ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 19
 
 
ஆர்த்திக்கோ நீர்கட்டிக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை சோர்ந்து போனாள். இதில் பீரியட்ஸ் ஆனதும் பீளிடிங் ஃப்ளோ அதிகம் இருக்க. அவளுக்கு உடம்பு வலி படுத்தி எடுத்தது. தங்கபாண்டியன் மடியில் படுத்திருந்தவளின் தலையை வருடிக்கொண்டே “அம்மு நீ வேலையை ரிசைன் பண்ணிடு! நீ கஷ்டப்படறதை என்னால பார்க்க முடியலைடி!” என்று வருத்தப்பட்டு ஆற்றாமையுடன் கூறினான் தங்கபாண்டியன். 
 
“எனக்கு வீட்ல இருந்தா ஏதோ ஏதோ மனசுக்குள்ள தோணுது கோல்ட். நம்ம கூட கல்யாணம் ஆனவங்க எல்லாரும் கன்சீவ் ஆகி குழந்தை பெத்துட்டாங்க! நமக்கு இன்னும் பேபி வரலையேனு கதவை லாக் பண்ணி அழத்தோணுது கோல்ட். அதான் வேலையை ரிசைன் பண்ணாம இருக்கேன்!” என்றவளின் குரலில் அத்தனை பெரிய வலி இருந்தது.
 
கண்ணில் நிற்காமல் கண்ணீர் வேறு வந்துக் கொண்டிருந்தது. அவளது கண்ணீர் அவனது கையில் பட்டுத்தெறிக்க “அம்மு அழாதடி நமக்கு என்ன வயசு ஆகிடுச்சா என்ன. இப்ப எல்லாரும் ஐம்பது வயசுல கூட குழந்தை பெத்துக்குறாங்க. நமக்கும் குழந்தை வரும்டி” என அவளுக்கு நம்பிக்கையூட்டி அவளது கண்ணீரை சுட்டு விரலால் துடைத்து விட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டான் மென்மையாக. 
 
ஆர்த்தியோ அவன் வயிற்றில் முகம் புதைத்துக்கொண்டு “நான்தான் பாவம் செய்துட்டேனே கோல்ட். இப்போதைக்கு குழந்தை வரக்கூடாதுனு பில்ஸ் எடுத்துக்கிட்டேன்ல அதான் இன்னும் நீர்கட்டி அது இதுனு எனக்கு வந்திருக்கு போல” என்று விம்மி விம்மி அழுதாள்.
 
“ஏய் பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் நடந்ததை பேசி ஒரு சல்லி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. நமக்கு பாப்பா வரும் அதை மட்டும் நினைவில் வைச்சிக்கோ. இப்படி அழுதுட்டே இருந்தா உன் உடம்பு வீக் ஆகிடும் ஆர்த்தி. நீ சந்தோசமா இருந்தா தான் என்னாலயும் நிம்மதியா இருக்க முடியும்டி” என்றான் மிருதுவான குரலில்.
 
கணவனின் மனதையும் வருத்தப்பட வைக்கிறோமே! தான் செய்த தவறால் தன்னவனும் மனம் நொந்து போகிறானே. இனிமேல் என் கோல்ட் முன்னாடி அழவே கூடாது தான் செய்த முட்டாள்தனத்துக்கு தன்னவனும் ஏன் நோகவேண்டும் என்று கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் “இந்த மாசம் செக்கப் போகும் போது நாம ஐவிஎப் ட்ரீட்மெண்ட் பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா கோல்ட். டாக்டர் போன முறை போன போதே நம்மகிட்ட ஐவிஎப் ட்ரை பண்ணலாமானு கேட்டாங்கல்ல” என்றாள் தங்கபாண்டியன் கண்களை பார்த்தவாறே
 
“ஏய் ஐவிஎப் ட்ரீட்மெண்ட் எல்லாம் ரொம்ப புரோசியூஜர் அதிகம்டி. உன்னால மாத்திரை, இன்ஜக்ஷன் எல்லாம் போட்டுக்க முடியாது. நீ தாங்க மாட்டே அம்மு. நார்மலாவே நமக்கு பேபி வரும் கண்டதையும் நினைச்சு மனசை குழப்பிக்காதே நீ படுத்துக்கோ. சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்” என்று பெரும்மூச்சு விட்டு வெளியேச் சென்றான்.
 
அன்று மாலை சந்தனபாண்டியனுக்கு வேலை இருக்க தேன்மொழியை காலேஜிலிருந்து கூட்டிக்கொண்டு வந்து வாசல் வரை விட்டவன் “எனக்கு டவுன்ல வேலை இருக்குடி நீ போ” என்றவன்  அவள் தொடர்ந்து பேசும் முன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். 
 
