ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 20
 
 
கதவை மெதுவாகத் திறந்து உள்ளேச் சென்றவளுக்கு பக்கென்று இருந்தது. கட்டிலில் இதய வடிவில் ரோஜா பூ அலங்காரம் செய்திருந்தது. கட்டிலுக்கு பக்கத்தில் நெய் லட்டும், ஜிலேபியும் தட்டில் இருந்தது.
 
‘ஸ்வீட்டெல்லாம் வச்சிருக்கே! என்னை என்ன பண்ணப்போகுதோ தெரியலையே இந்த முரட்டு மீசை. முத்தம் மட்டும்தான் வேணும்னு நினைச்சேன். ஆனா இந்த மீசை மாமா என்னை மொத்தமா பிரியாணி போட கேட்டா என்ன பண்ணுவேன்! வெடவெடனு வருதே’ என்று முகத்தில் பூதித்திருந்த வியர்வையை ஷாலால் துடைத்துக்கொண்டு கட்டிலுக்கு அருகே வந்தவள் ‘எங்க இந்த மாமாவ காணோம்?’ என்று அறையை சுற்றிப்பார்த்தாள்.
 
“என்னடி பர்ஸ்ட் நைட்டுக்கு கையில பாலோடு தயாரா வந்துட்ட போல” என்று கேட்டுக்கொண்டே கையில் மல்லிகைப் பூவை சுற்றி முகர்ந்தபடி வேஷ்டி சட்டையில் பால்கனியிலிருந்து அறைக்குள் வந்தான் சந்தனபாண்டியன்.
 
“மா.மாமா நான் தான் சொன்னேனே நா.நாளைக்கு எக்ஸாம் இருக்குனு. இன்னிக்கு வே.வேண்டாமே” என்றவளுக்கு குரல் கமறியது. அவனோ அவள் பேசுவதை காதில் போட்டுக்கொள்ளாமல் அவள் அருகே நடந்து வர. அவளோ அவன் நடந்து வரும் தோரணையை கண்டு மெல்ல பின்னே நடந்துச் சென்றவள் சுவற்றில் மோதி நின்றாள். 
 
“இதுக்கு மேல் நீ போக முடியாது குட்டிப் பொண்ணு” என்று கண்ணைச்சிமிட்டியதும் “மாமா ஒரு நாள் பொறுக்க முடியாதா அப்படி என்ன” என்று அடுத்த வார்த்தை பேச முடியாமல் நாக்கை கடித்துக்கொண்டாள்.
 
தேன்மொழியை அழுத்தமாக பார்த்தவன் அவள் கையிலிருந்து பாலை வாங்கி பாதி குடித்து முடித்து  மீதி பாலை “நீதான் குடிக்கணும் அப்பத்தா சொல்லியிருக்காங்க. இன்னிக்கு பர்ஸ்ட் நைட் நடந்தே ஆகணுமாம்” என்று ஒரு பொய்யை அடித்துவிட்டு தேன்மொழியிடம் பால் டம்ளரை நீட்டினான்.
 
“நி.நிஜமா அம்மாச்சி சொல்லுச்சா?” என்றாள் சந்தனபாண்டியன் சொன்னதை உண்மையென நம்பிய அம்மாஞ்சி பெண்.
 
“ஆமாடி நான் பொய் சொல்லுவேனா! வேணா இப்பவே வா அப்பத்தாகிட்ட கூட்டிக்கிட்டு போறேன்“ என்று தேன்மொழியின் கையை பிடித்தான் உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியபடி.
 
அவளது தொண்டைக்குள் பயபந்து உருண்டுக் கொண்டிருந்தது. “இல்ல வேணாம் மாமா. நான் நம்புறேன் ஆனா சீக்கிரமா என்னை விட்டிரணும் எனக்கு படிக்க இருக்கு” என்றாள் கண்ணைச்சுருக்கி. அவனுக்கே பாவமாய் தோன்றியது. சாய்ந்தரம் நம்மளை எப்படி வெறுப்பேத்தினா இப்ப கொஞ்சம் நேரம் விளையாடுவோம் என்று எண்ணியவன் “பாலை குடிக்கிறியா இல்ல நான் குடிக்க வைக்கவா?” என்று அவளது வாய் அருகே டம்ளரை கொண்டுச் சென்றான் மிரட்டும் தொனியில்.
 
“கொ.கொடுங்க நானே குடிக்கிறேன்” என்று கண்ணை உருட்டிக் கொண்டு பால் டம்ளரை வாங்கி குடித்துவிட்டு டேபிளில் வைத்துவிட்டு தலையை குனிந்து நின்றுக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கி விட்டது. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சத்தில்.
 
தேன்மொழியின் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்கள் கலங்கியிருப்பதை கண்டவனுக்கு அச்சோ என்றானது. சுட்டு விரலால் அவளது கண்ணீரை துடைத்துவிட்டு கையை விரித்து வா என்று தலையை அசைத்து கூப்பிட்டான். அவளோ மூக்கை உறிஞ்சினாலும் தாய் பறவையிடம் குஞ்சு அடைக்கலம் செல்லுமே அதுபோல சந்தனபாண்டியன் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டு “இன்னிக்கே எல்லாம் நடக்கணுமா மாமா எனக்காக ஒரு நாள் பொறுத்துக்க மாட்டியா?” என்று மூக்கை அவனது சட்டையில் தேய்த்தாள் சிறுபெண்போல.
 
அவனுக்கு சுருக்கென்று கோபம் வந்தாலும் சிறுபெண் போல நடப்பவளிடம் கோபம் கொள்ளமுடியாமல் அவளது முகத்தை கைகளால் நிமிர்த்தியவன் “என்னை பார்த்தா உனக்கு எப்படி தோணுது. நான் என்ன பொம்பளை சுகத்துக்கு அலையுறவன்னு நினைச்சியா புள்ள! உன் படிப்பு முன்னாடி என் ஆசைதான் பெரிசுனு நினைச்சிருந்தா உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்த அடுத்த நாளே உன்னை எடுத்துக்கிட்டிருந்திருப்பேன். படிக்கற பொண்ணு கழுத்துல தாலிகட்டிட்டேன்னு எவ்ளோ நாள் வருத்தப்பட்டேன்னு உனக்கு தெரியுமாடி! அப்படிப்பட்டவன் உனக்கு சும்மா முத்தம் கொடுக்க வந்தா என்னை தள்ளிவிட்டு ஓடுற ம்ம். எனக்கு முத்தம் கொடு மாமானு நீதானே என்கிட்ட கேட்ட புள்ள! பாவம் பொக்குனு போயிருவானு முத்தம் கொடுக்க வந்தேன். நீ என்னமோ உன்னை ரேப் பண்ண வந்தது போல என்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடுற. என்மேல உனக்கு அவ்ளோதான் நம்பிக்கையாடி” என அவள் கண்களை பார்த்தபடியே ஏக்கமாக பேசினான். அவன் குரலில் லேசான வலி தெரிந்தது.
 
“சாரி சாரி மாமா! உங்களை நான் புரிஞ்சிக்காம போனது என் தப்புதான் பாட்டி நம்மளை ஒரே அறையில தங்கச் சொன்னதும் இன்னிக்கே நாம ஒண்ணு சேர்வதுக்கு தான்னு நினைச்சிட்டேன்” என்றாள் தயங்கிய குரலில்.
 
“நமக்கு பர்ஸ்ட் நைட்டுனு சும்மா சொன்னேன். பாட்டி நம்ம ஒரே அறையில் தங்குறோம்னுதான் கோவிலுக்கு போகச் சொல்லியிருக்காங்கடி. நமக்கு பர்ஸ்ட் நைட் நடக்கறதா இருந்தா நம்ம அறையில இப்படி கொஞ்சமாவா பூ அலங்கரிச்சிருப்பேன். நம்ம தோட்டத்துல இருக்க பூவெல்லாம் பறிச்சு வந்து மாலையா கட்டி தொங்கவிட்டிருக்கமாட்டேன்” என்று மெல்லிய சிரிப்புடன் ஒற்றை கண்ணை சிமிட்டி மீசையை முறுக்கிவிட்டான் சந்தனபாண்டியன்.
 
தேன்மொழியோ வெட்கத்துடன் சந்தனபாண்டியனை கட்டிக்கொண்டாள். “ஏய் இப்படி கட்டிப்பிடிச்சு என்னை டெம்ப்ட் பண்ணாதடி குட்டிப்பொண்ணு” என்றான் பெரும்மூச்சு விட்டு.
 
“அப்படியா மாமா” என்றவளோ இன்னும் இறுக்கிக்கட்டிக்கொண்டாள் சந்தனபாண்டியனை. 
 
“ஏய் குட்டிப் பொண்ணு அப்புறம் அங்க இங்க கையை வைப்பேன் பரவாயில்லையாடி” என்றவன் சொன்னதோடு இல்லாமல் அவளது இடுப்பில் கையை வைத்து கிச்சு கிச்சு மூட்டினான்.
 
“கூசுது மாம்ஸ்” என்று அவனது அணைப்பிலிருந்து துள்ளி விலகியோடியவளின் கையை பிடித்தவன் அவளை அப்படியே தூக்கி கட்டிலில் போட்டவன் அவள் மீது பாரம் போடாமல் இருபக்கமும் கையை ஊன்றி “என்னடி லந்து காட்டுறீயா!” என்றவனோ அவளது முகம் நோக்கி குனிந்து மூக்கோடு மூக்கை உரச “ஆமா மாமா உன்கிட்ட லந்து தான்” என்று கண்ணைச்சிமிட்டினாள்.
 
“இப்ப உன்னை எதுவும் பண்ணமாட்டேன்கிற தைரியத்துல பேசுறியாடி” என்று அவளது இதழோடு 
தன் இதழை மெல்ல உரசினான். 
 
“ஆமா மாமா நீ ரொம்ப நல்லவன்” என்று கையை விரித்தாள் தாமரை பூ மலர்வது போல.
 
“அப்படியாடி” என்றவனோ அவளது இதழில் முத்தமிட ஆரம்பித்திருந்தான் கொஞ்சம் அதிரடியாக.
 
