியிருந்த கண்மை அஞ்சனங்களும் சரி… சும்மாவே அழகியை.. ஓர் பேரழகியாகக் காட்டிக் கொண்டிருந்தது. 

அவள் முகத்தை நிஜத்தில் பார்க்காமல்.. கனவில் பார்த்த நாளிலிருந்தே.. முகம் குப்புற விழுந்திருந்தவனோ..

அங்கே இருந்த குட்டிபாரில் அமர்ந்திருந்த வண்ணம் இன்று அத்தனை அலங்காரங்களுக்கு மத்தியில் மிளிரும் தன் மனைவியிலிருந்தும் கண்ணெடுக்காமல் பார்த்து இரசித்தபடியே… விஸ்கி அடித்துக் கொண்டிருந்தான் சத்யன். 

திருமணமாகி இரண்டு கிழமைகளேயான அந்தத் புதுமணத் தம்பதிகளுக்கு, அனைவரும் வந்து வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்த கணம் தான் பிரச்சினையும் தொடங்கியது.

இருவரின் அந்நியோன்னியமும் யாருக்கு குத்தியதோ குடைந்ததோ… அந்த திருமண வைபவத்துக்கு அழைக்கப்பட்டிருந்த “சுஷ்மிதா ஷெட்டி”க்கு மட்டும் ரொம்பவும் குத்திக்கொண்டேயிருந்தது. 

சுஷ்மிதா ஷெட்டியும் நிஜமாகவே.. சத்யாதித்தனின் மனைவி என்னும் அந்தஸ்த்தை அடைய ஆசை அல்ல பேராசை கொண்டிருந்தவள் தான். 

இருப்பினும் என்று சத்யன் மனைவியாக ஓர் பெண்ணை அழைத்து வந்தானோ? யௌவனா மேலிருக்கும் அளவிலடங்கா அன்பினை.. சுஷ்மிதாவை தோழியாகக் கருதி… அத்தனையும் செப்பினானோ… 

அன்றிலிருந்து சுஷ்மிதாவின் மனம் மாறத் தொடங்கியது. 

இத்தனை காதல் செய்யும் கணவன் தனக்கில்லையே என்ற சிறுகவலை மட்டுமே மீதூறினாலும் கூட… அவன் ஆசைப்பட்ட வாழ்க்கையை சத்யன் எந்த இடையூறு இல்லாமல் வாழட்டும் என்று நாகரிகமாக விலகிப் போகவே செய்தாள் சுஷ்மிதா. 

அப்படிப்பட்டவளின் மனதையும் மாற்றி.. அவள் அடிமனதில் சத்யனுக்காக இருந்த மோகத்தீயைக் கிளறி விட்டு, பொறாமையையும், வஞ்சக எண்ணத்தையும் கிளறி விட்டது.. சாக்ஷாத் நந்தினியே தான். 

சத்யன் திரும்பவும் தம்பதிவனம் வந்தால் அல்லவோ.. அவளது வஞ்சக எண்ணம் நிறைவேறும்?? அதற்காக அவள் கையிலெடுத்த பொல்லாத அஸ்த்திரம் “சந்தேகத்தீ”. 

அதுவும்… சத்யனின் மேல் ஆசை வைத்திருக்கும் சுஷ்மிதா மூலம்.. அதனை நிறைவேற்றிக் கொள்ளத் துடித்தாள் நந்தினி. 

நந்தினி நின்றிருந்தது என்னமோ தம்பதி வனத்தின் நிலவறையில் தான். இருப்பினும் அவளுடைய தவ வலிமையின் பயனால்.. டில்லியில் இருப்பதையும் பார்க்க முடியுமான ஆற்றல் அவளிடம் இருந்தது. 

அந்தப் பாழும் நிலவறையில் இருந்தவளின் கண்கள்… திருமண வைபவத்தில்.. சத்யனையும், யௌவனாவையும் காழ்ப்புணர்ச்சி மீதூற பார்த்துக் கொண்டே மதுவருந்திக் கொண்டிருந்த சுஷ்மிதாவையே பார்த்தது. 

நந்தினியின் கண்களின் கருவிழிப்படலம்…. ஒரு செந்நிறப் புகை போல மாறிய கணம்.. அங்கே பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த சுஷ்மிதாவின் கண்களிலும்.. ஒரு தரம் அந்த செந்நிறப் புகை வந்து ஆக்கிரமித்துச் சென்றது. 

அடுத்த கணம் சுஷ்மிதாவின் உடலில் ஓர் துணுக்கம் வந்து போக, அந்த செந்நிறப்புகை.. அவள் ஆழ் மனத்தில் இருக்கும் அத்தனை கெட்ட எண்ணங்களும்… அவளது நெஞ்சினை நிறைக்கச் செய்தது. 

சுஷ்மிதா அன்று.. அவளாக இல்லை. அவள் ஓர் அகோர ஆத்மாவின் தீவிரமான விசைக்கு ஆட்பட்டிருக்க… இதுவரை ஒதுங்கியே இருந்தவள்.. சத்யன் யௌவனாவை விட்டும் அகன்ற அந்த நொடிப் பொழுதில் யௌவனாவை நாடிப் போனாள் சுஷ்மிதா. 

அவள் கையில் இன்னும் அந்த விஸ்கிக் குவளை அடைக்கலமாகியிருந்தாலும் கூட நடையில் தள்ளாட்டம் என்பது ஒரு சிறிதும் இருக்கவேயில்லை. 

அவள் அணிந்திருந்த கவுனின் பின்பகுதிப் பிளவில்.. அவள் தொடைகளின் சந்திப்பு இக்கடா அக்கடா என்று விளங்குமளவுக்கு இருந்தது. 

தன்னை நோக்கி நடந்து வரும் மங்கையைக் கண்டு..முதலில் யௌவனாவோ சிநேகமாகப் புன்னகைத்து வைத்தவளுக்கு, வந்தவளை உற்றுக் கவனித்ததும்.. அது தன் கணவனோடு டூபீஸ் ஆடையுடன் நீச்சல் தடாகத்திலிருந்த பெண் என்று புரிந்து போனது. 

அவளைக் கண்டதும்.. கிசுகிசு வலைத்தளத்தில் வந்த அந்த புகைப்படம் ஞாபகம் வர, யௌவனாவின் முகமோ அருவெறுப்பில் முகம் இறுகிக் கறுத்துப் போனது. 

இலங்கைப்பெண்…. அந்த சுஷ்மிதாவை உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, சுஷ்மிதாவோ.. பிரெஞ்சு முத்தம் வைப்பது போல.. சத்யாதித்தனின் கன்னத்தோடு கன்னம் உரசி… 

யௌவனாவின் காதுக்குள்.. அவள் மட்டும் அறியும் வண்ணம் கிசுகிசுப்பாக, “ என் இடத்தை நீ பறிச்சிக்கிட்டா… எனக்கிருக்க உரிமை இல்லைன்னு ஆகிருமா? சத்யன் எப்போவுமே எனக்குத் தான்.. இன்னைக்கு நான் யாருன்னு நீ பார்க்கத் தானே போற?” என்றவள் இதழ்கள் தான் புன்னகைத்துக் கொண்டு இருந்ததே ஒழிய, விழிகளோ விஷமம் சிந்திக் கொண்டிருந்தது. 

யௌவனாவின் விழிகளோ மெல்ல இடுங்கியது. சுஷ்மிதாவை அவள் வெறித்துப் பார்க்க, புன்னகை மாறா முகத்துடன்.. தன் பின்னழகு அசைந்தாட ஆட… அங்கிருந்து நகர்ந்தாள் இந்திய அழகி. 

யௌவனாவோ… தன் கணவனின் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தாளாகையால், நமுட்டுச் சிரிப்புடன், “பைத்தியக்காரி… உளறிட்டுப் போகுது”என்ற வண்ணம்.. கணவனுக்காக காத்திருந்த போது… 

அவளது வோலட்டில் அடைக்கலமாகியிருந்த ஐஃபோன் சிணுங்கியது. எடுத்துப் பார்த்தவளுக்கு இன்ப அதிர்ச்சியாக.. வாசுகி அண்ணி காணொளி அழைப்பெடுத்திருப்பது புரிய, யார் கண்ணுக்கும் உறுத்தாதவாறு ஓர் ஒதுக்குப்புறமாக சென்றவள்.. அண்ணியுடனும், அண்ணனுடனும் எத்தனை நேரம் பேசினாளோ?? 

இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக சென்று கொண்டேயிருந்தது. 

மனநிறைவுடன் தன் உறவுகளுக்கு பேசி முடித்து விட்டு மீண்டும்.. அவள் அந்த பார்ட்டி ஹாலுக்கு வந்து.. கணவனை ஓர் அலைக்கழிப்புடன் விழிகளாலேயே தேடிய போது… சத்யன் அங்கே இல்லை. 

நேரம் இரவு பதினொன்று நாற்பதைத் தாண்டிப் போவதைக் கண்டவளுக்கு, கணவன் தங்களுக்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குச் சென்றிருப்பானோ என்று எண்ணிக் கொண்டே லிப்ட்டில் ஏறி.. தன் தளத்தில் இருக்கும் அறையை அடைந்தாள் அவள். 

அறைக்கதவை அடைந்த அந்த நொடி வரை.. சத்தியமாக யௌவனா சந்தேகப்பேயின் வசம் ஆட்படவேயில்லை. 

