ATM Tamil Romantic Novels

எங்கேயும் காதல்! – 11 12,13,14&15 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்! 

          [11]

 

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 

“இன்னைக்கு நம்ம நிகழ்ச்சியில் விதம் விதமான நேயர்ஸோட, பல சுவாரஸ்யமான எக்ஸ்பீரியன்ஸ் பத்தி கேட்டோம்.. டுமோரோ மோர்னிங் ஒரு ‘ஹாட் டாபிக்’குடன் வரேன்..திரும்பவும் இதே போல.. நிறைய பேசலாம்னு சொல்லிக்கிட்டு உங்களிடமிருந்து விடை பெறும் நான் ஆர். ஜே மித்ரா.. அன்டில் தென்.. ஸ்டே டியூன்ட் பபாய்..”என்று முயன்று உற்சாகமான குரலில் பேசியவள், 

நேயர்களின் விருப்புக்கேற்ப இளமை துள்ளும் ஓர் பாடலை காற்றில் ஒலிக்க விட்டு விட்டு.. தன் ஹெட்ஃபோனைக் கழற்றி, டெஸ்க்கின் மீது வைத்து விட்டு எழுந்தாள். 

அவள் கைகள் அனிச்சைச் செயலாக, தன் ஐந்து மாத கரு அடங்கிய வயிற்றை அணைத்துப் பிடித்திருந்தன. என்றும் தாய்மை மிளிரும் அவள் முகம், இன்று நெஞ்சோடு சொல்லாத ஓர் சோகத்தை முலாமாக பூசிக் கொண்டிருந்தது. 

அவளுடைய முகத்தில் எப்போதும் உறைந்திருக்கும் புன்னகை.. அன்று முகில் மறைத்த நிழலாக மறைந்து விட்டிருந்தது. 

இன்று ஜூன் ஆறு, 

அவள் வாழ்வில் மறக்க முடியாத நாள்.அவளுடைய தாத்தாவின் இரண்டாம் வருட நினைவஞ்சலி நாள்.. அவளது பார்வை பறிபோய் சரியாக இரண்டு வருடங்கள் ஆன நாள்! 

மெல்ல நடந்து அலுவலகத்தின் கொரிடோரை அடைந்தவளுக்கு, அந்தக் குருட்டுக் கண்களின் விழித்திரைக்குள் வந்து போனார் அவளுடைய தாத்தா. 

வயசு ‘அறுபது’ என்று அனுமானிக்க முடியாதளவுக்கு, டை அடிக்கப்பட்ட கறும் மீசையுடன், 

இம்மி பிசகாத அயர்ன் செய்யப்பட்ட முழுநீளக்கை சட்டையுடன், புன்னகைத்த முகமாக நிற்கும் அவளுடைய தாத்தா. 

ஓய்வுபெற்ற பொருளியல் பேராசிரியர். பல்நாட்டு கம்பெனிகளும் கூட, பல இக்கட்டான வணிகவியல் பிரச்சினைக்கு தீர்வு கேட்டு நிற்கும் இரும்பு மூளை கொண்ட மாமனிதர். 

இறுதியாகப் பார்த்த தாத்தாவின் முகம்.. இன்றும் பசுமையாக பதிந்து விட்டிருந்தது அவளுடைய நெஞ்சத்தில். 

காரிடாரில் தன் கேனைத் தரையில் தட்டித் தட்டி நடந்து வந்து கொண்டிருந்தவளுக்கு, அவள் விழிகள் காட்டும் இருட்டு ஏனோ பயத்தைக் கொடுத்தது. 

எப்போதுமே பழக்கமான இருட்டு தான்.ஆனால் பயமாக இருந்தது. 

அவள் மனம், அன்றைய வேலை நேரத்திலும் கூட கணவனின் அரவணைப்புக்காக ஏகத்துக்கும் ஏங்கியது. 

அவளுடைய இருட்டு விழித்திரையில் தோன்றும் .. ஆங்காங்கே முளைத்திருக்கும் மின்குமிழின் வெளிச்சம் போன்ற குட்டிக் குட்டி வட்டங்கள், என்றுமில்லாதவாறு அன்று தாருமாறாக சுழலவாரம்பித்தது. 

ஓரிடத்தில் பார்வையை பதிக்க முடியாமல் போக, அவள் காதுகள் உணர்ந்தது கதறும் பிஞ்சுக் குழந்தைகளின் வீறிடலையும், மனிதர்களின் ‘ஓ’வென்ற அலறலையும்!! 

அவள் செவிகளில் அந்த ஒலிகள், நொடிக்கு நொடி அதிகமாகக் கேட்க கேட்க,அதைச் சகிக்க மாட்டாது, காதினை இரு கைகளாலும் இறுகப் பொத்திக் கொண்டாள் அக்னிமித்ரா.  

அவள் அணிந்திருந்த நீண்ட மிடியின் முதுகுப்பகுதி வியர்வையில் நனைந்து, உடை உடலோடு ஒட்டித் தெரியவாரம்பித்தது. 

மெல்ல தலை சுழலவாரம்பிக்க, தன்னுடைய வெள்ளைப் பிரம்பை தரையில் போட்டு விட்டு, சமநிலை தடுமாறி,

 திடீரென்று.. தரையிலேயே மூர்ச்சையுற்று விழுந்தாள் அவள். 

கொஞ்சம் கொஞ்சமாக உடல் இலேசாவது போல இருந்தாலும், இதயத்தில் பாறாங்கல்லொன்றை ஏற்றி வைத்தாற் போன்று வலித்தது அவளுக்கு. 

அக்னிமித்ரா அன்றைய கோர நாளின் தாக்கத்தை எல்லாம் மீண்டுமொருமுறை அனுபவித்துக் கொண்டிருந்தாள். 

அவளது குருட்டுக் கண்களில் திடீரென ஓர் பளிச்சிடல் தோன்றியது. எங்கும் வெள்ளை வெளேரென்ற வெளிச்சம் பரவியது. 

தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல், ஒரு முறைக் கண்களை மூடித் திறந்தவள், அங்கு நின்றிருப்பவனைக் கண்டு அதிர்ந்து தான் போனாள். 

அது தேவ். அவள் கண்களைப் பறித்து, தாத்தா உயிரைக் கொன்று.. இது போல பலநூற்றுக் கணக்கான உயிர்களை காவு வாங்கிய அசுரன் தேவ்!! அதே தேவ். 

அது ஓர் நவீனமயமாக்கப்பட்ட கார்பட் வீதியின் நடைபாதை!!

எங்கும் இருள் சூழ்ந்த ஓர் இரவு அது. 

 அங்கே தரித்து வைக்கப்பட்டிருந்த கார்களில் பளபளவென மினுங்கும் மெரூன் நிற ஹைபிரிட் காரில் தான் அமர்ந்திருந்தான் தேவ்!! 

தன் கண்கள் எப்படி மீள்பார்வை பெற்றது?

 அது என்ன இடம்? 

அவள் எப்படி அங்கு வந்தாள்? என்று யோசிக்கும் நிலையில் எல்லாம் அவள் இல்லை!! 

மாறாக, அக்னிமித்ராவுக்குள் கொடூரமாக தலை விரித்ததெல்லாம் அவனை, அவள் கையாலேயே குத்திக் குத்திக் கொள்ள வேண்டும் என்ற கொலைவெறி மாத்திரமே!! 

அவளுடைய தனங்கள் இரண்டும் கடுஞ்சீற்றத்தில், அவள் விட்ட மூச்சில் உயர்ந்து தாழ்ந்து கொண்டிருக்க, 

அவளுடைய விழிவெண்படலம் செக்கச் செவேலென சிவந்து வெம்மை மிகுதியாகி, கண்ணீர் சிந்தவும் ஆயத்தமாகி நின்றது. 

அவள் கண்களோ.. சுற்றுமுற்றும் சுழன்று, அவன் வயிற்றைக் குத்திக் கிழிக்கும் ஆயுதம் தேடியது. 

அவள் வயிற்றில் இருந்த குழந்தையின் பாரம் அகன்று, உடல் இலேசாவது போல ஓர் தோற்ற மயக்கம் தோன்றவாரம்பித்தது. 

அந்த வேளையில், அண்ணாந்த அவள் கண்கள் கண்டு கொண்டன ஓர் பாரிய கட்டிடத்தை. 

அதன் ஏழாவது மாடியில், பெரிய பெரிய ஆங்கில கேப்பிடல் எழுத்துக்களில், “டாஸ்ஸிலிங்க்”என்று பெயர் இரவு நேரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

முழுவதும் கண்ணாடியிலான கட்டிடம், இருக்கக் கண்டவள் முகம் விதிர் விதிர்க்கத் தொடங்கியது. 

அது “டாஸ்லிங் ஆடையகம்”. கொழும்பின் அதிநவீன ஆடையகம்!! 

அவள் எப்படி அங்கே? என்று சிந்தித்தவளுக்கு, அவளுடைய பாழும் மூளை, பொல்லாத அந்நாளில் நடந்தவைகளை திரும்பவும் ஒருமுறை காட்சிப்படுத்துகிறது என்பதை உணர்ந்ததும், அமைதியானாள். 

அங்கே அவள் முன்னாடி விரிந்த காட்சிகளோ, அவளுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து விரிந்து கொண்டே போனது. 

****

அவள் வாழ்வில் தேவ் என்னும் அரக்கன் புகுந்து, அவளிடமிருக்கும் ஒரே ஆதாரத்தைப் பிடுங்கி, 

அவளை மானபங்கப்படுத்திய சம்பவத்தின் பின்னர், மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்த காலப்பகுதி!! 

“கொழும்பின் டாஸ்லிங்”ஆடையகத்தின் எதிரில் உள்ள நடைபாதையில் அமைந்துள்ள.. பார்க்கிங் பகுதியில், தரித்து வைக்கப்பட்டிருந்தது அவள் ஸ்கூட்டி.

அலை அலையான கூந்தல் காற்றில் அலைபாய, ஆர்ம்லெஸ் டீஷேர்ட்டும், 

தொடையை இறுக்கிப் பிடித்திருக்கும் டெனிமும், 

கால்களில் மாடர்ன் ஃபேஷனான பூட்ஸூம், இரு கொங்கைகளுக்கு நடுவில் சென்றிருக்கும் சைட்பேக்கின் வாரும் என அந்த இரவு நேரத்திலும் தேவதையாகவே மிளிர்ந்தாள் அக்னிமித்ரா. 

தாத்தாவை ‘டாஸ்லிங்’ ஆடையகத்தில் விட்டு விட்டு, ஸ்கூட்டியை நோக்கி அவ்விரவில்.. நடைபாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தவளின் கண்கள், அந்த இராட்சசன் தேவ்வைக் கண்டு கொண்டன.

மெரூன் நிற ஹைபிரிட் காரின் பின்ஸீட்டில், கோர்ட் சூட் சகிதம் அமர்ந்தபடி, காதில் செல்லை வைத்த வண்ணம் உரையாடிக் கொண்டிருந்த துரியோதனன் தேவ்!! 

தேவ்வைக் கண்டதும்.. அன்று சேப்டர் வன் உணவு வளாகத்தில் வைத்து மானபங்கப்படுத்திய நினைவலைகள் எழுந்து தாக்க, அவளுடைய பளீரென்ற வெண்மை முகம், செந்நிறங்கொள்ளத் தொடங்கியது. 

அவனைப் பழிவாங்கிடும் வெறி, அந்த அழகிய மங்கைக்குள், நாடி நரம்பெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது. 

அவளுடைய ப்ளவுஸில் கை வைத்துக் கிழித்து, உள்ளாடையுடன் பார்த்த கண்களைக் குருடாக்க வேண்டும் என்ற எண்ணம் நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகியதே ஒழிய, குறையவேயில்லை. 