அவளும் அவன் கொடுக்கும் அதிரடி முத்தத்தில் முதலில் தடுமாறினாலும் அடுத்த நொடி அவன் கொடுக்கும் முத்தத்திற்கு ஈடு கொடுத்துக்கொண்டிருந்தவளின் கைகள் தானாக அவனது பின்னந்தலைக்குள் நுழைந்து கோதிவிட ஆரம்பிக்க இருவரும் தன்னிலை மறந்தனர். அறைக்குள் தனியாக வந்த நாளை முத்தத்துடன் ஆரம்பித்தனர்.
 
பெண்ணவளின் இதழை தேன் மிட்டாய் போல சுவைத்து புசித்துக்கொண்டிருந்தான் ஆண்மகன். அவளோ மூச்சுவிட சிரமப்பட சிறிது அவகாசம் விட்டு அவள் கண்களை கள்ளுண்டவனை போல பார்த்தவன் “என்னடி குட்டிப் பொண்ணு உன்னோட உதட்டுல வச்சிருக்க இனிச்சுக்கிட்டே இருக்கு” என்றான் இதழோடு முத்தம் வைத்து.
 
“ம்ம் தேன் கூடு கட்டிச்சு என் உதட்டுல” என்றாள் உதடு கடித்துக்கொண்டு
 
“அப்படியா இன்னும் கொஞ்சம் தேன் குடிச்சிக்கிட்டுமா” என்றவனோ “தேன் மட்டும்தான் வருமா இல்ல வேற என்னென்ன வரும்டி உனக்கு” என்றவனின் பார்வை அவள் கழுத்துக்கு கீழ் 
போக “ச்சீ போ மாமா” என்று அவனை தள்ளிவிட்டு எழுந்து குளியலறைக்குள் ஓடிவிட்டாள்.
 
“எப்போடி குட்டிப் பொண்ணு உன்னை முழுசா எடுத்துக்க போறேன்” என்று குப்புற படுத்துக் கொண்டான் அவஸ்தையில்.
 
குளியலறைக்குள் சென்றவளுக்கோ அவன் தொட்ட இடமெல்லாம் குறுகுறுவென சிலிர்த்து விட்டது. இடுப்பை தொட்டுப்பார்த்துக்கொண்டவளோ “என் இடுப்பை உடும்பு பிடியா பிடிச்சிருச்சு முரட்டு மீசை மாமா! இப்படி வலிக்குது” என்று முகம் சுருக்கிக்கொண்டாள். முகம் கழுவி வந்தவளுக்கு சூடான டீ போட்டு கொண்டு வந்து நின்றிருந்தான் அவளின் முரட்டு மாமன் சந்தனபாண்டியன்.
 
“தேங்க்ஸ் மாம்ஸ்” என்று வெட்கப்பட்டுக்கொண்டே அவன் கையிலிருந்த டீயை வாங்கிக் குடித்தவள் அடுத்த நாள் எக்ஸாமிற்கு படிக்க ஆரம்பித்தாள். அவள் எதிரே நாற்காலியை எடுத்துப்போட்டு தன் ரைஸ் மில் கணக்குகளை பார்க்க ஆரம்பித்தான்.
 
“நீங்க தூங்கலையா?” என்றாள் படிப்பதை நிறுத்திவிட்டு “பேசாம படிடி” என்றவனோ கணக்கை பார்க்க ஆரம்பித்திருந்தான்.
 
“மறுபடியும் முகத்தை சிடுசிடுனு வச்சாச்சு” என்று முணுமுணுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள். 11 மணிக்குமேல் தூங்கி வழிந்தாள். மீண்டும் ஒரு முறை டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தான். “ஓ எனக்கு டீ  போட்டு கொடுக்கத்தான்  நீங்க தூங்காம இருந்தீங்களா” என்று டீயை வாங்கி குடிக்க அவனோ “ஆமாடி” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே அவனுக்கும் போட்டு வந்திருந்த டீயை குடித்துக்கொண்டே கணக்கை பார்க்க ஆரம்பித்தான் சந்தனபாண்டியன்.
 
நடு இரவில் தேன்மொழி தூங்கி விழ. அவளது கையிலிருந்த புத்தகத்தை வாங்கி வைத்து அவளை தூக்கிக்கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் லைட்டை அணைத்துவிட்டு அவள் பக்கத்தில் படுத்தால் அவளின் கையும் காலும் சும்மா இருக்காது. நாமளும் கன்ட்ரோல் இழந்துவிடுவோம் என்று எண்ணியவன் சோபாவில் படுத்து உறங்கிவிட்டான்.
 
ஐந்து மணிக்கு அலாரம் அடிக்க அலாரத்தை ஆப்செய்து உறங்க ஆரம்பித்தாள் தேன்மொழி. ஆனால் சந்தனபாண்டியனோ மீண்டும் அவள் பக்கம் அலாரத்தை அடிக்க வைத்தான்.                                                                                                
“ச்சு மாமா நான் தூங்குறேன்” என்று திரும்பி படுத்தவளை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்று நிறுத்தியவன் தூக்கத்தில் தள்ளாடி நின்றவளின் முகத்தில் தண்ணீரை அடிக்க அவளோ தூக்கம் தெளிந்து அவன் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள்.
 
“ஏய்! ஏய்! நிறுத்துடி! இனிக்கு ஒருநாள் எக்ஸாம்க்கு படி” என்று அவளை முதுகில் ஒரு அடி வைத்து கூட்டி வந்து “ஒழுங்கா தூங்கி வழியாம படிடி நான் காபி போட்டு எடுத்து வரேன்” என்று சென்றுவிட்டான். சமையல்கட்டுக்குச் செல்ல அங்கே வளர்மதி காபி போட்டுக்கொண்டிருந்தாள். 
 
“என்ன தம்பி விடிய விடிய தூங்கலை போல கண்ணு எல்லாம் சிவந்து கிடக்கு”  என்று சிரித்தவளிடம் “நீங்க வேற மதினி அவ படிக்கறதுக்கு டீ போட்டு கொடுத்திட்டிருந்தேன்” என்றவனிடம் “நானும் அதைத்தான் சொல்ல வந்தேன்” என்று சிரித்தவளிடம் “மதினி காபி போட்டு கொடுங்க உங்க தங்கச்சி தூங்கிடுவா” என்று மெலிதாய் புன்னகைத்தான்.
 
“ம்ம் நீங்க வருவீங்கனு தெரியும்” ப்ளாஸ்க்கில் போட்டு வைத்திருந்த காபியை ஊற்றிக்கொடுத்தாள் வளர்மதி. 
 
“தேங்க்ஸ் மதினி” என்றவனிடம் “எதுக்கு புதுசா தாங்க்ஸ் சொல்லிக்கிட்டு தம்பி..! தேன்மொழி நம்ம வீட்டு பொண்ணுதானே அவளுக்கு டீ போட்டு தரதுக்கு எதுக்கு தேங்க்ஸ்” என்று சந்தனபாண்டியனை பொய்யாக முறைத்தாள் வளர்மதி.
 
“மதினி என் பொண்டாட்டி மறுபடியும் தூங்கிடுவா நான் காபியை கொண்டு போறேன்” என்று அவனது அறைக்குச் சென்று பார்க்க அவன் நினைத்தது போல கொட்டாவி விட்டுக்கொண்டே படித்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி.
 
“ஏய் தூங்கு மூஞ்சி காபி கொண்டு வந்திருக்கேன் குடிச்சிட்டு படி நான் தோட்டம் வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்” என்று காபியை தேன்மொழியிடம் குடிக்க கொடுத்து அவள் குடித்து முடித்ததும் கிளம்பிவிட்டான் சந்தனபாண்டியன்.
 
தேன்மொழி படித்துக்கொண்டிருந்தவள் மணியை பார்க்க  எட்டாகியிருக்க புத்தகத்தை மூடி வைத்துவிட்டு குளித்து ரெடியாகி தனபாக்கியத்தை பார்ப்பதற்கு பின் பக்கம் இருக்கும் மாட்டுத்தொழுவத்திற்கு வந்தாள். மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்யும் மாரியிடம் பேசிக்கொண்டிருந்தார் தனபாக்கியம்.
 
“அம்மாச்சி என்னோட தொந்தரவு இல்லாம தூங்கினீங்களா” என்று தனபாக்கியம்  தோளைக்கட்டிக்கொண்டாள் தேன்மொழி. 
 
“சின்ன பாப்பா இப்பவும் குழந்தை போல நடந்துக்குறீங்க” என்று தேன்மொழியை கிண்டல் செய்தாள் மாரி.
 
“ஏன் டியம்மா மாரி என்ற பேத்தி எனக்கு இப்பவும் குழந்தை தான்” என்று தேன்மொழியை தன் முன்னே நிற்க வைத்து நெட்டி முறித்தவர் “நீ எனக்கு தொந்தரவுனு எப்போ சொன்னேன்டி” என்று தேன்மொழியின் காதை திருகினார் தனபாக்கியம்.
 
“சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் அம்மாச்சி இன்னிக்கு கடைசி எக்ஸாம் உன்கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தேன்” என்றவள் தனபாக்கியம் காலில் விழுந்தாள் தேன்மொழி.
 
“நம்ம அங்காளஅம்மன் உனக்கு துணையா இருப்பாங்க நல்லபடியா பரீட்சை எழுதிட்டு வா” என்று ஆசிர்வாதம் செய்தார் தனபாக்கியம்.
 
சந்தனபாண்டியன் தோட்டத்திலிருந்து வந்தவன் குளித்து ரெடியாகி வந்ததும் சாப்பிட்டு முடித்து “போலாமா தேனு?” என்று கார் கீயை எடுத்தான். 
 
அதே நேரம் தனபாக்கியம் போனிற்கு தங்கபாண்டியன் அழைத்திருந்தான். “சொல்லு தங்கம் நீ வேலைக்கு கிளம்புற நேரம் ஆச்சே இந்நேரத்துக்கு போன் போட மாட்டியே ராசா ஏதாச்சும் உடம்பு சுகமில்லையா?” சிறு பதட்டத்துடன் வினவினார் தனபாக்கியம்.
 
“நா.நான் நல்லாயிருக்கேன் அப்பத்தா ஆர்.ஆர்த்தி இன்னிக்கு காலையில எழுந்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டா. ஆர்த்தியை ஹாஸ்பிட்டல அட்மிட் பண்ணியிருக்கேன் நீங்க கிளம்பி வரமுடியுமா?” என்றான் பரிதவிப்பாக. 
 
