எங்கேயும் காதல்!
[3]
கண்டி மாநகரத்தின் பிரதான வீதி… குறிப்பாகச் சொல்லப் போனால் கண்டியின் “பேராதனைப் பல்கலைக்கழகத் தெருவுக்கு சற்றுத் தள்ளி இருக்கும் பெருவீதி அது!!
கண்டியின் காலை நேர குளிர் காற்று, அலை அலையாக கேசத்தைப் பறக்கச் செய்ய வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தான் அந்நெடியவன்!!
அந்நெடியவனுக்கு முன்னாடி கைலி சகிதம் வண்டியோட்டிக் கொண்டிருந்தான் நெடியவனின் நண்பன் விக்னேஷ்!!
பளபளவென பல மாடர்ன் ஃபிகர்கள் நடமாடும் பல்கலைக்கழக வீதியில்.. கைலியோடு..வண்டியோட்டுவது விக்னேஷூக்கு அவமானமாகவே இருந்தது.
இந்த நிலைமைக்குத் தன்னை ஆளாக்கிவிட்ட வண்டியின் சைட் மிரர் வழியாக நண்பனை முறைத்துப் பார்த்தான் விக்கி!!
நண்பன் தன்னை முறைப்பது கூட அறியாமல், வழியில் போய் வரும் பெண்களை எல்லாம் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தான் அந்நெடியவன்!! அவன் பேர் “அதிமன்யு”!!
அதில் இன்னும் கொஞ்சம் கடுப்பான விக்னேஷ், “மச்சி.. காலையில பல்லு கூட தீட்டலை.. டிரஸ் கூட மாத்தலை.. பாரு வெறும் கைலியோட இருக்கேன்..
கிளம்பி வந்து.. ‘வண்டியை எடு’ன்ன!! நானும் நட்புக்காகன்னு தூக்கத்தை கூட விட்டிட்டு வந்து வண்டிய எடுத்தேன்….
‘ஃபார்மஸி’கூட்டிப் போய் ப்ளைன்ட் ஸ்டிக் வாங்கின..”என்று விக்கி தன் சொந்தக்கதை, சோகக்கதை படிக்க, சட்டென இடையிட்டான் அதிமன்யு!!
“மச்சி.. அதுக்குப்பேரு ஸ்டிக் கிடையாது.. கேன்!!.. சி.. ஏ.. என்.. ஈ..”என்று “கேன்”என்னும் வார்த்தைக்கு ஸ்பெல்லிங் சொல்லிக் கொண்டே போக.. இன்னும் கொஞ்சம் கடுப்பானது விக்னேஷூக்கு.
“ஆமா இவரு பெர்ரீய்ய இங்கிலீஸ்ஸூ வ்வாத்தியார்ரு .. என்னை வைச்சு க்ளாஸ் எடுக்கிறாரு.. உன்னோட டஸ்புஸ்ஸூ இங்கிலிஷெல்லாம்.. இங்கே வந்த டூரிஸ்ட் கிட்ட கத்துக்கிட்டதுன்னு எனக்குத் தெரியாது??” என்று அதிமன்யுவை கலாய்க்க, விக்கி பேசுவது அனைத்தையும் கேட்டும், கேளாதவன் போலவே பார்வையை பெண்களில் பதித்தபடியே வந்தான் “அதிமன்யு!!”
மீண்டும் தன் புலம்பலைத் தொடர்ந்தான் விக்கி.
“இப்போ எதுக்கு என்னை காலையில இருந்து… இந்த கண்டியை சுத்திக்காட்ட சொல்லிட்டிருக்க? நாம பண்ற தொழிலை விட்டுட்டு.. புதுசா ஏதாவது டூரிஸ்ட் கைட் ஆகப்போறியா என்ன? அப்படி ஏதாவது ஐடியா இருந்தா சொல்லிரு மச்சி.. மினிஸ்டர் கிட்ட..”என்று சொல்லிக் கொண்டே வர, நண்பனின் முதுகை அவசரமாகத் தட்டி வண்டியை நிறுத்துமாறு பணித்தான் அதிமன்யு.
“டேய் டேய்.. நிறுத்து..நிறுத்து..!!”
“வய்டா??”-பின்னாடி அமர்ந்திருந்தவனை, தலை திருப்பிப் பார்த்த வண்ணமே கேட்டான் விக்கி. ஆயினும் அப்போதும் அவன் வண்டியை நிறுத்தாமல் ஓட்டிக் கொண்டு தானிருந்தான்.
தன் அவசரம் தெரியாமல் நண்பன் கேட்ட கேள்வியில் சிறு ரௌத்திரம் எட்டிப்பார்க்க, “ட்டேய் நிறுத்துன்னு சொல்றேஏஏன்ல?”என்று கொஞ்சம் கத்தவே செய்தான் அதிமன்யு.
அவன் கத்தலில் காது “ஞொய்ய்”என்று கேட்கவாரம்பிக்க, காதை விரலால் குடைந்து கொண்டே, “அதுக்கு ஏன்டா இப்படி கத்துற?”என்றவாறு வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, பின்னாடி திரும்பிப் பார்த்த விக்கி அதிர்ந்தான்.
