26 – ஆடி அசைந்து வரும் தென்றல்
விடிய விடிய தன் மனம் என்னும் கேலரியில் ஷேவ் செய்து வைத்திருந்த தேவர்ஷியோடான காலங்களை திகட்ட திகட்ட எடுத்துப் பார்த்து திளைத்து போனவனுக்கு தூக்கம் டெலிட் ஆகிவிட்டது. காலையிலேயே அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்க முடியவில்லை. எப்படி பாரக்க.. என்ன சொல்லி.. என யோசித்தவனுக்கு ஷாஷிகா வந்து மின்ன.. தன் பிகரை கரெக்ட் செய்ய போகும் விடலை பையனாக துள்ளி கொண்டு கிளம்பினான்.
எத்தனையோ பெண்களை கடந்து வந்துவிட்டவனுக்கு ஏன் தேவர்ஷி மட்டும் நினைவில் நிலைத்துவிட்டாள் என இப்பவும் யோசிக்க மறந்தான். யோசித்து இருந்தால் தேவர்ஷியிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தப்பித்து இருக்கலாம். சேதாரம் குறைவாக இருந்திருக்கும்.. கர்மா அவனை யோசிக்க விடவில்லை..
படிகளில் குதித்து இறங்கி வந்த மகனை பார்த்து காபி குடித்து கொண்டிருந்த கங்கா வாயில் ஊற்றிய காபியை கூட விழுங்காமல் ஹாங் என வாயை பிளந்து.. வாயின் கடைவழியே காபி ஒழுக.. அதை கூட உணராமல் பார்த்து கொண்டிருந்தார்.
அனிவர்த்கோ தாயை பார்த்ததும் வந்த சிரிப்பை உதட்டை மடக்கி அடக்கினான். கங்காவின் அருகில் வந்தவன் தாடையை தட்டி வாயை மூட வைத்தவன்.. அவரின் சேலை தலைப்பை எடுத்து வாயை துடைத்துவிட்டான்.
“பை கங்கா டார்லிங்..” என ஸ்டைலாக கையை அசைத்து… கார்கீயை விரலில் சுழட்டிக் கொண்டு ஒரு சினிமா பாட்டை விசிலடித்துக் கொண்டு செல்லும் மகனை பார்த்து கங்காவிற்கு மயக்கம் வந்துவிட்டது. பக்கத்தில் இருந்த சிதம்பரத்தின் மேலேயே மயங்கிவிட்டார்.
“கங்கா.. கங்காம்மா..” சிதம்பரம் கன்னத்தில் தட்ட… மெதுவாக கண்களை திறந்து பார்த்தவர்..
“ஏங்க.. இது நம்ம அனிவர்த் தானுங்களா..”
“ஆமாம்.. உம்மவன் தான்..”
“ஏதாவது மோகினி பிசாசு அடிச்சிருக்குமோ..”
“அப்படி எல்லாம் இருக்காது..”
“ஒருவேள எந்த சீமை சித்தராங்கிய புடிச்சுட்டனோ..”
“இப்ப எல்லாம் அவன் அப்படி இல்லையே கங்கா..”
“இவ்வளவு நேரமா எழுந்து இத்தனை ஆர்பாட்டமா எங்க கிளம்பி போறானாம்..”
“தெரியலையே ம்மா..”
“க்கும்.. கத்திரிக்கா முத்தினா.. கடை தெருவுக்கு வந்து தானே ஆகனும்..” என நொடித்து கொண்டு எழுந்து சென்றுவிட்டார்.
அனிவர்த் ஒரு ஆர்வத்தில் கிளம்பி வந்துவிட்டான். ஷாஷிகாவிற்கு ஏதாவது வாங்கி போகலாம் என்றால் ஒரு கடை கூட திறக்கவில்லை. மணி ஏழு தான் ஆகியிருந்தது. இவ்வளவு நேரமாக எப்படி போய் நிற்பது என்ற யோசனை வேறு.. ஒரு உணவகத்திற்கு சென்றவன்.. எந்த உணவு தயாரித்து கொண்டு வர லேட்டாகும் என கேட்டு அந்த உணவையே கொண்டு வருமாறு சொல்லி தன் போனோடு தன் நேரத்தை நெட்டி தள்ளினான்.
ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் போனில் தேவர்ஷியின் போட்டோ இருக்கா என துழாவினான். பொன்முடியில் எடுத்த சிலது இருக்க… தொட்டு தடவி “குட்டிம்மா..” என்றான் ஏக்க பெருமூச்சோடு…
உணவு வந்து மெல்ல சாப்பிட்டு என ஒரு மணி நேரம் கடத்தியிருந்தவன்.. ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சில பார் சாக்லேட்களும் ஐஸ்கீரீமிம் வாங்கி கொண்டு தேவர்ஷியின் வீடு வந்து சேர்ந்தான். அழைப்பு மணி அடிக்க.. திருகுமரன் வந்து திறந்தார். அவருக்கு அனிவர்த் யார் என்று தெரியவில்லை..
“நீங்க..”
“நான் ஷாஷிகா ப்ரண்ட்.. அவளை பார்க்கனும்..”
இந்த வயதில் தன் பேத்திக்கு ஒரு ப்ரண்டா என வியந்தவர்.. அவனின் பகட்டான தோற்றம் தவறாக நினைக்க விடவில்லை. உள்ளே அனுமதித்தார்.
உள்ளே வந்து அமர்ந்தவனிடம்…
“நீங்க யாரு.. ஷாஷிகாவ எப்படி தெரியும்..” திருகுமரன் கேட்க..
“நான் அனிவர்த்.. சி.கே டிரேடர்ஸ் எம்.டி..”என்றவன்..
ஷாஷிகாவை சந்தித்த நிகழ்வுகளை உற்சாகமாக சொன்னான். பேத்தியின் பெருமைகளை கேட்டதில் அனிவர்த தன்னை பற்றி கூறியதை சரியாக கவனிக்க தவறிவிட்டார்.
“காபி.. டீ..” என திருகுமரன் அனிவர்த்தை கேட்க…
“நோ.. தேங்க்ஸ் சார்..” என் ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தவன்.. உள்ளே தலையை எக்கி பார்த்தான்.
“கௌசி.. ஷாஷிகாவை கூட்டிட்டு வா..” உள்ளே குரல் கொடுத்தார்.
மிகவும் ஆர்வமாக உள் பக்கமாகேவ பார்த்திருந்தான். பார்வை நாலு திசையிலும் பயணித்தது. எங்கயாவது தேவர்ஷி தென்படுகிறாளா என.. யூனிபாரம்மில் அழகாக வந்தது குட்டி ஏஞ்சல்.. ஷாஷிகாவை பார்த்ததும் ஒரு பாசம் சுரந்தது தான்.. இருந்தாலும் அந்த பாசத்தை கூட ஓரங்கட்டிவிட்டது தேவர்ஷியின் மீதான காதல்.. ஆனால் இன்னும் அந்த காதலை உணரவில்லை அவன்..
“ஹாய் அங்கிள்..”
“ஹாய் ஷாஷிகா..” என தான் வாங்கி வந்த பொருட்களை நீட்டினான்.
அந்த வாண்டோ வாங்காமல் தன் தாத்தாவை பாரத்தது.. உடனே இவன் முகம் சுருங்கிவிட்டது. அவரின் தலை சம்மதமாக அசையவும் வாங்கி கொண்டது.
“தேங்க்ஸ்.. அங்கிள்..”
அனிவர்த் ஷாஷிகாவோடு பேசிக் கொண்டிருந்தாலும் நிமிடத்திற்கொரு ஒரு முறை அவன் பார்வை உள்ளே சென்று மீண்டது.
திருகுமரன் இதை எல்லாம் அவதானித்து கொண்டு தான் இருந்தார்.
தேவர்ஷி வந்தாள்.. அனிவர்த் பார்வை ஜவ்வுமிட்டாயாக அவள் மேல் ஒட்டிக் கொண்டது.
அழகாக பின்னலிட்ட கூந்தல்.. நெற்றி வகிட்டில் குங்குமம்.. அதை பாரத்தவனுக்கு மனம் சுணக்கம் கொண்டது.. புருவங்களுக்கு மத்தியில் சிறு சிகப்பு பொட்டு..
பார்வை சற்று கீழே இறங்கி கழுத்திற்கு வந்தடைந்தது. தாலி இருக்கா என பார்த்தான்.. ஒன்றும் தெரியவில்லை.. குளோஸ்ட் காலர் நெக் பிளவுஸ் அணிந்திருந்தாள்.
சட்டென் அவளின் மச்சம் நினைவில் வந்து ஒட்டிக் கொண்டது.. அதை பார்க்க துடித்தது மனது.. வளைவான பள்ளத்தில் இருப்பதை சாதரணமாகவே பார்க்க முடியாது. இப்ப எங்கே காண.. ஏக்க பெருமூச்சு..
நேர்த்தியான காட்டன் புடவையில் மிடுக்காக இருந்தாள். பார்த்தவுடன் மதிக்கும் படியான தோற்றம்..
