ATM Tamil Romantic Novels

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 28

 

“நான் ஆர்த்தியை செக் பண்ணிட்டு சொல்றேன் வெளியே உட்காருங்க தங்கபாண்டியன்” என டாக்டர் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டாக கூறியதும் கண்ணீரை கூட துடைக்க தோன்றாமல் ஆர்த்தியை பார்த்துக்கொண்டேச் சென்றான்.

 

ஆர்த்தியை செக் பண்ணி அவளுக்கு இன்ஜக்சன் ஒன்றை போட்டு விட்டு வெளியே வந்தவரை நெற்றியை தேய்த்துக்கொண்டு ஒரு வித படப்படப்புடன் டாக்டரை பார்த்தான் தங்கபாண்டியன். 

 

டாக்ரோ “பயப்பட தேவையில்லை தங்கபாண்டியன்” என்றார் குறுநகையுடன்.

 

நிம்மதிப்பெரும்மூச்சு விட்டுக்கொண்டான் தங்கபாண்டியன். அவன் மனசு இன்னேரம் வரை பட்ட கவலையெல்லாம் பஞ்சாக பறந்து போனது.

 

“பட் இனிமே ஆர்த்தி பெட் ரெஸ்ட் எடுக்கணும். ரெஸ்ட் ரூம் போக மட்டும் நடக்கலாம். சின்ன வெய்ட் கூட தூக்கக்கூடாது. அவங்க யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கு. அவங்க கூடவே ஒருத்தர்  இருந்து கவனிச்சுக்கோங்க. இப்ப ஆர்த்தி மயக்கத்துல இருக்காங்க!! மயக்கம் தெளிஞ்சதும் ஒரு ஸ்கேன் பார்த்துடலாம்” என்றவுடன் 

 

“ஏன் டாக்டர் பயப்படத்தேவையில்லைனு சொன்னீங்க!! இப்ப ஸ்கேன் பார்க்கணும்னு சொல்றீங்களே” என்று புருவம் சுருக்கினான்.

 

“எப்பவும் பார்க்கற ஸ்கேன்தான் தங்கபாண்டியன்” என்று சொல்லிக்கொண்டிருக்க “கோல்ட்” என்று ஆர்த்தியின் முணகல் சத்தம் கேட்டு தங்கபாண்டியன் ஆர்த்தியின் அருகே ஓடிவிட்டான். 

 

‘பாசக்கார கணவன்’ என்று சிறு சிரிப்புடன் பின்னேச் சென்றார் டாக்டர்.

 

ஆர்த்தியோ கண்விழித்து தன் எதிரே நின்ற தங்கபாண்டியனை பார்த்தவள் “கோல்ட் பாப்பா” என்று வயிற்றை தடவினாள்.

 

ஆர்த்தியின் மீது கோபத்தை காட்டாமல் “பா.பாப்பா பத்திரமா இருக்கா நீ. நீ அழாதே” என்று மனைவியின் கண்ணீரை துடைத்துவிட்டான்.

 

“ரெண்டு பேரும் வீட்ல போய் கொஞ்சிக்கோங்க இது ஹாஸ்பிட்டல்” என்றவாறு ஆர்த்தியின் அருகே வந்தவர் “என்னம்மா ஆர்த்தி நீ எமோசனல் ஆகக்கூடாதுனு சொல்லியிருந்தேனே! அதையும் மீறி நீங்க எமோஷனல் ஆகி இருக்கீங்க அதான் ப்ளீட் ஆகியிருக்கு!! இனிமே நீங்க எந்த வேலையும் செய்யக்கூடாது!! மத்தபடி எப்படி இருக்கணும்னு உங்க ஹஸ்பண்ட்கிட்ட சொல்லியிருக்கேன்” என்றவர் “தங்கபாண்டியன் உங்க வொய்ப் கையை விட்டீங்கனா நான் ஸ்கேன் பார்க்க ஆரம்பிப்பேன்” என்றார் கேலியாக.

 

“ஓ சாரி டாக்டர்” என்றவனோ சற்று தள்ளி நின்றுக் கொண்டான். 

 

ஸ்கேன் பார்த்து விட்டு “குட் ஹாட்பீட் நல்லாயிருக்கு” என்றவர் “மெதுவா எழுந்து வாங்க ஆர்த்தி” என்று டாக்டர் சென்று விட்டார்.

 

தங்கபாண்டியன் ஆர்த்தியின் கையை பிடித்து இறக்கிவிட்டு கைபிடித்தபடியே கூட்டிச்சென்றான்.

 

டாக்டர் மாத்திரைகள் எழுதிக்கொடுக்க மாத்திரைகளை வாங்கிக்கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வர தனபாக்கியமும், சந்தனபாண்டியனும் பதட்டத்துடன் தங்கபாண்டியன் முன்னே நின்றனர்.

 

தேன்மொழி செக்கப் முடிந்து பூபாலனுக்கு தடுப்பூசி போட்டு முடித்து வீடு வருவதற்குள் அனைவரும் சோர்ந்து விட்டனர்.

 

தனபாக்கியம் வீட்டுக்குள் வந்ததும் தேன்மொழியை படுக்கச் சொல்லிவிட்டு “வளரு குழந்தைக்கு காய்ச்சல் வரும் மருந்து ஊத்திவிடு!! நான் ஆர்த்தியை பார்த்துவிட்டு வரேன்” என்று ஆர்த்தியின் அறைக்குச் சென்று பார்க்க அவள் இல்லையென்று தெரிந்ததும் ஜன்னல் வழியே தோட்டத்தை எட்டிப்பார்த்தவர் “மாரி” என்று குரல் கொடுக்க “அப்பத்தா இதோ வரேனுங்க” என்று வீட்டுக்குள் வந்தவரிடம் “ஆர்த்தி எங்க காணோம் பின்னாடி கட்டிலில படுத்துருக்காளா! நான்தான் வெளியே எங்கயும் நடக்ககூடாதுனு சொல்லியிருக்கேனே! இந்த காலத்து புள்ளைங்க பெரியவங்க சொல்றதை எங்க கேட்குறாங்க” என்று தலையை ஆட்டிக்கொண்டு “நான் போய் ஆர்த்தியை பார்க்குறேன்” என்று ஒரு எட்டு நடந்தார்.

 

“அப்பத்தா” என்று தயங்கியபடி நின்ற மாரியை

 

“எ.என்னாச்சு எதுக்கு இப்படி பேயறைஞ்சது போல நிற்குற?” என்றவருக்கு பதட்டம் வந்துவிட்டது.

 

நடந்ததை ஒன்றுவிடாமல் கூறிவிட்டார் மாரி. “அம்மா தாயே மகமாயி என் பேத்தி வயித்து கருவுக்கு எந்த வித ஆபத்தும் வரக்கூடாது” என்று பெரிய வேண்டுதலாக வைத்தவர் தங்கபாண்டியனுக்கு போன் போட அவனோ டாக்டர் அறையில் இருந்தவன் போனை எடுக்கவில்லை. அவர்களையும் ஏன் கவலைப்பட வைக்கணும். பயப்படத்தேவையில்லைனு சொல்லியிருக்காங்க டாக்டர் வீட்டுக்கு போனதும் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டிருந்தான்.

 

தனபாக்கியமோ அருள்பாண்டியனுக்கு போன் செய்ய அவனோ மகேஷ்வரனை டாக்டரிடம் காண்பித்து அவருக்கு இன்ஜக்சன் போட்டு வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் கொண்டிருந்தான் அருள்பாண்டியன்.

 

காரை ஓரமாக நிறுத்தியவன் “சொல்லுங்க அப்பத்தா” என்றவன் நடந்ததை கூறிவிட்டு “நீங்க கிளம்பி ஹாஸ்பிட்டல் வாங்க தங்கம் தனியா கிடந்து தவிப்பான்” என்று கூறியவன் மகேஷ்வரனை வீட்டில் விட்டு “நான் ஆர்த்தியை பார்க்க கிளம்புறேன்ங்க என்ன உதவினாலும் எனக்கு போன் போடுங்க” என்றவன் பஞ்சு ஆலையில் வேலை செய்யும் ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் அவர்களுக்கு துணையாக வைத்துவிட்டு “நானும் உங்களுக்கு மருமகன்தான் என்னை அன்னியமா பார்க்காதீங்க” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தவனை 

 

“தம்பி ஒரு நிமிசம் நில்லுங்க” என்று மெல்லிய குரலில் கூப்பிட்ட மகேஷ்வரனோ “ரொம்ப நன்றிங்க தம்பி எத்தனையோ பிஸ்னஸ் மேக்னட் எல்லாம் ஆர்த்தியை பொண்ணு கேட்டு வந்தாங்க. அவங்களுக்கு என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கொடுத்திருந்தாலும் இப்படி யாரும் எங்களை பார்த்திருக்க மாட்டாங்க! எங்களையே இப்படி பார்த்துக்கிறவங்க என் பொண்ணை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பீங்கனு நம்பிக்கை வந்துருச்சு. நான் போன ஜென்மத்துல பெரிய புண்ணியம் பண்ணியிருக்கணும். அதான் உங்க வீட்டு மருமகளா என் பொண்ணு வந்திருக்கா” என்று அருள்பாண்டியனை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்.