வெளியேச் சென்றிருந்த அருள் பாண்டியனும் அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்தான்.
 
மறுவார்த்தை பேசாமல் “அருளு நாம இப்பவே சென்னைக்கு கிளம்பலாம் ஆர்த்திக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிட்டல இருக்காளாம் காரை எடு” என எழுந்து நின்றார். 
 
அதே நிமிடம் அங்கே நின்றிருந்த வளர்மதி தலையை பிடித்துக்கொண்டு “என்னங்க” என்றபடியே மயக்கம் போட்டு விழுந்தாள்.
 
“வளரு என்னாச்சுடி?” என்று பதறி ஒரே எட்டில் ஓடிவந்து மனைவியை தாங்கிக்கொண்டான் அருள் பாண்டியன்.
 
தேன்மொழியோ தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து தண்ணீரை முகத்தில் தெளித்தாள். மயக்கம் தெளிந்தவளை சோபாவில் உட்கார வைத்த அருள் பாண்டியனோ “என்னடி காலையில சாப்பிட்டியா இல்லையா! இப்படி மயங்கி விழுறவ” என்று சற்று கடிந்துக் கொண்டு பேசினான். 
 
“ம்ம் சாப்பிட்டேங்க” என்றவளுக்கு குமட்டிக்கொண்டு வர எழுந்து வேகமாக ஓடினாள் வாஷ்பேஷனுக்கு. 
 
“என்னாச்சுடி” என்று மீண்டும் வளர்மதியின் பின்னே ஓடினான் அருள்பாண்டியன்.
 
தனபாக்கியமோ மெலிதாய் சிரித்துக்கொண்டார். தேன்மொழியோ ”அம்மாச்சி அக்கா ஏன் சும்மா வாந்தி எடுக்குறாங்க இன்னிக்கு காலையில நீங்க சமைச்சீங்களா அதை சாப்பிட்டுத்தான் அக்காவுக்கு ஃபுட் பாய்சன் ஆகிடுச்சு போல” என்று அந்த நேரத்திலும் விளையாட்டாய் பேசினாள் தேன்மொழி.
 
“ஏய் வாயை மூடிட்டு சும்மா உளறாம இருடி” என்று பல்லைக்கடித்தான் சந்தனபாண்டியன்.
 
வளர்மதிக்கு தண்ணீர் கொடுத்து வாய் கொப்பளிக்க வைத்து கூட்டிவந்தான் அருள்பாண்டியன்.
 
வளர்மதியின் நாடி பிடித்து பார்த்த தனபாக்கியமோ “நம்ம நந்தனுக்கு துணையா இன்னொரு தம்பியோ பாப்பாவோ வரப்போகுது! வளரு மாசமா இருக்கா” என்று முகம் மலர கூறினார். வளர்மதிக்கும் நாள் தள்ளிப்போனது தெரிந்து தான் இருந்தது. இன்று அருளிடம் சொல்லி ஹாஸ்பிட்டல் போகலாமென்றுதான் இருந்தாள்.
 
அதற்குள் ஆர்த்திக்கு உடம்பு சரியில்லையென்றதும் அருள்பாண்டியன் தனபாக்கியத்துடன் சென்னை கிளம்பட்டும் என்று தான் இருந்தாள் இப்படி மயக்கம் வருமென்று அவளுக்குமே தெரியாமல் போனது.
 
“அருளு நீ வளர்மதியை செக்கப்பிற்கு கூட்டிட்டு போ நான் சந்தனபாண்டியனை கூட்டிட்டு சென்னைக்கு கிளம்புறேன். நம்ம தங்கம் தனியா கிடந்து அல்லாடுவான்” என்று தவிப்பாய் கூறியதும் 
 
“அப்பத்தா நான் நல்லாத்தான் இருக்கேன்! நீங்க இவரை கூட்டிட்டு போங்க” என்றாள் வளர்மதி.
 
“நீ சும்மா இருடி! உன் புருசன் உன்கூட இருந்தாதான் சரிப்பட்டு வரும்! எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்வ அருளோட உருட்டலுக்குத்தான் நீ கட்டுப்பட்டு நடப்ப” என்றவர், “அடியே தேனு இன்னிக்கு கடைசி பரீட்சை எழுதிட்டு வந்து வளருக்கு வீட்டு வேலையில உதவியா இருக்கணும்! நாங்க ஆர்த்திக்கு உடம்பு சரியாகும்வரை சென்னையில இருந்துட்டு வருவோம்” என்றதும் “சரி அம்மாச்சி நீங்க போய்ட்டு வாங்க நான் வளரு அக்காவை பார்த்துப்பேன்” என்று தலையாட்டினாலும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்டு விடத் துடித்த நாவை கட்டுப்படுத்திக்கொண்டு சந்தனபாண்டியனை பார்த்தாள் தேன்மொழி.
 
சந்தன பாண்டியனோ தேன்மொழியின் முக பாவனையை படித்தவன் “க்கும்” என்று தொண்டையை செருமி 
தேன்மொழியின் பக்கம் வந்தவன் “சென்னைக்கு போனதும் போன் போடுறேன் நல்லபடியா எக்ஸாம் எழுது. அப்புறம் அந்த தென்னரசு உன்கிட்ட பேச வந்தா அண்ணாவுக்கு போன் போட்டுவிடு அண்ணா பார்த்துப்பாரு” என்று எச்சரிக்கையும் செய்து விட்டு தனபாக்கியத்தை கூட்டிக்கொண்டே சென்னைக்கு கிளம்பினான்.
 
தேன்மொழியை காலேஜில் விட்டு வளர்மதியை தங்கள் குடும்ப டாக்டரிடம் செக்கப்பிற்கு கூட்டிச்சென்றான் அருள்பாண்டியன. வளர்மதியை செக் பண்ணிய டாக்டர் லதாவோ “கங்கிராட்ஸ் அருள் உங்க வொய்ப் கன்சீவ்வா இருக்காங்க கரு வளர்ச்சியும் நல்லா இருக்கு. விட்டமின் டேப்லட் எழுதி தரேன் நெக்ஸ்ட் மன்த் செக்கப்பிற்கு வாங்க” என்று அனுப்பி வைத்திருந்தார்.
 
வளர்மதியை வீட்டுக்கு கூட்டி வந்த அருள்பாண்டியனோ “தேங்க்ஸ் அம்மணி” என்று கட்டிக்கொண்டான் வளர்மதியை.
 
“நாம எதிர்பார்த்தது போல ஒரு பாப்பா வரணும் அருளு” என்று அருள்பாண்டியன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். “கண்டிப்பா பாப்பாதான் வரும்டி” என்றவனோ அவளது இதழில் மென் முத்தம் பதித்து அவள் சோர்வாய் இருக்க “நீ கொஞ்ச நேரம் படுத்திருடி நான் ஜுஸ் போட்டு எடுத்துட்டு வரேன்” என்று சமையல்கட்டுக்கு வந்தவன் ப்ரிட்ஜிலிருந்து மாதுளையை எடுத்து சுத்தம் செய்து ஜுஸ் போட்டு எடுத்து வந்து வாந்தி எடுத்து சோர்வில் படுத்திருந்த வளர்மதியை எழுந்து உட்காரச் சொல்ல 
 
“நந்துக்கு எனக்கு மயக்கமே வரலைப்பா! ஆனா இந்த முறை எனக்கு ரொம்ப குமட்டலும் இருக்கு! மயக்கமும் வருதே” என்று தலையை பிடித்து எழும்ப “இருடி விழுந்திராத” என்று வளர்மதியின் அருகே உட்கார்ந்தவன் அவளை தன் மார்பில் சாய்த்து ஜுஸை குடிக்க வைத்தான்.
 
ஜுஸை குடித்ததும் கொஞ்சம் சோர்வு நீங்க “துணி கிடக்கு துவைச்சுட்டு வந்திடட்டுமா?” என்று எழுந்தவளை ஒரு பார்வை பார்த்தவன் “எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம் நீ இப்போ ரெஸ்ட் எடு” என்று படுக்கச் சொல்ல அமைதியாக படுத்தவள் அப்படியே உறங்கிவிட்டாள் வளர்மதி.
 
அவள் பக்கம் உட்கார்ந்திருந்தவன் தங்கபாண்டியனுக்கு அழைத்திருந்தான். “அண்ணா” என்றான் நலிந்த குரலில் தங்கபாண்டியன்.
 
“இப்போ ஆர்த்தி எப்படி இருக்கா டாக்டர் என்ன சொன்னாங்கடா! நீ தளர்ந்து போகாத தைரியமா இருக்கணும்” என்று தைரியம் கொடுத்தான் அருள்பாண்டியன்.
 
“ஆர்த்திக்கு நீர்கட்டி சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டாங்க அண்ணா” என்றான் தழுதழுத்த குரலில். 
 
“இதெல்லாம் சாதாரண விசயம்தான் தம்பி! ஆர்த்தி அம்மா கூட இருக்காங்க தானே” என்றதும் “அந்த அம்மா அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் போயிடுச்சு. ஆர்த்தி மயங்கினதும் எனக்கு படபடப்பு வந்து உடனே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்துட்டேன். டாக்டர் ஆர்த்தியை செக் பண்ணிட்டு சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டாங்க அண்ணா” என்றவன் குரல் அழுகையுடன்தான் வந்தது. 
 
“டேய் என்னடா சின்னப் பையன் போல அழற!” என்றவனுக்கு தம்பி அழறானே அவன் பக்கம் இருந்து ஆறுதல் கூற முடியவில்லையே என அருள் பாண்டியனின்  மனம் வெதும்பியது.
 
“தங்கம் அழாதடா சின்னவனும் அப்பத்தாவும் நைட்டுக்குள்ள சென்னைக்கு வந்துடுவாங்க! நீ தைரியமா இருக்கணும்!  நீயே அழுதிட்டிருந்தேனா ஆர்த்தியை எப்படி பார்த்துப்ப! ஆப்ரேசன் முடிச்சு ஒருவாரம் கழிச்சு நம்ம ஊருக்கு ஆர்த்தியை கூட்டிட்டு வந்துடு இனிமே சென்னையில நீ இருக்க வேண்டாம்” என்று கறாராக சொல்லிவிட்டான் அருள்பாண்டியன்.
 