அவளுடைய கை, பாம்பு போல அமைதியாக ஊர்ந்து, பையில் நுழைந்து, 

இப்படியான மானபங்கம் நிகழ்ந்ததன் பின்னர் முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேயை நோக்கி நீண்டது. 

அவள் கைகள், பெப்பர் ஸ்ப்ரேயை இறுகப் பற்றிக் கொண்டதும், அவள் நடை பூனை போல மென்மையானது. 

அடி மேல் அடி வைத்து, அவன் காரருகே நடந்து சென்றவளின் கண்களில் இருந்த தீவிரம், தேவ்வின் விழிகள் குருடாகப் போவது உறுதி என்றே பறைசாற்றிக் கொண்டிருந்தது. 

அவன் அமர்ந்திருந்த பக்கத்தில் காரின் கண்ணாடியை கூட தேவ் இறக்கி விட்டிருந்தமையானது, அவளுக்கு பெப்பர் ஸ்ப்ரேயை விசிற வசதியாகவே இருந்தது. 

செல்லில் பேசுவதிலேயே அவன் குறியாக இருக்க, காருக்கு மறுபக்கம் தன்னை வஞ்சம் வைத்து பழிவாங்கத் துடிக்கும் ஓர் பெண், 

பெப்பர் ஸ்ப்ரேயுடன் நின்றிருப்பது அறியாமல் பேசிக் கொண்டேயிருந்தான் அவன். 

சரியாக காருக்கு அருகாமையில் போய், பெப்பர் ஸ்ப்ரேயை வெளியே எடுத்தவளின் கைகள், அவன் பேசிய விஷயம் கேட்டு, அந்தரத்திலேயே நின்றது. 

அவளது மூச்சு ஒரு கணம் தடைப்பட்டு சீரானது. 

அப்படி மூச்சு தடைப்படுமளவுக்கு என்ன சொன்னான் அவன்? இதோ அவன் சொன்னவைகள் எல்லாம் இவை தாம்!! 

“இப்போ நான் பேசி முடிச்சு.. வண்டிய எடுத்த பத்து நிமிஷத்துல டாஸ்லிங் பில்ட்டிங்க் வெடிச்சு சிதறணும்..!!!”-என்றான் அம்மகா பாதகன். 

அதைக் கேட்டவளின் புருவங்களும், விழிகளும் அதிர்ச்சியின் உச்சத்தில் ஒருங்கே விரிந்தன. 

அவள் கேட்டது மெய் தானா? 

இந்த தேவ் அவன் வாயால் வேறேதோ மொழிந்து, அதை தவறாக கற்பிதம் செய்து கொண்டாளா இவள்?? 

அவள் கேட்டது உண்மையே என்பது போல தொடர்ந்து வந்து விழுந்தது அவன் வார்த்தைகள். 

மறுமுனையில் இருந்த முகம் தெரியாத, தேவ்வின் கையாளும், அவன் சொன்னதைக் கேட்டு மனம் கேளாமல், “சார்.. ஷோவ் ரூம்க்குள்ள.. குழந்தைங்க, லேடீஸ் எல்லாம் இருக்காங்க சார்..”என்று சொல்லியிருக்க வேண்டும். 

அதைக் கேட்டும் மனம் இளகாத அந்தக் கொடிய ஜந்துவோ, இறுகிய முகத்துடன், பற்களைக் கடித்துக் கொண்டு எகிறவாரம்பித்தான். 

“ய்யோவ்.. வ்வாட் க்குழந்தைங்க? .. வ்வாட் லேடீஸ்? .. அவங்களால நம்ம ந்நாட்டுக்கு என்ன தான் லாபம்? எனக்கு தேவை இன்ஷூரன்ஸ் ம்மனி.. எத்தன உயிர் ப்போனாலும் ஐ டோன்ட் கேர்!!”என்று காற்றில் கை நீட்டிக் கத்தியவனின் மொழி கேட்ட அதிர்ச்சி இன்னும் அவளை உலுக்கிக் கொண்டு தானிருந்தது. 

“தீ விபத்துக்களுக்கு காப்புறுதிப் பணம் கிடைக்கும் என்பதற்காக, பணவெறியில் இத்தனை உயிர்களை எப்படி ஒருவனால் காவு வாங்க தோன்றும்? 

இவன் மனசாட்சி உள்ளவன் தானா? இல்லை அவன் மனிதனே இல்லை. மனித உருவத்தில் அலைந்திடும் மிருகம்” என்றே தோன்றியது அவளுக்கு. 

கொஞ்சம் தலைதிருப்பினாலும் தேவ், மித்ராவை கண்டு கொள்ள இயலுமாக இருக்க, அவளை அவன் கண்டுகொள்ளாதது ஏனோ தெய்வாதீனமே தான்!!

பேச்சு சுவாரஸ்யத்தில் அருகாமையில் நின்ற மித்ரா, அவன் கண்களில் படாமல் போனாள். இருந்தும் என்ன பயன்? எல்லாமே கை மீறிப் போகிற பொழுது. 

 மறுமுனையாளன் தொடர்ந்து ஏதோ சொன்னான். கட்டிடத்துக்குள் இருக்கும் பெண்களும், குழந்தைகளும் அவனுடைய கடிய உள்ளத்தையும் கரைத்திருக்க வேண்டும். 

“சார் டென் பீ. எம்மோட.. ஸ்டோர் க்ளோஸ்ட் தானே.. நாம அதுக்கப்புறம் இதை பண்ணாலும்.. இன்ஷூரன்ஸ் மனி கன்பார்மா கிடைக்கும்..”என்று கொஞ்சம் மனம் இளகியவனாக சொன்னான் கட்டிடத்துக்குள் இருக்கும் அவனுடைய அடியாள்.

காரினுள் இருந்த தேவ், தன் அடியாளின் கூற்றில் ஏகத்துக்கும் காண்டாகி தாருமாறாகக் கத்தவாரம்பித்தான். 

அவனது வெண்ணிறப்பற்கள் கோபத்தில் கடிபட, “ய்யோவ் உனக்கு நான் சம்பளம்.. த்தர்றேன்னா.. இல்லை அவங்க சம்பளம் த்தர்றாங்களா…. சொன்ன வேலையை ஒழுங்கா பாரு.. 

கரெக்டா பண்ணி முடிச்சதும் அஞ்சு கோடி.. ஒரு கோடி, ரெண்டு கோடி இல்லைய்யாஆஆ.. அஞ்சு கோடி..!!அஞ்சு கோடி!! தர்றேன்னு சொல்றேன்ல.. வ்வேண்டாம்மா?””என்று தேவ், காற்றில் கையசைத்து ‘ஐந்து’ எனும் அடையாளம் காட்டுவதையும் கூட தெள்ளத் தெளிவாகப் பார்த்தாள் அக்னிமித்ரா. 

மறுமுனையில் இருப்பவனோ மீண்டும் மறுப்பாக ஏதோ சொல்ல வாய் திறந்திருப்பான் போலும். அவனை பேச விடாமல் இடையிட்டுப் பாய்ந்தான் தேவ் வர்மன். 

“டூ வாட் ஐ ஸே!! ..வயர் ஓவர்ஹீட்டாகி எலக்ட்ரிக்கல் ஷோர்ட் சர்க்கியூட் ஆனதா ரிபோர்ட்ல வரணும்.. ஏதும் சொதப்பி வ்வைச்சிராதய்யா.. என்னோட பரம எதிரியும் உள்ளே தான் இருக்கான்..இது அவனுக்கு போட்ட ஸ்கெட்ச்!! .. இது ‘ப்ரீப்ளேன்ட் மர்டர்’ன்னு சந்தேகம் வராம க்கதையை ம்முடிக்க இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது..”என்று கன்னாபின்னாவென்று கத்திய தேவ் இறுதியில் சொன்னவை கேட்டு ஆடிப் போய் நின்றாள் பெண். 

அகலத் திறந்த அதரங்களை அனிச்சைச் செயலாக மறைத்துக் கொண்டது அவள் உள்ளங்கை. 

‘அடப்பாவி.. இவனுக்கு காப்புறுதிப் பணம் கிடைக்கணும், இவனோட பரம எதிரியைக் கொல்லணும்ன்றதுக்காக.. இப்படி எலெக்ட்ரிக்கல் ஷோர்ட் சர்க்கியூட்டால ஃபயர் ஆக்ஸிடெண்ட் ஏற்படுத்த போறானா? என்ன குரூரமான மனசு இவனுக்கு!!’ – தேவ்வின் கொடிய மிருகத்தனத்தை ஏற்கனவே கண்டிருப்பவள், பல நூறு அப்பாவி ஜனங்களின் உயிரையும் காவு வாங்கத் துடிக்கும் எமனாக, அன்று அவனைப் பார்த்தாள். 

சற்றே தலை திருப்பி, அவன் பார்வை இவன் மேல் பதிந்திருந்தால், அந்நொடியே அவளின் உயிர் சமாதியாகியிருக்கும். 

தன் பக்கத்தே நின்று, தான் பேசுவதற்கு சாட்சியாக அவள் கேட்டுக் கொண்டிருப்பது அறியாமல் தொடர்ந்து சொன்னான் அவன். 

“உன் பேங்க் அக்கவுண்ட்டுக்கு காசு டிரான்ஸ்பர் பண்ண வேண்டியது என் பொறுப்பு..வேலையைக் கச்சிதமா முடி”என்று அவன் இன்னும் தொடர்ந்து பேசிக் கொண்டே போக, 

அவளுக்கோ கை, கால்களெல்லாம் படபடக்கத் தொடங்கியது. அன்று, அவனுக்கு பெப்பர் ஸ்ப்ரே அடிக்க வந்தவளின் காதுகளுக்கு, அவன் சொன்ன விஷயங்கள் எட்டாமல் இருந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இருந்திருப்பின், அன்று தேவ் வர்மனின் கண்கள் தான் இவளால் குருடாகப் போயிருந்திருக்கும். ஆனால் நடந்ததோ எதிர்மாறு!! 

அவள் தன் இதயம் இடையறாது துடிக்கும் ஓசையை, வெற்றுக் காதுகளில் கேட்டாள். ரோபோ போல திரும்பி… கேட்ட விஷயத்தை ஜீரணிக்க முடியாமல் இரண்டெட்டு நடந்தவள், தன் விழிகளை வானை நோக்கி உயர்த்தி, 

விஸ்தாரமாக நிற்கும் ‘டாஸ்லிங்’ஆடையகக் கட்டிடத்தைக் கண்ணுற்றாள். 

ஏனென்றே காரணம் சொல்லப்பட முடியாத ஓர் பதற்றம் இதயம் எங்கும் விரவிப் பரவ, அவள் இடது கண்ணில் இருந்து மாத்திரம் சரேலென வழிந்தது ஒரு துளி கண்ணீர். 

அவளுடைய மூளையில் திடீரென பொறிதட்ட, திகைப்பூண்டை மிதித்தது போல நிமிர்ந்தவளுக்கு, ஞாபகத்திற்கு வந்து போனது, அதே ‘டாஸ்லிங்’ பில்டிங்கில், தேவ்வுடன் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லிச் சென்ற தாத்தாவின் நினைவு. 

அதே சமயம் அந்த நரகாசுரன் உதிர்த்த வார்த்தைகளும், அவள் மழுங்கிய மூளைக்கு மின்னல் வெட்டினாற் போன்று வந்து சென்றது. 

சட்டென தலையின் சூடு தாங்க மாட்டாமல் நெற்றியைப் பிடித்துக் கொண்டவள், உதடுகள் தானாக முணுமுணுத்தது. 

