நிலவோடு பிறந்தவள் நீயோ?!
நிலவு 1
மதுரை மாவட்டம் என்றாலே திருவிழாதான். தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் முத்தாலம்மன் கோவில் திருவிழா கொடியேற்றும் விழா இன்று. அந்த ஊரில் பெரிய தலைகட்டு குடும்பம் சுந்தரபாண்டியன் குடும்பம். சுந்தரபாண்டியன் காஞ்சனா தம்பதியருக்கு அருள் பாண்டியன், தங்க பாண்டியன் சந்தனபாண்டியன் என மூன்று மகன்களும் இவர்கள் மூவருக்கும் மூத்த பெண் தேவி.
அந்த ஊரில் எந்த திருமணம் நடந்தாலும் முதல் சீர்வரிசை சுந்தரபாண்டியன் குடும்பத்திலிருந்துதான் அனுப்பி வைப்பார்கள். சுந்தரபாண்டியன் குடும்பத்திற்குத்தான் முதல் மரியாதை கிடைக்கிறதென பொறாமை கொண்ட சுந்தரபாண்டியனின் பங்காளி நாகப்பன் ஒரு திருமணத்தில் சுந்தரபாண்டியன், காஞ்சனா சாப்பிடும் சாப்பாட்டில் மட்டும் விஷம் வைத்துவிட்டான்.
சுந்தரபாண்டியன் தனக்கு விஷம் வைத்தது யார் என்று தெரிந்தாலும் நாகப்பனை எதுவும் செய்ய வேண்டாமென்று சொல்லிவிட்டார் அந்த நல்ல உள்ளம் படைத்த மனிதர். உயிர் பிரியும் தருவாயில் தன் அன்னை தனபாக்கியத்திடம் என் பிள்ளைகளை நீங்கள் தான் வளர்க்க வேண்டும் என்று சொல்லிச் சென்றுவிட்டார் சுந்தரபாண்டியன்.
தனபாக்கியம் இரும்பு பெண்மணி என்றே சொல்லவேண்டும் தன் பேரப்பிள்ளைகளை படிக்க வைத்து மதுரை மண்ணுக்குரிய வீரத்தை ஊட்டி தைரியத்துடன் வளர்த்தார். தேவியை பக்கத்து ஊர் ஜமீன்தார் மகன் பொன்மணிக்கு ஊர்மெச்சும்படி திருமணம் செய்து வைத்தார் தனபாக்கியம். இவர்களுக்கு இரு மகள்கள் பொன்னி, தேன்மொழி.
அருள் பாண்டியனுக்கு தன் நெருங்கின சொந்தம் வளர்மதியை திருமணம் செய்து வைத்தார். வளர்மதி வீட்டில் வசதி குறைவு என தெரிந்து சீர் செனத்தி எதுவும் வேண்டாமென்று சொல்லிவிட்டார். வளர்மதி பொறுமையின் சிகரம். இப்போதும் இந்த குடும்பத்து மூத்த மருமகள் என்று பொறுப்பை ஏற்று நடப்பவள். தங்க பாண்டியன் சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான். தன்னுடன் வேலை செய்யும் பெண் ஆர்த்தியை திருமணம் செய்துக் கொண்டான்.
தனபாக்கியத்திற்கு தங்கபாண்டியனின் மீது கோபம் இருந்தாலும் பேரனின் மீதுள்ள பாசத்தால் அவனை மன்னித்து ஏற்றுக்கொண்டார். இன்னும் ஆர்த்தி மீது பற்றுதல் இருக்காது. ஒட்டாத் தன்மையுடன்தான் நடந்துக் கொள்வார். ஆனால் ஆர்த்திக்கு கிடைக்க வேண்டிய மரியாதைக்கு பங்கம் வர விட மாட்டார்.
இன்று முத்தாலம்மன் தேர்திருவிழாவிற்கு தனபாக்கியம் குடும்பமே புறப்பட்டுக்கொண்டிருந்தது. அருண் பாண்டியன் வளர்மதியின் மகன் நந்தன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கின்றான். தங்கப்பாண்டியனும் ஆர்த்தியும் திருவிழாவிற்கு வந்திருந்தனர்.