அதற்குள் தங்கபாண்டியனை “சார் உங்க வொய்ப் உங்களை பார்க்கணும்னு சொல்றாங்க” என்றதும் “இதோ வரேன் சிஸ்டர்” என்றவன் “அண்ணா ஆர்த்தி கூப்பிடறா! நான் மறுபடியும் போன் பண்ணுறேன்” என்று வைத்துவிட்டு ஆர்த்தியை பார்க்கச் சென்றான் தங்கபாண்டியன்.
 
வாடிப்போய் படுத்திருந்த ஆர்த்தியை பார்த்த தங்கபாண்டியன் உடைந்து போனான். முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு “அம்மு சீக்கிரம் சரியாகிடும்” என்று அவளருகே உட்கார்ந்தவன் ஆர்த்தியின் கையை இறுக்கமாய் பிடித்துக்கொண்டான்.
 
“நான் உன்னை ரொம்ப தொந்தரவு பண்றேன்ல கோல்ட்” என்றவளுக்கு கண்ணில் கண்ணீர் கோடுகள் வழிந்தது.
 
“ஏய் அடிச்சிருவேன்டி இப்படி பேசாத என்னோட உசிரே நீதான்டி சின்ன ஆப்ரேசன்தான் எமோசன் ஆகாத” என்று நெற்றியில் மெல்ல முத்தமிட்டான். அதற்குள் டாக்டர் வந்தவர் “ஆர்த்தி இது ஸ்மால் புரோசியூஜர் தான் பயப்பட தேவையில்லை ஆப்ரேசன் தியேட்டர் போலாம்” என்று அவளது தோளில் தட்டிக்கொடுத்து “நர்ஸ் அழைச்சிட்டு வாங்க” என்று ஆப்ரேசன் தியேட்டர் சென்றுவிட்டார் டாக்டர்.
 
ஆப்ரேசன் முடித்ததும் மயக்கம் தெளிய அரைமணிநேரத்திற்கு மேல் ஆகிவிட வெளியே வந்த டாக்டரிடம் “என் வொய்ப் ஆர்த்தி” என்று தடுமாறிய தங்கபாண்டியனை பார்த்து சிரித்த டாக்டரோ “நீங்க ரெண்டு பேரும் லவ் மேரேஜா! உங்க வொய்ப் மயக்கம் தெளிய தெளிய கோல்ட் கோல்ட்னு உளறிக்கிட்டு இருக்காங்க ரெண்டு பேரும் செம கப்பிள் போங்க! உங்க வொய்ப்க்கு சர்ஜரி நல்ல படியா முடிஞ்சது ஒரு இரண்டு நாள் ஹாஸ்பிட்டல இருக்கட்டும்! அடுத்த நாள் டிஸ்சார்ஜ் பண்ணிடுறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
 
ஒரு மணிநேரத்தில் மயக்கம் தெளிந்த ஆர்த்தியின் பக்கத்தில் அவளது கையை பற்றியபடி உட்கார்ந்திருந்தான் தங்கபாண்டியன். 
 
ஆர்த்தி கண்விழித்ததும் “கோல்ட்” என்றாள் மெல்லிய குரலில்.
 
“ஸ்டெய்ன் பண்ணாத அம்மு” என்றான் அவளது தலையை நீவிவிட்டு.
 
“ம்ம்” என்றவளின் கண்ணில் கண்ணீர் வழிய கண்ணீரை விரலால் துடைத்து விட்டு “வலிக்குதாடி டாக்டரை அழைச்சிட்டு வரவா” என்று எழும்பியவனை “உட்காருங்க” என்று உதடசைத்தும் உட்கார்ந்துவிட்டான் தங்கபாண்டியன்.
 
“ஐ லவ் யு கோல்ட்” என்றிருந்தாள் ஆர்த்தி.
 
“மீ டு டி” என்று அவள் பிறை நெற்றியில் முத்தம் கொடுத்து “தூங்குடி காலையிலதான் சாப்பிட சொல்லியிருக்காங்க” என்றவனிடம் “நீங்க சாப்பிட்டீங்களா?” என்று மெதுவாய் கேட்டாள். 
 
“ம்ம் சாப்பிட்டேன்” என்றான் பொய்யாக.
 
“பொய் சொல்லுற கோல்ட் நீங்க சாப்பிடலை எனக்குத் தெரியும்” என்றாள் காய்ந்து போன உதடை கடித்தபடி.
 
“காலையில ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிட்டுக்கலாம்டி இப்ப தூங்கு” என்று அவளது கையை தடவிக்கொடுத்தான். அவளும் சோர்வில் உறங்கிவிட்டாள்.
 
சந்தனபாண்டியனும் தனபாக்கியமும் ஆர்த்தி அட்மிட் ஆகியிருந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்தவர்கள் ரிசப்சனில் ஆர்த்தியின் பெயரை சொல்லி கேட்க. ஆர்த்தி இருந்த அறை எண்ணை கூறிவிட இருவரும் ஆர்த்தி இருந்த அறையில் முன்னே நின்றதும் சந்தனபாண்டியன் தங்கபாண்டியனுக்கு போன் செய்தான். ஆர்த்தியின் தூக்கம் கெடக்கூடாதென போனை சைலண்டில் போட்டிருந்தான். போன் அடிக்க போனை  எடுத்தவன் “வந்துட்டீங்களா” என்று அறைக்கதவை திறந்து வெளியே வந்தான் தங்கபாண்டியன். தம்பியின் குரல் கேட்டதும் அவனுக்கு எதோ புத்துணர்வு வந்தது போல இருந்தது.
 
வெளியே நின்றிருந்த தனபாக்கியத்தை பார்த்த தங்கபாண்டியனோ “அப்பத்தா ஆர்த்தி மயங்கினதும் நான் பயந்துட்டேன்” என்று சிறுபிள்ளை போல பேசியவனை கண்டு அவருக்குமே மனம் சுணங்கியது. பத்து பேரை அடித்து போடும் அளவிற்கு உடம்பில் தெம்பு இருப்பவன் தன் பேரன். ஆனால் மனைவிக்கு சிறு உடம்பு உபாதை வந்த போது  உடைந்து போனானே என்று வருத்தம் கொண்டார் தனபாக்கியம்.
 
“எல்லாம் நல்லதுக்குத்தான் ராசா. இப்போ ஆர்த்தி எப்படி இருக்கா நான் பார்க்கலாமா?” என்று ஆர்ப்பரிப்பாய் கேட்டவரிடம் “பார்க்கலாம் அப்பத்தா” என்றவன் தன்னையே உற்று பார்த்திருக்கும் சந்தன பாண்டியனை பார்த்து “வா” என்று தலையை அசைத்தான்.
 
எதற்கும் அஞ்சாது இருக்கும் தன்  அண்ணன் இன்று கலங்கி போய் நிற்கிறானே என்று கவலையுடன் நின்றவன் “மதினி இப்போ நார்மலா தானே இருக்காங்க அண்ணா” என்றவனிடம்  “கொஞ்சம் பெட்டரா இருக்காடா” என்றான் சோர்வான குரலில்.
 
“அண்ணே மதினிக்கு உடம்பு கொஞ்சம் சரியானதும் நம்ம ஊருக்கு கூட்டிட்டு போயிடலாம்! இங்க இருந்தா நீ கவலைப்படுவ பேசாம வேலையை ரிசைன் பண்ணிட்டு வந்துடு அண்ணே” என்றிருந்தான் சந்தனபாண்டியன் அக்கறையாய்.
 
“அண்ணனும் இதையேதான் சொல்லுச்சு சின்னவனே நான் ஊரிலிருந்து வந்ததுமே வேலையை ரிசைன் பண்றதை பத்தி மேனேஜ்மென்டல பேசிட்டேன் இனி நம்ம ஊர்லதான் இருக்க போறேன்” என்று மெல்லச் சிரித்தான் தங்கபாண்டியன்.
 
“நல்லது ராசா ஆர்த்தியை பார்க்க போகலாம்” என்றவரோ “சின்னவனே நீ வெளியே நில்லு நான் பார்த்துட்டு வந்ததும் நீ ஆர்த்தியை போய் பாரு” என்று சந்தனபாண்டியனை வெளியே நிற்க வைத்து உள்ளேச் சென்றனர்.
 
வெயிலில் வாடிய கொடி போல படுத்திருந்தவளை பார்த்த தனபாக்கியமோ “புள்ள ரொம்ப நொடிச்சு போய் கிடக்கா ராசா இவ ஆத்தா இன்னுமா வரலை?” என்றார் கவலையாக.
 
“அந்த அம்மா அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் போயிடுச்சு அப்பத்தா” என்றான் கடுப்பாக.
 
“விடு ராசா நம்ம வீட்டுக்கு வந்த புள்ளையை நாம தான் கவனிக்கணும். அவங்க இந்தியாவுல இருந்திருந்தா இப்ப ஆர்த்தி கூட இருந்திருக்கலாம்” என்று தன்மையாக பேசினார் தனபாக்கியம்.
 
ஆர்த்திக்காக பொறுமையுடன் இருந்தான் தங்கபாண்டியன். ஆர்த்தியைதான் காதலித்தான்! அவளது குடும்பத்தை அல்லவே!
 
“காலையில ஆர்த்தி கண்ணு விழிச்சதும் நீங்க வந்து பாருங்க அப்பத்தா பக்கத்துல ரூம் காலியா இருக்குனு தெரிஞ்சு அதையும் எடுத்திருக்கேன் நீங்களும் சின்னவனும் தங்கிக்கோங்க உங்களுக்கு பயணகளைப்பு இருக்கும்ல” என்றவனிடம் “அடேய் நம்ம வீட்டுப்பொண்ணு வெயில போட்ட வெத்தலைகொடியா கிடக்கா எனக்கென்ன டா களைப்பு வேண்டிகிடக்கு! இப்படியே ஒரு ஓரமா உட்கார்ந்து ஆர்த்தியை பார்த்துப்பேன்” என்று அங்கே போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தவரை பார்த்து மெய்மறந்து நின்றான் தங்கபாண்டியன்.
 
“நீதான் களைப்பா கிடக்க போய் படுத்து தூங்கு ராசா! நான் என்ற பேத்தியை பார்த்துக்குறேன்” என்றதும் “அப்பத்தா நான் ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கணும்” என்று தனபாக்கியத்தை கட்டிக்கொண்டான்.
 
