19 – புயலோடு பூவுக்கென்ன மோகம்
நிகிதா அழைப்பை ஏற்கவில்லை என்றதும் மெசேஜ் போட்டான்.
‘போனை எடுடி..’
‘நான் உங்கிட்ட பேசனும்..’
‘ப்ளீஸ்டீ.. பிக்அப் தி போன்..’
‘ப்ளீஸ்… ப்ளீஸ்ஸ்ஸ்..’
அவள் பார்த்து விட்டு அமைதியாக இருக்கிறாள் என்று தெரிந்து விதவிதமாக கெஞ்ச ஆரம்பித்தான்.
‘ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நிக்கி..’
‘ப்ளீஸ் அமுல் பேபி..’
‘ப்ளீஸ்.. மில்கி..’
‘ப்ளீஸ்.. ப்ளீஸ்… ப்ளீஸ்…ப்ளீஸ்…
ப்ளீஸ்… நிகி..ப்ளீஸ்…’
கொஞ்சமே கொஞ்சம் மனமிரங்கி பதில் மெசேஜ் போட்டாள்.
‘எதுக்கு பேசனும்’
‘உன்கிட்ட பேசனும்’
‘என்ன பேசனும்’
‘அது நீ பேசினா தான தெரியும்’
‘என்னை விட்டு போன போது சொல்லிட்டு போனிங்களா..’
பதில் மெசேஜ் இல்லை. ஆனால் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அடுத்தடுத்து கேட்க நினைத்ததை கேட்டாள்.
‘இல்ல இத்தன நாளுல ஏன் பேசல..’
‘இப்ப இவ்வளவு தூரம் கெஞ்சறிங்களே… எதுக்கு உங்க பேபிக்காகவா…’
அவனிடம் அமைதி மட்டுமே பதிலாக வர…
என்ன சொல்லுவான் இவளின் இந்த கேள்விகளுக்கு பயந்து தான் இவ்வளவு நாள் பேசாமல் இருந்தது.
‘ம்ம்ம்… சொல்லுங்க..’
‘என்ன சைலண்ட்டா இருக்கறிங்க..’
‘பதில் தெரியலையா.. எப்பவும் போல இவளுக்கு எதுக்கு சொல்லனும்னு நினைக்கறிங்களா..’
என கேட்டு விட்டு அவன் சொல்ல கூட நேரம் கொடுக்காமல் ஆப்லைனுக்கு போய்விட்டாள்.
அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல தைரியம் இல்லாமல்… அவள் கேட்டதில் கலங்கி போய் அமர்ந்து இருந்தான். அவள் கேள்வியில் உள்ள நியாயங்கள் அவனை சுட…நெஞ்சம் பாரமாகி போனது.
எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தானோ..மனதின் அழுத்தம் கூடி போக… யாரிடமாவது மனப்பாரத்தை இறக்கி வைக்கவேண்டும் என தோன்ற.. உடனே கல்யாணிக்கு அழைத்தான்.
‘கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்..’ என்ற பாடல் ஒலிக்க… அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் வீரா இல்லை.
“வாவ்.. வாட் ஆ சர்ப்ரைஸ் மச்சான்… நீ எனக்கு கால் பண்ணியிருக்க..”
“ப்ச்ச்..” வீரா சலிப்பாக..
“என்ன மச்சான்.. ஓவர் பீலீங்ஸ்ல இருப்ப போல.. என்னாச்சு..”
அவ்வளவு தான் மடை திறந்த வெள்ளம் போல அவளிடம் எல்லாம் கொட்டி தீரத்தான்.
அவ்வளவு தான் கல்யாணி பெரிய நகைச்சுவையை கேட்டது போல.. ஹா..ஹா..ஹாஹா.. என சிரிக்கலனாள்.
அவள் சிரிப்பில் வீரா கடுப்பாகி…
“ஏய்.. நானே நிகிதா பேசமாட்டாங்கறாளேனு டென்ஷன்ல இருக்கேன்.. நீ சிரிச்சு கடுப்ப கிளப்பற..”
“இல்லடா மச்சான் உன் ஒய்ப் வாட்சப்லயே இவ்வளவு கேட்கறாளே.. போனில் பேசும் போது எவ்வளவு கேட்பா.. அதைவிட இண்டியா போனதும் உன் நிலைமையை நினைச்சேன்.. சிரிச்சேன்..”
“என் பொழப்பு உனக்கு சிரிப்பா… இருக்கா..”
“அத தான் நானும் சொல்றேன். இண்டியா போனா.. உன் பொழப்பு சிரிப்பா சிரிக்கும்.. அதனால நீ என்ன பண்ற பேசாம என்னை கல்யாணம் பண்ணிகிட்டு இங்கேயே செட்டிலாயிடு..” என்று அலுங்காமல் ஒரு குண்டை தூக்கி போட்டுவிட்டு உல்லாசமாக சிரித்தாள்.
“ஏய்.. உனக்கு அறிவில்ல..எதுல விளையாடறதுனு இல்ல.. ஏற்கனவே கல்யாணம் ஆனவன கட்டிக்க சொல்ற… ச்சீ..”
“கல்யாணம் ஆனா என்ன நீ தான் உன் ஒய்ப் வேணாம்னு வந்துட்டில்ல.. அவளுக்கு டைவர்ஸ் குடுத்திடு..”
கல்யாணி டைவர்ஸ் என்றதும் வீராவுக்கு சுரீரென கோபம் வந்துவிட..
“யாரை டைவர்ஸ் பண்ண சொல்ற.. ஏதோ தெரியாத ஊர்ல இருக்கோமே நல்லா ப்ரண்ட்லியா பழகறியே.. மனசு விட்டு பேசினா.. டைவர்ஸ் அது இதுன்னு சொல்வியா..” என கத்தி விட்டு போனை வைத்துவிட்டான்.
