ATM Tamil Romantic Novels

17 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

17- புயலோடு பூவுக்கென்ன மோகம்



     வீரா தன் அம்மாவிற்கு அழைத்த அடுத்த நாளே பொன்னிக்கும் அழைத்தான். பொன்னி அழைப்பை ஏற்றதும் வீராவை பேசவே விடவில்லை.

 

“ஏன்டா உனக்கு அறிவில்லையா.. போனதும் போன நிகிதாவையும் கூட்டிகிட்டு போக வேண்டியது தான..”

 

“க்கா…”

 

” பாவம்டா அவ…  அவள கண்கொண்டு பார்க்கமுடியல.. அப்படியே ஓஞ்சு போயிட்டா…”

 

“க்கா… நான்..”

 

“எப்படி எல்லாம் இருந்த புள்ள.. இன்னைக்கு அது வாடி வதங்கி போய் நிக்குது.. எங்களுக்கே பாவமா இருக்கே.. உனக்கு வருத்தமே இல்லையா..”

 

“க்கா.. என்னைய பேச விடுக்கா.. அவ அந்த வீட்டோட இளவரசிக்கா.. அவளுக்கு நான் தகுதியில்லாதவன் கா.. நீ சொல்ற மாதிரி என்னோட கூட்டிகிட்டு வந்தாலும் அவளுக்கு வேலை செஞ்சு பழக்கமே இல்ல.. அவ  இங்க எப்படிக்கா இருப்பா.. அவ ஸ்டேட்டஸ் தகுந்த வாழ்க்கை என்னால கொடுக்க முடியாது. அதுக்காக என்னால அவள கஷ்டபடுத்தவும் முடியாதுக்கா..”

 

அவனின் வருத்தமான குரல் இந்த பாசமிகு தமக்கையின் மனதை தாக்க..

 

“உனக்கு என்னடா குறைச்சல்.. ஏன் இப்படி பேசிகிட்டு இருக்க… உன் அறிவுக்கு நீ நல்லா சம்பாதிச்சு பெரிய ஆளா வருவ.. அவள மகராணி மாதிரி வச்சிருப்ப.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. ஆனா அத அவகிட்ட சொல்லிட்டே போயிருக்கலாம்.. வேணாம்னு தடுத்திருக்க மாட்டா..”

 

இப்படி கேட்கும் தன் அக்காவிடம் என்ன சொல்வது… அவள் மேல் தனக்கு காதல் இருக்கா.. இல்லையா.. இருந்தா எதுக்கு தன்னால அவளோட ஒன்றி போய் வாழ முடியல.. இது எல்லாம் புரியாம.. தள்ளி இருந்தா புரியுமோ.. என தானே விட்டுட்டு வந்தான். தங்கள் அந்தரங்கத்தை எப்படி அக்காவிடம் சொல்லமுடியும்.

 

“சொல்லியிருந்தா அவ தடுக்கறாளோ இல்லையோ.. அம்மாச்சியும் தாத்தாவும் விட்டுருக்கமாட்டாங்க.. க்கா..”

 

“என்னவோடா நீ சொல்ற.. நா கேட்டுகிறேன்..”என பொன்னிக்கு அப்படி ஒரு சலிப்பு குரலில்…

 

“சரிக்கா..  அடிக்கடி அவள போய் பார்த்துக்கக்கா..முடிஞ்சா பேசி அவங்க வீட்டுக்கு அனுப்ச்சிடு.. நம்ம வீடு வசதி பத்தாது அவளுக்கு..”

 

“அவ போவானு எனக்கு நம்பிக்கை இல்ல.. சரி நீ சொல்றதுக்காக பேசி பார்க்கிறேன்..”

 

“சரிக்கா.. நான் மறுபடியும் கூப்பிடறேன்..” 

 

“சரி தம்பி உடம்ப பார்த்துக்கோ… வெச்சிடறேன்” என போனை வைத்த பொன்னிக்கு தன் தம்பியிடம் பேசிய பிறகு கோபம் போய் வருத்தம் தான் வந்தது.

