எங்கேயும் காதல்!
[16]
தன்னுடைய ப்ளேசருடன் அணிந்திருந்த போவ்வை, கண்ணாடி முன் நின்று, சற்றே கழுத்தை உயர்த்தி சரி செய்து கொண்டிருந்தான் தேவ்.
அவனைச் சுற்றி இருந்த செல்வ வனப்பில் அவன் முகம் சற்றே புஷ்டியாகிப் போயிருந்தாலும் கூட, அவன் இதழ்களோ ரொம்ப காலமாக அவன் கடைப்பிடிக்கும் புகைப்பழக்கம் காரணமாக கன்னங்கரேர் என்று கறுத்துப் போயிருந்தது.
சிவப்பு நிறத்தில், ரொம்பவும் செக்ஸியாக, உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் மிடி அணிந்து,
நாற்காலியில் அமர்ந்து, ஒரு கையில் வைனும், மறு கையில் ஐஃபோனும் என செல்லில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள் தேவ்விற்கேற்ற ராட்சசி நடாஷா.
போவ்வை சரி செய்தவாறு, கண்ணாடியில் விழுந்த நடாஷாவின் விம்பத்தைப் பார்த்த தேவ், கண்களில் ஓர் கவலையுடன், “டுடே ஐ டூ நாட் பீல் வெல்.. ஏனோ என் மனசே சரியில்லாத மாதிரி இருக்கு..”என்றான்.
அத்தனை உயிர்களைக் கொன்று குவித்தவனுக்கு.. மன நிம்மதி என்பது எங்கணம் இருக்கும்?
அந்த உயிர்களின் உறவுகள் விட்ட கண்ணீரும், அவர் பட்ட துன்பங்களும் அவனை நிழல் போலல்லவா துரத்திக் கொண்டிருக்கும்?
செல்லையும், வைன் கிளாஸையும் மேசை மீது வைத்து விட்டு, தன் சிற்றிடை அப்புறமும், இப்புறமும் ஒயிலாக ஆட ஆட நடந்து வந்தவள்,
தேவ்வின் முதுகில் தன் தனங்கள் அழுத்தி நின்று அவன் புறங்கழுத்தோடு கையிட்டு அணைத்தவாறு, காதோரம் கிசுகிசுத்தாள்,
“வை பேப்? .. சில்!! ஸ்ரீலங்காஸ் ரிச்செஸ்ட் பிஸினஸ்மேனுக்கு கவலையா? இன்னைக்கு நைட்.. பார்ட்டி பண்ணலாம்.. நீயும், நானும் மட்டும்!! இட் வில் சேன்ஞ் யோர் மூட் ஃபோரெவர்..”என்று.
அவள் குரல் தந்த மயக்கத்துக்கும் மேலாக, சதாவும் வைன் குடித்துக் கொண்டே இருப்பவளிடமிருந்து வந்த ஒருவகையான நெடி..மூக்கை சுளிக்க வைக்க, அவனால் அவளிடம் முன்பு போல இழைய முடியவில்லை.
அவன் உடல் இறுகி விறைக்கவே, ஒரு கையை பேன்ட் பாக்கெட்டினுள் இட்ட வண்ணம் நின்றவன் மறந்தும் கூட மூச்செடுக்கப் பிரியப்படவில்லை.
மூச்செடுத்தால் தானே அந்தக் குடிகாரியிடமிருந்து வரும் போதை நெடியை அவன் முகர வேண்டி ஏற்படும்?
தன்னில் படர்ந்த கையை எடுத்து விட்ட ஆண்மகன், ட்ராயர் மீதிருந்த தன் ரோலெக்ஸ் வாட்ச்சை மணிக்கட்டில் கட்டியவாறு, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
“பேப்.. ஐ காட் டு கோ.. ஈவ்னிங் வந்து மீட் பண்றேன்”என்றவனாக தன் அழுத்தமான காலடிகளை எடுத்து வைத்து.. அவன் தன்னுடைய பிரம்மாண்ட அறையை விட்டும் நகர்ந்தவனின், பின்னால் திடுக்கென்று கேட்டது அவள் குரல்.
“அப்போ பார்ட்டீஈ?”- இரு கரங்களையும் காற்றில் விரித்தவளாக, தோள் குலுக்கிக் கேட்டாள் அவள்.
“உன் இஷ்டம் போல பண்ணிக்க!!” என்று அவளைத் திரும்பிப் பாராமல் இரைந்த குரலில் கத்தியவன்,
‘இப்போ ஆளை விடுடி’என்பது போல மாடிப்படிகளை இரண்டிரண்டாகக் கடந்து வீட்டு வாசற்படியைத் தாண்டி போய்க் கொண்டிருந்தான்.
தேவ்விற்கு இப்போதெல்லாம் மனைவி நடாஷா மேலிருந்த மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி..அவன் நாட்டமும், மனமும், உடலும் தன்னுடைய புது பிஏ சரண்யா மீது பாயத் தொடங்கியிருந்தது.
பிஏ சரண்யாவும் அவனுடைய ஆசைக்கும், ஆண்மைக்கும் ஏகமனதாக, அதேசமயம் அமோகமாக ஒத்துழைக்க, நடாஷா இப்போதெல்லாம் கசக்கத் தொடங்கியிருந்தாள் அவனுக்கு.
ஆனால் நடாஷாவை இன்னும் அவன் தூக்கியெறியாமல் இருக்கக் காரணம்.. அவளது தந்தை, அவனுடைய ஆலோசகர், அவனுடைய தாய்மாமன், என பல பரிணாமங்கள் கொண்டு மிளிரும்.
தன்னுடைய பிரம்மாண்டமான தலைமை அலுவலகத்தில், தன்னறைக்குள் நுழைந்தவனை, மதி மயக்குவதற்காகவென்றே, தன் கொங்கைகளை அதிகமாக எக்ஸ்போஸ் செய்யும் ஒரு வகையான ஷோர்ட் கவுன் அணிந்த வண்ணம் காத்திருந்தாள் அந்தப் பரத்தைப் பெண் சரண்யா.
முன்பு திருமணத்துக்கு முன்பு நடாஷாவைக் கண்டதும், அவன் இதழ்கள்… அவளிதழ்களை எவ்வாறு தாபத்துடன் கவ்விக் கொள்ளுமோ,
அதே போல சரண்யாவைக் கண்டதும், அவளிதழ்களை அடாவடியாக இழுத்து உறிஞ்சத் தொடங்கியது தேவ்வின் முரட்டு அதரங்கள்.
அதற்குப் பின் அங்கே அலுவலக அறை.. கலவி அறையாக உருமாற, நடாஷாவிடம் தீராத ஏக்கத்தையெல்லாம் சரண்யா மூலம் தீர்த்துக் கொள்ளத் தயாரான தேவ்.. இன்னும் இன்னும் மோசமானவனாக மாறிப் போனான்.
இப்படி மோசமான சூழ்நிலையில் போய்க் கொண்டிருந்த தேவ்வின் வாழ்க்கையை.. இன்னும் மோசமாக்க.. இக்கட்டான நிலைக்குத் தள்ள, கொழும்புக்கு வந்து சேர்ந்தான் அதிமன்யு.
***
எங்கும் இருள் சூழ்ந்த மாசிப்பனி அடர்ந்த ஓர் அமைதியான இரவு அது!!
அந்த இரவுக்கு ஒத்துழைக்கும் வண்ணம் அமைதியாக இருந்தது தேவ்வின் வீடு.
அந்த வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த நீண்ட மதில்ச்சுவரை அநாயசமாகத் தாண்டிப் பாய்ந்து, காவலாளர்களும் மற்றும் ஊழியர்களும் அறியா வண்ணம், வீட்டுக்குள் நுழைய முற்பட்டது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கறுப்பால் மூடிய நிஞ்சா போன்ற ஓர் உருவம்!!
அந்த உருவம் இருளோடு இருளாக ஒன்றி.. பின்பக்க பால்கனிச் சுவர் ஏறி, அங்கிருந்த சாளரம் வழியாக அறைக்குள் நுழைந்தது.
அவ்வுருவம் சாட்சாத் அதிமன்யுவே தான். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வந்திருக்கும் அதே அதிமன்யு.
அறையெங்கிலும் இருட்டாக இருக்க.. வீட்டைச்சுற்றி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த தூண்விளக்கிலிருந்து வந்து கொண்டிருந்த ஒளி..
சிறிதாக அவ்வறைக்கும் ஈயப்பட்டுக் கொண்டிருந்தது.
அவ்வொளியில் அவனது கண் முன்னே முழங்கால்வரை தெரியும் அளவுள்ள ஓர் புகைப்படம் சுவரில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு,
அப்புகைப்படத்தில் இருக்கும் நபரைக் கண்டதும் உடம்பில் சுருசுருவென்ற கோபம் பொங்கலானது.
வெள்ளை நிற கோர்ட் சூட்டில்.. கையைக் கடித்த எறும்பைக் கூட கொல்ல மனம் வராத ஓர் வெள்ளந்தியான வதனத்துடன் நின்றிருந்தான்,
பல நூற்றுக்கணக்கான உயிர்களை அநியாயமாக, தன் சுயநலத்துக்காக கொன்று குவித்த நரகாசுரன் தேவ்.
அவனைக் கண்டதும் அதிமன்யுவின் திடகாத்திரமான உடலின் தோள்புஜங்கள் இரண்டும்.. அவன் விட்ட கோபப் பெருமூச்சில் தாருமாறாக ஏறி இறங்கத் தொடங்கியிருந்தது.
கைகள்.. தேவ்வின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல ஒருவித ஆவேசத்துடன் நடுக்குறத் தொடங்கியது.
புகைப்படத்தில் பார்த்ததற்கே இப்படியென்றால்.. அவனை நேரில் கண்டிருப்பின் தேவ்வின் நிலை?
நிச்சயம் பரிதாபத்துக்குரியதாகவே இருந்திருக்கும்.
அவனுடைய ஸ்கேன் செய்யும் கண்கள் அவ்வறையை முற்றிலும் சோதனையிட,
அதிமன்யுவின் கால்கள் அரவமே எழுப்பாமல் ஆயினும் விரைவாக அங்கிருந்த வோட்ரோப்பை நாடிப் போயின.
வோட்ரோப்பின் கதவுகளைத் தன்னிரு கைகளாலும் சத்தமின்றி திறந்தவன், அதற்குள் எதையோ தேடவாரம்பித்தான்.
வோட்ரோப்பின் பற்பல டிராயர்களை இழுத்து இழுத்துத் திறந்தவன் கைகள்.. அதற்குள் நுழைந்து எதையோ துலாவியது.
அவன் நாடி வந்த பொருள் எங்கும் இல்லை. எங்கே அந்த தேவ் வைத்திருக்கக் கூடும் என்று தெரியவுமில்லை.
ஒருவேளை தன்னறையில் இல்லாமல் அலுவலகத்தில் வைத்திருக்கக் கூடுமோ? என்ற யோசனை எழ, தான் யாரும் அறியாமல் அவன் அறை புகுந்தது தவறு தானோ என்று கூட எண்ணம் வலுத்தது அவனுக்கு.
வாட்ரோப்பிற்கு எதிர்ப்புறமாக உள்ள குட்டி கபோர்ட் கண்ணில் பட.. விரைந்து அவ்விடம் செல்ல நேர்ந்தவனின் கால்கள் இடித்துக் கொண்டது தேவ்வின் மஞ்சத்தோடு.
கூடவே அவன் தன் வலியைக் கூட பொருட்படுத்தாமல், மஞ்சத்தின் கால்களை நோக்கிய போது.. மஞ்சத்தோடு இணைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான டிராயர்களைப் பார்த்தான்.
ஏதோ பொறிதட்ட அதைத் திறந்தவனுக்கு கிடைத்தது அவன் நாடி வந்த பொருள். அதுவொரு லேப்டாப்.
அதைக் கண்ட சந்தோஷத்தில் இருட்டு கூட அறியாமல் மெல்ல நகைத்துக் கொண்டவனின் கண்கள் அவ்விரவிலும் பளபளத்துக் கொண்டிருந்தது.
அவ்விடத்திலேயே தரையிலேயே அமர்ந்து லேப்டாப்பைத் திறக்க.. அது பாஸ்வேர்ட் வேண்டி நின்றது.
தேவ்வின் பாஸ்வேர்ட் இன்னதாகத் தான் இருக்கும் என்ற ஊகம் வைத்திருந்தவன்..துணிந்து நின்று அந்த பாஸ்வேர்ட் வார்த்தைகளை அழுத்த.. திறந்து கொண்டது லேப்டாப்.
அவன் மனம் உறுதியாக நம்பியது லேப்டாப்பில் அவன் தேடி வந்த ஆதாரங்கள் கட்டாயம் இருக்கக்கூடும் என்று. டச்பேட்டில் விரைவாக நர்த்தனமாடியது அவன் விரல்கள்.
அவன் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் பல.. அவனுக்கு பாக்கியிருந்தது. அவற்றையெல்லாம் நிதானமாக செய்யும் அளவுக்கு பொறுமை தான் அவனிடமில்லை.
பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்கும் நேரமும் இதுவல்ல என்று அவனும் அறிந்தே தான் வைத்திருந்தான்.
ஒவ்வொரு ஃபோல்டராக அவன் ஸ்க்ரோல் செய்து கொண்டே போகும் போது தான் கண்களில் தடுக்கியது அந்த ஃபோல்டர்.
அவனுக்கு வேண்டிய.. தேவ்வைக் கவிழ்ப்பதற்கு உதவும் ஆவணங்கள் நிறைந்த ஃபோல்டர் அது!!
அந்த லேப்டாப் ஃபோல்டரில் இருந்த ஆவணங்களுக்கு மேலதிகமாக,
மித்ராவின் இறந்து போன தாத்தா ப்ரோபஸர் ராஜாராம்மிற்கு, இவன் தாத்தா எழுதிய உத்தியோகபூர்வ கடிதமொன்று இருப்பதையும் கண்டவன் அதிர்ந்து போனான்.
அதிலிருந்த பல உண்மைகள் அவனை மூச்செடுக்கக் கூட விடாமல் கட்டிப்போடச் செய்தது. உலகமே அறிந்திராத ஓர் மாபெரும் இரகசியம் அதில் ஒழிந்திருப்பதைக் கண்டவனுக்கு,
தான் கண்டெடுத்த ஆவணங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக உலகத்துக்கு அம்பலப்படுத்தும் உத்வேகமும், வெறியும் பிறந்தது.
நிமிடமும் தாமதியாமல் தடதடவென தன் மெயில் ஐடியை அந்த லேப்டாப்பில் ஓபன் செய்து, அந்த ஃபோல்டரை தன் மெயிலுக்கு அனுப்பிக் கொண்டிருந்த வேளை தான்,
அவனே எதிர்பார்த்திராத அந்த சம்பவம் நடந்தேறியது.
அந்த அறையின் மோட்டுவளையின் நடுமத்தியில் மாட்டப்பட்டிருந்த சரவிளக்கு பட்டென ஒளிர்ந்தது. அதைக் கண்டதும் அதிமன்யுவினுள் ஓர் திடுக்கம் உடலெங்கும் எய்திப் பரவ,
மஞ்சத்தின் விளிம்பெல்லையில் கண் வைத்துப் பார்த்தான் வந்தது யாரென்று.
போதையில் தள்ளாடிய வண்ணம் வந்ததுவோ தேவ்வின் சொப்பன சுந்தரி நடாஷாவே தான்.
அவள் தன்னைக் கண்டு கொள்ளவில்லையென்றானதும், லேப்பிலும், அவளிலும் மாறி மாறி கவனம் வைத்திருந்தவன், அனுப்பிய ஆவணங்களை டிராப்டில் சேவ் செய்து விட்டு, லாக் அவுட் செய்த அந்நொடி,
அவனைக் கண்டு கொண்டது அந்த கருநாகப் பெண்ணின் விழிகள்!!
அவன் கையும், களவுமாக தான் பிடிபட்டுக் கொண்டதில் கல்லாய் சமைந்து நிற்க, இவளோ போதை சுத்தமாக இறங்கியவளாக,
தன் கையிலிருந்த மதுக்குவளை டைல்ஸ் தரையில் சுடீர் என்று முத்தமிட்டு தன் ஆயுளை முடித்துக் கொள்ள, அவனைப் பார்த்து கல்லாகி நின்றிருந்தாள்.
கிளாஸ் விழுந்த நொடிகளை தான் தப்புவதற்கான நொடிகளாக கணக்கிட்டுக் கொண்டவன், அதிவேகத்தில் எழுந்து லேப்டாப்பால் நடாஷாவின் உச்சந்தலைக்கே ஒன்று போட,
தலையைப் பிடித்துக் கொண்டு ‘ஆஆஆ!” என்று சத்தம் போட்ட அந்தக் குடிகாரி, வீடே அலற, “திருடன் திருடன்!!”என்று கத்த, அந்தப் பிரம்மாண்டமான வீடு சட்டென விழித்துக் கொள்ளலானது.
இருட்டில் மூழ்கியிருந்த வீட்டில் ஆங்காங்கே மின்விளக்குள் பளிச்சென்று ஒளிரத் தொடங்கியது.
