பாவை 3
கனடாவுக்குச் சென்று வேலை பார்க்கணும் என்பது ஜானவியின் கனவு. இதோ முதல் நாள் வேலைக்குச் செல்கிறாள் அவள் தங்குவதற்கு வீட்டு வாடகைதான் அதிகமாக இருந்தது. வேறு ஏதாவது வீடு கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தாள். அவள் குடியிருக்கும் ஹவுஸ் ஓனர் ரொம்ப கெடுபிடியான ஆளாக இருக்க அந்த வீட்டு ஓனரை அவளுக்கு பிடிக்கவேயில்லை. அதுவுமில்லாமல் அவளாக சமைத்து சாப்பிடுவது பெரிய வேலையாக இருந்தது ஜானவிக்கு.
ஜீன்ஸ் டாப்புடன் முடியை கேட்ச் கிளிப் போட்டு ஆபிஸுக்கு கிளம்பினாள். இந்தியாவில் இருந்த போதும் அதிகாலையில் எழும் பழக்கம் கிடையாது அவளுக்கு. அவளது அறையில் துவைத்த துணிகளை கூட மடிக்க மாட்டாள். கபோர்டில் அடுக்கி வைத்த துணிகளை அவசரமாக எடுக்கும்போது கலைத்து போட்டு விடுவாள்.
‘சரியான சோம்பேறி பொண்ணா இருக்காளே!’ மகளை வசைப்பாட்டு பாடிக் கொண்டு வாணிதான் தினமும் அவளுடைய அறையை சுத்தப்படுத்தி வைப்பார்.
ஜானவியோ “நம்ம வீடு என்ன மீயூஸியமா..! எடுத்தது எடுத்த இடத்தில் வைக்கணும்னுகிறதுக்கு “என்று சொல்லி வாணியின் வாயை அடைத்துவிடுவாள்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு பெரியவர்கள் சும்மாவா சொல்லி வைத்தார்கள். கனடாவிலும் அவள் அறையில் பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கச முசாவென வைத்திருந்தாள். சமையல்கட்டில் நேற்று மாலை குடித்த காபி கப் கூட அடுத்த நாள் காலையில்தான் கழுவி வைக்கும் அளவிற்கு சோம்பேறி.
ஆபிஸிற்குள் அடி எடுத்து வைத்தவள் ரிசப்சனில் தன்னுடைய ஆஃபர் லட்டரை காண்பிக்க அந்த பெண்ணோ “ஹெச்ஆர் ராகவன் சாரை பாருங்க மேடம்” என்று அனுப்பி வைத்தனர்.
ராகவன் அறை முன்னேச் சென்றவள் “எக்ஸ்கியூஸ்மீ சார்” என்று கதவை நாக் செய்தாள்.
“எஸ் கம் இன்” என்ற கரகரப்பான குரலுடன் அழைப்பு வந்தது.
“வயசான ஆளா இருப்பாரோ போய் பார்ப்போம்” என்று மெல்லிய சிரிப்பை உதிர்த்துச் சென்றாள்.
பெரிய மூக்கு கண்ணாடியும் குண்டான உருவமும் காதோரத்தில் நரைமுடியும் 40 வயதை தொட்டு விடக்கூடிய ஆளாக உட்கார்ந்திருந்தான் ராகவன்.
“குட்மார்னிங் சார்” என்று தன்னுடைய பைலை நீட்டினாள்.
“சிட் மேடம்” என்றவனோ அவளது பைலை வாங்கி செக் பண்ணிவிட்டு “உங்க ஜாப் மெடிக்கல் கோடிங் சம்மந்தப்பட்டது கேர்ஃபுல்லா ஒர்க் பண்ணுங்க… ஆல் தி பெஸ்ட் எம்டி கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு அவர் கையால அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டு ஒர்க் ஆரம்பிக்கலாம்… அதுவரை வெளியே வெயிட் பண்ணுங்க மேடம் ” என்றான் முகத்தில் சிரிப்பில்லாமல்.
பைலை வாங்கி வெளியே வந்து அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்தவள் “போடா டபரா வாயா! இந்த ஹெச்ஆரே சிரிக்கறதுக்கு காசு கேட்குறான் எம்டி எப்படியிருப்பானோ தெரியலையே” கொஞ்சம் அவளுக்கு படபடப்பு இருக்கத்தான் செய்தது.
