பாவை 2
ஒரு காலத்தில் கிருஷ்ணா கொடுக்கும் பஞ்சு மிட்டாய் முத்தத்திற்கு ஏங்கிய ஜானவியோ இன்று அவன் கொடுக்கும் வலுக்கட்டாய முத்தம் அவளுக்கு பாகற்காய் கசப்பை உண்டாக்கியது. தன் பலத்தை திரட்டி அவன் மார்பில் கையை வைத்து தள்ளி விட அவனோ மோகத்தில் இருந்தாலும் தரையில் கையை ஊன்றி சுதாரித்து எழுந்தவன் “என்னடி கொழுப்பா என்னோட முத்தம் உனக்கு பிடிக்கலையா தள்ளி விடற” என்று அவளது கன்னத்தை அழுந்தப்பற்றினான்.
அவளோ அவன் மேல் கொலைவெறியுடன் இருந்தவள் “ஆமாடா எனக்கு உன்னோட முத்தம் அறுவெறுப்பா இருக்கு! இப்போ எனக்கு எதுக்குடா முத்தம் கொடுத்த நமக்குத்தான் எந்த உறவுமுறையும் இல்லையே! உன்னோட ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு தலைமுழுகிட்டு வந்துட்டேனே! எதுக்கு நாயே என் பின்னாடி வந்து என்னை டார்ச்சர் பண்ணுற?” என்று அவன் கலைந்து விட்ட தன் ஆடையை சரிசெய்த படியே அவனை முறைத்துக்கொண்டே ஆங்காரமாய் எழுந்து நின்றாள்.
அவளுக்கு முன்னே மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டிருந்தவன் அவள் கோபத்தை துட்சமாய் எண்ணி தலையை அழுந்தக்கோதிக்கொண்டவன் “ஏய் நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன்! இப்ப நீ என்கூட கனடா வந்துடு! நாம மறுபடியும் ஒண்ணா இருக்கலாம்” என்றான் அவனின் திமிர் கொஞ்சம் அடங்காமல்.
அப்போதும் கூட இருவரும் திருமணம் செய்து சேர்ந்து வாழலாம் என்று கூறாமல் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேசியதும் அவளுக்கு இன்னுமே மூக்கு சிவந்து கோபம் வந்தது.
“இப்ப கூட உன்னை கல்யாணம் பண்ணிக்குறேனு உறுதி வார்த்தை கொடுக்காம ரெண்டு பேரும் ஒண்ணா வாழலாம்னு கூப்பிடற.! நான் என்ன வேசியா? நீ நினைச்சவுடன் உன் கூட படுக்கறதுக்கு?” என நெஞ்சுக்கூடு ஏறி இறங்க ஆத்திரத்தில் வார்த்தைகளை தீ பொறி போல பறக்க விட்டாள்.
“ஏய்இஇ” என்று அவள் கன்னத்தில் அடிக்க கையை ஓங்கியவன் அவளின் கோப பார்வையில் கையை சுவற்றில் ஓங்கி குத்தியவன் “உன்னை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது ஆனா எனக்கு நீ வேணும் வந்துடு அவ்ளோதான்” என்றான் தெனாவெட்டு குறையாமல். ஏதோ சினிமாவுக்கு போகலாம் வா என்று சாதாரணமாக அவளை அழைத்தான்.
“சாரி மிஸ்டர் கிருஷ்ணா இனிமே நீங்க கூப்பிட்டாலும் என்னால வரமுடியாது. எனக்கு நெக்ஸ்ட் மன்த் கல்யாணம்” என்று அவள் பேக்கிலிருந்த இன்விடேசனை எடுத்து கிருஷ்ணாவிடம் நீட்டினாள் திமிர் பார்வையுடன்.
அவள் பத்திரிக்கை நீட்டியதும் அவன் உச்சி முடி நடுக்கொண்டு நிற்கும் அளவிற்கு கோப வேட்கை கொண்டவன் அவள் கையிலிருந்த பத்திரிக்கையை வாங்கி சுக்கு நூறாக கிழித்து டஸ்ப்பினில் போட்டு “நான் உன் கல்யாணத்தை நடக்க விடமாட்டேன்டி!” என்றான் அனல் தெறிக்கும் பார்வையுடன் அவளின் முன் விரலால் சொடக்கு போட்டான்.