அண்ணன், அண்ணியுடன் மனம் விட்டுப் பேசி விட்டு சந்தோஷமான மனநிலையில் இருந்தவளுக்கு.. சுஷ்மிதா சொன்னது யாவும் ஒரு பொருட்டாக மூளையில் பதிந்திருக்கவேயில்லை. 

அறையைத் தன்னிடமிருக்கும் சாவி கொண்டு திறந்தவளாக, தன்னறை மஞ்சத்தை அடைந்த யௌவனாவின் கண்கள், தரையில் ஒரு பக்கத்தில் விழுந்து கிடந்த கணவனின் ஆடைகளையும், 

மறுபக்கத்தில் ஓர் பெண்ணின் ஹீல்ஸ், உள்ளாடைகள், கவுன் என்று மேலைத்தேய ஆடைகளையும் பார்த்த அடுத்த கணம்.. 

விக்கித்துத் தான் போயிருந்தாள். 

 மஞ்சத்தில் பார்வையை நிலைக்க விட்ட போது வெற்றுமேனியுடன் இருந்த கணவன்… ஓர் மங்கையை அவள் ப வயிற்றினூடாக அணைத்துப் பிடித்தபடி கண்ணயர்ந்து கொண்டிருப்பதைக் கண்டாள் யௌவனா. 

அந்த மங்கை.. அது யாராக இருக்கக் கூடும் என்று கூர்ந்து கவனித்த போது… அது சுஷ்மிதாவாக இருப்பதைக் கண்டவள்..அதிர்ச்சியில் ஈரெட்டுப் பின்னடைந்தவளாக, அகலத் திறந்த வாயை விரல்கொண்டு மறைத்து நின்றாள் யௌவனா. 

சுஷ்மிதா தான் நினைத்ததை சாதித்து விட்டதாகவே எண்ணினாள் சத்யனின் மனைவி. 

கணவனை இன்னோர் பெண்ணுடன் ஒன்றாக மஞ்சத்தில் பார்த்த மனைவிக்கு உணர்ச்சிகள் எப்படித்தான் இருக்கும்?

கண்களிலிருந்தும் நீர் அது பாட்டுக்கு வழிய, அவள் கையிலிருந்த வோலட்டோ.. அவளையும் அறியாமல் நழுவி.. அவள் முன்னாடி இருந்த கண்ணாடி டீபோயில் அழுத்தத்துடன் விழுந்ததில், கண்ணாடி உடையத் தயாராகி… விரிசல் விழுந்த ஒலி கேட்க, 

தூக்கத்திலிருந்து பட்டென்று விழித்தான் சத்யன். 

தன் நேரெதிரே மனைவியைக் கண்டதும்… தன் பக்கத்தில்.. தனக்கு புறமுதுகிட்டு படுத்திருப்பவளையும், தன் முன்னே நிற்கும் மனைவியையும் கண்டவனுக்கு.. எது நிஜமான யௌவனா என்று குழப்பம் மேலிட்டது. 

குடிபோதை அதிகமாகி.. அறைக்கு வந்தவன்.. குடித்ததன் விளைவாக.. அதிக புழுக்கமாக உணரத் தொடங்கியதால், நம் அறைக்கு மனைவியைத் தவிர வேறு யார் வரக்கூடும் என்ற அசட்டு நம்பிக்கையுடன்.. ஆடைகளைக் களைந்து விட்டு.. வெற்றுமேனியுடன் கட்டிலில் வீழ்ந்து உறங்கியும் போனான். 

இந்த சந்தர்ப்பத்தில்.. நந்தினியின் மாய வலையில் வீழ்ந்திருந்த சுஷ்மிதாவும்.. பூட்டப்பட்ட கதவை திறக்க மாயசக்தியால் நந்தினியோ உதவி செய்ய… அமைதியாக உள்ளே நுழைந்து.. ஆடைகளைத் தரையில் களைந்த வண்ணம்.. சத்யனுக்கு எதிரே படுத்துக் கொண்டாள். 

சத்யனோ.. அரைக்கண் திறந்து பார்த்த போது.. தனக்கு புறமுதுகிட்டிருப்பவள்… தன் மனைவியாகத் தோன்ற.. அணைத்துப் பிடித்து புரண்டு உறங்கியும் போனான். 

சொற்ப நேரம் தூக்கம் கலைந்து… நந்தினியின் வசியப் புகை.. மெல்ல மெல்ல அவளிடமிருந்து அகன்றதன் பின்னர் பிறந்த மேனியுடன் கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்த சுஷ்மிதாவுக்கும் சரி, 

குடி போதை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிந்தபடி நின்றிருந்த சத்யனுக்கும் சரி என்ன நடந்தது என்று ஞாபகம் இருக்கவேயில்லை. 

இருவரும்.. நிலைமையை உணர்ந்து.. கைசேதப்பட்டவர்களாக அட் அ டைமில் சொன்ன முதல் வார்த்தை, “என்ன நடந்துச்சுன்னே தெரியலை??” என்பது தான். 

சுஷ்மிதா முதலில் சொன்ன வார்த்தைகள்.. யௌவனாவைப் போட்டு ஆக்கிரமிக்க, இந்திய அழகியை புயல்வேகத்தில் அடைந்தவள், ஓங்கி அறைந்தாள் சுஷ்மிதாவின் கன்னத்துக்கு. 

அவள் கன்னம் விண் விண்ணென்று தெறிக்கவாரம்பிக்க, இவளோ, தன் தனங்கள் ஏறி இறங்க, மூசுமூசு என்று மூச்சு விட்டுக் கொண்டே, “சொன்ன மாதிரியே உன் ஈனப்புத்திய க்காட்டிட்டேல்ல?”என்று அருவெறுப்பு உமிழப் பார்வை பார்த்தவள், தற்போது அதே ஆத்திரத்துடன், கணவனை நோக்கித் திரும்பினாள். 

சத்யாதித்தனோ.. தன்னருகில் இதுவரை படுத்திருந்தது சுஷ்மிதாவா? என்பதைக் கூட ஜீரணிக்க முடியாமல் நிற்க, யௌவனாவோ அவனைப் பார்த்து.. எதுவும் பேசவில்லையாயினும் கூட.. பார்வையாலேயே காறி உமிழ்ந்து விட்டுச் செல்லத் தொடங்கினாள் யௌவனா.

அந்தோ பரிதாபம். சத்யாதித்தனின் நிலைமை!!உடைகளை சாரமாரியாக அணிந்து கொண்டு, மனைவி பின்னாலேயே சென்றவன், அவள் காலில் விழாத குறையாக கெஞ்சினான்; ‘அது எப்படி நடந்தது என்றே தெரியாது’ என்றான்; ‘நீயென்று எண்ணி கட்டியணைத்தேனே ஒழிய.. குடிபோதையில் எல்லை மீறும் அளவுக்கு இழிவானவன் இல்லை’ என்றான். 

எத்தனையோ முறை அவள் நம்பிக்கையை மீண்டும் பெற மன்றாடிக் கொண்டேயிருந்தான். 

இருப்பினும், பிரச்சினைகள் தேயவில்லையே ஒழிய வளர்ந்து கொண்டே போனது. 

அவன் எத்தனை மன்றாடிய போதும், “ஹோட்டலின் சிசிடிவி கேமரா முதற்கொண்டு காட்டுகிறேன்” என்று எவ்வளவோ பேசிப் பார்த்த போதும்… யௌவனா கணவனின் பேச்சுக்கு காது தாழ்த்தவேயில்லை. 

அவன் அன்று வலைத்தளத்தில் வந்த சுஷ்மிதாவுடன் இணைந்து தடாகத்தில் நின்றிருக்கும் கிசுகிசு போட்டோவுக்கு வேறு விளக்கமளித்தான். 

‘நீர்த்தடாகத்தில் விழுந்து திணறியவளைக் காப்பாற்றப் போன போது.. எக்குத்தப்பான கோணத்தில் ஓர் பெப்பராட்சி பிடித்த போட்டோ’ என்றான்.

 ‘சுஷ்மிதா ஷெட்டி உலக அழகிப்பட்டத்ததைத் தவற விடக்காரணமே நீச்சல் தெரியாது என்பதினால் தான்’ என்ற உண்மையையும் கூட போட்டுடைத்தான் அவன். 

கூடவே நந்தினி வேறு.. ஆரம்பத்தில் சத்யனின் கனவில் புகுந்து.. யௌவனா பற்றிய காதலைத் தோற்றுவித்தது போல, இம்முறை யௌவனாவின் கனவில் புகுந்து.. சத்யன் நிதமும், சுஷ்மிதாவை நாடிச் செல்வது போல கனவா? நிதர்சனமா என்பதை பிரித்தறிய முடியாத ஓர் காட்சிப்பிழையை உருவாக்கலானாள். 

அந்தக் காட்சிப்பிழை.. யௌவனாவை சத்யனிடமிருந்து இன்னும் இன்னும் தூரமாக்கச் செய்தது. 

ஓர் நாள்… பிரச்சினை நடுக்கூடத்தில்.. வசுந்தராதேவியம்மாள் முன்னிலையில்… எல்லை தாண்டி போக.. யௌவனாவின் எல்லை மீறிய பேச்சைக் கேட்டு ஆத்திரம் தாளாமல்..அவளைக் கைநீட்டி அறைந்திருந்தான் சத்யன். 

