புன்னகை-4
அன்று… மதுராக்ஷி ராமகிருஷ்ணன்.. தான் சென்றிருந்த நூற்றியொறாவது நேர்முகப்பரீட்சையில் தேர்வாகி.. “டாஸிலிங் க்ரூப்ஸ் ஆப் கம்பெனீஸின்” அந்தரங்க காரியதரிசியாக பணி நியமனம் செய்யப்பட்ட அதே நாளின் மாலைப்பொழுதில்!!
தந்தை கூறியது போலவே அன்று சாயங்காலம் அவளைப் பெண் பார்க்கும் படலத்திற்காக ஆட்கள் வரும் முன்னம்.. தன்னைத் தானே அலங்கரித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாள் மதுராக்ஷி.
அவளுக்குத் துணையாக அலங்கரிக்கவென்றே நின்றிருந்த.. அவளின் உயிர்த்தோழி நிரோஷனாவோ… பேரிகை முன்னர் அமர்ந்திருந்த மதுராக்ஷியின்… பூணுக்கு அழகளிக்கும் அழகைக் கண்டு விழிகள் பூரிக்கத் தான் நின்று போனாள்!!
கிட்டத்தட்ட மணப்பெண் கோலத்தில்… சிவப்பு வண்ண பட்டில்… தலைநிறைய தளரத் தளர மல்லிப்பூச் சரம் சரமாகச் சூடி… ஆபரணங்கள் பூண்டு.. உச்சி வகிடெடுத்து… பின்னல் கூந்தலுடன் நின்றிருந்த.. தோழி மதுராக்ஷியைக் கண்டு… நிரோஷனாவுக்குள்ளும்… மையல்பித்து முகிழ்க்கத் தான் செய்தது.
டிரஸ்ஸிங் டேபிளை விட்டும்.. கோர்த்த கைகளுடன் எழுந்து கொண்ட.. அழகுப் பெட்டகமான மதுராக்ஷிக்கு… தன் கையிலிருந்த நெற்றிச் சுட்டியை அணிவித்த நிரோவும்,
தன் தோழியை ஆண்களைப் போல சைட்டடிப்பது போலப் பார்த்துக் கொண்டே… ஒற்றைப்புருவம் உயர்த்தியவளாக, “இந்த ஸேரியில உன்னப் பார்க்கும் போது எனக்கே கேராகுதே… அப்போ வரப் போற மாப்பிள்ளைக்கு?? ஹப்பப்பா..அவனை விட்டு என்னை கட்டிக்கிறீயா?”என்று விளையாட்டு வாக்கில் கேட்கவும் செய்தாள்.
தன் செல்லத்தோழி நிரோவின் குண்டுக் கன்னங்கள் பிடித்தாட்டிய தலைவியோ, “எனக்கு ஓகேடீ.. என் வ்வாய்யாஆஆடீஈஈ….!!”என்றவள்,
டிரஸ்ஸிங் டேபிள் மீது தன் பின்னழகு சாய்த்து நின்று, மார்புக்கு குறுக்கே கைக்கட்டிக் கொண்டு நிரோவைப் பார்த்தாள்.
“ஆனா ஒன் கன்டிஷன்.. என்ன?? மும்பை போய்.. ஒரு ஆபரேஷன் மட்டும் பண்ணிட்டு வந்திரு??இன்னைக்கே உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று மது ஒற்றைக்கண்ணடித்து இலவச ஆலோசனை கூற…
பட்டென்று நிரோவின் சிந்தனையில் வந்து போனார்..மதுவின் முறுக்கு மீசை அப்பன் ராமகிருஷ்ணன்.
ஏதோ கெட்ட கனவு கண்டு விழிப்பவள் போல அதிர்ந்து விழித்த நிரோவோ, “எதே ஆபரேஷனாஆ?? ராம்கி அங்கிள நினைச்சுப் பார்த்தீயா?? அவர் பார்வைக்கே.. எனக்கு பேச்சு வராதே…மும்பை ஆபரேஷன் விஷயம் தெரிஞ்சா.. நான் காலி… ஏரியாலேயே சூப்பர் பிகர் நீ.. உனக்கு போய் முரட்டு அப்பனா??அதனால ஒரு பையன் தில்லா லவ் பண்ண வந்தானா?? அவரால.. உன்னை கட்டிக்கணும்ன்ற ஆசையும் மொத்தமா போச்சே!!!”என்று சலித்துக் கொண்ட தோரணையில்…
அவ்விடத்திலேயே வாய்விட்டு அண்ணார்ந்து கிளுக்கிச் சிரிக்கலானாள் மதுராக்ஷி.
சிநேகிதியின் சிரிப்பைக் கண்ணார இரசித்து நின்றவளோ, “நீ சிரிக்கும் போது எவ்ளோ அழகா… சூப்பரா இருக்கடீ… எப்பவும் சிரிச்சிக்கிட்டே… சந்தோஷமா இருக்கணும் என் பட்டு.. ”என்று மதுராக்ஷியின் சிரிப்பழகைப் பாராட்ட…மதுவுக்கும் தான் உச்சி குளிர்ந்தது.
தோழியின் நயக்கும் பார்வையைக் கண்டு..ரூஜ்ஜிற்கும் மேலாகச் சிவந்த கன்னங்கள் உப்ப.. பார்வையைத் தாழ்த்திக் கொண்டவளைச் சூழ்ந்து கொண்டது நாணம்.
அதே சமயம்… இந்த அதீத அழகினால் வந்த பிரச்சினை தானே, அவளைப் பார்க்க வந்த மாப்பிள்ளைகளுக்கு எல்லாம் இவளைக் கண்டதும் பிடித்தும் போய் விடுகிறது என்ற எண்ணம் மலர்ந்ததும்.. அதீத அழகு சுதந்திரமற்ற ஆபத்தைக் கொடுப்பதாகவும் கூட எண்ணத் தோன்றியது மதுராக்ஷிக்கு.
அவளைப் பார்க்க வரும் அனைவருக்கும் முன்னால்… ஆடை காட்சியகங்களில் பார்வைக்காக நிறுத்தப்படும் டம்மியைப் போல காட்சிப்பொருளாக… வீணே நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதை எண்ணியும்.. உள்ளுக்குள் சிறுமைப்படுத்தப்படுவதை எண்ணியும் நொந்து போனாள் அவள்.
அவளது அகமோ உள்ளே ஆயிரத்தெட்டு வகையான உணர்ச்சிக்கலவைகளைக் காட்ட… முகத்தில் இரசவாதத் துளிகள் எதையும் காட்டாமல்.. அமைதியே உருவாக நின்றிருந்த நேரம்…
அக்கணம் பெண்ணவளின் சேலை ஜாக்கெட்டின் கழுத்துவளைவில் சென்றிருக்கும் தங்கஜரிகை.. தோள்பட்டையைக் குத்த… அதுவொரு அசௌகரியத்தைத் தோற்றுவிக்கவும் செய்தது அழகி மதுராக்ஷிக்கு!!
ஜாக்கெட்டின் தோள்பட்டை வளைவினை.. இழுத்து இழுத்து சரிசெய்த வண்ணம்… அசௌகரியத்துடன் தோழியை நோக்கியவளோ, “இந்த ஜாக்கெட் கம்பர்டபிளா இல்லை நிரோ.. உள்ளே பூச்சிக்கடிச்சிட்டே இருக்க மாதிரி குத்துது…கழட்டி வேற சேரி போட்டுக்கவா?”என்று கேட்டுக் கொண்டிருந்த தருணமது!!
அறைக்கதவு, “டக்டக்”என்று தட்டப்படும் சப்தமும், கூடவே அதனைத் தொடர்ந்து அவளது தந்தை ராம்கியின் வழமையான கறார்க்குரலும் கேட்கலானது.
“மதுராஆஆ… மதுரா.. இன்னும் என்ன பண்ணிட்டிருக்க நீ… மாப்பிள்ள வீட்டுக்காரங்க வந்து ரொம்ப நேரமாச்சு… இப்போ வரப்போறீயா?? இல்லையா??”என்று அவளது ஸ்ட்ரிக்ட் ஆபிசர் தந்தையும்.. அதட்டும் குரலில் கேட்க,
உறுத்தித் தொல்லை செய்யும் ஜாக்கெட்டை மாற்ற வேண்டுமென்ற எண்ணமே அடியோடு அற்றுப் போனது மதுராக்ஷிக்கு!!
