1 – கன்னம் கொண்ட கள்வனே
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள சில்லாங்குடி எல்லையை அந்த கார் தொடும் போது மணி நள்ளிரவு பன்னிரண்டு. காரை ஓட்டி கொண்டி இருந்த சஞ்சய் “டாட் இந்த ஊர் தான…. நேம் போர்டு நல்லா பார்த்துட்டு சொல்லுங்க..” என்க
அவன் அருகில் உட்கார்ந்து இருந்த ராஜப்பா எரிச்சலோடு “இந்த ஊர் தான்” என்றார்.
அவருக்கு அந்த ஊருக்கு வர இஷ்டமில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த உஷாவைப் பார்த்து சஞ்சய் முறைக்க… அவளோ கண்களால் அமைதியா இரு என சொல்ல…. அவனும் ஏகப்பட்ட கோபத்தில் இருந்தான். அவனும் தான் என்ன செய்வான். சஞ்சய் இப்ப தான் தமிழ்நாடு முதல் தடவையாக வருகிறான். பெங்களூரில் இருந்து மதியமே புறப்பட்டனர். முதல் தடவை என்பதால் பகலிலேயே ஊர் போய் சேருமாறு பயணம் வைத்து கொள்ளலாம் என சஞ்சய் சொன்னான். ஆனால் ராஜப்பா தான் கேட்கவில்லை. ஒன்பது மணி நேர பயணத்தை நள்ளிரவு அவரை இழுத்து விட்டு விட்டார்.
மதிய உணவை முடித்து கொண்டு கிளம்பினால் போதும் என்று விட்டார். வீட்டில் அவர் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை யாரும் மீறமுடியாது. மீறகூடாது. மீறினால் கோபப்பட்டு சண்டை போட்டு ஏகப்பட்ட ரகளை செய்து வீட்டினரை ஒருவழியாக்கி விடுவார். அவ்வளவு வீம்பு பிடித்தவர். எதற்கு வம்பு என பெரும்பாலும் அவரோடு ஒத்து போய்விடுவர். இன்றும் அவர் பேச்சிற்கு கிளம்பி இருக்க… ஒன்பது மணி நேர பயணத்தை நள்ளிரவு வரை பயணம் நீளுமாறு செய்துவிட்டார்.
அவரும் என்ன தான் செய்வார். அவர் பிறந்து வளர்ந்த ஊர் தான். ஊருக்கும் அவருக்குமான தொடர்பு விட்டு போய் முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்கள் கழித்து அவர் வர வேண்டிய கட்டாயம். அதனால் வேறு வழியின்றி வருவதால் மிகுந்த எரிச்சலில் இருந்தார்.
துறையூர் வரும் வரை கூகுள் மேப் உதவியோடு வண்டியை ஓட்டி வந்த சஞ்சய்கு துறையூர் தாண்டிய பிறகு கொஞ்ச கொஞ்சமாக சிக்னல் குறைந்து முற்றிலுமாக கட் ஆகிவிட… ராஜப்பாவிடம் கேட்க.. அவரும் என்ன தான் செய்வார். இத்தனை வருடங்களில் நிறைய மாற்றங்கள்… தெரியாமல் தப்பு தப்பாக வழி சொல்ல.. ஊர் வந்து சேர நள்ளிரவு ஆகிவிட்டது. ஆனால்அந்த ஊர் பெரிதாக மாறவில்லை. அதே மண்சாலை… அங்கொன்றும் இங்கொன்றுமாக தெருவிளக்குகள்.. வெகு சில வீடுகள் மட்டுமே ஓட்டு வீட்டில் இருந்து ப்ரோமஷனாகி தார்சு வீடுகளாக மாறி இருந்தன.
அவர் வீடும் தார்சு வீடாக மாறியிருக்க… பாவம் ராஜப்பாவிற்கு அவர் வீடே அடையாளம் தெரியவில்லை. வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. பின்னே முப்பது வருடங்களுக்கு முன் ஓடிப் போனவரை.. அப்படி தான் அந்த ஊர் சொல்லி கொண்டு இருக்கிறது. அவரை பார்க்கவே ஊரே திரண்டு இருந்தது.
முதலில் ராஜப்பா காரில் இருந்து இறங்கவும் அவரின் அம்மா வேலம்மாள் ஓடி வந்து கட்டி பிடித்து ஒப்பாரி வைக்க… ராஜப்பா முகம் சுழித்தபடி அமைதியாக நின்றார்.
பக்கத்தில் இருந்த தயாநிதியிடம் செந்தில் “டேய் தயா… உங்க மாமனுக்கு ஏத்தத்தை பார்த்தியாடா… உங்க ஆச்சி கட்டி பிடிச்சு அழுவுது அந்தாளு அப்படியே ஜடமாட்டம் நிக்கறாரு…”
இவர்களை சுற்றி இருந்த இளவட்டங்கள் செந்திலின் பேச்சை ஆமோதிக்க…. தயாநிதியும் தலை அசைத்து…
“டேய் மச்சி… அந்தாளு ஒரு எடக்கு தான்னு எங்கப்பாரு எப்பவும் சொல்வாரு..இத்தன வருச கழிச்சு சாதி சனத்தை பார்க்கறமேனு ஒரு சந்தோசம் தட்டு படுதா பாரு என் மாமன் மூஞ்சில… எங்க ஆச்சி தான் இந்தாள நினைச்சு தினவுக்கு அழுவும்…”
வரை
“அடநீ வேற மாப்பி உன் மாமனுக்கு சாதிசனத்து மேல பத்திருந்தா… இப்படியா முப்பது வருசம் பரதேசம் போயிருப்பாரு..”
