மோகனம்-6
மாப்பிள்ளை வீட்டார்… அவளைப் பார்த்து சம்மதம் சொல்லி விட்டுச் சென்ற அதே நாள்!!
இரண்டாம் ஜாமம் கழிந்த.. நடுநிசி நெருங்கிக் கொண்டிருந்த.. அந்தகாரம் கமழும் இரவு!!
தூரத்தே நாயொன்று ஈனமான குரலில் ஊளையிட்டு அடங்க… அவறையில் நிலவிக் கொண்டிருந்த மயான அமைதியை குலைக்கும் வகையில், “டிக் டிக்..”என்ற சப்தத்துடன் ஆடிக் கொண்டிருந்தது கடிகாரம்!!
சின்ன முள்ளும், பெரிய முள்ளும் நள்ளிரவில் கூடும் இரகசிய காதல் கூடலுக்காக ஊர்ந்து ஊர்ந்து ஓடிக் கொண்டிருக்கலானது.
தற்போது நேரமோ சரியாக “பதினொன்று பத்து”என்று காட்டிக் கொண்டிருந்தது அதே கடிகாரம்!!
மதுராக்ஷியின் வீட்டில் எல்லாரும் நன்றாக உறங்கி விட்டிருக்க… அவள் மட்டும்..தூக்கமென்பது மருந்துக்குமின்றி..தன் உருண்டு திரண்ட நயனங்கள் விரித்து மொட்டு மொட்டு என்று விழித்துக் கொண்டிருந்தாள்… சரியான நேரம் வரும் வரை, “இலவு காத்த கிளி போல”.
‘இதோ அவளுக்கான தருணம்’என்று மனம் வேறு அபாயச் சங்கினை ஊத, மெல்ல எழும்பினாள் மதுராக்ஷி தன் மஞ்சத்திலிருந்து…. அவளுக்கு செய்து முடிக்க வேண்டிய சுவாரஸ்யமான வேலையொன்றினை நிறைவேற்றுவதற்காக.
தான் அணிந்திருந்த இரவு நேர பைஜாமா மற்றும் தொளதொளவென்ற சட்டைக்கு மேலாக… ஒரு முந்தானையை எடுத்து தன் கூந்தல் முழுவதையும் மறைத்துக் கட்டி… முக்காடு அணிந்து கொண்டாள் பெண்!!
மெல்ல மெல்ல பூனை போல்.. தன்னறையின் மாடிப்படிகளை விட்டும்.. இறங்கி வந்தவளின் கையில் அடைக்கலமாகியிருந்தது டார்ச் லைட்!!
ஒரு விளக்குக் கூட ஒளிராமல் வீடே இருள் வெள்ளத்தில் மூழ்கியிருக்க… அங்குமிங்கும் டார்ச் லைட்டைப் பிடித்து பிடித்து… நோட்டம் விட்டவளாக… ‘யாராவது வருகிறார்களா? வருகிறார்களா?’ என்று அதீத எச்சரிக்கைப் பார்வையுடனேயே ஹாலைக் கடந்து நடக்கலானாள் அவள்.
சொந்த வீட்டிலேயே திருடி போல.. தன்னடையாளத்தை மறைத்து நடமாடும் காரணமும் யாதோ?? வலிய காரணமும் உண்டு!!
யாருமறியாமல்… குறிப்பாக… அவளுடைய ஹிட்லர் தந்தையறியாமல்… வீட்டை விட்டும் செல்ல நாடி… பதுங்கிப் பதுங்கி நடந்து வந்து கொண்டிருந்தவளுக்கு..
நடு இரவில் வீட்டை விட்டுச் செல்வது என்பது புதிதா என்ன??
இல்லவேயில்லை. மாறாக இதுவெல்லாம் சர்வசாதாரணமாக நிகழ்வதாகையால்.. மதுராக்ஷிக்குப் பழக்கப்பட்டதே.
கல்லூரி நாட்களிலிருந்து… நள்ளிரவுக்கு மேல்.. வீட்டில் யாருக்கும் தெரியாமல்… “ஹாஸ்டலர்ஸ்” என்னும் விடுதியில் தங்கிப் படிக்கும் நண்பிகளுடன்…. எத்தனையோ தடவை… தியேட்டரிற்குச் சென்று “பர்ஸ்ட் டே.. பர்ஸ்ட் ஷோ”வும் அநாயசமாகப் பார்த்தவளும் அவளே!!
அதனால், இன்று சின்ன பதற்றம்… மதுராக்ஷியிடம் தொற்றிக் கொள்ள.. நள்ளிரவில் நடமாடும் அச்சம் கிஞ்சித்துமின்றி… அவளது சொந்த வீட்டில் நடமாடும் அச்சம் தான் வெகுவாக அவளை ஆட்டிப் படைக்கலானது.
