நிலவு 2
தென்னரசு பெண்பித்தன் அவனது தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லவே பயந்து நடுங்குவர் அந்த ஊர் பெண்கள். வேலை முடிந்து சம்பளம் கொடுக்கும்போது பெண்களின் கையை தடவுவது! வேலை செய்யும் நேரத்தில் அவர்களின் தோளில் உரசுவதுமாய் இருப்பான். அவனின் மாயை பேச்சில் மயங்கும் சில பெண்களை தன் பண்ணைவீட்டில் வைத்து சோலியை முடித்துவிடுவான். இது ஊரில் பலபேருக்கு தெரியும்.
பொன்மணிக்கு இந்த விஷயம் அரசல் புரசலாக தெரிந்தது. இந்தக்காலத்தில் எவன் ஒழுக்கசீலனாய் இருக்கான். கல்யாணமானால் சரியாகிவிடுவான் என்று தப்புகணக்கு போட்டு தேன்மொழியை தென்னரசுவிடம் கொடுக்க உடன்பட்டார். ஊர் மக்கள் அனைவரும் ‘கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுப்பார்களா என்ன! இந்த பொன்மணிக்கு பைத்தியம் தான் பிடிச்சுருக்கு’ திட்டிக்கொண்டிருந்தனர்.
தேன்மொழியை கல்யாணம் செய்துக் கொள்ளப்போகிறோம் என்ற ஆசையில் வாயில் ஈ போவது கூட தெரியாமல் ஜொல்லு விட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான் தென்னரசு.
தேன்மொழியோ ஏதேச்சையாக நிமிர்ந்தவள் தென்னரசுவை பார்க்க அவனோ தேன்மொழியை பார்த்து கண்ணடித்தான். “போடா பொறுக்கி நாயே” என்று முட்டை கண்ணை உருட்டி மிரட்டியவள்
அப்படியே கூட்டத்தில் தன் மாமன் வீட்டில் யாராவது கண்ணுக்கு தெரிகிறார்களா என்று கண்களால் நோட்டம் விட்டாள். தனபாக்கியம் கையை பிசைந்துக் கொண்டும் அவரின் பக்கம் மூவேந்தர்கள் போல நின்றிருந்தனர் அருள் பாண்டியன், தங்கப்பாண்டியன், சந்தனப்பாண்டியன். மூவரின் கண்களிலும் கோப கனல் வீசிக்கொண்டிருந்தது. அக்கா மகளின் வாழ்க்கையை குப்பையில் தூக்கிப்போடப்போகிறாரே பொன்மணி என்று அவரை கடித்து குதறிவிடும் அளவிற்கு வெறியுடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தனர்.
பொன்மணியோ மகளின் பார்வை எதிரி வீட்டுப்பக்கம் போவதை பார்த்தவர் “தேனு” என்று அதட்டல் போட தலையை குனிந்துக் கொண்டாள் தேன்மொழி. இரண்டாம் வருடம் பி.எஸ்.ஸி மேக்ஸ் படித்துக்கொண்டிருக்கிறாள். தேன்மொழிக்கு தான் கலெக்டர் ஆவதுதான் அவளது லட்சியக் கனவு. ஆனால் செமஸ்டர் லீவில் வந்தவளிடம் “உனக்கும் தென்னரசுவுக்கும் வரும் தைமாசம் கல்யாணம் முடிவு பண்ணியிருக்கேன். நாளைக்கு கோவில ஒப்பு தாம்பூலம் பேச்சு வார்த்தை நடக்கும். உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமானு பெரியவங்க கேட்பாங்க சம்மதம்னு வாயை திறந்து சொல்லணும் சரியா” என்று குரலை உயர்த்தி சொன்னவர் தோளில் துண்டை உதறி போட்டார் பொன்மணி.