போனை வைத்து விட்டு கோபம் தாளாமல் எப்படி டைவர்ஸ் பண்ணிடுனு சொல்றா.. என் அமுல் பேபிய என்னால விட முடியுமா.. அதுவும் இப்ப என் பேபி அவ வயித்துல இருக்கும் போது..இனி இவகிட்ட பேசவே கூடாது
என் அமுல்பேபி எப்படி எல்லாம் கஷ்டபடறாளோ.. நான் பக்கத்தில் இருந்து அவள பார்க்க முடியாம இப்படி வந்து சிக்கிக்கட்டனே.. என் பேபி அவள கஷ்டப்படுத்துமோ..
என் பேபி அவள ரொம்ப கஷ்டப்படுத்துமோ.. அக்கா மசக்கைல கஷ்டப்பட்டாளே..அப்ப எல்லோரும் எப்படி கவனிச்சிகிட்டோம். மாமா அக்காவ எப்படி தாங்கினார். எனக்கு அந்த கொடுப்பினை இல்லையோ.. என பொண்டாட்டி பிள்ளைய பக்கத்தில் இருந்து பார்த்துக் முடியாத பாவியாகிட்டேனே.. என பலவாறு தன்னை தானே நொந்து கொண்டான்.
தன் அம்மாவிடம் பேசியாவது அவள் எப்படி இருக்கிறாள் என தெரிந்து கொள்ளலாம் என விசாலாவிற்கு அழைத்தான்.
விசாலா அழைப்பை ஏற்றதும்..
“ம்மா.. நிகிதா எப்படி இருக்கா.. “
“அவளுக்கு என்ன நல்லா தான் இருக்கா..”என நொடிக்க..
“எதுக்கு மா இப்படி பேசற..”
“ஆமாம் டா எல்லோரும் என்னையவே குத்தம் சொல்லுங்கடா..”
“ஏம்மா.. என்னாச்சு..”
நிகிதா கர்ப்பமா இருப்பதையும்.. அவள் வீட்டினர் வந்ததையும் சொன்னவர்..
“உன் பொண்டாட்டி அன்னைக்கு அவங்க வீட்ல இருந்து வந்தப்ப நான் என் புருஷன் கூட வாழவே இல்லை அதுங்காட்டி விட்டுட்டு போயிட்டாருனா.. அதனால தான் நான் கேட்டேன் எம்மவன் கூட வாழாம புள்ள மட்டும் எப்படி வந்துச்சுனு.. நான் கேட்டதுல என்ன தப்பு.. உங்க அம்மாச்சி என்னை அடிக்க வந்துட்டாங்க..”
அம்மா சொன்னதை கேட்டதும் வீராவுக்கு அளவு கடந்த கோபம் வந்தது.
“ம்மா..ஆ.. நிறுத்துங்க.. இனி ஒரு வார்த்தை அவள பத்தி தப்பா பேசினிங்க.. அம்மானு பார்க்க மாட்டேன். உங்களுக்கு தெரியுமா அவ எங்கூட வாழவே இல்லைனு.. அவ ஏதோ கோபத்துல சொன்னா.. அதுக்கு அப்படி பேசுவிங்களா..எனக்கு தெரியும் என் பொண்டாட்டிய பத்தி.. அவ வயித்துல இருக்கற புள்ளைக்கு நாந்தான் அப்பன்.. உங்ககிட்ட இருந்து இப்படி ஒரு பேச்சை நான் எதிர்பார்க்கலமா..” என இடியாக முழங்கி விட்டு இணைப்பை துண்டித்து விட்டு உடனே நிகிதாவிற்கு அழைத்தான். அவள் எடுக்கவில்லை.
என்னால எவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கா.. இதுல அம்மா வேற இப்படி பேசிவச்சிருக்கே… நான் கொடுத்த வேதனையே அதிகம். இதுல இது வேறயா.. எவ்வளவு கஷ்டத்த இன்னும் தாங்குவாளோ.. எல்லாம் என் முட்டாள்தனத்தால வந்தது. என தலை தலையாய் அடித்து கொண்டான்.
இந்த முறையும் அழைப்பு போய் கொண்டே இருக்க….. அவள் எடுக்கவில்லை.
ஏற்கனவே என் மேல கோபமா இருந்தா.. இந்தம்மா இப்படி வேற பேசி அவள இன்னும் அதிக கோபபடுத்தி வச்சிருக்கே..
‘போனை எடு.. நான் உங்கிட்ட பேசனும்’ என கடுப்பில் மெசேஜ் போட்டான்.
‘ஏன்.. எதுக்கு.. பேசனும்..’
‘என்னடி இது கேள்வி.. ஒரு புருஷன் பொண்டாட்டிகிட்ட எதுக்கு பேசுவான்..’
‘ஓ… நான் பொண்டாட்டிங்கற நினைப்பு இருக்கா..’
‘என்னடி.. இப்படி பேசற..’
‘ப்ச்ச்.. என்ன பேசனும்.. உங்கம்மா மாதிரியே நீயும் உம்புள்ள இல்லனு சொல்ல போறியா..’
‘ஏய்.. எனக்கு தெரியும்டி அது எம்புள்ளைனு.. யார்.. என்ன.. சொன்னா என்ன.. நாம வாழ்ந்த வாழ்க்கை சொல்லும்டி அது யார் பிள்ளைனு..’
‘நீ விட்டுட்டு போனதுலய தெரிஞ்சுடுச்சு.. எப்படி வாழ்ந்தோம்னு..’
‘சாரிடி தப்பு தான்.. மன்னிச்சிடு.. யார் என்ன சொன்னாலும் டென்ஷன் ஆகாத.. எனக்கு தெரியும் என் புள்ளைனு..’
‘ரொம்ப சந்தோஷம்’
‘கால் பண்ணா.. பேசுடி..’
‘முடியாது..’ என முடித்துவிட்டாள்.
பேசமாட்டேன் சொல்லி சொல்லியே எல்லாம் சேட்டிங்லயே எல்லாம் பேசிவிட்டாள் என நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது. இருந்தும் அவள் குரல் கேட்க ஆசையாக இருக்கே.. என ஏங்கினான்.
பொன்னிக்கு அழைத்தான்.
“என்னடா வீரா…”
“அக்கா..”
“சொல்லுடா..”