“தே.. தேவ்.. அவனுடைய பரம எதிரி?? எதிரி?? .. அவள் தாத்தா!!.. ராஜாராம்..!! நம்ம கிட்டேயிருந்த ஒரே ஆதாரமான பென்ட்ரைவ் ..இப்போ அவன் கிட்ட இருக்கு.. என்ட் அவனோட ரகசியம் தெரிஞ்ச ஒரே ஆளு தா.. தாத்தா.. அப்படின்னா இந்த ஸ்கெட்ச் போடப்பட்டிருக்கிறது.. தாத்..தாவுக்கு.. பேச்சுவார்த்தை நடத்துரேன்னு கூப்பிட்டு தாத்தாவோட, இந்த மக்களையும்!!!!! ” என்றவளுக்கு அதற்கு மேல் வார்த்தை எழவில்லை. 

தரையில் அலைபாய்ந்த கருமணிகள், ஓரிடத்தில் நிலைக்குத்தி நிற்க,பட்டென நிமிர்ந்தாள் அக்னிமித்ரா. 

 உடம்பெல்லாம் ஓர் துணுக்கம் எய்திப் பரவ, நடைபாதை வழியாக, 

கொஞ்சம் தள்ளித் தெரியும் ஆடையகத்தை நோக்கி, அவசர அவசரமாக ஓடிக் கொண்டே, 

தாத்தாவுக்கு அழைப்பெடுத்தாள் அக்னிமித்ரா. 

முதல் ரிங்கிலேயே அழைப்பையேற்ற தாத்தாவை பேச விடாமல், கண்ணீர் மல்க, பேசியது என்னமோ இவளே தான். 

“தாத்.. தாத்தா..நீங்க்… எங்கே இருக்கீங்க்.. தாத்தா..??”

பேத்தியின் அவசர மனநிலையும், இனி நடந்தேறப் போகும் அசம்பாவிதங்களையும் அறியாத வெள்ளந்தித் தாத்தாவோ, 

சற்றே நடுங்கிய குரலில், “டாஸ்லிங் பில்டிங்ல தான்மா இருக்கேன்.. நீ தானே டிராப் பண்ணிட்டு, வண்டியை பார்க் பண்ணிட்டு வரேன்னு போனே.. ஏன்டா? என்னாச்சுடா..?”என்று கேட்டார். 

அவளோ பரபரப்பாக பாதையை மாறிக் கொண்டே, “தாத்தாஆஆ.. தேவ் அங்கே இல்லை.. இட்ஸ் அ ட்ரேஏப்!!.. தாத்தா வெளியே வந்துருங்க.. தாத்தாஆஹ்!!..”என்று பதற்றமான குரலில் கதறினாள் அக்னிமித்ரா. 

“என்னம்மா சொல்ற..?”-இன்னும் சற்று நேரத்தில்.. எமன் தனக்காகவும், இன்னும் பலநூறு உயிர்களுக்காகவும் பாசக்கயிறு கொண்டு காத்திருப்பது அறியாமல் கேட்டார் தாத்தா. 

அந்த நேரம் தான், அந்த உயர் மாடிக் கட்டிடத்தில் இலங்கை வரலாற்றில் இது வரை இடம்பெறாதளவுக்கு ஓர் கோர சம்பவம் நடந்தேறியது. 

தேவ்வின் அடியாள், வயரினை ஓவர்ஹீட் ஆகுமளவுக்கு, சில பல தந்திரோபயங்களை செட் செய்து விட்டு வெளியேற,

 அடுத்த கணம் அந்த குறுகிய மின் பாதை வழி, மின்னொழுக்கு ஏற்பட்டு, “பட்.. பட்”என்று வெடித்துச் சிதறவாரம்பித்தது அனைத்து மின்சாரம் செல்லும் பாதைகளும். 

அது வரிசையாக வெடித்த கணம், ‘டாஸ்லிங்’ பில்டிங் கட்டிடத்தின் வெளியே ஒளிரும் ‘டாஸ்லிங்க்’ என்னும் என்னும் ஆங்கில எழுத்து பட்டென தன் ஒளியை இழந்தது. 

உள்ளே இருந்த ஏழு மாடிக் கட்டிடத்திலும் திடும்மென மின்சாரம் செயலிழக்கப்பட, முழுக்கட்டிடமும் இருட்டின் மயப்பட்டது. 

உள்ளே ஆடைகள் பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்த குழந்தைகள், அச்சத்தில் தன் தாய்மாரின் விரல்களைப் பிடித்த வண்ணம் நிற்க, 

ஏழு மாடிக்கும் மாறி மாறிப் பயணப்பட்டுக் கொண்டிருந்த லிப்ட்களும், திடும்மென்ற பேரொலியுடன் நின்று போனது.

எங்கிலும் தம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத குறு நேர மயான அமைதி நிலவ, ஆடையகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், தன் செல்களில் டார்ச் லைட்டை ஆன் செய்து கொண்டு ஓடினர், என்னானது என்று பார்ப்பதற்காக. 

அங்கிருந்த அத்தனை பேரினதும் துரதிர்ஷ்டம்.. மின்சாரத்தில் இயங்கும் தானியங்கிக் கதவுகள்,

 மின்னொழுக்கு ஏற்பட்டதில் , தானாக மூடிக் கொள்ள,

 உள்ளே சிக்கித் தவித்த கூட்டமும், நடைபெறப்போவது அறியாமல் நின்றிருந்த சமயம் அது. 

அதிக வெப்பம் வெளியானதில் ஹைட்ரஜன் வாயு அதிகமாக வெளிவிடப்பட, அங்கே சந்தோஷமாக பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்த அத்தனை பேரின் உயிரையும், நொடியும் தாமதியாமல் காவு கொண்டது மரணம். 

 

எரிமலையில் இருந்து வரும் லாவாக்குழம்பு வெளியானது போல கட்டிடத்தின் எல்லா மாடியிலும், தீக்குழம்புகள் காற்றில் கடலலை போல எழுந்து வர, பேரொலியுடன் வெடித்துச் சிதறியது கட்டிடமே!! 

கண் முன்னே, நிமிஷத்தில் அசம்பாவிதம் நடந்தேறுவதைக் கண்டு, அந்த இளம் பெண்ணின் உடல் துடிக்க, அடித் தொண்டையிலிருந்து, 

“தாத்தாஆஆஆஆ..”என்ற வண்ணம் ஓடி வந்தவளின் கண்கள் இறுதியாகப் பார்த்தது பேரளவு ஒளியை. 

தானியங்கிக் கதவின் கண்ணாடியை சில்லு சில்லாக உடைத்துக் கொண்டு வந்த, தீச்சுவாலைகள் எழுந்து அவள் கண்ணைத் தாக்க, அதன் வெம்மை தாங்காமல் தூக்கியெறியப்பட்டு பாதையில் விழுந்தாள் அக்னிமித்ரா. 

அவள் கண்கள் திறந்து தான் இருந்தது. இருப்பினும் எங்கிலும் கும்மிருட்டு. 

காதோ மிக நீண்ட நேரம் “ங்ஙொய்ய்ய்ய்’என்று கேட்டுக் கொண்டே இருந்தது. 

காதில் நாராசமான ஒலி கேட்பது சரியானதும், அவள் காதுகள் உணர்ந்தது மனிதர்கள் போடும் பேரிரைச்சலை. 

கட்டிடமோ கரும்புகையை வானை நோக்கி கிளப்பிக் கொண்டு, பிரம்மாண்டமாக எரிந்து கொண்டிருந்தது. 

மனிதர்களின் இரைச்சல் அவளை ஏதோ செய்ய அதைக் கேட்கும் சக்தியற்று, விழிகள் மூடி மூர்ச்சையானாள் அக்னிமித்ரா. 

***

எங்கேயும் காதல்! 

     [12]

அவள் கண் விழித்த போது ஹாஸ்பிடலில் கிடந்தாள். 

மீண்டும் அதே இருட்டு!! யாராலும் டார்ச் லைட் அடித்து கூட, வெளிச்சம் கொண்டு வர முடியாத கும்மிருட்டு!! 

அவள் மூர்ச்சையானதும் பணியக ஊழியர்கள் கொண்டு வந்து, இங்கே சேர்த்திருப்பர் போலும் என்று எண்ணிக் கொண்டாள் அவள். 

கருவுற்றிருப்பவள் என்பதால், அவள் கண்விழித்ததில் இருந்து ஆயிரத்தெட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாள்.

 தன்னைச் சூழ டாக்டர்களும், நர்ஸ்களும் பேசிக் கொள்ளும் மொழியில் கவனம் பதியாதவளுக்கு, 

இன்னும் அன்றைய தீ விபத்துச் சம்பவத்திலிருந்து வெளிவர முடியவில்லை. 

அவ்வப்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும், வெகுநேர அமைதிக்குப் பின் பதில் சொல்லலானாள் அந்தக் குருட்டுப் பெண். 

கடைநிலை ஊழியர் கூட, அறையை விட்டும் நீங்கியதும், மஞ்சத்தில் தானாக எழுந்து சாய்ந்து அமர்ந்து கொண்டவள் விரக்தி பாவத்துடன் இருட்டை வெறிக்க ஆரம்பித்தாள். 

அவ் வேளை, விடயம் கேள்விப்பட்டு அரக்க பறக்க ஓடி வந்திருந்தான் அவளுடைய துண்ணியகேளிர் அதிமன்யு. 

வரும் வழியில் கண்மண் தெரியாத பதற்றத்தில் சில வழிப்போக்கர்களின் மேல் இடித்துக் கொண்டு, லிப்டை நாடிப் போனவன் அது நிரம்பி வழிவதைக் கண்டு, மாடிப்படிகளை அடைந்து, 

பதற்றத்தின் உச்சத்தில் சற்றே சறுக்கி விழப்போய் தடுமாறி நின்று, தன் மனையாளைப் பார்க்க விரைந்து வந்திருந்தான். 

அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பிரத்தியேக அறையில், தன் மணி வயிற்றை இரு கைகளாலும் அணைத்துப் பிடித்த வண்ணம் இலக்கேயற்று விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியை, முழுதாகக் கண்டதும் தான், 

அறை நிலைக்கதவில் சாய்ந்தவனாக, ஓர் ஆசுவாசப் பெருமூச்சு விட்டான் அதி. 

கணவனின் வருகையை பெண்ணவள் உள்ளுணர்வால் அறியப்பெற்றதும், இமைக்காத கண்கள் ஓர் நொடி பட்டென்று இமைத்தது. 

இத்தனை தூரம் வேகமாக வந்த ஆண்மகனுக்கு, மனைவியைக் கண்டதும் கால்கள் எழவில்லையோ?? 

பைய்ய பைய்ய நடந்து சென்று, அவள் அருகே அமர்ந்தவன், அடுத்த நிமிஷம் அவளது பட்டு போன்ற மிருதுவான கன்னங்களை தன் வலது கையில் ஏந்திக் கொண்டவன், 

உணர்ச்சி மல்க சொன்னான், “மித்ராஆஹ்.!!..”என்று. 

அதற்கு மேல் பேச நாவு கூடவில்லை. அவன் விழிகளில் கண்ணீர் தான் ததும்பியது. 

அடுத்த கணம் அவளை வாகாக தன் பரந்த மார்பில் சாய்த்துக் கொண்டான் அவ் வலிய ஆண்மகன்!! 

அவனது இதயத் துடிப்போசையை நன்றாகவே கேட்டாள், அவனது இதயப்பக்கம் காது வைத்திருந்த திவ்யமான அழகுள்ள பெண். 

அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவன் அவன். ஆனால் அங்கே நடந்தது எல்லாமே உல்டா. 

அவளது திண்ணிய முதுகில் கையிட்டு அளைந்து தேற்றவாரம்பித்தது என்னமோ மித்ரா தான். 