பொன்மணி ஒரு கணக்கு போட்டால் தெய்வம் வேறு கணக்கு போட்டு அவளை சந்தனபாண்டியனின் மனைவியாக அவனுடன் சேர்த்து வைத்துவிட்டது. தேன்மொழி பொன்மணியின் பக்கம் உட்காராமல் தேவியின் பக்கம் உட்கார்ந்திருந்தது சந்தனபாண்டியனுக்கு வசதியாக போனது. பொன்மணி நாகப்பனுடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தார். இத்தனை கூட்டம் மத்தியில் பாண்டியன் குடும்பத்து சிங்கங்கள் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று துட்சமாய் எண்ணி அசால்ட்டாய் இருந்து விட்டார்.
சந்தனபாண்டியன் தேன்மொழியின் கழுத்தில் அதிரடியாக தாலிகட்டியதும் கூடியிருந்த கூட்டம் அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்து பார்த்திருந்தனர்.
வளர்மதியோ ‘அப்பாடா என் பொண்ணு பாதுகாப்பான இடத்துக்கு போய் சேர்ந்துட்டா’ என்று நிம்மதி பெரும்மூச்சு விட்டார்.
தேன்மொழி கழுத்தில் சந்தனபாண்டியன் தாலிகட்டியதும் பொன்மணி எதாவது செய்துவிடுவார் என்ற பயத்தில் வேகமாக எழுந்து ஓடியவள் தனபாக்கியத்தின் கையை பிடித்துக்கொண்டு நின்றுக் கொண்டாள். இப்படி சந்தன பாண்டியன் தன் கழுத்தில் தாலி கட்டுவான் என்று அவளும் எதிர்பாக்கவில்லையே கை விரல்கள் நடுங்கிக்கொண்டிருந்தது.
“என் ராசாத்தி பயப்படாதே” என்று பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் தேன்மொழியை தோளோடு அணைத்துக்கொண்டார் தனபாக்கியம்.
பொன்மணியோ தேன்மொழியின் கழுத்தில் தாலி கட்டியதை பார்த்து கோபப்பட்டவர் “டேய் என் பொண்ணு கழுத்துல எப்படிடா தாலி கட்டுன?” என்று வெறிபிடித்தவர் போல சந்தனபாண்டியனின் சட்டையை பிடிக்க வந்தவரின் முன்னே மீசையை முறுக்கிவிட்டு இரு அண்ணன்களும் சந்தனபாண்டியனின் முன்னே அரண் போல வந்து நின்றனர்.
“என்னங்கடா மூணு பேரும் சேர்ந்து நின்னா நாங்க பயந்துடுவோமோ!” என்று எள்ளலாக சிரித்த பொன்மணியோ நடுவில் நின்ற சந்தனபாண்டியனின் சட்டையை கொத்தாக பிடித்தார்.
“என் அக்கா பொண்ணு வாழ்க்கை சீரழிஞ்சு போறதை நான் பார்த்துட்டு சும்மா இருப்பேனா! எனக்கும் என் அக்கா பொண்ண கல்யாணம் பண்ண உரிமை இருக்கு அதான் தாலி கட்டினேன்! நீங்க நல்ல பையனுக்கு தேன்மொழியை கல்யாணம் செய்து வைக்க முடிவு பண்ணிருந்தீங்கனா நாங்க அட்சதை போட்டு ஆசீர்வாதம் செய்திருப்போம்! ஒரு தெரு பொறுக்கிக்கு கல்யாணம் பண்றதை பார்த்துட்டு சும்மா போக முடியாது மாமா ! வேணும்னா உன் காலுல வேணா விழுறேன்” என்று பொன் மணியை கையை தன் சட்டையிலிருந்து விலக்கி விட்டான்.
“நீயெல்லாம் என் காலுல விழ தகுதி இல்லாதவன்டா” என்று சந்தன பாண்டியனை அடிக்க கையை ஓங்கிக் கொண்டு போனார் பொன்மணி.