அவர்களை பேசவிடாமல் பொன்னியின் மகன் அழுது கொண்டே இருக்க..
“குட்டி பையன் ஏன் இப்படி அழுகிறான்”
“தடுப்பூசி போட்டு வந்தேன்.. மூனு நாளைக்கு காய்ச்சல் இருக்கும் அதுவரைக்கும் இப்படி தான் அழுதுகிட்டு இருப்பான். நீ சொல்லு..”
இந்த நிலையில் உதவி கேட்க சங்கடப்பட்டு
“குட்டி பையனை பார்த்துக்கோ” என சொல்லி வைத்து விட்டு… அடுத்து ஆராத்யாவுக்கு அழைத்தான்.
வீரா நம்பரை பார்த்தும் உற்சாகமாய்..
“சொல்லுங்க மாமா..”
“நல்லா இருக்கியா ஆரு..”
“நான் நல்லா இருக்கேன்.. நீங்க..”
“ம்ம்ம்.. நிகிதா எப்படி இருக்கா..”
“போங்க மாமா.. நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கல.. அக்கா பாவம். நீங்க போனதும் எப்படி அழுதா தெரியுமா..”
“சாரிடா குட்டி..நான் நிக்கி கிட்ட பேசி சாரி கேட்கறேன்.. அவள கொஞ்சம் நான் கால் பண்ணினா அட்டென் பண்ண சொல்லறியா..”
“ஐயோ மாமா..நானா.. உங்களை பத்தி பேசினா.. இனி என்கிட்ட பேசமாட்டேன் சொல்லிட்டா.. நீங்களே பேசிக்கோங்க.. ” என சொல்லிவிட்டாள்.
என்ன செய்வது என யோசித்தான். கல்யாணியை அழைத்தான்.
‘கருத்த மச்சான்… கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்…’
ரிங்டோனை கேட்டதும்..கல்யாணிக்கு தான் அழைத்தோமா.. என காதில் இருந்த போனை எடுத்து பார்த்தான். இவளை என பல்லை கடித்தவன்…அவள் எடுத்ததும்..
“சொல்லுடா கருத்த மச்சான்..”
“ஏய்.. எதுக்குடி.. இந்த ரிங்டோன் வச்சிருக்க..”
“லவ் மச்சான்.. லவ் படுத்தும் பாடு..மச்சான்”
“ஏய்..”
“சும்மா ஏய்.. ஏய்னு ஏர் ஓட்டாத..”
“சரி அத விடு. எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா..”
“என்ன மச்சான் உனக்கு வாழ்க்கை கொடுக்கனுமா…”
“ப்ச்ச்.. எப்ப பாரு உனக்கு விளையாட்டு தானா.. எனக்கு ஹெல்ப் பண்ணுவியா… இல்லையா..”
“அதானே பார்த்தேன்.. என்னடா மச்சானே கால் பண்றானே.. நம்ம மேல லவ்ஸ் வந்துடுச்சோனு ஒரு நிமிசம் ஏமாந்து போயிட்டேன்”
“ப்ச்ச்… கல்யாணி..” என்றான் சலிப்பாக…
“ம்ம்.. சரி.. சரி..டென்ஷன் ஆகாதா…என்ன பண்ணனும் சொல்லு..”
“நிகிதா நான் கால் பண்ணா அட்டென் பண்ணமாட்டேங்கறா.. நீ தான் நல்லா ஜாலியா பேசுவியே..நீ அவளுக்கு கால் பண்ணி பேச முடியுமா… பேசி எப்படியாவது அவள என்கிட்ட பேச வைக்கறியா..”
“அவ என்னை யாருனு கேட்பாளே..”
“என் ப்ரண்ட்னு சொல்லு..”
“எப்படி.. கேர்ள் ப்ரண்ட்னு சொல்லவா..”
“சும்மா ப்ரண்ட்னு மட்டும் சொல்லு போதும்” என்றான் சுள்ளென்று..
“சரி கோபபடாத.. பேசி பேசியே உன்னை கரெக்ட் பண்ண மாதிரி.. உன் ஒய்ப்பையும் பேசியே கரெக்ட் பண்ணிடறேன்.டோன்ட் வொர்ரி…”என்றாள் விசமமாக..
அவளின் உள் குத்து தெரியாமல் இவனும் சந்தோஷமாக “பேசிட்டு கூப்பிடு”என சொல்லி வைத்துவிட்டான்.
நிகிதா லோன் விஷயமாக காஞ்சிபுரம் கூட்டுறவு பேங்க் சென்று மணிக்கணக்கில் காத்திருந்து மானேஜர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்து.. வேலை முடித்து விட்டு பஸ்ஸில் வந்து இறங்கி நடந்து வீடு வந்தவளுக்கு அப்படி ஒரு களைப்பு.
அவளால் நிஜமாகவே முடியவில்லை.. எல்லா இடங்களிலும் காரிலேயே சென்று வந்தவளுக்கு இது எல்லாம் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனால் வாழ்க்கையே போராட்டமாக இருக்க..இதையும் தாங்கி கடந்து வரவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டாள்.
மசக்கையும் சேர்ந்து கொள்ள மிகவும் களைத்து போனாள். வந்தவள் தண்ணீர் கூட குடிக்காமல் போய் படுத்து கொண்டாள். அய்யாவுக்கு பார்த்ததும் மனதை அறுத்தது. விசாலாவும் மகன் திட்டியதில் நிகிதாவிடம் வீம்பு கொண்டு பேசுவதில்லை. விசாலாவும் நிகிதா வந்ததை கண்டு கொள்ளாமல் சமையல் செய்து கொண்டு இருந்தார்.
மனைவியை முறைத்து பார்த்து விட்டு அய்யாவு தோட்டத்து இளநீரை ஒன்றை சீவி கொண்டு போய் கண் மூடி படுத்திருந்த மருமகளிடம்..
“ம்மா நிகிதா..” என கூப்பிட்டார். மாமனாரின் குரல் கேட்டு அவசரமாக எழுந்து அமர..