 

சங்கரிக்கு குற்ற உணர்வாக தோன்றியது. ஆர்த்தியை போன் பண்ணி கூப்பிட்டிருக்க கூடாது என்று வருத்தப்பட்டாரே ஒழிய மகளை பார்க்க வேண்டும் அவளுக்கு என்ன ஆனதோ என்று அவர் மனம் ஏங்கவில்லை. சங்கரியை ஒரு பார்வை பார்த்தவன் “நான் கிளம்புறேன் மாமா” என்று கிளம்பியவனிடம் “பெரிய மாப்பிள்ளை ஹாஸ்பிட்டல் போயிட்டு என் பொண்ணு எப்படியிருக்கானு ஒரு போன் போட்டு சொல்லுங்க” என்றார் தளர்ந்த குரலுடன்.

 

“சரிங்க மாமா” என்று கிளம்பிவிட்டான் அருள்பாண்டியன்.

 

அருள்பாண்டியனும் ஹாஸ்பிட்டலுக்கு வந்துவிட்டான். தனபாக்கியமோ “ஆர்த்திமா எப்படி இருக்க?” என்று அவளது கையை பிடித்தார். 

 

“அப்பத்தா நான் அப்பாவுக்கு காய்ச்சல்னு அவசரப்பட்டு கிளம்பிட்டேன்” என்று தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

 

“அப்பத்தா அவளை அழுக வேண்டாம்னு சொல்லுங்க! அவ கண்ணுல இனி தண்ணி வரக்கூடாது சொல்லி வைங்க! குழந்தை ஹார்ட் பீட் நல்லாயிருக்குனு சொல்லியிருக்காங்க டாக்டர் எப்படி நடக்கணும்னு சொல்லியிருக்காங்க அப்பத்தா! இதுக்கு மேல அவ கையில தான் எல்லாம் இருக்கு!” என்று சற்று கோபமாகவே சொல்லிவிட்டான்.

 

கரு நல்லாயிருக்கு என்று தெரிந்ததும்தான் அருள்பாண்டியன், சந்தனபாண்டியன் முகத்தில் சிரிப்பே வந்தது. தனபாக்கியமோ  “ஆத்தா மகமாயி என் குழந்தைகளை காப்பாத்திட்ட உன் வேண்டுதலை நிறைவேத்திடுறேன்” என்று நிம்மதியாக மூச்சுவிட்டார்.

 

பேரனின் கோபம் அறியாதவரா தனபாக்கியம். இருக்கும் இடம் சூழல் தெரிந்து “வீட்டுக்கு போய் பேசிக்கலாம் புறப்படுங்க” என்றதும் அருள்பாண்டியனும் சந்தனபாண்டியனும் அவர்கள் காரை எடுத்தனர். தனபாக்கியம் ஆர்த்தியுடன் தங்கபாண்டியன் காரில் ஏறினார். தனபாக்கியம் தோளில் சாய்ந்துக் கொண்ட ஆர்த்தியை மடியில் படுக்கவைத்து தலையை வருடிக்கொடுத்தபடியே இருக்க. தன்னை சுற்றி பெரிய பாதுகாப்பு சுவர் இருப்பதாக உணர்ந்த ஆர்த்தியோ அப்படியே உறங்கிவிட்டாள்.

 

வீடு வந்தும் இன்னும் ஆர்த்தி உறங்கிக்கொண்டிருக்க அப்படியே அவளை தூக்கிக்கொண்டு அவர்களது அறைக்கு வந்து படுக்க வைத்துவிட்டு திரும்ப பூபாலனை தூக்கிக்கொண்டு ஆர்த்தியை பார்க்க வந்தவள் “தம்பி பேபி” என்றதும் “நல்லாயிருக்கு மதினி” என்று கண்ணைமூடித்திறந்தான்.

 

“அப்பாடா” என்று வளர்மதியும் நிம்மதியானாள். தேன்மொழியும் அறைக்குள் வந்தவள்  “மாமா அக்கா” என்று ஆரம்பிக்க “அக்கா நல்லாயிருக்காடா நீ போய் ரெஸ்ட் எடு” என்று தேன்மொழியின் தலையை வருடிவிட்டான். 

 

அங்கே வந்த தனபாக்கியமோ “அவளுக்கு காத்து வரட்டும் சுத்தி நிற்காதீங்க வெளியே வாங்க” என்று சொன்னதும் அனைவரும் வெளியே வந்துவிட்டனர் தங்கபாண்டியனை தவிர.

 

கொஞ்ச நேரத்தில் ஆர்த்திக்கு தூக்கம் தெளிய சோபாவில் உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருக்கும் தங்கபாண்டியனை பார்த்தாள்.

 

ஆர்த்தியிடம் எதுவும் பேசாமல் அவளை தூக்கிக்கொண்டு போய் குளியலறைக்குள் விட்டான் அவளது தேவையை அறிந்து.

 

அவளது தேவைகளை முடித்து விட்டு வெளியே வர மீண்டும் தூக்கிக்கொண்டு வந்து மெத்தையில் உட்கார வைத்தவன் சற்று முன்னே தனபாக்கியம் போட்டுக்கொடுத்த மாதுளை பழச்சாறை அவள் கையில் கொடுத்து “குடி” என்று ஒரு பார்வை பார்த்தான்.

 

“பேசமாட்டீங்களா கோல்ட்” என்றாள் ஏங்கிய குரலில்.

 

“பேசாம குடி” என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு  கணவனின் அன்பான அம்மு என்ற வார்த்தை வராமல் போக அழுகை வந்தது. தான் அழுககூடாதென கண்ணீரை வெளியே விடாமல் ஜுஸை குடித்து முடிக்க டம்ளரை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு “என்ன தேவைனாலும் இந்த பெல்லை அமுக்கு உதவிக்கு வருவாங்க தேவையில்லாம கட்டிலை விட்டு இறங்ககூடாது நான் சும்மா சொல்லலை. திடீர்னு மயக்கம் வரும் கீழ விழுந்துட்டா என்னால சும்மா சும்மா பயந்து சாக முடியாது” என்றவனோ அங்கிருந்து நகர்ந்து விட்டான். கணவனின் குரலில் அத்தனை வருத்தம் இருந்தது.

 

ஆர்த்தியோ தான் செய்த தவறை எண்ணி குற்றவுணர்வுடன் கண்களை மூடிக்கொண்டாள். தங்கபாண்டியனோ அவள் உறங்கும் போது வெளியே வந்தவன் சோபாவில் யோசனையுடன் உட்கார்ந்திருந்த தனபாக்கியத்திடம் சென்று அவர் பக்கம் உட்கார்ந்தவன் சட்டென அவரது மடியில் படுத்துவிட்டான். அவன் கண்ணில் கண்ணீர் உருண்டு வந்தது.

 

தனபாக்கியம் கையில் பட்டு விட்டது. “ஐயா ராசா அழறியா அதான் குழந்தை நல்லாயிருக்குனு சொல்லிட்டாங்களே இன்னும் ஏன் ராசா” என்று அவனது தலையை வருடி விட “அப்பத்தா என் உயிர் போய் வந்திருக்கு” என்று குலுங்கி சத்தம் வராமல் அழுதான்.

 

“எல்லாம் கண் திருஷ்டி தான் காரணம் நாம யாருக்கும் கெடுதல் நினைக்கலையே கண்ணா! எல்லாம் நல்லதுதான் நடக்கும் நீ கவலைப்படாதடா கண்ணா” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்க அருள்பாண்டியன் வந்துவிட்டான். 