இப்படி இரண்டு பேரும் பிழைக்க தெரியாம வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்கிறார்களே..என்று இருந்தது பொன்னிக்கு..

 

அதில் இருந்து தினமும் நிகிதா பட்டறையில் இருந்து வந்த பிறகு சென்று சிறிது நேரம் அவளோடு இருந்து விட்டு வருவதை வழக்கமாக்கி கொண்டாள் பொன்னி.

 

தம்பி சொன்னது போல நிகிதாவிடம் பொன்னி பேச தான் செய்தாள்.

 

“நிகிதா.. நான் ஒன்னு சொல்வேன். கேட்பியா…”

 

“சொல்லுங்க அண்ணி..”

 

“நீ எவ்வளவு சுகமா வாழ்ந்தவ… இங்க இப்படி கஷ்டபடறத பார்த்தா.. எனக்கு வருத்தமா இருக்கு..   நீ எப்படி எல்லாம் இருந்தவ.. இங்க உனக்கு அந்த சவுகரியங்கள் இருக்காது.   வீரா வர எப்படியும் ஒரு வருசம்னாலும் ஆகும். அதுவரைக்கும் நீ ஏன் இங்க இருந்து கஷ்டபடனும்.. தம்பி சென்னைக்கு தான வருவான்.நீ அங்க இருக்கறது தான் சரியா இருக்குமனு என தோனுது..”



“ஏன் அண்ணி.. உங்க தம்பி மாதிரியே நீங்களும் என்னை நினைக்கறிங்களா… அவருக்கு வீட்டோ மாப்பிள்ளையா இருக்க பிடிக்கலைனு தானே போனாரு… போனவர் எதுக்கு என்னை விட்டுட்டு போனாரு.. வசதி குறைவா இருந்தா என்னால இருக்க முடியாதுனு தானே… எனக்கு அவர விட வசதியா பெருசா போச்சு.. அத அவரே புரிஞ்சுக்கல.. உங்களுக்கு எப்படி புரியும்..”



“இல்ல.. நிகிதா உனக்கு கஷ்டமா இருக்குமேனு தான்…”

 

“எது அண்ணி கஷ்டம்.. நான் எப்படி.. அவர் எப்படி.. என எல்லாம் தெரிஞ்சு தானே எங்க விருப்பம் இல்லாமலே  நீங்க  எல்லோரும் கல்யாணம் பண்ணி வச்சிங்க…  இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்துடுவோம்னு நம்பி தான கட்டி வச்சிங்க… முதல்ல எனக்கும் அவர பிடிக்கல தான்.. போக போக அவர் கூட விரும்பி தான் வாழ ஆரம்பிச்சேன்.. அப்ப கூட அவரு என்னை பத்தி புரிஞ்சுக்கல.. விட்டுட்டு போய்ட்டார். எதனால அந்த வசதி அந்தஸ்து காரணமா வச்சு தானே.. அவரைவிட எனக்கு அந்தஸ்தா பெரிசு.. அதான் வேணாம்னு வந்துட்டேன்.. இங்கயும் நிகிதாவால வாழ முடியும்னு காமிப்பேன். ஆனா அதுக்காக உங்க தம்பிய  மன்னிக்கவ எல்லாம் மாட்டேன். அவர் எனக்கு பண்ணியது  மிகப்பெரிய துரோகம்.. அவரு வேணாம்னு விட்டுட்டு போனாருல.. எனக்கும் அவரு வேணாம்..” கண்களில் வலியுடன்.. கலங்கி கண்ணீர் வரவா வேணாமா என இருக்க.. அழுகையை கட்டுபடுத்தி கொண்டு இருந்த நிகிதாவை பார்க்க பொன்னிக்கு வருத்தமாக இருந்தது.

