ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 3
 
 
அருள் பாண்டியன் தன் கையை பிடித்திருந்த தேன்மொழியின் கையை விட்டு “தேனுமா காருல ஏறி உட்காருடா” என்று கூறிவிட்டு திரும்பி சந்தனபாண்டியனை பார்க்க அவனோ பைக்கில் ஏறி சாவியை போடுவதை பார்த்த அருள் பாண்டியன் “தம்பி ஒரு நிமிசம் நில்லு” என கையை காட்டி நிறுத்தியதும் பைக்கிலிருந்த சாவியை எடுத்து இறங்கி “சொல்லுங்கண்ணா” என அருள் பாண்டியன் பக்கம் வந்து நின்றான் சந்தனபாண்டியன்.
 
“சாவியை கொடு” என்றதும் மறுபேச்சு பேசாமல் சாவியை அருள் பாண்டியனிடம் கொடுக்க “தங்கம் நீ பைக்கை எடுத்துட்டு வீட்டுக்கு வா” என்றதும் தங்கப்பாண்டியனும் சாவியை வாங்கியவன் பைக்கில் ஏறினான். ஆர்த்தியோ “நானும் உங்க கூட பைக்ல வரேன் கோல்ட்” என்று பைக்கில் ஏறி அமர்ந்தாள்.
 
தங்கபாண்டியனும் சந்தனபாண்டியனும் இதுவரை அண்ணன் ஒன்றை கூறிவிட்டால் அதை செய்து முடித்து தான் திரும்புவர். எள் என்று சொன்னால் எண்ணெய்யாக வந்து நிற்பார்கள். அருள் பாண்டியன் எது செய்தாலும் தங்களின் நன்மைக்காகத்தான் என்று எண்ணிக்கொள்வார்கள் அருள்பாண்டியன் தம்பிகள் இருவரும்.
 
வளர்மதி நந்தனுடன் காரின் பின் சீட்டில் ஏறினாள். தனபாக்கியமோ “தேனு குட்டி காருல ஏறுடா” என்றதும் அவளும் எங்கே சந்தனபாண்யடின் தன் பக்கம் வந்து உட்கார்ந்துவிடுவானோ என்று பயந்து வளர்மதியின் பக்கம் போய் உட்கார்ந்துக் கொண்டாள். சந்தனபாண்டியன் முன் சீட்டில் அமரவும் தான் ‘அப்பாடா மீசை பின்னாடி நம்ம பக்கம் வரலை’ என்று நிம்மதி பெரும்மூச்சு விட “சின்னவனே நீ பின்னாடி வந்து உட்காரு! எனக்கு காலை நீட்டி வசதியா உட்காரணும்” என்று சந்தனபாண்டியனை கூப்பிட்டார் தனபாக்கியம்.
 
‘அச்சோ மீசை வராத அங்கயே உட்காரு’ என்று நெஞ்சில் கையை வைத்தாள் தேன்மொழி.
 
“இதோ வரேன் அப்பத்தா” என்று பின் சீட்டுக்கு வந்தவன் தேன்மொழியின் பக்கம் நெருங்கி உட்கார்ந்தான் சந்தனபாண்டியன்.
 
சந்தனபாண்டியன் மேல் ஒட்டாமல் அவளது உடலை குறுக்கி உட்கார்ந்தாள் தேன்மொழி. அப்படியிருந்தும் சந்தனபாண்டியன் தேன்மொழியின் தோளில் உரசித்தான் உட்கார்ந்தான். அவன் உயரம் ஆறு அடிக்கு இருக்க இவளோ அவனது தோள் வளைவிற்கு கூட இருக்கவில்லை. மெல்ல தலையை நிமிர்த்தி சந்தனபாண்டியனை பார்த்தாள். அவனின் கட்டுமஸ்தான உடம்பு, இவளின் மென் பருத்தி பஞ்சு போல தேகம் அவனின் தோள் உரசியதே அவளுக்கு நசுக்குவது போல அச்சத்தை கொடுக்க. இந்த மீசைக்காரனை நாம எப்படி சுமக்குறது என்று அவளின் உடல் அச்சத்தில் உதறல் எடுத்தது. அவனது கட்டுமஸ்தான மார்பும் யானை தந்தம் போல அவனது கைகளும் இன்னுமே அவளை பயம் கொள்ளச்செய்தது.
 
