ATM Tamil Romantic Novels

10 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

10 – புயலோடு பூவுக்கென்ன மோகம்




        தண்ணிலவு அழகாக ஒளி வீசி கொண்டு இருக்க…தென்றலாக வருடும் காற்று.. என இரவு பொழுது ரம்மியமாக இருந்தது.

 

நிகிதா அறையில் ஏசி குளிர் மிதமான அளவில் அறையை நிறைத்திருக்க… தூக்கம் வராமல் இரண்டு ஜீவன்களுமே… வீராவிற்கோ நிகிதாவின் எண்ணம் புரிந்து தான் இருந்தது. பிரிந்து செல்வதில் சிக்கல் அதிகமாகி கொண்டு இருப்பதை உணர்ந்து தான் இருந்தான். ஆனால் என்ன செய்ய… அவனால் இந்த ஆடம்பரமான வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை. நவ நாகரிக மங்கை நிகிதாவையும் பிடிக்கவில்லை. தன் தாயை போல எளிமையான மனைவி தான் அவனின் எண்ணமாக இருக்க…



விரும்பி படித்த படிப்பு… பிடித்த வேலை.. அதில்  வெளிநாட்டு செல்லவேண்டும். ஒரு ஐந்து வருடங்கள் சம்பாதித்துவிட்டு திரும்பி வந்து தந்தையின் தொழிலை கைத்தறியில் இருந்து மாற்றி கையில் பணத்தை பொறுத்து    பவர்லூம் அல்லது ஆட்டோலூம்   போட்டு செய்யவேண்டும்.தந்தைக்கு ஓய்வு கொடுத்து அருகில் இருந்து பார்த்து கொள்ள வேண்டும். இதுவே அவனது வாழ்வின் லட்சியமாக இருக்க…

 

பெற்றவர்களும் குடும்பத்தினரும் அவன் மனதை  அறியாமல் அவனிடம் கேட்காமல்.. அதிரடியாக எடுத்தமுடிவை இன்று வரை அவன் மனது ஏற்று கொள்ளவில்லை.

 

அதிலும் ராகவ்வின் தொழிற்சாலையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் முறை.. அலுவலக கணக்கு வழக்கு எதுவும் அவனுக்கு பிடிபடவில்லை. அதுவே அவனுக்கு மிகப்பெரிய மன உளைச்சல்.

 

தொழில் வாழ்க்கை இரண்டும் அவன் எதிர் பார்ப்பிற்குள் அடங்கவில்லை. மனதின் அழுத்தம் தாங்க முடியாத நெருக்கடி.. அதில் இருந்து விடுபட.. என்ன செய்ய எப்படி செய்ய… என சதாசர்வகாலமும் யோசனை..

 

நிகிதாவின் மாற்றம் அவனின் எண்ணத்தை சீக்கிரம் செயல்படுத்த தூண்டியது.

 

அதே சிந்தனையில் தூக்கம் வராமல் சீலிங்கை வெறித்து பார்த்தபடி படுத்திருந்தான்.

 

அருகில் படுத்திருந்த நிகிதாவிற்கு அவனின் அணைப்பின்றி உறக்கம் கொள்ளவில்லை.  அவன் எப்ப தூங்குவான் என அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.முழித்திருக்கும் போது அவனை அணைத்திருக்க ஆசை தான் ஆனால் அவனை நெருங்க பயம் கொண்டாள்.



வெகு நேரமாகியும் அவன் உறங்கவில்லை.இவளுக்கு என்ன செய்வது என தெரியவில்லை. கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனை நெருங்கி அணைத்தாற் போல… மெதுவாக அவனின் நெஞ்சில் தலை வைத்து படுக்க…

 

அவளிடம் உண்மையை சொல்லி பிரிந்து விடுவது தான் நல்லது என நினைத்தவன்.. மெல்ல “நிகிதா” என அழைத்தான்.

 

 அவன் நெஞ்சில் தாடையை பதித்து அவன் முகம் நோக்கி “சொல்லுங்க மாமா..” என்றாள்.

 

இவனும் அவளின் முகம் பார்த்து வெகு நிதானமாக சிறுபிள்ளைக்கு சொல்வது போல..

