எங்கேயும் காதல்!
[14]
அவனது முதுகந்தண்டும்,காலும் ஏடாகூடமாக கல்லில் பட்டு.. மோத, அப்போதும் மனைவியை விட்டு விடாமல் இறுக்கிப் பிடித்திருந்தான் அதிமன்யு.
அவள், பதற்றமும், கலக்கமும் ஒருங்கே தோன்ற தன் மன்னவனின் மூச்சுக்காற்று பட்டுத் தெறித்த திசை பார்த்தாள்.
அவனோ, பட்ட வலியில் வாய் விட்டு கத்தினால்… எங்கே அவள் பயப்பட்டு விடுவாளே? என்ற ஒரே காரணத்திற்காக, கீழுதட்டைப் பற்களால் கடித்துக் கொண்டு வலியை அடக்கிக் கொண்டான்.
இருப்பினும் கல்லில் இருந்து சறுக்கியதை, அவன் கைப்பிடியில் இருந்ததால், அவளும் உணர்ந்து கொண்டவள்,
அத்தனை வலியிலும் அவனைப் பார்த்துக் கேட்டாள்,
“ப்பபேஏ.. பிஹ் அடிபட்டிருச்சாஆஆ..?” என்று தான்.
விழிகள் கலங்க தன்னவளை நோக்கியவன் விழிகள், அவள் முகத்தை தான் களேபரத்துடன் ஆராய்ந்தது.
‘இல்லை.. அவளுக்கு எங்கிலும் அடிபடவில்லை’ என்று ஊர்ஜிதம் செய்தவன், அவளுக்கு ஆறுதல் சொல்ல வாய் திறந்த போது, குரலும் சற்று அடங்கியே வெளிவந்தது.
மூச்செடுக்க சிரமப்படும் குரலில்,
“உஷ்ஷ்!!.. ஒண்ணுமில்லைஹ்.. கீழேஹ் போயிரலாம்..உனக்கும், என் குழந்தை.. ங்களுக்கும் எதுவும் ஆக விட மாட்டேன்” என்றவன், உடலில் கொஞ்சம் திடத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்தான்.
இடது காலில், கொடிய பல்லுள்ள மிருகம் கடித்துக் கொண்டேயிருப்பது போல வலித்தது அவனுக்கு.
ஆயினும் வலியை பொருட்படுத்தும் நிலையில் அவன் இல்லை.
நடக்க முற்பட்ட போது நொண்டியடித்தது அவன் கால்கள். மனைவியைப் பிடித்திருந்த கையினை அப்போதும் தளர்த்தினானா தலைவன்?
அவன் பிடியும் சரி, அவள் மீது அவன் கொண்ட காதலும் சரி இரண்டும் கெட்டியானதாகவே இருந்தது.
கவனமாக அதே சமயம் விரைவாக.. அந்த மலைச்சரிவைக் கடந்து, மலையடிவாரம் அடைந்தவன், போர்க்களம் கண்ட அகதியைப் போல, பிரதான பாதையில் போய் வரும் வண்டிக்காக காத்திருக்கலானான்.
அந்நேரம் பார்த்து ஓர் ஆட்டோவும் அந்தப்பக்கம் வரவே, தாமதம் செய்யாமல் மனைவியோடு அவன் ஏறிக் கொள்ள, அவசரம் உணர்ந்து, சாரதியும் முச்சக்கர வண்டியை மருத்துவமனை நோக்கித் திருப்பினார்.
இடுப்பைப் பிடித்துக் கொண்டு வலியில் கதறித் துடிக்கும் அக்னிமித்ராவின் முகம், அதிமன்யு எஞ்ஞான்றும் காணத் துடிக்காத முகம்!! மறக்கவும் முடியாத முகம்!!
முதன் முறையாக பிரசவ வலியை அனுபவித்துக் கொண்டிருந்த அக்னிமித்ராவுக்கு.. அந்த வலி.. பொல்லாத ஹிருதயப் பயத்தைக் கொடுத்தது.
இருந்தபோதிலும் பற்றிப்படர கொழுகொம்பு தேடி அலையும் முல்லைக்கொடி, தண்டைப் பற்றிப் பிடிப்பது போல, அவனுடைய கைகளை விடாமல் பிடித்துக் கொண்டவள் திரும்பத்திரும்ப சொன்னதெல்லாம் ஒரே வார்த்தைகள் தாம்.
“பே.. பீ..ஈஈ..என..க்கு பயமா இரு.. க்கு.. பேபிஈஈ!! .. என் கூடவே இரு… என்னால இந்த வலியைத் தாங்கிக்க முடியலைடாஹ்!! ”என்று தான்.
மனைவியை ஆதரவாக அணைத்துக் கொண்டவன், அவளை சமரசப்படுத்திக் கொண்டே, தன் நண்பன் விக்கிக்கு அழைப்பெடுத்தான்.
ஓரிரு ரிங்கிலேயே மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும், படபடப்பாகவே பேசினான் அதிமன்யு.
“விக்கி.. இப்போ குறுக்க எதுவும் பேசாதே..நான் எல்லாத்தையும் உன்னை நேரில் பார்க்குறப்போ சொல்றேன்.. இப்போ நேரா வீட்டுக்குப் போய்.. டெலிவரி திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு.. ஹாஸ்பிடலுக்கு வா..”என்று சொல்லிக் கொண்டே அழைப்பைத் துண்டிக்க,
அது புரியாத விக்கி, “டேய் என்னாச்சுடா?? ..ஹலோ!! .. ஹலோ! ஹல்!! ”என்று கொஞ்சம் உரத்த தொனியில் கத்திக் கொண்டிருந்தான்.
அக்னிமித்ரா அனுபவித்துக் கொண்டிருந்த வலி எத்தகையது என்பதை பிரசவ வலியினை அனுபவித்த ஒவ்வோர் பெண்ணும் அறிந்து கொள்ள முடியுமானது தான்.
ஆனால் ஆண்மகன் அவன்.. உணர்ந்து கொள்வது கடினம் தான். இருப்பினும் அவள் மீது அவன் கொண்டிருந்த தீரா காதல் அவனை உணரச் செய்வித்துக் கொண்டிருந்தது.
காதோரக்குழல் கற்றை வியர்வையில் கன்னத்தோடு ஒட்டிப் போய் தெரிய,
கண்ணிமைகள் மேலெ சொருகும் நிலையில் இருந்த மனைவியைக் கண்டதும் சர்வநாடியும் ஆட்டம் காணத் தொடங்கியது அவனுக்கு.
முச்சக்கர வண்டி சாரதியும் மிக வேகமாகவே வண்டியை ஓட்டி வந்து, அம் மருத்துவமனை நுழைவாயிலில் நிறுத்த, மனைவியை குழந்தை போல ஏந்திக் கொண்டவன், அசுரவேகத்தில் உள்ளே நுழைந்தான்.
“டாக்டஅஅஅஅர்ர்!!!! டாக்டர்!!! எமெர்ஜென்சி.. எமெர்ஜென்சீஈஈ!!” என்று மருத்துவமனை சுவர்களே அதிர அவன் கத்திய கத்தலில், டாக்டர்கள் முதற்கொண்டு சிற்றூழியர்கள் வரை பதற்றத்துடன் எட்டிப்பார்க்கத் தொடங்கினர்.
நொடிநேரத்தில் எங்கிருந்தோ படபடவென தள்ளிக் கொண்டு, ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட, மனைவியை அதில் கிடத்தியவன் விழியெங்கும் கண்ணீர்.
ஆம், அதிமன்யு அங்கணம் அரவமேயின்றி, அவள் படும் கஷ்டங்கள் கண்டு கண்ணீர் விட்டான்.
லேபர் அறைக்குள் போகும் முன்னமும் கூட, தான் பற்றுகோலாக இறுக்கிப் பிடித்திருந்த டீஷேர்ட்டை இறுதி வரை விடவேயில்லை அவள்.
இறுதியாக அவள் அறைக்குள் நுழையும் போது கூட வலி மிகுதியில் ஈனஸ்வரத்தில், “ப்ப.. பீஈஈ.. என்னை மட்டும் தனியா விட்டுப் போகாஆதே”என்று கூற,
மனைவியைத் தனியே விட விருப்பப்படாமல் உள்ளே நுழையப் போனவனைத் தடுத்து நிறுத்தினார் தாதி.