இதில் சந்தனபாண்டியன் தலையை திருப்பி “என்ன” என்று அவன் புருவம் உயர்த்தியதும் “ஒண்ணுமில்லை மாமா” என்றவளோ கண்ணை இறுக மூடி அமர்ந்துக் கொண்டாள்.
 
கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட்டாள் தேன்மொழி அப்படியே தூக்க கலக்கத்தில் சந்தனபாண்டியனின் தோளில் சாய்ந்து விட்டாள். வளர்மதி திரும்பி பார்த்தாள். “தூங்கிட்டா மதினி” என்றவனோ அவளுக்கு கழுத்து வலிக்காமல் வாகாக தன் தோள் மீது சாய்த்துக்கொண்டான் சந்தனபாண்டியன். வளர்மதியோ புன்முறுவலுடன் தலையை திருப்பிக்கொண்டாள்.
 
வீடு வந்ததும் காரை நிறுத்தி இறங்கிய அருள் பாண்டியன் வளர்மதி மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் நந்தனை தூக்கிக்கொள்ள வளர்மதியும் இறங்கிவிட்டாள். தேன்மொழியோ கோவிலில் நடந்த கலாட்டாவின் களைப்பில் அசந்து உறங்கிக்கொண்டிருந்தாள். “ஏய் தேனு எழும்புடி வீடு வந்துருச்சு” என்று தன் அக்கா மகளின் கன்னத்தில் தட்டினான் சந்தனபாண்யடின்.
 
“ம்மா தூக்கம் வருது சும்மா போமா” என்று தான் வீட்டில் இருக்கும் ஞாபகத்தில் சந்தனபாண்டியனின் கையை தட்டிவிட்டு சந்தனபாண்டியன் மடியில் படுத்துவிட்டாள்.
 
“ம்ப்ச் சரியான தூங்கு மூஞ்சியா இருக்கா!” என்று சலித்துக் கொண்ட சந்தனபாண்டியனோ “ஏய் எழும்புடி” என்று தேன்மொழியை தூக்கி உட்காரவைத்து அவளது கன்னத்தில் வேகமாக தட்டினான்.
 
தனபாக்கியமோ “ஏய்யா சின்னவனே புள்ள தூங்கிட்டா அப்படியே அவளை தூக்கிட்டு வந்துரு” என்று பேத்தியின் தூக்கத்தை பற்றி தெரிந்தவராக பேசியவர் இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட்டார்.
 
“இவளுக்கு நல்ல செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க அப்பத்தா” என்று சலித்துக்கொண்டாலும் தனபாக்கியத்தின் சொல்லை தட்டாது தேன்மொழியை தூக்கிக்கொண்டான். 
 
தேன்மொழிக்கு சேலை கட்டி பழக்கம் இல்லை. கோவிலுக்கு போகிறோம் அதுவும் ஒப்புதாம்பூலம் நடக்கிறது என்று மகளை சேலை உடுத்தி வரச்சொல்லியிருந்தார் பொன்மணி. அவளுக்கு சேலை இடுப்பில் நிற்கவேயில்லை. எப்படியோ இழுத்து பிடித்து சொருகி வைத்திருந்தாள். சந்தனபாண்டியன் மடியில் படுத்திருந்தவளின் மாராப்பு விலகி எங்கோ சென்றிருந்தது. 
 