 

“என் லைப் ஸ்டைல்.. படிப்பு..வாழ்க்கை.. இதெல்லாம் வேற.. உன்னுது எல்லாம் வேற.. நான் அப்ராட் போயி ஐந்து ஆறு வருசம் சம்பாதிச்சு.. இங்க வந்து எங்கப்பா தொழிலை இம்புரூவ் பண்ணனும்…பவர்லூம் இல்ல ஆட்டோ லூமா.. எங்கப்பாவுக்கு ரெஸ்ட் கொடுக்கனும். உன்னாலயும் இந்த லக்ஸரி லைப்பை விட்டு வரமுடியாது. எனக்கு சாதாரண மிடில் கிளாஸ் லைப் தான் பிடிக்கும்… இப்படி இருக்கும் போது.. நாம எப்படி சேர்ந்து வாழ முடியும் நீயே சொல்லு.. நாம நல்ல நண்பர்களாக பிரிஞ்சிடலாம். நாம அத்தை மகன்.. மாமா பொண்ணு அந்த உறவோட இருந்துகலாம். மியூச்சுவலா பிரிஞ்சிடலாம் அது தான் இரண்டு பேருக்கும் நல்லது” என்றான்.

 

அவன் சொல்ல..சொல்ல..நிகிதாவின் அகத்தில் அத்தனை ஒரு சொல்லமுடியாத வேதனை. எப்படியும் மாமனோடு வாழ்ந்திடலாம் என நினைத்திருக்க.. அவனோ பிரிவை பற்றி பேச.. அவள் காதலை தீ வைத்து  பொசுக்கியது போல..மனம் உடல் எல்லாம் காந்தியது..

 

அழுகை தாங்காமல்.. அவனை விட்டு எழுந்து படுக்கையை விட்டு சென்று தரையில் படுத்துக் கொண்டாள். கவிழ்ந்து படுத்து தேம்பி தேம்பி அழுதாள்.

 

முதுகு குலுங்குவதிலேயே அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்தவன் மனது கேளாமல் அவள் அருகில் வந்து அமர்ந்து..

 

“நிகிதா.. அழுகாத.. ப்ளீஸ்..” 

 

இப்போது அவள் அழுகை கூடியதே தவிர குறையவில்லை. நான் சொல்லவறது புரியாமல்  இப்படி பண்றாளே என மனதில் சலித்து கொண்டான்.

 

“நாம இரண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாது. சொன்னா புரிஞ்சுக்கோ.. வாழ்ந்தாலும் சரி வராது..”

 

மீண்டும் அவன்  பிரிவை பற்றியே பேச..மனம் நோக.. எழுந்து அமர்ந்து..

 

“பிரியனும்னு நினைக்கறவங்க.. அன்னைக்கு.. அன்னைக்கு.. எப்படி.. நீங்க.. என்கிட்ட..”சொல்ல முடியாமல் தவிப்புடன் அவன் முகம் பார்க்க… 

 

அவள் எதை கேட்கிறாள் என சரியாக புரிந்து கொண்டான். தலை கோதி.. அவள் முகம் பார்க்க முடியாமல்.. எதிரில் இருந்த சுவற்றை  பார்த்தவாறே..

 

“அன்னைக்குனா..என்னைக்கு.. என்ன..” என்றான் புரியாத பாவனையில்.. தெரிந்தும் தெரியாத பாங்கில்…



அவனை சரியாக இனம் கண்டு கொண்டாள். எப்படி தெரியாத மாதிரி பேசறான் பாரு.. திருடா.. அப்பவும் அவன் மேல் கோபத்திற்கு பதில் காதல் தான் வந்தது.



“மாமா..  உங்களுக்கு தெரியும் எதை சொல்றேனு..” என்றாள்.

 

இனி மறைத்து பேசி பயனில்லை என…

 

“அன்னைக்கு போதையில் ஏதோ தவறாகிவிட்டது. ஆனால் அது கூட எனக்கு சரி வர நினைவில்லை. அது விபத்து மாதிரி .. அதுக்காக ஒத்து வராத வாழ்க்கையை பிடித்து தொங்கி கொண்டு இருப்பது நியாயமில்லை”

 

அது விபத்தா..என அதிர்ந்தாள். அதானே என் வாழ்க்கையை எனக்கு உணர்த்தியது. இவங்க இப்படி சொல்றாங்களே..மனம் நொந்து போனாள்.. மீண்டும் அழுகையில் கரைய….