தலையில் அடிவாங்கியும் ஓடி வந்து அதிமன்யுவின் இடுப்பைப் பிடித்துக் கொண்ட நடாஷாவை, தன்னிலிருந்தும் தள்ளிவிட்டவன், ஓங்கி ஓர் அறை அவள் கன்னத்துக்கு விட,
அறையின் வீரியம் தாங்க இயலாமல்.. சமநிலையின்றி விழப்போன அந்த அரக்கியின் நெற்றி..
மேசை முனையில் இடித்து இரத்தம் எட்டிப்பார்க்கத் தொடங்கியது.
இவனோ யாருக்காகவும் காத்திருக்காமல் வந்த வழியே செல்ல நாடி, சாளரம் தாண்டி குதித்து பால்கனி அடைந்தான்.
அதற்குள் அறைக்குள் ஆட்கள் ஓடி வந்து விட, பால்கனியிலிருந்து கீழே புற்தரையில் குதித்தவன் தாருமாறாக அங்கிருந்த பூந்தொட்டிகளில் மோதிக் கொள்ள,
அவை சரசரவென உடையும் ஒலி கேட்கவாரம்பித்தது.
தேவ் வளர்க்கும் கோரப்பற்கள் உள்ள நாய்கள் வேறு, சத்தம் வந்த திசையை நோக்கி கத்திக் கொண்டே விரைய,
நாய்களைப் பின்தொடர்ந்து வந்த வேலையாட்களின் கைகளில் வசமாக மாட்டிக் கொண்டான் அதிமன்யு.
அவனது யானைத்தந்தம் போன்ற பலமுள்ள கைகளை பல வேலையாட்கள் சூழ்ந்து பற்றிக் கொள்ள,
அவர்களை எல்லாம் கன்னாபின்னாவென்று தாக்கியவனை, சமாளிக்க இன்னும் பத்துப் பதினைந்து வேலையாட்கள் தேவைப்பட்டார்கள்.
எப்படியோ அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றும், அவர்களிடம் அகப்பட்டுக் கொண்டு நிராயுதபாணியாக நிற்கும் நிலை வந்தது அதிமன்யுவுக்கு.
அப்போது தான் சரண்யாவுடன் ஊர்சுற்றி விட்டு வந்திருந்த தேவ்வின் கார்கள் அந்த பிரம்மாண்டமான வீட்டின் போர்ட்டிகோ வளாகத்தில் நுழைந்தது.
அடுத்த நொடியே தேவ்வுக்கு தகவல் சொல்லப்பட.. கலவரம் நடந்தேறிக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்து வந்த தேவ்,
அங்கே முழுதும் கறுப்பால் மூடிய நிலையில் உடையணிந்திருந்த அந்தத் திருடனின் முகமூடியை அப்புறப்படுத்தியதும்,
அங்கே தெரிந்த முகத்தைக் கண்டு அதிர்ந்து ஓரெட்டுப் பின்வாங்கினான்.
அதிமன்யுவின் இதழோரம் பணியாட்களின் தாக்குதலால் ஒரு துளி இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
உடலோ மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க.. தேவ்வின் விழிகளையே கொலைவெறியுடன் பார்த்துக் கொண்டே இருந்தான் அதிமன்யு.
அதிமன்யுவின் மனதினுள் தேவ், அதிமன்யு மனைவிக்கு செய்த கொடுமைகள், அவள் தாத்தாவுக்கு செய்த கொடுமைகள், இன்னும் பல நூற்றுக்கணக்கான உயிர்களை தயவுதாட்சண்யம் பாராது கொன்றது எல்லாம் ஞாபகம் வர,
பற்களைக் கடித்துக் கொண்டு குத்திக்கிழிக்க முனையும் முரட்டுக்காளை போல சிலிர்த்துக் கொண்டு நின்றான் அதி.
தன் வீடு தேடி வந்திருக்கும் திருடனைக் கண்டதும் பளீரிட்ட அவன் வதனத்தில் ஓர் சுவாரஸ்யம் குடிகொண்டது.
காலையில் அவன் சொன்ன மனசு சரியில்லை என்னும் மனநிலை மாறி, ‘என்டர்டெயின்’செய்யும் மனநிலைக்கு மாறிப் போனான் தேவ்.
அதிமன்யுவைப் பார்த்து போலி ஸ்நேகம் கூத்தாடும் குரலில் ஏகத்துக்கும் புன்னகைத்து வைத்தான் அவன்.
தன் கை முஷ்டி விரல் மடக்கி, கன்னத்தில் வைத்து சுடக்கொலிகள் எழுப்பியவன், முகம் மலர.. வந்தவனை வரவேற்கவும் செய்தான்.
“வெல்கம் ப்ரதர்.. உன்னை இப்படியான கோலத்தில் மீட் பண்ணுவேன்னு நான் நினைக்கலை? ..” அப்பா வேணாம்.. நான் வேணாம்.. அந்த வ்வயசான ம்முட்டாள் த்தாத்தா ம்மட்டும் ப்போதும்னு க்கிளம்பிப் போன?.. இப்போ என் வீட்டுக்குள்ள திருடனா..வந்திருக்க?”என்று சொல்ல,
தாத்தை ‘வயசான முட்டாள்’ என்று தேவ் சிலாகித்த விதம் அதிமன்யுவுக்குள் உச்சபட்ச கோபத்தைக் கிளப்பி விட்டது.
தன்னைப் பிடித்து நிற்கும் அத்தனை வேலையாட்களையும் இழுத்துக் கொண்டு.. தேவ்வின் நெஞ்சோடு தன் நெஞ்சு மோதும் அளவுக்கு அவனை நெருங்கிப் போனவன்,
இறுக்கமான குரலில், “என்ன சொன்ன? வ்வயசான ம்முட்டாள் த்தாத்தாவா? .. இந்த வ்வாழ்க்கை அவ்வர் உனக்குப் போட்ட ப்பிச்சை!! ..”என்றவன் ஓங்கி தன் தலையால், தேவ்வின் நெற்றி இடிக்க,
அந்த இடியில் நெற்றியைப் பிடித்துக் கொண்டு ஓரெட்டுப் பின்வாங்கியவன் கையில் பட்டிருந்தது இரத்தம்!! ..
தேவ் ஓங்கி அறை விட்டான் அதிமன்யு கன்னத்துக்கு.
அதைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாதவன், பற்களைக் கடித்துக் கொண்டு,
“க்கேவலமான ம்முறையில் ப்பொறந்த உனக்கே இவ்வளவு திமிர் இருக்கும் போது… ஊர்கூடி.. த்தாலிகட்டி.. லீகல் பொண்டாட்டியா ஏத்துக்கிட்ட அக்ஷயாம்மாவுக்கு ப்பிறந்த எனக்கு எவ்வளவு திமிர் இருக்கும்?..”என்று சொல்ல,
வேலையாட்கள் முன் கெத்தாகத் திரியும் தன்னைப் பற்றிய பிறப்பு இரகசியத்தை வெளியிட்டு விட்டானே என்ற அவமானத்தில் கறுத்துப் போனது தேவ்வின் முகம்.
அவன் முகம் கறுப்பதை அவதானித்த அதிமன்யு.. வலையில் மாட்டிய சிங்கமாக நின்ற அந்நிலையிலும் நகைத்தான்.
அதியின் நகைப்பு இன்னும் கொஞ்சம் எரிச்சலை மூட்டியது மற்றவனுக்கு.
தன் சுட்டுப் பொசுக்கும் அடிக்கண்களால் நோக்கிக் கொண்டிருந்த நரகாசுரனை நோக்கி.. நெற்றியில் இரத்தம் வழிந்த தடத்தோடு வந்து சேர்ந்தாள் அந்த அரக்கி.
விண் விண்ணென்று தெறித்துக் கொண்டிருந்த நெற்றி வலியை விட, வீட்டுக்கு வந்த திருடனின் இரத்தம் பார்க்க வேண்டும் என்ற வெறி அதிகமாக இருந்தது நடாஷாவிடம்.
அதிமன்யுவை சீற்றம் உமிழப் பார்த்தவள், “இவனைக் கண்டாலே வெறுப்பா இருக்கு தேவ்… இன்னும் ஏன் பேசிட்டிருக்க..?”என்று அவள் கன்னாபின்னாவென்று கத்த,
அவளது கத்தல் வேறு இன்னும் எரிச்சலைக் கொடுக்க, கையுயர்த்தி அவளைத் தடுத்தான் தேவ்.
நடாஷா வாயை மூடிக் கொண்டாலும் கூட.. அவளோ, தன் கணவன் அதிமன்யுவுக்கு தரப்போகும் சித்திரவதைகள் காண ஆவலுடனேயே நின்றாள்.
அதிமன்யு நடாஷாவை ஏறெடுத்தும் பாரவில்லை. அவன் வாழ்க்கையில் எந்த இணுக்கிலும் சம்பந்தப்படாதவளிடம் அவனுக்கென்ன பேச்சு?
அவன் தேவ்வையே தான் வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
அத்தனை பேர் இருந்தும், உண்மையை உரைக்க பயப்படாமல் இரைந்த குரலில், ஆத்திரமும், சீற்றமும் போட்டி போட
“த்தேவ்.. உண்மை சில சமயம் உறங்கலாம்.. ஆனால் அது அழிஞ்சிராது.. அது உறங்கிட்டிருக்கும் வரை தான்.. உன்னை மாதிரி ஆட்களுக்கு சுதந்திரம்.. அந்த உண்மை முழிச்சிருச்சுன்னா..”என்று சொல்லிக் கொண்டிருந்த வேளை, பட்டென இடையிட்டு வாய் விட்டு நகைத்தான் மற்றவன்.
“ஹஹஹா.. இந்த உலகத்தைப் பொருத்தவரையில் த்தேவ் நல்லவன்..”- நகைப்பின் இறுதியில் தீவிரமான கண்களுடன் சொன்னான் தேவ்.
அந்த நகைப்பு இவனுக்கு எரிச்சலைக் கொடுக்க அதை வெளிக்காட்டாது நிதானமான குரலில், “நீ ப்பல ப்பேருடைய உயிரைக் க்கொன்னது த்தெரியாதுன்னு நினைச்சிட்டிருக்கியா?” என்று கேட்க, தேவ்வின் முகம் வெளவெளத்துப் போனது.
ஊரறியா பரம இரகசியத்தை இவன் எப்படி அறிந்தான்?
ஆதாரமும், கண் கூடாகக் கண்ட சாட்சியும் இல்லாத ஓர் படுகொலை பற்றி யாருக்கும் தெரிந்திருக்காது என்று எண்ணியிருந்த வேளை..
இவன் மாத்திரம் எப்படி அறிந்தான்?
திடுக்கிடலை மறைக்க முயன்று தோற்றவன், “நீ அதிகமா பேசுற அதிமன்யூஊஊ!!”.. என்றவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு குறுங்கத்தியை எடுத்து,
அதிமன்யுவின் திடகாத்திரமான கைச்சந்தில் குத்த, உள்ளே நாடி, நரம்பெங்கும் சுருசுருவென்று ஓர் வலி எழுந்து பரவ,
அதிமன்யுவின் முகம் எங்கும் ஓடியது பச்சை நரம்புகள்.
அவன் கத்தாமல் நின்றிருந்தாலும் கூட.. கைச்சந்தில் இருந்து கொட்டிய குருதி புற்களை நனைக்கவாரம்பித்தது.
*****
இரண்டு நாட்களுக்குப் பிறகு,
தனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்தின் விளைவால் பற்பல சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு.. ஐசியூவில் மயக்கநிலையில் இருந்தவள்,
மயக்கம் தெளிந்த பின் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள்.
அவள் கண் விழித்து, தனக்கென்ன ஆனது என்று உணர்ந்து கொள்ள ஒரு சில மணித்துளிகள் தேவைப்பட்டது.
கூடவே அவளது இருட்டு உலகம் தேடியது, ஏங்கியது தலைவனின் அன்புக்காக.
விக்கி மூலமும், கலா மூலமும் தலைவன் கொழும்பு சென்றிருப்பதை அறிந்து கொண்டவளுக்கு, அவன் தன்னை நீங்கிச் சென்றது துன்பத்தையே கொடுத்தது.
கூடவே டாக்டர் வேறு வந்து சத்திர சிகிச்சைக்கு தயாராகுமாறு, விக்கியிடம் கூறி விட்டுச் செல்ல, மித்ராவை எப்படி ஒத்துக் கொள்ள வைப்பது என்று தெரியாமல் திண்டாடிப் போயினர் விக்கியும், போலிஸ்காரர் மனைவி கலாவும்.
“அவன் எப்போ போனான்? என் கிட்ட கூட சொல்லலை..?”- விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து ஆற்றாமை தாங்காமல் ஒரே கேள்வியை மாறி மாறிக் கேட்டு கலங்கடித்துக் கொண்டிருந்தாள் அதிமன்யுவின் மூத்த குழந்தை மித்ரா.
இப்படியான சந்தர்ப்பங்களில் மனைவியை எப்படி சுமூகமாக சமாளிப்பது என்று அதிமன்யு அறிவான். ஆயினும் நண்பன் விக்கி அறிவானோ?
விக்கி விழி பிதுங்கி நிற்க, மித்ரா அருகில் அமர்ந்து கொண்ட கலா தான், மித்ராவின் கைகளை ஆதரவாகப் பற்றி தடவிக் கொடுத்தவளாக,
மென்மையான குரலில்,
“நீ வேற மயக்கத்துல இருந்த.. பணமும் சீக்கிரம் தேவையா இருந்தது.. அர்ஜ்ன்ட்ன்றதால போக வேண்டிய கட்டாய நிலைமை..இல்லைன்னா அதிமன்யு.. சொல்லிட்டுத் தான் போயிருப்பான்..”என்று தேற்ற, அவள் மனம் அவனைத் தேடி ஏங்கியது.
அந்த ஏக்கம் கோபமாக உருவெடுக்க, அழுகை வேறு ஊற்றெடுக்கலானது அவளுக்கு.
சற்றே மூக்கை உறிஞ்சிக் கொண்டே, “அவன் வரட்டும்.. வந்த உடனே..”என்று ஏதோ சொல்ல வர, அவள் விட்ட பாதியை முடிக்க சித்தம் கொண்டாள் கலா.
சட்டென்று இடையிட்டவள், “நல்லா சண்டை போட்டுக்க… உன் புருஷன்.. உன் ரவுடி பேபி.. அவன் கூட சண்டை போட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ஆனால் இப்போ உன் பிடிவாதத்ததுக்கு டைமில்லை மித்ரா.. ஆபரேஷன் பண்ணியே ஆகணும்..”என்றவள் மேலும் மேலும் பல நன்மொழிகள் கூறித் தேற்றலானாள்.
“உன் புருஷன் கொழும்பில இருக்குற தன்னோட நிலங்களை விற்கறேன்னு தான் போனான்.. காசு விக்கி அக்கவுண்ட்க்கு டிரான்ஸ்பர் ஆகி இருக்கு..ஆபரேஷனுக்கு காசும் கட்டியாச்சு.. சர்ஜரி பண்ண எல்லாமே ரெடி.. இப்போ போய் நீ அடம்பிடிக்கலாமா? முதல்ல டாக்டர் சொன்ன மாதிரி ஆபரேஷன்க்கு ஓகே சொல்லிரலாம்..”என்று அவளிடம் கெஞ்சவாரம்பிக்க,
அதைப்பார்க்க கலாவின் புருஷன் சிவக்குமார் தான் அருகில் இல்லை. இன்றேல் மனைவியின் கெஞ்சலை இரசித்திருக்கக் கூடும் அவர்.
கட்டிலில் தன்னிரு கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்தவள், பிடிவாதமான குரலில், “முடியாது அவன் வரட்டும்.. என் கூட இருக்கட்டும்..அப்பறம் இந்த ஆபரேஷன் பண்ணிக்கறேன்..” என்று சொல்ல சற்றே கடுப்பானது இது அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த விக்கிக்கு.
ஏகத்துக்கும் கறாரான குரலில், “முதல்ல சொல்றதைக் கேளு.. டாக்டர் வேற இதை விட்டா.. திரும்பவும் பார்வை கிடைக்க சான்ஸ் கம்மின்னு சொல்லியிருக்காரு..உன் பக்கத்துல அவன் இல்லைன்ற காரணத்துக்காக.. அப்புறம் வாழ்நாள் பூரா அவனைப் பார்க்குற பாக்கியத்தை இழந்துடாதே”என்று சொல்ல, மித்ராவின் இதயம் விழித்துக் கொண்டது.
விக்கி சொல்வது உண்மையாகவும் பட்டது. இருப்பினும் அவன் குரலை செல்பேசி வாயிலாகவேனும் கேட்டுவிட வேண்டும் என்ற ஆசை பிறக்க,
பக்கத்தில் அமர்ந்திருந்த கலாவின் கைகளை தட்டுத்தடுமாறி பிடித்துக் கொண்டவள்,
“ கலா ப்ளீஸ் ஐ ஹேவ் டு டோக்டு ஹிம்.. ப்ளீஸ் அவன் நம்பரை டயல் பண்ணிக் கொடு.. ப்ளீஸ் கலா..”என்று கெஞ்ச, கலாவும் வேறு வழியின்றி, அதிமன்யுவின் இலக்கத்திற்கு அழைப்பெடுத்து செல்லை மித்ரா காதில் வைத்தாள்.
