ATM Tamil Romantic Novels

பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 4, 5,6&7

காதல்காரா-4

 அது..நம் வீர ராகவன்.. தலைவியாளின் மெய்க்காவலனாக நியமிக்கப்பட்டிருந்த பிரதம நாள்!! நேரமோ.. இரவு பதினொன்றரை மணியைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கலானது.
 
அவள் அன்றிரவு இருந்த இடத்திலேயே ‘காப்பாளனாக’ தானும் நின்றிருந்தான் ராகவன்!! 
 
நாயகி பூஜாவும்.. நேரம் கடந்து சென்று விட்டிருந்த போதிலும்.. வீட்டுக்குச் செல்லாமல்.. தன் நெருங்கிய தோழியான துவாரகாவின் வீட்டில்.. இன்னும் தங்கியிருந்து கொட்டமடித்துக் கொண்டேயிருக்கலானாள். 
 
தோழி துவாரகா ஒன்றும்.. பூஜாவைப் போல மல்ட்டி மில்லியனரின்.. ஏகப் புதல்வியோ.. தனவந்திரியோ அல்ல. மாறாக, துவாரகா சற்றே சாதாரண உயர்தட்டு வர்க்கத்தைச்  சேர்ந்தவளாக இருக்க.. பூஜாவுக்கும்.. துவாரகாவின் வாழ்க்கை முறை ஒரு பிடித்தத்தைக் கொடுக்கவே செய்தது. 
 
அந்தப் பிடித்தம்.. பூஜாவுக்கு சுவாரஸ்யத்தையும் கொடுத்தது. ஆதலால், பள்ளி செல்லும் நாள் முதலாய்.. துவாரகாவோடு நட்பாகிப் போனாள் தலைவி. 
 
அந்த சீரிய நட்பு இன்றளவும் நீடிக்க.. இதோ.. தோழியின், ‘தாய்-தந்தையர்’ வெளியூர் பயணம் சென்றிருக்கும் நேரமதில்.. பூஜாவையும், தன் இதர தோழியர்களையும் அழைத்து வந்திருந்தாள் துவாரகா. 
 
‘வீட்டில் பெற்றோர்கள் இல்லை’ என்றதும்.. பெண்களின் ரவுசு எல்கை கடந்து போய்க் கொண்டிருந்தது. துவாரகாவின் நடுக்கூடத்திலிருந்த ப்ளேயரில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.. சிட்ச்சுவேஷன் சாங்க்!! 

“டேடி மம்மி வீட்டில் இல்ல.. 
தட போட யாரும் இல்ல.. 
விளையாடுவோமா புள்ள
வில்லாளா!!” 
 
என்று ப்ளேயரில், ‘ மம்தா மோகனதாஸ்’ ஆண்மகனின் டெஸ்டெஸ்டரான் சாயலைக் கொண்ட குரலில் உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருக்க.. இதர தோழியர்களோ.. வீட்டின் நடுக்கூடத்தில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். 
 
கிட்டத்தட்ட உயர்ரக விருந்தொன்றினைப் போல பரிமாணம் கொண்டிருந்தது துவாரகாவின் ஒட்டுமொத்த மனையுமே! அதிலும், பெண்கள் ஒவ்வொருத்தரின் கையிலும், ஒயின் கிளாஸ் அடைக்கலமாகியிருக்க.. அனைவரும் மிதமான போதையிலேயே உழன்று கொண்டிருந்தனர் ஆங்கே. 
 
தன் இன்னபிற சேடியர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாலும் கூட, அந்த ஆட்டத்தில் இணையாமல்.. அருகிருந்த சோபாவில், காலுக்கு மேல் கால் போட்டபடி அமர்ந்து.. கைகளில் ஒய்யாரமாக ஒயினை சிப்பிக் கொண்டிருந்தாள் பூஜா. 
 
அவள் பக்கத்திலோ தோழி துவா. அவளோ.. மிகப்பெரும் ஒயின் பாட்டிலில் இருந்த ஒயினைக் கொஞ்சமாக.. பூஜாவின் கண்ணாடிக் குவளையில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கலானாள். 

பூஜாவும்.. புதிதாக ஊற்றப்பட்ட ஒயினை கொஞ்சமே கொஞ்சம் இதழ்கள் பட்டும் படாமல் அருந்தினாலும், பார்வையோ.. இல்லத்தின் வாசலில் மார்புக்கு குறுக்காக கைக்கட்டி நின்றிருந்த ராகவனைத் தான், ஒருதரம் ஏறிட்டு அடங்கியது. 
 
ராகவனின் பார்வையோ.. அங்கிங்கெனாதபடி அவளிலேயே பதிந்திருக்க.. அவளை காக்கும் காப்பாளனாக உருமாறி வெறித்துப் பார்த்திருந்தவனின் பார்வை வேறு அவளை ஏதோ செய்யும் போலிருந்தது. 
 
அதில், இன்னும் கொஞ்சம் கடுப்பானவளின் முகமோ.. செஞ்சாந்து பூசினாற் போல சிவப்பு காணவும் தொடங்கியது. 
 
பார்வையோ நிலைக்குத்தி.. அவனில் பதிந்திருந்தாலும், பூஜாவின் மொழிகள் யாவும்.. தோழி துவாவிற்கானதாகவே வெளிவந்தது. 
 
 “எல்லாம் என் டாடியால வ்வந்த வினை.. ஓ காட்.. முன்னாடிலாம் எங்கே போனாலும்.. வந்தாலும் சுதந்திரம் இருந்தது.. ப்ரைவசி இருந்தது.. ஆனா இப்போ.. புதுசா முளைச்ச ஓணாண் வால் போல.. இவனையும் கூட்டிட்டு போக வேண்டியதா இருக்கு.. கேட்டா பாடிகார்டாம்.. பாதுகாப்பாம்.. இட்ஸ் டிஸ்கஸ்டிங்க்.. கர்ர்ர்!! “என்று காற்றில் கையினை அழுத்தி விடுவித்துக் கொண்டாள் பூஜா. 
 
ஆம், உண்மையில் பூஜாவுக்கு ஏனோ.. பார்த்த முதல் கணத்திலேயே பிடிக்காமல் போனது வீர ராகவனை. அதிலும், தன்னை அவன்.. உடம்பில் அத்தனை வலுவிருந்தும்.. அலட்சியமாக முதல் முயற்சியிலேயே ‘காக்க விளையாமை’ கண்டு இன்னும் இன்னுமே பிடிக்காமல் போனது. 
 
தனக்குள் ஒரு சிறிதும் பிடித்தத்தைக் கிளப்பாத வீர ராகவனே.. தன் மெய்க்காப்பாளனாக வரக்கூடும் என்று அவள் என்ன கனவா கண்டாள்?? 
 
நாயகியின் மொழிகள் அபத்தம் என்று தோன்ற.. ஆதரவாக பூஜாவின் கையை மென்மையாகப் பற்றிக் கொண்டாள், பூஜா மீது உண்மையிலேயே உள்ளன்பு வைத்திருக்கும் துவா. 
 
“ஹேய் பூஜா.. ஜஸ்ட் சில். ரிலாக்ஸ்.. அங்கிள் ஒண்ணும் வீணுக்காக பாடிகார்ட் நியமிக்கலையே?? உன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாதுன்றதனால தான்.. தகுதி வாய்ந்த ஒருத்தரை நியமிச்சிருக்காரு.. ப்ரைவசி முக்கியமா? உயிர் முக்கியமா?? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போ..” என்று நல்ல தோழியாக நன்மதியாகவும் சொல்லலானாள் துவாரகா. 
 
 பூஜாவோ.. கண்ணாடிக்குவளையிலிருந்த இறுதிச்சொட்டு ஒயின் துளியையும் சரமாரியாக தொண்டையில் சரித்துக் கொண்டவளாக.. விட்டேற்றியாக,” வாட் எவர்??”என்றாள். 
 
அக்கணம்.. அருகினில்.. வறுத்த கோழியை.. தன் உதட்டுச்சாயம் கலையாமல் ஒரு கடி கடித்த.. மற்றைய தோழிகளுள் ஒருத்தியோ.. வீர ராகவன் தூரத்தில் நின்றாலும்.. தங்கள் தலைவியையே பார்த்திருப்பது கண்டு.. உள்ளூற களிப்புற்று நிற்கவும் செய்தாள். 
 
“ஹேய் பூஜா..அங்க பாரேன்.. நாம இங்க வந்து எத்தன மணிநேரம் ஆகுது.. ஆனா கடந்து போன இத்தனை நிமிஷத்துல அவன் பார்வை உன்னை விட்டு திரும்பவே இல்ல தெரியுமா?? ..  அவன் உன்னை மட்டும்தான் பார்த்துட்டேயிருக்கான்” என்று சொல்ல.. தோழிக்கு என்ன பொறாமையா? தங்களைப் பார்க்கவில்லையே இந்த ஆணழகன் என்ற ஆற்றாமையா? 
 
தோழியின் உள்ளெண்ணம் அறிந்திராத பூஜாவின் மனமோ, தடதடவென அடித்துக் கொண்டது. காற்றுக்கு ஆடும் சாத்தப்படாத கதவினைப் போல. 
 
விழிகளில் ஒரு வன்மூர்க்கக் கோபத்தை வெளிக்காட்டியவளாக, அவனை நோக்கித் திரும்பிய பூஜாவின் கண்கள்.. அவனோடு தான் மானசீகமாக சங்கேத மொழியில் உரையாடியது. 
 
‘நீ என் பாடிகார்ட் தான்.. அதுக்காக இப்படி என்னை வைச்ச கண்ணு வாங்காம எல்லார் முன்னாடியும் பார்த்து வைக்கறத நிறுத்து!’ என்று கெஞ்சலோடு.. மன்றாடியது அவள் உள்ளம். 
 
அவள் உள்ளமும் சரி, விழிகளும் சரி.. தனக்கு ஊடுகடத்த விளையும் தகவல் புரிந்தாலும்.. மங்கையர் மனம் கொய்யும் அரக்கனோ.. ஒரு சிறிதும் தன் தீராத பார்வையை தழைத்துக் கொள்ளவேயில்லை, அவளில் நின்றும். 
 
‘ அவன் என்ன செய்தாலும் கேட்கப் போவதில்லை’ என்பது புரிய.. குட்டிச்சுவற்றில் முட்டிக் கொண்டது போன்ற இயலாமையுடன்.. மூசுமூசுவென மூச்சு வாங்கிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் பூஜா. 

உத்திரத்தை அண்ணார்ந்து கடுப்பு தோய்ந்த நயனங்களுடன் பார்த்த நங்கையோ.. வெறுப்போடு நின்றாள். 
 
“சீரியஸ்லி.. ஐ ஹேட் ஹிம்.. ஐ ஹேட் ஹிம்.. எல்லாம் என் டாடிய சொல்லணும்.. டாடீஈஈஈ!!” என்று கண்களை மூடிக் கொண்டு அருகில் இல்லாத தகப்பனை.. உள்ளுக்குள் தன் கோபம் தீருமட்டும் கத்தி நிந்திக்கத் துவங்கினாள் அவள். 
 
உண்மையில், பூஜா இது போல.. தன்னிலை மறந்து.. கத்திக் கூச்சலிட்டு.. தன் வெறுப்பினை வெளிக்காட்டும் பெண்ணே அல்ல. அத்தனை சாதுவாக இருப்பவளுக்கும் ‘இன்று என்னாயிற்று?’ என்று அதிர்ச்சி மேலோங்க.. ஸ்தம்பித்துப் போய் பார்த்திருந்தாள் துவா. 
 
சட்டென்று தலைவியின் மடிமீது.. நட்போடு கைவைத்து.. அழுத்தி நின்றவள்.. உணர்ச்சிகள் பொங்க நிற்கும் தலைவியையும் ஒருவழிக்குக் கொண்டு வரவே எண்ணினாள். 

  “ரிலாக்ஸ் பூஜா.. இதில் நீ டென்ஷனாக ஏதும் இல்லை.. எனக்கொண்ணும் ராகவ் பார்க்கறதுக்கு கெட்டவர் மாதிரி தோணலை, ஒரு தடவ உன் உயிரை வேற காப்பாத்தியிருக்காரு.. ஸோ.. இப்ப இந்த நிமிஷம்.. உன் பக்கத்துல பாதுகாப்புக்காக இருக்க தகுதியானவர்னா.. அது அவர் தான்னு  தோணுது.”  என்று பூஜாவின் மனம் மாற்றும் வகையில் பேச.. அதை தன் மழுங்கிப் போன மூளைக்குள் ஏற்றிக்  கொள்ளும் நிலையில் நாயகி இல்லை.  
 
வைராக்கியம் மின்னும் விழிகளோடு நிமிர்ந்து நின்ற பூஜாவோ.. சுவரினை வெறித்துப் பார்த்தபடி வாய் திறந்தாள். 
 
“அவன் யாரா வேணா இருந்துட்டுப் போகட்டும்.. எப்படி வேணா இருந்துட்டு போகட்டும்.. இந்த வீர ராகவன்.. இன்னும் எத்தன நாளைக்கு. என் பாடிகார்டா இருக்கான்னு பார்க்கறேன்..”  என்று தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டவளாகக் கூறியவளாக..எழுந்து.. ஓரெட்டு எடுத்து வைத்திருப்பாள் அவள். 
 
அதற்குள், பாதங்களும் தள்ளாட.. அவள் விழ எத்தனிக்கலானாள்.
அருகே அமர்ந்திருந்த இரு தோழியர்களும்,” ஹேய் பூஜா.. பார்த்துடீ”என்று பதறலாயினர்.
 
இரண்டாம் அடியை  ஒருவாறு அழுத்தமாக எடுத்து வைத்துச் சமாளித்து நின்றாள் பூஜா.
 