டீஷேர்ட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிடியினைத் தளர்த்திய அக்னிமித்ராவின் கையில், அவனிலிருந்து பிரிந்து கொண்ட அந்தத் தருவாயில்,
அதிமன்யுவின் கண்ணீர் சொட்டொன்று வந்து விழுந்தது.
மூடப்பட்ட கதவினையே.. விழித்திரை கலங்க, நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தான் அதிமன்யு.
அவள், அவனை விட்டும் சென்ற நொடி, அவனைத் தவிர அவனைச் சூழ்ந்த உலகம் வேகமாக இயங்குவது போல ஓர் தோற்ற மயக்கம் தோன்றவாரம்பித்தது.
அவன் சொன்ன பொருட்களோடு விக்கி பதற்றத்தோடு வந்த போதும் சரி, அவனது தோள் பற்றி ஏதேதோ கேட்ட போதும் சரி, டாக்டரும், நர்ஸூகளும் மாறி மாறி உள்ளே அறையிலிருந்து போய் வந்த போதும் சரி..
அவன் இம்மியளவு கூட அவள் விட்டுச் சென்ற இடத்தை விட்டும் நகரவேயில்லை. மூடப்பட்ட கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன்.
உள்ளேயிருந்து வந்த டாக்டர், அவனை நோக்கி வந்து, ஏதோ பேச வாய் திறக்க, அப்போதும் சிலை போலவே நின்றிருந்தவனை,
அருகில் நின்றிருந்த விக்கி தான் உசுப்பி, சுயநினைவுக்கு கொண்டு வர, ஏதோ கனவிலிருந்து வெளிவந்தவனைப் போல டாக்டரைப் பார்த்தான் அதிமன்யு.
டாக்டரோ அவனுடன் பேச நேரமில்லாதவர் போல அவசரம் மிகுந்த குரலில், “வோட்டர் பேக் உடையுற வரை ஏன் தாமதிச்சீங்க? பெய்ன் எடுத்ததும் கொண்டு வந்திருந்தீங்கன்னா.. கொஞ்சம் ஈஸியா இருந்திருக்கும்.. க்ரிட்டிக்கல் கன்டிஷன்ன்றதால குழந்தைங்க.. இல்லைன்னா தாயோட உயிரை மட்டும் தான் காப்பாத்தக் கூடிய நிலை வரலாம்.. சரியா சொல்ல முடியாது..”என்ற டாக்டரின் மொழிகள் அவனை உயிரோடு கொன்று புதைத்தன.
அவர் சொல்வதை நம்ப மறுத்தன அவன் காதுகள்.
உறுதியான மற்றும் தீர்க்கமான குரலில் சொன்னான் அவன்,
“டாக்டர்.. எனக்கு ம்மூணு உயிரும் திரும்ப வேணும்..”என்று.
அவன் குரலின் தீவிரம் கண்டு.. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்ற டாக்டரும், “வீ வில் ட்ரை அவர் லெவல் பெஸ்ட்..” என்றவராக, உள்ளே நுழைய,
நண்பன் வெளியே தான் திடகாத்திரமான தூண் போல நின்றிருந்தாலும், அவன் நொறுங்கிப் போன மனநிலை அறிந்து அணைத்துக் கொண்டான் விகுகி.
விக்கியின் அரவணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக உருகியது அவனது இரும்பு மனம். விறைத்திருந்த உடல், இளகத் தொடங்க விக்கி தோளில் தலை சாய்த்துக் கொண்டவன்,
“நான் அவளை கூட்டி.. ட்டுப் போயிருக்கக் கூடாது.. அவளோட இந்த நிலைமை..க்கு நான் தான் காரணம்.. அவளுக்கும்.. குழந்தைங்களுக்கும் ஏதும் ஆகாது இல்லைடா?”என்று கேட்க, அதைக் கேட்ட விக்கியின் கண்களிலும் நீர் கோர்க்கத் தொடங்கியது.
இங்கே இவன் நிலை அவ்வாறிருக்க, உள்ளே பிரசவ அறையில் இருந்த அவளது நிலையோ தலை கீழாக இருந்தது.
எங்கும் எதிலும் இருட்டாக இருக்க… என்புகளை உருக்கும் கோர வலியிலும்.. தலைவனின் அருகாமையை நாடியது பெண்மணம்.
அவனைத்தவிர உடலில் யார் கை வைத்த போதும்.. அச்சத்தோடு அருவெறுப்பு தோன்ற, மூர்க்கத்தனமாக நடந்து கொள்ள யத்தனித்தாள் அக்னிமித்ரா.
அவளுக்குள்.. உயிரைக் களவாடும் எமபயம் அன்று சூழ்ந்து கொள்ள, அருகே வந்தவர்களைத் தள்ளி விட்டுக் கொண்டே “அதீஈஈஈ… அதீஈஈ.. நீ எங்கே இருக்க..? எனக்கு பயமா இருக்குடாஆஆ?”என்று கத்த, எவ்வளவு முயன்றும் அவளை ஆசுவாசப்படுத்த முடியாமல் போனது.
குருட்டுப் பெண்களின் மூர்க்கத்தனம் சாதாரணமானது தான். அதிலும் பிரசவகாலத்தில் எழும் ஒருவித அச்சம், திடுக்கம் நீடித்தால் மூவர் உயிரையும் காப்பாற்ற முடியாமல் போகலாம் என்று தோன்ற, அதிமன்யுவை உள்ளே அழைத்து வர நர்ஸை அவசரமாக அனுப்பி வைத்தார் டாக்டர்.
கதவினைத் திறந்து கொண்டு வந்த தாதி, அதிமன்யுவை நோக்கி விரைந்து வந்து, “ப்ளீஸ் கம் இன்.. உங்க வைஃப் கோஓபரேட் பண்ண மாட்டேங்குறாங்க.. நீங்க வந்தா தான் எங்களால எதையும் பண்ண முடியும்.. சீக்கிரம்!!”என்று சொல்ல,
கண்களில் இருந்து வந்த கண்ணீரை உள்ளங்கைகளால் அழுந்தத் துடைத்துக் கொண்டு உள்ளே போனான் அதிமன்யு.
அவன் பெயரையே ஓயாமல் அழைத்துக் கொண்டிருக்கும் மனைவியின் நிலை கண்டு.. அவன் ஹிருதயம் நின்று துடித்தது.
வலுவற்ற கால்களுடன் நடந்து சென்றவன், மனைவி கைகளைப் பிடித்துக் கொண்டான். அவன் கைப்பட்டதும் தான்.. தன்னைக்காக்கும் ஆபத்பாந்தவன் வந்து விட்டது போல உணர்ந்தவள்,
கண்களில் இருந்து வழிந்தது உலர்ந்த கண்ணீர்!!
வலியைப் பொருட்படுத்தாமல்.. கணவன் கைகளுக்கு அழுத்தி அழுத்தி முத்தம் பதித்தவள்,
“என் பக்கத்.. துலேயே இருஹ்.. எனக்கு பயமாஹ் இருக்கு.. என்னைச் சுத்தி என்ன நடக்கு.. துன்னேஹ் புரியலைஹ் அதீஈஈ..”என்று சொல்ல, அவளது தலை கோதிக் கொண்டே அவன் சொன்னான்,
“நான் பக்கத்துலேயே இருக்கேன்.. ப்ளீஸ் கோஓபரேட் பண்ணு.. எனக்கு என் மித்ராவும்.. குழந்தைங்களும் ஸேஃப்பா வேணும்.. ப்ளீஸ்ஸ்..”என்று.
கணவனின் சொற்கள் அவளது பயத்தை புறந்தள்ள, தாதிமார்கள் தன் உடலைத் தொட அனுமதித்தாள் அவள்.
இறுதியில் கருவறை வாசலில் முட்டிய குழந்தை தந்த வலியில், கணவனின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் முக்கிய முணகலில்,
படிப்படியாக செந்நிறம் கொண்டது அவள் வதனம்.
அருகிலேயே நின்றிருந்தவனுக்கோ, உடல் முழுவதும் வியர்த்துக் கொட்ட, அனிச்சை செயலாக தாயின் முகம் வந்து போனது.