திரும்பத் திரும்ப அழைப்பெடுத்த போதிலும் கேட்டது எல்லாம் கம்ப்யூட்டர் பெண்ணின் குரல் தான்.
“சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள் எட் த மொமெண்ட்” என்றே வர, செல்லைத் தூக்கி தரையில் அடிக்க வேண்டும் போல சினம் துளிர்த்தது அவளுக்கு.
“அவன் ஃபோன் நாட் ரீச்சபிள்னு வருது..ஏன்.. அவன் போன் எடுக்க மாட்டேங்குறான்.??”என்று படபடவென்று பொறிந்து தள்ள, மஞ்சத்தில் அமர்ந்து இதுவரை அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தாய் முகத்தை களேபரத்துடன் பார்க்கலாயினர்.
குழந்தைகள் அச்சத்தை கண்ணுற்ற கலா, “மித்ரா ரிலாக்ஸ்.. அதுக்கு இப்போ டைமில்லை.. இப்போ டாக்டர் உனக்கு எந்தவிதமான டென்ஷனும் இருக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு..பாரு.. நீ சத்தம் போட்டதில் குழந்தைங்க கூட பயந்துட்டாங்க..”என்று கூற அப்போது தான் தன் குழந்தைகளின் ஞாபகம் வந்து போனது அவளுக்கு.
காற்றில் கை நீட்டி தாய்மையுடன், நா தழு தழுக்க, “அனன்யா.. அக்ஷயா..” என்று அவள் அழைக்க, தாய் தங்களை அழைப்பதை உணர்ந்து,
“அம்மா..” என்ற வண்ணம் இறுகக் கட்டிக் கொண்டனர் குழந்தைகள்.
குழந்தைகளின் பிடரி மயிரைத் தழுவிக் கொடுத்தவளாக, அவர்களின் காது, கன்னம் என இதழ்கள் உரசிய இடமெல்லாம் முத்தம் கொடுத்தவளின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கியிருந்தது.
அந்த பாசப்பிணைப்பை தன் குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்த்த கலாவுக்கும் கண்கள் கலங்கியது. இந்த இரண்டு நாட்களாக அனன்யாவும், அக்ஷயாவும் இருந்தது கலா வீட்டில் அல்லவா?
அவர்களோடு கலாவுக்கும் தனி பாச உறவு உண்டாகியிருக்கத் தான் செய்தது.
குழந்தைகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்துக் கொண்டே, “இவங்களுக்காகவாவது ஆபரேஷன்க்கு ஒத்துக்க”என்று சொல்லிக் கொண்டிருந்த கணம் சிணுங்கியது விக்கியின் செல்.
மனைவி தன்னை எதிர்பார்த்திருப்பது ஏழாம் அறிவு மூலம் உணர்ந்து கொண்டானோ அதிமன்யுவும்? அழைப்பை மேற்கொண்டிருந்தது அதிமன்யுவே தான்.
புது நம்பர் திரையில் வரவும் இடுங்கிய புருவங்களுடன், “ஹலோ” சொன்னவன், மறுமுனையில் அதிமன்யு குரல் கேட்கவும் இனிதாக அதிர்ந்தான்.
அதிமன்யுவை பேசக்கூட விடாமல் பேசிக் கொண்டே போனது விக்கியே தான்.
“மச்சி.. எங்கேடா இருக்க? .. நீ சொல்லாமல் போனதால் உன்னை தங்கச்சி தேடுதுடா.. டாக்டர் வேற இன்னைக்கே ஆபரேஷன் பண்ணியாகணும் சொல்லிட்டாரு.. ஆனால் உன் பொண்டாட்டியை ஒத்துக்க வைக்க தான்.. கஷ்டமா இருக்கு”என்று பேச, மித்ராவின் வதனம் ஆயிரம் வால்ட் பல்பு போட்டாற் போன்று ஒளிர்ந்தது.
மறுமுனையில் இருந்த அதியோ விக்கி பேசிக் கொண்டே செல்வதைக் கேட்டு கடுப்பாகி, “டேய் உன் கூட பேசவா கோல் பண்ணேன்? போனை அவளுக்கு கொடுடாஆ”என்று கத்த,
“இரு கொடுக்குறேன்..”என்று முணுமுணுத்தவனாக, செல்லை அக்னிமித்ரா கையில் திணித்ததும், அவள் முத்துமூரல்கள் அனைத்தும் பளிச்சிட்டது ஓர் தனியழகு.
தட்டுத் தடுமாறி செல்லைக் காதில் வைத்தவள், தன் ஆற்றாமை அனைத்தையும், வார்த்தைகளாக பொறிந்து தள்ளினாள்.
“என்னை தனியா விட்டுட்டு.. சொல்லாமல் கொள்ளாமல் போயிட்ட நீ..?”என்று அவள் கத்த,
தான் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியை வெளிக்காட்டிக் கொள்ளாமல், இளகிய குரலில், “ஸாரிடீ..”என்று அவன் சொன்னது மாத்திரம் தான் தாமதம், அவன் மேலிருந்த கோபம் எல்லாம் அனல் மேல் பனித்துளி போல இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிற்று.
“எப்போ வருவ பேபி..?”-ஆற்றாமை மீதூற மெல்லிய குரலில் கேட்டாள்.
அவள் கவலை அவனைத் தாக்கினாலும், இயன்றளவு சாதாரண குரலில், “ நிலம் கைம்மாத்துனது சில லீகல் இஷ்யூஸ் முடிக்க வேண்டியிருக்கு..நான் முடிச்சதும் வந்துடறேன்..”என்று கேட்க, அவன் அருகே இல்லாமல் ஆபரேஷன் செய்வது ஏனோ மன நெருடலைக் கொடுத்தது அவளுக்கு.
அவளது நொடி நேர அமைதியே, அவள் மனதை அவனுக்கு புடம் போட்டுக் காட்ட, எதைச் சொன்னால் அவள் அடங்கிப் போவாள் என்று நன்கு தெரியுமோ? அதைச் சொன்னான் அவன்.
“ புருஷன் நான் சொல்றேன்ல? கேட்க மாட்ட..?”என்ற அந்த ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போனாள் அவள்.
அதிமன்யு தொடர்ந்து சொன்னான்.
“நீ முதல்ல ஆபரேஷன் பண்ணிக்க.. நீ கண் முழிக்கும் போது முதல் ஆளா உன் முன்னாடி நான் இருப்பேன்.. உன் ரவுடி பேபியை நீ பார்ப்ப..”என்று சொல்ல, அவன் சொன்ன வார்த்தைகளே சந்தோஷத்தைக் கொடுத்தது அவளுக்கு.
“நிஜமா?..”-சிறு குழந்தைகள் போல எதிர்பார்ப்புடன் கேட்டாள் அவள்.
“சத்தியமா..!!”- மிக மிக உறுதியான குரலில் சொன்னான் அதிமன்யு.
அவன் அழைப்பைத் துண்டித்ததும், இருட்டை வெறித்துக் கொண்டே, எங்கே நின்றிருக்கிறான் என்று தெரியாத விக்கியிடம்,
எதிர்பார்ப்பு நிறைந்த குரலில், “விக்கி.. நான் ஆபரேஷன் பண்ணிக்கறேன்..”என்றாள் மித்ரா.
அவள் கைகள்.. தன் தோள் வளைவில் சாய்ந்திருந்த குழந்தைகளை இன்னும் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்டது.
கன்னங்களுக்கு அழுந்த அழுந்த முத்தம் வைத்தவள், “இனி அம்மா.. உங்களை எல்லாம் பார்க்கப் போறேன்.. என் செல்லங்களைப் பார்க்கப் போறேன்”என்றவள் அவளையும் மீறி.. தன் நாசி நுனி செக்கச்செவேலென சிவக்க அழுதாள்.
ஆபரேஷன் தியேட்டருக்குள் அவள் நுழைந்த போது.. கண்ணிமைகள் மூடிக் கொள்ளா வண்ணம்.. மேலிமைக்கும் கீழிமைக்கும் க்ளிப் போல ஒரு கருவி மாட்டப்பட்டு, கருவிழிப்படலத்தின் லென்ஸ் நுண்ணிய கருவியால் வெட்டப்பட்டு.. சிகிச்சை நடந்தேறலானது.
எங்கேயும் காதல்!
[17]
சிகிச்சை நடந்தேறிய மூன்று வாரங்களுக்குப் பிறகு,
அவளது கண்களை கண்மாற்று சிகிச்சை செய்த டாக்டர், அக்னிமித்ரா அணிந்திருந்த ‘ஐ ஷீல்ட்டினை’ கண்களில் இருந்து கழற்றிய நாளில்,
அவள் வாழ்க்கை எதிர்பாராத அளவில் மாறிப் போயிருந்ததை, அப்போது அக்னிமித்ரா உணர்ந்திருக்கவில்லை.
ஆபரேஷன் செய்த முதல் நாளிலேயே கண்களில் போடப்பட்டிருந்த ‘ஐ பேட்ச்’ அகற்றப்பட்டு..
இந்த மூன்று வாரங்களாக ‘ஐ ஷீல்ட்’ அணிந்திருந்தவளுக்கு, உடனே தெளிவான பார்வை கிடைத்திருப்பின் அது உலக மகா பேரதிசயமாகத் தான் இருந்திருக்கும்.
மாறாக,அக்னிமித்ராவுக்குமே கண்மாற்று சத்திர சிகிச்சை செய்து கொண்ட பிற பெண்களைப் போலவே, ‘ப்ளர்ட் விஷன்’ தான் இருந்தது.
அவள் அருகில் நின்றிருந்த டாக்டர் வேறு, அவளுக்கு சில பல அறிவித்தல்களை வழங்கும் நோக்கில்,
“டோன்ட் ரப் யோர் ஐய்ஸ்.. ஐ ட்ராப்ஸ் ஆர் கிவன்..ஆல்தோ..விஷன் மே நாட் பி பெர்பெக்ட் ஆப்டர் சர்ஜரி.. பட் முன்னாடி இருந்த நிலையைப் பார்க்க.. கொஞ்சம் பெட்டரா பார்க்க முடியும்..
கொஞ்ச நாளைக்கு ப்ளர்ட் விஷனா தான் இருக்கும்.. உங்க ஹீலிங் கன்டிஷன்ஸை பொறுத்து ஸ்டிட்ச்சஸ் எப்போ ரிமூவ் பண்ணலாம்னு அப்புறம் டிசைட் பண்ணிக்கலாம்.. அதனால கொஞ்ச காலத்துக்கு நோ ஸ்விம்மிங்க்.. என்ட் நோ ட்ரைவிங்க்..
பாரமான பொருட்களை தூக்கவோ.. இல்லை ஹெவி எக்சர்சைஸை பண்ணவோ கூடாது..யூ ஷூட் வேர் ஐ கிளாஸஸ் ஃபோர் சர்டின் பீரியட்..”என்று சொன்னவர்,
இறுதியாகக் கேட்டார், “உள்ளுக்குள்ள ஏதாவது பெய்ன் இருக்கா?”என்று.
அவள் தலையோ தானாக, ‘இல்லை’ என்பது போல அப்புறமும், இப்புறமும் ஆடியது.
தன் மூடியிருந்த விழிகளை மெல்ல திறந்தவளின் கண்கள், ரொம்ப நாட்களாக ஒளிக்கு பழக்கப்பட்டிராத கண்கள் அல்லவா?
அவள் கண் திறந்ததும் அவை கூசின. கண்ணிமைகளும், புருவங்களும் ஒருங்கே சுருங்க.. விழிகளை ஓரிரு செக்கன்களுக்கு மூடிக் கொண்டாள் அக்னிமித்ரா.
அந்த கணம் அறையில் இருந்த விக்னேஷின் கைகளில் ஆளுக்கொன்றாக அடைக்கலமாகியிருந்த அவள் குழந்தைகளுக்கு, தாயின் அருகே செல்ல வேண்டும் என்ற உந்துதல் பிறந்திருக்க வேண்டும்?
விக்னேஷின் கைகளில் இருந்து நழுவி இறங்கிய குழந்தைகள் இருவரும், தாய் அமர்ந்திருந்த கட்டிலின் எதிரே ஓடிப் போய், அக்னிமித்ராவின் கைகளை ஆளுக்கொன்றாக பற்றி,
மனம் உருக்கும் மழலைக் குரலில், “அம்மாஆ”என்று அழைக்க,
அக்னிமித்ராவின் கோடான கோடி மயிர்க்கால்கள் எல்லாம் பட்டென்று சிலிர்த்துக் கொண்டது. அவளது மூடிய விழிகள் சடாரென்று திறந்து கொண்டன.
கார்க்கண்ணாடியில் மழைச்சாரல் துளிகள் விழுந்தால், கண்ணாடி எப்படி மங்கலான உருக்களை காட்டுமோ?? அது அன்ன அவள் விழிகளும்!!
அவள் எதிரே அவளது கைகளைப் பற்றிக் கொண்டு நின்றிருப்பது அவள் ஈரைந்து மாதங்கள் சுமந்து பெற்ற குழந்தைகள்!!
தன் கணவனின் உயிர்நீரில்.. இவளின் கருவறையில் இரத்தமும், சதையுமாக வளர்ந்த.. அவர்களின் அழகிய காதலுக்குக் கிடைத்த சான்றாதாரங்கள்!!
குழந்தைகளைக் கண்டதும்.. அக்னிமித்ராவின் விழிகளில் நீர் கருக்கட்டத் தொடங்கியது. மனம் முழுவதும் ஓர் சந்தோஷமும், தன் மழலைச் செல்வங்களை தெளிவாகப் பார்க்க முடியாதே என்ற ஏக்கமும் பிறந்தது.
குழந்தைகளுக்கும் தாய் அழுவது கவலையைக் கொடுக்க, மஞ்சம் தாண்டி ஏறிய குழந்தைகள் வாஞ்சையுடன் சரணடைந்தன தாயின் மார்புக்குள்.
குழந்தைகளை படபடப்பும், தாய்மையுணர்வும் ஒருங்கே மீதூற ஆரத்தழுவிக் கொண்ட அக்னிமித்ரா, அழுத அழுகையில்,
அங்கு நின்றிருந்த தாதிக்கும் கூட ஏதோ உள்ளே செய்தது.
குழந்தைகளை உச்சந்தலை முதல் கைகளால் தொட்டுப் பார்த்தவள், தழுதழுத்த குரலில்,
“இ.. இ.. இது என் குழந்தைங்க.. என் அக்ஷயா.. இது என் அனன்யா..”என்று குழந்தைகளை சரியாக அடையாளங் கண்டவளாக அவர்களின் முகமெங்கும் விடாமல் ஈர முத்தங்கள் பதிக்கலானாள்.
அவள் தன் வாழ்நாளில் பெரிதும் ஏங்கிய நிமிடங்கள் அவை. அதை மங்கலான பார்வையாக இருந்தாலும் கூட அனுபவித்துக் கொண்டிருந்தாள் அக்னிமித்ரா.
தன் குழந்தைகளிடமிருந்து பார்வையை எடுத்து அறையில் சுழல விட்டவளுக்கு, ஓர் பெண்ணுருவமும், கூடவே ஓர் ஆணுருவமும் நின்றிருப்பது புரிந்தது.
அவ்விரு உருவங்களும் யாரென்று புரிந்து விட, அங்கே நின்றிருந்த பெண்ணுருவத்தை நோக்கி, “கலாஆ..”என்று மென்மையாக அழைக்க,கலாவின் உள்ளம் அகமகிழ்ந்து போனது.
ஓரெட்டு வைத்து விரைந்து வந்து மித்ராவை அணைத்துக் கொண்டவள், உணர்ச்சி மல்க, “ஆமா… உன் ஃப்ரண்டு கலாவே தான்.. உன் கலாவே தான்”என்று கூற, அதைப் பார்த்துக் கொண்டிருந்த விக்னேஷூக்கு கண்களில் ஆனந்தக்கண்ணீர் ஊற்றெடுக்க,
அழுகை வெளிப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வளைந்த கீழிதழ்களை, பற்களால் அழுந்தக் கடித்துக் கொண்டு நின்றான் அவன்.
அக்னிமித்ராவின் பார்வை கலாவிலிருந்தும் திரும்பி, விக்னேஷை அடைய, அடுத்த நிமிடம் விக்கியின் தெளிவற்ற விம்பத்தையே ஒரு சில விநாடிகள் உற்று நோக்கிக் கொண்டிருந்தவள்,
“விக்கி அண்ணா..”என்று அழைத்தாள்.