அவர்களைப் பாராமல்.. புறமுதுகிட்டு நின்று தலைக்கு மேலே.. ஒற்றை பெருவிரல் காட்டி நின்றாள். 
 
“நான் ஷ்ரியா (ஸ்டடியா) தான் இழுக்கேன்.. ஆல் ஓகே கேர்ள்ஸ்!! நோ வொர்ரீஸ்!!”என்று போதைக்குரலில் மொழிந்தவளாக.. தன் ஆடையை நேர்ப்படுத்திக் கொண்டு விரைந்தாள் அவள்.. வாசலில் நின்றிருந்த ஆண்தகையானை நோக்கி!! 
 
அவனருகே வந்து நின்ற பூஜாவின் போதையில் மிழற்றும் விழிகள்.. அழகன் ராகவனைத் தான் ஒரு சில கணங்கள் இமையாமல் பார்த்திருந்தது. 
 
அவள் தன்னருகண்மையில் நிசப்தித்து நிற்பதைக் கண்ட ராகவனும், “என்ன மேடம்? பார்ட்டி ஓவரா.. கெளம்பலாமா மே.. டம்ம்!! ?” என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை, ‘மேடம்’ என்று அழைத்து வைத்த தினுசில்.. ரௌத்திரம் கொண்ட பார்வதியாகவும் உருமாறிப் போனாள் அவள். 
 
“ஐய்யோஓஓ.. மேடம்ம்ம்.. மேடம்ம்ம்.. மேடம்ம்ம்!!.. இன்னிக்கு ட்யூட்டி ஆரம்பிச்ச நாள்லயிருந்து மேடம் தானா.. கால் ம்மீஈஈ ப்பூஜா!! “என்றவளின்  கோபத்தில் இருண்ட கண்கள்.. அவனது கண்களை.. சிமிட்டாமல் சந்திக்கலானது. 
 
அவளை ‘மேடம்’ என்று விளிக்கும் போது.. அவள் சீற்றம் கொள்வது அறிந்து தான் அவனும்.. வேண்டுமென்று அவ்வாறு விளித்ததே!! 
 
அவள் முகம் சிவந்து போனதைக் கண்டு.. உள்ளூற குரூரமாகப் புன்னகைத்தாலும்.. வெளியே எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாது நின்றது அந்த ஹியூமன் கம்ப்யூட்டர்!! 
 
இராணுவ வீரன் போல, ‘சல்யூட்’ அடிக்காத குறையாக விறைப்புப் பேர்வழி போலவே பதில் இயம்பி நின்றான் அவன். 
 
“ஸாரி மேடம்..நான் ஒண்ணும் சும்மா இந்த வேலைக்கு வரல.. உங்கப்பா கூட ஒரு கான்ட்ராக்ட் சைன் பண்ணிருக்கேன்.. அதில் ரூல் நம்பர் ஃபைவ் படி.. நான் உங்களை எந்நேரமும் மேடம்னு தான் கூப்பிட்டாகணும்!!” என்று சொன்னவனை வெட்டவா? குத்தவா? என்பது போலப் பார்த்து வைத்தாள் பூஜா. 
 
அவளது கோபத்தை வேண்டுமென்றே கிளறிவிட்டவனின் காட்டிலோ.. அவனுக்கு வேண்டியதை அவளும் கொடுக்க.. அடைமழை தான்!! 
 
அவள் தலையைக் குனித்துக் கொண்ட கணம்.. அவள் பாராமல் சிரித்துக் கொண்டவன்.. அவள் நிமிர்ந்து தன்னை ஏறிடும் நேரம்.. மீண்டும் தன் வதனத்தை இறுக்கமானதாக மாற்றிக் கொண்டான். 
 
 வெகுண்டெழுந்தவளாக, அவனைப் பார்த்தவளுக்கு அவனது அதீத பவ்யம் ஏதோ நாடகமாகவே தோன்ற.. சினந்து நின்றாள். 
 
“மேடமா.. மேடம்..இன்னும் டூடேய்ஸ் தான்.. இன்னும் ரெண்டே ரெண்டு நாள் தான்.. அதுக்குள்ள உன்னை ஓடவிட்றேனா இல்லையா பாரு??” என்று சொல்ல.. அவனிடமே சவால் விட அவளுக்கும் எத்தனை திண்ணக்கம்? 
 
அவனோ.. நெஞ்சு மத்தியில் கைவைத்து நின்று, “வித் மை ப்ளசர்.. இப்போ கெளம்பலாமா மெ.. டாம்!!” என்று இழுத்துச் சொல்ல.. எப்படி பந்தெறிந்தாலும்.. சிக்ஸர் அடிக்கும் அவன் கன்னத்தை சினத்தோடு கடித்து வைக்க ஆசை மூண்டது. 
 
இருப்பினும் அதை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் கொண்டவளாக, “ம்ம்.. கெளம்பலாம்.. நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு வை மேன்.. நான் பின்னாடியே வரேன்!! “என்று கட்டளையிட.. குட்டி சொர்ணாக்காவின் வார்த்தையைத் தட்டாமல்.. தலையை ஆட்டி விட்டு.. வாசற்படிகளைக் கடகடவென இறங்கிப் போனான் ராகவ். 
 
‘அவன் கண்மறைந்தான்’என்றானதும்.. மீண்டும் கடகடவென உள்ளே நுழைந்தவளோ.. தோழிகள் கூட அறியாமல்.. துவா வீட்டின் பின்வாசற்கதவை நாடிப் போனாள். 
 
அங்கிருந்த கதவைத் திறந்து வெளியில் வந்தவளின் முகத்தில். குளிர்காற்று மோத.. அவனிடமிருந்து அர்த்த ராத்திரியில் தப்பித்துச் செல்லவும் முன்வந்தாள் அவள். 
 
தன் காலில் இருந்த ஹீல்ஸைக் கழற்றி கையில் ஏந்திக் கொண்டவள்.. ஐந்தரையடி உயரம் இருக்கும் அந்தக் குட்டி மதில்ச்சுவரின் மீது தாவி ஏறினாள், மறுபக்கம் குதிப்பதற்காக. 
 
ஒருவாறு தத்தித் தாவி.. மதில் மேல் ஏறி.. மறுபக்கம் குதித்தவள்.. அப்பக்க சாலைவழியாக வீடு சென்று சேரவே எண்ணமும் கொண்டாள். 
 
இவளும் மழை பெய்து ஓய்ந்திருந்த தரையில் தன் வெற்றுப்பாதங்கள் பதித்தவளாக.. குதித்து தரையில் நின்றவேளை.. அவள் கண்களும் எதேர்ச்சையாக நோக்கியது?? 
 
வெளிச்சம் கண்களைக் குருடாக்கச் செய்யும் வண்ணம் போடப்பட்டிருந்த அவளது காரின் முன்விளக்கொளி!! 
 
கண்கள் வேறு கூசவே.. முகத்துக்கு நேரே கையினை கேடயம் போல வைத்து.. அந்தக் காராளனைத் தான் கையறு நிலையில் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் பூஜா. 
 
இவனெப்படி அவள் எஸ்ஸாக விழைந்ததை அறிந்தான்?? 
 
அதுவும் பின்புறமாகத் தான் சுவரேறி குதித்து வருவாள் என்பதைக் கூட எங்ஙனம் அறிந்தான்?? 
 
ஒருவேளை.. அவள் இன்னும் வரவில்லையென்றானதும் நண்பிகளிடம் கேட்டானோ?? ச்சேச்சே அவர்கள் அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்புக்களும் குறைவு. 
 
பின் எங்ஙனம்?? 

ஒருவேளை.. உள்ளதை உள்ளபடி கூறும் அவளது விழிகளில் அறிந்தானோ?? 
 
அவளின் தடுமாற்றமும், பதற்றமும், அவள் தப்பிச் செல்ல விழைகின்றாள் என்பதை அவனுக்கு உணர்த்தினவோ?? அப்படித்தான் போலும். 
 
காரினை விட்டும் தன் அழுத்தமான பாத எட்டுக்கள் எடுத்து வைத்து இறங்கியவன், மறுபுறமாகச் சுற்றி வந்த காரின் பானட்டின் மீது மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியவனாக அதே தீப்பார்வை பார்த்தவனாக நின்றான் அவன். 
 
“என்ன மேடம்?? கெளம்பலாமா??” என்று கறால்க்குரலில் கேட்டிருந்தவன், அத்தோடு தாமதித்து நிற்கவேயில்லை.
 
அவளை நாடி விரைந்து, அவளது முன்னங்கையைப் பற்றித் தரதரவென இழுத்து  காரினுள் போட்டு மூடியிருந்தான். 
 
சாரதி ஆசனத்தில் தானும் வந்து அமர்ந்து கொண்டவனின் விழிகளில் தீம்புனல் உதித்து ஓடிக் கொண்டிருந்தது.
 
“என்னை வ்விட்டா ஓடிப் போகலாம்னு பார்க்குற?? யாருன்னு காட்றேன் பாரு”  என்று கறுவியவன்.. அடுத்த கணம்.. அசுர கதியில் எடுத்திருந்தான் காரினை. 
 
அத்தியாயம் – 5
 
‘ அவன் தன்னை மீண்டும் வீட்டிற்குத் தான் அழைத்துச் செல்கிறான்’என்று வழிநெடுக எண்ணிக் கொண்டே.. எதையும் சட்டை செய்யாமல் முன்னிருக்கையில் அமர்ந்து வந்தவள்.. ரியர் வியூ கண்ணாடி வழியாகத் தெரிந்த.. அவனது தீட்சண்யம் சிந்தும் விழிகளையே இமையாமல் பார்த்தவாறே வந்தாள். 
 
அவளுக்கு இன்று, அவன்.. துவாவின் வீட்டில் தன்னை  பார்த்து வைத்த பார்வை ஞாபகம் வந்து போனது. 
 
அதனை நினையுங்காலெல்லாம், அவளுள் ஏனோ மயிர்க்கூச்செறியும் ஓருணர்வு. 
 
ஆனால், அவனுக்கோ உணர்வுகள் நேர்மாறாக.. சீற்றத்தின் வசம் ஆட்பட்டு.. தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. 
 
தன் பாதுகாப்பை விட்டும் விலகிச் செல்ல முனைந்த அவளின் மீது கோபத்திலிருந்தவனின் சீற்றம்  வெடிக்கத் தயாரானதேயொழிய.. அடங்கத் தயாராகவேயில்லை. 
 
அவன் கைவன்மையில் சீறிப் பாய்ந்து உக்கிரமாக சென்று கொண்டிருந்தது சொகுசூர்தி.
 
தற்சமயம்..வண்டியும் அவள் வீடு செல்லும் வழியில் அன்றி.. இன்னொரு வழியில் திருப்பப்பட..அவளோ மென்மேலும் பதற்றம் கொண்டவளாக வாய் திறந்தாள். 
 
“ஹேய். ஹேய். எங்கே போய்ட்டிருக்க.. வீடு இந்தப் பக்கம்?”  என்று கத்திக் கேட்டிருந்தாலும்.. வண்டியை வளைத்து மீண்டும் அப்பாதை வழியே திருப்பாமல்.. நேராகவே வாகனத்தை செலுத்தினான் ராகவன். 
 
“தெரியும்.. பட் யூ ஷூட் கம் வித் மீ!!” என்ற ஆளுமையான வார்த்தைகளோடு தன் பேச்சைக் கத்தரித்துக் கொண்டான். 
 
அவனோ, ‘அவள் அவனை நம்ப வேண்டும் என்றால்,  இதைச் செய்து தான் ஆக வேண்டும்’ என்ற யாராலும் அசைக்க முடியாத திண்ணமான முடிவுக்கும் வந்திருந்தான். 
 
இரண்டோரு நிமிடங்களில் எல்லாம் அவன் ஓட்டி வந்த காரினை.. அவனுக்கு நன்கே பரிச்சயப்பட்ட ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, திரும்பி, மோனமாக இவளது முகம் பார்த்தான் ராகவ்.
 
அவளோ ராங்கிக்காரி போல.. இவனை ஏறிடாமல் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொள்ளலானாள். 
 
அதில் இன்னும் கொஞ்சம் சினம் மூண்டெழவே, பட்டென்று தன் பக்கக் கார்க்கதவினைத் திறந்து வெளியில் வந்தவனோ.. பானட்டைச் சுற்றி..அழுத்தமான எட்டுக்களுடன் அவளை நாடிப் போனான். 
 
பின்பு.. அவள் பக்கக் கதவினை வலுக்கட்டாயமாகத் திறந்தவன்.. அவள் கையைப் பிடித்து இழுக்கலானான்.
 
பற்களை ஏகத்துக்கும் நறுநறுத்தபடி, இவளும், தரையில் பாதங்களை தம் கட்டி நின்றவளாக, “எங்கே என்னை அழைச்சுட்டுப் போற ராகவ்!!” என்று அடம்பிடித்தவளாகக் கேட்டிருந்தாள் அவள். 
 
அவனோ.. அவளை விடாமல்.. முன்னங்கைப் பற்றியிழுத்து.. தரையில் இறக்கியவனோ, “என்கூட வா.. உனக்கு ஒண்ணு காட்டணும்!!” என்றவனாக தரதரவென அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான் அந்தக் கட்டிடத்தின் உள்ளே!! 
 
அது முற்றிலும் இருட்டில் மூழ்கியிருந்த.. அவனது நண்பனுக்குச் சொந்தமான பாக்ஸிங் பயிற்சிக்கூடம்!! அவளை விடாமல் இழுத்துக் கொண்டு போனவன்.. ஸ்விட்சைத் தட்டி விட..ஒளிர்ந்தது நடுவில் அமைக்கப்பட்டிருந்த பாக்ஸிங் மேடை!! 
 