“முடிஞ்சா நிறுத்திப்பாருடா” என்று அவளும் அவனுக்கு சரிசமமாக வாதாடினாள்.
“நான் நினைச்சதை நடத்தி முடிப்பவன் உனக்கு தெரியும்லடி” என்றான் கண்ணைச் சுருக்கி தாடையை தடவிக்கொண்டு எகத்தாளத்தோடு
அவளுக்குள் கருக்கென்று பயம் இருந்தாலும் அவன் முன் காட்டாது “முடிஞ்சதை பார்த்துக்கோடா உன் முன்னால நான் வாழ்ந்து காட்டுவேன்டா” என்று அங்கே நிற்க கூட பிடிக்காமல் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு கதவு திறக்க போக கதவை திறக்க முடியவில்லை. ரிமோட்டால் லாக் போட்டிருந்தான்.
இவனை நம்பி நாம ஒரு நிமிசம் கூட இங்க இருக்க கூடாது என்ன வேணாலும் செய்வான் கிராதகன் என்று வேகமாய் திரும்பியவள் “கதவை திறந்து விடுடா எருமை மாடு” என்றாள் எரிச்சலாக.
“இந்த ரூம் கதவை திறந்து போவதற்கே என்னோட உதவி இல்லாம உன்னால போக முடியல. நீ எப்படி என்னோட அனுமதியில்லாம இன்னொருத்தனை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் லட்டு?” என்று குரலை குழைந்து பேசியபடி அவள் பக்கம் வந்தவன் அவளை அணைக்க போக தீயை சுட்டாற் போல விலகி நின்றவள் “நா.நான் இன்னொருத்தருக்கு சொந்தம் ஆகப்போறவ நீ என்னை தொ.தொடாதே” என்று கடுப்பில் அவனிடமிருந்து துள்ளி விலகி நின்றாள்.
“நீ வேற ஒருத்தருக்கு சொந்தம் ஆகப்போறியா நீ எனக்கு மட்டும் சொந்தம் ஆனவ! எப்படி உன்னை வேற ஒருத்தனுக்கு உன்னை கொடுக்க மனசு வருமா? நான் தொட்ட இடமெல்லாம் அவனும் தொடுவான்ல அப்ப உனக்கு என் ஞாபகம் வராதா லட்டு?” என்று கன்னத்தில் நாக்கை கடவாயில் சுழட்டிக்கொண்டு அவள் கூசிப்போகும் அளவிற்கு கீழ்த் தரமாக பேசினான்.
எவ்வளவு உறுதியான பெண் ஆனாலும் அவன் கேட்ட கேள்விக்கு கொஞ்சம் மனம் தடுமாறித்தான் போவாள். அழவே கூடாது என்று தீர்மானித்திருந்தவளுக்கு இப்போது கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அவள் மனம் அனலிட்ட புழுவாய் துடித்தது.
கிருஷ்ணாவின் சட்டையை இழுத்து பிடித்தவள் “ஹான் நான் உன்னோட இருந்த நாட்கள் எல்லாம் மறந்துட்டேன்டா! இடியட்! நீயும் என்னை மறந்துடு! நான் அஜய் கூட வாழலாம்னு முடிவு எடுத்திருக்கேன் என்னோட பாஸ்ட் வாழ்க்கையை பற்றி அஜய்கிட்ட சொல்லியிருக்கேன் எனக்கு கூச்சம் கிடையாது!” என்று கண்ணில் கண்ணீருடன் அவள் கண்களை உற்று நோக்கியபடியே பேசினாள்.
“ஓஓ உன்னோட அவனுக்கு எல்லாம் தெரியுமா அப்போ அவனும் உன்னை போல ஒருத்தி கூட வாழ்ந்துட்டுதான் வந்திருப்பானோ! கூட்டி கழிச்சு பார்த்து கணக்கு சரியாகிடும் இல்ல” என இதழை வளைத்து சிரித்தான் கிருஷ்ணா.
