ATM Tamil Romantic Novels

எங்கேயும் காதல்! – 19&20 (விஷ்ணுப்ரியா)

எங்கேயும் காதல்! 

      [19]

 

விக்னேஷின் தெளிந்த கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக செந்நிறங் கொள்ளத் தொடங்கியது.

 தன்னை கண்ணாடி வழியாக குழம்பிய முகத்துடன் பார்க்கும் நண்பனின் மனைவியைப் பார்த்தவன், 

அழுந்த மூடிய இதழ்களைத் திறந்து சொன்னான், 

“நான் இதுநாள் வரை சொன்னதுலாம் தான் பொய்!!! .. இப்போ..இந்த நிமிஷம்..சொல்றது தான் உண்மை.. என் மச்சி த்தேவ் உயிரோட இல்ல.. உனக்கு ஆபரேஷன் நடக்குறது.. ஒரு நாள் முன்னாடியே அவன் போய் சேர்ந்துட்டான்..!இதோ இப்போ அவன் விழிகள் வாயிலாகத் தான் நீ இப்போ இந்த உலகத்தை பார்த்துட்டிருக்க.. ”என்று.

விக்னேஷின் மொழிகள் கேட்டு வெடுக்கென்று திரும்பியவள் தெளிவற்றவனாகத் தெரியும் விக்னேஷை முறைத்தாள். 

கணவன் உயிருடன் இல்லை என்பதை ஏனோ நம்ப மறுத்தது பேதையின் உள்ளம்!! 

விக்னேஷின் சட்டைக்காலரை இரு கைகளாலும் பற்றி உலுக்கியவள், “அப்போ… என் ஆபரேஷன் அப்போ என் கூகூட ஃபோன்ல பேசினது ய்யாரு??.. சொல்லூஊஊ?ய்யாஆஆரு?” என்று வீடே எதிரொலிக்கக் கத்திக் கேட்டாள் அக்னிமித்ரா. 

விக்னேஷின் கண்கள், அக்னிமித்ராவின் கண்களை சந்திக்க பிரியப்படாமல், குற்றவுணர்வில் தாழ்ந்து கொண்டது. 

“அது என் ஃப்ரண்ட் வசந்த்.. அதி மாதிரியே நல்லா மிமிக்ரி பண்ணுவான்..அவன் தான் அன்னைக்கு நீ ஹாஸ்பிடல் இருக்கறப்போ உன் கூட அதி மாதிரியே பேசினான்.. வசந்த் கிட்ட நான் ஹாஸ்பிடல் போய் மிஸ்ட் கால் கொடுத்ததும்.. இது தான் கரெக்ட் டைமுன்னு புரிஞ்சிக்கிட்டு.. எனக்கு கால் பண்ணு.. அதி குரல்லேயே என்கிட்டேயும், அவன் வைஃப் கிட்டேயும் பேசுன்னு சொன்னேன்..அவனும் அதே போல கால் பண்ணான்.. அதி மாதிரியே பேசினான்.. சர்ஜரிக்கு உன்னை சம்மதிக்க வைச்சான்” என்று அவன் சொன்னதும், 

அவனது சட்டைக்காலரில் இருந்த அவள் கைகள் தானாக அகன்றது. 

அவள் கௌதமன் சாபம் கொண்ட அகலிகை போல சிலையாகி நிற்க, விக்னேஷ் தொடர்ந்து சொன்னான். 

“ஒரு தடவை அதி என்கிட்ட சொல்லியிருக்கான். “மச்சான் உலகத்திலேயே ரொம்ப சந்தோஷமான விஷயம் எது தெரியுமா? என் அராத்து பொண்டாட்டி… “புருஷன் நான் சொல்றேன்ல? கேட்கமாட்டியா?”ன்ற ஒரு வார்த்தைக்கு அடங்கிப் போறது தான்.. அப்படி சொன்னால் எனக்காக எது வேணாலும் செய்வாள்”ன்னு..அதனால தான் அன்னைக்கு வசந்த்தை வைச்சு ..அப்படி சொல்ல சொன்னேன்”என்று அவன், ஆபரேஷன் நாளன்று செய்த சின்ன தில்லுமுல்லை சொல்லி முடித்ததும் தான் தாமதம், 

எரிமலைப் பிழம்பு போல கோபம் வெடித்துப் பொங்க, விக்னேஷின் கன்னத்திற்கு, ஓங்கி ஓர் அறை விட்டிருந்தாள் அக்னிமித்ரா. 

கோபத்தை மட்டுப்படுத்த முடியாமல் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, விழிகள் அகல விரிய, “எந்த விஷயத்தில் வ்விளையாடணும்னு உனக்குத் தெரியாது? நான் என் அதி மேல வைச்ச அளவில்லா காதல்.. உனக்கு விளையாட்டா போச்சுல?”என்றவளுக்கு, 

“புருஷன் நான் சொல்றேன்ல? கேட்க மாட்டியா?” என்னும் வசனம் இன்னொருவன் சொல்லி… இவளைக் கேட்க வைத்திருக்கிறான் விக்னேஷ் என்பதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

பாவம் விக்னேஷ். அன்று அவன் உண்மையை மறைத்து, இந்த திருகுத்தாளம் பண்ணியிருந்திருக்கா விட்டால், இன்று மித்ரா உலகத்தை பார்ப்பது சந்தேகம் தான். 

தொங்க விட்ட தலையுடனேயே, உள்ளே வெளிவர மறுத்த குரலில், “அன்னைக்கு எனக்கு வேற வழி தெரியலை.. உன் புருஷன் உயிரோட இல்லை.. செத்துப் போயிட்டான்னு சொன்னால்.. நீ ஆபரேஷனுக்கு ஓகே சொல்லியிருக்க மாட்ட..

 அவன் இழப்பை நினைச்சு நினைச்சு… காலம் பூரா கண் தெரியாதவளாகவே.. இரண்டு பெண்குழந்தைகளை வைச்சுட்டு ரொம்ப கஷ்டப்பட வேண்டிய நிலை உனக்கு வந்திருக்கும்.. 

அப்படியொரு எதிர்காலத்தை.. என் தங்கச்சியான உனக்கு நான் வர விடலாமா? 

அதான் அப்படி பண்ணேன்.. உண்மையை மறைச்சேன்.. உனக்கு.. நான் பண்ணது குத்தமா தெரியலாம்.. ஆனால் எனக்கு.. நான் பண்ணது தான் கரெக்ட்..!! 

கலாவுக்கு, கலா ஹஸ்பண்ட் சிவக்குமார் சாருக்கு.. உன் கம்பெனி செகரட்டரி ஜனார்த்தனனுக்கு.. எல்லாருக்குமே அதி இறந்தது தெரியும்.. ஆனால் உனக்கு மட்டும் தெரியாது.. 

அதை என்னால சொல்ல முடியலை.. நான் சொல்றது பொய்ன்னு நினச்சின்னா இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சார்ட்டயே கால் பண்ணி கேளு..உண்மையை சொல்வாரு.. 

 உன்னைப் பார்க்காம அவரோட வைபை மட்டும் அனுப்பியவரு.. ஏன் உன்னைப் பார்க்க வரலை தெரியுமா? எங்கே வந்தா தன்னையும் மீறி உண்மையை சொல்லிருவாரோன்ற பயத்தினால தான் உன்னைப் பார்க்க வரலை..”என்று சொல்ல, 

அப்போது தான், தனக்கு பார்வை மீண்டும் வந்ததும், தன்னை வந்து பார்க்காத இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் வருகையின்மைக்கு காரணம் அறிந்தாள் அவள். 

தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்லை எடுத்து அவள் கையில் திணித்த விக்கி , “இது அவன் லாஸ்ட்டா எனக்கு சென்ட் பண்ண வாய்ஸ் ரெக்கார்ட் மெஸேஜஸ்.. கேளு எல்லாமே புரியும்..!! அதுக்கப்புறம் என் மேல கோபம் காட்றதும், காட்டாமல் இருக்குறதும் உன் இஷ்டம்!! ”என்றவன், 

அவளது வாடிய முகத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க பிரியப்படவில்லை போலும். 

அங்கே மேற்கொண்டு நில்லாமல் வெளியே வந்தவனுக்கு, நண்பன் நீங்கிய துயரைத் தாங்கிக் கொள்ள கணநேரம் பிடித்தது. 

அவள் நிர்மலமான முகத்துடன் தன் இடது கையில் திணிக்கப்பட்ட விக்னேஷின் செல்லையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

கால் இடறியதில் விழுந்துடைந்த கண்ணாடி இல்லாததால் செல்லில் தெரிந்த திரையில் எல்லாமே மங்கல் மங்கலாகவே தெரிந்தது அவளுக்கு. 

அவளுக்கு தன்னைச் சுற்றி என்ன நடந்தேறுகிறது என்று புரியாமல் நின்றாள். 

அவளுக்கு புரிந்தது எல்லாம் அவளுடைய ஆருயிர்க் கணவன் தற்போது அவள் அருகினில் இல்லை என்பது மாத்திரம் தான்!! 

 

இடதுகையில் விக்னேஷ் திணித்த செல் மட்டும் தனியாக.

 வலதுகையில் அந்த டிராயரில் இருந்து அவள் கண்டெடுத்த கல்யாண போட்டோ, லெட்டர் பேடிலிருந்த லெட்டர் மற்றும் யாருடையது என்று அடையாளம் காணப்பட முடியாத மற்றுமொரு செல்!! 

அவைகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, காதோரம், “மித்ராஹ்” என்றவன் அழைப்பது போல ஓர் தோற்ற மயக்கம் தோன்ற சட்டென விழியுயர்த்திப் பார்த்தால், வீடெங்கிலும் அவன் வாசம் வீசுவது போல இருந்தது.

தெளிவற்ற பார்வை கொண்டிருப்பவள் எப்படி செல்லில் இருப்பதை அழுத்திப் பார்க்க முடியும்?சிரமம் அல்லவா? 

அவள் கைகள் லெட்டர் பேடிலிருந்த லெட்டரை நோக்கித் தான் நீண்டது. 

கண்தெரியாமல் இருந்த காலத்தில் ப்ரெய்ல் முறையில் அவனும், அவளும் கருத்துக்கள் பரிமாறிக் கொண்ட நேரம் எழுதப்பட்ட கடிதம் அது!! 