முடியாமல், முக்கலை பாதியில் நிறுத்தி, இருட்டை வெறித்தவள், “என்னால முடிய.. லைடாஹ்..”என்று அழலானாள் ஓர் குழந்தை போல.
அவனது கண்களும் கண்ணீர் சொறிந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ள பிரியப்படாதவன் குரலில் மட்டும் கொஞ்சம் இறுக்கத்தைப் பிரயோகித்தான்.
“மித்ரா தாக்குப்பிடி.. முடியும்! .. நீ.. அக்னிமித்ரா.. என் அக்னிமித்ரா.. நான் வியந்த உன்னோட தைரியம் எங்கே போச்சு?… கமோன்.. உன்னால முடியும்மா”என்று அவனும் சேர்ந்து அவளுக்கு மனோபலத்தைத் தர,
இறுதியில் தலை உயர்த்தி எம்பி..முழு சக்தியையும் பிரயோகித்து, கண்கள் மூடி, முக்கிக் கொண்டே, “ஆஆஆஆ” என்று கத்தினாள் அக்னிமித்ரா.
அவளது கத்தலின் பின்னர் ‘கீச்’ என்ற ஒலி கேட்டது.அது அவளது முதல் குழந்தையின் அழுகைச் சத்தம்.
அடுத்த ஐந்து நிமிடத்தில், அதைத் தொடர்ந்து இன்னுமொரு வீறிடல் சத்தம் கேட்க, வயிற்றிலிருந்த பாரம் முழுதாக அகன்றதும்,
தலையை தலையணையில் சாய்த்துக் கொண்டவள், தன் தனங்கள் ஏறி இறங்க, ஏகத்துக்கும் ‘மூசு மூசு’ என்று மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய இருட்டு உலகின் இன்னுமிரண்டு ஒளி நிலவுகள்!!
குழந்தைகளின் அழுகைச் சத்தம்.. இதுவரை அவள் அனுபவித்த வலியையெல்லாம் தூசு போல ஆக்கியிருந்தது.
அவள் மார்பில் கிடத்தப்பட்ட குழந்தைகளின் வெற்றுமேனி உரச, அவள் குருட்டுக் கண்களிலோ தாரை தாரையாகக் கண்ணீர்!!
“ரெண்டுமே பெண்.. குழந்தைங்கஹ்”-மனைவியின் காதருகில் குனிந்து, உணர்ச்சி மல்க கிசுகிசுத்தான் அதிமன்யு.
குழந்தைகளின் அழுகை சத்தமோ.. தாயின் இதயத்துடிப்பு கேட்டதும் நின்றது. ஆனால் அவள் அழுகையோ நிற்க அதிக நேரமானது.
இரு குழந்தைகளையும் மாறி மாறி கைகளில் ஏந்திக் கொண்டவள், தட்டுத் தடுமாறி அவைகளின் குட்டி வதனம் நோக்கி, தன் கன்னம் கொண்டு சென்று அணைத்துக் கொண்டாள்.
“இது நம்ம குழந்த அதீஈஈ!! .. இது நம்ம குழந்தை”என்றவளின் கன்னங்கள் குழந்தை கன்னங்களை அரவணைத்துக் கொண்டது.
தன் பிஞ்சு இதழ்களில் மென்மையாகப் பதிந்த தாயின் மூக்கை, தாயின் மார்பென்று எண்ணிக் கொண்டதுவோ பிஞ்சு மதலையும்??
அவள் மூக்கு நுனியை அது சப்ப, அவள் ஆனந்தக் கண்ணீர் இரட்டிப்பானது.
அவளுடைய கைகள் குழந்தைகளின் மேனியில் ஊர்ந்து.. அவற்றை உணர்ச்சிப் பூர்வமாகத் தொட்டுப் பார்த்தது.
அதன் நுதலோரம் வளர்ந்திருக்கும் பூனைமுடி, அதன் சரும மென்மை.. குட்டி இதழ்கள்.. கழுத்து, உடல், சின்ன விரல் கொண்ட பாதங்கள் என ஒன்று விடாமல் தொட்டுப் பார்த்தவளுக்கு,
இந்த அரும்பொக்கிஷங்களைக் காண பார்வை இல்லையே என்ற ஏக்கம் பிறந்தது.
அவள் முகம் பார்த்து உணர்ச்சிகளை எடை போட்டவனுக்கும், அவள் ஏக்கம் கவலையைக் கொடுக்க.. மனைவியை நெஞ்சோடு ஆரத்தழுவிக் கொண்டான் அதிமன்யு.
“செத்துப் பொழைச்சிட்டேன்..நீயும், நம்ம குழந்தைங்களும் பாதுகாப்பா என்கிட்ட வரும் வரை.. நான் நானா இல்லை போதும்.. இன்னும் இரண்டு வருஷத்துக்கு அப்புறம்.. அவங்களை நீ கண்ணார பார்க்கலாம்…”என்றவனின் பிடி நொடிக்கு நொடி இறுகியது.
அவளது கன்னங்களை இரு கைகளாலும் ஏந்தியவன், நெற்றி, மூக்கு, நாடி, இதழ்கள் என மொத்தம் விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தவர்களின் காதல் கண்டு, கண் கலங்கிப் போயினர் டாக்டரும், தாதிமார்களும்.
இக்கட்டான நிலையில் நடந்தேறிய, தெய்வாதீனமான சுகப்பிரசவம் என்பதால்.. அவளும், குழந்தைகளும் தனியறைக்கு மாற்றப்பட்டனர்.
மனைவியும், குழந்தையும் நலமென்றதும் மீண்டும் தன்னுள் ஆயிரம் யானை பலம் வந்தது போல உணர்ந்தான் அதிமன்யு.
“கங்கிராட்ஸ் மச்சி.. நீ அப்பாவாகிட்ட”என்று கட்டியணைத்த விக்கிக்கு மறுபதில் சொல்லக் கூட நாவெழவில்லை அவனுக்கு. அந்தளவுக்கு உடல் முழுவதும் உணர்ச்சிப் பரவசம் எழுந்து அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.
நண்பனை மேலும் கீழும் ஆராய்ந்தவன், அவன் கால் பகுதி டெனிமிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்ட விக்கி, பதற்றத்துடன்,
“மச்சி… இரத்தம் வருது பாரு..”என்று சொல்ல, அப்போது தான் குனிந்து தன் இடதுகால் பகுதி டெனிமை சற்றே உயர்த்திப் பார்த்தான் அதிமன்யு.
அவனது ஆடுதசைக்கால்களில் அடிபட்டதில் கிழிந்து, இரத்தத்தோடு வெண்தசைத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிமன்யு அசால்டாக நிற்க, விக்கி தான் பதறிப் போனவனாக வாய் திறக்கலானான்.
துயிலும் குழந்தைகளைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த மித்ரா, விக்கியின் மொழி கேட்டு அரண்டு போனாள்.
“என்னாச்சு? பேபி என்னாச்சு?” என்று அவள் பதற, அவளுக்கு பதில் சொல்லப் போன விக்கி வாயைப் பிடித்து பொத்தியவன்,
இயன்றவரை சாதாரண குரலில், “ஒண்ணுமில்லைமா.. ஒண்ணுமில்லை..நீ குழந்தைங்கள கவனி.. சின்ன காயம் தான்.. நான் போய் கழுவிட்டு வந்துர்றேன்”என்றவனாக,
விக்னேஷை வெளியே அழைத்து வந்த பின்னரேயே, அவன் வாயை விடுவித்தான் அதி.
“டேய் அவளே குழந்தைங்க முகத்தைப் பார்த்த சந்தோஷத்துல இருக்கா…அவக்கிட்ட போய் இந்த மேட்டர சொல்ற..? நீ அவளுக்கு ஒண்ணும் சொல்லத்தேவையில்லை..கொஞ்சம் அடக்கி வாசி”என்று கடிந்து கொண்டவன், விக்கி உதவியுடனேயே மருந்து போட சென்றான்.
கிழிந்த தசைக் காயத்துக்கு கணவனுக்கு இரண்டு தையல் போடப்பட்டது கூட தெரியாமல், அழுத குழந்தைகளுக்கு தாய்மை உணர்ச்சி மகிழ்ச்சியைக் கொடுக்க.. பால் கொடுத்துக் கொண்டிருந்தாள் அதிமன்யுவின் மனைவி.
