ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 15
 
 
காரை நிறுத்திய சந்தனபாண்டியன் தன் மனையாளை பார்க்க அவளோ இன்னும் தூக்கம் கலையாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். இடியே தலையில் விழுந்தாலும் கூட எழும்ப மாட்டா போல வீடு வந்தது கூட தெரியாம தூங்கிட்டு இருக்காளே  என கடுப்பாகி தேன்மொழியின் தோளில் தட்டினான்.
 
“ம்ம் தூக்கம் வருது மாமா” என அவனது கையை தட்டிவிட்டு உறங்க ஆரம்பித்தாள்.
 
அதற்குள் தனபாக்கியம் காருக்கு பக்கம் வந்தவர் “ஏன் ராசா இம்புட்டு நேரம் உன் மாமன் ரொம்ப பிரச்சனை பண்ணிட்டானா?” என்றவரோ கவலையாக உறங்கிக்கொண்டிருக்கும் பேத்தியை பார்த்தவர் “தேனு குட்டியை ஒண்ணும் திட்டிபுடலையே” என்று ஆதங்கமாக கேட்டார் தனபாக்கியம்.
 
காரிலிருந்து இறங்கிய சந்தனபாண்டியனோ “ம்ம் மாமா கோபப்படாத இருந்தா அதிசயம் தான் அப்பத்தா! என்ன கேட்டீங்க உங்க பேத்தியை மாமா திட்டினாரானு அவதான் மாமாகிட்ட எனக்காக  சண்டையே போட்டா அப்பத்தா” என சிலாகித்து சொன்னவனிடம் 
 
“அப்பனை பார்த்தா பயந்து நடுங்குவா நம்ம தேனு!   நீ சொல்றதை  நம்பவே முடியலையே தம்பி” என்றான் தங்கபாண்டியன்.
 
“தங்கம் சின்னவன் மேல என் பேத்திக்கு பிரியம்  அதிகம் டா அதான் அவனை அடிக்க வந்ததும் அவ அப்பாவை எதிர்த்து பேசி இருக்கா” என்றார் தனபாக்கியம் சந்தோசமாக.
 
“என்ன நடந்ததுனு முழுசா சொல்லுடா” என்றான் அருள் ஆர்வம் தாங்காமல்  
 
“அண்ணே! அங்க நடந்த கதையே வேற! மாமா எப்பவும் போல கோபப்பட்டு என் சட்டையை பிடிச்சு அடிக்க வந்தாரு! எனக்கு கோபம் வந்தாலும் அடக்கிக்கிட்டு நின்னேன் ஆனா உங்க பேத்தி என் புருசன் மேல இருந்து கையை எடுங்கப்பானு பெரிய சண்டையே போட்டுட்டா அண்ணே! தேனு சத்தம் போட்டதும் மாமா வாயடைச்சு போய்ட்டாரு! அங்க இருந்தா சண்டை வலுக்கும்னு நான்தான் கூட்டிட்டு வந்துட்டேன்” என தேன்மொழியை பற்றி பெருமையாக பேசினான் சந்தனபாண்டியன்.
 
“யார் மேல கோபம்னாலும் அதை தேவி அக்கா மேலதானே காட்டுவாரு! அக்காவை மாமா எதுவும் சண்டை பிடிச்சாரா!” என அருள்பாண்டியன் ஆதங்கப்பட்டு கேட்டான்.
 
“அக்காவை எதுவும் பேசமுடியாது தேனு பேசியதிலையே மனுசன் பித்து பிடிச்சு போயிட்டாருனு நினைக்குறேன். ஆனாலும் இன்னும் மாமனுக்கு கோபம் குறையல! மாமாவை தென்னரசுவும் அவன் அப்பனும் ஸ்க்ரூ ஏத்திவிடறானுங்க! அவனுங்களுக்கு ஒருநாள் என்கிட்ட இருக்கு” என்றான் கை முஷ்டியை இறுக்கி
 
“திருவிழாவுல அவனுங்கள அவமானப்படுத்தி அனுப்பினோம்ல. அந்த கடுப்பே அவனுங்களுக்கு இருக்கும் மூணு பேரும் அலார்ட்டா இருக்கணும்  பேராண்டிகளா” என்று மூவரையும் உஷார்படுத்திய தனபாக்கியம் “தேனுவை தூக்கிட்டு வா சந்தனப்பாண்டி” என்றவரோ வீட்டுக்குள் சென்றார். தங்கபாண்டியன் தனபாக்கியத்துடன் சென்றான். 
 