மாறாக, தந்தையழைத்ததும்.. அத்தனையும் ஒதுக்கித் தள்ளி.. கிடப்பில் போட்டுவிட்டு.. அவருக்கு பதிலளிக்கும் பதற்றகரமான எண்ணம் மாத்திரமே அவளுள் மிக,
“இ.. தோ… இதோ வந்துட்டேன்பா”என்றவளின் குரலிலும் கூட பட்டவர்த்தனமாகத் தென்பட்டது பதற்றம்!!
கதவுக்கு வெளியே நின்றிருந்த தந்தை ராமகிருஷ்ணரோ, சற்றே சலித்துக் கொள்ளும் குரலில், “சரி சரி.. சீக்கிரம் கீழே வந்து சேரு”என்றவர்,
சப்தமாகக் கேட்கும் முணுமுணுக்கும் குரலில், “இந்தக்கால பிள்ளைங்களுக்கு நேரத்தின் அருமை எங்கே புரியுது?? ஒரு சேலையைச் சுத்திட்டு வர்ற இத்தனை நேரமா? டைம் மேனேஜ்மென்ட்.. பங்க்ச்சுவாலிட்டியெல்லாம் மருந்துக்கும் இருக்கா??”என்று அங்கலாய்த்துக் கொண்டே… தடதடவென மாடிப்படி விட்டும் கீழிறங்கிப் போகலானார் அவர்!!
அவர் அகன்றதும்.. ஜாக்கெட் தந்த அசௌகரியத்தைக் கூட மறந்து… அறையின் கதவுப்பக்கம் விறுவிறுவென விரையப் போன மதுராக்ஷியின்.. வளையல்கள் அணிந்த வெண்ணிறக் கையைத் தடுத்துப் பற்றியது நிரோவின் கரம்!!
தோழியை அன்பொழுகப் பார்த்தவளாக, “அங்கிள் சீக்கிரம் வான்னு சொன்னதும் அப்படியே ஓடிருவீயாடீ… உன்னோட ஷோல்டர் கர்வ்வப் (curve) பாரு.. எவ்ளோ வீங்கி செவந்து போச்சுன்னு.. இப்படியே அதிக நேரம் நின்னா ஸ்கின் ரேஷஸ் கூட வரலாம்… வா… முதல்ல ஜாக்கெட்ட மாத்திட்டுப் போ” என்று மதுராக்ஷியின் செக்கச்செவேலென சிவந்த ஜாக்கெட் தடத்தைக் கண்டு கூறினாள் நிரோ!!
ஜாக்கெட் தந்த அசௌகரிய அச்சத்தை விடவும், ஹிட்லர் தந்தையின் அதட்டல் மொழிகள் தந்த அச்சம் பெரிதாகப் போய் விடவே,
“அதெல்லாம் அப்றம் பார்த்துக்கலாம்… நான் சமாளிச்சுக்குவேன்… ஆனா அப்பாவ சமாளிக்கிறது தான் கஷ்டம்… கேட்டேல்ல?? .. ஹிட்லர்!! … எவ்ளவு திட்டிட்டு போனாருன்னு… அதனால நான் இப்போ கீழே போயே ஆகணும்…”என்று ஒரேயடியாக. தோழியின் ஆலோசனையைக் கூடப் புறந்தள்ளிவிட்டு…
தந்தைச் சொல்லுக்குப் பணிந்து… தடதடவென மாடிப்படியிறங்கிச் செல்லலானாள் பெண்ணவள்!!
தோழி தன்னை விட்டுச் செல்வதைக் கண்ணுற்ற நிரோவோ, “இருடீ… மெதுவா போ.. நானும் வர்றேன்” என்றிரைந்த படியே பின்னாலேயே சென்று.. தோழியின் கைச்சந்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளவும் செய்தாள்.
சரியாக.. வீட்டின் நடுக்கூடத்திற்கு நன்கே புலனாகும் மாடிப்படிக்கட்டுக்கள் வரவும்.. தன் வேகத்தைக் குறைத்த கில்லாடி மதுராக்ஷியோ,
முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு.. பவ்யமாக மாற்றியவாறு.. அன்னநடை நடந்து.. அடிமேலே அடி வைத்து… மெல்ல மெல்ல மாடிப்படியினின்றும் இறங்கி… நிரோவுடன் கீழே வந்தாள் அவள்.
அவள் குனிந்த தலை நிமிராமல் நடந்து வருவதைக் கண்டு… வாயெல்லாம் பல்லாகப் புன்னகைத்த அவளது தந்தையோ.. அவள்புறமாக கைநீட்டி…
அவளை மாப்பிள்ளை வீட்டாருக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் நோக்கத்தோடு, “இதோ எம் பொண்ணு மதுராக்ஷி…”என்று சொல்வதிலும் தான்.. அவருக்குள்ளும் தான் எத்தனை பெருமிதம்!!
மெல்ல நிமிர்ந்து தந்தையை மாத்திரம் பார்த்த பெண்ணவளுக்கு, தந்தையின் முத்துப்பற்கள் பளிச்சிட்டுத் தெரியும் சிரிப்பைக் கண்டதும், உள்ளுக்குள், ‘இவருக்கு இப்படிலாம் சிரிக்கவும் தெரியுமோ?’ என்ற ஆச்சரிய எண்ணமும் தான் தோன்றி மறைந்தது அவளுக்குள்.
மதுராக்ஷியோ தந்தை முகத்தைப் பார்த்ததோடு சரி. மேற்கொண்டு அங்கு நின்றிருந்த தாயின் முகத்தையும் சரி, புது வரவாக அவளைக் காண வந்திருக்கும் மாப்பிள்ளை வீட்டாரையும் சரி… யார் முகத்தையும் பார்க்காமல்… தலையை நிமிர்த்தாமலேயே நிற்கலானாள் அவள்!!
ஏனோ… அவளை நாடி வந்திருக்கும் இந்த மூன்றாவது வரனையும் அவளுக்குப் பிடிக்காமல் போகவே, வந்திருக்கும் மாப்பிள்ளையையும் சரி.. மாப்பிள்ளையின் சொந்தபந்தங்களென யாவரையும் சரி கண்கொண்டு ஏறிட கூடி வரவில்லை மதுராக்ஷியின் மனம்!!
எனவே தலையைக் குனித்துக் கொண்டே… அமைதியாக நின்றிருந்த சமயத்தில்… அங்கு நிலவிய மௌனத்தைக் கலைக்கும் வண்ணம் காற்றோடு காற்றாக.. ஊடுருவிக் கேட்டது ஒரு கணீரென்ற ஆண் குரல்!
அதே சமயம் கேலிக்கூத்தாடி.. ததும்பி வழியும் ஒரு குரல்!!
காற்றிலே மிதந்து வந்த அக்குரலோ, “ஏன் பொண்ணு தலைகுனிஞ்ச வண்ணமே நிற்குது.. பொண்ணுக்கு கழுத்து வலியா..?”என்று கேட்க…. அந்தக் குரலில் ததும்பிய நையாண்டி… பிறப்பிலேயே குறும்புக்குணம் கொண்ட அவளையும் ஈர்க்கத் தான் செய்தது.
கருகருவென மை அஞ்சனம் பூசப்பெற்ற விழிகள் வெடுக்கென்று நிமிர்ந்து.. குரல் வந்த திசை நோக்கி பார்க்க… அங்கே டீஷேர்ட் மற்றும் டெனிமில்.. ஒரு மாடலைப் போல அமர்ந்திருந்தான் தோள்புஜங்கள் பருத்த ஓர் ஆடவன்!!
வயது இருபத்தெட்டு, இருபத்தொன்பது என்று மதிக்கத்தக்க வகையில்… ஹேர் ஜெல் போட்டு… முள்ளு முள்ளாக குத்திட்டு நின்ற கேசத்துடன்… ப்ரெஷ் லுக்கில் நின்றிருந்த ஆடவனைக் கண்டதும்…
அதிலும்.. அவனது கண்களில் தாண்டவமாடும் குறும்பைக் கண்டதும்… உள்ளூற பதற்றம் அகன்று ஓர் இதம் மதுராக்ஷிக்குள் எட்டிப் பார்த்தது என்பது உண்மை!!
இந்த மாடலைப் போன்றிருக்கும் ஆடவன் தான் அவளுக்காக தந்தைப் பார்த்திருக்கும் மணமகனா?