“ஒண்ணுமில்லை அதி.. இன்னைக்கு தாத்தாவுடைய நினைவுநாள்.. பழைய ஞாபகம் வந்தது.. ஏதோ மயக்கம் மாதிரி வந்துருச்சி..கண்ணு முழிச்சதும் ஹாஸ்பிடல்ல இருக்கேன்.. வீட்டில இருந்து யாராவது வந்ததும் டிஸ்சார்ஜ் ஆகிப் போயிரலாம்னு டாக்டர் சொல்லிட்டுப் போனார்.. எனக்கு ஒண்ணுமில்லைடா.. ”என்று சொன்னவள், 

தானாகவே அவன் மார்பிலிருந்து பிரிந்து கொண்டாள். 

உள்ளுக்குள் கனன்ற தீயின் விளைவாக, நாசி நுனி செர்ரிப் பழம் போல சிவக்க, மௌனமாகக் கண்ணீர் விட்டவள், சுரத்தே அற்ற குரலில் கேட்டாள், 

“கண்ணு.. ம்முன்னாடி ஒரு அநியாயம் நடக்குது… உலகத்துக்கு ப்பெரிய ப்பணக்காரனா… க்கொடை.. வள்ள.. லா தெரியுறவன்.. ஒரு அயோ.. க்கியன்.. பொறுக்கின்னு தெரிஞ்சும்.. நம்மளால.. அஅஅதை நிரூ.. பிக்க முடியலைல?”என்று. 

அவளது மனத்தின் உஷ்ணம் தாங்க மாட்டாமல், கன்னங்கள் வழியாக சுடச் சுட வழிந்தது விழிநீர்!! 

“அன்னைக்கு நடந்த.. சம்பவத்துல.. எத்தன பேர் தாயை இழந்திருப்பாங்க.. எத்தனை பேர் தன் வைஃபை இழந்திருப்பாங்க.. இன்னும் ஏன்..எத்தனையோ குடும்பங்கள் கூட அடிச்சுவடே இல்லாம போயிருக்கும்.. ஆனால் இது ஃபயர் ஆக்ஸிடெண்ட் இல்லை.. ஒரு ப்ரீப்ளேன்ட் அஸேஸினேஷன்னு.. உண்மை எல்லாம் தெரிஞ்ச என்னால.. வெளியில சொல்ல முடியலையே அதீஈஈ…? 

நான் கண்ணு முழிச்சப்போ.. என் தாத்தா என் கூட இல்லை.. என் பார்வை இல்லை.. ஒரு அநாதை போல தனிமரமா நின்னேன்..!! மனசு பூரா… அந்தத் த்தேவ்வைக் கொல்லணும்ன்ற வெறி மட்டும் தான் இருந்தது.. இந்த வலியோட வாழ கத்துக்கிட்டேன்.. மனசளவில் நான் இன்னும் தயாராகணும்ன்றதுக்காக.. எங்க பூர்விக ஊரான கண்டிக்கே வந்தேன்.. 

இருந்தும் என்ன பிரயோஜனம் அதீஈஈ? … பல பேர் உயிரைக் கொன்னவன்.. சந்தோஷ.. மாஆ தானே இருக்கான்.. அவன் சாஆஆகணும்!! …. அவனை என் க்கைய்யாஆல சாஆஆகடிக்கணும்!! இந்த உலகத்திலேயே நான் வெறுக்குற முகம்.. என்னைப் மானபங்கப்படுத்தி.. சந்தோஷப்பட்ட அந்த தேவ்வோட முகம் தான்.. அவன் சாஆஆகணும்!! ” என்றவள், 

தேவ்வின் முகம் கண்ணுக்குள் விரிய, சுயம் இழந்து மெத்தையை தாருமாறாகக் குத்திக் கொண்டே போனாள் கைகளால். 

அதிமன்யுவுக்குள் இருக்கும் அதே வன்மம்.. மனைவியின் வதனத்தில் கொழுந்து விட்டெரிவதைப் பார்த்தான் அதிமன்யு. 

அந்த ஒற்றை தீ விபத்து சம்பவம், தலைகீழாகப் புரட்டிப் போட்டது அவள் வாழ்க்கையை மட்டுமல்ல. அவன் வாழ்க்கையையும் தான். 

தேவ்வின் திட்டமிட்ட படுகொலை பற்றி அறிந்தது அவள் மட்டுமல்ல. அவனும் தான். 

நில்லாமல் வெறிகொண்ட பைத்தியம் போல மெத்தையைத் தாக்கும் மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டவன், “முதல்ல இப்படி பண்றதை நிறுத்து!!.. உனக்கு தேவ் மேல எவ்வளவு கொலைவெறி இருக்கோ.. அதை விட பன்மடங்கு வெறி எனக்குள்ள இருக்கு!! .. ஆனால் அதை காட்டுறதுக்கு இது சரியான நேரமில்லை மித்ரா.. இப்போ நீ கர்ப்பமா இருக்க.. என் குழந்தையை சுமந்திட்டிருக்க.. கொஞ்சம் பொறுமையா இரு.. தேவ்.. அவன் வினை அவனை அறுக்கும்!!”என்று மனைவியை ஆசுவாசப்படுத்தினான். 

கணவன் நினைவுறுத்திய குழந்தை பற்றிய பேச்சில்.. அவள் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்படத் தொடங்கியது. 

அவள் முகம் ஆசுவாசம் எய்துவதைக் கண்டவன், அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு, வெளியேறப் போனான். 

அந்த இளம் தம்பதிகள் ஹாஸ்பிட்டலின் கொரிடோர் வழி நடந்து செல்ல, சட்டென்று அவர்களைத் தடுத்து நிறுத்தியது, தன்னறையிலிருந்து வெளிவந்த டாக்டரின் குரல். 

“எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்..”

மனைவியைக் கையணைப்பில் நிறுத்திக் கொண்டே திரும்பியவனைப் பார்த்த டாக்டர், “நீங்க பேஷன்ட்டுக்கு என்ன முறை வேணும்?”என்று கேட்டார். 

“ஹஸ்பன்ட்”- தேவ் எழுப்பிய அதிர்வலைகளில் இருந்து வெளியே வந்திராவன், உணர்ச்சி துடைக்கப்பட்ட குரலிலேயே சொன்னான். 

ஒரு நிமிஷம் டாக்டரின் தலை ஆடியது. அதன் பின்னர் அவனைப் பார்த்து, “ஓ ஐ ஸீ.. ஒரு நிமிஷம்.. நீங்க மட்டும் என் ரூமுக்கு வந்துட்டுப் போறீங்களா..?”என்று கேட்க, 

உள்ளுக்குள் பயப் பந்துகள் உருள மனைவியைப் பார்த்தான் அதிமன்யு. 

மனைவியை காரிடோரில் போடப்பட்டிருந்த தொடர் வரிசை நாற்காலிகளுள் ஒன்றில் அமர வைத்தவன், “நீ இங்கேயே இரு.. நான் டாக்டர் என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு வந்திட்றேன்”என்று சொல்லி விட்டு நகர முனைய, 

கணவனின் கையைப் பட்டெனப் பிடித்துக் கொண்டாள் அக்னிமித்ரா. 

பயத்தைப் பற்றி அறியாத பெண்ணுக்குள்ளும் ஏனென்று சொல்ல முடியாத பயம் தலை தூக்கியது அந்நொடி. 

அவன் அவளைப் பார்க்க, இவளோ கலங்கிய குரலில், “டாக்டர் என்னென்னமொ டெஸ்ட் எடுத்தாங்க..என் கிட்ட ஒண்ணும் சொல்லாமல்.. உன்னை மட்டும் உள்ளே கூப்பிட்றதைப் பார்த்தால்.. ஒருவேளை நான் சாகப் போறேனா பேபி?நான் சாகுறதைப் பத்திக் கவலைப்படலை.. ஆனால் என்னை ம்மானபங்கப்படுத்திய தேவை சாகடிக்காம, சாகப்போறோமேன்றது.. கவலையா இருக்கு.. ”என்று சொல்ல,

 மனைவியின் மனம் பாதிக்கப்பட்டிருக்குமாற்றைக் கண்டு, அவன் ஆழ்நெஞ்சில் எழுந்த திடுக்கம், தொண்டை வரை வந்து அடங்கியது. 

மனைவி உச்சந்தலையில் கை வைத்து, ஆதரவாக தடவியவனாக, “முதல்ல நெகட்டிவ்வா திங்க் பண்றதை நிறுத்து.. நான் போய் என்னான்னு கேட்டுட்டு வரேன்..”என்றவன், டாக்டரின் அறைக்குள் நுழைந்தான். 

  எக்ஸ்ரேயை கார்டை எடுத்து, வெளிச்சத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த டாக்டர், இவன் போனதும், முகம் மலர வரவேற்று இருக்கையை கைகளால் காட்டினார். 

அவன் அமர்ந்ததும், 

புன்னகையுடன் அதிமன்யுவின் பெயரைக் கேட்டறிந்து கொண்ட டாக்டர், “லுக் மிஸ்டர். அதிமன்யு..உங்க மனைவி கர்ப்பமா இருக்கற.. இந்த நேரத்தில் மயங்கி விழுந்ததால.. ஃபுல் பாடி செக்கப் பண்ண வேண்டியதா ஆயிருச்சு” என்றவர் கண் சம்பந்தப்பட்ட சிற்சில படங்களைக் காட்டி, 

“உங்க மனைவி, கண்ணு பார்வை போய் ஜஸ்ட் டூ யர் தான் ஆகுதுன்னு சொன்னாங்க.. நாங்க செக் ண்ணிப் பார்த்ததில்.. இவங்க கண்ணோட “ரெடினா” தான் பாதிக்கப்பட்டிருக்கு..மத்த எந்த பார்ட்ஸிலும் எந்த டெமேஜூம் இல்லை.. 

 ஸூட்டபிள் டோனர் கிடைச்சதும் இந்த டெமேஜ்ட் ரெடினாக்கு பதிலாக.. இன்னொரு ரெடினா.. சேன்ஞ் பண்ணி.. இவங்களுக்கு திரும்பவும் பார்வை வர வைச்சிருக்கலாமே?.. ஆனால் ஏன் அதை அப்போவே பண்ணாம விட்டீங்கன்னு தான் புரியலை..?”என்று ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட, 

அதிமன்யுவின் உடலில் உள்ள கோடான கோடி மயிர்க்கணுக்கள் எல்லாம் குத்திட்டு நின்றது. 

அவன் கேட்டது மெய் தானா? என்பதை நம்ப முடியாதவன், திரும்பவும் டாக்டரிடம் ஆனந்த அதிர்ச்சி மல்கக் கேட்டான், 

“என்ன டாக்டர் சொல்றீங்க..?”என்று. 

எந்த உணர்ச்சிவசமும் படாமல் நிதானமாகவே சொன்னார் டாக்டர். 

“யெஸ்.. உங்க வைப்க்கு அய் சர்ஜரி பண்றது மூலமா.. திரும்ப பார்வை வர வைக்க முடியும்..!! பட் அதே குறைபாட்டோட ஏன் இத்தன வருஷமா உங்க வைஃப் இருந்தாங்கன்னு தான் புரியல?”என்று சொல்ல, டாக்டர் சொல்வதை நம்ப மாட்டாமல், ஒரு கணம் நின்றான் அவன். 

“ஆனால் கலம்போ டாக்டர்ஸ்.. இது பர்மனன்ட் ப்ளைன்ட்னஸ் சொன்ன.. தாக..”என்று அவன் நம்பாமையை வெளிக்காட்டி இழுக்க, சட்டென இடையிட்டார் டாக்டர். 

தன் குரலை சற்றே உயர்த்தி, “இட்ஸ் இம்பாஸிபிள்.. அவங்க தப்பா சொல்லியிருக்காங்க.. மேய் பி ரிப்போர்ட்ஸ்ல ஏதாவது தப்பு நேர்ந்திருக்கலாம்.. ஹன்ட்ரன்ட் பர்சன்ட் ஷூர்.. ஆபரேஷன் பண்ணா..கண்டிப்பா உங்க மனைவிக்கு பார்வை கிடைக்கும்!!”என்று சொன்னதும், அந்நொடி தான், அவன் மனிதனாகப் பிறந்ததற்கான காரணம் அறிந்தான் அதிமன்யு. 