“கையை எடு மாமா மருவாதை கெட்டு போயிடும்! என் அக்கா முகத்துக்காக பார்க்குறேன்” என்ற சந்தனபாண்டியன் மீசையை முறுக்கி சிங்கம் போல உறுமினான்.
“யாருடா உங்கக்கா எப்போ என் பெரிய பொண்ணை என் விருப்பம் இல்லாம கண்டவனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சியோ அப்பவே அக்கா மாமன் உறவு முறை வெட்டிப்போச்சு. உறவு முறையெல்லாம் இனி ஜென்மத்துக்கும் கிடையாதுடா” என்று சீறினார் பொன்மணி.
“என்ன பேச்சு பேசுறீங்க! முதலில் என் தம்பி சட்டையிலிருந்து கையை எடுங்க. உங்களுக்குத்தான் கூறு கிடையாது பெத்த பொண்ணை ஒரு பொறுக்கி பயலுக்கு கல்யாணம் பண்ணிவைக்க பார்த்தீங்க. நல்லவேளை தெய்வமாக பார்த்து என் தம்பியை நம்ம பொண்ணு கழுத்துல தாலி கட்ட வச்சிருக்கு! நாம பார்த்து வளர்த்த பிள்ளைங்க சந்தனபாண்டியன் என் தம்பி கால் தூசிக்கு இந்த தென்னரசு குணம் வருமா! உங்க ஈகோவையும் வரட்டு கௌரவத்தையும் விட்டு நம்ம பொண்ணையும் தம்பியையும் ஆசிர்வாதம் பண்ணலாம் வாங்க“ என்று தம்பிகள் பக்கம் போக
தேவியின் முடியை கொத்தாக பிடித்து தன் பக்கம் நிறுத்தி “என்னடி உன் தம்பிகள் இருக்காங்கனு துள்ளுறியோ!” என கன்னத்தில் ஓங்கி அறைய “மாமாஆஆ” என்று மூவரும் பொன்மணியின் கையை பிடித்தனர்.
“தம்பிகளா உங்க மாமாதான் புத்திகெட்டு திரியுறாரு. நீங்களும் தப்பு பண்ணாதீங்க. மாமா மேல இருந்து கையை எடுங்க! தயவு செய்து இங்கிருந்து போயிடுங்க! இந்த மனுசனுக்கு என்னை விட்டா நாதி கிடையாது. என் பொண்ணை மட்டும் பத்திரமா பார்த்துக்கோங்க” என்று கையெடுத்து கும்பிட்டார் தேவி தன் தம்பிகளை பார்த்து.
“அக்கா நீ அழாதே! கையை கீழ போடு எங்ககிட்ட போய் கை கும்பிட்டு நிற்கிற” என்று மூவரும் தேவியின் கையை பிடித்துக் கொண்டனர்.
“என்னங்கடா பாசமலர் படம் காட்டுறீங்களா?” என்று தேவியை தன் பக்கம் இழுத்து நிறுத்தினார் பொன்மணி.
அதுவரை அமைதியாய் இருந்த தனபாக்கியமோ “இந்தா பெரிய மனுசா ஊருக்கு மத்தியில பொண்டாட்டி முடியை புடிச்சிருக்கியே உனக்கு அறிவு இருக்கா என்னா! ஒரு பெரிய மனுசி சொல்றேன் ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டமாம். இந்தா நிக்கிறானே இந்த நாகப்பன் என்ற மகன் சிகரமா உசந்து நின்ன மனுசனை விஷம் வைச்சு சாச்சுப்புட்டான்! என் பேத்தி தேன்மொழியை இவன் வீட்டு மருமகளா அனுப்ப பார்த்தியே உனக்கு எப்படி மனசு வந்துச்சுய்யா. அதான் உனக்கு மணிகட்ட என் பேத்தி கழுத்துல என் கடைக்குட்டி சிங்கம் தாலி கட்டிட்டான்” என்று கோபத்துடன் பேசினார் தனபாக்கியம்.