உள்ளமோ கேள்வி கேட்க.. விழிகளோ மின்னல்வேகத்தில்.. அவ்வாடவனை உச்சாதி பாதம் வரை ஆராய… ஒரு அழுக்கு கூட அற்று.. அழகாகக் கத்தரிக்கப்பட்ட கைநகங்களுடனும், சீரான கால்நகங்களுடனும் இருக்கும் அவனைப் பார்த்ததும்,
“நாட் பேட்” என்றே மதுராக்ஷியின் மனம் எடுத்துச் சொல்லலாயிற்று.
இருப்பினும் அவனை… ஏனோ… அவளுக்கு இணையாளனாக.. அருகே வைத்து மணக்கோலத்தில் கனாக்கள் கண்டிட முரண்டு பிடித்து.. தாஜா செய்தது மனம்!!
ஆக மொத்தத்தில் அவன் அழகனாகவே இருந்த போதிலும் கூட, ஏனோ… மதுராக்ஷிக்கு அவனைப் பிடிக்காமலேயே போனது.
அந்த கணம்.. மாப்பிள்ளையோடு வந்திருந்த.. ஐம்பது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இரு பெண்மணிகளில்… ஒரு பெண்மணியோ…. பட்டென்று வாய் திறந்து, “அது வேறொண்ணுமில்ல… பொண்ணு வெட்கப்படுதுடா”என்று கூற.. தற்போது மதுராக்ஷியின் விழிகள்… சப்தம் வந்த திசையில் சுழன்றது.
அங்கே தெய்வீக கடாட்சம் அருளும் புன்சிரிப்புடன்.. விழிகளில் உறையும் கருணையுடன் அமர்ந்திருந்த… ஒரு மூத்த பெண்மணியோ… தன்னை ஏறிட்டு நோக்கும் மதுராக்ஷியை நோக்கி… சிநேகமாகப் புன்னகைக்கவும் செய்ய… அந்த ஒற்றைச் சிரிப்பு பச்சக்கென்று நெஞ்சில் ஒட்டிக் கொண்டது மதுராக்ஷிக்கு!!
சிரித்த முகமாகவே பிறந்த பெண்மணியோ?? எப்போதும் சாந்தம் தவழும் முகத்தில் கோபமே வாராதோ?
நெற்றியில் சின்ன விபூதிக்கீற்றுடன்… உட்கார்ந்திருந்தவரைக் கண்டு தானும்.. இன்முகமாக மென்னகை புரிந்தவள்… மேற்கொண்டு யாரையும் ஏறிடவில்லை அழகியின் விழிகள்!!
மறுகணம்… மதுராக்ஷியின் தாயோ.. அடுக்களையில் நின்றும் கொண்டு வந்த காபியையும், சிற்றுண்டிகளும் அடங்கிய தட்டை… அங்கே வந்திருந்தவர்கள் அனைவருக்கும் பரிமாற,
ஒரு கையில் காபியை ஏந்தி சிப் சிப்பாகப் பருகிக் கொண்டே, மறுகையில் ஜிலேபியை எடுத்துக் கடித்து… இரசித்து உண்டவனைப் பார்க்க… “சரியான பந்திக்கு முந்தியோ?” என்ற எண்ணமும் தோன்றாமலில்லை மதுராக்ஷிக்கு.
ஆனால் அருகிலேயே நின்றிருந்த நிரோவுக்கோ.. ஆண்மாடலின் ஒவ்வொரு அங்க அசைவுகளும்… பேரழகு வசீகரத்தைக் கொடுப்பது போலிருந்திருக்க வேண்டும்!!
தன் தோழி மதுராக்ஷியின் காதுக்குள், குசுகுசுக்கும் குரலில், “அங்கே பாருடீ உன் ஆள… காபி சாப்பிட்றதும் ஸ்டைல்.. ஜிலேபி சாப்பிட்றதும் ஸ்டைல்… ஹப்பா.. ஸ்டைல்.. ஸ்டைல்… சூப்பர் ஸ்டைல்!!” என்று விட்டால் பாட்டே படித்து விடுபவள் போல கண்சிமிட்டி குதூகலிக்கலானாள் நிரோ.
மதுராக்ஷியின் ஒவ்வாத மனத்திற்கு, ஏனோ தோழி, “உன் ஆளு”என்று சுட்டியது பிடித்தமின்மையைக் கொடுக்க,மறுபக்கம் ஜாக்கெட்டின் ஜரிகை வேறு… தோள்பட்டையைக் குத்தி குத்தி எரிச்சலை மூட்டலானது.
இரண்டு கோபமும்… தோழி நிரோ மீதே பாய, அடக்கப்பட்ட சீற்றக்குரலில், “ம்மூடிட்டு நில்றீஈஈ..”என்று மென்குரலில் தோழிக்கு மட்டுமே கேட்கும் வகையில் கத்தியவள்…
தோள்பட்டையினருகே நிலவும் உஷ்ண உணர்வு தாங்காமல்.. சற்றே வளைந்து, நெளிந்து.. ஜாக்கெட்டின் கழுத்துப்புறம் கையிட்டு.. இழுத்து இழுத்துப் போட்டுக் கொள்ளவும் செய்தாள் மதுராக்ஷி.
இதுகாறும் வாளாவிருந்த பெண்மணியோ… காபியை அருந்திக் கொண்டே வாய் திறந்து.. “பையனப்பத்தி தெரிய வேண்டியதெல்லாம் தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்… இருந்தாலும் சபைன்னு வந்தப்றம் சொல்றதும் நல்லது தான் இல்லையா? பின்னே..நாளை பின்னே ஆகும் போது எங்களுக்கு சொல்லலையேன்னு ஒரு கதையோ.. அவச்சொல்லோ வந்துரக்கூடாது பாருங்க.. அதுக்காக சொல்றேன்….”என்று பீடிகையோடு எதையோ சொல்ல முன்வர,
தோள்பட்டை சிவந்து வீங்கி வார் அச்சு.. சருமத்தில் பதிந்து தெரியும் வண்ணம் நின்றிருந்த மதுராக்ஷியும் தான்… என்ன ஏதென்று காதைக் கூர்தீட்டிக் கேட்கலானாள்.
அந்த இரண்டாவது பெண்மணியும், சீரியஸான முகபாவனையுடன், “பையனுக்கு அம்மா, அப்பா இல்லை..அவங்க பெரியம்மா தான் எல்லாமே… தாய் ஸ்தானத்தில் நின்னு… பையனுக்கு முடிக்க வேண்டிய கடமைகளா இருக்கட்டும்… மருமகளுக்கு பண்ண வேண்டிய சம்பிரதாயங்களா இருக்கட்டும்… எல்லாமே முன்னின்னு பண்ணனும்னா.. அது பையனோட பெரியம்மா தான் ”என்று கூற.. தற்போது பேசிய பெண்மணி பையனின் பெரியம்மாவாக இருக்க வாய்ப்பு இல்லை என்று விளங்கியது.
எனில், இப்பெண்மணி பையனின் பெரியம்மா இல்லையாயின் .. யார் தான் பெரியம்மாவாகவும் தானிருக்கக் கூடும்??
அது சாக்ஷாத்.. அவளைப் பார்த்து சாந்த பாவத்துடன்… கருணையோடு முறுவலித்த.. உயர்தட்டு வர்க்கமென்பதைப் பார்த்ததும் அனுமானிக்கக் கூடிய வகையில் இருக்கும்… மற்றைய பெண்மணி தான் என்பது உய்த்துணர்ந்து கொண்டாள் மதுராக்ஷி!!
திருமணத்தில் விருப்பு என்பது அணுவும் இல்லாமல்.. அங்கே தேமே என்று நின்றிருந்தவளுக்கு உள்ளே, ‘டேய்… பையனுக்கு. அப்பாம்மா இருந்தா என்ன.. இல்லேன்னா என்ன?? என்னால நிற்க முடியலடா.. ஷோல்டர் எரியுதுடா’என்று உள்ளுக்குள்ளேயே வந்தவர்களை அர்ச்சித்துக் கொண்டே… வெளியில் அதைக் கிஞ்சித்தும் காட்டாது உணர்ச்சி சுத்தமாகத் துடைக்கப்பட்ட முகபாவனையுடன் நின்றிருந்தாள் அவள்.
மதுராக்ஷிக்கு நேரம் செல்லச் செல்ல.. ஜாக்கெட்டின் அசௌகரியத்தைத் தாங்க முடியாமல் போக.. வளைந்து நெளிந்து நின்று கொண்டிருந்தவளுக்கோ,
“இன்னும் கொஞ்ச நேரம் இருக்க வேண்டுமோ?” என்ற எண்ணம் மேலிட… அலுப்பாய் இருந்தது.
