ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 10
 
 
நாகப்பனோ விடிந்ததும் தென்னரசுவை கூட்டிக்கொண்டு பொன்மணி வீட்டுக்கு வந்துவிட்டார். வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்த தேவியோ கடுகடுத்த முகத்தோடு நின்றிருக்கும் நாகப்பனை பார்த்ததும் அவரது முகத்தில் திகில் வந்தது.
 
‘இப்போ என்ன பிரச்சனை பண்ண வந்திருக்கானோ தெரியலை. நல்லாயிருந்த என் புருசனை நயவஞ்சகப் பேச்சால் மயக்கி என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போக நினைச்சாங்க! அது முடியாம போனதும்! இப்போதான் மனுசன் கொஞ்சம் அமைதியா இருக்காரு. இன்னும் என் தம்பிகளை பத்தி பேசி உசுப்பேத்தி விட வந்துட்டானுங்க’ என்று நாகப்பனை முறைத்து எழுந்த தேவி வந்தவர்களை வாங்க என்று கூட கூப்பிடாமல்  உள்ளேச் சென்றுவிட்டார்.
 
“நல்ல மரியாதை கொடுக்குறாப்பா இந்த அம்மா! வீட்டுக்குள்ள போவோமா!” என்று தயங்கிக்கேட்டான் தென்னரசு.
 
“உனக்கு தேன்மொழி பொண்டாட்டியா வேணும்னா! இந்த அவமானத்தையெல்லாம் தாங்கணும்! வா உள்ள போகலாம்” என்று தோளில் கிடந்த துண்டை சரி செய்துக் கொண்டு உள்ளேச் சென்றார் நாகப்பன். அவர் பின்னே வாள் பிடித்துச் சென்றான் தென்னரசு.
 
காபியை குடித்துக்கொண்டிருந்தவருக்கு நேற்று நடந்த நிகழ்வுகள் கண்முன்னே வந்தது. தான் அவமானப்பட்டது திரும்பி திரும்ப அவர் மனதை வாள் கொண்டு அறுத்துக்கொண்டிருந்தது. நமக்கே இப்படி இருக்கிறதே நாகப்பன் குடும்பத்துக்கு பெருத்த அவமானம் தானே! எல்லாம் அந்த பாண்டியன் குடும்பத்தாலதான் என்று உள்ளம் கொதிக்க கோபம் கொண்டிருந்தார்.
 
“பொன்மணி உள்ளே வரலாமா?” என்று தேன் ஒழுகும் குரலில் நஞ்சை நெஞ்சுக்குள் வைத்துக்கொண்டு உதட்டில் புன்னகையோடு நடந்து வந்தார் நாகப்பன்.
 
“வா.வாங்க நாகப்பன்” என்று எழுந்து நின்ற பொன்மணியோ “உட்காருங்க” என்று கூறியவர் “நானே உங்களை நேர்ல பார்த்து மன்னிப்பு கேட்கணும்னு இருந்தேன்! நீங்களே வந்துட்டீங்க!” என்றவர்  “நான் பெத்தது என்னை பழியெடுத்துடுச்சு! நான் வளர்த்த அந்த பாண்டியன் என் நெஞ்சுல குத்திட்டான்! என் குடும்பத்தால உங்க குடும்பம் ஊர் முன்னால தலைகுனிய வேண்டியதா போச்சு! என்னை மன்னிச்சுடுங்க” என்று கை கூப்பினார் பொன்மணி.
 
நாகப்பனோ “நேத்து நானும் கொஞ்சம் கோபமாக பேசிட்டேன்! உங்க முகத்துக்காகத்தான் பொன்மணி உன் மாப்பிள்ளைகளை சும்மா விட்டேன் இல்லைனா! அவனுங்களை அங்கேயே வெட்டிப்போட்டு ஜெயிலுக்கு போயிருப்பான் என் மகன்!” என்றார் தென்னரசுவை பார்த்து.
 
சமையல்கட்டுக்குள் நின்று நாகப்பன் பேசியதை கேட்ட தேவியோ “கிழிச்சீங்கடா என் தம்பிங்க முடியை கூட பிடுங்க முடியாது உங்களால! வெட்டி போடுவாங்களாம் வெட்டி வாய் வேணா வெட்டியா அடிக்க முடியும் உங்களால!” என்று சிரித்துக்கொண்டார் தேவி.
 
“இப்போ என்ன பண்ணலாம்னு சொல்லுங்க நாகப்பன் நான் அதை செய்யுறேன்! என் பொண்ணு செய்த தப்புக்கு நான் பரிகாரம் பண்ணுறேன்”  என்றார் நாகப்பனின் திட்டம் தெரியாமல்.
 