“என் பொண்டாட்டி நான் அடிப்பேன் உதைப்பேன் யாரும் கேட்க முடியாது” என்றார் பொன்மணி தெனாவெட்டாய்.
ஊர் பஞ்சாயத்து தலைகள் “ஏய்யா பொன்மணி நீ உன் பொன்சாதியை ஊட்டுக்குள்ள வச்சி அடிச்சினா யாரும் கேட்க மாட்டாங்க! ஊருக்கு மத்தியில வச்சி அடிச்சினா நாங்க கேட்போம்! இப்போ என்ன உன் மகள சந்தனபாண்டியன் கட்டுற முறைதானே. தாலியும் கட்டிப்புட்டான் உன் மாப்பிள்ளை! எல்லாம் சொந்தத்துக்குள்ள சேர்ந்து கலந்து போக வேண்யடிதுதான் பகையை புகையாய் வளர்க்காம தண்ணியை ஊத்தி அணைச்சு ஒண்ணு சேர வழிய பாருங்க” என்று பொன்மணிக்கு அறிவுரை கூறினார்கள் பஞ்சாயத்து தலைவர்கள்.
“எல்லாரும் நிறுத்துங்க” என்று சத்தம் போட்ட நாகப்பனோ “என்ன பொன்மணி எங்களை ஊருக்கு மத்தியில கூட்டிட்டு வந்து அவமானப்படுத்தி மூக்கறுக்க பார்க்குறியா! நான் யாருனு தெரியும்ல” என்று உறுமினார்.
“நீ எவ்வளவு மோசனமான கேப்மாரினு இந்த ஊருக்கு மட்டுமல்ல நம்ம ஊரை சுத்தியுள்ள கிராமத்துக்கும் தெரியும் சும்மா சலம்பாம பொத்திக்கிட்டு நில்லு” என்று சந்தனப்பாண்டியன் கோபத்தில் எகிறி குதித்தான்.
“ஏய் எங்கப்பாகிட்ட சண்டைக்கு வரியா?” என்று தென்னரசு சலம்பிக்கொண்டு சந்தனபாண்டியனிடம் சண்டைக்கு வந்தான்.
“கொண்டே போடுவே தூர போடா பொறுக்கி நாயே” என்று நாக்கை மடித்துக்கொண்டு விரலை நீட்டி தென்னரசுவை மிரட்டினான் சந்தனபாண்டியன்.
நாகப்பனோ “டேய் மகனே அடங்குடா இவனுக தனியா மாட்டும் போது போடுவோம்” என்று தென்னரசுவை அடக்கினார்.
பொன்மணியோ “தேன்மொழி இங்க வா” என்றதும் “ம்கூம் நான் வரமாட்டேன்” என்று தலையை ஆட்டினாள்.
“நீ படிக்கணும்னு சொன்னில்ல! வா அப்பா படிக்க வைக்குறேன்! இவன் கட்டின தாலியை கழட்டி வீசிட்டு வா” என்றார் வார்த்தையில் விஷத்தை தடவி.
தேன்மொழிக்கு சந்தன பாண்டியனை கண்டால் கொஞ்சம் பயம் அதுவும் அவன் பெரிய மீசையை கண்டு அவன் பக்கம் போகவே மாட்டாள். பொன்னி தான் சந்தன பாண்டியனிடம் தனக்கு வேண்டியதை உரிமையாக கேட்டு வாங்கிக் கொள்வாள்.
தேன்மொழி தாலியை இறுகப்பற்றிக்கொண்டு சந்தனபாண்டியன் பக்கம் அச்சத்துடன் போனாள். அவனோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் புறாக்குஞ்சை அணைப்பது போல தன் நெஞ்சில் தன்னவளை சாய்த்துக்கொண்டு “என்ன வார்த்தை தடிச்சு வருது மாமா! நான் கட்டின தாலியை கழட்ட எவனுக்கும் உரிமையும் இல்ல. எந்த கொம்பனுக்கும் தைரியம் இல்ல. எனக்கு உரிமைப் பட்டவ கழுத்துல நான் தாலி கட்டியிருக்கேன்” அனைவரின் மத்தியில் தேன்மொழியை அணைத்துக் கொண்டான் பொண்டாட்டி என்ற உரிமையில்.