அதன் நாலாபுறமும் இழுத்துக் கட்டப்பட்டிருந்த பாக்ஸிங் கயிற்றினை.. இழுத்து.. தன் வலிமையான பாதங்களால் அவனைத் தாண்டிப் போனவன்.. அவளை இழுத்துப்போய், விட்டான் நடுமத்திய மேடையின் மீது. 
 
இவளோ ஒயின் போதை முற்றிலும் தெளிந்தவளாக, “வாட்?? இங்கே எதுக்கு??” என்று கைகளை காற்றில் விரித்துக் கேட்கவும் செய்தாள் அவள். 
 
அவனோ.. அவள் தன்னை புரியாமல் பார்த்து வைப்பது உணர்ந்தாலும்.. மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு நின்றவளோ.. அவளிடம் கீழ்வருமாறு உரைத்திருந்தான். 
 
“உன்னால உன்னை தற்காத்துக்க முடியும்னு தானே நீ என் பாதுகாப்பை வேணாம்னு மறுக்கற?? ப்ரூவ் பண்ணு.. உன்னால உன்னை தற்காத்துக்க முடியும்னு ப்ரூவ் பண்ணு.. அடுத்த நிமிஷம் இந்த ஜாப ராஜினாமா பண்ணிட்டு போயிட்றேன்.!!” 
 
அவன் வார்த்தைகள், தன் காதில் சரியாகத் தான் விழுந்ததா? என்பது போல காதில் கையினை கேடயம் போல வைத்தவளாக..”வாட் கம் அகேய்ன்?” என்று கேட்டிருந்தாள் அவள்.
 
“நீ கேட்டதுலாம் கரெக்ட் தான்.. உனக்கு பாதுகாப்பு தேவையில்லை.. எப்படியாப்பட்ட சூழ்நிலையிலும் என்னை எனக்கே காத்துக்க முடியும்னு ப்ரூவ் பண்ணு பூஜா.. நெக்ஸ்ட் செக்கன்.. நெக்ஸ்ட் செக்கன்.. உன்னை விட்டுப் போயிடறேன்!!” என்றவனின் விழிகள் அவளையே ஏறிட்டது. 
 
எப்படி நிரூபிக்கச் சொல்கிறான்?? அவனை அடிக்கச் சொல்கிறானா? அவனை அடித்து வீழ்த்தி விட்டு.. அவள் வலிமையானவள் என்று நிரூபிக்கச் சொல்கிறானாமா?? 
 
 அவன் அவளுடைய வெளிப்பாடுகளை உற்று நோக்கலானான். அவள் கோப முகம் சிறுகச் சிறுக.. அதிர்ச்சியாக மாறி, அதிர்ச்சியிலிருந்து திகிலுக்கு மாறி.. பின் சோகமாக மாறுவதைக் கண்ணுற்றான் அவன். 
 
இருப்பினும் தன்னை நிமிர்ந்து பார்ப்பவளை வேண்டுமென்றே ஏளனமான பார்வைப் பார்க்க.. அந்தப் பார்வையில் சீண்டப்பட்டது பூஜாவின் தன்மானம். 
 
 “முதல்ல என்னை அப்படிப் பார்க்கறதை நிறுத்து.. என்னால உன்னை அட்டாக் பண்ண முடியாதுன்னு நினைச்சீயா?”  என்றவளைப் பார்த்து புன்னகையை பதிலாகத் தர.. அதற்கும் சினந்து எழுந்தாள் அவள். மேலும் தொடர்ந்து அவளே வஞ்சினம் கக்கலானாள். 
 
“எப்படியும் கொஞ்ச நாள்ல.. உன் பதவிய நீயே ரிசைன் பண்ணிட்டுப் போகத் தான் போற.. போக வைப்பேன்” என்று விரக்தியோடு சொன்னவளைப் பார்த்து இதற்கும் பதிலாக..உர்ரென்றே முகத்தை வைத்திருந்தான் ராகவன்.
 
“இஸிட்?நீயேன் கஷ்டப்படணும்.. நானா இந்த வாய்ப்பை தரேன்.. யூஸ் பண்ணிக்க.. என்னை அட்டாக் பண்ணு.. என் மேல உன் அடி ஒண்ணு விழுந்தாலும்.. ஐவில் ரிசைன்!! “என்று மார்புக்குக் குறுக்காக கட்டிய கையை எடுக்காமலேயே நின்றிருந்தான்.  
 
அவளிடமிருந்து எந்தவிதமான எதிர்வினையும் இல்லாமல் போகவே மீண்டும் கேட்டது அவன் குரல். 
 
அவனோ இன்னும் அவளை காண்டாக்கும் வகையில்,” நீ தான்.. உன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்னு நினைக்கறேல்ல?அப்றம் ஏன் தயங்கற? கம் ப்ரூவ் மீ!!”  என்றவன்.. ஒற்றைக்கையை நீட்டி ‘வா வா’ என்பது போல மடக்கித் திறந்தான் ராகவன். 
 
இவளுக்கோ ஆத்திரம் மூக்குக்கும் மேலே போகவே.. “யேய்ய்ய்ய்!!” என்று கத்திக் கொண்டே வந்து.. தன் உச்சந்தலையால் அவன் நெஞ்சில் முட்டி வீழ்த்த முனைய.. அதற்கு அத்தனை எளிதில் விட்டு விடுவானா ராகவனும்?? 
 
ஒற்றை உள்ளங்கையினால் அவளது உச்சந்தலையை அநாயசமாகத் தாங்கிப்பிடித்து.. தள்ளிவிட்டவன்.. “கமான்.. ப்ரஷர் பத்தல.. கமான்.. இன்னும் வேகமா!!” என்று உறுமியிருந்தான். 
 
அத்தனை கடும்வேகத்துடன் ஓடி வந்த போதிலும், அவளை இலாவகமாகத் தடுத்து நிறுத்தியவனின் ஒற்றைப் புஜத்தின் கஜபலம் கண்டு.. அச்சத்தில் உறைந்து நின்றாள் அவள். 

 அவனோ, “என்ன..?? நின்னுட்ட கமான் உனக்கு நான் வேலைய விட்டு போகணும்ல.. அப்படீன்னா வா.. அட்டாக் மீ.. வா..வா..வாங்க மேடம்ம்!” என்று இறுதியில் மேடம் என்று அழுத்திச் சொல்ல.. மேடம் என்னும் பதத்தில் உருத்திர காளியானாள் பூஜாவும். 
 
“யேய்ய்ய்.. உன்னை எத்தன வாட்டி சொல்லியிருக்கேன் என்னை மேடம்னு கூப்பிடாதேன்னு!! “என்று கத்த.. அவனுக்குள்ளோ அவளை மேடம் என்று அழைக்கும் விதம், ஏதோ ஒரு சலசலப்பை உண்டாக்கியது.
 
அவள் பார்வை வேட்டையாடத் துடிக்கும் பெண்கழுகின் விழிகளைப் போல மாற்றமடைய.. தன் மெய்க்காப்பாளனைத் தான் வெறித்துப் பார்க்கலானாள்.
 
 அவள் நிஜத்திலும், அவனை.. தன்னிடம் சிக்குண்ட இரையாகப் பார்க்க.. அவள்புறமிருந்து அடுத்த தாக்குதலும் அரங்கேறலானது. 
 
சற்றே தொலைவில் நின்றும் முழு வேகத்துடன்.. ஓடி வந்து.. முஷ்டி மடக்கி.. ஓங்கி வலது கை உயர்த்த..அதை அசால்ட்டாக இடது கையால் தடுத்திருந்தான் ராகவன். 
 
இவளோ இன்னும் கொஞ்சம் சீற்றம் கொண்டு.. இடது கையை முஷ்டி மடக்கி.. குத்த விழைய.. தற்சமயம் தன்.. வலது கையால் தடுத்து விட்டிருந்தான் ராகவன். 
 
 “கமான் கமான்.. ப்ரூவ் இட் ப்ரூவ் இட்.. உனக்கு எந்தவிதமான பாடிகார்ட்ஸூம் தேவையில்லைன்னு ப்ரூவ் பண்ணு..நிக்காதே நிக்காத பன்ச் மீ.. பன்ச் மீ!!” என்று அவளுக்கு குளுக்கோஸ் வார்த்தைகளை ஏற்றியவனாக அவன் அழைக்க.. இவளும் கூட ஒரு குட்டி இராக்ஷ்சியாக உருமாறிப் போனாள் பெண். 
 
” ய்ய்யூ.. ப்ளடி ****” என்று பீப் போடக்கூடிய பற்பல கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தவளாக.. மீண்டும் தன் வலக் கையை அந்தரத்தில் உயர்த்தும் முன்னர் ஏதேதோ நடந்தேறிப் மோயிருந்தது.
 
அவளுக்கோ.. தன்னைச்சூழ என்ன நிகழ்கிறது என்பதை அனுமானிக்க முன்னம்.. அவன்.. அவள் கைகளைப் பிடித்து அவள் பின்னால் கட்டியவனாக.. அவளது சிற்றிடையூடு கையிட்டுக் கட்டிக் கொண்டான் அவன்.  
 
அவன் அழுத்திப் பிடித்ததும்.. அவள் விழிகளும் விரிந்தது ஒருவிதமான திகைப்பினில்!! எந்த ஆடவனும் அவளை தீண்டியிராத இடத்தில் முதன்முறையாக.. அவனது ஸ்பரிசம்!! 
 
மயிரிழைகள் எல்லாம் குத்தீட்டியாக எழுந்து நிற்க.. அவள் ஒரு கணம் ‘திகைப்பூண்டு’ என்னும் அதிர்ச்சி தரும் மூலிகைச்செடியை மிதித்தாற் போலத் தான் ஆனாள். 
 
அச்சமயம்.. அவளை நடப்புக்கு மீட்டு வரும் வண்ணம் கேட்டது நாயகனின் குரல். 
 
“கமான்.. டிஃபென்ஸ் யோர் செல்ஃப்!!” என்றவன்.. ‘நான் முன்னாள் விமானப்படையில் பணிபுரிந்த வீரனாக்கும்’ என்பதை.. அவனது வன்பிடியில்.. வாய்விட்டுச் சொல்லாமல் உணர்த்திக் கொண்டிருந்தான் வீர ராகவன். 
 
முதலில் திணறித் திமிறி ஒரு முயல்குட்டியைப் போலத் துள்ளியவளுக்கு.. நாயகனின் இரும்புப் பிடியில் நின்றும் தப்பி வெளிவர முடியாமலேயே போனது. 
 
இறுதியில் தன் திணறல், திமிறலை கைவிட்டவளோ, “யோவ் விடுய்யா.. விடு.. சொல்லிட்டிருக்கேன்ல விடு.. என்னை விட்டுவிடு.. வேண்டாம் ப்ளீஸ்.”  என்று கெஞ்சத் துவங்க.. அவளது செய்கைகள் ஹாஸ்யமாகத் தோன்றியிருக்கவும் வேண்டும். 
 
அடுத்த நொடி.. அழுந்த மூடியிருந்த இதழ்கள் வழி.. மில்லிமீட்டர் நகைப்பொன்று ஓடி மறைய.. அதை கனகச்சிதமாக மறைத்துக் கொள்ளவும் செய்தான் ராகவன். 
 
அவள் கெஞ்சி நிற்பது கண்டு.. உள்ளுக்குள் அவள் மீதான சின்ன கழிவிரக்கத்தையும் கொடுக்க.. பட்டென்று அவளை சிறைப்பிடித்திருந்த தன் பிடியையும் கூட இலேசாகத் தளர்த்தியிருந்தான் அவன். 
 
அவன் விட்டதும் தான்.. இதுகாறும் வலிமையான கயிற்றினால் உடல் முழுவதும் கட்டப்பட்டிருந்த உணர்வு அவளுக்கு. அவன் பிடித்த இடத்தில்.. சின்னதாக வலியும் தெரிய.. ராங்கிக்காரியான பூஜாவின் விழிகளிலும் துளிர்த்து ஓடும் போலிருந்தது கண்ணீர். 
 
“.. யூ.. யூ.. வ.. வலிக்குது ரா.. கவ்!”! என்று சிறுபிள்ளை போல பளபளத்த விழிகளுடன்.. கிசுகிசுப்பாக.. விட்டால் ‘ஓவென்று அழுது விடுவேன்’ என்பது போலச் சொன்னவளின் முகபாவனை, வலிமையாளனின் இதயத்தையும் சுண்டியிழுத்தது. 
 
‘கொஞ்சம் முரட்டுத்தனமாகத் தான் பிடித்து விட்டோமோ?’ என்று உள்ளுக்குள் தன்னிடமே மானசீகமாகக் கேள்வியும் வினவிக் கொண்டவன்.. அவளையே.. தீவிரமான நேர்ப்பார்வைப் பார்க்கலானாள். 
 
“இப்ப சொல்லு.. உன்னையே உன்னால காத்துக்க முடியலை.. அப்றம் எப்படி.. யாராவது உன்னை அட்டாக் பண்ற சமயத்துல காத்துக்க முடியும்? சொல்லு? இந்த லட்சணத்துல.. என் பாதுகாப்பு வேணாம்னு வேற மல்லுக்கு நிற்கற? உங்க அப்பா.. என்னை ஒண்ணும் வீணா நியமிக்கல.. உனக்கு பாதுகாப்பு தேவை.. அதுக்காகத் தான் நியமிச்சிருக்காரு..அறிவ்வ்.. வில்ல.. உன் மரமண்டைக்கு புரியாதூஊஊ? “என்று இவன் சிம்மத்தின் கர்ஜனை புரிய.. இவளுக்குத் தான்.. அவனது திட்டல் மொழிகள் கேட்டு.. இன்னும் மனம் காயம் கண்டது. 
 
தனவந்த வீட்டுப்பிள்ளை ; எந்தவிதமான கெடுபிடிகளும், திட்டல்களும் அற்று வளர்க்கப்பட்ட பெண்;ராங்கிக்காரி;வீம்புக்காரியும் கூட. 
 