“அ.அது” என்று வீட்டை ஒரு முறை பார்த்து விட்டு பொன்மணி காதுக்கு பக்கம் சென்று
“உங்க கடைசி மாப்பிள்ளை அதான் தேன்மொழி கழுத்துல தாலி கட்டினானே  சந்தன பாண்டியன் அவனை பக்கத்து ஊருக்காரவங்க ஒரு தட்டு தட்டி வைக்கலாம்னு சொல்றாங்க! இப்போ சந்தன பாண்டியன் உன் மருமகன் வேற! பக்கத்து ஊர்லயும் போய் வம்பு இழுந்திருப்பான் போல! அவனை கொஞ்சமா பயம் காட்டணும்னு பேசிக்கிட்டாங்களாம்! எனக்கு இந்த செய்தி காத்து வாக்குல வந்துச்சு சொல்லிட்டு போகலாம்னு வந்தோம். ஏன்னா நாங்க யாருக்கும் துரோகம் செய்திட மாட்டோம்” என்று குள்ளநரியாக பேசினார் நாகப்பன் விஷம் கக்கி வைத்தார் நாகப்பாம்பாய்.
 
பொன்மணியோ “நான் பொண்ணே இல்லைனு சொல்லுறேன்! நீங்க என்ன மாப்பிள்ளை அது இதுனு சொல்லிட்டுருக்கீங்க! எனக்கு எவன் எக்கேடு கெட்டு போனாலும் கவலையில்லை” என்றார் பொன்மணி ஆத்திரத்தில்.
 
“சரி பொன்மணி நாங்க எதையும் மனசுல வச்சுக்கலைனு சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்! என்ன தேன்மொழி எங்க வீட்டு மருமகள்னு ரொம்ப ஆசையை வளர்த்து மனக்கோட்டை கட்டினோம்! இப்ப நிராசையா போயிடுச்சு! என் மகனுக்குததான் ரொம்ப வருத்தம்” என்று உச்சு கொட்டி பேசினார் நாகப்பன் பொன்மணியின் முகத்தை பார்த்துக்கொண்டே 
 
“நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு முடிவு பண்ணியிருக்கே நாகப்பன் என்னால ஒண்ணும் செய்ய முடியாம கையலாகத்தனமா இருக்கேன்! ஆனா தனபாக்கியம் குடும்பத்தை நான் வாழ்நாளில் ஏத்துக்கவே மாட்டேன். அவங்களுக்கும் எனக்குமான உறவு நேத்தோடு முறிஞ்சு போச்சு” என்று சத்தமாக பேசிக்கொண்டிருக்க தேவியோ நெஞ்சில் கையை வைத்தார். 
 
அதே நேரம் “அக்கா மாமா” என்று வெளியே நின்று குரல் கொடுத்தனர் அருள் பாண்டியனும் தங்கபாண்டியனும்.
 
“யாரோட குரல் கேட்கக்கூடாதுனு இருந்தேனோ அவனுங்க குரல் என் வீட்டு வாசல் கேட்குது இங்க எதுக்கு வந்தானுங்க?” என்று வேட்டியை வரிஞ்சு கட்டிக்கொண்டு தேங்காய் உடைக்க வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு ஆவேசமாய் வெளியேச் சென்றார் பொன்மணி.
 
தேவியோ தம்பிகளின் குரலை கேட்டு எட்டிப் பார்த்தவர் கணவன் கோபமாய் கையில வேறு அரிவாளை எடுத்துக்கொண்டு போவதையும பார்த்தவர் வேகமாய் ஓடினார்.
 
நாகப்பனோ “வாடா மகனே! மாமன் மச்சான் சண்டையை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம் நம்மள அவமான படுத்துனவங்களை சும்மா விடுவேனா” என்று சிரித்துக்கொண்டு வெளியேச் சென்றார்.
 
அருள்பாண்டியனோ கையில் தாம்பூலத்துடன் நின்றிருந்தான். “எதுக்குடா தாம்பூலத்தட்டுடன் வந்திருக்கீங்க அண்ணன் தம்பி ரெண்டு பேரும்!” என்று முகத்தில் ஆத்திரம் கொப்பளிக்க தாம்பூலத் தட்டை கையால் தட்டிவிட்டு “வெளியே போங்கடா துரோகிகளா” என்று அருள் பாண்டியன் நெஞ்சில் கையை வைத்து தள்ளினார் பொன்மணி.  
 
அருள்பாண்டியனோ சாதாரணமாக நின்றிருந்தான்! கொஞ்ச சறுக்கி பக்கம் இருந்த தூணில் இடித்துக்கொண்டான். இரும்பு தூணாக இருக்க தோள்பட்டையில் லேசாய் வலி வந்ததுதான். தங்கபாண்டியனோ “மாமா” என்று அருள் பாண்டியன் முன்னே வந்து நின்றான் பொன்மணியை முறைத்துக்கொண்டு.
 