 அருள்பாண்டியன் மட்டும் கேட்டை பூட்டி விட்டு வர. காரிலிருந்து தேன்மொழியை தூக்கிக்கொண்டு நடந்தான் சந்தனபாண்டியன்.
 
“மாமா இடுப்பை தொடாத கூசுது!” என்று அவள் தூக்க கலக்கத்தில் உளற சந்தனபாண்டியனுக்கு திக்கென்றது. “அச்சோ கிறுக்கி என்னை அண்ணன்கிட்ட மாட்டிவிடுறா பாரு” என்று எச்சிலை விழுங்கியபடி வேகமாக நடந்து தனபாக்கியம் அறைக்குள் சென்று படுக்க வைத்துவிட்டு திரும்ப அருள்பாண்டியன் சந்தனபாண்டியனை முறைத்துக்கொண்டு நின்றான்.
 
“புள்ள படிக்கற வரைக்கும் அவளை தொந்தரவு பண்ணக்கூடாதுனு உன்கிட்ட சொல்லியிருக்கேன்!” என்று பல்லைகடித்துக்கொண்டு கடிந்துக் கொண்டான் சந்தனபாண்டியனை.
 
“அண்ணே! காரணம் இருக்கு” என தலையை கவிழ்த்துக் கொண்டான் சந்தனபாண்டியன்.
 
 எதற்காக தேனுவிடம் நெருக்கமாக நடந்துக் கொண்டான் என்பதை அண்ணனிடம் அவனால் கூறமுடியாமல் தவித்துக்கொண்டு நின்றான்.
 
 அங்கே வந்த தங்கபாண்டியனோ “அருள் அண்ணா நான் சொல்றேன் தம்பியை தப்பா நினைச்சு திட்டாதீங்க! இங்க நின்னு பேச வேணாம்! வெளியில வாங்க” என்றான் தேன்மொழியை பார்த்துக்கொண்டே
 
தேன்மொழியோ என்ன நடக்கிறதென தெரியாமல் மாமனின் மனதில் தான் சிம்மானம் போட்டு அமர்ந்துவிட்டோமென்ற மகிழ்ச்சியில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
 
 அருள்பாண்டியன் வேஷ்டியை மடித்துக்கொண்டு தோட்டத்து பக்கம் சென்றான். “உண்மையை அண்ணாகிட்ட சொல்ல வேண்டியதுதானே சின்னவனே! அண்ணா உன்னை தப்பா நினைச்சிட்டாரு பாரு!” என்று சந்தனபாண்டியன் கையை பிடித்துக்கொண்டுச் சென்றான். 
 
“ம்ம் சொல்லு தங்கம்” என்றான் அருள்பாண்டியன் அடக்கப்பட்ட கோவத்துடன்.
 
சந்தனபாண்டியனோ அருள்பாண்டியனை பார்க்காமல் திரும்பி நின்றுக் கொண்டான்.
 
“அண்ணா அது வந்து ரிசப்சனுக்கு தேனுவோட ப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க! நம்ம தேனுகிட்ட உன் மாமா எப்படி பேசுறாரு! ஏதாவது ரொமான்ஸ் நடந்துச்சா! ஏன் கேட்குறோம்னா நாங்களும் வந்ததுலயிருந்து பார்க்குறோம் உன்கூட சிரிச்சுகூட பேசமாட்டேன்கிறாரு! தள்ளியே நிற்குறாரு! இன்னும் அந்த மல்லிகா டீச்சரை லவ் பண்ணுறாரோ! கொஞ்சம் உஷாரா இருடி! உன் முந்தானையில மாமனை முடிஞ்சு வைச்சுக்கோ! இந்த காலத்துல யாரையும் நம்ப முடியாதுனு சொல்லி அவ ப்ரண்ட்ஸ் அவளை குழப்பி விட்டாங்கண்ணே! ஆனா நம்ம தேனு என்ன சொன்னா தெரியுமா! என் மாமா மனசுல மல்லிகா டீச்சர் இல்ல! அவர் மனசுல நான் மட்டும்தான் நிறைஞ்சு இருக்கேன்! எனக்கு தெரியும்! இன்னொரு முறை என் மாமாவை பத்தி தப்பா பேசுனீங்கனா நான் உங்க ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவேன்னு அவங்களை திட்டி அனுப்பினா அண்ணா! தேனு பேசிட்டிருக்கும்போது ஏதேச்சையா நானும் தம்பியும்தான் கேட்டோம்.
 
