ATM Tamil Romantic Novels

எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்! [5]

 அடுத்த நாள் காலை… 

அவளுடைய மூடிய விழித்திரையில் தீடீரென வந்தது ஓர் வெள்ளை வெளேரென்ற பிரகாசம்!! 

கண்களுக்குள் அனல் ஜூவாலைகள் உருண்டு வருவது போலத் தோன்ற, உடலெல்லாம் தகிக்கத் தொடங்கியது அக்னியின் மித்ரையிற்கு. 

அவளுடைய கைகள் எதையோ ஒன்றைத் தேடிப் பயணிக்க, கண்ணைப் பறிக்கும் அந்தப் பிரகாசத்திலும் கூட அவள் இதயம் அவளது தாத்தாவைத் தான் தேடலாயிற்று. 

வரண்ட இதழ்கள் திறந்து, தன் தாத்தாவை அழைக்க முற்பட்ட நேரம்.. அவளுடைய வெண்சங்குக் கழுத்தை கொலைவெறி ததும்பும் கண்களுடன் நெரித்துப் பிடித்தான் தேவ்!! அந்த இராட்சசன் தேவ் வர்மன்!! 

“தாத்.. ஆ.. தாத்”என்று விழி பிதுங்குமளவுக்கு குழறியவளுக்கு, காற்று தான் வந்ததே ஒழிய வார்த்தைகள் தான் வரவில்லை!! 

உடலெல்லாம் விறுவிறுவென வியர்க்கத் தொடங்க, பற்றுகோலின்றித் தவித்த அவள் கரத்தினை, ஆதரவுடன் பிடித்துக் கொண்டது ஓர் முரட்டுக்கரம்!! 

அந்தக் கரடுமுரடான கரம் தந்த ஆறுதலில், சட்டென நனவுலகம் வந்தவள், தன்னருகே இருந்த அந்த ஆஜானுபாகுவான ஆண்மகனை பாய்ந்து இறுகக் கட்டியணைத்துக் கொண்டாள். 

இன்னும் அக்னிமித்ராவின் கண்கள் திறந்தபாடில்லை!!அந்தக் கோர கனவின் தாக்கத்தில் இருந்து வெளிவந்திருக்கவில்லை அவள். 

 இருப்பினும் அவள் கைகள், அவனது கழுத்தினூடாகக் கையிட்டு அணைத்திருந்தது. அவனது வலிய மார்பில் தஞ்சமடைந்திருந்தது அவள் முகம்!! 

அவள் இதழ்களோ இடையறாது சொன்னது, “எ.. எ எனக்குப் பப்.. பயமா இருக்கு.. எனக்குப் பய.. மா இரு.. க்கு..”என்று தான். 

அவள் உடல் நடுநடுங்க கண்கள் உகுத்த கண்ணீரில், நனைந்து போனது அவனுடைய டீஷேர்ட். 

பெண்ணவளின் அழுகை கண்டதும் சர்வநாடியும் ஆட்டம்கண்டது அதிமன்யுவுக்குள். 

அவளது வலி, கவலை, அழுகை எல்லாமும் அந்த ஆறரையடி ஆண்மகனை ஏதோ செய்தது. அவள் சிந்திய கண்ணீர்! அந்த முரட்டுக் குழந்தையையும் பாதித்தது. 

தன்னை சடாரெனக் கட்டியணைத்தவளைத் தேற்றச் சொல்லி ஆண்மனம் உந்த, அனிச்சையாக பதிலுக்குக் கட்டிக் கொண்டது அவனுடைய நரம்போடிய மாநிறக்கைகள்!! 

அவள் முதுகை, வாடிய முகத்துடன் வருடிக் கொடுத்தவனுக்கும் அன்று கொஞ்சம் தொண்டையை அடைக்கவே செய்தது. 

பார்வை இல்லாத பெண்ணவள்.. அந்தக் கொடூரனின் பிடியில் தவித்த தவிப்புக்கள் அத்தனையையும் இவன் தான் கண்கூடாகப் பார்த்தானே?? 

இறுகிப் போன குரலுடன், “ஒண்ணுமில்லை… எல்லாம் ஓகேயாயிரும்.. ஒண்ணுமில்லைமா.. எவ்ரிதிங் வில் பீ ஆல்ரைட்..” என்று சொல்லிக் கொண்டேயிருந்தான் அவன். 

அவள் செவிகளைச் சென்றடைந்த கணீர்க்குரலும், தன் முதுகை வருடிய அவன் முரட்டுக் கரங்களின் ஸ்பரிசமும் தான், அவளது அழுகையை கொஞ்சம் மட்டுப்படுத்தியது. 

அங்கணம், அவன் வலிமையான கழுத்து வளைவில் புதைந்திருந்த அவளது நாசி முகர்ந்தது தாயிலிருந்து வரும் சுகந்தத்தை !! 

அந்த மணம் வீசிக் கொண்டிருந்தது அதிமன்யுவின் உடலில் இருந்து தான். அது அவனுடைய வியர்வை வாசம்! 

அவ்வாசம் அவளுடைய பதற்றத்தை மெல்ல மெல்லக் குறைக்க, ஆசுவாசப்பட்டது அக்னிமித்ராவின் நடுக்கம் மாத்திரமல்ல, அவளது மனமும் தான்!! 

ஒரு சில நிமிடங்களின் பின்னர் அவனை விட்டும் பிரிந்து கொண்டவளின் நாசி, இம்முறை முகர்ந்தது குப்பென்று வீசிய மருந்து நெடியை!! 

அப்படியானால் அவள் மருத்துவமனையிலா இருக்கிறாள்?

 ஆம், நேற்றிரவு நடந்த கோர சம்பவத்தில் அவனால் காப்பாற்றப்பட்டு, அதிமன்யுவின் நெஞ்சில் தலைவைத்து கதறி அழுதவள் அடுத்த கணம் மூர்ச்சையாக, செய்வதறியாமல் ஹாஸ்பிட்டலில் அனுமதித்து இருந்தான் அதிமன்யு. 

இமையோரம் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள், வாய் திறந்த போது அவள் குரல் பூவை வருடும் தென்றல் போல மிருதுவாக வெளிவந்தது. 

“ஸாரி.. உ.. உன்னை நான் அன்னைக்கு எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்தி பேசியிருக்கக் கூடாது.. என்ட்.. என்னைக் காப்பாத்தினதுக்கு …தேங்க்ஸ்..!! டாக்டர் என்ன சொன்னாங்க?? ”என்று இறுதியில் கொஞ்சம் பதற்றத்துடனேயே கேட்டாள் அவள். 

எங்கும் இருட்டு!! சுற்றிலும் மருந்து நெடி!! எதிரே முகம் தெரியாத ஆடவன்!! என்று இருந்தாலும் கூட.. அவள் அமைதியாகவே இருந்தாள். 

மொத்தத்தில் அந்த இருட்டு பழகிப் போயிருந்தது இந்தக் குருட்டுப் பெண்ணுக்கு! 

அவளையே நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் அவள் முகத்தை மெல்ல ஆராய்ந்தது!! 

சந்துருவின் கைத்தடம் இரு கன்னங்களிலும் பதிந்திருந்த சுவட்டைக் கண்டதும், சந்துருவின் கையையும் சேர்த்து உடைத்திருக்க வேண்டும் என்ற வெறிக் கிளம்பியது அவனுள். 

ஏதோ அவன் வரப்போய், எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் தப்பித்தாள் அக்னிமித்ரா. அதுவே, அதிமன்யுவும் அங்கே இல்லாதிருந்தால் அவள் நிலைமை?? 

சொற்களில் விவரிக்க முடியாத ஓர் வாட்டம், அதிமன்யுவின் கண்களில் குடிகொள்ளலானது. 

மேற்கொண்டு அங்கேயே அமர்ந்திருக்க நாடாமல், அவளை நோக்கியவன், “..நத்திங் சீரியஸ்.. நீ நல்லா தான் இருக்கேன்னு சொன்னாங்க.. டாக்டர்.. நீ கண்ணு முழிச்சதும் வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டாங்க”என்று சொல்லிக் கொண்டிருந்த கணம், இவளோ கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டாள். 

கட்டிலின் பக்கவாட்டில் இருந்த அவன் கையை.. பட்டும் படாமல் உரசிக் கொண்டிருந்தது இவளுடைய தளிர்விரல்கள்!!

அந்த முரட்டு உள்ளங்கையின் ஸ்பரிசம் வேண்டும் என்று உள்ளம் உந்த அடுத்த நொடி, அவனது உள்ளகைங்கையைப் ப்பற்றிக் கொண்டாள் அவள்.

 அவனோ அவளது எதிர்பாராத தீண்டலில, .. திடும்மென விழியுயர்த்தி.. அலைக்கழிப்புடன் அவளது விழிகளைப் பார்த்தான். 

கண்களில் தாய்மை மீதூற, அவனது புறங்கையை ஒற்றைப் பெருவிரலால் தடவியவள், கிசுகிசுப்பான குரலில் கேட்டாள், “உன் பேரென்ன..?”என்று. 

“அதிமன்யு..”- செர்ரிப்பழம் போல சிவந்த நாசியை, கண்கள் மிருதுவாகப் பார்க்க, சொன்னான் அவன்!!

“அப்படீன்னா..?”- சின்னக்குழந்தைகள் போல அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவளைப் பார்க்க பார்க்க, இன்னும் இன்னும் கழிவிரக்கம் மீதூறியது அவனுள். 

அவளது கேள்விக்கு பதில் சொல்லத் திராணியற்று, வேறு யோசனையில் மூழ்கியிருந்தான் அதிமன்யு. 

இந்த திவ்யமான அழகையா.. வேறு கண் கொண்டு பார்த்தான் அந்தக் கயவன்? சந்துரு மேல் பொல்லாத கோபம் மீண்டுமொருமுறை முகிழ்த்தது அதிமன்யுவுக்குள். 

அதற்குள் அவள் கட்டிலை விட்டும் எழ முயற்சி செய்து, தரையில் கால்கள் வலுவாக நில்லாத காரணத்தால், பிடிமானமின்றி விழ முயல, சட்டென அவள் இடையூடு கையிட்டு அவளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் அதிமன்யு. 

இடையில் பதிந்த அவன் கை!! தன் கன்னம் உணரும்.. அவன் முரட்டுக்கன்னத்தின் மயிர்களின் குறுகுறுப்பு!! கூடவே ஒலித்த அவன் குரல்!! எல்லாமே!! 

எல்லாமே அவளுக்கு இன்னும் இன்னும் வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு குரல் கேட்கவாரம்பித்தது அவளுக்குள்.

அது ஏன்? புரியவில்லை!! 

இருப்பினும் அவன் அருகே இருந்தால்.. காலன் வந்தாலும் சூறையாட முடியாத ஓர் பாதுகாப்பான இடத்தில் இருப்பது போல உணர்ந்தாள் அக்னிமித்ரா. 