“தங்கம் தள்ளி நில்லு நம்ம மாமாதானே தள்ளிவிட்டிச்சு! நீ வாயை திறக்க கூடாது போய் அந்த பக்கம் நில்லு” என்று ஆர்டர் போட்டதும் அண்ணனின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து தள்ளி நின்றான் தங்கபாண்டியன். 
 
தென்னரசுவோ தங்கபாண்டியனை பார்த்து எள்ளலாக சிரித்தான்.
 
“வெளியோ வாடா” என்று கண்ணைக்காட்டி நாக்கை மடித்து மிரட்டினான் பாண்டியன்.
 
“போடா” என்றவனோ சண்டையில் முகத்தை நுழைத்துக்கொண்டான் தென்னரசு.
 
“மாமா உங்க கோபம் நியாயமானது. சந்தனபாண்டியனை நாலு அடி உங்க கோபம் தீர அடிச்சிடுங்க! ஏன் எங்களையும் கூட உங்களுக்கு அடிக்க உரிமை இருக்கு! ஒரு வார்த்தை ஏன்னு கேட்கமாட்டோம். மன்னிப்பு கேட்டு அண்ணன் தம்பி மூணுபேரும் உங்க காலுல விழறோம் மாமா! திருவிழா முடிஞ்சதும் சந்தனபாண்டியனுக்கும் தேன்மொழிக்கும் ரிசப்சன் வச்சிக்கலாம்னு அப்பத்தா சொல்லிட்டு வரச்சொன்னாங்க. அதான் மரியாதை செய்து சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்! எங்க முறையை நாங்க எப்பவும் மறக்கமாட்டோம் மாமா” என்றான் பணிவாக.
 
“என்னங்க தம்பிங்க இவ்வளவு தூரம் இறங்கி வந்து மன்னிப்பு கேட்குறாங்க மன்னிச்சிடுங்க!” என்று கணவனின் கையை பிடித்தார் தேவி.
 
“உள்ள போடி! முதலில் நான் பேசிட்டிருக்கும் போது இடையில பேசினா அடி வெளுத்திடுவேன் பார்த்துக்கோ” என்று தேவியின் கையை தட்டிவிட்டார்.
 
“மாமா அக்காவை எதுக்கு அதட்டல் போடுறீங்க?” என்று தங்கபாண்டியன் மீண்டும் கோபம் கொண்டு பேச “டேய் என் பொண்டாட்டி நான் அடிப்பேன் என்ன வேணா செய்வேன் நீ யாருடா அதை கேட்க! இப்ப நீங்க வெளியில போகலைனா கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுவேன்” என்று அருள் பாண்டியன் கழுத்தில் கையை வைக்க போனார் பொன்மணி.
 
தேவியோ தம்பிகள் அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்பதை காண முடியாமல் “டேய் அருளு, தங்கம் இங்கிருந்து போயிருங்கடா! உன் மாமனுக்கு மச பிடிச்சிருச்சு, கேட்பார் பேச்சை கேட்டு ஆடுறாரு! உங்க தராதரத்தை இங்க நின்று இழக்க வேண்டாம்! இந்த அக்கா உங்களை கையெடுத்து கும்பிடுறேன் இங்கிருந்து கிளம்பிடுங்க” என்று அழுகையுடன் கைகூப்பினார் தேவி.
 
அருள் பாண்டியனோ “அக்கா நீ அழாத நாங்க கிளம்பிடறோம்” என்றவனுக்கு கண்ணில் நீர் கோர்த்தது. “தங்கம் வா போகலாம். அக்கா அழுகறது என்னால தாங்க முடியலை” என்று தங்கபாண்டியனுடன் மனம் வெதும்பி வெளியே வந்தான் அருள் பாண்டியன். 
 
இப்படி நடக்கும் என்று எதிர்பார்த்து சென்றனர்தான் அண்ணனும் தம்பியும். 
 
அருள் பாண்டியன் காரில் ஏறியதும் “தம்பி நீ காரை ஓட்டு எனக்கு தலை வலிக்குது” நெற்றியை பிடித்துக்கொண்டு கையில் அடிப்பட்டதை மறைத்து பேசினான் அருள்பாண்டியன்.
 
“என்ன அண்ணா கை ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிட்டல் போய் ஒரு டிடி போட்டுக்கலாம்ணே! நீ உன் வலியை மறைச்சா இந்த தம்பியால கண்டு பிடிக்க முடியாதா!” என்றான் நா தழுதழுக்க
 
“தம்பி நம்ம அக்காவுக்காகவும் தேன்மொழிக்காகவும் எந்த அடியை வேணாலும் வாங்கிக்கலாம்டா! தாய்மாமன் உறவுனா சும்மாவா. வீட்ல போய் எதுவும் சொல்லிட்டிருக்காத! சும்மா அடிப்பட்ட காயம் வலிதான் இருக்கு! தைலம் தடவினா சரியா போய்டும் நீ காரை எடு” என்று காரில் ஏறி உட்கார்ந்தான் அருள்பாண்டியன்.
 
