ATM Tamil Romantic Novels

24 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

24 – புயலோடு பூவுக்கென்ன மோகம்

 

      

                  தறி பட்டறை ஆரம்பித்து ஒரு மாதம்  முடிந்திருந்தது. நிகிதாவின் உதவியில்லாமல் பட்டறையை நிர்வாகம் பண்ண கற்று கொண்டார் அய்யாவு. அதிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவர் தானே.. இன்றைய டெக்னாலஜிக்கு தன்னை எளிதாக மாற்றி கொண்டார்.



நிகிதா புது புது டிசைன்களை உருவாக்க.. அவள் டிசைனில் உருவாக்கிய புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. டிசைன் செய்து கொடுத்தால் மற்றவற்றை அய்யாவு  பார்த்து கொள்ள.. பேக்டரி வேலையில் முழுவதாக மூழ்கி போனாள்.



இதோ பேக்டரியும் திறப்பு விழாவிற்கு தயாராகி விட.. இந்த முறையும் வீரா வரவில்லை. வருவதறக்கான சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டான்.

 

 தங்கள் மகவு உலகை பார்க்கும் முன் நிகிதாவை தான் பார்க்க வேண்டும். சூழ் கொண்ட வயிற்றை  தொட்டு தடவி  அதன் துடிப்பை உணர்த்திட  ரொம்பவே ஆசை கொண்டான். ஆசை என்பதை விட ஒரு வெறி என்றே சொல்லலாம். தன் குழந்தை உருவான தருணம் முதல்  அதன் ஒவ்வொரு  வளர்ச்சியையும் அசைவையும் அவளின் மணி வயிற்றை தடவி துடிப்பு உணர்ந்து அனுபவிக்க முடியவில்லை என்ற ஏக்கம் அவன் மனதை அரித்து கொண்டு இருந்தது.

 

அதனால் அவனின் ப்ராஜெக்டை முடிக்க இரவு பகலாக வேலை செய்து கொண்டு இருந்தான்.ஒரு வருஷ கான்ட்ராக்ட்டில் சென்று இருந்தவன்..  நிகிதாவின் வளைகாப்புக்கு முன் வந்திட வேண்டும் என்ற எண்ணம். அதனால் முன்னிலும் முனைப்பாக வேலையை செய்தான்.



வீரா வரவில்லை என்பது குடும்பத்தினருக்கு வருத்தம் தான். வந்து திறப்பு விழா முடித்து விட்டு போக  சொன்னார்கள். ஆனால் வந்தால் நிகிதாவை விட்டு செல்ல முடியாது என்பதால் வேலையை முடித்து கொண்டு மொத்தமாக வந்திட வேண்டும் என உறுதியாக இருந்தான். நிகிதாவிற்கு வருத்தம் இல்லை அவளுக்கு தெரியுமே அவள் கணவனின் எண்ணம். 



திறப்பு விழாவை வெங்கட் ஆடம்பரமாக செய்து இருந்தார். மத்திய தொழில் துறை மந்திரி ரிப்பன் கட் பண்ணி திறந்து வைக்க.. மங்களம் பாட்டி விளக்கேற்றி வைக்க..  தமிழக மந்திரிகள் இருவர் அரசு அதிகாரிகள் என தொழிலை சுமூகமாக நடத்துவதற்கான சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அத்தனை பேரையும் அழைத்து சிறப்பாக கவனித்து… ஆர்ப்பாட்டமாக செய்தார்.



இன்றும் ஆரா எல்லாவற்றையும் வீராவுக்கு லைவ்வாக காண்பிக்க.. வீரா மலைத்து போனான் ஒரு தொழிலை நடத்த இத்தனை செய்ய வேண்டுமா என…

 

விழா முடிந்ததும் எப்பவும் போல் மனைவியை சைட் அடித்து..  அவளிடம் கொஞ்சல் மொழி பேசி.. அவளின் நக்கல் பேச்சையும் ரசித்து விட்டு தான் போனை வைத்தான்.