 

கண்ணீரை துடைத்து எழுந்த தங்கபாண்டியனின் முகத்தை பார்த்த அருள்பாண்டியனோ “தங்கம் நாம கொஞ்சம் அலர்ட்டா இருக்கணும்டா. வெளியூர்ல இருந்து ஊருக்குள்ள நெருப்பு வைக்கும் ஒரு காவாலிக்கூட்டம் நம்ம ஊருக்குள்ள நுழைஞ்சுட்டாங்கனு என் காதுக்கு நியூஸ் வந்திருக்கு. அவங்களை யாரு வரச்சொல்லியிருப்பாங்கனு எனக்கு தெரிஞ்சிடுச்சி… நம்ம பஞ்சு ஆலை, ரைஸ் மில், கோழிப்பண்ணை எல்லா இடத்திலையும் நைட் காவலுக்கு ரெண்டு மூணு பேரை நிற்க வைக்கணும். எந்த நேரம்னாலும் அலர்ட் பெல் அடிக்க சொல்லியிருக்கேன் தம்பி” என்றவனிடம் “அண்ணா இப்பவே போய் அந்த நாகப்பனை போட்டுத்தள்ளிரலாம் வாங்க” என்று வெகுண்டெழுந்துவிட்டான் தங்கபாண்டியன்.

 

அருள்பாண்டியன் பேசியதை கேட்டுக்கொண்டே வந்த சந்தனபாண்டியனும் “தங்கம் அண்ணா சொல்றதுதான் சரி அந்த நாகப்பனை போட்டு தள்ளிடலாம் அருள் அண்ணா” என்று அவனும் மீசையை முறுக்கிவிட்டு நின்றான்.

 

“ரெண்டு பேரும் உங்க கோபத்தை ஓரமா ஒதுக்கி வச்சிட்டு அமைதியா இருங்க… அதுக்கான நேரம் இன்னும் வரலை” என்றான் அருள் அழுத்தமாக. 

 

தனபாக்கியமோ “அருள் சொன்னது சரிதான் நம்ம வீட்டுக்கும் ரெண்டு காவல் ஆளுங்களை நிறுத்தி வைங்க. இந்த நாகப்பன் நச்சு பாம்பு அவனை நம்பவே முடியாது” என்றார் தீர்க்கமாக.

 

நாகப்பனோ போனில் “டேய் இன்னிக்கு நைட் தங்கபாண்டியன் கோழிப்பண்ணைக்கு நெருப்பு வைச்சிடுங்க” என்றார் சாதாரணமாக.

 

அங்கே வந்த தென்னரசுவோ “அப்பா கோழிப்பண்ணைக்கு நெருப்பு வச்சா அத்தனை கோழி உயிரும் போயிடும் பாவம்ல” என்றவனை ஏளனமாக பார்த்து “என்னடா புத்தனா மாறிட்டியா என்ன!” என்று மகனை பார்த்து சிரித்தார்.

 

“மனுசனா மாறிட்டேன்பா” என்றவனை 

 

“என்ன கட்சி மாறிட்டியா இந்த விசயம் வெளியே தெரிஞ்சது மகன்னு கூட பார்க்க மாட்டேன் கொன்னே போடுவேன். அப்புறம் உன்னோட பொண்டாட்டி, புள்ளை ரெண்டு பேரையும் கொன்னு போட்டு சந்தனபாண்டியன் மேல பழியை போட்டுவிடுவேன் பார்த்துக்கோ எந்த உண்மையும் வெளியே வரக்கூடாது” என்று எச்சரித்துச் சென்றவரை பெரும்மூச்சு விட்டு பார்த்தவனுக்கு இவர் மூலமா இந்த உலகத்துக்கு வந்தோம் என்றிருந்தது. 

 

நாகப்பன் சென்று விட்டார் என்று போனை எடுத்து  மல்லிகாவை பத்திரமாக இருக்க சொல்லி போன் போட்டவன் அடுத்து அருள்பாண்டியனுக்கு போட்டான். தங்கபாண்டியனுக்கோ, சந்தனபாண்டியனுக்கோ போன் போட்டால் அவர்கள் தன் போனை எடுக்க கூட மாட்டார்கள் என்று தெரிந்தவன் பொறுமையாக இருக்கும் அருள்பாண்டியனுக்கு போன் செய்தான். ஒரு ரிங் தான் போனது தென்னரசுவின் போன் சுக்கு நூறாக உடைந்து போனது. ஆம் நாகப்பன் தான் போனை உடைத்துவிட்டார்.

 

“டேய் எங்கேடா போனீங்க இவனை பிடிச்சு குடோன்ல அடைச்சு வைங்கடா என் மகன்னு எல்லாம் சலுகை கொடுக்காதீங்க நேரத்திற்கு சோறு தண்ணி மட்டும் கொடுங்க சங்கிலியால கட்டிப்போட்டு வைச்சிடுங்க” என்று மிருகத்தை போல நடந்துக் கொண்டு வேட்டியை மடித்துக்கொண்டு “இந்த நாகப்பன் யாருனு காட்டுறேன் அந்த மூணு பாண்டியனுக்கும் அவங்க மூணு பேரும் என் காலுல விழணும்” என்று கொக்கரித்துக்கொண்டுச் சென்றார் நாகப்பன். 

 

தினை விதைத்தவன் தினையை அறுப்பான்… வினை வினைத்தவன் வினையை அறுப்பான் என்பது போல வினையை மட்டுமே செய்துக் கொண்டிருக்கும் நாகப்பனுக்கு அழிவு நெருங்கிவிட்டது என்று தெரியாமல் ஆணவத்தில் ஆடிக்கொண்டிருந்தார்.

 

ரைஸ் மில், கோழிப்பண்ணை, பஞ்சு ஆலை எல்லா இடங்களிலும் காவல் அதிகம் இருக்க நெருப்பு வைக்க வந்த கூட்டத்தினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உள்ளூரில் இருக்கும் ஆட்கள் யாரும் பாண்டியன் குடும்பத்திற்கு தீவினை செய்ய முன் வரவில்லை. அதனால்தான் வெளியூரிலிருந்து ஆட்களை இறக்கினார் நாகப்பன்.

 

இப்போது அவர்களும் எங்களால முடியாது என்று பின்வாங்க நாலு பணக்கட்டை அவர்கள் முகத்தில் விசிறி அடித்து “ஒரு பத்துநாளு காவல் போடுவானுங்க நாம அமைதியா ஆறப்போடுவோம் காவல் குறைஞ்சதும் உங்க வேலையை காட்டிடுங்க” என்று கோரமாக சிரித்தார் நாகப்பன். அந்த கயவர்களுக்கும் பணம் அதிகம் காட்ட ஆசையும் வந்து பாண்டியர்களை பற்றி முழுமையாக தெரியாது கூட்டமாய் இருந்தனர்.

 

அடுத்து வந்த நாட்கள் ஆர்த்தியிடம் தேவையென்றால் மட்டுமே பேச ஆரம்பித்தான் தங்கபாண்டியன். “கோல்ட் என்கிட்ட பேசுங்களேன்” என்று அவனது கையை பிடித்துக்கொள்வாள். அவன் பேசாமல் விரதம் இருப்பான்.

 

“நீங்க பேசினாத்தான் நான் சாப்பிடுவேன்” என்று அடம்பிடிப்பவளிடம் இரண்டு வார்த்தை மட்டுமே பேசுவான். அம்மு என்று அவன் வாயிலிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. 

 

“சாப்பிடு” என்று தட்டை நீட்டி அவள் பக்கம் உட்கார்ந்தான். “நீங்களே ஊட்டி விடுங்க” என்று அவன் கன்னத்தில் எக்கி முத்தம் கொடுத்தாள்.

 

“ப்ச் சாப்பிடுடி” என்று அவளுக்கு சாப்பாட்டை ஊட்டிவிட ஆரம்பித்தான். 

 

டி போட்டு போட்டு வெகுநாள் கழித்து அழைத்திருக்கிறான் தங்கபாண்டியன். சந்தோசத்தில் தட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டாள். தினமும் மூணு நேரமும் சாப்பாட்டை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்துவிட்டு சாப்பிடு என்று சோபாவில் உட்கார்ந்து போனை நோண்ட ஆரம்பித்துவிடுவான். இன்று அவள் சாப்பிடாமல் அடம் பிடிக்கவே ஊட்டிவிட வேண்டியதாய் போனது. சாப்பிட்டு முடித்து தட்டில் கழுவி விட்டு அவள் வாயை துடைத்துவிட்டான்.

 

அவனது விரலில் முத்தம் கொடுத்து “கோல்ட் என்கூட பேசேன்! என்னை ரெண்டு திட்டாவது திட்டேன் நான் வாங்கிக்கிறேன் என்கிட்ட பேசாம கொல்லாத கோல்ட்” என்று அவள் கண்ணீர் விட்டாள்.

 

“என்ன பேசறதுடி நான் சொல்றதை என்னிக்கு நீ கேட்டு இருக்க” என்று அவன் மனதில் இருந்தது மடைதிறந்த வெள்ளம் போல முட்டிக்கொண்டு வந்ததை அடக்கிவிட்டு கை முஷ்டியை இறுக்கியவன் “இப்போதைக்கு எதுவும் பேசாத அதான் ரெண்டு பேருக்கும் நல்லது ப்ளீஸ் புரிஞ்சுக்கோ அம்மு” என்றவனோ அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

 

தன்னவனின் அம்மு என்ற வார்த்தையே போதும் என்று ஆனந்தப்பட்டவள் அப்படியே நிம்மதியாக கண்ணை மூடிக்கொண்டாள். அவனின் வலி என்னவென்று அவளுக்கு தெரியாமல் இல்லை.

