நிலவு 25
அடுத்த இரண்டு மாதத்தில் அமெரிக்காவிலிருந்து சங்கரியுடன் ராகேஷ் இந்தியா வந்திறங்கினான்.
சந்தனபாண்டியன் தேன்மொழிக்கு இன்று திருமண நாள்… சந்தனபாண்டியன் எடுத்துக்கொடுத்த பச்சை வண்ண பட்டைக் கட்டிக்கொண்டு, அருள்பாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சை பட்டுச்சேலைக்கு மேட்சாக பச்சைக்கல் நெக்லஸ்சும், தங்கபாண்டியன் வாங்கிக்கொடுத்த பச்சைக்கல் வைத்த தங்கவளையலும் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்னே நின்று தன்னை அலங்கரித்துக்கொண்டிருந்தவளின் தோள் வளைவில் தாடையை வைத்து “கலெக்டர் மேடம் திருமணநாள் வாழ்த்துகள்” என்று தேன்மொழியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு “தேவதையாட்டம் இருக்கடி குட்டிப்பொண்ணு” என்றான் சந்தனபாண்டியன்.
“மாமு இன்னும் நான் உங்களுக்கு குட்டிப்பொண்ணா” என்று செல்லமாய் சிணுங்கியவளை இறுக்கி அணைத்தவன் “நீ எப்பவும் ஏன் நமக்கு குழந்தை வந்தாலும் எனக்கு குட்டிப்பொண்ணுதான்டி” என்று அவள் இதழில் இதழ் உரசினான் சந்தனபாண்டியன்.
“மாமு கோவிலுக்கு போகணும் இப்பவே முத்தம் கொடுத்தா எப்படி” என்று புருவம் உயர்த்தியவளை கண்ட சந்தனபாண்டியன் “அடிக்கள்ளி குளிச்சிட்டு கோவிலுக்கு போகலாமா?” என்று கட்டிலை காட்டினான்.
“மாமு நீ ரொம்ப காஜியா மாறிட்ட” என்று அவன் மார்பில் சாய்ந்தவளை “நான் இன்னிக்கு எப்படியிருக்கேன் சொல்லவேயில்லையேடி” என்று அவளது முகத்தை நிமிர்த்த “ஜல்லிக்கட்டு காளை கணக்கா திமிறி நிற்குற உன் மீசையும். தேசிங்கு ராஜா போல வீரமும். சிக்ஸ் பேக் வைச்சிருக்க படிக்கட்டு போல உன் வயிறும், என் அழகன் மாமு. நான் உனக்காக பிறந்தவள் மாமு” என்று அவன் மீசையை பிடித்து முறுக்கினாள்.
“ஆஆ வலிக்குதுடி” என்றவனை “சந்தனம்” என்று தனபாக்கியத்தின் குரலில் இருவரும் விலகி “அப்பத்தா கூப்பிடுறாங்க” என இருவரும் ஹாலுக்குச் சென்றனர்.
ஹாலில் மேடிட்ட வயிற்றை பிடித்துக்கொண்டு நின்ற வளர்மதி தோட்டத்தில் பறித்து வந்த சந்தனமுல்லையை பந்தாக கட்டி தேன்மொழியிடம் கொடுத்து “திருமணநாள் வாழ்த்துகள் தேனு” என்றாள் புன்னகையுடன்.
“தேங்க்ஸ்க்கா” என்றாள் அதே புன்னகை மாறாமல்
“மாமா எனக்கு நெக்லஸ் வாங்கிக்கொடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்று அருள்பாண்டியனின் தோளில் சாய்ந்து நின்றாள்.
திருமண நாளுக்கு நானே கேக் செய்துடறேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு சாக்லேட் பிளேவர் கேக் செய்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி.
தங்கபாண்டியன் “நான் உனக்கு உதவி செய்யுறேன்” என்று ஆர்த்தியின் இடுப்பை கிள்ளி விளையாடிக் கொண்டிருந்தான்.
“சும்மா இருங்க!! எல்லாரும் ஹாலில்தான் இருக்காங்க இப்பதான் புது மாப்பிள்ளை போல சேட்டை பண்ணிக்கிட்டு” என்று அவனது கையை தட்டிவிட்டு கேக்கை எடுத்துக்கொண்டு ஹாலுக்குச் சென்றவள் “ஹேப்பி ஆனிவர்சரி தேனு அண்ட் சின்னவரே” என்றவள் கேக்கை டேபிளின் மீது வைத்தாள்.
தனபாக்கியம் குலதெய்வ கோவிலுக்குச் சென்று சந்தனபாண்டியன் தேன்மொழி பெயரில் அர்ச்சனை செய்து வந்தவர் இருவரது நெற்றியிலும் திருநீறு இட்டுவிட சந்தனபாண்டியன், தேன்மொழி இருவரும் தனபாக்கியம் காலில் விழ “பதினாறு செல்வமும் பெற்று பெருவாழ்வு வாழணும்” என்று பேரனையும் பேத்தியையும் வாழ்த்தியவர் “ரெண்டு பேரும் கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிடலாம் வளரு, ஆர்த்திமா சாப்பாடு ரெடியா” என்றவரிடம்
“ம்ம் ரெடி பண்ணிட்டோம் பாட்டி” என்ற ஆர்த்தியை “நீ இன்னிக்கு செக்கப் போகணும்ல இந்த முறை நானும் வரேன்” என்றவரிடம்
“ம்ம வாங்க பாட்டி” என்றாள் மெல்லிய சிரிப்புடன்.