சந்தனபாண்டியன் தேன்மொழியுடன் நகைக்கடைக்குள் சென்றதும நகைக்கடை உரிமையாளர் எழுந்து நின்று “வாங்க தம்பி அப்பத்தா நல்லாயிருக்காங்களா?” என்று கேட்டு வணக்கம் வைத்தார்.
 
“ம்ம் நல்லாயிருக்காங்க அண்ணா! என் வொய்ப்க்கு நகை எடுக்கணும் இப்ப வந்த லேட்டஸ்ட் டிசைன் நகைகளை காட்டுங்க” என்றான் நெற்றியை தடவிய படி
 
“வாங்க தம்பி புது டிசைன் செயின்கள் எல்லாம் வந்திருக்கு” என்று மாடிக்கு கூட்டிச் சென்றனர். தேன்மொழியோ கடையில் உள்ள நகைகளை கண்களை எல்லாம் அகலமாக விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அடுக்கி வைத்திருந்த நெக்லஸ் ஒன்று பிடித்து விட நெக்லஸ் அருகே சென்று நின்றுக் கொண்டாள்.
 
“இந்த டிசைன்ல நெக்லஸ் வேணுமா மேடம்! இது சாம்பிள்தான்! இதுபோல வேணும்னா ரெண்டு நாளுல செய்து கொடுத்திடுவோம்” என்றாள் அங்கே வேலை செய்யும் பெண் புன்னகையுடன்.
 
“இல்ல சும்மா பார்த்தேன்” என்ற தேன்மொழியோ சந்தனபாண்டியன் பக்கம் போய் நின்றுக் கொண்டாள்.
 
“அந்த நெக்லஸ் எத்தனை பவுன் வரும்?” என்றான் தங்கபாண்டியன் புருவம் உயர்த்தி
 
“10 பவுன் வரும் சார்” என்றதும் “அப்போ அதே போல நெக்லஸ் செய்துடுங்க! இன்னும் ப்ளைனா ஒரு செட் நகை, ஸ்டோன் வச்ச நகைகள் ஒரு செட் வேணும்! மாடல்ஸ் காட்டுங்க” என்றபடி மாடி ஏறினான் சந்தனபாண்டியன்.
 
தேன்மொழியோ எங்கே விழுந்து விடுவோமோவென்று பாவாடையை கொஞ்சமாய் தூக்கி பிடித்து மாடியேறினாள்.
 
“இன்னும் வராம என்ன பண்ணுறா!” என்று திரும்பி பார்க்க பாவாடையை கட்டிக்கொண்டு நடக்க முடியாமல் தடுமாறி ஏறி வந்தவளை பார்த்தவனுக்கு சங்கடமாகி போனது ‘ச்சே  தேன்மொழி ப்ரஸ்ட் போட்டிருந்தா ஸ்கர்ட்டையே போட்டு கூட்டிட்டு வந்திருக்கலாம் இப்போ சிரமப்படுறா’ என்று கரிசனம் கொண்டான் அக்காள் மகள் மீது.
 
தேன்மொழி மேல வந்ததும் “வா நகையை காட்டுவாங்க உனக்கு பிடிச்சது எல்லாம் எடுத்து வைய்யு” என்று அவள் கை பற்றி இழுத்து உட்கார வைத்தான். அவளுக்கோ கையை பிடித்ததும் கூச்சம் வந்து நெளிந்தாள். 
 
சந்தனபாண்டியனோ எதையும் கண்டுக் கொள்ளாமல் அவள் கையை பிடித்தவாறே இந்த ஆரம் நல்லாயிருக்கு போட்டு பார்க்கலாமென்று அவளது கழுத்தில் போட்டு பார்த்தான். அவனது விரல்கள் தன் தனங்களில் பட்டு மீள்வது அவளுக்கு மூச்சே விட முடியவில்லை. 
 
“ம்ம் பிடிச்சிருக்கு” என்று மெல்லிய குரலில் பேசியவள் தலையை ஆட்டினாள். ஜிமிக்கி, தோடு, மாட்டல், முதல் காலுக்கு மெட்டியை காட்டுங்க என்றதும் சந்தன பாண்டியன் கேட்ட அனைத்தையும் எடுத்து வைத்தனர். முத்து வைத்த மெட்டி, சைடு மெட்டி, சலங்கை வைத்த கொலுசு என சகலமும் வாங்கிக்கொடுத்தான் சந்தனபாண்டியன் தேன்மொழிக்கு. 
 