 

அதற்கு பிறகு வெங்கட் எல்லாம் ஜெட் வேகம் தான். பேக்டரி நிர்வாகத்திற்கு எல்லா துறைகளிலும் திறமையான நபர்களை தேர்வு செய்தார்.லேபர்ஸ் அக்கம் பக்கம் ஊரில் இருந்த மக்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்தார். தன்னுடைய நம்பிக்கைக்கு உரிய     தன் ஜெனரல் மேனஜர் ராகவாச்சாரியை நிகிதாவிற்கு ஜெனரல் மேனஜராக நியமித்தார். ஐம்பதின் தொடக்கத்தில் இருந்த  ராகவாச்சாரி அனாவசிய பேச்சுகளின்றி நிகிதாவிற்கு நிர்வாகத்தை கற்று கொடுத்து உதவியாக இருக்க.. நிகிதாவும் சிரமமின்றி நிர்வாகம் செய்தாள்.



நிகிதாவிற்கு  ஏழாம் மாதம் தொடங்கி விட.. வெங்கட் வளைகாப்பு வைக்க வேண்டும் என தனது பெற்றோரிடம் சொல்லி அய்யாவுவிடம் பேச சொல்ல…அய்யாவு மகனை கேட்டு சொல்வதாக சொல்லிவிட்டார்.வீரா வரவேண்டும் என்ற கவலை அவருக்கு.. இதுவரை எப்படியோ.. வளைகாப்பிற்கு கட்டாயம் வந்தாக வேண்டும். இல்லை என்றால் இதை கொண்டு உறவுகளின் பேச்சும்.. அதனால் ஏற்படும் மனகசப்பும்.. மருமகளை தான் பாதிக்கும் என கவலை கொண்டார்.

 

வெகு நாட்களுக்கு பிறகு அய்யாவு மகனை அழைக்க.. தந்தையின் அழைப்பை பார்த்தவனுக்கு ஆனந்தமாகவும்… நிம்மதியாகவும்.. கண்கள் கலங்கி கரகரப்பான குரலில்…

 

“அப்பா..”

 

அவருக்கும் வெகு நாட்களுக்கு பிறகு மகனின் குரலை கேட்டதும்.. ஒருமாதிரி தொண்டையை அடைக்க.. செருமிக் கொண்டு..

 

“நல்லா இருக்கயா ய்யா..”

 

“நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கறிங்க..”



“ம்ம் ஏதோ இருக்கேன்..” என்றார் சலிப்பான குரலில்..

 

அவரின் பேச்சு அவனுக்கு வலியை கொடுத்தாலும்.. அவன் அவரிடம் அதை பற்றி பேசவில்லை. பேச்சை மாற்றும் விதமாக..

 

“சொல்லுங்கப்பா..” என்றான்.

 

இவரும் “நிகிதாவுக்கு வளைகாப்பு வைக்கனும்னு உன் மாமா சொல்றான்.. அதான் உனக்கு எப்படி வசதிபடும் என கேட்க தான் கூப்பிட்டேன்..”

 

“இந்த மாத கடைசி வாரம் வைங்க நான் வந்திடறேன்.” என்றான். அதற்குள் தன் வேலையை முழுவதுமாக முடித்து கொடுத்து விட்டு நிரந்தரமாக ஊர் திரும்பி விட நினைத்தான்.

 

மகனின் வார்த்தையில் அவரின் அலைப்புற்ற மனம் அமைதி கொண்டது.

 

“சரிய்யா.. நல்ல நாள் பார்த்து விட்டு சொல்லறேன்”. 

 

அய்யாவு நல்லநாள் பார்க்க.. ஜோதிடர் குறித்து கொடுத்த நாள் தமிழ் மாத கணக்குபடி இறுதியில் வர… ஆனால் ஆங்கில மாத கணக்கிற்கு இரண்டாவது வாரமாக  அமைய.. அய்யாவு வீராவிடம் சொல்ல.. வீராவுக்கு அதற்குள் வேலையை முடிக்க முடியுமா என்ற கவலை வந்தது.



ஆனால் இது எதுவும் நிகிதாவுக்கு தெரியாது. அய்யாவு விசாலாவிடமும் நிகிதாவிடமும்  நாள் பார்த்தது…  வீராவிடம் பேசியது.. என அனைத்தும் சொல்ல.. நிகிதா வேண்டாம் என மறுத்தாள்.

 

நிகிதா “இப்ப வேண்டாம் மாமா.. ஒன்பதுல வச்சுக்கலாம்.. “

 

“ஏன்மா.. அதான் வீரா வந்திடறேனு சொல்லி இருக்கான்ல..”

