எங்கேயும் காதல்!
[2]
இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
“ஹலோ வெல்கம் பேக் டூ தி ஷோவ்.. நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது.. உங்கள் “இசை” எஃப். எம்… தொண்ணூற்று மூன்று தசம் மூன்று அலைவரிசையில் நம்ம “இசை” எஃப்.எம் வானலையைக் கேட்டு மகிழலாம்… இது “நீங்கள் கேட்டவை”.. வித் ஆர். ஜே மித்ரா!! ..”என்று காதுகளில் ஒரு ஹெட் ஃபோனுடன், அந்த “இசை எஃப். எம் ரேடியோ ஸ்டேஷனில்”இருந்து ஆளை மயக்கும் இனிய குரலில் இருந்து பேசிக் கொண்டிருந்தது நம் அக்னி மித்ராவே தான்!!
கடந்து வந்த இரண்டு வருடங்களில் அவள் வாழ்க்கையில் என்ன என்னவெல்லாமோ மாறி விட்டிருந்தது. ஆனால் இடரினும், தளரினும் எதுவரினும் இதழ்களில் உறையும் புன்னகை மாத்திரம்… அவளிடம் அன்றிலிருந்து மாறியிருக்கவேயில்லை!!
அவள் குரலில் இருந்த உற்சாகமான துள்ளல், பிறர் மனதையும் மாற்றும் வல்லமையுடையதாக இருப்பது, அது அவளுக்கு இறைவன் கொடுத்த வரம்!!
தன் குரலை துல்லியமாக உள்வாங்கி, அழகாக காற்றலையில் வெளியிடும் மைக்ரோஃபோன் அருகே தன் இதழ்களைக் கொண்டு சென்றவள்,
“நம்ம ப்ரோக்ராம்ல ஒரு டாபிக் எடுத்து.. அதைப்பத்தி உங்க பர்சனல் லைஃப் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி கேட்குறது வழமை இல்லையா? ஸோ டூடே டாபிக் இஸ், “மை ஃபர்ஸ்ட் லவ்!!”.. உங்க ஃபர்ஸ்ட் லவ் யாரு? எப்படி ப்ரப்போஸ் பண்ணீங்க? சக்ஸஸா? ஃபேலியரா? எல்லாமும்.. உங்க ஆர். ஜே மித்ரா கூட ஷேர் பண்ணிக்கலாம்.. ஓகே பார்க்கலாம்.. நம்ம நிகழ்ச்சியில் முதல் நேயர்.. ஹலோ வணக்கம்..”என்று தொடர்ந்து பேசிக் கொண்டே சென்றவளின் குரலில் இருந்த துள்ளல் இறுதி வரை குறையவேயில்லை!!
தலைநகரமான கொழும்பில், ‘ப்ரஸ் ரிப்போர்டர்’ வேலையை விட்டு விட்டு.. இங்கே இலங்கையின் மத்திய மாகாணத்தின், “கண்டியில்” அமைந்திருக்கும் “இசை”வானலைக்கு ரேடியோ ஜாக்கியாக அவள் பணிபுரியத் தொடங்கி.. சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கும்!!
இந்த ஒரு வருடத்தில்.. பல தரப்பட்ட மக்கள் குரலைக் கேட்டிருப்பதுவும் உண்டு. பலவிதமான குணாதிசயங்கள் கொண்ட மக்களின் பேச்சுக்களை செவிமடுத்திருப்பதுவும் உண்டு!!
இலங்கை தமிழ்களிலேயே பல வித்தியாசமான தமிழ்களான, “யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ், மலையகத் தமிழ், கொழும்புத் தமிழ்”என பலதரப்பட்ட “ஸ்லேங்’குகளையும் இரசித்திருப்பதுவும் உண்டு!!
இன்னும் ஏன்?.. ரொம்ப அராத்து பண்ணும் நேயர்களையும் கூட கடந்து வந்ததும் உண்டு.
“நான் ஆர். ஜே மித்ராவை பார்த்தேயாகணும்!! ”என்று ஸ்டூடியோவிற்கே, அவளைத் தேடிவந்த தீவிர அன்புள்ளம் கொண்ட நேயர்களையும் பார்த்ததும் உண்டு!!
எல்லாமே முன் அனுபவமாக எடுத்துக் கொள்பவள், உள்ளே எத்தனை வடுக்கள் இருந்த போதும் புன்னகைக்க கற்றுக் கொண்டிருந்தாள்.