இப்படி தன் மனைவி தன் குடும்பத்துடன் ஒன்றிப்போவாளென்று தங்கபாண்டியன் கனவிலும் நினைத்திருக்கமாட்டான் பெருமையாக பார்த்துக்கொண்டிருந்தான் ஆர்த்தியை. ஆனால் இன்னும் சில தினங்களில் மனைவியின் போக்கு அப்படியே தலைகீழ் மாறப்போவதை அவன் அறியாமல் இருந்தான்.
“வளையல் பிடிச்சிருக்கா குட்டிமா?” என்று தேன்மொழியை கேட்ட தங்கபாண்டியனை பார்த்து “ரொம்ப!! ரொம்ப!! பிடிச்சிருக்கு!! மாமா” என தங்கபாண்டியனை அணைக்க போக “ம்க்கும் ஏய் கோவிலுக்கு போய்ட்டு வந்து கேக் வெட்டணும் வா” என்று தேன்மொழியின் கையை பிடித்த சந்தனபாண்டியனை பார்த்து சிரித்த தங்கபாண்டியனோ “ஏய் தேனு கையை விடுடா” என்றதும் ஏன் என்பது போல பார்த்தான் சந்தனபாண்டியன்.
“நீ வா சாமி” என்று தேன்மொழியை தோளோடு அணைத்து “எப்பவும் நீ சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கணும்” என்றான் சந்தனபாண்டியனை பார்த்துக்கொண்டே
“தேங்க்ஸ் மாமா” என்று சிரித்துக் கொண்டே “இப்ப போகலாம் மாமு” என்று சந்தனபாண்டியனின் கையை பிடிக்க அவனோ “எனக்கு மட்டும் விஷ் பண்ணவே இல்லைண்ணா” என்று முகம் தூக்கியவனையும் அணைத்து “திருமணநாள் வாழ்த்துகள்டா” என்று சந்தனபாண்டியனையும் அணைத்து விடுவிக்க இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.
மல்லிகாவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக தென்னரசுவுக்கு சொந்தமாக இருந்த பண்ணைவீட்டில் ஸ்டோர் ரூமில் தங்கவைத்திருந்தான். பண்ணை வீட்டுக்கு நாகப்பன் அதிகம் வரமாட்டார் என மல்லிகாவையும் குழந்தையையும் தங்கவைத்திருந்தான் தென்னரசு.
மல்லிகாவின் மகன் அமுதனுக்கு இரண்டு நாளாக காய்ச்சல். தென்னரசுவுக்கு மல்லிகா போன் செய்து சொல்ல அவனும் இரவில் வந்து ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று வந்தான். இன்று இருமல் அதிகம் இருக்க தென்னரசுவை எதிர்பார்க்காமல் அமுதனை தூக்கிக்கொண்டு மருந்துக்கடைக்குச் சென்றாள்.
ரோட்டை கிராஸ் பண்ணிப்போகையில் சந்தனபாண்டியன் ராயல் என்ஃபீல்டு அவளை தாண்டிச் சென்றது. சந்தனபாண்டியனும் மல்லிகாவை பார்த்துவிட்டான். அதுவரை தேன்மொழியுடன் சிரித்து பேசி வந்த சந்தனபாண்டியன் அமைதியாகி வண்டியின் வேகத்தை கூட்டி வேகத்துடன் சென்றிருந்தான்.
மல்லிகாவோ நீ நல்லா இருக்கணும் சந்து என்று கண்ணீர் விட்டவள் சுடிதாரின் ஷாலை தன்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்காதவாறு தலையில் போட்டுக்கொண்டு பார்மஸியில் இருமலுக்கான மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தவள் அமுதனுக்கு மருந்தை கொடுத்து உறங்க வைத்தாள்.
சந்தனபாண்டியன் முகம் கடுகடுவென மாறி இருந்தது. ஆனால் தேன்மொழியிடம் காட்டாமல் இருந்தான். சாமி கும்பிட்டு முடித்து வெளியே வந்தவுடன் வண்டியை எடுத்தான் சந்தனபாண்டியன். தேன்மொழியும் மல்லிகாவை பார்த்துவிட்டாள்.
“மாமு மல்லிகா டீச்சர்” என்று பேச வாயெடுத்தாள்.
“கொஞ்சம் நேரம் சும்மா வரியா தேனு” என்றவனின் குரல் பிசிறு தட்டியது. அவளால் தான் அன்று குடித்துவிட்டு அந்த தென்னரசுவிடம் சண்டை போட நேர்ந்தது என்று கோபம் கொண்டிருந்தான் சந்தனபாண்டியன்.