தெளிவற்ற பார்வை இருந்த போதிலும்.. காகிதத்தின் மீதிருந்த குற்றெழுத்துக்களைக் கையால் தொட்டுத் தொட்டு அவளால் வாசிக்க முடியுமானதாகவே இருந்தது. 

பிரசவத்திற்கு முதல் நாள் இரவு.. ஓர் கேள்வி கேட்டிருந்தாள் அவள். 

“பேபி… என்னோட கடந்த காலம் பத்தி உனக்குத் தெரியும்.. அதே மாதிரி உன் கடந்தகாலத்தைப் பத்தி எனக்குத் தெரிய வேணாமா? இதுவரை நான் உன்கிட்ட கேட்காத கேள்வி கேட்குறேன்.. என் ரவுடி பேபி கடந்தகாலம் எப்படியிருக்கும்? அதில் என்னைத் தவிர யார் யாரெல்லாம் இருந்தாங்க? சொல்லு.. தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு பேபி”என்று தலைவன் வீட்டை விட்டு நீங்கி காவல் பணிக்கு சென்றிருந்த வேளை, தன்னில் உதித்த கேள்வியை எழுதினாள் கர்ப்பவதியாக இருந்த அக்னிமித்ரா. 

அவன் மறுநாள் காலை அதற்கான பதிலை அவள் அறியாமல் எழுதி.. வழக்கம் போல லெட்டர் பேடில் எழுதி விட்டு..

 மனைவியை அழைத்துக் கொண்டு மலையேறிய வேளை தான்.. பிரசவ வலியெடுத்து.. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அழகான இரு பெண்குழந்தைகளுக்கு தாயானாள் அவள். 

அதன்பிறகு வந்த அலைக்கழிப்பான நாட்களில் கணவன் எழுதி வைத்த பதில் படிக்க முடியாமலே போக, இன்று தான் காலம் கூடி வந்திருந்தது அவளுக்கு.

அதை வாசிக்கும் காலம் வந்த போது, நேரம் ரொம்பவும் கடந்து விட்டிருந்தது. 

பழைய நினைவுகளில் மூழ்கித் தவித்தவள், கையில் இருந்த பொருட்களை எல்லாம் டிராயர் மீது வைத்து விட்டு, அவனது கடிதத்தை மட்டும் கையில் ஏந்தியிருந்தாள். 

அவளது மென்மையான வலது விரல்கள் எழுத்தில் மென்மையாகப் பதிய, மனதுக்குள் கணவன் எழுதியிருப்பவற்றை எல்லாம் வாசிக்கலானாள் அவள். 

“ஹேய் பொண்டாட்டி..”என்று அவன் விளிப்பைக் கண்டதுமே, வழக்கம் போல ஓர் புன்னகை பூத்தது அக்னிமித்ராவின் இதழ்க்கடையோரமாக. 

அவன் எழுத்துக்களில்.. அவனது குரலைக் கேட்பது போலவே இருந்தது அவளுக்கு. 

ஆம், அவன் அவளோடு கடிதம் மூலம் உரையாடிக் கொண்டு தானிருந்தான். 

“ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். அதை அறிஞ்சிக்குறதுக்கு என் பொண்டாட்டிக்கு எல்லா ரைட்ஸூம் இருக்கு.. உன்கிட்ட பிடிச்ச ஒரு விஷயம்.. நீ என் கடந்தகாலத்தைப் பத்திக்கவலைப்படவே இல்லை.. என்னை எனக்காக நேசிச்சவள் நீ.. அந்த நேசத்துக்காகவே பதில் சொல்றேன்.. 

நீ கேட்டிருக்கேல்ல “உன்னைத்தவிர யார் யாரெல்லாம் இருந்தாங்க?”ன்னு..உன்னைத் தவிர என் கடந்தகாலத்தில் எனக்கு எல்லாமுமே இருந்தது.. 

பணம், புகழ், சொத்துன்னு எல்லாஆஆம்மே இருந்தது.. ஆனால் சந்தோஷம்? ம்ஹூம் இருந்ததான்னு தெரியலை..? நான் சந்தோஷம்னு நினைச்சிட்டிருந்த எல்லாமே தற்காலிகமானது தான்.. 

ஆனால் எனக்கு கிடைச்ச ஒரே சந்தோஷம்.. நிரந்தரமான சந்தோஷம்.. நீயும்.. என் குழந்தைங்களும் தான்.. 

அப்போ உன் புருஷனை சுத்தி.. எப்போவுமே ஒரு கூட்டம் இருக்கும்.. பார்ட்டியோ, செரிமனியோ..உன் புருஷன் தான் அங்கே ஹீரோ… 

சின்ன வயசுலேயே அளவுக்கதிகமான பணம் இருந்ததாலேயோ என்னவோ, எனக்குள்ள ஒரு எண்ணம்.. “நான் தான் கெத்து”ன்னு.. அந்த எண்ணம் ஸ்ட்ராங்கா இருந்ததினால்.. நான் என் ஸ்டேட்டஸூக்கு குறைவானவங்களை மதிச்சது கிடையாது.. 

அப்போ எல்லா பசங்களுக்கும் வர்ற மாதிரி எனக்கும் ஒரு வகையான இன்பேட்டுவேஷன் இருந்தது.. அது என்னோட மாமா மகள் மேல்..”என்று அவன் ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிட, அவள் புருவம் மெல்ல மேலுயர்ந்தது. 

இதுவரை அது யாரென்று வாய் திறந்து பேசியிருக்காத ஓர் உறவு அது. பொறாமையோடு சின்ன அசூயையும் தோன்ற தொடர்ந்து வாசித்தாள் அவள். 

“மாமா மகள்னா.. என்னுடைய சொந்த மாமா மகள் இல்லை..

 நான் சொல்லியிருந்தேன் இல்லையா? என் அப்பாவுக்கு இல்லீகல் அபெயார் இருந்ததுன்னும்.. நான் மூணு வயசா இருக்கும் போது என் அம்மா இறந்துட்டாங்க.. அம்மா இறந்த மறுநாளே அப்பா, தாலியும் கழுத்துமா வந்து நின்னதும்.. என் தாத்தா அவரைத் திட்டி வெளியே அனுப்பினாருன்னும்… சொல்லியிருக்கேன் ஞாபகமிருக்கா? 

அந்தபு பெண்ணுக்கு ஒரு தம்பி இருக்கான்.. அவனுக்குப் பிறந்த பொண்ணு தான் நடாஷா.. ஒருவகையில என் மாமா மகள் தான் அவளும்.. 

என் அப்பாவுக்கு இல்லீகல் அபெயார்.. அம்மாவை அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்ட.. ஒரு வருஷத்தில் இருந்து இருந்திருக்கு… 

என் தாத்தா கம்பெனியில், அப்பாவுக்கு பிஏவாக வேலை பார்த்த மஞ்சுன்ற பொம்பளை கூட தான்.. என் அப்பாவுக்கு தொடர்பு இருந்திருக்கு… 

என் அம்மா இறந்தப்போ..அப்பா, அந்த பெண் கூட வறுமனே மாலையும், கழுத்துமா வந்து நிற்கலை.. கூடவே ஒரு குழந்தையை தூக்கிட்டு தான் வந்து நின்னாரு.. 

அப்போ எனக்கு மூணு வயசு.. அப்பா தூக்கியிருந்த அந்தப் பையன்.. என் தம்பிக்கு வயசு இரண்டு!! 

அப்பா நான் வளர்ந்ததும் என்கிட்ட வந்து ‘அப்பா கூட வந்துரு.. உனக்காக தம்பி இருக்கான்.. உன் அம்மா போல பார்த்துக்க சித்தி இருக்கா’ன்னு கூப்பிட்டாரு.. நான் எனக்கு தாத்தா மட்டும் போதும்னு அப்பா கூட போகலை.. 

ஏன்னா என் அம்மா கடிதங்கள்.. ஷங்கர் அம்மா மேல ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்ததால அவங்களை பார்க்கவும் எனக்கு பிடிக்கலை.. 

ஒருத்தன் கல்யணமானவன்னு தெரிஞ்சப்பறம் வழிய வந்து, ஆண்களை மயக்குற கேவலமான ஜாதி அந்த மஞ்சுன்னு எனக்குத் தோணும்.. அவள் செத்தப்போ கூட என்னால அவள் ஃபியூனரல்க்கு போக மனசு வரலை.. 

தாத்தாவுக்கு உடம்புக்கு முடியாமப் போனதும் அப்பா கம்பெனி பார்த்துக்க ஆரம்பிச்சாரு.. அப்போ தான் எல்லாம் தில்லு முல்லும் நடக்க ஆரம்பிச்சிருக்கணும்.. 

தாத்தா இறந்ததும் அவரோட கடைசி ஆசைப்படி.. அப்பா.. மூத்த பையனான எனக்கு கம்பெனி பொறுப்பைக் கொடுத்தப்போவும் சரி.. என்னோட இருபத்திரண்டாவது வயசில் இறந்து போனப்போவும் சரி அவர் மேல எந்த அனுதாபமும் எனக்கு வரலை.. 

என் அம்மாவுக்கு இவர் உண்மையா நடந்திருக்கலாமேன்ற ஏக்கம் தான் எனக்குள்ள இருந்தது.. 

பிஏ மஞ்சுவுடைய தம்பி.. அதாவது என் மாமா பேரு உதயகுமார்..” என்று கடிதத்தில் மூழ்கியவளாக வாசித்தவளுக்கு அந்த பெயரைக் கேட்டதும் பொறிதட்டத் தொடங்கியது. 

அவள் எண்ணவோட்டத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருப்பவன் போல அவனும், “யெஸ்.. இது நீ கேள்விப்பட்ட பெயரே தான்.. யாருக்கு எதிராக நீ ஆதாரம் திரட்டினீயோ? அதே உதயகுமார்.. அவருடைய மகள் நடாஷா மேல.. எனக்கு இன்பேட்டுவேஷன் இருந்தது.. 

அது இனக்கவர்ச்சின்னு தான் சொல்வேன்.. நடாஷா மேல அன்னைக்கு இருந்தது காதல் இல்லை.. அவன் என்னோட வழிய வந்து பழகினதில் ஒரு ஆசை..