“அடேய் நீ என்னடா பள்ளிக்கூடம் போற சின்னபுள்ளையாட்டம் அழற! தூங்கு ஆர்த்தியை எழுப்பி விட்டிறாத” என்று பேரனை அதட்டல் போட்டதும் கண்ணைத்துடைத்துக்கொண்டு ஆர்த்தியை பார்த்துக்கொண்டே வெளியே வந்தான் தங்கபாண்யடின்.
 
ஆர்த்தி மீது அளவில்லா காதல் வைத்திருப்பவன் அவளை வெறுக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அறியாமல் போனான் தங்கபாண்டியன்.
 
காலேஜிலிருந்து வந்த தேன்மொழியோ அறைக்குச் சென்று குளித்து வந்தவளுக்கு சந்தனபாண்டியனின் நினைவு வந்தது. மாமா கார்ல போய்ட்டு இருக்கும் காலையில போன் பண்ணலாம் என்று மனதை தேற்றிக்கொண்டு வளர்மதியை பார்க்கச் சென்றாள்.
 
அவளோ அப்போது தான் எழுந்து உட்கார்ந்தவள் தேன்மொழியை பார்த்தவள் “டீ வேணுமா தேனு  போட்டு தரட்டுமா?” என்று எழும்பியவளை “அக்கா நீங்க உட்காருங்க! உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க போட்டு கொண்டு வரேன்”
இவ்ளோ நாள் எனக்கு என்ன வேணும்னு பார்த்து பார்த்து செய்து கொடுத்தீங்க இனிமே நான் உங்களுக்கு செய்ய போறேன்” என்று சிரித்தபடி சொன்னவளை பார்த்து
 
“உனக்கு சமைக்க வராதேடி நான் வரேன் இரு” என்று தடுமாறி எழுந்தவளை “அக்கா நான் சொன்னா கேட்க மாட்டீங்களா! அருளு மாமாவுக்கு போன் போடுவேன் பார்த்துக்கோங்க” என்று விரல் நீட்டி எச்சரித்தவள் சமையல்கட்டுக்குச் சென்று இரண்டு ஜுஸ் போட்டு எடுத்துச்சென்று வளர்மதியிடம் நீட்ட அவளும் களைப்பாக இருக்க ஜுஸை குடித்துவிட்டு
 
“தேனு எனக்கு இப்போ மயக்கம் எல்லாம் வரலை உனக்கு சமைக்க வராது நீ எனக்கு ஹெல்ப் பண்ணு நான் சமைக்குறேன்” என்ற பேசிக்கொண்டே எழுந்தவள் மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள் வளர்மதி.
 
 
நிலவு 21
 
 
அருள்பாண்டியன் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குள் நுழைந்தவன் சமையல்கட்டில் நுழையும் மனைவியை பார்த்து விட்டு ஒருநாள் சமையல்கட்டுக்கு போகாம இவளால இருக்க முடியாதா என்ற சிறு கோபத்துடன் அவள் பின்னேயே சென்று “ஏய் வளரு உன்னை யாருடி சமையல்கட்டுக்கு வரச் சொன்னது” என்று அதட்டல் போட்டு நின்றவனை திரும்பி பார்த்தவள்
 
“நான் நல்லாத்தான் இருக்கேன் அருளு! நம்ம நந்தன் வயித்துக்குள்ள இருக்கும்போதே சமையல் வேலை செய்தேன் தானே! இப்போ என்ன என்னை வேலை செய்ய வேண்டாம்னு கட்டுப்படுத்துறீங்க” என்று சிணுங்கியவளை “நம்ம நந்தன் வயித்துக்குள்ள இருந்தப்ப நீ இப்படி சோர்ந்து படுக்கவில்லையே அம்மணி! அதான் ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்” என்று அவள் பக்கம் நெருங்கி அவளது கையை பிடித்தான் அருள் பாண்டியன். 
 
“மாமா வந்துட்டீங்களா! அக்கா நான் சமைக்குறேன் நீங்க ரெஸ்ட் எடுங்கனு சொல்ல சொல்ல கேட்காம சமையல்கட்டுக்கு வந்துட்டாங்க” என சமையல்கட்டுக்குள் இடுப்பில் கைவைத்தபடி அருண்பாண்டியன் முன்னே வந்து நின்றாள்.
 
“தேனு உனக்கு சமைக்க வராதுனு எனக்கு தெரியும்டி நந்தன் குழம்பு நல்லாயில்லைனா ஒருவாய் சாப்பிட மாட்டான். அவனுக்கு காரம் ஆகாது உனக்கு குழம்புல எவ்ளோ சாம்பார் தூள் எவ்ளோ அளவு கலக்கணும்னு கூட தெரியாதுடி! நீ எனக்கு சமையல் பண்ண ஹெல்ப் பண்ணு போதும் ரெண்டு பேரும் தள்ளி நில்லுங்க” என்றவளுக்கு மீண்டும் தலை சுற்றிக் கொண்டு மயக்கம் வர தள்ளாடி நின்றவளை “அம்மணி பார்த்துடி” என பதறி தாங்கிப்பிடித்துக்கொண்ட அருள் பாண்டியனோ அங்கேயிருந்த நாற்காலியில் உட்கார வைக்க வளர்மதிக்கோ குமட்டிக்கொண்டு வர எழுந்து ஓடியவள் வாமிட் எடுக்க அதை கைகளில் ஏந்திக்கொண்டான் அருள்பாண்டியன்.
 
தேன்மொழியோ எலுமிச்சைபழம் எடுத்து ஜுஸ் போட ஆரம்பித்தாள். 
 
“சாரிங்க வாமிட் வந்துடுச்சு” என்று முகம் சுருக்கியவளை “மூச் பேசக்கூடாது அம்மணி அப்படியே உட்காரு” என்று அதட்டல் போட்டு கைகளை வாஷ் பண்ணிக்கொண்டு வந்தவன் வளர்மதியை கைத்தாங்கலாக தங்களது அறைக்குச் கூட்டிச்சென்று அவளுக்கு முகம் கழுவி விட்டு வேறு சேலையை மாற்றச் சொல்ல “என்னால முடியலங்க” என்று சோர்ந்து போனவளை கட்டிலில் உட்கார வைத்து வாட்ரோப்பில் இருந்த நைட்டியை எடுத்துக்கொடுக்க “அச்சோ பகலுல நான் நைட்டி போட மாட்டேனு உங்களுக்கு தெரியாதா” என்றவளை “இன்னிக்கு நீ அறையை விட்டு வரவே வேணாம்டி கொஞ்சம் பீரியா இருக்கும்னுதான் நைட்டி எடுத்துக்கொடுத்தேன்” என்றான் அக்கறையான குரலில்.
 
பெரிய வீட்டுக்காரர்களென்று ஊருக்குள் சிறு பிரச்சனை என்றாலும் தனபாக்கியத்தை தேடி வந்துவிடுவார்கள். அவர்களுக்கு டீ, காபி போட்டுக்கொண்டு போக வேண்டியிருக்கும் நைட்டியை போட்டுக்கொண்டுச் சென்றால் நன்றாக இருக்காது என்று வளர்மதி பகலில் நைட்டி போடவே மாட்டாள். சமையல்கட்டில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு குளித்து முடித்து தான் நைட்டியை போட்டுக் கொண்டு கட்டிலுக்கு வருபவளை “இந்த நைட்டிக்கு வேலையே இருக்காதே அம்மணி” என்று அருள்பாண்டியன் கிண்டல் செய்வான் வளர்மதியை.
 
வளர்மதிக்கும் சோர்வாய் இருக்க மெல்ல எழுந்தவள் தன்மேல் இத்தனை பாசமாய் இருக்கும் கணவனை கண்டவளுக்கு கண்ணீர் லேசாய் எட்டிப்பார்த்தது. அவளின் தாய் தந்தையர் இருவரும் நெருங்கிய சொந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டு வரும் வழியில் கார் ஆக்சிடன்டில் இறந்து போயிருந்தனர். அவர்களின் இறுதி காரியங்களை அருள்பாண்டியன் தான் நடத்தி முடித்திருந்தான்.
 
தனபாக்கியம் தாய் இல்லாத குறையை வளர்மதிக்கு கொடுக்கவில்லை. அவளையும் தன் சொந்த பேத்தியை போலத்தான் கவனித்துக்கொண்டார். வளர்மதிக்கு புடவை முதல் நகை வரை அவளுக்கு என்ன வேண்டுமோ அனைத்தும் வாங்கிக்கொடுத்து விடுவார். வளைகாப்பு ஊரையே கூட்டி நடத்தியிருந்தார் தனபாக்கியம்.
 
வளர்மதி முதலில் கர்ப்பமாய் இருக்கும் போது தாய் வீட்டை பற்றிய எண்ணமே வராது பார்த்துக்கொண்டான் அன்பான கணவனாய். இப்போதும் அதே அனுசரணையுடன். 
 
நைட்டியை வாங்கியவள் சேலையை கலைந்து நைட்டியை போட்டுக் கொண்டு  “உங்க பொண்ணு என்னை படுத்தி எடுக்க போறானு தெரியுது” என்று மெல்லச் சிரித்தவளின் நெற்றியில் முட்டி “நான் இருக்கேன் உன்னை பார்த்துக்க” என்றான் மீசையை முறுக்கியபடி
 
“அக்கா” என்று தேன்மொழியின் குரல் கேட்டு இருவரும் விலகி நின்றனர். “இந்தாங்க எலுமிச்சை ஜுஸ் குடிங்க வாமிட் வராது! பக்கத்து வீட்டு  பவானி அக்கா மாசமா இருக்கும்போது இப்படித்தான் சதா வாமிட் பண்ணிட்டே இருந்தாங்க! அம்மா அவங்களுக்கு எலுமிச்சை ஜுஸ்தான் போட்டுக்கொடுத்தாங்க! வாமிட் நின்னுருச்சு! நீங்களும் ஜுஸ் குடிங்க வாமிட் வராது” என்று கண்ணைச்சிமிட்டி வளர்மதியின் கையில் ஜுஸை கொடுத்தாள் தேன்மொழி.
 