“தேன்மொழி இந்த அப்பா உனக்கு வேண்டாமா! இந்தனை வருஷம் உன்னை சீராட்டி வளர்த்ததுக்கு எனக்கு வெகுமதி கொடுத்திட்ட” என்று உருகும் குரலில் பாசம் வைத்து பேசினார் பொன்மணி.
ஒருநிமிடம் தந்தை மேல் பாசம் வந்தாலும் அவரிடம் போனால் தன் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி அந்த பொம்பளை பொறுக்கி தென்னரசுவுக்கு தன்னை கல்யாணம் செய்து கொடுத்துவிடுவார் என்று பயந்தவள் “அப்பா எனக்கு மாமாவ பிடிச்சிருக்கு அதான் மாமா தாலி கட்டும்போது நான் எதிர்க்காம இருந்தேன் என்னை மன்னிச்சிடுங்கப்பா! நான் தாலியை கழட்ட மாட்டேன்” என்று சந்தன பாண்டியனுடன் இன்னும் நெருங்கி நின்றாள்.
“அப்படி பேசுடா என் தங்கமே” என்று தங்கபாண்டியன் தேன்மொழியின் தலையை தடவினான்.
மூன்று மாமன்கள் இருக்கும் தைரியத்தில் பேசிவிட்டாள் தேன்மொழி.
“இதா பாரு பொன்மணி உன் மகளே சந்தனபாண்டியனை பிடிச்சிருக்குனு சொல்லிட்டா இனி உன் மகளை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போக நினைக்கறது ரொம்ப தப்பு. இந்த ஊர்க்குனு ஒரு வரைமுறை வச்சிருக்கோம் பொண்ணு விருப்பப்படிதான் கல்யாணம் செய்து வைப்போம். இப்பவும் உன் மக விருப்பத்தை மதிச்சு அவளை தனபாக்கியம் குடும்பத்து வீட்டு மருமகளா அனுப்பி வைக்கறதுதான் முறை” என கறாராக சொன்னதும்
“ம்ம் நல்ல பொல்லா ஊருய்யா உங்க ஊரு. பெத்த அப்பனுக்கு பொண்ணு மேல உரிமை கிடையாதா! தாலி கட்டினதும் நானும் இவனுங்களை வாங்க மாப்பிள்ளைனு நடுவீட்டுல உட்கார வைச்சு இலைபோட்டு கறிசோறு போடணுமா அது எந்தக்காலத்திலும் நடக்காது. ஒரு பொண்ணுனு தான் நினைச்சிருந்தேன். இப்ப ரெண்டாவது பொண்ணும் இல்லைனு தலைமுழுகிடறேன்” என்று அங்கே வைத்திருந்த தண்ணிக்குடத்தை தூக்கப் போனார் பொன்மணி ஆத்திரத்தில் புத்தியை இழந்துவிட்டார் மனிதர்.
தேவியோ “என்னங்க” என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு மயக்கம் போட்டு விழுந்தார்.
அருள் பாண்டியன் “அக்கா என்னாச்சு?” என்று பதறி தேவியின் பக்கம் போக குடத்து தண்ணியை எடுக்க போன பொன்மணி தேவியின் குரல் கேட்டு திரும்பி பார்த்து “டேய் என் பொண்டாட்டியை தொடாதீங்கடா! எனக்கு பார்த்துக்க தெரியும் தூரப்போடா” என்று அருளை மிரட்டியவர் ஓடி வந்து தேவியை தாங்கிக்கொண்டார்.
“ஏய் எழும்பு டி நீயும் என்னை விட்டு போயிடாத” என்று தேவியின் கன்னம் தட்ட. தேவி மெல்ல கண்திறக்க “தண்ணியை குடி” என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினார் பொன்மணி .