குற்றம் செய்த கணவன்.. சுத்தவாளியான அவளைத் தண்டிப்பதா? என்ற மனத்தாங்கலுடன்.. இலங்கை வந்தவள் தான்.. அதன் பின் இந்தியா போகும் எண்ணத்தினையே மறக்கச் செய்யுமளவுக்கு எத்தனை குழப்பங்கள்?? எத்தனை மனக்கசப்புக்கள்?? 

எல்லாம் நந்தினியால் என்பதை குறிசொல்லும் குறத்தியால் என்பதை அவள் அறிந்த போது.. காலம் கடந்து விட்டிருந்ததுவோ? 

****

மாலை சரியாக ஆறு மணி என்பதைக் காட்ட, கூடத்தில் இருந்த மணிக்கடிகாரம் “டான் டான்” என்று சரியாக ஆறுமுறை பேரொலியுடன் அடித்து ஓய்ந்திருந்தது.

 அந்த இருள் கௌவும் வேளையில்.. வீட்டின் கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்து விட்டு வாசற்கதவை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு … எந்த மின்விளக்கையும் ஒளிர விடாமல் நடுக்கூடத்தில் ஒற்றையாளாக அமர்ந்திருந்தாள் யௌவனா. 

சம்மணமிட்டு அமர்ந்திருந்தவளைச் சூழ.. விபூதியாலான ஓர் முழு வட்டம் வரையப்பட்டிருக்க, அவள் முன்னாடி அதே விபூதியில் நட்சத்திர வடிவில் ஓர் உரு வரையப்பட்டிருந்தது.

அந்த நட்சத்திர வடிவத்தை முற்று முழுதாக சுற்றி வளைக்கும் வண்ணம், “ஓம்”என்ற எழுத்துரு வடிவம் சேர்த்து வரையப்பட்டிருக்க.. நட்சத்திரத்தின் மையப்பகுதியில் ஏற்றப்பட்டிருந்தது குறத்தி தந்த விளக்கு. 

அந்த விளக்கின் தீச்சுவாலை ஒளி மட்டுமே.. அவ்விடத்தை முழுமையாக நிறைக்கவாரம்பித்தது. 

 புத்துணர்ச்சி ததும்பத் ததும்ப இருந்தவளின் கூந்தல் நுனியிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீர்.. அவள் சற்று நேரத்திற்கு முன் தான் தலைக்கு குளித்திருக்கிறாள் என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது

தலை நிறைய மல்லிகைப் பூவை சரம் சரமாகத் தொங்க விட்டிருந்தவள், குறத்தி சொன்னது போலவே சிவப்பு நிற சேலை உடுத்தி… கூந்தல் வகிட்டில் குங்குமம் வைத்து தெய்வீகமான முகபாவத்துடன் அமர்ந்திருந்தாள் அவள். 

குறத்தி சொன்னது போலவே இம்மியளவும் தவறாமல் செய்ய நாடிய யௌவனாவோ, வேப்ப மர இலைகளை வீட்டில் ஆங்காங்கே சொருகியே வைத்திருந்தாள். 

அண்ணன், அண்ணி வேறு வீட்டில் இல்லாததால் கிடைத்த தனிமை.. எதற்கும் அஞ்சாமல் மனப்பூர்வமாக அதற்கு ஒத்துழைக்கும் மனோ தைரியத்தைக் கொடுத்தது அவளுக்கு. 

அவளுக்குள்.. அந்த வயதான குறத்தி சொன்னது காதோரம் வந்து போகலானது. 

“அம்மணி.. வெண்கடுகு இருக்கில்லையா?? அதைக் கண்டாலே இந்த பேய், பிசாசுகளுக்கு ஆகாது.. அதைப் புகை போடு.. அப்புறம் நான் சொன்ன மாதிரி பண்ணு தாயி.. மந்திரத்தை எழுவத்தொம்பது தடவை நீ உச்சரிக்கற வரைக்கும்.. என்ன நடந்தாலும் நீ… அந்த வட்டத்தை விட்டு வெளியே போகக் கூடாது.. நல்லா ஞாபகம் வைச்சுக்க.. என்ன நடந்தாலும் பூஜையை முடிக்கற வரை எழுந்திருக்காதே” என்று தன் அகன்ற கண்களை ஆட்டி ஆட்டி எச்சரித்து விட்டே தான் அகன்றார் அவர்!! 

அவர் சொன்ன அனைத்தும் ஞாபகத்துக்கு வர, அருகிலேயே தான் எடுத்து வைத்திருந்த வெண்கடுகு பாத்திரத்தில்.. ஓர் உள்ளங்கையளவுக்கு வெண்கடுகை எடுத்துக் கொண்டாள் யௌவனா. 

கூடவே இலாமச்சம்வேர், சந்தனம், அறுகம்புல் என்னும் நான்கையும் கொண்டு சாம்பிராணி தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் இன்னும் கொஞ்சம் வெண்கடுகு போட, படபடவென்று பொறிந்து கொண்டே ஓர் புகையைக் கிளப்பலானது. 

அந்த மணம் மானுடப் பிறவியான யௌவனாவை ஏதும் செய்யவில்லையாயினும் கூட, அவள் அந்த வட்டத்தை விட்டும் வெளிவராமல்.. தன்னால் எதையும் செய்ய முடியாத நிலையில்.. தவிக்கத் தவிக்க நின்றிருந்தாள் மாய நந்தினி. 

வெண்கடுகுப் புகை… நந்தினியின் நாசித்துவாரம் வழியாக.. மூச்சுக்குழலை அடைந்து.. அவளை படாதபாடு படுத்தியெடுக்க, தன் கைகளாலேயே தன் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு… இருமிக் கொண்டேயிருந்தவளின் கண்களிலிருந்தும்.. கண்ணீர் தாரை தாரையாக வழியவாரம்பித்தது. 

அந்த வெண்கடுகுப்புகை.. அந்த தீய சக்தியை ஓரிடத்தில் இருக்க விடாமல் அலைக்கழிக்கச் செய்ய, அந்தப் புகை ஓயும் வரை தொண்டைப் புகைச்சலில் சிரமப்பட்டுப் போனாள் நந்தினி. 

அந்தப் புகை ஓய்ந்ததும்… அவர்கள் வீட்டில் நெடுநாள் காலமாக பூஜையறையில் கிடந்த யாழை.. இந்த அகோர ஆத்மாவின் பிடியிலிருந்து கழன்று கொள்வதற்காக.. எடுத்து அருகே வைத்திருந்தவள், 

அதை மடிகளில் எடுத்து கிடத்திக் கொண்டே… குறத்தி சொன்னது போலவே யாழிசையோடு.. தெய்வீக மணம் கமழ, “அம்மன் காஞ்சி” பாட ஆயத்தமானாள் யௌவனா. 

அவளுடைய விழிகள் சாந்தமாக மூடிக் கொள்ள, முகமெங்கிலும் ஓர் தெய்வீகபாவம் பரவியிருக்க, விரல்களோ யாழின் வார்களில் நர்த்தனம் புரிந்து… இறைவத்தனமான இசையெழுப்ப, 

மனத்திலிருந்து அம்மனுக்காக காஞ்சி பாடலானாள் யௌவனா. 

“ஓம்..ஸ்ரீ காமாட்சி.. காமரூபினி.. வித்யாகாருணி.. தம்பதிவனத்தூரின் ஆதிபராசக்தி.. ஓம் வங்காரு காமாட்சியே.. நமஸ்துதே.. ஸ்ரீ ஷக்தி.. ஹரே ஷக்தி. ஆதி ஷக்தி.. சித்தவதனம் குடிப்புகுந்த மாதா… மச்சபுராணம் நிறைந்த மாரியம்மனே.. சித்தரும் சுயம்புவாக பீடம் அமைத்த தாயே.. ஓம் ஷக்தி”என்று விழிகள் மூடி பாடி முடித்தவள், 

கண் திறந்த போது.. மனமெங்கிலும் ஓர் அமைதி அவளை ஆக்கிரமித்திருந்தது. 

வெண்கடுகு புகை.. கொஞ்சம் ஓய்ந்திருப்பதைக் கண்டவள், “அகருமரத்தின்”கட்டையை எடுக்கலானாள். 

இலங்கை தம்பதிவனக்காடுகளில் முளைக்கும் ஓர் மரம் “அகரு மரம்”. தமிழ்நாட்டு மக்களால் “அகில் மரம்” என்றழைக்கப்படும் தெய்வீக சக்திவாய்ந்த ஓர் மரம் அது!! 

திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்கும் இம்மரத்தின் இலைகள் சிறகுக் கூட்டிலைகளாகவும், சமமற்ற சிற்றிலைகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும் அதே வேளை அதன் கட்டையோ சந்தனம் போல மணமுடையது. 

இதன் தூளை தணலில் இட்டால் வரும் புகை.. பெரும் மணமாக இருப்பதோடு.. அந்த மணம் தீய ஆத்மாக்களுக்கு ஒவ்வாதது. 

அகருமரத்தின் கட்டை.. தழலில் அவள் இட்டதன் பின்னர்.. அது புகைந்து புகைந்து ஏற்படுத்திய புகை… வெண்கடுகை விடவும் மோசமான பிரதிகூலத்தைக் கொடுக்கலானது நந்தினிக்கு. 