‘எனக்கு தேவையானதை வாங்கிட்டு வரச்சொல்லலாம்னு சொல்றதுக்குள்ள காரை கிளப்பியாச்சு. நாளைக்கு என்னையும் டவுனுக்கு கூட்டிட்டு போகச்சொல்லி தர்ணா பண்ணப்போறேன்’ என்று முணுமுணுத்துக்கொண்டே தனபாக்கியம் அறைக்குள் சென்றவள் குளிக்க ட்ரஸை கப்போர்ட்டில் தேட அங்கே அவளது டிரஸ் எதுவும் இல்லாமல் இருக்க.
 
‘அச்சோ நம்ம வீட்டுக்கு திருடன் வந்துட்டான் போலையே! என் ட்ரஸ் எல்லாம் காணோமே’ என்று  குழம்பிப்போனவள் அடுத்த நிமிடமே ‘ச்சே நம்ம வீட்டுக்கு திருடன் வராமாட்டான்! ஆனா ஆம்மாச்சி சேலையெல்லாம் அடுக்கி வச்சு இருக்கே. நம்ம ட்ரஸ் மட்டும் காணோமே’ என்று தீவிரமான யோசனையுடன் ஹாலுக்கு வந்தாள்.
 
தேன்மொழி குழம்பி போன முகத்துடன் வருவதை கண்ட வளர்மதியோ மௌனமாய் சிரித்துக்கொண்டாள். அவளின் உடைகளை எடுத்துக்கொண்டு போய் சந்தனபாண்டியன் அறை கப்போர்ட்டில் அடுக்கி வைத்ததே வளர்மதி தான் அவளிடம் விளையாடி பார்க்க எண்ணி “என்ன தேனு எக்ஸாம் எழுதிட்டு வந்தாச்சா! வந்ததும் குளிச்சிடுவியே இன்னிக்கு ஏன் இன்னும் குளிக்காம இருக்க?” என்று அரிசியை புடைத்துக்கொண்டே கேட்டாள்.
 
“அக்கா கப்போர்ட்ல இருந்த என்னோட ட்ரஸ் எல்லாம் காணாம போயிடுச்சே! காலையில கூட என் ட்ரஸ் கப்போர்ட்ல இருந்துச்சே! இப்ப ஒரு ட்ரஸ் கூட இல்ல. நம்ம வீட்டுக்கு திருடன் வந்திருப்பானோ” என்று முகத்தை அம்மாஞ்சி  போல வைத்து கன்னத்தில் கை வைத்துக்கொண்டாள்.
 
“அப்பத்தாவோட சேலையெல்லாம் இருக்குனு சொன்னியே. உன்னோடது மட்டும் திருடன் எடுக்க வருவானா என்ன. நல்லா யோசிச்சு பாருடி. அதுவும் நம்ம வீட்டுல அய்யனார் கணக்கா உன்னோட மூணு மாமன்கள் இருக்கறப்ப திருடன் இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சிடுவானா என்ன?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு பேசினாள்.
 
“அக்கா நீங்க என்கிட்ட எதையோ மறைக்கிறீங்க உண்மையை சொல்லுங்க” என்றாள் அவள் தன்னிடம் விளையாடுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டு
 
“என்னோட தங்கச்சி இப்படி அம்மாஞ்சியா இருப்பாங்களா இரு உனக்கு காபி போட்டு எடுத்துட்டு வரேன் களைப்பு தீர குடிச்சிட்டு உன் ட்ரஸ் இருக்க இடத்துக்கு கூட்டிட்டு போறேன்” என்று சமையல்கட்டுக்குள் சென்றவள் போட்டு வைத்திருந்த காபியோடு வந்தவள் தேன்மொழியிடம் கொடுத்தாள்.
 
தேன்மொழியோ காபியை வாங்கிக்குடித்துவிட்டு “அக்கா எனக்கு ட்ரஸ் வேணும்” என்று அழுது விடுபவள் போல பேச “வாடி என் குட்டி தங்கச்சி” என்று தேன்மொழியின் கையை பிடித்துக்கொண்டு சந்தனபாண்டியன் அறைக்குள் கூட்டிச்சென்றாள் வளர்மதி.
 
“அக்கா இது சந்தனபாண்டியன் மாமாவோட ரூம். இந்த ரூம்க்குள்ள அம்மாச்சி தேவையில்லாம போகக்கூடாதுனு சொல்லியிருக்கு” என்று திரும்பி போக பார்த்தாள்.
 
“அடியேய் கிறுக்கச்சி இங்க வாடி” என்று அவளது கையை மீண்டும் பிடித்திழுத்து சந்தனபாண்டியன் கப்போர்டை திறந்து காட்டினாள். தேன்மொழி போடும் உடைகள் அனைத்தும் சந்தனபாண்டியன் கப்போர்டை நிரப்பியிருக்க “அச்சோ அக்கா! இந்த ட்ரஸ் எல்லாம் இங்க எதுக்கு கொண்டு வந்து வச்சீங்க? அம்மாச்சி வந்தா திட்டுவாங்க. இருங்க நான் இப்பவே எல்லா ட்ரஸையும் எடுத்துட்டு போறேன்” என்று நடந்த விபரம் தெரியாமல் பேசினாள்.
 