 

தேன்மொழிக்கும் படிப்படியாக வாமிட் வருவது நின்றுவிட்டது. “ஐ எனக்கு இன்னிக்கு வாமிட் வரலை அம்மாச்சி” என்று ஜுஸ் குடித்து குதிக்க போனவளை “அடியேய் அறிவுகெட்டவளே வயித்துல புள்ளையை வச்சிக்கிட்டு குதிக்க போற” என்று மகளை பார்க்க வந்த தேவி அதட்டல் போட “அச்சோ கடவுளே!” என்று வயிற்றை பிடித்துக்கொண்டாள் தேன்மொழி.

 

தேன்மொழியிடம் பேசிவிட்டு ஆர்த்தியை பார்க்கச் சென்றார் தேவி.

 

ஆர்த்தியோ அப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருந்தாள். “வாங்கம்மா” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

 

“நான் நல்லாயிருக்கேன் கண்ணு உன் உடம்புக்கு எப்படியிருக்கு?” என்று அவள் பக்கம் உட்கார்ந்தவர் அவளின் தலையை வருடிவிட்டு அவள் முகம் சிரிப்பில்லாமல் இருக்க “என்ன ராஜாத்தி மாசமா இருக்க பொண்ணு சந்தோசமா இருக்க வேண்டாமா என் தங்கபாண்டியன் குழந்தை சும்மா கம்பீரா இருக்கணும்ல இப்படி எந்நேரமும் முகத்தை சோகமா வச்சிருந்தா எப்படி” என்று அவள் கன்னத்தை பிடித்து கேட்டார்.

 

“அம்மா உங்க தம்பி என்கிட்ட சரியா பேசறதில்லை தெரியுமா? நான் எப்படி சிரிக்க முடியும். நான் என் உயிரையே அவர் மேல வச்சிருக்கேன்ம்மா! ஆனா அவருக்கு என்மேல பாசமே இல்லை இப்போ! நான் செஞ்சது தப்புதான் அதுக்காக என்கிட்ட பேசாமயே இருந்தா என் மனசு கஷ்டப்படாதா” என்று அவள் மனதில் இருந்ததை தேவியிடம் கொட்டிவிட்டாள் ஆர்த்தி.

 

“அம்மாடி எனக்கு நீயும் பொண்ணு போலதான்” என்றவரோ “என் தம்பி தங்கபாண்டியன் பெயரை போலவே தங்க மனசுக்காரன் தெரியுமா? சின்ன வயசுல இருந்து அவனுக்கு குழந்தைகள்னாவே ரொம்ப பிடிக்கும்… என் மக பெரியவ பொன்னி சின்னவயசுல என்கிட்ட இருந்ததை விட தங்கபாண்டியன் கிட்டதான் அதிக நேரம் இருப்பா! ஏன் தேன்மொழி தங்கம் பின்னாலயே சுத்துவா. என்ன வேணுமோ அத்தனை வாங்கிக்கொடுப்பான் கண்ணு. ஊர்ல இருக்க குழந்தைகளுக்கு தினமும் சாக்லேட் வாங்கித் தந்துடுவான். அவனுக்கு இத்தனை வருசம் குழந்தை இல்லைனு எவ்ளோ         ஏக்கப்பட்டு வருத்தப்பட்டிருப்பான் கண்ணு… அப்பத்தாகிட்ட உன்னை லவ் பண்ணுறேன் எனக்கு ஆர்த்தியை கல்யாணம் பண்ணி வைங்க இல்லைனா காலம் முழுக்க மொட்ட பயலா இருந்துடுவேன். எனக்கு ஆர்த்தி வேணும் அப்பத்தா… ஆர்த்தி நல்ல பொண்ணுனு ஒற்றை காலில் நின்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான்!! நீ இந்த வீட்டுக்கு வந்த போதெல்லாம் என்கிட்ட முகம் கொடுத்து பேசமாட்ட! ஆனா தங்கபாண்டியனோ அக்கா அவளுக்கு வேலை பிரசர் அதிகம், உடம்பு சரியில்லைனு ஏதோ ஒரு காரணம் சொல்லி எங்களை சரி கட்டுவான் தெரியுமா அவனை போய் பாசம் இல்லைனு சொல்லுற கண்ணு! என் தம்பி சொக்கத்தங்கம் இனியாவது அவன் மனசு புரிஞ்சு நடந்துக்கோ” என்று அவள் கன்னம் தட்டிச் சென்றார்.

 

தங்கபாண்டியனின் நண்பன் குமாருக்கு குழந்தை பிறந்த போது குழந்தைக்கு தேவையான அனைத்தும் வாங்கிக்கொண்டுச் சென்றது அவள் நினைவில் வந்து நின்றது. ‘சாரி கோல்ட் என்னை மன்னிச்சிடுங்க’ என்று கண்ணீர்விட்டாள்.

 

மகேஷ்வரன் காய்ச்சல் சரியானதும் சங்கரியுடன் தனபாக்கியம் வீட்டுக்கு வந்தார். மகளை பார்த்தவர் “இப்போ உன் ஹெல்த் எப்படிடா இருக்கு?” என்று வாஞ்சையோடு கேட்டவரிடம் “நல்லாயிருக்கேன்பா நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் புன்சிரிப்புடன்.

 

“நான் நல்லாயிருக்கேன்டா அடுத்த மாசம் சென்னைக்கு கிளம்புறேன் பழையபடி பிஸ்னஸ் பண்ணப்போறேன்” என்றவரை புருவம் சுருக்கி பார்க்க 

 

“பணம் மாப்பிள்ளை கொடுத்தாங்க. நான் வேண்டாம்னுதான் சொன்னேன் என்னை உங்க மருமகனா பார்க்காதீங்க மகனா பாருங்கனு பெட்டில பணத்தை வச்சிட்டு போயிட்டாரு. அதுமட்டுமல்ல டா இந்த வீட்ல இருக்க பெரிய மாப்பிள்ளை சின்ன மாப்பிள்ளை எல்லாரும் குட் கேரக்டர் எல்லாரையும் தங்கமா வளர்த்திருக்காங்க தனபாக்கியம் அம்மா! நான் நிம்மதியா சென்னைக்கு கிளம்புறேன்” என்றார் சந்தோசமாக.

 

சங்கரியோ எதுவும் பேசவில்லை. ரெண்டு நாள் முன்பு தங்கபாண்டியன் பணத்தை கொண்டு வந்து கொடுக்க ஆடிப்போய்விட்டார். எத்தனை முறை தங்கபாண்டியனை பட்டிக்காட்டான் என்று குத்தி குத்தி பேசியிருக்கோம் இன்று பணம் கொண்டு வந்து கொடுக்கும் மருமகனை பார்த்து வாயடைத்துப்போய்விட்டார். ஆனால் இன்னும் வரட்டு கௌரவத்தை மட்டும விடவில்லை. ஒரு சில பேர் அப்படித்தான். நாய் வாலை நிமிர்த்த முடியுமா? தங்கபாண்டியன் மீது காதல் இமயமலை போல உயர்ந்தது ஆர்த்திக்கு.

 

“உடம்பை பார்த்துக்கோடி போன் போடு இங்க இருக்கவங்கதான் உன்னை தங்கமா பார்த்துக்கிறாங்க நான் இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வளைகாப்புக்கு வரோம்” என்று மூன்றாம் மனுசி போல பேசிய தாயை முறைத்து பார்த்தாள் ஆர்த்தி.

 

“நான் உண்மையைத்தான் பேசினேன்டி!! என்னை யாரு இங்க மதிக்குறாங்க இப்போ கூட எனக்கு ஒரு காபி கூட கொடுக்கலை” என்று குறையாக சொன்னவரை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தாள்.

 

“மகள் கூட பேசிக்கிட்டு இருக்கணும்னு உனக்கு காபி எதுவும் கொண்டு வந்திருக்க மாட்டாங்கம்மா! நீ இன்னும் திருந்தாம இருக்காதே!” என்று பேசிக்கொண்டிருக்க காபியுடன் வந்து நின்றாள் வளர்மதி.