விக்கி, அவளின் அண்ணா என்ற அழைப்பை தன்னுடன் பிறந்தவளின் அழைப்பாகவே கொண்டவனுக்கு உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் ஒன்றாய் பறப்பது போல சந்தோஷ படபடப்பைக் கொடுக்கவே,
“சொல்லும்மா..”என்ற போது அவன் கண்களில் கண்ணீர் வழிய, இவளோ சின்னக்குழந்தைகள் போல வெள்ளந்தியாகச் சிரித்தாள் .
நாசி நுனி செக்கச்செவேலென சிவக்க, ஒரு பக்கம் நகைக்கும் அவள் வதனம்..ஒரு வகையான அழகைக் கடன் வாங்கிக் கொள்ள, அதை இரசித்துப் பார்த்திருந்தாள் கலா.
இவளோ அவனை நோக்கி, “உங்க வாய்ஸையும், உங்க டோக்கடிவ் சுபாவத்தையும் வைச்சு.. பார்க்குறப்போ நீங்க சுமார் மூஞ்சி குமாரா.. கொஞ்சம் ஓல்ட்டா இருப்பீங்கன்னு நினைச்சேன்..”என்று, தான் இத்தனை நாளாக கற்பனையில் வரித்து வைத்திருந்த விக்னேஷைப் பற்றிச் சொல்ல,
விக்னேஷின் விழிகள் அகல விரிந்தன.
“எது? அப்போ வயசானவன்னு முடிவே பண்ணிட்டியா?”என்று பதைபதைப்புடன் அவன் கேட்க, அவளோ அங்கிருந்த அனைவரது மனநிலையையும் சுமூகமாக்கியவளாக, வாய் மூடி அழகாக கிளுக்கி நகைத்தாள்.
பின்பு மிருதுவான குரலில் சொன்னாள், “இல்லை.. என் முடிவை நான் மாத்திக்கிட்டேன்.. நீங்க.. சினிமா ஹீரோ மாதிரி இருக்கீங்க… “என்று.
தங்கையின் காம்ப்ளிமெண்ட்டை முழுமையாக ஏற்கும் மனோநிலை பிறக்கவில்லையோ விக்னேஷூக்கும்.
அவனோ ஆற்றாமையில் முணங்கும் குரலில், “கண்ணு தெரிய முன்னாடி.. சுமார் மூஞ்சி குமாரு..இப்போ ப்ளர்ட் விஷனா இருக்கறப்போ ஹீரோ.. அப்புறம் பார்வை நல்லா வந்ததும் சினிமா வில்லன் மாதிரி இருக்கேன்னு சொல்லிட மாட்டியே?”என்று கேட்க,
அவன் கேட்ட தினுசில் இரு பெண்டிருக்குமே குபீர் சிரிப்பு பீறிடலாயிற்று.
தாய் சிரிப்பதைக் கண்ட.. இரு இளம் பிஞ்சுகளும்… அந்த சிரிப்பில் பங்கு கொள்ள நாடி போலியாக நகைக்க..அந்த நகைப்பின் க்யூட்னஸில், அழகான முறுவல் பூத்தது அக்னிமித்ராவின் இதழ்களில்.
குழந்தைகளின் சிரிப்பில்.. அவளுக்கு கணவனின் ஞாபகம் வரவே.. மெல்ல தலை திருப்பியவள், அறை முழுவதும் சுற்றிச் சுற்றி தன் தலைவனைத் தான் தேடினாள் அக்னிமித்ரா.
டாக்டரும், தாதிமார்களும் வெளியேறி இருக்க கலாவையும், விக்கியையும் தவிர.. இன்னோர் உருவம் அங்கே இருப்பதாக அவள் கண்களில் விரியாமல் போக,
உள்ளுக்குள் ஆற்றாமை குடி கொண்டது.
மெல்ல விக்கியை நோக்கி திரும்பியவள், “ஆமா அதி எங்கே? ஏன் அவனை இன்னும் காணோம்..?”என்று அவள் கேட்ட வேளை,
விக்னேஷூம் பதில் சொல்ல வாய் திறந்த வேளை, அறையின் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த நவீனரக தொலைக்காட்சியில் போய்க்கொண்டிருந்தது ஓர் ப்ரேக்கிங் நிவ்ஸ்.
இதுவரை மிஸ்டர். பீனின் நகைச்சுவைக் காட்சிகள் போய்க் கொண்டிருந்ததால்.. இருந்த ஆனந்தபூர்வமான மனநிலையில், அதைப் பார்வையை செலுத்த முடியாமல் இருந்தவர்கள்,
‘ப்ரேக்கிங் நிவ்ஸ்’ஸின் நாதம் ஒலித்ததுமே தொலைக்காட்சியில் தங்கள் பார்வைகளை செலுத்தலாயினர்.
அக்னிமித்ராவுக்கு எதுவுமே தெளிவாக விளங்கவில்லை தான். இருப்பினும் செய்தி வாசித்த பெண்ணின் கணீர் என்னும் குரல், அவள் செவியை நன்றாகவே நிரப்பிக் கொண்டிருந்தது.
அந்த ஒற்றைச் செய்தி… அக்னிமித்ராவின் சந்தோஷத்தை இரட்டிப்பாக ஆக்குமென்று அப்போது அவள் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
திரையில் இருந்த பெண்ணோ,
செய்தி வாசிப்பதற்கென்றே உள்ள குரலில், “தற்போது கிடைத்த செய்தியொன்று..
இரண்டு வருடங்களுக்கு முன்பு, கொழும்பின் ‘டாஸிலிங்’ ஆடையகத்தில் நடந்த தீ விபத்தின் முக்கிய குற்றவாளியாக தேவ் க்ரூப் ஆஃப் கம்பனீஸ் உரிமையாளர் திரு. தேவ் வர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தீ விபத்தைத் தானே நடத்தச் சொல்லும் அவருடைய செல்பேசி ஒலிப்பதிவு இணையத்தில் வெளியாகி, மக்களிடையே சலசலப்பைக் கிளப்பியதில்,
எழுந்த சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், ‘அது தேவ் வர்மனின் பிரத்தியேக செல் அழைப்பில் நிகழ்ந்த உரையாடல் தான்’ என்று ஊர்ஜிதமானதனால் தேவ் வர்மனை கைது செய்துள்ளனர்.”என்று செய்தியை கூறி முடித்த மறு விநாடி,
திரையில் அந்த செல் உரையாடல் ஒலிபரப்பாக்கப்பட்டது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவள் தன் காதாரக் கேட்ட அதே உரையாடல் மீண்டுமொருமுறை அணுபிசகாமல் அப்படியே கேட்கக் கண்டவள்.. விழிகள் விரிய ஸ்தம்பித்து நின்றவளாக திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ய்யோவ்.. ஒரு கோடி.. ரெண்டு கோடி இல்லைய்யா..ஐஞ்சு கோடி..ஐஞ்சு கோடி.. தர்றேன்.. வேணாமா?”என்று கேட்ட அந்தத் தேவ்வர்மனின் அதே குரல் கேட்க,
அன்று அநியாயமாக இறந்த அத்தனை ஆத்மாக்களும் சாந்தியடைவதாக எண்ணிக் கொண்டவள், கண்கள் மூடி ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
நினைவுகளோடு நினைவுகளாக.. அவளது இன்னுயிர் உறவான தாத்தாவின் கண்ணீர் மல்க சிரிக்கும் மதிமுகம் ஞாபகம் வந்து போனது அவளுக்கு.
அதன் பிறகு மீண்டுமொரு செய்தியாக, தொடர்ந்து அப்பெண், “மேலும் தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸ் பங்கு தாரரான தேவ்வர்மனின் மாமா திரு. உதயகுமாரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான ரீதியில், பாகிஸ்தானில் இருந்து ‘கஞ்சா இறக்குமதி’ செய்த குற்றத்தின் சூத்திரதாரியாக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்”என்று பின்னணியில் பேச,
திரையில் கொழும்பு துறைமுகத்தில்.. அதுவும் நள்ளிரவில் வந்து நிற்கும் கப்பலில் இருந்து இராட்சதப் பெட்டிகளில்.. கஞ்சா வந்து இறங்குவதும்,
அதைப்பிரித்து அதிலிருந்து சிறு பொட்டலம் உடைத்து.. உதயகுமார் அதை நாக்கில் வைத்து சுவைபார்க்கும் காணொளி ஒளிபரப்பாக்கப்பட,
அகல விரிந்து கொண்ட அவள் இதழ்களை மூடி மறைத்தது வலது கை விரல்கள்.
மங்கலாகத் தான் காட்சிகள் புலனாலும் கூட.. அவளால் நூற்றுக்கு நூறு வீதம் உறுதியாக சொல்ல முடியுமானதாக இருந்தது அது அவள் இரண்டு வருடங்களுக்கு முன்பு திரட்டிய ஆதாரம் என்று!!
நள்ளிரவில் யாரும் அறியாமல், அரவமே எழுப்பாமல் கொழும்பு துறைமுகம் வழியாக போய், உதயகுமாரின் சட்டவிரோத வணிகம் பற்றி அவள் எடுத்த வீடியோ ஆதாரம் அது!!
உதயகுமாரின் கீழ் வேலை செய்யும் கயவர்கள் கண்ணுக்கு.. இவள் வீடியோ எடுப்பது புரிய, கேமராவில் இருக்கும் ‘சிப்’பை மாத்திரம் எடுத்துக் கொண்டு,
அவள் உயிரைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடி வந்த தருணத்தில்.. அவள் கையில் இருந்த ஒரே சான்று அது!!
தன் ‘அன்டர்வேல்ட் பிஸினஸ்’ பற்றி ஒரு ஊடகவியலாளர் அறிந்து கொண்டது.. அவன் கட்டி வைத்திருக்கும் ‘பாதாள உலக சாம்ராஜ்யத்திற்கே ஆபத்து’ என்று கருதிய உதயகுமாரும்,
அவன் மகள் நடாஷாவும் அவளது பின்னால் கழுகாக சுற்றிக் கொண்டிருந்த காலத்திலும், பென்ட்ரைவ்வில் அத்தனையும் அழியாமல் பாதுகாத்து வைத்த ஆதாரம் அது!!
இறுதியில்… அந்தக் குரூரன் தேவ் கையால் மானமிழந்து நின்ற வேளை அவள் பறிகொடுத்த ஆதாரம் அது!!
தான் கண்ட கனவுகள் நிறைவேறாமல் நிராசையாகப் போய் விடுமோ என்றெண்ணியிருந்தவளுக்கு, அத்தனையும் தன் முன்னே நனவாக நடந்தேறுவது கண்டு சந்தோஷம் தாள முடியாமல் போனது அவளுக்கு.
நா தழுதழுக்க பேச முடியாமல் போன நிலையிலும் கடினப்பட்டு வாய் திறந்தவள்,
“வி.. வி.. க்கி நான் கே.. ட்குறது நிஜ.. ந்தானா? உண்மையி.. லேயே அந்தத் தேவ் வர்மனுக்கும், உதயகு.. மாருக்கும் தண்டனை கிடைக்கப் போறது நிஜந்தானா?..”என்று கேட்க,
தேவ் தன் நண்பனின் மனைவிக்கு செய்த அநியாயங்கள் தெரியாத விக்கியோ, தொலைக்காட்சியையே பார்த்த வண்ணம்,
“ம்.. ஆமா.. தேவ் தான்.. ஊருக்கு நல்லவன் வேஷம் போட்டுட்டு என்னெல்லாம் திருகுத்தாளம் பண்ணியிருக்கான் பாரேன்..?”என்று சொல்ல,
இதுநாள்வரை மனதில் இருக்கும் பாரங்கள் எல்லாம் மெல்ல மெல்ல அகல்வது போல உடல் இலேசாவது போல பிரம்மை எழுந்தது அவளுக்குள்.
‘இது எப்படி ரிலீஸானது?’என்று சின்ன சந்தேகம் வலுக்க, மெல்ல கண்களை மூடிக் கண்ணீர் விட்ட போது அசரீரியாக ஒலித்தது அதிமன்யுவின் குரல்.
அவள் மயக்கமடைந்து ஐசியூவில் படுத்திருந்த நிலையில், அவளருகே வந்து அவன் சொன்ன வார்த்தைகள் அத்தனையும் மீள ஒலிபரப்பாகியது அவள் காதுக்குள்.
“நீ கண்ணு முழிக்கும் போது.. அத்தனை சாவுக்கும் நீதி கிடைச்சிருக்கும்!!”என்று உறுதியாக சொன்ன அவன் குரல்.
இது எல்லாவற்றிற்கும் காரணம் அவள் தலைவன். இந்த உலகத்தில் அவளுக்கு நேர்ந்த கொடுமைகள் அத்தனையும் மொத்தம் விடாமல் அறிந்து வைத்திருப்பவன் அவனே தான்.
அவளது நலனை மட்டுமே நாடும் ஓர் ஜீவன், அவளது தலைவன் அதிமன்யுவைத் தவிர வேறு யார் தான்.. இத்தனை காலமாக புதைந்திருந்த இரகசியங்களை அம்பலமாக்கியிருக்கக் கூடும்!!
தன் தலைவனை இப்போதே காண வேண்டும்.. அவனை ஆரத்தழுவி.. கொழும்பில் நிகழ்ந்தவைகளை கேட்டறிய வேண்டும் என்ற எண்ணம்..
காதல் வெறியாகக் கிளர்ந்தெழ, விக்கியைப் பார்த்தவள் படபடத்த குரலில்,
“விக்கி.. அதி எங்கே? என் அதி எப்படி இருப்பான்னு பார்க்கணும்? .. எங்கே அவன்? .. இதெல்லாம் பண்ணது அவன் தான்..”என்று அவள் தன் நிராசைகள் நிறைவேறியதைச் சொல்ல,
அவள் உரைத்த இறுதி வசனமான ‘இதெல்லாம் பண்ணது அவன் தான்..’ என்பதை ஆபரேஷனுக்குரிய ஏற்பாடுகளை செய்தது அவன் தான் என்று எண்ணிக் கொள்ளலாயினர் கலாவும், விக்னேஷூம்.
விக்னேஷோ இன்று காலை அழைப்பெடுத்த நண்பன் சொல்லச் சொல்லிய பதிலை சொல்ல நாடி,
“கொழும்பு போயிருந்தப்போ அவன் தாத்தா ஃப்ரண்ட் ஒருத்தரை மீட் பண்ணியிருக்கான்.. அவருக்கொரு ஹார்ட் ஸர்ஜரி.. கூட நின்னு பார்த்துக்க யாருமே இல்லாம.. இருந்திருக்காரு..
பசங்க எல்லாம் அமெரிக்கா, லண்டன்னு ஸெட்டிலாக.. இவர் மட்டும் இங்கே தனியா சர்ஜரி பண்ணிக்க ரெடியானது அவனுக்கு ரொம்ப கஷ்டமா போயிருச்சு போல..
அதான்.. அவன் நின்னு அவரைப் பார்த்துட்டு வர வேண்டியதா போயிருச்சு.. இரண்டு நாள்ல அவர் பேத்தி யூ. எஸ்ல இருந்து வந்துடுவாளாம்….அதுக்கப்புறம் வந்துருவான்”என்று சொல்லி முடிக்க,
ஒரு பக்கம் அந்த வயசான பெரியவரின் குழந்தைகள் மேல் மலையளவு கோபம் மிகுந்தது அவளுக்கு.
குழந்தைகளாக இருந்த போது கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட பெற்றவர்கள், வயோதிகர்கள் ஆனதும் பார்த்துக் கொள்ள முடியாத பிள்ளைகள் என்ன பிள்ளைகள்?? என்றிருந்தாலும்,
இன்னொரு பக்கம் தன் ரவுடி பேபியின் மனிதாபிமானம் ரொம்பவும் மரியாதையைக் கொடுக்கத் தான் செய்தது.
அத்தோடு சிறு உரிமைக் கோபமும் மீதூற, “அதை ஏன் அவன் என்கிட்ட சொல்லலை..?”என்று கேட்க,
விக்கியும் தலை சொறிந்து கொண்டே, “இல்லை.. உன் குரலைக் கேட்டா கண்டிப்பா அவனால ஒரு மணி நேரம் கூட கொழும்பில் நிற்க முடியாது.. கிளம்பி வரத்தான் தோணும்னு.. தான் என்கிட்ட சொன்னான்”என்று சொல்லிக் கொண்டிருந்த கணம்,
அந்த அறையின் கதவு.. ஒரு சில தட்டலின் பின்னர் திறக்கப்பட்டது.
அங்கே அடர் நீல நிற கோர்ட் சூட் அணிந்து, விழிகளில் ஓர் கூலர்ஸூடன், கைகளில் ஓர்க்கிட் பூக்கள் கொய்து செய்யப்பட்ட ஓர் பூச்செண்டுடன்.. ஆஜானுபாகுவான தோற்றத்தில் நின்றிருந்தான் ஓர் ஆண்மகன்.
அவனது வலதுபுறத்திலும், இடப்புறத்திலும் வோக்கிடோக்கியும், ஃபைலும் சகிதம் இரு ஆடவர்கள்.. கிட்டத்தட்ட மெய்க்காப்பாளர்கள் போல நின்றிருக்க, நடுவில் இருந்த ஆண்மகன்..
தன் அழுத்தமான காலடி எட்டுக்கள் எடுத்து வைத்து அக்னிமித்ரா அருகில் வந்தான்.