எங்கேயும் காதல்!
[15]
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு,
அதிமன்யு வீட்டின் கொல்லைப்புறத்தில் கட்டப்பட்டிருக்கும் தண்ணீர்த்தொட்டியின் எதிரே இருந்த கல்லில்.. ஊர் எல்லையில் இருக்கும் ஐய்யனார் சிலை கணக்காக அமர்ந்திருந்தான் அதிமன்யு.
வெற்று மார்புடன்.. இடுப்புக்கு கீழே ஓர் வெள்ளை வேஷ்டியுடன், முழங்கால்களிற் உள்ளங்கை வைத்து அவன் அமர்ந்திருந்தாலும் கூட.. அதிலும் ஓர் கம்பீரம் மிகுந்திருந்தது.
அவன் பின்னால் நின்று கொண்டு, தலைவனின் உச்சந்தலையில்.. சூடு தணிய நல்லெண்ணெய் ஊற்றி ‘மஸாஜ்’ செய்து கொண்டிருந்தாள் அக்னிமித்ரா.
மனைவியின் மென்மையான கைவிரல்களின் ஸ்பரிசத்தில்.. உடலின் வெம்மை கண்கள் வழியாக வெளியேறிக் கொண்டிருந்ததாலோ என்னவோ? விழிகள் இரண்டும் அளவுக்கதிகமாகவே சிவந்து வீங்கிப் போயிருந்தது.
உச்சந்தலை தேய்த்த அக்னிமித்ராவின் விரல்கள்.. மெல்லக் கீழிறிங்கி.. அவனுடைய திண்ணிய தோள்புஜங்கள் தேய்க்க, அதன் ஏற்ற இறக்கங்களை தொட்டுணர்ந்தவளுக்கு..
தன் ஆணழகனை நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் பெருமை மீதூறியது.
‘இந்த அழகன் என்னவன்’ என்ற பெருமையும் தோன்றியது.
தோள்புஜங்களை அடுத்து, அவள் கைகள் வலப்புறக்கைச்சந்தினை தேய்க்க… அவள் முகம் சரியாக தலைவனின் கன்னங்களுக்கு அருகே வந்தது.
அவளுடைய அலைஅலையான கூந்தல்.. மல்லிகைச் சரம் போல விழுந்தது தலைவனின் தோள் மீது!!
கூந்தலின் ஸ்பரிசத்தில் தலை திருப்பிப் பார்த்தவனின் கண்ணெதிரே.. முத்தம் போடச் சொல்லித் தூண்டும் கன்னம் இருக்க,
நிமிடமும் தாமதியாமல் தன் கரங்கள் கொண்டு சென்று, அவள் கழுத்தை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுத்து,
தன் அழகு மனைவி கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தான் அதிமன்யு.
அவனது அதிரடி முத்தத்தை சற்றும் எதிர்பாராதவள், ஒரு கணம் மூச்சு உள்ளிழுத்து ஸ்தம்பித்து நின்றவள், அடுத்த கணம் செல்லமாக ஓர் அடி அடித்தாள் கணவனின் தோள் புஜத்திற்கு.
பின்பு கொஞ்சம் சிணுங்கும் குரலில், “பேபி.. என்ன பண்றீங்க? .. ரெண்டு குழந்தைங்க பொறந்தாச்சு.. இன்னும் ஆசைவிட்டுப் போகலையா?”என்று கேட்க, கலகலத்துச் சிரித்தான் அதிமன்யு.
அவன் சிரிப்பின் நாதம்.. பெண்ணவளுக்கு ஏனோ கிளர்ச்சி ரசத்தை மூட்டுவதாகவே இருந்தது.
மனைவியின் அழகு முகத்தை திகட்டத் திகட்டப் பார்த்த வண்ணமே,
“நாமென்ன ரொம்ப ஓல்ட் கப்பிள்ஸா என்ன? .. ரெண்டு குழந்தைங்க பொறந்ததுக்கு அப்புறமும்.. உடம்பு இப்படி கின்னுன்னு இருந்தால்.. ஆசை முளைக்கத்தானே செய்யும்? அதுல என் தப்பு எதுவுமேயில்லை.. ஆசைக்காட்டுற பாரு.. உன் தப்புதான் எல்லாமே” என்றவன்,
சேலையூடு தெரியும்.. வெண்மையான இடையில் கை வைத்துத் திருப்பி.. தன் மீசை கூத்தும் அதரங்களால் முத்தம் வைக்க,
அவன் மீசை தந்த குறுகுறுப்பில் கூச்சம் தாளாமல் கண்கள் மூடி நெளிந்த வண்ணம் சிரித்தாள் அக்னிமித்ரா.
பார்வையற்ற பெண் சிரிப்பதை அவன் அண்ணாந்து இரசித்துக் கொண்டிருந்த வேளை, உள்ளே கொல்லைப்புற வாசலிலிருந்து கேட்டது..
அவர்களின் ஒன்றரை வயதான வாண்டு.. அனன்யாவின் குரல்!!
“ப்பாஆஆ”என்று கத்தும் அவள் குரல்!!
அதிமன்யுவின் இருமலர்களுள் மூத்தவள் பெயர் அக்ஷயா.அது அவனது தாயின் பெயர்.
இளையவள் பெயர் அனன்யா.. அவனது தாரத்தின் தாயின் பெயர்.
இருவருமே பார்க்க தோற்றத்தில் தான் ஒன்று. ஆனால் குணத்தில் மாறுபட்ட சிகரங்கள்.
மூத்தவள் கொஞ்சம் அடாவடி. தாய் அக்னிமித்ரா போல. எதையும் உடனே செய்து விடும் ஆர்வமும், எண்ணமும் அவளிடம் அதிகம்.
ஆனால் இளையவள் கொஞ்சம் தந்தையைப் போல. கொஞ்சம் நிதானமும், பொறுமையும் இயல்பிலேயே அனன்யாவிடம் இருக்கத் தான் செய்தது.
மனைவியின் மெல்லிய இடையை சட்டென விடுவித்தவன், சத்தம் வந்த திசை நோக்க, ஆங்கே இடுப்புக்கு கீழே ஒரு ஷோர்ட்ஸூடன் மட்டும் நின்றிருந்தது அந்தக் குட்டி வாண்டு.
கழுத்தளவு மட்டுமே வளர்ந்திருந்த சுருண்ட சுருண்ட முடி காற்றில் ஆட, மழலைக் குரலில், “அப்பாஆஆ.. அச்சா (அக்ஷா) என்னை தள்ளி விட்ழாப்பா (விடுறாப்பா) ..என்னை சேட்டுத்த மாட்டேந்துழா.. (சேர்த்துக்க மாட்டேங்குறா) ”என்று கண்ணை கசக்கிக் கொண்டு சிணுங்க,
மனைவி மட்டும் கேட்கும் குரலில், “போச்சுடா.. திரும்பவும் வம்பையிழுத்து வைச்சிட்டாளா?”என்று தலையிலடித்துக் கொண்டு முணுமுணுத்தான் அதிமன்யு.
ஆனால் தாயான அக்னிமித்ராவுக்கு… குழந்தையின் செயலில் சிறு கோபம் மூள, பற்களைக் கடித்துக் கொண்டு,
“வ்வர வ்வர ப்பெரியவளுக்கு.. க்குறும்பு ரொம்ப அதிகமாயிருச்சு..அவளைய்ய்..”என்று, உள்ளே செல்லப் போன மனைவியின் முன்னங்கைப் பிடித்து தடுத்து நிறுத்தினான் அவன்.
குழந்தை மேலுள்ள கோபம் கணவன் மேல் திரும்ப, திட்டிவிட வாய் திறக்க முன்னம் வாய் திறந்த தலைவன்,
அவளது அதரங்களில் விரல் வைத்து ஒலியெழுப்பி, “உஷ்.. நான் பார்த்துக்கறேன்.. அப்படி குறும்பு பண்ணா தான் குழந்தை..விடு”என்று மனைவியை சமாளித்தவன்,
இளையவளை நோக்கி, “தோ.. அப்பா குளிச்சிட்டு வரேன்டா செல்லம்”என்று இரைந்தே சொன்னவன்,தொட்டிலில் தண்ணீர் வார்த்து தலைக்கு குளித்து விட்டு,
சட்டுப்புட்டென்று டவலை இடுப்புக்குக் கீழே கட்டிக் கொண்டு ஓடினான் சிணுங்கும் குழந்தையை தூக்குவதற்காக.