‘இவளையெல்லாம் யார் சேலை கட்டச்சொன்னது துணி விலகினது கூட தெரியாம பப்பரப்பேனு தூங்கிட்டு இருக்கா இவகழுத்துல வேற நாம தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கோம்’ என்று தலையில் அடித்துக்கொண்டு தேன்மொழியை திட்டினாலும் அவளின் மாராப்பு சேலையை சரிசெய்து இரு கைகளில் அள்ளிக்கொண்டான் அக்கா மகளை.
 
அப்போது கூட உறக்கம் கலையாமல் அவனது நெஞ்சிலேயே தலை சாய்த்துக்கொண்டாள். ‘சுத்தம் விளங்கிடும் போ’ என்று தலையை உலுக்கிக்கொண்ட சந்தனபாண்டியனோ வீட்டுக்குள் நுழைய “தம்பி ஒரு நிமிசம் நில்லுங்க ஆரத்தி எடுத்துடறேன்” என்று ஆரத்தி தட்டுடன் வந்தாள் வளர்மதி.
 
“இந்த கும்பகர்ணி தூங்குறாளே மதினி! அப்பத்தா வேற தூக்கம் கலையாம தூக்கிட்டு வானு சொல்லிட்டு போயிருக்கு” என்று பெரும்மூச்சு விட்டான்.
 
“ஆமா நான்தான் பேராண்டி என் பேத்தி தூக்கம் கலையக்கூடாதுனு சொன்னேன். தேன்மொழி குமரி ஆனாலும் இன்னும் குழந்தை போல தான் இருக்கா! நாம இப்படியிருக்கணும்னு சொல்லிக்கொடுக்கணும். இப்போ என்ன தூங்கும்போது ஆரத்தி எடுத்தா ஒண்ணும் தப்பில்லை நீ ஆரத்தியை எடு” என்றார் தனபாக்கியம் அதிகாரமாக.
 
தனபாக்கியத்தின் வெண்கல குரல் பேச்சு சத்தத்தில் தாமரை மொட்டு விரிவதை போல கண்திறந்தாள் தேன்மொழி. 
 
சந்தனபாண்டியனின் கைகளில் இருப்பதை பார்த்தவளுக்கு பூமியே தட்டாமாலை சுற்றியது.  துள்ளிக்குதித்து சந்தனபாண்யடின் கைகளிலிருந்து இறங்கினாள்.
 
“பார்த்து தேனு குட்டி” என்று தனபாக்கியம் தேன்மொழியின் கையை பிடித்துக்கொண்டார்.
 
வளர்மதியோ “தேன்மொழி சந்தனபாண்டி கூட சேர்ந்து நில்லு ஆரத்தி எடுக்கணும்” என்று புன்னகையுடன் கூறினாள். 
 
அப்போதுதான் தனக்கு கல்யாணம் ஆனதே நினைவுக்கு வந்தது தேன்மொழிக்கு. சந்தனபாண்டியனுடன் சேர்ந்து நிற்க இருவருக்கும் ஆரத்தி எடுத்து “வலது காலை எடுத்து வைச்சு வாமா” என்று சொல்லிவிட்டு ஆரத்தியை வெளியே ஊற்றச் சென்றாள் வளர்மதி.
 
சந்தன பாண்டியனுக்கு முன்னே வேகமாக வீட்டுக்குள் ஓடினாள் தேன்மொழி. அவளுக்கென்று தனபாக்கியம் வீட்டில் ஒரு தனி அறை இருக்கின்றது. அந்த அறைக்கு முன்னே போய் நின்றாள் கதவு பூட்டியிருக்க “அம்மாச்சி என்னோட ரூம் பூட்டியிருக்கு சாவி கொடுங்க எனக்கு தூக்கம் வருது” என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு தனபாக்கியம் முன்னே நின்றாள்.
 
ஆரத்தி ஊற்றி வந்த வளர்மதியோ “தேனு பூஜையறையில் விளக்கேத்தணும்மா! கொஞ்சநேரம் ஆகட்டும் சாப்பிட்டு தூங்க போகலாம்” என்றாள் மென்மையான குரலில்.
 