அவளுக்கு.. ‘போயும் போயும்’ தன்னைப் பாதுகாக்க வந்த ஒரு மெய்க்காப்பாளன் தன்னைத் திட்டுவதை தாங்கிக் கொள்ளவே முடியாமற் போனது. 
 
அதன் நிமித்தம்.. அவளது விழிகளில் உருண்டு திரண்டு வழிந்தோடியது கன்னங்கள் வழியாக கண்ணீர். 
 
அந்தக் கண்ணீரைக் கண்டதும் தான்.. ‘அதிகப்படியாக மண்டகப்படி கொடுத்து விட்டோமோ?’ என்று எண்ணிக் கொண்டவனோ.. இடுப்பில் இரு கைவைத்து நின்று.. தலையை வேறுபுறம் திருப்பி.. இதழ்கள் குவித்து.. “உஃப்” என்று பெருமூச்சு விட்டு நின்றாள். 
 
 “பூஜா.. லிஸின்.. நான் உன்னை எப்ப்.. பவும் காயப்படுத்த மாட்டேன்.. லெட் மீ டூ மை ட்யூட்டி..இப்போ வா.. உன்னை வீட்டுல கொண்டு போய் விடறேன்..” என்றபடி..அவன் முன்னேறி நடக்க விழைந்தான். 
 
அவன் அங்கிருந்து சென்று மறைந்தும் கூட.. ஏனோ அவள் உடனடியாக ஒன்றும் அவனோடு சென்று விடவேயில்லை. 
 
மாறாக, பூஜாவுக்கோ.. தான் அவன் முன்னிலையில் அழுது வைத்தது கூட தன் கௌரவத்திற்கு.. கர்வத்திற்கு இழுக்கான செயலாகத் தோன்ற.. தன்மீதே அவளுக்குக் கோபமும் முகிழ்த்தது. 
 
” ச்சீ.. இவன் முன்னாடி அழுது தொலைச்சிட்டோமோ.. பூஜா.. யூ ஆர் அ ஸ்ட்ராங் கேர்ள்.. கண்ணைத்துடை!!” என்று தனக்குத் தானே இரகசியம் பேசும் குரலில் மொழிந்தவள்.. கன்னங்களை உள்ளங்கை கொண்டு அழுத்தித் துடைத்துக் கொள்ளவும் செய்தாள்!! 
 
அவள் வருமுன்பே பாதையோரம் தரித்து நிறுத்தியிருந்த காரில் ஏறி.. ஸ்டியரிங் வீலில் கைவைத்தவனாக.. விட்டத்தை தீர்க்கமான பார்வை பார்த்தவனாக அமர்ந்திருந்தான் அவன். 
 
மனமோ.. ஆர்ப்பரிக்கும் அலை கடல் போல.. அத்தனை சப்தமாக ஆரவாரித்துக் கொண்டிருந்தாலும்..வதனத்தில் கிஞ்சித்தும் தன் இதயச் சலனங்களைக் காட்டாமல் அமர்ந்திருந்தான் ராகவன். 
 
மிகவும் செல்லமாகவும், அதே சமயம் மென்மையாகவும் வளர்க்கப்பட்ட பெண்ணவளிடம்..கொஞ்சம் தன் முரட்டுத்தனத்தை காட்டாது மூட்டைக் கட்டியிருக்க வேண்டுமோ ?
 
ஆர்மி டிரைனிங் தாங்குமா மென்மையான மனம்?? என்று மனம்.. பலவித கேள்விகளை எழுப்பி நின்றது. 
 
அவன் அவளை இங்கு அழைத்து வந்திருக்கக்கூடாது;அவளை வன்மையாக அழுத்தித் தொட்டிருக்கக் கூடாது; இன்னும் ஏன் அவளிடம் வன்பாவம் காட்டியிருக்கவும் கூடாது. 
 
அவள் என்ன மாதிரியாக நடந்து கொண்டாலும் கூட.. அவன் பணி என்னவோ அதை மாத்திரமே அவன் பார்த்து விட்டு.. அவளில் நின்றும் ஒதுங்கியே இருந்திருக்க வேண்டும்!! 
 
அப்படி செய்திருப்பின்.. அவள் தன்னால் காயப்பட்டதையெண்ணி குறுகுறுத்து நிற்க வேண்டிய அவசியம் அவனுக்கு எழுந்திருக்காது அல்லவா??  அவனிடம் இடித்துரைத்தது மனம்!! 
 
அவளும்.. உம்மென்ற முகத்துடன் வந்து அவனுக்கு பக்கத்தாசனத்தில் அமர, இவன் தான் மனங்கேட்காமல்.. தன்னிலை விட்டும் இறங்கி வந்து நின்றான். 
 
“ஸா..” என்று மன்னிப்புக் கேட்க விழைந்தது மாத்திரம் தான் தாமதம். 
 
மூக்கின் மேலே சீற்றமும் முகிழ்க்க.. சட்டென்று தன்னுள்ளங்கை காட்டி.. ‘வேண்டாம்’என்பது போல சமிக்ஞை காட்டி நின்றாள் பூஜா. 
 
உறுத்து விழித்த விழிகளுடன்.. ராகவனை நோக்கியவளோ, “எதுவும் பேசாத.. என்னையே திட்டிட்டேல்ல..?? கவுன்ட் யுவர் டேய்ஸ்.. இன்னும் எண்ணி ரெண்டே நாள்ல.. துண்ட காணோம்.. துணிய காணோம்னு ஓட விடுறேனா இல்லையான்னு பாரு!!” என்று சவால் விடுவதைப் போலக் கூறியவள்..மேற்கொண்டு அவனைப் பார்க்க விரும்பாததைப் போல.. திடும்மென்று முகத்தை திருப்பிக் கொள்ளவும் செய்தாள். 
 
 ‘ இந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு?  நான் நல்லது பண்ணத் தான் விரும்பறேன்னு.. ஏன் அவளுக்குப் புரிய மாட்டேங்குது?’ என்று உள்ளே எண்ணங்கள் ஓடினாலும்.. முகத்தில் எதையும் காட்டாமல், அவளையே தீட்சண்யம் கக்கும் பார்வைப் பார்த்திருந்தான் ஓரிரு கணங்கள். 
 
பின்பு.. உணர்ச்சிகளை இலகுவில் காட்டாதவனாக வாய் திறந்திருந்தான் அவன். 
 
“பெஸ்ட் ஆஃப் லக்.. டிரை யுவர் லெவல் பெஸ்ட்.. இப்போ கெளம்பலாம்?!” என்றவன் கியரைப் போட்டு வண்டியை எடுக்க.. வீடு போய்ச் சேரும் வரையிலும் இருவரிடத்தும் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளுமோ, பார்வைப் பரிமாற்றங்களுமோ இல்லவேயில்லை. 
 
அவன் மீது மலையளவு வெறுப்பு சுமந்து நிற்பவள்.. அவள் போட்ட சபதத்தில் வெல்வாளா? 
 
இல்லை அவன் தான் இரண்டு வருடங்கள் என்ன..? இரண்டு நாட்களாவது அவளோடு தாக்குப் பிடிக்க முடியுமா? 
 
அவன் கடலில் விழுவதாக விம்பம் காட்டி.. மீண்டும் மறுநாள் காலை கீழ்வானில் வீறு கொண்டு எழும் சூரியன்!! 
 
சூரியனை வீழ்த்திடுவது ஒன்றும் அத்தனைச் சுலபமல்ல என்பது புரியவில்லை பேதைக்கு. 
 
அத்தியாயம் – 6

 அடுத்த நாள், அழகான சூரியனும் கீழ்திசையில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சூரியோதயக் காலை அது!! 
 
நேற்று நள்ளிரவு அவளை.. வீட்டில் தரித்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து படுக்கையில் வீழ்ந்த போது.. மணி ஒன்றரையைத் தாண்டியிருந்தது. 
 
நேரம் சென்று தூக்கத்தைத் தழுவிக் கொண்டதாலோ என்னவோ.. சாளரம் தாண்டி சூரியனின் பொற்கிரணங்கள் விழுந்த போதிலும்.. அந்த சூடு ஸ்மரணை சிறிதும் அற்று.. அடித்துப் போட்டாற் போல குப்புறப்படுத்திருந்தான் ராகவன். 
 
அச்சமயம் கொள்ளையர்களோ.. திருடர்களோ யாரேனும் அவனது ப்ளாட்டிற்குள் புகுந்திருந்தாலும் கூட.. என்ன ஏதென்று அனுமானிக்கும் திறன் கூட அற்ற.. பேய்த்தூக்கம் தான் அது!! 
 
அக்கணம்.. அவன் வழமையாக எழும் நேரத்தை விடவும்.. தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட அவன் வளர்க்கும் நாய்க்குட்டி தான் எழுந்து வந்து.. ஒரே தாவலில் கட்டிலில் ஏறி.. அவனருகில் வந்து முகர்ந்து பார்க்கலானது. 
 
“ஸ்.. ஸுஸு!!” என்ற ஒலியுடன் அவனை முகர்ந்து பார்த்து.. அவனுக்கு உயிர் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட அது, அடுத்து.. பாசத்தோடு அவனது ஒரு பக்கக் கன்னத்தை நக்கி நக்கி எழுப்பவும் முனைந்தது. 
 
தூக்கத்திலிருந்து மெல்ல துயில் கலைந்தாலும்.. விழிகளை பாதித் திறந்த வண்ணம்..” டேய் பப்பி.. என்னை தூங்க விட்றா?” என்று போதைக்குரலில் கிசுகிசுத்து விட்டு.. மீண்டும் தலையைணை இறுக்கிக் கட்டிக் கொண்டு குட்டித் தூக்கத்தைப் போடலானான் அவன். 
 
தன் எஜமானன் பொறுப்பின்றி துயில்வது தாங்க மாட்டாத நாய்க்குட்டியோ.. “வள் வள் வள்!!” என்று வாலை ஆட்டி ஆட்டி.. தன் சிறிய கீச்சுக் குரலில்..அவனை எழுப்பவும் முயற்சித்துக் கொண்டிருந்தது. 
 
“பப்பி.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கறேன்டா!!” என்றபடி மீண்டும் அவன் புரண்டு படுக்க விழைந்த கணம் அது. அவன் தூக்கத்திற்கு ஆயுள் நிரம்பவும் கம்மி என்பதை பறைசாற்றும் வகையில்.. பேரிரைச்சலுடன் அலறத் தொடங்கியது அவனது செல்பேசி. 

 தலையணைக்குப் பக்கத்திலிருந்த செல்லை.. விழிகளைத் திறவாமல்.. கைகளாலேயே துழாவிய வண்ணம்..தட்டுத்தடுமாறி தேடிஎடுத்தவன்.. யார் எவரென்று பாராமலேயே அழைப்பை ஏற்று.. செல்லில் காதை வைத்திருந்தான். 
 
“ஹ.. லோ” என்று தூக்கக்கலக்கக் குரலில் இவன் இம்முனையிலிருந்து சொன்னதும்..மறுமுனையில் நின்றும் என்னச் சொல்லப்பட்டதுவோ?? 
 
அவனது தூக்கம் யாவும் எங்கோ பறந்தோடிப் போக.. அவன் விழிகளும் தான் விரிந்தது சற்றே பதற்றத்துடன்! எனில், மறுமுனையில் அழைப்பெடுத்திருந்ததுவும் யாரோ?? அது அவள். அவன் கேட்டுக் கொண்டிருந்ததுவும் யார் குரலோ? அதுவும் அவள் குரலே தான்!!
 
“என்ன பார்டிகார்ட்.. இன்னும் எந்திரிக்க கூட இல்லையா? சீக்கிரம் சீக்கிரம் வேக்-அப்.. வேக்-அப்..  நான் இன்னிக்கு ஷாப்பிங் போகணும்.. யூ நோவ் வாட்?? அப்பா என்னை தனியா  போக அல்லோவ் பண்ண மாட்டாரு.. ஸோ நீ என்ன பண்ற.  அடுத்த பத்து நிமிஷத்துல  இங்க கண் முன்னாடி நிற்கற.. ஓகே?” என்று ஓயாமல் வேகவேகமாக மொழிந்தவள்.. இவனது பதிலைக் கூட எதிர்பார்த்திருக்கவில்லை. 
 
மறுகணம் அழைப்பைத் துண்டித்தும் இருக்க.. இவன் தான் பேயறைந்தாற் போல எழுந்து.. படுக்கையில்.. ‘ஐய்யோ அதிக நேரம் தூங்கிட்டோமோ.. டியூட்டிக்கு லேட் ஆகிருச்சோ?” என்பது போலப் பார்த்திருந்தான் அவன்.

அடுத்த நொடி.. மஞ்சத்தில் தரித்து நிற்காமல் வேகவேகமாக எழுந்து.. டவலோடு குளியலறை புகுந்து கொண்டவன்.. குளித்து முடித்து விட்டு.. ப்ரெஷ்ஷாக வந்தான் மீண்டும் அறைக்கு.
 
கடகடவென..வார்ட்ரோப் நாடிப் போய்  தன் ஃபார்மல் ஷேர்ட் மற்றும் பேன்ட்டினை அணிந்து அதற்கும் மேலாக, கறுப்பு கோர்ட்டினையும் அணிந்து..பக்கா ஜென்டில்மேன் லுக்குடன் தயாராகி வந்தான். 
 
அவனது பப்பியும்.. அவன் பின்னாலேயே முன்னும், பின்னும் அலைந்திருப்பதைக் கண்டு கொண்ட ராகவனோ.. நாய்க்குட்டியின் வயிற்றைக் கவனிக்கவும் தவறவேயில்லை. 
 