“உன்னோட அம்மாச்சி உன்னோட ட்ரஸ் எல்லாம் சந்தனபாண்டி அறையில கொண்டு போய் வைக்கச் சொன்னாங்க போதுமா. இன்னிலயிருந்து உன்னையும் சந்தனபாண்டியனையும் ஒரே அறையில தங்கச் சொல்லிட்டாங்கடி. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மனம் விட்டு பேசி புரிஞ்சு வாழ்க்கையை ஆரம்பிங்க” என்று தேன்மொழியின் கன்னம் தட்டினாள் வளர்மதி.
 
“போங்கக்கா நான் கலெக்டர் ஆனதும்தான் எங்களுக்குள் எல்லாம் நடக்கும்னு மாமா சொல்லியிருக்கு” என்று சொன்னவளுக்கு வெட்கம் வந்து விட்டது தலையை குனிந்துக் கொண்டாள் தேன்மொழி.
 
“ரொம்ப வெட்கப்படாதடி” என்றவளோ “சந்தனபாண்டி வர நேரம்தான் குளிச்சிட்டு வந்துடு அப்பத்தா உங்க ரெண்டு பேரையும் கோவிலுக்கு போய்ட்டு வரச்சொன்னாங்க தேனு. நான் நைட் சமையல் செய்யணும்” என்று கூறிவிட்டு கதவு வரை சென்ற வளர்மதியை “அக்கா கொஞ்சம் நில்லுங்க” என்றதும் “என்ன சொல்லு தேனு” என்று அவள் பக்கம் வர “காலையில செம ரொமான்டிக் சீன் பார்த்தேன்கா நம்ம சமையல்கட்டுல” என்று கண்ணடித்தாள் தேன்மொழி.
 
“சீ போடி” என்று இப்போது வளர்மதிக்கு வெட்கம் வந்தது.
 
“அக்கா என்னைய மட்டும் கிண்டல் பண்ணுறீங்க. நான் உங்களை கிண்டல் பண்ணக்கூடாதா என்ன?” என்று புருவம் உயர்த்தி சிரித்தாள் தேன்மொழி.
 
“ஏய் போய் குளிடி” இதற்குமேல் இங்கே நின்றால் என் மானத்தை கப்பல் ஏத்திடுவா என்று வேகமாக வெளியேச் சென்ற வளர்மதிக்கு அருள்பாண்டியன் மீதுதான் கோபம் வந்தது. “எங்க வந்து ரொமான்ஸ் பண்ணனும்னு இவருக்கு விவஸ்தையே இருக்காது. இன்னிக்கு வரட்டும் ராத்திரிக்கு பட்டினி போடுறேன்” என்று அருள்பாண்டியனை வசைபாடிக்கொண்டே சமையலை ஆரம்பித்தாள்.
 
அன்று அரிசி ஆலையில தன் வேலைகளை முடித்துவிட்டு தனபாக்கியத்தை கூட்டிக்கொண்டு வீட்டுக்குள் வந்தான் சந்தனபாண்டியன். தனபாக்கியமோ குளித்துவிட்டு வர அவரது அறைக்குள் சென்றவருக்கு அப்போதுதான் தேன்மொழியை சந்தனபாண்டியன் அறைக்கு போகச் சொன்னது நினைவு வந்தது.
 
‘அட சின்னவன்கிட்ட தேன்மொழி உன்னோட அறையில இனிமே தங்குவானு சொல்லாம விட்டுட்டோமே’ என்று யோசித்தவர் “இப்ப என்ன ரெண்டு பேரும் புருசன் பொஞ்சாதிதானே ரெண்டும் சந்தோசமா இருக்கட்டும்” என்று துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்று விட்டார்.
 
அறைக்குள் சென்ற சந்தனபாண்டியனுக்கோ அவனது அறையில் புதிதாய் பெண்வாசம் வீசியது.
 
தேன்மொழிதான் கஸ்தூரி மஞ்சள் போட்டு குளித்துவிட்டு பாவாடை சட்டையில் பால்கனியில்  தலையை துவட்டிக்கொண்டிருந்தாள். அவனது கால்கள் தானாக பால்கனி பக்கம் சென்றது. இந்த வானரம் நம்ம ரூம்ல என்ன பண்ணுறா என்று அவள் பின்னால் மெதுவாக சென்றவன் “பே” என்று பயமுறுத்தி அவள் தோளில் இடையில் கையை வைத்தான்.
 
யாரோவென்று பயந்த தேன்மொழியோ “அம்மாச்சி” என்று சத்தம் போட வாய் திறந்தவளின் வாயை பொத்தியிருந்தான் கைக்கொண்டு.
 
“எதுக்குடி இப்படி ஆட்டுக்குட்டி போல கத்துற. உன் இடுப்பை யாரு வந்து பிடிப்பாங்க கொஞ்சம் கூட யோசிக்கமாட்டியாடி! எதுக்கெடுத்தாலும் பயப்பட வேண்டியது. நீ எப்படித்தான் கலெக்டர் ஆகப்போறியோ தெரியல டி. நீ வேணா பாரு அடுத்த வருசம் குழந்தையோடத்தான் இருக்க போற” என்று அவளை வெறுப்பேத்தி பேசி வம்பு இழுத்தான்.
 