தனபாக்கியம் சந்தன ஜரிகை காட்டன் சேலை பின் கொசுவம் வைத்து கட்டி புறப்பட்டு ஜம்மென்று ஹாலிலிருந்த சோபாவில் வந்து கம்பீரமாக அமர்ந்தவர், “ஏன் டியம்மா வளரு இன்னுமா புறப்படுற?” என்று தன் வெண்கல குரலில் குரல் கொடுத்தார் தனபாக்கியம்.
“அப்பத்தா நான் ரெடி” என்று தனபாக்கியம் பக்கம் வந்து அமர்ந்தான் நந்தன். “வா ராசா உங்கம்மா என்ன பண்ணுறா கோவிலுக்கு நேரமே போகணும்னு பொறுப்பு இருக்கா அவளுக்கு” என்று புகைந்தார் தனபாக்கியம்.
“அப்பத்தா அம்மா எப்பவோ புறப்பட்டாச்சு எனக்கு பசிக்குதுனு சொன்னேன்னு பால் ஆத்தி கொண்டு வரப்போயிருக்காங்க” என்று ராகம் போட்டு பேசிக்கொண்டிருந்தான் நந்தன்.
வளர்மதி பட்டுச்சேலை சரசரக்க நந்தனுக்காக பால் எடுத்து வந்தவரிடம் “அருள் புறப்பட்டாச்சா வளரு?” என்று கேட்டுக்கொண்டிருக்க “இதோ வந்துட்டேன் ஆத்தா” என்று வெள்ளை வேட்டி சட்டையுடன் மீசையை முறுக்கி விட்டு வந்தான் அருள் பாண்டியன்.
தங்க பாண்டியன் ஆர்த்தியுடன் கைகோர்த்து அவனது அறையிலிருந்து வந்தவன் அப்பத்தாவின் கூர் பார்வையில் ஆர்த்தியின் கையை விட்டு நின்றான். “என்னாச்சு கோல்ட்?” என்று செல்லப்பெயர் வைத்து கூப்பிட்ட தங்கபாண்டியன் தோளில் இடித்தாள் ஆர்த்தி.
“ஏய் பாட்டி இருக்காங்க தள்ளி வாடி” என்று அவள் காதில் கிசுகிசுத்து வேகஎட்டு வைத்து தனபாக்கியம் முன்னே வந்து கையை கட்டி நின்றான்.
ஆர்த்தியோ “ஒரு கம்பெனியோட டீம் ஹெட் இவன் இங்க இப்படி வந்து கையை கட்டி நிற்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல. இந்த கிழவி ரொம்ப ஓவரா பண்ணுது” என்று முணகிக்கொண்டு தங்கபாண்டியன் பக்கம் வந்து நின்றாள்.
“இங்க பாருடிம்மா ஆர்த்தி இது கிராமம் உங்க ஊரு பட்டணம் போல புருசன் கூட ஒட்டிக்கிட்டு நடக்கறது எல்லாம் இங்க சரிப்பட்டு வராது! நாம போறது கோவிலுக்கு கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா நடந்துக்கோ சரியா” என்று முந்தானை சேலையை உதறி எழுந்தவரின் பார்வை சந்தனபாண்டியனின் அறையில் பட்டு மீண்டது.
“வளரு சந்தனப்பாண்டி இன்னிக்கு காலையில சாப்பிட வந்தான்ல?” என்று அவரசமாக கேட்டார்.
“ம்ம் தம்பி வந்துச்சு அப்பத்தா! உங்க ரூம்க்கு வந்து பார்த்துட்டு தான் போச்சு! நீங்க அசந்து தூங்குறீங்கனு எழுப்பாம போயிடுச்சு” என்று கூறிவிட்டு தேங்காய் பழத்தட்டை எடுத்துக்கொண்டாள் வளர்மதி.