“அக்கா எனக்கு தூக்கம் வருது நீங்க போய் விளக்கு ஏத்துங்க!” என்று தலையை சாய்த்து சிணுங்கினாள்.
 
“ஏய் விளக்கு கூட ஏத்தமாட்டியா அப்படி என்ன பொட்ட புள்ளைக்கு தூக்கம் வேண்டி கிடங்கு” என்று சந்தனபாண்டியன் அதட்டல் போட்டுக்கொண்டு தேன்மொழியின் பக்கம் வந்து நின்றான். 
 
தேன்மொழிக்கோ தூக்கம் பஞ்சாய் பறந்து போனது. “ச.சரி ச.சரி விளக்கு ஏத்துறேன்” என்று பூஜையறைக்குள் சென்று விளக்கு ஏற்றி ‘ஆத்தா அங்காள பரமேஸ்வரி இந்த மீசை மாமன்கிட்டயிருந்து என்னை நீதான் காப்பாத்தணும். சும்மா பொசு பொசுக்குனு கோபப்பட்டா என் வீக் பாடி தாங்காது ஆத்தா’ என்று கடவுளிடம் தன் கணவனை பற்றி புகார் சொல்லிக்கொண்டிருந்தாள் தேன்மொழி.
 
அவள் பின்னாலேயே வந்து நின்ற சந்தனபாண்டியனோ அவள் பேசியதெல்லாம் கேட்டு அரும்பு புன்னகை பூத்தான். சாமி கும்பிட்டு திரும்பியவள் சந்தனப்பாண்டியனை கண்கள் பிதுங்கி வரும் போல பார்த்தவளுக்கு பேச்சு வராமல் உதடுகள் தந்தியடித்தது. 
 
“என்னடி ரொம்ப பயப்படுற மாதிரி நடிக்காத!” என்று அவளது தலையில் லேசாய் தட்டினான்.
 
“இ.இல்ல நிசமாலுமே உ.உங்களை கண்டா எ.எனக்கு பயம் மாமா அதுவும் இந்த கி.கிடா மீசை பார்த்தா பயமா இருக்கு! உங்க முன்னால நிற்கவே எனக்கு கால் நடுங்கும் ப்ளீஸ் என்னை என் ரூமுக்கு போக விடுங்களேன்” என்று கண்களால் கெஞ்சினாள் பெண்ணவள்.
 
“ஏய் சோம்பேறி போய் வீட்டு வேலையை பாரு! உன்னோட ரூம் கீ என்கிட்டதான் இருக்கு. இன்னிக்கு நைட்டுக்கு சமையல் பண்ண வளரு மதினிக்கு போய் உதவி செய் அப்போதான் உன் ரூம் கீ நான் தருவேன்” என்று தன் பாக்கெட்டில் இருக்கும் தேன்மொழியின் அறை சாவியை தொட்டு காட்ட “மாமா நீங்க ரொம்ப பண்ணுறீங்க நான் பாவம் தெரியுமா! செமஸ்டர் லீவ்வுல நிறைய அசைன்மெண்ட் கொடுத்திருந்தாங்க நேத்து நைட் ஒரு மணி வரை எழுதிட்டிருந்தேன் விடியற்காலையிலதான் தூங்கினேன் தெரியுமா” என்று அப்பாவி பெண்ணாய் தலையை ஆட்டி ஆட்டி பேசினாள்.
 
“அதெல்லாம் ஒருநாள் தூக்கம் கெட்டா ஒண்ணும் ஆகாது! போய் வேலையை செய்! நீ விடிய விடிய போன்ல கேம் விளையாடினியா! இல்ல கொரியன் சீரியல் பார்த்தியானு எனக்குதான் தெரியும்டி வேலை செய்ய சோம்பேறி பட்டு என்கிட்ட நடிக்கிறியா ஒழுங்கா போய் வேலையை பாரு” என்று தேன்மொழியின் முதுகில் கையை வைத்து தள்ளினான் சந்தனபாண்டியன்.
 