“மெல்லம்மா.. எதுக்கு இப்படி எந்திரிக்கற.. ரொம்ப களைப்பா வந்தியா.. இந்தா இதை குடி..”
இளநீரை வாங்கி குடித்தவளையே பார்த்து கொண்டு இருந்தார். எப்படி இருந்த பொண்ணு..மனைவி மீதும் மகன் மீதும் வெறுப்பாக வந்தது.
குடித்ததும் இளநீர் மட்டையை வாங்கி கொண்டவர்
“ஸ்கூட்டி ஒன்னு வாங்கிகலாமா..”
“எதுக்கு மாமா.. உங்களுக்கு தான் டிவிஸ் எக்சல் இருக்கே..”
“எனக்கு இல்ல.. உனக்கு தான்.. பஸ்ல போயிட்டு வந்து ரொம்ப சோர்ந்து போயிடறியே..”
“வேணாம் மாமா.. உங்களுக்கு எதுக்கு வீண் செலவு..”
“ஏம்மா…எனக்கு உங்க வீட்டு அளவுக்கு வசதியில்லைனாலும்.. ஏதோ நானும் கொஞ்சம் சம்பாதிச்சு வச்சிருக்கேன்..”
“நான் அதுக்கு சொல்லல.. ஏற்கனவேர உங்களுக்கு பாராமா இருக்கேனோனு வருத்தமா இருக்கு..”
அந்த வார்த்தையை கேட்டதும் அய்யாவு துடித்து போனார்.
“அப்படி சொல்லாதமா.. யாருக்கு யார் பாரம்.. என் மகன் வேணா கடமை தவறலாம்..ஆனா நான் அப்படி இல்லை உனக்கு இனி எல்லாம் ஒரு தகப்பனா இருந்து நான் தான் செய்வேன்.. நாளைக்கு மாப்பிள்ளையையும் பொன்னியையும் கூட்டிட்டு போய் ஒரு வண்டி எடுக்கறோம்.நீ எதுவும் பேசகூடாது.. என சொல்லி விட்டு சென்றிட..
நிகிதா இவரும் பாவம் தான் என நினைத்து கொண்டு படுத்துவிட்டாள்.
வீரா இரவு நிகிதா கூப்பிடுவாளா என போனை கையில் வைத்து கொண்டு தூங்காமல் படுக்கையில் உட்கார்ந்து இருந்தான். இந்த கல்யாணி பேசினாளா என்னவோ தெரியலையே.. அவ பேச்சை நிகிதா கேட்பாளா என தவிப்புடன்..
வெகு நேரம் கழித்து நிகிதா அழைக்கவும் பரபரப்புடன் போனை காதில் வைத்தான்.
“அமுல் பேபி..”
“என்னய்யா.. அமுல் பேபி.. யாருய்யா அந்த கல்யாணி.. என்னை விட்டுட்டு போயி.. அங்க ஒருத்திய வச்சுகிட்டயா..”
“இல்லமா..”
“பேசாத.. ஏதாவது பேசினா மரியாதை கெட்டு போயிடும். கருத்த மச்சான்ங்கறா.. கருப்பா இருந்தாலும் களையா இருக்கறிங்கறா… லவ்லிங்கறா.. மேன்லிங்கறா..”
“அவ மப்பும் மாந்தாரமா இருக்காளாம்.. பார்க்க செக்ஸியா இருப்பாளாம்.. அப்படி இருக்கற பொம்பளைங்கள தான் ஆம்பளைங்களுக்கு பிடிக்கும்ங்கறா..”
“அப்படி இல்ல..”
“அப்படி இல்லனா எப்படி.. நான் கொத்தவரங்காய் மாதிரி வத்தலும் தொத்தலுமா இருக்கேனாம்.. என்ன தொடவே உனக்கு பிடிக்கலயாம். அதனால தான் என்னைய விட்டுட்டு போயிட்டயாம்”
“நிக்கி..” என்றான் பரிதாபமாக..
அவன் பேச விடாமல் தவுசண்ட் வாலாக வெடித்து கொண்டு இருந்தாள்.
“நான் புள்ளய பெத்து கொடுத்துட்டு.. டைவர்ஸ் வாங்கிட்டு போயிடனுமாம்.. இப்பவே ரிலேசன்ஷிப்ல தான் இருக்கோம்னு சொல்றா..”
“நான் இந்தியா போகமாட்டேன். அவ மூஞ்சிய பார்க்கவே புடிக்கல.. அவ டைவர்ஸ் கொடுத்தா கல்யாணம் பண்ணிக்கலாம். இல்லனா லீவ் இன்ல வாழலாம்னு சொன்னியாமா.. ஒரே பிரசவத்துல மூனு புள்ள பெத்து காமிக்கறேன்.. மச்ச்சான் என்கிட்ட அப்படி மயங்கி கிடக்கறான். உனக்கு புருஷன முந்தானைல முடிஞ்சு வச்சுக்க தெரியலங்கறா..”
“அப்படி தான் போல ஏற்கனவே இந்த ஊர் பொம்பளைங்க என்னய அப்படி தான் சொல்றாங்க.. இப்ப உன் கீப்பும் அப்படி தான் சொல்றா.. நீ என்னய விட்டுட்டு போனதுக்கு நான் கடல் கடந்து எல்லாம் வசவு வாங்கறேன். அதுக்கு நீ போகும் போது என்னைய கொன்று போட்டு போயிருக்கலாம்..” கடைசியாக கண்ணீர் குரலில் கூறி விட்டு போனை வைத்துவிட்டாள்.
அவளின் பேச்சும் கண்ணீர் குரலும் அவனை உயிரோடு கொல்லாமல் கொன்றது. அவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது என தெரியாமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.
கல்யாணி தரமான ஒரு சம்பவத்தை செய்து ஏற்கனவே விரிசலாக இருந்த உறவில் குழி பறித்து விட்டாள். வீரா நிகிதா வாழ்வில் அடுத்தநிலை என்னவோ…
20- புயலோடு பூவுக்கென்ன மோகம்
நிகிதாவின் பேச்சு எல்லாம் வீராவின் மனதை குத்தீட்டியாய் குத்தி கிழிக்க.. மனம் ரணமாய் வலித்தது.