அவளுடைய வானலை நிகழ்ச்சி.. முதலில் ஒரு மணித்தியாலமாக இருந்து, இப்போது நேயர் விருப்பின் பேரில் ஒன்றரை மணித்தியாலமாக ஆக்கப்பட்டிருந்தது.
தனக்கு கொடுக்கப்பட்ட அந்த ஒன்றரை மணித்தியாலங்களில்.. தன் குரலால் எத்தனையோ மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தாள் அக்னிமித்ரா!!
ஒவ்வொரு நேயராக மனம் விட்டுப் பேசக் கேட்டுக் கொண்டே வந்தவள், இறுதியாக வந்த நேயர், “முதல் காதல்”சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட, நேரம் இரவு ஒன்பது இருபத்தொன்பதைத் தாண்டி கடந்து செல்லவாரம்பித்தது.
“இப்படித்தான் மேம்.. ஒரு நாளு.. என் கல்யாணியைக் கூட்டிக்கிட்டு.. தியேட்டர் போயிருந்தேன்.. அந்த காலத்து தியேட்டர் டென்ட் கொட்டாவா தான் இருந்தது…”என்று இன்னும் கொஞ்சம் அறுக்க, அவள் கை மறைவில் வெளியானது ஓர் கொட்டாவி.
இரவு எட்டு மணியில் இருந்து ஒன்பதரை மணி வரை அவளுடைய நேரம்!! அது முடிய, அடுத்த நிகழ்ச்சிக்கான ஆர். ஜே கலாவும், தன் சிசு தாங்கிய மணி வயிற்றை சுமந்து கொண்டு ஸ்டூடியோவிற்குள் நுழைந்தாள்.
மெல்ல வந்து மித்ராவுக்கு அருகாமையில் அமர்ந்தவளுக்கு, நடந்து வந்ததன் விளைவாக வெளிப்பட்டது ஓர் நெடும்மூச்சு!!
அங்கேயே அமர்ந்து கொஞ்சநேரம் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டிருந்த கலாவுக்கும் தான் இறுதி நேயரின் அறுவை எரிச்சலைக் கிளப்பியது.
“இன்னும் ஏன் பேசிட்டிருக்க?.. நேக்கா கட் பண்ணிரு மித்து”என்று கலா வேறு அவள் காதுக்குள் கிசுகிசுக்க, மித்ராவுக்கும் சலிப்பாகத் தான் இருந்தது.
இருந்தாலும் கலாவை சற்றே பொறுமை காக்குமாறு, கையால் சைகை செய்தவள் , “இரு இரு”என்று கிசுகிசுப்பான குரலில் மொழிந்து விட்டு, நேயரை நோக்கி, சட்டென இடையிட்டாள்.
“மிஸ்.. மிஸ்.. மிஸ்டர். பரமசிவம்.. மிஸ்டர். பரமசிவம்” அவரது பேச்சை நிறுத்துவதற்கு அவரைப் பலமுறை அழைக்க வேண்டியிருந்தது.
ஒருவழியாக அவரும் நிறுத்த, இவளோ, “இறுதியா வந்த உங்க காதல் கதையை கேட்க எனக்கும் ஆசையா தான் இருக்கு.. பட் ஐ ஹேவ் டூ லீவ்..டைமாச்சு..
நம்ம நெக்ஸ்ட் ஆர். ஜேஸ் வந்துட்டாங்க.. நாளை இரவு ஃபரஷ்ஷா.. ஃப்ரஷ் டாபிக்கோட பேசலாம்… அன்டில் தென் ஸ்டே டியூன்ட்.. பபை.. உங்களிடமிருந்து விடைபெறும் நான் ஆர். ஜே மித்ரா… அதுக்கு முன்னாடி.. இதோ ஒரு தித்திப்பான பாடல்…”என்று அவரது காலை கட் செய்து விட்டு,
“மண்ணில் இந்த காதல் அன்றி..”என்ற எஸ்பிபியின் மயக்கும் மாயக்குரல் பாடலை ஒலிக்க விட்ட பின்பே, அவள் நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
பாடலின் இடையில் மெல்லிய குரலில் கலாவோ, மித்ராவின் காதுக்குள் “இந்த மாதிரி லூசுங்களை எப்படி தான் சமாளிக்கிறியோ?ஃபைவ் யர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் இருந்தும்… ஈவன் நவ் ஐ கான்ட் கன்ட்ரோல் மை ஆங்கர் டூவோர்ட்ஸ் தெம்.. இந்த மாதிரி சேட்டர்பாக்ஸ் கேஸ் வந்தா டக்குன்னு சந்துரு கிட்ட கொடுத்துருவேன்.. அவன் தான் இதை ஹேன்டில் பண்ணுவான்.. பட் யூ ஆர் க்ரேட்!!”என்று கேட்க,மித்ரா கலா புறமாகத் திரும்பி அமர்ந்தாள்.
