16 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
நிகிதா காஞ்சிபுரம் தாமரையூர் வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. விசாலா மருமகளை அன்பாக தான் பார்த்து கொண்டார். என்ன தான் விசாலா அன்பாக பார்த்து கொண்டாலும் அவரிடமும் தேவைக்கு மேலே பேச்சின்றி ஒதுங்கி கொள்வாள்.
வீரா கனடாவில் வேலையில் ஜாயின் பண்ணி ஆபீஸ் தங்குமிடம் அங்கிருந்த சூழ்நிலை என ஓரளவு செட்டாக ஒரு வாரம் ஆனது. ஒரு வாரம் கழித்தே தங்கள் வீட்டிற்கு அழைத்தான். அழைக்கும் முன் அத்தனை தயக்கம்.. யோசனை..
சொல்லாமல் வந்தது அவன் மனதை உறுத்த தான் செய்தது. அதிலும் நிகிதாவை விட்டு வந்தது வீட்டினரிடம் என்ன சொல்வது.. என மனதில் உதறலாக தான் இருந்தது.
வீரா தனது தந்தைக்கு அழைக்கவும்.. தனது இந்திய நம்பரில் தான் அழைத்தான். அழைத்தது வீரா எனவும்.. அய்யாவு பேசவில்லை. விசாலாவிடம் கொடுத்து விட்டு அருகிலேயே நின்று கொண்டார். விசாலாவின் அலைபேசிக்கு அழைக்காமல்… முதலில் தந்தையிடம் பேசவேண்டும் என்று தான் அய்யாவுக்கு அழைத்தான்.
விசாலா அழைப்பை ஏற்றதும்.. தந்தை பேசாமல்
“அப்பா.. நான்.. வீரா.. பேசறேன்..” தயங்கி தயங்கி பேசவும்..
வெள்ளந்தியான விசாலாவிற்கு வீராவின் தயக்கம் எல்லாம் தெரியவில்லை. மகன் பேசுகிறான் என்பதே சந்தோஷமாகிவிட…
“வீரா நான் அம்மா பேசறேன் கண்ணு.. எப்படி இருக்க.. என்ன சாமி இப்படி பண்ணிட்ட.. ஊருக்கு போறேனு சொல்லிட்டு போலாம்ல.. ஒரு வாரமா.. நான் கிடந்து தவிச்ச தவிப்பு எனக்கு தான தெரியும்.. “என அவனை பேசவிடாமல் ஒரு மூச்சு புலம்பி தீர்க்க…
தந்தை பேசாமல் தாய் பேசவுமே வீராவுக்கு ஒருமாதிரி மனது சுணங்கியது. அவனுக்கு எப்படி பேசுவது.. என்ன சமாதானம் சொல்வது என தெரியவில்லை.
“அம்மா.. நான் நல்லா தான் இருக்கேன். நீங்க எல்லாம் எப்படி இருக்கறிங்க.. தாத்தா அம்மாச்சி எப்படி இருக்காங்க.. தாத்தா ஏதாவது சண்டை போட்டாறா….”என்றவனிடம்
விசாலா நடந்த அத்தனையும் கூறிவிட.. நிகிதாவின் பேச்சு முதல் கூறிவிட.. வீராவுக்கு இப்ப குடும்பத்தினரை விட நிகிதாவை நினைத்து தான் பயம் வந்தது. ஆனாலும் தன் வீட்டில் இருக்கிறாள் என்றதும் ஒரு சின்ன சந்தோஷம் தோன்ற தான் செய்தது.
தயங்கியவாறே..” அவ.. எப்படிமா.. இருக்கா..”
“யாருப்பா.. நிகிதாவா.. புள்ள ரொம்ப தவிச்சு போயிட்டா.. தங்கம்.. நீ செஞ்சது தப்பு தான் சாமி..” என மகனை கண்டிக்காமல்.. தாங்கலாக பேச.. கேட்டு கொண்டு இருந்த அய்யாவுக்கு கோபமோ கோபம்.
நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்தா.. தங்க விக்ரகம் மாதிரி பொஞ்சாதி இருக்க.. வச்சு பொழைக்க துப்பு இல்லாம.. நாட்டை விட்டு ஓடி போனவனை கொஞ்சிகிட்டு இருக்கா… என கோபத்தில் மனைவியை முறைத்து பார்த்தார்.