‘அதுக்குள்ள இவன் எங்கே போனான்?’என்று சுற்றுமுற்றும் திரும்பிப் பார்க்க, அதிமன்யுவோ.., அந்த “டூ வே”சாலையின் மறுமுனையை நோக்கி ஓடிக் கொண்டிருப்பது புரிந்தது.
அந்நேரம் பார்த்து ஒரு முச்சக்கர வண்டியும் நடுவே வர, அதில் மோதப்பார்த்த நண்பனைக் கண்டு, இருந்த இடத்தில் நின்றே, பதற்றத்துடன் காற்றில் கை நீட்டி, “மச்சி பார்த்து..”என்று கத்தினான் விக்கி.
சடன் பிரேக் போட்டு நிறுத்திய ஆட்டோ சாரதியோ, உள்ளிருந்த வண்ணமே எட்டிப்பார்த்து, தன் தாய்மொழியான சிங்களத்தில் அர்ச்சிக்கத் தொடங்கினார்.
அதைக்கேட்டும், கேளாதவன் போல, அந்த சாலையின் இடையில் போடப்பட்ட உலோக வேலியைப் பற்றி, மறுபுறச்சாலைக்கு ஸ்மார்ட்டாகத் தாண்டிப் பாய்ந்தான் அதிமன்யு.
‘இவன்..இவ்வளவு அவசரத்துடன் யாரைப் பார்க்கப் போகிறான்?’ என்று தோன்ற, நண்பன் விக்கியும் மெல்ல மஞ்சள் கடவையில் கடந்து.. அடுத்த பாதையை அடையலானான்.
பல்கலைக்கழக அருகாமையில் இருந்த பேருந்து தரிப்பிடத்திலேயே, அதிமன்யுவின் கண்கள் ஆழப் பதிந்திருந்தது.
அவன் பின்னாலேயே மெல்லோட்டத்துடன் நடந்து வந்து கொண்டிருந்த விக்கி, நண்பனின் பார்வை சென்ற இடத்தை உற்று கவனிக்க,
அங்கே எளிமையான ஸ்கேர்ட் என்ட் டீஷேர்ட்டில் திவ்யமான அழகுடன் ஓர் பெண் நின்றிருப்பதைக் கண்டான்.
அதைக்கண்டதும் விக்கியின் விழிகள் அகல விரிந்தன. நடந்து கொண்டே நண்பனையும், அந்தப் பெண்ணையும் முட்டைக்கண்கள் விரியப் பார்த்தான் அவன்.
‘அடப்பாவி.. இந்தப் பொண்ணைப் பார்க்கவா.. அரக்கப் பறக்க.. உயிரைக் கூட பணயம் வைச்சு ஓடி வந்த?”என்று கேள்வி கேட்டது விக்கியின் உள்ளம்.
அந்தப் பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த திவ்யமான அழகுப் பெண்.. அவன் நேற்று இரவு உதவி செய்த அதே “அக்னிமித்ராவே” தான்!!
அவளருகே.. தன் நிறைமாத கர்ப்ப வயிற்றை சுமந்து கொண்டு நின்றிருந்தது அவளுடன் வேலை பார்க்கும் சக பணியாளினி “கலா”!!
நேராக அக்னிமித்ராவை வந்தடைந்த அதிமன்யு முகத்தில், அவளைக் கண்டதும் மெல்லிய புன்னகை பரவியது!! ஏதோ இத்தனை நாளாய் தேடிய பொருள் கிடைத்தது போன்ற சந்தோஷம் அவனுள்.
ஆமாம், காலையில் இருந்து அவனது மனம் எந்த பெண்ணைப் பார்த்தாலும், ‘இது அவள் தானோ?.. இது அவள் தானோ?’ என்று தானே திரும்பத் திரும்பப் பார்த்தது??
அந்தப் பாரிய சாலையை ஓடிக் கடந்து வந்தவனுக்கு மூச்சு வாங்கியிருக்க வேண்டும்.
அதிமிதமான பெரும் பெரும் மூச்சுக்களை விட்டுக் கொண்டே, அவளைப் பார்த்துக் கேட்டான் அவன் “உன்னைஹ் ஹெங்கேயெல்லாம் தேடுறதுஹ்?”என்று தான்.
நேற்றிரவு தான் கேட்ட, அதே கணீர்க்குரல்.. இன்று தன் முன்னாடி கேட்கவும், கைகட்டி நின்றிருந்தவளின் கைகள் பதற்றத்துடன் சுயாதீனமாக கீழிறங்கத் தொடங்கியது.
கலாவோ, ‘யாரிந்த புது ஆடவன்?’என்பது போல வந்தவனை உச்சாதிபாதம் வரைப் பார்க்க, அதிமன்யுவின் கவனம் முழுவதும் பதிந்திருந்தது அந்த தேவதைப் பெண்ணின் மேல் தான்!