அவளது நிலைக் கண்டு சற்றே பதறிப் போனவன், “பார்த்து.. நான் தான் இருக்கேன்ல? எழும்பணும்னு சொன்னால்.. ஹெல்ப் பண்ணியிருக்க மாட்டேனா என்ன?”என்று உரிமையுடன் கடிந்து கொண்டவனின் குரல், ஏனோ அவளுக்கு சந்தோஷத்தையே கொடுத்தது. 

யார் தயவும் எதிர்பார்த்து நிற்காத அக்னிமித்ராவுக்கு, தோளில் பதிந்த அவன் நாடியின் அழுத்தம் கூட தேவையாகவே இருந்தது.

அவன் கைகளை ஒரு கரத்தால் பற்றிக் கொண்டு, மறுகரத்தால் வெள்ளைப்பிரம்பைப் பற்றிக் கொண்டு, தான் அனுமதிக்கப்பட்ட அறையை விட்டும் வெளியேற முனைந்தாள் அவள். 

கொரிடோர் வழியாக, அவன் காலடிச்சத்தத்தை வெகு அருகாமையில் கேட்டுக் கொண்டே நடந்தாள் அக்னிமித்ரா. 

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நடந்து வந்தவன், அவள் முகம் இம்மியளவேனும் வலியையோ, கவலையையோ, இல்லை விரக்தியையோ காட்டுகிறதா? என்று உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டே நடந்தான்!! 

அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை, அவன் மூச்சு தன் கன்னத்தில் மோதுவதைக் கொண்டு, அறியப்பெற்றவள் சட்டென அவனை நோக்கித் திரும்பினாள். 

அவளது திடீர் திரும்பலில் சின்ன சலனம் அவன் பார்வையில்!! 

தெளிவான அவள் முகத்தில் அழகாகப் படர்ந்தது ஓர் புன்னகை!!

“ஆமா.. அதிமன்யுன்னா என்ன அர்த்தம்னு கேட்டதுக்கு நீ பதில் சொல்லவேயில்லையே?”என்று கேட்டாள். 

அவளோடு இணைந்து நடந்த வண்ணம், அவள் மட்டும் கேட்கக் கூடிய கிசுகிசுப்பான குரலில், “அப்படின்னா.. வைராக்கியத்தின் கடவுள்ன்னு அர்த்தம்…என் அம்மா வைச்ச பேரு!!”என்றான். 

அவனையும் சரி, அவன் பேரையும் சரி, அந்தப் பேர் தாங்கிய அர்த்தத்தையும் சரி காரணமேயின்றி பிடித்துப் போனது அக்னியின் தோழிக்கு. 

அவள் மட்டும் கேட்கக் கூடிய குரலில்,அவன் பெயரை உள்ளுக்குள் ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லிப் பார்த்தாள் அவள். 

“அ…தி..மன்..யு..அதிமன்யு…”

அடுத்த நொடி அவனைப் பார்த்து, “அதிமன்யு?”உற்சாகம் பொங்கக் கூவி அழைத்தாள் அக்னிமித்ரா. 

இவனோ ‘என்ன?’ என்பது போல திடுக்கிட்டவனாக, அவள் முகத்தையே பார்க்க, 

அந்தப் பேதைப் பெண்ணோ வெள்ளந்தியாகத் தலையாட்டிக் கேட்டாள், “யார் மேலேயாவது வைராக்கியம் வைச்சிருக்கியா என்ன?”என்று. 

அவளது தலையாட்டல் இரசிக்கும்படியாக இருக்கவே மெல்ல கனிந்தது அவன் இதயம். 

அவளது கேள்விக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அவனது ஒளி சிந்தும் தீட்சண்யமான கண்களில் மெய்யாலுமே ஓர் வைராக்கியம் வந்து போனதை.. கண்ணில்லாப் பெண் அறிய முடியாமல் நின்றிருந்தது அவளுடைய துரதிர்ஷ்டமே!! 

அவளது கேள்விக்கு உடனடியாக பதில் அளிப்பதை விடுத்து வேறு சொன்னான் மித்ராவின் அதிமன்யு. 

“அக்னிமித்ரா..!!! யாரையாவது சுட்டெரிச்சிருக்கியா என்ன?”என்று அவன் படக்கென்று கேட்க, அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் விழித்தாள் அக்னிமித்ரா.

அவளது மேலிமையும், கீழிமையும் ‘பச்சக் பச்சக்’ என்று முத்தம் வைத்துக் கொண்டது கூட அந்த திவ்யமான அழகுள்ள பெண்ணுக்கு இன்னும் அழகு சேர்க்கவே செய்தது. 

“பதில் சொல்ல முடியலைல ஆர். ஜே ம்மேடம்?? .. அந்த மாதிரி தான் இருக்கு.. எனக்கும்..”என்று சொன்னவனின் பதில் கேட்டு கலகலத்துச் சிரித்தாள் அக்னிமித்ரா. 

அவளிருந்த மனநிலையில் இவன் எப்படி நான் ஒரு ஆர். ஜே என்பதை அறிந்தான்? என்று தான் யோசிக்கத் தோன்றவில்லை அவளுக்கு!! 

அக்னிமித்ராவைப் பின்தொடர்ந்த இந்த இருபது நாட்களில்.. அக்னிமித்ராவைப் பற்றி அறிய வேண்டியவைகளை.. அதிமன்யு அறிந்தே வைத்திருந்தான். 

அவன் அறிந்திராத சிலவும் உண்டு!! அவை அக்னிமித்ராவின் வாழ்வின் கறுப்புப் பக்கங்கள்!! 

அந்தச் சிரிப்பின் இறுதியில் தன் முத்துமூரல்கள் தெரியச் சொன்னாள், “பரவாயில்லையே? .. மூடி டைப்னு நினைச்சேன்.. கொஞ்சம் மொக்க காமெடியெலாம் பண்ற?”என்று. 

சந்துரு தந்த தாக்கத்திலேயே உழலாமல் அவள் ஓரளவுக்கு சகஜமாகவே பேசியது ஆறுதலைக் கொடுத்தது அவனுக்கு. 

தன் கண்ணைப் பறித்த கொடூர மிருகம் தேவ்வின் தாக்கத்திலிருந்து வெளி வந்திருப்பவளுக்கு, சந்துருவின் விஷயம் ஒரு தூசு என்றே தோன்றியது. 

 மருத்துவமனை வளாகத்தை விட்டும் வீதிக்கு வந்ததும் வீடு செல்வதற்காக ஆட்டோ பிடிக்கலானான் அதிமன்யு. 

அவர்கள் அருகே வந்து நின்ற முச்சக்கர வண்டியில் ஏற அவளுக்கு அவன் உதவி செய்ய முனைய, வண்டியில் ஏறாமல், அவனைப் பார்த்தவள் கேட்டாள், 

“இப்போவே வீட்டுக்குப் போக வேண்டாம் அதி.. தனிமையில் திரும்பவும் பொல்லாத நினைவுகள் வரும்.. வேறு எங்கேயாவது என்னைக் கூட்டிட்டுப் போறியா? ப்ளீஸ்..”என்று. 

பார்வை அற்ற அந்தக் கண்கள் நொடிக்கு நொடி ஆயிரம் உணர்ச்சி பாவங்கள் காட்ட, குழந்தையை இரசிக்கும் தாய் போலானான் அதிமன்யு. 

அந்தத் தேவதையின் கண்கள் தன்னிடம் கெஞ்சுவது உள்ளுக்குள் புதுமாதிரியான உணர்வுகளைக் கிளப்ப… தானாக ஆடியது அவன் தலை. 

“ம் சரி..வண்டியில் ஏறு!!”என்று சொல்ல, அவளைத் தொடர்ந்து வண்டியில் ஏறினான் அதிமன்யு. 

****

ஆட்டோவில் குளிர் காற்று முகத்தில் மோத, உற்சாகமாகத் தொடங்கிய அந்தப் பயணத்தின் இறுதியில், அவன் அவளை அழைத்து வர நாடிய இடமும் வந்தது. 

முச்சக்கர வண்டியை விட்டும் இறங்கியவளின் முகத்தில் பட்டு மோதியது ஈரலிப்பான காற்று. தூரத்திலே கேட்டது சலசலத்துப் பறக்கும் வேடந்தாங்கல் பறவைகளின் ஒலி!!

கூடவே.. மௌனராகம் பாடிக் கொண்டிருந்த ஓடும் நீரின் சத்தம்!! 

காற்றில் அகல கை நீட்டி, சுற்றிவர வீசிய காற்றை உணர்ந்தவள், “இது என்ன இடம்..?”என்று கேட்டாள் அவனிடம். 

இங்கு வந்ததும் அவளுடைய மனநிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியதை அவதானித்தவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனமும் இலேசாவது போல இருந்தது. 

“மகாவலி ரிவர் பேங்க்.. சம்டைம்ஸ் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்ததுன்னா இங்கே தான் வருவேன்.. ஓடுற தண்ணீ.. தூரத்துல தெரியுற பனிமலை.. சுத்தி வீசுற காத்து.. மனசு வலியெல்லாம் போயிரும்..”என்று சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டு அந்தப் புல்வெளியில் நடந்தான். 

அவன் பக்கத்தில் இருக்கும் போது.. முடங்கிய மனப்பறவை சிறகடித்துப் பறப்பது போல உற்சாகமாக இருக்க, மெல்ல நீண்ட அவள் கை, அவன் கரத்தைப் பற்றிக் கொண்டது. 

அவன் எதுவும் வாய் திறந்து சொல்லவில்லை!! அவனும் அவளது அருகாமையை இரசித்தானோ? அப்படித்தான் போலும்!! 

சூழலை உள்வாங்கிக் கொண்டே நடந்தவள், அவனைப் பார்த்து, “ஏன் நேத்து ராத்திரி என்னை ஃபாலோ பண்ணி நீ வரலை..?”என்று கேட்டாள். 

அவள் கேள்வியில் அகல விரிந்தன அவன் விழிகள்!! 

இத்தனை நாட்களாக அவன் தான் பின்தொடர்ந்து வருகிறான் என்பதை எப்படி அறிந்தாளாம் இவள்? 

அவனது அமைதியே அவன் குழப்பத்தைப் பற்றிய ஊகத்தைக் கொடுத்தது திவ்யமான அழகுள்ள அக்னிமித்ராவுக்கு. 

சின்னப் புன்னகையுடன், வாய் திறந்து சொன்னாள், “எனக்கெப்படி தெரியும்னு பார்க்கிறியா? உன்னோட காலடிச்சத்தம் தான் வந்தது நீன்னு எனக்கு காட்டிக் கொடுத்திச்சு.. அது கொஞ்சம் மென்மையா இருக்கும்.. அதை வைச்சு கண்டுபிடிச்சேன்.. வந்த ரெண்டாவது நாளே என்ன ஃபாலோ பண்ணி வந்தது நீன்னு தெரிஞ்சிருச்சு..”என்று. 