“டேய் ஏன்டா நான் உன் கூட வாழமாட்டேன்னு சொன்னதுக்கு ஒரு நல்ல மனுசன் மேல அபாண்டமாக பழி போடுற நீயெல்லாம் மனுசனா இல்ல மிருகமாடா! இங்கிருந்து ஒழுங்கா போயிடு உன்கிட்ட இருக்க பணத்தை தூக்கி போட்டா நிறைய பொண்ணுங்க உன் காலுல வந்து விழுவாங்க! என்னை ஏன் டா டார்ச்சர் பண்ணுற! என்னை வாழ விடுடா” என்று அவனது நெஞ்சில் அடிக்க துவங்கினாள் அழுகையோடுதான்.
“நான்தொட்ட பொருளை யாரும் தொட விடமாட்டேன் அப்படிதான் நீயும்” என்றான் தோளைக்குலுக்கி கொஞ்சம் கூட கில்டி ஃபீலிங்க்ஸ் இல்லாமல்.
“அப்படியா நான் அஜய் கூட வாழத்தான் போறேன்! அஜய் என் கழுத்துல தாலி கட்டிய பிறகு நான் அடுத்தவனோட பொருள் நீ தொட முடியாது உனக்கு அடுத்தவன் பொருளை தொடப்பிடிக்காதே” என அவனை வெறுப்பேற்றினாள்.
“அப்போ நீ என்னோட வாழ்ந்ததை உன் அம்மாகிட்ட சொல்வேன்டி” என்று அவளை தாக்கும் பிரம்மாஸ்திரத்தை அவள் மேல் தொடுத்தான்.
“ஏன்டா என்னை வாழவும் விடமாட்டேன்கிற சாகவும் விடமாட்டேன்கிற!” என்று கதறியவளுக்கு பேச்சு வராமல் தொண்டையை அடைத்துக்கொண்டது. அவள் அவனுடன் வாழ்ந்ததை வாணியிடம் மறைத்து வைத்திருக்கிறாள் மகள் கற்பை ஒருவனிடம் ஒப்படைத்து வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் வாணி உயிரை விட்டு விடுவாரென அவள் தன்னை பற்றிய உண்மைகளை தாயிடம் மறைத்து வைத்திருந்தாள்.
“என்ன லட்டு இப்ப என்னோட வரியா இன்னிக்கு நைட்டே கனடா போகலாம்! இப்பவே நான் உன் அம்மாகிட்ட வந்து பேசுறேன் உங்க பொண்ணை என்னோட அனுப்பி வைங்கனு” என்றான் கழுத்தை தடவிக்கொண்டு சர்வ சாதாரணமாய்.
“டேய் உன்னை கையெடுத்து கும்பிடறேன் என் அம்மாகிட்ட வந்து எதையும் பேசி தொலைக்காதே அவங்க பூஞ்சை மனசுக்காரவங்க” என்றவளோ அங்கே நிற்பது கூட ஆபத்து என்று உணர்ந்தவள் அவன் கையிலிருந்த ரிமோட்டை வாங்கி கதவை திறந்து வேகமாய் ஓடினாள்.
ஆபிஸ் நேரம் முடிந்து அனைவரும் சென்றிருக்க அவளுக்கு வசதியாக இருந்தது. கேபில் ஏறியவளுக்கு அழுகையாகவே வந்தது. எதற்கும் கலங்கி அழாதவள் இன்று அவளை கதறி அழுக வைத்துவிட்டான் ஈகோ நாயகன் வம்சி கிருஷ்ணா.
“லட்டு இப்போ என்கிட்ட இருந்து தப்பி ஓடி இருக்கலாம். ஆனா உன்னை என்கூட கனடா அழைச்சுட்டு தான் போவேன்… நீ எனக்கு சொந்தமான நிலம்… வேற யாரும் பட்டா போட முடியாது… போடவும் விடமாட்டான் இந்த வம்சி கிருஷ்ணா” என்றான் அழுத்தமான குரலில் குரூர புன்னைகையுடன்.