 நான்தான் சந்தனபாண்டியன் கிட்ட உன் மனசுல மல்லிகா இல்லைனு தேனுகுட்டிகிட்ட நம்பிக்கை கொடுனு சொன்னேன்! அதான் தம்பி தேனுகிட்ட கொஞ்சம் உரிமை எடுத்திருப்பான்! நீங்க அவசரப்பட்டு தம்பியை திட்டிபுட்டீங்க” என்றான் வருத்தமாக.
 
அருள்பாண்டியனோ “நான் அவசரப்பட்டு பேசிட்டேன்” என்று மனம் சுணங்கிப்போனவன் “டேய் சின்னவனே உண்மை தெரியாம உன்னை திட்டிப்புட்டேன்! என்னை மன்னிச்சிடுடா!” என்று சந்தனபாண்டியனை அணைத்துக்கொண்டான்.
 
“உனக்கு திட்டுற உரிமை இருக்கு அண்ணே! நீ அடிச்சாகூட நான் வாங்கிப்பேன்! படிக்கற புள்ளைகிட்ட எப்படி நடக்கணும்னு எனக்கு தெரியும்ணே” என்றான் அருள்பாண்டியன் அணைப்பில் இருந்தவாறே
 
“இருந்தாலும் நீ புள்ளைக்கு வலிக்குறது போல பிடிச்சிருக்க கூடாதுடா  முரட்டுப் பயலே!” என்று தங்கபாண்டியன் தம்பியின் மன இறுக்கத்தை போக்க கிண்டல் செய்தான். சந்தனபாண்டியனுக்கு வெட்கம் வந்து முகம் சிவந்து போனான். ஆண்களின் வெட்கம் அழகானதே!
 
சாப்பிட்டு வந்த தனபாக்கியமோ தோட்டத்து பக்கம் பேரன்களின் பேச்சு சத்தம் கேட்டு “மணி 11 ஆச்சு! இன்னும் என்ன பேச்சு! வந்து படுங்கடா” என்று சத்தம் போட்டார். 
 
“ம்ம் இதோ வரோம் நீங்க தூங்கப்போங்க அப்பத்தா” என்றவர்கள் வீட்டுக்குள் வந்தனர். அடுத்த நாள் காலையில் 6 மணிக்கே தேன்மொழியை எழுப்பி விட்டார் தனபாக்கியம்.
 
“அப்பத்தா ஏன் இப்பவே எழும்பி விட்ட நான் 7 மணி வரைக்கும் தூங்குவேன்” என்று படுக்க போக அவள் தோளில் ஒரு அடி போட்டு “இப்ப எழும்பலைனா சந்தனபாண்டியனை வரச்சொல்வேன்” என மிரட்ட “ஹான் மாமா வரட்டும் எனக்கு பயம் இல்ல”  என்றாள் நேற்று காரில் நடந்த சம்பவத்தை வைத்து சந்தனபாண்டியன் எதுவும் தன்னை திட்டமாட்டான் என்று நினைத்து மிதப்பாக பேசினாள் தனபாக்கியத்திடம்.
 
உடற்பயிற்சி முடித்து வந்த சந்தனபாண்டினோ  தேன்மொழி தனபாக்கியத்திடம் தர்க்கம் பண்ணிக்கொண்டிருப்பது அவன் காதுக்கு கேட்க அறைக்குள் சென்று அவள் பேசுவதை கை கட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தான்.
 
சந்தனபாண்டியன் வந்து நிற்கிறான் என்று தெரியாமல் தனபாக்கியத்திடம் வாயாடிக்கொண்டிருந்தாள் தேன்மொழி. “இந்தாருடா உன்ற பொண்டாட்டியை என்னால சமாளிக்க முடியலை பொழுது விடிஞ்சு சூரியன் சுள்ளுனு அடிக்குது இன்னும் தூங்குறேனு சொல்லுறா நீ என்னனு கேளு! அடுத்து தங்கபாண்டியன் பொண்டாட்டி ஆர்த்திக்கு வேலை கொடுத்துட்டு வந்தேன் என்னனு பார்க்குறேன்” என்று கிளம்பி விட்டார்.
 