அது காதலா இருந்திருந்தால்.. ஒரு நாள் டிராபிக்கில்.. என் அம்மா கூந்தல் சாயலுள்ள பெண்ணைக் கண்டதும்.. ஒரு டீன் ஏஜ் பாய் மாதிரி.. சிக்னல் விழுந்ததை கூட பொருட்படுத்தாமல்.. அந்தப் பொண்ணான உன்னை நான் தேடி போய் இருக்க மாட்டேன்..”என்று சொல்லிக் கொண்டே வர.. நெற்றியில் விழுந்த சுருக்கங்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து அவள் வதனம் இலேசாகத் தொடங்கியது. 

“ நான் யாருன்னு உனக்குப் புரியுதா??.. நீ நினைக்குறது சரி தான்.. 

தி க்ரேட் பிஸினஸ் மேன் அதிமன்யு ஆதிதேவ் வர்மன்!! உன் பார்வையில் “தேவ் வர்மன்”!!” என்று அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போதிலும், அவள் உள்ளத்தில் நிறைய கேள்விகள் தொக்கி நின்றிருந்தன. 

இருப்பினும் தொடர்ந்து அவள் கைவிரல்கள் எழுத்தில் ஊர்ந்தது. அதன் பின் அவன் சொன்னவை எல்லாம் பழைய நினைவுகளை கிளறிவிட்டது. 

“சேப்டர் வன் ரெஸ்டாரென்ட்டில் வைச்சு உன்னை கொடூரமான முறையில் மானபங்கப்படுத்திய அதே தேவ் வர்மன்!! 

அன்னைக்கு ஒரு நாள் பகல்.. நான் உனக்கு.. பண்ண கொடுமைக்கு.. ஓராயிரம் இரவுகள் உன் பாதம் கழுவினாலும் என் பாவம் போகுமான்னு தெரியலை??.. 

ஏன்னா நடாஷா பேச்சுக்கேட்டு.. நான் அப்படி நடந்துக்கிட்டது.. என் தாய் கூந்தலுள்ள.. அது என் அம்மா தான்னு என் உள்மனசு தேடிட்டிருக்க ஒரு பொண்ணுக்கிட்ட… 

முதல்ல நீ அறிமுகமானது நடாஷா மூலமா தான்.. ‘அக்னிமித்ரா’ன்ற உன் பேரே எனக்கு ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது.. 

நடாஷாவுக்கும், எனக்கும் உள்ள ரிலேஷன்ஷிப்பின் அந்தரங்கமான விஷயம் பத்தியும், அவங்க அப்பாவுடைய இல்லீகல் பிஸினஸ் பத்தியும் அவள் கிட்டேயிருந்த ஆதாரமான.. பென்ட்ரைவ்வை நீ திருடிட்டேன்னு சொன்னா.. 

அப்போ இருந்த என் மனநிலையில் உதயகுமாருடைய பிஸினஸ் இது லீகலோ, இல்லீகலோ நான் பொருட்படுத்தலை.. நடாஷா மேலிருந்த மயக்கத்தில் நான் எதையும் டீப்பா யோசிக்கவும் இல்லை.. 

எனக்கு பொதுவாகவே ஜர்னலிஸ்ட்ஸ் மேல நல்ல அபிப்பிராயம் கிடையாது.. எப்போவுமே அவங்க மத்தவங்க பர்சனல்ல மூக்கு நுழைக்குறவங்கன்றதால ஒரு வெறுப்பு இருக்கும்.. 

அந்த வெறுப்பு உன் மேலேயும் அப்போ இருந்தது.. நடாஷா சொன்னது பொய்.. அது அவள் பெட்ரைவ் இல்லை.. அது உனக்கு சொந்தமான பென்ட்ரைவ்ன்றதும்.. அதில இருந்த இரகசியங்களும் எனக்கு அப்போ தெரியாது..”என்னும் வரிகள் அவளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

நடாஷா என்ன மாதிரியான உள்குத்து வேலை பார்த்திருக்கிறாள் என்று தோன்றியது அவளுக்கு. 

“அன்னைக்கு சேப்டர் வன் ரெஸ்டாரென்ட் வந்த உன்னை நான் ஒரு ஸ்டோக்கரா தான் பார்த்தேன்.. 

என் முன்னாடி எந்த பொண்ணு வந்து நின்னாலும், “இது என் அம்மா கூந்தல் பொண்ணு தானோ?”ன்னு ஃபர்ஸ்ட் கூந்தலை நோட் பண்ற நான்.. உன் கூந்தலை என்ன? உன் கண்களைக் கூட உன்னிப்பாக பார்க்க விருப்பப்படலை..

 ஒருவேளை நான் அன்னைக்கு உன் அலைஅலையான கூந்தலை பார்த்திருந்தால்.. உன் மேல அப்போவே பைத்தியமாகி பின்னாலே லோ லோன்னு அலைஞ்சு லவ் பண்ணியிருந்திருப்பேனோ என்னவோ? 

யாராவது அம்மாவை ஞாபகப்படுத்துற பொண்ணை மானபங்கப்படுத்துவாங்களா? ஆனால் நான் பண்ணேன்.. மன்னிக்க முடியாத ஒரு குற்றத்தை நான் பண்ணேன்.. நடாஷா சூழ்ச்சி தெரியாமல் பண்ணேன்.. 

அன்னைக்கு என் விழிகள் பார்த்து மனசுடைஞ்சு சொன்னேல்ல? “கடவுள்னு ஒருத்தன் இருந்தா நிச்சயம் உனக்கு கொடுப்பான்”ன்னு சொன்னேல்ல? சாபம் பழிச்சது..

என் அம்மா போல இருக்கற பொண்ணை மானபங்கப்படுத்தியதுக்காக கடவுள் பெரிய தண்டனையே கொடுத்தான்.. 

நடாஷா என் முன்னாடி.. இரட்டை வேஷம் போட்ட பாம்புன்னு எனக்கு அப்போ தெரியாது..

 அவள் என்னை ‘யூஸ் என்ட் த்ரோவா’ யூஸ் பண்ணிக்கிட்டா.. அவள் காதலிச்சது என்னை இல்லை.. என் தம்பி ‘ஷங்கர் தேவ் வர்மனை’.

. யார் பேச்சுக்கும் அடங்காமல் ஜல்லிக்கட்டு காளை போல திரியுற நான்.. நடாஷாவிடம் மட்டும் அடங்கிப் போறதைக் கண்ட நடாஷா அப்பாவும், ஷங்கர் தேவ் வர்மனும் திட்டம் போட்டு என்கிட்ட இழையுற மாதிரி நடிக்க வைச்சிருக்காங்க.. 

ஃபயர் ஆக்ஸிடெண்ட் கிரியேட் பண்ண தேவ்வும், உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்ட தேவ்வும் ஒருத்தன்னு நீ நினைச்சிட்டிருக்க.. 

இல்லை உன் கிட்ட அப்படி நடந்துக்கிட்ட தேவ்.. உன் புருஷன் ஆதிதேவ் வர்மன்.. பலபேரைக் கொல்ற அளவுக்கு மோசமானவன் கிடையாது..

சரியா சேப்டர் வன்ல நம்ம சந்திப்பு நடந்த மூணு மாசத்துக்கு அப்புறம் ஃபயர் ஆக்ஸிடெண்ட் நடந்தது.. நடுவில வந்த இந்த மூணுமாசத்துல நான் எங்கேயிருந்தேன் தெரியுமா? 

அமெரிக்காவுல? கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் தொடர்பா ஒரு சின்ன கோர்ஸ் படிக்கிறதுக்காக நான் அமெரிக்கா போயிருந்தேன்.. 

நான் திரும்பி வந்தது என் அம்மாவுடைய நினைவஞ்சலிக்காக.. ஆனால் திரும்பி வந்தப்போ எனக்காக மிகப்பெரிய குழி வெட்டப்பட்டிருக்கும்னு எனக்கு அப்போ தெரியாது.. 

ஷங்கர் தேவ் பார்வைக்கு மட்டுமல்ல.. இன்னும் ஏன் அவன் குரலும் கூட ஸ்லைட்டா என்னை மாதிரியே இருக்கும்.. ஹீ ஓல்வேய்ஸ் வான்டட் டு பீ அன் ஒரிஜினல் தேவ்வர்மன்.. என்னைப் போல ஆகணும்ன்றது அவனுடைய மிஷன்.. 

ஃபயர் ஆக்ஸிடெண்ட் அப்போ.. நீ பார்த்த காரினுள் இருந்த தேவ்.. நீ கேட்ட குரல்… இந்த அதிமன்யு ஆதிதேவ் வர்மனோடது கிடையாது.. என் தம்பி ஷங்கர் தேவ் வர்மனோடது.. 

அது இருள்சூழ்ந்த பார்க்கிங் ஏரியான்றதினாலேயோ இல்லை நீ இந்த ஆதிதேவ் வர்மன் கெட்டவன் தான்னு முடிவெடுத்திருந்ததனாலேயே… ஷங்கர் தேவ்.. ஆதி தேவ்வா உன் கண்ணுக்கு தெரிஞ்சிருக்கலாம்..

உன்னை மானபங்கப்படுத்திய தேவ்வும் அங்கே தான் இருந்தான்.. அமெரிக்காவில் இருந்து வந்ததும் ப்ரோபஸர். ராஜாராம் கிட்டேயிருந்து ஒரு ஃபோன்கோல்..” என்று அவன் தன் தாத்தாவின் பெயரைச் சொன்னதும் உள்ளுக்குள் ஓர் விழிப்புணர்வு மணி அடித்தது. 

அடுத்த வரிகளை கவனமாக உள்வாங்கலானாள் அவள். 

“உன் தாத்தா என்னைப் பார்க்கணும்னு கோல்ல சொன்னாரு.. நானும், ‘வாங்க தாத்தா டாஸிலிங்ல தான் இருக்கேன்’னு சொன்னேன்.. 

அன்னைக்கு உன் தாத்தா பார்க்க வந்தது என்னை தான்..காரில் இருந்து பேசிட்டு இருந்த ஷங்கர் தேவ் வர்மனை இல்லை..

 ஷங்கர் தேவ் வர்மன் ‘பரம எதிரின்னு சொன்னது, இது அவனுக்கு போட்ட ஸ்கெட்ச் சொன்னது’ உன் தாத்தாவை அல்ல.. உன் புருஷன் அதிமன்யு ஆதிதேவ் வர்மனை.. யெஸ் அந்த ஃபயர் ஆக்ஸிடெண்ட்.. இந்த தனியொருவனைக் கொல்லத் தான்..” என்ற வரிகளை வாசித்த போது… அவள் கையிலிருந்த காகிதம் நடுக்குறத் தொடங்கியது. 