தான் ரசித்திருந்திருந்த சின்ன பெண் தோற்றம போய் கம்பீரமான தோற்றத்தில் இருந்தவளை இன்னும் இன்னும் பிடித்து போனது.. ஆசையோடு அவள் முகம் பார்த்தான்.
தேவர்ஷியோ இவனை பார்வையால் நெருப்பாக சுட்டு கொண்டிருந்தாள்.
‘ஆளை பாரு.. பார்வையை பாரு.. நெட்டபனமரம் ..கண்ணாமுழியை நோண்டறேன் இருடா.. காலங்கார்த்தால எதுக்கு வந்திருக்கானு தெரியலையே.. இவனுக்கும் ஷாஷிக்கும் எப்படி பழக்கம் அதுவும் தெரியலை.. ஷாஷிய சாக்கா வச்சுகிட்டு என்கிட்ட ஏதாவது வம்பு பண்ணட்டும்.. அப்புறம் இருக்கு.. நடு மண்டைலயே எதயாவது எடுத்து போடறேன்..’ மனதினுள் ஆயிரம் வசைபாடி அர்ச்சனை நடத்திக் கொண்டிருந்தாள்.
அனிவர்த்ததோ.. ‘ ம்ம்ம்… இந்த மொத்த அழகையும் எவன் ஆண்டு அனுபவிக்கிறானோ தெரியலயே.. ‘
ஏனோ தேவர்ஷியின் கணவனை பற்றி தெரிந்து கொள்ள துடித்தான். ‘அப்படி எவன தான் கல்யாணம் பண்ணியிருக்கா.. என்னை விட ஹேண்ட்சம்மா இருப்பானா.. என்னை விட பெரிய பணக்காரனோ..என்னை வேணாம்னு சொல்லிட்டு எந்த மன்மதராசாவ கட்டி இருக்கானு பார்க்கலாம்..’
“சார்…ஷாஷிகா பாதர்..”
“அவரு..”
“ப்பா..” தேவர்ஷி சத்தமாக இடையிட்டாள்…
திருகுமரன் அனிவர்த்தை விட்டு மகளைப் பாரக்க…
“புதுசா யாரையும் வீட்டுக்குள்ள விட வேண்டாம்னு சொல்லி இருக்கேன்ல.. யாரு என்னனு வாசல்ல வச்சு பேசி அனுப்ப மாட்டிங்களா..” என்றாள் அனிவர்த்தை அந்நிய பார்வை பார்த்தவாறு…
“இல்லம்மா.. இவரு ஷாஷிகா ப்ரண்டுனு..”
“ப்பா.. ஷாஷிகா ஸ்கூலுக்கு டைம் ஆகுது பாருங்க.. கிளம்புங்க…”
திருகுமரன் சுவர் கடிகாரத்தை பார்க்க… இன்னும் பள்ளிக்கு செல்ல நேரமிருந்தது..
அப்பாவின் பார்வையை அறிந்தவள்..”ப்பா.. அவ கிளாஸ் மிஸ் பார்க்கனும் சொன்னாங்க… நீங்க கிளம்புங்க..”
“ம்மா.. மிஸ் அப்படி எல்லாம் சொல்லவே இல்ல..” என்றது ஷாஷிகா விவரமாக….
குட்டி பிசாசு என பல்லை கடித்த தேவர்ஷி..”எனக்கு போன் பண்ணினாங்க.. அப்பா கிளம்புங்க..” என பிடிவாதமாக நின்றாள்.
எதாவது பேசி இவன் யார் என்று குடும்பத்திற்கும்… ஷாஷிகா இவன் குழந்தை என்று இவனுக்கும் தெரிந்துவிடுமோ.. என்ற பதட்டம் தொற்றிக் கொண்டது..
“சாரி சார்.. ஸகூலுக்கு போகனும்.. இன்னொரு நாள் ப்ரீயா பேசலாம்..” என திருகுமரன் சொல்லிவிட்டு.. ஷாஷிகாவை கூட்டி கொண்டு கிளம்பிவிட்டார்.
அவர் செல்லும் வரை பார்த்திருந்த அனிவர்த்..
“நான் என்ன தெரிஞ்சுக்க கூடாதுனு.. இப்படி உங்கப்பாவ துரத்திவிடற.. என்கிட்ட இருந்து ஏதோ மறைக்கற போல..” என்றான் அவளை கூர்மையாக பார்த்து…
“யார் சார் நீங்க.. நீங்க யாருனே எனக்கு தெரியாது… உங்ககிட்ட இருந்து மறைக்கிறதுக்கு என்ன இருக்கு..” என்றாள் தெனாவட்டாக..