“ஏன் டி கழுதை பொட்டபுள்ள ஏழுமணி வரைக்கும் தூங்குவியா என்ன! நாளையிலிருந்து ஐஞ்சு மணிக்கு எழும்புற இல்லை இடுப்பெழும்பை உடைச்சு போடுவேன்! எழுந்து போடி” என்று அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் விட்டான்.
 
குளியலறைக்குள் சென்றவள் தலையை மட்டும் வெளியே எட்டிப்பார்த்து “மாமா நேத்து மட்டும் கொஞ்சி பேசின! இப்போ என்ன திட்டுற! சும்மா மாறி மாறி பேசுற! நீ நல்லவனா கெட்டவனா?” என்று கேட்டு விட “ஏய் வாய்கொழுப்பு பிடிச்சவளே” என்று கையை ஓங்கிக்கொண்டு போக “அச்சோ” என்று கதவை லாக் பண்ணிக்கொண்டவளுக்கு இதயம் எகிறி குதிப்பது போல இருந்தது.
 
“இந்த முரட்டு மாமா மோசம் தான்” என்று ஷவரை திறந்துவிட்டு குளித்தாள். குளித்து முடித்து வந்தவள் டாப்பும் பேண்ட்டும் போட்டு தலை முடியை கேட்ச் கிளிப் போட்டு அடக்கிக்கொண்டு பால்கனிக்குச் சென்று தோட்டத்தில் சுற்றும் பட்டாம்பூச்சியை பார்த்துக்கொண்டிருந்தாள். நாளைக்கு அவள் செமஸ்டர் லீவு முடிந்து காலேஜ்க்கு போக வேண்டும். அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டானு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்களே! தாலியை சுடிதார்க்குள்ள போட்டுக்கலாமா! ஏன் போடணும் நான் சந்தனபாண்டி பொண்டாட்டி தைரியமா இருக்கணும் என்று அவளுக்கே தைரியம் சொல்லிக்கொண்டாலும் அவளுக்கு கொஞ்சம் படபடப்பாகத்தான் இருந்தது. 
 
சந்தனபாண்டியன் சாப்பிட வந்தவனிடம் “தேனுவை சாப்பிட கூட்டிட்டு வா சந்தனபாண்டி! விட்டா அவ இன்னும் கொஞ்சநேரம் படுத்து தூங்கினாலும் சொல்றதுக்கில்லை” என்றார் சிரித்துக்கொண்டே
 
தேன்மொழி அறையில் இல்லையென்றதும் பால்கனியை எட்டிப்பார்த்தான். அங்கே அவள் தீவிரமாக யோசித்துக்கொண்டிருப்பது கண்டு “என்னாச்சு இந்த வாலுக்கு எந்த கோட்டையை பிடிக்க இப்படி சிந்தனையில இருக்கா” என்றவன் “குட்டிப் பொண்ணு” என அவளது தோளைத்தொட “யாரு?” என்று பயந்து திரும்பினாள்.
 
“இப்படி நெருக்கமா உன் தோளை யாரு வந்து தொடுவாங்கனு பயந்து சாகற! தைரியமா இருக்கணும்னு எத்தனை முறை உனக்கு சொல்றதுடி!” என்று அவளை தன் புறம் திருப்பினான்.
 
அவள் கண்களில் கண்ணீர் தேங்கி இருந்தது. “ஏய் நான் சும்மாதான் மிரட்டினேன்! கண்ணை கசக்க கூடாது” என்று சற்று குரலை உயர்த்தினான்.
 
“மாமா நாளைக்கு காலேஜ்க்கு போகணும்! நான் செகண்ட் இயர்தான் படிக்குறேன் அதுக்குள்ள கல்யாணம் ஆகிடுச்சுனு கிண்டல் செய்வாங்க! எங்க கிளாஸ் மேம் படிக்குற வயசுல ஏன் கல்யாணம் பண்ணிவச்சாங்கனு கேட்பாங்க! எனக்கு கவலையா இருக்கு! பேசாம நான் வீட்லயிருந்தே கரஸ்பாண்டன்ட்ல படிக்கட்டுமா!” என்றாள் அழுகையுடன்.
 