அவளுடைய கண்களில் தற்போது ஓர் குறும்பு கலந்த ஆர்வம் பளபளத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள் கலா.
மித்ராவோ, அழகான தாய்மைப் புன்னகை சிந்திய வண்ணம், “இப்போ உனக்கு எட்டு மாசம்ல?”என்று கேட்டவளின் கைகள், கலாவின் வயிற்றை நோக்கி நீண்டது.
மித்ரா தன் வயிற்றைத் தழுவ நாடுகிறாள் என்பதை புரிந்து கொண்ட மற்றவள், மித்ராவின் கையை எடுத்து தன் முட்டை வயிற்றில் வைத்துக் கொண்டாள்.
தோழியே.. வயிற்றைத் தழுவ சுதந்திரம் தந்ததில், மித்ராவிடமிருந்து வெளிப்பட்டது ஓர் குறுநகை!!
மித்ராவின் கண்கள்.. மூடிக் கொள்ள, கைகளோ மெல்ல ஆசுவாசமாக மற்றவள் வயிற்றை தாய்மையுடன் தடவலாயிற்று.
கலாவின் குழந்தை.. இடது புறத்தில் தன் தலையைத் தள்ளிப் புடைத்துக் கொண்டு நிற்க, மித்ரா தொட்டதும், சட்டென உள்ளே தன்னுடலை இழுத்துக் கொள்ள,
இரு பெண்களுமே ஒருநேரத்தில் கத்தலாயினர்.
முன்னையவளுக்கு தாய்மையின் வலி!! பின்னையவளுக்கு தாய்மையை தொட்டுப் பார்த்த பூரிப்பு!!
“ஓ மை காட்!! இது அவன் தான்? இன்னும் ஒரு மாசம் பத்து நாளில் நம்ம கூட இருப்பான்ல?”என்று கேட்ட மித்ராவின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியிருந்தது.
மித்ராவையே வலியும், புன்னகையும் கலந்தோடிய முகபாவனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கலா.
தன் வயிற்றைத் தடவிக் கொண்டவள், “ஆமா நெக்ஸ்ட் மன்த் என்ட்ல இருந்து இவனுக்காக நோ பே லீவு எடுக்கலாம்னு இருக்கேன்.. அநேகமாக இன்னோர் ஜாக்கி போடுற வரைக்கும்..என் ப்ரோக்ரேம்மை சந்துரு கூட சேர்ந்து நீ தான் ஹோஸ்ட் பண்ணனும்னு நினைக்கிறேன் மித்ரா !”என்று மற்றவள் சொல்ல, மித்ராவின் நினைவுகளில் வந்து போனான் சந்துரு!!
சந்துரு மற்றும் கலா இணைந்து தான் அடுத்த நிகழ்ச்சி எப்போதும் செய்வது. இன்று கலா இங்கிருக்க சந்துரு எங்கே போனான்??
சந்துருவின் வருகையின்மையில் அக்னிமித்ராவின் அடர்ந்த புருவங்கள் மெல்ல இடுங்கியது.
“ஆமா.. இப்போ சந்துரு ப்ரோக்ராம் தானே?எங்கே நீ மட்டும் தான் இருக்க? அவனைக் காணோம்?”என்று கேட்ட வண்ணமே, மேசையில் இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து மிடர் மிடராக நீர்ப்பருகவாரம்பித்தாள் மித்ரா.
“ம்.. ஆமா… இன்னைக்கு கலம்போவில ஒரு ஃபங்ஷன்.. புது பில்டிங்க் ஓபனிங்.. அதை கவர் பண்றதுக்கு நம்ம பரோட்காஸ் லிமிட்டட் சார்பா போயிருக்கான்…”என்று போய்க் கொண்டிருந்த பாடலின் இடையில் சொன்னாள் கலா.
இசை வானலையானது, தனியாக இயங்கும் ஓர் ரேடியோ ஸ்டேஷன் அல்ல. அது “உதயம் நெட்வர்க் பரோட்காஸ்டிங் லிமிட்டெட்”என்னும் பரந்து பட்ட பல்லூடகங்களையும், பலதரப்பட்ட சேனல்களையும், அலைவரிசைகளையும் கொண்டது.