“ஆத்தா சந்தனப்பாண்டி எப்படியும் கோவிலுக்கு வந்துடுவான் நீங்க விசனப்படாம வாங்க” என்று தனபாக்கியம் தோளில் கை போட்டு வாசலுக்கு அழைத்து வந்தான் அருள்பாண்டியன்.
“ம்க்கும் இன்னிக்கும் முட்ட முட்ட குடிச்சிட்டு எங்க படுத்துக்கிடக்குறாரோ தெரியலை” சலிப்பாக பேசி நடந்தாள் ஆர்த்தி.
“ஏய் வாயை அடக்குடி! என் தம்பியை குத்தம் சொல்லி பேசுற தகுதி உனக்கு கிடையாது” என்று பல்லைக்கடித்தான் தங்கபாண்டியன்.
“ஆமா பொல்லாத தம்பி நம்ம கல்யாணத்துக்கு குடிச்சிட்டுத்தானே வந்தாரு. எங்க சொந்தக்காரங்க மத்தியில எங்க குடும்பம் மானம் தான் போச்சி” ஆர்த்தி குற்றம் பேசினாள்.
“ஆமாடி உங்க குடும்பத்துல யாரும் குடிக்கல பாரு. என் தம்பி குடிச்சாலும் சும்மா வீரபாண்டிய கட்டபொம்மன் போல கம்பீரமா நிற்பான். உங்க தாய்மாமன் தான் சும்மா குடிச்சுட்டு நிற்க முடியாம தள்ளாடி நின்னாரு எல்லாரும் உன் மாமனை பார்த்துதான் சிரிச்சாங்க பேசறதுக்கு முன்னாடி யோசித்து பேசு. இப்படியே குதர்க்கமா பேசினா இங்கயே விட்டுப்புட்டு போயிடுவேன் பார்த்துக்கோ” என்று மீசையை முறுக்கினான்.
“ம்க்கும் நான் எதுவும் பேசலைப்பா” என்றாள் ஜகா வாங்கி. இந்த ஊர் திருவிழாவை பார்க்கத்தான் ஆசையாக வந்திருக்கிறாள் ஆர்த்தி. இப்போ தங்கபாண்டியன் வீட்டில் விட்டுச் செல்வேன் என்றதும் கணவன் முன்னே அமைதியாகி போனாள் ஆர்த்தி.
காரில் அனைவரும் ஏற தனபாக்கியம் சந்தனபாண்டியன் மொபைலுக்கு கூப்பிட்டார். சந்தனபாண்டியன் பண்ணைவீட்டில் ஒரு பாட்டில் பீரை அடித்துக்கொண்டிருந்தான். போனை சைலண்டில் போட்டு வைத்திருந்தான். அவனுக்கு போன் அடித்தது கேட்கவில்லை. போன் போட்டு சலித்துப்போன தனபாக்கியம் ‘முத்தால அம்மா என் பேரனுக்கு இந்த திருவிழா முடியறதுக்குள்ள கல்யாணம் நடந்திடணும்’ என்று வேண்டிக்கொண்டு “வண்டியை எடு அருளு” என்றவுடன் அருளும் கோவிலுக்கு வண்டியை விட்டான்.
அப்படியே பீர் பாட்டிலை வாயில் சரித்துக்கொண்டவனின் நினைவில் ‘நான் என் கூட படிக்கற ரமேஷை லவ் பண்ணுறேன் நீதான் அம்மாவையும் அப்பாவையும் என் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்’ என்று கண்ணீருடன் கூறியவளை பார்த்து என்ன செய்வதென்று திக்கு தெரியாமல் விழித்தான் சந்தனப்பாண்டியன்.
பொன்னி பெரியவள் ஆனதிலிருந்து தனக்கு சொந்தமானவள் என்று நினைத்து வாழ்ந்துக் கொண்டிருந்தவனிடம் இப்படி அவள் வேறு ஒருவனை லவ் பண்ணுறேன் என்று கூறியது அவனுக்கு சிறு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பெரிதாக எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. பொன்னி என்ன கேட்டாலும் வாங்கிக்கொடுப்பவன் இன்று தான் ஒருவனை லவ் பண்ணுறேன் எனக்கு அவனை கல்யாணம் செய்து வை மாமா என்று கேட்கும் பெண்ணிடம் என்ன சொல்வான். யார் என்ன சொன்னாலும் நான் உனக்கு கல்யாணம் பண்ணிவைக்குறேன் என்று பொன்னிக்கு வாக்கு கொடுத்தான் சந்தனபாண்டியன்.