“ஏய் கிறுக்கச்சி அழறதை நிறுத்து” என்றவன் “நான் உன் காலேஜ் பிரின்சிபால்கிட்டே நேத்தே நானும் தங்கம் அண்ணாவும் போய் தேன்மொழிக்கு கல்யாணம் பண்ணவேண்டிய சூழ்நிலை கல்யாணம் நடந்துருச்சுனு  சொன்னோம் அவங்களும் படிக்கற வரை கன்சீவ் ஆகாம இருக்கணும். அதையும் நாங்க கட்டாயமா சொல்லமாட்டோம்! படிக்கும்போது குழந்தைனு வந்துட்டா தேன்மொழி படிக்கறதுல கான்ஸ்சன்ட்ரேட் இல்லாம போகும். அதுவுமில்லாம தேன்மொழி டாப்பர் ஸ்டூடன்ட்னு உனக்கு பாராட்டு பத்திரம்தான் கொடுத்தாங்க. உங்க கிளாஸ் மேம் கூட நான் பசங்ககிட்ட தேன்மொழியை கிண்டல் பண்ணக்கூடாது சொல்லிடறேனு சொல்லியிருக்காங்கடி! நீ பாட்டுக்கு அழுது வடியுற! நீ கலெக்டர் ஆகணும்னா தைரியமா இரு! நான் உன்கூடவே இருப்பேன் சரியா! நீ சந்தனபாண்டி பொண்டாட்டி உன்னை யாராவது தாக்கவே வந்தாலும் எதிர்த்து நிக்கணும்! பொண்ணுங்கனா பயந்து மூலையில முடங்கி கிடக்ககூடாதுடி! நம்ப அப்பத்தாவை பார்த்தில ஒத்த ஆளா நின்று எங்க மூணுபேரையும் வளர்த்திருக்காங்க. நீ பயந்து நடுங்கினா எப்படிடி நம்ம பிள்ளையை பெத்து வளர்க்க போற” என்றதும் அதுவரை அழுதுக் கொண்டிருந்தவளுக்கு அவன் கடைசியாக பிள்ளை என்ற வார்த்தை விடும் போது வெட்கம் வந்து தொலைத்தது. 
 
 கணவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள் அவனது நெஞ்சில் இருந்த சுருள் முடிக்குள் அவளது கண்ணீர் பட்டு நனைந்தது. “அழாதடி குட்டிப்பொண்ணு” என்று அவளது தலையை மட்டும் நிமிர்த்தி பிறை நெற்றியில் முத்தம் கொடுத்தான்.
 
“ம்ம் இனிமே பயப்படமாட்டா சந்தனபாண்டி பொண்டாட்டி” என்றவளோ “நீ ஏன் மாமா இப்படி இறுக்கி கட்டிப்பிடிக்குற இடுப்பெலும்பெல்லாம் வலிக்குது” என்று இதழை  சுளித்தாள்.
 
“அடியேய் இறுக்கி பிடிச்சா நீ தாங்கமாட்டேனு தான் சும்மாதான் டி பிடிச்சிருக்கேன் இறுக்கியெல்லாம் பிடிக்கல” என்றான் அவளது முகத்தில் மீசையை உரசிக்கொண்டு
 
‘ஹான் அப்போ இறுக்கி பிடிச்சா நான் சட்னி ஆகிடுவேன்’ என்று பயந்து வந்தது அவளுக்கு.
 
“படிப்பு முடியறதுக்குள்ள நல்லா சத்தா சாப்பிட்டு உடம்பு தேத்துடி அப்போ தான் என்னை தாங்க முடியும்” என்று மீசையை முறுக்கினான்.
 
“ஹான் பாட்டிகிட்ட சொல்லி நான் சத்தா சாப்பிட்டுக்குறேன்” என்று அவன் கை லூசானதும் அவனிலிருந்து பிரிந்து வெளியே ஓடிவிட்டாள்.
 
ஆர்த்தியை தனபாக்கியம் மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்ய சொல்லியிருந்தார். ஆர்த்தியோ இந்த கிழவி என்னை சாணி அள்ள வைச்சிருச்சே! நாத்தம் அடிக்குது என்று முகத்தை அஷ்டகோணலாக வைத்து செய்துக் கொண்டுருந்தாள். அங்கே வந்த வேலைக்கார பெண்ணோ நான் இந்த வேலையை செய்யுறேன் என்று சொல்ல! அப்பாடி தப்பிச்சோம் என்று வந்தவள் பத்து முறை சோப்பை போட்டு கையை கழுவிக்கொண்டிருந்தாள்.
 