 

இவளுக்கு எப்படி புரிய வைக்கறது என தெரியாமல்.. சரி இன்னைக்கே எல்லாம் வேண்டாம். மெல்ல மெல்ல சொல்லி புரிய வைக்கலாம் என எண்ணி..

 

“சரி… அழுகாத.. இப்ப எதுவும் பேச வேண்டாம்.. அப்புறம் பார்த்துக்கலாம். வந்து படுத்து தூங்கு..”

 

அப்ப… கொஞ்ச கொஞ்சமா மாமா மனச மாத்திடலாம் என ஆசுவாமானாள்.

 

“இன்னும் என்ன யோசிச்சிட்டு இருக்க..பெட்ல வந்து படு..” என எழுந்து நின்று இவளையும் கூப்பிட…

 

“இல்ல.. நான் இங்கயே படுத்துகிறே..” என்றாள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு..

 

“ஏன்..ஏசி சில்னெஸ் உடம்புக்கு ஆகாது.. வந்து மேல படு வா..”

 

“இல்ல.. பெட்ல படுத்தா.. தூக்கம் வராது”

 

“அது எப்ப இருந்து..”

 

கொஞ்ச நாளா அப்படி தான்”

 

அவனுக்கு என்ன சொல்கிறாள் என புரிந்து விட.. 

 

“உனக்கு எப்படி படுத்தா தூக்கம் வருமோ.. அப்படியே படுத்துக்கோ..” என மறைமுகமாக சம்மதம் தர..

 

நம்பமாட்டாமல் அவனைப் பார்க்க.. சிறிய புன்னகையுடன் இவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

 

உடனே படுக்கைக்கு ஓடிவிட்டாள். இவனும் சென்று படுக்க.. உடனே அவனை ஒட்டி கொண்டு படுத்தாள். 

 

அவனை  அணைத்த சில நிமிடங்களில் நிகிதா உறங்கிவிட..  வீராவும் மெல்ல.. மெல்ல.. கண்யர்ந்தான். அவனுக்கும் தூக்கம் பிடிபட.. அவளுடைய அருகாமை தேவைப்பட்டதோ.. என்னவோ..

 

இதுவே இரவில் தினசரி வழக்கமானது. வீராவும் நிகிதாவை தள்ளி நிறுத்த தான் நினைக்கிறான்.ஆனால் அவளாக விரும்பி நெருங்கி வருவதை அவனால் தடுக்க முடியவில்லை. அந்த ஒருநாள் தான் அவன் சம்மதம் எதிர்பார்த்து இருந்தாள். அடுத்து வந்த நாட்களில் தானாகவே அணைத்து படுத்து கொண்டாள் அவளின் நெருக்கம்.. அதற்காக அவள் எடுத்து கொள்ளும் உரிமை.. எல்லாம் வீராவிற்கு எரிச்சலாக இருந்த போதும்.. அதையும் மீறி மனதில் ஒரு இதம் பரவ  தான் செய்தது. அது எதனால் என அவன் சரியாக உணரவில்லை.



நாளுக்கு நாள் நிகிதா தனது உரிமையை வீராவிடம் தானாகவே எடுத்து கொண்டு நெருக்கத்தை அதிகப்படுத்தினாள்.

 

 அன்று ஒருவிடுமுறை  நாளாக இருக்க… காலை உணவு நேரம் வீராவுக்கு அருகில் இருந்து உணவு பரிமாறி கொண்டு இருந்தவளிடம் ஆரு “அக்கா.. சாம்பாரில் உப்பு கம்மியா இருக்குகா..” என்க

 

“அப்படியா..” என்றவள் வீராவின் தட்டில் அவன் தோசையை பிய்த்து சாம்பாரில் பிரட்டி கொண்டு இருந்ததை பிடுங்கி வாயில் போட்டு கன்னத்தில் அதக்கி..மெல்ல மெல்ல மென்று ரசித்து ருசித்து ஒவ்வொரு பிசிறாக விழுங்கினாள்.

 

தன் கையில் இருந்ததை பிடுங்கி அவள்  வாயில் போடவும் அவளை முறைத்து பார்த்தவனின் பார்வை கொஞ்ச கொஞ்சமாக மாறி… கண்களை மூடி.. நாக்கை சுழற்றி சுழற்றி அவள் தின்ற  அழகில் ஒரு நிமிடம் வீரா சொக்கி போனான்.