அதில் ஓர் அங்கம் அல்லது கிளை தான் மித்ரா பணிபுரியும் இசை வானலை!!
உதயம் டீவி சார்பாகத் தான் “சந்துரு”போயிருக்கிறான் என்று சொன்னதும் மெல்ல குழம்பிப் போனாள் அக்னிமித்ரா.
“வாட்??.. நம்ம சேனல்ல தான் நிறைய கேமரா மேன் இருக்காங்கள்ல?? பட் சந்துரு எதுக்கு??”
அந்தச் சொகுசு சுழல்நாற்காலியில் சாய்ந்து கொண்ட கலாவோ, “திறக்கிறது சாதா பில்டிங் இல்லை.. ஸ்ரீலங்காஸ் லார்ஜெஸ்ட் பில்டிங்..இருபத்திமூன்று ப்ளோர்ஸ்.. ஒவ்வொண்ணுலேயும் மல்டிநேஷனல் கம்பெனீஸ், ஷோவ்ரூம்ஸ் என்ட் ஹோட்டல்ஸ்.. அதை கவர் பண்ணனும்னா..
நம்மகிட்ட இருக்குற கேமரா மேன் பத்தாது.. சந்துருடைய பலநாள் கனவு.. நல்ல கேமராமேனாகுறது.. அவனுடைய ஃபூட்ஏஜ் பிடிச்சுப் போய்.. எம்டி அவனை கேமரா மேனா செலெக்ட் பண்ணிக்கலாம்ன்ற நம்பிக்கையில் போயிருக்கான்..
யார் பில்டிங்க்னு நினைச்ச? தி க்ரேட் பிஸினஸ் மேன்.. தேவ் க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் ஓனர்.. “தேவ் வர்மன்” பில்டிங்க்பா அது…!!”என்று அவன் பெயரை கலா கெத்தாகச் சொன்னதும் மித்ராவின் முகம் மறு செக்கன் சுருசுருவென செந்நிறம் காணத் தொடங்கியது.
“தேவ் வர்மன்!!”- அவன் பெயர்!! அவளை மானபங்கப்படுத்திய துரியோதன்!! கொழும்பை விட்டே ஓடி வர வைத்த அரக்கன்!!
அந்தக் கொடிய அரக்கனுடைய அனல் மூச்சு இன்றும் கூட அவள் உடலில் பட்டு மோதுவது போல பிரம்மை தோன்ற,அவஸ்தையாக உணர்ந்தாள் அக்னிமித்ரா!!
அவள் உடலெங்கும் ஓர் வெம்மை விரவிப் பரவ, அவளை எப்போதும் தூங்க விடாமல் செய்யும் கனவு!! அந்நொடி நனவில் வந்தது.
அவன் கழுத்தைத் தன் கையால் நெரிப்பது போல எண்ணி.. தன் கையில் இருந்த தண்ணீர் க்ளாஸை பலம் கொண்ட மட்டும் நசுக்கிக் கொண்டிருந்தாள் அக்னிமித்ரா!!
அவனால் நசுக்கப்பட்ட அதே கை!! அதே கையால்.. அவனுடைய கழுத்தை நெரிக்க வேண்டும் என்ற வெறி நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகிக் கொண்டே போனது!!
உலைக்களத்தில் கொல்லன் கையில் பட்ட இரும்பு, ஒவ்வொரு அடிக்கும் இறுகி நிற்குமோ? அது போல அவன் பேர் கேட்ட ஒவ்வொரு நொடியும் இறுகி நின்றது அவள் உள்ளம்!!! .
அடுத்த நொடி பட்டென்ற ஒலியுடன் நொறுங்கிய கண்ணாடி, அவள் உள்ளங்கையைக் குத்திக்கிழிக்க, அந்த வலியில் நனவுலகம் வந்தவள், கிளாஸை “தொபுக்கட்டீர்”என்று விட்டாள் தரையில்!!
“ஹேய் என்னாச்சு??கையெல்லாம் இரத்தம்!! ..”- பதறிப் போனவளாகக் கேட்டுக் கொண்டே இருக்கையை விட்டும் எழுந்தாள் கர்ப்பிணிப் பெண் கலா!!
மித்ராவுக்கோ உடல் நடுங்கவாரம்பித்தது. கையிலிருந்தும் சொட்டுச் சொட்டாக நிலத்தை நோக்கி வழிந்து கொண்டிருந்தது செந்நீர்!!