தங்கபாண்டியன் ஆர்த்தி தொழுவத்தை சுத்தம் செய்யும் போது பார்த்துவிட்டுதான் வந்தான். பரவாயில்லையே இந்த வேலையெல்லாம் கூட செய்யுறாளே என்று அதிசயமாய் பார்த்து வந்தான். இப்போது அவள் கையை சோப்பு போட்டு கழுவி கையை முகர்ந்து வேறு பார்த்துக்கொண்டிருந்தாள். அதானே இவ எல்லாம் திருந்திருவாளா என்ன! என்று அவள் பக்கம் வந்தவன் “எதுக்கு இத்தனை முறை சோப்பு போட்டு கை கழுவற?” என்று கடுப்பான குரலில்தான் கேட்டான்.
 
“ஹான் உங்க அப்பத்தா மாட்டுத் தொழுவத்தை சுத்தம் பண்ண சொல்லிட்டாங்க! இந்த வேலை செய்யாம போனா  எங்க இங்கயே என்னை இருக்க சொல்லிடுவாங்களோனு  பயந்து மூக்கை பொத்திக்கொண்டு தொழுவத்தை சுத்தம் செய்தேன். நல்லவேளை அங்க வேலை செய்யற பொண்ணு வந்து என்னை அனுப்பி விட்டிருச்சு” என்றவளோ “இன்னிக்கு நைட் நாம சென்னை கிளம்புறோம்தானே கோல்ட்! என்னால இந்த பட்டிக்காட்டுல இதுக்கு மேல இருக்க முடியல” என்றாள் எரிச்சலாக.
 
“நீ இந்த பட்டிக்காட்டுல பிறந்தவனைத்தான் விழுந்து விழுந்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கடி. ரொம்ப பேசினினா! வேலையை ரிசைன் பண்ணிட்டு நிரந்தரமா இந்த பட்டிக்காட்டுல இருந்துடுவோம் எப்படி வசதி! சாணம் மெடிசன்டி அதை தொட உனக்கு கூசுது. படிக்கும் போது தினமும் நான் தான் தொழுவத்துல வேலை செய்வேன்! சாணியை தொடுவது புண்ணியம்டி! சாணியை நான் தொட்டிருக்கேனு என்னைய தொடாம போயிடுவியா!” என்று அவளுக்கு கொட்டு வைக்கும் விதமாக கேட்டான்.
 
“அச்சோ சாமி நான் இங்க எப்ப வந்தாலும் மாட்டுத்தொழுவத்தை நானே சுத்தம் பண்ணுறேன்! நீங்க லக்சர் எடுக்க வேணாம் கோல்ட்! உனக்காக நான் என்ன வேணா செய்வேன்!” சாணியை அள்ள மாட்டேனா என்று ஜகா வாங்கினாள் ஆர்த்தி.
 
 ‘உன்னை எங்க அடிச்சா வலிக்கும்னு எனக்குத்தானே டி தெரியும்’ என்று மீசைக்குள் சிரித்துக்கொண்டு “இன்னிக்கு நைட் சென்னைக்கு கிளம்புறோம் ரெடியா இரு!” என்றவன் வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு வெளியேச் சென்றுவிட்டான். 
 
“அப்பாடா இந்த பட்டிக்காட்டுல இருந்து கிளம்புறோம்பா” என்று நெஞ்சில் கை வைத்து வேகமாக துணிகளை பேக் பண்ண ஆரம்பித்தாள் ஆர்த்தி.
 
தங்கபாண்டியனும் ஆர்த்தி அன்றிரவு சென்னைக்கு செல்ல கிளம்பி ஹாலுக்கு வந்தனர். தனபாக்கியம் தங்கபாண்டி இங்கேயே இருந்துடறேனு சொல்லமாட்டானா என்று ஏக்கத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார்.
 
அருளும் சந்தனபாண்டியனும் தனபாக்கியம் பக்கம் உட்கார்ந்திருந்தனர். “அப்பத்தா எங்களுக்கு லீவு முடிஞ்சது நாங்க கிளம்புறோம்” என்று தனபாக்கியம் காலுக்கு கீழ் உட்கார்ந்தான். 
 
கிழவி மேல ரொம்பத்தான் பாசம் வழியுது என்று எரிச்சலாக பார்த்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி. பின்னாளில் அவள் வாழ்வில் பிரச்சனை வரும் போது தனபாக்கியம் துணையாக இருக்கப்போகிறார் என்பதை தெரியாமல் புகைந்துக் கொண்டிருக்கிறாள் ஆர்த்தி. 
 