பார்வை திறன் போனாலும், பிற உணர்திறன்கள் மூலம் தன்னைச் சூழ நடப்பதை அறியும் இவள் புத்திசாலி தான் என்று ஒரு மெச்சுதல் பார்வைப் பார்த்தான் அவன். 

அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு, மௌனம் கலைக்க மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் அக்னிமித்ரா. 

“ஆமா நேத்து ராத்திரி ஏன் நீ என்னை பாலோ பண்ணி வரலை??”

அவளோடு நடந்து சென்று புல்வெளி சூழ்ந்த இரம்மியமான இடத்தில் அமர்ந்தவன், “கொஞ்சம் லேட்டாயிருச்சு..” என்றவனாக, அவள் கையைப் பிடித்துத் தன்னருகே அமர வைத்தான். 

வெள்ளைப்பிரம்பைத் தட்டித் தட்டி அமர்ந்தவள் கேட்டாள், “அதான் ஏன்னு கேட்கிறேன்..?”என்று. 

இரவு முழுவதும் அவளுடனேயே மருத்துவமனையில் உறங்காமல் விழித்து அமர்ந்திருந்தது அசதியைக் கிளப்பியிருக்க வேண்டும், கைமறைவில் கொட்டாவியொன்றை வெளியேற்றிக் கொண்டே, வானத்தைப் பார்த்து மல்லாக்காப் படுத்தான் அவன். 

அவனது , ஒரு கையை பின்னந்தலைக்கு அடியில் அடைக்கலமாகியிருக்க, மறுகை தரையில் ஓர் மரக்கட்டை போல நீண்டு கிடந்தது. 

அசதியில் நெட்டி முறித்தவாறு, “ம்மினிஸ்டர்ர்…..ஒரு வேலை கொடுத்தி.. ருந்தாரு.. முடிச்சுட்டு வர லேட்..டாயிருச்சு..” என்றான் அதிமன்யு. 

அவன் சட்டென பின்னே நகர்ந்து கொண்டதை,புற்களின் அசைவையும், உரசலையும் வைத்துக் கணித்தவளின் பார்வை பின்னோக்கித் திரும்பியது. 

அவன் எங்கேயென்று துலாவிய அவள் கைகள், எக்குத்தப்பாக ஊர்ந்தது அவனது திடகாத்திரமான மார்பின் மேல்!! 

அவனது மார்பைத் தசை ஒவ்வொன்றும் அம்சமாக இறுகியிருக்க.. தொட்டுப் பார்த்தவளுக்கு உள்ளே கூச, சட்டென மீண்டும் முன்னாடி திரும்பிக் கொண்டாள். 

அவனைத் தொட்டதால் விரல்களிலும், இதயத்திலும் எழுந்த குறுகுறுப்பு நீங்க ஒருசில நிமிடங்கள் மேலதிகமாக தேவைப்பட்டது அவளுக்கு. 

பிறகு அவனைப் போலவே மல்லாக்கப் படுக்கும் எண்ணம் தோன்ற, தலை வைத்துப் படுத்தவளின் தலை புற்களில் அன்றி, இறுகிய தசையில் அடைக்கலமாகியிருந்தது. 

ஆம், அக்னிமித்ரா அவனது நீட்டிய கையில் தான் தலைவைத்துப் படுத்திருந்தாள். 

அவனிலிருந்து வரும்.. அவனுக்கே அவனுக்கென்று சொந்தமான பிரத்தியேக நறுமணம்.. அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. 

அவன் அருகாமையில்..காதோரம் கேட்டுக் கொண்டிருந்தது அவனது இதயத்துடிப்போசை!!

எங்கே அவள் எழுந்து விடுவாளோ என்ற அச்சம் மீதூற.. அசையாமல் படுத்திருந்தான் அதிமன்யு. 

இவளோ விட்ட கதையைத் தொடர நாடியவளாக, “யாரு? .. நம்ம மினிஸ்டர் சதாசிவமா?” என்று வானத்தை அண்ணாந்து பார்த்தபடியே கேட்டாள் அவள். 

“ம்.. ஆமா”-என்று மட்டும் சொன்னவனுக்கு அவள் நெருக்கம் அவஸ்தையாக இருந்த அதேவேளை, புதுமையான உணர்வுகளை உள்ளுக்குள் கிளப்பி விடுவதாகவும் இருந்தது. 

அவள் தன்னை நெருங்கிப் படுத்திருந்ததைக் கள்ளத்தனமாக இரசித்தான் அதிமன்யு. மொத்தத்தில் மித்ராவின் நெருக்கம் பிடித்திருந்தது அவனுக்கும். 

அவனுக்கோ வானம் அழகழகான மேகமூட்டங்கள் கொண்டு, மலைமுகட்டின் நடுவில் இருந்து சூரியன் உதயமான வானமாகக் காட்சியளிக்க, இவளுக்கோ வானம் கும்மிருட்டாகவே இருந்தது. 

“அப்படியென்ன வேலை..அதிமன்யு?”-அவனுடைய டீஷேர்ட்டின் முனையை விரல்நுனிகளால் திருகிய வண்ணமே கேட்டாள் அவள். 

அவன் மெல்ல தலையை மட்டும் திரும்பி அக்னிமித்ராவைப் பார்த்தான். 

அவளது அடர்ந்த கண்ணிமைகள், அவனது கைச்சந்தில் உரச,பார்வையற்ற பெண்.. அவனையே மென்மையாகப் பார்த்திருந்தாள். 

இத்தனை அழகான பெண்ணுக்கு..கடவுள் பார்வையை கொடுக்காமல் விட்டதில், கடவுள் மீதே சின்ன கோபம் மீதூறியது அவனுக்கு.

அந்நேரம் அழகாகக் காற்றடிக்க, அவளது நெற்றி மறைத்து வீழ்ந்தது அழகிய சுருள் அளகக்கூந்தல்!! 

முகில் மறைத்த மதியாய் அவள் முகமும் அவன் கண்பார்வையை விட்டு மறைய, கூந்தலை , காதுக்குப் பின் சொருக, அனிச்சையாய் நீண்டது அவன் கைகள். 

கைகளைக் கடினப்பட்டு கட்டப்படுத்திக் கொண்டவன், மதலையை இரசிக்கும் தாயைப் போல அவள் விழிகளையே பார்த்திருந்தான்!! 

ஆண்களின் பார்வையிலும் தான் எத்தனை வித்தியாசங்கள்? 

நேற்று அவளை அபகரிக்க வந்தவன் கல்மிஷப் பார்வைப் பார்த்தான் என்றால், இன்று அவள் அருகே இருப்பவன் அவளது அழகை ஆராதிக்கும் தாய்மைப் பார்வை சிந்துகிறான். 

“யாரையாவது தட்டணும்னா.. என்னையும், என் ஃப்ரண்டு விக்கியையும் அசைன்மன்ட் இருக்கு வந்துட்டுப் போன்னு கூப்பிடுவாரு..சொல்ற ஆளை ரெண்டு தட்டு தட்டினால் காசு கொடுப்பாரு..”என்று தான் பார்க்கும் தொழிலை குரலில் ஏற்ற இறக்கமே இல்லாமல் சொன்னான் அதிமன்யு. 

அவன் விவரித்த தினுசில் சட்டென அகல விரிந்தது அவளது கண்கள். 

அவனை விட்டும் விலகியவள், சயனிக்குப் புத்தர்சிலை போல அவனைத் தலை தூக்கி நோக்கி, “அப்படின்னா ரௌடியா..?” என்று கேட்டாள். 

“கிட்டத்தட்ட..”-அவளது விலகல் வலிக்க மெல்ல சொன்னான் அவன். 

ஆயிரம் தான் இருந்தாலும் இவன் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளும் ரவுடி என்றே தோன்றியது அவளுக்கு. 

அதனால் இதழ்களில் புன்னகை மலர, “கொஞ்சம் நல்ல ரவுடி..” என்றாள். 

அவளது மெலிதான புன்னகை அதிமன்யுவையும் மெல்லத் தொற்றிக் கொண்டது. 

அவனைத் தொட்டுப் பார்க்கும் ஆசை மீதூற, “அதி.. உன்னைத் தொட்டுப் பார்த்துக்கட்டா..?”என்று அவள் கேட்க, அவளுக்காகப் புல்வெளியிலேயே எழுந்து அமர்ந்தான் அதிமன்யு. 

அவளது கண்கள் மெல்ல மூடிக் கொண்டன. கைகளோ அவனது நெற்றியை நோக்கிப் பயணமானது. 

அவளைச் சுற்றிலும் எங்கும் கும்மிருட்டு! 

அவள் கைகள்.. அதிமன்யுவுடைய பரந்த நெற்றியைத் தொட்டுப்பார்த்த அந்நேரம்.. அவள் கண்களுக்குள் மெல்ல மெல்ல விரிந்தது ஓர் கற்பனை உருவம்!! 

 இரண்டுமே அடர்ந்த புருவங்கள், அனைவருக்கும் போல மிகமிக மென்மையான கண்ணிமைகள்.. 

ஒருபிழை சொல்லும்படி இல்லாத கூர்நுனி மூக்கு, சொர சொரப்பான கன்னத்துடன் கூடிய தாடை!! 

மீசை குறுகுறுக்க சற்றே வரண்டிருந்த முரட்டு இதழ்கள் என ஒன்று விடாமல் தொட்டுப் பார்த்தாள் அக்னிமித்ரா. 

அவளது கை போன போக்கில்.. இருட்டுக்குள் விம்பமாய் பூத்தது ஓர் அழகிய ஆண் உருவம்!! 

அவனது தொடுகை.. தென்றல் தீண்டுவது போல இருக்கவே அதிமன்யு இமைக்காமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 

மிருதுவான விழிகளுடன் கண் திறந்தவள், “நீ ரொம்ப அழகா இருக்க”என்றாள். 

அவள் தன்னை ‘அழகு!’ என்ற சந்தோஷத்தில் மெல்ல எட்டிப் பார்த்தது இதழ்க்கடையோரத்தில் முகிழ்த்தும், முகிழ்க்காத ஒரு சிரிப்பு.

இன்னும் அவன் முகத்தில் இருந்து கைகளை எடுக்காதவளுக்கு.. அவன் இதழ்கள் வளைவது புரிய, 

“நீ சிரிக்கிறேல்ல??”என்று கேட்டாள். 

பின்னே.. ஓர் அழகுப் பெண்ணிடம் ‘அழகு’ என்ற பெயர் வாங்குவது.. எப்பேர்ப்பட்ட ஆண்மகனுக்கும் இனிப்பாகத் தானே இருக்கும்? 

சற்று முன் எந்த அசம்பாவிதமும் நடந்தேறாதது போல இயல்பாக இருக்கும் அவளைப் பார்த்து அதிசயித்தவன், 

“நேத்து இப்படி ஆகிருச்சேன்னு கவலையே இல்லையா?”என்று கேட்க, அவள் யோசியாமல் பட்டென சொன்னாள். 