“அம்மா.. அப்பா இல்லையா..” என வீரா கேட்க..
“ஏங்க… வீரா உங்ககிட்ட பேசனுமாம்..” விசாலா போனை நீட்ட..
வாங்க மறுத்து.. “அவன்கிட்ட சொல்லி வை இனி அவனுக்கும் எனக்கும் பேச்சில்லை. பொஞ்சாதிய வச்சு பொழைக்காம விட்டுட்டு போனவ.. எனக்கு மகனா இருக்க தகுதியில்ல.. இனி எனக்கு போன் போட வேணாம்னு சொல்லிரு.. எதுனாலும் உம்மவங்கிட்ட நீயே பேசிக்கோ..” என வீராவின் காதில் விழட்டும் என சத்தமாகவே கூறியவர் போனை வாங்கி ஆப் பண்ணி சட்டை பாக்கெட்டில் போட்டு கொண்டு போய்விட்டார்.
கேட்டு இருந்த வீராவிற்கு முகம் தொங்கி போனது. வாரம் இரண்டு முறை வீரா அம்மாவுக்கு அழைத்து பேசுவான். தான் வெளிநாடு வந்த நோக்கத்தையும் கூறியிருந்தான். நிகிதாவிடம் பேச பயந்து கொண்டு பேசமாட்டான். தாயிடம் மட்டும் விசாரித்து கொள்வான்.
விசாலா நிகிதாவிடம் வீரா போன் செய்ததை சொல்ல… “உங்க மகனை பத்தி எங்கிட்ட பேசாதிங்க.. ” என முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டாள். அதில் விசாலாவிற்கு மருமகளின் மேல் ஒரு சின்ன மனத்தாங்கல்.. புருஷன் எங்க போயிட்டான் சம்பாதிக்க தானே போயிருக்கான்… இந்த புள்ளைக்கு இவ்வளவு வீம்பு கூடாது என்று…
தம்பி மகளாக எப்பவும் நிகிதாவை பிடிக்கும் தான் அதனால் தான் நிகிதா வீரா கல்யாணத்துக்கு அய்யாவு யோசித்து போது கூட அவரை பேசியே சம்மதிக்க வைத்தார். ஆனால் இப்போ மகனா..மருமகளா .. என வரும்போது மகனுக்கான தட்டு தாழ்ந்து தான் போனது விசாலாவின் மனதில்..
நிகிதா வீராவின் அறையில் தங்கி கொண்டாள். இவள் அறைபோல பெரியதாக டிரஸ்ஸிங் ரூம்.. அட்டாச்டு பாத்ரூம்.. கிங் சைஸ் பெட்டோ.. ஏசியோ.. ஏதும் இல்லை. பதினாறுக்கு பதினாரு கொண்ட அறை. சாதாராண டபுள்காட் பெட்.. ஒரு சீலீங் பேன் மட்டுமே வேற எந்த வசதியும் இல்லை.
வீராவால் ஏற்பட்ட மனக்காயத்திற்கு முன் இது எல்லாம் அவளுக்கு ஒரு பாதகமாக தெரியவில்லை. கல்யாணம் ஆகி வந்த போது இந்த வசதி குறைவு எல்லாம் பெரியதாக தெரிந்தது. ஆனால் இன்று வாழ்க்கையே கேள்வியாக இருக்க.. இருகோடுகள் தத்துவ நிலை தான் நிகிதாவின் இன்னறய நிலை.
ஒரு பத்து நாட்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தவளுக்கு.. அப்படி இருக்க முடியவில்லை. மனதில் பல எண்ணங்கள்..
தன் காதலை அசிங்கப்படுத்தி விட்டானே.. தேடாமல் கிடைத்ததால் தானே அதன் அருமை தெரியவில்லை. நானும் என் காதலும் உனக்கு அவ்வளவு சீப்பாக போய்விட்டதா..இரு உன்னை கதறி கொண்டு ஓடி வர வைக்கிறேன் என சூளுரைத்தாள்.