சந்தனபாண்டியன் கையை வெடுக்கென தட்டிவிட்டு “நான் கலெக்டர் ஆகத்தான் போறேன் மாமா நீங்க எனக்கு டிரைவர் வேலை பார்க்கத்தான் போறீங்க” என்று வீராப்பாக பேசி அங்கிருந்து நழுவி ஓடி போகப்போனவளின் கையை லாவகமாக பிடித்து இழுத்து தன்மீது மோத செய்தான். 
 
தேன்மொழியோ  “விடுங்க மாமா அம்மாச்சிகிட்ட போகணும். எப்போ பாரு என் கையை வலிக்க வலிக்க பிடிக்குறீங்க” என்று இதழை சுளித்தாள்.
 
“ஏய் எனக்கு உன் கையை பிடிக்க உரிமை இருக்கா இல்லையாடி?” என்றான் மீசையை முறுக்கிக்கொண்டே.
 
“ஹான் கையை பிடிக்க உரிமை இருக்குதான். ஆனா ரொம்ப முரட்டுத்தனமா பிடிக்கறதுதான் பயமா இருக்கு” என்றாள் கண்ணை உருட்டி. தன் அறைக்குள் வந்து குளித்திருக்கிறாள் என்றால் அப்பத்தா இந்த குட்டி பிசாசை என்கூட முழு நேரமும் இருக்க வைக்க ப்ளான் போட்டிருச்சு போல இவகிட்ட கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று தான் அவளது கையை பிடித்திருந்தான்.
 
இருவரது கண்களும் சந்தித்துக்கொண்டது. பெண்ணவள் மையிட்ட கண்களில் ஆணவன் தன்னை தொலைத்துக்கொண்டிருந்தான். அவளுக்கோ அவனது இந்த நெருக்கம் ஏதோ அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க தொடங்கியது நெஞ்சுகூடு ஏறி இறங்கியது. அவன் கண்கள் ஏறி இறங்கும் தனங்களை கள்ளத்தனமாய் பார்த்தது. எனக்கு சொந்தமானவ தானே என்று லஜ்ஜையின்றி பார்த்துக்கொண்டிருந்தான்.
 
சந்தனபாண்டியன் தேன்மொழியின் முகம் நோக்கி குனிந்தான். அவளோ கண்களை மூடிக்கொண்டு கால்பெருவிரலை நிலத்தில் அழுத்தி ஊனிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டாள். மாலை நேர காற்று தென்றலாய் வீச அவளது கூந்தல் பெண்ணவளின் கண்களை மறைத்தது.
 
தன்னவளை இரசிக்கும் போது தடையாய் வந்த காற்றின் மீது சற்று கோபம் வரத்தான் செய்தது. மெல்ல கூந்தலை ஒதுக்கிவிட்டு தன் இதழ்களை குவித்து அவளது இமைகள் மீது படுமாறு மெல்ல ஊதினான். அவளோ இமைகளை குடை போல விரித்து பார்த்தவள் அவன் முகம் நெருக்கமாய் இருக்க அவனது கண்கள் கொஞ்சம் மோகத்துடன் பார்ப்பதை கண்டவளுக்கு என்ன பண்ணப்போகிறானோ என்ற அச்சத்தில் அவன் மார்பின் மீது கைவைத்து தள்ளிவிட்டு ஓடப்போனவள் அங்கேயிருந்த பூந்தொட்டி தடுக்கி விழப்போகும் முன் அவளது இடுப்பில் கைப்போட்டு பிடித்துவிட்டான்.
 
போச்சு மாட்டிக்கிட்டோம் என்று அவன் பிடியிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தாள். அவனுக்கோ தன்னிடமிருந்து எப்படி அவள் ஓட பார்க்கலாம் தான் என்ன அவளை செய்துவிட்டோம் என்று தேன்மொழி மீது கோபம் கொண்டான் சந்தனபாண்டியன்.
 
அவளை தன் புறம் திருப்பியவன் “என்னை பார்த்தா எப்படிடி இருக்கு உனக்கு. நான் தொட்டா பிடிக்கலையா என்ன? பயந்து ஓடுற. நான் அப்படியே உன்மேல பாய்ஞ்சுடுவேன்னு பயப்படுறியா? என் மேல அவ்ளோ நம்பிக்கை உனக்கு ம்ம் போடி. என் ரூம்ல உனக்கு என்ன வேலை. சும்மா அறுபதடி கூந்தல் அதை என் ரூம்க்கு வந்து தான் காய வைக்கணுமா போடி வெளியே” என்று அவள் மீது உள்ள கோபத்தால் எரிந்து விழுந்தான்.
 