அவனுடைய அக்னிமித்ராவுக்கு திரும்ப பார்வை கிடைக்கப் போகிறது என்பதுவே அவனுக்கு ஆயிரம் யானை பலத்தைக் கொடுத்தது. 

ஆனந்தக்கண்ணீரில் கண்கள் கலங்க, இதழ்கள் வளைந்தது சற்றே. 

சற்றும் தாமதிக்காமல் உடனேயே, ஆர்வம் மீதூறும் குரலில், “எப்போ பண்ணலாம் டாக்டர்?.. எவ்வளோ செலவானாலும் பரவாயில்லை..செலவு பத்தி ஒரு பிரச்சினையும் இல்ல.. நான் பார்த்துக்கறேன்.. என் மனைவிக்கு பார்வை தெரியணும்.. அது போதும்.. எப்போ ஆபரேஷன் பண்ணலாம்னு மட்டும் சொல்லுங்க”என்றான். 

ஓர் அன்புள்ள கணவனாக அவன் ஆர்வம் புரிந்தாலும் கூட, அதற்கான தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெறாமல் நின்றார் டாக்டர். 

சற்றே பார்வையை குனித்துக் கொண்டு யோசித்தவர், “அது இப்போதைக்கு கஷ்டம்.. அய் டிரான்ஸ்ப்ளேன்ட் சர்ஜரின்றது ரொம்ப நுணுக்கமான ஒரு ஆபரேஷன்.. மற்ற நேரமா இருந்தா உடனடியா பண்ண முடியும்.. இப்போ அவங்க ஓருயிரில்ல மூணு உயிர்..”என்று சொல்ல, அந்த அழகிய ஆண்மகனின் கண்கள், அழகாக விரிந்தது. 

“மூணு??..”என்று புரியாமல் கேட்க, டாக்டர் சிரித்துக் கொண்டே சொன்னார் 

“யெஸ்.. ட்வின்ஸ்..!!” என்று இரட்டை விரல்களை ஒன்றாக ஆட்டிக் காட்டியபடி. 

அன்றைய நாளின் இரண்டாவது ஆனந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் நின்றவன், இதழ் குவித்து, “உஃப்” என்று ஊதிக் கொண்டான்;இதழ்கள் மிருதுவாக மலர்ந்திருந்தது. 

“ஃபிப்டீன் டேய்ஸ்ல பண்ற ஒரு ஸ்கேனிங்லயே இந்த விஷயம் தெரிஞ்சிருக்குமே?இப்போ உங்க மனைவிக்கு ஐஞ்சாவது மாசம்.. இப்போ வரை அவங்களுக்கு ட்வின்ஸ்னு தெரியலைன்னா.. யூ ஷூட் டேக் கேர் ஹர் வெரி வெல் என்ட் ப்ரோபர்லி..”என்று சொன்னது எல்லாம், அதிமன்யு கவனமாகக் கேட்டுக் கொண்டான். 

டாக்டர் தொடர்ந்து சொன்னார்

“ப்ரெக்னன்சி அப்போ சர்ஜரி பண்றது ரொம்ப ஆபத்து.. ஐ டோனர் எப்போவுமே ரெடி தான்..ஆப்டர் டெலிவரி.. குழந்தை பிறந்து.. அது குழந்தைக்கு பால் கொடுக்கற காலத்திலேயும் கூட ஹோர்மோன்ஸ்லாம் கூட குறைய இருக்கும்.. அப்போ பண்றதும் டேன்ஜர் தான்.. 

பட் குழந்தைக்கு பால் கொடுக்குற காலப்பகுதியான இரண்டு வருஷத்துக்கு அப்பறம் ஒரு சின்ன டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு, இவங்க பாடி கண்டிஷன் ஓகேன்னா.. பண்ணிரலாம்.. ஆனால் ரொம்ப செலவாகும்.. கிட்டத்தட்ட செவன் லேக்ஸ் ஆகும்.”என்று டாக்டர் யோசனையுடன் செல்ல, செலவைப் பற்றியெல்லாம், அதிமன்யு கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. 

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. அவளுக்கு கண்பார்வை கிடைச்சா போதும் டாக்டர்..தேங்க்ஸ் டாக்டர்.. தேங்க்ஸ்!! ”என்று சந்தோஷ மிகுதியில், டாக்டர் கையைப் பற்றிக் கொண்டு.. சொன்னவனுக்கு வந்து போனது அவனது தாயின் முகம். 

தாயையும், மனைவியையும் ஒன்றாகப் பார்ப்பவன், மனைவிக்கு கண் வரும் பட்சத்தில் அது பார்வையிழந்த அவனுடைய தாய்க்கும் பார்வை கிடைக்கப் பெறப் போவதாகவே கருதினான். 

டாக்டரிடம் இன்னும் சில விஷயங்களைக் கேட்டறிந்து கொண்டவன், மனைவியை நாடி வந்த போது அவன் தன் வாழ்நாளில் என்றுமேயில்லாத சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். 

கணவனின் காலடிச் சத்தத்தை உணர்ந்தவள், நாற்காலியில் இருந்தும் மெல்ல எழுந்து, சத்தம் கேட்ட திசை பார்க்க, இவனோ ஓடிச் சென்று ஓர் குழந்தையை அணைப்பது போல மனைவியை அணைத்துக் கொண்டான். 

அவன் இதழ்கள் ஓயாமல், அவள் உச்சந்தலைக்கு இறுக்கி இறுக்கி முத்தங்கள் வைக்க, அவன் முத்து மூரல்கள் முப்பத்திரண்டும் தரிசனம் தரலாயிற்று வெளியுலகுக்கு. 

பதைபதைப்புடன் இருந்தவளுக்கோ கணவனின் அணைப்பும், முத்தமும் இன்னும் பதைபதைப்பைக் கூட்டவே செய்தது. 

அவன் முத்தங்கள் ஓயும் வரை பொறுமையில்லாதவள், கண்களை படபடப்புடன் சிமிட்டிக் கொண்டு, “என்ன சொன்னாரு டாக்டர்?”என்று கேட்டாள். 

அவனோ தற்போது தன்னை அண்ணாந்து பார்த்த மனைவியின் விழிகளுக்கு, இரு கைகளால் கன்னம் தாங்கி முத்தம் வைத்தான். 

பின்பு மகிழ்ச்சி ததும்பும் குரலில் சொன்னான், “ரெண்டு நல்ல விஷயம்.. எதை முதல்ல சொல்றது..?”என்று கேட்டான். அதை கேட்டு தானும் முகம் மலர்ந்தாலும், புருவங்கள் இடுங்க நின்றாள் அவள். 

“வெயிட்.. ரெண்டுல ஒண்ணு சொல்லு..சின்ன விரலா?.. பெரிய விரலா..?”- மனைவி வாய் திறக்கும் வரை பொறுமையில்லாதவன், தானாக முடிவெடுத்து இரு விரல்கள் நீட்டிச் சொன்னான். 

“சின்னது”- கிறக்கமூட்டும் ஹஸ்கி குரலில், அவன் இதழ்களுக்கு அருகாமையில் கிசுகிசுத்தாள் அக்னிமித்ரா. 

சந்தோஷம் தாளாமல் திரும்பவும் நடுநெற்றிக்கு முத்தமிட்டவன், இந்த உலகத்தையே ஜெயித்த குரலில் சொன்னான், “என் ஃபயர் பேபிக்கு திரும்பவும் கண்ணு கிடைக்கப் போகுது..”என்று. 

அதைக் கேட்டதும்.. கணவனின் அணைப்பிலிருந்து சட்டென ஓரெட்டுப் பின்வாங்கினாள் அக்னிமித்ரா. அவளது கண்கள் இரண்டும் சிவந்து ஆனந்தக் கண்ணீர் பொழிந்து கொண்டிருந்தது. 

அழுகையின் மிகுதியில் கொஞ்சம் மூக்கை உறிஞ்சவும் செய்தாள் அக்னிமித்ரா. மனைவி ஆனந்தக் கண்ணீர் சிந்துவதைக் கண்டு தானும், உருகிப் போனவன் அவளை அணைத்துக் கொண்டான். 

ஒரு சில மணித்துளிகள் தேவைப்பட்டது அந்த சந்தோஷத்தை ஜீரணிப்பதற்கு. கொஞ்சம் தன்னைத் தானே சமன் செய்து கொண்டவள், 

அழுததால் கம்மிப் போன குரலில், “அப்போ அடுத்த குட் நிவ்ஸ்..?”என்று கேட்டாள். 

அந்த வலிய ஆண்மகனின் ஓர் கரம், அவள் இடையை சுற்றி வளைத்தது, மறு கரம் வாஞ்சையுடன் மேடிட்ட வயிறு தழுவியது. 

மீண்டுமொருமுறை காதோரம் கிசுகிசுத்தான், “நமக்கு ட்வின்ஸ்..!!” என்று. 

போன முறையை விட ரொம்ப அகலமாக விரிந்தது செங்காந்தள் மலரினை ஒத்த அவளது நயனங்கள்!! 

“பேபிஹ் நிஜமாவாஹ்?”-சொல்லில் விவரிக்க முடியாத இன்பத்துடன் கேட்டவளின் கைகள், அவனது கன்னத்தை அழகுறத் தாங்கியிருந்தது. 

அவன் அதற்கு வாய் திறந்து பதிலளிக்கவில்லை தான். இருப்பினும் மேலும், கீழும் ஆடிய தலைவனின் தலையை வைத்து அதற்கான பதிலை அறிந்து கொண்டாள் அவள். 

அன்றைய கணப்பொழுதுகள்… தலைவனும், தலைவியும் கழித்த.. ஆயிரம் கட்டில் மேல் காதல் தராத.. இன்பத்தைக் கொடுத்த கணப்பொழுதுகள்!! 

அவன் நெற்றி.. இவள் நுதலோடு உரச, அவள் மூக்கு இவன் நாசியோடு உரச, மூச்சும், மூச்சும் மோதிக் கொள்ள, புன்னகைத்துக் கொண்டே நின்றிருந்தனர் அந்தக் காதல் ஜீவிகள். 

 

எங்கேயும் காதல்! 

     [13]

ஓரிடத்தில் நில்லாமல் கற்களைத் தழுவிய வண்ணம் சலசலத்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தது சிற்றோடை!! 

அதன் இருமருங்கிலும் செழித்து வளர்ந்திருந்தன மூலிகை நெடி வீசும் காட்டுச் செடிகள்!! 

அதனையடுத்து பரந்திருந்த இரண்டரையடி உயர புல்வெளியின் வேலிகளாக.. இராட்சத உயரத்தில் நின்றிருந்தன பைன் மரங்கள்!! 

தூரத்தில் இருக்கும் காட்டுமரங்களைத் தழுவிக் கொண்டிருந்தது கண்ணுக்குப் புலனாகும் அழகிய உறைபனி!! 

சுற்றி வர.. ஜிலுஜிலுவென்ற கூதல் காற்று வீசி வர… காற்றின் தாளத்துக்கு ஏற்ப ஆடி அசைந்து கொண்டிருந்தன தாவரங்கள்!! 

ஆங்காங்கே பாரிய கற்கள் இருக்க… அவற்றினருகே இருந்த ஒற்றையடி மலைப்பாதையில் தான் ஏறிக் கொண்டிருந்தனர் தலைவனும், தலைவியும். 

தன்னுடைய அழகான மணி வயிற்றை ஒரு கையால் அணைத்துப் பிடித்துக் கொண்டு.. மறு கையால் கணவனின் முறுக்கேறிய கைச்சந்தைப் பற்றிக் கொண்டு மலையேறிக் கொண்டிருந்த மங்கைக்கு மூச்சிறைத்திருக்க வேண்டும்!! 