வாணியோ ஜானவிக்கு போன் போட்டு அழுத்து போய் விட்டார். ஜானவி வாணியின் போனை எடுக்காததற்கு காரணம் அவள் குரலை வைத்தே தான் அழுகிறோம் என்பதை கண்டு பிடித்து விடுவார் என்று போனை எடுக்காமலேயே ‘சாரி மா உன் பொண்ணு இழக்க கூடாததை இழந்து நிற்குறேன் உனக்கு தெரிஞ்சா நீ என்ன ஆகுவே! அந்த ஸ்டுபிட் நான் கிடைக்கலங்கிற காண்டுல உன்னை பார்க்க வந்துடுவானோனு எனக்கு பயமா இருக்குமா! என்னை மன்னிச்சுடுவியா! இல்ல உன் கையால என்னை கொன்னுடுமா’ என்று சுணங்கிபோய் மனப் போராட்டத்துடன் காரில் வந்தாள் ஜானவி.
மகளுக்காய் வாசலிலேயே தவம் கிடந்தார் வாணி. கேப் ஜானவியின் வீட்டின் முன்னே நிற்க கண்களை அழுந்த துடைத்துக்கொண்டு காரிலிருந்து இறங்கியவள் டிரைவருக்கு பணத்தை கொடுத்துவிட்டு வீட்டு வாசலுக்கு போக சரியாக கரெண்ட் கட் ஆனது.
“அப்பாடா” என்று நிம்மதிபெரும்மூச்சு விட்டாள் ஜானவி தான் அழுதது அம்மாவுக்கு தெரிய கூடாதென காரை இடையில் நிறுத்தச் சொல்லி வாட்டர் பாட்டில் தண்ணீரில் முகத்தை அடித்து அடித்து கழுவினாள். அப்போதும் அவளது முகம் வீங்கிபோனது மறையவில்லை. இப்போது கரென்ட் போனது கடவுளுக்கு என் மேல கருணை இருக்கு போல என்று விரக்தியாக சிரித்துக்கொண்டாள் ஜானவி.
வாணியோ “அடியேய் கல்யாணப்பொண்ணு 6 மணிக்குமேல வெளியே இருக்கக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல என் பேச்சு என்னிக்கு நீ கேட்டிருக்க! நாளையிலிருந்து நீ வெளியே போகக்கூடாதுடி! இனிமே போனா காலை உடைச்சு போடப்போறேன் பாரு” என்று செல்லமாய் கடிந்துக் கொண்டு அவளின் கையை பிடித்து வந்தார் வீட்டுக்குள்.
“ம்மா ப்ரண்ட்ஸ் கூட பேசிட்டிருந்தேன் அதான் லேட் ஆகிடுச்சு இன்னிக்கு மட்டும்தான்ம்மா! எனக்கு பசிக்குது தோசை சுடேன் குளிச்சிட்டு வரேன் உடம்பெல்லாம் டயர்டா இருக்குமா தலை வலிக்குது” என்று மகளின் சோர்வு குரலில் மனம் பதைபதைத்த வாணியோ “என்னாச்சுடி உடம்புக்கு முடியலையா ராத்திரி நேரம் வெளியே அலையக்கூடாதுனு பெரியவங்க சொல்லுவாங்க காத்து கருப்பு அண்டிரும்னு நாளைக்கே கருப்புசாமி கோவிலுக்கு கூட்டிட்டு போய் கயிறு கட்டணும்” என்று மகளின் கன்னத்தை தடவினார்.
‘ஆமா என்னை காத்து கருப்பை விட பெரிய பிசாசுதான் பிடிச்சிருச்சு விடாது கருப்பு போல’ என்று புலம்பினாள் தனக்குள்.
தான் ஒரு வார்த்தை பேசினால் ரெண்டு வார்த்தை பேசுகிற மகள் இன்று வாய் திறக்காமல் இருப்பது வாணிக்கு அச்சத்தை கொடுத்தது.