 

பொன்னிக்கு நிகிதாவின் கோபம் ஆற்றாமை புரிந்தாலும்.. மனதில் ஒரு சின்ன சந்தோஷம் ஏற்பட தான் செய்தது. என் தம்பி வேணாம்னு சொல்றவ… அவன் துணிகள் இவளுக்கு எதுக்கு.. என நினைத்து சிரிப்பு தான் வந்தது. வெள்ளந்தியான விசாலாவின் கண்களுக்கு தெரியாதது புத்திசாலியான பொன்னியின் கண்களுக்கு தப்பவில்லை.

 

“சரிங்க அண்ணி.. எனக்கு சில ஐடியா இருக்கு.. நீங்க என் கூடவே இருந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவிங்களா..”

 

“என்ன நிகிதா இப்படி கேட்கற.. நீ சொல்லு என்னால முடிஞ்சத நான் செய்யறேன்..” என நிகிதாவின் கைகளை பிடித்து  கொண்டு சொல்ல.. 

 

“நான் கொஞ்சம் யோசிக்கனும்.. அப்புறம் சொல்றேன்..” என சொல்லி விட்டு பொன்னியின் மகனை எடுத்து மடியில் வைத்து கொண்டு அவனோட விளையாட ஆரம்பித்து விட்டாள்.

 

அவள் பேசியதை எல்லாம் அவள் அறியாமல் வீடியோவா எடுத்து அப்பவே தம்பிக்கு அனுப்பி வைத்தாள் பொன்னி.

 

வீராஆபீஸ்கு கிளம்பி கொண்டு இருக்க.. அவனின் போனில் நோட்டிபிகேசன் சவுண்ட் கேட்டு எடுத்து பார்க்க.. பொன்னி அனுப்பிய  வீடியோவை  பார்த்தான்.

 

பார்த்தவன் அப்படியே தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டான். அவள் பேச்சும்….  பேசும் போது அவளின் கசங்கிய முகமும்.. வலிகள் நிறைந்த கண்கள் கலங்கி கண்ணீர் இமை தட்டி நிற்க.. 

 

பார்த்தவனுக்கு உயிர் பறிக்கும் வலி.. அவளின் வலியை மனதால் நினைத்து பார்த்ததை விட அவள் வாய் வழியாக கேட்டவனுக்கு.. தப்பு செய்துவிட்டோமோ  என முதல் முறையாக தோன்றியது.. வீடியோவில் பார்க்க.. அப்படி இருந்தது முகம்.. வழக்கமான மேக்கப் எதுவும் இல்லாமல் எப்பவும் மலர்ச்சியுடன் இருக்கும் முகம் பொலிவிழந்து இந்த ஒரு வாரத்துக்குள்ளேயே அப்படி ஓய்ந்து போன தோற்றம்.. பார்க்க.. பார்க்க.. நெஞ்சில் ஆயிரம்  நெருஞ்சி முள் கொண்டு குத்தி கீறியது போல ரணமாய் வலித்தது.



 திரும்ப.. திரும்ப.. பார்த்து கொண்டு இருந்தான். ஆபீஸ்கு செல்லவேண்டும். இன்னும் காணவில்லை என அவனின் அறைக்கு வந்து நண்பன் ரஞ்சித் அழைக்கும் வரை பார்த்து கொண்டு இருந்தான்.



அய்யாவு பட்டறைக்கு தினமும் சென்றதில்  நிகிதா அறிந்தது கொண்டது இது தான். அய்யாவு பத்து கைத்தறி வைத்து இருந்தார். அவர் ஒரு தறியை எடுத்து கொண்டு மற்ற தறிகளுக்கு கூலிக்கு ஆள் வைத்து செய்து கொண்டு இருந்தார். பழைய முறையில்… எந்த நவீன வசதிகளின்றி.. செய்து கொண்டு இருந்தார்.



அதில் என்னன்ன நவீன முறைகள் உள்ளது என அவருக்கு தெரிந்து இருந்தாலும் அவருக்கு செயல் படுத்த தெரியவில்லை.அவர்கள் ஊரில் இன்றைய தலைமுறையினர் நசிந்து வரும் பட்டு தொழிலை நம்பாமல் படித்து வெளியூர் வேலைக்கு சென்றிருக்க.. இருந்த கொஞ்ச பேரும் அய்யாவு போலவே தான் இருந்தனர்.