ஆனால் பொன்மணிக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது மகளுக்கு சந்தனபாண்டியனை திருமணம் செய்து வைக்கத்தான் அவருக்கு பிரியம். அது மட்டுமா சொத்து கூட வருமே என்று பணத்தாசையும் பொன்மணிக்கு இருக்க சந்தனபாண்டியன் பொன்னி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். கல்யாண வேலையும் மும்மரமாக நடந்துக் கொண்டிருந்தது. பத்திரிக்கை கூட அச்சடித்து வந்துவிட்டது. பொன்னிக்கோ சந்தனபாண்டியன் மெத்தனமாக இருப்பது சந்தேகத்தை கொடுத்தது.
நேராக சந்தனபாண்டியனிடம் சென்றவள் “மாமா என்னை ரமேஷ் கூட சேர்த்து வைக்குறேனு சொன்னியே நம்ம கல்யாணத்துக்கு நாள் நெருங்கி வருது” என்று பொன்னி குய்யோ முறையோ என்று அழுதாள்.
“உனக்கு ரமேஷ் கூடத்தான் கல்யாணம் நடக்கும் போதுமா?” என்று மனதை கல்லாக்கிக்கொண்டு கூறினான் சந்தனபாண்டியன் பொன்னியிடம்.
ரமேஷின் குடும்பம் சென்னையில் ஓரளவு வசதியான குடும்பம் என்று விசாரித்த பின்புதான் பொன்னியை ரமேஷிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தான். தான் ஆசைப்பட்டவள் வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டுமென சென்னையில் டிடக்டிவ் வைத்து ரமேஷின் குடும்பத்தை செக் பண்ணிய பிறகே ரமேஷிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தான் சந்தனபாண்டியன்.
தங்கள் கல்யாணத்திற்கு ஒருவாரம் முன்பு பொன்னி ரமேஷிற்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கல்யாணம் செய்து வைத்து வீட்டுக்கு கூட்டிவந்தான் சந்தனப்பாண்டியன்.
பொன்மணி பொன்னி மாலையும் கழுத்துமாக ஒருவனுடன் வந்து நின்றதை பார்த்து ஏகத்துக்கும் கோபம் வந்து “என் மானத்தை வாங்கிட்டியேடி” என பொன்னியை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு போனார் பொன்மணி.
“மாமா நிறுத்துங்க” என்று பொன்மணியின் கையை பிடித்துக்கொண்டான். “நான் தான் இந்த கல்யாணத்தை நடத்தி வச்சேன்” என்று நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக பேசினான் சந்தனபாண்யடின்.
“நீ யாருடா என் பொண்ணுக்கு கல்யாணம் நடத்தி வைக்க?” என்று ஆத்திரப்பட்ட பொன்மணி சந்தனபாண்டியனின் சட்டையை கொத்தாக பிடித்தார்.
“ம்ம் பொண்ணுக்கு தாய்மாமன் அவ மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளையைதான் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்” என்றான் பொன்மணியின் கையை வெடுக்கென விலக்கிவிட்டு.
தனபாக்கியமோ சந்தனபாண்டியன் இப்படி ஒரு காரியத்தை செய்து வருவான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. பிரம்மை பிடித்தது போல நின்றார்.
அருள் பாண்டியனோ “மாமா நம்ம பொன்னி மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளையைத்தானே சந்தனபாண்டியன் கல்யாணம் பண்ணிவச்சிருக்கான் நாம ஆசிர்வாதம் செய்து பொன்னியை சேர்த்துப்போம்” என்று முன்னே வர.