வீட்டுக்குச் சென்றதும் முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டான். சந்தனபாண்டியன் தேன்மொழி இருவரையும் கேக் வெட்டச் சொல்ல இருவரும் சேர்ந்தே கேக் வெட்டினர்.
“ஐ எனக்கு கேக்” என்று குதித்த நந்தன் வாயில் கேக் துண்டை ஊட்டிவிட்டு ஒரு பீஸ் கேக்கை சந்தனபாண்டியனுக்கு ஊட்டிவிட்டாள். சந்தனபாண்டியனும் கேக்கை தேன்மொழிக்கு ஊட்டிவிட்டு குடும்பம் மத்தியில் அவனது கோபத்தை மறைத்து கலகலப்பானான்.
அன்றிரவு சந்தனபாண்டியனை அணைத்தபடியே படுத்திருந்தவள் “ஏன் இன்னிக்கு வெட்டிங் டே சிறப்பு எதுவும் இல்லையா! எதுக்கு இப்படி முகத்தை கடுகடுனு வச்சிருக்கீங்க! நான் என்ன செய்தேன் மாமா” என்றவளை “குட்டிப்பொண்ணு நீ எனக்காக பிறந்த தேவதைடி!! யாரை பார்க்க கூடாதுனு நினைச்சேனோ அவ இன்னிக்கு என் கண்ணு முன்னால கையில குழந்தையோட நிற்குறதை பார்த்து செம காண்டு வந்தது. அவளை நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டாத்தான் என் மனசு ஆறும்” என்று ஆத்திரத்தில் பல்லை கடித்து பேசியவனின் கன்னம் பற்றி “மாமு மல்லிகா டீச்சரோட அப்போதைய சூழ்நிலை என்னவோ அவங்களை பத்தி முழுசா தெரியாம பேசக்கூடாது” என்றாள் பொறுமையாக.
“என்னவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிட்டு போயிருந்திருக்கணும்ல” என்றவனை ‘அப்படி சொல்லிட்டு போயிருந்தா இந்நேரம் என் மாமா எனக்கு கிடைச்சிருக்காது’ என்று மனதில் எண்ணியவள் “நாளைக்கு போய் அவங்களை நேரடியா பார்த்து கேட்டிருங்க மாமு மனசுக்குள்ள வச்சிக்காதீங்க” என கள்ளம் கபடம் இல்லாமல் பேசியவளை எண்ணி பெரும்மூச்சு விட்டவன் “ஹனிபொண்ணு எக்ஸ் லவ்வரை பார்க்க சொல்ற பொண்ணு நீ ஒருத்தியாத்தான் இருக்கணும்டி” என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டினான்.
“என் மாமு சொக்கத் தங்கம் என்னை மட்டும் நேசிக்கிற மாமா நீ” என்று சந்தனபாண்டியனை இறுக்கிக் அணைத்துக்கொண்டாள்.
சங்கரி சென்னைக்கு வந்ததும் ஆர்த்தி சென்னையில் இல்லை என்பது தெரிய வர உடனே ஆர்த்திக்கு போன் போட்டார் கோபத்தில்.
ஆர்த்தி சங்கரியிடம் மதுரைக்கு வந்ததை இதுவரை சொல்லாமல்தான் இருந்தாள். சங்கரி ஆர்த்திக்கு சர்பிரைஸ் கொடுப்பதாக எண்ணி ஆர்த்தியிடம் சொல்லாமல் சென்னைக்கு வந்துவிட்டார்.
ஆர்த்தி துவைத்த துணிகளை மடித்துக்கொண்டிருந்தாள். சங்கரியின் எண்களை கண்டு போனை எடுத்தவள் “சொல்லுங்கம்மா” என்றவுடன்
“ஆர்த்தி நீ மதுரைக்கு எப்போ போன என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்கு தோணலையா? அந்த பட்டிக்காட்டுல உனக்கு என்ன வேலை? அந்த கிடா மீசைக்காரன் வேலையை வேண்டாம்னு இனிமே சென்னைக்கு வரமாட்டேன் சொல்லிட்டு போய்ட்டானாமே!!” என்று மூச்சு விடாமல் பேசியவரிடம்
“ம்மா கொஞ்சம் மூச்சு வாங்கி பேசு!! ஆமாம் இனிமே நாங்க உன்னை பார்க்க மட்டும் சென்னைக்கு வருவோம். நாங்க நிரந்தரமாக மதுரைக்கு வந்துட்டோம். இதுதானே எங்க ஊரு” என்று மகள் சொன்னதை கேட்டு ஒரு நிமிசம் பேசாமல் நின்றுவிட்டார் சங்கரி.
‘ஒரு மாசம் வந்து தங்கி அந்த கிழவி என் பொண்ணு மனசை மந்திரம் போட்டு மயக்கி கூட்டிட்டு போயிட்டியா! இதோ வரேன் என் பொண்ணை திரும்பி சென்னைக்கு கூட்டிட்டு வரலைனா என் பேரு சங்கரி கிடையாது’ என்று மனதில் சூளுரைத்துக்கொண்டு “நான் நாளைக்கு உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வரேன்” என்று போனை பட்டென்று அணைத்திருந்தார்.