கர்ப்பிணி காலில் கண்ணாடித்துகள் குத்திப்பட்டு விடுமோ என்று யோசித்தவள், படபடப்புடன்.. ஒருநிலையில் நில்லாமல் நடுங்கிக் கொண்டே நிலத்தில் அமர்ந்து,
“ஐய்யோ ஸாரி.. நா.. நான்.. க்ளி.. கிளீன்.. பண்ணிட்றேன்”என்று கண்ணாடித்துகள்களைப் பொறுக்க முனைய, சட்டென அவளைத் தடுத்தாள் கலா.
“ச்சேச்சே.. நீ க்ளீன் பண்ண வேணாம்.. அதை க்ளீனிங் ஸ்டாஃப் பார்த்துக்குவாங்க.. வா உன் கைக்கு முதலில் மருந்து போட்டு விட்றேன்..”என்றவளாக, அக்னிமித்ராவின் இரத்தம் தோய்ந்த கையைப் பற்ற முனைந்தாள் மற்றவள்.
தன் கையை மற்றவளிடம் ஒப்படைக்காமல், “இ.. இல்.. இல்லை வேணாம்.. நான் பார்த்துக்குறேன்.. நீ.. நீ.. உன் ப்ரோக்ராமைக் க.. கக்கவனி”என்று திக்கித் திணறி உரைத்தவள், அங்கிருந்து படபடப்பாக வெளியேற முனைந்து, திறக்காத கதவின் கண்ணாடியில் தன் நெற்றியை இடித்துக் கொண்டாள்.
“ஹேய் பார்த்து மித்து..”என்று அவள் மறுபடியும் பதற, அது எல்லாம் மித்ராவின் காதில் விழவேயில்லை.
“இல்லை.. ஐ கேன் ஹேன்டில் இட்… சரி நான் கெளம்புறேன்..”என்று கலாவுக்குப் புறமுதுகிட்டுச் சொன்னவளாக,
அங்கிருந்து படபடப்புடன் வெளியேறி வந்தவள், வாஷ்ரூமில் கைகளைக் கழுவிக் கொண்டே, தன் பணியகத்தை விட்டும் இருப்பிடத்தை நோக்கி நடந்தாள்.
கண்டியின் இரவு நேரக் குளிரில் அவள் விட்ட ஒவ்வொரு உஷ்ண மூச்சும், பனி அடர்ந்த புகைமூச்சாகவே வெளிவந்து கொண்டிருந்தது.
கண்ணாடிக்குத்திய உள்ளங்கை வடுவில் குளிர் காற்றுப்பட்டு எரிந்தது அவளுக்கு.
வலியை உணராதவள் போல ஸ்வெட்டரை இழுத்துப் பிடித்துக் கொண்டு..தன்னுடைய ஸைட் பேக், பக்கவாட்டுத் தொடையில் பட்டு சலக் சலக் என்று ஒரு புதுவிதமான சத்தம் கேட்க, அந்தப் பள்ளமான பாதையோரம் விறுவிறுவென நடந்தாள் மித்ரா!!
தூரத்தே வானும், வானுயர்ந்த மரங்களும் இரண்டறக் கலந்து பனியில் மூழ்கிப் போயிருக்க, அவள் கால்கள் வேகவேகமாக நடந்தன.
அவளுடைய பணியகத்திலிருந்து, அவள் தற்போது வசிக்கும் இருப்பிடத்திற்கு வெறும் இருபது நிமிட நடைப்பயணமே!!
அவள் நடந்து செல்லும் நடைபாதையில் எந்த இடத்தில் எத்தனை கற்கள் இருக்கும்? முட்கள் இருக்கும்?? எல்லாமே அவளுக்கு அத்துப்படி!!
சாலையின் இரு மருங்கிலும் முளைத்திருந்த உயர்கம்பங்களில் நின்றும் வந்து கொண்டிருந்தது ஒருவிதமான மஞ்சள்நிறவொளி!!
அவள் கண்களில் அணைகட்டியிருந்த நீர், எங்கணமும் கன்னம் வழியாகப் பாயத் தயாராக இருந்தாலும், வீதியில் மட்டும் அழுது விடவே கூடாது என்று திண்ணமாக இருந்தாள்.
இரவில், தனிமையில் அவள் தன் வீட்டை நோக்கி நடந்தவேளை தான் அவள் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தேறியது.
அவளைக் கடந்து சென்ற, தன்னுடல் முழுவதையும் ஹூடியினால் போர்த்தியிருந்த ஓர் ஆடவன், அவளை இடித்தவாறு, அவளுடைய ஸைட்பேக்கினை பறித்துக் கொண்டு ஓட முயல, அவன் இடித்த இடிப்பில் சட்டெனக் கீழே தொப்பென விழுந்தாள் அக்னிமித்ரா.