கணவனின் கையை விட்டு விட்டு, முழங்கால்களைப் பிடித்தவாறு குனிந்து.. பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்டுக் கொண்டாள் அவள். 

பின்பு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டே நிமிர்ந்தவள், 

நடந்ததால் விளைந்த மூச்சிறைப்புடன், “ஹின்னும் ஹெவ்வளவு தூஹ்.. ரம் இருக்குஹ் பேபிஹ்.. ரொம்பஹ் கால் வலிக்குதுஹ்..!!”என்றாள். 

அதிமன்யு… இமை கொட்டாமல் தன் அழகு மனைவியின் நெற்றியில் ஊடுருவியிருக்கும் மணி மணியான வியர்வைத் துளிகளைப் பார்த்தான். 

எட்டு மாத கரு சுமந்து நிற்பவளின் பாதங்களையும் பார்த்தான். அடிப்பாதம் சிவந்து வீங்கியிருப்பது கண்டு உள்ளுக்குள் சின்னதாக ஓர் வலி தோன்ற, 

அடுத்த கணம் விரைந்து வந்து தன் சீதையைத் தூக்கிக் கொண்டான் கலியுக ராமன்!! 

கணவனின் முரட்டுக் கைகளில் ஒன்று தன் பின்தொடையூடும், மற்றொன்றும் இடையூடும் ஊர்ந்து, அவளை அரவமேயின்றி அணைத்துக் கொள்வது உணர்ந்தவள், சற்றே பதறிப் போனாள். 

அவள் களேபரத்துடன், அவனுக்கு மட்டுமே கேட்கும் ஹஸ்கி தொனியில் “பேபிஹ்.. என்ன பண்றஹ்?”என்று கேட்டதும், தலைவனின் முகத்தில் மெல்ல அரும்பியது ஓர் மொட்டுநகை. 

அச்சத்தில் துடிக்கும் அவளின் செவ்விதழ்கள் கொஞ்சம் கிறக்கமும் தர, தன் இதழ்களுக்கு அருகாமையில் இருந்த அவள் இதழ்களுக்கு, 

காதல் மிகுதியில் பட்டும் படாமலும் முத்தம் வைத்தவன் முகம் மந்தகாசப் புன்னகை சிந்திக் கொண்டிருந்தது. 

அவன் மையலோடு சொன்னான், “இனியும் என் மகாராணி ஏன் நடக்கணும்? தூக்கிச் செல்ல அடியேன் நான் தான் இருக்கிறேனே?”என்று. 

அந்த கணம்.. அவன் அவ்வாறு சொல்லிக் கொண்ட கணம்..எழுத்தில் வடிக்க முடியாத காதல் பிறந்தது அவன்பால். 

அந்தப் பேரழகுப் பெண்ணின் மனதிற்குள், அவனைக் காண இந்தக் கண்கள் இப்போதே பாக்கியம் பெறாதா? என்ற ஏக்கம் எழுந்து பரவியது. 

காதல் மிகுதி அதிகமாக, அவனது திண்மையான பின்னங்கழுத்தோடு கைகள் கோர்த்தவள், அவன் கன்னத்திற்கு முத்தம் வைக்கிறேன் பேர்வழி என்று மூக்குக்கு முத்தம் வைத்தாள். 

ஏடாகூடமாக அவன் மூக்கில் பதிந்த எச்சில் அவனுக்கு பிடிக்கவே செய்தது. அவன் இதழ்கள் ஏகத்துக்கும் தாராளமாகவே விரிந்தது. 

அதை உள்ளுணர்வால் அறியப்பெற்றவள், எப்போதும் கேட்கும் அதே கேள்வியைக் கேட்டாள். 

“பேபி.. நீ சிரிக்கிறேல்ல?”என்று. 

மனைவி தான் சிரிப்பதை அறிந்து கொண்டாள் என்றானதும், அவளது ரவுடி பேபியின் புன்னகை அரவமேயின்றி இன்னும் கொஞ்சம் விரிந்தது. 

அந்த அழகிய பசுமையடர்ந்த மலையின் உச்சிக்கு.. அவளை அநாயசமாக சுமந்து கொண்டே ஏறினான். 

அவள் அந்த நிமிடங்களை இரசித்தாள்;அவனோடு செல்லும் இந்த நிமிடங்கள் நீளாதா? என்ற ஏக்கம் பிறந்தது. 

சரியாக மலையின் உச்சி வந்ததும் மனைவியை அவன் இறக்கி விட, அவனின் கண்பார்வை மட்டத்துக்கு கீழ்.. அந்தக் கண்டி மாநகரமே ரொம்பவும் குட்டியாகத் தெரியவாரம்பித்தது. 

சரியாக அவர்கள் நின்றிருந்த மலையுச்சிக்கு நேரெதிரே தொலைவில்.. தொடர்ச்சியாக மலைத் தொடர்கள் சென்றிருக்க, 

அங்கேயிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்கியிருந்தான் என்றும் இளமையான பகலவன்!! 

பகலவன் வெளியிடும் விட்டமின் டி மனைவிக்கும், குழந்தைக்கும் நல்லது என்றெண்ணித் தான் அதிமன்யுவும் அவளை அங்கே அழைத்து வந்திருந்தானோ?? 

காற்றில் கைகளை நீட்டி.. அந்த இதமான குளிர் காற்றை கண்கள் மூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள் அக்னிமித்ரா. 

மனைவி தன் சுருள் அளகக் கூந்தல் காற்றில் அலை மோத நின்ற விதமே.. அவனுள் ஓர் கிறக்கத்தை மூட்ட.. இத்தனையையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவன், 

பின்னிருந்து அவளை அணைத்துக் கொண்டான்.

அவனது நரம்போடிய முரட்டுக் கைகள்.. அவளது மார்பு முடிவுக்கும், வயிறு ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட பிரதேசத்தை தழுவிக் கொண்டது. 

அவனது பரந்த மார்பில்…. குஞ்சுப் பறவையாய் அடங்கிப் போனது அவள் முதுகு!! 

அவன் நாசி.. அவளது கூந்தல் மணம் முகர்ந்து.. கிறக்கத்துடன் கன்னம் அலையலாயிற்று. 

கணவனின் நெருக்கம்.. இருந்த குளிர் கால நிலையில் கதகதப்பாக இருக்க.. அவன் ஆசைக்கெல்லாம் அமைதியாக வழிவிட்டு நின்றாள் அக்னியின் மித்திரை. 

அவளது மென்மை, அவள் சுகந்தம், கூடவே உணர்ச்சிகளுக்கு மதகிடும் காலநிலை மூன்றும் அவன் காதலுக்கு மதகிட, காதோரம் நுனிமூக்கை நுழைத்தவன், 

“கால் வலிக்குது சொன்னேல்ல? வா.. உட்கார்ந்துக்கலாம்”என்று அழைத்தான். 

இருவரும் அந்த மலையுச்சியின் புல்வெளியில் உட்கார்ந்து கொண்டனர். 

அவன் தன் இரு தொடைகளையும் விரித்தமர, தொடைகளுக்கிடையில் குழந்தை போல அமர்ந்து.. அவன் மார்பில் பின்னந்தலை சாய்த்துக் கொண்டாள் அக்னிமித்ரா. 

 தாவரங்களின் கிளை தாண்டி வந்த சூரியக்கதிர்கள் அவளுடைய மேனியில் விழுந்து அவளையொரு தங்கத்தாரகை போல அடித்துக் கொண்டிருந்தது. 

அவள் தன் உள்ளுணர்வால் இயற்கை இரசித்தாள். அவனோ தன் தாய்மை வரம் பெற்று நிற்கும் தன்னவளை இரசித்தான். 

டாக்டர் விதித்த கெடு.. இன்னும் இருபது நாட்களாக அப்படியே இருக்க.. மனைவியின் வயிறு அளவுக்கதிகமாக தரையை நோக்கி பணிந்திருந்தமை கண்டு.. 

அதிமன்யுவுக்கு உள்ளூற ஓர் கலக்கமும் இருக்கத் தான் செய்தது. 

அவள்.. அவனுடைய உரிமை.. அவன் சொத்து!! என்று உள்ளம் சொல்ல.. அவளைப் பின்னிருந்தபடியே திரும்பவும் அணைத்துக் கொண்டான் அதிமன்யு. 

மௌனமாகக் கழிந்த அந்த நொடிகளை முதலில் கலைத்தாள் அவள். 

கைகளை காற்றில் நீட்டி.. சூரிய உஷ்ணத்தை உணர்ந்தவள், ஒரு புறமாக கையை நீட்டிக் கொண்டே முகம் திருப்பி தலைவனைப் பார்த்து, 

“ ஐ ஃபீல் த வோர்ம்த் ஃப்ரொம் திஸ் ஸைட்.. அது தான் கிழக்குத் திசை கரெக்ட்டா..?”என்று தலையாட்டிக் கேட்டாள். 

பார்வையற்ற இமைகள் ஆடிய நளினத்தை இரசித்த வண்ணமே, “ம்.. ஆமா அது தான் கிழக்குத் திசை..அங்கே என்ன என்னலாம் இருக்குன்னு பார்க்க ஆசைப்பட்றீயா?..” என்று கேட்டான் அவன். 

அசூயையில் கொஞ்சம் இதழ்களை சுளித்து சிணுங்கும் குரலில், “என்னால எப்படி பார்க்கமுடியும் பேபி..?”என்று கேட்டாள் அவள். 

அவனது குரல் ரொம்ப ரொம்ப உறுதியாக வெளி வந்தது.

 “முடியும்..கண்ணை மூடு..”என்று அவன் சொல்ல, அவளோ கண்ணை மூடாமல் மலங்க மலங்க விழித்தாள். 

அழுந்த மூடிய இதழ்கள் பிரித்தவள், “என்னால கண் திறந்திருந்தாலேயே பார்க்க முடியாது.. இதில் கண்ணை மூடினா எப்படிடா பார்க்க முடியும்?”என்று கேட்க,

 சட்டென “ப்ம்ச்”என்று உச்சுக் கொட்டினான் அவன். 

அவளை எங்கணம் மசிய வைப்பது என்று புரியாதவனெ.. இறுதியாக தன் அஸ்த்திரம் எடுத்தான். 

எதை சொன்னால், தன் பிடிவாதக்கார மனைவி மறுபேச்சு பேசாமல் சொன்னதை செய்வாள் என்று தெரியுமோ அதை சொன்னான். 

சற்றே போலிக் கோபம் மீதூற “ப்புருஷன் நான் சொல்றேன்ல? கண்ணை மூடு.. ப்பார்க்க முடியும்!!..”என்றான் கறாராக.

‘புருஷன் நான் சொல்றேன்ல?’ என்னும் அவனுடைய ட்ரேட் மார்க் டயலாக். அதை அஸ்த்திரமாக அவன் உபயோகித்ததும், அந்தப் பதிவிரதையும்.. 

அடுத்த நிமிஷம், மறுபேச்சு பேசாமல் கண்கள் மூடிக் கொண்டாள் அவள். 

அவள் குழந்தைகள் போல விழிகள் மூடிக் கொண்டதைக் கண்டதும் அதிமன்யுவின் இதழ்கள் மீண்டுமொருமுறை அரவமேயின்றி புன்னகைத்தது. 

அவனுடைய முறுக்கேறிய வலது கை, அவளது மெல்லிய கையோடு பாம்பு போல ஊர்ந்து வந்து அவள் விழிகள் கோர்த்துக் கொண்டன. 

அவளுடைய செங்காந்தள் மலரினையொத்த சுட்டுவிரல் பற்றியவன் அதைக் காற்றில் நீட்டி.. தூரத்தே தெரியும் மலைகளின் தொடர்ச்சியை கோட்டுச்சித்திரம் போல வரையலானான். 