‘ஜானவி எல்லாரையும் சாமாளிப்பா’ என்று தனக்குத்தானே தைரியம் கூறிக்கொண்டு ஆபிஸை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தாள்
அப்போது அங்கே ப்ளு பிளேசருடன் கையில் லேட்டஸ்ட் மாடல் ஐபோனில் “யா கன்டினியு பண்ணுங்க ராகவன்” என்று போனில் பேசிக்கொண்டு ஜானவியை கடந்துச் சென்றான் ஆறடி உயர ஆண்மகன்.
‘சத்தியமா இவன்தான் எம்டியா இருக்கணும் டைனோசர் போல உயரமா இருக்கானே! நாம அவன் முன்னாடி கொசு போல தெரிவோம் போல சும்மா நம்ம மேல இடிச்சா நம்ம பொத்துன்னு விழுந்துடுவோம்ப்பா” என்று அவள் புலம்பிக்கொண்டிருந்தாள்.
ஜானவி முன்னே வந்த ப்யூன் டேவிட்டோ “மேடம் உங்களை எம்டி சார் கூப்பிட்டாரு” என்றவன் வேகமாக நடந்தான்.
“ஹலோ அண்ணா மெதுவா போங்க” என்று அவன் பின்னால் ஓடினாள்.
“மேடம் எங்க எம்டிக்கு மெதுவாங்குற வார்த்தையே பிடிக்காது அவர் ரொம்ப ஃபாஸ்ட்” என்று நடந்துக் கொண்டே பேசினான் டேவிட்.
“அப்போ எள்ளுனா எண்ணெய்யா நிற்கணும்னு சொல்லுவாரா எம்டி” என்ற கண்ணை விரித்து கேட்டவளை திரும்பி பார்த்து சிரித்து “அப்படித்தான்னு வைச்சிக்கோங்க மேடம் நீங்களே எம் டியை பத்தி போக போக தெரிஞ்சிப்பீங்க வாங்க” என்று எம்டியின் அறைக்கதவை திறந்து விட்டான்.
அறைக்கதவை திறந்ததும் குளிர் பிரதேசத்திற்குள் சென்றது போல குளிராக இருந்தது. சுழற்நாற்காலியில் கம்பீர மிடுக்குடன் லேப்டாப்பில் அவனது விரல் பரதநாட்டியம் ஆடியது. அவனது கருமை நிற கேசத்தை ஜெல் வைத்து அடக்கியிருந்தான். முகத்தில் குறுந்தாடி கூட கிடையாது கீளின் ஷேவ்! டெனிம் பர்ஃப்யூம் ஆண்மகனின் அடையாளம். பர்ஃப்யூம் வாசம் ஜானவியின் நாசியில் நிரப்பியது.
தினமும் ஜிம்முக்கு போகிறான் என்பதை பறைசாற்றும் வகையில் கடோத்கஜன் போல உடலை கொண்டிருந்தான். ‘ப்பா பார்க்கவே பயமா இருக்கான் ஹிந்தி பட வில்லன் போல’ என்று நினைத்துக்கொண்டிருந்தவள் அவன் தலையை நிமிர்த்தாமல் இருக்க
“கு.குட்மார்னிங் சார்” என்றாள் தைரியமான குரலில் பதட்டத்தை மறைத்துக்கொண்டு
விழிகளை நிமிர்த்தி பார்த்தவன் இந்தியாவிலிருந்து வந்த தேவதை இவள்தானோ என்ற புருவம் கூட சுருக்காமல் அவளை கண்களால் ஸ்கேன் செய்தான்.
“சிட் ஜானவி மேடம்” என்றான் கம்பீரக்குரலில் உதட்டுக்கும் வலிக்காமல் சிரித்தபடி.
“தேங்க்யூ சார்” என்று புன்னகையுடன் உட்கார்ந்தவள் “நான் மெடிக்கல் கோடிங்” என்று அவள் பேச ஆரம்பித்தாள்.
“ஒரு நிமிசம் நான் பேசி முடிச்சிடறேன் மேடம்” என்றான் அழுத்தமாக.
‘பேசுடா கடோத்கஜன்’ என மனதிற்குள் அவனை வறுத்துக்கொட்டினாள் ஜானவி.