பைய்யப் பைய்ய… அரவமேயெழுப்பாது திருடனைப் போல… ஹாலைக் கடந்து… வாசற்கதவினருகே சென்று… கைகளும் கதவின் பிடியை நோக்கி நீண்ட போது… பின்னேயிருந்து திடுமெனக் கேட்டது ஒரு குரல்!!!
அந்தக் குரலில்… சர்வாங்கமும் ஆடி உறைந்து போய்… கதவின் பிடியை நோக்கி நீண்ட கைகளும் தான் அப்படியே ஸ்தம்பித்து நின்றது நின்றும் போயிற்று!!
எனில், அவளை உறைய வைக்கும் குரல் யார்க்குரல்??
அது. மதுராக்ஷியை.. இருளிலும் துல்லியமாக அடையாளம் கண்டறிந்து, “அக்கா” என்றழைக்கும் தங்கை திவ்யாவின் குரல்!!
எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்ட மதுராக்ஷியின் பெரிய நயனங்களும்.. அங்குமிங்கும் கடகடவென ஓடித்திரிய… அவளின் பாழும் மனமோ, ‘ஐயோ… போயும் போயும் ஒரு குட்டிச்சாத்தானிடமா இந்த நேரம் மாட்ட வேண்டும்… எல்லாம் தலைவிதி’ என்று நொந்து கொள்ளவும் செய்தது.
அசடு வழியப் புன்னகைத்துக் கொண்டே, ஒளிரும் டார்ச் லைட்டுடன்… பாசத்துடன் தங்கையை அழைப்பது போல, “தங்கச்சீ…”என்று திவ்யாவை அழைத்துக் கொண்டே திரும்பினாள் மதுராக்ஷி!!
தன் தங்கையிடம் நள்ளிரவில் கையும், களவுமாகப் பிடிபட்ட மதுராக்ஷி!!
கைகளை குறுக்காய் கட்டிக் கொண்டு.. விழியுயர்த்தி,தமக்கையை உச்சாதி பாதம் வரை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்த திவ்யாவோ,
“எங்கேக்கா இந்த நேரத்துல கிளம்பிட்டிருக்க?”என்று கேட்க .. மதுராக்ஷி என்ன பதில் சொல்லி தங்கையை சமாளிப்பதென்றறியாமல்… திக்குமுக்காடித் தான் போனாள்.
ஐயுறும் முகத்தை வெளிக்காட்டாமல்.. முதலில்தன்னைத் தானே சமாளித்த வண்ணம், தங்கையைப் பார்த்த மதுராக்ஷியோ,
திக்கித் திணறிய குரலில், “அ… அ.. அது.. அது வந்து… தூக்கம் வரலையா? அ.. அ… அதான்.. அப்டியே நம்ம கார்டன்ல காலாற நடந்துட்டு வரலாமேன்னூஊ..”என்று இழுக்க…. தங்கை திவ்யாவின் ஒற்றைப் புருவமோ இன்னும் கொஞ்சம் மேலுயரலானது.
அவள் தமக்கைச் சொல்வதை நம்பவில்லை என்பதை திவ்யாவின் முகபாவனையே காட்டிக் கொடுக்கலானது.
“இத நாங்க நம்பணுமோ?உனக்கு கல்யாணம் பிடிக்கலைன்னு வீட்டை விட்டே ஓடப்பார்க்கிற.. அதானே..? ”என்று சுட்டுவிரல் காட்டிக் கேட்க… அதைக் கேட்டிருந்த மதுராவின் கண்களும் தான் அகல விரிந்தது.
அதிர்ச்சி அதீதமாகத் தொனிக்கும் குரலில், “எதே?? கல்யாணம் பிடிக்கலைன்னு வீட்டை விட்டே ஓடப்பார்க்கிறேனா?? ஓடிப்போறவ நைட் டிரஸ்ஸோடயா ஓடிப்போவா?? கையில பேக்.. அட்லீஸ்ட் டிகிரி சர்டிபிகேட் கூடவா எடுக்காம போவேன்… யோசிக்க வேணாம்…?? மரமண்டு”என்று தங்கையைத் தாவி…
திவ்யாவின் உச்சி மண்டைக்கு ஒரு குட்டு வைக்கவும் செய்தாள்.
தமக்கையின் வலிக்காத குட்டை.. உள்ளங்கையால் தேய்த்து விட்டுக் கொண்டே திவ்யாவும், புரியாதவளாய், “பின்னே… இந்த நேரத்தில்… யாருக்கும், சொல்லாம கொள்ளாம வெளியே போனா… என்ன நினைப்பாங்க?”என்று தான் கேட்டாள்.