அவளின் அலுப்பும், நிற்க முடியாமல் அவள்படும் கஷ்டமும்.. உடனிருந்த நிரோக்கு புரிந்து விட.. எப்போதும் ராமகிருஷ்ணர் முன்பு அத்தனை பெரிதாக வாய் திறந்து பேசாதவளும்.. அன்று.. தன் தோழிக்காக அசட்டு தைரியத்துடன் வாய் திறக்கவும் தான் முயற்சித்தாள் நிரோ!!
தோழி மதுராவின் அன்னையை மென்மையான குரலில் விளித்து, “ஆன்ட்டி… மது பாவம்… ரொம்ப நேரமா.. ப்ளவுஸ் கம்பர்டபிளா இல்லாம சிரமப்படுறா… ப்ளீஸ்… டிரஸ் மாத்திட்டு வந்துரட்டுமே பாவம்…”என்று கெஞ்சும் குரலில் கூற… தாயோ என்ன சொல்வதென்று தெரியாமல்,
அச்சத்துடன் கணவன் ராமகிருஷ்ணனின் முகம் பார்த்து வைத்தார், ‘என்னங்க.. சரின்னு சொல்லட்டுமாங்க?’என்று அனுமதி கேட்பது போல!!
தந்தைக்கோ.. மாப்பிள்ளை வீட்டார் வருவதறிந்து சௌகரியமான சேலை அணிந்து நிற்க.. தன் பெண்ணுக்கும் தான் என்ன குறை?? என்ற கோபம் உள்ளூற மேலிட… அழுந்த மூடிய அதரங்களுடன் நின்றிருக்கலானார்.
கருணாவதியான பையனின் பெரியம்மா தான்… அதையெதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “லேடீஸ் எப்பவுமே கம்பர்டபிளான ஆடை அணிவது தான் உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.. போம்மா… நீ போய் டிரஸ் மாத்திட்டு வந்துரு.. ஒண்ணும் அவசரமில்லை… டேக் யுவர் ஓன் டைம்மா”என்று.. அவளை அனுப்பி வைக்க….
ஏனோ பெரிய அன்னையின் அந்த இதமான அணுகுமுறை கூட.. மாப்பிள்ளையைக் காட்டிலும் பிடித்தும் போனது மதுராக்ஷிக்கு.
மதுராவும்… பாவை போல, “சரிங்க”என்று குரலே எழாத குரலில் மொழிந்து விட்டு தோழியுடன்… மேலே தன்னறைக்குப் போய் தாழிட்டதும் தான் தாமதம்…
அடுத்த நொடி… ஓடிப்போய் கட்டிலில்.. மல்லாக்க தொப்பென விழுந்தாள் அவள்.
மேலே மின்விசிறியோ… பரபரப்பாகச் சுழன்று சுழன்று… அவளுள் இழையோடிய பதற்றம், களேபரம் எல்லாவற்றையும் தென்றலாய் வருடி வருடி ஆசுவாசப்படுத்தும் போலிருக்கவே,
ஜரிகைக் குத்தும் ஜாக்கெட்டை… ஹூக்குகளைக் கழற்றி.. தளர்த்திக் கொண்டே, “உஃப்.. உஃப்”என்று இதழ் குவித்து ஆழ ஆழப் பெருமூச்சுக்களை எடுத்து விடவும் செய்தாள்!!
தோழி படுக்கையில் மல்லாக்காக இரு கை நீட்டி படுத்துக் கொண்டதும், அவளினருகே… சயனிக்கும் புத்தர்சிலை போல.. ஒருகையை தலைக்கு முட்டுக் கொடுத்தவாறே,
தோழியின் புறமாக ஒருக்களித்துப் படுத்துக் கொண்ட நிரோஷனாவோ,
“ சும்மா சொல்லக்கூடாது.. ராம்கி அங்கிளோட செலெக்ஷன் சூப்பரா தான் இருக்கு.. பையன்.. நல்லா மாடல் போல அழகா தான் இருக்கான்ல?? ”என்று சொல்ல…. அவனை துணைவனாகக் கொள்ள மறுத்த மனம்… மதுராக்ஷிக்கு அது கடுப்பைத் தூண்டிவிடவே செய்தது.
மதுவோ இதுகாறும் மல்லாக்கப் படுத்திருந்தவள் பட்டென்று எழுந்து… தடதடவென நடந்து சென்று.. டிரஸிங் டேபிளின் பாதியுயர கண்ணாடியின் முன்னின்றவளாக,
தன் வளையலை எல்லாம்.. தொப் தொப்பென இழுத்து இழுத்துக் கழற்றலானாள்.
கூடவே, கண்ணாடி விம்பத்தில் தெரியும் தோழியைப் பார்த்துக் கொண்டே, எரிச்சல் மண்டும் குரலில், “பையன் அவ்ளோ அழகுன்னா… அப்போ நீயே கட்டிக்க”என்றாள் வெடுக்கென்று மதுராக்ஷி!!
ரொம்பவும் கேஷூவலாக.. தோளைக் குலுக்கி விட்டுக் கொண்டே மஞ்சத்தில் நின்றுமெழுந்த நிரோவோ, “எனக்கு ஓகே தான்.. ஆனா ராம்கி அங்கிள் என்ன சொல்வாருன்னு தான் தெரியல?? ”என்றவளின் விம்பத்தை…
தன் பருத்த கொங்கைகள் ஏறியிறங்க… மூசுமூசுவென மூச்சிறைத்துக் கொண்டே முறைத்துப் பார்த்தவள் அத்தோடு விட்டாளா??
டிரஸ்ஸிங் டேபிளின் மீது வைக்கப்பட்டிருந்த பாடிலோஷன் பாட்டிலை கையில் எடுத்தவாறே திரும்பி, அதனை தோழி மீது விட்டெறிந்தவளாக… “ஓ… மேடமுக்கு அப்டி வேற எண்ணமிருக்கோ.. யூ பிராட்”என்று பொங்கவும் செய்தாள் நாயகி!!
தோழி விட்டெறிந்த பாடிலோஷன் பாட்டிலை அழகாய் கைகளுக்குள் கேட்ச் பிடித்துக் கொண்ட நிரோஷனாவோ… மதுராக்ஷியின்.. போலிக்கோபமுணர்ந்து புன்னகைத்துக் கொண்டே,
“நீ தானே பிடிக்கல சொன்ன?? அதான் நானாவது முயற்சி பண்ணலாம்னு பார்த்தேன்”என்று இதழ்களில் உறைந்த… கேலிச்சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டிருந்த நேரம் தானது!!
அவர்களிருவரும் நின்றிருந்த அறைக்கதவு.. “தட்தட்”டென்று.. தட்டப்பட இருவரும் தத்தம் கேலிப்பேச்சு, போலிச்சண்டையென அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு.. கதவுக்கு அப்பால் கேட்கப்போகும் அரவத்துக்காக காதுகளைக் கூர்தீட்டலாயினர்.
“யாரு?”என்று அறைக்குள்ளிருந்து நிரோ கேட்க, அந்தப்பக்கமிருந்து தாயின் குரல் கேட்டது.
அங்கே மதுராக்ஷியின் தாயோ, சற்றே உரத்த குரலில், “யம்மாடீ.. பையன் உன் கூட கொஞ்சம் தனியா பேசணுமாம்?”என்று சொல்ல… இருவரின் முகத்திலும் என்னமோ ஏதோ என்ற குழப்ப முடிச்சுக்கள் அகன்று தோன்றியதே ஒரு வெற்றிக்களிப்பு தரும் சூட்சுமப் புன்னகை!!
புன்னகை-5
சத்தம் வராமல் இருவரும் அந்தரத்தில் கையுயர்த்தி, உற்சாகத்துடன்… ‘ஹைஃபை’ போட்டுக் கொள்ள….
நாயகியோ… இளித்தவாறே, “மாப்பிள்ள என்கூட தனியா பேசணுமாஆஆம்டீ…”என்று பைத்தியம் போல சிரித்து தலையாட்ட,
மற்றைய தோழியும், அதே போன்ற குதூகலக் குரலில், “ஆ… மாடீ… மாப்… பிள்ள உன்… கூட தனியா பேசணுமாஆஆம்டீஈஈ” என்று இழுத்துச் சொல்ல… இவ்விரு கேடிகளின் எண்ணம் புரியாதவர்கள் யாராவது அங்கு நின்றிருப்பின்,
‘என்னடா நடக்குது இங்க?’ என்று மண்டைக் குழம்பியவர்களாகக் கேட்டிருக்கக் கூடும்!!