கல்யாணியை கொல்லனும் போல வெறியாக வர.. அவளுக்கு அழைத்தான். அழைப்பு போய் கொண்டே இருக்க..அவள் எடுக்கவில்லை.
“கட்டின பொண்டாட்டி தான் நம்மள மதிக்கறதில்லனா.. இவளுக்கும் கொழுப்ப பாரேன்.எல்லாம் என்னை இம்சை பண்றாளுக.. இரண்டு பேரும் நல்லா வச்சு செய்றாளுக..” என அறையின் கதவை அடைத்து விட்டு கோபத்தில் ஏதேதோ கத்தி கொண்டு இருந்தான்.
அடுத்த நாள் அய்யாவு பொன்னியின் கணவன் கணேசோடும் நிகிதாவோடும் சென்று நிகிதாவிற்கு ஆக்டீவா வாங்கி கொடுத்தார். நிகிதா விலைக்காக பார்க்க.. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அய்யாவு பிடிவாதமாக வாங்கி கொடுத்தார்.
மருமகளையே புது வண்டியை எடுத்து கொண்டு வர சொல்லிவிட்டு அவர் கணேசோடு பைக்கில் வந்தார். வரும் வழியிலேயே கோயிலில் பூஜை போட்டு விட்டு வர… மாலை விபூதி பட்டை என மங்களகரமாக புது வண்டியில் வந்திறங்கிய நிகிதாவை பார்த்ததும் விசாலா கோபமாக முறைத்து கொண்டு உள்ளே சென்று விட்டார்.
சற்று முன்பு தான் வெங்கட் விசாலாவிற்கு போன் செய்து..
“உம்மவன் என்ன சொல்றான்.. என் பொண்ண வச்சு வாழறானா.. இல்லையா டைவர்ஸ் கொடுக்கிறானா.. என்னன்னு கேட்டியா.. ஏதோ அக்கா மவனா போனதால.. இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கேன்.. இல்லனா எனக்கு இருக்கிற செல்வாக்குக்கு எப்பவோ உள்ள வச்சு முட்டிய பேர்த்திருப்பேன்.. “
“எம்மகன் சம்பாதிக்க தானே தேசம் விட்டு தேசம் போயிருக்கான்.. என்னவோ உம்மகளே வெட்டி விட்டுட்டு போன மாதிரி பேசற.. எல்லாம் உம்மவள ராணியாட்டம் வச்சுக்க தானே..”
“உம்மகன் சம்பாதிச்சு தான் எம்மக வாழனுமுன்னு இல்ல.. மூனு தலைமுறைக்கு சேர்த்து வச்சிருக்கேன்.. அத காப்பாத்தினாவே போதும். ஒழுங்கா வந்து வாழ சொல்லு.. இல்ல டைவர்ஸ் கொடுக்க சொல்லு.. எனக்கு அடங்குனவனா பார்த்து எம்மகளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுக்கறேன்..”
வெங்கட்டும் என்ன தான் செய்வார். வெளியே மாப்பிள்ளை பார்த்தா எப்படி இருப்பானோ.. தன் அக்கா மகனா இருந்தால் தனக்கு பிறகு தன் குடும்பத்தையும் தன் தொழிலையும் பார்த்து கொள்வான் என நினைத்து சொக்கலிங்கம் சொல்லவும் சரி என சம்மதித்தார்.
வீரா முயன்று தொழிலை கற்று கொள்ள முயற்சித்ததில்.. தன் சுமையை இறக்கி வைக்க.. ஒரு தோள் கிடைத்தது என சந்தோஷப்பட்ட நேரத்தில் தான் வீரா விட்டு சென்றது. அதை அவரால் தாங்க முடியவில்லை.
விசாலாவுக்கு தம்பியின்பேச்சு பிடிக்கவில்லை. எதுனாலும் என் மகனிடமே கேட்டு கொள் சொல்லி பட்டென வைத்துவிட்டார்.
இந்தம்மா வெங்கட்டை வீராவோடு கோர்த்து விட்டுருச்சு.. வீராவுக்கு அடுத்த டார்ச்சர் ஸ்டார்ட்டிங்…
நிகிதாவை புது வண்டியோடு பார்த்து விட்டு உள்ளே சென்றவர் கிச்சனில் நின்று பொருமி கொண்டு இருந்தார்.
“எம்மவன் பைக்கை கூட இங்கேயே விட்டுட்டு போயிட்டான்.அந்த ஊர்ல ஒத்தையா என்ன பாடுபடறானோ.. ஆளாளுக்கு அவனையே ஏசிட்டு இருக்காங்க.. நேத்து வந்த மவராசி சுகமா இருக்கா..”
இந்த பொருமலை எல்லாம் கேட்டு கொண்டே உள்ளே வந்த நிகிதா அவரை கண்டு கொள்ளாமல் சென்று விட.. கொதித்து போனார் விசாலா.
வெங்கட் தன் அக்காவின் பேச்சில் கோபம் தலைக்கேற.. உடனே வீராவை அழைத்தார்.
வெங்கட்டின் நம்பரை பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் இவரை எப்படி சமாளிக்க.. என பயம் வந்தது. அது ஒரு நிமிடம் தான். என் பொண்டாட்டியவே சமாளிக்கிறேன். இவரு என்ன.. திமிரு வந்தது..
“சொல்லுங்க மாமா..” என்றான் கெத்தாக..
இவனுக்கு கொழுப்ப பாரு.. என பல்லை கடித்தவர்…
“நீ தான் சொல்லனும்..”என்றார் தெனாவட்டாக.. நான் உனக்கு மாமனாக்கும் என நினைத்தவாறே..
“என்ன சொல்லனும்”
“அதை தான் நானும் கேட்கறேன். என்ன சொல்லற.. என் பொண்ணை வச்சு வாழறியா..இல்ல டைவர்ஸ் கொடுக்கறியா..”
டைவர்ஸ் என்ற வார்த்தையை கேட்டதும் கோபம் தலைக்கேற..