“சில நேரம் என்னோட நைட் தங்கவேண்டியிருக்கும் உங்களுக்கு ஓ.கே வா?” என்றான் பட்டென்று சுழற்நாற்காலியில் ஆடிக்கொண்டே அலட்டிக்கொள்ளாமல்.
“வாட் என்ன சார் சொன்னீங்க கம் எகைன்?” என்றாள் அவனை முறைத்தபடி
“ஐமீன் நாம ரெண்டு பேரும் வேலை விசயமா வெளிநாடு கூட போக வேண்டியிருக்கும் அப்போ நீங்க என்னோட தங்கிக்கணும் உங்களுக்கு ஓ.கேவா? கனடா நாட்டு பொண்ணுங்கனா இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டேன். அவங்க வெரி போல்ட்! நான் கூப்பிட்டதும் வந்துடுவாங்க! நீங்க இந்தியாவுல இருந்து வந்திருக்கீங்க! ஆண்பிள்ளைங்க கூட தங்கமாட்டோம்னு சென்டிமெண்டல் பிளா பிளாவா பேசுவீங்க! நீங்க என் கம்பெனியில வேலை செய்யணும்னா நான் போற நாடுகளுக்கெல்லாம் என்கூட வர வேண்டியிருக்கும்! அண்ட் ஹோட்டல ஒரே அறையில தங்கவேண்டிய நிர்பந்தம் கூட வரலாம் அதான் கேட்குறேன்” என்றான் தோளைக்குலுக்கிக்கொண்டு அலட்டிக்கொள்ளாமல்.
“இந்தியா பொண்ணுங்கனா எல்லாரும் போல்ட் ஆனவங்கதான் சார்! எங்க ஊர் வேலு நாச்சியார், ஜான்சி ராணி பொண்ணுங்க எல்லாம் போருக்கே போயிருக்காங்க! ஒரு சிலர் வேணா பயந்து இருக்கலாம்! எனக்கு உங்க கூட தங்கறதுல எந்து இஸ்ஸுவும் கிடையாது சார்! எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு” என பட்டாசு போல வெடித்து பேசினாள் ஜானவி.
“உங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்” என்று பிரிண்ட் தாளை அவளிடம் நீட்டினான்.
“தேங்க்யூ சார் என்னோட சாலரி பத்தி பேசணும்!”
“உங்க திறமையை பார்த்து சேலரி இன்கீரிஸ் பண்ணுறேன் ஜானவி. ஹெச் ஆர் ராகவனை பாருங்க” என்றவனோ கணினிக்குள் தலையை நுழைத்துக்கொண்டான்.
“போடா கடோத்கஜன் உன்னை விட பெரிய பிஸ்தாவையெல்லாம் நான் இந்தியாவுல பார்த்திருக்கேன் நீ எனக்கு சுண்டக்கா” என்று இதழை சுளித்து விட்டு கதவு வரை சென்றவள் திரும்பி பார்த்தாள் கிருஷ்ணாவை.
அவனோ லேப்டாப்பில் மூழ்கி இருந்தவன் சட்டென்று நிமிர்த்து பார்த்து “என்ன மிஸ் ஜானவி ஏதும் என்கிட்டே கேட்கணுமா?” என்றான் அழுத்தமான பார்வையுடன்.
“நத்திங் சார்” என்று தலையை ஆட்டி வெளியே வந்தவள் மூச்சை இழுத்து விட்டு “அவன் கண்ணை பார்த்தாவே நமக்குள்ள எதோ ஆகுது வசியம் பண்ணுறானோ ஜானு கேர் ஃபுல்லா இருடி” என்று நெஞ்சை தேய்த்துக் கொண்டு ராகவனை பார்க்கச் சென்றாள்
“எம்டியை பார்த்துட்டீங்களா மேடம் வாங்க உங்க கேபினுக்கு அழைச்சிட்டு போறேன்” என்றவனோ ஜானவிக்கான கேபினை காட்டினான். அவளது கேபினுக்குள் திவ்யா கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தாள்.
ராகவனை கண்டதும் “குட்மார்னிங்” என்றபடியே எழுந்து நின்றாள்.
“குட்மார்னிங்மா இவங்க மிஸ் ஜானவி உங்க டிப்பார்ட்மெண்ட்தான் பார்த்துக்கோங்க” என்று இப்போதும் சிரிக்காமல்தான் பேசினான் ராகவன்.