அதைக் கையில் தூக்கியவனாக.. மறுகையால் பெடிக்ரீ பாக்கெட்டை எடுத்தவன்.. அதன் உணவுத்தட்டில்.. உணவைப் போட்டுக் கொடுத்து..சாப்பிடுமாறும் உந்தினான். 
 
அதன் முதுகினை வருடிக் கொடுத்தவனாக, “ஹேய் சேம்ப்.. சாப்பிடு.. நான் நைட் வந்து பார்த்துக்கறேன்.. பை!”! என்று அதனிடம் பிரியாவிடை கொடுத்து விட்டு.. படபடவென ப்ளாட் கதவினை மூடி.. லிப்டிற்குள் அவசர அவசரமாக வந்து ஏறிக் கொண்டான். 
 
சென்னையின் சாலையில்.. எப்படித்தான் அவளது இல்லம் நாடி வந்தானோ.. அவனுமே அறியான்!! ஒருவாறாக அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தவன்.. இற்றை வரை கடிகாரத்தைப் பார்க்காமலேயே இருந்தது தான் அவன் செய்த மாபெரும் தவறு!! 
 
ரோபோ போல எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல்.. அவளது சாகரம் போன்ற வீட்டுப்படிகளைக் கடந்து.. உள்ளே ஏறிப்போனவனை வரவேற்றது என்னமோ.. அவ்வீட்டின் ஸ்பெஷலான சமையல்காரம்மாள் தான்.அவள் பெயரும் கூட தாயம்மாள்!! 
 
சேலைக்கு மேலாக ஏப்ரனை கட்டிக் கொண்டு ஏதோ வேலையாக ஹாலுக்கு வந்திருந்த தாயம்மாளின் பார்வையில்.. நம் நாயகன் விழவே அவர் விழிகளிலும் வந்து போனது ஓர் இடுங்கல்!! 
 
“என்ன தம்பி.. அதிகாலையிலேயே வந்திருக்கீங்க? சரி என்ன சாப்பிடுறீங்க.. டீ போடட்டுமா.. காபி போடட்டுமா??” என்று இன்முகமாகவே விசாரிக்கலானார் தாயம்மாளும்!! 
 
என்ன சொன்னார் தாயம்மாள்? அதிகாலை என்றா?? அதி.. காலை?? 
 
 ஏதோவொன்று உரைக்க.. பட்டென்று தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவனின் இதயமும் ஜர்க்கானது. 
 
நேரமோ.. அதிகாலை ஆறரை மணி என்று கைக்கடிகாரம் டிஜிட்டல் நேரத்தைக் காண்பித்துக் கொண்டிருக்கலானது.
 
 காலை ஆறரை மணிக்கு ஷாப்பிங்கா? என்ற எண்ணத்தில் ஒற்றைப்புருவம் மட்டும் மெல்ல உயர்ந்தது. 
 
‘காலை ஆறர மணிக்கு எவன் கடையெல்லாம் தெறந்திருப்பான்? பத்து நிமிஷத்துல நிற்கச்சொன்னா.. ஆளையும் காணோம்.. ஒரு மண்ணையும் காணோம்.. நம்மள வைச்சு காமெடி கீமெடி பண்றாளா?’ என்று எண்ணிக் கொண்டவனின் விழிகள்.. தன்னெதிரே.. பதிலுக்காகக் காத்திருக்கும் தாயம்மாளைத் தான் நிமிர்ந்து நோக்கியது. 
 
“தாயம்மா.. பூஜா இருக்காளா?” 
 
“ஆமா தம்பி பூஜாம்மா இருக்காங்க.. காலையில பெட் காபி கொடுக்கப் போனேன்.. அப்ப தூங்கிட்டிருந்தது பாப்பா.. பாப்பா எழுந்திருக்க.. இன்னும் நேரமாகும்.. எனக்கு நேரமில்லைப்பா.. பெரிய ஐயாவுக்கு.. காலையில வெறும் வயித்துக்கு ஜீரக கசாயம் கொடுக்கணும்.. அது தான் அவருக்கு பெட் காபியே.. ஆமா.. அதுவரை வீணா ஏன் காத்திருப்பானேன்?? வாயேன்பா.. சுடச்சுட இட்லி பண்ணி வச்சிருக்கேன்.. ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்!!” என்றழைத்தவராக பேசிப் பேசியே.. அடுக்களையை நாடி நகரத் தொடங்கினார் தாயம்மாள். 
 
அவள் தூங்குகிறாளா? பத்து நிமிடத்தில் இங்கு வந்து நில் என்று கட்டளை அதிகாரம் தூள்பறக்க மொழிந்து விட்டு..தூங்கிக் கொண்டிருக்கிறாளாமா?? 
 
படபடவென மாடிப்படி ஏறிப்போய்.. அரை பாட்டில் தண்ணீர் ஊற்றி.. “என்ன காலையிலேயே வரச்சொல்லிட்டு அப்படி என்னடீ தூக்கம்?” என்று அவளை உலுக்கி எழுப்பி விட வேண்டும் என்ற வெறியே முகிழ்த்தது அவனுக்குள். 
 
இருப்பினும், ஏதும் பேசாமல் கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டு இடுப்பில் கைவைத்து.. பாதங்களை அகல நீட்டி நின்று கொண்டவனுக்கு..தன்னைத் தானே சமரசப்படுத்திக் கொள்ள ஓரிரு நாழிகைகள் மேலதிகமாகத் தேவைப்பட்டது.
 
அதே கணம் காற்றில், “இரண்டே நாள்ல உன்னை துண்டை காணோம்? துணிய காணோம்னு..ஓட விடறேனா இல்லையான்னு பாரு?” என்று நேற்றிரவு அவள் போட்ட சபதம் நினைவில் மின்னல் மின்னி மறைந்தாற் போல வந்து போனது. 
 
அதற்கடுத்து.. வலிய வரவழைக்கப்பட்ட விகசிப்புடன்.. தன் சீற்றத்தை மட்டுப்படுத்திக் கொண்டவன்.. பொறுமையை இழுத்துப் பிடித்து தன்னகத்தே தக்க வைத்துக் கொள்ளவும் செய்தான். 
 
இக்கணம் அவன் சினந்தானேயானால் அவள் வெற்றிவாகை சூடியது போலாகும்;அவள் எண்ணமும் ஈடேறியது போலாகும்.
 
ஏதும் பேசாமல் பொறுமையுடன் தாயம்மாளின் பின்னோடு விரைந்தான் சமையலறையை நோக்கி. 
 
அவரோ சட்டுப்புட்டென்று சீரகக் கசாயத்தைக் கலக்கி.. அதனை அழகுற ஒரு கண்ணாடிக் குவளையில் வைத்து, தன் உதவியாளனிடம், “இதைக் கொண்டு போய் சார் ரூமுல கொடு” என்று அனுப்பியவராக.. நம் நாயகனை நோக்கி வந்தார் அவர். 
 
சாப்பாட்டு மேசையின் நாற்காலியை அவனுக்காக.. தாயம்மாள் இழுத்துப் போட்டு.. “உட்காருங்க தம்பி..வீட்ல பணியாளர்கள், வீட்டாளுங்கன்ற பாகுபாடுலாம் இல்லை.. அவங்களுக்கு என்ன மெனுவோ அது தான் எங்களுக்கும். கூடவே அவர் சாப்பிட்டதும் தான்.. ஸ்டாஃப்ஸ் சாப்பிடணும்ன்ற கட்டுப்பாடுலாம் கிடையாது. அந்த வகையில ஐயா எங்க வயிறை ஒருநாளும் காயப்போட்டதேயில்லை..” என்று தங்களின் எஜமானன் சிவப்பிரகாசத்தின் நல்ல குணவியல்புகளையெல்லாம் சிலாகித்துக் கொண்டே சென்றார் அவர். 
 
இவனும் அமர்ந்து.. இட்லியை சட்னியோடு விண்டு சாப்பிடவும் ஆயத்தமானான். 
 
சாப்பிட்டுக் கொண்டிருந்த போதிலும் .. பூஜாவின் மீது உள்ளூற கோபம் மிகைத்து எழுந்தது அவனுக்கு. அதிகாலையில் அழைப்பெடுத்து.. அவனை மட்டும் துயில் கலைந்து எழச்செய்தவள்.. தான் மட்டும் தன் சொகுசு அறையில் துயின்றிருப்பது கண்டு.. உள்ளம் காந்தியது அவனுக்கு. 
 
அவளுக்காக.. அவளது பாதுகாப்புக்காக என்றானதும்.. தன் வழமையான காலைச்செயல்களையும் அல்லவா கைவிட்டு வந்திருக்கிறான்?? 
 
எப்போதும் தன்னறைக்கு பக்கத்தறையிலேயே சிற்சில உபகரணங்கள் கொண்டு ஜிம் உடற்பயிற்சி செய்யும் ராகவன்.. இன்று இந்த இராட்சசியால் அதையும் தவற விட்டிருந்தான். 
 
வரும் ஆத்திரத்திற்கு அவளது கன்னத்தைப் பிடித்து வலிக்க வலிக்க அடித்து வைக்க வேண்டும் போல ஓரெண்ணமும் அவனுள் துளிர்த்தது.
 
 அவ்வளவு வெறி அவள் மீது நம்மாளுக்கு. அக்கணம்.. அவனையும் மீறி.. அவனது சிந்தனைகள் செல்லும் திசையைப் பார்த்து.. விதிர்விதிர்த்துப் போய் நிமிர்ந்தான் ராகவன். 
 
‘என்ன?? அவள் கன்னத்தை அடித்து வைப்பதா? கூடாது;கூடவே கூடாது!!’ என்று ஆண்தகையானின்  ஹிருதயமும் எடுத்துரைக்க.. இட்லியின் கடைசி வாயையும் வாய்க்குள் இட்டவன்.. சாப்பிட்டு முடித்து விட்டு, விரல்களையும் சூப்பலானான். 
 
அவன் மூன்று இட்லியுடனேயே தன் காலையுணவை முடித்துக் கொள்வதைக் கண்ட தாயம்மாள் தான்.. இன்னும் மூன்று இட்லிக்கள் அடங்கிய தட்டுடன்.. அரக்கப் பறக்க அவனை அணுகியிருந்தாள்.
 
“என்ன தம்பி.. அதுக்குள்ள எந்திரிச்சுட்டீங்க..? இன்னும் ஒண்ணாச்சு சாப்பிடுங்க?” என்று ஆறடி உயரத்துக்கும் மேலாக.. அசுரனைப் போல வளர்ந்திருப்பவனை.. அண்ணார்ந்து பார்த்தவராக உரைத்திருந்தார் அவர். 
 
இவனோ.. உடனடியாக மறுத்தவனாக எழுந்து கொண்டவனாக, “போதும்க்கா.. வயிறு நெம்பிருச்சு..”என்றவாறே..சமையல் மேடையோடு இணைத்து அமைக்கப்பட்டிருந்த வாஷ்பேஸினை நாடிப் போனான் ராகவன். 
 
கைகளை அவன் கழுவிக் கொண்டிருந்த தருவாயில்.. அவனது பின்புற பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்லும் அலறவே.. நிமிடமும் தாமதியாமல் எடுத்துப் பார்த்த போது, அழைப்பு வந்திருப்பது நண்பன் கிஷோரிடமிருந்து என்பது புரிந்தது அவனுக்கு. 
 
இலேசாக புருவ மத்தியில் முடிச்சு விழ.. அழைப்பை ஏற்றவன்.. “சொல்றா?” என்று தான் எடுத்த எடுப்பிலேயே கேட்டுமிருந்தான்!! 
 
மறுமுனையிலிருந்த கிஷோரோ.. “ஏன்டா.. காலம்பறயே வீட்டை விட்டு போறேன்னா.. சொல்லிட்டுப் போகமாட்டீயா? இப்போ பாரு.. நீ வீட்ல இருப்பேன்னு.. உனக்கும் சேர்த்து.. சைவக்கடையில இருந்து.. சுடச்சுட தோசையும், மசால்வடையும் வாங்கிட்டு வந்தா.. நீ இல்ல..அம்போன்னு பூட்ன கதவு முன்னாடி நின்னிட்டிருக்கேன்!!” என்று பொறிந்து தள்ளினான். 
 
எதே? நண்பன் கிஷோர்.. நம் நாயகனின் ப்ளாட்டுக்கு முன் நின்றிருக்கிறானா? அதுவும் ராகவனிடம் ஒருவார்த்தைக் கூட பகராமல்..?? 
 
தோழனின் செய்கையில்.. இதழ்கள் சன்னமாக விரிய..கிஷோருக்கு உரிய மறுபதில் உரைக்கலானான் ராகவனும். 
 
” ஏன்டா.. வீட்டுக்கு வரும் போது கேட்டுட்டு வரணும்ன்ற ஒரு பழக்கம் உன்கிட்ட வரவே வராதாடா??” என்று அடக்கப்பட்ட கீழ்ஸ்தாயியில் கேட்டிருந்தான் ராகவன். 
 
“என் ஃப்ரெண்டு வீட்டுக்கு வர நான் யாருக்கிட்ட கேட்கணும்?? சரி அத விடு.. இப்போ நீ எங்கேயிருக்க?? காலங்கார்த்தாலயே கிளம்பி எங்கே தான் போன? “
 
” எல்லாம் என் தலையெழுத்து..ஒரு இம்சைய பாதுகாக்கறதா பாடிகார்ட் வேலை ஏத்துக்கிட்டேன்ல? அந்த இம்ச இன்னிக்கு ஷாப்பிங் போகணும்.. எர்லியா வான்னுச்சு.. வந்து பார்த்தா.. தூங்கிட்டிருக்காளாம்.. இம்ச எழுந்து தய்யா தக்கான்னு வர்றதுக்காக.. அந்த இம்சைக்காக வெளியில காத்துட்டிருக்கேன்!! ” என்று அவனோ.. வார்த்தைக்கு வார்த்தை.. ஓயாமல் இம்சை இம்சை என்றிருந்தான் அவளை. 
 