அதன் புகை.. நந்தினியின் ஆத்மாவில் பட்ட கணமெல்லாம்.. அவள் உடலும் சேர்ந்து எரிதழலில் புகைவது போல.. ஆங்காங்கே தீக்காயங்கள் உருவாகி.. புகை எழும்பிப் பறக்க, அவளுக்கு அது தீக்காய எரிவைக் கொடுக்க, நந்தினி வலியில் புழு போல தத்தளிக்கலானாள். 

இறுதியாக.. வயதான குறத்தி சொல்லித் தந்த மந்திர உச்சாடனத்தை அஸ்த்திரமாக கையில் எடுக்க நாட்டங் கொண்டாள் யௌவனா. 

இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராக கூப்பியவள், ஓர் நெடுமூச்சுடன் விழிகளை மூடியவளாக, ஒருமுகப்பட்ட இதயத்துடன் அந்த மந்திர உச்சாடனத்தைச் சொல்ல ஆயத்தமானாள். 

அந்த சமஸ்கிருத வார்த்தை எத்தனை வீரியம் மிக்கது என்பதனை அறியாதவளோ, 

“ஓம் அஸ்ய சீக்கிரமேவ சாந்தீம் 

குரு குரு ஸ்வாஹா ஓம்… 

ஓம் அஸ்ய சீக்கிரமேவ சாந்தீம் 

குரு குரு ஸ்வாஹா ஓம்” என்று மனதளவில் எழுபத்தொன்பது தடவை கணக்கு வைத்துக் கொண்டே.. அதை சொல்லிய கணம் எல்லாம் நந்தினிக்கோ அந்த வார்த்தை ஜீரணிக்கவே முடியாமல் போனது. 

பேய்களையும், பைசாசங்களையும் ஓட்ட.. அதர்வன வேதத்தில்.. நம்முன்னோர்களால் சொல்லப்பட்ட.. சக்தி மிக்க மந்திரம்.. இருநூறு வருடங்களுக்கு முந்தைய பேயாக இருந்தால்.. இருநூறு நாட்கள் முந்தைய பேயாய் இருந்தால் என்ன? 

அதர்வன வேதத்தை வென்றிடவும் கூடுமோ?? 

நந்தினிக்கோ.. அந்த வார்த்தையைக் கேட்க, தலை கிறுகிறுவென்று சுற்றவாரம்பிக்க, கால்கள் எல்லாம் தள்ளாட, 

குரலோ.. இரு பெண்கள் பேசுவது போல இரட்டை ஒலியாக வெளிவர, “சொல்லாதேஏஏ.. அதை நிறுத்தூஊஊ.. .. அந்த வார்த்தையை சொல்லாதேஏஏ”என்று கத்திக் கொண்டே தன்னிரு செவிகளையும் இறுகப் பொத்திக் கொண்டாள் நந்தினி. 

மானுடப்பிறவியான யௌவனாவுக்கு.. நந்தினி கத்திக் கொண்டேயிருப்பது.. காதுகளில் ஒரு துளி கூட கேட்கவில்லையாயினும் கூட, நந்தினியின் நிலைமையோ ரொம்பவும் பரிதாபகரமானதாக இருந்தது. 

கண்கள் மூடி அந்த உச்சாடனத்தை.. துளியளவும் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டேயிருந்தாள் யௌவனா. 

தீய ஆத்மாவான நந்தினிக்கு அதர்வன வேத உச்சாடனங்கள் எவ்வகையில் இனிக்கும்? கால்களில் வலுவற்று.. தொப்பென நிலத்தில் வீழ்ந்தவள், தரையைக் கைகளால் அடித்துக் கொண்டு, இரத்தக்கண்ணீர் கண்களிலிருந்தும் வெளிப்பட, 

“அதை நிறுத்தூஊஊ.. அதை நிறுத்தூஊ..!!”என்று மாறி மாறி அரற்றிக் கொண்டே கதறி அழுதாள் நந்தினி.

யௌவனாவோ விடாமல்.. அந்த வயதான குறத்தி சொன்னது போல தொடர்ந்து உச்சரிக்க, அவள் வீட்டில் நடுக்கூடத்தில் இருந்த கேபினட், டிராயர், சோபா டீபோய் என யாவுமே.. யாரோ பெரும் சினங்கொண்டு அடித்து உருட்டுவது போல, “தொம்.. தொம்” என்று விழலானது. 

டீபோய் மீதிருந்த வாஸ் வேறு, “சுரீர்” என்ற ஒலியுடன் விழ.. இதயம் ஒருகணம் திடுக்கிட்டாலும், மந்திர உச்சாடன முறை ஒரு செக்கன் நின்று வந்தாலும் விடாமல் தொடர்ந்தாள் அவள். 

வீட்டிலுள்ள அத்தனை பொருட்களையும்.. அந்த மந்திர உச்சாடனத்தின் வீரியம் தாள இயலாமல், தள்ளிவிட்டுக் கொண்டே.. ஓலமிட்டு அழுது கொண்டேயிருந்தாள் நந்தினி. 

கடைசியாக.. அதாவது எழுபத்தொன்பதாவது முறையாக.. யௌவனா மந்திரத்தைச் சொல்லும் தருணமும் வந்தது.இந்த கணம் மந்திரத்தைச் சொல்ல நாடியவளின் செவிகளில் ஓர் பெண்ணின் ஓலமிட்டு அழும்குரல் நன்றாகவே கேட்கத் தொடங்கியது. 

அந்தப் பெண்ணின் அழுகை.. அந்த அழுகை கண்கள் மூடி இறுதியாக மந்திர வார்த்தை சொல்ல வேண்டியவளின் கவனத்தையும் கலைக்கவே செய்தது. 

இறுதியாக அதை சொல்ல வேண்டியவள் அங்கே தான் ஒரு பிழை செய்தாள். பட்டென்று விழிகளைத் திறந்தாள். 

அவள் மனம் உறுதியாக நம்பியது.. இந்த அழுகைக்குச் சொந்தக்காரி.. அந்தப் பொல்லாத நந்தினி தான் என்று உறுதியாக நம்பியது அவள் மனம். 

அவளது விழிகள் மெல்ல சுழன்று.. ஏதாவது அமானுஷ்யங்கள் கண்ணுக்குப் புலப்படுகின்றனவா? என்று ஆர்வத்துடன் ஆராய்ந்து பார்க்க, எந்த அமானுஷ்ய சக்திகளும் இல்லை. 

மாறாக அவளது நடுக்கூடமே புயலில் அகப்பட்ட இடம் போல.. தட்டுமுட்டுச் சாமான்கள் எல்லாம் உடைந்து புரண்டு அல்லோலகல்லோலப்பட்டிருந்தது முழு வீடுமே. 

அன்று யௌவனா… அவள் இறுதியாக அந்த அதர்வன வேத மந்திர உச்சாடனத்தைச் சொல்லிருக்க முடியும்!! ஆனால் யௌவனா சொல்லவில்லை. 

அவள், அந்த அமானுஷ்ய சக்தியை.. குரலில் ஓர் இரக்கத்துடன் அழைத்தாள். 

“நந்தினி..”என்று.

அந்த ஒற்றையழைப்பில் இதுவரை கேட்டுக் கொண்டிருந்த ஓலம்.. பட்டென்று நின்றது. 

அந்த அழுகை நின்றதும் ஓர் தைரியம் பிறக்க, “நீ இங்கே தான் இருக்கேன்னு எனக்குத் தெரியும்..”என்றாள் யௌவனா. 

நந்தினி வீறிட்டழுததினால்.. அவளது கார்குழல் எல்லாம்.. அவளது மதிமுகத்தை மறைத்திருக்க.. இதுகாறும் தரையில் வீறிட்டு அழுது கொண்டிருந்தவள்.. பட்டென்று தன் கோர விழிகளை உயர்த்தி.. யௌவனாவை வெறித்துப் பார்த்தாள். 

தீய ஆத்மா தன்னை வெறித்துப் பார்ப்பது அறியாமல், தன் மனதில் இருக்கும் அத்தனை பாரங்களையும் நந்தினி மேல் இறக்கி வைக்க நாடினாள் சத்யனின் மனைவி. 

முதலில் வேண்டாவெறுப்பாக எகத்தாளத்துடன் கேட்க நினைத்த நந்தினிக்கு, யௌவனாவின் ஒவ்வொரு கேள்விகளும் அவளை ஆட்டங்காணவே வைத்தது. 

யௌவனாவோ கண்களில் நீர் மல்க, தழுதழுத்த குரலில், “நீ.. நீ.. எ.. என் பு.. புருஷனையும், கு… குழந்தையையும் காவு வாங்க நெனக்குறதும் எனக்குத் தெ.. ரியும்.. உனக்கு அந்த இராஜசிங்கன் பண்ண பா.. பாவத்தை.. எ.. எப்போவுமே நான் ஞாயப்படுத்த மா.. மாட்டேன்.. ஏன்னா உனக்கு இழைக்கப்பட்டது அநியாயம்.. அநீதி.. து.. துரோகம்!! .. ஆனால் உனக்கு பண்ண பாவத்துல.. ஒருதுளியும் சம்பந்தமில்லாத என் புருஷனையும், குழந்தையையும் காவு வாங்க நினைக்குறது எந்த வகையில் ஞாயம்?”என்று முதல் கேள்வி யௌவனா கேட்க, நந்தினியின் ஏறி இறங்கிக் கொண்டே நெடுமூச்சு வாங்கிக் கொண்டிருந்த தனங்களின் அசைவு பட்டென்று நின்றது. 