அவன் இடைவெளியே விடாமல் கடகடவென்று பேசிக் கொண்டே போக, அவன் சொல்வதை உள்வாங்க அவளது காதுநுனி மெல்ல ஏறித் தாழ்ந்தது.
“நேத்து ராத்திரிஹ்.. ஒரு “தேங்க்ஸ்”கூட சொல்லாமல் போயிட்ட…கேன் வேற உடைஞ்சிருச்சு சொன்னேல்ல? மனசு கேட்கலை.. அதான் உனக்காக வாங்கியாந்தேன்..”என்று அவன் மொழிந்ததோடு நில்லாமல்,
உரிமையோடு அவள் கையை எடுத்து “இந்தா இதைப்பிடி..”என்றவனாக, அந்த “கேன்”னை அதில் வைக்கவும் செய்தான்.
அவ்வளவாக யாரையும், தன்னைத் தொட்டுப் பேச அனுமதித்திராதவளுக்கு, அந்தப் புதியவனின் செயல் முகத்தை சுழிக்க வைத்தது.
கூடவே அவனுடைய கரடுமுரடான உள்ளங்கைச் சூட்டை உணர்ந்தவளுக்கு, அவளுள் அது ஏதோ செய்தது.
அவளது கண்ணின் கருமணிகள் அங்குமிங்கும் ஓட, அவளில் ஏற்படும் மாற்றங்கள் அறியாமல் தொடர்ந்து பேசினான் அதிமன்யு.
“பார்மஸிஸ்ட் கிட்ட நல்லா விசாரிச்சுப் பார்த்துட்டேன்.. இது தான் லேட்டஸ்ட் மாடலாமாம்.. இதில் நிவ் பீட்ச்சர்ஸ் இருக்கு.. இந்த பட்டனை பிரஸ் பண்ணா.. இதை மடிக்க வேண்டிய தேவையில்லாமல்.. அதுவாவே ஸ்மூத்தாக உள்ளே போயிரும்..பாரு எப்படி ஸ்மூத்தா போகுது.. ”என்று அவளுடைய மென்மையான பஞ்சு விரல்களை எடுத்து, அவன் சொன்ன அந்த பட்டனை அழுத்தவும் செய்தான்.
சின்ன ஒலியுடன்.. அந்த பிரம்பு உள்ளே சென்று ஒரு முழங்கை அளவுக்கு சுருங்கிக் கொள்ள, இவனோ அவளை நோக்கி, “எப்படி பிடிச்சிருக்கா?”என்று கேட்கவும் செய்தான்.
அவளுடைய முகம் எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமல் இருக்க, அவளையே வெள்ளந்தியாகப் பார்த்திருந்தான் அவன்.
அடுத்த நொடி அவள் மதிமுகம், கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தில் சிவக்கத் தொடங்கியது.
பின்னே “பஸ் ஸ்டாப்”என்பது பலரும் வந்து செல்லும் பொது இடம். அங்கே அவள் கைப்பிரம்பு இல்லாமல் நின்றிருக்கும் போது, இவன் அங்கே வந்து “வெள்ளைப்பிரம்பை” ஒப்படைத்தது தன் குறைபாட்டை அனைவர் முன்னாடியும் அவன் அம்பலப்படுத்தி, அவமானப்படுத்த முயல்வதாகவே கருதினாள் அக்னிமித்ரா.
காலையில் இருந்து ஒரு டெலிபதி உள்ளுணர்வு, ‘அவளைப் பார்ப்பேன்.. பார்ப்பேன்”என்றே மீண்டும் மீண்டும் சொல்ல, அவளைப் பார்த்ததும் வந்த ஓர் ஆர்வக் கோளாறில் யோசிக்காமல் செய்த செயல் அது.
நேற்றிரவு இடக்கரடக்கல் அறியாமல் பேசியவன், இன்றும் அந்தப் பிழையே தான் திரும்பவும் செய்தான்.
அதிமன்யு அவளில் இருக்கும் குறையை பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “தலைவலி, காய்ச்சலுக்கு மாத்திரை கொடுப்பது போல” வெள்ளைப்பிரம்பைக் கொடுப்பதையும் எண்ணிக் கொண்டானோ?
அப்படித்தான் இருந்தது. அவனது பேச்சும், செயலும்.
கூட வந்த விக்கியும் கூட, அந்தப் பெண்ணின் கையில் தோழன் ஒப்படைத்த வெள்ளைப் பிரம்பையும், நண்பன் பேச்சையும் கேட்டு, அதிர்ச்சியுடன் நின்று விட்டிருந்தான்.
அப்படியானால் இந்த அழகான பெண் “பார்வை அற்றவளா?”என்ற எண்ணமே முகிழ்த்தது விக்கிக்குள்.
பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் வேறு லெக்ச்சர்ஸூக்காக பரபரப்பாக போய்க் கொண்டிருந்த நேரம்.