ஹப்பப்பா..!! இரு பைங்கிளிகளின் வதனமும் தான்.. ஒளிர்ந்து பிரகாசிக்க.. இருவர் மனமும் மானசீகமாகக் குத்தாடும் போடும் வகையில் தான் என்னேவொரு சந்தோஷம்??
எங்கே வந்தவன்.. சம்மதம் சொன்னதும்… அவளுடன் தனிமையில் பேசாமல் போய்விடுவானோ? என்று உள்ளுக்குள் பதைபதைப்புடன்.. நொடிகளைக் கடத்திக் கொண்டிருந்த மதுராக்ஷிக்கு…
‘பையன் அவளுடன் பேச விழைவதாக’ அவளது தாய் சொல்லவும்.. முகத்தில்.. ஆயிரம் வால்ட் பல்ப் எரிந்தது போல ஒரு மலர்ச்சி!!
உள்ளறையிலிருந்த இரு பெண்களின் விழிகளும்… பளிச்சிட்டு மின்ன… இருவரும் ஒருசேர ஆர்ப்பரிக்கும் குரலில், சுட்டுவிரலை ஒருவர் மற்றையவரைச் சுட்டிக்காட்டும் வண்ணம்,
எதிரெதிராக நின்ற வண்ணம், “சிக்கினான்டா சேகரு!!!”என்று இருவரும் ஒருவரையொருவர்…ஆரவாரப் புன்னகையுடன் கட்டித்தழுவிக்கொள்ளவும் செய்தனர்!!
இதற்கு முன்வந்த மாப்பிள்ளைகள் இருவரையும் தட்டிக்கழித்த உபாயமே… இந்த மாப்பிள்ளையும் விரட்டியடிக் பயன்படப்போகிறது என்றெண்ணும் போது விழைந்த பளிச்சிடல், பிரகாசம்!! மலர்ச்சியே இது!!
இருவரும் கூட்டுக்களவாணிகள் போல கிசுகிசுக்கும் இரகசியக் குரலில் உரையாட சித்தம் கொள்ள, முதலில் வாய் திறந்த தலைவியோ,
“மாப்பிள்ளை தனியாக பேசணும்னு ரூம்க்குள்ள வர்ற… அப்போ நீ மட்டும் தான் இருப்ப… நானில்லாதத பார்த்த மாப்பிள்ளை…”என்றவள்… சட்டென நிறுத்தி..
போலியான கனத்த ஆண்குரலில், “மதுரா எங்கே?”என்று கேட்டவள்.. பின் திரும்பவும் தன் வழமையான குரலில்,
“அப்படீன்னு.. எல்லா மாப்பிள்ளைங்க மாதிரியும் அவனும் கேட்பான்”என்று திட்டத்தைச் சொல்ல நாட, இடையிட்டது என்னமோ தற்போது நிரோ தான்.
குறுக்கே அவசரமாகப் புகுந்தவள், “அப்போ நான்.., “அவள் டிரஸ் மாத்திட்டிருக்கா… இப்போ வந்துடுவா.. அதுவரைக்கும் ஜூஸ் குடிங்க”ன்னு. பக்கத்திலிருக்க டேபிள் மேல மூடி வைச்சிருக்க..ஜூஸ் கிளாஸ நீட்டுவேன்…”என்று சொல்லிக் கொண்டிருக்க… இந்த தடவை இடையிட்டாள் கதாநாயகி!!
“அப்போ ஒரு வேள அவன் வேண்டாம்னு சொன்னா.. நீ.. என் செல்ல நிரோக்குட்டி..அவன குடிக்க…வற்புறுத்தும் சாக்கில் அவன் மேல ஜூஸ கொட்டி விடுறாப்ல கொட்டிவிடுவ!!. இல்லேன்னா, அவன் மறுக்காமல் வாங்கிக்கிட்டா… கைத்தவறுதலாகக் கொட்டுறாப்புல கொட்டி விடுவ??”என்று அவர்களின் நாசகாரத் திட்டத்தையெல்லாம் ஒன்று விடாமல் மதுரா குறும்பு மிளிரும் விழிகளுடன் எடுத்துவிட,
இம்முறை மீண்டும் குறுக்கிட்டு தன்பங்குக்குப் பேசுவது நிரோஷனாவின் முறையாகிப் போனது.
நிரோஷனாவோ… மாப்பிள்ளை மீது பழச்சாறு கொட்டிப்பட்டதை எண்ணி.. பச்சாதபப்படுபவள் போல, வாய் மீது கைவைத்து உச்சுக்கொட்டியவளாக நின்று,
“ஐயோ ஐ ஆம் ரியலி ஸாரிங்க… தெரியாம பட்டிருச்சே”அப்படீன்னுக்கிட்டு.. என் கர்ச்சீப் எடுத்து மாப்பிள்ளை டிரஸ்ஸில்… கொட்டிப்பட்ட இடத்தில் எல்லாம்.. அவர் வேணாம் வேணாம் சொல்லச் சொல்ல துடைப்பேன்..”என்று இவள் விழிகளில் லீலைகள் கூத்தாடக் கூற.. உண்மையில் அப்படி நேருமாயின்.. எந்த ஆடவனும் அந்நியவள் துடைப்பது அநாகரீகமாகக் கருதி… துடைத்தலைத் தடுப்பதற்காக அவளது கைகளைப் பற்றி நிறுத்த முனையத் தானேக் கூடும்!!
அந்தத் தருணம் தானே இவர்களின் திட்டத்தின் திருப்புமுனையே!!! .
இந்த சமயத்தில் உள்நுழையும் மதுராக்ஷி மாப்பிள்ளை நிரோவின் கையைப் பிடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைவது போல… சர்வாங்கமும் உறைந்து.. திகைப்பூண்டை மிதித்தாற் போலத் தான் நடிப்பாள்.
அத்தோடு நில்லாமல்… தன்னை மணம் கொள்ள வந்தவன்.. ‘எப்போதடா வாய் திறப்பான்?’ என்று காத்திருந்து.. அவன் வாய் திறக்கும் பொழுது, கீழ்வருவனவற்றை சொல்லவும் தான் நாட்டங்கொண்டாள் குறும்புக்கார மது.
“ அப்போ என்ட்ரி குடுக்கற நானு… அந்த டோமரப் பார்த்து… கண்ணெல்லாம் டியர்ஸோட, ‘போ… தும்…எதுவும் சொல்லாதீங்க… கல்யாணத்துக்கு முதலே இப்படின்னா.. கல்யாணத்துக்கு அப்புறம்..?? ”அப்படீன்னு.. ரெண்டு சொட்டு தண்ணிய விட்டு.. அழுதுட்டே திரும்பி நின்னுப்பேன்… அத்தோட.. விளக்கம் கொடுக்க பார்த்துட்டு முடியாம… சந்தேகப்புத்தியிருக்கற பெண்ணோட வாழ முடியாதுன்னு அவனும் கிளம்பி போயிருவான்.. ஒரு பக்கத்தில நானும் ஹாப்பி.. நிரோவும் ஹாப்பி… எல்லாரும் ஹாப்பி!! ” என்று அவள் சிறுபிள்ளையாய்க் குதூகலித்துச் சொன்னாள்.
எஞ்ஞான்றும் சிறுபிள்ளைத்தனமும், குதூகலமும், குறும்பும் மாறாமல் இருக்கும் தையல் இவள்!! இவள் தான் மதுராக்ஷி!!
தந்தை பார்த்து அழைத்து வந்த முதல் மாப்பிள்ளையோ.. இந்த நிகழ்வின் பின்னர்.. ‘சந்தேகப்புத்தி உள்ள பெண்ணோடு வாழ முடியாது’ என்று விட்டு செல்ல….
இரண்டாவது மாப்பிள்ளையோ.. திட்டத்தை அமுல்படுத்த வேண்டிய தேவையேயற்று, இவளிடம் தனிமையில் வந்து, ‘எனக்கும் இந்த கல்யாணம் பிடிக்கலேங்க… எனக்கு ஆல்ரெடி ஆளிருக்கு.. என் அப்பா டார்ச்சர் தாங்க முடியாம தான்.. மேம்போக்கா வந்தேன்.. ’ என்று விட்டு சென்று விட்டான்.