அப்படியானால் தன் அண்ணனைக் கொல்வதற்காகவா இத்தனை பேரை கொன்று குவித்தான் சிறையிலிருக்கும் ஷங்கர் தேவ் வர்மன்?? 

“.. அப்போ நான் டாஸிலிங்கில் தான் இருந்தேன்.. நான் ஆபிஸ் ரூம்ல இருந்தது யாருமே நோட் பண்ணலை.. அங்கே நானும் உன் தாத்தாவும் மட்டும் தான் இருந்தோம்.. 

அவர் பேச ஆரம்பிச்சப்போ.. திடீர்னு எங்கேயும் புகைமூட்டமா மாறத் தொடங்கிச்சு.. சடனா ஒரு அனல் சுவாலை எழுந்து அறை புல்லா கிளம்ப, ஒருத்தரையொருத்தர் பார்க்க முடியாத சிட்சுவேஷன் அது.. அப்பவும் கூட என்னை ஜன்னல் வழியா தள்ளிவிட்டுக் காப்பாத்தி.. எனக்காக தான் உயிரை விட்டாரு.. உன் தாத்தா..” என்று யாருமே அறிந்திராத உண்மையை அந்தக் கடிதத்தின் மூலம் அவன் சொல்ல, 

அவள் உள்ளிழுத்த மூச்சு ஒருகணம் ஸ்தம்பித்து வெளியானது. 

“அவரை எப்போவுமே என் தாத்தாவா தான் பார்த்தேன்.. நீ அவர் பேத்தின்றதோ.. நீங்களும் நம்ம பிஸினஸ் பார்ட்னர்ன்றதோ எனக்கு சத்தியமா தெரியாது.. என்ன விஷயத்தை என் கூட பேசவந்தாரோ உன் தாத்தா.. அதை சொல்லாமலேயே போய் சேர்ந்துட்டாரு.. 

அவர் உண்மையை சொல்லியிருந்தால்.. நான் நீதியா நடந்து கொண்டிருப்பேன்..”என்று சொல்ல, அவளுக்கு விஷயம் புரிந்தது. 

அப்படியானால் தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸ் வாசல்படி ஏறி ஞாயம் கேட்கப் போனவரை அவமானப்படுத்தி அனுப்பியது அதி இல்லை!! 

இது இதைப்பற்றி தெரியாதவனாகவே இருந்திருக்கிறான்!! 

அதையே தான் அவனும் சொல்லியிருந்தான். 

“உன் தாத்தா ஏமாற்றப்பட்டதுக்கு காரணம் நடாஷா அப்பா உதயகுமார்.. என் அப்பா பெண் மோகத்தில்.. தன் மச்சானான உதயகுமாரை.. பிஸினஸ்ஸில் சேர்த்துக்கிட்டாரு.. ஆனால் உதயகுமார்.. தேவ் க்ரூப் ஆப் கம்பனீஸ்க்கு மூலாதாரமா இருந்த உன் தாத்தா ஷேர்ஸ் மேலேயே கை வைச்சிருந்திருக்கான்… நூதனமா.. சந்தேகமே வராத மாதிரி திருடியிருக்கான்.. 

ஃபயர் ஆக்ஸிடெண்ட்டில் நாலாவது மாடியிலிருந்து உன் தாத்தா தள்ளிவிட, மூணாவது மாடி பேக்ஸ்டேர்ஸ்ல விழுந்து நான் பல அடிகளோட மயக்கமானேன்.. 

 கண் முழிச்சப்போ.. உலகத்துக்கே தெரியாத.. தனிமையான ஹாஸ்பிடல் அறையில் இருந்தேன்.. ஜன்னல் தாண்டி விழுந்ததில் உடம்பெல்லாம் காயத்தோட குற்றுயிரும்.. குலையுயிருமா நான் பிழைச்சேன்.. 

இயலாமல் இருக்கும் போதே என்னைக் கொல்ல திட்டம் போட்ட நடாஷா, ஷங்கர், உதயகுமார் இவங்க மூணு பேர் ப்ளேன்னிங்கையும் நான் ஒட்டுக் கேட்டேன்..

அவங்களுக்கு தேவை என் பேர்ல இருக்கற சொத்து.. என்னைக் கொண்ணா என் சொத்தும்.. உன் தாத்தாக்கிட்டேயிருந்து அடிச்ச சொத்தும்..முழுசா ஷங்கருக்கு போய் சேரும்.. அது தான் அவங்க ப்ளான்.. 

அப்போ தான் நடாஷா பண்ண சூழ்ச்சி எனக்குப் புரிஞ்சது.. என் கூடே அவள் பொய்யா பழகியிருக்கிறது புரிஞ்சது.. 

நான் அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிச்சு வந்தேன்..

எங்கே திரும்பினாலும் எனக்கு ஆபத்து இருந்தது. வெளிநாடு போகலாம்னா பாஸ்போர்ட் என் கையில் இல்லை நான் கண்டியில் இருக்கும் சின்ன ஊருக்கு வந்து ஸெட்டில் ஆனேன்..

ஆனால் நிவ்ஸ் சேனல்ஸ்க்கு.. நான் டாஸிலிங்ல இருந்த கதையும், ஹாஸ்பிடல்ல இருந்த கதையும் பெருந்தொகை பணம் கொடுத்து.. உண்மை முடக்கப்பட்டு.. இன்னும் அமெரிக்காவுல படிச்சிட்டிருக்கேன்னு நம்ப வைச்சாங்க.. நான் திரும்ப வரும் வரை நிவ் சிஇஓவா ஷங்கர் தேவ் வர்மன் பதவிக்கு வந்தான்.. 

நான் அவங்க கையில் கிடைச்சேன்னா.. என்னை கொல்ல தான் அவங்க திட்டம் போட்டிருந்ததால்.. என் அடையாளத்தை மறைச்சு வாழ்ந்தேன்..

கண்டியில் என்னைப் போலவே அநாதையா இருந்த விக்கி.. அவன் வீட்டில் எனக்கு அடைக்கலம் கொடுத்தான்.. ரெண்டு பேரும் அனாதைகள்ன்றதால.. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டோம்.. இந்தவுலகத்தில் நான் நெஞ்சோடு சுமந்திட்டிருக்குற வைராக்கியத்தை அறிஞ்ச ஒரே ஆளு விக்கி.. 

என்னை ஏமாத்தியவங்க மேல ஒரு வைராக்கியம் இருந்தது.. ஆனால் இதுக்கப்புறம் எதுக்கு வாழ்க்கைன்ற ஒரு விரக்தி இருந்தது.. அது உன்னைப் பார்த்தும் மாறிச்சு.. 

அதே ஊரில் வாழ்ந்துட்டிருக்கற உன்னைப் பார்த்தேன்..திருடன் கிட்ட போராடிட்டு இருந்த அதே அக்னிமித்ரா.. 

என்னை அடையாளங் கண்டு கத்திருவேன்னு நினைச்சு.. தயங்கித் தயங்கி தான் உன் பக்கத்துல வந்தேன்.. 

அப்போ தான் உன் பார்வை பறி போனது எனக்குத் தெரியும்.. நடந்த ஃபயர் ஆக்ஸிடெண்ட்டில் எழுந்த அதிகமான புகையை சுவாசிச்சதால் என் கம்பீரக் குரல்.. கணீர் குரலா மாறிப் போனதால.. உன்னால நான் யார்னு கண்டுபிடிக்க முடியவில்லை..

 ஆனால் அந்த இரவு.. உன் கூந்தலை பார்த்தேன்.. அன்னைக்கு டிராபிக் ல பார்த்த பொண்ணு.. இத்தனை நாளா என் அம்மா கூந்தல் சாயல் இருக்குற பொண்ணுன்னு.. நான் தேடியது நீ தான்னு புரிஞ்சது.. அம்மா நிலைமையில் இருந்த அதே நீ.. உன்னை நேசிக்க ஆரம்பிச்சேன்..உனக்காகவே வாழ ஆரம்பிச்சேன்.. 

என் வாழ்நாளில் எத்தனையோ கோடி பிஸினஸ் டீலை அசால்ட்டா முடிச்சப்போ வராத சந்தோஷம்.. “அதான் என்னை குழந்தை போல பார்த்துக்க.. நீ இருக்கியே?’ன்னு நீ சொன்னப்போ எனக்கு வந்தது… 

ஆனால் நம்ம ஃபர்ஸ்ட் நைட்டப்போ ‘தேவ்’ன்னு நினைச்சு நீ என்னைக் குத்தினப்போ.. தான் நீ என் மேல எப்படிப்பட்ட வெறுப்பு வைச்சிருக்கேன்னு புரிஞ்சது.. 

“தேவ்வைக் கொல்லணும்”ன்னு சொன்னது என்னை சுக்குநூறா உடைச்சது.. 

அன்னைக்கு ஒரு நாள் ‘தேவ்- நடாஷா’நீ கல்யாண லைவ்வைக் கூட நீ பார்த்துரக் கூடாது.. பார்த்தால்.. தேவ் வர்மன்றது ரெண்டு பேர்ன்னு தெரிய வந்து.. ஆராயப் போய்.. உண்மை தெரிஞ்சு என்னை வெறுத்துருவியோன்னு பயத்தில் தான் நான் உன்னை வெளியில் கூட்டிப் போனேன்.. 

நீ ஒவ்வொரு முறை தேவ்ன்னு சொல்லும் போதும் என்னை தான் குத்திக்காட்டின.. 

ஆனால் நான் ஒவ்வொரு முறை பேசும் போதும் சுட்டிக் காட்டின தேவ்.. என் தம்பி “ஷங்கர் தேவ் வர்மன்”. 

வாழ்க்கையில பிடிப்பே இல்லாமல் வாழ்ந்துட்டிருந்தப்போ வசந்தமா வந்தவள் என் அக்னிமித்ரா.. உனக்கு ஞாயம் கிடைக்கணும்ன்றதுக்காகத் தான் மீண்டும் எனக்குள்ள ஷங்கர் தேவ் வர்மனை பழிவாங்கணும்ன்ற வெறி வந்திருக்கு.. 