“நான் ஒண்ணும் உங்க ரூம்க்குள்ள வரலை அம்மாச்சி இனிமே உங்க ரூம்லதான் இருக்கணும்னு சொன்னாங்கனு வளர்மதி அக்கா என் ட்ரஸ் எல்லாம் இங்க கொண்டு வந்து வச்சிட்டாங்க. எனக்கு மட்டும் உங்க கூட இருக்க இனிக்குதாக்கும். எப்போ பாரு முகத்தை சிடு சிடுனு வச்சிக்கிட்டு. நான் இனிமே இங்க தான் இருப்பேன். இப்பவே போய் அம்மாச்சிகிட்ட நீங்க என்னை ரூமை விட்டு வெளியே போகச் சொல்றீங்கனு சொல்லட்டுமா” என்று கோபமாய் பேசினாலும் நாக்கை துறுத்திக் காட்டினாள். 
 
“அடிக்கழுதை இருடி வரேன் வாய் கொழுப்பு அதிகமாய் போச்சு” என்று அவளை பிடிக்க வர “போடா” என்று தலையை ஆட்டி இதழை கோணி விட்டு ஓடிச்சென்றுவிட்டாள் தேன்மொழி.
 
“எதுக்குடி இந்த ஓட்டம் ஓடி வர்ற பொண்ணுங்க பூமி அதிராம நடக்கணும்னு உனக்கு தெரியாதா” என்று தனபாக்கியம் தேன்மொழியை கடிந்துக் கொண்டார்.
 
“அப்போ பசங்க பூமி அதிர நடக்கலாமா அம்மாச்சி?” என்றாள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு
 
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுடி ஆத்தா. சந்தனபாண்டி எங்க ரெண்டு பேரையும் கோவிலுக்கு போக சொல்லியிருந்தேனே! நீ என்னடி இப்படி பாவாடை சட்டையில இருக்க. பட்டுச் சேலையை கட்டிட்டு கோவிலுக்கு போய் விளக்கேத்திட்டு வாங்க” என்றார் தனபாக்கியம்.
 
“இப்ப எதுக்கு கோவிலுக்கு போகணும் அப்பத்தா நாளைக்கு கடைசி எக்ஸாம் இருக்கு படிக்கணும்” என்றாள் சிணுங்கலாக.
 
“இந்தா இங்கன இருக்க கோவிலுக்கு போயிட்டு வர உனக்கு நேரம் ஆகுதா. போடி சும்மா ஓட்டை பானைக்குள்ள ஈ புகுந்த மாதிரி பேசிக்கிட்டே இருக்காத” என்று தனபாக்கியம் அவளை அதட்டல் போட
 
‘ம்க்கும் சும்மா இந்த அம்மாச்சி சிலுப்பு சிலுப்புனு சிலுப்புது இப்போ அந்த சிடுமூஞ்சி முகத்துல முழிக்கணும்’ என்று சலித்துக்கொண்டு அறைக்கதவை திறந்து உள்ளே போக சந்தனபாண்டியனும் கதவை திறந்து வெளியே வர இருவரும் மோதிக்கொண்டனர் மீண்டும்.
 
“நான் வேணும்னு மோதல” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு
 
“இப்ப எதுக்கு இங்க வந்த விசயத்தை சொல்லிட்டு அப்படியே கிளம்புடி” என்றவனிடம் “நாம ரெண்டுபேரும் கோவிலுக்கு போயிட்டு வரணுமாம் அம்மாச்சி சொல்லுச்சு. நான் ட்ரஸ் மாத்திட்டு வரேன். நீங்க வெளியே போங்க” என்றவளை முறைத்து “இது என்னோட அறை என்னை வெளியே போகச் சொல்ல நீ யாருடி” என்றவனோ சட்டமாக சோபாவில் வந்து அமர்ந்துக் கொண்டான் கால் மேல் கால் போட்டு.
 
“கடவுளே வந்த முதல்நாளே இம்புட்டு அலப்பறை பண்றீங்க மாமா இப்ப என்ன நான் உங்களுக்கு முத்தம் கொடுக்கணும் அவ்ளோதானே” என்று அவன் பக்கம் வந்து உட்கார்ந்தாள்.
 
“உன் முத்தம் யாருக்குடி வேணும். நாங்க ஒண்ணும் முத்தத்துக்கு நாக்கை தொங்க போட்டு அலையல. அப்புறம் எனக்கு முத்தம் கொடுனு  உன்கிட்ட கேட்கல” என்று அவளை வெறுப்பேத்தினான். 
 
தேன்மொழிக்கோ அவன் பேச பேச கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தன்னைத்தான் அலைஞ்சான் கேஸ் என்று மறைமுகமாக சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டவளோ “ஆமா நான் தான் முத்தத்துக்கு அலையுறேன் போதுமா மாமா வெளியே போறீங்களா! நான் உங்களை தள்ளிவிட்டு போனது தப்புதான் சரியா மன்னிச்சிடுங்க” என்று கையை நீட்டி வெளியே போகச்சொன்னாள்.
 