இப்போது வந்திருக்கும் மூன்றாதவன்.. அவனை நினைக்கும் போது.. இரு பேதைப் பெண்களுக்கும்.. வெடிச்சிரிப்பு கிளம்பும் போலிருக்க…
“.. ஹஹஹா…” என்று வாய் விட்டுச் சிரித்துக் கொண்டவர்களுக்கு.. அவனை விரட்டுவது ஒன்றும் அத்தனை கடினமல்ல என்பதாகவே பட்டது.
மிகுந்த நேரமாக உள்ளேயிருந்து ஒரு பதிலும் வராமல் போனதை அவதானித்த மதுராக்ஷியின் தாயோ.. அவளின் அறைக்கதவை பலமாகத் தட்டியவளாக,
“மதூ.. மதூ..”என்று மீண்டும் மீண்டும் கதவைத் தட்டித் தட்டியழைக்க… சிந்தனை கலைந்து நடப்புக்கு வந்தனர் இரு எமகாதகிகளும்!!
இனிமேலும் தாமதியாது பட்டென்று உரத்த குரலில், “இதோ வர்றேன்மா….”என்று குரல் கொடுத்தவள்…
தோழி நிரோவைப் பார்த்தவளோ, அட்டாச்டூ பாத்ரூமை நோக்கி நகர்ந்தவளாக, “ஹேய் நீ போய் கதவைத் திறடீ…நான் போய் சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு வந்துர்றேன்”என்றவளாக குளியலறையில் புகுந்து கொள்ள,
நிரோவும்… உள்ளே வரும் மாப்பிள்ளையிடம் என்ன என்ன சொல்ல வேண்டுமென்று ஒன்றுக்கு மூன்று தடவை ஒத்திகைப் பார்த்துக் கொண்டே… குடுகுடுவென ஓடிப் போய் தாழ் திறந்தாள்.
அங்கோ… தோழியின் தாய் இல்லாது போகவே..கையில் பளபளக்கும் வண்ணத் தாள்களினால் பொதிசெய்யப்பட்ட ஒரு அன்பளிப்புடன்.. மாப்பிள்ளையாகப்பட்ட.. ஆணழகன் நின்று.. வசீகரமாகப் புன்னகைப்பது தான் புரிந்தது நிரோவுக்கு.
தாயெங்கே?? நின்று நின்று பார்த்திருந்து விட்டு… முடியாமல் சென்று விட்டாரோ?? பாவம் என்ன முக்கிய அலுவலோ!!
அவனது டீஷேர்ட்டுக்கும் மேலாகப் புடைத்துத் தெரிந்த மார்புகளும், இராட்சத தோள்களும் பார்க்கும் போதே.. இவன் மணிக்கணக்கில் ஜிம்மில் மெனக்கெடுக்கிறவன் என்பதை அனுமானித்துக் கொண்டாள் நிரோ!!
கதவினருகே நின்றிருந்தவன்… அவளைப் பார்த்து ஓர் மென்புன்னகை உதிர்த்த போது.. பளிச்சிட்டுத் தெரிந்த முத்துப்பற்களின் ஜோடிப்பில் ஒரு நிமிடம் விக்கித்து நின்று…
கண்களை படபடவென இமைத்துக் கொண்டு தன்னைத் தானே சமாளித்து நின்றவளோ, “வா.. வா.. வாங்க சார்.. உள்ளே வாங்க”என்றழைக்க… நாகரிகம் கருதும் ஆண்மகனும்… மதுராக்ஷி மாத்திரம் அறையில் தனித்திருந்தால்… உள்ளே நுழைந்திருக்க மாட்டான் தான்!!
ஆனால், அவ் வசீகரமானவனோ.. மதுராக்ஷியும், அவன் தோழியுமாக… இரு பெண்கள் அவ்வறையிலிருக்கும் போது உள்ளே நுழைவது… பெண்ணுக்கு அகௌரவம் விளைவிக்காது என்று கருதி.. மீசை சூழ்ந்த அதரங்கள் இன்பமாய் வளைய புன்னகைத்துக் கொண்டே உள்ளே நுழையலானான் அவன்!!
உள்ளே வந்தவனின் கண்களோ.. இலேசாக அவ்வறையை நோட்டம்விட்டுக் கொண்டே.. தான் தேடி வந்தவளை.. இதயம் அலைப்புறத் தேட… அவன், ‘யாரைத் தேடுகிறான்?’ என்று அவன் சொல்லாமலேயே புரிந்து போனது நிரோவுக்கு!!
மெல்லிய நயக்கும் குரலில், “மது.. உள்ள… டிரஸ் மாத்திட்டு இருக்கா… இப்போ வந்துடுவா…”என்று சொல்ல… மெல்ல ஆமோதிப்பாக தலையசைத்தவனின் பார்வை.. இம்முறை அறையைத் தான் அதீத கவனத்துடன் நோட்டம் விடலானது.
எல்லாவிடத்திலும் வெண்ணிறப்பூச்சுக்கள் பூசப்பெற்று, ஆங்காங்கே மிளிரும் ‘ஓர்னமென்ட்ஸ்” தொங்க… குறும்புக்காரியின் அறை அவளைப் போல வித்தியாசமான அழகுடன் திகழ்ந்தது.
இதயவடிவம் கொண்ட காற்றிலாடும் ஓர்னமென்ட்டினை இரசித்துப் பார்த்தவாறே, நிரோவிடம், “இதுவெல்லாம் அவங்க தேர்வா?”என்று கூடுதலாய் ஒரு கேள்வி கேட்க,
மெல்ல மெல்ல அடிமேலே அடி வைத்து மேசை மீதிருக்கும் ஜூஸ் கிளாஸினை எடுக்கப் போனவள்.. நடையைத் தடைப்படுத்தி நிறுத்தி, திக்கும் குரலில், “ஆ.. ஆ.. ஆமா சார்..மதுவுக்கு ஓர்ணமென்ட்ஸ்னா ரொம்ப இஷ்டம்.. அதான்.. ரூம் புல்லா… மாட். டி வை.. ச்சி.. ருக்கா.. ”என்றவள்.. ஒருவாறு பழச்சாற்றுக் குவளையைக் கையில் ஏந்தி ஒரு நடுக்கத்துடனேயே அவ்வழகனை நாடிப் போகலானாள்.
காரியம் சொதப்பி விடுமோ என்ற அச்சம் ஒருபுறம் உள்ளுக்குள் முகிழ்த்துக் கிடந்தாலும்.. அதை இம்மியும் வெளிக்குக் காட்டாமல்,
அதை அவன்புறமாக நீட்டி, “ம.. மது… வர்ற வரைக்கும் இந்த ஜூஸ குடிங்க சார்…”என பானத்தை நீட்ட… எண்ணியது போலவே அவன் எடுக்க மறுத்துத் தான் போனான்.
இனிய ஆடவனும்.. நாசூக்காக நிராகரித்து விடும் தோரணையில், “இல்லைங்க.. வேணாம்… தேங்க்ஸ்!!”என்றதும் கேட்டு விடுவாளா அவள்??
பின்னே.. மாப்பிள்ளையை நிராகரிக்க..போட்ட திட்டமும் தான் பாழாகித் தான் போவதோ??
அதனால் மீண்டும் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல பேசிப்பார்க்க நாடியவளோ, பவ்யமான குரலில், “என்ன சார்..? முதல்முறையாக அவ ரூமுக்கு வந்திருக்கீங்க.. ஏதும் சாப்பிடாம போனா எப்படி சார்?? ”என்றவாறே…
அடுத்து இரு கள்ளிகளும் திட்டமிட்டது போல விடாமல் “வற்புறுத்தல்”என்னும் அஸ்திரத்தையும் தான் கையிலெடுக்க முனைந்தாள்!!
இவளோ அவன் கைகளில் ஜூஸை வலுக்கட்டாயமாகத் திணித்து, அவன் புறமாகத் தள்ளித் தள்ளி, “ப்ளீஸ் சார்.. எடுத்துக்குங்க சார்… ப்ளீஈஈஸ்”என்று உரைக்க,
அவனோ கைகளில் திணிக்கப்பட்ட பழச்சாற்றுக் குவளையை மறுத்து.. நிரோவின் புறமாக தள்ளியவனாக, “ஐயோ என்னங்க இது.. உங்களோட வம்பா போச்சு.. வேணாங்க.. ஐயோ சொல்றத கேளுங்க.. வேணா” என்று ஜிம்பாடிக்காரனும் , வேண்டாம் வேண்டாமென மறுக்க… உரிய தருணத்திற்காக காத்திருந்த வித்தாரக்கள்ளியோ… சட்டென்று அவனது இளநீலநிற டீஷேர்ட்டில்… ஈவிரக்கமே பாராது ஜூஸினைக் கொட்டி விட்டாள்!!