“நான் யாருனு தெரியாது உனக்கு.. அப்படி தான.. சரி விடு.. ஆனாலும் அப்ப இருந்தத விட இப்ப தான் நல்லா கும்முனு இருக்கற…” என அவளின் கொஞ்சம் சதைபிடிப்பான உடலை மேலிருந்து கீழ வரை பார்வையால் மேய்ந்தான்.
அவனின் பார்வையில் அவளின் காதல் மனது மயங்கி தான் போனது. இத்தனை பட்டும் தன் மானங்கெட்ட மனது அவனின் பார்வையில சொக்கியதில் தன் மேலேயே எரிச்சல் கொண்டவள் அதையும் அவன் பக்கம் திருப்பினாள்.
“எதுக்கு இப்படி பார்க்கறிங்க.. கண்ணை நோண்டிருவேன்..”அவனின் முகத்திற்கு நேராக கையை ஆட்டி பேச..அவளின் கையை பிடித்து விரல்நுனிகளில் தன் உதட்டை உரச…
இப்போதும் அவன் தீண்டல் அவளை பாதிக்க… குப்பென முகம் சிவக்க.. ஒரு நொடி பேச்சற்று நின்றவளை பார்த்து உல்லசமாக சிரித்தவன் உடனே கிளம்பிவிட்டான்.
அவன் சென்றதும் தொப்பென ஷோபாவில் அமரந்தாள். படபடப்பு.. பயம்.. கண்கள் தானாக நீர் உகுக்க… எங்கே மறுபடியும் தன் மானங்கெட்ட மனசு அவன் பின்னால் போயிடுமோ.. மீண்டும் அவமானபடும் படி ஆகிவிடுமோ என பயம் கொண்டாள்.
கௌசல்யா தேவர்ஷியின் லஞ்ச் பேக்கை எடுத்து வந்தவர் மகளை பாரத்து…
“என்னாச்சு தேவாம்மா.. ஏன் அழுகற..” என பதட்டமாக கேட்க..
அவசர அவசரமாக கண்களை துடைத்தவள்..”ஒன்னுமில்லம்மா.. கொஞ்சம் ஒர்க் டென்ஷன்..” என சொன்னவள் தன் பேகையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு..
“வரேன் மா..” சொல்லி கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.
இப்ப மகள் அழுதாளா.. இல்லையா.. என குழம்பி போய் அமரந்திருந்தார் கௌசல்யா.. திருகுமரனும் ஒரு குழப்பத்தோடு தான் வீடு வந்தார்.
ஷாஷிகாவின் டீச்சர் நான் வர சொல்லவில்லையே.. நன்றாக படிக்கும் குழந்தை என்பதால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட.. மகள் எதற்கு இப்படி பொய் சொன்னாள் என குழப்பம்…
வீடு வந்தவர் தான் வந்தது கூட தெரியாமல் மனைவி உட்கார்ந்திருப்பதை பார்த்தவர்.. என்ன ஏது என விசாரித்தவர்.. மனைவி சொன்னதை கேட்டு மேலும் குழம்பி போனார்.
தேவர்ஷி திருகுமரனின் வழிகாட்டுதலில் மீண்டும் படித்து தேசிய வங்கியில் நல்ல பதவியில் வேலை கிடைத்த பிறகு எதிலும் எங்கயும் தெளிவாக தனக்கும் தன் மகளுக்கும் சேர்த்து முடிவு எடுக்கும் மகளை கண்டு வியந்து தான் போயிருக்கிறார். இத்தனை காலங்கள் கழித்து மகளின் நடவடிக்கை அவரை யோசிக்க வைத்தது..
மனைவியை சமாதனப்படுத்தி தனக்கு ஒரு காபி கொண்டு வருமாறு அனுப்பி விட்டு யோசித்தார்.மனைவியிடம் சொன்னது போல வேலை டென்ஷன்லாம் இருக்காது என தெரியும் மகளின் வேலை திறனை நன்கு அறிந்தவர் தானே..
மகளின் இந்த மாற்றம் எப்போதிருந்து என யோசித்தார்..முன்தினம் வேலையில் இருந்து வரும் போது ஷாப்பிங் மால் போய் வீட்டிற்கும் தன் மகளுக்கும் ஏதேதோ வாங்கி கொண்டு சந்தோஷமாகவே வந்தாள். காலையில் எழுந்து நல்ல மூடில் தான் வேலைக்கு கிளம்பி ஆயத்தமானாள்.. அதுக்கப்புறம் அனிவர்த்தை பார்தத பின் தான்… பிரச்சினையின் ஆரம்ப நூலை பிடித்துவிட்டார்.