வைராக்கியம் மிளிரும் விழிகளுடன், “… அதுக்காக ஓடிப்போறேன்னு நினைச்சுக்குவீயா?? நான் ஓடிப்போக எல்லாம் மாட்டேன்… தில்லா ஓரிடத்தில் நின்னு ஜெயிப்பேன்டீ… பார்க்கலாம்.. நானா.. இல்ல அந்த கிழட்டு ராம்கியான்னு”.. என்று உள்ளுக்குள்ளேயே.. பிடிக்காத திருமணத்தை ஏற்பாடு செய்த தந்தையை எண்ணி கறுவிக் கொண்டிருந்த போது… தமக்கையின் கறுவலோ? சபதமோ எதுவுமே இளையவளைப் பாதித்தாகத் தெரியவேயில்லை.
திவ்யாவோ… ‘கொக்குக்கு ஒன்றே மதி என்பது போல… தமக்கை நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேற விழையும் காரணம் அறிய நாடியவளாக, “ஓகே… எல்லாம் கரெக்ட்டு தான்… தலையில ஒரு ஸ்கார்ப்.. கையில ஒரு டார்ச் லைட்டோட… எங்கே போற??”என்று திரும்பத் திரும்ப அதே கேள்வியைக் கேட்கலானாள் இளையவள்.
தங்கையின் விடாத கேள்வியில்…. பற்களை நறுநறுவெனக் கடித்து எரிச்சலுற்ற மதுராக்ஷியோ…இழுத்துப் பிடித்த பொறுமையுடன்…
கடிய தொனியில், “போகும் போது எங்கே போறோம்னு கேட்டா எப்டீடி விளங்கும்??… என்னை விட வயசுல சின்னவ நீ… நீ கேட்டா… நான் சொல்லிரணுமோ… ஒழுங்கு மரியாதையா மூடிட்டு போய்… கவுந்தடிச்சு படு.. போ”என்று அங்கிருந்து தங்கையை விரட்டவும் தான் செய்தாள் அவள்!!
இளையவளா தமக்கையின் சொல் கேட்டு நடக்கவும் கூடும்??
அப்போதும் மார்புக்கு குறுக்காக கட்டிய கைகளை இறக்காமல், “சரி…. வயசுல சின்னவ நான் கேட்டா தானே தப்பு…இந்த வீட்டிலேயே பெரியவர்… நம்ம பெத்தவர்ர்ர்… அப்பாக்கேட்டா தப்பில்லைல்ல… அவர்ட்ட சொல்லு…”என்று பெரும் குண்டைத் தூக்கிப் போட்டவள்…
தந்தையின் மேல்மாடி அறைப்பக்கம் அண்ணார்ந்து நோக்கி, “அப்….”என்று குரல் கொடுக்க ஆரம்பித்த நொடி… மதுராக்ஷியின் குறும்பான.. துடிப்பான முகமும் தான் இருண்டு தான் போனது.
எது தந்தையிடம் சொல்வதா?? விஷயமறிந்தால் என்ன நடக்கவும் கூடும்??
வீட்டின் நடுக்கூடத்தில் தொங்கும்…. லைசன்ஸ் கொண்ட ரைபிள் எடுத்து…நெற்றிப் பொட்டில் வைத்து… சுட்டாலும் சுடக்கூடும் அவளின் ஹிட்லர் தந்தை!!
அதே சமயம், ‘இனி திவ்யாவிடம் எதையும் மறைத்துப் பிரயோஜனமில்லை’ என்று தோன்ற… தன் குட்டு வெளிப்பட்டதை உணர்ந்தவள்.. கண்களில் சோர்வை காட்டி, பெருமூச்சொன்றை விட்டவளாக,
தோல்வியை ஒப்புக் கொள்ளும் பலவீனமான குரலில், “இட்ஸ்.. நிரோஷனா’ஸ் பர்த்டே… அது தான்.. மிட்நைட்ல சர்ப்ரைஸ் செலிப்ரேஷன்… பண்ணலாமேன்னு பார்த்தேன்..”என்று சொல்ல… மறுவிநாடி கேடி திவ்யாவின் விழிகள் இரண்டும் பளிச்சிட…
மின்னல் வேகத்தில் சொன்னாள் “அப்போ நானும் வர்றேன்” என்று.
அதைக் கேட்டு ஜர்க்கானவள் போல.. திகைத்து நின்று போன மதுராக்ஷியோ, “ஆ..?? என்னது.. நீயும் வர்றீயா.. நோ.. நோ.. வே… இ.. இது… கேர்ள்ஸ் பாட்டி… நீயெல்லாம் வரக்கூடாது”என மதுராக்ஷி கண்டிப்பாய் மறுத்துக் கூற, திவ்யாவோ தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல விடாப்பிடியாகவே நிற்கலானாள்.