“ஹாய் திவ்யா ஐ ஆம் ஜானவி ஃபிரம் இந்தியா” என திவ்யாவிற்கு கை கொடுத்தாள் ஜானவி.
“ஹலோ ஜானவி” என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்.
ராகவன் சென்றுவிட ஜானவி தனக்கான நாற்காலியில் உட்கார்ந்தவள் தன் முன்னே இருந்த லேப் டாப்பை ஆன் செய்தாள்.
திவ்யாவோ அவளது வேலையில் கண்ணாக இருந்தாள்.
ஜானவிக்கு இங்கிருக்கும் ப்ரோடோகால் கொஞ்சம் புரியாமல் இருக்க “திவ்யா எனக்கு கொஞ்சம் அசஸ் பண்ணுங்க” என்று திவ்யாவிடம் கேட்க
அவளோ கம்பெனியின் ப்ரோடோகால் பத்தி தெளிவாக சொல்லிக்கொடுத்தாள்.
“தேங்க்ஸ் திவ்யா” என்றதும் “வெல்கம் மேடம்” என்ற ஒரு வார்த்தையுடன் பேச்சை நிறுத்திக்கொண்டு வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
லன்ச் டைம் ஆனதும் “சாப்பிட வரீங்களா ஜானவி?” என்றதும்
“போலாமே ஆனா நான் லன்ச் கொண்டு வரல இங்க லன்ச் நமக்கு கொடுப்பாங்கதானே!” என்றபடியே எழுந்து நின்று சோம்பல் முறித்தாள்.
“காசு கொடுத்துதான் சாப்பிடணும் ஜானவி மேடம்” என்றவாறே பேக்கை எடுத்து மாட்டினாள்.
“ஓ சரியான கஞ்சன் போல நம்ம எம்டி ஒரு நேர சாப்பாடு கூட போடமாட்டாரா?” என்று கிருஷ்ணாவை வறுத்துக்கொண்டு சாப்பிடச் சென்றாள்.
திவ்யாவை பார்த்ததும் சில பெண்கள் “பேசா மடந்தை மேனா மினுக்கி புதுசா ஒருத்தியை கூட்டிட்டு வந்திருக்காளே இவளும் அவளை போலத்தான் டிவோசியா இருப்பாளா?” என்று நாக்கில் நரம்பில்லாமல் கிசுகிசுத்தனர்.
திவ்யாவிற்கு அவர்கள் பேசுவது காதில் விழுந்தாலும் எப்போதும் போல காதில் விழாதது போல அமைதியாய் டேபிளில் வந்து உட்கார்ந்தாள்.
அந்தப்பெண்களின பேச்சில் முகம் சுளித்த ஜானவியோ எல்லா நாட்டுலயும் சில பெண்கள் இப்படியும் இருக்காங்க என்று சலித்துக் கொண்டவள் அவர்களை முறைப்போடு பார்த்துவிட்டு திவ்யாவிற்கு எதிரே உட்கார்ந்தாள்.
டிபன் பாக்ஸை திறந்த திவ்யாவிற்கு சாப்பிட பிடிக்கவில்லை. எத்தனை நாட்கள் தன் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு கண்டவர்களிடம் ஏச்சு பேச்சு வாங்குறது என்று மருகிக்கொண்டே ஒருவாய் எடுத்து சாப்பிட்டவளுக்கு அவள் வாழ்ந்த வாழ்க்கை அவள் கண் முன்னே வர அப்படியே டிபன் பாக்ஸை மூடி வைத்துவிட்டாள் திவ்யா.
ஜானவியோ பீட்சாவை ஆர்டர் செய்து அவளும் ஒருவாய் சாப்பிட்டிருப்பாள். “ஏங்க திவ்யா சாப்பாடு நல்லாயில்லையா! நான் வேணா பீட்சா ஆர்டர் பண்ணட்டுமா?” என்றாள் அக்கறையோடு.
“சாப்பாடு நல்லாயிருக்கு மேடம் மனசுதான் சரி இல்லை” என்ற குரல் கரகரத்துப்போய் பேசியவள் அங்கே உட்கார விருப்பம் இல்லாமல் ஹேன்ட் பேக்கை எடுத்துக்கொண்டு அவளது கேபினுக்கு ஓடிவிட்டாள்.