“என்ன ஆளாளுக்கு டைவர்ஸ்.. டைவர்ஸ்னு.. பூச்சாண்டி காட்டறிங்களா.. டைவர்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது”
“அப்ப என் பொண்ணு வாழ்க்கை..”
“இப்ப அவ வாழ்க்கைக்கு என்ன வந்துச்சு..”
“என்ன வந்துச்சா… என் பொண்ணு சந்தோஷமா வாழனும்னு தான உன்னை கட்டி வச்சேன். இப்ப என் பொண்ணு வாழ்க்கையே வீணா போச்சு.. “
“என்ன வீணா போச்சு.. ஊரு உலகத்துல எந்த ஆம்பளையும் பொண்டாட்டி புள்ளைகள விட்டுவிட்டு கடல் கடந்து போய் சம்பாதிக்கறதில்லையா.. அவங்க பொண்டாட்டி எல்லாம் வாழ்க்கை வீணா போச்சுனா அழுதுகிட்டு இருக்காங்க..”
“அவங்க புருஷனுங்க எல்லாம் சொல்லிட்டு போவாங்க.. பொண்டாட்டிகிட்ட போன்ல பேசுவாங்க.. உன்ன மாதிரி ஓடி ஒளிய மாட்டாங்க..”
“நான் ஒன்னும் ஓடி ஒளியல.. எங்க இருக்கேன்னு எங்கம்மாகிட்ட சொல்லிட்டேன்ல”
“எத்தன நாளு கழிச்சு சொன்ன.. உங்கம்மாகிட்ட தான சொன்ன.. உன் பொண்டாட்டிகிட்ட சொன்னியா..”
“உங்க மக தான் நான் போன் பண்ணினா பேசமாட்டேங்கறா…”
“நீ வாழாம விட்டுட்டு ஓடி போவ.. எங்கயோ இருந்துகிட்டு போன் பண்ணா பேசனுமா.. அது எல்லாம் விடு.. என் பொண்ணுக்கு ஒரு வழி சொல்லு..’
“நான் வர ஒரு வருஷமாகும்”
“அதுவரைக்கும் என் பொண்ணு வயித்துல உம் புள்ளய சுமந்துகிட்டு.. வாழவெட்டிங்கற பேரோட.. கண்ணீரும் கம்பலையுமா நிக்கனுமா..”
“வாழவெட்டினு சொல்றதுக்கு உங்க வீட்லயா இருக்கா.. என் வீட்ல எங்க அப்பாம்மா கூட தான இருக்கா…”
“உங்க வீட்ல இருந்தா மட்டும் எம் பொண்ணு சந்தோஷமாவா இருக்கா..உங்கம்மா தான் ஏதாவது நொடிச்சுகிட்டே இருக்கு.. நீ அங்க நிம்மதியா இருக்க.. இந்த மாதிரி நேரத்துல சந்தோஷமா இருக்கனும்.. அப்படியா இருக்கா எம் பொண்ணு.. அவளுக்கு டைவர்ஸ் கொடுத்திடு.. அவ சந்தோஷம் தான் முக்கியம்”
“நான் டைவர்ஸ் கொடுத்திட்டா உங்க பொண்ணு சந்தோஷமா இருப்பாளா..”
“நிச்சயமா..”
“அவளே என்கிட்ட கேட்கட்டும்.”
“கேட்டா கொடுத்திருவியா..”
“அவ என்கிட்ட கேட்கட்டும் பார்க்கலாம்”
“என் பொண்ணு கண்டிப்பா கேட்பா.. நான் கேட்க வைப்பேன்”
“பார்க்கலாம்.. பார்க்கலாம்..” என வைத்துவிட்டான்.
கேட்டுருவாளா…என்கிட்ட கேட்டுருவாளா.. ச்ச்சே அப்படி எல்லாம் கேட்கமாட்டா… அவ என்ன லவ் பண்றா.. அப்படி எல்லாம் நான் வேணாம்னு போகமாட்டா..என தனக்குள் சற்று நேரம் புலம்பியவன் நிகிதாவிற்கு அழைத்தான் அவளிடமே கேட்டுவிடலாம் என நினைத்து..
நிகிதா வீரா அழைக்கிறான் என்று தெரிந்தும் போனையே பார்த்து கொண்டு இருந்தவள் எடுத்து பேசவில்லை.
வீராவிற்கு முன்பு தான் வெங்கட் நிகிதாவை அழைத்து அங்கே இருக்க வேண்டாம். இங்க வா அவனை டைவர்ஸ் பண்ணிடலாம் என சொல்ல.. நீங்க எல்லோரும் என் வாழ்க்கைக்கு பண்ணிய வரை போதும். என்ன செய்யனும் எனக்கு தெரியும். என அவரை நாலு வார்த்தை நறுக்கென கேட்டு வைத்தாள்.
வீரா வாட்சப்பில் போனை எடு நான் உங்கிட்ட பேசனும் என திரும்ப.. திரும்ப.. சொல்ல.. போனை ஆன் செய்து காதில் வைத்தாள்.
“நிகிதா..”
“அமுல் பேபி..”
“நிக்கிம்மா..”
“பேசுடி..”
“பேசுடி மனுச மண்ட காய வைக்காத..” கெஞ்சல் போய் எரிச்சலானான்.
ஒரு நக்கல் சிரிப்போடு.. “ம்ம்ம்ம்..” என்றாள்.
நான் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன். எவ்வளவு தெனாவட்டா ம்ம்னு மட்டும் சொல்றா…
“என்னடி அப்பனும் மகளும் என்னை கடுப்பேத்தறிங்களா.. அந்தாளு என்னன்னா என் மகள டைவர்ஸ் பண்ணிடுனு சொல்றாரு.. வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேங்கறாரு..”
“யோவ்.. எங்க அப்பாவ ஆளு கீளுன்ன.. மரியாதை இல்லாம பேசினிங்க.. அவ்வளவு தான்”
“ஆமாண்டி.. அவர மரியாதை இல்லாம பேசனும்னு எனக்கு வேண்டுதலையா.. அவர் தான் என்னை அப்படி பேசவைக்கிறார்..”