அவனை விட்டும் எழுந்து நடந்தவள், அவனைத் திரும்பி நோக்கி சற்றே இரைந்த குரலில், “அதாஆஆன் நீ என் பக்கத்துல இருக்கேஏல்ல??.. கவலைப்படத் தோண மாட்டேஏங்குது!! ..” என்றாள்.

ஆம், அக்னிமித்ரா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இழந்த அமைதியை.. சந்தோஷத்தை, பாதுகாப்பை அவனிடம் அக்கணம் உணர்ந்து கொண்டிருந்தாள்.

அவனிடமிருந்து வரும் பிரத்தியேக நறுமணம் கூட.. அவளுக்கு ஓர் உரிமையைப் பரிசளிப்பது போலவே இருந்தது. 

அவள் எழுந்து.. ஆற்றோடும் திசையை நோக்கி செல்வதைக் கண்டவன், 

தானும் பட்டென்று எழுந்து, “ஹேய்.. எங்கே போற..?”என்று அவளைப்போலவே கத்திக் கேட்டான். 

“ஸ்விம் பண்ண போறேஏஏன்!!..” மீண்டும் கத்திச் சொன்னாள் இவள். 

அதைக் கேட்டு உள்ளுக்குள் பதற்றம் நிலவ, “என்ன விளையாட்றியா? திரும்பவும் ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகணுமா என்ன?”என்று கேட்டவன், அவள் ஆற்றில் எக்குத்தப்பாக விழுந்துவிடுவாளோ என்ற பயத்தில் அவளிடம் விரைந்து நடந்தான். 

அவளோ பாதணிகளைக் கழற்றி ஆற்றுக்குள் இறங்கி.. குளிர்ந்த நீரின் ஜில்லிப்பை அனுபவித்தவளாக, 

“பரவாயில்லை அட்மிட் ஆஆஆகிக்கிறேன்!!.. அதாஆஆன் என்னைக் குழந்தை போல பார்த்துக்க.. நீ இருக்கியேஏஏ?..லெட் மீ ஸ்விம்!! ”என்று அவள் உரிமையோடு சொல்ல, அவள் சொற்களில் ஒரு கணம் தடைப்பட்டு நின்றது அவன் நடை!! 

அவள் சொன்னதை உள்வாங்கவே ஒரு சில நொடிகள் ஆனது அவனுக்கு. ‘வாட்.. என்ன சொன்னாள்? குழந்தை போல பார்த்துக்கவா? அப்படின்னா?’என்று தோன்ற, அவன் அந்நொடி சிறகின்றி பறந்தான் வானம் நோக்கி!! 

இடுப்பில் இரு கை வைத்து நின்றவன், ஆனந்தக் கண்ணீர் முகிழ்க்க, சந்தோஷம் தாளாமல் தலை கோதிக் கொண்டே தலை சிலுப்பி மௌனமாக நகைத்தான்!! 

ஓர் பெண்ணினுள் எழும் நுண்ணிய காதல் உணர்வுகள்.. ஓர் வலிய ஆண்மகனை இத்தனை சந்தோஷத்துக்குள்ளாக்குமா? நிச்சயம் சந்தோஷத்தை தருவிக்கும்!! 

கரையில் நின்று வேடிக்கைப் பார்ப்பது பிடிக்காமல், அவனும் ஆற்றுக்குள் இறங்க, ஆற்றில் ‘குபுக் குபுக்’என அவன் எடுத்து வைக்கும் காலடிச் சத்தத்தைக் கேட்டு அவன் பக்கம் தண்ணீரை விசிறி அடித்தாள் அக்னிமித்ரா!! 

“ஹேய் வேணாம் நிறுத்து… அப்புறம் நானே திரும்பிப் பண்ணா.. ரொம்ப ஃபீல் பண்ணுவ?” என்று அவளது தண்ணீர்த்தாக்குதலில் நனைந்தவனாக சொல்லிக் கொண்டே அவளை நோக்கி வேகமாக நடந்தான் அதிமன்யு. 

அவனது எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அவள் தண்ணீரை விசிறியடித்துக் கொண்டே இருக்க, 

அவனுடைய வாளிப்பான கைகள், தண்ணீரை அவள் பால் தற்போது விசிறி அடிக்கத் தொடங்கியது. 

தன் முகத்திலே நில்லாமல் தெறிக்கும் தண்ணீரை தாக்குப்பிடிக்க முடியாமல், முகத்துக்கு நேரே கைகளை மறைத்துக் கொண்டு, கிளுக்கி நகைக்கத் தொடங்கினாள் மித்ரா. 

சந்துருவின் தீண்டலும், ரணமும்.. அவளது சிரிப்புச் சத்தத்தில் காணாமல் போவது போலவே தோன்றியது அவனுக்கு. 

அடுத்த நொடி.. அவன் தண்ணீர் விசிறியடித்த வேகம் தாளமாட்டாமல், அவள் ஆற்றுக்குள் கவிழ்ந்து விழப் போக, அதற்கு விடாமல் அவள் இடையூடு கையிட்ட கை அவளைத் விழாமல் நிறுத்தி,அவனை நோக்கி இழுத்திருந்தது. 

அந்த இழுப்பில் இவன் உடலும், இவள் உடலும் தாருமாறாக மோதிக் கொள்ள, அவன் மூச்சுக்காற்று தன் நெற்றியில் உரச, அவன் பிடியில் கதகதப்பாக உணர்ந்தாள் பெண். 

மித்ராவின் ஆடை முழுதும் நனைந்து, அவள் உடல் முழுவதும் ஒட்டித்தெரிய, கொஞ்சம் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவே நின்றிருந்தாள் பெண். 

அவளும் கூட.. அந்த திண்ணிய தோள் பொருந்திய ஆடவனின் அண்மையில், இடையில் பதிந்த அழுத்தத்தில் கிறங்கி நின்றிருந்த சமயம் அது. 

அவளது இதழ்கள் என்னும் காந்தமோ.. மறுமுனை காந்தமான அவனது இதழ்களைக் காற்றில் தேடியது. 

இதழ் காந்தத்ததில் ஈர்க்கப்பட்டவன் அவளை நோக்கி இதழோடு இதழ் சேரச் சென்றவன், நுனியளவு இடைவெளி இருக்கும் போது, சிந்தை தெளிந்து அவளை விட்டும் பிரிந்தான். 

இப்போது தான் பேரிடரில் இருந்து தப்பி வந்திருக்கும் பெண்ணிவள்!! இந்தத் தனிமையை பயன்படுத்தி அவனும் முன்னேறினால்.. அவனுக்கும், சந்துருவுக்கும் என்ன வித்தியாசம்?? 

“ம்ஹூஹூம் இது தப்பு…”என்று சொன்னவன், அவளை விட்டு விட்டு கரையேறத் தொடங்கினான். 

சந்தர்ப்பம் கிடைத்தும் தள்ளி நின்ற அவனது இனிய கண்ணியம், அவனது நேர்மை என எல்லாமும், பிடிக்க விரைந்து சென்று அவனை முதுகோடு இறுக அணைத்துக் கொண்டாள் அக்னிமித்ரா.

அவளது குளிர்ந்த உடல் ஒட்டிய தினுசில் இவனுடைய தகிக்கும் உடல் இன்னும் சுட்டது. 

கூடவே காதோரம் கேட்டது அவள் குரல், “ப்ளீஸ் போகாதே இப்படியே இரு… காலம்பூரா என் கூடவே இருந்துரு..”என்று உணர்ச்சிகள் அலைபாயச் சொன்ன அவள் குரல்!! 

“காதல் வருவதற்கு அற்பமான காரணங்களே போதுமானவை!”என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்ன வாசகம் இவர்கள் விஷயத்துக்கு எத்தனை உசிதமானது? 

அவளை நோக்கி உணர்ச்சிகள் ததும்பிய சிவந்த கண்களுடன் திரும்பியவன் மெல்லக் கண் மூடி அவளது இதழ்களைக் கவ்வி, தன் ஈரலிப்பை அவளுக்கு ஓரிரு செக்கன்கள் பரிசளித்து விட்டு, மெல்ல விடுவித்தான். 

அந்த முத்தத்தில் இருந்த மென்மை.. அவளது காதலை இன்னும் கூட்ட, அவனது இடுப்பைப் பற்றிக் கொண்டு இதழ்கள் திறந்து நின்றிருந்தாள் மித்ரா.

பெண்ணவளின் அழைப்பு.. இன்னும் கொஞ்சம் உன்மத்தம் கொள்ள வைத்தது அவளை. 

எரிக்கும் அக்னியின் இதழ்களை மீண்டுமொருமுறைக் கவ்வியவன், அவளது அதரங்களை குளிர்விக்க.. அங்கே இருவர் இதழ்களிலும் வரையப்பட்டது அழகிய ஓவியம்!! 

ஆற்றின் நடுவில்.. தலைவனும், தலைவியும் தமை மறந்து நின்ற உன்னதக் கணப்பொழுதுகள் அவை!! 

முத்தத்தின் முடிவில் தண்ணீரில் நின்றிருந்தவளை அழகாகக் கைகளில் ஏந்திக் கொண்டான் அதிமன்யு. 

அவள் தலை அவன் ஹ்ருதயம் அருகில்!! அவள் கைகள்.. அவன் கழுத்தோடு மாலையாக!! 

கண்ணியமுள்ள ஆண்மகனை அடையாளம் காட்டித்தந்த, சந்துருவுக்கு மானசீகமாக நன்றி சொன்னாள் அவள். 

கரைக்கு அழைத்து வந்தவன்.. அவள் குளிரில் நடுங்குவது பார்த்து.. காய்ந்த மரக்கிளைகள் கொண்டு தீப்பந்தல் அமைத்தான்!! 

அவர்கள் முன்னே திகுதிகுவென சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது தீ! 

நெருப்பின் உஷ்ணத்தகிப்பு சுகமாகவே இருந்தாலும், அவனின் உடல் தகிப்பும் வேண்டுமென்று தவித்தது பெண்மனம். 

மெல்லத் தடுமாறி எழுந்து அவன் தோளோடு தோள் சாய்த்து அமர்ந்தாள் அக்னிமித்ரா. 

முன்பு அநாதையாக இருந்தவனை நம்பி.. தற்போது உன்னத உறவாக ஒரு பெண்! 

அவள் தன் தோளில் தலை சாய்த்து கண் மூடியிருப்பதே புது சுகம் கொடுக்க, அவளைக் கையிட்டு அணைத்துக் கொண்டான் அதிமன்யு.

தீயோடு சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தது அவர்களின் காதல் ஜோதி!! 

எங்கேயும் காதல்! 

      [6]

இசை எப். எம் ரேடியோ ஸ்டேஷன்.. 

நேரம் முற்பகல் பத்து இருபதைக் கடந்திருக்கும்!! 