“தேங்க்ஸ் தேனு” என்ற வளர்மதியும் ஜுஸை வாங்கி குடித்தவள் டம்ளரை தேன்மொழியிடம் கொடுத்துவிட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.
 
“அக்கா நான் சமைக்கப்போறேன்” என்றவளுக்கு என்ன சமைப்பது என்று தெரியவில்லை. அருள்பாண்டியனுக்கும் தேன்மொழிக்கு சமைக்க தெரியாது என்று தெரியும் இருந்தாலும் தேன்மொழி சமைக்கிறேன் என்று சொல்வதை அவனால் வேண்டாமென்று சொல்லமுடியவில்லை. 
 
சமையல்கட்டுக்குச் சென்றவள் பிரிட்ஜை திறந்து பார்த்தாள். மாவு இருந்தது. தோசை வார்த்துக்கொள்ளலாம் என நினைத்தவள் அம்மா தோசை ஊத்தணும்னா ஒரு மணிநேரத்துக்கு முன்னாடியே எடுத்து வைப்பாங்கல்ல நாமும் எடுத்து வைப்போம் என மாவை எடுத்து கொஞ்சமாய் ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துவிட்டு என்ன சட்னி அரைக்கலாம்னு தாடையில் கைவைத்து யோசித்தவள் ‘ம்ம் நந்துக்கு தக்காளி சட்னி பிடிக்கும்னு சொல்லுவான் எனக்கும் தக்காளி சட்னிதான் பிடிக்கும். அருளு மாமாவுக்கு தேங்காய் சட்னி பிடிக்கும்னு வளரு அக்கா சொல்லும். இப்ப ரெண்டு சட்னி அரைக்கணுமா நான் வேற பெருமையா சமைக்குறேன் சொல்லிட்டு வந்துட்டேன்’ தக்காளி கையில் எடுத்துக்கொண்டு எப்படி செய்வது என்று விழித்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
 
சாப்பிடுவதற்கு மட்டுமே சமையல்கட்டை எட்டிப்பார்க்கும் ரகம் தேன்மொழி. தேவி ‘சமையல்கத்துக்கோடி’ என்று பலமுறை காட்டுக்கத்தாய் கத்தியது எல்லாம் அவள் காதில் விழாமல் போனது. ஆனால் சமைக்கும்போது எப்படி சமைக்கிறார் என்பதை பார்த்துக்கொள்வாள் பின்னாளில் ஒருநாள் உதவலாமென்று. தக்காளியை கழுவி வைத்துவிட்டு வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள்.
 
இங்கே வளர்மதியோ “என்னங்க தேனுக்கு சமைக்க வராதுங்க நான் போகட்டுமா” என்றவளை முறைத்துப்பார்த்தவன் “தேனு குட்டி சமைக்குறேன்னு ஆசையா சொல்லிட்டு போயிருக்கா. அவ எப்படி சமைச்சாலும் நல்லாயிருக்கும்” என்று அக்காள் மகளை விட்டுத்தராமல் பேசியவன் “நீ ரெஸ்ட் எடு நான் போய் பார்க்குறேன்” என சொல்லிவிட்டு சமையல்கட்டுக்கு போய் பார்க்க சுடிதார் ஷாலை இடுப்பில் கட்டிக்கொண்டு யூ டியூப்பில் எப்படி தக்காளி சட்னி செய்வது என்ற வீடியோவை பார்த்துக்கொண்டே சமைத்துக்கொண்டிருந்தாள்.
 
“தேனு குட்டி நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டா?” என்றவனை “மாமா நீங்க உட்காருங்க நானே சமைக்குறேன்” என்று சந்தோசமாக சொல்பவளை ஆச்சரியத்தோடு பார்த்திருந்தான். இருந்தாலும் மனது கேட்காமல் “நந்து குட்டிக்கு பசிக்கும் நான் சட்னி அரைக்குறேன்” என்று துருவி வைத்திருந்த தேங்காய் எடுத்து பொட்டுக்கடலை சேர்த்து அரைத்துவிட்டான். 
 
அருள்பாண்டியன் வேலை செய்வதை பார்த்து “ஹான் மாமா உங்களுக்கு சமைக்க வருமா..!” என்று ஆச்சரியத்துடன் விழி விரித்து கேட்டவள் தக்காளி சட்னிக்காக வதக்கி வைத்திருந்ததை மிக்சியில் போட்டாள்.
 
“ம்ம் எனக்கும் சமைக்க வரும். உன்னோட அக்கா வந்தபிறகு என்னை சமையல்கட்டுப்பக்கம் விட்டதில்லை. அப்பத்தா எனக்கு சமைக்க சொல்லித்தந்துருக்காங்கடா” என்றான் சின்னச்சிரிப்புடன்.
 
வளர்மதிக்கோ அறையில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. நந்தன் மாரியுடன் தோட்டத்தில் விளையாடச் சென்றிருந்தான். சமையல்கட்டுக்குள் மெல்ல எட்டிப்பார்த்தவள் அருள்பாண்டியன் தோசை சுட்டுக்கொண்டிருந்ததையும் தேன்மொழி அவன் பக்கத்தில் நின்று “மாமா தோசை மெலிசா ஊத்தணும் மொத்தமா ஊத்தாதீங்கனு” சொல்லிக்கொண்டிருந்ததை பார்த்து சிரிப்புத்தான் வந்தது. 
 
ஏதேச்சையாக திரும்பி பார்த்த தேன்மொழி வளர்மதியை பார்த்து “உங்களை ரெஸ்ட் எடுக்கத்தான் சொன்னேன் இங்க யாரு வரச்சொன்னது” என்று அதிகாரமாய் கேட்டவளை “ஏய் ரொம்ப பண்ணாதடி” என்று விரலை நீட்டி எச்சிரித்துக்கொண்டே அருள்பாண்டினை ஒரு பார்வை பார்த்தபடியே கணவன் பக்கத்தில் வந்து நின்றவள் “இந்த பக்கம் வாங்க நான் தோசை ஊத்துறேன்” என்றவளை “நீ சும்மா உட்காருடி தோசை சுடுறேன் மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்துடாதே” என்று ஒரு விதமாக பேசியவனை இடுப்பில் கைவைத்து முறைத்தாள் வளர்மதி.
 
“தேனுகுட்டி நந்து தோட்டத்துல மாரி கூட விளையாடிட்டு  இருக்கான் அவனை கூட்டிட்டு வாடா” என தோசையை திருப்பி போட்டபடியே சொல்ல “ம்ம் கூட்டிட்டு வரேன் மாமா” என்று சென்றுவிட்டாள்.
 
தேன்மொழி சென்றதும் “யோவ் அருளு என்னை நோயாளி போல ட்ரீட் பண்ணாதடா” என்று அருள்பாண்டியன் கையிலிருந்த தோசை கரண்டியை வாங்க முற்பட்ட போது “அம்மணி தினமும் நீ சுட்டு போட்ட தோசையை நான் சாப்பிட்டேன்ல இன்னிக்கு நான் சுட்டு போடுறதை சாப்பிடுடி” என்றவன் தோசையை தட்டில் போட்டு வளர்மதியின் கையில் கொடுத்தான்.
 
“நீங்க சமைக்கறது எனக்கு கஷ்டமா இருக்குது அருளு” என்று தலையை சாய்த்து கண்ணைச்சுருக்கினாள்.
 
“இன்னிக்கு ஒருநாள் என் பொண்டாட்டிக்கு ஆசையா தோசை சுடுறேன்டி அதுல கட்டைய போடாத” என்று அவள் கன்னம் பிடித்து கொஞ்சியவன் தட்டில் இருந்த தோசையை பிய்த்து சட்னியில் தொட்டு வளர்மதிக்கு ஊட்டினான்.
 
“இப்படியொரு புருசன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் அருளு” என்றவளுக்கு ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது.
 
“ஏய் லூசு அம்மணி அழாதடி” என்று கண்ணீரை துடைத்துவிட்டவன் அவளது நெற்றியில் முட்டினான்.
 
“ம்மா பசிக்குது தோசை வேணும்” என்று சமையல்கட்டுக்குள் ஓடிவந்த நந்தனை அவன் பின்னால் வந்த தேன்மொழி தூக்கிக்கொண்டு “நான் தோசை ஊட்டுறேன் தங்கமே” என்று சுட்டு வைத்திருந்த தோசையை நந்தனுக்கு ஊட்டிவிட்டாள். தக்காளிசட்னி காரமில்லாமல்தான் அரைத்திருந்தாள். பிரமாதம் என்றில்லாமல் இருந்தாலும் சாப்பிடும் அளவிற்கு இருந்தது. நந்தனுக்கு ஊட்டி முடித்து தானும் சாப்பிட்டு “நந்துக்குட்டி இன்னிக்கு சித்தி கூட படுத்துக்குவியாம் சித்தி நிறைய கதை சொல்லுவேன்” என்று கண்ணை விரித்து கொஞ்சிப் பேசியவிதம் நந்தனுக்கு பிடித்துவிட “ம்மா நான் சித்தி கூட தூங்கட்டுமா?” என்று கண்ணை உருட்டி கேட்டான். 
 
“நீ தூங்கும்போது கையை காலை சித்தி மேல போடுவ அம்மா கூடவே தூங்கலாம்” என சிறு மிரட்டலோடு கூறியவளை இடைமறித்து “இன்னிக்கு ஒருநாள் தேனு கூட நந்தன் படுத்துக்கட்டும் வளரு” என்றான் மனைவியின் நலனில் அக்கறை கொண்டு.
 
“ம்மா ப்ளீஸ்” என்று கெஞ்சியவனை பார்க்க பாவமாய் இருக்க “சரி போ ஆனா சித்தியை தொந்தரவு பண்ணக்கூடாது” என்று சிறு எச்சரிக்கையுடன் தேன்மொழியுடன் உறங்குவதற்கு அனுமதித்தாள் வளர்மதி.
 
நந்தனுக்கு கதை சொல்லிக்கொண்டே இருக்க நந்தன் உறங்கிவிட்டான். அருள்பாண்டியன் தேனுவின் அறைக்குள் வந்து பார்க்க இருவருமே அசந்து உறங்கிக்கொண்டிருந்தனர் இருவருக்கும் போர்வையை போர்த்திவிட்டு வாசற்கதவை பூட்டிவிட்டு தங்களது அறைக்குள் போக வளர்மதியோ நந்தன் தன்வயிற்றின் மேல் காலை போட்டு உறங்கும் மகன் இல்லாது உறக்கம் வர மறுத்தது அவளுக்கு.
 