அக்னிமித்ராவின் தெளிவற்ற பார்வைக்கு வந்திருப்பது ஓர் ஆண்மகன் என்று புரிந்தாலும்.. அவனுடைய முகத்தைத் தான் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை அவளுக்கு.
வந்தவன் பல பேர் கூடி நிற்கும் அறைகளில் வசீகரமாகப் பேசிப் பழக்கப்பட்டவன் போலும்,
தன் வசீகரமான குரலில், “குட் ஈவ்னிங் மேடம்.. ஐ ஏம் ஜனன்.. செக்ரட்டரி ஆப் தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸ்.. எங்க புது சிஈஓவுக்கு வாழ்த்துக்கள்.. கங்கிராட்ஸ் மேம்..”என்றவனாக, அந்த ஓர்க்கிட் பூச்செண்டினைக் கையில் திணிக்க,
அருகில் அமர்ந்திருந்த கலாவும் சரி, சற்றே தள்ளி நின்றிருந்த விக்னேஷூம் சரி வாயைப் பிளக்காமல் நின்றிருந்தனர் என்றால் அது ஆச்சரியம் தான்.
கலா தான் இன்னும் ஒரு படி மேலே போய் அதிர்ச்சியானவளாக, அக்னிமித்ராவையும், அந்த புது ஆடவனையும் மாறி மாறி பார்த்தவளாக,
“வாட்??.. தேவ் கம்பனீஸ் ஓவ்னரா???”என்று கேட்க, புன்னகைத்துக் கொண்டே கலா பக்கம் திரும்பினான் செயலாளர் ஜனன்.
தங்கள் சிஇஓவிற்கு நெருக்கமானவள் என்பதால் கலாவையும் மரியாதையாக நோக்கி, “ஆமா மேம்.. தேவ் சார் இப்போ ஜெயில்ல இருக்குறதால.. அக்னிமித்ரா மேம் தான் இப்போ சிஇஓ!!..”என்றவன்,
தன் பின்னால் வந்த இதர பணியாளர்களிடமிருந்த கோப்புக்களைக் காட்டி,
“மேம் இப்போ ஓகே சொன்னா கூட.. இந்த பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டதும்.. மீடியாவுக்கு எங்க நிவ் சிஇஓ பத்தி அறிவிச்சிரலாம்.. இல்லை கொஞ்சம் நாள் போறதுனாலும் ஓகே.. வி ஆர் வெரி மச் கன்சர்ன்ட் அபௌட் அவர் மேம்ஸ் ஹெல்த் கன்டிஷன்ஸ்..”என்று தங்கள் நிர்வாகத்தைப் பற்றி கொஞ்சம் அவன் விளக்க,
அவள் கண்களில் கண்ணீர் கோர்க்கத் தொடங்க.. விட்டத்தையே வெறித்துப் பார்த்தாள் அக்னிமித்ரா.
முன்பு அவள் விட்டத்தை வெறித்த போது இருட்டு தெரிந்தது. இப்போது அவள் விட்டத்தை வெறித்த போது ஓர் மருட்சி தெரிந்தது.
அவளுக்கு கலாவைப் போலவோ, விக்கியைப் போலவோ எந்தவொரு ஆச்சரியமோ, அதிர்ச்சியோ, செயலாளர் ஜனன் சொன்ன விஷயம் கேட்டு எழவில்லை.
மாறாக அவள் உள்மனம், ‘எது என்றோ ஒருநாள் நடக்கத் தான் போகிறது’ என்று எண்ணியிருந்தாலோ.. அது நடந்தேறவும்.. அமைதியாகத் தான் இருந்தாள்.
ஆனால் அவள் எண்ணியது நடந்தேறிய போது காலம் ரொம்பக் கடந்து விட்டிருந்தது. அதிமன்யுவின் அன்பு ஒன்று மட்டுமே போதுமானதாக இருக்க, யாருக்கு வேண்டும் இந்தப் பட்டங்களும், பதவிகளும், சொத்தும், சுகமும்??
தேவ்வின் கொடூர விழிகளும், அதன் குரூரப் பார்வையும் வேறு ஞாபகம் வர, தன் கையிலிருந்த பூச்செண்டை.. தூர எறிந்தாள் அக்னிமித்ரா.
அவளது செயல் கண்டு அனைவரும் அதிர்ச்சியாகி நிற்க, இவளோ தன் அடித்தொண்டையிலிருந்து சீறியவளாக,
“ய்யாருக்கு வேணும் உங்க சிஇஓ ப்பதவி?? என்ன தான் இருந்தாலும்.. என் தாத்தா உயிரை உங்களால கொண்டு வந்து தர முடியுமாஆஆ? ப்போங்கஅஅஅ!! எல்லாரும்.. வ்வெளியே ப்போங்க.. வெளியே ப்போங்க”என்று கத்த,
சற்றே அதிர்ச்சியான ஜனன், அவளிருக்கும் சூழ்நிலையில் அவளை மேலும் டென்ஷனாக்க விரும்பாமல் கவிழ்ந்த தலையுடன் வெளியேற,
கலா அவளை சமாளிக்க பெரும்பாடு பட்டுப் போனாள். கணவன் வேறு அருகில் இல்லாமல் ட்யூட்டிக்கு சென்றிருக்க.. தன் குழந்தையை வேறு தாயிடம் ஒப்படைத்து விட்டு வந்திருக்க.. குழந்தையிட் நினைவு வேறு ஆயாசத்தைக் கொடுத்தது கலாவுக்கு.
சட்டென்று மித்ராவைக் கட்டியணைத்துக் கொண்டவள், “ஓகே ஓகே ரிலாக்ஸ்… டாக்டர் கண்ணுக்கு ப்ரஷர் கொடுக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காரு இல்லையா? கூல்.. ரிலாக்ஸ்.. குழந்தைங்க வேற பயப்படறாங்க… ரிலாக்ஸ்”என்று சொல்ல,
தன் தனங்கள் ஏறி இறங்க கீழ் மூச்சு, மேல் மூச்சு வாங்க மூச்சு விட்டவளுக்கு, மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் ஞாபகம் வந்தது.
நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் அவர்களின் மருண்ட முகம் பார்த்ததும் துயருற்றவள், “ஒண்ணுமில்லைடா.. ஒண்ணுமில்லை”என்று தேற்ற, கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான் விக்னேஷ்.
சும்மாவே வரண்டிருந்த இதழ்கள் கொஞ்சம் ஈரமானதும்.. கூடவே கொஞ்சம் ஆசுவாசமானது அவள் இதயம்.
அச்சமயம் கலா கேட்டாள், “கண்டியில் இருக்கும் சாதாரண ஆர். ஜே எப்படி.. அவ்வளவு பெரிய தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸ் சிஇஓவாஆஆ??”என்று.
அக்னிமித்ராவுமே தன் கடந்த கால நினைவுகளின் தாக்கத்தில் இருந்தமையினால், மடை திறந்த வெள்ளம் போல சொற்கள் வெளிப்பட, நிர்மலமான குரலில் நடந்தது அனைத்தையும் சொல்லலானாள்.
அவள் உரைத்தவை கேட்டு அதிர்ந்து நின்றனர் கலாவும், கூடவே விக்னேஷூம்.
அப்படி அவள் என்ன சொன்னாள்? இதோ அவை இவை தாம். அக்னிமித்ராவின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட சம்பவங்கள் அவை!
“என்னோட தாத்தா ராஜாராமும், தேவ்வோட தாத்தாவும் சின்ன வயசுல இருந்தே ரொம்ப நல்ல ஃப்ரண்ட்ஸ்.. ரெண்டு பேரும் சேர்ந்து தான் படிச்சாங்க.. ஒரு கட்டத்தில் தேவ்வோட தாத்தாவுக்கு பிஸினஸ் பண்ணலாம்னு ஐடியா வந்தப்போ.. ரெண்டு பேரும் பார்ட்னர் ஆகலாம்னு முடிவு பண்ணாரு தேவ்வோட தாத்தா..
என் தாத்தாவுக்கு.. நண்பனுக்கு எப்படியாவது காசு திரட்டி கொடுக்கணும்ன்ற ஆசை இருந்ததே ஒழிய.. பிஸினஸ் பண்ணனும்னு ஆசை இருக்கலை.. அவர் கவனமெல்லாம் பிஎச்டி முடிக்குறதில் தான் இருந்தது..
ஆனால் தேவ்வோட தாத்தாவுக்கு பிஸினஸ் பண்ணனும்ன்ற வெறியே இருந்தது.. ரெண்டு பேரும் அக்ரீமென்ட் போட்டுக்கிட்டாங்க.. தேவ்வோட தாத்தாவுக்கு ஐம்பது பர்சன்ட், என் தாத்தாவுக்கு ஐம்பது பர்சன்ட் லாபம்..
சின்னளவுல தொடங்கிய தொழில் அது.. கொஞ்சம் காலம் தொடர்ந்து என் தாத்தாவுடைய பங்கு லாபம் அவருக்கு வந்தது..தேவ்வோட தாத்தாவே நேரா வீட்டிற்க்கு வந்து பணத்தைக் கொடுப்பாராம்.. நண்பன் மேல அவ்வளவு மரியாதை பாசம்..
தாத்தா.. ஒரு நாளாவது லெட்ஜர் எடுத்து.. கணக்கு செக் பண்ணதே கிடையாது.. அந்தளவுக்கு அவர் தன்னோட நண்பன் மேல நம்பிக்கை வைச்சிருந்தாரு.. தேவ்வோட தாத்தாவும் நாணயமாக தான் நடந்துக்கிட்டாரு..
தேவ்வோட தாத்தா காலத்துக்கு அப்புறம் தேவ் அப்பாவுடைய காலம் வந்தது.. தாத்தாவுக்கு ப்ரோபிட் வர்றது நின்னு போச்சு..தாத்தா போய் கேட்கும் போது ‘பிஸ்னஸ் நஷ்டத்துல போய்ட்டிருக்கு… எல்லா இடத்திலும் கடன்’னு கதை வந்தது.. என் தாத்தா.. அங்கே நடந்த தில்லுமுல்லு தெரியாமல் தேவ் அப்பா சொன்னதை முழுசா நம்பினாரு.. தாத்தா அதை அப்படியே விட்டுட்டாரு.. கொஞ்சம் காலம் போனது..
அப்போ எனக்கு பதினைந்து வயசு இருக்கும்.. என் அப்பாம்மா ஒரு கார் ஆக்ஸிடெண்ட் ல போய் சேர்ந்துட்டாங்க.. தாத்தாவுக்கு என் எதிர்காலம் பற்றி கவலை வர ஆரம்பிச்சது..அதில் நான் ஒரு பெண் குழந்தைன்றது கூடுதல் கவலையைக் கொடுத்தது.. அவரோட வயசும், இயலாமையும் வேற அவருக்கு ரொம்ப பயத்தைக் கொடுத்தது..
அவரும் என்னை விட்டுப் போயிட்டாருன்னா.. எனக்காக அவர் விட்டுட்டுப் போகுற அளவுக்கு.. அவர் கையில எதுவும் இல்லைன்றது அவரை யோசிக்க வைச்சது..”என்று நடந்தது அனைத்தையும் மென்குரலில் சொல்லிக் கொண்டே வந்து அவள் நிறுத்தி பெருமூச்சு விட,
அந்த இடைவெளியை கூட பொறுக்க மாட்டாத கலா கேட்டாள், “அப்பறம் என்னாச்சு?”என்று.
அவள் தொடர்ந்து சொன்னாள்.
“தாத்தா திரும்ப தேவ்வை தேடி போனாரு.. என் ஷேர்ஸை செட்டில் பண்ணிருங்கன்னு கேட்டு போனப்போ தான்.. என் தாத்தாவுக்கும், கம்பெனிக்கும் ஒரு அணுவளவு கூட சம்பந்தம் இல்லைன்னு சொன்னாங்க..
தாத்தா தன் நம்பிக்கையான ஆள் மூலமாக விசாரிச்சு பார்த்தப்போ தாத்தாவுடைய ஷேர்ஸ் தேவ்வுடைய மாமா பேருக்கு.. மாற்றி அபகரிக்கப்பட்டிருந்தது புரிஞ்சுது..
அதனால தான் தேவ் அப்பா காலத்தில் பணம் வர்றது நின்னு போயிருக்குறது புரிஞ்சது.. என் தாத்தாவை அவமானப்படுத்தி அனுப்பினாங்க..
என் தாத்தா.. தன் நண்பன் மேல வைச்ச நம்பிக்கையை.. கம்பனி மேல வைச்சதால.. நடந்த திருகுத்தாளமும்… கம்பனி மேல தாத்தாவுக்கு இருந்த உரிமையும் பறிபோனது பத்தியும் முன்னாடி தேடிப்பார்க்காமல் விட்டது தான் பெரும்பிழை..
என் தாத்தாவுக்கு ஸெட்டில் பண்ண காசு எல்லாமே ஏட்டில் இருந்த கணக்குன்றதால.. அதை அழிச்சு பின்னாடி தில்லு முல்லு பண்ண வசதியா இருந்திருக்கு அவங்களுக்கு..
ஒருவேளை பேங்க் டிரான்ஸ்பர் பண்ணியிருந்தா.. அந்த ஆதாரம் அழிக்க முடியாததா இருந்திருக்கும்.. ம்ஹ்? என்ன செய்ய எல்லாம் விதி
அப்புறம் நானும் பெரியவளா வளர்ந்தேன்.. ஜர்னலிஸத்தைத் தேர்ந்தெடுத்து படிச்சேன்.. கொழும்பில் ஒரு பிரபல்யமான பத்திரிகையில் நிரூபரா வேலை பார்த்தேன்..
தாத்தா நமக்கு சொத்து தேவையில்லை.. என்கிட்ட தான் படிப்பு இருக்கே.. பணம் இன்னைக்கு இருக்கும்.. நாளைக்கு இருக்காது..ஆனால் படிச்ச படிப்பு தான் என்னைக்கும் கை கொடுக்கும்.. இதை அப்படியே விட்டிருங்கன்னு எவ்வளவோ தரம் அவர்கிட்ட சொல்லிப் பார்த்தேன்..
அப்போ என் தாத்தா கேட்டாரு “அப்போ நீ படிச்ச தர்மம் வெல்லும்.. வாய்மை வெல்லும்ன்றது எல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயா?”ன்னு.. அவரைப் பொறுத்தவரையில்.. அவர் ஏமாற்றப்பட்டதை தாங்கிக்க அவரால முடியலை..
என் தாத்தாக்கிட்டேயிருந்த ஒரே ஆதாரம்.. அந்த அக்ரீமென்ட்.. இந்தத் தொழிலோட ஆரம்பத்துல தேவ் தாத்தா கைப்பட எழுதிக் கொடுத்த ஒரு அக்ரீமென்ட் லெட்டர் அது!!
அந்த ஆதாரத்தை எடுத்துக்கிட்டு கோர்ட்டுக்கு போவேன்னு முதலில் எச்சரிக்கை பண்ணாரு.. அந்த ஆதாரம் அவர்கிட்ட இருந்தால் ஆபத்துன்னு.. அதை என்கிட்ட தந்தாரு..
நான் அந்த ஒரிஜினல் அக்ரீமென்ட்டின் ஸ்கேன்ட் காப்பி எடுத்து என் பென்ட்ரைவில் வைச்சிக்கிட்டேன்.. ஒரிஜினல் அக்ரீமென்ட் தேவ் மாமா கையில் அகப்பட்டு சின்னாபின்னமாகி போச்சு..
அதோட.. அந்த பென்ட்ரைவில் தேவ்வுடைய மாமா பண்ற சில அட்டூழியங்களை சேவ் பண்ணி வைச்சிருந்தேன்.. அதை என்கிட்டேயிருந்து குரூரமான முறையில் பறிச்சிக்கிட்டான் த்தேவ்..என்கிட்டேயிருந்து ஒரே ஆதாரம் போச்சு..”என்று பேசிக் கொண்டே வந்தவளுக்கு, தொண்டையை அடைக்கத் தொடங்கியது.
‘சேப்டர் வன்’ உணவகத்தின் வாஷ்ரூமில் நடந்த அத்தனையும் நிழற்படமாகக் கண்களில் விரிய, அன்றைய நாளின் கொடுமையிலிருந்து வெளிவர முடியாமல் தவித்தாள் அக்னிமித்ரா.
இன்றும் அவன்.. தன் மேல்சட்டையைக் கிழித்து.. உள்ளாடை தாண்டி பார்ப்பது போன்ற ஓர் தோற்றமயக்கம் தோன்ற… கைகள் தன்னுடையின் கழுத்துவளைவைப் பிடித்துக் கொண்டன கெட்டியாக.
தனங்கள் ஏறி இறங்க உஷ்ணமூச்சு வெளிப்பட அவள் நிற்க, அவளுள் நடக்கும் மாற்றங்களை அறியாது கையைப் பிடித்தாள் கலா.