உனக்கு நீதி கிடைக்கும்.. உனக்கா செய்வேன்..என் குழந்தைங்களுக்காக இதை செய்வேன்.. என் நிலையை விளக்கின அப்புறமும் நீ என்னை வெறுத்தாலும்.. .. நான் உன்னை நேசிப்பேன்..உன்னோட அழகன்.. இந்த ஹேன்ட்சம் ஹங் உன்னை நேசிச்சிட்டே தான் இருப்பான்.. நான் பண்ணதுக்காக என்னை மன்னிச்சிருமா” என்றவாறு கடிதத்தை முடித்திருந்தான் அதிமன்யு. 

அந்தத் தெளிவற்ற கண்களில் இருந்து கண்ணீர் வழிய.. சின்னககுழந்தை போல தனிமையில் அழலானாள் அவள். 

முன்பே இந்த கடிதம் கிடைத்திருந்தால்.. ‘நீ என்னை இவ்வளவு நாளா ஏமாத்திட்டேன்’னு அவன் மார்பை அடித்து சண்டை போட்டு விட்டு.. மார்பிலேயே அடைக்கலமாகி குமுறிக் குமுறி அழுதிருப்பாள் அக்னிமித்ரா. 

ஆனால் தற்போது அவன் தான் இல்லையே?? யார் மார்பை அடித்து சண்டை போட? யாரு மார்பில் சாய்ந்தழ? 

அவன் கண்கள் பெற்றிருப்பதனாலேயே என்னவோ.. அன்று அவள், அவன் பார்வையில் இருந்து சிந்தித்துப் பார்த்தாள். 

நடாஷாவின் தூண்டுதலால் விளைந்த வெறுப்பால்.. மானபங்கப்படுத்தி விட்டு.. 

தான் அப்படி நடந்து கொண்டது தாய் போல எண்ணும் ஓர் பெண்ணிடம் என்றானதும் அவன் எப்படி உள்ளுக்குள் வெந்து தணிந்திருப்பான்?

அவள் வடித்த கண்ணீரின் பின்னர்.. அவள் பார்வை புலம் தெளிவானது போல ஓர் தோற்றம் தெளிவாகத் தோன்ற.. விக்கியின் செல்லை எடுத்து, கணவனின் வாய்ஸ் ரெக்காட்டை கேட்கவாரம்பித்தாள். 

அவன்.. தனக்காக கொழும்பு சென்ற அதிமன்யு.. அவளுக்காக என்ன என்ன துயர் பட்டான் என்பதை நண்பனிடம் அவன் விளக்கியவற்றை கேட்கும் போது.. 

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல நெஞ்சமெல்லாம் வலித்தது அக்னிமித்ராவுக்கு. 

எங்கேயும் காதல்! 

[20]

அன்று ஷங்கர் தேவ் வர்மனின் வேலையாட்களிடம் அகப்பட்டு, கைச்சந்தில் குத்து வாங்கி.. இரத்தம் வழிய நின்றவன்.. எதையும் செய்ய முடியாத நிராயுதபாணியாகத் தான் நின்றிருந்தான். 

ஒரு நிமிடம் மூடிக் கொண்ட விழித்திரைக்குள் கலகலவென்று நகைத்துக் கொண்டு அவன் மனைவியும், குழந்தைகளும் நிற்பது போல காட்சி வந்து போக, 

பட்டென்று கண் விழித்தவனின் விழிகளில் ஓர் தீவிரம் கூடிப் போயிருந்தது. 

இங்கிருந்து அவன் தப்பிச் சென்றேயாக வேண்டும்.. அவனுக்காக இல்லா விடினும் அவன் வருவான் எனக் காத்திருக்கும் குழந்தைகளுக்காக.. 

அவனைக் கண்ணார காணலாம் என்ற நப்பாசையுடன் மருத்துவமனையில் இருக்கும் அவன் மனைவிக்காக என்று தோன்ற.. 

தன் இரு கைகளையும் பிடித்தவாறு அருகில் இருந்தவர்களின் கால்களினை மிதித்தவன், அந்தச்சுவரின் ஓரத்தில் இருந்த நீண்ட கட்டையை கொஞ்சம் சிரமத்துடன் ஒற்றையாளாகத் தூக்கி எடுத்து.. பணியாட்கள் மீது போட, 

நெஞ்சிலேயே அது விழுந்து பாரிய காயத்தை ஏற்படுத்தியது அவர்களுக்கு. 

அவர்கள் அனைவரும் வலியில் முனகிக் கொண்டிருக்க, சட்டென்று பாய்ந்து வந்து, ஷங்கர் தேவ் வர்மனின் கழுத்தினை, தன்னிரு கைகளின் முழங்கை மடிப்பாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டவன், இறுதி வரை அந்தப் பிடியை விடவேயில்லை. 

பக்கத்தில் நின்று அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த ஷங்கர் தேவ்வின் மனைவி, நடாஷா, “டேய்.. அவ்வனை விட்றாஆஆ”என்று கத்த, ஓங்கி ஓர் அறை விட்டான் அதி அவள் கன்னத்திற்கு. 

அந்த ஒற்றையடியின் வீரியம் தாங்காமல் நடாஷா சுருண்டு விழ, அவளைப் பொருட்படுத்தாத அதிமன்யுவின் பார்வை, ஷங்கர் மேல் தான் திரும்பியது. 

அவன், ஷங்கரின் கழுத்தை தன்னிரு முழங்கையினாலும் பிடித்து இறுக்கியதால்.. ஷங்கரின் தலை அதியின் இடுப்புக்கு அருகே இருக்க.. இன்னும் தன் பிடியின் வலுவை கூட்டினான் அதிமன்யு ஆதிதேவ் வர்மன். 

டாஸிலிங்கில் பலியான அத்தனை உயிர்களினதும் ஞாபகம் வர, “உனக்கு ம்மனித உயிர்கள்ன்றது அவ்வளவு அல்பமா போச்சா?? .. நூற்றி நாற்பத்திரண்டு பேர் உயிரிழந்திருக்காங்க.. பதினேழு பேர் அங்கவீனமுற்றிருக்காங்க.. அவங்க எல்லாம் என்ன பாவம் பண்ணாங்கடா உனக்கு..”என்று கழுத்தை இறுக்க 

குரல்வளை இறுக்கப்படதில் மூச்சுக்குழல் பாதை மூடப்பட்டு.. மூச்செடுக்க திண்டாடினான் ஷங்கர். 

அதனால் அதியின் கைகளுக்கு அவன் தாருமாறாக அடிக்க, இவன் சொன்னான், “ம்மூச்சு விட கஷ்டமா இருக்கா உனக்கு? அப்படித்தானே அவங்களுக்கும் இருந்திருக்கும்? என் அக்னிமித்ரா என்னடா பண்ணா உனக்கு..!!அநியாயமா அவள் கண்ணைப் பறிச்சிட்டியேடா??”என்று. 

“அக்.. னி.. மி.. த்ரா..???”-பேச சிரமப்பட்ட வேளையிலும், ‘அக்னிமித்ரா’ யாரென்று கேட்டான் ஷங்கர். 

“தெரியாது??உனக்கு தெரியாது? நடாஷாவும், உன் மாமா உதயகுமாரும் ப்ளான் பிண்ணி.. ப்ரோபஸர் ராஜாராம் சொத்தை அபகரிக்கப் பார்த்தீங்களே.. அவரோட பேத்தி.. உன் ஃபயர் ஆக்ஸிடெண்ட்ல கண்ணு பறி போன பொண்ணு.. என் ப்பொண்டாட்டிஈஈ..”என்று அவன் சொல்லிக் கொண்டே பிடியை இறுக்க, 

ஷங்கரின் முகத்தில் பச்சை நரம்புகள் தெறித்து ஓடவாரம்பித்தது. 

சற்று நேரத்திற்கு முன்பு வரை வீர வசனம் பேசிக் கொண்டிருந்தவன், தற்போது நிலைமை கைமீறிப் போனதும் அதியிடம் மண்டியிட ஆரம்பித்தான். 

ஆதிதேவ் வர்மன் என்னும் பெயரில், ‘ஆதி’யை விழித்து,முக்கி முணகியவனாக, 

“ஸாரி.. ஆதி.. தெரி.. யா.. ம பண்.. ணிட்டேன்.. ஸாரி ஆதி.. என்னை விட்.. ரு”என்று கை கூப்பிக் கெஞ்சிய போதும் கூட அவன், ஷங்கரை விடவேயில்லை. 

“உன்னோட பரம எதிரி நான் தான்னும்.. உன் ஸ்கெட்ச் எனக்குத்தான்னும் தெரியும்.. கோழை மாதிரி முதுகுக்குப் பின்னாடி குத்துற? .. தைரியமிருந்தால் முன்னாடி வந்து மோதியிருக்கணும்..இனி இதோட உன் ஆட்டத்துக்கு முடிவு க்கட்டுறேன்”என்றவனின் பார்வையில், 

இவன் அசுரவேகத்தில் தாக்கி ஷங்கரின் கழுத்தைப் பிடித்ததும், ஷங்கர் தவற விட்ட குறுங்கத்தி பட, ஷங்கரை விட்டுட்டு அதை எடுக்க முயன்றவனுக்கு, குழந்தைகளின் ஞாபகம் வந்தது. 

இந்தக் கொலைகாரன் ஷங்கர்தேவ்வைக் கொண்டு, அவனும் ஓர் கொலைகாரனாகப் போகிறானா? 

அவளையும், குழந்தைகளும் இருக்க சிறைவாசம் அனுபவிக்கப் போகிறானா?? 

உணர்ச்சிகள் எல்லை மீறிய தருணத்திலும் மித்ராவின் காதல் அவனை, கொலைகாரனாக விடவில்லை. 

மெல்ல மெல்ல அதிமன்யுவின் பிடி தளரவாரம்பித்தது. ஒருகட்டத்தில் முழுமையாக தன் தம்பியை விடுவித்தவன், 

“இப்போ நான் உன்னை சாகடிச்சேன்னா.. உன்னைப் போல ஒரு அரக்கனை கொன்ன குற்றத்துக்காக நான் ஜெயிலுக்கு போகணும்.. எனக்காக என் பொண்டாட்டி காத்திருக்கா.. இரண்டு குழந்தைங்க இருக்காங்க.. அவங்களுக்காக நான் உயிரோட இருக்கணும்..” என்றவன், 

மீண்டும் எழுந்த ஆத்திரத்தில் ஷங்கரின் பின் சட்டைக் காலரைப் பிடித்திழுத்துக் கொண்டு போய், அருகிலிருந்த தென்னை மரத்தில் ஷங்கரின் உச்சந்தலையை ஓங்கி அடித்தான்.