அவன் குரல் மட்டும் ஹஸ்கி வாய்ஸில், அவள் காதோரம் ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

காற்றில் அலை அலையான மேடுபள்ளங்கள் கீறியவன், “இதெல்லாம் பெரிய பெரிய மலைகள்.. அலை அலையாஹ்.. பிரம்மாண்டமாஆஹ்.. ஆனால் நம்ம கண்ணுக்கு.. சின்னதாஹ்..”என்று சொல்ல, 

அவளது இருட்டு விழித்திரையில்.. கற்பனையில் விரியலாயிற்று தூரத்தே தெரிந்த மலைத்தொடர்ச்சிகள்!! 

கற்பனை மலைகளும் அவன் உரைத்தது போல சின்னதாகவே இருக்க, அவளும் அவனைத் தொடர்ந்து சொன்னாள், “ஆமா சின்னதா..”என்று. 

அதன் பிறகு அவன் வரைந்த மலைகளுக்கு மேலே.. மலை உரசும் மேகங்களை வரைந்து காட்ட நாடியவனின் கை, அவள் விரலை இழுத்துக் கொண்டு.. காற்றில் சுழலிகள் போட்டன். 

“அதுக்கு மேல மலைமுகடுகளை உரசிக்கிட்டு வெண்பஞ்சு மேகங்கள்!! .. நான் உன்..”என்றவன் ஆளில்லா தனிமையிலும் அவள் காதுகள் நாடிப்போய் ஏதோ ஒரு வார்த்தையை மட்டும் கிசுகிசுத்தவன், 

பின் மீண்டும் சத்தமான குரலில், “உரசுற மாதிரி”என்றான்.

‘நான் உன்…..உரசுற மாதிரி’ என்றவனின் இடைவெளி நிரப்பும் வார்த்தை தான் யாது? 

யார் அறியா விட்டாலும்.. அதை தெளிவாக அறிந்து கொண்டவள் முகம் நாணத்தால் கீழ்வானச் சிவப்பை பூசிக் கொண்டது. 

பெண்களின் வெட்கப் புன்னகை அழகோ அழகு!! அவளது நாணத்தை அள்ளிப் பருகிக் கொண்டிருந்த ஆண்மகனின் மனம் தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. 

அவள் நாணம் தாள மாட்டாமல், தலைவனின் விலாவுக்கு முழங்கையால் வலிக்காமல் குத்தி, “ச்சீ.. நோட்டி!!” என்று சிரித்தாள் பெண்.

அவனது முகத்தில் இதுவரை தோன்றியிருந்த அரும்பு நகை, மொட்டுநகையாக மாற, அவன் மீண்டும் விரல்கள் பற்றி ஓர் சூரியன் வரைந்தவனாக, 

அவள் காதோரம், “அந்த மலையோடயும், வெண்பஞ்சு மேகத்தோடயும் லவ் மேக்கிங்கை எட்டி எட்டி பார்த்துட்டிருக்கான்.. வெட்கமேயில்லாத சூரியன்..”என்று முடிக்க.. அதற்கு மேல் அவளால் கேட்க முடியாத வண்ணம் நாணம் அதிகமாயிற்று அவள் வதனத்தில். 

இரு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டவள், “ஐய்யோ போதும்.. போதும் புலவரே.. திகட்டுது..”என்ற வண்ணமே அவன் முகம் நோக்கி திரும்பினாள். 

“எது திகட்டுது?.. இயற்கையா.. என் வர்ணையா?”-அவள் நாடியை ஒற்றகையால் உயர்த்திய வண்ணம் கேட்டான் அந்த நல்ல ரவுடி.

அவள் இமைகள் விசிறியாக கன்னம் படிய, சன்னமான குரலில் சொன்னாள் அவள், “ரெண்டும் தான்..எதுவும் ஓவரா போனா திகட்டத் தான் செய்யும் பேபி”என்று. 

அதைக்கேட்டதும் அதிமன்யுவின் அடர்ந்த புருவங்களின் இடது விழிப்புருவம் பட்டென மேலுயர்ந்தது. 

“அப்போ என் காதல்?.. அதுவும் திகட்டுமா என்ன?”- அவளது பேச்சில் ஓர் சந்தேகமும், அவஸ்தையும் ஒருங்கே தோன்ற, அலைக்கழிப்புடன் கேட்டான் அவன். 

கணவன் தான் சொன்ன ‘திகட்டலுக்கான வரைவிலக்கணத்தை’தவறாக கற்பிதம் செய்து கொண்டதை எண்ணி உள்ளூற ஓர் வருத்தம் தோன்ற, 

தன் பருத்த தனங்கள் ஏறி இறங்கப் பெருமூச்சு விட்டாள் அக்னிமித்ரா. 

அவள் கைகள்.. அவனுடைய.. இறுகிய மார்புத்தசைகள் கடந்து.. அவனது தோள் புஜம் அடைந்து,கன்னம் தழுவியது. 

தன் ஆணழகனை நோக்கியவள் சொன்னாள், “காதல் திகட்டிப் போனா.. அது காதலே இல்லை பேபி.. இயற்கை திகட்டலாம் உன் வர்ணனை திகட்டலாம்.. ஆனால் ஆதாம், ஏவாள் காலத்தில் இருந்து.. இப்போ அதி – மித்ரா காலம் வரை… வந்தாச்சு.. இனியும் காதல் திகட்டும்?”என்று. 

அவளின் பேச்சில்.. அவன் இதழ்களில் வந்தமர்ந்தது ஓர் இள நகை!! அவனது காதல் திகட்டவில்லை என்றதில்.. மனமெங்கும் ஆயிரம் பட்டாம்பூச்சி சிறகடித்துப் பறந்தாற் போல இருந்தது அவனுக்கு.

ஆயினும் அவன் பாணியிலேயே பதிலிறுக்க நாடியவன், “போதும் போதும் ஃபிலோசபிஸ்ட்..!!”என்று சொல்ல, சில்லறைகளை சிதற விட்டது போல அழகாக கிளுக்கி நகைத்தாள் அக்னிமித்ரா. 

“ஹஹஹா..ஹஹஹா”என்று சிரிக்கும் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அசதியின் காரணமாக சத்தமாகவே வந்தது ஓர் கொட்டாவி. 

அதன் சத்தம் கேட்டு தன் சிரிப்பை நிறுத்தியவளுக்கு கணவனின் மேல் கழிவிரக்கம் பிறந்தது. 

“நான் உண்டானதிலிருந்து உன் தூக்கம் போச்சுல? டெலிவரி டேய்ஸ் நெருங்கிட்டதால.. வேலைக்கு லீவு போட்டு.. என் கூடவே டைம் ஸ்பென்ட் பண்ணாலும்.. ஒரு நாள் கூட ரெஸ்ட்டா இருந்திருப்பியா பேபி நீ? இப்போலாம் நான் கொஞ்சம் அசைஞ்சு தூங்கினாலும்.. டெலிவரி பெய்ன் தான் வந்திருச்சோன்னு தலை தூக்கிப் பார்க்குறது கூட எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டிருக்கியா நீ?”என்று மனைவி கேட்ட தினுசில், 

பட்டென கண்களை அகல விரித்துப் பார்த்தான் அவன். 

அவளைக் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதற்காக அவன் படும் துயரங்கள் யாருக்கு தெரிந்து விடக்கூடாது என்று நினைத்தானோ? அவளே அதை அறிந்து கொண்டது ஒரு புறம் அதிர்ச்சியாகவும், மறுபுறம் கவலையாகவும் இருந்தது அவனுக்கு. 

அதனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அப்படிலாம் ஒண்ணுமில்லை.. இது தூக்கம் தொலைச்சதால் வந்த கொட்டாவி இல்லைமா”என்று ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனை மேற்கொண்டு பேச விடாமல், அவன் பாணியிலேயே குறுக்கிட்டுப் பேசினாள். 

“உஷ்ஷ்!! பொண்டாட்டி நான் சொல்றேன்ல? .. வா.. என் மடியில் படுத்துக்க..”என்று அவள் சொல்ல, அவள் அழைப்பில் அப்படியே நெக்குருகிப் போனான் அதிமன்யு. 

‘வா.. என் மடியில் படுத்துக்க….’- அவன் அம்மா பிரயோகிக்கும் வார்த்தைகள் அவை. 

பார்வையிழந்த தாயின் நினைவும், அவன் சிந்தையில் சுழற்றியடிக்கத் தொடங்க, குழந்தை போலவே மாறிப் போனவன், மனைவியின் மடியில் ஓர் கன்றுக்குட்டியாக சுருங்கிக் கொண்டான் யாருக்கும் அடங்காத ஓர் இளங்காளை!! 

தன் மடியில் உறங்கும் திருமாலின் அழகினை நிகர்த்த தன் அழகனின் தலை கோதிக் கொண்டே அமைதியாகவே அந்த நிமிடங்களை அனுபவித்தாள் அக்னிமித்ரா. 

மனைவியின் மடி தந்த சுகம்.. அவன் மனதை இலேசாக்கியது.கூடவே மேடிட்ட அவள் வயிறு.. சரியாக அவன் முகத்துக்கு நேரே வந்து நிற்க, 

தன் குழந்தைகளுக்கு முத்தம் வைக்கிறேன் பேர்வழி என்று மனைவிக்கு முத்தம் வைத்தான் அந்தக் காதல் கள்வன்!! 

கணவனின் கள்ளத்தனத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் காதல் உணர்ந்து.. மெல்ல நகைத்தாள் அவள். 

சிறிது நேர அமைதியில்… கொஞ்சம் கொஞ்சமாக தூக்கம் அவனை அரவணைத்துக் கொள்ள, அவன் தூக்கத்தைக் கலைக்குமுகமாகக் கேட்டது அவளின் குரல். 

“பேபி..?”

“ம்..?”-தூக்கத்தையும், அவள் கேள்வியையும் விடாமல் “உம்”கொட்டினான் அவன். 

தன் மக்கு மூளையில் உதித்த மரமண்டுக் கேள்வியைக் கேட்க நாடி, “ஒருவேளை டெலிவரி அப்போ நான் செத்துட்டேன்னா என்ன பண்ணுவ? பார்வையுள்ள பெண்ணா பார்த்து கட்டிப்பியா பேபி?” என்று கேட்டு வைக்க, பட்டெனக் கண் விழித்தவன் முகமெங்கும் ஓர் எரிச்சல் அப்பட்டமாகவே வழிந்தது. 

அந்தக் கேள்வியை எண்ணும் போதே.. அதை தாங்கிக் கொள்ள மாட்டாத துக்கம் தொண்டையை அடைக்கலாயிற்று. 

அதனால் ஓர் கோபமும் எழவும் செய்யவே, 

சட்டென்று அவளது மடியிலிருந்து எழுந்து கொண்டவன், “விடு.. உன் மடியில படுத்தேன் பாரு.. என்னை சொல்லணும்..?”என்று சொல்ல, பட்டென அவள் கைக்கெட்டிய அவன் கழுத்தோடு கையிட்டுத் தாருமாறாக அணைத்து, 

அவன் தலையை தன் மார்போடு புதைத்துக் கொண்டாள் பெண். 

“பேபி.. ஸாரிடா.. வர வர… நீ என் மேல ரொம்ப கோபப்படுற..நான் ஒண்ணும் கேட்க மாட்டேன்.. நான் ஒரு லூஸூ.. ப்ளீஸ் படுத்துக்க..”என்று குழந்தையைத் தேற்றும் தாய் போல அவள் தேற்ற, 

கொஞ்சம் மலையிறங்கி வந்தவன் அவள் மடியில் தலைவைத்து, ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான். 