அவளுக்கு நிமிடத்தில் தான் “வழிப்பறி பண்ணப்படுகிறோம்!!”என்று புரிய, அந்தத் திருடனை அங்கிருந்து போக விடாமல் அவன் கால்களை இறுகப் பற்றிக் கொண்டாள் அக்னிமித்ரா.
“என் பேஏஏக்!! .. என் பேஏஏக்!!.. ஹெல்ப்!!.. டேய் என் பேஏக்கை கொடுடா..”என்று கத்தியவளின் கண்களில் இருந்து வைராக்கியத்துடன் வழிந்தது கண்ணீர்!! விறைத்துப் போயிருந்தது முகம்!! இருந்தாலும் அந்தத் திருடனின் காலைப் பற்றியிருந்த அவளது உடும்புப் பிடி மட்டும் தளரவேயில்லை.
அவளை இழுத்துக் கொண்டே இரண்டெட்டு நடந்திருப்பான் அந்த வழிப்பறித் திருடன்!! அவள் எடையை இழுத்துக் கொண்டு நடப்பது சிரமமாக இருந்திருக்க வேண்டும் போலும், சட்டெனத் திரும்பி,
அந்தப் பையினாலேயே தட்தட்டென இரண்டடி போட்டான் அவள் பின்னந்தலைக்கு!!
அந்தக் கொடியவனின் அடி வலித்தாலும் பிடியைத் தளர்த்தாமல் இருந்தவளின் உள்ளத்தில் ஓடியது எல்லாம் ஓரே எண்ணம் தான்!!
ஒருதடவை அந்த அரக்கனிடம்.. வலியில் நொறுங்கி.. அவளுக்கிருந்த ஒரே ஆதாரமான பென்ட்ரைவ்வைத் தூக்கிக் கொடுக்க நேரிட்டது போல, இதை கொடுக்க நேரிட்டு விடக்கூடாது.
உயிர் போனாலும் அவளது பை இந்த வழிப்பறிக் கொள்ளைக்காரன் கையில் கிடைத்து விடக்கூடாது என்ற வெறி வர, தன் பற்களால் அவன் தொடையை அழுத்தமாகக் கடித்தாள் அவள்.
அவளது கடித்தலில் உயிர் போகக் கத்தினான் அந்தத் திருடன்!! அவனது கைகள் மாறி மாறி, பெண்ணவளை பலம் கொண்ட மட்டும் அடிக்கிறது. ஆயினும் அவள் கடைசி வரை அவனது தொடையின் கவ்வலை விடவேயில்லை!!
அந்த ஒதுக்குப்புறமான பகுதியில் நடந்த களேபரத்தில், ஊரடங்கிய பின்னர் கேட்ட சத்தத்தில் அந்த பக்கமாக வந்தான் ஆஜானுபாகுவான கட்டுடல் கொண்ட நெடியவன்!!
அந்தப் பள்ளமான பாதை நோக்கி.. தன் ஷூக்கால்கள் தடதடக்க வந்தவனின் கண்கள் அங்கு நிகழ்ந்தேறிய காட்சியைக் கண்டு அதிர்ந்து நின்றன.
இரவில், தனிமையில் வழிப்பறித் திருடனிடம் போராடிக் கொண்டிருக்கும் தைரியமான பெண்ணைக் கண்டான் அந்த வலிய திடகாத்திரமான ஆண்மகன்!!
இன்னொரு ஆடவன் அங்கே வந்து விட்டதைக் கண்ட திருடன், பையை அங்கேயே தொப்பென போட , பை தரையில் விழும் ஒலி கேட்டுத் தான் தன் கைகளையும், பற்களையும் திருடனிலிருந்து விடுவித்தாள் அக்னிமித்ரா!!
தான் விடுதலையடைந்ததும் விந்தி விந்தி திருடன் ஓடவாரம்பித்ததும், விறைத்தது அந்தப் புதியவன் உடல்!!
“டேய் ந்நில்டா.. த்தனியா ப்போற ப்பொண்ணுக்கிட்டேயா.. த்திருட்டுத்தனம் ப்பண்ற?”என்று பற்களைக் கடித்து எகிறிய வண்ணம் வந்து
வீதியில் கிடந்த கல்லைத் தன் கால்களால் உயர்த்தி எடுத்து, அவனுடைய பின்னந்தலைக்கே குறிபார்த்து அடித்தான் அந்த நெடியவன்!!