வெளியே தனபாக்கியம் கையை கட்டி நின்றார். எப்படியும் சந்தனபாண்டியன் தேன்மொழியை திட்டுவான் என்று தெரிந்துதான் பூஜையறை வாசலில் நின்றிருந்தார்.
 
தனபாக்கியத்தை பார்த்ததும் “அம்மாச்சி எனக்கு தூக்கம் வருது என்னோட ரூம் சாவி மாமாகிட்ட இருக்கு வாங்கி கொடுங்க” என்று கையை உதறி சிணுங்கினாள் சிறுபிள்ளை போல.
 
“ஏய்யா சின்னவனே நீ சாவியை கொடு அவ கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று பேத்திக்காக பேரனிடம் வக்காலத்து வாங்கி நின்றார்.
 
“அப்பத்தா அக்காகிட்டதான் இத்தனை நாள் வேலை செய்யாம ஏமாத்திக்கிட்டு இருந்தா! இப்பவாவது வேலை செய்து பழகட்டும் நான் சாவியை தரமாட்டேன்! எனக்கு புண்ணாக்கு, பருத்தி மூட்டை வாங்க போகணும் நான் கிளம்புறேன்” என்று பாக்கெட்டில் பைக் சாவியை தேடினான். அப்போதுதான் தன் பைக் தங்கபாண்டியன்கிட்ட இருக்கு என்று நினைவு வந்தவன் அண்ணன் வரட்டும் என்று ஹாலில் போட்டிருந்த பெரிய சோபாவில் உட்கார்ந்தான்.
 
தனபாக்கியமோ “நீ என்னோட அறையில போய் தூங்குகு தேனு கண்ணு இவன் எப்படி தடுக்குறான் பார்க்குறேன்” என்று சந்தனபாண்டியனை முறைத்தார்.
 
“உங்க பேத்திக்கு ரொம்பத்தான் செல்லம் கொடுக்குறீங்க இது நல்லதுக்கில்ல பார்த்துக்கோங்க” என்று இம்முறை தேன்மொழியை பார்த்து முறைத்தான் சந்தனபாண்யடின்.
 
வளர்மதி பாலும் பழமும் கொண்டு வந்தவள் “ரெண்டு பேரும் மெதுவா சண்டை போடுங்க இந்தாங்க தம்பி பாலை குடிச்சிட்டு தேனுக்கு கொடுங்க” என்றதும் “கொடுங்க மதினி” என்று பாலை வாங்கிக் பாதியை குடித்து விட்டு தேன்மொழியிடம் டம்ளரை நீட்டினான்.
 
‘அய்யே எச்சி பால் நான் குடிக்க மாட்டேன்’ என்று மனதில் நினைத்து உதடு சுளித்தாள்.
 
“டம்ளரை வாங்கு! எவ்வளவு நேரம் நீட்டுவது”  என்று சந்தனபாண்டியன் தேன்மொழியை அதட்டியதும்
 
பால் டம்ளரை வாங்கியவள் அவன் குடித்த பக்கம் விட்டு வேறு பக்கம் வாய் வைத்து ஒரு மிடறு குடித்து விட்டு “எனக்கு பால் வேணாம்” என்று வளர்மதியிடம் கொடுத்துவிட்டான்.
 
இப்போது வாழைப்பழத்தை சந்தனபாண்டியனிடம் கொடுக்க அவனோ பாதிப்பழத்தை வாயில் கடித்துவிட்டு தேன்மொழியிடம் நீட்ட ‘அச்சோ மீசைக்காரன் சரியான அதப்பு பிடிச்சவனா இருக்கடா’ என்று காலை நிலத்தில் உதறிக்கொண்டு வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டாள் தனபாக்கியம் மனது சங்கடப்படக்கூடாதென.
 
தங்கபாண்டியன் பைக் ஓட்டும் அழகை இரசித்துக்கொண்டே வந்தாள் ஆர்த்தி. “கோல்ட் நாமளும் ஒரு பைக் வாங்கலாமே! இப்படி ஊருக்கு வரும்போதெல்லாம் ஒரு லாங் டிராவல் செய்தா சூப்பரா இருக்கும்ல” என்று தங்கபாண்டியனின் தோளில் சாய்ந்தாள்.
 