விசாலாவே வீட்டு வேலைகள் எல்லாம் செய்து விட.. நாள் பூராவும் வெட்டியாக இருப்பதாக தோன்ற.. அதுமட்டும் அல்லாமல் தனக்கென ஒரு அடையாளத்தை தேடி கொள்ளனும். நீ விட்டு போனதால் உன்னை நினைத்து ஏங்கி பசலை நோய் கொண்டு வாடும் சங்க கால பெண்ணல்ல நான்.. அப்படியே பிரமித்து போய் அண்ணாந்து பார்க்கும் நிலையில் இருக்கும் நவ யுக பெண்ணாக இருப்பேன் என வைராக்கியம் கொண்டாள்.
இந்த ஊரில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியும் என யோசித்தாள்.எந்த ஊரில் சம்பாதிக்க முடியாது என வெளிநாடு போனானோ.. தான் அந்த ஊரிலேயே சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தாள். இந்த ஊரில் என்ன இருக்கிறது.. என்ன இல்லை.. என்ன தேவை.. இதெல்லாம் தெரிந்தால் மட்டுமே மேற்கொண்டு எதுனாலும் செய்ய முடியும்.
அய்யாவுவிடம் போய் நின்றாள். தானும் தறிப்பட்டறைக்கு தினமும் வருவதாக கூறினாள். அய்யாவு தயங்க…
“வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை. மனசு கண்டதையும் நினைக்குது.. அது தான் மனசுக்கு ஒரு மாற்றமா இருக்கும். வரேனே..” என கேட்க..
அய்யாவு ஏற்கனவே நிகிதாவை பார்க்கும் பொழுது எல்லாம் மனதளவில் நொடிந்து போனார். எப்படி இருந்த பொண்ணு இப்படி கஷ்டப்படுகிறதே.. மாமனார் மனைவி பேச்சை கேட்டு தப்பு செய்துவிட்டோமோ.. தானும் ஒரு பெண்ணுக்கு தகப்பன் தானே..
இந்த பெண்ணுக்கு என்ன செய்து பாவகணக்கை குறைப்பேனோ என மருகி கொண்டு இருந்தார்.
“வேணாம் மா..”
“ஏன் மாமா.. நான் வரனே..”
“இல்லமா.. அங்க வெக்கையா இருக்கும்..உன்னால தாங்க முடியாதுமா..”
“எல்லாம் எல்லாமே தாங்கி தான் ஆகனும் மாமா.. எனக்கு வாழ்கைல சாய்ஸே கொடுக்கலை உங்க மகன்.. என் மனசுல இருக்கற வெக்கயை விட.. இந்த வெக்கை என்னைய ஒன்னும் பண்ணிடாது”
இதுக்கு என்ன சொல்வது என சத்தியமாக அய்யாவுக்கு தெரியவில்லை. அவரால் பேச முடியவில்லை. அன்றிலிருந்து அய்யாவு கூட தினமும் தறிபட்டறைக்கு சென்றாள். ஏசியிலே இருந்தவள் வெயிலையும் வெக்கையும் பொருட்படுத்தாது தினமும் பட்டறைக்கு சென்றாள்.
வீராவுக்கு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் நிகிதாவின் நினைவுகள் வாட்ட… அவளை விட்டு விலகி வந்தால் அவளை மறந்து இருக்கலாம் என நினைத்த அவன் நினைப்பு மண்ணை கவ்வி கொண்டது. தேசம் விட்டு தேசம் வந்த பிறகு காதல் தாபம் வாட்டி எடுத்தது. ஏற்கனவே குளிர்தேசம் கடுங்குளிரை தாங்க முடியவில்லை. அவனின் நண்பன் ராஜேஷ் ஹாட் ரிங்க்ஸ் எடுத்துக்க சொல்ல.. குடிப்பழக்கம் இல்லாததால் வேண்டாம் என தவிர்த்து விட்டான். இரவில் மிக குளிராக இருக்க.. குளிருக்கு இதமாக அவளின் கதகதப்பு அவசியம் தேவை என தோன்றியது. அவள் காதலின் தாக்கம் அப்போது தான் உணர ஆரம்பித்தான். அவளின் அணைப்பு.. சின்ன சில்மிஷங்கள்.. இதழ் உரசல்.. எல்லாம் அவனின் எண்ணத்தில் அலையாக எழும்பி.. தீயாக அவனை தகிக்க வைக்க… தீயை அணைக்கும் மார்க்கம் அறியாது.. அதை தவிர்க்க … தன்னை சோஷியல் மீடியாவில் தொலைக்க ஆரம்பித்தான். இரவில் தன்னை மறந்து தூக்கம் வரும் வரை மூழ்கி போனான்.