“அப்பா கருப்பண்ணசாமி என் மகளை காப்பாத்துங்க” என்று பூஜையறைக்குச் சென்று திருநீறை எடுத்து வந்து மகளின் நெற்றியில் பூசிவிட்டார் வாணி.
“அம்மா உன் மடியில படுத்துக்கட்டுமா?” என்றவளோ வாணியின் கையை பிடித்துக்கொண்டு அவளது அறைக்குச் சென்றவள் மெத்தையில் வாணியை உட்காரச் சொல்லி தாயின் மடியில் படுத்துக்கொண்டவளுக்கு ஏதோ பெரிய பாரம் இறங்கியது போல இருந்தது.
“என்னடியாச்சு யாராவது உன்னை ஏதும் சொன்னாங்களா இல்ல அப்பா ஞாபகம் வந்துடுச்சா! அம்மாவை விட்டு பிரியறோம்னு கவலை என் மகளுக்கு பாரமா இருக்கா. எதுவா இருந்தாலும் மனசுக்குள்ள போட்டு அழுத்தாம அம்மாகிட்ட சொல்லு தங்கம்” என்று மகளின் கவலை புரியாமல் அவளது தலையை வருடிக்கொண்டே இருந்தார் வாணி.
என்னவென்று சொல்வாள் பேதை பெண்! இராவணன் போல தன்னை சிறையெடுத்துச் செல்ல தயாராய் வந்திருப்பனை பற்றி எப்படி சொல்வாள் தாயிடம். சத்தமில்லாமல் உடல் குலுங்காமல் கண்ணீர் வடிக்காமல் மனசுக்குள்ளே மருகி அழுதாள் ஜானவி.
மகளுக்கு என்ன குறை வச்சோம் எல்லாம் பார்த்து பார்த்து செய்தோமே! என் பொண்ணு இன்னிக்கு வெயிலில் போட்ட வெத்தலை கொடி போல வாடி கிடக்குறாளே என்று பெரும் பாரம் ஏறியது வாணிக்கு.
மகளின் தலையை வருடிக்கொண்டே “ஜானு பொண்ணு அம்மா சும்மா விளையாட்டு உன்னை திட்டியிருப்பேன்! என்னை மன்னிச்சிடு தங்கம்! அஜய் தம்பி உன்னை கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குறதா எனக்கு பிராமிஸ் பண்ணியிருக்காருடி! நீ கவலையில்லாம இருடி ராஜாத்தி அம்மா உன்னை ஒரு நாள் விட்டு ஒருநாள் வந்து பார்க்குறேன்! எனக்கு உன்னை விட்டா வேற நாதி கிடையாது பொண்ணு” மகளின் முதுகை வருடிக்கொண்டே பேச்சுக் கொடுத்தார்.
ஜானவிக்கோ தன் தாய்க்கு பெரும் துரோகத்தை செய்து வந்துட்டேனே என வெடித்து அழவேண்டும் என்பது போல தோன்றியது. வாயை பொத்திக்கொண்டு நான்தான் உன் காலுல விழுந்து மன்னிப்பு கேட்கணும்! என்று சத்தம் இல்லாமல் விசும்பினாள்.
மகள் தூங்கிவிட்டாளென்று நம்பி சாப்பிடாம கூட தூங்கிட்டாளே என்ற கவலையுடன் ஜானவியின் தூக்கம் களையக்கூடாதென மெல்ல தன் மடியிலிருந்து பக்கத்திலிருந்த தலையணையில் படுக்க வைத்து பால் எடுத்து வரலாமென்று சமையலறைக்குச் சென்றார் வாணி.
தாய் சென்றதும் எழுந்து வந்து கதவை அடைத்துக்கொண்டு “அம்மா! அம்மா! உன் பொண்ணை ஒருத்தன் வாழவிடாம பண்ண வந்திருக்கான்மா நான் என்ன பண்ணுவேன்” என்று ஓவென்று கதறி அழுதாள் பெண்ணவள். அவளது நினைவுகள் இரண்டு வருடத்திற்கு முன்னேச் சென்றது.