நகைக்கடை பெண்களோ “இந்த பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் போல இந்த அண்ணா எப்படி ஒவ்வொரு நகையும் டிசைன் பார்த்து பார்த்து எடுக்குறாங்க” என்று ஆச்சர்யமாய் பார்த்திருந்தனர்.
 
நகையெல்லாம் வாங்கி பேக் செய்து அவன் தொடுதலில் மயங்கியிருந்த தேன்மொழியின் தோளை தொட்டு “போலாமா?” என்றான் சந்தனபாண்டியன்.
 
“ஹான் போலாம் மாமா” என்றாள் மெல்லிய குரலில்.
 
இருவரும் கடையை விட்டு வெளியே வந்ததும் பக்கத்திலேயே பட்டு ஷோரூம் இருக்க தேன்மொழியின் கையை பிடித்தவன் புடவை கடைக்குச் சென்றான். ‘இப்போ யாருக்கு புடவை எடுக்குறோம் அம்மாச்சி வளரு அக்கா கூட தானே புடவை எடுக்க போகச் சொன்னாங்க! இவரு ஏன் தனியா என்னை கூட்டிட்டு போறாரு! இவருக்கு என்ன புடவை எடுக்கத்தெரியும்’ என்று இதழ் சுளித்து பொம்மை போல சென்றாள்  சந்தனபாண்டியன் பின்னே.
 
“1 லட்சத்துல பட்டுப்புடவை எடுத்துப்போடுங்க” என்றான் சந்தனபாண்டியன் மீசையை முறுக்கியபடி  
 
“1 லட்சமா எனக்கு அவ்வளவு விலையில வேண்டாம் மாமா! ஒரு பத்தாயிரத்துல புடவை எடுங்க! ஒருநாள் கட்டுறதுக்கு எதுக்கு செலவு செய்யணும்” என்றாள் சந்தனபாண்டியனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்லிய குரலில்.
 
“சுந்தரபாண்டியன் குடும்பத்து மருமகளுக்கு பத்தாயிரத்துலயா புடவை எடுப்பேன். வாயை சும்மா வச்சிக்கிட்டு அமைதியா நான் எடுத்துக்கொடுக்குற புடவையை கட்டிக்கோ சந்தனபாண்டியன் பொண்டாட்டினா சும்மாவா!” புருவம் தூக்கி பார்த்தவன் அரக்கு பச்சை நிறத்தில் தங்க சரிகை போட்ட பட்டுப்புடவையை ஐந்தே நிமிடத்தில் எடுத்துவிட்டான். புடவையை தேன்மொழியின் மேல் சட்டென்று வைத்துப்பார்த்தான். கொஞ்ச நேரத்துக்கு ஒருமுறை ஷாக் கொடுத்துக்கொண்டிருந்தான் தேன்மொழிக்கு சந்தனபாண்டியன்.
 
‘அச்சோ இந்த மீசையோட பாசம் என்னால தாங்க முடியலைப்பா!’ என்று மனதில் நினைத்தாலும் சந்தனபாண்டியன் எடுத்த புடவை அவளுக்கு ரொம்ப பிடித்திருந்தது. இன்னும் ஐந்தாறு புடவைகளை எடுத்தான். எதுக்கு இத்தனை புடவை எடுக்குறாரு என்று மலைத்துப்போய் பார்த்திருந்தாள் தேன்மொழி.
 
இதுவரை பட்டுப்புடவை அதிகம் எடுத்ததில்லை தேன்மொழிக்கு பொன்மணி. அவளுக்கு மாடல் ட்ரஸ்தான் எடுத்துக்கொடுப்பார். கல்யாணம் ரெடியானால் எடுத்துக்கொடுக்கலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் போனாள் தேன்மொழி. ஒரு வழியாக பட்டுப்புடவையை எடுத்து முடித்து வெளியே வந்தவர்கள் காருக்குள் நகைகளையும் பட்டுப்புடவையையும் வைத்து விட்டு காருக்குள் ஏறினார்கள். 
 
மதியத்திற்கு மேல் ஆகிவிட தேன்மொழிக்கோ பசி எடுத்து விட்டது. சந்தனபாண்டியன் மதியம் சாப்பிடாமல் கூட வேலை செய்திருக்கிறான். அவனுக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் தேன்மொழியின் முகத்தை வைத்து அவளுக்கு பசிக்கிறதென தெரிந்தவன் ஹோட்டல் முன்னே காரை நிறுத்திவிட்டு நகைகளை வைத்து விட்டு ஹோட்டலுக்கு போவது உசிதம் இல்லையென்று ஹோட்டல் உரிமையாளரின் போன் நம்பருக்கு போன் பேசியபடியே டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி உணவு பார்சலை காருக்கு கொண்டு வரச் சொன்னான் சந்தபாண்டியன்.
 