“கொஞ்சநாளா நம்ம நைட் ஷோ சந்துருவை ஆஃபீஸ் பக்கமே காணலை..என்னாச்சுன்னு ஏதாவது தெரியுமா?”என்று, “புத்தம் புது காலை”நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் சக பணியாளினி ஆர். ஜே. ஜனு, ஒரு மிடர் காபியைப் பருகிக் கொண்டே கேட்க, பக்கத்தில் அமர்ந்திருந்த அக்னிமித்ராவின் செவிகளில் சுடுசொல்லாகப் பாய்ந்தது “சந்துரு” என்னும் கொடியவனின் பெயர்!! 

அதைக் கேட்ட மாத்திரத்தில்.. கையில் இருந்த சூடான காபி கப்பை அவள் உள்ளங்கை இறுகப் பற்றிக் கொண்டது. கப்பின் சூடு, அவள் உள்ளங்கையை சுட்டு, பொல்லாத நினைவுகள் எழுந்து அவள் இதயத்தையும் சுட்டது. 

எப்போதும் இரவு நேரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவள், இந்த இரு கிழமைகளாக காலை நேர நிகழ்ச்சியாக “நீங்கள் கேட்டவை”நிகழ்ச்சியை மாற்றியமைக்கக் காரணமே அந்தக் குரூரன் தான்!! 

அவளுடைய நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் கூட.. அவளுடைய உடல்நிலை கருதி.. நேரமாற்றத்திற்கு ஓகே சொல்லிவிட, “நீங்கள் கேட்டவை” தற்போது எந்தவிதமான தங்குதடையுமின்றி காலையிலேயே காற்றில் ஒலிக்கவாரம்பித்திருந்தது. 

அந்தப் பொல்லாத நினைவுகள் எழுந்து, பெண்மனதை அலைக்கழிக்க, காதோரம் சுருள் அளகம் சொருகியவள், “இ.. இப்போ மோர்னிங் ஹவர்ஸ்ல ப்ரோக்ராம் பண்றதால.. ஐ ஹேவ் நோ டச் வித் ஹிம் ஜனு..”என்று சொல்லிக் கொண்டிருந்த கணம், 

ஜனுவின் அடுத்த கேள்விக்கணையிலிருந்து அவளைக் காப்பாற்றும் வண்ணம் ஒலித்தது அக்னிமித்ராவின் செல். 

ரிங்டோனே புதுமையாக இருக்க.. அந்த பாடலில் கிளுக்கி நகைத்தாள் சக பணியாளினி ஆர். ஜே ஜனு. 

“ரவுடி பேபி.. அஹ்ஆ அஹ்ஆ 

ரவுடி பேபி.. அஹ்ஆ அஹ்ஆ” – மாரி படத்தின், அண்மையில் ஹிட்டான பாடல், அவ்வறை எங்கணும் நிறைந்து ஒலிக்க, அக்னிமித்ராவின் இதழ்களில் உறைந்தது ஓர் அழகிய குறுநகை. 

நிஜமாலுமே அழைப்பெடுத்திருந்தது அவளுடைய அழகான “ரவுடி பேபி” தான். 

சந்துருவினால் கறுத்து வாடிய அவள் முகம், அவளுடைய “ரவுடி பேபி”அதிமன்யுவினால் மீண்டும் மலர்ச்சியடைந்தது. 

“சொல்லு ர்ரவுடி ப்பேபி?”- செல்லமாக அவள் சொன்ன, “ரவுடி பேபி”யில் இளையராஜா அவனுக்காக இசை மீட்டுவது போல இருந்தது அதிமன்யுவுக்கு. 

எடுத்ததுமே அவன் பால் உன்மத்தம் கொள்ள வைத்தது அதிமன்யுவின் கம்பீரக்குரல். 

“காபி குடிக்கும் போது கூட.. நீ க்யூட்டா இருக்க..?”-பெண்ணின் இதயத்தை மயிலிறகு கொண்டு வருடும் இதத்துடன் ஹஸ்கி குரலில் இரசனையுடன் சொன்னான் அதிமன்யு. 

சோபாவில் காலுக்கு மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தவளின் கண்களில் மின்னல் போல வந்து போனது ஓர் தடுமாற்றம். 

பின்னே அவள் காபி அருந்திக் கொண்டிருப்பதைக் கண்கூடாகப் பார்த்த மாதிரி அவன் பேச, பெண்ணவள் நெஞ்சில் தடுமாற்றம் மிகுவது இயல்பு தானே? 

எங்கணம் அவன், அவள் காபி அருந்துவது அறிந்தான்? அவளது அடர்ந்த புருவங்கள் மெல்ல மேலுயர்ந்தன. 

அவளுடைய கால்கள் பழைய நிலையை அடைய, சோபாவை விட்டும் சற்றே முன்னோக்கி சாய்ந்தவள், முகமெங்கும் ஓர் அழகிய எதிர்பார்ப்பு. 

“டேய் ரவுடி.. இப்போ நீ எங்கே இருக்க..?”- தன் குரலைத் தாழ்த்தி.. ஜனு அறியாவண்ணம் கிசுகிசுப்பாகக் கேட்டாள் அக்னியின் மித்ரை. 

காதல் கொண்ட மன்னவன் குரலிலோ ஓர் மந்தகாசம் மீதூறியது. 

“உன் ஆபிஸ்க்கு எதிர்த்தாப்புல இருக்க வாகை மரத்துக்கு கீழே….உனக்காக காத்துட்டிருக்கேன்…”என்று அவன் சொல்ல, சட்டென சோபாவை விட்டும் அதிர்ச்சியுடன் எழுந்தாள் மங்கை. 

அவளுடைய பார்வையற்ற அழகிய நயனங்கள் அகல விரிந்தன. கூடவே இதழ்களும் தான். 

“வாட்? ஆஃபிஸ்க்கு எதிர்லயா?? அங்கேயே இரு பேபி.. வந்துர்றேன்..”என்று மீண்டும் குரலடக்கி கிசுகிசுத்தவள், அழைப்பை துண்டித்து விட்டு, நேரே சென்றது ரெஸ்ட் ரூம் நாடித் தான். 

அதிமன்யுவை அவள் பார்க்காவிட்டாலும் கூட, அதிமன்யுவின் கண்களுக்கு இவள் அழகாகவே தன்னைக் காட்டிக் கொள்ள சித்தங்கொண்டாள் பெண். 

ரெஸ்ட் ரூம் சென்று.. காலை நிகழ்ச்சி செய்ததால் விளைந்த களைப்பைப் போக்க, முகத்தை பேஸ் வாஷ் கொண்டு, தண்ணீரில் கழுவி, 

மார்பை முழுதும் போர்த்தியவளாக அவள் அணிந்திருந்த துப்பட்டாவை, கொஞ்சம் தன் முன்னழகுகள் தெரியுமாறு சரி செய்தாள்.

அவனுக்காக.. இந்தக் குருட்டுப் பெண்ணின் அழகை ஆராதனை செய்யும் அந்த ஆஜானுபாகுவான ஆண்மகனுக்காக. 

யார் யார் கண்கள், அவளை எக்கண் கொண்டு நோக்குகிறது என்று அவளின் இக்கண்களுக்குத் தான் தெரியாது. 

கூடவே சந்துரு தந்த தாக்கத்தின் விளைவால் சுடிதாரோ, ஸ்கேர்ட் என்ட் ப்ளவுஸோ அன்றேல் டீஷேர்ட் டெனிமோ துப்பட்டாவால் போர்த்தாமல் அவள் அணிவதேயில்லை!!

கண் தெரியாத பெண்ணுக்கு.. துப்பட்டா ஓர் மானம் காக்கும் கவசம் என்றே கருதினாள் அவள். 

ஆயினும் தலைவன் அதிமன்யு அருகில் இருக்கும் போது மட்டும், அவளுடைய மானம் காக்கும் கவசம் அவனாகிப் போனான். 

கண்ணாடித் தெரியவில்லை. இருந்தும் காதல் மிகுதியில், ரெஸ்ட் ரூம் கண்ணாடி முன் நின்று.. முகம் வருடி அழகுபார்த்து சிரித்துக் கொண்டாள் பெண். கிட்டத்தட்ட ஓர் பைத்தியம் போல. 

தன் வெள்ளைப் பிரம்பைத் தரையில் தட்டித் தட்டி அவள், அலுவலகத்தின் லிஃப்ட்டை நோக்கி நடக்க, அவளுக்காக வெயிலில் காத்து நின்றான் அவளது சூரியன். 

கலாவும் விடுப்பில் இருக்க, சந்துருவுக்கு என்னானது என்ற நிலவரம் தெரியாதிருக்க, அவர்கள் இருவரின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இரு அறிவிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் இன்டர்வீவ் நடந்து கொண்டிருந்தது அன்று இசை வானலை வளாகத்தில். 

பளபளவென மாடர்ன் டிரஸ்ஸில் பல பெண்கள் வந்திருக்க, கசகசவென கூட்டமாகவே இருந்தது இசை வானலை வளாகம்!! 

அந்நேரம் வானலைக் கட்டிட வளாகத்தை விட்டும் வெளியே வந்து கொண்டிருந்த இரு பெண்களில், ரொம்பவும் ஒல்லியான ஓர் பெண், 

கார்குழல் கற்றையை காதுக்குப் பின் சொருகிக் கொண்டே, தன் சக தோழியைப் பார்த்து, “என்னடி அவன்.. அங்கே மரத்துக்கு கீழே நிற்கிறவன்.. என்னையே சைட் அடிச்சிட்டிருக்கான்.. சரியான வழிசல் பேர்வழி..!!”என்று அலுத்துக் கொள்வது புரிந்தது. 

அவர்கள் பின்னே தரையில் வெள்ளைப்பிரம்பை தட்டித் தட்டி நடந்து வந்து கொண்டிருந்தவளின் செவிகளில் விழுந்தது , அந்தப் பெண்ணின் வார்த்தைகள்!!

அவர்கள் அலுத்துக் கொள்வது அவர்கள் சொன்ன அதே வாகை மரத்தடியில் நின்றிருந்த அவளுடைய ரவுடி பேபியைத் தான் என்று புரிய, அக்னிமித்ராவின் முகம் கோபத்தில் இலேசாகச் சிவக்கத் தான் செய்தது. 

‘ஹலோ.. அவன் ஒண்ணும் உங்களை சைட் அடிக்கலை.. அவன் வைச்ச கண் வாங்காம பார்க்குறது என்னைத் தான்’என்று கூற வேண்டும் போல இருந்தாலும், அதை சொற்களில் அன்றி செயலில் செய்து காட்ட எண்ணம் கொண்டாள் பெண். 

இருவரது புறமுதுகையும் நோக்கி, “எக்ஸ்க்யூஸ் மீ”என்றுரைக்க, அந்தப் பெண்களும் திரும்பிப் பார்த்து, அவளது வெள்ளைப்பிரம்பை ஏந்திய நிலை கண்டு, கண்களில் பரிதாபத்துடன் விலகி நிற்க, 

அவனை நோக்கி முன்னேறியவள், காற்றில் கை நீட்டி, “ரவுடி பேபி..” என்று பூங்கொத்து நகையொன்றை உதிர்த்தவாறு அவள் அழைக்க, 

அவள் அழைப்பில் காதலுடன், விரைந்து வந்து அவளைத் தன் மார்புக் கூட்டுக்குள் கட்டிக் கொண்டான் அதிமன்யு.