அதில் திடும்மென்று கோர கனவிலிருந்து திடுக்கிட்டு விழித்தவள் போல நனவுலகம் வந்தவள்,
பின்பு சமாளித்துக் கொண்டு வாய் திறந்தவள், “அப்ப.. வும் கூட தாத்தா.. தேவ் கூட நான் பேசிப் பார்க்கிறேன்னு கால் எடுத்தப்போ.. அவனும் டாஸிலிங் வாங்கன்னு சொன்னான்..நானும் தாத்தாவை கூட்டிட்டு டாஸிலிங் போனேன்.. போன தாத்தா திரும்ப வரவேயில்லை..ப்ளேன் பண்ணி.. ஃபயர் ஆக்ஸிடெண்ட் மாதிரி செட் பண்ணி என் தாத்தாவைக் கொன்னான்..
இதோ இப்போ அவன் பேசினதா லீக்காகி இருக்க இந்த கன்வர்ஸேஷன்… டூ யர்ஸ் முன்னாடி என் காதுபடக் கேட்டேன்னு நான் சொல்லியிருந்தால்.. நீங்க எல்லாரும் நம்பியிருப்பீங்களான்னு தெரியலை??
என் காதால கேட்டேன்.. “என் பரம எதிரியும் உள்ளே தான் இருக்கான்.. இது அவனுக்கு போட்ட ஸ்கெட்ச்”ன்னு என் தாத்தாவைக் கொல்லப் போட்ட திட்டம்னு சொன்னதை என் ரெண்டு காதாலேயும் கேட்டேன்..
அதைத் தடுக்க முன்னாடி.. நிலைமை கையை மீறி போயிருந்தது.. என் பார்வையை பறிச்சிக்கிட்டான் அந்த த்தேவ்..
கடைசியா என் தாத்தா உடல் கூட எப்படி இருந்ததுன்னு என்னால பார்க்க முடியலை..
அந்தக் கொடூர நினைவுகளை மறக்க கண்டிக்கு வந்து ஸெட்டில் ஆஆனேன்… இசை எஃப். எம்மில் ஒரு வேலையும் தேடிக்கிட்டேன்..
எனக்கு புது உறவா.. எல்லாமுமா அதி கிடைச்சான்.. எனக்கொரு வாழ்க்கை கொடுத்தான்..என் மனசு ஆணித்தரமாக நம்புது.. இத்தனை உண்மையும் இன்னைக்கு வெளிச்சத்துக்கு வந்திருக்குன்னா.. அது கண்டிப்பா அதி தான் காரணமா இருக்கும்னு. இந்த உலகத்துல நான் ஒருத்தனுக்கு வாழ்க்கை பூரா கடமைப்பட்டிருக்கேன்னா அது அதிக்கு மட்டும் தான்… ”என்று நடந்தது அத்தனையையும் சொல்லி முடித்தவளுக்கு,
இத்தனை நாளாக நெஞ்சோடு இறுகப் புதைந்திருந்த சோகம்.. மெல்ல மெல்லக் கரைவது போல இருந்தது.
மெல்ல தலை குனித்துப் பார்த்த போது.. குழந்தைகள் இருவரும் அன்னை மடியிலேயே சுருண்டு படுத்திருந்தனர். அவர்களின் கூந்தலை தாய்மையுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருக்க, அங்கே மயான அமைதி நிலவியது.
கலாவின் கண்களில் அக்னிமித்ராவின் கதையைக் கேட்டு நீர் துளிர்த்திருந்தது. ‘இவள் வாழ்வில் இத்தனை கஷ்டங்களா?’ என்றிருந்தது கலாவுக்கு.
நிலவிய மயான அமைதியை உடைத்துக் கேட்டாள் கலா, “இப்போ நீ இந்த ஆப்பர்ச்சுனிட்டியை ஏத்துக்கப் போறதில்லை? அப்படித்தானே? ”என்று.
அக்னிமித்ரா எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக குழந்தைகளின் தலை வருடுவதிலேயே குறியாக இருந்தாள்.
தன்னை அவள் கவனிக்காமல் இருப்பது போல நடிப்பது கலாவுக்கு சின்ன ஆத்திரத்தை மூட்ட,
அக்னிமித்ராவின் நாடி பற்றித் தன்னை நோக்கி திருப்பியவள், “சத்தியம் வெல்லும்ன்றதை நிரூபிக்கப் போய் தான் உயிரைக் கொடுத்தாரு உன் தாத்தா.. இப்போ எல்லாமே கூடி வந்திருக்கு.. இதை ஏத்துக்கலைன்னா உன் தாத்தா ஆத்மா சாந்தியடையும்னு நினைக்கிறியா நீ?”என்று கேட்க, அந்தக் கேள்வி அவளுக்குள் ஓர் சின்ன சலனத்தைக் கொடுக்க, பட்டென கண்களை மூடித் திறந்தாள் மித்ரா.
கலாவோ, “உன் கிட்ட குரூரமா நடந்துக்கிட்ட தேவ்.. உன் தாத்தா உயிரைப் பறிச்ச தேவ்.. உன்னை இத்தனை நாளா ஒரு அகதி மாதிரி பரிதவிக்க விட்ட தேவ்.. அவனுக்கு நல்ல பதிலடி கொடுக்கணும்னு.. நினச்சின்னா.. இந்த பதவியை ஏத்துக்க!!..”என்று கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும்,
மித்ராவின் இதயவறையில் ஆழமாகப் பதிய.. கலாவையே நிர்மலமான முகத்துடன் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவள். ஆனால் அவள் கைகளோ குழந்தையின் கூந்தல் வருடுவதை மட்டும் நிறுத்தவேயில்லை.
எங்கேயும் காதல்!
[18]
ஒரு மாதத்திற்கு பிறகு,
அவள் தற்போது இருக்கும் கொழும்பு வீட்டின், நடுக்கூடத்தில் போடப்பட்டிருந்த, மெத்து மெத்து என்ற சோபாவில் குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் அதிமன்யுவின் மகவுகள்!!
கொழு கொழு என்ற கன்னங்களோடு.. சுருள் சுருளான பரட்டைத்தலையும், அவர்களின் குதித்தலில், எம்பி எம்பி அசைய,
அதைப்பார்ப்பதற்கே அவ்வளவு இரம்மியமாக இருந்தது அக்னிமித்ராவுக்கு.
கையில் உணவடங்கிய சின்ன கலத்துடன், குழந்தைகளுக்கு ஊட்டி விடும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, அவர்களுக்கு ஒரு வாய் கவளம் ஊட்டிவிக்கவே, படாதபாடு பட வேண்டியதாக இருந்தது.
பாவம் அக்னிமித்ரா!
சின்னவள் அனன்யா சமர்த்துப் பிள்ளையாக தாயின் உணவுக்கவளங்களை வாங்கிக் கொள்ள,
பெரியவள் அக்ஷயா தான், தாய் ஸ்பூனை வாயை நோக்கிக் கொண்டு வரும் போதெல்லாம்.. இதழ்களை அழுந்த மூடிக் கொள்ளலானாள்.
இப்படி அடாவடித்தனம் செய்யும் குழந்தைகளை.. ஒன்றரை வருடங்களாக, கணவன் சளைக்காமல் பார்த்துக் கொண்டதையெண்ணும் போதெல்லாம்..
அதிமன்யு மேலுள்ள காதல் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே போனது அவளுக்கு.
“பேபி.. ஆ.. சொல்லுங்க..ப்ளீஸ்டா இது மட்டும்.. அம்மா செல்லம்ல?”என்று பலவாறு கெஞ்சிக் கூத்தாடி.. இறுதியாக இருந்த ஒரு வாயையும் ஊட்டி விட்டவளுக்கு, நிஜமாகவே அத்தனை ஆயாசமாக இருந்தது.
பெரும் பெரும் மூச்சுக்களை வாங்கிக் கொண்டே..ரொம்ப நேரம் குனிந்திருந்தால் சின்னதாக இடுப்பு வலி தோன்ற.. இடுப்பை பிடித்துக் கொண்டே நிமிர்ந்தாள் அவள்.
வாய்க்குள் அதக்கப்பட்ட உணவை மென்று கொண்டே தாயின் நாடியை தன் பிஞ்சு விரல்களால் மென்மையாகத் தட்டித் தட்டி, “ம்மா..ப்பா எந்த? (எங்கே?) ..”என்று கேட்டாள் அக்ஷயா.
இந்த ஒரு மாதமாக அவள் மட்டுமே கணவனின் நினைவுகளில் மூழ்கியிருக்கவில்லை.
மாறாக அவள் ஈரைந்து மாதங்கள் சுமந்து, ஈன்றெடுத்த குழந்தைகளும் அடிக்கடி அவனை நினைவு கூர்ந்து கொண்டே தானிருந்தனர்.
அக்ஷயாவை தாய்மை சொட்டும் மிருதுவான விழிகளுடன் பார்த்தவள், “ப்பா.. ப்பூம் போயிருக்காரு சீக்கிரமே வந்துடுவாருடா”என்று சொல்ல,
சமர்த்துப் பிள்ளையான அனன்யாவும் சட்டென வாய் திறந்து, “ வீத்துத்து (வீட்டுக்கு) போலாம்மா..” என்று கவலையான முகபாவனையுடன் சொல்ல,
அவள் தாயல்லவா?.. உள்ளே ஏதோ செய்ய, இருவரையும் கட்டியணைத்துக் கொண்டாள்.
குழந்தைகள் இருவரும் இன்னும் கண்டியையே தங்கள் வீடாக எண்ணிக் கொண்டிருப்பதுவும்,
தந்தைக்காக, தந்தையின் அணைப்புக்காக, அவனது கைவளைவில் உறங்கும் சுகத்துக்காக ஏங்குவதுவும் அவளுக்கு அப்பட்டமாகவே புரிந்தது.
குழந்தைகள் மட்டுமல்ல.. அவளும் அல்லவா அவன் மேனி சிந்தும் நறுமணத்திற்காக அல்லாடுகிறாள்??
கண்கள் கலங்க இருவர் உச்சந்தலையிலும் முத்தம் வைத்தவள்,
“அப்பா வந்ததும் போலாம்..”என்று சொல்லி, அவர்களை சமாதானப்படுத்த, சரியாக அவ்விடம் வந்து சேர்ந்தான் தேவ் க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் செயலாளரான ஜனன்.
குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காகவென்று பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் கொஞ்சம் வயசான நானிம்மாவிடம் குழந்தைகள் இருவரையும் ஒப்படைத்து விட்டு,
செயலாளர் ஜனன் பக்கம் திரும்பிய போது, அவள் பார்வையில் ஓர் நிமிர்வு தெரிந்தது.
கண்பார்வை கிடைத்த இந்த ஒரு மாதமும், மூன்று வாரங்களுமான காலப்பகுதியில் அவள் வாழ்க்கை எதிர்பாராத அளவில் மாறிப் போயிருந்தது.
அவள் தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸின் சிஇஓவாக பதவியேற்க ஒத்துக் கொண்டதும், உடனேயே சிஇஓ நாற்காலியில் அவளால் அமர்ந்து விட முடியவில்லை.
ஒரு நிறுவனத்தை நடத்தி செல்வதற்கான குறுகிய காலப் பயிற்சி இந்த ஒரு மாத இடைவெளியில் அவளுக்குக் கொடுக்கப்பட,
ஊடகவியலாளராக இருந்த அக்னிமித்ராவை விடவும், வெள்ளைப்பிரம்பு உபயோகப்படுத்திய அக்னிமித்ராவை விடவும்,
இந்த அக்னிமித்ராவிடம் பார்வையில் ஓர் தெளிவு,நடையில் ஓர் நிமிர்வு, செயல்களில் ஓர் அதிமிதமான துணிவு இருக்கவே செய்தது அவளிடம்.
தன் தெளிவற்ற பார்வைப் புலத்தை சீராக்க.. அவள் அணியும் ஸ்பெக்ஸ் வேறு.. அவளுக்கு ஓர் உயர்ந்த அழகைக் கொடுக்க, சற்றே பார்வை உயர்த்தி, தன் முன்னே நின்றிருக்கும் செயலாளரைப் பார்த்தாள் அக்னிமித்ரா.
அவனோ முகம் மலர, “குட்மார்னிங் மேம்” என்று புன்னகைக்க, அதை ஒற்றைத் தலையசைப்பில் ஏற்றுக் கொண்டவள், நிமிர்வான குரலில், “இன்னைக்கு என்ன ப்ரோக்ராம் இருக்கு?”என்று கேட்டாள்.
தன் கையிலிருந்த நோட்பேட்டினை நோக்கியவனாக ஜனன் என்றழைக்கப்படும் ஜனார்த்தனனும்,
“மேம் இன்னைக்கு உங்க டிரைனிங்க் கிளாஸஸ்ல.. சைனீஸ் கிளாஸூம் இருக்கு.. டே ஆப்டர் டுமோரோ நீங்க சிஇஓவாக பதவியேற்றதும்.. நம்ம கம்பெனிக்கு வரப்போற மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. சைனீஸ் கன்ஸ்ட்ரக்ஷனோட ப்ராஜெக்ட்.. அவங்களை இம்ப்ரஸ் பண்றதுக்காக.. ஒரு சின்ன வெல்கம் ஸ்பீச் சைனீஸ்ல… பண்ணனும்”என்று சொன்னவனின் முதலும், கடைசியுமான இலக்கு,
தேவ்வின் குரூர செயல் அம்பலமானதும், ‘நாட்டு மக்கள் மத்தியில் தன் நன்னாமம் இழந்து தவிக்கும் தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸ்’ஸின் சுயமரியாதையை, அது இழந்த நன்மதிப்பை மீண்டும் கட்டியெழுப்புவது தான்.
அக்னிமித்ராவின் வாழ்க்கையின் பின்புலமும், அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், தற்போது கிடைத்திருக்கும் நீதியும், அவள் சிஇஓவாக.. நாளை மறுநாள் பதவியேற்கும் போது, ஊடகங்கள் மூலம்,
நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால்.. அக்னிமித்ரா மீது ஏற்படப் போகும் அனுதாபம் காரணமாக.. வணிகச்சந்தையில் சரிந்த, நிறுவனத்தின் நாமத்தை மீண்டும் உயர்த்தலாம் என்பது அவனின் திண்ணிய எண்ணம்.
ஆனால் ஜனார்த்தனனின் உயரிய எண்ணம் அறிந்திராத அக்னிமித்ராவின் எண்ணமோ அன்று வேறாக இருந்தது.
அவளது விழிகள் விட்டத்தில் நிலைக்குத்தி நின்றது.
தீர்க்கமான பார்வை பார்த்தவளாக, இறுகிய குரலில், “இல்லை ப்ரோக்ராமை சேன்ஞ் பண்ணுங்க.. இன்னைக்கு ‘வெலிக்கடை’ பிரிசன் போறோம்..” என்றவளை, அதிர்ச்சி மல்கப் பார்த்தான் ஜனார்த்தனன்.
“..பட் மேம்.. க்ளாஸ் இஸ் வெரி இம்போர்டன்ட்..??” என்று அவன் எடுத்துரைக்கப் போக, அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ஓர் பார்வை.
பின்பு கறாரான குரலில், “நான் உங்களுக்கு புது சிஇஓவா?இல்லை நீங்க எனக்கு புது சிஇஓவா?டூ வாட் ஐ ஸே!! காட் இட்?”என்று கேட்க, அதில் அவன் வாய் அப்படியே தடைப்பட்டு நிற்க, மறு பேச்சு பேசாமல், நின்றவன்,
தன் புது எஜமானியம்மாள் கொழும்பில் இருக்கும் ‘வெலிக்கடை’என்னும் இடத்திலுள்ள சிறைச்சாலை நோக்கிப் பயணமாக ஆவன செய்ய,
பணிவாக தலையாட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
***
வெலிக்கடைச் சிறைச்சாலை.
பல நூற்றுக் கணக்கான அப்பாவி மக்களை.. தீ விபத்து என்னும் பேரில் துடிக்கத் துடிக்கக் கொன்ற இராட்சசன் தேவ்வும், அவன் மனைவி, அவன் மாமா என மொத்த பட்டாளமுமே வாசம் செய்யும் இடம் தான் அது!!
தேவ்வை சந்திக்கும் வெறி, அவள் நாடி, நரம்பெங்கும் ஊடுருவிப் பாய்ந்து கொண்டிருக்க.. அந்த கட்டிடடத்தின் கோரிடோர் வழியாக நடந்து கொண்டிருந்தவளின் நடை துரிதமானது.
தேவ்வின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேவ்வுக்கு எதிராக வெளியான ஆதாரமும், கூடவே இறுதித் தருவாயில் தன் வாயாலேயே, இந்தக் குற்றத்தைப் புரிந்தது நான் தான் என்று ஒப்புக் கொண்டதையும் கருத்தில் கொண்டு,
அவனுக்கு மரணதண்டனை அளிப்பது என்று தீர்ப்பு வழங்கியிருந்தது.
இலங்கையின் நீதிமன்றங்கள் பெரும்பாலும் ஓர் உயிருக்கு மரணதண்டனை வழங்க.. கொஞ்சம் நிதானிக்கும்; ரொம்ப யோசிக்கும்.