“க்கும்.. அத சொல்லு மொத..” என தயாநிதி இழுக்க…
“வேலா… வராதவ வந்திருக்கான் வாசல்லயே வச்சு பேசி அனுப்பிடுவியா..” என சத்தம் போட்டார் முத்தையா…
“இல்லங்க மச்சான்.. காணாத மவன கண்டதுல செத்த வெசனமாயிடுச்சு…” முந்தானை தலைப்புல முகத்தை துடைத்தவாறே…
“உள்ளார வா ராசா.. நீ மட்டும் தான் வந்தியா… உன் வீட்டாளுங்கள எல்லாம் கூட்டியாரலயா…”
ராஜப்பாவும் நடுநிசியில் இவ்வளவு கூட்டத்தை பார்க்கவும் மிரண்டு விட்டார். இதில் தன் அம்மா அழுகவும் தன் குடும்பத்தையே மறந்துவிட்டார். அம்மா சொல்லவும் நினைவு வந்தவராக திரும்பி பார்க்க.. அவர்கள் பயந்து போய் காரை விட்டே இறங்கவில்லை..
ராஜப்பா திரும்பி “சஞ்சய்” என்ற அழைக்க..
சஞ்சய்யும் உஷாவும் காரில் இருந்து இறங்க… உஷாவைப் பார்த்து மொத்த ஊரும் வாயை பிளந்து நின்றது. நல்ல சிவந்த நிறம். மாசு மருவற்ற முகம்.. நெடு நெடுவென.. எங்கும் அதிக சதைபிடிப்பு இல்லாத தேகம்… இடுப்பு வரை நீண்ட கூந்தல்… என அந்த மக்களுக்கு உலக அழகியாகவே தெரிந்தாள். சிறுசுல இருந்து பெருசு வரை அவரை நன்றாக சைட் அடித்தது. அதிலும் தயாநிதியோ பார்த்ததும் மயங்கி போனான்.
அவர்களை தன் அருகே வருமாறு கை அசைத்தவர்.. தன் அருகே அவர்கள் வரவும் தன் அம்மாவிடம் “என் பொண்டாட்டி.. மகன்..” என அறிமுகப்படுத்த..
‘என்னது பொஞ்சாதியா…’ என ஊரே அதிர்ந்து போனது. தயாநிதியோ நெஞ்சை பிடித்து கொண்டு மரத்தின் மீதே சாய்ந்துவிட்டான். கருத்த.. பெருத்த.. வாட்ட சாட்டமான தேகம் கொண்ட ராஜப்பாவிற்கு உஷா மகள் போன்ற தோற்றத்தில் தான் இருந்தார்.
“மாப்பி.. என்னாச்சு..” என செந்தில் கேட்க…
“அத்தையாம்டா..”
“ஆமாம் டா மாப்பி.. உன் மாமன் ஏதோ திருகுதாளம் பண்ணி உங்கத்தைய கட்டிபுட்டாருனு நினைக்கேறேன்டா…”
“இருக்கும் டா மச்சி… என் நெஞ்ச வெடி வச்சு தகர்த்துப் புட்டாருடா..”
“என்ன மாப்பி சொல்லற..”அவனை விநோதமாக பார்க்க…
“என் மாமன் மவளா இருக்கும்… நாலஞ்சு வருசம் மூத்து இருந்தாலும் கயிறு கட்டி போட்ருலாம்னு இருந்தேன்டா…” என்றான் அசாலட்டாக..
“என்னாது.. கயிறுகட்டி போட்றலாம்னு இருந்தியா… அடேய் வீக் பாடிடா பொட்டுனு போயிட போறேன்.. எதுனாலும் சொல்லிட்டு செய்யு..” என்றான் செந்தில் நெஞ்சை நீவியபடி..
ராஜப்பா உஷாவிடம் “மகிழா எங்க..” என்று கேட்க…
“கார்ல தூங்கிட்டு இருக்கா.. இதோ கூட்டிட்டு வரேன்..” வேகமாக காரை நோக்கி சென்றார்.
“ஏய் மகி எந்திரி..” என உலுக்கி எழுப்ப…
“ம்மா…இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ்… “ கண்களை திறக்காமலே..
சுற்றியுள்ளவர்கள் இவர்களையே பார்க்க உஷா சங்கடமாக உணர்ந்தார்.
“மகி எழுந்திரு மொதல்ல..” என தோளில் இரண்டு வைக்க.. சுரீரென விழுந்த அடியில் தோளை தடவிக் கொண்டே எழுந்தவள்.. சுற்றிலும் பார்வையை ஓட விட்டவள்..