இப்படியெல்லாம் தாய்க்குலமான பெண்டிரை ஒருபோதும்.. எதிர்மறையான பதங்கள் கொண்டு அழைக்கும் ரகமே அல்ல ராகவன். ஆனால் இன்று வார்த்தைக்கு வார்த்தை நாயகனின் இம்சை என்னும் வார்த்தைப் பிரயோகம் கேட்டு தோழன் கிஷோருக்கும் கூட ஆச்சரியம் மிகுந்தது உள்ளுக்குள். 
 
“டேய் பார்த்துடா.. அந்த இம்சை உனக்கே தெரியாம நீ பேசுறதுலாம் கேட்டுட்டு இருக்கப் போகுது!!” என்று கிஷோரும் அம்முனையிலிருந்து பதில் வழங்கி நின்றிருந்த கணம் அது. 
 
இவனும்.. தன் பிடரி மயிருக்குள்.. தன் விரல்களைக் கையிட்டு.. அளைந்தவனாக.. விட்டேற்றியான குரலில், “அப்படிலாம் நடக்க சான்ஸ் இல்..”என்றபடியே திரும்பியவனின் வார்த்தைகள், அவனுக்குள்ளேயே முடங்கி பாதியிலேயே நின்று போனது. 
 
அங்கே அவனது தீர்க்கமான கண்களும்.. ஓரிடத்தில் நிலைத்துப் பதிந்து போக.. அவனது திறந்திருந்த இதழ்களும் அடுத்த கணம் அழுந்த மூடிக் கொண்டது.
 
அங்கே..சமைலயறையின் நிலையில்.. தன் தோளினைச் சாய்த்து.. மார்புக்குக் குறுக்காக கரங்களினைக் கட்டியவளாக.. தன்னை ‘இம்சை இம்சை’ என்றவனையே.. ரௌத்திரத்துடன் பார்த்து நின்றிருந்தாள் அவள்!! 
 
அவள் அங்கு, ‘எப்போது வந்து நின்றாள்?’ என்பது புரியாமல்.. அவன் உணர்ச்சிகள் காட்டாமல் நின்றிருக்க.. செல்லின் மறுமுனையிலிருந்த கிஷோரின் நில்லாத விளிப்புக்கள் தான்.. நம் ஆண்தகையானையும் நடப்புக்குக் கொண்டு வரும் போலானது. 
 
“டேய் மச்சி.. ராகவா.. டேய் இருக்கீயாடா.. ஹலோ??” 
 
“ம.. மச்சீ.. நான் அப்றம் கூப்ட்றேன்.. வை!!” என்றவனாக.. சட்டென அழைப்பைத் துண்டித்து விட்டு பேன்ட் பாக்கெட்டில் அதனை இட்டுக் கொண்டவன்.. தான் அசடுவழிய நிற்பதை ஒரு சிறிதும் காட்டிக் கொள்ளாமல்.. அவளைப் பார்த்து நின்றான். 
 
” நீ.. நீங்க எப்போ வந்தீங்க மேடம்!!” 
 
அவளோ.. அவன் வாய் திறப்பதற்குள் இடையிட்டு,” இம்ச இப்ப ஷாப்பிங் போகணும் மிஸ்டர். ராகவ்.. கூட்டிட்டு போக முடியுமா??” என்று அத்தனை அழுத்தமும், இறுக்கமும் விரவிப்பரவிய தொனியில் தான் கேட்டிருந்தாள் அவள். 

அவள் அனைத்தையும் கேட்டுவிட்டாள் என்பது அவள் உபயோகித்த சொற்பிரயோகத்திலேயே புரிந்து விட.. இவனது புருவங்களும் இடம்பெயர்ந்தது, நெற்றியின் உச்சிமேட்டுக்கு. 
 
” ஓஓ.. போகலாமே.. போகலாம் மேடம்!!” என்றவன்.. அவனை ஒரு தரம் மேலிருந்து கீழாக.. ரௌத்திரத்துடன் பார்வைப் பார்த்து முன்னே நடந்தவளின் பின்னோடே விரைந்தான்!! 
 
இன்று.. ஷாப்பிங் செல்வதற்கு ஏற்றாற் போல டீஷேர்ட் மற்றும் முழுநீள ஸ்கேர்ட்டும் அணிந்திருந்தவள்.. தன் கூந்தல் முழுவதையும், ‘ஹேர் இன் அ பன்’ ஸ்டைலில் அடக்கியுமிருந்தாள். 
 
அவள் வந்து.. சரியாக சாரதி ஆசனத்தின் பக்கத்தாசனத்தில் ஏறிக்கொள்ள.. வந்து தானும் ஏறியமர்ந்து வண்டியை எடுத்தவன்.. அவள் புறம் திரும்பாமலேயே வண்டியை இயக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான். 
 
பார்வை தான் என்னமோ அவள்புறம் திரும்பாமலேயே இருந்தது. இருப்பினும், அவன்.. அவளது காவலன் அல்லவா? கூர்விழிகளோ பட்டைத் தீட்டப்பெற்றாற் போல.. நாலாபுறமும் சிறு அவதானத்துடனேயே பார்த்திருந்தது. 
 
சரியாக.. இருபது இருபத்தைந்து நிமிட நேர பிராயணத்தின் முடிவில் அவள் வர நாடிய இடமும் வந்து சேரவே.. அந்த ஆடையகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தியவன் முதல் ஆளாக இறங்கிக் கொண்டான். 
 
அவனது அழுத்தமான கரமொன்று.. காரின் உள்ளகக் கதவைப் பிடித்திருக்க.. வலிய வலது பாதத்தை முதலில் தரையில் ஊன்றி எழுந்தவன்.. தன் கோர்ட் பையிலிருந்த கறுப்பு நிற கூலர்ஸை எடுத்து அணிந்து கொள்ளவும் செய்தான் அவன். 
 
அப்படி அவன் அணிந்து கொண்டதுவும் கூட.. அத்தனை கவின்மிகுந்ததாக அமைந்திருக்க.. அதில் ஒரு ஆண்மைத்தனமும் மிளிர்ந்திருந்தது என்றால் அது மிகையேயில்லை. 
 
பின்பு.. தன் அடுத்த இடது பாதத்தையும் தரையில் பதித்து நின்றவன்.. கூலர்ஸ் அணிந்த கறுப்புக் கண்ணாடியின் பின்னால் எட்டுத்திக்கும்.. நுணுக்கமாக அவதானித்தது.. சந்தேகத்திற்கிடமான ஆள்நடமாட்டம் ஏதும் தென்படுகின்றதா என்று. 
 
அப்படியேதுமில்லை என்று மனம் திருப்தி கொண்டு ஊர்ஜிதப்பட்ட பின்பு தான்.. விறுவிறுவென்று விரைந்து சென்று அவள் பக்க கதவைத் திறந்து விடவும் எத்தனித்தான் அவன். 
 
“மேடம்.. நோ த்ரெட்டின்ஸ் ஃபவுன்ட்.. நீங்க இப்போ கீழே இறங்கலாம்!!” என்று வழக்கம் போல தன்னுடைய ரோபோ குரலில் மொழிந்தவனைக் கண்டதுமே உள்ளுக்குள் திகுதிகுவெனப் பற்றியது அவளுக்கு. 
 
தன் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டே இறங்கியவளோ.. சீற்றம் தாங்கொணாமல் ஒரு தடவை விழிகளை இறுக்கி மூடித் திறக்கவும் செய்தாள். 
 
” க்க்ர்ர்ர்.. எத்தன வாட்டி சொல்றது.. இந்த ங்கன்ற மரியாதை பன்மை விகுதிலாம் வேணாம்.. அன்ட் இந்த மேடமையும் கட் பண்ணு.. கால் மீ பூஜா!!” என்று எரிச்சல் ததும்பச் சொல்ல.. அதையெல்லாம் கேட்டிருந்தும்.. என்காது கேட்காது என்பது போல கஞ்சி போட்ட சட்டை போல விறைப்புடன்.. விட்டத்தை வெறித்துப் பார்த்தவனாக நின்றிருந்தான். 

இவளோ வேண்டுமென்றே அவன் காதுபட முணுமுணுத்தவளாக,” சரியான ஹியூமன் கம்ப்யூட்டர்.. ரோபோ.. இவ்வளவு சொல்றேன்.. காதுல ஏறுதா பாரு.. வேஸ்ட்.. அட்டர் வேஸ்ட்!!” என்று அர்ச்சித்தவளாகவே.. அவனை விட்டும் முன்னேறி கடகடவென அந்த மாடிப்படிகளைக் கடந்து ஏறினாள் ஆடையகத்திற்குள்.
 
இவனும்..அவள் எங்கே எதை வாங்கச் செல்கிறாள் என்று எந்தவிதமான சிந்தையும் இல்லாதானாக.. புறச்சூழலிலேயே ஒரு கவனம் வைத்தவனாக.. அவளது பின்னாலேயே விரையலானான். 
 
இவளோ.. தனக்குள்ளேயே, “இரு இரு.. என் ப்ரைவசிக்குள்ளயா மூக்க நுழைக்கறே.. உன் மூக்கை உடைக்கறேனா இல்லையான்னு பாரு” என்று எண்ணியவளாக.. கருவிக் கொண்டே.. அங்கிருந்த பெண்களுக்கான பிரத்தியேக உள்ளாடைகள் பகுதியில் புகுந்து கொள்ளலானாள். 
 
அவள் பின்னோடே முற்றிலும் குளிரூட்டப்பட்ட காட்சியகத்துக்குள் நுழைந்தவன்.. சுற்றுமுற்றும் ஆய்ந்தவனாகத் திரும்பிப் பார்த்த போது.. அவன் பார்வைக்குப் புலனானவற்றைக் கண்டு.. இதயம் தூக்கிவாரிப் போட்டது அவனுக்கு. 

அங்கே அவன் கண்ணுற்றது?? 
 
கையில்லாத.. காலில்லாத டம்மிகள்.. விதம் விதமாக.. டூ பீஸினை உடுத்திக் கொண்டு.. பிகினி உடையில் நிற்க..வரிசையாக கண்ணாடிப்பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டவற்றைக் கண்டு.. கூலர்ஸ் அணிந்திருந்தவனாலும் கூட.. லஜ்ஜை முளைக்க..அவற்றை சரிவரப் பார்க்க முடியாமலேயே போனது. 

அவனது இறுக்கமான வதனம்.. மென்மேலும் இறுக்கம் கொள்ள.. அங்கே அனைவரும் பெண்களாக மாத்திரம் கூட இருக்கக் கண்டவனுக்கு.. சங்கடத்தில் மூச்சு முட்டும் நிலையும் உருவானது. 
 
அங்கிருந்த அனைத்து மங்கையருமே.. தனித்துத் தெரிந்த ஆடவனை.. மந்தைக்குள் நுழைந்த கறுப்பாட்டினைப் பார்ப்பது போல குறுகுறுவென்று பார்த்து வைக்க.. அதுவும் கூட சங்கோஜத்தைப் பரிசளித்தது வீர ராகவனுக்கு. 
 
அவன் முகம்.. சன்னமாகக் காட்டும் சங்கோஜ உணர்வு ஜாஜ்வல்லியங்களை உள்ளூற இரசித்து நின்றாலும், வெளிக்கு அணுவும் கூட காட்டாமல்.. வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த உள்ளாடையிலேயே முழுமுதற் கவனமும் குவிந்திருப்பது போலக் காட்டிக் கொண்டாள் அவள். 
 
இவனோ.. க்ஷணம் ஆக ஆக.. அங்கு நிற்பது உசிதமல்ல என்று தோன்ற.. விறைப்பு மாறாத குரலிலேயே பதிலிறுக்கலானான். 
 
“மேடம்.. நீங்க பர்ச்சேஸிங் பண்ணிட்டு வர்ற வரைக்கும் நான் வெளியில நிற்கிறேன்!!” என்று சொன்னவனின் குரலில் இருந்த ஒருவிதமான உறைதல் இருந்தது.

அதை, மறைமுகமாக.. குரூர மனோபாவத்துடன் கிட்டத்தட்ட இரசித்துக் கொண்டிருந்தாள் அவள். 
 
அவளோ.. ‘உனக்கு இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்!’ என்று அவளையும் மீறி விரியத் துடித்த இதழ்களைக் கடித்துக் கொண்டு, சரியாக பிடிவாதம் பிடித்து நின்றாள். 
 
“மிஸ்டர். ராகவன். நீ என் பாடிகார்ட் தானே? நீ எப்பவும் என் பக்கத்துல தானே நிக்கணும்??” 
 
“இ. இல்ல.. நான் என்ன சொல்ல வர்றேன்னா..” 
 
“நேத்து பார்ட்டியில கூட.. என் பார்வை மட்டத்துல தானே நின்ன?? இப்போ மட்டும் என்ன??” 
 
“நா.. சொ..”
 
“நீ எங்கேயும் போகக்கூடாது.. மீறி போன.. இப்போவே டாடிக்கு கால் பண்ணி.. ராகவ் என்னை தனியா விட்டுட்டு வெளியில் போய்ட்டான்னு கம்ப்ளேன் பண்ணிருவேன்!! அதனால.. மூடிக்கிட்டு என் பின்னால வா!!”என்று கிட்டத்தட்ட மிரட்டினாள் அவனை. 
 
அவளின் பிடிவாதமும், அடாவடித்தனத்தையும் கண்டு.. மலைப்பு தோன்றினாலும்.. எதுவோ ஒன்று ராகவனையும்.. அவளது கட்டளைக்கு இசைந்து போகவே உந்தியது. 
 