குழந்தைகளின் முறைப்பாட்டுக்காக.. சரிவர குளிக்கக் கூட நேரமில்லாமல் செல்லும் கணவனின் செயலை எண்ணி கவலை மீதூறினாலும், இன்னொரு பக்கம் அன்பும், மீதூறத் தான் செய்தது அவளுக்கு.
அனன்யாவைத் தூக்கிக் கொண்டு, ஹாலுக்குள் நுழைந்தவனின் நாசியை குப்பென்று நிறைத்தது மனைவி வழமையாக உபயோகிக்கும் “மல்லிகை மணம்”கொண்ட பாடிலோஷன் வாசம்!!
வீடு முழுக்க கண்களை சுழல விட்டுத் தேடியும் மூத்த வாண்டு அக்ஷயாவை மட்டும் காணவில்லை.
ஆனால் பாடிலோஷன் மணம் மட்டும் வீடு முழுவதும் கும்மென்று அடித்துக் கொண்டிருக்க, அவன் புருவங்கள் இரண்டும் மெல்ல சுருங்கியது.
கையில் ஏந்தியிருந்த அனன்யாவைப் பார்த்தவன், கிசுகிசுக்கும் மெல்லிய குரலில், “அக்ஷயா எங்கே?”என்று கேட்டதும் தான் தாமதம்.. தந்தையின் கைகளில் இருந்து நழுவி இறங்கினாள் அனன்யா.
தன்னுடைய பருத்த பின்னழகு குடுகுடுவென அழகாய் ஆட.. ஓடிச்சென்றாள்.. ஹாலில் போடப்பட்டிருந்த கேபினட்டின் குட்டி கபோர்ட்டை நோக்கி.
மூத்தவள் எங்கிருக்கிறாள் என்று தெரிந்ததும்.. கபோர்ட்டின் அருகே, தானும் குழந்தைகள் போல மண்டியிட்டவன், கபோர்ட்டைத் திறக்க,
அங்கே குறும்புக் கொப்பளிக்கும் விழிகளுடன்… நீட்டிய கால்களுக்கு இடையில் கைகளை கோர்த்த வண்ணம், அரவமேயெழுப்பாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் மூத்த வாண்டு.
தந்தையைக் கண்டதும் தன் அணில்க்குஞ்சு பற்கள் இரண்டு தெரிய.. “ஈஈ”என்று க்ளுக்கி சிரித்தாள் குழந்தை அக்ஷயா.
மேனியெங்கும் பால் எடுத்துக் கொட்டினாற் போன்று, தாயின் பாடிலோஷனில் மூழ்கி முக்குளித்திருந்தது குழந்தை.
அக்ஷயா உள்ளே அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டதும் குபீர் சிரிப்பு பீறிட்டது அவனுக்குள். தந்தை கடிந்து கொள்ளாமல் சிரிப்பது கண்டதும்,
அக்ஷயாவும் அச்சம் விலகி, வாயை மூடிக் கொண்டு போலிச்சிரிப்பு நகைக்க, அந்த நகைப்பின் கியூட்னஸில், ஆண்மகன் அவனுக்குள்ளும் தாய்மை சுரக்கவாரம்பித்தது.
அடுத்த கணம், மனைவியின் ஞாபகம் வர,குழந்தைக்காக கை நீட்ட, குழந்தையும் பாய்ந்து வந்தது தந்தையிடம். “ஐய்யைய்யோ… உங்க அம்மா பார்த்தா காலி…”என்று சொல்ல,
அங்கணம் பார்த்து உள்ளே வந்த அக்னிமித்ராவோ, “என்ன காலி?..அது என்ன திடீர்னு மல்லிகை வாசம்??.” என்று மூக்கினால் வாசம் பிடித்தவள்,
அடுத்த நொடி அது என்ன வாசம் என்று கண்டு கொண்டதும் அவளது குருட்டு விழிகள் அகல விரிந்தன.
இடுங்கிய புருவங்களுடன், “ வெயிட் ஐ நோவ் திஸ் ஸ்மெல்.. இது என் பாடிலோஷன்ல? அக்ஷயாஆஆ? அக்ஷயா திரும்பவும் என் லோஷன் எடுத்தாளா? எங்கே இருக்கா அவ?”என்று நடந்திருக்கும் திருகுத்தாளம் அறிந்து ‘தாம்தூம்’ என்று அவள் குதிக்க, குழந்தையோ பயத்தில் தந்தையின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டு.. தோளில் முகம் புதைத்துக் கொண்டது.
மனைவியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அந்த ஆறரையடி உயர ஆஜானுபாகுவான ஆண்மகன் விழி பிதுங்கி நிற்க, அந்த சூழ்நிலையை சமரசப்படுத்தும் ஆபத்பாந்தவனாக உள்ளே வந்தான் நண்பன் விக்கி.
முற்றத்தில் பைக்கை தரித்து விட்டு.. சுட்டு விரலில் பைக் கீயைப் போட்டு சுழற்றிக் கொண்டே உள்ளே வந்தவனுக்கோ உள்ளே கோரப்பசி எடுத்திருந்தது.
“என்ன தங்கச்சி… இன்னைக்கு என்ன சமையல்?”என்று வாய் திறக்கப் போனவனை பட்டென்று பிடித்து அமுக்கிய அக்னிமித்ராவின் கணவன்,
மனைவியை கண்களால் காட்டிக் கொண்டே, “அட வா மச்சி. கரெக்ட் டைமுக்கு வந்த!!..” என்றவன் குழந்தைகளை நோக்கி,
“விக்கி மாமா கூட.. பைக்ல ரவுண்ட் போய்ட்டு வர்றீங்களா..?”என்று கேட்க, சண்டை மறந்து உற்சாகமான குழந்தைங்களும், “போயாம்… போயாம்”என்று தலையாட்டி குதூகலிக்க,
குழந்தைகளை வலுக்கட்டாயமாக நண்பன் கைகளில் திணித்தான் அதிமன்யு.
குழந்தைகளையும், அதியையும் மாறி மாறி பார்த்த விக்கி, “நான் எப்போடா அப்படி சொன்னேன்?.. டேய் எனக்கு பசிக்குதுடா..!! நான் வேணாம் சாப்புட்டுட்டு இவங்களை ரவுண்ட்ஸ் கூட்டிட்டுப் போறேன்டா”என்று நிலைமை தெரியாமல் சொல்ல,
காதருகே வந்த அதிமன்யு,இரகசியம் பேசும் குசுகுசு குரலில், “டேய் நான் சொன்னதை செய்.. அப்படியே திரும்பி உன் தங்கச்சியை பாரு.. அக்ஷயா பண்ணி வைச்சிருக்குற வேலையில் மேல செம்ம காண்டுல இருக்கா.. ப்ளீஸ் அவளை இங்கே இருந்து கூட்டிப் போடா.. நீ ஒரு ரவுண்ட் போய் வர்றதுக்குள்ள இவளை சமாளிச்சி வைக்கிறேன்”என்று சொல்ல, இரு தம்பதிகளையும் மலங்க மலங்கப் பார்த்தான் விக்கி.
“எல்லாம் என் நேரம்!”என்று தலையடியத்துக் கொள்ளாத குறையாக முணுமுணுத்தவன், “வாங்க மாமா கூட ரவுண்டு போய்ட்டு வரலாம்..”என்று குழந்தைகளை அழைத்துச் செல்ல,
நடந்தது அத்தனையையும் கைகட்டி கேட்ட வண்ணம் நின்றிருந்தாள் அக்னிமித்ரா.
மனைவி சேலைத்தலைப்பை உரிமையோடு எடுத்து, ஈரம் சொட்டச் சொட்ட இருந்த கேசத்தை அவன் துவட்ட, அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாவிட்டாலும் ஏகத்துக்கும் முறைத்து வைத்தாள் அக்னிமித்ரா.