மகேஷ்வரன் ராகேஷுடன் கம்பெனிக்குச் சென்றிருந்தார். மகேஷ்வரன் கம்பெனியில் ராகேஷ் ஒரு ஷேர் பார்ட்னரும் கூட “எப்படி மாமா நம்ம ஆர்த்தியை ஒரு பட்டிக்காட்டானுக்கு கல்யாணம் செய்து வச்சீங்க?” என்று கடுப்பாய் கேட்டவனிடம்
“ஆர்த்தி ஹஸ்பன்ட் பட்டிக்காட்டான் கிடையாது அவரும் படிச்சுத்தான் இருக்காரு சென்னையில பெரிய ஐடி கம்பெனியில பெரிய போஸ்ட்ல இருந்தவர்தான். இப்போ அவங்க சொந்த ஊருக்கு போயிருக்காங்க அவங்க நம்மளை விட பெரிய பணக்காரவங்க ராகேஷ்” என பெருமையாக பேசினார் மகேஷ்வரன்.
“ஓஓ அப்படியா” என்று நிறுத்திக்கொண்டவன் “நாளைக்கு நீங்களும் எங்ககூட மதுரைக்கு வரீங்கதானே!!” என்றவனிடம் “கம்பெனியில நிறைய பைலில் சைன் போட வேண்டியிருக்கு நான் ரெண்டு நாள் கழிச்சு வரேன் நீங்க முன்னாடி கிளம்புங்க” என்றார் மகேஷ்வரன்.
அடுத்த நாள் காலையில் ராகேஷுடன் சங்கரி கையில் ஹேன்ட்பேக்கை மாட்டிக்கொண்டு திமிராக காரிலிருந்து இறங்கினார். தனபாக்கியம் சாமி கும்பிட்டு வெளியே வந்தவர் சங்கரியை பார்த்து “வாங்க சம்பந்தி” என மரியாதை நிமித்தமாக கைகூப்பியவர் “உட்காருங்க” என்று அங்கே இருந்த நீளமான சோபாவை கைகாட்டினார்.
வளர்மதி நிறைமாசமாக இருக்க சமையலறை பக்கம் வரவேண்டாம் என்று ஆர்த்தி ஆர்டர் போட்டுவிட்டாள். வளர்மதிக்கு நேற்று இடுப்பு வலி வந்திருக்க அவளால் முடியாமல் போயிற்று அதிகாலை நேரம் அருள்பாண்டியன் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
ஆர்த்திக்கு சமையலில் உதவி செய்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி.
“ம்ம்” என்று ஒய்யாரமாய் சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார் சங்கரி. சங்கரியின் நடவடிக்கை தனபாக்கியத்திற்கு பிடிக்காமல் இருந்தாலும் வீட்டிற்கு வந்த சம்பந்திக்கு மரியாதை கொடுக்கணும் என்று பல்லைக்கடித்துக்கொண்டு நின்றிருந்தவர் “ஆர்த்திம்மா சென்னையிலிருந்து உங்கம்மா வந்திருக்காங்க ம்மா” என்று சமையற்கட்டை நோக்கி குரல் கொடுத்தார் தனபாக்கியம்.
சங்கரியோ வீடு சுற்றிப்பார்த்திருந்தவர் ஆர்த்தியை தனபாக்கியம் கூப்பிட்ட விதம் அதிகார தோரணையாக தெரிய “ஏய் கிழவி” என்றவர் அறையில் இருந்து சட்டையை முழங்கை வரை ஏத்தி விட்டுக்கொண்டு வந்த தங்கபாண்டியனை பார்த்ததும் வாயை பசை போட்டது போல மூடிக்கொண்டார் சங்கரி.
“என்ன இவ்ளோ தூரம் மாமியாரே?” என்று மீசையை முறுக்கிக்கொண்டு கேட்டவனை “ம்ம் என் பொண்ணை பார்க்க வந்திருக்கேன்” என்றார் மமதையாக
அதற்குள் தேன்மொழியிடம் “எங்கம்மா வந்திருக்காங்க தேனு சாம்பாரை தாளிச்சிடு” என்று ரசத்திற்கு புளியை கரைத்துக்கொண்டிருந்தவள் கையை கழுவிவிட்டு ஹாலுக்குச் சென்றாள். சமையல்கட்டில் வேலை செய்தவள் வியர்த்து விறுவிறுக்க வந்து நின்ற ஆர்த்தியை பார்த்த சங்கரியோ அச்சோ என் பொண்ணை சமையல்காரியா ஆக்கிட்டீங்களா என்று கேட்க நினைத்த கேள்வியை தங்கபாண்டியன் முன்னால் கேட்க முடியாமல் அவனை முறைத்துவிட்டு “அம்மா” என்று அணைத்துக்கொண்ட மகளின் காதில் “என்னடி நம்ம வீட்டு வேலைகாரியை விட மோசமா இருக்க” என்று அவளை கடிந்துக் கொள்ள. தங்கபாண்டியன் ஆர்த்தியை பார்க்க ஆர்த்தியோ வெகுநாள் கழித்து அம்மாவை பார்த்த சந்தோசத்தில் இருந்தவளை கண்டு அப்பத்தாவை பார்த்தான்.