இதுவரை காதல் புரியும் மனநிலையில் இருந்தவனின் முகம்.. அவளது முரண்பாடான கேள்விக்குப் பின் இறுகிப் போயிருந்தது. 

அவளது கேள்வியில் அவன் மறக்கத் துடிக்கும் அவன் தந்தையின் முகம், அவன் நினைக்க எத்தனிக்கும் தாயின் முகம், தாத்தாவின் முகம் அத்தனையும் வந்து போக, விழியோரம் துளிர்த்தது ஒரு திவலைக் கண்ணீர்!! 

 

ஒருக்களித்துப் படுத்திருந்தவன் கண்கள் எதிரே, தூரத்தே விரிந்தது மலைத்தொடர்கள். 

அவற்றை இலக்கேயற்று வெறித்துப் பார்த்துக் கொண்டே, சுரத்தே அற்ற குரலில் வாய் திறந்தவன், ஆழ்மனதில் இருப்பவற்றை அவளிடம் கொட்டினான். 

கணவன் வாலும் இல்லாமல், தலையும் இல்லாமல் பதில் சொன்னாலும் கூட அமைதியாக அவற்றைக் கேட்க ஆயத்தமானாள் அக்னிமித்ரா. 

“என் அம்மா இறக்கும் போது எனக்கு மூணு வயசு..அப்போ நான் சின்னக்குழந்தை.. அம்மா செத்த மறுநாளே.. இன்னொரு பொண்ணு.. கழுத்துல தாலி கட்டி வந்து நின்னாரு என் அப்பா..

எனக்கு எதுவும் புரியலைன்னாலும் தாத்தா அப்பாவை வாசலிலேயே நிற்க வைச்சு திட்டினது மட்டும் எனக்கு அப்படியே ஞாபகமிருக்கு….

அதுக்கப்புறம் அப்பா வீட்டுக்கு வர்றதே நின்னு போச்சு… அதுக்கான காரணமும் எனக்குப் புரியலை.. 

விபரம் தெரியுற வயசில்.. எல்லாமே புரிஞ்சது.. அப்பாவுக்கு என் அம்மாவை கல்யாணம் பண்ண ஒரு வருஷத்திலிருந்து இல்லீகல் அபெயார் இருந்திருக்கு..

 அம்மா செத்த மறுநாளே என் அப்பா தாலி கட்டி வந்து நின்னது அந்த லேடிக்குன்னு தான் புரிஞ்சது.. அதனால தாத்தா அப்பாவை திட்டி வெளியே அனுப்பிச்சிட்டாருன்னும் புரிஞ்சுது..

அம்மா எனக்காக விட்டுப் போன லெட்டர்ஸ் படிச்சப்போ, அம்மாவுக்கு ஏற்கனவே அப்பாவுடைய இல்லீகல் அபெயார் பத்தி தெரியும்னு புரிஞ்சுக்கிட்டேன்.. 

தனக்கு சொந்தமான ஆண்.. இன்னொரு பெண்ணை பெண்டாள்ற விஷயம் தெரிய வந்தப்போ ஒரு பொண்ணுக்கு எப்படியிருக்கும்னு எனக்கு நல்லா தெரியும் மித்து..

அப்போ முடிவு பண்ணேன்.. என் வாழ்க்கையில் ஒரு பெண்ணுக்கு மட்டும் தான் மனைவி அந்தஸ்த்துன்னு.. என் வாழ்க்கை உன் கூட மட்டும் தான்..”என்றவன் தன் கூந்தல் அளைந்த அவளது மென்மையான கைகள் பற்றி நெஞ்சில் புதைத்துக் கொண்டான். 

‘ஒருவேளை டெலிவரி அப்போ நான் செத்துட்டேன்னா என்ன பண்ணுவ? பார்வையுள்ள பெண்ணா பார்த்து கட்டிப்பியா பேபி?’ என்று அவள் கேட்ட கேள்விக்கு, 

அவன் சுற்றி வளைத்தே பதில் சொல்லியிருந்தாலும்.. அவன் விடை அவளை நெஞ்சைப் பிசைந்தது. கண்கள் கலங்கி விழிநீரும் வெளிவர எத்தனித்தது. 

உள்ளே போன குரலில், “அப்புறம் நீ உன் அப்பாவையும் , அவரோட குடும்பத்தையும் பார்க்க போகலையா?”என்று அவள் மீண்டும் ஓர் கேள்வி கேட்க, அந்தக் கேள்வியில் அவன் மறக்கத் துடிக்கும் பல முகங்கள் வந்து போனது சிந்தனையில். 

அதைப்பற்றி பேசப்பிடிக்கவில்லை அவனுக்கு. அதை விடுத்து மென்மையாக, “அவர் இப்போ உயிரோட இல்லை..தூக்கம் வருது..”என்று மட்டும் சொல்லி, நேக்காக பேச்சைக் கட் செய்து விட்டு விழிகள் மூடிக் கொண்டவனை, அவளும் இடைஞ்சல் செய்ய விரும்பவேயில்லை. 

அவளுக்கு தந்தை இல்லாமல் தந்தையன்பு கிடைக்காமல் போக, இவனுக்கோ தந்தை இருந்திருந்தும் தந்தையன்பு கிடைக்காமல் போனது குறித்து கவலை பிறந்தது. 

அமைதியாக அவன் துயின்றெழும் வரை தலை கோதிக் கொண்டே இருந்தாள் அவள்.

அந்த நேரம்.. அவளுடைய வயிற்றுக்குள் இருந்த குழந்தைகளின் உருளல் முன்னைய நாட்களை விடவும் அதிகமாக உணர, பட்டென இடுப்பைப் பிடித்துக் கொண்டவள், 

அதனால் எழுந்த வலியில், “ஆ..”என்று கத்தியது மட்டும் தான் தாமதம், 

பட்டென விழித்துக் கொண்ட அதிமன்யு உள்ளுக்குள் கூஸ்பம்ப் ஓட, “என்னாச்சு?”என்று கேட்டான். 

சற்றே மூச்செடுக்க சிரமமாக இருந்தது அவளுக்கு. அவள் அணிந்திருந்த நீண்ட மிடியின் பின்புறம் வியர்வையில் நனைந்து ஊறிப் போயிருந்தது. 

இருந்தாலும் அத்தனை வலியிலும், செல்லமாக மேடிட்ட வயிற்றில் தட்டியவள், “ உங்க பசங்க ரொம்ப சேட்டைப் பண்றாங்கஹ்….அவங்களைய்ய்”என்று மீண்டும் கை ஓங்கப் போக, 

மூண்ட சிரிப்பை அடக்கிக் கொண்டு மனைவி கையைப் பிடித்துக் கொண்டான் அதிமன்யு. 

“ஹேய்.. என் குழந்தைங்க மேல கைய வைச்ச..?”என்று சற்றே கறாராக சொன்னாலும் கூட.. மனைவியின் முகத்தில் அந்நேரம் நிலைத்திருந்த அதிகப்படியான சோர்வு.. அவனை ஏதோ செய்தது. 

மேற்கொண்டு விழிகள் மூடி, அவள் மடியில் படுத்து, காதல் தவம் யாசிக்கும் எண்ணம் அவனிடம் இல்லை. உள்ளுக்குள் அசரீரி போல, ‘ஏதோ ஒன்று சரியில்லை’என்று ஒரு குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது. 

மெல்ல எழுந்து கொண்டவன், மனைவியையும் எழுப்பியவனாக, பதற்றத்துடன் சொன்னவன், “வா.. வீட்டுக்குப் போகலாம்..”என்று அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு, மலையிறங்க, 

கணவனின் பதற்றம் எதற்காகவென்று புரிந்தது அவளுக்கு. 

“பேபி.. நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்லைடா.. நமக்கு இன்னும் நாளிருக்கு.. இது சும்மா பெய்ன்”என்று சொல்லிக் கொண்டே இறங்கிக் கொண்டிருந்த வேளை, 

அவள் முள்ளந்தண்டு என்பு மத்தியில்.. ‘படக்’கென்ற சத்தம் கேட்கவாரம்பித்தது. 

கூடவே.. வயிற்றில் இருந்த பாரம்.. கருவறை வாசல் நோக்கி கீழிறங்கி முட்டத் தொடங்க, இடுப்பைப் பிடித்துக் கொண்டே, வயிற்றைத் தள்ளி சரிந்து கொண்டே, “ஆ.. பே.. ப்பீஈஈஈ.. வலிக்குதூஊஊ..என்னால ம்முடியல”என்ற வண்ணம், 

மலைச்சரிவில் இருந்த கல்லில் அப்படியே அமர்ந்து கொண்டாள் அவனது ஃபயர் பேபி. 

எங்குமிருட்டு!! கரை சேர முடியாத கும்மிருட்டு!! 

இப்போது அவள் அனுபவித்துக் கொண்டிருக்கும் வலி.. வாழ்நாளில் இதுவரை ஒருதடவையேனும் அனுபவித்திராத புதுமையான வலி!! 

அடிவயிற்றில் முட்டும், உயிர் உருக்கும் ஓர் பாரத்தை.. தாங்கிக் கொள்ளவே முடியாத வலி!! 

அத்தனை வலியிலும்…அவள் கைகள்.. கணவனின் டீஷேர்ட்டை மற்றும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டே இருந்தது. 

மனைவியின் வெண்மையான முகம், அவளுக்கு வலியெடுத்ததன் பின்பு, செக்கச் செவேலென சிவந்ததைக் கண்டவன் கண்கள் எதேர்சையாக, கீழிறங்க

அவள் கரண்டைக்கால்களுக்கு, இடையில் தண்ணீர் போல ஓர் திரவம் ஓடுவது கண்டு.. ஒரு கணம் தலையே சுற்றிப் போயிற்று. 

நிலைமையின் அபாயம் புரிய, சட்டென்று அவளை அள்ளி அணைத்து, இரு கைகளிலும் ஏந்திக் கொண்டவனின் கண்கள் கண்ணீரை சொறிந்து கொண்டிருந்தது. 

“பே.. ப்பீஈஈஈ.. வலிக்.. குதூஊஊ.. ஆஆ”என்று கத்தியவளின் வலி, அவனில் இருந்தும் உற்பத்தியாவது போல ஓர் பிரம்மை தோன்ற, 

“இல்லை.. ஒண்ணும் ஆகாது.. போயிரலாம்.. போயிரலாம்..”என்று மனைவி முகத்தைப் பார்த்து ஆறுதல் சொல்லிக் கொண்டே, அந்த மலைச்சரிவை கடந்து ஓடினான் அதிமன்யு. 

இந்த மாதிரியான காலத்தில்.. கர்ப்பிணி மனைவியை அழைத்துக் கொண்டு, மலையேறியது தவறு என்று புரிந்து அவன் வருந்திய நேரம் காலம் கடந்திருந்தது. 

‘ஒருவேளை டெலிவரி அப்போ நான் செத்துட்டேன்னா என்ன பண்ணுவ?’- சமயாசந்தர்ப்பமே பாராது அவளது இடக்கு, மடக்கான கேள்வி வேறு ஞாபகம் வர, உள்ளூற ஓர் நடுக்கம் பரவியது அதிமன்யுவுக்கு. 

அங்கே கவனமாக.. ஆனால் விரைவாக மலைச்சரிவைக் கடந்து வந்து கொண்டிருந்தவனின் கால்கள், பாசி படர்ந்த ஓர் பாறாங்கல்லில் பதிய, 

அடுத்த கணம்.. பிரசவ வலி எடுத்திருக்கும் மனைவியுடன்.. சறுக்கி விழுந்தான் அதிமன்யு.

அவனது முதுகந்தண்டும்,காலும் ஏடாகூடமாக கல்லில் பட்டு.. மோத, அப்போதும் மனைவியை விட்டு விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தான் அதிமன்யு. 

 

 

4 thoughts on “எங்கேயும் காதல்! – 11 12,13,14&15 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top