தேன்மொழியோ ‘ஹோட்டல் முன்னால நிறுத்திட்டு போன்ல போன்ல யார்கிட்ட பேசிட்டிருக்காரோ இந்த மாமா அச்சோ பசியில என் பெருங்குடல் சிறுகுடலை தின்னுடும் போலயே’ என்று வயிற்றை தடவிக்கொண்டிருந்தாள்.
 
சந்தனபாண்டியன் போன் பேசி முடித்தது அடுத்து இன்னொரு போன் கால் வர போன் பேச ஆரம்பித்தான் வயிற்றை தடவிக்கொண்டே பசியோடு கண்ணை மூடி சீட்டில் தலை சாய்த்தவள் அடுத்த நிமிடத்தில் உறங்கிவிட்டாள். அக்கா மகள் பசி தாங்கமாட்டாள் என்பதை அறியாமல் இருப்பானா தங்க பாண்டியன் சிறுவயது முதல் அவளை பார்ப்பவன் ஆயிற்று. ஆனால் தேன்மொழிதான் தங்கபாண்டியனை பார்த்தால் காத தூரம் ஓடிப்போவாள். 
 
போன் பேசி முடித்து காருக்குள் வந்தவன் அவள் தூங்குவதை பார்த்து ‘ம்ம் எப்படித்தான் இவளுக்கு மட்டும் எங்க இருந்தாலும் எந்த நேரத்திலும் தூக்கம் வருதோ தெரியலையப்பா!’ தலையில் அடித்துக்கொண்டு காருக்குள் உட்கார்ந்தவன் அவள் முகத்தை பார்க்க பச்ச குழந்தைக்கு பசி வந்தால் எப்படி முகத்தை சுருக்கி வைத்திருக்குமோ அதுபோல இருந்தது தேன்மொழியின் முகம். அவளது முகத்தை சிறிது நேரம் பார்த்திருந்தான். தூக்கத்தில் கீழே சரிந்து விழப்போனவளை “ஏய் விழுந்துடாதடி” என்றவன் அப்படியே தன் தோளில் சாய்த்துக்கொண்டான். அவளோ சும்மா ஜம்மென்று ஜாலியாய் சந்தனபாண்டியன் தோளில் சாய்ந்துக் கொண்டு உறங்கினாள். 
 
உணவு பார்சலுடன் வந்த கடையின் ஆள் சந்தனபாண்டியன் காரின் கண்ணாடியை தட்டினான். தேன்மொழியின் தூக்கம் களையாதவாறு ஒரு கையால் அவளை அணைத்துக்கொண்டு கார் கதவை மெதுவாய் திறந்து பார்சலை வாங்கிக்கொண்டு “பணம் உங்க முதலாளிக்கு அனுப்பிடுவேன்” என்று கூறியதும் அவன் சென்று விட பார்சலை காருக்குள் வைத்துவிட்டு “தேனு எழும்புடி” என்று அவளது கன்னத்தில் மெதுவாய் தட்டினான். அவளோ தூக்கத்தில் “போம்மா இன்னும் தூக்கம் வருது” என்று சந்தனபாண்டியன் மடியில் படுத்துவிட்டாள். 
 
“அடியேய் கும்பகர்ணனுக்கு தங்கச்சி எழும்புடி” என்று அவளது காதோரம் கத்தினான்.
 
மெதுவாய் கண்திறந்து பார்த்தவளுக்கு தங்கபாண்டியன் மடியில் படுத்திருப்பது அதிர்ச்சியாய் ஆனது. பதறி எழுந்தவள் “சா.சாரி மா.மாமா தோளில் தூங்கிட்டேன்” என்று கண்ணைத் தேய்த்தாள்.
 
“இப்படித்தான் போன இடமெல்லாம் தூங்குவியா. இப்படி தூங்கினா எவனாவது என்ன பண்ணினாலும் உனக்கு தெரியாது போலயேடி வாய்ல ஈ போறது தெரியாம தூங்குறடி நீ!” என்று கடிந்துக் கொண்டான்.
 
“ம்ம் நான் என் மனசுல எதையும் போட்டு வச்சிக்கமாட்டேன். கண்ணை மூடினா தூங்கிடுவேன் நீங்க இருக்க தைரியத்துலதான் தூங்கிட்டேன். காலேஜ் போகும்போது பஸ்ல வரும்போது தூங்க மாட்டேன்! தூக்கத்தை கன்ட்ரோல் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருப்பேன்! வீட்டுக்கு போனதும் உடனே தூங்கிடுவேன் மாமா” என்றாள் கண்ணை உருட்டி ஏதோ கதை சொல்பவள் போல
 
சந்தனபாண்டியனுக்கோ அவள் பேசிய விதத்தில் சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் சிரிப்பை அடக்கிக்கொண்டு முகத்தை இறுக்கமாய் வைத்தவன் “சரி சிக்கன் பிரியாணி வாங்கி வச்சிருக்கேன் சாப்பிடு” என்று சொல்லிக்கூட முடிக்கவில்லை. 
 