 

அடுத்த நொடி தனது வரட்டு பிடிவாதத்தை இழுத்து பிடித்தான். இடறிய மனதை இறுக்கினான். 



“அக்கா..ஆஆ..”என்ற ஆருவின் சத்தத்தில்… கண்ணை திறந்து ஆருவை பார்க்க…ஆரு முறைக்க…

 

“ஹீஹீ..ஹீ.. உப்பு கம்மியா தான் இருக்கு..”என அசடு வழிந்தாள்.

 

ஆரு தலையில் அடித்து கொண்டு..”உப்பை போடு..”என்றாள்.

 

இது எதையும் கண்டு கொள்ளாத பாவனையில் சாப்பிட்டு எழுந்து மேலே  சென்று விட்டான்.

 

அவன் சென்றதும் வேக வேகமாக சாப்பிட்டு விட்டு பாட்டியிடம் வந்தவள்

 

“கீரேனீ.. நானும் காஞ்சிபுரம் போறேன்.மாமாகிட்ட சொல்லுங்க.. என்னையும் கூட்டிட்டு போக சொல்லுங்க..” என்றாள் கொஞ்சலாக…

 

மாதத்தில் இரண்டு தடவை ஞாயிறு காலை  காஞ்சிபுரம்  சென்று பெற்றவர்களை பார்த்து விட்டு இரவு வந்துவிடுவான்.

 

இதுவரை நிகிதாவை கூட்டிக்  கொண்டு போனதில்லை. அவன் மட்டுமே சென்று வருவான்.

 

அவனின் மேல் பித்தான பிறகு அவனை சார்ந்தவர்களும்… சார்ந்தவைகளும் பிடித்தமாகி போனது நிகிதாவிற்கு..



வீரா வரவும் பாட்டி ” வீரா.. நிகிதாவையும் கூட்டிட்டு போ..”

 

உடனே நிகிதாவை முறைத்தான். 

 

“கீரேனீ.. முறைக்கறாங்க..”என சிறு பிள்ளையாக புகார் வாசித்தாள்.

 

“வீரா..” பாட்டி கண்டிப்பான குரலில்..

 

“அம்மாச்சி… நான் பஸ்ஸில் போறேன். இவளை எப்படி..”

 

” பஸ்ஸா இருந்தாலும் பரவாயில்லை” என்றாள் அவசரமாக.. எங்கே விட்டுட்டு போயிடுவானோ என …

 

அவளை திரும்பி ஆச்சரியமாக பார்த்தான். நிகிதா பிறந்ததில் இருந்து எங்கும் காரிலேயே சென்று பழக்கப்பட்டவள்..

 

இவர்களை பார்த்து மெல்ல சிரித்த பாட்டி.. “வீரா..அது தான் வீட்டில் நாலு கார் இருக்குதுல.. அதுல போகாம பஸ்ஸில் எதுக்கு.. நானும் சொல்லிகிட்டே இருக்கேன்.. நீ கேட்கறதே இல்லை”

 

வீரா ஒன்றில்  தெளிவாக இருந்தான்.காஞ்சிபுரம் செல்லும்போது ராகவ்வின் மருமகனாக அல்லாமல் அய்யாவுவின் மகனாக தான் இருக்கவேண்டும் என..

 

அதனால் எப்பவும் பஸ்ஸில் தான். பாட்டி சொல்லியும் கேட்டதில்லை. இன்று நிகிதா வரேன்னு சொன்ன போதும் தனது வழக்கத்தை மாற்றி கொள்ளவில்லை.

 

பஸ்ஸிலேயே வரட்டும்.. அப்போ தான் இவ அடங்குவா.. வாடி வந்து அவதிபடு.. அப்ப தான் என்கிட்ட டிஸ்டென்ஸ்  மெயின்டெயிண் பண்ணுவ… என நினைத்து கொண்டு அவளை கூட்டிட்டு போக ஒத்து கொண்டான்.

 

அவன் சரி என்றதும் துள்ளி கொண்டு அறைக்கு ஓடினாள். அவனோடு முதல் முறையாக வெளியே செல்கிறாள். சொல்வ முடியாத ஆனந்தம் அவளுள்..