தனபாக்கியமோ “உன் அம்மா உன்கூட பேசணும்னு நினைப்பாங்க ஆர்த்திமா உன் ரூமுக்கு கூட்டிட்டு போ” என்று சொல்லி முடிக்க ராகேஷ் வீட்டுக்குள் நுழைந்தான்.
“ஏய் ராகேஷ் வா! வா!” என்று அவனது கையை எதார்த்தமாக பற்றிக்கொண்டாள் ஆர்த்தி. தங்கபாண்டியனோ தனபாக்கியமோ அவளை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.
தனபாக்கியம் “எனக்கு தோட்டத்தில வேலையிருக்கு சம்பந்தி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க நான் வரேன்!! தங்கம் என்னை தோட்டத்துல விட்டிட்டு தோட்டத்துல இளநீர் பறித்துக் கொண்டு வா சம்பந்திக்கு கொடுக்க” என்றவர் வாசலுக்குச் சென்றிருந்தார்.
தங்கபாண்டியன் ராகேஷை முறைத்துவிட்டுச் சென்றான். ராகேஷ் ஆர்த்தியை பார்த்தவிதம் அவனுக்கு தவறாக தோன்றியது.
“போடா” என்று உதடசைத்தான் ராகேஷ்.
“போயிட்டு வரேன் உன் முகரையை உடைக்க” என்று முணகிக்கொண்டு தனபாக்கியத்தை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றான் தங்கபாண்டியன்.
“ராகேஷ் நீ வீட்டைச் சுத்தி பார்த்திட்டுரு. நான் அம்மாகூட பேசிட்டு வந்திடறேன்” என்று அவன் கையை விட்டு அவளது அறைக்குச் சங்கரியை அழைத்துச் சென்றாள்.
அறைக்குள் சென்றதும் “நீ இந்த வீட்டு வேலைகாரியா சமையல்கட்டுல இருந்து வர. எதுக்கு சென்னையிலிருந்து இந்த பட்டிக்காட்டுக்கு வந்த..? உன் பட்டிக்காட்டு புருசன் நான் இல்லாத நேரம் பார்த்து உன்னை கூட்டிட்டு வந்து உன்னை சம்பளம் இல்லாத முழு வேலைகாரியா வச்சிருக்கான். பெத்த வயிறு பத்திக்கிட்டு வருது இப்பவே நீ சென்னைக்கு புறப்படு. அங்க வந்து இரு உன் புருசன் உன்னை தேடி வருவான்” என்று அசால்ட்டாக சொன்னவரை
“நீ என்ன பேசிட்டிருக்க வந்ததும் வராததுமா! என்னை ஒரு வார்த்தை எப்படியிருக்கனு கேட்டியா? இல்லை ஆப்ரேசன் பண்ணினது பற்றி கேட்டியா? அதைவிட்டு சமையல்கட்டுல இருந்து வந்தனு சும்மா பேசிட்டிருக்க… உனக்கு தெரியுமா எனக்கு ஆப்ரேசன் பண்ணி என்னால நடக்க முடியலை. என்னால என்னோட தேவைகளை பண்ணிக்க முடியலை. இந்த வீட்டு அப்பத்தா தான் எனக்கு எல்லாமே செய்துவிட்டாங்க!! அவங்க வீட்டு பொண்ணு போல கண்ணுக்குள்ள வச்சி பார்த்துக்கிட்டாங்கம்மா. அதுவுமில்லாம இது என்னோட வீடு என்னோட வீட்டு வேலையை நான் செய்யாம யாரு செய்வாங்க?” என்று கோபத்தில் கொப்பளித்தவளை கண்டு சங்கரி ஒரு நிமிடம் வாயடைத்துப்போய் பார்த்தார்.
‘என் மகளை முழுதாய் மாத்திடுச்சு இந்த கிழவி நாம இங்கயே டேரா போட்டு நம்ம பொண்ணை பழைய ஆர்த்தியா மாத்திடணும். நாம இப்போ நல்லவ போல நடிக்க வேண்டியது தான்’ என்று தன் குறுக்குபுத்தியை தீட்டினார் சங்கரி.
“என்னவோ போடி நான் மட்டும் அமெரிக்கா போகாம இருந்தா அந்த கிழவியை விட உன்னை கண்ணில் வச்சு பார்த்திருப்பேன் இந்த அம்மாவை இப்படி பேசிட்டியே தங்கம்” என்று நீலிக்கண்ணீர் வடித்தார்.
“ம்ம் இனிமே பாட்டியை கிழவினு சொல்லாத” என்றாள் கனிவாய்.