வீதி வேறு பஸ்களின் ஹாரன் ஒலிகளாலும், பைக்களின் உறுமல் சத்தத்தாலும் நிறைந்திருக்க, பஸ்ஸில் செல்லும் பயணி கூட ஜன்னல் வழியாக அவளையே பரிதாபத்துடன் பார்ப்பது போல பிரம்மை தோன்றலாயிற்று அவளுக்கு.
“அதிமன்யு” தன்னை அவமானப்படுத்துவதாகக் கருதியவள், கோபத்தில் தன் ஸ்கேர்ட்டினை அழுந்தப் பற்றி, தன் ஒற்றை உள்ளங்கைக்குள் அடக்கி, கால் பெருவிரலைத் தரையில் ஊன்றி, பெரும் பெரும் அக்னிமூச்சுக்களை தன் தனங்கள் ஏறி இறங்க விட்ட வண்ணம் நின்றிருந்தாள் அக்னிமித்ரா.
அவள் பதற்றமடைவதைக் கவனித்த கலாவோ, “யார் மித்ரா இது? உனக்குத் தெரிஞ்சவரா என்ன?”என்று கேட்டது, அக்னிமித்ராவின் செவிகளுக்கு சென்றடையவே இல்லை.
இருப்பினும் கலா உரைத்த அவள் பெயர், “மித்ரா”என்னும் அவள் பெயர்… இவனுள் தாருமாறாகவே சென்றடைந்தது.
அடுத்த நொடி, அந்தப் பொதுவிடத்தில் தன் இயல்பைத் தொலைத்தவள், தொனி உச்சஸ்தாயியிலேயே தான் வெளிவந்தது.
பற்களை அழுந்தக் கடித்துக் கொண்டு, “ந்நான் க்கேட்டேனாஏஏ? ‘எனக்கு வைட் கேன் த்தேவை.. வ்வாங்கித் த்தர்றியா?’ன்னு ந்நான் உஉஉன் க்கிட்ட க்கேட்டேனா? ஏதோ நேத்து ந்நீ எனக்கு ஹெல்ப் ப்பண்ண….. அ.. அது.. அதுக்காக.. அட்வான்டேஜ் எடுத்துக்கப் ப்பார்க்கிறியா? பப்..பரிதாபப்படுறியா? நாங்களும் உங்களை ம்மாதிரி சகமனுஷங்க தான்.. எங்களைப் பார்த்து பரிதாப்படுறதை முதல்ல நிறுத்துங்க..” என்று இறுதியாக அவள் மொழிந்தது என்னவோ அவள் சமூகத்தைப் பார்த்து கேட்பதைப் போலவே இருந்தது கலாவுக்கு.
“நான் ய்யார் த்தயவும் இல்லாமல்.. சொந்தக்காலில் தான் இதுவரை ந்நின்னுட்டிருக்கேன்… எனக்கு கேன் வாங்கிக்கத் தெரியும்.. எனக்கு உன் உதவ்வ்வி த்தேவ்வைய்யில்லைய்ய்..”என்று கத்தியவள், அடுத்து செய்ததெல்லாம் ரொம்ப அதிகப்படி!!
அவன் காலையில் எழுந்து, ஃபார்மஸி சென்று, அவளுக்காக வாங்கி வந்த கேனைத் தூக்கி வீசியிருந்தாள் அக்னிமித்ரா.
கண்தெரியாத பெண்.. ஆத்திரத்தில் வீச, சரியாக அது நடுவீதியில் சென்று விழ, அதன்மேல் பஸ்ஸின் பாரிய சக்கரங்கள் ஏறிச்செல்ல, “டக்” என்ற ஒலியுடன் நொறுங்கிப் போனது வெள்ளைப்பிரம்பு.
தன்னை உதாசீனப்படுத்தியவள் மேல் இன்ஸ்டட்டாய் ஒரு கோபம் தோன்ற, கைமுஷ்டி இறுக்கிக் கொண்டே ஆத்திரத்தில் முன்னேறப் பார்த்த அதிமன்யுவை, தடுத்து நிறுத்தியது நரம்போடிய மற்றுமோர் மாநிறக்கை.
திரும்பிப் பார்த்த போது சாந்தமான முகத்துடன், ‘வேண்டாம்’என்பது போல சைகை செய்தவண்ணம் நின்றிருந்தான் விக்னேஷ்.
அவன் மெல்ல திரும்பி மித்ராவின் விழிகளைப் பார்த்தான். பார்வையேயற்றிருந்தாலும் அந்த விழிகள், அந்த அழகிய ஆடும் கருமணிகள் கொண்ட அந்த விழிகள் ஆயிரம் உணர்ச்சிக்கவிதைகள் சொன்னது அவனிடம்.
திட்ட வாயெடுத்தவன், அவளது கீழிமையில் தேங்கி நின்ற வைராக்கியம் சுமந்த கண்ணீரைக் கண்டு.. ஏனோ அமைதியாக நின்றான்.
அந்த கணம் பேருந்து தரிப்பிடத்தின் பக்கத்தில் வந்து சர்ரென்று நின்றது ஒரு “போலிஸ்” கார்!!