 

“அப்படி எதுக்கு அவசரமா வைக்கனும்.. அவருக்கு ப்ரஷர் கொடுத்து டென்ஷன் பண்ண வேண்டாமே.. மாமா முடிச்சிட்டு வந்த பிறகு பார்த்துக்கலாம்..”

 

“இல்லமா.. வீராவ கேட்டுட்டு தான் செய்யறேன்.என்ன அவன் சொன்ன நாளைக்கு கொஞ்சம் முன்னாடி வருது.. அவனும் சரினுட்டான்..”

 

“அதுவும் இல்லாம இப்ப தான் பேக்டரிய ஆரம்பிச்சு இருக்கோம்.. இன்னும் அங்க ப்ராப்பரா எதுவும் நடக்க கொஞ்ச நாளாகும். இப்ப எப்படி விட்டுட்டு நான் சென்னை போக முடியும்”

 

“அதுக்கு வெங்கட் ஏதாவது செய்திருப்பான் மா.. இல்லைனா அவன் வளைகாப்பு பத்தி பேசமாட்டான். அவன்கிட்ட கேட்டுக்கலாம். அதுக்காக செய்ய வேண்டிய விசேசத்தை தள்ளி போட முடியாதுமா..” என்றவர் நிகிதாவை என்ன என்னவோ சொல்லி சமாதானம் செய்துவிட்டார். 

 

அப்பவும் நிகிதா முகம் தெளியவில்லை. பேக்டரிய பத்தி தந்தையிடம் கேட்க வேண்டும் என நினைத்து கொண்டாள்.



அன்று இரவு வீராவிடமும் நிகிதா இதையே சொல்ல…

 

“அமுல் பேபி நான்எப்படியும்  வந்துடுவேன்.. உன் வளைகாப்புக்கு இருப்பேன். நான் இல்லாம நடக்காது”

 

“வந்திடுவிங்க தான..”

 

“கண்டிப்பா வந்திடுவேன்”

 

“அதுக்குள்ள நீங்க ரீலிவ் ஆகிடுவிங்களா..”

 

“அதுக்கு தான் டே அண்ட் நைட்டா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன்”

 

“இப்படி ஒர்க் பண்ணா ஹெல்த் ப்ராப்ளம் வராதா..”என கவலை கொண்டாள்.

 

“நான் பார்த்துக்கறேன்… வந்து உன்னோடு ரெஸ்ட் எடுத்துக்கறேன்..” 

 

“கண்டிப்பா வந்திடுவிங்க தானே.. நீங்க வரலைனா நான் நிறுத்திடுவேன்”

 

“ஏய். அப்படி எல்லாம் ஆகாதுடி.. நான் முதல் நாளே வந்திடுவேன். மாமன நம்புடி மில்கி..”

 

“நம்ப தான் செய்யறேன். ஆனா எப்பவும் நீங்க தான் ஏமாத்திடறிங்க..”

 

“சாரி அமுல் பேபி.. இந்த டைம் நான் சொன்னத காப்பாத்திடுவேன் நம்புடி..”

 

“ம்ம்ம்… நீங்க சொல்லறிங்க… கேட்கறேன்..” என்றாள் இழுவையாக.. அவளை சொல்லில் நம்ப வைப்பது  கஷ்டம் செயலால் தான் முடியும் என நினைத்து கொண்டான்.



வீரா சொன்னதையும்.. நாள் குறித்ததையும் அய்யாவு வெங்கட்டிடம் சொல்ல… மேற்கொண்டு பேச வெங்கட் குடும்பத்துடன்      அடுத்த நாளே வந்தார்.

 

எப்பவும் போல வளைகாப்பையும் ஆடம்பரமாக செய்ய வெங்கட் திட்டமிட.. அவர் அதை பற்றி சொல்லும் போது தன் மகளுக்கு தன் பேர குழந்தைக்கு செய்யும் ஆர்வமே தென்பட..  யாருக்கும் மறுக்கும் எண்ணம் வரவில்லை.

 

நிகிதா தான் “ப்பா.. நைன் மந்த்ல வச்சுக்கலாமே.. ” என்க..