ஓர் மானுடப்பிறவி.. அவளிலும் மேலான.. வலிமை கொண்ட இந்த நந்தினியின் செயல்களுக்கு அர்த்தம் கேட்பதா?? 

ஆணவத்திலும், ஆத்திரத்திலும், பழிவெறியிலும் ஊறியிருந்த அவள் உடல்.. திகுதிகுவன சினத்தில் சிவக்கவாரம்பித்தது. அவளைச் சூழ இருந்த அந்த வானவில் வளையமும்… மெல்ல மெல்ல சிவந்து.. கடுஞ்சிவப்பு நிறத்தை அடையலானது. 

அவள் கோபப்படுவதை அறியாத சின்னவளோ, இம்முறை “அம்மா..” என்றழைத்தாள் நந்தினியை. 

அந்த ‘அம்மா’ என்ற வார்த்தைக்குத் தான் வலு அதிகம் அல்லவா? நந்தினியின் ஒற்றைப்புருவம் மெல்ல உயர.. இதயமெல்லாம்… ஓர் புதுமையான உணர்வு அவளை ஆக்கிரமிக்கலானது. 

இது நாள் வரை எந்த வார்த்தையை… கேட்காமலேயே போய் விட்டதே என்று துயரப்பட்டாளோ?? அதே வார்த்தையை அழைக்கும் ஓர் உறவு!! 

அவள் முன்னிலையில். 

திரும்பவும் ஒருமுறை ‘அம்மா’ என்றழைத்தவள், “அன்னைக்கு என் கற்பை இழக்க நேர்ந்தப்போ.. என்னை.. க்காப்பாத்தினது நீ.. அந்த நிமிஷத்துலயிருந்து உன்னை அந்த தெய்வத்துக்கு சமானமா.. என் தா… தாயா நெனச்சிட்டிருக்கேன்.. ஆனால் இப்படி தன் பழிவெறியைத் தீர்த்துக்க.. மகளோட தாலியைப் பறிக்க நெனக்குறது தான் ஒரு தாய்க்கு அழகா? ஒரு தெய்வத்துக்கு அழகா?”என்று யௌவனா கேட்க, 

நந்தினிக்கோ.. அவள் உதிர்த்த வார்த்தைகள் ஏதோ செய்யும் போல இருந்தது. 

இருநூறு வருடங்களுக்கும் மேலாக.. ஆத்திரமும், வன்மமும், பழிவெறியும், வஞ்சகமும் நிறைந்திருந்தவளின் மனத்தில் முதன்முதலாக.. தாய்மை ஊறவாரம்பித்தது. 

இத்தனை ஆண்டுகளாக சுரக்காத அவள் தனங்கள், ‘அம்மா’ என்று யௌவனா அழைத்ததில் இருந்து.. பால் பீய்ச்சி அடிக்கும் போல இருந்தது. அது எழுத்தில் வர்ணிக்க முடியாத எல்லாவற்றுக்கும் மேலான ஓர் தாய்மை உணர்வு அது. 

நந்தினியின் விழிகள் முதன்முறையாக.. யௌவனாவை… திருவிழாவில் தொலைந்த குழந்தையைக் காணும் தாய் எத்தனை பரிதவிப்புடன் பார்த்திருப்பாளோ.. அது போல பார்த்திருந்தது. 

காளிமாதாவும்… நந்தினி தன்னிடம் இறைஞ்சுவது கண்டு.. இப்படித்தான் தாய்மை மீதூற நின்றிருந்திருப்பாளா?? 

யௌவனாவோ தொடர்ந்து சொன்னாள். 

“அம்மா.. நான் உன் நெலமையில இருந்திருந்தாலும் இப்படித் தான் நடந்துக்குவேன்.. உன் கோபம் ஞாயமானது தான்.. ஆனால் என் நிலைமையில் நீயிருந்திருந்தால்?? .. என் மனநிலை புரியும்.. ஒரு பாவமும் செய்யாத உன் குழந்தையையும், புருஷனையும் கொன்னுட்டாங்கன்னு தானே.. உன் கோபம் எல்லாம்? அப்படின்னா நீ செய்ய நினைக்கிறது மட்டும் என்ன? உன்னை தாயா மதிக்குற உன் குழந்தைக்கு நீ தர நினைக்குற பரிசு.. விதவைப்பட்டமா அம்மா??…”என்று கேட்க, அவளில் ஓர் மனதை உருக்கும் கலக்கம். 

மகாசேனருக்கும், அவளுக்கும் ஓர் குழந்தை பிறந்திருந்தால்… அது.. பெண்குழந்தையாகவே இருந்திருந்தாலும்… அதன் வாழ்க்கை தடைப்பட.. அது விதவையாக நந்தினி ஆசைப்படுவாளா என்ன?? 

குழந்தை தீர்க்கசுமங்கலியாக இருக்க வேண்டும் என்று தானே நினைப்பாள்!! 

அவளுள் முளைவிட்டிருந்த உரமேறிய ஓர் பழிவெறி சுமந்த மரத்தை… யௌவனா கேட்ட ஒவ்வொரு கேள்விகளும்.. கோடரியாக உருமாறி.. அதன் தண்டில் நச் நச்சென்று பாய்ச்சுவது போல உணர்வெழுந்தது அவளுக்கு. 

கண்ணீர் வழிய, குரல் வேறு ஆற்றாமை தாங்காமல் உச்சஸ்தாயியில் எகிற, யௌவனாவோ, 

“எனக்கு நீ அப்போ என்ன பதில் சொல்வ்வ? உன் பழியைத் தீர்த்துக்க என் வ்வாழ்க்கை தான் கெடச்சுதா? இருநூறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த அதே கூத்து திரும்பவும் அரங்கேறணும்னு நீ ஆசைப்பட்றீயா? இந்த ஆட்டத்தில் என்னை இழுத்து விட்டது ந்நீஈஈ..நான் யாருன்னு தெரியாத சத்யன் கனவில்.. என்னைக் காட்டி.. காதல் வலையில் வீழ்த்தினது ந்நீ… எனக்கு சத்யனை மணவாளனா தந்ததும் ந்நீ!! .. அப்படின்னா.. இது உன் மகளுக்கு நீ தந்த வாழ்க்கை!!! உன்னால வாழ்வளிக்கப்பட்ட என் வாழ்க்கையை.. நீயே பறிச்சிக்கிட்டு.. என் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப்போறம்மா?? …”என்று அவள் கேட்டுக் கொண்டே போக, 

அவை ஒவ்வொன்றும் தாக்க வேண்டிய இடத்தில் தாக்கியது. 

இதுகாறும் யௌவனாவை பழிவெறி மீதூற பார்ப்பவள், இன்று அவளது அழுகை தாளமாட்டாமல்.. அவளைத் தோளோடு அணைத்துத் தேற்ற வேண்டும் போல இருந்தது. 

தெரிந்ததோ தெரியாமலோ.. யௌவனாவைத் தேர்ந்தெடுத்து.. அவளுக்கு ஓர் வாழ்க்கையையும் கொடுத்து விட்டு, பாதியில் பறிப்பது.. ஓர் அபலைப்பெண்ணுக்கு அவள் செய்யும் துரோகமாகவே தோன்றியது நந்தினிக்கு. 

சட்டென கண்களைத் துடைத்துக் கொண்டவள், மிக மிக உறுதியான குரலில், “எனக்கு என் புருஷன் வேணும்.. என் குழந்தை வேணும்… அதுக்காக நான் இந்த மந்திரத்தை கடைசியா சொல்லித் தான் ஆகணும்..”என்றவள்,

மீண்டும் கைகளை கூப்பிக் கொண்டு, விழிகள் மூடு, “ஓம்..” என்னும் போதே.. அதைத் தடுக்கும்முகமாக.. எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது. 

***

அங்கே.. அகழ்வுப்பணிக் கிடங்கினுள்… 

தன் நெற்றியில் வழிந்த இரத்தத்தைத் தன் விரல்களில் தொட்டுப் பார்த்துக் கொண்ட பிரபாகருக்கு, அந்த காயத்துக்குக் காரணமான சத்யாதித்தன் மேல் கொலைவெறியே மிகுந்தது. 

அதற்குள் அங்கே அந்தப் பளிங்குத்தரையில் நின்றிருந்த பிரபாகரின் கூலியாட்கள், தங்கள் ‘பாஸ்’ மேலேயே கைவைத்ததற்காக, சத்யனின் இரு கைச்சந்துகளையும் உடும்புப் பிடியாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.

உண்மையில் அந்தக் கூலியாட்கள் யாரும் தம்பதிவனத்தைச் சேர்ந்தவர்களே அல்லர். பிரபாகர் இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து வரும்போதே கையோடு அழைத்து வந்த அவனது மெய்க்காப்பாளர்கள். 

தம்பதிவன மக்களாக இருந்தால்.. தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் தம் ராஜாவை எதிர்த்து இப்படி நின்றிருக்கவும் செய்வார்களோ?? 

அவர்களது உடல்கள் அத்தனையும் பார்ப்பதற்கு மாமிசப்பர்வதங்கள் என்று சிலாகிக்கக் கூடியளவுக்கு அத்தனை பேரும், ‘ஜிம்பாய்ஸ்’களாக இருந்தனர். 