கோபத்தில் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக் கொண்டே, “உன்னால தான்டா குழந்தை வளர்க்க முடியலை..”என்று கடிந்து கொள்ள, ரொம்பவும் கூலாகவே பதில் சொன்னான் அதிமன்யு.
“விடு.. இந்த வயசுல அப்படி தான் இருப்பாங்க .. இது குழந்தைங்களை அதட்டுற காலம் கிடையாது.. குழந்தைங்கள அரவணைக்குற காலம்.. இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும்.. அப்புறம் இஷ்டம் போல அதட்டிக்க”என்று சொல்ல,
குழந்தை வளர்ப்பில் தன்னை விட பக்குவப்பட்ட கணவனின் செயல், அவன் பால் ஓர் தனி மரியாதையை உண்டு பண்ண,
கணவன் கையிலிருந்த சேலைத்தலைப்பை வாங்கி, காற்றில் கையிட்டுத் தேடி, அவன் கழுத்து வளைவைத் துலாவி அடைந்து,
அடாவடியாக தன்னை நோக்கிப் பிடித்திழுத்து, அவனை மார்புக்குழிக்குள் அடைக்கலமாக்கி, காதலுடன் தலையைத் துவட்டலானாள் அக்னிமித்ரா.
***
அன்றிரவு, அடுத்த நாள் காலை ரேடியோ ஸ்டேஷன் செல்வதற்கான ஆயத்தங்களை, இன்றிரவே செய்து வைத்து விட்டு, அவள் தன் அறைக்குள் நுழைந்த போது,
அந்தப் பரந்த கட்டிலில் அவனது கைச்சந்தினையே தலையணையாகக் கொண்டு, தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தனர் குழந்தைகள்.
மனைவி அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழ்ப்பாள் இட்ட போதே நாராசமான ஒலி எழ, திடுக்கிட்டு கண் விழித்த குழந்தை அக்ஷயாவின் விழிகள், கண்ணெதிரே தந்தையைக் கண்டதும் தான் ஆசுவாசம் எய்தி, மெல்லப் புன்னகைத்து விட்டு, மீண்டும் துயில் கொள்ளத் தொடங்கின.
குழந்தையின் முதுகை மெல்லமாகத் தட்டிக் கொடுத்துக் கொண்டே, மனைவியை நோக்கி ஹஸ்கி குரலில், “உஷ்.. சத்தம் போடாமல் வா.. குழந்தைங்க தூங்கிட்டாங்க..”என்றான் அவளுடைய ஆருயிர் கணவன்.
கணவன் சொல்லுக்கு இணங்கி அரவமே எழுப்பாமல் நடந்து வந்து மஞ்சத்தில் தலைவனின் இடதுபுறமாக அமர்ந்தவள்,
சற்று எம்பி, வலப்புறம் உறங்கும் குழந்தைகளை கையால் தடவிய வண்ணம், “ஓ.. தூங்கிட்டாங்களா?”என்றாள் மென்மையாக.
அவனுடைய பரந்த மார்பு அவளுக்காக என்றே மாத்திரம் என்ற ஓர் உரிமை தோன்ற, அவனது கழுத்து வளைவில் கையிட்டு அணைத்து முகம் புதைத்தவள், அப்புறமும், அப்புறமும் புரண்டு அவன் மேனியை வாசம் பிடித்தாள்.
அன்று அவனது வியர்வை மணத்துக்கும் மேலாக வேறொரு மணம் வருவது புரிய, சட்டென மூக்கைப் பொத்திக் கொண்டவள், “உன்கிட்ட ஏன் இன்னைக்கு டிஃபரண்ட் ஸ்மெல் அடிக்குது.. லைக் இன்க் ஸ்மெல்..??”என்று கேட்க,
அவனிடமிருந்து வெளிப்பட்டது ஓர் பாழும் பெருமூச்சு.
“அதைஹ் ஏன் கேட்குறஹ்?..நம்ம ரெண்டு பேபீஸூம், என் உடம்பெல்லாம் மார்க்கர் பென்னால் கிறுக்கித் தள்ளி விளையாடிட்டு.. டயர்ட்ல தூங்குறாங்க..”என்றபடி வாஞ்சையுடனும், ஆயாசத்துடனும் குழந்தைகளை நோக்கினான் அவன்.
கணவனின் மேனியெல்லாம் குழந்தைகளின் கிறுக்கல் சித்திரங்களா?
அகன்ற விழிகளுடன் அவர்களை நோக்கியவள், “ஐய்யோ போய் கழுவிட்டு வரலாமே…?”என்றவளாக முகம் சுளித்துக் கொள்ள, இவனோ மென்மையான குரலில்,
“வரலாம் தான்.. ஆனால் கையை எடுத்தா குழந்தைங்க முழிச்சிக்குவாங்க..அதான் ஆழ்ந்த தூக்கம் வர்ற வரைக்கும் அமைதியா இருக்கேன்”என்றவன், முகத்தில் சிறு சிரிப்பு மீதூற சொன்னான்,
“நம்ம அனு.. பெரியவளானதும் பெரிய ஆர்ட்டிஸ்ட்டா வருவா பாரேன்..”என்று.
பின்பு அவள் கையை எடுத்து, தன் மார்பு, வயிறு, இடை என சில இடங்களைச் சுட்டிக்காட்டி, “இது பூனைக்குட்டியாம், இது குருவியாம்.. இது நம்ம விக்கியாம்..”என்று சின்னவள் வரைந்த ஓவியங்களை எல்லாம் தொட்டுக்காட்டினான்.
குழந்தைகளின் கிறுக்கல் பிடித்திருந்தாலும், உள்ளே கொஞ்சம் இடிக்க, சட்டென கணவன் பிடியிலிருந்து கையை எடுத்துக் கொண்டவள், கறார்க்குரலில்
“ஆனால் எனக்கு அவள் டாக்டர் ஆகணும்..என்னை மாதிரி இருட்டிலேயே வாழ்ற பல குருட்டுப் பெண்களோட வாழ்க்கையில் வெளிச்சத்தை வரவைக்கணும்.. ”என்றாள் எதிர்பார்ப்புக்கள் நிறைந்த வதனத்தோடு.
மனைவியின் கோட்பாடு பிடிக்காமல், “விடு.. குழந்தைங்க என்னவாக ஆசைப்படணும்னு தோணுதோ.. அதுவா ஆகட்டும்.. நம்ம விருப்பங்களை திணிக்க வேண்டாம்.. அவங்க எதிர்காலத்துக்கு நாம தடையா இருக்கக் கூடாது.. உன் தாத்தா உன்னை உன் போக்குல விடலைன்னா நீ ஜர்னலிஸ்ட் ஆகியிருப்பியா..?”என்று கேட்க,
கணவன் உரைத்த ‘தாத்தா’ என்ற பெயரில், கடந்தகால நினைவுகளும், அந்தக் கொடியவனான தேவ்வின் நினைவுகளும் வந்து போக அவளது குருட்டுக் கண்கள் சிவந்தன வெம்மையில்.
அந்த இருட்டை வெறித்துக் கொண்டே சொன்னாள், “இருந்தும் என்ன பயன்? நாட்டில் நடக்குற அநியாயங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டணும்னு ஆசைப்பட்டேன்.. ஆனால் அறம் வெல்லும்ன்றது எல்லாம் பொய்.. பணம் பாதாளம் வரை பாயும் ன்றது தான் உண்மை..”என்று.
ஆசுவாசமாக இருந்த மனைவியை திரும்பவும் கொழுந்து விட்டெரியச் செய்து விட்டோமே என்ற பதைபதைப்பில் அவன் நிற்க அவள் தொடர்ந்து சொன்னாள்.
“இல்லைன்னா நான் தேடிய ஆதாரம்..இன்னொருவன் கைக்கு போயிருக்குமா? உண்மை இதுவரை உறங்கிட்டிருக்குமா? இல்லை, நான் திரட்டிய ஆதாரம்.. அந்த தேவ் கையால் அழிஞ்சிருச்சோ என்னவோ?”என்று சொன்னவளின் கண்கள் நீர் பனித்தது.