 

காபியை எடுத்துக்கொண்ட சங்கரியோ ஒருவாய் குடித்துவிட்டு “இன்னும் கொஞ்சம் சர்க்கரை போட்டிருக்கலாம்” என்றவரை “எனக்கு சர்க்கரை சரியா இருக்கே” என்று மகேஷ்வரன் சங்கரியை முறைக்க “நான் கொஞ்சம் சர்க்கரை உரப்பா போட்டுப்பேன்” என்று அப்பவும் வாயாடினார் சங்கரி.

 

“இருங்க சர்க்கரை அதிகம் போட்டு கொண்டு வரேன்” என்று சொன்ன வளர்மதியை “அக்கா பூபாலனை போய் பாருங்க இவங்க இப்படித்தான்” என்று சங்கரியை முறைத்தாள் ஆர்த்தி.

 

வளர்மதி சென்றவுடன் “என்னடி அந்த பொண்ணு முன்னால என்னை அவமானப்படுத்துறியா. உன்கிட்ட பணம் இருக்குனு தலைக்கனத்தோடு ஆடுறியா?” என்று எரிந்து விழுந்தார்.

 

“ஏய் புள்ள கன்சீவ்வா இருக்கா அவகிட்ட பாசமா பேசலைனாலும் இப்படி பஜாரி போல நடந்துக்காத!” என்று சங்கரியை திட்டிய மகேஷ்வரன் “அம்மாடி ஹெல்த் பார்த்துக்கோ அப்பா மறுபடி வரேன்” என்று ஆர்த்தியின் தலையை தடவிவிட்டு நெற்றியில் முத்தம் கொடுத்து தலையை தடவிவிட்டுச் சென்றார்.

 

“இருங்க நான் ஆர்த்திகிட்ட சாரி கேட்டுட்டு வரேன்” என்ற சங்கரியை  ஏற இறங்க பார்த்துவிட்டு “என்ன ஜென்மம் நீ போய் தொலைடி” என்று சங்கரியை ஆர்த்தியின் அறைக்குள் விட்டார்.

 

“ஆர்த்தி சாரிடி நான் கொஞ்சம் கோபமா பேசிட்டேன்” என்றவரை “என்னம்மா உனக்கு வேணும்” என் நெற்றியை பிடித்துக்கொண்டவளை  “அடியேய் உனக்கு குழந்தை பிறந்ததும் சொத்தை பிரிச்சு கொடுக்கச் சொல்லி தனியே போய்டு இல்லைனா!! இந்தவீட்டுல வேலைக்காரியாதான் இருக்கணும் உன் புருசன் கோழிப்பண்ணையில நல்ல வருமானம் போல எல்லா காசும் இந்த தனபாக்கியம் கிழவிகிட்டதான் கொண்டு வந்து கொடுப்பான்” என்றார் முகம் சுளித்து.

 

“அம்மா நீ ஏன் இப்படி கேவலமான புத்தியோட இருக்க. எல்லா அம்மாவும் பொண்ணு வாழ்க்கை நடத்துற இடத்துல ஒத்துமையா இருக்கணும்னுதானே சொல்லுவாங்க! நீ ஏன் இப்படி இருக்க நீ இங்கிருந்து கிளம்பிடுமா” என்றாள் பல்லைக்கடித்து. 

 

“போடி நான் சொல்றதை சொல்லிட்டேன் அவ்ளோதான் புத்தியா இருந்தா பொழைச்சுக்கோ” என்று சொல்லிச்சென்றுவிட்டார்.

 

ரெண்டு நாட்கள் முன்னே மகேஷ்வரன் வாக்கிங் சென்றிருந்த சமயம் சங்கரியை பார்க்க நாகப்பன் வந்தார். 

 

“யாருங்க நீங்க?” என்று காட்டமாய் பேசியவரை பார்த்து

 

“ம்ம் எனக்கு ஏத்த ஆளுதான் நீங்க” என்ற நாகப்பன் “நான் சொல்றதை நீங்க கேட்கணும் இல்லைனா உங்க பொண்ணு வயித்துல இருக்க குழந்தையை இல்லாம பண்ணிடுவேன்” என்று மிரட்டினார்.

 

“யாரு வீட்டுக்கு வந்து யாரை மிரட்டுற என் மருமகன் தங்கபாண்டியனுக்கு போன் போட்டா தெரியும்” என்று போனை எடுக்க போனை பிடுங்கி தூர எறிந்தவரோ “அம்மா உனக்கு நான் நல்லதுதான் சொல்ல வந்திருக்கேன்” என்றவர் “உன் மருமகன் தங்கபாண்டியன் கோழிப்பண்ணையில நல்ல வருமானம் வருது அத்தனையும் அந்த வீட்டு கிழவி தனபாக்கியம்தான் வாங்கி சுருக்குப்பையில போட்டுக்குது. உன் பொண்ணு வாழ்க்கை நல்லாயிருக்கணும்னா சொத்தை பிரிச்சு கொடுக்க சொல்லி உன் பொண்ணை தங்கபாண்டியன் கிட்ட சண்டை போடச்சொல்லு” என்று கத்தை பணத்தை எடுத்து நீட்டிய நாகப்பன் “நான் பணத்தை கொடுத்துட்டு சும்மா இருக்க மாட்டேன் நீ உன் பொண்ணுகிட்ட சொத்தை பிரிக்கிற விசயத்தை பேசறதை கேட்க என் ஆளை தங்கபாண்டியன் வீட்டுக்கு அனுப்புவேன் நீ மட்டும் நான் சொன்னதை செய்யலைனா நடக்கறது வேறயா இருக்கும்” என்று மிரட்டினார்.

 

பணத்தை எடுத்துக்கொண்டு “நான் என் பொண்ணுகிட்ட சொல்றேன்” என்று சொல்லிவிட நாகப்பனும் தான் வந்த காரியம் நிறைவேறிவிட்ட சந்தோசத்தில் சென்றார்.

 

சங்கரியோ பணத்தை வாங்கலைனா என் பொண்ணை எதாவது செய்துட்டா என்ன பண்ணறது நான் கெட்டவளா இருந்துட்டு போறேன் என்று எண்ணித்தான் ஆர்த்தியிடம் சண்டைபோடுவது போல போட்டு விட்டு வந்தார்.

 

அருள்பாண்டியன் பாதுகாப்பை தொடர்ந்து போட்டுக்கொண்டேயிருக்க நாகப்பன் நினைத்த காரியம் நடக்கமுடியாமல் போனது. அருள்பாண்டியனிடம் நாகப்பன் கூட்டி வந்த அந்த கூட்டத்து தலைவன் மாட்டிக்கொண்டான். 

 

தங்கபாண்டியனும், சந்தனபாண்டியனும் அவனை அடித்து துவம்சம் செய்து இந்த ஊருக்குள்ள மறுபடியும் பார்த்தேன் கொன்னு புதைச்சுடுவேன் பார்த்துக்கோ என்று மிரட்டி ஊரை விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓட வைத்தனர்.

 

“ஆஆ என் பிளான் எல்லாம் அவனுங்களுக்கு எப்படி தெரியுது” என்று குழம்பியவர் அடைத்து வைத்த தென்னரசுவை போய் பார்த்தார். 

 

அவனோ தாடியுடன் நாகப்பனை முறைத்து பார்த்தான். 

 

“என்னடா முறைக்குற உன்னைய வச்சுதான் என் அடுத்த ப்ளான்” என்றவரோ மல்லிகாவை பார்க்கச் சென்றார்.

 

பிரச்சனை முடிந்தது என்று சந்தோசமாக இருந்த தனபாக்கியம் குடும்பத்தில் மல்லிகாவால் அடுத்த பிரச்சனை வந்தது.

 

நிலவு 29
 
 
தேன்மொழி கன்சீவ்வா இருக்கா என்ற விஷயம்  பொன்னிக்கு தெரிந்தும் ரமேஷிற்கு ஆபிஸ் விடுப்பு கிடைக்காமல் இருந்தது. வீக் எண்டில் ரமேஷிற்கு விடுப்பு இருக்க குழந்தையை எடுத்துக்கொண்டு சந்தோசத்துடன் புறப்பட்டு தனபாக்கியம் வீட்டிற்கு வந்திருந்தாள் பொன்னி.
 
தேன்மொழி பொன்னியின் குழந்தை அஞ்சனாவை கொஞ்சி தீர்த்தாள். 
 
பொன்னி ஆர்த்தியையும் நலம் விசாரித்து விட்டு அஞ்சனாவை தூக்கிக்கொண்டு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுவிட்டாள்.
 
அன்று வெள்ளிக்கிழமையாய் இருக்க கோவிலுக்கு பொன்மணியும், தேவியும் வந்திருந்தனர். சாமி கும்பிட்டு முடித்து அஞ்சனாவை பிரகாரத்தில் விளையாட விட்டு பார்த்திருந்தனர் ரமேஷும் பொன்னியும்.
 