அதிமன்யுவின் கண்கள், தன் முகத்தைப் பார்த்திராத தன் மனதுக்கு உகந்த பெண்ணின் கண்களை விட்டும் அங்குமிங்கும் இம்மியளவு கூட அசையவில்லை. 

அவனுக்கு உலகம் மறந்து போனது. அவனது கண்களுக்கு.. அந்த திவ்யமான அழகுள்ள பெண் மட்டும் தான் தெரிந்தாள்;கவனத்தில் பதிந்தாள். 

இரு பெண்களும், அதிமன்யு வைத்த கண்வாங்காமல் பார்த்தது நம்மை அல்ல, அக்னிமித்ராவைத் தான் என்றானதும் அசடுவழிய நிற்க வேண்டிய நிலை அவர்களுக்கு. 

அந்த ஒல்லிப் பெண் பக்கத்தில் இருந்த குண்டுப் பெண்ணோ, “அவன் ஒண்ணும் நம்மளை சைட் அடிக்கலை..நம்ம சீனியரை தான் சைட் அடிச்சிருக்கான்..”என்று சொல்லிக் கொண்டு நகர, ஒல்லிப் பெண் திரும்ப வாய் திறக்கவேயில்லை. 

தெளிந்திருந்த அவள் மதிவதனம் கண்டு இதழ்கள் குறுகுறுக்க, அவளது நெற்றியில் மையலுடன் இதழ் பதித்தான் அதிமன்யு. 

அவளது தளிர் விரல்களோடு தன் விரல்கள் கோர்த்தவன், அவளை அழைத்துக் கொண்டு, தன் வண்டியை நாடிப் போனான். 

அங்கே நின்றிருந்தது கொஞ்சநாளாக அவன் சர்வீஸூக்கு விட்டிருந்த அவனுடைய நவீனரக ஹங்க் வண்டி. 

தன் லோகட் நெக் வைத்த சுடிதாரில்.. துப்பட்டாவை சரிவர போடாமல் நின்றிருந்த அவளது வனப்பைக் கண்டு அவன் இதழ்கள் குறுகுறுத்தது எல்லாம் ஓரிரு செக்கன்களுக்குத் தான். 

பின் அவளுக்கு ஓர் நல்ல மெய்க்காப்பாளனாக மாறிப் போனவன், அவளை கண்கள் மிருதுவாகப் பார்த்து, “என்ன இது? என் கிட்ட நீ நீயா இரு.. எக்ஸ்போஸ் பண்ணனும்னு அவசியமில்லை”என்றவன், வந்ததும் முதல் வேலையாக துப்பட்டாவை சரி செய்து விட்டான் அவன்.

அவன் கண்களுக்கு விருந்தாக தன் அழகைப் படைக்கத் தானே கொஞ்சம் கிறுக்குத்தனம் செய்தாள் அவள். ஆனால் இனிய கண்ணியம் காக்கும் ஆண்மகன் அவள் உள்நோக்கம் அறிந்து அவ்வாறு சொல்ல, அதுவும் கூட காதலை கூட்டியது அவளுக்கு. 

அந்நொடி.. அவன் கண்ணியம் காத்த அந்நொடி.. அந்நொடி அவளுக்குள் வேர்விட்டது அந்த ஆஜானுபாகுவான ஆண்மகனைக் கண்ணாறக் காண வேண்டும் என்ற அலாதி ஆசை!! 

கண்களில் நீர் துளிர்க்க, தன் விரல்களைப் பற்றியிருந்த அவன் புறங்கையில் முத்தமிட்டவள் கேட்டாள், “நாம இன்னைக்கு எங்கே போறோம் பேபி?” என்று. 

அந்த பார்க்கிங் ஏரியா.. வாகை மரத்தோடு, அகால கிளைகள் பரப்பி, விழுதுகள் நிறைந்த ஆலமரம் நின்றிருக்கும் இடம் அது. 

கீழே எங்கும் ஆலம் பழங்கள் விழுந்து, சிதறியிருக்க, தரையெங்கிலும் காய்ந்த இலைகள் கொண்ட அழகான இடம் அது! 

சூரியன் வேறு அந்த நேசமிக்க காதலர்களை இலைகளினூடு ஒளிக்கதிர்கள் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அழகிய தருணம் அது. 

ஸ்டேன்டிலிருந்து வண்டியை விடுவித்து, பைக்கில் தன் கால்களை உயர்த்திப் போட்டு கம்பீரமாக ஏறியவன் சொன்னான், 

“பார்க்கத் தானே போற? வா.. வந்து வண்டியில் ஏறு”என்று. 

அவனைத் தொடர்ந்து வண்டியில் ஏறியவளின் கைகள், அவனது வயிற்றோடு ஊர்ந்து, அதிமன்யுவை உரிமையோடு கட்டிக் கொண்டது. 

காதலியின் ஸ்பரிசம் தந்த சந்தோஷத்தில் உறுமிக் கொண்டே வேகமெடுத்தது அவன் கைவன்மையில் சீறிப் பாய்ந்து கொண்டிருந்த வண்டி. 

அவளது செந்தனங்களோ.. சந்தோஷமிகுதியில் அவன் புறமுதுகோடு நச்சென்று ஒட்டிக் கொண்டது. கன்னமோ அவன் பின்னங்கழுத்தில் இளைப்பாற நாசியோ அவன் மேனி சிந்தும் பிரத்தியேக நறுமணத்தை முகர்ந்திருக்க, கண்களோ இனிமை மயக்கத்தில் மூடியிருந்தது. 

அவனுடனான பயணம். முடிவுறாது தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் போலவே இருந்தது அவளுக்கு.

காதலில் விளைந்த உத்வேகத்தில் வழிநெடுகிலும் அவன் பரந்த முதுகில் குட்டிக் குட்டி முத்தங்கள் வைத்தாள் அக்னிமித்ரா. 

அக்னியின் தோழி தந்த முத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த கண்ணியமான ஆண்மகனையும், காதல் பித்து பிடித்தவனாக ஆக்க, அவள் பக்கத்தில் இருக்கும் போது எழும் உணர்ச்சிகளை அடக்க படாதபாடு பட்டுப் போனான் அதிமன்யு. 

‘எத்தனையோ பெண்களை கடந்து வந்திருந்தும்.. இந்த கண் தெரியா பதுமை மட்டும்.. அவன் நெஞ்சு முழுவதும் நிறைந்திருப்பது புதுமை!! 

அவன் அவளை அழைத்து வந்திருந்தது.. நண்பன் விக்கி சகிதம் அவன் வசிக்கும் வீட்டிற்கு. 

இருவர் வசிப்பதற்கு சகல இடத்தேவைகளையும் கொண்டமைந்திருந்தது அவர்களின் வீடு. வண்டியை வீட்டு முற்றத்தில் தரித்த பின்னர் அவளது கைகளைப் பற்றியவன் தான், இறுதி வரை அவள் விரல்களுக்கு விடுதலை அளிக்க நாடவேயில்லை அவன்!! 

கதவு மூடப்பட்டே இருந்தாலும் தள்ளியதும் திறந்து கொண்டது அது!! 

வீட்டின் கண்ணாடி சாளரம் வழியாக வந்து கொண்டிருந்த சூரிய வெப்பத்தை அவள் மேனி உணர, நல்ல காற்றோட்டமான வீடு என்றே தோன்றியது அவளுக்கு. 

வீட்டில் இரு அறை இருந்தாலும், நடுக் கூடத்திலேயே பப்பரப்பே என்று விரித்துப் போட்டவாறு படுத்திருந்தான் விக்கி. சூரியன் உச்சியைத் தாண்டிக் கொண்டிருக்க.. இன்னும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் நண்பன் விக்கி. 

மித்ரா வந்திருக்கும் போது அசிங்கப்படுத்தி விட்டானே என்று தோன்ற, நெற்றியில் கை வைத்து கொண்டவன், கொஞ்ச நேரம் அலுத்துக் கொண்டவனாக நின்றான். 

பின்பு விக்கி மீது எழுந்த கோபத்தில், அவன் தொடைகளை கால்களால் தட்டி, “டேய் எழுந்திருடா..”என்று அதட்டி எழுப்ப, ஒரு சில நிமிடங்களின் பின்னர், 

நெட்டி முறித்து கண்களை கசக்கிக் கொண்டே எழுந்து வாயை ‘ஆ’வென்று திறந்து கொட்டாவி விட்டுக் கொண்டே, “காலை வணக்கங்கள் மச்சிஹ்..”என்றான் விக்னேஷ். 

அதைக்கண்டு கிளுக்கி நகைத்த மித்ராவின் சிரிப்பொலி கேட்டு, கைலியை சுருட்டிக் கொண்டு தடதடவென பாயிலிருந்து எழுந்த விக்கி, 

நண்பன் முறைப்பது கண்டு ஜர்க்காகி நின்றான். 

பின் சமாளித்தவனாக, “ஸாரி மச்சி.. இன்னைக்கு மித்ராவை வீட்டுக்கு அழைச்சிட்டு வரன்னு சொன்னேல்ல? ரியலி ஸாரி மச்சி.. ரியலி ஸாரி.. அதை மறந்து கொஞ்சம் அசதியில் தூங்கிட்டேன்!!”என்று வெள்ளந்தியாக இழுக்க, 

அதிமன்யு அருகில் நின்றிருந்த அக்னிமித்ராவுக்கு புரிந்தது கோபத்தில் அதிமன்யுவின் உடலை விறைப்பது.

காதலோடு அவன் நெஞ்சில் கை வைத்து நீவி, “ரவுடி பேபி.. காம் டவுன்… ரொம்ப கோபப்படுற நீ..”என்று அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆவன செய்ய, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அவன் கோபம்!! 

விக்கியோ நண்பனின் முறைத்தல் பார்வை சமரசமானதைக் கண்டு அக்னிமித்ராவை தன்னை காப்பாற்றிய ஆபத்பாந்தவன் கண் கொண்டு பார்த்தவன், 

“உன் ரவுடிபேபிக்கிட்டேயிருந்து என்னைக் காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ்மா.. பை த வே ஐ ஏம் விக்னேஷ்” என்று தன்னை அவளிடம் அறிமுகப்படுத்தவும் செய்தான். 

இவளும் பதிலுக்கு கை நீட்டி, “நான் அக்னிமித்ரா..”என்று சொல்ல, அவளோடு கை குலுக்காமல் பின்வாங்கினான் நண்பன் விக்கி. 

“ஹைய்யைய்யே கையெல்லாம் வேணாம்மா.. வணக்கம்!!”என்று விக்கி கையெடுத்துக் கும்பிட, சட்டென தன் கையை பின்னெடுத்துக் கொண்டவளின் இதழ்கள் அழகாகக் குவிந்தன. 