சத்யாதித்தனோ.. அவர்களையெல்லாம் கண்டு அஞ்சாதவனுக்கு, “போர் அல்லது வீரமரணம்”என்ற சத்திரிய இரத்தம் தலைதூக்க, தன்னையா இவர்கள் தடுத்து நிறுத்துவது? என்ற கோபம் பிறக்க, 

தன் கைச்சந்தைப் பிடித்திருக்கும் ஓர் மாமிசப்பர்வதத்தைப் பிடித்து முன்னாடி இழுத்தவன்.. அவனது தொடைகளின் நடுமத்தியிலேயே ஓர் உதை விட, அந்த மாமிசப்பர்வதம் தன் மணியைப் பிடித்துக் கொண்டு வலியில் துடித்த நேரத்தில், அடுத்த கையைப் பிடித்திருந்த ஒருவனின் நெற்றியை.. தலையால் தன் பலம் கொண்ட மட்டும் இடிக்கலானான். 

 கூடவே வந்திருந்த முருகேசுவும் சேர்ந்து, சத்யனுக்கு உதவும் நோக்கில்.. சத்யனின் கழுத்தை இறுக்கிப் பிடித்திருக்கும் ஒருவனில் புறுமுதுகில் தொற்றிக் கொண்டு கிடுக்குப்பிடி பிடிக்க, அனைவரையும் அநாயசமாகப் பந்தாடினான் சத்யன். 

நான்கைந்து ஆட்களையும் சமாளிப்பது சத்யனுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை தான். 

ஓர் மாமிச மலையையே தரையில் வீழ்த்தியவன், அவன் நெஞ்சில் அமர்ந்து கொண்டு.. அவன் முகத்துக்கே.. முஷ்டி மடக்கி மூர்க்கமாக குத்து விட்டுக் கொண்டே போனான் சத்யன். 

அவனின் அடியை சமாளிக்க மாட்டாத இன்னொரு கையாள், ஓடிப்போய்.. அவன் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த இரும்புக்கம்பியுடன் ஓடி வந்து சத்யனின் பின்னந்தலையில் ஓங்கி அடிக்கப் போக, 

அதனை உயிர்போகும் வண்ணம் கூக்குரலிட்டுக் கத்தித் தடுத்தது என்னமோ பிரபாகரே தான். 

தன் கையாளின் இரும்புக்கம்பியை ஓர் கரத்தால் பற்றியிருந்தவனின் மறுகரம், அவன் கன்னத்தினை ஓங்கி அறைந்திருந்தது. 

பிரபாகரோ விழிகள் செக்கச் செவேலென சிவக்க, “நான்சென்ஸ் .. ஸ்டாப் இட். என் கிட்ட துப்பாக்கியே இருக்கு.. இவனை சுட்டுத்தள்ள எத்தனை நிமிஷம் ஆகும்?ஏன் கைவைக்காமல் இருக்கேன்னு யோசிக்க வேணாம்.. அவன் மேல ஒரு துரும்பு படக்கூடாது… இந்த தங்கக்கதவோட சாவியே அவன் தான் ..எனக்கு அவன் உடம்புல இருந்து இரத்தம் கூட சொட்டக்கூடாது…” என்று தன் வேலையாட்களை பணித்தவன், கண்களால் முருகேசுவைக் கைகாட்ட, கையாட்களுக்கும் முருகேசுவை ‘பாஸ்’ சிறைப்பிடிக்கச் சொல்வது புரிந்தது. 

முருகேசுவை நாடி அனைவரும் திரளத் தொடங்கினர்.. சற்று நேரம் ஏதோ சமாளித்தவனுக்கு, சத்யாதித்தனைப் போல வெகுநேரம் சமாளிக்க முடியாமல் போனது. 

முருகேசு… அடி தாளாமல், “ஐயோ அம்மா” என்று கத்தத் தொடங்கிய போது தான்.. தான் அடித்துக் கொண்டிருந்த மாமிசப்பர்வதத்தை விட்டு விட்டு எழுந்து பார்த்தான் சத்யன்.

அங்கே முருகேசன் நின்றிருக்கும் கோலத்தின் அதிர்ச்சி மீதூறினாலும்.. அதை வெளிக்கு காட்டாமல் உணர்ச்சியற்ற முகபாவத்துடனேயே நிற்க முயன்றான் சத்யன். 

முருகேசுவைக் காட்டி நன்றாகவே ப்ளாக் மெயில் பண்ணும் வித்தையை.. தன் துப்பாக்கி முனையில் அறிந்து வைத்திருந்த பிரபாகர். 

துப்பாக்கிமுனையை முருகேசனின் நெற்றிப்பொட்டில் வைத்து, பட்டும்படாமலும் அழுத்திய படி, தீவிரமான குரலில், “இப்போ ந்நீ இந்தக் கதவைத் த்திறக்கல… இவன நீ உயிருடன் பார்க்க ம்முடியாது..”என்று சொல்ல, அடுத்த கணம் துப்பாக்கி முனையில் தன் உயிர் இருந்தும் இராஜ விசுவாசத்துடன், 

“என் உயிர் ப்போனாலும் ப்பரவாயில்லை.. அவன் சொல்ற மாதிரி மட்டும் பண்ணாதீங்கய்யா..”என்று முருகேசு கத்தியது மட்டும் தான் தாமதம். 

அவன் மூக்கிலேயே.. தன் பலம் கொண்ட மட்டும் முஷ்டி மடக்கி ஓர் குத்து விட்டான் பிராபகர். 

அந்த ஒற்றைக்குத்தலுக்கே.. முருகேசனின் நாசித்துவாரத்திலிருந்து பொளபொளவென்று கொட்டியது இரத்தம்!! 

தனக்காக முருகேசன் அடிவாங்குவதை பெரும் மனக்கவலையைக் கொடுக்க, “நோஓஓ பிரபாகர்.. நோஓஓ..”என்று கத்தினான் சத்யன். 

அதை எதுவுமே சட்டை செய்யாத பிரபாகரோ.. பிடிவாதமான குரலில், டிரிக்கரை முருகேசனின் நெற்றியில் வைத்து அழுத்திக் கொண்டு.. “ம்ம்… கதவைத் திற..”என்று சொல்ல, 

அதற்கு மேலும் தாமதித்தால் ஓர் உயிர் போய் விடுமோ என்ற பச்சாதாபத்தில்.. அவன் கால்கள் அவன் மூளையும் விட சுறுசுறுப்பாக இயங்கி.. அந்தத் தங்கக்கதவின் முன்னாடி போய் நின்றன. 

முருகேசனுக்கு இருந்த இராஜ விசுவாசத்தில் ஓர் துளியளவு கூட… இந்தக் காவல் தெய்வமான தேவதாவிடம் இருக்கவில்லையா என்ன?? 

எங்கே போனான் அவன்? ஏன் வெளிவர மறுக்கிறான்? அவனது அரசர் இக்கட்டான நிலையில் இருக்கும் போது காப்பாற்றுவது தானே உத்தமம்?? 

எங்கே தேவதா?? 

தேவதா.. தன்னிறக்கைகளை சுருட்டிக் கொண்டு.. வெற்றுமார்பில் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு, சத்யாதித்தனின் பக்கத்திலேயே தான் நின்றிருந்தான். 

நடப்பது அத்தனையையும் எந்தக் களேபரமும் இல்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு… அத்தனை சாந்தமான முகத்துடனேயே தான் நின்றிருந்தான் அவன். 

அவன் முகத்தில்.. இத்தனை சாந்தம் எப்படி சாத்தியம்?? 

ஒருவேளை, பிரபாகருக்கு சத்யாதித்தன் புதையல் கிடைக்கும் வரை தேவை என்பதால்.. சத்யாதித்தன் மேல் ஒருதுரும்பும் பட வாய்ப்பில்லை என்ற எண்ணமா? 

அல்லது… புதையல் சத்யாதித்தன் கரங்களால் வெளிப்பட்ட மறுகணம்.. அவன் காவல் தெய்வமாக, தேவதாவாக அலையக் காரணமாயிருந்த “புதையல்” வெளி வந்ததும்.. மோட்சம் கிடைக்கப் போகிறது என்பதனால் இந்த அமைதியா?? 

இல்லை நடப்பது எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணமா? 

இல்லை இது தான் நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்திருந்தானா?? 

எதுவோ ஒன்று.. தேவதாவை எந்தக் களேபரமும் அடையாமல் கட்டிப்போடச் செய்தது. 

தன் முன்னோர்களால் செய்யப் பணிக்கப்பட்ட தங்கக்கதவாக இருந்தாலும்கூட.. அதிலிருந்து அந்த நாகங்களின் வளைந்து நெளிந்து சென்றிருக்கும் தோற்றப்பாட்டை உருக்கிச் செய்யுமளவுக்கு அந்தக் காலத்திலேயே இலங்கையில் கைதேர்ந்த பொற்கொல்லர்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தோன்றவாரம்பித்தது சத்யாதித்தனுக்கு. 

அவன் அந்தக் கதவு முன்னாடி… என்ன செய்வது என்றே தெரியாமல் உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்தான் அவன். 

கண்களை இரு கைகளாலும் துடைத்து விட்டுக் கொண்டே நெடுமூச்சு விட்டவன், ஏதோ தோன்ற.. அந்தக் கதவில் தன்னிரு கைகளையும் வைத்தான். 