“என் பொண்ணுக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா டா! நீங்க என்ன இடையில் புண்ணாக்கு பயலுக! உங்களை நம்பினதுக்கு எனக்கு நல்ல பாடம் புகட்டியாச்சு” என்று தலையை ஆட்டிக்கொண்டவர் பொன்னியை பார்த்து “இங்க நீ ஒரு நிமிசம் கூட நிற்க கூடாது. உன் அப்பன் உசிரோட தானே இருக்கேன். என்கிட்ட ஒருவார்த்தை இவனை விரும்புறேனு சொல்லாம உன் மாமன் கிட்ட சொல்லியிருக்கவ உன்னை ஒருகாலமும் மன்னிக்க மாட்டேன் வெளியே போடி” என்று பொன்னியின் கழுத்தை பிடிக்க போக ரமேஷ் பொன்னியை தன்னோடு அணைத்துக்கொண்டான்.
“என் பொண்ணை என்கிட்டயிருந்து பிரிச்சிட்டில்ல. இன்னியோட நம்ம உறவு முறை அத்துப்போச்சு. உன் அக்கா உங்க வீட்டுக்கு வரமாட்டா அதையும் மீறி வந்தா உன் அக்காளை நீங்களே வச்சிக்கோங்க” என்று கோபத்தில் சத்தம்போட்டு கத்தி வீட்டுக்குள் சென்றுவிட்டார். தேவியோ கணவன் பக்கம் நிற்பதா இல்லை. தம்பிகள் பக்கம் நிற்பதா என்று துடித்துப்போனார். தேன்மொழி காலேஜில் படித்துக்கொண்டிருந்தாள்.
அன்றிலிருந்து பொன்மணி சந்தனபாண்யடின் குடும்பத்தின் நல்லது கெட்டதிற்கு கலந்துக் கொள்வதில்லை. தேவியையும் அனுப்பவில்லை.
அழுது நின்றிருந்த பொன்னியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் தனபாக்கியம். அங்கே சடங்குகள் நடத்தி சகல சீர்வரிசைகளுடன் பொன்னியை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
சந்தனபாண்டியன் தன் வேலை உண்டு என்று இருக்க அவனிடம் அந்த ஊருக்கு பாடம் சொல்லி கொடுக்க வந்த மல்லிகா சந்தன பாண்டியனை விரும்புவதாக சொல்ல அவனோ முதலில் பிடி கொடுக்கவில்லை. எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல சந்தன பாண்டியனை பார்க்கும் போதெல்லாம் காதல் வார்த்தைகள் பேசினாள். அவ்வளவு ஈசியாக சந்தபாண்டியனை அவளால் வளைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் விஷம் குடித்து தன் காதலை ஏற்றுக்கொள்ள வைத்தாள் மல்லிகா.
“இப்பவாவது என் காதலை ஏத்துக்கோங்க பாண்டியன்” என்று கெஞ்சினாள் மல்லிகா, தனக்காக உயிரை விடும் பெண்ணாக இருக்காளே! என்று அவள் மீது காதல் வந்தது சந்தனபாண்டியனுக்கு. ஆனால் அவள் நாகப்பனின் ஆள் என்று தெரியாது போனது சந்தபாண்டியனுக்கு.
சந்தபாண்டியனுடன் கொஞ்ச நாள் பழகியவள், ஒரு நாள் அவனை விட்டுச் சென்று விட்டாள். அவள் எந்த ஊர் என்று அவள் கொடுத்த விலாசத்தில் தேடி பார்த்தான் சந்தனபாண்டியன். அப்படி ஒரு ஆள் இல்லை என்று தெரிந்ததும் நொடிந்து விட்டான்.
தான் விரும்பிய வாழ்க்கை கிடைக்கவில்லையே என்று ஆதங்கம் தலை தூக்கும்போதெல்லாம் குடித்துவிடுவான். எதற்காக குடிக்கிறான் என்று சில சமயம் அவனுக்கே தெரியாது. கடைக்குட்டி பேரனுக்கு திருமணம் செய்து வைக்க எடுத்த முயற்சி எல்லாம் வீணாய்ப்போனது தனபாக்கியத்திற்கு.