கணவனின் கையைப் பிடித்திருந்தவளின் பிடி.. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கமாக, நிர்மலமான குரலில், “எனக்குள்ள ஒரு நெருப்பு எரிஞ்சிட்டே இருக்கு.. என்னைக்குமே அழியாத நெருப்பு அது.. எப்போவுமே நீர்த்துப் போகாத நெருப்பு அது.. அந்த நெருப்பு எனக்குள்ள எரியுற வரை.. தேவ்வை என் கையால கொல்லணும்ன்ற வெறி இருந்துட்டு தான் இருக்கும்.. அது கண்டிப்பா நடக்கும்..”என்ற போது.. அதிமன்யுவின் கையினை அவள் ஏகத்துக்கும் இறுக்கி வைக்க, சுள்ளென்று வலித்தது அவனுக்கு.
இருப்பினும் அதைக் காட்டிக் கொள்ளாமல், மனைவியை நோக்கியவன்,
‘நான் உனக்கு வாக்கு கொடுக்கறேன்.. கண்டிப்பா தேவ்க்கு நான் தண்டனை வாங்கிக் கொடுப்பேன்..’என்று மனதுக்குள் கறுவிக் கொண்டவன், வாய் திறந்து வேறேதோ சொன்னான்.
அவன் வலிய கை, அவள் பிடரி மயிர் அளைய, ஆழ்ந்து உறங்கி விட்டிருந்த குழந்தைகளின் தூக்கம் கலையாமல், மறு கை அகற்றியவன், அவளை குழந்தை போல அணைத்துக் கொண்டான்.
அவனது ஏகாந்தமான குரலின் அழகு.. அதைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.
உயிர் உருக்கும் அழகிய குரலில்,
“சற்றுன் முகஞ்சிவந்தால் மனது
சஞ்சலமாகுதடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் எனக்கு
நெஞ்சம் பதைக்குதடீ!
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடீ!
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ”என்று படித்தவன், அவளுடைய நெற்றியில் முத்தம் வைத்தான்.
கணவன் முத்தத்தைக் கண் மூடி ஏற்றவள், கண்கள் திறந்த போது அவள் மனநிலை மாறியிருந்தது.
சற்றே எம்பி தலை தூக்கி, கணவனின் மூச்சு, தன் அதரத்தில் பட்டு மோத, “ஓ பாரதிப்பாட்டு?”என்று கேட்டவள், அவளும் அவனுக்காக ஓர் பாட்டுப் பாடினாள்.
தமிழ்மொழி உரைப்பதற்கென்றே தெளிவான குரலில், “கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே’ இது நாச்சியார் திருமொழி.. நான் பாடியது ஆண்டாள் கவலை.. கண்ணன் வாய்ச்சுவை எப்படியிருக்கும்னு பரிதவிச்சுப்போய்.. ஒரு காதல் பித்தி’ போல பாடியது.”என்று சொல்ல,
அவள் உபயோகித்த ‘பித்தி’ என்ற பதத்தில் விழிகள் இடுங்க போய்,
“பித்தி?” என்றான் புரியாமல்.
“ஆமா பித்தனோட எதிர்ப்பால் பதம்.. என் டிக்ஷனரியில் பித்தி..”- இலகுவான குரலில் மென்மையாகச் சொன்னாள் மித்ரா.
அதைக்கேட்டு வாய் விட்டே நகைத்தான் தலைவன்.
தலைவனின் சிரிப்பொலி கேட்ட சந்தோஷத்தில், “கடந்து வந்த இரண்டு வருடத்தில் வாழ்ந்த என்னோட வாழ்க்கையைத் திருப்பிப் பார்த்தால்.. எல்லாமும்மா நீ இருக்க.. குழந்தைங்களுக்கு பால்கொடுக்க மட்டும் தான் நானு.. அவங்களுக்கு அம்மாவா, அப்பாவா இருந்தது நீ தானே?.. நீ என் வாழ்க்கையில் வந்த வரம்”என்று பேசிக் கொண்டே இருந்தவளின் உதடுகளைக் காதல் உணர்ச்சிகள் அதிகமாக,
“நீ ரொம்ப பேசுறடீ”என்றவன், அதிரடியாகக் கவ்விக் கொண்டாள் அதிமன்யு.
அவனுடைய ஓர் கை.. அவள் இடை தாண்டி இறங்கி.. அவள் பின்னழகின் நீள, அகலங்களை ஆராய, மறுகையோ அவள் பிடரிமயிர்க்காட்டில் கையிட்டு அளைந்து கொண்டிருந்தது.
அவன் பரந்த மாரில்.. இவளது கொங்கைகள் இரண்டும் அழுந்துபட்டு புதுசுகம் கொடுக்க, அவளது இதழ்களில் கள் அருந்திக் கொண்டிருந்தான் தலைவன்.
அவன் மூச்சு… இவள் நுரையீரல் அடைய, நாவுகள் இரண்டும் அரவமேயெழுப்பாமல் பொருதிட்டுக் கொண்டிருந்தது காதல் தீவிரத்துடன்.
அவளது ஸ்பரிசம்.. வாசம்.. மென்மை, பஞ்சன்ன தனங்களின் சுகம் எல்லாமும் அவனை இன்னும் கள்வெறியேற்ற… அவன் கைகள் அவளுடலில் அழுத்தம் பிரயோகிக்க கண்கள் மூடி கிறங்கி நின்றிருந்தாள் மங்கை.
அவள் இதழ்களில் வழிந்த கடைசிச் சொட்டுநீரும் விடாமல் பருகியவன், காதலில் ஒரு மனநிலை அடைந்த நேரம், கிளர்ச்சியூட்டும் கண்களுடன் அவளைப் பார்த்துக் கொண்டே நகைத்தான்.
“ஏன் இப்போ சிரிக்குற?”-அவன் சிரிப்பதை உணர்ந்து கொண்டவள், அந்தச் சிரிப்பின் காரணம் புரியாமல் கேட்டாள்.
அவனது கைகள் இது என் உடைமை என்று கொஞ்சம் அத்துமீறி, அவள் இடையில் புகுந்து வருட, அவளைப் பார்த்துக் கொண்டே, “கண்ணு வரப்போறதை நினைக்கும் போதே கிளுகிளுப்பா இருக்கு..”என்றான்.
“இதுல என்ன கிளுகிளுப்பா இருக்கு??”என்று மீண்டும் அவள் புரியாமல் கேட்க, அவனோ அவள் காதுக்குள் நுனிமூக்கு நுழைத்தவனாக,
அவளை கிறக்கமூட்டச் செய்யும் ஹஸ்கி குரலில், “பேஸிவ் பார்ட்னரா இருக்குற நீ.. ஆக்டிவ் பார்ட்னர் ஆயிட்டா.. எனக்கு தானே போனஸ் போனேன்ஸா..?”என்று கேட்க,
“ச்சீ..”என்று அழகாக வெட்கப்பட்டு நாணப்புன்னகை சிந்தும் மனைவியைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு.
வெகுநேரம் உரையாடியதால் தண்ணீர் விடாய்த்திருக்க வேண்டும் அவளுக்கு. காய்ந்த இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டவள், சற்றே தலைவனை விட்டும் பிரிந்து,
தரையில் காலூன்றி எழுந்து கொண்ட போது.. அவளது இருட்டுத் திரையில் தோன்றும் சின்னச் சின்னக் குமிழ் வட்டங்கள் தாருமாறாக சுழலத் தொடங்க, அவளால் ஓரிடத்தில் பார்வையைப் பதிக்க முடியவில்லை.
‘விறுவிறுவென’தலையும் சுற்றவாரம்பித்தது.
கால்கள் தரையில் பாவாமல் போக, நெற்றியைப் பிடித்துக் கொண்டு மயங்கி விழயெத்தனித்தவளை,மஞ்சத்தில் இருந்து, மின்னல் வேகத்தில் எழுந்து வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான் அவன்.
அன்று ஓர் பேரதிசயமாக விழிகள் திறந்தவளுக்கு.. மங்கல் மங்கலாக ஓர் ஆணுருவம் தோன்ற.. தான் காண்பது கனவா? இல்லை நனவா? என்று அடையாளம் காண முடியாமல், விழிகளை மூடிக் கொண்டாள் அக்னிமித்ரா.