தேவிக்கு தன்னால் தான் எதோ ஆகிவிட்டதென்று அஞ்சிய தேன்மொழி “அம்மா” என்று தேவியின் பக்கம் அழுதுக் கொண்டுச் சென்றாள்.
“ஏய் இங்கிருந்து போயிடு உன்னாலதான் என் பொண்டாட்டி மயக்கம் போட்டுட்டா! உன்னை பார்த்தாலே எனக்கு செம ஆத்திரம் வருது. உன்னை சின்னபொண்ணுனு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு என்யை பிய்ஞ்ச செருப்பால அடிச்சுக்கணும்! என் கண்ணு முன்னால நிக்காத அதுவும் உன் கழுத்துல இருக்க தாலியை பார்க்கும்போது நான் ஏதாவது பண்ணிடுவேனு எனக்கு தோணுது போ” என்று தேன்மொழியின் கையை பிடித்து இழுத்து விரட்டிவிட்டார் மகளென்றும் பாராமல்.
தங்கப்பாண்டியன் ஓடிச்சென்று தேன்மொழியை தாங்கிக்கொண்டு “ஏன் மாமா உனக்கு புத்தி பேதலிச்சு போச்சா! சின்ன புள்ளையை தள்ளிவிடற! நீ வாடா தங்கம்” என்று சந்தனபாண்டியன் பக்கம் கொண்டு போய் நிறுத்திவிட்டான்.
தனபாக்கியமோ “பேச்சை வளர்த்துக்கிட்டேயிருந்தா மலை போல உசரமா போகும் அருளு ரெண்டு பேரையும் காருக்கு கூட்டிட்டு வா” என்று முன்னே நடந்தார்.
தேன்மொழியின் கையை பிடித்தான் சந்தனபாண்டியன். அவளோ “மாமா அம்மா” என்றவளுக்கு கண்ணில் கண்ணீர் வந்தது.
“அம்மாவுக்கு ஒண்ணும் இல்லடி சும்மா நடிப்பு தான்” என்று கண்ணை சிமிட்டினான் சந்தன பாண்டியன்.
“ஓ அம்மா நடிச்சாங்களா” என்று கண்ணை உருட்டினாள.
“எங்கப்பன் குதிருக்குள்ளனு நீயே காட்டிக்கொடுக்காத வாயை மூடு” என்று தேன்மொழியின் தலையை தட்டினான்.
“இதப்பாரு தாலி கட்டியாச்சுனு தலையில அடிக்கிற வேலை வேண்டாம் மாமா” என்று அதிகாரம் பண்ணினாள் தேன்மொழி.
“ஏது ஏது உங்கப்பானாட்டம் வாய் நீளுது பல்லை தட்டிக் கொடுத்துடுவேன் வாயை பொத்திக்கிட்டு வாடி” என்று அவளது கையை பிடித்து இழுத்து வந்தான் சந்தன பாண்டியன்.
சந்தன பாண்டியன் கையை உதறி விட்டு அருள் பாண்டியன் முன்னே சென்று “மாமா, என்னை உங்க தம்பி அடிக்குறாரு என்னனு கேளுங்க” என்று பொய்யாய் அழுது கண்ணைக்கசக்கினாள்.
“டேய் புள்ளைய மிரட்டினா அடி விழும்டா” என்று தம்பியை பொய்யாக மிரட்டினார்கள் அருள்,தங்க பாண்டியர்கள்.
அண்ணன்கள் இருவரும் மிரட்டியதும் அமைதியானான் சந்தனபாண்டியன்.
தேன்மொழியோ சந்தனபாண்டியன் பக்கம் திரும்பாமல் அருள் பாண்டியன் கையை பிடித்து நடந்தாள் தேன்மொழி
super super
👌👌👌👌👌👌👌👌👌
tcaKzNbBnvxi