அடித்த வேகத்தில் நெற்றி வழியாக இரத்தம் குபுகுபுவென வழிய, அப்படியே மயங்கிச் சரிந்த ஷங்கர் மருத்துவமனையில் இருந்து விழிக்க இரண்டு நாட்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டது. 

மேலும் அசம்பாவிதங்கள் நடந்தேற முன்னம்.. சட்டென அந்த மதில்ச்சுவரை அநாயசமாகத் தாண்டி ஏறிக் குதித்தவன்… 

 விண் விண்ணென்று வலித்த கத்தி குத்துப்பட்ட கையுடன், தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். 

அறைக்குப் போய், குளித்து ஃப்ரெஷ் ஆகி, கைக்கு மருந்திட்டவன், தன் நவீன ரக செல்லை எடுத்தான்.

இப்போது தான் சந்தைக்கு வருகின்ற அதி நவீன ரக செல்லில் உள்ள ஒரு க்ளிக்கில், அனைத்தையும் செய்ய முடியுமானதாக இருக்கிறதே? 

மெயிலில் சேவ் செய்த டிராப்டினை எல்லாம் மீண்டும் ஒருமுறை திறந்து பார்க்கலானான் அதிமன்யு.

இன்று அவன் சுவரேறிக் குதித்தது தன் சொந்த வீட்டுக்குள். 

பல வருஷங்களுக்கு முன்பு அவனறையாக இருந்தது.. தற்போது ஷங்கர் தேவ் வர்மனின் அறையாக மாற்றப்பட்டிருக்கும் அதிசயத்தைக் கண்டான் அவன். 

தன்னறையில் இருக்கும் அவனது புகைப்படம் கழற்றப்பட்டு, ஷங்கர் தேவ்வின் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பதையும் அந்தப் புகைப்படத்தில் இருந்த ஷங்கர் தேவ் வர்மன் கிட்டத்தட்ட அதிமன்யுவின் சாயல் கொண்டிருப்பதுவும் ஆத்திரத்தைக் கிளப்பியது அவனுக்கு. 

தன்னறைக்குள் நுழைந்து சல்லடை போட்டு தேடி எடுத்தது யாருடைய லேப்டாப்பை? 

சாட்ஷாத் அதிமன்யு ஆதிதேவ் வர்மனின் லேப்டாப்பே தான்.

கண்டியிலிருந்து புறப்படும் முன்னம், நண்பன் விக்னேஷிடம், “கொழும்பில் முடிக்க வேண்டிய வேலை ஒண்ணு பாக்கியிருக்கு” என்று சொன்னானில்லையா? 

அந்த வேலையை முடிக்கத் தான் யாரும் அறியாமல் பூனை போல அறைக்குள் நுழைந்திருந்தான் அவன். 

தன்னுடைய ப்ரைவட் பேங்க் அக்கவுண்டை தன் லேப்டாப் மூலம் அக்ஸஸ் செய்து, ஆபரேஷனுக்கு தேவையான பணத்தினை சிங்கிள் க்ளிக்கில் பரிமாற்றம் செய்தவன், 

‘சீக்ரட் ஃபோல்டர்ஸ்”என்னும் போல்டருக்கு சென்று, தன் பாஸ்வேர்ட் அடித்து அதைத் திறந்தான். 

தன் சொந்த லேப்டாப்பிலிருந்து அவனைத்தவிர யாராலும் ஆக்ஸஸ் செய்ய முடியாத தன் சீக்ரட் ஃபோல்டரில்.. அவன் விட்டுச் சென்ற அத்தனை ஆதாரங்களும் அப்படியே இருந்தது. 

அவனுடைய பாஸ்வேர்டை அனுமானிக்க முடியாத அவன் தம்பியும், சீக்ரட் போல்டர்ஸை திறக்க முடியாமல் திண்டாடியதில்.. அவன் ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருந்தது. 

அது பல வருடங்களுக்கு முன்பு நடாஷா ஏவிய வேலையாள் போல அக்னிமித்ராவிடமிருந்து பிடுங்கிய பென்ட்ரைவ்வை, ஏதோ ஓர் எண்ணம் தோன்ற, 

பென்ட்ரைவ்வை அப்படியே தூக்கிக் கொடுத்து விடாமல், ‘சீக்ரட் ஃபோல்டரில்’ சேவ் செய்து விட்டே பென்ட்ரைவ்வை நடாஷாவிடம் கொடுத்தான் அவன்.

அதை திறந்து பார்த்தவனுக்கு அன்று முதலிரவன்று, மித்ரா கையால் குத்துப்பட்டு.. ஹாஸ்பிடலில் கண்விழித்த போது, அவனைக் கட்டியணைத்துக் கொண்டு அழுது புலம்பியவளாக அவனது மனைவி சொன்ன அத்தனையும் ஆதாரங்களாக இருக்கக் கண்டான் அவன்.

ஒன்று உதயகுமாரின் சட்டவிரோதமான ரீதியில் கஞ்சா இறக்குமதி செய்த வீடியோ அது. 

மற்றொன்று அவன் தாத்தா, மித்ராவின் தாத்தாவுக்கு கைப்பட எழுதிக் கொடுத்த வியாபாரப் பங்கு பற்றிய கடிதம்!! என்று எல்லாமே அழியாமல் இருந்தது அவனிடம். 

அத்தோடு தன் தம்பி தன்னை ஒருநாள் நேரிடையாகவோ, மறைமுகமாகவே தாக்கக் கூடும் என்று கருதியவன், 

ஷங்கரின் நடவடிக்கையை புலனாய்வதன் பொருட்டு, அவன் செல்போனில், அவன் பேசும் அழைப்புக்களின் பேச்சினை பதிவு செய்வதற்காக, தம்பிக்கே தெரியாமல், 

ஒரு கால் ரெக்கார்ட் ஹேக்கரை இன்ஸ்டால் பண்ணியிருந்தான்.

 அதன் தரவுகளை கொஞ்சம் கிளறிப் பார்த்ததில் அன்று தீ விபத்தன்று ஷங்கர் தேவ், தன் கையாளுடன் பேசிய அத்தனையும் ஆதாரப்பூர்வமாக பதிவாகியிருக்க.. இந்த ஒரு ஆதாரம் போதும் நினைத்ததை சாதித்து விடலாம் என்ற எண்ணம் வலுத்தது அதிக்கு.

அக்னிமித்ரா திரட்டிய உதயகுமாரின் இல்லீகல் பிஸினஸ் பற்றிய ஆதாரத்தையும், பாட்டன்மார்களின் வியாபாரப்பங்குதாரக் கடிதத்தையும், ஷங்கரின் கால் ரெக்கார்ட்டையும் தன் மெயில் டிராப்டில் சேவ் செய்து கொண்டிருந்த போது தான்.. 

நடாஷா அவ்வறைக்கு வந்து..கத்தி..வேலையாட்கள் அனைவரையும் எழுப்பி விட்ட பின் தான்.. அந்தக் கூத்து நடந்தேறியது. 

தற்போது அறைக்கு வந்த பின் அக்னிமித்ரா திரட்டிய உதயகுமாருக்கு எதிரான ஆதாரத்தையும், இவன் தன் தம்பியின் கோரச் செயலை நிரூபிக்கும் ஆதாரத்தையும் 

மீடியாவில் பணிபுரியும் நம்பகமான வேண்டப்பட்ட நபரொருவருக்கு அனுப்பியவன், 

பாட்டன்மார்களின் வியாபாரப்பங்குதாரக் கடிதத்தை கம்பெனி செகரட்டரி ஜனார்த்தனனுக்கு… 

தக்க காலம் வரும் வரை இந்த இரகசியத்தைப் பாதுகாக்கும் படி மெயில் அனுப்பி, விஷயத்தை வெளியிடுமாறு செய்தவன், அடுத்த நாள் காலை வந்த வேலை நிறைவடைந்ததும் கண்டிக்கு புறப்படலானான்.

 

மீடியாவில் பணிபுரிந்த நம்பகமான நபருக்கு..அவன் அனுப்பிய ஆவணங்கள் கொஞ்சம் தாமதமாகக் கிடைக்கத் தான்..

 ஷங்கர் தேவ்வர்மனும் மித்ரா கண்ணாபரேஷன் நடந்தேறி மூன்று வாரங்களுக்குப் பிறகு பிடிபட்டான். 

கண்டி வந்து இறங்கியதும் மறுநாள் காலை அக்னிமித்ராவுக்கு கண்ணாபரேஷன் என்ற சந்தோஷம் அவனை ஒருபுறம் மகிழ்வித்தாலும்,

 அவள் தான் யாரென்று உணர்ந்தால் தன்னை ஏற்றுக் கொள்வாளா? இல்லை வெறுப்பாளா?

 குழந்தைகளை தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு சென்று ‘விவாகரத்து’ கேட்பாளா? 

அப்படி அவள் அவனை விட்டுச் சென்றாலும் அவனால் அவளைப் பிரிந்து இருக்க முடியுமா? என்ற பலவகையான பயங்கள் எழுந்து அவனைப் பிடித்தாட்டலானது. 

சரியாக கண்டியின் மருத்துவமனை பகுதிக்கு அருகே வந்தவன், நண்பனுக்கு ‘வாய்ஸ் ரெக்கார்ட்’ அனுப்ப எண்ணியவன், ஷங்கர் தேவ் வீட்டில் நடந்த அத்தனையையும் ஒன்று விடாமல் கூறியவன்.. 

“புலி பதுங்குறது பயத்தினால இல்ல.. பாய்றதுக்கு தான்னு அந்த ஷங்கர் புரிஞ்சிக்கிட்டிருப்பான்.. நான் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. அக்னிமித்ரா கண்ணு முழிக்கும் போது.. அவர் எதிர்பார்த்த உலகம் ஒண்ணு அவளுக்காக காத்திருக்கும்.. சேப், செக்யோர்ட் என் வெல் ஸெட்டில்ட் லைப்..”என்று மெஸேஜை அனுப்பி முடித்தவனுக்கு, 

ஏனோ அவளும், குழந்தைகளும் இருக்கும் புகைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

 

இது தான் தான் தன்னுடைய அக்னிமித்ராவைப் பார்க்கும் கடைசிப்பார்வை என்றறியாதவன்.. புகைப்படத்தை எடுத்துப் பார்த்த கணம்.. முகம் முழுவதும் ஓர் புன்னகை விரவிப் பரவியது. 