அதன் உள்ளே முறுக்குமீசையுடன், காக்கிச் சட்டையில் அமர்ந்திருந்த ஒரு காவல் அதிகாரி, “கலாஆஆ…”என்று கூப்பிட, மெல்ல சத்தம் வந்த திசையைத் திரும்பிப் பார்த்த கலாவின் கண்கள் இனிதாக அதிர்ந்தது.
காவலதிகாரி யாரும் இல்லை. அது கலா வயிற்றில் வளரும் சிசுவுக்கு தந்தை. ஆம், கலாவின் இனிய கணவரே தான்!! திரு. சிவகுமார்.
மாலையில் தான் இருவருக்கும் ரேடியோ ஸ்டேஷனில் வேலையாதலால், சின்ன ஷாப்பிங்கை முடித்து விட்டு, மதிய உணவுக்காக கலா அழைப்பின் பேரில், கலா வீட்டுக்கு செல்ல ஆயத்தமாகி நின்ற இரு பெண்களையும் அழைக்க வந்திருந்தார் போலிஸ்காரர்!
கணவன் குரல் கேட்டதும், புன்னகையுடன், “இதோ வந்துட்டோம்..”என்ற கர்ப்பிணிப் பெண்ணும், மித்ராவின் முன்னங்கையைப் பிடித்துக் கொண்டு, கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டே காவல் துறை வண்டியை நோக்கி நடந்தாள்.
ஆம், “இழுத்துக் கொண்ட” என்ற பதம் தான் இத்தருணத்திற்கு சாலப்பொருந்தும்.
தன்னை அவமானப்படுத்தி விட்டும் செல்லும் பெண்ணின் புறமுதுகையே சிவந்த கண்களுடன் பார்த்திருந்தான் எதையும் முன்யோசனையற்று, குழந்தை போலச் செய்யும் அதிமன்யு!!
‘நிஜமாகவே அவன் செய்த செயலால்.. அவள் மனம் வலித்திருக்கும்’என்று தோன்ற.. அவன் முகம் கறுத்து வாடத்தொடங்கியது.
பெண்கள் இருவரும் வண்டியில் ஏறியதும், அந்த முறுக்குமீசை கொண்ட, நெடுநெடுவென்று உயர்ந்த பனை மரம் போல வளர்ந்திருந்த போலிஸ்காரரும் கார் ஜன்னல் வழியாக இரு ஆடவர்களையும் உச்சாதி பாதம், சந்தேகக் கண்ணோடு பார்க்கவாரம்பித்தார்.
அவரின் முறைத்தல் பார்வை, யாருக்கு எப்படியோ.. விக்னேஷூக்கு உள்ளே குளிர்ஜூரத்தையே வரவழைக்கும் போல இருந்தது.
விக்னேஷ் வேறு பிரதான வீதியில் பழைய கைலியுடன் நின்றிருக்க, முறுக்குமீசை போலிஸ்காரின் கண்கள் அவனை இன்னும் ஒருசில நொடி நேரம் அதிகமாகப் பார்வையிடலானது.
அவர் பார்ப்பதை உணர்ந்தவன், இலேசாக நண்பன் தொடையைச் சுரண்டி, தாடியை சொறிவது கிசுகிசுப்பான குரலில்,
“டேய் போலிஸ்டா.. அப்படியே தாஆஆடியை.. சொறி.. யுற மாதிரி.. லெஃப்ட் பக்.. கம் திரு.. ம்பி.. வான.. த்தைப் பாரு..”என்று ஸ்லோ மோஷனில் சொன்னவன், அவன் சொன்னது போலவே தாடியை சொறிந்து, இடதுபக்கம் திரும்புவது போல வானத்தைப் பார்க்கவும் செய்தான்.
அவள் தந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த அதிமன்யு, மெல்லத் திரும்பிப் பார்த்த போது, நண்பன் நின்றிருக்கும் நிலையைக் கண்டு இலேசாக அதிர்ந்தான்.
“இப்போ நீ என்ன பண்ணிட்டிருக்க?”-புரியாமல் மெல்லக் கேட்டான் அதிமன்யு.
அப்போதும் தாடியைச் சொறிவதை நிறுத்தாமல் , உள்ளங்கையால் வாயை மறைத்துக் கொண்டே, “அந்த பெரிய போலீஸைக் கண்டுக்காத மாதிரி நடிக்கிறேன்…”என்றான் விக்கி.
விக்கியை போலி அருவெறுப்பு மீதூறப் பார்த்த அதிமன்யு, “அடச்சீ.. முதல்ல அப்படி பண்றதை நிறுத்து.. ஜூவில்(zoo) இருந்து பாய்ஞ்சு வந்த குரங்கு மாதிரி இருக்கு..”என்று சொல்லவும் தான், வானத்தைப் பார்ப்பதை நிறுத்தினான் விக்கி.