“ஊர் வந்திடுச்சா..” என உடலை நெளித்து சோம்பல் முறிக்க…
இவ ஒருத்தி நேரங்காலம் தெரியாம பண்ணிட்டு இருக்கா.. “எந்திரிச்சு வாடி” என கையை பிடித்து இழுக்க…
“விடுங்கம்மா வரேன்” என கையை உருவி கொண்டு காரை விட்டு இறங்கியவள் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து பயந்து உஷாவின் கையை பிடித்து கொண்டாள். பயத்துடன் தாயை ஒட்டி கொண்டே நடந்தாள்.
தன்னருகே வந்த மகளை “இது என் மக மகிழா..” என அறிமுகப்படுத்தினார்.
மகிழா காரில் இருந்து இறங்கி செல்பவளையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருந்தான் தயாநிதி.
மகிழா தாயை கொண்டு பிறந்தவள். ஆனால் உஷா போல இல்லாமல் சற்று பூசினாற் போல இருப்பாள். மகிழாவையே பார்த்து கொண்டே இருந்த தயா…. நினைத்தது இது தான் எங்கத்த போல இவ இல்லைனாலும்… சும்மா பால் பன்னு மாதிரி கும்னு இருக்கா…
“என்னடா மாப்பி… உன் பார்வை சொல்ற சேதி ஒன்னும் சரியாப்படலயே..”
“விடுடா மச்சி.. இவ நமக்கு செட்டாகமாட்டா…”
“அப்படிங்கற…” என்றான் நம்பாத பார்வையுடன்..
“அப்படி தாங்கறேன்.. “ என்றான் தலை அசைத்து..
அறிமுகப்படலம் எல்லாம் முடிந்து கொஞ்ச நேரம் பாசப் போராட்டங்கள் எல்லாம் முடிந்ததும் முத்தையா ஊராரைப பார்த்து..
“எல்லாம் போயிட்டு காலைல வந்து விசாரிச்சுக்கலாம்..கிளம்புங்க..” என்றார்.
சஞ்சய்யும் மகிழாவும் இன்னும் காலையில் வேறயா… என ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபமாக முழித்தனர். இப்போ தான் பெரியப்பா பெரியம்மா அத்தைகள் தாத்தா பாட்டி என நல விசாரிப்புகள் முடிந்தது.
அந்த ஊரில் உறவுக்குள் தான் கல்யாணம். அந்த ஊரில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டால் மூன்று மாத்த்திற்கு பிறகு அந்த பெண்ணின் மேல் விருப்பமுள்ள முறைப்பையன் கோவிலிலோ.. பள்ளிக்கு போகும் வரும் வழியிலோ… பார்க்கும் இடத்தில் மஞ்சள் கிழங்கு வைத்த மஞ்சள் கயிறை மூன்று முடி போட்டு தயாராக வைத்திருக்கும் கயிறை அப்பெண்ணின் கழுத்தில் போட்டு விட்டால் அந்த பெண்ணுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அவனோடு தான் கல்யாணம். கயிறு போட்ட சில மாத்த்திற்குள் திருமணம் செய்து வைத்து விடுவர். பகை வஞ்சம் போன்ற காரணங்களால் சில பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டதால்… பெண்கள் பருவம் அடைந்த பிறகு பெரியவர்கள் பார்த்தது முறைப் பையன்களில் ஒருவருக்கு நிச்சயம் செய்துவிடுவர். அப்படி நிச்சயம் செய்து விட்டால் அந்த பெண்ணை வேறு பையன்கள் தவறான நோக்கில் பார்க்க மாட்டார்கள்.
ராஜப்பாவின் குடும்பம் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். அறைக்கு வந்ததும் ராஜப்பா…
“ஆட்டு மந்தை கூட்டம்… இதுக்கு தான் இந்த ஊருக்கு வரவே கூடாதுனு நினைச்சேன். நான் சொல்லறத யார் கேட்டா.. வந்த வேலையை முடிச்சிகிட்டு சீக்கீரம் கிளம்பிடனும். அது வரைக்கும் தேவை இல்லாம யார்கிட்டயும் பேசற வேலை வச்சுக்காதிங்க…” என குடும்பத்தினரை மிரட்டி விட்டு படுத்துக் கொண்டார்.
ஊரில் இருந்து கிளம்பியதில் இருந்து இப்படி தான் ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார். மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பெருமூச்சு விட்டவாறே படுத்தனர். காலையில் உஷா தான் முதலில் எழுந்தார். என்ன செய்வது என தெரியவில்லை. ராஜப்பாவை பார்த்தால் அவர் இன்னும் தூங்கி கொண்டு இருந்தார். காலையில் எழுந்ததும் அவருக்கு குளித்து பூஜை செய்ய வேண்டும். புது இடம்.. தெரியாத மனிதர்கள் என்ன செய்ய என தெரியவில்லை. ராஜப்பா எழுந்து விடுவார் என பார்க்க.. அவர் எழுந்திருப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.
super starting sis