குற்றத்திற்காக குற்றவாளி குற்றவுணர்வு தெரிவிக்கும் போது, அநேகமான தருணங்களில் மரணதண்டனை வழங்கப்படாமல் ஆயுள்தண்டனை வழங்கப்படுவதே வழக்கமும் கூட.
ஆனால் தேவ்வின் வழக்கு கொஞ்சம் கோரமான.. நாட்டு மக்கள் அனைவரையுமே உலுக்கிய ஓர் வழக்கு.
நடந்தேறிய தீ விபத்தில் முற்றாக உயிரை நீத்தவர்கள் நூற்றி நாற்பத்திரண்டு பேர். அங்கவீனமுற்றவர்கள், காயத்தோடு தப்பித்தவர்கள் எண்ணிக்கை பதினேழு!!
இத்தனையும் ஓர் மனிதன் மனிதாபிமானமேயற்று நடத்திய வெறிச்செயல் எண்ணும் போது.. கொடுக்கப் போகும் தண்டனை துரிதமாகவும்,
அதே சமயம் இன்னொருவர் இதே எண்ணம் கொண்டால்.. அவர்கள் எண்ணம் களையுமளவுக்கு ஓர் பாடமாகவும் இருக்க வேண்டும் என்று கருதிய இலங்கையின் உயர் நீதிமன்றம்..
தேவ்விற்கு மரணதண்டனை விதித்தது.
இது போக, இலங்கை அரசின் சட்டத்தின் படி… கையில் சட்டவிரோதமான ஹெராயின் போன்ற போதைப்பொருள் வைத்திருந்தால்.. எந்தவித பிடியாணையும் இன்றி.. சிறையிலடைத்து,
மரணதண்டனை வாங்கிக் கொடுக்க முடியுமான இறுக்கமான சட்டமும் இருக்க.. போதைப்பொருள் கடத்துவதை தொழிலாகக் கொண்ட நடாஷாவின் தந்தை நிலை தேவ்வை விடவும் கவலைக்கிடமாக இருந்தது.
இலங்கையின் இறுக்கமான சட்டம் தேவ்வின் மாமா உதயகுமாரை இலகுவாக விட்டு வைக்கவில்லை.
மருமகனோடு மரணத்தின் நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தான் அரக்கனான உதயகுமார்.
தந்தையின் சட்டவிரோதமான வணிகத்துக்கு உதவிய குற்றத்தின் பேரில் நடாஷாவுக்கும் கூட ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருக்க,
சமூகத்தின் அதிமுக்கிய குற்றவாளிகள் அழியப்போகும் நன்னாளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர் நாட்டு மக்கள்!!
இவை அனைத்தும் இந்த ஒரு மாதக்காலப்பகுதியில் நடந்து முடிந்திருக்க.. அது அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களே தான்.
அங்கே சிறையில் தன் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்த தேவ்வுக்கு, ‘யாரோ அவனைத் தேடி வந்திருப்பதாக’ தகவல் தெரிவிக்கப்பட,
அக்னிமித்ராவுக்கு முன்னாடியே.. அந்தச் சின்னக்கம்பிச் சட்டங்கள் கொண்ட அறையில் காத்திருந்தான் தேவ் வர்மன்.
சற்றே இருட்டு சூழ்ந்த, அங்கே இருந்த துவாரங்கள் வழியாக வெளியே இருந்து கொஞ்சமாக சூரிய ஒளி அவ்விடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும் சந்திப்போர் கூடம் அது!!
தூரத்தே ஒரே ஒரு காவலாளி ஆயுதம் ஏந்தியவராக நின்றிருக்க, அவனும், அவளும் மாத்திரமென அந்தக் கேட்போர் கூடம் தனிமைப்பட்டு நின்றது.
தன் முன்னாடி… புறமுதுகிட்டு நின்றிருந்த தேவ்வைக் கண்டதும் உள்ளுக்குள் ஓர் ஆத்திரம் சுருசுருவென்று பொங்க,
பற்களைக் கடித்துக் கொண்டே வாய் திறந்தவள்,
“ப்பாதகம் செய்பவரைக் க்கண்டால்
பயம் க்கொள்ளலாகாது ப்பாப்பா..
அவர் ந்நெஞ்சில் ஏறி
ம்மிதித்து வ்விடு ப்பாப்பா..
முமுகத்தில் க்காறி
உமிழ்ந்து விடு பாப்பா”என்று உணர்ச்சிபூர்வமாக பாரதியார் கவிதைப் படித்தவள், அவன் புறமுதுகைக் கூட வெறுப்பு உமிழப் பார்த்தாள்.
அதை வெளிப்படுத்தியவள் ஆக்ரோஷமான குரலில்,
“தப்பு செஞ்சிட்டு தப்பிச்சிரலாம்னு நினைச்சிட்டிருக்கியா என்ன? பார்த்தியா.. உலகம் என்னையும், உன்னையும் எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்குன்னு? .. நீ ஜெயிலுக்குள்ள கைதியாக!! .. ஆனால் நான் உன்னோட கம்பெனிக்கே முதலாளியாக!!..”என்று கூறியவளை நோக்கி மெல்ல திரும்பியது அவன் தலை.
அவளை ஏறிட்டு நோக்கியவனின் கண்களில் யாரும் பார்த்திராத ஓர் வெறுமை இருந்தது.
தன் முன்னே நின்றிருப்பது யாரென்று கூட ஒரு சில விநாடிகளுக்கு அவனுக்கு ஊகித்துக் கொள்ளவே முடியாமல் போகுமளவுக்கு, ஜெயில் களி தின்ற அவன் மூளை மழுங்கிப் போயிருந்தது.
அக்னிமித்ராவை ஒரு சில விநாடிகள் உற்றுப் பார்த்தவனுக்கு, அதன் பின்பே தன் முன்னாடி நின்றிருப்பது யாரென்று புரிய, தேவ் வர்மனின் விழிகள் மெல்ல இடுங்கியது.
அவனைப் போலவே, அவளும் அவனைக் கூர்ந்து தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னை நோக்கித் திரும்பிய தேவ்வைக் கண்டு.. ஓரெட்டுப் பின்வாங்கியவள், உடல் வெளவெளக்கத் தான் நின்றிருந்தாள்.
அதிர்ச்சியிலிருந்து வெளிவர முடியாமல் விழிகள் அகல விரிய, “நீ ந்நீ…?? தேவ் இல்லை!!”என்றாள் உள்ளே அடங்கிப் போன குரலில்.
அவளது வசனங்களில் அவ்வளவாக கவனம் பதியாத தேவ் வர்மனின் ஒற்றைப்புருவம் வன்ம வதனத்துடன் மேலுயர்ந்தது.
அக்னிமித்ராவின் முகத்திலேயே கண்கள் பதித்தவன், சாகப் போகும் அந்தத் தருவாயிலும்,
இளக்காரமான குரலில், “ஓ.. நீ.. அதிமன்யு பொண்டாட்டி.. தேட் ப்ளைன்ட் ஜர்னலிஸ்ட் தானே? .. அப்படின்னா நீ என் அண்ணி!! ..”என்றான் அந்தக் கயவன்.
“அண்ணியா..?”- உடம்பெல்லாம் ஓர் துணுக்கம் எய்திப் பரவக் கேட்டாள் அக்னிமித்ரா.
அவன் தலை மெல்ல ஆடியது. அவன் அமைதியாகத் தான் இருந்தான். இருப்பினும் அவன் கண்களில் இருக்கும் வன்மத்தீயோ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது.
“ம்.. அண்ணனோட பொண்டாட்டி அண்ணி இல்லாமல் வேறு யாரு..?”என்று அவன் திரும்பக் கேட்ட கேள்வியில், அவள் இதயம் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது.
“அதீஈஈ… உ.. உஉன் அண்ணனா?..”என்று அவள் கேட்ட அந்த நொடியில், அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவளுக்கே புரியவில்லை.
ஆயிரம் கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்து மண்டைக்குள் வண்டாய்க்குடைந்தது.
உள்ளே ஓர் உணர்ச்சிக் கலவரமே வெடித்தாலும், இருப்பினும் எதையுமே காட்டிக் கொள்ளாமல் நின்றவள், அவனது வன்மம் சிந்தும் விழிகளை, துணிவோடு எதிர்கொண்டாள்.
அவனைப் போலவே இளக்காரமான குரலில், “அவன் அப்பாவுக்கு ஒரு இல்லீகல் அபெயார் இருந்ததுன்னு சொல்லியிருக்கான்.. அந்த முறையில் பிறந்த த்தம்பியா ந்நீ!!.. என்று வெறுப்பு உமிழக் கேட்டாள் அவள்.
தேவ் உலகத்திலேயே வெறுத்தது ‘கேவலமான முறையில் பிறந்தவன்’ என்று பிறர் சுட்டிச் சொல்லும் சொற்களை.
அதையே சொல்லி மித்ராவும் அவனை வெறுப்பேற்ற, காட்டு மிராண்டித்தனமாக மாறியவன்,
எழுந்த ஆத்திரத்தில் தன் முன்னே இருந்த சின்னச் சின்னக் கம்பிகளாலான சாளரத்தை ஓங்கி அடித்தான்.
“சட்”என்று ஒலியெழுப்பிய வண்ணம்.. கடகடவென அதிர்ந்து கொண்டே ஓய்வுநிலையை அடைய, கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது அந்தச் சாளரத்திற்கு.
அவனது செயலுக்கு அசராமல் நின்றவளின் வதனத்தில் அச்சமென்பது கிஞ்சித்தும் கூட இருக்கவில்லை.
அந்த அரக்கனின் கைவிரல்கள் கம்பிகளை இறுகப் பற்றிக் கொள்ள அடித்தொண்டையில் இருந்து சீறியவனாக,
“உனக்காகத் தாஆஆன் அவன் என் வ்வீடு தேடி வந்தானாஆஆ? .. உனக்காகத் தான் அவன்.. இத்தனையையும் பண்ணானாஆஆ? ..உனக்காகத் தான் என்னை இந்த ந்நிலைமைக்கு ஆளானாஆஆ?”என்று கேட்டவன்,
கம்பியோடு கம்பியாக முகம் வைத்து அவளை நெருங்கிப் போய்,
அவளை உறுத்து விழித்தவனாக, “ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க.. இன்னும் இரண்டு நாள்ல என் வாழ்நாள் முடியப் போகுது தான்.. ஆனால்.. அவன் க்குடலை உருவ்வி.. மாலையா ப்போட்டுக்கற அளவுக்கு வ்வெறி இருக்கு..
எனக்கு இப்படி ஒரு காரியத்தைப் பண்ணிட்டு.. இதுவரை எப்படி உன் புருஷன் த்தலைமறைவாகி இருந்தானோ?? அதே மாதிரியே இருக்கச் சொல்லு..
அவன் வெளியே தலைகாட்டினான்னா.. நான் சாகமுதல்.. அவனை சாகடிப்பேன்..”என்று பல்லு போன பாம்பாக சீறினான் தேவ் வர்மன்.
தன் கணவன் மேல் அவன் தம்பிக்குள்ள வன்மத்தையும், ஆக்ரோஷத்தையும் கண்டு ஸ்தம்பித்து நின்றவள், அடுத்த நிமிடம் அவனை வெறுப்பேற்றுவதற்காகவே ஏளனமாக நகைத்தாள்.
நறுநறுவென பற்களைக் கடித்துக் கொண்டவன், “என் ஆத்திரம் உனக்கு சிரிப்பாஆஆ இருக்காஆஆ..??”என்று கேட்க, அவளது ஏளன நகை இன்னும் சில நொடிகளுக்கு நீண்டது.
“ஹஹஹா.. ப்பல்லு போன பாம்பு நீ.. சீர்றியா? ரெண்டு நாள்ல சாகப்போறவன் உதார் விட்றியா..?”என்று கேட்டவள் அவனை நோக்கி,
“கடைசி நேரத்திலும் நீ திருந்த மாட்ட..”என்றவள், அவனை ஏறிட்டும் பாராமல் அங்கிருந்து நகரத் தொடங்க, போகும் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்.
***
காரில் வந்தேறியதும்.. அவள் கண்கள் அதிகமாகவே கலங்கியிருந்தது.
அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்ததெல்லாம், சிறையில் அவள் கண்ட தேவ் வர்மனுக்கு, அவள் கணவன் அதிமன்யு மேல் தான் எத்தனை குரோதம்?
இப்படியான வன்மத்தையும், குரோதத்தையும் சுமந்து கொண்டும் கூட மனிதர்கள் இருக்க முடியுமா??
அவள் பார்வை கார்க்கண்ணாடியை வெறிக்க, கார் நில்லாமல் போய்க் கொண்டேயிருந்தது. காரை பதமாகப் பார்த்து ஓட்டிக் கொண்டிருந்தான் சாரதி.
கூடவே ஏதோ ஞாபகம் வர, செயலாளர் ஜனார்த்தனனின் அழைப்புக்கு’ எடுத்தாள் அக்னிமித்ரா.
ஓரிரண்டு ரிங்கிலேயே மறுமுனையில் அழைப்பெடுக்கப்பட,அமைதியாக அனைத்தையும் கூறுமளவுக்கு அவள் குரலிலும் சரி, அவளிலும் சரி துளி நிதானம் கூட இருக்கவில்லை.
படபடப்பான குரலில், “ஜனன்.. கம்பெனி மெயின் ஷேர் ஹோல்டர்ஸ் ஹிஸ்ட்ரி எனக்கு இம்மீடியட்டா வேணும்.. சீக்கிரம் மெயில் பண்ணுங்க.. ஈவன் இட்ஸ் என் ஹார்ட்காபி.. சென்ட் ஸ்கேன்ட் காபி.. ஹரி அப்”என்று அவனை அவசரமாக தான் சொன்ன வேலையைச் செய்யும்படி பணித்தவள், அவனுடைய மறுபதிலைக் கூட கேட்க பொறுமையில்லாமல், ஃபோனை கட் செய்திருந்தாள்.
பின் தன் சாரதி வீட்டுத் தெரு முனையூடாக திரும்புவதைப் பார்த்தவள், “ட்ரைவர்.. வீட்டுக்கு வேணாம்… நான் சொல்ற இடத்துக்குப் போங்க”என்று ஓரிடத்தின் பேரைக் குறிப்பிட்டுச் சொல்ல,
வண்டியும் வீட்டுத் தெருமுனையில் திரும்பாமல் நேராகப் பயணிக்கவாரம்பித்தது.
காருக்குள் சற்றே ஆசுவாசமாக அமர்ந்து, பெருமூச்சு விட்டுக் கொண்டவள், தன்னையும் மீறி வழியும் கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டே,
தன்னுடைய செல்லை எடுத்து, யூடியூப்பில் ஒரு மாதத்துக்கு முன்பு ஒளிபரப்பான செய்தியை திரும்பவும் ஓடவிட்டுக் கேட்கலானாள்.
ஆபரேஷன் செய்து கண் திறந்த வேளை அவள் கேட்ட செய்திகள் யாவும் தலைப்புச் செய்திகளாக இருக்க, இன்று இந்நொடி காரில் கேட்ட செய்திகள் விரிவான செய்திகளாக இருந்தது.
அவள் கேட்ட விரிவான செய்திகள், அவளுடைய சில கேள்விகளுக்கு விடை கொடுத்து, பல புதுக் கேள்விகளை புதிதாகப் பிறப்பிக்கவே செய்தது.
“டாஸ்லிங் ஆடையகத்தில் நடந்தேறிய தீவிபத்தின் முக்கிய காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஷங்கர் தேவ் வர்மன்.. தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸின் முன்னாள் சிஇஓவான சூர்ய தேவ் வர்மனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருக்கும் தன் அண்ணன் திரும்பி வரும் வரை பதவியேற்ற ஷங்கர் தேவ் வர்மன் நிகழ்த்திய கோர செயல் முழு நாட்டையுமே உலுக்கியுள்ளது..” என்ற அந்த செய்தி வாசிக்கும் பெண்,
ஒலி மயக்கம் ஏதுமின்றி அழகான தமிழில் வாசிக்க.. இவள் தான் பெயர் மயக்கம் கொண்டு நின்றாள்.
அதிர்ச்சியில் தன்னையும் மீறி வாய் திறந்தவள், “அப்போ ரெண்டு தேவ் வர்மனா?”என்று முணுமுணுத்த தொனியில் கேட்க,
பட்டெனத் திரும்பிய டிரைவரோ, “என்ன சொன்னீங்க மேம்?”என்று கேட்க, அதற்கு விடை சொல்ல நாவெழாத அளவுக்கு , அவள் ஏதோ யோசனையில் மூழ்கிப் போயிருந்தாள்.
அடுத்த மூன்று மணித்தியாலத்தில் அவள் கொழும்பிலிருந்து புறப்பட்டு கண்டியை வந்தடைந்திருந்தாள்.
*****
இலங்கை என்பது ரொம்பவும் சின்ன நாடு என்பதால், அதன் தலைநகரமான கொழும்பில் இருந்து.. கண்டியை நோக்கிப் புறப்பட வெறும் மூன்று மணித்தியாலங்களே பிடித்திருந்தது.