விக்கியின் குறுகுறு பார்வையும், இருவரின் குசுகுசு பேச்சையும் கவனித்த முறுக்கு மீசை போலிஸ்காரருக்கும் சந்தேகம் வலுக்க,
ரியர் வீவ் கண்ணாடி வழியாக, பின்னே அமர்ந்திருந்த தன் மனைவியையும், மித்ராவையும் நோக்கியவர்,
“என்னமா ஏதாவது ப்ராப்ளமா??அந்த பசங்க ஏதாவது பிரச்சினை பண்றாங்களா?”என்று கேட்க,
மித்ரா வாய்த் திறக்கும் முன்னம், அவள் தொடையை அழுந்தப் பற்றி, ‘வாய் திறக்க வேண்டாம்’ என்பது போல சைகை செய்தாள் கலா.
பின்பு, கணவனை நோக்கிய இனிய குரலில், “ச்சேச்சே அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க.. அவங்க மித்ரா ஃபேன்.. ஆசையா பார்க்க வந்துட்டு.. மித்ரா நிலைமை தெரிஞ்சதும் அதிர்ச்சியாகி நிற்கிறாங்க.. வேறொண்ணுமில்லை”என்று அந்த இளம்வாலிபர்களை காட்டிக் கொடுக்காது சொன்னாள்.
மனைவி சொன்னதைக் கேட்ட பின்னர் மீண்டும் ஒரு முறை.. இரு ஆடவர்களையும் மேய்ந்தது அவரின் பார்வை!!
விக்கியை பார்க்கும் போது சந்தேகம் வலுத்தாலும், அதிமன்யுவின் சிவந்த கண்களையும், இறுகிய முகத்தையும் பார்க்கும் போது மனைவி சொல்வது உண்மை போலவே தோன்றியது.
மீண்டும் ரியர் வீவ் கண்ணாடி வழியாக மனைவியைப் பார்த்தவர், மித்ராவைப் பார்க்க வந்து அதிர்ந்து நின்ற பல கதைகள் கேட்டிருப்பவராயிற்றே?
அதனால் சின்ன நமட்டுச் சிரிப்பு மீதூற, “அது வழமையா நடக்கிறது தானே?.. என்னைக்கு இன்னர் பியூட்டிய பார்க்குற பக்குவம் இந்த ஜெனரேஷன்க்கு வருமோ?..”என்று சலித்துக் கொண்டவர்,
பக்கத்தில் அமர்ந்திருந்த கான்ஸ்டபிளிடம், “டிரைவர் வண்டியை எடு..”என்று கட்டளையிட, புழுதியைக் கிளப்பிக் கொண்டு கிளம்பியது போலீஸ் வண்டி.
வண்டி நகர்ந்ததும் தான் பெருமூச்சுவிட்டுக் கொண்டே சமரசம் அடைந்தான் விக்கி.
பின்னே, இந்த இரு இளம் வாலிபர்களும் செய்யும் தொழில் அப்படி!! அதில் கொஞ்சம் சறுக்கி, அவர்கள் பற்றிய உண்மை தெரிய வந்தால், அந்தப் பெரிய போலீஸ்காரர் லாடம் கட்டிவிடுவார் என்ற பயத்தினால் விளைந்தது தான் அந்தத் தடுமாற்றம்.
செல்லும் போலிஸ் வண்டியையே பார்த்திருந்த அதிமன்யுவுக்கோ,அப்போதும் இறுகிப் போன முகமும், சிவந்த கண் பார்வையும் மாறவேயில்லை.
***
கலாவின் வீட்டு அழகான தோட்டத்தின் நடுவே போடப்பட்டிருந்த நீண்ட ஊஞ்சலில் அமர்ந்து, ஆடிக் கொண்டிருந்தவளின் கண்கள் விட்டத்திலேயே நிலை கொண்டிருந்தது.
ஊஅஞ்சலின் இரும்புக் கொண்டியோ, ஒருவகையான தாளத்துக்கு ஏற்ப இசைபாடிக் கொண்டிருக்க, அந்த கிறீச்சிடும் ஒலியும், கால்களில் உரசும் புல் நுனியின் குளிர்மையும், என அனைத்தையும் உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருந்தாள் மித்ரா.
சுற்றி வர மாமரங்களும், குளிர் பிரதேசத்தில் வளரும் ஃபைன் மரங்களும் அந்த இடத்தையே கதகதப்பாக வைத்திருந்தது.
அடிக்கடி அடித்த காற்றின் விளைவாக, முன்நெற்றி மறைத்த கூந்தலை, காதுக்கிப் பின் சொருகிக் கொண்டே, அந்த இரம்மியமான நேரத்தை கழித்தாள் அவள்.
என்ன தான் சிந்தனையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க, அவள் பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ள, அடங்காமல் தறிகெட்டுப் பாய்ந்தது மனம்.
“இந்தா இதைப்பிடி..”-திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது அவனது கணீர்க்குரல்.
கூடவே அவள் கை பிரம்மையாக உணர்ந்தது அவனது முரட்டு உள்ளங்கை ஸ்பரிசத்தினை.