அங்கே வந்த பொன்மணியின் மீது மோதிவிட்டாள் அஞ்சனா.
 
“சாரி தாத்தா” என்று அஞ்சனா கண்ணை உருட்டியது.
 
“பரவாயில்லை பாப்பா!! என்ன தனியா விளையாடுற உங்கம்மா எங்க?” என்று அஞ்சனாவை தூக்கிக்கொண்டார் பொன்மணி.
 
அஞ்சனாவை பொன்மணி தூக்கியதை  பார்த்து விட்டாள் பொன்னி.
 
“ரமேஷ் நம்ம அஞ்சனாவை அப்பா தூக்கிட்டாரு” என்று சந்தோசத்துடன் அழுகையும் சேர்ந்து வந்தது பொன்னிக்கு.
 
“இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம ரெண்டு பேரையும் உங்க அப்பா சேர்த்துக்குவாரு பாரேன்” என்றான் ரமேஷ் சிரித்தபடி.
 
“எப்படி” என்றாள் ரமேஷின் முகத்தை நிமிர்ந்து பார்த்து.
 
“நான் உன் கழுத்துல தாலி கட்டின சமயம் உங்க அப்பா வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சாரு. அவர் கோப முகம் இன்னும் என் கண்ணுக்குள்ள இருக்குடி. இப்போ உங்கப்பா முகம் சாந்தமா மாறிடுச்சு. வயசாக வயசாக கோபம் குறைஞ்சிடும் போல” என்றான் ரமேஷ் கண்ணைச்சிமிட்டி.
 
“அதோ அம்மா அங்கயிருக்காங்க தாத்தா” என்று பொன்னியை கைகாட்டினாள் அஞ்சனா.
 
பொன்னியை பார்த்துவிட்டார் பொன்மணி. கோவிலை சுற்றிய தேவியோ எங்க போனாரு என்று தேடிக்கொண்டு பொன்மணி பக்கம் வர “பாட்டி” என்று தேவியிடம் தாவியது அஞ்சனா. தேவி தினமும் வீடியோ காலில் அஞ்சனாவுடன் பேசுவது வழக்கம்தானே! இரண்டு நாள் முன்னே பேசும்போது “நான் உன்னை நேர்ல பார்க்க வரேன் பாட்டி” என்று சந்தோசத்துடன் சொல்லியது. “நானும் ஆவலாக இருக்கேன்டி தங்கப்பொண்ணு” என்றிருந்தார் தேவி. 
 
இன்று இருவரும் கொஞ்சிக்கொள்வதை கண்டு புருவத்தை நெறித்த பொன்மணியோ “தேவி!  பொன்னியோட பொண்ணா இவ?” என்று சற்று குரலை உயர்த்த
 
“ஆமா” என்று தேவியும் தலையை ஆட்டினார். “தாத்தா என்னை தூக்கிக்கோ” என்று இருகையையும் விரித்துக் கொள்ள பொன்மணியின் கோபம் எங்கோ காற்றில் கரைந்து போனது. 
 
“வாடா செல்லம்” என்று தூக்கிக்கொள்ள அஞ்சனா பொன்மணியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தது. பொன்மணியும் அஞ்சனாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்து “நான் உன்னோட தாத்தா” என்றவுடன் தேவி ஆச்சரியத்தில் கண்ணை விரித்துவிட்டார். தாத்தா, பேத்தி இருவரும் வேற ஒரு உலகத்தில் சென்றுவிட்டனர்.
 
பொன்னியோ “அப்பா” என்று தயங்கியபடி வந்து பொன்மணியின் முன்னே நின்றவள் “என்னை மன்னிச்சு என்கூட பேசுங்கப்பா” என்றாள் கண்கள் கலங்கிப்போய்.
 
“மன்னிச்சுட்டேன் வீட்டுக்கு மாப்பிள்ளையோட வா” என்று விறுவிறுவென்று நடந்தார். இன்னும் வீராப்பு குறையவில்லை. எத்தனைநாள் தான் பொண்ணுங்க மீது கோபத்தை இழுத்து வைத்துக்கொள்ள முடியும் ஒரு காலம் வரைதான் கோபம் இருக்கும். தன் வயது ஒத்தவர்கள் இது என் பேரன், இது என் பேத்தி என்று கொஞ்சும்போது தனக்கும் மூத்த பெண் இருக்கிறாள் அவளுக்கும் குழந்தை பிறந்திருக்கும் நாம ஏன் பேத்தியை போய் எடுத்துட்டு வரக்கூடாது என்று பலமுறை யோசித்திருக்கிறார் பொன்மணி.
 
அப்போதெல்லாம் மகள் தனக்கு ஏற்படுத்திய அவமானம் அவர் கண்முன்னே நிழலாட அந்த எண்ணத்தை குப்பையில் போடுவது போல போட்டுவிடுவார் பொன்மணி. தேவி பொன்னியிடமும் பேத்தியிடமும் பேசுவது தெரியும். அவளாவது சந்தோசமாய் இருக்கட்டும் என்று விட்டிருந்தார்.
 
இப்போது பேத்தியையும் பெற்ற மகளையும் நேரில் பார்த்ததும் அவருக்கு இருந்த கோபம் மறைந்து பாசம் வெளிப்படையாக வந்துவிட்டது. 
 
“ஏய் அப்பாதான் கூப்பிட்டாருல்ல கிளம்புடி! மாப்ள ஏன் அங்கேயே நின்னுட்டீங்க வாங்க” என்று பொண்ணையும் மாப்பிள்ளையையும் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்தார் தேவி.
 
தேவி வீட்டுக்குள் சென்றுவிட்டார். பொன்னி ரமேஷின் கையை பிடித்துக்கொண்டு வாசலிலேயே தயங்கி நின்றிருந்தாள்.
 
அஞ்சனா கையில் கரடி பொம்மையுடன் ஓடி வந்து “அம்மா! அப்பா! உள்ளே வந்து பாருங்க! எனக்கு எவ்ளோ பொம்மை தாத்தா வாங்கிக்கொடுத்திருக்காரு” என்று மகிழ்ச்சியாக சிரித்தது.
 
பொன்மணி வெளியே வந்தவர் ரமேஷை பார்த்து “க்கும்” என்று தொண்டையை செருமி “வாங்க மாப்ள” என்று கையெடுத்து கும்பிட்டார். 
 
“வ.வரோம் மாமா” என்று ரமேஷும் தயங்கியபடிதான் உள்ளே வந்தான்.
 
“அப்பா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன்பா” என்று பொன்மணியை கட்டிக்கொண்டு தேம்பினாள். 
 
“அழாதடா அப்பாவும் உன்னை மிஸ் பண்ணினேன்” என்றவரின் கண்ணிலும் ஒரு சொட்டு கண்ணீர் வந்தது. 
 
“மாமா நாளைக்கு நம்ம பாப்பாவுக்கும் அஞ்சனா போலவும், பூபாலன் போலவும் கைகால் பஞ்சு போல இருக்குமா. குட்டி ரோஜா பூ போல சாஃப்ட்டா இருக்குமா!” என்று கண்ணை விரித்து  சந்தனபாண்டியனிடம் கேள்விக்கணைகளை தொடுத்தாள்.
 
“ஆமாண்டி குட்டிப்பொண்ணு” என்று அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் சந்தனபாண்டியன். 
 
“மாமா குழந்தை பிறக்குற வரை உன்னை கிட்ட சேர்க்க கூடாதுனு அப்பத்தா ஆர்டர் போட்டிருக்கு” என்றாள் அவன் காதில் இரகசியம் பேசுவது போல.
 
“அடி மக்கு பொண்ணு இப்போல்லாம் ஒண்ணும் ஆகாது நான் டாக்டர்கிட்ட கேட்டுட்டு வந்துட்டேன்” என்று சந்தனபாண்டியன் தேன்மொழியின் இதழில் முத்தமிட்டான். 
 
“அப்படியா பாப்பாக்கு ஒண்ணும் ஆகாதா ஆர்த்தியக்கா போல ஆகிடாதே” என்று பயந்தாள் தேன்மொழி.
 
“ம்ஹும் பாப்பாக்கு எதுவும் ஆகாதபடி நான் பார்த்துப்பேன்” என்றான் அவள் மூக்கோடு முக்கை உரசி.
 
“அச்சோ நான் மாட்டேன் மாமா அப்பத்தாகிட்டே கேட்டு சொல்றேன்” என்றவளை முறைத்துப் பார்த்தவன் அவளது கன்னத்தை தாங்கி பெண்ணவளின் இதழில் மென்மையாய் முத்தமிடத்துவங்கினான் சந்தனபாண்டியன். மெதுமெதுவாய் பெண்ணவளை தன் பாணியில் வசியம் செய்து மலருக்குள் தேன் எடுப்பது போல தேன்மொழியிடமிருந்து தேனை எடுத்துக்கொண்டான் சந்தனபாண்டியன்.
 