தலையில் கல் பட்டு குபுக்கென தெறித்தது இரத்தம்!! இருந்தும் நில்லாமல் ஓடினான் திருடன்!!!
அந்தப் புதியவனின் இரும்புக்குரல்.. அவளுடைய காதுகளை நிறைத்ததா? என்று அவளிடம் கேட்டாள் சொல்லத் தெரியாது!!
காரணம்.. அவள் கைகள்.. அந்தத் திருடன் போட்டு விட்டுச் சென்ற பையைத் தரையில் துலாவுவதிலேயே குறியாக இருந்தன.
மெல்ல திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்தவன் அப்படியே விழிகள் விரிய ஸ்தம்பித்துப் போய் நின்றான்!!
அவளது தொடை அருகிலேயே தான் இருக்கிறது அவளது பை!! இருப்பினும் வேறெங்கோ துலாவுகிறாளே இந்தப் பெண்??
அந்தப் பெண்ணுக்கு கண் தான் இருக்கின்றதே?? ‘டேய் முட்டாள்.. கண் அனைவருக்கும் இருக்கும்!! ஆனால் கண் இருக்குற அனைவருக்கும் கண்பார்வை இருக்குமா என்ன?’என்று இதயம் வேறு இடித்துரைக்க, மெல்ல அவளருகே சென்று, அவள் முகத்துக்கு முன் கைகள் இட்டு அசைத்துப் பார்த்தான்!!
அக்னிமித்ரா அவன் கை தன் முகத்துக்கு எதிராக அசைவது தெரியாமல் அப்படியே நின்று.. தன் பையை துலாவுவதிலேயே இருந்தாள் அவள்!!
அவளையே உணர்ச்சி சுத்தமாக துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்திருந்தவனுக்கு, அவள் பார்வை அற்றவள் என்று புலனாகிற்று!
அவளுக்கு உதவும் வண்ணம், அருகில் இருந்த அவளது பையை எடுத்து அவளிடம் நீட்டியவன், அவள் எழுவதற்கு உதவி செய்தவனாக,
“கண்ணு தெரிஞ்சவங்களுக்கே ராத்திரியில போக முடியாது.. உன்னை மாதிரி ஆளுங்க வரலாமா? அதுவும் தனியா?”என்றான்.
தன்னெதிரே நிற்கும் ஆடவனின் ஒருவகையான கம்பீர கணீக்குரல்.. அவன் ஓர் திடகாத்திரமான ஆண்மகன் என்பதை சொல்லாமல் சொல்லியது அவனுக்கு!!
அவன் பாதுகாப்பைப் பற்றிப் பேச.. இவளோ அவன் தன் இயலாமையைப் பற்றிப் பேசுவதாக எண்ணிக் கொண்டாள் போலும்!!
அவன் தனக்கு உதவுவது பிடிக்காமல், அவன் கைப்பிடியிலிருந்தும் விலகி, தானாகவே எழுந்தாள் அக்னிமித்ரா.
சட்டென தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவள், ஸ்வெட்டரால் இழுத்துப் போர்த்தி தன் அங்கங்கள் வெளித்தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டாள்.
பின்பு விட்டத்தை வெறித்துப் பார்த்தவளாக, வெறுத்துப் போன குரலில், “என்ன மாதிரி ஆட்களுக்கு பகலும், இராத்திரியும் ஒண்ணு தான்..!! இரண்டுமே இருட்டா தான் இருக்.. கும்…!!”என்றாள்.
அவள் கையில் பார்வை அற்றவர்கள் உபயோகிக்கும் கைத்தடி இல்லாததை கவனித்தவன், “கண்ணு தெரியாதுனா… ஒரு கேன் யூஸ் பண்ணலாம்ல?”என்று வெள்ளந்தியாகக் கேட்டான் அந்த நெடியவன்!!
அவன் பேசிய பேச்சுக்களே இதற்கு முதல் அவன், ஓர் மாற்றுத்திறனாளியின் பக்கத்தால் போனது கூட இல்லை என்பதைக் காட்டியது. அதனாலேயே என்னவோ அவன் பார்க்காமல் இடக்கரடக்கல் பார்க்காமல் அப்பட்டமாகவே வெளிவந்தது. (இடக்கரடக்கல் – மறைக்க வேண்டியதை மறைத்து, நாகரிகமா சொல்வதற்கு இலக்கணத்தில் வழங்கும் பெயர்)
இந்த மாதிரி வசனங்கள்.. அவள் காதிற்கு பழக்கமானது தானே?