எத்தனையோ முறை தலைகுலுக்கிய வண்ணம் நிகழ்வுலகத்துக்கு வந்த போதிலும், தன்னையும் மீறி.. அவளது நினைவெல்லாம் அந்தக் கணீர்க்குரல் காரன் பற்றியே சுற்றிச் சுழன்றது.
“பிடிச்சிருக்கா?”- காதோரம் கிசுகிசுப்பாக அவள் குரல் கேட்க, சட்டென தூக்கிவாரிப்போட்டது மீண்டும் ஒருமுறை.
அங்கணம், அவளை நாடி வந்த கலா, மெல்ல ஆசுவாசமாக ஊஞ்சலில் அமர்ந்து, மித்ராவைப் பார்த்துக் கொண்டேயிருக்க, அவள் பார்ப்பதை உள்ளுணர்வால் அறியப் பெற்றவள்,
சட்டெனத் திரும்பி கலாவை நோக்கி, “என்ன மேடம்?”என்று புன்னகையுடன் கேட்டாள்.
அவளது கேள்வியில் சிந்தனை களைந்த கலா, சின்னவள் கையை ஆதரவுடன் பற்றியவளாக, வாய் திறந்தவளின் குரலில் இழையோடிப் போயிருந்தது மெல்லிய வருத்தம்.
அப்படி அவள் என்ன சொன்னாள்? அவள் சொன்னது எல்லாம் இவை தாம்.
“உன்னை நம்ம ரேடியோ ஸ்டேஷனுக்கு வர்க் பண்ண வந்த ஒரு வருஷமா பார்க்கிறேன்.. ஒருகுறை சொல்லும்படியில்லாமல்.. யார் மனதையும் நோகடிக்காமல் எல்லார் கூடேயும் சிரிச்சு பழகின… அப்படியிருந்த மித்ராவா இன்னைக்கு ரோட்டில் வைச்சு.. அந்தப் பையனை அசிங்கப்படுத்தினதுன்னு தோணுச்சு..”என்று சொல்ல, அவளது வாய் அசைவது மெல்ல நின்றது.
அவள் உள்ளுக்குள் மருகிக் கொண்டிருந்த சின்ன விஷயத்தை, பெரியவளான கலாவும் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குற்றவுணர்வு எழுந்து, இதயம் முழுவதும் விரவிப் பரவலானது அவளுக்குள்.
அதை உணராத கலாவோ, “மித்ரா.. நீ.. இன்னைக்கு பண்ணது கொஞ்சம் கூட எனக்குப் பிடிக்கலை.. அவன் தந்ததை நீ விரும்பலைன்னா அமைதியா மறுத்திருக்கலாம்.. இன்னைக்கு பார்த்த மித்ரா.. நான் என்னைக்குமே பார்த்திராத மித்ரா..”என்று கூறிச் செல்ல, ஸ்தம்பித்துப் போய் நின்றாள் மித்ரா.
அவள் மனதில் முதன்முதலாகப் பெயர் தெரியாத அந்த ஆண்மகனைப்பற்றிச் சின்ன கழிவிரக்கம் வந்து போனது.
***
அன்றிரவு இசை வானலை நிலையத்தில்,
அன்றைய நிகழ்ச்சியின் போது நேயர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய டாபிக்குகளையும், அது சார்ந்த கேள்விகளையும் பிரெய்லி எழுத்து முறையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தந்திருக்க,
அந்தக் குற்று வைத்த எழுத்துக்களை கைகளால் தொட்டுத் தொட்டு வாசித்துக் கொண்டிருந்தாள் அக்னிமித்ரா.
அவளுடைய முகம்.. வழமை போல புத்துயிர்ப்பாக இல்லாமல், கொஞ்சம் சோபையிழந்தே இருந்தது.
அத்தனை பேர் முன்னாடியும் தன் இயலாமையை அம்பலப்படுத்தி விட்டானே என்று அவன் மேல் கோபப்பட்டவளுக்கு, ‘நீயும் பதிலுக்கு அவனை அசிங்கப்படுத்தித் தானே இருக்கிறாய்?’ என்று மனமும், கூடவே தோழி கலாவும் இடித்துரைக்க,
கைவிரல்கள் பிரெய்ல் எழுத்திலேயே தேங்கி நிற்க, மனமெல்லாம் அவனிலேயே தேங்கி நின்றது.
அந்த கணம் அவளை நடப்புக் கொண்டு வரும் வண்ணம், இடத்தையே நிறைத்துக் கொண்டு கேட்டது, ஓர் துள்ளல் நிறைந்த ஆண்குரல்!!
“மித்து.. உனக்காக காபி..”
அந்தக் குரலில் இருந்த உற்சாகம், இளமைத் துள்ளல் இவளையும் தொற்றிக் கொள்வது போல இருக்க, அவளது நாசி முகர்ந்தது ஃப்ரஷ் காபிக் கொட்டைகளின் நறுமணம்!!