******
ஐசியூவிலிருந்து வரும் போதே தன் ஸ்டெதஸ்கோப்பை கழற்றி கழுத்தில் மாட்டிக் கொண்டே வந்த டாக்டரை, கண்களில் கவலையும், என்ன சொல்லக் கூடும் என்ற ஏக்கத்துடனும் பார்த்திருந்தான் அதிமன்யு.
கூடவே அவன் பக்கத்தில் நண்பன் விக்கி, ஆதரவாளனாக நின்றிருக்க, அவன் கையில் அடைக்கலமாகியிருந்தாள் குழந்தை அனன்யா.
மூத்தவளான அக்ஷயாவோ அதியின் கையில் அடைக்கலமாகியிருக்க.. குழந்தையை அநாயசமாகத் தூக்கியிருந்த வீரன், மனதளவில் அந்தக் குழந்தைகளை விடவும் பலவீனனாக இருந்தான்.
குழந்தைகளோ தாய்க்கு என்ன தான் நடந்தேறியது என்று புரியாமல் தந்தையினதும், விக்கியினதும் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டு, சோர்வடைந்த முகத்துடன் இருக்க, அதுவும் வேறு கவலையைக் கொடுத்தது அவனுக்கு.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, மித்ராவின் விழிகளைப் பரிசோதித்த அதே டாக்டர்.
ஐசியூவை விட்டு வெளியே வந்தவருக்கு.. இந்த விஷேசத் தம்பதிகளே அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியவில்லை போலும்.
அதிமன்யுவின் பெயரை இப்போதும் கூட நன்றாகவே ஞாபகம் வைத்திருந்தார்.
தன்னறையை நோக்கி நில்லாமல் நகர்ந்து கொண்டே, “மிஸ்டர். அதிமன்யு.. உங்க வைப்க்கு சீக்கிரம் ஆபரேஷன் பண்ணியாகணும்..இதுக்கு மேலேயும் தாமதிச்சோம்னா..அவங்களுக்கு பார்வை கிடைக்கக் கூடிய வாய்ப்பு வீதம் முற்றிலும் இல்லாமப் போயிடும்.. இப்போ அவங்க பாடியை டெஸ்ட் பண்ணிப் பார்த்ததில்.. ஷி இஸ் ஹெல்தி இனாஃப் டு ஹேவ் த ஐ ட்ரான்ஸ்ப்ளேன்ட் சர்ஜரி..நீங்க பணத்தைக் கட்டினீங்கன்னா.. மூன்று நாளில் ஆபரேஷன் பண்ணிரலாம்.. ஐ டோனர் ஓல்ரெடி எங்க கிட்ட இருக்காங்க.. நீங்க பணத்துக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க.. க்குவிக்.. டோன்ட் பி லேட்.. ”என்றவர், அதிமன்யுவின் முதுகுதட்டி சொல்லி விட்டுச் செல்ல,
அதிமன்யு நின்ற இடத்திலேயே நின்று யோசிக்கலானான்.
இந்த ஒன்றரை வருடத்தில் கண்மாற்று சத்திரசிகிச்சை செய்யும் பணம் பதினேழு இலட்சத்தில் இருந்து.. இருபத்தைந்து இலட்சத்திற்கு உயர்ந்திருந்தது. கூடவே மருத்துவக்கட்டணம் எல்லாம் சேர்த்து, ஏறத்தாழ முப்பது இலட்சம் தேவை என்று கணக்குப் போட்டவன் விழிகள் ரொம்பவும் தீவிரம் எய்திருந்தது.
அவன் அருகிலேயே நின்றிருந்த விக்கி…இலேசாக அதிமன்யுவின் தோளில் கை வைக்க, அப்போது தான் சிந்தனாவுலகத்திலிருந்து வெளியே வந்தான்.
அதியைப் பார்த்த விக்கி, கவலை ஊறும் குரலில், “என்ன மச்சி யோசிக்குற? பணத்துக்கு என்ன பண்றதுன்னா?”என்று கேட்க, மறுப்பாகத் தலையாட்டியவன், வேறு ஏதோ சொன்னான்.
“இல்லைடா.. திரும்பவும் கலம்போ போகணும்னு யோசிக்குறேன்..”
நண்பனின் தோளில் மீண்டுமொருதரம் ஆதரவாக கைவைத்தவன், அதியின் தோய்ந்து போன முகம் காணப் பிடிக்காமல் உறுதியான குரலில் சொன்னான்,
“உனக்குப் போக பிடிக்கலைன்னா விடு.. நாம நம்ம வீட்டை வித்துரலாம்”என்று.
விக்கி சொன்னதில் அவ்வளவாக கவனம் பதியாதவன், வெடுக்கென்று நிமிர்ந்த போது.. அவனில் பலவித எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தது.
“இல்லை.. நான் கொழும்பு போகணும்!!!! .. திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் ஒண்ணு பாக்கியிருக்கு..”என்று வைராக்கியம் மிளிரும் கண்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் விழித்திரையில் வந்து போனான் மனித உருவில் இருக்கும் அரக்கன் “தேவ்”.
அந்த கணம் அரக்கப் பறக்க அவ்விடம் வந்து சேர்ந்தாள் மித்ராவின் தோழி கலா.
பார்வையற்ற தோழி மேல் ஏகத்துக்கும் அனுதாபம் வைத்திருப்பவளாயிற்றே அவள்??
மித்ரா மயங்கி விழுந்த விஷயத்தை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
“மித்ராவுக்கு என்னாச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க அதிமன்யு..?”என்று அவள் பரபரப்புடன் கேட்க, அதிமன்யு அதற்கு பதில் சொல்லும் நிலையில் இல்லை.
விக்கி தான் டாக்டர் கூறியவற்றையெல்லாம் தன் பாணியில் தொகுத்துக் கூறி, கலாவுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க,
கையில் இருந்த குழந்தையை ஏதோ ஒரு யோசனையுடன் கலாவிடம் ஒப்படைத்தவன், “நான் வரும் வரை பார்த்துக்குங்க..நாளை காலையில் வந்துடறேன்”என்று விக்கியையும், கலாவையும் பார்த்துக் கூறியவன், நிமிடமும் தாமதியாமல், ஐசியூவை நாடிப் போனான்.
அங்கே கையில் ட்ரிப்ஸ் குழாய் ஏற்றப்பட்டு, மூக்கில் ஓக்ஸிஜன் மாஸ்க்குடன்.. கருவளையம் முளைத்த கண்களுடன், சுயநினைவேயின்றிப் படுத்திருந்தாள் அக்னிமித்ரா.
மனைவியைக் கண்டதும் அவள் முன்னிலையில் அழக்கூடாது என்ற மனவுறுதி தளர்ந்திருக்க, அவனது கண்களில் தாரை தாரையாக வழிந்தது நீர்.
அவளது கைகளை வருடிக் கொடுத்தவன் காதோரம் “உனக்கு ஒண்ணுமில்லைமா..சீக்கிரமே ஆபரேஷன் நடக்கப் போகுது..கொழும்பில் என் தாத்தாவுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கு.. அதை விற்க முன்னேற்பாடு பண்ணது தான்.. இப்போ சீக்கிரமே விற்க வேண்டியதாயிருக்கு.. நான் பணத்தோட வரேன்..”என்று சொன்னவன், இன்னுமொன்றும் சொன்னான்.
“நீ கண்ணு முழிக்கும் போது… அத்தனை சாவுக்கும் நீதி கிடைச்சிருக்கும்”என்று.
அவன் நெற்றியில் ஆழமாக முத்தமிட்டவன், அவளை விட்டும் வெளியே வந்து.. விழிகளைத் துடைத்துக் கொண்டான்.
பல வருடங்கள் கழித்து மீண்டும் அவன் கால்கள் கொழும்பில் பதியும் நிலையும் வந்தது. யாரைப் பார்க்கக் கூடாது என்று வெறுத்தானோ அந்நபரின் முகத்தைக் காண வேண்டிய தருணமும் ஏற்பட்டது. அந்நபரின் சந்திப்பு அவன் வாழ்க்கையையே திருப்பிப் போடவும் செய்தது.
very intersting super sis
அதி மன்யு தம்பி தேவ் ஆ இருக்கும்
👌👌👌👌👌👌👌👌👌👌👌
Avanga appavoda 2nd wife paiyan tha dev ah irukumo
Super sis 💞