நெஞ்சு முழுவதும்.. குழந்தைகளை கட்டியணைத்துக் கொண்டு புன்னகைக்கும் மனைவியின் சந்தோஷம் போதும் என்ற ஒரு திருப்தி மனப்பான்மை எழுவதைத் தடுக்க முடியாதவன்.. 

கண்டியின் சாலையை கடக்க, வீதியில் பாதங்கள் வைத்தான். 

கெத்தாகத் திரிந்த அதிமன்யுவை.. தன் அன்பினால் சாதுவாக அடக்கிய பெண்ணைப் பற்றி எண்ணிக் கொண்டே வீதியைக் கடந்த வேளை, 

எதிர்பாராமல் ஜெட் வேகத்தில் வந்தது கண்டெய்னர் ஒன்று. 

கண்டெய்னர் சாரதிக்கும் இறுதித் தருவாயில் ப்ரேக் பிடிப்பது சிரமமாகப் போக, இவனும் சுதாரித்து நிமிரும் முன்.. கண்டெய்னர் அவன் மீது மோதியிருந்தது. 

கண்டெய்னருடன் மோதுபட்ட வேகத்தில்.. கபாலத்திலிருந்து பீறிட்ட இரத்தம்.. நெற்றிவழியாக மழை போல வழிய, அவனது வலது கை போனது வேறு ஏதோ ஓர் திசை நோக்கி. 

இரண்டடி தள்ளி வீசப்பட்டு விழுந்தவனின் கண்முன்னே.. நேரிடையாக விழுந்து உடைந்தது செல்ஃபோன். 

பின்மண்டையிலிருந்து பீறிட்ட இரத்தம்.. வீதியை நனைக்கவாரம்பிக்க.. 

அந்த செல்ஃபோனில் தெரிந்த தன் மனைவியினதும் இரண்டு குழந்தைகளினதும் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே , 

இறுதியாக “ம்மி.. த்ராஹ்” என்று தன் இதயத்தில் எழுதப்பட்டிருக்கும் அவள் பெயரைச் சொல்லியவாறு, அங்கணமே உயிரை விட்டான் அதிமன்யு ஆதிதேவ் வர்மன்.

அவன் கண்களில் இறுதியாக விழுந்த விம்பம் அவள் விம்பம்!! 

அவன் நாவில் இறுதியாக தவழ்ந்த பெயர் அவள் பெயர்!! 

சட்டென சம்பவம் நடந்த இடத்தை மக்கள் சூழவாரம்பிக்க, மரணித்த தருவாயிலும், ஓர் திருப்திப் புன்னகை உறைந்திருந்தது அவன் இதழ்களில்!! 

அது எதனால் தந்த திருப்திப் புன்னகை?? 

அவள் பார்வையாக இவன் விழிகள் மாறப்போவதை முன்கூட்டியே உள்ளுணர்வால் அறியப்பெற்றதால் வந்த புன்னகையோ?? 

அவளுக்கு ஆபரேஷன் செய்ய தயாரான இறுதி நிமிடங்களில், அவளுக்கென்று முன்னேற்பாடு செய்யப்பட்ட, கண் தானம்.. இன்னொருவருக்கு கொடுக்கப்பட்டு விட.. 

 

இறுதியில்.. ஐ பேங்கில்.. ஹாஸ்பிடல் நிருவாகம் கோரிக்கை விடுத்த போது.. வந்தது அதிமன்யுவின் கண்களே!! 

ஒருவர் இறந்து ஆறு மணித்தியாலங்களுக்குள் அவர் கண்களை பத்திரப்படுத்தினால்.. அந்தக் கண்களை இன்னொருவருக்கு கண் தானம் செய்ய முடியுமானதாக இருக்க.. மருத்துவமனையினால் துரிதமாக நடவடிக்கை எடுக்கபட்டது. 

அதிமன்யு.. மனைவி கண்ணில்லாமல் படும் கஷ்டங்கள் கண்கூடாகக் கண்டவனாயிற்றே அவன்? 

இறக்க முன்னர் கண் தானம் செய்ய முன் வந்திருந்தது, அக்னிமித்ராவுக்கே அனுகூலமாகப் போனது. 

அவளது கோர்னியாவுக்கு, அதிமன்யுவின் கோர்னியாவைப் பொருத்தமுடியுமானதாக இருக்க.. சிகிச்சையும் வெற்றிகரமாகவே முடிந்தது. 

 

****

நடந்ததை அறிந்ததும் கால்கள் வலுவிழக்கத் தொடங்க.. இரண்டாக மடிந்து அமர்ந்தவள்..அந்த வீடு முழுவது‌ம் தன் அழுகுரல் எதிரொலிக்க.. 

“ஆஆஆஆஆஆ தேவ்!!“என்னை விட்டுப் போக உனக்கு எப்படி மனசு வந்தது? அப்பா எங்கேன்னு கேட்குற குழந்தைங்களுக்கு நான் என்ன சொல்வேஏஏன்?? ஏன் இப்படி பண்ண??”??” என்று கதறியவளாக அழுதாள் அக்னிமித்ரா. 

அவள் அழுத அழுகையை கல்நெஞ்சுக்காரன் பார்த்திருந்தாலும், அவனுக்கும் கண்ணோரம் கண்ணீர் துளிர்த்திருக்கும்.

அவளை தனியாக விட்டுப் போன தேவ்.. குழந்தையையும், அவளையும் தனியாக விட்டுப் போன தேவ்.. என்று அவளால் நம்ப முடியவில்லை. 

அவனிருப்பது அவளோடு!! அவன் விழிகள் வாயிலாகத் தான் இவள் உலகத்தைப் பார்க்கிறாள்!! 

நாசி நுனி செக்கச்செவேலென சிவக்க… தேற்றுவார் யாருமின்றி அழுதவளின் கலங்கிய விம்பம்..ஏனோ அந்த நிமிடம் கொஞ்சம் தெளிவாகத் தெரிவது போல இருந்தது. 

மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து மீதமிருக்கும் கல்யாண ஃபோட்டோவையும், மற்ற செல்லையும் எடுத்தவள்.. அதைப் பார்த்த போது தன் வாழ்நாளில் அவள் எதிர்பார்த்திராத ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. 

அந்தக் கல்யாண ஃபோட்டோ.. கண்களைக் கசக்கிக் கசக்கிப் பார்த்தவளின் கண்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக தெளிவைக் காட்டத் தொடங்க, அவர்களது கல்யாண ஃபோட்டோவை முயன்று பார்த்தாள் அவள். 

அவள் அருகே நின்றிருந்தது அதிமன்யு ஆதிதேவ் வர்மன் தான். ஆனால் அவன் முகம்.. அன்று சேப்டர் வன் உணவு வளாகத்தில் வைத்து பார்த்ததை விடவும் வித்தியாசமானதாக இருந்தது. 

அவனது ஒருபக்கக் கன்னம் ரொம்பவும் புஷ்டியாக வீங்கிப் போயிருந்தது போல ஓர் நிழற்படம் தெரியக்கண்டாள் அவள்.

 ஏன் அவன் முகம் மாறிப் போயிருக்கிறது என்று அப்போது தெரியவில்லை அவளுக்கு. 

விழிகள் சுருங்க புகைப்படத்தை வைத்தவள், மற்ற செல்லை எடுத்து நோண்டவாரம்பித்தாள். 

டிஸ்ப்ளேயில் விழுந்தது “சந்துரு”என்னும் பெயர். உள்ளே கேலரியை நோண்டிப் பார்த்த போது.. எல்லாமே பெண்களின் கீழ்த்தரமான புகைப்படங்களாக இருக்க.. இது எந்த “சந்துரு?”என்று சொல்லாமலேயே புரிந்தது. 

அது அவளிடம் தவறாக நடக்க முற்பட்ட சந்துரு. கூடவே அவளுடைய தவறான புகைப்படங்கள் இருக்கக் கண்டவளுக்கு.. முகம் சுளித்தது. 

கண் தெரியாத அப்பாவிப் பெண் அவளையும் கூட.. காமப் பொருளாகக் கொண்டு.. அசிங்கமான கோணங்களில் பல புகைப்படம் எடுத்திருந்தான் சந்துரு. 

சந்துரு செல் எப்படி அவர்கள் வீட்டு டிராயரில் என்று யோசித்தவளுக்கு, என்ன நடந்திருக்கும் என்று அனுமானிக்க முடியுமானதாகவே இருந்தது. 

சரியாக சந்துரு அவளிடம் தவறாக நடக்க முற்பட்டு, அதிமன்யு வந்து காப்பாற்றிய ஒரு மாதத்தின் பின்பு, அவளிடம் மன்னிப்புக் கோரியவனாக, வேலையை இராஜினாமா செய்து விட்டு ஊரை விட்டே சென்றிருந்தான் சந்துரு. 

அவன் தன்னை தவறாக புகைப்படம் எடுத்ததை எவ்வழியிலேயோ அறிந்து கொண்ட அதிமன்யு தான், சந்துருவிடமிருந்து செல்லைப் பிடுங்கி இருக்க வேண்டும் என்றே தோன்றியது அவளுக்கு. அது உண்மையும் கூட.

தொடர்ந்து கேலரியை ஸ்க்ரோல் செய்தவளுக்கு.. இசை எஃப். எம் ரேடியோ ஸ்டேஷனிலிருந்து.. அக்னிமித்ராவின் கைகளைப் பிடித்துக் கொண்டு வெளியே வரும் ஓர் ஆடவனின் ஃபோட்டோவை க்ளோஸப்பில் படம் பிடித்திருந்தான் சந்துரு. 

அந்த ஆடவனின் முகத்தைப் பார்த்தவள் அப்படியே அரண்டு போனாள். 

அவ்வாடவனின் ஒரு பக்கக்கன்னம் முழுவதும் எரிந்து.. எரிந்த தடங்கள் அகோரமாகத் தெரிய இருந்தது அந்த ஆணுருவம். அந்த உருவத்தை பெரிதாக்கியவள், 

தன் கை வைத்து அந்த எரிந்த கன்னத்தை மூடியவளாக மறு பக்க முகம் பார்த்த போது.. அது அதிமன்யு ஆதிதேவ் வர்மன் என்று புரிந்ததும் ஆடிப்போனாள் அவள். 