இந்நிலையில் கோவில் திருவிழாவும் வந்துவிட்டது. தேன்மொழிக்கு சுந்தரபாண்டியன் இறப்புக்கு காரணமான நாகப்பன் மகன் தென்னரசுவுடன் திருமண ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது. இன்று கோவிலில் கொடிமரம் ஏற்றியதும் ஒப்பு தாம்பூலம் சொந்தங்கள் முன்னே நடக்கவிருந்தது.
தன் தந்தையின் இறப்புக்கு காரணமானவன் வீட்டில் தன் மகளை வாழ அனுப்ப தேவிக்கு துளி கூட விருப்பம் இல்லை. பொன்மணியிடம் வாதாடிப்பார்த்தார் தேவி. அவரோ “உன் அப்பனை தானே கொல்லப்பார்த்தாரு! எனக்கு உன் குடும்பத்து ஆளுங்கத்தான் எதிரி. எனக்கு என்ன விருப்பமோ அதைத்தான் செய்வேன்” என்று தெனாவெட்டாக கூறிவிட்டார்.
தேவியோ சந்தனபாண்டியிடம் தான் போய் நின்றார். “நீதான் தேன்மொழியோட வாழ்க்கையை காப்பாத்தணும் தம்பி அந்த தென்னரசு பழக்க வழக்கமே சரியில்லை. பொம்பளை சகவாசம் வேறு இருக்கு போல. உங்க மாமா கூறுகெட்டு திரியுது! நீதான் தம்பி என்பொண்ணு வாழ்க்கையை காப்பாத்தணும். இன்னிக்கு நம்ம கோவில் திருவிழாவுல ஒப்புதாம்பூலம் மாத்திக்கப்போறோம்” என்று சொல்லியதும் “நான் இருக்கும்போது நீ ஏன்கா கவலைப்படற நான் பார்த்துக்குறேன்” என்று தனக்காக வாழாமல் தன் குடும்பத்தின் ஆசைக்காகவே வாழ்ந்து வந்தான் சந்தனபாண்டியன்.
ஒரு பீரை அடித்துவிட்டு பாட்டிலை தூக்கிப்போட்டுவிட்டு நல்ல பிரியாணியை மூக்கு முட்ட சாப்பிட்டு மீசையை முறுக்கிவிட்டு “யோவ் மாமா நான் இருக்கும்போது என் அக்கா கண்ணுல தண்ணி வர விடுவேனா. இதோ வரேன்யா” என்று தன் ராயல் என்ஃபீல்டில் ஏறி உட்கார்ந்து பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
கோவிலில் கொடிமரம் ஏற்றுவதற்காக தனபாக்கியம் தன் பேரன்களோடு நின்றிருந்தார் கம்பீரமாக.
நாகப்பனோ அருள் பாண்டியனையும் தங்கப்பாண்டியனும் தனபாக்கியம் அருகே நிற்பதை பார்த்துவிட்டு “என்ன ஆத்தா மூம்மூர்த்தியில ஒருத்தனை காணோம்” என்றார் ஏளனச்சிரிப்போடு.
தங்கப்பாண்டியனோ கையை முறுக்கிக்கொண்டு “யார்கிட்ட பேசுறனு தெரிஞ்சு பேசு” என்று நாகப்பனிடம் எகிறி குதித்தான்.
தனபாக்கியம் “ம்ம் தங்கம் இந்தப்பக்கம் வா” என்று பேரனிடம் அதட்டல் போட்டவர் “நாய் சூரியனை பார்த்து குலைச்சா நாய்க்குத்தான் கேடு வரும்” என்று சிரித்தார் தனபாக்கியம்.
“கிழவிக்கு குசும்பு போகல” என்று முறைத்தார் நாகப்பன். அருள்பாண்டியனோ “நாக்கை அடக்கி பேசினா நல்லாயிருக்கும்” என்று மீசையை முறுக்கினான். அதற்குள் அங்கே வந்த பொன்மணியோ “இவங்க கிட்ட என்ன பேச்சு கிடக்கு வாங்க சம்மந்தி” என்று தனபாக்கியத்தை முறைத்து பார்த்தவர் நாகப்பனின் கையை பிடித்துக்கொண்டு நடந்தார்.