என்ன சொல்லி திறப்பது என்று தெரியாது!! திறக்காமல் இருந்தால்.. ஓர் உயிரும் பிரபாகரின் துப்பாக்கிக்கு இரையாகி விடுமோ என்ற அச்சம் வேறு அவனை அலைக்கழிக்கவாரம்பித்தது. 

சட்டென கதவில் இருந்து கை வைத்தவன், தன் தொடைக்குத் தானே ஓங்கி ஓர் குத்து விட்டவனாக, 

“எனக்குத் த்தெரியாது..தெரிஞ்சா தானே திறக்கலாம்.. உண்மையாலுமே எனக்குத் த்தெரியாது..”என்று சொல்ல, அவனை நாடி ஓடோடி வந்தான் பிரபாகர். 

கிட்டத்தட்ட அந்தப் புதையல் கைக்கு வந்து விட்டு வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில்.. ஓர் பைத்தியவெறி பிடித்ததது போல, “நல்லா யோசி…. உங்க பேமிலிக்கு மட்டும் தெரிஞ்ச ஒரு சொல்லு.. லைக் பாஸ்வேர்ட்.. ஏதாவ்வதூஊ.. இருக்கூஊஊம்”என்று சொல்ல…. கோபம் தாளாமல்.. 

தங்கக்கதவின் அடிப்பாகத்திற்கு.. ஓர் உதை விட்டவனாக.. கைமுஷ்டி மடக்கிக் கொண்டு நின்றான் சத்யன். 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு சோடிக் கண்கள்.அது ஓர் மென்மையான பெண்ணின் கண்கள்!! அது அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணியில் சித்தாள் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஓர் பெண். 

இன்றோடு அகழ்வுப்பணி முடிந்தது என்று பிரபாகர்.. இத்தனை நாள் வேலைபார்த்த கூலியையும் இறுதியாக இன்று தந்து விட்டிருந்தாலும் கூட, வேலை பார்த்த இடத்தில் தன் மெல்லிய தங்கச்சங்கிலியைத் தொலைத்திருந்தாள் அந்தப்பெண். 

தங்கம் என்பதால் பதறியடித்துக் கொண்டு.. இரவென்றும் பாராமல்.. ஓடி வந்தவள்.. அந்த நிலவறைப்படியில் நின்றும் சத்தங்கள் வரவே.. சுவரோடு சுவராக.. காது தாழ்த்தி அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு.. தங்கள் ராஜா.. பிரபாகரினால் ஆபத்து இருப்பது கண்கூடாகக் கண்டு கொள்ள நேரிட்டது. 

அடுத்த கணம் அந்த ஏழைப் பெண் ஓடிப் போனாள் யௌவனாவின் வீட்டை நோக்கி. 

***

இறுதியாக.. அந்த மந்திர உச்சாடனத்தைச் சொல்ல விழைந்தவளின் மந்திரத்தை தடுத்து நிறுத்துமுகமாக, “அம்மா..”என்ற பதகளிப்பான குரல் கேட்க, சட்டென சிந்தை கலைந்தவள் வாசல்புறம் எட்டிப்பார்க்கலானாள் யௌவனா. 

அங்கே நின்றிருந்த பெண்ணையும்… அவளது கட்டுத்தறி சேலையில் பூத்திருந்த வியர்வையும், அவள் விட்டுக் கொண்டிருந்த அலைக்கழிப்பான மூச்சுக்களும் யௌவனாவின் புருவங்களை இடுங்கச் செய்ய, அவளுள் ஓர் திடீர் கலவரம் எழுந்து பரவலானது. 

இவளது பதற்றத்தைக் கண்டால்.. ந.. நந்தினி தான்.. சீற்றம் தாளாமல்.. க.. கணவனை ஏதாவது செய்து விட்டாளா? என்ற அச்சம் பிறக்க, வயதான குறத்தி சொன்ன, 

“எது நடந்தாலும்.. அந்த வட்டத்தை விட்டு மட்டும் வெளியே வந்துடாதேம்மா”என்று விடுத்த எச்சரிக்கை மறந்தே போனது. 

சட்டென நட்சத்திர உருவில் நின்றும் எழுந்து கொண்டவளின் பாதங்கள்.. வட்டவடிவ எல்லையைத் தாண்டி.. பதிய, 

தனக்கு ஊழிகாலம் தான் நெருங்கி விட்டதோ? இறுதி உச்சாடனமும் முடிந்தால்… தனக்கு அழிவும் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில்.. தரையை அடித்து அடித்து அழுது கொண்டிருந்த நந்தினி பட்டென்று தலைதூக்கிப் பார்க்கலானாள். 

அவள் முகத்திலே.. அந்தப் பழைய நந்தினிக்கான நமுட்டுச்சிரிப்பு பரவ… யௌவனா வட்டத்தை விட்டும் வெளியே வந்ததும்.. நந்தினியின் தீக்காயங்கள் எல்லாம் மீண்டும் புனர்நிர்மாணம் அடைந்து சரியாகத் தொடங்கியது. 

சட்டென்று பதறியடித்துக் கொண்டு.. அந்த பணியாளப்பெண்ணை நாடிப் போனவள், “என்ன கண்ணம்மா..?”என்று கேட்டாள் யௌவனா. 

கண்ணம்மாவுக்கோ பேசக்கூட நாவெழாது போக, திக்கித் திணறிய குரலில், “அ.. அங்… அங்கே அகழ்வாராய்ச்சி நடக்குற இடத்தில் ராஜாவை.. ராஜாவை”என்றவளுக்கு… பாவம் இத்தனை தூரம் ஓடி வந்ததால் மூச்சிறைத்ததே ஒழிய, சொல்ல விழைந்த விஷயத்தைச் சொல்லத் தான் முடியவில்லை அவளால். 

இத்தனை நேரம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயக் கடமையான மந்திர உச்சாடனம் மறந்து போனது அவளுக்கு.கண்ணம்மா உரைத்த “ராஜா” என்ற சொல் மட்டுமே மனதில் நிலையாக நிற்க,

கண்ணம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டவள்“ராஜாவை? சொல்லு கண்ணம்மா? ராஜாவை??”என்று மேற்கொண்டு சொல்ல உந்தினாள் யௌவனா. 

இது அத்தனையும் அருகாமையில்.. காற்றோடு காற்றாகக் கலந்து நின்று பார்த்திருந்த நந்தினிக்கு.. இதே போல ஓர் நாள் தன் கணவனுக்கு இடையூறு என்று வந்த சொன்ன தன் தோழி “கண்ணம்மாவின்” நிலைமையும், கணவனுக்கு ஒன்று என்றானதும்.. இதே போலவே கையறு நிலைக்கு ஆட்பட்டு நின்ற தன் நிலைமையும் மனக்கண்முன் வந்து நின்றது . 

யௌவனாவுமே.. அன்று நந்தினி நடந்து கொண்டது போலவே இம்மி பிசகாது தான் நடந்து கொண்டாள். அந்தப் பெண் கண்ணம்மாவுக்கு ஆற அமர அமர வைத்து, நீர்ப்பருக்குவித்து விஷயம் அறியும் பொறுமை இல்லாதவள்… 

தான் கர்ப்பிணி என்பதையும், தனக்கு இத்தனை பதற்றம் ஆகாது என்பதையும் கூட மறந்து போனவளாக.. நந்தினியைப் போலவே விறுவிறுவென்று.. அகழ்வுப்பணி நடக்கும் இடத்துக்கு விரையலானாள் யௌவனா. 

ஆனால் சின்ன வித்தியாசம். அவள் விரைந்தது கற்திடலுக்கு. இவள் விரைந்தது அகழ்வுப்பணியிடத்துக்கு. 

ஆனால் இரு பெண்களினும் கணவனுக்கான அன்பும், அவனுக்கு ஒன்று என்றானதும் விளைந்த பதற்றமும் ஒன்றாகவே இருந்தது. 

அந்த ஏகாந்த இரவு.. அவ்விரவு.. இருநூறு வருடங்களுக்கு முன்னர் வந்து சென்ற… அந்தக் கொடூர இரவினை ஞாபகப்படுத்துவது போலவே இருந்தது நந்தினிக்கு. 

என்ன தோன்றியதோ.. முகம் முழுவதிலும் துக்கத்தில் கறுத்து வாடிப்போக.. யௌவனாவின் பின்னாலேயே அனிச்சையாகச் சென்றது அவள் மனம். 

இது தான் சரித்திரம் திரும்புகிறது என்பதோ? 

அவள் எஞ்ஞான்றும் மறக்கத் துடிக்கும் காட்சி.. அன்று நடந்த அத்தனையும் மீள்அரங்கேற்றப்படுகிறதோ என்று கூட தோன்றலானது நந்தினிக்கு. 

யௌவனாவின் பாதங்களில் அன்று பாதணிகள் கூட இல்லை. அதைக் கூட மறந்து போனவளாக.. அவள் கால்கள் மனிதர்கள் இருக்கும் இருப்பிடத்தைத் தாண்டி.. அகழ்வுப்பணி நடந்து கொண்டிருக்கும் காட்டை நோக்கி விரையவாரம்பித்தது அந்த இரவில். 