“நான் உன் கூட ஒரு மாசம் தங்கிட்டு போகலாம்னு இருக்கேன்டி” என்று ஆர்த்தியை அணைத்துக்கொண்டு கேட்டார் சங்கரி
“ஒருமாசம் என்ன ஒருவருசம் கூட நீ இங்க இருந்தா உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க. ஆனா உன் திருவாயால் யாரையும் காயப்படுத்தாம இருந்தா நீ இங்க இருக்கலாம் அப்படியில்லைனா இப்பவே ராகேஷ் கூட கிளம்பிடு. ஹான் சாப்பாடு ரெடியாகிடுச்சும்மா சாப்பிடலாம் வா” என்று நிமிர்வாக பேசியவளை கண்டு விக்கித்துப்போய் நின்றார் சங்கரி.
“நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்றவர் குளியலறைக்குள் சென்றதும் பெரும்மூச்சு விட்டு வெளியேச் சென்றாள் ஆர்த்தி.
சமைத்து முடித்துச் சென்றிருந்தாள் தேன்மொழி. சமைத்து வைத்த சாப்பாட்டை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்து தோட்டத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த ராகேஷை தேடிச்சென்றாள் ஆர்த்தி.
ஆர்த்தியும் ராகேஷும் சிறுவயது முதல் நண்பர்களாய் இருந்தனர். வாலிப வயது வர ராகேஷ் ஒருதலையாக ஆர்த்தியை லவ் பண்ணியிருந்தான். அவள் தங்கபாண்டியனை விரும்புவதை ராகேஷிடம் சொல்லவில்லை. ராகேஷ் பிஸ்னஸ் விசயமாக லண்டன் சென்றிருந்த நேரம்தான் தங்கபாண்டியன் ஆர்த்தி கல்யாணம் நடந்திருந்தது.
“என்ன ராகேஷ் எங்க தோட்டம் எப்படியிருக்கு?” என்று சிரித்தபடி கையை கட்டி நின்றாள்.
“வாவ் ப்யூட்டிஃபுல்” என்றவன் “இப்படி வந்து உட்காரு ஆர்த்தி” அங்கிருந்த சிமெண்ட் கல்லில் உட்கார்ந்தான்.
ஆர்த்தி இடைவெளி விட்டே உட்கார்ந்தாள். அந்த இடைவெளியை பார்த்து முகம் கடுகடுத்துப்போய் “ஆர்த்தி இந்த பட்டிக்காட்டானை உனக்கு எப்படி பிடிச்சது. அவனும் அவன் கிடா மீசையும்” என்று வேண்டா வெறுப்பாக பேசியது ஆர்த்திக்கு சுருக்கென்று கோபம் மூக்கிற்கு மேல் வர நண்பனை கடிந்துக் கொள்ள விருப்பம் இல்லாது “எனக்கு அந்த கிடா மீசைதான் ரொம்ப பிடிச்சது ராகேஷ் இதே வார்த்தையை வேற யாராவது சொல்லியிருந்தா பல்லை உடைச்சிருப்பேன். நீ என்னோ நண்பனா போய்ட்டே பரவாயில்லை மன்னிச்சுவிடறேன்” என்று சிரித்த ஆர்த்தியோ
“ஆமா உன் பிஸ்னஸ் எப்படி போகுது ஏன் இன்னும் கல்யாணம் பண்ணாம இருக்க? சீக்கிரம் கல்யாணம் ஆகி செட்டில் ஆகுப்பா” என்று அவனது தோள்பட்டையில் கையால் தட்ட அவளது கையை பிடித்தவன் “நான் உன்னைத்தான் விரும்புறேன் ஆர்த்தி… அதான் அந்த மீசையால் இன்னும் உனக்கு ஒரு குழந்தையை கூட கொடுக்க முடியலையே என்னை கல்யாணம் பண்ணிக்கோ…” என்றதும்
“வாட்!” என்று அதிர்ந்த ஆர்த்தியோ “ஆர் யூ கிரேசி?” என்று காளியாய் எழுந்து நின்றவள் “நான் கல்யாணம் ஆன பொண்ணு என்கிட்ட என்ன வார்த்தை பேசுற! ப்ரண்ட்னு உன்பக்கம் உட்கார்ந்து பேசினேன்டா! இல்லை உன்னை என் பக்கம் உட்கார வைத்திருக்க கூட மாட்டேன் பொறுக்கி. நாங்க குழந்தை பெத்துக்கறதை பத்தி பேச உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு ஹான்!! இந்த வீட்டை விட்டு போயிடு என் புருசன் காதுக்கு இந்த விசயம் தெரிஞ்சுது!! உன்னை கொன்னு மதுரை மண்ணுல புதைச்சுடுவாரு” என்று விரலை நீட்டி எச்சரித்தவள் அப்பவும் கோபம் அடங்காமல் ராகேஷின் கன்னத்தில் ஓங்கி பளாரென ரெண்டு அறைவிட்டுச் சென்றிருந்தாள்.