 

 நிகிதா அதை பற்றி தெரிந்து கொள்ள… காஞ்சிபுரம் சுற்றியுள்ள ஊர்களில் நவீன முறையில் தறி நெய்பவர்களின் பட்டறைக்கு சென்றாள். பொன்னியை அழைத்து கொண்டு ஊர் ஊராக அலைந்து திரிந்து நிறைய விஷயங்களை கற்று கொண்டாள்.

 

பட்டதாரிக்களுக்கான தொழில் முனைவோர் திட்டத்தில் பேங்க் லோனுக்கு அப்ளை செய்தாள். சேலை டிசைனை வடிவமைக்கும் டிசைனர்  படிப்புக்கு பகுதி நேர வகுப்பில் சேர்ந்தாள்.



வீராவுக்கும் கல்யாணுக்குமான நட்பு  பேஸ்புக் மெஸஞ்சர் எல்லாம் தாண்டி இருவரும் வாட்ஸசப் சேட்டிங்கு முன்னேறி இருந்தனர்.

 

ஊர் உறவுகளை விட்டு வந்தவனுக்கு கல்யாணோட நட்பு பெரிய ஆறுதலாக இருந்தது. வேலை வாங்கி கொடுத்து தன்னுடனே தந்க வைத்து கொண்ட நண்பன் ரஞ்சித்திடம் கூட அவ்வளவு ஒட்டுதல் இல்லை. 



மனம் விட்டு நிறைய விசயங்களை சேட்டிங் செய்தான். நிகிதா பற்றி அவள் அழகு அந்தஸ்து  தன் மீதான அவளின் காதல் எல்லாம் சொல்லி இருந்தான்.

 

‘ஏய் என்ன அவ மேல லவ் இல்லைனு சொல்லிட்டு.. அவள பத்தியே புலம்பற..’

 

‘உனக்கு தெரியாது கல்யாண்.. அவ மில்கி கலர்.. அப்படியே அந்த  கண்ணு இருக்கு பாரு.. ஆளையே அசர அடிக்கும்.. அதுல காஜல் வேற தீட்டி வச்சுருப்பா.. ரோஸ் பெடல்ஸ்  மாதிரி லிப்ஸ் அவ்வளவு சாப்டா இருக்கும்..’ 

 

அவளுடைய உதட்டை கடித்து சுவைத்த சுகமான தருணங்களில் மூழ்கி போனான். சுகமான தருணங்களின் ருசிகள் எல்லாம்  ஒவ்வொரு அணுவிலும் ஊசியாக தைக்க.. தையலவளின் அருகாமைக்காக ஏங்கினான் அந்த வீம்புக்கார கணவன்.

 

‘ஹலோ.. இருக்கியா..’

 

‘ஏதாவது சொல்லு..’

 

‘அச்சோ பொண்டாட்டி கூட கனவுல சல்சா பண்ண போயிட்டான் போல இருக்கே..’

 

‘ம்ஹீம்.. இதுக்கு தான் இந்த மாதிரி மிங்கிளஸ் கூட சகவாசமே வச்சுக்ககூடாது.’

 

‘ ஓகே குட்நைட்.. ஸ்வீட் ட்ரிம்ஸ்..’

 

ஒரு பதிலும் இல்லாமல் போக கல்யாண் அதோடு சேட்டிங் முடித்து கொண்டான்.

 

அடுத்த நாள் நைட்.. வீராவே சேட்டிங்கு வந்தான் 

 

‘ஹாய் கல்யாண்..’

 

‘சொல்லு மச்சான்..’

 

‘என்னடா பண்ணிட்டு இருக்க..’

 

‘சாப்பிட்டு இருக்கேன்.. சொல்லு மச்சான்..’

 

‘ஏன்டா லேட்..’

 

‘இன்னைக்கு வந்ததே லேட்.. ‘

 

‘அப்ப சாப்பிட்டு வா..’