“ஓ.. தமிழர் பண்பாடு? ..”என்று வியந்து கேட்டது மித்ராவே தான். 

விக்கியிடமிருந்து படபடவென சற்றும் தாமதிக்காமல் வந்து விழுந்தது வார்த்தைக் கோர்வைகள்!! 

“ச்சேச்சே அதெல்லாம் இல்லைங்க..இப்போ தான் தூங்கியெழுந்திருச்சேன்.. இந்தக்கை எங்கேயெல்லாம் இருந்திச்சோ..”என்று தன் கையை முகத்துக்கு நேராகக் கொண்டு சென்று பார்த்த வண்ணம் சொன்னவன், 

அழகாக இருகரம் கூப்பி நின்று, “அதான்.. வணக்கம்..”என்றான். 

விக்கியின் விளக்கத்தில், சட்டென உற்பத்தியானது ஓர் சுந்தரமான குமிழ்ச்சிரிப்பு. 

இறுதியில் வாய் விட்டே நகைத்தவள், “ஹஹ்ஹா.. வெரி ஃபன்னி காய்..”என்று விக்கிக்கு அடைமொழி கொடுக்கவும் செய்தாள். 

அவள் வாய் விட்டு சிரிப்பதை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தது உடல் திடகாத்திரமுள்ள ஓர் குழந்தை. 

பாய், தலையணையெல்லாம் ஓரே எடுப்பில் வாரிச்சுருட்டிக் கொண்டு பவ்யமாகக் குனிந்து அவளை நோக்கி, “கொஞ்சம் டைம் குடுத்தீங்கன்னா.. டக்குன்னு ரிஃப்ரெஷ்ஷாகி வந்துருவேன்.. அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டா..?” என்றவன் ரிவர்ஸிலேயே நடந்து செல்ல, 

நண்பனின் உடல்மொழிகள் கண்டு விறைப்புப் பேர்வழி அதிமன்யுவின் இதழ்க்கடையோரம் எட்டிப் பார்க்க முயன்றது ஓர் குபீர் சிரிப்பு. 

விக்கியும் குளியலறை நோக்கி நடந்து விட.. ஹால் அவனும், அவளும் என தனிமைப்பட்டது. அவளை விட்டும் நகர்ந்து சென்று சாளரங்களை அவன் திறக்க, சூரிய ஒளியோடு கலந்து வந்தது தென்றல் காற்று. 

அதை மெல்ல முகர்ந்தவள், “உன் வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு பேபி”என்றவள் அவனிருந்த திசை நோக்கி மெல்ல நகர்ந்தாள். 

அவள் தன்னை நோக்கி வருமுன்பு அவளை அடைந்த அதிமன்யு, அவள் தோளோடு கையிட்டு அணைத்து வந்து அவளை அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான். 

“இரு.. உனக்கு என் கையால..காபி போட்டு எடுத்துட்டு வரேன்”என்றவன், அங்கிருந்து எழுந்து கூடத்தோடு அருகாமையில் இருந்த சமையலறைப் பக்கம் விரைந்தான். 

இரு ஆண்கள் உபயோகிக்கும் சமையலறை என்று சொல்லுவதற்கு இடமின்றி.. ரொம்பவும் நேர்த்தியாக, க்ளீனாக இருந்தது சமையலறை!! 

விக்கி கொஞ்சம் சுத்தத்தில் தாருமாறாக இருந்தாலும், நேர்த்திப் பேர்வழி அதிமன்யுவின் வழிகாட்டலில், அவர்கள் வீடு, சமையலறை இன்னும் ஏன் முற்றம் உட்படக் கூட சுத்தமாகவே இருந்தது. 

அவனுடைய வாளிப்பான கைகள் காபியை இரு கைகளுக்குமாக மாற்றி மாற்றி ஊற்றிக் கொண்டிருக்க, அவனது முரட்டு அதரங்களில் உறைந்திருந்தது ஓர் புன்னகை. 

அந்த கணம்.. அவனது வன்மையான உடல் விறைத்து அடங்க, அவனது புறமுதுகோடு உறவாடியது வெண்பஞ்சு தனங்களுக்கு சொந்தக்காரியின் உடல். 

மஞ்சத்தில் உறங்கும், இன்னும் சரிவரக் கண் திறவாக் குழந்தை.. தாயின் சூட்டை வைத்து.. ஊர்ந்து ஊர்ந்து தாயிருக்கும் திசை நோக்கி நகருமல்லவா? 

அது போல அவனில் இருந்து வரும் நறுமணம், அவன் எழுப்பும் சின்னச் சின்ன ஒலிகள் கொண்டு அவனிருக்கும் திசை நோக்கித் தானாக நகர்ந்தது அவள் பாதங்கள். 

மெல்ல வந்து அவன் முதுகில் தனங்கள் அழுந்தப் பதித்து, அவன் வியர்வை மனத்தை முகர்ந்து, கண் மூடி கிறங்கி நின்றாள் அவள்.

அவன் தன் முத்து மூரல்கள் அழகாக வெளியுலகத்துக்கு தரிசனம் தர, மௌனமாக நகைத்தான்!! 

அவளோ ஹஸ்கி குரலில், மென்மையாக, “பேபி.. கல்யாணத்துக்கு அப்புறம்.. உனக்கு வயிறு நிறைய சமைச்சு போடணும்னு ஆசையா இருக்கு.. சமைக்குறது எனக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.. இருந்தாலும் உனக்காக எப்படியும் சமைப்பேன்!!”என்று சொன்னாள் பெண். 

ஆம், கண் பார்வை உள்ள பெண்களுக்கே சிலசமயம் உப்புக்கும், சீனிக்கும் வித்தியாசம் பிரித்தறிய முடியாமல் போகிற போது, அக்னி மித்ரா போன்ற பெண்ணுக்கு சமையல் என்பது எப்போதுமே கடினமானது தான். 

தலைவியின் கிசுகிசு மொழிகள் அவனுடைய உடலை இன்னும் கொஞ்சம் விறைக்க வைத்தது. அவளைத் தன்னிலிருந்து விலக்க முடியாமல் காபி ஆற்றிக் கொண்டே கேட்டான், 

“அன்னைக்கு மகாவலி ரிவர் பேங்க்ல வைச்சு என்ன சொன்ன?”என்று. 

“என்ன சொன்னேன்?”-புரியாத விழிகளுடன் திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டாள் அக்னிமித்ரா. 

தற்போது அவள் புறம் திரும்பியவன் கைகளில் காபி தம்ளர் இல்லை. 

மாறாக வெற்றுக்கைகளில் அவளது குட்டி இடையை சுற்றி வளைத்திருந்தான் அவன். 

தன் நெற்றி குனித்து, தன் நுதலோடு அவள் நுதல் உரசியவள், “குழந்தை போல பார்த்துக்க நீ இருக்க சொன்னேல்ல?..”என்று கேட்க, அக்னிமித்ராவின் தலை தானாக ஆடியது. 

ஒரு கையால் கன்னம் தாங்கியவன், மிருதுவான குரலில், “குழந்தை போல உன்னைப் பார்த்துப்பேன்.. என்னைக் காதலிக்கத் தான் ஆள் தேவை.. சமைக்க, துணி துவைக்க இல்லை..”என்று சொல்ல, அவன் சொற்கள் உணர்த்திய காதலில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றாள் அக்னிமித்ரா. 

ஆண்களைப் பற்றி கொஞ்சம் தாழ்வான எண்ணங்கள் வைத்திருந்தவளுக்கு, அதிமன்யு.. அவள் சந்தித்த அசுரர்களில் தேவனாகத் தோன்றினான். 

உணர்ச்சி வசப்பட்டு, கண்கள் கலங்க கன்னம் வருடிய உள்ளங்கையில் சின்ன முத்தம் வைத்தாள் அதிமன்யுவின் தலைவி. 

“சரி போய் உட்காரு.. நான் போய் உனக்கு சீக்கிரம் காபியோட வர்றேன்..”என்றவன், அவளைத் திருப்பி, முதுகில் கை வைத்து, சமையலறையை விட்டும் அனுப்ப, சிரித்த முகத்துடனேயே நடந்து வந்தாள் அக்னிமித்ரா. 

அவன் பற்றிய ஓர் மந்தகாசமான கனவில், சிரித்துக் கொண்டே நடந்து வந்தவள், கவனக்குறைவின் விளைவினால், மேசையின் அகல முனை விளிம்பில் தன் வயிற்றை இடித்துக் கொண்டாள் அக்னிமித்ரா.

மேசை ஆடிய ஆட்டத்தினால் விளைந்த ஒலி ஒரு புறம், மேசை மீதிருந்த பிளாஸ்டிக் “மக்” விழுந்த ஒலி மறுபுறம், கூடவே ஆலிலை வயிற்றில் பட்ட, மேசையின் விளிம்பு பட்டதால் அவள் கத்திய கூச்சல் இன்னொரு புறம் என.. அவ்விடமே கொஞ்சம் அல்லோலகல்லோலப்பட.. சமையலறையில் இருந்த அக்னிமித்ராவின் தலைவன் பதறிப் போனான். 

அக்னிமித்ரா, ‘ஆ..’என்று கத்திய வண்ணம் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, தரையில் தொப்பென அமர்ந்து, இதழ்களைக் கடித்துக் கொண்டு வலி பொறுக்க முயன்று கொண்டிருந்த சமயம் அது!! 

குளியலறை ஷவர் தண்ணீர் கொட்டும் ஓசையில் விக்கிக்கு, அக்னிமித்ராவின் கத்தல் விழவில்லை போலும். 

ஆனால் விழ வேண்டியவனுக்கு சரியாகவே விழுந்தது.

 “என்னாச்சு.. என்னாச்சு?”என்று பதறிக் கொண்டு ஓடி வந்தவனுக்கு.. அவள் வலியில் கண்களை இறுக மூடித் துடிப்பது கண்டு.. ஈரக்குலை பதறிப் போயிற்று. 

“வ்வலிக்குது.. பேபி”என்று.. அவன் கையைப் பற்றிக் கொண்டு அவள் கதற, அதைக் கண்டு… அந்த வலிமையான ஆண்மகனின் கண்களில் துளிர்த்தது கீற்றாக ஒரு கண்ணீர்த்துளி!

அன்று போலவே இன்றும்.. அவளை நெஞ்சோடு சாய்த்து, காதில் முணுமுணுக்கும் தொனியில், “ஒண்ணுமில்லை.. ஒண்ணுமில்லை…இட்ஸ் ஓல்ரைட்”என்று சொல்லியவாறு, அவளைக் குழந்தை போல கைகளில் ஏந்திக் கொண்டான் அவன்.

அவளை அழைத்துச் சென்று, மீண்டும் அதே சோபாவில் சாய்த்து அமர வைத்தவன், அவளுடைய சுடிதாரை மெல்ல உயர்த்தினான். 