“அவர் என்ன அப்படி பேசிவிட்டார்..”
“என்ன பேசினாரா.. என் பொண்ணுக்கு டைவர்ஸ் கொடுத்திருனு சொல்றாரு.. என்ன ஒரு திமிரு..”
“இதுல என்ன திமிரு இருக்கு.. எந்த அப்பாவா இருந்தாலும் பொண்ணு வாழ்க்கைகாக அப்படி தான் பேசுவாங்க..”
“அப்ப அவர் பேசினது கரெக்ட்னு சொல்லறியா..”
“ஒரு அப்பாவா அவர் பேசினது தப்பில்ல..”
“அப்போ அவர் சொல்ற மாதிரி என்னை டைவர்ஸ் பண்ணிட்டு போயிடுவியா..”
“நீங்க தான என்னை விட்டு போனிங்க.. நீங்க போகாம இருந்திருந்தா எதுக்கு இந்த மாதிரி பேச்சு வருது.. நான் உங்களோட வாழனும்னு தான் நினைச்சேன். நீங்க தான் அத புரிஞ்சுக்கல.. இப்பவும் வயித்துல புள்ளையோட ஒத்தையா நிக்கறேன்.இந்த மாதிரி நேரத்தில் பொண்ணுங்க எவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க.. இருக்கனும்.. ஆனா அத பத்தி எல்லாம் கவலைப்படாம ஆளாளுக்கு என்னை டார்ச்சர் பண்ணறிங்க.. என்கிட்ட யாரும் பேசாதிங்க.. என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க..” என பேச பேச கடைசியில் அழுகை வந்திட.. போனை வைத்துவிட்டாள்.
அவளுடைய பேச்சு அழுகை எல்லாம் அவனை ஏதோ செய்திட.. இப்பவே அவளை அள்ளி மார்பில் போட்டு ஆறுதல் சொல்லவேண்டும் என வேகம் வர.. ஆனால் அணைத்திடும் தூரத்தில் அவனில்லையே…
அவளுடைய முகத்தையாவது பார்த்திட வேண்டும் என வீடியோ காலில் அழைக்க.. எடுப்பாளோ.. மாட்டாளோ.. என நினைக்க… டக்கென எடுத்துவிட்டாள்.
அவளின் முகம் பார்த்தவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. எப்பவும் பட்டு ரோஜா மாதிரி வழுவழுப்பாக மினுமினுப்போடு இருக்கும் அவள் முகம் கருத்து வாடி வதங்கி போய் இருந்தது. கண்கள் சற்று உள்ளே போய் கண்களை சுற்றி லேசாக கருவளையமும்.. ஏற்கனவே ஒடிசலாக இருப்பவள் மேலும் மெலிந்து கன்னத்து கழுத்து எலும்புகள் துருத்தி கொண்டு என்பு தோல் போர்த்திய உடம்பாக இருந்தாள்.
பார்த்தவனுக்கு கண்கள் கலங்கியது. பிள்ளைய சுமக்கும் பூரிப்பு எங்கும் அவள் முகத்தில் இல்லை.எப்பவும் போல தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டான்.
“ஏன்டி.. இப்படி இருக்க..”என்றான் ஆற்றாமையில்..
“எப்படி இருக்கேன்..”
“புள்ளைய சுமக்கறவ மாதிரியா இருக்க..”
“என்னங்க சார் பண்றது.. எம் புருஷன் என்னை விட்டுட்டு ஓடி போயிட்டாரு.. புருஷன தேடுவனா.. புள்ளைய பார்ப்பனா..”என்றாள் நக்கலாக..
“என்னடி நக்கலா..”
“இல்ல.. விக்கலு..”
“ஓய்.. என்னடீ.. கொழுப்பா..”
“ஆமாம்.. நீங்க கறியும் மீனும் வாங்கி போட்டிங்க… அது தின்னு கொழுப்பு எடுத்து திரியறேன்..”அவள் நக்கல் பேச்சில் சிரிப்பு வந்தது அவனுக்கு..
“அமுல் பேபி..” என்றான் மென்மையாக….
அவனின் கொஞ்சல் மொழியில் இப்போது அவள் கண்கள் கலங்கியது. இப்படி அவன் தன் முகத்தை பார்த்து சொன்னதும்.. அவன் நேரிலேயே தன்னை கூப்பிட்டது போல இருக்க.. எத்தனை நாளாயிற்று இப்படி முகம் பார்த்து அவன் காதலோடு சொல்லும் அமுல்பேபியை கேட்டு.. கலங்கிய கண்களை அவனுக்கு காட்டாமல் முகத்தை திருப்பி கொண்டாள்.
“அமுல் பேபி.. என்ன பாருடி.. ஒரு தடவை மாமா சொல்லுடி..”
“ப்ளீஸ்டீ….ஒரே ஒரு தடவை..”
“மில்கி..”
மில்கி என்ற வார்த்தையில் இது என்ன புதுசா என பார்த்தாள். அவளின் பார்வையை புரிந்தவன்..
“அது நீ மில்க் கலர்ல இருக்கறினு கல்யாணி தான் உனக்கு இந்த பேர வச்சா.. அவ சொல்ற மாதிரி கலர் மட்டும் இல்ல உடம்பும் மில்க் மாதிரி சாப்டா இருக்கும்னு எனக்கு தானே தெரியும்..” காமம் கலந்த காதல் பார்வையில் அவளை பார்த்து கொண்டு சொல்ல..
நிகிதாவின் பார்வையில் அனல் தெறிப்பதை கவனிக்காமல் கனவுகளில் மிதக்க..
“யாரு வச்சது..” என்றாள் ஆக்ரோசமாக..
அச்சோ வீரா வாய கொடுத்து வாண்டடா சிக்கிட்டியே என முழித்தான்.
“யாருனு கேக்கறன்ல..”
எச்சில் கூட்டி முழுங்கியவாறு..”அது வந்து.. கல்..யா..ணி..”