மீண்டும் தன் கல்யாண போட்டோவை எடுத்து உன்னிப்பாகப் பார்த்தவளுக்கு விஷயம் முழுமையாகத் தெரிந்தது. 

கல்யாண போட்டோவில் அதிமன்யுவின் ஒருபக்கக் கன்னம் வீங்கிப் போயிருப்பது போல தெரியக் காரணம், 

தீவிபத்தில் எரிந்த கன்னத்தடயத்தை மறைக்க ஒரு சின்ன மாஸ்க் போல ஒன்றை.. சருமத்தோடு சருமமாகப் பதிந்து போவது போல அணிந்திருந்தான் அதிமன்யு. 

அவளது அகல விரிந்த அதரங்களை மறைத்துக் கொண்டது அவள் கரங்கள். 

அன்று மகாவலி ஆற்றங்கரையோரம் வைத்து அவனைத் தொட்டுப் பார்த்த போது, 

இதற்கு முன் பார்த்திராதது போன்ற ஓர் முகத்தை.. உணர்வை அவளுக்கு அவன் கொடுக்கக் காரணம் அவன் அணிந்திருந்த சருமத்தோடு சருமமாக ஒட்டித் தெரியும் மாஸ்கினாலா?? 

சிற்சில சமயம்.. அவள் ஆசையாகக் கன்னம் தொட விளையும் நேரம், ‘வேண்டாம்’என்று அவன் தடுத்த நிகழ்வுக்கான காரணம்.. அங்கணம் தான் புரிந்தது அவளுக்கு. 

அவள் வாய் திறந்து, ‘என் புருஷன் அழகு’என்று பாராட்டிய போதெல்லாம், அவன் மௌனமாக நகைத்ததன் காரணம் இன்று புரிந்தது அவளுக்கு. 

அனைவரும் வெறுத்து ஒதுக்கிய அதிமன்யுவின் முகத்தை ஆசைகமழப் பார்த்துக் கொண்டேயிருந்த அக்னிமித்ராவின் கண்களில் நில்லாமல் வழிந்தது கண்ணீர். 

“எப்போவுமே நீ என் கண்ணுக்கு அழகன் தான்டா..”என்றவள் மனதளவிலும், உடல் அளவிலும் ரொம்ப உடைந்து போயிருந்தாள். 

அவனோடு அவள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு நிமிஷம் அவள் மூளையை ஆக்கிரமிக்கலானது. 

இரவின் கூடல்களில்.. அவன் கைவளைவையே தலையணையாகக் கொண்டு உறங்கும் சுகம் இனி கிடைக்குமா?? 

காலையில் எழுந்ததில் இருந்து இரவு வரை.. அவளுக்கான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்யும் தேவ் அவளுக்கு கிடைப்பானா? 

“என் பேபி ரொம்ப ஹேன்ட்சம்” என்று அவள் சொல்லும் தருணங்களில், மௌனமாக நகைக்கும் அவன் சிரிப்பை உணர்ந்து, “நீ சிரிக்கிறேல்ல?” என்று அவள் கேட்கும் தருணங்கள் மீள வருமா? 

சேலை அணிய அவள் தடுமாறி நின்ற நேரம்.. ஒரு கண்ணில் காமத்தையும், மறு கண்ணில் காதலையும் சுமந்து கொண்டு, சேலை அணிவித்த அந்த நாள் திரும்பக் கிடைக்குமா? 

மலையேறிச்சென்று.. அங்கிருந்து சூரியணையும், மலைகளையும், மலைமுகடு உரசும் வெண்பஞ்சு மேகங்களையும் அவன் திகட்டத் திகட்ட வர்ணித்த சுவை அவளுக்கு அனுபவிக்க முடியுமா? 

அவன் கையால் பல நாட்கள் சமைத்து உண்றிருப்பவளுக்கு.. பார்வை வந்ததும் இவள் வயிறார சமைத்துப் போட வேண்டும் என்று அவள் எண்ணியிருந்த எண்ணமும் தான் இனி ஈடேறுமா?? 

ஆள் அரவமில்லா.. தண்ணீர் கொட்டும் பீலி நோக்கிச் சென்று.. அவன் குளியல் போட.. அவனது திடகாத்திரமான மேனியை பின்னிருந்து அணைத்து, முதுகில் முகம் புதைக்கும் சுகமும் தான் பெற இயலுமா?? 

தாய் வாசம் தேடி குழந்தை தவிப்பது போல.. அவன் மேனி வாசம் தேடி.. இவளைத் தவிக்க விட்டுச் சென்றவன் திரும்ப வருவானா?? 

குழந்தைகள் பிரசவிக்கும் வலியை.. அவளோடு அனுபவித்த தேவ்..!! அவளது இருட்டுக்குத் துணையாக இருந்த தேவ் எங்கே? 

இறுதி வரை இவள் வாழ்வுக்கு வெளிச்சம் கொடுத்து விட்டு காற்றோடு கரைந்து தான் போனானா?? 

மெல்ல எழுந்தவள் கண்ணாடியில் தன் விழிகள் பார்த்தாள். அவள் தன் தேவ்வையே பார்ப்பது போல உணர்ந்ததும்.. மீண்டும் அழுகைப் பொத்திக் கொண்டு வந்தது அவளுக்கு. 

கண்ணாடியில் தெரியும் விம்பம்.. தான் முதன் முதலாகப் பார்த்த தேவ்வாகத் தெரிய.. கண்ணாடியின் மேல் உள்ளங்கை வைத்தவள் திரும்ப வெடித்து அழுதாள். 

அந்த நேரம் வாசலில் கேட்டது கார் வந்து நிற்கும் ஒலி. உள்ளே வீட்டு மாடிப்படியேறி வந்திருந்தது ஜனார்த்தனன்! அவனது இரு கைகளிலும் இருந்தது அவளுடைய குழந்தைகள். 

தற்போது அவளால் அனைவரையும் தெளிவாகப் பார்க்கக் கூடிய தெளிவு வந்திருந்தது. 

குழந்தைகள் தாயைக் கண்டதும் ஜனார்த்தனனிடமிருந்து நழுவி, தாயிடம் ஓட, 

ஜனார்த்தனனோ, “ஸாரி மேம்.. குழந்தைங்க.. உங்களை காணாம ரொம்ப அழுதாங்க.. அதான் எப்போ வருவீங்கன்னு கேட்க உங்களுக்கு கோல் பண்ணேன்.. நோ ரெஸ்பான்ஸ்.. அதனால தான் அவங்களை இங்கேயே அழைச்சிட்டு வந்துட்டேன்” என்றவனுக்கு, 

தன் முதலாளியம்மாளுக்கு மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்து விட்டது என்று புரிந்தது. அவன் அமைதியாக அங்கிருந்து வெளியேற 

அவளை நோக்கி ஓடி வந்த குழந்தைகளை பதைபதைப்புடன் பார்த்தாள்.

கடவுளே.. குழந்தைகள் அந்தக் கேள்வியை அவளிடம் கேட்கவே கூடாது.. கேட்கவே கூடாது என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டே இருக்க, ஓடி வந்த குழந்தைகள் அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு.. மடியில் அமர்ந்து அதே கேள்வியைத் தான் கேட்டனர். 

“ம்மா.. அப்பா எந்தம்மா.. வந்துட்டாரா?”என்று கேட்க, அழுகையில் வளைந்த இதழ்களைக் கடினப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு.. கட்டியணைத்துக் கொண்டாள் அக்னிமித்ரா. 

இவர்களிடம் அவள் என்ன பதில் சொல்வாள்?? இந்தப் பிஞ்சுகளிடம் அவள் என்ன பதில் தான் சொல்வாள்?? 

 நிமிர்ந்தவள், தன் கவலையை அடியோடு போட்டு பொசுக்கிக் கொண்டு சொன்னாள், “அப்பா எங்கேயும் போகலை.. நம்ம கூடவே தான் இருக்காரு” என்றவளுக்கு உள்ளே நம்பிக்கை ஊறத் தொடங்கியது. 

குழந்தைகளுக்கு தாயின் பதிலை அறிந்து கொள்ளும் அளவுக்கு அறிவோ வயதோ பக்குவமோ இல்லை தான். 

இருப்பினும் அறிந்து கொள்ளுப் வயதும், பக்குவமும் வரும் போது.. தந்தை எங்கே என்ற கேள்விக்கு விடை அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 

அதிமன்யு.. எங்குமேயில்லை.. இதோ அவள் விழிகளுக்குள். அவன் பார்க்கும் பார்வையும்.. இனி அவள் பார்க்கும் பார்வையும் ஒன்றாக. 

அவளது பார்வை தற்போது தெளிவாகத் தொடங்கியது. அவள் கண்கள் சுற்றி வரச் சுழன்றது.அவன் பார்வையும், அவள் பார்வையும் ஒன்றாக இருக்க.. எங்கேயும் காதலாகவே தோன்றியது அவளுக்கு. 

ஈருடல் ஓருயிர் காதலென்றால்.. இதோ ஓருடலில் ஈருயிரும் காதல் தான்!! 

இருவர் உடலும் வேறு வேறாக இருந்திருக்குமாயின்.. என்றோ ஒரு நாள் மரணம் அவர்கள் காதலை வென்றிருக்கும். 

ஆனால் அவள் உடலோடு இவன் இரத்தமும், சதையுமாக கலந்து விட்ட பின், இவள் மரிக்கும் போது தான் அவள் காதலும் மரிக்கும். அது வரை அவள் காதல் எங்கேயும் காதலாக ஜனித்திருக்கும்!! 

அந்தப் பார்வையில் நம்பிக்கை குடி கொள்ள..குழந்தைகளை இறுகி அணைத்துக் கொண்டாள் அக்னிமித்ரா. 

 

முற்றும். 

 

7 thoughts on “எங்கேயும் காதல்! – 19&20 (விஷ்ணுப்ரியா)”

  1. Goosebumps moment seriously aluthutn athi irunthuruntha evlo nalla irukum irunthurukalam but last lines 👏👏👏👏superrrrrr romba pudicirunthathu superrrr sis

  2. semma pa.. aluthiten.. aadhi itunthiruntha evlo nalla irunthirukum.. but super story.. last one true love never die..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top