“ம்ம் இவளுக்கெல்லாம் ரோசம் ஒரு கேடு நேத்து இவளோட புருசன் ஆபிஸ் வாசலுக்கு வந்து இவ கையை பிடிச்சிட்டு என்னோட வந்துடு திவினு அழறான்… இவ அவனை பிடித்து தள்ளிட்டு கேப்ல ஏறிப்போயிட்டா நல்ல குடும்ப பொண்ணா இருந்தா புருசனை டைவர்ஸ் பண்ணிட்டு ஒரு ஆளோடு பைக்லயும் கார்லயும் வருவாளா” என்று வாய்க்கு வந்தபடி திவ்யாவை கரித்து கொட்டினர்.
திவ்யா டிவோஸி என்பதை தெரிந்த ஜானவியோ இவளுங்களுக்குகெல்லாம் மனசாட்சியே இல்லையா ஒருத்தி என்ன சூழ்நிலையில டிவோர்ஸ் பண்ணியிருப்பானு தெரிஞ்சுக்கிட்டு பேசணும் என்று அந்த பெண்கள் முன்னே நின்றதும் அவர்கள் அவளை ஏதோ ஏலியன் போல பார்த்து வைத்தனர்.
“ஹலோ மேடம்ஸ் ஒரு பொண்ணை பத்தி தெரியாம பேசக்கூடாது. உங்க வீட்டுப் பொண்ணுக்கு திவ்யா நிலைமை வந்துச்சுனா இப்படிதான் கூடி கும்மாளம் போட்டு அந்த பொண்ணை அவமானப்படுத்தி பேசுவீங்களா?” என்று அவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினாள் ஜானவி.
“ஏம்மா நீ இன்னிக்குதான் வேலைக்கு வந்திருக்க. அவளை பத்தி உனக்கு என்ன தெரியும்! அவளுக்குத்தான் இங்க பணிவிடை செய்ய ஆளுங்க இருக்காங்க. 6 மணிக்கு முடியற ஆபிஸ் அவளுக்கு மட்டும் 4 மணிக்கு முடிஞ்சிடும்… மேடம் மேக்கப் போட்டு பேக்கை எடுத்துட்டு கிளம்பிடுவாங்க இங்க ப்யூன் கூட அவளுக்கு சேவகம் செய்வாங்க! ஊமை ஊரை கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க” என்று ஜானவியின் வாயை அடைத்தனர்.
ஜானவியோ “ஏங்க நீங்க கூடதான் ஓவர் மேக்கப் போட்டு வந்திருக்கீங்க! அப்போ உங்களுக்கும் ஆபிஸ்ல ஆள் இருக்கா?” என்றாள் கண்ணை உருட்டி.
“என்னமா ஓவரா பேசுற? எனக்கு கல்யாணம் ஆகி புருசன்கூட வாழுறேன் நீ வக்காலத்து வாங்குறியே திவ்யா அவதான் புருசனை டிவோர்ஸ் பண்ணிட்டு ஒருத்தன் கூட கார்ல வரா போய் வேலையை பாருமா வந்துட்டா” என்று அந்த பெண்கள் கூட்டம் அங்கிருந்து கலைந்தது.
திவ்யாவை தவறாக சித்தரித்து பேசிய மூவரும் அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்பவர்கள் திவ்யா அவர்கள் மூவரிடமும் அதிகம் பேசமாட்டாள். ரொம்ப திமிர் பிடிச்சவ போல என்று நம்மகிட்ட எல்லாம் பேசாம இருக்காவென்று பேசியவர்கள் நாளடைவில் பரத் திவ்யாவிடம் ஆபிஸ் முடித்து
போகும்போதெல்லாம் கலாட்டா செய்ய ஆரம்பிக்க திவ்யாவை பற்றி அரை குறையாக தெரிந்துக் கொண்டு திவ்யாவை புறம் பேசினார்கள்.
இவங்களையெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது என்று தலையை உலுக்கிக்கொண்டு வயிறு பசியில் இருக்க ஜுஸ் ஆர்டர் செய்து குடித்து விட்டு திவ்யாவிற்கு ஜூஸ் வாங்கிச் சென்றாள்.