‘சபாஷ் அம்மு’ என்று நெஞ்சில் தட்டிக்கொண்டான் தங்கபாண்டியன். தனபாக்கியத்தை தோட்டத்தில் விட்டு வீட்டிற்கு வந்த தங்கபாண்டியன் காதில் ஆர்த்தி பேச்சுக்குரல் கேட்டு அங்கே நின்றுவிட்டான். ராகேஷ் அவளை விரும்புறேன் என்று சொன்னதும் அவனது முகரையை பேத்துவிடணும் என்று தோட்டத்திற்கு நடந்தவன் கண்ணில் ஆர்த்தி ராகேஷை அறைந்து விட்டு நடந்து வருவது தெரிந்து செடி மறைவில் நின்றுக் கொண்டான்.
ஆர்த்தி வீட்டுக்குள் சென்றதும் தங்கபாண்டியன் திகில் அடைந்து நின்ற ராகேஷின் முன்னே நின்றவன் அவனது சட்டையை பிடித்து மூக்கில் ஒரு குத்து விட்டு “என் பொண்டாட்டி கையை பிடிச்சதுக்கு இந்த குத்து அவளை கல்யாணம் பண்ணிக்குறேன் சொன்னதுக்கு” என்று மீண்டும் குத்துவிட்டான்.
“ஏய் அடிக்காதடா” என்று ராகேஷ் அவனது கையை பிடிக்க.
“உன்னை அடிக்காம விட்டா தப்பா போகும் டா டுபுக்கு” என்றவன் அவன் கையை மடக்கிப் பிடித்து முறுக்க “ஆஆ அம்மா விட்டிரு தங்கபாண்டியன் நான் இங்கிருந்து போயிடறேன் தப்புதான் நான் ஆர்த்திகிட்ட பேசினது” என்று தங்கபாண்டியன் அடிக்கும் அடியின் வலி தாங்காமல் கதறினான் ராகேஷ்.
“என் பொண்டாட்டியை வரச்சொல்லுறேன் அவகிட்ட காலுல விழுந்து மன்னிப்பு கேளுடா பன்னாடை பயலே” என்று பல்லைக்கடித்தவன் தன்னால் தான் குழந்தையில்லை தங்கபாண்டியனை குறை சொல்லிவிட்டானே இந்த பாவி ராகேஷ் என்று அழுதுக் கொண்டு சமையல்கட்டில் நின்றிருந்தவளை தங்கபாண்டியன் போனில் கூப்பிட கண்ணீரை துடைத்துக்கொண்டு “சொல்லுங்க கோல்ட்” என்றவளை “தோட்டதுக்கு வா” என்று பேசியவன் போனை வைத்துவிட்டான்.
‘அச்சோ ராகேஷ் கூட பேசியதை பார்த்துட்டாரு போல’ என்று வேகமாய் தோட்டத்திற்கு ஓடிப் போய் பார்க்க வாயில் இரத்தம் ஒழுக அவன் போட்டிருந்த சட்டை கிழிந்து தொங்கியது. உனக்கு இந்த அடி கம்மிதான் டா என்று ராகேஷை முறைத்துப்பார்த்து தங்கபாண்டியன் அருகே போய் நின்றவள் “கோல்ட் அது” என்று பேச ஆரம்பிக்க கைநீட்டி “பேசாத” என்று தடுத்தவன்
“என் பொண்டாட்டி காலுல விழுந்து நான் பேசியது தப்புனு மன்னிப்பு கேளுடா நாயே” என்று கர்ஜித்தவனின் குரலில் பயந்து நடுங்கியவன் “எ.என்னை மன்னிச்சிடு ஆர்த்தி” என்று ஆர்த்தியின் காலில் விழுந்தான் ராகேஷ்.
ஆர்த்தியோ “இனிமே என்னை பார்க்க கூட உனக்கு அருகதை இல்லை ராகேஷ் வெளியே போ” என்று ஆர்த்தி கத்த வாயில் இரத்தம் ஒழுகிக்கொண்டு காலை இழுத்து இழுத்து நடந்து காரில் ஏறியவன் அடுத்த நிமிடம் தப்பித்தால் போதும் என்று காரை எடுத்திருந்தான்.
“கோல்ட் என்னை மன்னிச்சிடுங்க… அவன் என்கிட்ட இப்படி பேசுவான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!!” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
அவளின் தலையை வருடி “நீ பேசினதை நான் கேட்டேன் அம்மு!!” என்று நெற்றியில் முத்தம் பதித்தான்.
சங்கரியோ ராகேஷை வீடு முழுவதும் தேடினார் அவன் இருந்தால்தானே! “ஆர்த்தி ராகேஷ் எங்க காணோம்?” என்றதும் அங்கே வந்த தங்கபாண்டியனோ “உங்க கூட ஒட்டகம் போல ஒருத்தன் வந்தானே. அவன்தானே அவன் அப்பவே காரை எடுத்துட்டு கிளம்பிட்டான்” என்று நக்கலாக பேசினான்.