“எவ்வளவு தைரியம் இருந்தா.. அவள பத்தி என்கிட்டயே பேசுவிங்க.. எனக்கு பேரு வைக்க அவ யாரு.. அவகிட்டயே பேசுங்க.. இனி என்கிட்ட பேசாதிங்க..” என போனை வைத்துவிட்டாள்.
அவளே இப்ப தான் கொஞ்சம் மலையிறங்கி வந்தா…. அதையும் நீயே கெடுத்துகிட்டயே… உனக்கு உன் வாய் தான்டா ஏழரை நாட்டான் என தன் ஆள்காட்டி விரலை தன் முகத்திற்கு நேராக நீட்டி தன்னையே திட்டி கொண்டான்.
அவளின் இளைத்த உடல் அவனை சற்றே வருத்த.. தன் தாய்க்கு அழைத்தான்.
“சொல்லு கண்ணு..”
“ம்மா எப்படி இருக்க..”
“நல்லா இருக்கேன் கண்ணு.. நீ எப்படி இருக்க..”
“எனக்கு என்னம்மா நான் நல்லா இருக்கேன் அப்பா.. எப்படி இருக்காரு..”
“ம்ம்.. இருக்காரு.. முறுக்கிட்டு இருக்காரு..”
தந்தையின் கோபம் அறிந்தவனாக.. சில நொடி அமைதியானவன்.. மெல்ல தாயிடம்..
“அவ ஏன்மா அப்படி இருக்கா.. ஒழுங்கா சாப்பிடமாட்டாளா..”
“அவளுக்கு என்ன நல்லா தான் இருக்கா.. என்னமோ உங்கப்பாரு தொழில புதுரகமா மாத்தேறுனு சொல்லிகிட்டு ஊர் ஊரா அலையறா.. அவ பஸ்ல போயி கஷ்டப்படறானு.. உங்க அப்பாரு புதுசா வண்டி வாங்கி கொடுத்திருக்காரு..அவ இங்க சொகுசா தான் இருக்கா.. நீ தான் அந்த ஊருல என்னன்ன கஷ்டப்படறியோ.. ஏஞ்சாமி… அந்த ஊருல நம்ம ஊரு சாப்பாடு எல்லாம் கிடைக்குமா..”
“இல்லம்மா.. நானும் என் ப்ரண்டும் ஏதோ எங்களுக்கு தெரிஞ்சத செஞ்சு சாப்பிடறோம். அதவிடுமா.. அவளுக்கு ரொம்ப மசக்கையா இருக்கா.. ரொம்ப மெலிஞ்சு தெரியறா..”
“நீ எங்க கண்ணு பார்த்த..”
“ம்மா நான் அவகிட்ட வீடியோ கால்ல பேசினே.. முன்னவே ஒழுங்கா சாப்பிட மாட்டா அவள கொஞ்சம் நல்லா சாப்பிட வைமா.. “
“நீ தான் கண்ணு அவ மேல அக்கறையா இருக்க.. ஆனா அவளுக்கு புருஷன விட்டு இருக்கோங்கற கவலை எல்லாம் இல்ல.. யாரர் கூடயோ இராத்திரி ஆனா சிரிச்சு சிரிச்சு போன்ல பேசிகிட்டு இருக்கா..”
“ம்மா.. ஆ.. சும்மா அவள தப்பா பேசாதே. அவ ஆருகிட்ட பேசியிருப்பா.. நான் வர வரைக்கும் அவள கொஞ்சம் நல்லா பார்த்துக்கோ..” என சொன்னான்.
“ம்க்கும்.. சரி சரி..” என நீட்டி முழக்கினார்.
“சரிமா வைச்சறேன்..” என பெருமூச்சு ஒன்றை விடுத்தான்.
சற்று நேரத்தில் கல்யாணி வீராவுக்கு அழைத்தாள். கல்யாணி என பார்த்தவன்.. எல்லாம் இவளால் வந்தது. இன்னைக்கு இவள சும்மா விடகூடாது.
எடுத்ததும் அவளை பேச விடாமல் ..
“என்னடி பண்ணி வச்சிருக்க.. நிகிதாகிட்ட என்ன பேசி வச்ச.. அவகிட்ட எனக்கு ஃபேவரா பேசுன்னு சொன்னா.. அவள டைவர்ஸ் பண்ணிட்டு போனு சொல்லியிருக்க… டைவர்ஸ் கொடுத்தா கல்யாணம் பண்ணிக்குவோம்.. இல்லாட்டி லிவ் இன்ல இருப்போம்னு சொல்லி இருக்க…
“மச்சா..” அவளை பேசவிடாமல்..
“அதுமட்டுமில்லாம.. அவள வத்தலும் தொத்தலுமா இருக்க.. நான் கும்னு இருக்கேன்.. அதான் உன் புருஷனுக்கு உன்ன புடிக்கலனு சொல்லி வச்சிருக்க..”
“கருத்த மச்சான்..” அவளை பேசவிடாமல் இவன் மூச்சு விடாமல் கல்யாணியை தாளித்தான்.
“என்னடி மச்சான்.. என்ன மச்சான் மச்சானுட்டு இருக்க.. நான் உனக்கு மாமன் மகனா.. அத்தை மகனா… இனி என்ன மச்சான்னு கூப்பிட்ட பல்லப் பேத்துடுவேன்.. பார்த்துக்கோ.. இனி எனக்கு கால் பண்ணாத.. இன்னையோட உனக்கும் எனக்குமான ப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணிக்கலாம்..” என கத்தி விட்டு வைத்துவிட்டான்.
“ஷ்ஷப்பா.. காது அடைக்குதே.. மச்சான் ரொம்ப ஹாட்டா இருக்கான் போல..”என காதை குடைந்து கொண்டே வாய் விட்டு சத்தமாக சிரித்தாள் கல்யாணி.
கல்யாணி @ நிகிதா
👌👌👌👌👌👌👌👌👌
🥰🥰🥰🥰🥰🥰🥰
Itha naan guess panein.👌.nice going
Thank for your comments.
DHNdxiWBevFLStGX