பேஸ்புக்கில் புது பது நண்பர்களை தேடி கொண்டான். . நிகிதாவின் ஐடியை துலாவி கண்டு பிடித்து தினமும் ஏதாவது அப்டேட் பண்ணியிருக்காளா என பார்ப்பான்.அவன் கனடா வந்த பிறகு அவள் எதுவும் செய்யவில்லை என தெரிந்தது.
அதே போல வாட்சப்பில் ஏதாவது அனுப்பி இருக்காளா.. என பார்க்கும் போது தான் அவளுடைய டிபி பிக்கை பார்த்தான். அவனோடு காஞ்சிபுரம் பஸ்ஸில் செல்லும் போது அவனுடன் நெருங்கி அமர்ந்து இருந்த படத்தை வைத்திருந்தாள். அதில் அவள் முகம் மகிழ்ச்சியாக புன்சிரிப்புடன் இருந்தது. இவன் இவ்வளவு நாளில் இதை எல்லாம் பார்த்ததில்லை. இப்போது தான் பார்க்கிறான். இந்த சிரிப்பு மகிழ்ச்சி எல்லாம் அவளிடம் இப்ப இருக்காது இல்ல.. அவளை மேரேஜ் பண்ணிக்காம இருந்திருந்தா அவள் சந்தோஷமாக இருந்திருப்பாள் என இப்பவும் தப்பாகவே யோசித்தானே தவிர தன்னோடு அழைத்து வந்திருக்கலாம் என நினைக்கவில்லை.
இப்படி பேஸ்புக் நண்பர்களோடு உரையாட.. அதில் கல்யாண் என ஒருவன் அறிமுகமாகினான். அவன் கனடா வாழ் தமிழன்.. வீராவோடு ஜாலியாக பழக.. அவனின் நகைச்சுவையான பேச்சில் லயித்து.. அவனோடு நெருங்கி பழக ஆரம்பித்தான்.
நிகிதா காலையில் இருந்து மாலை வரை பட்டறையில் இருப்பவள் பின்பு வீடு வந்து குளித்துவிட்டு சாப்பிட்டு விட்டு தங்கள் அறைக்குள் புகுந்து கொள்வாள்.விசாலா மகனின் புராணம் பாடுவதால் விசாலாவிடம் கூட பேச்சை குறைத்து கொண்டாள்.
அறைக்கு வந்தவள் ஆராத்யாவுக்கு அழைத்தாள். வீட்டினர் யாரிடமும் பேசமாட்டாள். அவர்களாக அழைத்தால் சுருங்க பேசி முடித்து கொள்வாள். தினமும் ஆராத்யாவிடம் பேசிவிடுவாள்.இன்றும் அது போலவே..
“ஹலோ..ஆருமா.. என்னடா பண்ற..”
“பப்ளிக் எக்ஸாம்கு ரிவிஷன் போயிட்டு இருக்குகா.. அதான் படிச்சிட்டு இருக்கேன்”
“சரிடா லேட் நைட் வரைக்கும் படிக்காத.. டியூசன் போறியா..ஏற்பாடு பண்ணவா..”
வீரா இருந்த வரை ஆருவுக்கு பாடத்தில் சந்தேகங்களை நிவர்த்தி செய்வான். அவன் இல்லாததால் தான் டியூசன் வைக்க நிகிதா கேட்டாள்.
“இல்லக்கா.. நானே படிச்சுக்குவேன்.. இப்ப எல்லாம் மம்மி ஈவ்னீங் வீட்ல தான் இருக்காங்க.. சொல்லியும் தராங்க..”
என் வாழ்க்கை போய் தான்.. இவர்கள் எல்லாம் மாற வேண்டுமா.. என வேதனையாக நினைத்தாள்.