 

‘இல்லல்ல.. நீ சேட் பண்ணு… எப்படியும் நிகிதாவ தான் ஜொள்ளு வடிய வர்ணிப்ப.. அதை கேட்க மட்டும் தான நான் வேணும் உனக்கு.. ம்ம் ஆரம்பி.. நான் கேட்டுகிட்டே சாப்பிடறேன்..’



‘என்னவோ இன்னைக்கு நிகிதா ஞாபகம் அதிகமா இருக்கு..

 

‘ம்ம்’

 

‘அவளை பார்க்கனும் போல இருக்கு…’

 

‘அப்ப வீடியோ கால் பண்ணு..’



‘எந்த முகத்த வச்சுகிட்டு பேச..’

 

‘எல்லாம் கருவாயன் மூஞ்சிய வச்சிகிட்டு தான்..’



‘அவளும் கோபம் வந்தா என்னை கருவாயன் தான் சொல்லுவா..’

 

‘அப்ப லவ் மூட்ல இருக்கும் போது..’

 

‘அவளுக்கு லவ் மூட் வந்துட்டா.. என் மீசையை பிடித்து இழுப்பா.. லிப்லாக் பண்ணுவா..’

 

‘அப்புறம்…’

 

‘ச்சீ.. போடா.. நீ சின்ன பையன் இது எல்லாம் உன்கிட்ட சொல்லகூடாது’

 

‘ஆஹாங்.. இப்ப தான் சின்ன பையனா.. இவ்வளவு நாளா நிகிதா.. நிகிதானு புலம்பும் போது தெரியலயா..’

 

‘என்னவோ நிகிதா ஞாபகம் வந்தா.. உன்கிட்ட தான் ஷேர் பண்ணனும்னு தோனுது’

 

‘நீ சொல்ற பார்த்தா.. எனக்கே நிகிதாவ  லவ் பண்ணனும் போல இருக்கு..’

 

‘டேய்.. அவ என் பொண்டாட்டி….’

 

‘நீ தான அவளுக்கு நான் மேட்ஜ் இல்ல.. டைவர்ஸ் கொடுத்துடுவேன்.. அவளுக்கு மேட்ச்சான ஆள பார்த்து மைரேஜ் பண்ணிக்கட்டும்னு சொன்ன..’

 

‘அதுக்கு..’

 

‘நான் மேட்ச்சா இருப்பேன்.. உன்னை மாதிரி    இல்லாம நல்லா வாழ்க்கை அனுபவிச்சு வாழ்வேன்..’



‘அவ என் அமுல் பேபி அவளை யாருக்கும் கொடுக்க மாட்டேன். இப்படி பேசற மாதிரி இருந்தா இனி என்கிட்ட பேசாத..’என கோபமாக  ஆப்லைன் போய்விட்டான்.

 

அதுக்கு பிறகு இரண்டு நாட்கள் இரவில் வீரா ஆன்லைன் வந்தாலும் கல்யாண் சேட் பண்ணினாலும் பதிலளிக்கவில்லை.

 

பார்த்துவிட்டான் என புளூ டிக் காட்டியது கல்யாண்கு… மூன்றாம் நாள்  கல்யாண் ஒரு பெண்ணின்   புகைப்படம் அனுப்பினான் வீராவுக்கு.. அந்த பெண் சற்று புசு புசுவென கொழுக் மொழுக் என உருண்டு திரண்டு சின்ன தர்பூசணி பழம் போல இருந்தாள்.

 

‘இந்த பெண் எப்படி இருக்கிறா..’

 

‘யாரு நீ கட்டிக்க போற பொண்ணா..’

 

‘முதல்ல எப்படி இருக்கா.. சொல்லு..’

 

இப்போ வீராவுக்கு தோன்றியது இது தான் சும்மா தள தளனு தக்காளி மாதிரி இருக்கா..  உடனே தன்னை தானே கடிந்து கொண்டான். நண்பன் கட்டிக்க போகும் பெண் தப்பாக பார்க்க கூடாது.

 

‘ம்ம் நல்லா இருக்காங்க..’

 

‘உனக்கு பிடிச்சிருக்கா..’