எல்லாமே திட்டமிட்டாற் போல நடப்பதையெண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்த வண்ணம்,
வெளியே அவன் நிலையெண்ணி வருந்துவது போல.. அதிர்ந்து வாய் மீது கைப்பொத்தி… விழிகள் அகல நின்றவளோ, “ஐயோஓஓ!! ரியலி ஸாரி சார்.. நான் ஒண்ணும் வேணும்னு செய்யல.. தெரியாம தான்.. கொட்டிப்பட்டிருச்சி…” என்றுரைத்தவள்.. தங்கள் திட்டத்தின் அடுத்தபடிக்கும் தான் செல்லலானாள் அவள்!!
கையிலிருந்த கண்ணாடிக் குவளையை எடுத்து மேசை மீது வைத்து.. நிமிர்ந்து… தனது கைக்குட்டையை எடுத்து அவனது டீஷேர்ட்டை…. அவன், “வேணாங்க.. பரவாயில்லைங்க”என்று எவ்வளோ கூறியும் விடாது..
நிரோ அவனது மார்பகுதி மேல் கைவைத்து துடைத்துவிட முற்பட.. தன்னை அநாகரீகமாகத் தொடும் அவள் கரங்களை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டான் அவன்!!
நிரோவின் அத்துமீறல் எண்ணி சிறுகோபமும் எட்டிப்பார்க்க, அழுத்தமான அதட்டும் தொனியில், “அது தான் வ்வேணான்னு சொல்றேன்ல? ஒருவேள டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்ற “அண்ணி”.. இந்த கோலத்தில் என்னை உங்க கூட பார்த்தாங்கன்னா… என்ன நினைப்பாங்க?.. ப்ளீஸ் விடுங்க… ”என்று சொன்னது மட்டும் தான் தாமதம்!!
நிரோ அதிர்ந்து கண்கள் முட்டைப்போல விரிய, மூச்சுப்பேச்சற்று நின்றவளுக்கு..அவன் செப்பியது காதுகளில் அவன் விளிப்பு சரியாகத் தான் விழுந்ததா என்று சந்தேகித்தவளாக,
“எதே.. அண்ணியா?”என்று திரும்பக் கேட்டாள்!!
இலேசான சங்கோஜ உணர்வு அவனுள் ஊடுருவிப் பாய, “அப்படீன்னா…என் அண்ணனை கல்யாணம் கட்டினப்பறம் தான் அண்ணின்னு இல்லையே… அண்ணனுக்கு நிச்சயம் பண்ணவிருக்கற பொண்ணும் அண்ணி தானுங்களே!! ”என்று கூற நிரோ அதிர்ந்து போனாள்.
என்னது?? மதுராக்ஷி இவனுக்கு அண்ணியா?? எனில், இஇஇவன்?? மாப்பிள்ளையின் தம்பியா?? அப்போ மாப்பிள்ளை??
அந்தோ பரிதாபம்!!
தோழியோடு முன்னறையில் நின்றிருப்பவன் தன்னைப் பெண்டாள வந்தவனல்ல என்பதை அறியாதவளோ… அச் சமயம் பார்த்து.. சாதாரண சேலைக்கு மாறியவளாக… ‘எல்லாம் திட்டப்படி தான் நிகழ்கிறது’ என்றெண்ணிக் கொண்டு… உல்லாசமாக சிரித்தபடியே தான் உள்நுழைந்தாள் மதுராக்ஷி.
அங்கே தன் தலையில் இடி விழவிருப்பது அறியாத அப்பாவியாக!!
மது குளியலறையிலிருந்து வருவதைக் கண்டதும் டக்கென்று… மதுராக்ஷியின் கொழுந்தனாக விதிக்கப்பட்டவன்… பட்டென்று நிரோவின் கைகளை.. ஒருவித சங்கடத்துடன் விடுவிக்க, அது தான் நிகழுமென்று முன்கூட்டியே அறிந்தவளாயிற்றே கேடி நாயகியும்??
அவள்.. ஏதோ காணக்கூடாத அசம்பாவிதத்தைக் கண்டாற் போல.. சற்று அதிர்ந்தவளாய்…திகைத்து..உறைந்து நின்ற இடத்திலேயே நின்று விட.. உண்மையில்… ஜிம்பாடிக்காரனுக்கும் ஒருவித அவமானமாகித் தான் போனது வருங்கால அண்ணியின் முன் தான் நின்றிருந்த நிலையை எண்ணி!!
நிரோவோ… ‘நாங்கள் சேட்டை செய்யவிருப்பது தவறான ஆள்’ என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், ஜிம்பாடிக்காரனின் பின்னாடி நகர்ந்து… கைகளை மறுப்பாக ஆட்டி, மோனமாக வாயை மட்டுமசைத்து, “ஆள் மாறிப் போச்சு.. ஆள் மாறிப் போச்சு” என்றவண்ணம் தலையை ஆட்டிக் கொண்டு சொல்ல… அதுவெல்லாம் எங்கே புரிந்தது நம் தத்தி ஹீரோயினுக்கு??
நிரோவின் செய்கையின் அர்த்தங்களெல்லாம், ‘மேலே கன்டினியூ பண்ணு.. கன்டினியூ பண்ணு’ என்று சொல்வது போலிருக்க… அதன்படி நடக்க நாடி… நாடகத்தை தொடரவும் தான் நாடினாள் மதுராக்ஷி!!
போலியாக விழிகளில் நீலிக்கண்ணீர் உகுத்தோட.. முகமெல்லாம் செந்நிறங்கொண்டு வாட… தொண்டையில் அடைத்ததை விழுங்கிக் கொண்டு…வார்த்தைகள் வராது நிற்பவள் போல… போலிச் சிலையாகிப் போனது ஓர் மெழுகுச்சிலை!!!
தன் வருங்கால அண்ணி தன்னை தவறாக எண்ணிக் கொண்டது தாங்கொணாது… அவனும் ஏதோ சொல்ல வாய் திறந்தான்.
இது தான் சந்தர்ப்பமென அவளும், தன் கொழுந்தனை பேசவிடாது கையுயர்த்தித் தடுத்தவளோ, தழுதழுத்த உள்ளம் உருக்கும் குரலில்,
“போ.. போ… போதும்.. ஏதும் சொல்லாதீங்க.. நா.. நான்தான் எ.. எல்லாத்தையும் கண்முன்னாடி பார்த்தேனே…இதுக்கப்றமும் எஎன்ன வேணும்.. எ.. எ.. என்னை கட்டிக்கப் போறவர்.. இப்படிப்பட்டவர்னு எனக்கு இப்பவே தெரிஞ்சதே நல்லது!! ”என மதுராக்ஷி கூற…
அண்ணியின் கூற்றுக்கள் கேட்டு.. ஜர்க்காகி இடையிட்டவனோ, “ஐய்யோ.. முதலுக்கே மோசமாகிரும் போலிருக்கே… என்னை தப்பா புரிஞ்சிட்டிருக்கீங்க “அண்ணீ””என்று அவன் உதிர்த்த ஒற்றை வார்த்தை,
அந்த “அண்ணி”என்ற ஒரே ஒரு வார்த்தை.. அது மட்டும்.. அவ்வறையின் நாலாபுறமும் எதிரொலித்து எதிரொலித்து.. அவள் செவிப்பறையில், “அண்ணீ.. அண்ணீ.. அண்ணீ!!”என்று கேட்பது போல ஒலிமயக்கம் எழுந்தது அவளுள்!!
அண்ணியா?? இவன் என்ன நவில்கிறான்?? என்று புரியாமல் இவள் பேந்தப் பேந்த விழித்திருக்க… வந்தவனோ, .
“நான் மாப்பிள்ளை இல்லை..நான் மாப்பிள்ளையோட பெரியம்மா பையன்.. அவரோட தம்பி.. விக்னேஷ்!! எல்லாரும் என்னை விக்கின்னு கூப்பிடுவாங்க.. ”என்று அவனே.. அவளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள,
மதுராக்ஷியோ தன் விதியை எண்ணி நொந்து நூடில்ஸாகி.. தலைச்சுற்றி விழாத குறை தான்.