“உடைஞ்சிருச்சு.. கேன் புதுசா வாங்கணும்!!”என்று மட்டும் சொன்னவள், மேற்கொண்டு அவனிடம் பேச்சு வளர்த்தாமல், தக்க சமயத்தில் வந்து, திருடனை விரட்டி விட்டதற்காக, ஒரு நன்றி கூட சொல்லாமல் அங்கிருந்து விரைந்தாள்.
அவள் பின்னாலேயே, துணைக்காக விரையப் பார்த்தன அவன் கால்கள்!!
அவன் காலடி சத்தம் உணர்ந்து தன் நடையை நிறுத்தியவள், அவனைத் திரும்பிப் பாராது, “எனக்கு போகத் தெரியும்.. நீ துணையா வரத்தேவையில்லை!!” என்று கறாராக மொழிந்தவள், மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தாள்.
செல்லும் அவளையே.. உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் அந்தப் புதியவனான நெடியவன்!!
அவள் வசித்தது மலையும், மலைசார்ந்ததுமான குறிஞ்சி நில எழில் சொட்டும் கண்டியில் இருந்ததாலோ என்னவோ? அவள் வீடு ஓர் மலை மேட்டிலேயே இருந்தது.
இருட்டில் யாருக்கும் தெரியப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டே, மௌனமாக கண்ணீர் சிந்திக் கொண்டு அழுதவளின் கைகள், தன் பையை நெஞ்சோடு அணைத்து இறுக்கிப் பிடித்திருந்தது.
வீட்டிற்கு வந்ததும் தான், இரை தேடப் போன பறவை கூட்டை அடைந்தது போல நிம்மதி பிறக்க, கதவடைத்தவள், கதவில் முதுகு சாய்த்து ஓவென்று கதறி அழுதாள்!!
அவளுடைய இந்த பார்வை அற்ற குருட்டு நிலைமைக்கு காரணம் அந்தக் கொடிய நரகாசுரன் “தேவ் வர்மன்!!”
தேவ் வர்மன் என்னும் ராட்சசன் அவள் வாழ்வில் வந்திராவிட்டால் இன்று அவள் பார்வை இழந்து நின்றிருக்க தேவையும் கிடையாது!!
அவளுடைய வரண்ட இதழ்கள் திரும்பத் திரும்ப “த்தேவ்.. த்தேவ்.. தேவ்”என்று வெறுப்பில் ஜெபாராதனை செய்ய, அவளது இருண்ட திரையில் எங்கும் விம்பமாக விரிந்தான் தேவ்!!
எங்கும் அவன் நின்று சிரித்துக் கொண்டிருப்பது போலத் தோன்ற, அந்த வீடே ஆனது ரணகளமாய்!!
அவளது டீவி, கண்ணாடி டீபோய், பூவாஸ், மேசை என ஹாலில் இருந்த அனைத்தும் சுக்குநூறாகிப் போனது!! அவளுடைய பாதங்களில் பட்ட கண்ணாடித் துகள் கிழித்து, இரத்தம் வந்து, தரையெங்கும் அவளால் வரையப்பட்டது ஒழுங்கற்ற இரத்தக்கோலம்!!
ஆத்திரம் தீராமல், சமையலறை சென்று.. பளபளக்கும் கூரிய கத்தியை எடுத்தவள், தரையில் அமர்ந்து சோபாவின் குஷனைக் குத்திக் குத்திக் கிழிக்கலானாள்.
எத்தனை தரம் குத்தினாளோ தெரியாது!! ஒவ்வொரு குத்தலுக்கும் அவள் இதழ்கள் ஓயாமல் மொழிந்தது இவை தாம்.
“த்தேவ்.. உன் ஸ்ஸாவு என் க்கைய்ல த்தான்.. உன்னைக் கொல்லாம விட மாட்டேன்.. உன்னைக் கொல்லாம விட மாட்டேன்!!”என்று தான்.
நா வரண்டு.. தொண்டை வற்றிப் போன பின்பும், அவள் கூச்சல் முணுமுணுப்பாக பரிணாமம் கண்டிருந்தாலும், அவள் குரல் அடங்கவேயில்லை!!
அக்னிமித்ரா.. அந்நொடி அக்னியாய் தகித்துக் கொண்டிருந்தாள்.
👌👌👌👌👌👌👌👌👌👌
super starting sis congrats
TCcyzHhGbBwvESRI
Adapavi ennada pannina avalai