நாகப்பன் மல்லிகாவை பார்க்க பண்ணை வீட்டுக்குச் சென்றார். அங்கே சந்தனபாண்டியன் ஒரு கையில் அமுதனை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் மல்லிகாவின் கையை பிடித்தபடி நின்றிருந்தான். 
 
‘அடஅட சந்தனபாண்டியா நான் விரிச்ச வலையில சிக்கின பலி ஆடு நீதான்டா’ என்று நரித்தனமாக சிரித்தவர் மூவரையும் போட்டோ எடுத்துக்கொண்டு நேராகச் சென்றது பொன்மணியிடம் தான்.
 
பொன்மணியோ இப்போதுதான் சந்தனபாண்டியன் மீது கோபம் குறைந்து மகளை பார்க்க போகலாமென்று புறப்பட்டுக்கொண்டிருந்தவரின் முன்னே போய் நின்றார் நாகப்பன்.
 
நாகப்பனின் நஞ்சு குணம் தெரிந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று விலகியே இருந்தார். 
 
“அப்பா போகலாமா?” என்று சென்னையிலிருந்து வந்த பொன்னி வெளியே வந்தாள். “அட ஓடிப்போன பொண்ணை சேர்த்துக்கிட்டியா பொன்மணி” என்றார் ஏளனமான குரலில்.
 
“நாகப்பா என் பொண்ணை நான் எப்ப வேணாலும் சேர்த்துப்பேன் இன்னொரு முறை ஓடிப்போனவனு சொல்லாத பல்லை பேத்துடுவேன்” அவரும் நாகப்பனின் மூக்கை உடைத்தார்.
 
“ம்ஹும் என்கிட்ட எகிறாத பொன்மணி இங்க பாரு உன் சின்ன மருமகன் அந்த மல்லிகா டீச்சர் கூட கூத்தடிச்சிட்டிருக்கான்” என்று நாகப்பன் தான் எடுத்த போட்டோவை காண்பித்தார்.
 
பொன்மணிக்கோ கோபம் தலைக்கேறியது. வந்த வேலை முடிந்தது என்று “வா பொன்மணி தனபாக்கியத்திடம் நியாயம் கேட்போம்” என்று பொன்மணியை கூட்டிக்கொண்டு தனபாக்கியம் வீட்டுக்குச் சென்றனர்.
 
எப்போதும் உள்ள அவசர புத்தியில் தனபாக்கியம் வீட்டு முன்னே போய் நின்றார். 
 
பொன்னி தேவியிடம் விசயத்தை சொல்ல “அச்சோ என் தம்பி இப்படி கேவலமான விசயத்தை செய்யமாட்டான். இந்த மனுசனுக்கு புத்தி அடிக்கடி மழுங்கி போயிருமே” என்று பதறி தனபாக்கியம் வீட்டுக்கு ஓடினார்.
 
அங்கோ தனபாக்கியம் நடுநாயகமாக உட்கார்ந்திருந்தார். அருள்பாண்டியன், தங்கபாண்டியன், சந்தனபாண்டியன் மூவரும் கையை கட்டி நின்றிருந்தனர். 
 
தனபாக்கியமோ “என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று பொன்மணியை பார்த்து கேட்டார் பொறுமையாக.
 
“ம்ம் உங்க கடைசி பேரன் என் பொண்ணு கழுத்துல தாலிக்கட்டி கொஞ்ச நாள் வாழ்ந்து குழந்தையும் கொடுத்துட்டு… இப்ப இவன் லவ் பண்ணி சுத்தின மல்லிகா வந்ததும் அவ கூட சேர்ந்து கூத்தடிச்சிட்டு இருக்கான் என் பொண்ணு வாழ்க்கை என்னவாகும்” என்று எகிறி குதித்தார் பொன்மணி.
 
நாகப்பனோ நான் நினைச்சது நடக்குதுப்பா என்று மூன்று பாண்டியர்களையும் பார்த்து நக்கலாக சிரித்தார்.
 
தங்கபாண்டியனோ கைமுஷ்டியை இறுக்கினான். அருள்பாண்டியனுக்கு சந்தனபாண்டியன் நெறி தவற மாட்டான் என்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது. 
 
தனபாக்கியமோ “சந்தனபாண்டியா இப்படி வந்து நில்லு” என்றார் ஆர்டர் போடுவது போல.
 
கையை கட்டிக்கொண்டு வந்து நின்றவன் தனபாக்கியத்தை பார்த்தான். “மல்லிகா டீச்சரை போய் பார்த்தியா?” என்றார் அதட்டலாக.
 
“ஆமா” என்றான் தலையை ஆட்டி. தனபாக்கியம் சிறு அதிர்வு கூட முகத்தில் காட்டவில்லை. பேரனின் மீது அத்தனை நம்பிக்கை இருக்கு அவருக்கு. இருந்தாலும் ஊர் மத்தியில் தப்பு பண்ணியவன் என்று வந்து நின்று விட்டால் பாரபட்சமின்றி கேள்விகளை கேட்டு விடுவார் தனபாக்கியம் தண்டனையும் அப்படித்தான் கொடுப்பார்.
 
சுற்றி இருந்த ஆட்களில் ஒருவன் மட்டும் “பார்த்தியா இதுக்குத்தான் யாரையும் நம்பக்கூடாதுனு சொல்றது. தேன்மொழி பாவம்” என்றிருந்தான். மற்ற ஒருத்தியோ “பார்த்து பேசுங்க சந்தனபாண்டியன் தம்பி தங்கமான பையன்” என்று குறை கூறியவனை முறைத்தாள்.
 
நாகப்பனோ “மல்லிகா டீச்சர்க்கு ஒரு குழந்தை இருக்கு. அந்த குழந்தை சந்தனபாண்டியனோட குழந்தைனு நான் சொல்றேன்” என்றதும் தனபாக்கியம் நாகப்பனை திரும்பி பார்த்து பேசுவதற்குள் சந்தனபாண்டியன் நாகப்பனின் குரல்வளையை பிடித்துவிட்டான்.
 
“அருளு, தங்கம், சின்னவனை பிடிங்க” என்று அதட்டல் போட அருள்பாண்டியன்தான் சந்தனபாண்டியனை இழுத்து வந்து நிறுத்தினான்.
 
“பேசிட்டிருக்கும் போது எதுக்குடா அவரை அடிக்க போற… இதுதான் சபை நாகரீகமா! அப்போ நான் எதுக்கு நடுநாயகமா உட்கார்ந்திருக்கேன்” என்று கோபத்தில் கத்திவிட்டார் தனபாக்கியம்.
 
“மன்னிச்சிடு அப்பத்தா” என்று கை கூப்பினான் சந்தனபாண்டியன்.  
 
“அந்த மல்லிகா பொண்ணையும் குழந்தையும் வரச்சொல்லுங்க” என்று உத்தரவு போட்டார் தனபாக்கியம்.
 
நாகப்பனோ தண்ணீரை குடித்தவர் நடப்பதை வேடிக்கை பார்த்தார்.
 
மல்லிகாவோ குழந்தையுடன் வந்து நின்றாள். 
 
“மல்லிகா நேத்து உன்னைய சந்தனபாண்டியன் பார்க்க வந்தானா?” என்று கேட்டுவிட்டு அவளது கண்களை கூர்மையாக பார்த்திருந்தார்.
 
“ஆ.அமாங்க ஆத்தா” என்று கூறியவள் தலையை குனிந்துக் கொண்டாள்.
 
“இந்த குழந்தை யாரோடது?” என்றார் தீர்க்கமான குரலில். 
 
மல்லிகாவோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள்.
 
“அட அந்த டீச்சர் அமைதியா இருக்கும்போதே தெரியலையா குழந்தைக்கு அப்பா சந்தனபாண்டியன்தான்னு” என்ற நாகப்பனுக்கு வாய் குளறியது.
 
கொஞ்ச நேரம் முன்பு மல்லிகாவிற்கு போன் செய்த நாகப்பனோ “நீ பஞ்சாயத்துல வந்து உன் குழந்தை சந்தனபாண்டியனோட குழந்தைனு சொல்லணும். இல்லைனா உன்னையும் உன் குழந்தையும் கொன்னுடுவேன். அப்புறம் என் பையன் அதான் உன் புருசன் அவனையும் கொன்னுபோடுவேன்” என்று மிரட்டியிருந்தார்.
 