குரல் வந்த திசையைப் பார்த்து, தன் முத்து மூரல்கள் தெரிய, தலைசரியப் புன்னகைத்தவள் “தேங்க்யூ சந்துரு!!”என்றாள்.
சந்துரு.. கலாவுடன் வேலை பார்க்கும் சக ஆர். ஜேவே தான். தலைக்கு குளித்து, புத்துணர்ச்சியுடன் வந்திருந்தது என்னவோ அவனது உடல் மட்டும் தான்!
ஆனால் அவன் மனம் என்னவோ கயமையாலும், பெண் பித்தாலும் நிறைந்து போயிருக்கும் சாத்தான் மனது என்பது மட்டும் உண்மை!!
மேசையில் காபி கப்பை வைத்தவனின் கண்கள், கண்கள் இழந்த, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்று இனங்காண முடியாத மித்ராவின் ஓவியம் போல் இருந்த உடலில் தாராளமாகவே மேய்ந்தது.
அவளது செவ்விதழ்கள், கழுத்து, கழுத்துக்குக் கீழான பெண்மைப் பிரதேசம்.. எல்லாவற்றையும்.. இச்சை கமழப் பார்த்துக் கொண்டிருந்தான் சந்துரு.
அவளுடைய கொஞ்சமே கொஞ்சம் லோ கட் ப்ளவுஸ் வழியாகத் தெரிந்த தனங்களின் பிளவு!! அவனது பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருந்தது.
அவளது நன்றிக்கு மறுபதிலாக, “எனிதிங் ஃபோர் யூ பேப்..”என்றவனின் குரல் கொஞ்சம் கிறங்கிப் போயிருக்க, மித்ரா அறியாமல் மெல்ல குனிந்து அவள் கூந்தல் வாசத்தை, அருவெறுப்பூட்டும் விதமாக.. கிறக்கத்துடன் முகர்ந்தான்.
அவன் விட்ட சின்ன ஏக்கமூச்சில், மித்ரா சுருங்கிய விழிகளுடன் நிமிர, அவள் தன் கோளாறை இனங்கண்டு விடுவாளோ என்ற பயத்தில்,
மேசை மீதிருந்த ஆபிஸ் டிராயர் சாவியைக் கீழே தட்டிவிட்டான் சந்துரு.
மித்ராவின் காதுகளும், கண்களும் ஒருங்கே சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்ப, சட்டென அவளை விட்டும் விலகி நின்றவன், “ஐய்யோ ஸாரி மித்து..தெரியாமல்..”என்று சொன்னவனின் குரல் மட்டும் தான் பதற்றத்துக்குள்ளாகியிருந்தது.
ஆனால் அவனது உடல்? அது எந்த குற்றவுணர்ச்சியையும் காட்டாது, கல்லென நின்ற இடத்திலேயே சமைந்து நின்றிருந்தது.
“இட்ஸ் ஓகே.. நான்.. நான்.. பார்த்துக்கிறேன்..”என்று சேரில் இருந்தே அவள் குனிய, மித்ரா அறிவதற்கிடமின்றி, ஏதேதோ நிகழ்ந்தது.
அங்கேயே அவளெதிரேயே இடித்த புளி போல நின்றிருந்த அந்தக் கயவனின் கண்களுக்கு விரியலாயிற்று அவள் கழுத்துக்கு கீழான பகுதி!!
அக்கணம், அதை இதழ்களைச் சுவைத்த வண்ணம் பார்த்த சந்துருவின் கண்கள் காட்டிய உணர்ச்சிகளின் போக்கினை, எழுத்தில் வடிக்கும் தரமன்று.
கண்ணுள்ள, ஒழுக்கமுள்ள எந்தப் பெண்ணேனும் சந்துருவின் அந்தப் பார்வையைப் பார்த்திருந்தால்… முதலில் அவர்தம் முகம் சுழித்திருக்கும். அடுத்ததாக அந்தக் கயவனை நெற்றிக்கண் திறப்பது போல எரித்திருக்கும். அதற்கும் மேலாக பளாரென ஓங்கி அறைந்ததில் சந்துருவின் கன்னம் பழுத்தும் இருக்கும்.
இதை எதையும் அறியாத வெள்ளந்திப் பெண், சாவியை எடுக்க, அவளது கோணத்தை, சத்தமில்லாமல் ஃபோட்டோ எடுக்கலானான் பொறுக்கி சந்துரு.
கண்ணிருக்கும் பெண்களுக்கே இந்த மனிதமிருகங்களுக்கு மத்தியில் இத்தனை இடர்ப்பாடாயின், கண் பார்வையற்ற பெண்ணான அக்னிமித்ராவுக்கு?
அவள் அக்னிமித்ரா!! அக்னி.. நீர்த்துப் போன தருவாயிலும் சுட்டெரிக்கும் என்பதை அந்த அயோக்கியன் அப்போது அறிந்திருக்கவில்லை.
👌👌👌👌👌👌👌👌👌
piBXDIkVcjAY
Pavam agni