 

வெங்கட்டின் முகம் வாடிவிட … மகனின் முக வாட்டம் பொறுக்காத பாட்டி தான்..

 

“ஏன் நிகிதா.. அப்படி சொல்ற.. இப்ப வச்சா என்ன..” 

 

“இல்ல கீரேனீ.. மாமா வந்த பிறகு வச்சிக்கலாமே…”

 

“அவன் தான் வரேனு சொல்லிட்டான்ல என் பேரன்  வந்திடுவான்..”

 

“பேக்டரி இப்ப தான் மூவ் ஆகுது.. அதையும் பார்க்கனும் நான் சென்னை எப்படி வர முடியும்..”

 

“வீரா வந்திடுவான்.. நான் இருக்கேன் பார்த்துக்கலாம்.. நாமளே இல்லைனாலும் ராகவாச்சாரி பார்த்துக்குவார். அப்படி உனக்கு வேணும்னா  வந்து கொஞ்ச நேரம் இருந்து பார்த்துட்டு வரலாம்.. நான் யோசிக்காமயா இதை எல்லாம் செய்வேன்” வெங்கட் சொல்ல.. வேற வழியின்றி அமைதியாக ஒத்து கொண்டாள்.

 

அடுத்தடுத்து வளைகாப்பிகற்கான வேலைகள் துரிதமாக நடக்க… வீராவுக்கு வேலையை முடித்து கொடுக்கும்  நெருக்கடி அதிகமானது. தூக்கம் தொலைத்து வேலை பார்க்க வேண்டிய சூழல் ஒரு புறம்…

 

தினமும் நிகிதா அவனிடம் கேட்கும் கேள்வி “வந்திடுவிங்க தான..” அவளுடைய நம்பிக்கை இல்லாத கேள்வி ஒரு புறம் அழுத்த.. ரொம்பவே சோர்ந்து போனான்.

 

வளைகாப்பிற்கு இரண்டு நாட்கள் முன்பே நிகிதாவிடம் சென்றுவிட வேண்டும் என நினைத்து வேலை செய்தவனால் வளைகாப்புக்கு முந்தின இரவு தான் வேலையை முடிக்க முடிந்தது.

 

அதற்கும் ஒரு வருட கான்ட்ராக்டில் இன்னும் நான்கு மாதம் இருக்க.. என்ன தான் ஏற்று கொண்ட ப்ராஜெக்டை முடித்து கொடுத்த போதும்.. அவன் ஊதியத்தில் முப்பது சதவிதத்தை லாஸ்ஆப் பேவாக இழக்க வேண்டி இருந்தது. அவன் அதை எல்லாம் கூட பெரிதாக நினைக்கவில்லை. 

 

வளைகாப்பு அன்று காலையில் தான் விமானமே ஏறினான். வர தாமதமாகும் என்பதை யாரிடமும் சொல்லவும் இல்லை. விமானம் ஏறும் முன்பு தான் தனது தந்தைக்கும் தாத்தாவிற்கும் அழைத்து சொன்னான். நிகிதாவிடம் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டான்.

 

 வெங்கட் குடும்பம் முன்தினமே வீரா வீட்டிற்கு வந்து விட்டனர்.காஞ்சிபுரத்தில் பெரிய மண்டபம் பார்த்து சமையலுக்கு சிறந்த கேட்டரிங்..  ஸ்டேஜ் அலங்காரம்… வரும் விருந்தினர்களுக்கு வளையல் வெற்றில பாக்குடன் ஸ்வீட் வைத்த எவர்சில்வர் டப்பா அடங்கிய கிப்ட் பேக் என எல்லாவற்றையும் சிறப்பாக செய்திருந்தார் வெங்கட்.

 

காலையில் எழுந்ததும் வீராஇன்னும் வரவில்லை என அவனின் எண்ணிற்கு தொடர்பு கொள்ள.. அது சுவிட்ச்ஆப்னு வர.. நிகிதா மனம் சோர்ந்து போனாள். எதிலும் ஒரு ஆர்வம் இல்லாமல் இருக்க.. வீட்டினர் தான் வீரா வந்துவிடுவான் என சொல்லி தேற்றி கொண்டு இருந்தனர்.

 

 மங்களம் பாட்டி தான் வழக்கம் போல் நிகிதாவை உருட்டி மிரட்டி கொண்டு இருந்தார். 