“பிரியாணியா” என்றவளோ பார்சல் இருந்த இடத்தை பார்த்தவுடன் அவளுக்கு நாவில் எச்சில் ஊறியது. உடனே பார்சலை எடுத்தால் எதாவது திட்டுவானோ என்று தங்கபாண்டியன் முகத்தை பார்த்தாள் தேன்மொழி.
 
“எடுத்து சாப்பிடு அப்பத்தா நம்மளை காணோம்னு போன் போட்டாங்க! நீ தூங்குற வந்துடுறோம்னு சொல்லியிருக்கேன் சீக்கிரம் சாப்பிட்டு முடி” என்றவனுக்கு மீண்டும் போன் வந்தது. “சாப்பிடு வரேன்” என்று போனை எடுத்துக்கொண்டு மீண்டும் காருக்கு வெளியேச் சென்றான்.
 
பிரியாணி வாசனை மூக்கை துளைக்குது என்று மூச்சை இழுத்து பிரியாணி வாசத்தை நுகர்ந்தவள் பார்சலை பிரித்து சாப்பிட ஆரம்பித்தாள். ஒரு பார்சல் தான் வாங்கியிருந்தான் தங்கபாண்யடின். அவன் அதிகம் வெளியே சாப்பிட மாட்டான். தேன்மொழிக்காக பிரியாணி வாங்கியிருந்தான் கடையில். பாதி உணவு சாப்பிட்ட பின் அச்சோ மாமாவை சாப்பிட கூப்பிடாம விட்டோமோ என்று உச்சுக் கொட்டினாள். எச்சில் சாப்பாடு சாப்பிடுமா என்ன! சந்தனபாண்டியனை பார்க்க அவனோ கார் கதவை திறந்து வந்தவன் “சாப்பிட்டியா கை கழுவு” என்று தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.
 
“சாரி மாமா உங்களை நான் சாப்பிட கூப்பிடலை பசியில மறந்துட்டேன்” என்றாள் தயங்கிக்கொண்டு
 
சீக்கிரமா கேட்டுட்ட போ என்று மனதில் நினைத்தவன் “பரவாயில்ல மீதியிருக்க பிரியாணியை சாப்பிட்டு கையை கழுவு” என்று தண்ணீர் பாட்டிலை அவள் பக்கம் வைத்தான்.
 
“மாமா என்னால சாப்பிட முடியலை” என்றதும் “சாப்பாட்டை வீண் செய்தா எனக்கு பிடிக்காது தேன்மொழி” என்று அதட்டியவனோ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அவளருகே உட்கார்ந்து அவள் சாப்பிட்ட இலையில் இருந்த பிரியாணியை எடுத்து சாப்பிட “அய்யே எச்சி சாப்பாடு” என்றாள் முகம் சுளித்து.
 
“அப்படியா!  நீ என்னோட பொண்டாட்டிதானே உன் எச்சில் சாப்பாடு சாப்பிடலாம்” என்று மீதியிருந்த சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து இலையை மடித்து நிமிர அவளோ இப்போ தனியா இருக்கோம் மாமா முத்தம் கொடுத்திருச்சுனா என்ன பண்றது என தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு வேகமாய் கீழே இறங்கினாள். 
 
அவளுக்கு பயம் வந்துவிட்டது. அவள் எதற்காக ஓடுகிறாள் என்று தெரியாமல் போய்விடுமா தங்கபாண்டியனுக்கு. கை கழுவ வெளியே வந்தவன் “எதுக்குடி இவ்ளோ வேகமா இறங்கி வர. நான் உன்னை ரேப் பண்ண பார்த்தது போல பயந்து கீழ இறங்கிப்போற என் முகத்தையே பார்க்காம கை கழுவ தண்ணி ஊத்து” என்று மீண்டும் மிரட்டினான்.
 
“இ.இதோ ஊத்துறேன் மாமா” என்று தங்கபாண்டியனுக்கு கைகழுவ தண்ணீரை ஊற்றிவிடடு தன் மனதில் தோன்றியதை கேட்கலாமா வேண்டாமா என்று மனதில் பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருந்தாள்.
 
கையை கழுவி முடித்து “என்னடி கனவு காணுற காருக்குள்ள வந்து ஏறு” என்று அவளது முந்தானையில் வாய் துடைத்து காருக்குள் ஏறினான்.
 