“அக்கா..க்கா.. லைன் தான் இருக்கியா..”
“ஆஹாங்.. சொல்லுடா ஆரு.. “
“என்னக்கா.. மாமா.. நினைப்பா..” நிகிதா கோபப்படுவாள் என தெரிந்தே தயங்கி தயங்கி கேட்டாள்.
“ஆரூ..” என்றாள் கோபமாக கண்டிப்பான குரலில்..
“இல்லக்கா.. சாரி..”
“ஆரூ.. இனி அவர பத்தி என்கிட்ட பேசாத.. அப்புறம் உனக்கும் கால் பண்ணமாட்டேன்”
“சாரிக்கா.. சாரி..இனி பேசல..”்
“சரி.. பை..” சட்டென வைத்துவிட்டாள்.
வீரா சென்றது அவளுடைய மனதை பெரிய ரணமாக்கி இருக்க.. அதைவிட தனக்கு வாழ தெரியவில்லையா.. இந்த ஊர் பெண்கள் ஜாடையாக என்னை சொல்வது போல கணவனை இழுத்து பிடித்து வைத்து கொள்ள தெரியலையா..என்ற கழிவிரக்கமும் சேர்ந்து கொள்ள.. வீரா மேல அளவு கடந்த கோபமும் வெறுப்பும் உண்டானது. ஆனால் இரவானால் அவனின் அருகாமைக்காக ஏக்கமும் ஏற்பட்டது. தன் மனதின் போக்கை எண்ணி மிகவும் குழம்பி போனாள்.
வெறுக்கும் மனது எப்படி தனிமையில் அவனுக்காக ஏங்கும் என தன்னை நினைத்தே கவலை கொண்டாள். அவனுக்கு தான் என் காதல் புரியவில்லை. அதனால் என் காதல் இல்லை என்றாகி விடுமா.. அதான் நான் இன்னும் அவனை தேடுகிறேனோ..என நினைத்தாள்.
எவ்வளவோ அவளுக்கு அவளே சமாதானம் சொல்லி கொண்டாலும்.. அவனை உடலும் மனதும் தேட தான் செய்தது. அவனோடு கழித்த களிப்பான பொழுதுகள் ஞாபகம் வந்து வாட்டம் கொள்ள செய்தது.
அவனுடைய படுக்கை..அவன் தலையணை.. அவன் உடை.. எல்லாத்திலும் அவனுக்கே உரிய வாசத்தை தேடினாள். அவன் படுக்கையில் அவன் தலையணையை இறுக்கி கட்டிபிடித்து அவன் வேட்டியை போர்வையாக கொண்டால் மட்டுமே உறக்கம் வந்தது.
அப்படி படுத்தால் அவனே தன்னருகே தன்னை இறுக்கி அணைத்து இருப்பது போலவும்… அவனின் வேட்டி தன் உடலில் தீண்ட.. தீண்ட.. அவனே தீண்டுவது போன்ற உணர்வை கொடுத்தது.அதன் பிறகே அவளால் நிம்மதியான உறக்கம் கொள்ள முடிந்தது. அது விசாலாவுக்கு தெரிந்தால் மகனிடம் சொல்லி விடுவார். அவன் இன்னும் தன்னை இளக்காரமாக நினைப்பான் என விசாலாவுக்கு தெரியாது பார்த்து கொண்டாள்.
வெட்கம் கெட்டு போய் அவனை தேடுகிறோமே.. என கண்களில் கண்ணீர் வரும்.. வேண்டாம் நிகிதா நீ அழுககூடாது.. அவனை கதறி ஓடி வர செய்ய வேண்டும் என தன்னை திடப்படுத்தி கொள்வாள். எப்படி.. எப்படி வர வைப்பது என யோசிக்கலானாள்.
அடுத்து நிகிதா என்ன செய்ய போகிறாள். வீராவை கலங்கடிப்பாளா.. கதறி ஓடி வரவைப்பாளா… நிகிதாவின் ஆட்டம் இனி தான் ஆரம்பம்…
Super 👌 next ud sekkaram podunga 🥰 waiting
super intersting waiting for next epi……