 

“போ நிகிதா.. போய் குளிச்சிட்டு வா.. நல்ல நேரத்தில் மண்டபத்திற்கு கிளம்பனும்”

 

நிகிதா குளித்து வரவும் அய்யாவு அவள் கையில் ஒரு பட்டு புடவை கொடுத்து கட்டிக் கொள்ள சொன்னார்.

 

நல்ல ஆலிவ் பச்சையில் செல்ப் பார்டர் வைத்து.. பார்டரில் சின்ன குழந்தை பிறந்து நடை பயிலும் வரை படங்களாக இருக்க நடு நடுவே வீரா நிகிதா பேரும்  முந்தானையில் நிகிதா ஒரு குழந்தையை கையில் ஏந்தி இருக்க.. வீரா நிகிதாவையும் குழந்தையையும் அணைத்தாற் போன்ற படம்  சரிகை வேலைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில்  வீராவின்  நிகிதாவின் படம்  தத்துரூபமாக நெய்யப்பட்டு இருந்தது.

 

புடவையை வீட்டினர் ஆச்சரியமாக விரித்து பார்த்தனர். நிகிதாவிற்கே ஆச்சரியம் தான். அவர்கள் பட்டறைக்கு டிசைனர் அவள் தான். அவள் செய்து கொடுக்கவில்லை. அய்யாவுவிடம் அதை கேட்கவும் செய்தாள்.

 

“மாமா இது யார் டிசைன் பண்ணியது.. நம்ம தறியில் தயாரனதா..”

 

“என் மகன் உனக்கு கொடுத்த பரிசு..அவன் ப்ரண்ட்கிட்ட  இப்படி டிசைன் பண்ணி தர சொல்லி.. என் கையால நானே என் மருமகளுக்கு நெய்த புடவை..”என சொல்ல..

 

கணவன் மற்றும் மாமனார் அன்பில் நெகிழ்ந்து போனாள். கணவனை மனதிற்குள் செல்லமாக திட்டி கொண்டாள்.

 

‘கருவாயனுக்குள்ள ஒரு காதல் மன்னன் இருப்பான் போல இருக்கே..பார்டா எப்படி எல்லாம் யோசித்து டிசைன் பண்ணியிருக்கான். ஆனாலும் கருத்த மச்சான் கிரேட் தான்.. ஆனால் மவனே எனக்கு வளையல் போட நீ வரலை.. கதம் கதம் தான்’ 

 

அவள் கணவனின் பரிசான சேலையை அழகாக உடுத்தி அதற்கு ஏற்ற நகைகள் அணிந்து தன் மேடிட்ட வயிறை தாங்கி தேர் போல அசைந்து நடந்து வர.. அழகாக இருந்தது. உலக அழகிகள் கூட சூழ் கொண்ட தாயின் அழகிற்கு ஈடில்லை தான்.

 

மண்டபத்தில் நல்ல நேரத்தில் வளைகாப்பு தொடங்க.. மங்ளம் பாட்டி தான் முதலில் சந்தன நலுங்கிட்டு வளையல் போட்டு அட்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணி ஆரம்பித்து வைக்க.. அவரை தொடர்ந்து விசாலா ரோஹிணி பொன்னி.. ஏன் ஆரா கூட அக்காவிற்கு அழகாக வளையல் அணிவித்தது. நிகிதா வீராவின் வருகையை எதிர்பார்த்து வாசலையே பார்த்து கொண்டு இருந்தாள். 

 

சுமங்கலி பெண்கள் ஆசிர்வதிக்க.. கைநிறைய வளையலுடன் கன்னத்தில் சந்தனம் மினுங்க.. தேவதையாக இருந்த நிகிதாவை  அனைவரும் ரசித்தனர். கொண்டவனுக்கோ அந்த கொடுப்பினை வாய்க்கவில்லை.

 

இதற்கும் தன் சொந்த பந்தங்கள் நட்பு வட்டங்கள் தொழில் துறையை சார்ந்தவர்கள் என அனைவரையும் அழைத்து கோலகலமாக தான் செய்திருந்தார் வெங்கட்.