சங்கரியோ ராகேஷிற்கு போன் போட அவனோ
“நா.நான் அர்ஜென்டா இன்னிக்கே அமெரிக்கா போகணும் கி.கிளம்பிட்டேன் அத்தை” என்று தான் செய்த அயோக்கியத்தனத்தை கூற முடியாமல் மறைத்தவன் போனை வைத்துவிட்டான்.
எப்படியோ நம்மள நம்ம பொண்ணுகிட்ட கூட்டி வந்துட்டான் அதுவே போதும் இனி ராகேஷ் தேவையில்லை என்று விட்டு விட்டார்.
வளர்மதிக்கு பையன் பிறந்து விட அருள்பாண்டியனுக்கு சந்தோசம் தான் ஆனால் பொண்ணாக இல்லையென்று சிறு வருத்தம்தான் “இப்போ என்ன அருளு மறுபடியும் பெண் குழந்தை பெத்துப்போம்” என்று கண்ணைச்சிமிட்டியவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து “பெத்துப்போம் அம்மணி” என்றான் அருள்பாண்டியன்.
மூன்று நாட்களில் வீட்டுக்கு குழந்தையுடன் வளர்மதி வந்துவிட்டாள். சங்கரியோ அவர் வந்த வேலையை சரியாய் செய்ய ஆரம்பித்தார்.
வளர்மதி குழந்தைக்கு பால் கொடுத்து தொட்டிலில் படுக்க வைத்து விட்டு நிமிர சங்கரி நின்றிருந்தார்.
“வாங்கம்மா” என்று குழந்தையின் துணிகளை அடுக்க ஆரம்பித்தாள் வளர்மதி.
“ஆமா உனக்கு அம்மா வீடு கிடையாதா!! உன் அப்பா அம்மா உயிரோட இல்லாம அனாதையா இருக்கியா அதான் பிள்ளையே உன் வீட்டுக்கு கூட்டிட்டு போகாம இங்கயே இருக்கியா?” நாக்கில் நரம்பில்லாமல் பேசி விட்டார் சங்கரி.
வளர்மதிக்கோ அழுகை பீறிட்டு வந்தது. அவள் எப்போதும் பெரியவர்களை ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசமாட்டாள். ஆனால் இப்போது சங்கரி கேட்ட விதம் அவளுக்கு கோபத்தை வரவழைக்க “எனக்கு அம்மா அப்பா இல்லைங்கம்மா அப்பத்தாதான் எனக்கு எல்லாமே… இனிமே என்கிட்ட இப்படி பேசாதீங்க” என்று குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.
‘நாம இப்ப என்ன கேட்டோம்னு இவ இப்படி கோபப்பட்டு பேசுறா’ என்று குமைந்துக் கொண்டு நிற்க.
அங்கே வந்த ஆர்த்தியோ “என்னம்மா இங்க என்ன பண்ணுற?” என்றதும் “ஹான் நான் குழந்தையை பார்க்க வந்தேன்டி! உன் அம்மா வீடு எங்கனு கேட்டேன். அதுக்கு இந்த வளர்மதி என்னவோ என் அம்மா வீடு இதுதான்னு சொல்லிட்டு போறா. அடியேய் சொத்தெல்லாம் இவ ஒருத்தியே வச்சிக்க போறா… நீ உஷாரா இருடி” என்று பேசியவரை
“நீ வெளியே வாம்மா” என்று கையை பிடித்து இழுத்து வந்தவள் “நான் உன்கிட்ட என்ன சொல்லியிருக்கேன் இந்த வீட்ல யாரையும் எதுவும் மனசு நோகும் படி பேசக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல. அதையும் மீறி நீ வளர்மதி அக்காவை அம்மா வீட்டுக்கு போகலையானு கேட்குற. நான் நீ பேசினதை கேட்டுத்தான் வந்தேன். நீ இங்க இருக்க வேணாம் பெட்டியை கட்டு” என்றாள் கறாராக.
“ஆர்த்தி!! ஆர்த்தி!! நான் இனிமே யாரையும் எதுவும் பேசமாட்டேன்” என்று மன்னிப்பு கேட்டார் சங்கரி.
“இந்த ஒருமுறை மன்னிச்சிட்டேன் இது போல யார்கிட்டயும் பேசினா அடுத்து முறை நானே உன்னை சென்னைக்கு ட்ரைன் ஏத்தி விடுவேன்” என்று எச்சரித்துச் சென்றாள் ஆர்த்தி.
“ஏய் நான் உன் அம்மாடி என்னையே நீ மிரட்டுறியா! நான் இனிமேதான் விளையாடப்போறேன்” என்று மமதையாய் சிரித்துக்கொண்டார் சங்கரி.
அதே நேரம் சென்னைக்குச் சென்ற ராகேஷோ ஆர்த்தி தன்னை அடித்த ஆத்திரத்தில் மகேஷ்வரனின் பங்கு சந்தையில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திச் சென்றிருந்தான். மகேஷ்வரன் சொத்தை விற்றால்தான் அவரது நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்ற நிலமைக்கு வந்திருந்தார் மகேஷ்வரன்.