லைட்டை அணைத்தவன் “என்னடி தூங்காம இருக்க ஏதும் உடம்புக்கு பண்ணுதா?” என்று அவளின் பக்கம் வந்து உட்கார்ந்தவன் வாஞ்சையாக தலையை தடவியபடி கேட்டான்.
 
“நந்து இல்லாம தூங்கம் வரலைங்க” என்றாள் கவலையான குரலுடன்.
 
“அம்மணி நந்து உன்மேல கையை காலை போடுவான்னுதான் தேனுகூட படுக்க சம்மதிச்சேன்! இந்த மாதிரி நேரத்துல நீ கவலைப்படுவது நல்லதல்லடி” என்றவனோ அவளை மெதுவாய் அணைத்துக்கொண்டான். 
 
“ம்ம் உங்களுக்கு என்னை கட்டிபிடிச்சு தூங்கணும் அதான் நந்துவை தேனுகூட அனுப்பி வச்சிட்டீங்க” என்று உதடு கடித்து மெலிதாய் சிரித்தவளை கண்டு பொய்யாக கோபம் கொண்டு “அப்படியும் வச்சிக்கலாம்” என்று அவளின் வயிற்றில் மெல்ல கையை வைத்து “குட்டி பாப்பா அம்மாவுக்கு தொந்தரவு கொடுக்காத சமத்தா இருங்க” என்று நைட்டிக்கு மேலாகவே முத்தம் பதித்து “இந்த நைட்டி ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்குடி” என்றவனை முறைத்துப்பார்த்தாள். “முறைக்காதடி சும்மாதான்” என்று புன்னகை பூத்தான்.
 
சோர்வில் வளர்மதி உறங்கி விட அருள்பாண்டியனுக்கு உறக்கம் வரவில்லை. ஏதோ பொருள் விழுந்த சத்தம் கேட்க மெல்ல எழுந்தவன் தேனுவின் அறைக்குள் வர அவர்கள் உறங்கியபடிதான் இருந்தனர். வாசற்கதவை பார்த்தான் பூட்டித்தான் இருந்தது. ஜன்னலை திறந்து தோட்டத்தை நோட்டம் விட காவல் காக்கும் வீரன் கம்பை கையில் பிடித்து சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தான். நாகப்பனின் ஆட்கள் எந்த நேரத்திலும் எதையும் செய்வார்கள் என எச்சரிக்கையாய் இருந்தான் அருள்பாண்டியன்.
 
தனபாக்கியத்திற்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளாது என வீட்டுமுறை சமையல் எங்கே என்று அவனது நண்பர்களிடம் கேட்டு தெரிந்து தேடி இரவு சாப்பிடுவதற்கு உணவு வாங்கி வர சந்தனபாண்டியனை கூட்டிக்கொண்டுச் சென்றான் தங்கபாண்டியன்.
 
போகும்போது “அப்பத்தா ஆர்த்தியை பார்த்துக்கோ” என்று அழுத்தி சொன்னவனை “ஏலேய் உங்களை எல்லாம் இவ்ளோ பெரிய ஆளா வளர்த்திருக்கேன்..! உன் பொண்டாட்டியை பார்த்துக்க மாட்டேனா போடா பொசக்கெட்ட பயலே..!” என பேரனை செல்லமாய் கண்டித்து அனுப்பினார் தனபாக்கியம்.
 
ஆர்த்தி ஆப்ரேசன் செய்த அசதியில் உறங்கிக்கொண்டிருந்தவள் “கோல்ட்” என்றவள் மெல்ல கண்விழித்தாள். அடிக்கடி தங்கபாண்டியனை கோல்ட் என்ற கூப்பிட்டதை தனபாக்கியம் கேட்டிருக்கிறார். 
 
‘ஹான் நானெல்லாம் அந்த காலத்திலேயே என் புருசனை செல்லானு செல்லப்பேரு கூப்பிட்டவடி’ என்று சிலுத்துக்கொண்டு ஆர்த்தியின் பக்கம் சென்றவர் “ஆத்தா ஆர்த்தி உடம்புக்கு ஏதும் பண்ணுதா?” என்று அவளது தலையை வாகாக நீவி விட வயலில் வேலை செய்து தனபாக்கியத்தின் கை சொரசொரப்பாக இருக்க இது தன்னவன் கையில்லையே என்று கண்ணை நன்றாக 
விழித்துப்பார்த்தவளுக்கு தனபாக்கியத்தை பார்த்ததும் மனதில் ஒரு பூரிப்பு வந்தது.
 
தன் பக்கம் மனம் கொண்ட மன்னவன் இருந்தாலும் தாய் தன் பக்கம் இல்லையே என்ற வருத்தம் அவளுக்குள் இருந்தது என்னவோ உண்மைதான். தாயை விட பக்குவம் தெரிந்தவர் தனபாக்கியம் என்ற அறியாதவளா ஆர்த்தி. தனபாக்கியதை பார்த்ததும் கண்களில் நீர் பெருக்கெடுத்தது அவளுக்கு. 
 
இத்தனை நாளும் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றால் தனபாக்கியத்தை ஒரு பொருட்டாக கூட மதிக்கமாட்டாள். ஆனால் தனபாக்கியம் ஆர்த்தியை அன்னிய வீட்டு பெண் போல நடத்தமாட்டார். அவளிடம் அதிகம் பேச்சுக் கொடுக்காமல் இருந்தாலும் வளர்மதிக்கு என்ன சீர்வரிசை செய்தாரோ அனைத்தும் ஒரு குண்டு மணி கூட மாறாமல் செய்துவிடுவார்.  ஆர்த்திதான் அதிலும் குறைகண்டுபிடிப்பாள். தங்கபாண்டியன் ஒரு பார்வையால் அடக்கிவிடுவான்.
 
இன்று தன்னை பார்க்க மதுரையிலிருந்து சென்னை வந்தவரிடம் “என்னால உங்க பேரனுக்கு ஒரு குழந்தையை பெத்துக்கொடுக்கு முடியலையே அப்பத்தா” என்று விசும்ப ஆரம்பித்தாள். 
 
“யாருடி இவ ஆப்ரேசன் பண்ணின நேரத்துல இப்படி அழுவறவ உடம்புக்கு ஒண்ணுக்கிடக்க ஒன்னு ஆகிட போகுது” என்று அவளது கண்ணீரை துடைத்துவிட்டு “இப்படி அழுது உடம்பை கெடுத்துக்காம என்கூட ஊருக்கு வா நல்லா பதமா மூணுமாசம் என் கையால சமைச்சு போடுறேன்! நாலாமாசம் நீ மாசமாகலை என்னை கேளு” என்று உரக்கச் சொன்னவரை கடவுளாய் பார்த்தாள் ஆர்த்தி. இப்படி பேசும் நல்ல மனசுக்காரரை எத்தனை வார்த்தை குத்தி பேசிவிட்டேன் மனம் வெதும்பினாள் ஆர்த்தி.
 
அவள் மனதை படித்த தனபாக்கியமோ “கண்டதையும் போட்டு குழம்பிக்காம கண்மூடி உறங்கு நீ அழுவறதை பார்த்தா..! என் பேரன் மனசு நோவும்” என்றார் பெரும்மூச்சு விட்டபடி.
 
“ம்ம் அழலை பாட்டி கோல்ட் வெளியே இருக்காரா அவரை கூப்பிடுங்களேன் பாட்டி” என்று கால்களை குறுக்கினாள். காலில் ஏனோ அவளுக்கு வலி வந்தது. 
 
“அவன் எனக்கு சாப்பாடு வாங்கியாற போயிருக்கான்மா நீ தூங்கு” என்று அவள் கால் பக்கம் வந்தவர் கால்களை நீட்ட சொல்ல அவளும் நீட்ட ஆர்த்தியின் கால்களை பிடித்துவிட “பாட்டி நீங்க போய்” என்ற பதறியவளை “இப்ப எதுக்கு இந்த பதட்டம் சும்மா படுத்துகிட” என்று அன்பாய் அதட்டல் போட்டவரை கண்கொட்டாமல் அதிசயமாய் பார்த்தாள்.
 
சாப்பாடு பார்சலுடன் வந்தவன் தன் மனைவியின் கால்களை பிடித்திருப்பதை பார்த்த தங்கபாண்யடினோ “அப்பத்தா நீ ஏன் ஆர்த்தி காலை பிடிக்கற எழும்பு! நான் பிடிச்சுவிடுறேன்” என்று ஆதங்கப்பட்டு பேசியவனை “சும்மா சலம்பாதடா பேராண்டி இப்ப யாரு காலை நான் பிடிச்சு விடறேன்..! தேனு குட்டிக்கு கால் வலிக்குதுனு சொன்னா பிடிச்சு விடுவேன் தானே..! உன் பொண்டாட்டியும் எனக்கு பேத்தி முறைதான்..! அவ காலை பிடிச்சு விடறது தப்பில்லை வாங்கிட்டு வந்த இட்லியை பிரிச்சு வையி கையை கழுவிட்டு வாரேன்..!” என்றவரை நீ எங்களுக்கு கிடைச்ச குலதெய்வம் அப்பத்தா என்று கண்ணைமூடித்திறந்தான். 
 
ஆர்த்தியின் மனதில் தனபாக்கியம் கோவில் கருவறையில் இருந்த அம்மன் தெய்வம் தனக்கு துணையாய் வந்ததை போல உணர்ந்தாள்.
 
சந்தனபாண்டியன் தான் உள்ளேச் சென்றால் ஆர்த்தி சங்கடமாய் உணர்வாளோ என்று அறைக்கு வெளியேவே நின்று விட்டான்.
 
தனபாக்கியம் வாஷ்ரூம் சென்றதும் “கால் வலிக்குதா அம்மு” என்று உருகி கேட்டவன் அவள் காலடியில் உட்கார்ந்தவன் தன் மடியில் அவளது காலை எடுத்து வைத்து அமுக்கிவிட்டான்.
 
“இப்ப கால் வலி இல்ல கோல்ட் பாட்டி வந்துருவாங்க எனக்கு சங்கடமாய் இருக்கும்” என்றவளின் பேச்சை காதில் போட்டுக்கொள்ளாமல் காலை மென்மையாய் பிடித்துவிட ஆரம்பித்தான்.
 