திவ்யாவோ டேபிளில் தலைவைத்து குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவள் எந்த சூழ்நிலையில் அவள் கணவனை டிவோர்ஸ் செய்தாள் என்று இங்கேயிருக்கும் பெண்கள் அறியவில்லையே! ட்ரக் அடிக்ட்டுடன் வாழ்வது அவ்வளவு எளிதல்லவே! தினம் தினம் குடித்து விட்டு வகை வகையாக திவ்யாவை சித்ரவதை செய்வான் பரத். நரகத்தில் வாழ்ந்தாள் பெண்ணவள். பரத்தின் பெற்றோர் மகனிடமிருந்து திவ்யாவிற்கு டிவோர்ஸ் வாங்கிக்கொடுக்க முன் வந்தனர்.
பெற்றோர் வெறுக்கும் அளவிற்கு நடந்துக் கொண்டான் பரத். ட்ரக் பழக்கத்தோடு அல்லாமல் பொண்ணுங்களை வீட்டுக்கே அழைத்து வந்துவிடுவான் அதுவும் திவ்யா இருக்கும் அறைக்கே. அவள் முன்னேயே பெண்களுடன் சல்லாபம் கொள்வான். திவ்யா அவனிடமிருந்து தப்பித்து வந்ததே பெரிய விசயம். டிவோர்ஸ் கிடைத்தும் திவ்யாவை இன்று வரை டார்ச்சர் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறான் பரத்.
பரத் ட்ரக் அடிக்ட் என்று கோர்ட்டில் நிரூபணம் ஆக திவ்யாவின் மகனை அவளிடமே ஒப்படைத்து விட்டனர். இப்போது அவள் உயிருடன் வாழ்வதே அவளது மகனுக்காகத்தான்.
“திவ்யா” என்று அவளது தோள்பட்டையில் கையை வைத்தாள் ஜானவி.
கண்களை கர்சீப்பால் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவள் “ப்ளீஸ் என்கிட்ட இப்போதைக்கு எதுவும் கேட்காதீங்க மேடம்” என்றாள் கண்கள் கலங்கியபடி.
“சாரி! சாரி திவ்யா நான் உங்ககிட்ட எதுவும் கேட்கமாட்டேன் எனக்கு அடுத்தவங்க பிரைவசிக்குள்ள போக பிடிக்காது அடுத்து என்னை மேடம்னு கூப்பிடாதே ஜானுனு கூப்பிடு நாம பிரண்ட்ஸ்” என்று திவ்யாவின் கண்ணீரை துடைத்து அவளுக்கு கையை நீட்டினாள்.
திவ்யாவோ மெல்லிய சிரிப்புடன் கையை கொடுத்தாள்.
“நீ சாப்பிடாம வந்துட்ட. உனக்கு ஜுஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் திவி” என்று ஜுஸை நீட்ட அவளுக்கும் அழுது அழுது உடலும் மனமும் சோர்வாய் இருக்க “தேங்க்ஸ் ஜானு” மெதுவாய் புன்னகைத்து ஜுஸை வாங்கிக்குடித்தாள்.
மாலை 4 மணியானதும் “என் பையனை ஸ்கூலயிருந்து அழைச்சிட்டு வீட்டுக்கு போகணும் நான் கிளம்புறேன் ஜானு” என்று அவளது வேலையை கிருஷ்ணாவுக்கு அனுப்பிவிட்டுச் சென்றாள் திவ்யா.
மாலையானதும் தனக்கு கொடுத்த வேலைகளை முடித்து விட்டு ரிப்போர்ட் சிரிக்கா மூச்சி ஹெச்ஆர் கிட்ட கொடுக்கணுமா இல்ல கடோத்கஜன் கிட்ட கொடுக்கணுமானு தெரியலையே யோசித்துக்கொண்டே தான் செய்த வேலைகளை பென்டிரைவில் போட்டும் பிரிண்ட்அவுட் எடுத்துக்கொண்டு ராகவனின் கேபினுக்குச் சென்றாள்.
ராகவன் கேபினில் இல்லையென்று ப்யூன் டேவிட் கூற “ம்ம் அப்போ கடோத்கஜன்கிட்ட காட்டணுமா?” என்று அலுத்துக்கொண்டு கிருஷ்ணாவின் அறைக்கதவை திறந்த சமயம் கிருஷ்ணா ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றுக் கொண்டிருந்தான்.