“அப்பத்தா தங்கம் ஊருக்கு கிளம்புறான் அவனை வழியனுப்பி வை! நீ இப்படி பேசாம உட்கார்ந்திருந்தா! அவனுக்கு இங்க இருந்து போகவே மனசு வராது” என தம்பிக்காக பரிந்து பேசினான் அருள்.
 
“தங்கம் நீ மட்டும் ஏன்டா அப்பத்தாவை விட்டு கிளம்புறேன் சொல்லுற. உன் அப்பத்தா பாவம்ல சீக்கிரம் இங்கனயே இருக்கறது போல அந்த பட்டணத்து வேலையை விட்டுட்டு வந்துடு! ஒருவேளை அப்பத்தா உசிரு திடீர்னு போயிருச்சுனா உன்னை பார்க்காம போயிட்டோம்னு என்னோட ஆத்மா சாந்தியடையாதுடா பேராண்டி” என்றவருக்கு கண்ணீர் வந்துவிட்டது அவரது குரலில் ஆதங்கம் தெரிந்தது.
 
“அப்பத்தா என்ன வார்த்தை பேசுற” என்று அருள், தங்கம், சந்தனபாண்டி மூவரும் தனபாக்கியத்தின் காலை பிடித்துக்கொண்டு “என்ன அப்பத்தா இப்படி பேசுற! என் பிள்ளைகளை நீதான் வளர்த்துக்கொடுக்கணும். அவ்வளவு சீக்கிரம் உன்னை மேல போக விடமாட்டோம்” என்றனர் மூவேந்தர்களும்.
 
‘அப்பா சும்மா பாசமழை பிழியுதுங்க’ என்று இதழை சுளித்தாள் ஆர்த்தி. ‘ஒரு மாசத்துல இங்க வந்துடறேன்னு கோல்ட் சொல்லுறாரே! நான் வரமாட்டேனு தர்ணா பண்ணுவேன்! இங்க எதுவும் பேச முடியாது சென்னைக்கு போய் பேசிக்கலாம்’ என்று அமைதியாக நடப்பதை வேடிக்கையாக பார்த்திருந்தாள்.
 
வளர்மதியோ தங்கபாண்டியன் சென்னைக்கு கிளம்புவது நந்தனுக்கு தெரிந்தால் சித்தப்பா போகவேண்டாம்னு  அழுது ஆர்ப்பாட்டம் செய்வான் என மகனை தூங்க வைத்து வந்தவள் தனபாக்கியத்தின் காலை பிடித்துக்கொண்டு இருப்பதை கண்டவள் சமையலறைக்குச் சென்று காபி போட்டு எடுத்து வந்தவள் “மூணு பேரும் அப்பத்தாவை விட்டு எழும்புங்க அவங்களே பேரன் ஊருக்கு போறாருனு கவலையில இருக்காங்க! காத்து வராம அவங்களை மலை போல மறைச்சு உட்கார்ந்தா பிரஷர் ஏறிடும் அப்பத்தாவிற்கு” என்று பிளாக் டீயை தனபாக்கியத்திற்கு கொடுத்துவிட்டு மூவருக்கும் காபியை கொடுத்தவள் “ஆர்த்தி நீயும் காபி எடுத்துக்கோ” என்றதும் “எனக்கு காபி வேணாம்கா” என்று பிகு செய்தாள்.
 
“ஓ சரிமா சென்னைக்கு போனதும் போன் பண்ணு! ரிப்போட்டை ஸ்கேன் செய்து அனுப்பி வை! நான் நம்ம பேமிலி டாக்டர் கிட்ட காட்டுறேன்” என்றதும் “ம்ம்” என்று மட்டும் தலையை ஆட்டினாள்.
 
தேன்மொழியோ “மாமா உங்க வேலையை விட்டுட்டு நம்ம ஊருக்கு சீக்கிரம் வந்துடுங்க!” என்றாள் தங்கபாண்டியன் கையை பிடித்துக்கொண்டு. 
 
“ம்ம் சரிடா நீ தைரியமா இருக்கணும் சரியா” என்று தேன்மொழியின் தலையை தடவிவிட்டான் தங்கபாண்டியன்.
 
“சென்னைக்கு போய் சேர்ந்ததும் போன் போடு தங்கம்” என்று மனதே இல்லாமல் தங்கபாண்டியனை அனுப்பிவைத்தார் தனபாக்கியம்.
 