வெளியே வந்த தனபாக்கியமோ அப்படியே என் பேரன் என் புருசனை போலவே இருக்கான் என்று சந்தோசப்பட்டவர் உணவு பார்சலை எடுத்துக்கொண்டு “தங்கம் சின்னவன் சாப்பிட்டானா?” என்று கேட்டுக்கொண்டே பார்சலை பிரித்தார். 
 
“ம்ம் நாங்க சாப்பிட்டுத்தான் உங்களுக்கு வாங்கிட்டு வந்தோம். அப்பத்தா..!” என்றதும்தான் சாப்பிடவே ஆரம்பித்தார் தனபாக்கியம்.
 
சந்தனபாண்டியன் வந்தது இப்போதுதான் ஆர்த்திக்கு தெரிய “கோல்ட் உங்க தம்பி வந்திருக்காரா எங்க காணோம்?” என்று புருவம் இடுக்கி கேட்டவளிடம் “ஹான் தம்பி உனக்கு அன்கம்ஃபர்ட்டபுளா இருக்கும்னு அறைக்கு வெளியே இருக்கான்” என்ற சொல்லியபடி அவன் வேலையை செய்துக் கொண்டிருந்தான்.
 
“இப்ப கால் வலி இல்ல எனக்கு பெட்சீட் போர்த்திவிட்டு உங்க தம்பியை வரச்சொல்லுங்க” என்றவளை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தான். சந்தனபாண்டியனை குடிகாரன் என்று ஏசி கிண்டல் செய்து பேசியவள்தானே ஆர்த்தி. இந்தளவு மலை இறங்கி வந்தாளே மனைவி என்று சந்தோசத்தோடு ஆர்த்திக்கு போர்வையை போர்த்தி விட்டு வெளியே வந்தவன் “சின்னவனே வா” என்று அழைத்து வந்தான்.
 
“இப்போ உடம்புக்கு பரவாயில்லையாங்க மதினி” என்று மரியாதையாக பேசியவனிடம் “ம்ம் நல்லாயிருக்கேன்” என்று தலையசைத்தாள். தங்களுக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியே வந்தது ஆர்த்திக்கு. 
 
சந்தனபாண்டின் அடுத்த நிமிடமே வெளியே வந்துவிட்டான். தனபாக்கியம் சாப்பிட்டு முடித்து ஆர்த்தியுடன் தங்கிக்கொண்டார்.  சந்தனபாண்டியனும் தங்கபாண்டியனும் பக்கத்து அறைக்கு வந்து படுத்துக்கொண்டனர். 
 
சந்தனபாண்டியன் கார் ஓட்டி வந்த அசதியில் உறங்கிவிட்டான். தங்கபாண்டியன் தான் உறக்கம் வராமல் புரண்டு படுத்தவன் இடையே இடையே ஆர்த்தியை வந்து பார்த்துக்கொண்டான்.
 
இடையில் தங்கபாண்டியன் எழுந்துச் சென்ற நேரத்தில் விழிப்பு வந்த சந்தனபாண்டியன் தேன்மொழியை நினைத்துக்கொண்டான். ‘என் பொண்டாட்டி சரியான தூங்கு மூஞ்சி இந்த நடுராத்திரி முழிச்சிருப்பாளா போன் பண்ணுவோமா’ என்று போனையே பார்த்திருந்தான்.
 
தேன்மொழிக்கும் உறக்கம் கலைந்து விட்டது. ‘மாமாவுக்கு போன் போடலாமா ச்சே வேண்டாம் அவ்ளோ தூரம் காரோட்டிட்டு போனவரு அசதியில தூங்கியிருப்பாரு காலையில போன் செய்துக்கலாம்’ என்று நந்தனை அணைத்தபடி படுத்துவிட்டாள்.
 
தங்கபாண்டியன் அறைக்குள் வர சந்தனபாண்டியன் உறங்குவது போல கண்ணைமூடிக்கொண்டான்.
 
அடுத்தநாள் காலையில் வந்த டாக்டரோ ஆர்த்தியை செக் பண்ணிவிட்டு “நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.. ஆனா ஆர்த்தி ஒரு டென் டேஸ் ட்ராவல் பண்ணக்கூடாது..!” என்று உறுதியாக சொல்லிச் சென்றிருக்க தனபாக்கியம் யோசிக்க ஆரம்பித்தார்.
 
அடுத்த நிமிடம் வெளியே வந்தவர் சந்தனபாண்டியனிடம் “சின்னவனே நீ நம்ம பொன்னியை ஒரு எட்டு பார்த்துட்டு நாளைக்கு நீ மதுரைக்கு கிளம்பிவிடு..! உங்க அண்ணன் அருளு ஒத்தையா நின்னு எல்லாத்தையும் கவனிக்க சிரமமாயிருக்கும்” என்றதும் உடனே “சரி அப்பத்தா” என்றான் சிரத்தையாக சந்தன பாண்டியன்.
 
தங்கபாண்டியனுக்கும் இங்கிருக்கும் வேலைகளை முடித்துக்கொடுக்க ஒரு பத்து நாட்கள் தேவையாயிருக்க சென்னையிலேயே தங்க வேண்டியதாய் போனது.
 
அருள்பாண்டியனிடம் ஆர்த்தியின் நிலைமையை சொல்லி “ஒரு பத்துநாள் நான் சென்னையில இருக்கேன் ராசா! சின்னவனை ஊருக்கு அனுப்பி விடறேன்! நடவு வேற நட வேண்டியிருக்கு கொஞ்சம் பார்த்துக்க ராசா” என்று போனை வைத்திருந்தார் தனபாக்கியம்.
 
அடுத்தநாள் ஆர்த்தியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றனர். “இன்னையோட என்ற பேத்தியை பிடிச்ச பீடையெல்லாம் தூர போகட்டுமென்று” ஆரத்தி எடுத்து ஆர்த்தியை வீட்டுக்குள் அனுப்பிவைத்தார். தனபாக்கியத்தின் மேல் மலையளவு பாசம் பெருகியது ஆர்த்திக்கு.
 
அன்று மதியம் பொன்னியை பார்க்கச் சென்றிருந்தான் சந்தனபாண்டியன். அவ்வப்போது தங்கபாண்டியன் பொன்னியை பார்த்து வருவான் அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்துவிட்டு வருவான். 
 
பொன்னிக்கு பெண்குழந்தை பிறந்திருக்க பை நிறைய விளையாட்டுசாமான்கள் அவளுக்கு பிடித்த பலகாரங்கள் வாங்கி கொடுத்திருந்தார் தனபாக்கியம்.
 
“மாமா” என்று ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் பொன்னி சந்தனபாண்டியனை.
 
சந்தனபாண்டியன் மாதத்தில் ஒருநாள் வந்து பொன்னியை பார்த்துவிட்டுத்தான் செல்வான். 
 
“என்னடா எப்படியிருக்க?” என்று நலம் விசாரித்தவன் பொன்னியின் மகளை கொஞ்சி தீர்த்தான். இரவு நெருங்கும்முன் மதுரைக்கு கிளம்பச் சொல்லியிருந்தார் தனபாக்கியம்.
 
அன்றிரவே சந்தனபாண்டியன் மதுரைக்கு கிளம்பியிருந்தான். மதுரைக்கு கிளம்புவதை அருள்பாண்டியனிடம் சொல்லியிருந்தான். தேன்மொழியிடம் தான் வருவதை சொல்ல வேண்டாம் என சொல்லி விட்டான். தேன்மொழியிடம் போனில் கூட பேசவில்லை. சர்பிரைஸ் கொடுக்கலாமென்று எண்ணிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.
 
தேன்மொழியோ ‘ஒரு போன் கூட இந்த மாமா பண்ணலை வரட்டும் மண்டையில நாலு கொட்டு வைக்குறேன்’ என்று புலம்பிக்கொண்டு வேலையை செய்துக் கொண்டிருந்தாள். துணி துவைக்கிறேன் என்ற பெயரில் தொப் தொப்பென்று மூச்சு வாங்க துணி துவைத்தாள்.
 
நந்தனை இன்று தன் அறையிலேயே படுக்க வைத்துக்கொண்டாள் வளர்மதி. அருள்பாண்டியனும் சந்தனபாண்டியன் வந்துவிடுவான் என்று எண்ணியவன் கதவை பூட்டுவிட்டு “பத்திரமாய் படுத்துக்கோ தேனுகுட்டி” என்று சென்றுவிட்டான்.
 
அச்சோ நாம தனியா தூங்கணுமா தூக்கம் வராதே என்று லைட் கூட அணைக்காமல் படுத்திருந்தாள். கதவு திறக்கும் ஓசை கேட்டு தேன்மொழிக்கு திக்கென்றிருந்தது.
 
இந்த நேரத்தில யாரு வந்திருப்பாங்க என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்து வெளியே வந்தாள். சந்தனபாண்டியன் தேன்மொழியை பார்க்கும் ஆசையில் கதவை திறக்க தேன்மொழி கையில் கட்டையை வைத்துக்கொண்டிருந்தாள். லைட் போடாமல் இருக்க வெள்ளை வேட்டியில் சென்ற சந்தனபாண்டியன் ஜீன்ஸ் பேண்ட் போட்டு வர இருட்டில் அடையாளம் தெரியவில்லை திருடன் என்று நினைத்து “அருளு மாமா நம்ம வீட்டுக்குள்ள திருடன் வந்துட்டான்” என்று சத்தம் போட்டு சந்தனபாண்டியனை கட்டையால் அடிக்க போனவளை “அடியேய் அறிவுகெட்டவளே நான் உன் புருசன் சந்தனபாண்டியன் நல்லா பாருடி! இவளுக்கு போய் சர்ப்ரைஸ் கொடுக்க பார்த்தேனே” என்று தலையில் அடித்துக்கொண்டு தேன்மொழி கையிலிருந்த கட்டையை பிடுங்கிப்போட்டு லைட்டை போட்டான்.
 
அருள்பாண்டியன் அடித்துபிடித்து வெளியே வந்து பார்க்க சந்தனபாண்டியன் தேன்மொழியின் காதை திருகிக்கொண்டிருந்தான். 

5 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top