வெண்ணையில் குழைத்து குழைத்து செய்தாற் போன்றிருந்த ஆலிலை வயிற்றின் இடதுபுறத்தில்.. மேசை விளிம்புக் குத்தி சிவந்து, உள்ளுக்குள்ளேயே நீலம் பூத்திருப்பதைக் கண்டான் அதிமன்யு. 

அவன் தன் இடையை ஆராய்கிறான் என்ற வெட்கம் ஒருபுறம் இருந்தாலும், வலியின் காரணமாக அவன் பரிசோதிக்க அனுமதி தந்து விட்டு அமைதியாக கண்கள் மூடி மூச்சை இழுத்துப்பிடித்த வண்ணம் அமர்ந்திருந்தாள் அக்னிமித்ரா. 

மிகுந்த நேரம் எந்த பதிலுமோ, சலனமுமோ வராதிருப்பது கண்டு.. மெல்ல கண் திறந்தவள் கேட்டாள், “என்னாச்சு பேபி?”என்று.

அவனோ அமைதியாக எடுத்து வந்த ஆயுர்வேத தைலத்தை அவள் வயிற்றில் தேய்க்க கை வைத்த கணம் அவனது செவிகளில் நுழைந்தது அந்தக் கேள்வி!! 

மெல்ல விழியுயர்த்தி.. அவளது விழிவெண்படலம் வலியினால் செக்கச் செவேலென சிவந்திருப்பதைக் கண்டவன்..இன்னும் கொஞ்சம் அவதியுற்றவனாக, நீலம் பூத்திருக்கும் விஷயத்தைத் தலைவியிடமிருந்து மறைத்தான் அவன். 

“ஒண்ணுமில்லை.. இரு.. இந்த தைலத்தை தேய்ச்சு விடறேன்.. அமைதியா இரு”என்றவன் அவளது வலியொன்றினையே கருத்தில் கொண்டு, தைலம் தேய்த்து விட ஆரம்பித்தான். 

நீலம்பூத்த இடத்தில் அவன் பெருவிரல் அழுந்தப் பதிந்த சமயங்களில் எல்லாம் வலி தாங்க முடியாமல் அவள் அலற, அந்த கணம் எல்லாம் வலியில் சுருங்கிய அவன் வதனத்தைப் பார்க்க முடியாமல் போனது அக்னிமித்ராவின் துரதிர்ஷ்டம். 

கொஞ்சம் கொஞ்சமாக வலி அவன் தேய்த்த தேய்ப்பில் இருந்த இடத்தை விட்டும் காணாமல் போக, அக்னிமித்ரா கள்ளத்தனமாக தன் இடையில் முதன் முறையாகப் பதிந்த ஆண்மகனின் தீண்டலை சுகிக்க ஆரம்பித்தாள். 

அவள் உடலில் எதிர்பாராத வண்ணம் மெல்லப் பரவியது சூடு!! உணர்ச்சிகள் அவளுள் விதையாய் விழுந்து.. முளை விட்ட சமயம், 

கீழுதடு கடித்து, உணர்ச்சிகள் சமாளித்தவள் அது முடியாமல்.. அவன் கையை தன் இடையோடு சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள் அக்னிமித்ரா. 

தன்னருகே இருப்பதோ.. அவன் ஆசை வைத்த அதியுன்னதப் பெண்!! அவளே கிறங்கி நின்ற அந்தத் தருணத்தில்… ஆண்மகன் அவனுக்கும் எவ்வாறு தான் இருந்திருக்கும்? 

அவள் முகம் காட்டிய உணர்ச்சி வெள்ளத்தில்.. ஆஜானுபாகுவான ஆண்மகன் அவனுக்கும் கண்களில் மெல்ல மெல்ல ஏறியது.. காதல் கொண்ட ஆண்மகன்கள் அடையும் கிறக்கம்!! 

அது எல்லாம் ஓரிரு நொடிகளுக்குத் தான்!! சட்டென சிந்தை தெளிந்தவன், அவளில் இருந்தும் கைகளை உருவி எடுத்துக் கொண்டவனாக, 

“ம்ஹூஹூம் இது தப்பு..”என்றவன், தன் ஆசைகளை கட்டுப்படுத்த, தலைகோதி பெருமூச்சும் விட்டுக் கொண்டான். 

அக்னிமித்ரா அன்றைய நாளின் இரண்டாம் முறையாக.. இந்தக் கண்கள் கொண்டு.. அதியுன்னத ஒழுக்கம் கொண்ட ஆண்மகனைக் காணேனோ? என ஏங்கிய ஏக்கம்.. பெருகவாரம்பித்த தருணம்!! 

கிடைத்த சந்தடி சாக்கில்.. அவளிடம் சிற்றின்பம் என்ன? பேரின்பமும் கூட அவனால் அனுபவித்திருக்க முடியும். 

ஆயினும் இது தப்பு என்று ஒதுங்கி நிற்கும் அவன் இனிய கண்ணியம் பிடிக்க, அவளோடு ஒட்டி அமர்ந்து சொரசொரப்பான கன்னங்களை இரு கைகளாலும் பிடித்தாட்டியவள், சொன்னாள், 

“கொ“ஞ்”சம் கொ“ஞ்சமே பேட் போயா இருடா.. இல்லைன்னா காதலுக்கிறது போர்!!..”என்று. 

அவள் சொன்ன ஒவ்வொரு சொல்லும் பசுமையாக இதயத்தில் பதிய, மௌனமாக நகைத்தான் அவன். 

இன்னும் அவனது முரட்டுக் கன்னத்தில் கை வைத்திருந்தவளுக்கு, இதழ்கள் வளைவதனூடாக, அவள் சிரிப்பது புரிய, 

 

“நீ சிரிக்கிறேல்ல?”என்று அன்று போல இன்றும் கேட்டாள் அக்னிமித்ரா. 

அந்நேரம் குளியலறையில் இருந்து தலை துவட்டிக் கொண்டே வந்த விக்னேஷின் கண்களுக்கு எக்குத்தப்பாக விழுந்தது காதல் ஜீவிகள் இரண்டும்.. இருக்கும் நிலை!! 

அவன் கை இன்னும் அவளது இடையில் இருக்க, இவள் கைகளோ அவனது முரட்டுக்கன்னத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் நிலை!! 

அதிர்ச்சியில் அகல விரிந்த அவன் கண்கள் அடுத்த நொடி, சட்டென மூடிக் கொள்ள, ஏதேதோ உளறவராம்பித்தான் விக்னேஷ். 

“பரம மண்டலத்தில் இருக்கும் பிதாவே என்னை மன்னியுங்கள் மன்னியுங்கள்.. கன்னிப் பையன் நான் கண்ட காட்சியெல்லாம்.. என் சிந்தையில் இருந்து அழித்து விடுங்கள் தேவனே!!”என்று நடுக்கூடத்தில் இருந்து புலம்ப, 

சட்டென சிந்தை தெளிந்தனர் அவனும், அவளும். 

அப்போது தான் விக்கி என்ற கதாபாத்திரம் குளியலறை சென்ற ஞாபகமே வந்ததது இருவருக்கும். 

அவனிலிருந்து சட்டென தன் கைகளை பிரித்தெடுத்துக் கொண்டாள் அவள். அதே போல அவன் இடையிலிருந்து கையை வெடுக்கென்று எடுத்துக் கொண்டான் இவன். 

இருவரும் பழைய நிலையை அடைந்த பின்னும் கண் திறவாமல் உளறிக் கொட்டும் நண்பன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வர, 

“டேய் ம்மூடு..ஒண்ணுமே நடக்கலை..!!”என்றான் அதிமன்யு. 

அவன் பேச்சில் மூடிய கண்களைத் திறந்த விக்கி, “ யாராவது கேட்டால்.. அப்படித்தானே வெளியில சொல்லணும்..?”என்று கேட்டான். 

மித்ராவும் அதே ஜெனரேஷன் என்பதாலோ.. விக்கி செய்யும் சின்னச்சின்ன குறும்புகள் சலிப்பைக் கொடுக்காமல், மாறாக சிரிப்பையே கொடுத்தது. 

மித்ராவை விட்டும் எழுந்தவன், நண்பனின் எண்ணத்தினை மாற்றுவதற்காக, 

“போடா லூசு.. நான் போய் பீலியில் குளிச்சிட்டு வரேன் .. நீ வெஜிடபிள்ஸ் எல்லாம் கட் பண்ணி வை.. நான் வந்து சமைச்சிக்கிறேன்.. இன்னைக்கு மித்ராவுக்கு நளபாகம் தான்!! ”என்று சொல்லிக் கொண்டே போய், காபியை எடுத்து வந்து மித்ராவுக்குக் கொடுக்கலானான். 

ஏற்கனவே காபி ஆஃபிஸில் பருகியிருந்தாலும், இது அவள் தலைவன் போட்ட காபி பாற்கடலில் இருந்து அள்ளித்தந்த அமிர்தம் போல ரசித்துப் பருகினாள் மங்கை. 

அவனோ அத்தோடு நில்லாமல் டவல், சோப்பு டப்பா சகிதம் குளிக்க செல்ல ஆயத்தமாக விக்கி கேட்டான், “ஏன் பீலிக்கு போகணும்.. இங்கேயே குளிக்கலாமே..?அதான் மடை திறந்த வெள்ளம் போல தண்ணி வருதே?”என்று. 

(பீலி-எந்நேரமும் நீர்ப்பெருக்கெடுத்து ஓடும் நீர்ச்சுனைக்கு சிங்கள மக்கள் வழங்கும் பெயர்.. கிட்டத்தட்ட மினி நீர்வீழ்ச்சி போல.. ஆனால் நீர்வீழ்ச்சி அல்ல) 

“பீலித்தண்ணில குளிச்சா.. ஸ்பா போய்ட்டு வந்த மாதிரி இருக்கும்..ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா குளிக்குற பய.. அந்த சுகம்லாம் உனக்கு சொன்னாலும் புரியாது..” என்றவன் வாசற்படியை நோக்கி நகர.. அவனது எட்டுக்களைத் தடுத்து நிறுத்தியது மெல்லிய குரல்!! 

அது அக்னிமித்ராவின் குரல்!! 

“பேபி.. உன் கூட நானும் வர்றேனே ப்ளீஸ்..”என்று அவள் சொல்ல, மெல்லத் திரும்பி அவளை நிர்மலமான முகத்துடன் பார்த்தான் அதிமன்யு. 

இவள் விக்கி இல்லாத நேரம் அருகில் இருந்தாலேயே இவளுக்காக எழும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது பீலி நோக்கி வந்தால்? அவன் நிலை? 

மறுக்க வாய் திறக்கிறான் என்பதை அவனது உடல்மொழிகள் மூலம் அறிந்தவள், சட்டென்று அவனைத் தடுத்து நிறுத்தி, “மச்சி அதான் அவ ஆசைப்பட்றா இல்ல? கூட்டிட்டுப் போ”என்று சொல்ல, வேறு வழியில்லாமல் மித்ராவையும் அழைத்துப் போகும்படியானது. 

 

 

4 thoughts on “எங்கேயும் காதல்! – 5&6 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top