அவளுடைய பாதங்கள் சரியாக ஒரு மாதம் கழித்து மீண்டும் அவர்களுடைய கொழும்பு வீட்டில் பதிந்தது.
அவளிடம் இருக்கும் பிரத்தியேகமான சாவி கொண்டு கதவைத் திறந்தவளுக்கு, வீடு முழுவதிலும் இருந்தது வந்தது
அவள் பார்வையற்று இருந்த போது இதம் தந்த சூரிய வெப்பம்!!
அவனோடு அவள் வாழ்ந்த வீடு. அவள் தன் கண்களை அவ்வீடெங்கிலும் சுழல விட்டாள்.
அவள் பார்வை பதிந்த ஒவ்வொரு இடமும் அவனும், அவளுமாக கூடி மகிழ்ந்த ஆயிரம் கதை சொல்லியது அவளுக்கு.
அங்கே தொடர்ந்து விக்னேஷ் வாசம் செய்வதால், வீடு எப்போதும் போல சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்க.. அந்தந்த பொருட்கள்.. அந்ததந்த இடத்திலேயே அப்படியே இருந்தது.
அவன் நினைவுகள் வேறு காதல் கொண்ட அவள் உள்ளத்தைக் கலங்கடிக்க, மேற்கொண்டு எதையும் யோசிக்காமல் தன் அறையைத் தேடி விரைந்தவள், அசுர வேகத்தில் எதையோ தேடவாரம்பித்தாள்.
வாட்ரோப் டிராயர் திறந்தவள், அப்படியே இம்மி கூட பிசகாமல் இருந்த தன் ஆடைகளைக் கலைத்து, எதையோ பரபரப்பாகத் தேடினாள்.
அறை கொஞ்சம் ரணகளப்பட்டது. ஆனால் அவள் தேடுதல் வேட்டை மட்டும் ஓயவேயில்லை.
இறுதியாக அவள் கணவன் உபயோகப்படுத்தும் பழைய டிராயரின் நினைவு வர, ஓடிப்போய் அதைத் திறக்க முற்பட்டவள்,
அருகிலிருந்த ஸ்டூலில் தன் இடதுகாலின் சுண்டு விரலை இடித்துக் கொண்டவளின் கண்களில் இருந்த ஸ்பெக்ஸ், சடாரென நிலத்தில் வீழ்ந்து அதன் கண்ணாடி உடைந்தும் போனது.
கண்ணாடி பறி போனதும் பார்வை மங்கலாக மாறிப் போனதையும், சுண்டு விரல் இடித்துக் கொண்டதால் விளைந்த சுருசுருவென்று ஓர் வலி காலெங்கும் விரவிக் கிடப்பதையும்,
அவ்வளவாக பொருட்படுத்தாதவள்…அறையின் இடுக்கில் இருக்கும் டிராயரைப் போய் திறந்தாள்.
உள்ளே கைவிட்டுத் துலாவிய வேளை.. அவள் கைகளில் அகப்பட்டுக் கொண்டது அவள் தேடி வந்த பொருள்!!
அது அவளது கல்யாண போட்டோ!!
கோயிலில் நடந்த திருமணத்தன்று.. அவனது நண்பன் விக்னேஷ் “ஸ்மைல் ப்ளீஸ்” என்ற வண்ணம் கிளுக்கிக் கொண்ட புகைப்படம் அது!!
கூடவே அவள் கைகளுக்கு கிடைத்தது ஒரு நவீனரக செல்போன் மற்றும் ஒரு லெட்டர்.
புகைப்படத்தை எடுத்து அவள் பார்க்க விளைந்தவளுக்கு தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
டாக்டர் கண்களை கசக்கக் கூடாது என்று சொன்னதையெல்லாம் நினைவில் இருத்தாத பெண், திரும்பத் திரும்பக் கண்களை கசக்கிக் கொண்டு அதில் பார்வையிட, அப்போதும் அந்தப் புகைப்படம் தெளிவாகத் தெரியவேயில்லை.
மாறாக, அவளது கண்கள் உள்ளுக்குள் எழுந்த எரிச்சலில் கொஞ்சம் சிவந்து வீங்கிப் போயிருந்தது.
அவள் புகைப்படத்தை வலுக்கட்டாயமாக பார்க்க முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த வேளை, அவளது முதுகுக்குப் பின்னாடி இருந்து கேட்டது விக்னேஷின் குரல்.
ஆளில்லா நேரம்… கதவு வேறு திறந்திருக்க, திருடன் தான் புகுந்து விட்டானோ என்றஞ்சியவனாக வீட்டுக்குள் நுழைந்த விக்கி, அங்கே அறையினுள் அக்னிமித்ரா இருப்பது கண்டு இனிதாகத் தான் அதிர்ந்தான்.
அந்த இன்ப அதிர்ச்சியை தன் குரலில் காட்டி, “என்னம்மா சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க? நீ மட்டும் தான் வந்திருக்கியா?.. குழந்தைங்கள கூட்டி வரலை?….”என்றவனின் கண்கள்,
மழலைகளைக் காணும் ஆர்வத்துடன் அறையைச் சுற்றி அலைபாய்ந்தது.
குழந்தைகள் இல்லை அவள் மட்டும் தான் தனியாகத் தான் வந்திருக்கிறாள் என்பது புலனாக, அவன் முகம் சற்றே சோர்ந்து தான் போயிருந்தது.
விக்னேஷை நோக்கி திரும்பியவளின் கண்கள் சிவந்திருக்க, அவளோ உணர்ச்சி சுத்தமாக துடைக்கப்பட்ட குரலில் கேட்டாள், “விக்கி.. அதியோட முழுப்பெயர் என்ன?”என்று.
அந்தக் கேள்வியில் உள்ளுக்குள் ஓர் உருண்டை நெஞ்சிலிருந்து வயிற்றை நோக்கி உருள்வது போல பயப்பந்துகள் உருண்டது விக்னேஷூக்கு.
இருந்தாலும் உடனேயே பதில் சொல்லி விடாமல் “என்னமா? அவன் பொண்டாட்டி நீ.. உனக்கு தெரியாது?..” என்று மழுப்ப, சீற்றத்தை அடக்க முடியாமல் தோற்றாள் அக்னிமித்ரா.
“த்தெரியாதுன்றதுனால தான் கேட்குஏஏறேன்.. அதியோட முழுப்பெயர் என்னஅஅ?”
அவளது சீற்றத்துக்கு அந்தச் சிவந்த நயனங்களும் ஒத்து பாட, அமைதியாக ஓரிரு கணங்கள் நண்பன் மனைவியையே பார்த்திருந்தான் விக்னேஷ்.
அவளது துளைக்கும் பார்வை அவனை விடவேயில்லை.
பார்வையின் சீற்ற வீரியம் தாங்க மாட்டாது சரணடைந்தவன், நிர்மலமான குரலில், “அதிமன்யு ஆதிதேவ் வர்மன்..” என்றான்.
எதை சந்தேகப்பட்டு, கண்டிக்கு ஓடி வந்தாளோ? அது ஊர்ஜிதமானதும், அதிர்ச்சி வைத்தியம் செய்தாற் போன்று.. திக்பிரம்மை பிடித்தவள் போல நின்றாள் அக்னிமித்ரா.
அவளால் அதை ஜீரணிக்க ஓரிரு நிமிடங்களுக்கும் மேலதிகமாக தேவைப்பட்டது.
“அப்படீன்னா நான் சந்தேகப்பட்டது சரி.. உங்களுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு”என்று அவள் சொன்னதைக் கேட்ட விநாடிகள், விக்னேஷ் தன் வாழ்நாளில் முகங்கொடுக்க பயப்பட்ட விநாடிகள்!!
அவளது மங்கலான விழிகள்.. தரையில் பதிந்தது. கருமணிகள் அங்குமிங்கும் அலை பாய்ந்தது.
தனக்குத் தானே முணுமுணுக்கும் குரலில்,
“தேவ் க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் ஃபவுன்டர், என் தாத்தாவுடைய உயிர் நண்பர் ‘தேவ் வர்மனு’டைய பேரைத் தான், அவர் பேரனுக்கும் வைச்சிருந்தாங்கன்னு நினைச்சிட்டிருந்தேன்..
ஆனால் இல்லை ‘தேவ் வர்மன்’றது அவங்க குடும்பப் பெயர்!!.. அவங்க அப்பா ‘சூர்யதேவ் வர்மன்’.. என் புருஷன்.. அதிமன்யு ஆதி தேவ்வர்மன். அவன் தம்பி, க்கொலைகாரன்.. ஷங்கர் தேவ் வர்மன். இது தெரியாமல் ஒரு ஜர்னலிஸ்ட்டா இருந்திருக்கேன்..??”என்றவள்,
தன் இடது விழியில் இருந்து மாத்திரம் ஒற்றைத் துளிக் கண்ணீர் வழிந்தோட, சட்டென நிமிர்ந்து விக்னேஷைப் பார்த்தாள்.
“அ.. அ.. அப்படீன்னா.. நான் இவ்வளவு நாளா வாழ்ந்தது..குழந்தைப் பெத்துக்கிட்டது? முகம் பார்க்காமலேயே காதலிச்சது.. என்னை முழுவதுமாக அர்ப்பணிச்சது.. என்னை மானபங்கப்படுத்திய அதே தேவ் வர்மன் கூட..அப்படித்தானே?”என்று சொன்னவளின் விழிகள் இருந்தது என்ன?
அருவெறுப்பா? இல்லை விரக்தியா? தோற்றுப் போய் விட்ட எண்ணமா? இல்லை காதலா? அனுமானிக்க முடியவில்லை விக்கியால்.
அவளிடமிருந்து எந்தக் கேள்விகளை ஒற்றையாளாக சந்திக்க பயந்தானோ?அதே கேள்விகள்.
நண்பனை அவள் வெறுத்து விடுவாளோ என்ற அச்சம் எழ, சட்டென்று இடையிட்டவன், தழுதழுத்த குரலில், “அவன் உன்னை உயிரா நேசிக்கிறான்மா..”என்றான்.
அவள் தன்னெதிரே கலங்கிய தண்ணீர் விம்பம் போல நிற்கும் விக்கியை ஓரெட்டில் நாடிப் போனவள், “தேவ் எங்கேண்ணா? இப்போ அவன் எங்கே இருக்கான்?.. அவன் எங்கேன்னு உங்களுக்கு தெரியும்னு எனக்குத் தெரியும்! .. சொல்லுங்க தேவ் எங்கேஏஏ..?”என்று கேட்க, தன்னைப் பிடித்து வைத்துக் கேள்வி கேட்கும் அவளது வதனத்தையே, உடல் இளகப் பார்த்துக் கொண்டேயிருந்தான் விக்னேஷ்.
அவனது முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகி வாடியது.
கண்களுக்குள் நீர் நிற்க, அழாமல் தேக்கு மரம் போல நின்றவன்,
இயலாமை மிகுந்த குரலில், “அவன் எது நடந்துரக்கூடாதுன்னு.. பயந்தானோ அது நடந்துருச்சு..! வாழ்க்கையில பிடிப்பே இல்லாமல் வாழ்ந்துட்டிருந்தவனை.. புது குழந்தையா பிறக்க வைச்சவள் நீ.. உண்மை தெரிஞ்சா நீ அவனை வெறுத்துருவேன்னு ரொம்ப பயந்தான்..!!”என்று சொல்ல,
அவனை முடிக்கக் கூட விடாமல் சட்டென இடையிட்டாள் அக்னிமித்ரா.
“எ.. எ.. என்ன சொன்னீங்க நான்.. நா.. நான்!! நான்.. அவனை வெறுத்துருவேன்னு பயந்தா.. னா?? அவனை நான் இன்னும் வெறுக்கிறேன்னு நினச்சிட்டி.. ருக்கானா? ..
அவன் காட்டிய ஒரு நாள் வெறுப்பு முகம்.. என்னோட பல நாள் இருட்டுக்குத் துணையா இருந்திருக்.. கும்னு போது.. எப்படி என்னால அவரை வெறுக்க முடி.. யும்? .. என் வெறுப்பை விட அவ.. ன் என் மேல வைச்ச காதல் அதிகம்..
ரெண்டு குழந்தை.. ங்களை வைச்சுக்கிட்டு.. கண் தெரியாத என்னையும் ஒரு குழந்தை போல பார்த்து.. க்கிட்ட என் அதிமன்யுவை என்னால எப்படி வெறு.. க்க முடியும்??
குழந்தை பிறந்த அறுபது நாள் தீட்டுன்னு.. பக்கத்துலேயே வராமல் இருக்கும் புருஷன்.. களுக்கு மத்தியில.. அந்த அசுத்தத்தையும் சுத்தமாக்க.. என் கூடவே பாத்ரூம் வரை வர்ற என் அதிமன்யுவை என்னா.. ல வெறுக்க முடியும்?
என்னோட இருட்டுல வெளிச்சம் பாய்ச்சியவனை எப்படி என்னால வெறுக்க.. முடியும்?”என்று கேட்ட போது அக்னிமித்ராவின் கண்களில் சத்தமேயின்றி வழிந்து கொண்டிருந்தது கண்ணீர்.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நாவிலிருந்து சொல்லாமல், இதயத்திலிருந்து உணர்வுபூர்வமாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“இனி என்கிட்டேயிருந்து எதையும் மறைக்க முடியாது..”என்றவள், சற்று முன் செயலாளர் ஜனார்த்தனன் அனுப்பிய டாக்குமென்ட்டை அவனிடம் காட்டினாள்.
தேவ் க்ரூப்ஸ் ஆப் கம்பனீஸ் என்பது அவள் தாத்தா ஐம்பது வீத பங்குகளையும், அதிமன்யு தாத்தா ஐம்பது வீத பங்குகளையும் கொண்டு தொடங்கப்பட்ட தொழில்.
இடையில் நடந்த பல தில்லுமுல்லுகளில் கைவிட்டுப் போன சொத்து, அவளிடம் திரும்ப வந்திருக்க, அவள் உரிமையாக இருப்பது ஐம்பது வீத பங்கிற்கு.
ஆனால் அதே சமயம் தேவ்வர்மன் தாத்தாவுடைய பங்குகள் இரு பேரன்களுக்குமாக இரண்டாகப் பிரியும்.அதிமன்யுவுக்கு இருபத்தைந்து வீத லாபம். கொடியவன் ஷங்கர் தேவ்வுக்கு இருபத்தைந்து வீத லாபம்.
அதிமன்யு தன்னுடைய இருபத்தைந்தையும், தன் மனைவி பேரில் எழுதியிருக்க.. அக்னிமித்ராவிடம் இருப்பது மொத்தம் எழுபத்தைந்து என்றான நிலையில்.. தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸ் இற்கு அவள் தான் உரிமையாளராக முடியும்!!
ஷங்கர் தேவ்வின் சொத்துக்கள் அனந்தரச் சொத்தாக, “தேவ் டிரஸ்ட்”டிற்கான மூலாதாரமாக பயன்படுத்தும் நிலை தற்போது வந்திருக்க,
அவையனைத்தையுமே விக்கியிடம் காட்டியவள், “எல்லா சொத்தையும், பொறுப்பையும் என்பேர்ல எழுதிட்டூஊஊ.. என்னை இந்த உலகத்துக்கு முன்னாடி தனியா விட்டுட்டூஊஊ.. எங்கே போனாஆஆன் அவன்..?? சொல்லு விக்கீஈஈ.. எங்கேஏஏ என் அதிமன்யு?”என்று கேட்க, தாழ்ந்திருந்த அவன் தலை பட்டென்று உயர்ந்தது.
நீண்ட அவன் கை, அக்னிமித்ராவின் முன்னங்கையைப் பற்றிக் கொண்டதோடல்லாமல்.. படபடவென்று இழுக்க,
அவளை அழைத்துக் கொண்டு அறையின் ஓரத்தில் இருந்த ஆளுயரக் கண்ணாடி நோக்கி நகர்ந்தவன், அவள் விம்பத்தை, அவளுக்கே காட்டியவனாக சொன்னான்,
“அவன் எங்கே எங்கேன்னு இத்தனை நாளா கேட்குறியே? .. அவன் எங்கேயும் போகலை.. உனக்குள்ள தான் இருக்கான்.. உன் கூடவே தான் இருக்கான்..”என்று சொல்ல, அவள் விழிகள் அகல விரிந்தன.
அவள் இதயத்துடிப்போசையை அவள் வெற்றுச்செவிகள் தாருமாறாகக் கேட்டது.
நாக்குழற ஆரம்பிக்க, “என்ன சொல்ற விக்கி?? நீ பொய் சொல்ற? ந்நீ. ப்பொ.. பொய் சொல்ற?”என்றவளாக, விக்கியின் தெளிவற்ற விம்பத்தைப் பார்த்தாள் அக்னிமித்ரா.
wowwwwww sema eppo adhi egga ponnan
Aiyoo nxt ud podunga sis yenaku last purila apo athiyoda kannutha mithraku vaciruka
ஐயோ அதிக்கு என்னாச்சு அடுத்த எபி சிக்கிரம் போடுங்க சிஸ்
Adhikku enna attchhu