சந்தனபாண்டியனை பார்த்து “இல்ல இது எங்க அப்பா இல்ல” என்றது மல்லிகாவின் குழந்தை.
 
“வேற யாரு உங்கப்பா?” என்றார் குழந்தையின் முகம் பார்த்து தனபாக்கியம்.
 
“நான்தான் குழந்தைக்கு அப்பா” என்று காலை சாய்த்து நடந்து வந்தான் தென்னரசு. 
 
தென்னரசுவிற்கு உதவி செய்ய அவனது நண்பன் வந்திருந்தான். அவனின் உதவியோடு சங்கிலியை வெட்டி எடுத்து வந்துவிட்டான் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு.
 
“அப்பா” என்று ஓடி வந்து தென்னரசுவின் காலை கட்டிக்கொண்டான் அமுதன்.
 
சூர்யாவை தூக்கியவன் “நான்தான் மல்லிகாவோட புருசன்” என்று மல்லிகாவின் பக்கம் போய் நின்றவன் மல்லிகாவை அணைத்தபடி நின்றான். மல்லிகாவோ கண்ணீருடன் நின்றிருந்தவள் “எனக்கு நாகப்பன் போன் பண்ணி என்னோட குழந்தையை சந்தனபாண்டியன் குழந்தைனு சொல்லணும் அப்படி சொல்லாட்டி உன்னையும் குழந்தையையும் கொன்னுடுவேன்னு மிரட்டினாரு” என்று உண்மையை ஒப்பித்துவிட்டாள் மல்லிகா.
 
“சாரி சந்தனபாண்டியன் என்னால உங்களுக்கு கெட்ட பேரு வந்திருச்சு” என்று மன்னிப்பு கேட்டாள். சந்தனபாண்டியன் “உனக்கு உதவி செய்யத்தானே வந்தேன்” என்றான் புன்முறுவலுடன்.
 
போட்டோ எடுத்துவிட்டு வேகமாகச் சென்றதை பார்த்த மல்லிகா “தென்னரசுவோட அப்பா வந்துட்டு போறாரு பாண்டி” என்றவுடன் “எனக்கும் அவர் வந்தது தெரியும் தென்னரசுவை அவர்தான் அடைச்சி வச்சிருக்கணும் நாம ரெண்டு பேரையும் பத்தி தப்பா புகார் செய்வான் நாகப்பன். அப்போதான் உனக்கு தென்னரசுதான் புருசன்னு உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். உன் கவலையும் தீரும்” என்று மல்லிகாவிற்கு தைரியம் கூறினான் சந்தனபாண்டியன்.
 
பொன்மணியோ “என்னை மன்னிச்சிடு சந்தனபாண்டியன். இந்த நாகப்பன் புத்தி தெரியாம மறுபடியும் உங்களை தப்பா நினைச்சிட்டேன்” என்று மருமகனின் கையை பிடித்துக்கொண்டார்.
 
“இருக்கட்டும் மாமா விடுங்க. என்னை இன்னமும் நீங்க நம்பாம போனதுதான் வருத்தம்” என்றான் சந்தனபாண்டியன்.
 
“என்ன மாமா இப்பவாவது என் தம்பி நல்லவன்னு நம்புறீங்களா” என்று மீசையை முறுக்கிக்கொண்டு சந்தனபாண்டியன் பக்கம் வந்து நின்றனர் இரு அரண் போல.
 
நாகப்பன் வாயில் இரத்தம் குபுக்கென்று வந்தது. அவரோ “அச்சோ அம்மா காப்பாத்துங்க” என்று தனபாக்கியம் காலில் விழுந்தார்.
 
தனபாக்கியமோ தன் மகனை விஷம் வைத்து கொன்றவன் என்றெல்லாம் பார்க்கவில்லை. “அருளு, தங்கம் நாகப்பனை தூக்குங்க ஹாஸ்பிட்டல் கொண்டு போலாம்” என்று தனபாக்கியம் பரபரத்தார்.
 
தென்னரசுவோ “அந்த ஆளை எந்த ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனாலும் பொழைக்க மாட்டாரு நான்தான் விஷம் கலந்த தண்ணீரை கொடுத்தேன்” என்றான் ஆத்திரத்துடன்.
 
“டேய் மவனே என்னடா இப்படி பண்ணிட்டே நான் உன் அப்பாடா” என்று வாய் குளறி இருமினார் நாகப்பன்.
 
“நீ என் அப்பனா என் பொண்டாட்டிய தப்பான கண்ணோடத்துல பார்க்குற அதான் நானே உனக்கு விஷம் வச்சிட்டேன். எப்படி நீ ஊருக்கே தர்மம் செய்த சுந்தரபாண்டியன் சித்தப்பாவை விஷம் வைச்சு கொன்னியோ! அதே போல உனக்கு நான் தண்ணியில விஷம் கலந்துட்டேன்! உன்னை போல பிறவி இந்த உலகத்துல இருக்கக்கூடாது! நீ செய்த பாவத்துக்கு நான் பரிகாரம் தேடப்போறேன்!” என்றவன் நாகப்பன் உயிர் பிரியும் வரை அவர் பக்கம் போகவில்லை.
 
அங்கேயிருந்த மக்களுக்கும் சுந்தரபாண்டியனை விஷம் வைத்து கொன்ற விசயம் தெரியவர மக்கள் இவன் சாகவேண்டியவன்தான் என்று வீட்டுக்குச் சென்றுவிட்டனர்.
 
தனபாக்கியமோ “அருளு இவன் என் மகனை கொன்றவனா இருக்கலாம்… ஆனால் என்கிட்ட நியாயத்துக்கு வந்தவன் உயிர் போனநிலையில் இருக்கும்போது நான் இவனை அப்படியே விட்டு போக முடியாது இவன் இறுதி சடங்கிற்கு ஆகவேண்டிய வேலையை செய்து முடி” என்றவர் “தென்னரசு இந்த பொண்ணை கூட்டிட்டு என் வீட்டுக்கு வா” என்று முன்னே நடந்தார். 
 
அருள்பாண்டியன், தங்கபாண்டியன், சந்தனபாண்டியன் அப்பத்தா சொல்லியதால் நாகப்பன் இறுதி சடங்கை ஆட்கள் வைத்து முடித்தனர். மகன் இருந்தும் அனாதை போல இறுதிகாரியம் கூட மகன் கையால் நடக்காது துர்பாக்கியசாலியாகிப்போனார் நாகப்பன். இறுதி காரியத்தை நடத்தி முடித்து ஆற்றில் குளித்து விட்டு வீட்டுக்கு வந்தனர் அருள்பாண்டியன், தங்கபாண்டியன், சந்தனபாண்டியன் மூவரும்.
 
தென்னரசு மல்லிகாவோட தயங்கியபடி தனபாக்கியம் வீட்டு வாசலில் நின்றிருந்தான்.
 
தனபாக்கியமோ கையில் பத்திரத்துடன் வந்தவர் “இந்த சொத்துக்காகத்தானே உன் அப்பன் நாக்கை தொங்கப்போட்டு அலைந்தான். இப்ப நான் எங்க சொத்துல ஒரு பகுதியை உனக்கு கொடுக்குறேன் இதை வச்சி பிழைச்சிக்கோ!! அப்புறம் உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருப்பேன் உன் பொண்டாட்டிக்காகவும் இதோ இந்த பச்சை மண்ணுக்காகவும்தான் உன் மேல புகார் பண்ணாம விடுறேன்” என்றார் பெரும்மூச்சுவிட்டு
 
தென்னரசுவோ “உங்க பணம் வேண்டாம் அப்பத்தா என்னையும் உங்க பேரனா ஏத்துக்கோங்க!! அதுவே எனக்கு போதும் என் அப்பனோட சொத்து எல்லாம் ஆனாதை ஆசிரமத்துக்கு எழுதி வச்சிடறேன். நானா சம்பாரிச்சதுல கொஞ்ச பணமும் ஒரு வீடும் வாங்கியிருக்கேன் என் பொண்டாட்டியோட சந்தோசமா வாழணும்னு இருக்கேன்!! என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க!!” என்று தனபாக்கியம் காலில் விழுந்தான் தென்னரசு மல்லிகாவுடன்.
 
“இப்போவாவது திருந்தி விட்டானே” என்று சந்தோசப்பட்ட தனபாக்கியம் “ரெண்டு பேரும் சந்தோசமா வாழுங்க” என்று ஆசிர்வாதம் செய்தார்.
 
“நாங்க கிளம்புறோம் அப்பத்தா” என்று அமுதனை தூக்கிக்கொண்டு மல்லிகாவுடன் வெளியே வந்தான் தென்னரசு.
 

46 thoughts on “நிலவோடு பிறந்தவள் நீயோ?!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top