ஒருவேளை.. அவளுக்குக் காவலனாக சத்தியப் பிரமாணம் எடுத்தவன்.. அச் சத்தியத்தைக் காக்க நாடுகிறானா?? இல்லை வேறேதேனும் உள்மன, வாலிப பிரயாசைகளா?
 
அதுவும் ஆகாயப்படையிலிருந்தவனுக்கு?? 
 
உண்மை என்னவென்பது அவன் மனதுக்கு மட்டுமே வெளிச்சம்!! 
 
அத்தியாயம் – 7

 அதன்பின்பு..தன் சங்கட மனோநிலையை தனக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்துக் கொண்ட ராகவனோ.. அங்கே புடைசூழ நின்றிருந்த பெண்களும் அவனை வினோதமாக நோட்டம் விடுவதையும் கூட கணக்கில் கொள்ளாது.. விறைத்த முகத்துடன்.. நேர்ப்பார்வை பார்த்தவனாக நின்று கொண்டான். 
 
ஆனால், அவன் யாருக்காக மெய்க்காப்பாளனாக அவதரிக்க எண்ணம் பூண்டானோ.. அவளோ.. இதழ்களில் அவன்படும் அவஸ்தையை எண்ணி வக்கிரம் தவழும் சிரிப்போடு.. ஆடைகளையே மாறி மாறிப் பார்க்கலானாள். 
 
அவளது பாழும் ஹிருதயமோ.. அவனிடம் மானசீகமாக, ‘இப்போ உனக்கு உள்ளார குறுகுறுன்னு இருக்குல்ல?? இப்படித் தான் அடுத்தவங்க ப்ரைவசிக்குள்ள நுழைஞ்சு.. குறுகுறுன்னு பார்க்கறப்ப எனக்கும் இருக்கும்.. அனுபவி ராகவா.. நல்லா அனுபவி’ என்று வெற்றிக்களிப்பு நகையுடன் உரையாடவும் செய்தது. 
 
ஆனால், வீர ராகவன்.. அப்படி அவளது தனிமை வட்டத்துக்குள்ளும் நுழைந்தது.. அவளது உயிரைக் காக்கும் ஒரு உயரிய எண்ணத்தில் தான் என்பதை.. அவன் பக்கமிருந்தும்.. அவன்புற ஞாயங்களைச் சிந்தித்துப் பார்க்காமல் போனாள் அவள். 
 
அதுவே அவள் தன் வாணாளில் விட்ட பெரும்பிழையும் ஆகிப் போக.. அவள் அப்பெரும்பிழையை உணர்ந்த கணம்.. அவள் வாழ்க்கையே தலைகீழாக மாறிப் போகப் போகின்றது என்பதை.. ஒரு இழையும் அறிந்திருக்கவில்லை பூஜா. 
 
 முகத்தில் எவ்விதமான சலனத்தையும் காட்டாமல்.. சிலைக்கு அருகில் நிற்கும் இராணுவவீரன் போல அவன் அசையாமல் நின்றிருந்த தருணமது. 
 
அவனோடு இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்க எண்ணிய சேட்டைக்காரியோ.. கைகளில்.. இரு உள்ளாடைகள் கொண்ட ஹேங்கருடன் அவனை நாடி வந்திருந்தாள். 
 
அவனும் ஆண் தான் அல்லவா?? ‘மென் வில் பீ மென்!’ என்னும் ஆங்கிலச் சொல்லும் எத்துணைப் பெரிய உண்மையையும் தாங்கி நிற்கின்றது?
 
ராகவனின் கூலர்ஸ் பின்னிருந்த விழிகள்.. சற்றே சுவாரஸ்யத்துடன்.. யாரும் தன்னை அவதானிக்கவில்லை என்றானதும்.. அங்கிருந்த விதம் விதமான உள்ளாடைகளைத் தான் கள்ளப்பூனை போல நோட்டம் விடலானது. 
 
“ஸ்போர்ட்ஸ் ப்ரா.. ஸ்லீவ்லெஸ் ப்ரா.. ஸ்ட்ரிப்லெஸ் ப்ரா.. மேட்டர்னிட்டி ப்ரா!யப்பாஆஆ எத்தன வக??!” என்று பற்பல வகையான உள்ளாடைகள் வகையறாக்கள் இருப்பது கண்டு.. முதன்முதலாக அவைப் பற்றி அறிய நேரிட்டவன்.. சற்றே மூச்சுத் திணறிப் போனான்.  
 
அவளோ.. அவன் முன்னால் வந்து நின்று.. இவன் நாமம் விளித்தது கூட.. சற்றே தாமதாகி இவன் செவிகளை அடைய.. அவன் சிந்தை இலயித்திருந்தது வண்ண வண்ண ஆடைகளில். 
 
“ராஆஆ.. கவ்வ்வ்!!” என்று தரையில் பாதத்தினை உதைத்து அவன் போட்ட கூச்சலில் தான்.. பட்டென்று சுயநினைவுக்குத் திரும்பியவன்.. மீண்டும் பாடிகார்ட் மோடுக்கு மாறிப் போனவனாகவே பதில் தரலானான். 
 
மீண்டும் விறைப்புப் பேர்வழியாக நின்றவனின் குரலும் விறைத்து வெளிவந்தது. 
 
“ஷாப்பிங் பண்ணி முடிஞ்சாச்சா மேடம்.. கெளம்பலாமா??” என்று சங்கடம் மாறாமல் அவன் கேட்க.. ஒற்றைப்புருவம் உயர்த்தி அவனை வேடிக்கையாகப் பார்த்து வைத்தாள் அவள். 
 
“என்ன விளையாடுறீயா ராகவ்?? நாம உள்ளே வந்து பத்து நிமிஷம் தான் ஆச்சு.. நான் ஒண்ணும் செலக்ட் பண்ணவேயில்லை.. எதை சூஸ் பண்றதுன்னு கன்ஃபியூஸிங்கா இருக்கு!!” என்று சொன்னவள்.. இது தான் சந்தர்ப்பமென்று வேண்டுமென அவனது விழிகள் முன் நீட்டியிருந்தாள் அந்த இட்லி அவிக்கும் துணியை. 
 
” ராகவ்.. இதுல எது நல்லாருக்கு? நீயே சொல்லு!! “என்று அவனை புதுவிதமாகச் சித்திரவதை செய்யும் நுட்பத்தில் கைதேர்ந்தவளாகக் கூறியிருந்தாள் அவள். 
 
ராகவன்.. மச்சுவீட்டு பைங்கிளிக்கு.. ‘இம்சை’ என்று பெயர் வைத்ததில் தவறேயில்லை. இப்படி நூதனமாக இம்சிப்பவளுக்கு, இம்சை என்னும் நாமம் சாலவும் பொருத்தம் தான்!! 
 
அவனது தாடைகள் தீப்பற்றி எரிவது போல பிரம்மை எழுந்தாலும் அதனை மறைத்து, “மேடம்.. எது செலக்ட் பண்ணாலும் உங்க இஷ்டம்.. நீங்க செலக்ட் பண்ணி முடிச்சாச்சுன்னா.. கெளம்பலாம்!!” என்று அவன் அவ்விடத்தை விட்டும் நகர்வதிலேயே குறியாக இருக்க.. இவளுக்குத் தான் அவன் செய்வது அனைத்தும் இம்சையாகத் தோன்றியது. 
 
இவளோ தன் பாட்சா அவனிடம் பலிக்காததை எண்ணி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டவளாக.. மீண்டும் விரைந்தவளின் மனமோ.. முணுமுணுவென்று,  
” ஒரு பொண்ணு.. ப்ராஸ் காட்டி.. எது நல்லாருக்குன்னு கேட்கறா.. இவன் என்னடான்னா.. சூடு சுரணையே இல்லாம.. உங்க இஷ்டம்ன்றான்.. இந்த ரோபோக்கு உணர்ச்சிகளே வராதா?? ஃபூல்.!!” என்று இடைவிடாமல் திட்டிக் கொண்டே.. தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தாள். 
 
அவள் அப்பிரிவை விட்டும் விலகி வெளியில் வந்ததைக் கண்டவன்.. தானும் அவளது பின்னாலேயே விரையலானான். அவளோ நேரே சென்று பற்பல அழகுக்கலை நிறுவனங்களின்.. ப்ராண்ட் நாமத்துடன்.. உதட்டுச்சாயங்கள் பல்வேறு வர்ணங்களில் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள் அவள். 
 
‘இங்கே எதுக்குடா வந்தா? போச்சு போ!! இங்கே என்ன குறும்பு பண்ண காத்திருக்காளோ?’ என்று படபடப்பான மொழிகளுடன் இதயத்துடன் மொழிந்தவனாக.. தன் நேர்ப்பார்வையை ஒரு சிறிதும் அஷ்டகோணல் பார்வையாக மாற்றாமல்.. அவள் பின்னாலேயே விரைந்திருந்தான் அவன். 
 
அவளோ.. அங்கேயிருந்த அடர்சிவப்பு நிற உதட்டுச்சாயக் குப்பியை எடுத்து.. தன் விரல்களால் தடவி எடுத்து…  கண்ணாடி முன்னின்று..உதட்டில் தடவிக் கொண்டாள். 
 
பின்பு இதழ்களை செக்ஸியாகக் குவித்தவாறு.. அருகிருந்த அவனைத் தான் பார்க்கலானாள். 
 
“ராகவ்.. இந்த லிப்ஸ்டிக் ஷேட் எப்படியிருக்கு??”என்றவள் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே கேட்க.. இவனுக்கு தான்.. ராகுகாலம் இன்னும் முடியவில்லை போலும்.  
 
அவள் தன்னுதட்டினை.. சற்றே குவித்து காட்டிய தினுசில்.. அவள் இதழ்களின் வடிவம் அழகுற அவன் கண்களுக்கு வெகுவெகு அருகாமையில் புலனானது. 

அதில் நின்றும் ஒருவிதமான ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சுகந்தம் வீசிக் கொண்டிருக்க.. அது அவனை ஏதோ செய்யவும் செய்தது. 
 
‘மயங்காதேடா கைப்புள்ள.. ஏதோ குறளிவித்த காட்டுறா?’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்.. ‘நீ.. ங்”என்று பேசத் தொடங்கிய போதே உள்ளே போயிருந்தது அவன் குரல். 
 
உள்ளே போன குரலை நேர்ப்படுத்தும் வண்ணம்.. குரலை செருகிய வண்ணம்.. கெத்தான குரலில்,” மேடம்க்கு எது போட்டாலும் நல்லா இருக்கும்.!! “என்றான். 
 
அவன் தன்னை, மேடம் என்றதில்.. கோபம் பொத்திக் கொண்டு வர,” டோன்ட் கால் மீ மேடம்.” என்றவளுக்கு.. அவள் போட்ட திட்டங்கள் யாவும் புஸ்வானமாகிப் போகும் போலிருந்தது அவன் பதிலில். 
 
அக்கணம் அவள் முகமே தேய்ந்து பிறைநிலாவாக மாறிப் போகும் என்பது போலாக.. அவளது புறமுதுகின்புறமிருந்தும் கேட்டது ஒரு பெண்ணின் குரல்!! 
 
அது அவளுடன் ஒன்றாகப் பள்ளியில் படித்த ஸ்வர்ணாவின் குரல். 
 
“ஹேய் வாட் அ சர்ப்ரைஸ்.. பூஜா!! முன்னாடி இருந்தத விட ரொம்ப அழகாயிட்டேடீ.. வாவ்.. லைக் அ மாடல்!!” என்று விழிகள் விரிய.. பூஜாவின் அழகை வாய் விட்டுச் சிலாகித்த வண்ணமே.. ஓடி வந்து.. பூஜாவை ஒருதரம் அணைத்து விடுவிக்கவும் செய்தாள் ஸ்வர்ணா. 
 
அணைப்பிலிருந்து விடுபட்ட ஸ்வர்ணாவின் பார்வை.. அருகேயிருந்த ராகவனில் பதிய.. அவனது ஆஜானுபாகுவான அழகுத் தோற்றத்தைக் கண்டதும்.. அது பூஜாவின் ஆத்மார்த்தமான காதலன் என்று தவறாகத் தானே கற்பிதம் செய்து கொண்டாள் போலும். 
 
“இது தான் உன் பாய் பிரண்ட்டா? ஹீ இஸ் ஸோ ஹேன்ட்சம்.. ரெண்டு பேரும் சேர்ந்து பக்கத்துல நிற்கறப்ப.. ஜோடிப் பொருத்தம் அள்ளுது தெரியுமா??” என்று ஸ்வர்ணா இருவரையும் விழிகளால் ஆராதித்த வண்ணம் கூற.. இவனுக்குத் தான்.. தொண்டையில் ஐஸ்கட்டி சிக்கியது போல ஒரு வேதனை எழுந்தது. 
 
” இ.. இல்ல.. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க? “என்று அவனும் உடனடியாக மறுத்து உரைக்க முன்வர.. அதற்குச் சரியாக காது கொடுத்துக் கேட்காமல்.. வேறேதேதோ.. இடைவிடாமல் பேசிக் கொண்டே போகலானாள் ஸ்வர்ணா. 
 
‘இவ தான் இப்படின்னு பார்த்தா.. இவ ப்ரென்ட்ஸூங்களும் அப்படித்தானா.. என்ன சொல்ல வர்றோம்னு புரிஞ்சுக்காம.. அது பாட்டுக்கு ஒண்ண புரிஞ்சுக்கிட்டு பேசுதுங்க!!’ என்று அவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு நின்றிருந்த தருணம் அது. 
 
ஸ்வர்ணாவோ.. தலைவி பூஜாவின் கையினைப் பற்றியவளாக, “யூ ஆர் ஸோ லக்கிடீ.. என் பாய்ப்ரண்டும் தான் இருக்கானே.. ஷாப்பிங் பண்ணலாம்னு வான்னு கூப்பிட்டா.. ஆள விடு சாமின்னு கும்பிடு போட்டுட்டு அரகாத தூரம் ஓடிப்போயிட்றான்.. ஆனா உன் பாய்ஃபிரண்ட் ஸோ சார்ம்மிங்!!” என்று தலைவனுக்கு புகழாரம் சூடலானாள்.
 