“அந்த பயம் இருக்கட்டும்டி” என்று மீசையை முறுக்கி கையில் போட்டிருந்த காப்பை ஏத்தி விட்டு கதவு வரை போனவன் “சேலைக்கு மடிப்பெடுக்க வேணா நான் இருக்கட்டுமா?” என்று கண்ணடித்து  கேட்டவனை இடுப்பில் கை வைத்து முறைத்த வேகத்தில் ‘ஆத்தாடி என் பூனைக்குட்டிக்கும் கோபம் வருதே’ என்று சிரித்தபடி வெளியேச் சென்றான் சந்தனபாண்டியன்.
 
சேலையை ஒன்றா இரண்டா கட்டிக்கொண்டு சமையல் கட்டுக்குள் வந்து “அக்கா இந்த புடவைக்கு மடிப்பு எடுத்து விடுங்க” என்று வளர்மதியின் முன்னே நின்றாள் தேன்மொழி.
 
வளர்மதியோ சப்பாத்திக்கு மாவு பிசைந்துக் கொண்டிருந்தாள். “அச்சோ இப்பத்தான் மாவு பிசையுறேன் தேனு அப்பத்தாகிட்ட போய் சேலையை சரி பண்ணிக்கோ” என்று மாவை பிசைய ஆரம்பித்தாள்.
 
“அம்மாச்சிக்கு சரியா எடுத்துவிடத்தெரியாதுக்கா கையை கழுவிட்டு நீங்களே எடுத்து விடுங்க” என்று சிணுங்கினாள் தேன்மொழி.
 
“தேன்மொழி ரெடியா?” என்று குரல் கொடுத்தான் சந்தனபாண்டியன்.
 
“தம்பி கொஞ்சம் இங்க வாங்களேன்” என்று சந்தனபாண்டியனை கூப்பிட்டாள் வளர்மதி.
 
“என்ன மதினி” என்று போய் நின்ற சந்தனபாண்டியனிடம் “இதோ உங்க பொண்டாட்டிக்கு ஹெல்ப் வேணுமாம் என்னனு கேட்டு செய்ங்க” என்று சாப்பாத்தி மாவை பிசைய ஆரம்பித்தாள்.
 
“என்ன ஹெல்ப் வேணும் வா செய்யுறேன்” என்று ஹாலுக்குள் கூட்டிவந்தான் தேன்மொழியை சந்தனபாண்டியன்.
 
“சேலைக்கு மடிப்பு எடுத்து விடணும்” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு
 
“நான் உன்கிட்ட பர்ஸ்ட் கேட்டேன்ல பிகு பண்ணின” என்று பேசிக்கொண்டே அவளுக்கு கீழே குனிந்து நின்று சேலைக்கு மடிப்பை சரி செய்துக் கொண்டிருந்தான்.
 
மாட்டுக்கு தீவனம் வைத்துவிட்டு வந்த தனபாக்கியமோ ‘அப்படியே தாத்தா போலவே மடிப்பு எடுத்து விடறான் பாரு’ என்று குமட்டில் கை வைத்து பேரனையும் பேத்தியையும் கண் நிறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்.
 
சேலைக்கு மடிப்பை எடுத்து விட்டு நிமிர்ந்தவன் “போலாமா?” என்றதும் “ம்ம் போலாம்” என்று திரும்ப தனபாக்கியம் நின்றிருந்தார்.
 
“என் கண்ணே பட்டிரும் போல” என்று இருவருக்கும் சேர்த்து நெட்டி முறித்து “எட்டு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திருக்கணும் கிளம்புங்க” என்று இருவரையும் அனுப்பி வைத்தார்.
 
கோவிலுக்குச் சென்றவர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து விட்டு சாமி கும்பிட்டு வெளியே வந்தனர்.  
 
மஞ்சள் வண்ணப்பட்டில் மயில் போல தன்னுடன் நடந்து வந்தவளை இரசித்தபடிதான் வந்தான் சந்தனபாண்டியன். உன்கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்கணும்னு தோணுதடி என்று அவளை கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டே வந்தான். 
 
காரில் ஏறி உட்கார்ந்தவள் “மாமா நமக்கு இன்னிக்கு பர்ஸ்ட் நைட்டா! அதான் அம்மாச்சி நம்மளை கோவிலுக்கு போகச் சொல்லியிருக்கா! இன்னிக்கே எல்லாம் வேணாம் மாமா நாளைக்கு ஒரு பரீட்சை இருக்கு” என்றாள் வெள்ளந்தி பெண்ணாக.
 
சந்தனபாண்டியனுக்கு குப்பென்று சிரிப்பு வந்துவிட்டது. “நீ படிப்பியோ மாட்டியோ எனக்கு தெரியாது இன்னிக்கு பர்ஸ்ட் நைட் நடந்தே தீரணும்” என்றவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு ‘உன்கிட்ட மட்டும்தான் டி என்னால ரொம்ப நேரம் கோபப் பட முடியலை. சும்மா சிரிப்பு வரது போல பேசிவிடுற’ என்று மனதில் நினைத்தவன் காரை ஓட்ட ஆரம்பித்தான்.
 