ஆனால் எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொண்ட விக்னேஷோ, சிரித்த முகமாக, “ஆனா ஒண்ணு மட்டும் அண்ணி.. அண்ணன் கொடுத்து வைச்சவர்… கல்யாணத்துக்கு முன்னாடியே தனக்கு வரப்போற ஹஸ்பண்ட் மேல… இவ்ளோ பொஸஸிவ்வா??அப்போ கல்யாணத்துக்கு அப்றம்.. எப்டி பார்த்துப்பீங்க.. நினைக்கும் போதே புல்லரிக்குது.. ”என்று சொல்ல.. அவளுக்கு உள்ளே பற்றியெரிந்தது.
‘ உன் வாயால் இதனை கேட்கவா இத்தனை நாடகமும்??நடிப்பும்!! அடச்சே அசிங்கமா போச்சே குமாரு’ என்பது போல முகபாவனையுடன் முகத்தில் அசடுவழிய.. தலைகுனிய நின்றிருந்தாள் அவள்.
“அண்ணி..” என்ற அவன் குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தவளுக்கு, ‘ ஐயோ உன் கால்ல வேணா விழுறேன்டா.. தயவு செஞ்சு அண்ணின்னு மாத்திரம்.. சொல்லாதேடா.. எனக்கென்னமோ.. இப்பவே கல்யாணமான பீல் வருது’ என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு அவள் நின்றிருந்த நேரம் கேட்டது விக்கியின் குரல்!!
“ஆக்ச்சுவலி அண்ணன் இன்னைக்கு ரொம்ப பிஸி.. அதனால தான் வர முடியல… உங்க போட்டோ பார்த்ததும் அவருக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருச்சு… அதான் இந்த கிப்ட்.. இத உங்க கிட்ட கொடுக்க.. சொன்னாரு”என்று கையோடு வந்திருந்த அன்பளிப்பை அவள் புறமாக நீட்டிச் சொல்ல,
‘பெண்ணைப் பார்க்க வராதவனுக்கு.. அன்பளிப்பு ஒரு கேடு’ என்று உள்ளுக்குள் திகுதிகுவெனப் பற்றியெரிந்தது அவளுக்கு!!
முகமறியா மாப்பிள்ளை மீது கொலைக்காண்டிலிருந்தவளோ.. விக்கி தந்த அன்பளிப்பை உடனே வாங்கி ‘ஆன் தி ஸ்பாட்’டிலேயே.. தாறுமாறாகப் பிரிக்கவாரம்பிக்க….
அதற்குள் குறுக்கிட்டுத் தடுத்த விக்னேஷோ, “இல்ல அண்ணி… அண்ணன்.. இத தனிமையில் பிரிச்சுப் பார்க்க சொல்லிச் சொன்னான்” என்று கூற,
பொதி செய்யப்பட்ட காகிதத்தில் வைத்த கை.. வைத்தது போல அப்படியே நிற்க, இதழ் குவித்து விழிகள் விரிய “ஓ.. அப்படியா?”என்று.. உள்ளுக்குள் கனன்ற கோபத்தை அடக்கிக் கொண்டு வண்ணம் வாளாவிருந்தாள் அவள்.
அவனும் சிறு புன்னகையுடன், “அப்போ நான் கிளம்பறேன் அண்ணி” என்று அவளிடம், நிரோவிடம் விடைபெற்றுக் கொண்டு.. அங்கிருந்து நகர்ந்தது மாத்திரம் தான் தாமதம்..!!
நடந்ததைக் கேட்கவா வேண்டும்??
இதுவரை ஆள்மாறிப் போனதை எண்ணி எண்ணி உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த வெடிச்சிரிப்பொன்று நிரோவிடமிருந்து கிளம்ப… கட்டிலில் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினாள் அவள்!!
அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டே, “ஆள் மாறிப்போனது கூட ஓகே டீ… ஆ.. ஆனா ஹஹஹா… அவனை மாப்பிள்ளைன்னு நினைச்சிக்கிட்டு நீ சொன்ன டயலாக்… ஹஹஹா….வேற லெவல்!! ” என்று முடியாமல் மீண்டும் மீண்டும் சிரிக்க. மதுராக்ஷிக்கோ உள்ளுக்குள் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது.
அவளோ… மாப்பிள்ளை என்றெண்ணி வேற்றாடவனிடம் பல்பு வாங்கியிருக்கிறாள்!!! எல்லாவற்றுக்கும் மேலாக பிடிக்காத கல்யாணமும் நடந்தேறப்போகிறது!!
இத்தனை அசம்பாவிதம் ஒரே நாளில் நடந்தேறியிருக்க… இவளுக்கு என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கிறது என்று எண்ணி சினம் கொண்ட மதுவோ,
கட்டிலில் குப்புறப்படுத்து… மெத்தைக்கு அடித்து அடித்து சிரிக்கும் நிரோவின் பிருட்டத்திற்கு கையிலிருந்த அன்பளிப்பாலேயே ஓங்கி அடித்தாள்.
அதீதக் கடுப்புடன் தலைவியும், “என்னடீ சிரிப்பு உனக்கு?! இப்போ சிரிப்ப நிறுத்தப் போறீயா.. இல்லையா?”என்று உரத்துக் கேட்க..
மல்லாக்கத் திரும்பி.. தோழியின் பத்ரகாளி முகத்தைப் பார்த்த நிரோவின் சிரிப்பு தானாக நின்றது.
தோழியின் கோபத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிரோவோ.. மற்றையவள் கையிலிருக்கும் கிப்ட் பாக்ஸை பிடுங்கியெடுத்தவளாக, “அதைக் கொண்டா..உன் அன்புள்ள மன்னவன்.. என்ன அனுப்பியிருக்கான்னு நாமளும் பார்க்கலாம்”என்றபடி…
கட்டிலில் அமர்ந்திருந்தவாறே… அன்பளிப்பினைப் பிரிக்க.. அதிலிருந்ததுவோ… ஐந்தாறு இலட்சம் விலை போகக் கூடிய காலத்தாலும் மங்காத புகழ் கொண்ட ராஜப்பட்டு!!
அந்த சிவப்பு நிற சேலையின் வனப்பைக் கண்டு… வாய் பிளந்து நின்ற நிரோவோ, “வாஆஆவ்… சூப்பர் செலெக்ஷன்!!! மாப்ள இரசனைக்காரர் தான்… ஹேய்… உள்ளே ஏதோ லெட்டரும் இருக்குடீ”என்றவளாக… அதையும் எடுத்துப் படிக்கலானாள் கத்தி.
அதிலிருந்தது, “ஸாரி மூன்று புள்ளி ஒரு ஆச்சரியக்குறி!!” என்று நிறுத்தற்குறிகளைக் கூட விடாமல் நிரோ உரத்த குரலில் படித்துக் காட்ட..மதுராக்ஷிக்கு… முகமறியா “ராம்கி”யின் மாப்பிள்ளை மீது… இன்னும் கொஞ்சம் கனன்று கனன்று வந்தது ஆத்திரம்.
அவன் வராமைக்காக மன்னிப்பு வேறு!!
யார்க்கு தேவை இந்த மன்னிப்பு எல்லாம்??
தேவையா.. ஆள் மாறி இன்னொருவனிடம் பல்பு வாங்கியதுவெல்லாம்???
வீம்புப் பிடிக்காமல் தந்தை காட்டிய மணவாளனின் புகைப்படத்தில் முகத்தை உற்றுப் பார்த்திருக்க வேண்டுமோ?? பார்த்திருந்தால் இந்த அசடுவழிதல், அவமானம், இழுக்கு எல்லாம் நேர்ந்திருக்காதல்லவா?? என்று எண்ணியவளுக்கு…
தந்தை “ராம்கி” பார்த்த மாப்பிள்ளையை பாராமலேயே பிடிக்காமல் போனது!!
தோழி கையிலிருந்த கடிதத்தை.. வெடுக்கென்று பிடுங்கி வாங்கி.. நார் நாராகக் கிழித்தெறிந்து விட்டு செஞ்சீற்ற முகமாக நின்றிருந்தவளுக்கு…
ஏனோ.. இங்கே கேட்கப்பட்ட “ ஸாரி… மன்னிப்பு” எல்லாம்.. “அவன்.!! .”..
கண்ட முதல்நாளிலேயே தலையாலேயே தண்ணீர் குடிக்க வைத்த “அவன்!! ”…
அவளுடைய பாஸ் “அஜய்தேவ் சக்கரவர்த்தி!!” கேட்டிருந்தால்.. இதமாயிருக்கும் போலிருந்தது.
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