 இவனும் அதற்கு மேலும் தாங்கமாட்டாது.. வாய் திறந்து..” நான் ஒண்ணும்.. ” என்று உண்மையைச் சொல்லி விட எத்தனித்த நொடி.. அவன் மனம் புரிந்தாற் போல.. அவனது கையை சட்டென்று பற்றி.. சொல்ல வேண்டாம் என்பது போல அழுத்தினாள் அவள். 
 
ஆமாம், பள்ளிக் காலம் தொட்டு.. பெருந்தனவந்தர் பிரகாசம்.. இவளைப் பொத்தி பொத்தி வளர்க்க.. அது அறிந்த நண்பிகளோ.. “போடி.. போடி எங்களுக்காச்சு பாய்ப்ரண்டுன்னு ஒருத்தன் இருக்கான்.. ஆனா உனக்கு. ஸ்ட்ரெய்ட்டா கல்யாணம் தான்..!!” என்று கலாய்த்திருந்தனர்.
 
அப்படி கலாய்த்தவள்.. தற்போது காதலுடன் நிற்பது.. பேராச்சரியத்தைக் கொடுத்தது நண்பிக்கு.
 
அந்தக் கலாய்த்தலை பள்ளிக்காலம் முழுவதும் கேட்டு வளர்ந்தவளுக்கு.. ஸ்வர்ணா.. அவன் தன் காதலன் என்று நினைத்ததும்.. இதமாகவே இருந்தது. 
 
ஆகையாலேயே.. அவனை ஏதும் குறுக்கே புகுந்து.. மறுத்துப் பேச வேண்டாம் என்பது போலக் கைப்பிடித்து தடுத்திருந்தாள் பூஜா. 
 
அதிலும் ஸ்வர்ணா ஒருபடி மேலே போய்.. தன் செல்லை கைப்பையில் நின்றும் வெளியில் எடுத்தவளாக, “ஹேய் நீங்க ரெண்டு பேரும் ஜோடியா ஒரு போஸ் கொடுங்களேன்.. ஒரு போட்டோ க்ளிக்கிக்கணும்.. என் ஃபாய்ப்ரண்ட்ட காட்டணும். கண்டிப்பா அவன் வியக்க போறான்!!” என்று புகைப்படம் எடுக்கத் தயாரானவாறு நின்றாள். 
 
இவனோ.. அதற்கு மேலும் மனம் ஒவ்வாது.. “இல்ல.. நான்..” என்று தொடங்க.. அதற்கு விடாமல்.. அவள்.. அவன் கையைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டவளாக சிரிப்பது போல பற்களுக்கிடையில் கிசுகிசுத்தாள். 

” ராகவ் கண்ணா.. இது ஜஸ்ட் போட்டோ தானே.. ஒரு போஸ் கொடுக்கலாமே ப்ளீஸ்!!” என்று சொல்ல.. அவளது ‘ராகவ் கண்ணா’ என்ற அழைப்பு.. அவனது இதயம் நுழைந்து முதன் முறையாக ஏதேதோ.. எழுத்தில் வரித்து விடமுடியாத வகையில் செய்யும் போலிருந்தது. 
 
‘ராகவ் கண்ணா’ 
‘ராகவ் கண்ணா’ 
‘ராகவ் கண்ணா’ 
 
அவனது செவிப்பறை எங்கனும் அவளது விளிப்பு மாத்திரமே கேட்டுக் கொண்டிருக்கலானது. 
 
அவள் அதை தெரிந்து செய்தாளோ, தெரியாமல் செய்தாளோ..? எது எவ்வாறிருப்பினும், அவன்.. தன்னை அந்த அழைப்பில் சிறுகச் சிறுகத் தொலைத்துக் கொண்டிருந்தான். 
 
அது அவனது தாய் அழைக்கும் பிரத்தியேக அன்பு அழைப்பு!! தாய் மட்டுமே அழைக்கும் அழைப்பு!! 
 
அவளது அழைப்பில், அந்த ஒற்றைப்புகைப்படத்திற்காக.. இவனது மீசை சூழ் அதரங்களும் விரிய.. இதமான ஒரு புன்னகையுடன்.. போஸ் கொடுத்து நிற்கலானான் ராகவன்! 
 
அவனது முழங்கை வளைவுக்குள் கையிட்டு அவனோடு சேர்த்தணைத்த வண்ணம் அவளும் முகம் மலர நிற்க.. அடுத்த கணம்.. கிளுக்கப்பட்டது அந்தக் கனகச்சிதமான ஊர்க்கண்ணே பட்டுவிடும் படியான புகைப்படம்!! 
 
ஸ்வர்ணாவோ.. அப்புகைப்படத்தைக் கண்டு திருப்தி கொண்டவளாக, “போட்டோ சூப்பரா வந்திருக்குடீ.. உனக்கு வாட்ஸாப் பண்ணி விட்றேன்.. பாரு.. கண்டிப்பா பார்ட்டியிருக்கு.. எப்பன்னு அப்றம் சொல்றேன்.. நீ வந்துடணும் என்ன??” என்று அவசர அவசரமாக பேசிக் கொண்டே.. காட்சியகத்தை விட்டும் நகர்ந்தும் போனாள் ஸ்வர்ணா. 
 
ஸ்வர்ணா மறைந்ததும்.. இவள் பெருமூச்சு விட்டவளாக சமரச நிலையடைந்து நிற்க.. இவனோ.. சின்ன கடுப்புடன்..அவள் வதனம் பார்த்தான். 
 
” என்னங்க நீங்க அவங்க கிட்ட உண்மைய சொல்றதுக்கு என்ன? “என்று கேட்க.. அவளோ..கைகளால் சமிக்ஞை காட்டி, ” இங்கே வா இரகசியம்” என்பது போல அவனை அருகில் அழைத்தாள். 
 
அவனும் குனிய.. அவளோ.. ஆடவனின் காதுக்குள், “அது இரகசியம் அப்படித்தான்.. அதப்பத்தி சொல்றதுக்கில்லை!!” என்று சொல்லி காலை வாரிவிட.. இவனோ.. அசடுவழிந்தவனாக.. இதழ்களைத் திறந்து மூடிக் கொண்டான். 
 
” சரி கெளம்பலாமா?” என்று தலையாட்டிக் கேட்டவாறு அவள் முன்னே நடக்க.. அவளை நாலாபுறமும் பாதுகாத்தவனாக.. வண்டிக்கு அழைத்து வந்தவன்.. ஏறிக்கொண்டான் காரினில். 
 
 ஆடையகத்திலிருந்து.. வீடு வரையான இந்தப் பயணம் முற்றிலும் நிசப்தமானதாக அமைய..  அவளுடைய குறும்புகளை நினைத்து, முகத்தில் காட்டாமல் அகத்தினால் புன்னகைத்தவனாகவே வந்தான் அவன். 
 
அதிலும் அவள் ‘ராகவ்கண்ணா’ என்றழைத்த விதமே.. அவனைப் பாடாய்ப்படுத்திக் ‘கொல்ல’ போதுமானதாக இருந்தது. 
 
அக்கணம் அவளது செல்லும் அலறவே.. ‘இது யாரோ?’ என்றாற் போல இடுங்கியது அவனது விழிகள். 
 
ஸ்டியரிங்கிலும், பாதையிலும் ஒரு கவனம் இருந்தாலும்.. அவனது மறுகவனம், ‘யார் அழைப்பில்?’ என்பதை அறிய முற்படுவதாகவே இருந்தது. 
 
அவளோ.. அழைப்பை ஏற்று, செல்லில் காதை வைத்தது மாத்திரம் தான். நிரம்பவும் குதூகலமாகிப் போனாள். 
 
“ஹேய் ஜெகா..மை லக்கி சார்ம்.. எங்கேடா இருக்க?வாட்?? சென்னைக்கு வந்துட்டீயா?? நீ சென்னைக்கு வந்தப்றமும் உன்னை வந்து பார்க்காம இருப்பேனா.. வர்றேன்.. வர்றேன் ஜெகா!!” என்னு யாரோ ஒரு அந்நிய ஆடவனுடன் உரையாட.. இவனுள் பிரதம முறையாக கிளர்ந்தெழுந்தது.. ஒருவிதமான பொறாமைத்தீ! 
 
‘யாரிந்த ஜெகா?? சென்னையை விட்டும் ஜகா வாங்கிப் போன ஜெகா??’ என்று அவன் தன்னிடமே கேட்டுக் கொள்ளலானான்.  
 
அவள் ஜெகாவிடம்.. செல்லில் சிரித்து சிரித்து.. ஏதேதோ அளவளாவ.. ஏனோ.. அது அவனுக்குப் பிடிக்கவில்லை.  
நெஞ்சுக்குள் ஏதோ ஒரு குறுகுறுப்பு வந்து.. போக.. அவனுள் இனம்புரியாமல் உண்டானது சீற்றம்.  
 
இவன் உள்ளம் நெய்யூற்றப்பெற்ற அக்னிக்குண்டமாக பற்றி எரிவது அறியாத பூஜா பேசிக் கொண்டிருக்க.. இவனது கைவன்மையில்.. சீதையைக் கவர்ந்த புஸ்பகவிமானமாக.. சீறிப் பாய்ந்திருந்தது கார் வண்டி. 
 
அதைக் கூட அறியாத வகையில்.. மங்கையவளோ.. செல்ஃபோனில் சுற்றம் மறக்கும் வண்ணம் பேச்சு! ஜெகாவோடு!! 
 
சரியாக வீடு வந்ததும் அவன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்த.. செல்லைத் துண்டித்து விட்டு.. சீட்பெல்ட்டைக் கழற்றியவளோ, அவனை சுட்டுப் பஸ்பமாக்கி விடுவது போல நோக்கலானாள். 
 
இன்றைய, ‘ஷாப்பிங் படலத்தில்’ அவனை அழைத்துச் சென்று.. ‘ப்ரைவசி’ பற்றி பாடம் புகட்டி விட்டதாக எண்ணி.. வன்மமாக விகசித்தும் வைத்தாள் அவள். 
 
குரோதம் மிளிர அவனைப் பார்த்தவளோ, நீலாம்பரி போல ஆனாளோ?? 
 
அப்படித் தான்மிரட்டும் வண்ணம் விரிந்தது அவளது அழகு கயல் விழிகளும். 
 
“என்ன இப்ப புரியுதா.. ஒருத்தர் ப்ரைவசிக்குள்ள நுழையுறது எவ்ளவு பெரிய அபத்தம்ன்றது புரியுதா? பெட்டர் யூ ஸ்டே அவே ஃப்ரொம் மீ.. இல்ல.. நான் சொன்னதை செய்வேன்.. செய்தே தீருவேன்!!” என்று வில்லி ரேஞ்சுக்குப் பேச.. அதைக் கேட்டு உள்ளுக்குள் குபீர் சிரிப்பு மலரும் போலிருந்தது ராகவனுக்கு. 
 
‘அங்ஙனம் சிரித்து வைத்தால் அதற்கும் சேர்த்து,’ தாம்தூம் ‘ என்று குதிப்பாள்’ என்றறிந்து.. சிரிப்பை அடக்கி நின்றவன்.. தலைகோதி மறுபுறம் பார்த்து சிரித்து நின்றான். 
 
“பாதுகாப்புன்னு வரும்போது.. உயிர் தான் முக்கியம். ப்ரைவசி இல்ல. எனக்கு உன் பாதுகாப்பு தான் முக்கி.. ய” என்றவனாக மீண்டும் அவன்..அவள் அமர்ந்திருந்த புறமாகத் திரும்ப.. ஏனோ அவள் அங்கில்லை. 
 
அவனது மொழிகளை உளறல் என கேட்கமுதல் தானாகவே முடிவு செய்திருந்தவள்.. காரை விட்டும் இறங்கிச் சென்றிருந்தாள். 
 
அவளது சிறுபிள்ளைத்தனமான செய்கையில் இன்னும் கொஞ்சம் விகசிக்க நின்றிருந்தவன்.. அடுத்த நாள் காலை அவள் செய்த காரியத்தில் ருத்திரதாண்டவமும் ஆடச் சித்தமானான். 
 
அந்த ருத்திரதாண்டவ ஆட்டத்தின் முடிவில் தன் தன் சதியை நீங்கிச் செல்ல விழைந்தானா? 
 
அவள் போட்ட சபதமும் ஈடேறியதா? அங்ஙனம் அவளும் என் செய்தாள்?

 
(இதோ உங்க ஆள்தோட்ட பூ.. ச்சீ.. பூந்தோட்ட காதல்காரானை கூட்டியாந்துட்டேன்.🤣🤣💋💜💜💞 தளபதி ரசிகைகளுக்கு சைட் அடிக்க ஏக அனுமதி உண்டு. 💗💕😘😘காதல்காரன்.. எப்போ காதல்ல குதிப்பான்னு வெயிட்டிங்கா?💗💕💕 பார்க்கலாம் பார்க்கலாம்.. 💜💞💕முதல்ல பொண்ணு விழுறாளா?💋💜💞💖💓♥️இல்ல நம்ம ஹீரோ விழுறானான்னு.. 😁😁யார் லவ்வுல விழுந்தாலும்.. ரொம் ரொம்மா வரும்.. 💋💜💞💗பீ ரெடி தங்கபுஷ்பங்களா. 💚💛😘🤞லவ் யூ ஆல் லேடீஸ்♥️💖) 

7 thoughts on “பூந்தோட்ட காதல்காரா – விஷ்ணுப்ரியா! – 4, 5,6&7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top