தனபாக்கியம் வீட்டு வாசலில் தேவி கையை பிசைந்துக் கொண்டு யாரும் பார்க்கிறார்களா என்று மறைவாய் நின்று பார்த்துக்கொண்டிருந்தார். பொன்மணி பக்கத்து ஊரில் அவரது நண்பரின் மகனுக்கு திருமணம் என்று சென்றிருக்க தேன்மொழியை பார்க்க வந்து விட்டார். தேன்மொழியும் சந்தனபாண்டியனும் கோவிலுக்கு போயிருப்பது தெரிந்து மகளை பார்த்துவிடணும் என்று தனபாக்கியம் வீட்டு வாசலில் நின்றிருந்தார் தேவி.
 
காரை நிறுத்திய சந்தனபாண்டியன் தேவியை பார்த்துவிட்டான்.
 
‘அக்கா எங்க வந்துச்சு’ என்றவன் “ஏய் தேனு அக்கா வந்திருக்காங்கடி” என்று அவளது தோளை தொட்டான். அவளோ இன்னிக்கு பர்ஸ்ட் என்றதிலிருந்து பித்து பிடித்தவள் போல இருந்தாள். ஒருபக்கம் மாமனை தவிக்க கூடாது என்று எண்ணம் இருந்தாலும் பரீட்சை முடியும் வரை காத்திருக்க கூடாதா என்று சந்தனபாண்டியன் மீது கோவமாய் இருந்தவள் அக்கா வந்திருக்கு என்றதும் ஜன்னல் வழியே பார்த்தாள். வாசலில் நின்றிருந்த தேவியை பார்த்ததும் கார் கதவை திறந்துக் கொண்டு “அம்மா” என்று ஓடி வந்து தேவியை அணைத்துக்கொண்டவளுக்கு கண்ணீர் தான் வந்தது.
 
“உங்க பொண்ணை பார்க்க இத்தனை நாள் கழிச்சு வந்திருக்கீங்கம்மா!” என்று கண்ணீர் விட்டாள் தேன்மொழி.
 
“உன் அப்பாவை பத்தி தெரிஞ்சுக்கிட்டே இப்படி பேசலாமா தேனுமா. உங்கப்பா பக்கத்து ஊருக்கு போயிருக்காரு அதான் உன்னை பார்க்க ஓடி வந்துட்டேன்டி” என்று தேன்மொழியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். 
 
“எப்படி இருக்க! அப்பா இன்னமும் உன்னை திட்டிட்டே இருக்காரா?” என்றாள் கண்ணீரை துடைத்துக்கொண்டே.
 
“அதெல்லாம் ஒண்ணும் இல்லடி. நீ எப்படி இருக்க. இன்னும் விஷேசம் இல்லையா?” என்று அவளது வயிற்றை பார்த்தார்.
 
“ம்மா நான் படிக்கணும்ல!” என்றாள் வெடுக்கென்று.
 
“அதான் நாளையோட படிப்பு முடியுதுல்ல. நாளை தள்ளிப்போடாம குழந்தையை பெத்துக்க தேனுமா. அப்ப தான் உன் அப்பா உன்னை பார்க்கணும்னு வருவாரு” என்றார். அவருக்கும் மகள் கலெக்டருக்கு படிக்கணுமென்ற ஆசை இருக்கத்தான் செய்தது. குழந்தை பெத்துக்கிட்டு படிக்கட்டும் என்று எண்ணித்தான் மகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.
 
சந்தனபாண்டியன் காரை லாக் செய்து விட்டு வந்தவன் “அக்கா வீட்டுக்குள்ள வாங்க ஏன் வெளியில நின்னுக்கிட்டு தேனு உள்ள வா” என்று கதவு பக்கம் போனவனை “தம்பி நான் வாசல்ல நின்னு தேனுகிட்ட பேசிட்டு போயிடறேன். மாமாவுக்கு நான் இங்க வரது பிடிக்கலை. என்னதான் இருந்தாலும் என் புருசன் பேச்சை மீறி வீட்டுக்குள்ள வரது சரியா படலை தம்பி என்னை மன்னிச்சிரு” என்றார் மனதை கல்லாக்கிக்கொண்டு.
 
“சபாஷ்” என்று கையை தட்டிய பொன்மணியோ “என் பொண்ணை வேணா நீ மயக்கி தாலி கட்டி கூட்டிட்டு வந்திருக்கலாம் சந்தனபாண்டி ஆனா நான் தாலிகட்டின பொண்டாட்டி என் பேச்சை மீற மாட்டா” என்று தேன்மொழியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே பேசினார். மகள் தன் பேச்சை கேட்கவில்லையே என்ற கோபத்தில்.
 
தனபாக்கியமும் வளர்மதியும் சத்தம் கேட்டு வெளியே வந்தனர். தனபாக்கியத்தை முறைத்த பொன்மணியோ நடுங்கிக்கொண்டிருந்த தேவியை பார்த்து “வாடி” என்று சொல்லிக் கொண்டே காருக்குள் ஏறி உட்கார்ந்தார் பொன்மணி.
 