 

‘நீ மேரேஜ் பண்ணிக்க போற.. உனக்கு பிடிச்சிருக்கா. அத சொல்லு’

 

‘என்னைய எனக்கு பிடிக்காம போகுமா..’ என அலுங்காமல் குலுங்காமல் ஒரு குண்டை தூக்கி போட்டான்…தப்பு தப்பு.. தூக்கி போட்டாள் கல்யாணி..

 

அதை பார்த்தும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை வீராவுக்கு.. தான் படித்ததை 

உள் வாங்கி கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது.  அப்பவும் ஏதோ விளையாடுகிறான் நண்பன் என நினைத்தான்.

 

‘ஏய் சும்மா சீட்டிங் பண்ணாத..’

 

‘ஆஹா..ஹா..ஹா..’

 

‘நான் நம்பமாட்டேன்..’

 

‘வரவா.. வீடியோ காலில் வரவா..’

 

‘வா.. அப்ப தான் நம்புவேன்..’

 

‘வந்துடுவேன்.. ஆனா.. நீ என் அழகுல மயங்கிடுவ.. அப்புறம் உன் நிகிதாவ விட்டுட்டு என் பின்னாடி வந்துடுவ பரவாயில்லையா..’

 

‘சும்மா வாய்ல வடை சுடாத.. முகத்தை காமி.. ‘ இன்னும் நம்பவில்லை வீரா நண்பன் தன்னிடம் விளையாடி பார்க்கிறான் என நினைத்தான். எப்பவும்  குறும்பாக சேட்டையுடன் சேட்டிங் செய்பவன் தானே என…

 

அவளின் முகத்தை வித விதமான  பிக்காக.. கண்ணடித்து இருவிரலை நீட்டி… முகத்தை சுருக்கி உதட்டை சுழித்து நாக்கை துருத்தி… உதட்டை குவித்து பறக்கும் முத்தம் வைத்து.. இரு கைகளை இதயம் சிம்பிளாக வைத்து.. அதில் தன் முகம் தெரியுமாறு.. என பல வித படங்கள் சுட சுட வந்து விழுந்தது .

 

பார்த்தவனுக்கு செய்வதறியாத திகைப்பு..சில நிமிடங்களில் திகைப்பு போய் கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது மூக்கின் நுனியில்..



‘அது நீ பையன் நினைச்சு.. இப்ப நீ ஒரு பொண்ணு.. அப்படி எல்லாம் என்னைய கூப்பிடாத..’

 

‘ஏன்டா.. மச்சான்.. உன் நிகிதா மச்சான் மச்சான்னு கூப்பிடுவாளா.. மச்சான்… அதனால தான் மச்சான்.. என்னை மச்சான்னு கூப்பிடவேனானு சொல்லறியா மச்சான்.. ‘ என வார்த்தைக்கு ஒரு மச்சான் போட.. 

 

கோபத்தில் கடுப்புடன்..  ‘போடி.. ‘என கோப ஸ்மைலி போட்டு விட்டு ஆப் லைனுக்கு போய்விட்டான்.

 

“போடியா..  நீ  என் நம்பரை ப்ளாக் பண்ணாதது சொல்லிடுச்சு அப்ப என்னைய கேர்ள் ப்ரண்டா ஏத்துக்கட்ட டா மச்சான்.. அதே மாதிரி நிகிதாவ விட்டுட்டு என்கிட்ட சீக்கிரமே வந்துடுவ.. வர வைச்சிடுவா  இந்த கல்யாணி..” என தனக்குள்ளே சொல்லி கொண்டாள்.

 

படுக்கையில் சரிந்த வீராவுக்கு கல்யாணியின் படங்களே கண்முன் வந்தது. நல்லா தள தளனு தான் இருக்கா.. இருந்தாலும் என் நிகிதா போல வருமா.. என் நிக்கி எப்படி சிக்னு உடம்ப மெயின்டென் பண்றா.. என் நிக்கி மாதிரி இல்ல… போடி.. என நினைத்து கொண்டு தூங்கி போனான் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top