தேன்மொழியோ மந்திரித்து விட்டவள் போல அவன் பின்னாடியே காரில் ஏறினாள். கேட்கலாமா வேண்டாமா! என்று யோசித்தவள் கார் ஓட்டிக்கொண்டிருந்த தங்க பாண்டியனை நொடிக்கொரு முறை திரும்பி திரும்பி பார்த்து பேசினால் திட்டிவிடுவானோ என்று பயத்தில் இருந்தவளை “என்ன கேட்கணுமோ கேளு நான் திட்டவெல்லாம் மாட்டேன்” என்றான் அவளின் மனதை அறிந்தவனாக.
 
“அ.அது வந்து நீ.நீங்க அந்த மல்லிகா டீச்சரை லவ் பண்ணீங்கனு எனக்கு தெரியும். அவங்க உங்க பைக்ல உட்கார்ந்து போறதையும் பார்த்திருக்கேன். ஏன் தென்னந்தோப்புக்குள்ள நீங்க பேசினதை நான் கேட்டிருக்கேன்” என்றதும் வெடுக்கென்று அவளை திரும்பி பார்த்தான்.
 
“அ.அது நான் கிணத்துல குளிக்க வந்தப்ப நீங்க ரெண்டு பேரும் பேசினதை கேட்டேன் அவ்ளோதான்”  என்றாள் எச்சிலை விழுங்கிக்கொண்டு.
 
“உன் கழுத்துல தாலிகட்டியாச்சு! எவளும் என் மனசுல இல்ல. இப்போ நீ மட்டும்தான் இங்க இருக்க போதுமா” என்று தன் நெஞ்சதை தொட்டுக்காட்டினான்.
 
சந்தனபாண்டியன் மனதில் தான் இருக்கிறேன் என்று சொன்னதும் பனியில் நனைந்த ரோஜா போல குளிர்ந்து போனாள் தேன்மொழி. “ஏன் மல்லிகா டீச்சர் உங்களை ஏமாத்திட்டாங்களா?” என்று விசனப்பட்டவள் போல கன்னத்தில் கை கொடுத்து கேட்டாள் தேன்மொழி.
 
“நீ பேசாம வரியா இல்ல காரை விட்டு இறக்கிவிடட்டுமா!” என்று பெரிய அதட்டல் போட்டதும் கப்பென்று வாயை பொத்திக்கொண்டு அமர்ந்தாள். பின்னே அவன் யாரை மறக்க நினைக்கிறானோ அவளை பற்றியே தோண்டி துருவிக்கேட்டால் அவனுக்கு கோபம் வரும்தானே. 
 
அவள் அமைதி அவன் நெஞ்சை பிசைய “நேரம் வரும்போது சொல்லுறேன்டி இப்ப நீ தூங்க ஆரம்பிக்கலாம்” என்றவனோ காரை ஓட்டுவதில் கவனமானான்.
 
“ம்க்கும் எனக்கு தூங்க தெரியாதா” என்று இதழை சுளித்து விட்டு கண்ணை மூடியவள் அப்படியே நித்திரைக்கு போய்விட்டாள்.
 
தேன்மொழி தூங்கியதும் ஒரு நிமிடம் மல்லிகாவின் நினைவு வந்து போனது! ‘ச்சே ச்சே என் தேன்மொழிதான் இந்த ஜென்மத்துல காதலி பொண்டாட்டி எல்லாம் அவள் படிப்பு முடிச்சதும் சேர்ந்து வாழ ஆரம்பிப்போம்’ என்று நினைத்தவாறு காரைஓட்டினான். அவளிடம் தன் காதலை சொல்லி இருந்தால் பின்னால் வரும் பிரச்சனைகளை வராமல் தடுத்திருக்கலாம் சந்தனபாண்டியன்.
 
சைடு கண்ணாடியில் இரண்டு கார்கள் வேகமாக வருவதை கண்டவன் கொஞ்சம் உஷாராக இருந்தான். ஒரு கார் அவன் காரை முந்திக்கொண்டு வேகமாக சென்றது. தூங்கிக்கொண்டிருக்கும் தேன்மொழிக்கு சீட் பெல்ட்டை போட்டு விட்டு காரை வேகமாக ஓட்டினான். ஆனால் அவன் எதிர்பாராதவாறு அவன் இருபக்கமும் லாரிகள் அவனது காரை முற்றுகையிட்டது. இன்னொரு லாரி அவனது காருக்கு முன்னே சென்று லாரியில் இருந்த கம்பிகளை சந்தனபாண்டியன் காருக்குள் விழுமாறு செய்ய ஒருநிமிடம் கூட தாமதிக்காமல் தேன்மொழியின் சீட்பெல்ட்டை கழட்டிவிட்டு தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டு குனிந்து விட்டான்.

3 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top