 அடுத்தநாள் காலையில் சென்னைக்கு போய் சேர்ந்ததும் தங்களது அப்பார்ட்மெண்டிற்குள் நுழைந்ததும் “கோல்ட் இப்போ தான் என்னால நிம்மதியா மூச்சே விட முடியுது” என்று தங்கபாண்டியனை அணைத்துக்கொண்டாள்.
 
“ம்ம் இங்க ஓடுற சாக்கடை நாத்தம் உனக்கு பிடிச்சிருக்கு!” என்று அவளை விலக்கிவிட்டு தனபாக்கியத்திற்கு போன் போட்டான். 
 
“சொல்லு ராசா வீட்டுக்கு போயாச்சா?” என்றார் பாசமாக.
 
“ம்ம் இப்போதான் வீட்டுக்குள்ள வந்தோம். இனி ஆபிஸ் கிளம்பிடுவேன் அப்பத்தா உன்கிட்ட நைட் பேசுறேன்! நான் சீக்கிரம் நம்ம ஊருக்கு வந்துடுவேன் அப்பத்தா! நீ மனசை போட்டு அலம்பிகிட்டு கிடக்காத” என தனபாக்கியத்தின் மனதை தேற்றினான்.
 
“சரி ராசா கண்டதை சாப்பிடாத! வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க! பத்திரம் ராசா! அங்கனையும் இந்த நாகப்பன் ஆளுங்க வச்சிருப்பான் பார்த்து சூதானமா இருடா” என்று பேரனை எச்சரிகை செய்தார்.
 
“ம்ம் நான் பார்த்துக்குறேன் அப்பத்தா” என்று போனை வைத்துவிட்டான்.
 
தேன்மொழியை காலேஜ்க்கு அழைத்துக்கொண்டுச் சென்றான் சந்தனபாண்டியன். தாலியை சுடிதாருக்குள் மறைத்து போடவில்லை அவள். ஆனால் சிறு பயம் அவள் கண்களில் தெரிந்தது. யாரு கிண்டல் செய்தாலும் கண்டுக்க கூடாது என்று மனதை திடப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் முக பாவனைகளை பார்த்துக்கொண்டுதான் இருந்தான் சந்தனபாண்டியன்.
 
காலேஜ் முன்னே காரை நிறுத்தியவன் “இறங்கு நானும் உன் காலேஜக்குள்ள வரேன்” என்றவன் காரை திறந்து விட்டான்.
 
ப்ளு ஜீன்ஸ் வெள்ளை சட்டை போட்டு கம்பீரமாய் இறங்கி வந்தவனை சில பெண்கள் ‘வாவ் மீசை ஹேண்ட்சம் இருக்காரே! ரூட் போடுவோமா’ என்று பேசிக்கொண்டு காருக்கு பக்கம் வந்தனர்.
 
காரை விட்டு இறங்கிய தேன்மொழி சந்தனபாண்டியன் பக்கம் வந்தவள் “மாமா நீங்க கிளம்புங்க நான் தைரியமாத்தான் இருக்கேன்” என்றாள் முகத்தில் மெல்லிய சிரிப்புடன்.
 
“யார் என்ன சொன்னாலும் என்கிட்ட சொல்லணும் சரியா சாய்ந்தரம் காலேஜ் முடியும் நேரம் வரேன்” என்று அவளது தோளைத்தட்டிச் சென்றான். 
 
சந்தனபாண்டியன் காரில் ஏறியதும் அவளது ப்ரண்ட் சீதா “ஏய் யாருடி இந்த மீசை செமையா இருக்காரு! இவ்ளோநாள்  நான் பார்த்ததில்லையே இவரை! அடுத்த முறை அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வை டி” என்றவளை வெட்டவா குத்தவா என்று முறைத்துப்பார்த்தாள். சீதா செமஸ்டர் லீவில் அவள் ஊர் திருழாவுக்கு சென்றிருந்தாள் தேன்மொழி ரிசப்சனுக்கு இவள் வரவில்லை. சந்தபாண்டியன் யார் என்று தெரியாமல் தேன்மொழியிடம் வசைப்பாட்டு வாங்க போகிறாள்
 
“ஏன் டி முறைக்குற நான் என்ன தப்பா பேசிட்டேன்?” என்றவளை “அவரு என்னோட ஹஸ்பண்ட் இதோ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு!” கழுத்திலிருந்தது தாலியை எடுத்துக் காட்டி “என் மாமாவை சைட் அடிச்ச கண்ணை நோண்டிடுவேன்” என்று மிரட்டினாள் தேன்மொழி சீதாவை.
 

6 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top