பொன்மணி ஊருக்குள் வரும்போதே ஒருவன் “உங்க சம்சாரம் உங்க பொண்ணை பார்க்க தனபாக்கியம் ஆத்தா வீட்டுக்கு போயிருக்கு” என்று பத்த வைத்துவிட்டுச் சென்றான். 
 
“நான் அந்த வீட்டுக்கு போக கூடாதுனு சொல்லியிருக்கேன் என் பேச்சை மீறி போயிருக்கா பாரு” தேவி மீது கோபத்தில் தான் வந்தார் பொன்மணி. ஆனால் தேவியோ தன் பேச்சை மீறி தனபாக்கியம் வீட்டுக்குள் போக மாட்டேன் என்று சொன்னதும் அவருக்குள் பனிமழை கொட்டியது போல இருந்தது.
 
தனபாக்கியமோ “போடி ஆத்தா உன் புருசன் கூப்பிடுறான்” என்று கண்ணால் சைகை காண்பித்தார். போயிட்டு வரேன் அப்பத்தா என்று தலையை ஆட்டிய தேவியோ காருக்குள் ஏறிக்கொண்டார். 
 
அவருக்கு கணவரிடம் நல்லா பாட்டு வாங்கப்போகிறோம். என்ன ஆனாலும் பரவாயில்லை மகளை பார்த்தாயிற்று அவளது முகத்தில் இருந்த தேஜஸ் வைத்தே மகள் சந்தோசமாக இருக்கிறாள் என்ற நிம்மதியுடன் அமர்ந்திருந்தார் தேவி.
 
“என்னங்க பொண்ணை பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு அதான் வந்தேன் கோவிக்காதீங்க” என்று தடுமாறி பேசினார் தேவி.
 
“இனிமே எனக்கு தெரியாம பொண்ண பார்க்க வந்தனு தெரிஞ்சா  காலை வெட்டிடுவேன் பார்த்துக்க” என்றவரோ காரை ஓட்டுவதில் கவனமானார்.
 
‘ம்ம் இந்த மனுசன் திருந்திட்டா வானம் இடிந்து விழுந்திடும்’ என்று பெரும்மூச்சு விட்டுக்கொண்டார் தேவி.
 
அனைவரும் சாப்பிட்டு முடித்திருக்க தேன்மொழியோ ஹாலில் இருந்த சோபாவில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தாள்.
 
தன் அறைக்கு உறங்க போன தனபாக்கியமோ “என்னடி இங்க உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருக்க சந்தனபாண்டி அறைக்கு போய் படி” என்று அவளது கையிலிருந்த புத்தகத்தை வாங்கினார். 
 
சந்தனபாண்டியனோ மாட்டுத் தொழுவத்துக்கு சென்று வந்தவனிடம் “நீ என்னடா இன்னும் தூங்காம இருக்க. நேரமா போய் தூங்குற வழிய பாரு” என்றதும் “அப்பத்தா இன்னிக்கு ஒருநாள் நான் உங்க ரூம்ல படுத்துக்குறேன் நாளைக்கு வேணா மாமா ரூம்ல படுத்துக்குறேன்” என்றாள் இன்னிக்கு பர்ஸ்ட் நைட் நடந்துவிடும் என்ற பயத்தில்.
 
“இன்னிக்கு நாள் நல்லாயிருக்குனுதான் உன்னை சந்தனபாண்டி அறையில தங்கச் சொன்னேன் போய் படு” என்றவரோ அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் அறைக்குச் சென்றிருந்தார்.
 
“ஏய் பால் எடுத்துட்டு ரூம்க்கு வாடி” என்று வேஷ்டியை மடித்துக்கட்டிக்கொண்டு மீசையை முறுக்கிச் சென்றான் சந்தனபாண்டியன்.
 
“அச்சோ இந்த மாமா வேற சும்மா மீசையை முறுக்கி முறுக்கி விடறது” என்று சலித்துக்கொண்டு புக்கை எடுத்துக்கொண்டு அறைக்கு போனவளிடம் “தேனு நில்லுடி” என்று கையில் பால் டம்ளருடன் வந்தாள் வளர்மதி.
 
‘அச்சோ இதுவேறயா!’ என மனதிற்குள் பொருமிக் கொண்டு சென்றவள் “என்னது அக்கா” என்று தெரியாதது போல கேட்க “ம்ம் சந்தனபாண்டி தம்பிக்கு பால் கொடுத்துடு. எனக்கு சமையல்கட்டை ஒதுங்க வைக்கணும்” என்று பால் டம்ளரை தேன்மொழியிடம் கொடுக்க பால் டம்ளரை வாங்கிக்கொண்டு மெல்ல மெல்ல நடந்துச் சென்றாள் தேன்மொழி முகத்தில் வியர்வை வழிய. 
 

2 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top