நாகப்பனோ “எப்படி” என்று பம்மாத்து காட்டிச் சென்றார்.
செமஸ்டர் லீவில் வந்த தேன்மொழியிடம் “உனக்கு கல்யாணம்” என்று தடாலடியாக சொன்னார் பொன்மணி.
“அப்பா என்னோட படிப்பு முடிய இன்னும் ஆறுமாசம் இருக்கு. படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் செய்து வைங்க நான் பண்ணிக்குறேன் ப்ளீஸ்” என்று வாதாடிப்பார்த்தாள் தந்தையிடம்.
“ஏன் நீயும் உன் அக்கா போல எவனையவது லவ் கிவ்வு பண்ணுறியோ? உன் மாமன்காரங்க வரிஞ்சு கட்டி உனக்கு உதவி செய்ய வந்துருவானுங்க. நீ படிச்சு கிழிச்சது போதும் உனக்கும் நம்ம ஊரு தென்னரசுவுக்கும் கோவில் திருவிழா முடிஞ்சவுடன் கல்யாணம் இப்போ சும்மா ஒப்பு தாம்பூலம் மாத்திக்க போறோம்” என்று மகளையும் மனைவியையும் வலுக்கட்டாயமாக கூட்டிவந்தார் பொன்மணி.
கொடிமரம் ஏற்றுவதற்கு கோவில் பூசாரிகள் வந்து நிற்க “என் பேரன் வந்துடுவான் ஒரு ஐஞ்சு நிமிசம் காத்திருங்க” என்று தனபாக்கியம் சொல்ல
“எப்ப வருவாரு உங்க பேரன் இன்னேரம் எங்க குடிச்சிட்டு மல்லாக்க படுத்துகிடக்கானோ?” என்று எகத்தாளம் பேசினான் தென்னரசு.
அருள் பாண்டியன் முறைத்த முறைப்பில் பார்வையை வேறுபக்கம் திரும்பினான் தென்னரசு.
சந்தனப்பாண்டியன் தன் ராயல் என்ஃபீல்டை நிறுத்திவிட்டு விறுவிறுவென கூட்டத்தை நகர்த்திக்கொண்டு தனபாக்கியம் அருகே போய் மீசையை முறுக்கிவிட்டு சட்டையை கைவரை ஏற்றி விட்டு கம்பீரம் குறையாமல் நின்றான்.
தனபாக்கியமோ “எப்படிடா” என்று புருவம் உயர்த்தி “ம்ம் கொடிமரம் நடலாம்” என்றது கொடிமரம் நடுவதற்கான சம்பிரதாயம் நடந்தது.
நாகப்பனோ ‘ரொம்ப சந்தோசப்படாதீங்க தனபாக்கியம் உங்க குடும்பம் இன்னும் கொஞ்ச நேரத்தில அவமானப்படப்போகுது’ என்று கறுவிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.
பொன்மணியோ தன் பங்காளிகளுடன் கோவில் வளாகத்தில் அமர்ந்தார். எதிர்புறம் நாகப்பன் தன் பங்காளிகளுடன் அமர்ந்திருந்தார். “இரு குடும்பத்தார் சம்மதத்துடன் ஒப்புதாம்பூலம் மாத்திக்க போறாங்க” என்று பெரியவர் ஒருவர் சத்தமாக சொல்ல தேன்மொழியோ கண்ணில் கண்ணீருடன் உட்கார்ந்திருந்தாள்.
வளர்மதியோ தனபாக்கியத்தை கண்ணீருடன் பார்த்திருந்தார்.
யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அம்மன் கழுத்திலிருந்த தாலியை எடுத்து தேன்மொழியின் கழுத்தில் கட்டினான் சந்தனப்பாண்யடின்.
Super super sema ❤️❤️❤️❤️❤️
super starting
cliCZEjRzF
👌👌👌👌👌👌👌👌👌👌
Wow super sis