வார்ட்ரோப்பை திறந்தவள் வில்லேஜ் பீப்புள் கொஞ்சம் குளோஸ்டு நெக்… சிம்பிளாக  தானே டிரஸ் பண்ணுவாங்க.. என யோசித்து ஒரு சாதாரண காட்டன் சுடிதாரை அணிந்து கொண்டு..

 

நன்றாக மேக்கப் செய்ய ஆசை தான். எங்கே நேரம் ஆனால் விட்டு சென்று விடுவினோ…. என பயந்து முகத்திற்கு சன்ஸ்கீரின் லோஷன் மட்டும் போட்டு வழக்கமாக வைக்கும் கறுப்பு பொட்டு வைத்து கொண்டு.. ஓடி வந்தாள்.

 

 பாட்டிக்கு திருப்தி. எப்படி வருவாளோ என பயந்து மாடிபடியை பார்த்து கொண்டு இருந்தவருக்கு..பேத்தியின் எளிமையான அலங்காரம் பார்த்தும் பரம திருப்தி.

 

“அம்மாச்சி நாங்க கிளம்புறோம்”என சொல்லி வீட்டின் தெரு முனைக்கு வந்து ஒரு ஆட்டோ பிடித்து.. பஸ் ஸ்டாண்ட் வந்து காஞ்சிபுரம் பஸ்ஸில் ஏறி இருவர் அமரும இருக்கையில் அமர்ந்தனர்.

 

பஸ் கிளம்பவும் எதிர் காற்று முகத்தில் மோத.. பல தரப்பட்ட மனிதர்கள்.. பக்கத்தில் தன் மாமனோடு நெருங்கி உட்கார்ந்து இருப்பது என அந்த பஸ் பயணத்தை  மிகவும் ரசித்தாள். நடுவே மாமன் அறியாமல் இருவரையும் சில பல ஷெல்பிக்கள்..



நக நுனியில் கூட அழுக்கு படாதவள்..அவள் வாழ்வது.. பழகுவது எல்லாம் ஹை சொஸைட்டி.. ஹைடெக் லைப்.. எங்கயாவது பிடிக்காமல் முகம் சுளிப்பாளா.. என பார்த்திருந்தவன்.. அவளின் குதூகலத்தில்.. குழம்பி போனான்.

 

காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இறங்கி வெளியே வந்தனர். வெயில் சுரீரென அடிக்க.. வெயில் படாத சருமம் ரோஸ் நிறத்தில் சிவந்து.. வியர்க்க… ஹேண்ட் டிஷ்யுவில் முகத்தில் இருந்த வியர்வையை ஒத்தி எடுத்தவாறு அவனோடு வந்தவளின் உற்சாகம் மட்டும் குறையவில்லை.

 

இதை எல்லாம் பார்த்தவனுக்கு இவளுக்கு என்ன தலைஎழுத்தா.. இப்படி என்னோடு வரனுமா.. மனதோடு சலித்து கொண்டான்.

 

வெளியில் வந்தவன் சுற்றி முற்றி யாரையோ தேட.. இரண்டு நண்பர்கள் இரண்டு பைக்கில் வந்து அவனருகே நிறுத்த.. ஒன்றை வாங்கி கொண்டு  நிகிதாவை ஏற சொல்ல..

 

அவள் இருபக்கமும் கால்களை போட்டு அவினின் இடுப்பில் இரு பக்கமும் கை போட்டு அணைத்து கொண்டு அமர்ந்தாள்.

 

அவனுக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது. 

 

“ம்ப்ச்… நிகிதா கையை எடு..”

 

“மாமா… இதான் பர்ஸ்ட் டைம் பைக் ரைடிங் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு” என்றாள் பாவம் போல் முகத்தை வைத்து கொண்டு..

 

அதற்கு பிறகு வீரா ஒன்றும் சொல்லவில்லை. நிகிதா குஷியாகி.. இன்னும் அவனை இறுக்கி அணைத்தாள். ஒன்றும் சொல்ல முடியாமல் பல்லை கடித்தான்.



சொல்ல முடியாத  

 

சங்கடத்தில் அவன்..

 

சொல்லில் அடங்காத

 

ஆனந்தத்தில் அவள்..

 

விலகி செல்லும் 

 

முனைப்பில் அவன்..

 

இரும்பை ஈர்க்கும்

 

காந்தமாக அவள்…




1 thought on “10 – புயலோடு பூவுக்கென்ன மோகம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top