 

வளைகாப்பு முடியும் தருவாயில் கூட வீரா வரவில்லை எனவும்.. நிகிதாவின் கண்களில் நீர் நிறைந்து விட … வீட்டினர் அருகில் வந்து அவளை சூழ்ந்து கொண்டு சமாதானம் செய்தனர். மனமே இல்லாமல் அவளுக்காக அவளுக்கு பிடித்த உணவுகள் மெனுவில் இருக்குமாறு வெங்கட் செய்ய சொல்லியிருக்க.. அவள் அதை கூட சரியாக சாப்பிடவில்லை. 

 

அவளின் மனமறிந்து அவளை வற்புறுத்தவில்லை. எல்லாம் நல்லபடியாக முடிந்து சென்னைக்கு காரில் ஏறும் வரை நிகிதா வீராவை எதிர்பார்த்தாள். மனமே இல்லாமல் சென்னை கிளம்பி சென்றாள்.

 

மனதின் சோர்வு உடலையும் சோர்வாக்க.. போனதும் தன் அறைக்கு சென்று உடை மாற்றி படுத்துவிட்டாள். எப்பொழுதும் வீரா படுக்கும் இடத்தில் அவன் தலையணையில்  தலை வைத்து படுத்து கொண்டாள்.

 

படுத்து கொண்டே  கண்களால் அறையை நோட்டம் விட்டவளுக்கு.. தன் கருவாயனோடு தேடல் கொண்டு.. கூடல் கொண்டு.. காதலை சுகித்து.. களிப்பில் கழித்த இராப் பொழுதின் பொல்லா நினைவுகளை அசை போட்டு கொண்டு இருந்தாள். 

 

ரோஹிணி இரவு உணவை நிகிதாவின் அறைக்கே கொண்டு வர.. சாப்பிட பிடிக்காமல் மறுக்க..

 

“நிக்கி பேபி.. உனக்காக இல்லாட்டாலும் உன் பேபிக்காக நீ சாப்பிடனும்டா..” ஊட்டி விட தாயின் கையில்  உணவு கூட சுவையாக இருக்க.. நன்றாகவே சாப்பிட்டாள்.

 

அன்றைய  விழாவினால் உடல் சோர்ந்து இருக்க.. மனதின் அலைப்புறுதலும் சேர்ந்து கொள்ள.. வயிறு நிறைய கண்களை சுழட்டி கொண்டு வர.. சாப்பிட்டவுடன் உறங்கிவிட்டாள்.

 

வீரா வரும் போது நல்ல உறக்கத்தில் நிகிதா இருக்க.. நிகிதாவை பார்க்க.. சென்னை வந்து  இறங்கியவன் தாமரையூர் செல்லாமல்.. நேராக நிகிதாவிடம்  வந்துவிட்டான்.

 

மேடிட்ட வயிறு சற்றே சரிந்திருக்க.. நிகிதா  கால்களை நீட்டி படுத்திருக்க.. அவளுக்கு நேர் எதிரே அவள் கால்பக்கம் கட்டிலின் முன்  மண்டியிட்டு அமர்ந்தவன்.. பாதங்கள் இரண்டையும் தன் இரண்டு உள்ளங்கை கைகளில் ஏந்தியவன் முன் பாதத்தில் இரண்டிலும் முத்தமிட்டான். முத்தத்தோடு இரண்டு சொட்டு கண்ணீரும் கலந்து.. நிகிதாவை சிலிர்க்க வைக்க.. தூக்கம் கலைந்து கண்விழித்து பார்த்தவள் கண் எதிரே வீராவை காணவும்..

 

“மாமா.. வந்திட்டிங்களா..” என அடித்து பிடித்து எழ.. வீரா பதறி போய்..

 

“ஏய் அமுல் பேபி.. பார்த்து மெதுவாடி..” என அருகில் சென்று அவளை தாங்கி கொள்ள.. 

 

“ஏன் காலையிலேயே வரல..” என அவனை சரமாரியாக அடிக்க.. அத்தனை அடிகளையும் சுகமாக வாங்கி கொண்டான்.அவளின் தொடுவுணர்வை கண்மூடி அனுபவித்தான். 

 

அடித்து ஓய்ந்து போய் அவன் தோளில் சாய்ந்து அழ.. அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து அணைத்து கொண்டான்.

6 thoughts on “24 – புயலோடு பூவுக்கென்ன மோகம்”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top