“ஏன் டி இந்த பைக்குக்கு என்ன! சின்னவன் கிட்ட பைக் கொடுடானு கேட்டா உடனே கொடுத்துடுவான். நாமளே பண்டிகை திருவிழானுதான் வருவோம்! எதுக்கு வீண் செலவு!” என்று ஆர்த்தியின் வாயை அடைத்துவிட்டான் தங்கபாண்டியன்.
 
சிறிது நேரம் அமைதியாய் இருந்த ஆர்த்தியோ “இல்ல என்ன இருந்தாலும் இது உங்க தம்பி பைக். இப்ப அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு. அவரு பொண்டாட்டியை பைக்ல கூட்டிட்டு போகணும்னு நினைப்பாருல! நமக்குனு தனியா ஒரு பைக் வாங்கலாம்னு சொன்னேன்!” என்று வாய் ஜாலம் காட்டினாள்.
 
“அடுத்த முறை ஊருக்கு வரும் போது பார்க்கலாம்” என்று பேச்சை நிறுத்திவிட்டான் தங்கபாண்டியன்.
 
“ம்ம் கழுவுற மீனுல நழுவுற மீனு கோல்ட் நீங்க” என்று அவன் முதுகில் மெதுவாய் இடித்தாள்.
 
“தெரியுதுல வாய் மூடிக்கிட்டு வா! இப்ப பைக் தனியா வாங்கலாம்னு கேட்பேன் அப்புறம் தனி வீடு வாங்கலாம்னு சொல்லுவ! எங்களுக்குள்ள சண்டையை மூட்டி விட பார்க்குறியாடி! அது மட்டும் நடக்காது. நகை வேணும்னாலும் கேளு வாங்கித்தாரேன்! ஆதை விட்டு அண்ணன் தம்பி மூணு பேரையும் பிரிக்க பார்க்காதே” என்று ஆர்த்தியை திரும்பி முறைத்தான்.
 
“சரிப்பா வண்டியை ஓட்டுங்க ஏதோ ஒரு நப்பாசையில கேட்டுட்டேன் இனி எதுவும் கேட்கமாட்டேன் போதுமா” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள்.
 
நைட் சமாதானப்படுத்திக்கொள்ளலாம் என்று பைக்கை ஓட்டினான் தங்கபாண்டியன்.
 
பைக்கை நிறுத்தியதும் பைக்கிலிருந்து இறங்கியவள் விறு விறுவென வேகமாக வீட்டுக்குள் சென்றாள் ஆர்த்தி.
 
இந்த பொண்ணுங்களை எப்படிதான் சமாளிக்கிறதோ தெரியலைப்பா என்று தலையை உலுக்கிக்கொண்டான் தங்கபாண்டியன்.
 
ஆர்த்தி ஹாலில் நின்றிருந்தவர்களை பார்க்காமல் அவர்களது அறைக்குள் சென்றுவிட்டாள். தங்கபாண்டியனை பார்த்த சந்தனபாண்டியன் “அண்ணே பைக் சாவியை கொடு எனக்கு சந்தை வரை போயிட்டு வரணும்” என்று சாவியை கேட்டான்.
 
தனபாக்கியமோ “தாலி கட்டின கையோடு இன்னிக்கு வெளியில போக வேண்டாம் சின்னவனே! தங்கத்துக்கிட்ட உனக்கு என்ன தேவைப்படுதோ சொல்லு வாங்கிட்டு வந்துடுவான்” என்றவர் தேன்மொழியை தன் அறைக்கு போகச் சொல்லி ஜாடை காட்டியதும் சிட்டாக பறந்துவிட்டாள் தேன்மொழி. இன்னும் கொஞ்ச நேரத்தில் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல்.
 

4 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top