அவள் திண்டாட.. உடலெல்லாம் ஒரு குரூரமான நோயை அனுபவித்தாற் போன்ற வலியெழுந்து பரவியது நந்தினிக்கு. 

என்ன நந்தினிக்கா? 

 

ஆம்.. வழியில் இருந்த கற்களும், முட்களும் தைத்தது என்னமோ யௌவனாவின் மென்மையான பாதத்தினைத் தான். 

இருப்பினும்.. யௌவனா பட்ட வலி அத்தனையும் தன் வலியாக அன்று உணர்ந்தவளுக்கு.. இன்றும் வலிக்கலானது. 

அப்போதேனும் ஓட்டத்தை நிறுத்தினாளா யௌவனா? இல்லையே? 

அவள் அவனைக் கொஞ்சநஞ்சமாகவா படுத்தி எடுத்தாள்? கல்லடியைக் காட்டிலும், சொல்லடியால் அல்லவா அன்புக்கணவனை எத்தனயோ நாள் துன்புறுத்தினாள். 

அப்படியிருந்தும் அவளை விட்டும்.. அவளை வெறுத்து ஒதுக்கி மனம் துறந்து போனானா அவன்??? அவள் தான் வேண்டும். அவள் மட்டும் தான் வேண்டும் என்று பின்னாலேயே வந்தானே?? 

அப்பேர்ப்பட்ட அன்புக்கணவனுக்கு ஒன்று என்றதும் பாதங்களில் முள் தைத்தால் என்ன? கல் தைத்தால் என்ன? என்ற நிலைப்பாடே அவளுடையது. 

அந்த நடுநிசி இரவின் பாதுகாப்பற்ற கானகமும், உயிர் துளைக்கும் கூதல்க்காற்றும், கல்லால் ஆன கடினமான மலையும் அவளை இம்மியளவும் கலைக்காது போக, கண்ணம்மா சொன்ன ‘அகழ்வுப்பணியிடத்தினை நோக்கி ஓடினாள் அவள். 

பிரபாகர் பற்றி சரியாக அறியாதவளுக்கு… கணவனின் இக்கட்டான நிலைமைக்குக் காரணம்.. அந்தப் பொல்லாத நந்தினி என்றே தோன்றவாரம்பித்தது. 

அவளில் ஓடி ஓடி ஜீவன் மரத்துப் போன பின்னரும் கூட.. தன் கணவனின் உயிரை எப்படியாவது அவளிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது அவளுக்கு. 

அந்த அகழ்வுப்பணியிடக் கானகம் அடர்ந்த மலைப்பான பிரதேசத்தில் இருந்தது. அந்த மலைப்பாங்கான இடத்தை நோக்கி ஏறும் போது… எங்கிருந்தோ திரண்ட மேகங்கள்… திடும்மென்று பொழிந்தன பேய்மழையை. 

கானகத்தின் மேடுபள்ளம் எங்கும் அடித்து ஊற்றிப் பெய்தது மழை நீர்… அருவியாகவும், சிற்றோடைகளாகவும் உருமாறி ஊற்றெடுத்து ஓட, அத்தனையும் கணக்கில் கொள்ளாது யௌவனா முன்னேற… 

இருநூறு வருடங்களுக்கு முன்பு நடந்த அத்தனையும் அச்சொட்டாமல்.. அப்படியே மீண்டும் நிகழ்ந்தேறுவது போலவே உணர்ந்தாள் நந்தினி. 

அவளது சிவப்பு நிற சேலையும்.. அவள் சூடியிருந்த பூக்களும் மழையோடு நனைந்து… பருத்த துளிகள் முகத்தில் படுவதால்.. மூச்சு வாங்க சிரமம் கொண்டவளாக…. குறுக்காக வளர்ந்திருந்த ஓர் மராமரத்தண்டை கட்டியணைத்துக் கொண்டு “ஹாஹ்.. ஹாஹ்”என்று மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவளுக்கு பொல்லாத கோபம் எழுந்தது நந்தினி மேல். 

மழை நீரோடு நீராக… கண்ணீரும் சேர்ந்து கரைய, முணுமுணுக்கும் தீவிரமான குரலில் , “என் புருஷனுக்கு ஏதாவது ஆச்சூஊஊ? உன்னை சும்மா விடமாட்டேன் நந்தினீஈ”என்று கறுவியவளாக, மீண்டும் அவள் தன் ஓட்டத்தை ஆரம்பித்த போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தேறியது. 

போகும் வழியில்.. மண்ணுக்கு வெளியே புடைத்து வெளித் தெரிந்த ஒரு பெரும் வேர் இடுக்கு!! 

எந்த வேர் இடுக்கில் இடரி விழுந்து தன் வாரிசை இழந்தாளோ நந்தினி.. அதே வேர் இடுக்கு!! 

அந்த வேர் இடுக்கு யௌவனாவின் வாழ்க்கையிலும்.. அதே இடத்தில்.. அதே போன்ற ஓர் இரவில் விளையாடவே செய்தது. 

 சமயா சந்தர்ப்பமே பாராது யௌவனாவினது பாதங்களும், நந்தினியின் பாதங்களைப் போலவே தடுக்க, அந்தோ பரிதாபம்!! 

சமநிலையின்றி முகம் குப்புற விழுந்தாள் யௌவனா. 

மற்றுமொரு பெரிய வேரில்.. அவளது இன்னும் மேடிடாத அந்தச் சின்ன வயிறும்,மோத நூலிழையளவு இடைவெளி தான் இருந்தது. 

கூடவே நெற்றிப் போய் தண்டில் பலமாக இடித்து உதிரம் வழியவாரம்பிக்க, உயிர் போகும் படி எழுந்த ஓர் வலியில், கானகமே அதிர “ஆஆஆஆஆஆஆஆ”என்று கத்தினாள் நந்தினி. 

அன்று போலவே இன்றும் மழையனுப்பிய வருணபகவானும் கொடூரமான மின்னலை அனுப்பி, அந்தக் கானகத்தையே வெட்ட வெளிச்சமாக்க, அங்கே அவள் கண்ட காட்சி..அவளைப் பித்துப் பிடிக்க வைக்கும் போலிருந்தது. 

மழைநீரில் நனைந்து ஒட்டிப்போய் தெரிந்த வயிற்றுப் புற சேலை அந்த வேர் இடுக்கில் படாத வண்ணம் நூலிழையளவு இடைவெளியில்.. ஒரு கரம் அவள் வயிற்றைத் தாங்கிப் பிடித்திருப்பதைப் போலவே பிரம்மை தோன்றியது யௌவனாவுக்கு. 

ஆம், எந்த சிசுவை நந்தினி காவு வாங்க வந்தாளோ.. அந்த சிசு.. அவளது இறந்த குழந்தையை நினைவுறுத்தி விட்டுச் செல்ல, 

நந்தினியில் இருக்கும் தாய்மையுணர்வு இயல்பாகத் தலைதூக்க, குழந்தைக்கு அடிபடாமல் காத்திருந்தாள் நந்தினி. 

என்னது காத்தது நந்தினியா? 

ஆம், நந்தினியே தான்!! 

அந்தப் பேரதிசயத்தை இலயிக்கக் கூட முடியாதளவுக்கு மனம்.. கணவனைத் தேட, 

மெல்ல எழுந்து கொண்டவளுக்கு, பாதங்கள் குத்தியது போல வலித்தது. 

கால்களுக்கடியிலோ.. இரத்தம் வழிய வழிய.. அகழ்வுப்பணி இடத்தினை நோக்கி… கானகப் பாதையில் வளர்ந்திருந்த ஒவ்வொரு மராமரத்தின் தண்டையும் ஆதரவாகப் பிடித்து பிடித்து, நெடும் மூச்சுக்களை விட்ட வண்ணமே நடந்தாள் அவள். 

அவள் வந்தடைய வேண்டிய இடமும் வந்தது. அடிவயிற்றிலும், முழங்காலிலும் பெரு வலி எழ.. சட்டையே செய்யாதவளாக வீறுகொண்ட பெண்புலி போல நிலவறைப்படிகளைக் கடந்து அவள் இறங்கியதைப் பார்க்கையில்.. நந்தினிக்கு தன்னையே திரும்பப் பார்ப்பது போல ஒரு பிரம்மை எழலானது. 

*****

அங்கே மனைவி தன்னைத் தேடி, கொட்டும் அடாத மழையிலும்.. வந்திருப்பது அறியாமல்… தங்கக்கதவின் முன் சீற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருந்தான் சத்யன். 

வெளியே மழை அடித்தூற்றிப் பெய்து கொண்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றும் முகமாக.. நிலவறைப்படிகளைத் தழுவி வந்த மழை நீர்.. 

அந்தப் புராதனக் கால்வாயில் விழுந்து புரண்டு ஓடி.. ஓர் துவாரம் வழியாக பீலியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. 

என்ன முயன்றும் அந்தக் கதவினைத் திறக்கும் மந்திரவார்த்தை தெரியாது போக, “எனக்கு நிஜமாகவே இந்தக்கதவை எந்த மந்திர வார்த்தை திறக்கும்னு தெரியாது.. முருகேசுவை மரியாதையா விட்டுரு..”என்று சொல்லிக் கொண்டே திரும்பியவனின் விழிகள், தன் மனைவியைக் கண்டதும் விக்கித்து நின்று போனது. 

 

 

3 thoughts on “ஏகாந்த இரவில் வா தேவதா! – 24&25 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top