தன் மடியில் கைவைத்து தமக்கைக்கு கேலி போல தொட்டுக் காட்டியவளாக, “எனக்கு எப்போ.. கீழே.. முளைச்சிது? … நான் எப்போ ஆணானேன்.. நானும் கேர்ள் தான்… என்னையும் கூட்டிப்போ”என்றுரைக்க…
மதுராக்ஷியோ.. விடாப்பிடியாக நின்று.. “முடியாது.. யூ ஹேவ் டு நோவ் யுவர் லிமிட்ஸ்”என்று கிட்டத்தட்ட கோபத்தில் கத்தலானாள்.
திவ்யாவோ.. மதுராக்ஷி என்னும் யானையை அசைக்கும் அங்குசம் எதுவென்று நன்கே அறிந்திருப்பவளாயிற்றே??
அதனால் முன்பு போல இடதுபக்கம் திரும்பி,தந்தையின் மாடியறைப் பக்கம் அண்ணார்ந்து பார்த்து, உச்சஸ்தாயியில், “அப்பாஆஆ”எனக்கத்த.. மதுரா டக்கென்று பாய்ந்து வந்து தங்கையின் வாயைப் பொத்தினாள்.
“உஷ்.. உஷ்… கத்தாதே… ப்ளீஸ் தயவு செய்து கத்தாதே”என்று கூறியவள், மெல்ல அவள் கைகளை வாயில் நின்றும் விடுவித்தாள்.
“அப்போ கூட்டிட்டுப் போ”என்றாள் உனக்கு வேறு வழியேயில்லை என்பது போல.
அது உண்மை தான்.
“சரி வந்து தொலை”என்றவளாக வெளியே செல்ல… எங்கேயோ இருந்த.. ஜிம்மியும்.. வாலை ஆட்டிக் கொண்டு அவர்களிருவரையும் நோக்கி, “வள் வள்”என்று தன் கீச்சுக் குரலில் குரைக்கலாயிற்று.
ஜிம்மி-அவர்கள் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும்… மூன்று மாத வயதினைக் கொண்ட “மல்ட்டிப்பூ”வகையைச் சார்ந்த நாய்க்குட்டி!!
தன் எஜமானிகள் இருவரும்… தன்னை விட்டும் வெளியில்.. அர்த்த இராத்திரியில்…. உல்லாசமாக உலாவச் செல்வது பிடிக்காமல்… ‘தன்னையும் கூட்டிப்போ’ என் நாய்பாஷையில், “வள் வள்”எனக் குரைத்துக் குரைத்துக் கத்துவது போலிருந்தது அதன் செய்கை!!
இதுகாறும் முன்னுக்குப் பின் முரணாக வாய்தருக்கம் புரிந்து கொண்டிருந்த சகோதரிகள்.. இருவரும்… நாய்க்குட்டியின் பிரசன்னத்தை அடுத்து… என்ன செய்வதென்றறியாது… ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நிற்கலாயினர்.
ஜிம்மியோ ஓயாமல் கத்திக் கொண்டேயிருக்க… இளையவள் திவ்யா தான்.. கைகளைப் பிசைந்து கொண்டு, “ஐய்யோ… இப்போ என்னக்கா பண்றது?? ஜிம்மி… கத்தியே காட்டிக் கொடுத்துடும் போலிருக்கே…”என்று அச்சத்துடன் கிள்ளை மொழியில் உளறலானாள் அக்கணம்.
சிறிதே தைரியத்தை வரவழைத்துக் கொண்ட மதுராக்ஷி தான்.. தன் ஜிம்மியின் முன் மண்டியிட்டு அமர்ந்து… அதனோடு செல்லம் கொஞ்சி வழிக்கு கொண்டு வரும் குரலில்,
“என் செல்லம்ல.. என் பட்டுல்ல…இப்டியே கத்திட்டிருந்தா அப்பா எழுந்திருச்சு வந்துருவாரு… ப்ளீஸ்டா கத்தாதே… ப்ளீஸ்…”என்று அதனை சமாதானப்படுத்த விழைய… அதுவா கேட்கும்??
குழந்தை போல… “என்னையும் கூட்டிப் போ… இல்லை இப்டிதான் கத்திட்டேயிருப்பேன்”என்று மனித மொழியில் சொல்லாமல் சொல்வது போல… “வள்… வள்”என்று ஓயாமல் கத்திக் கொண்டேயிருக்கலானது.
தன் சொல்ப்பேச்சுக் கேட்காத ஜிம்மியின் மீது கோபம் ஊழ்க்கவே, தற்போது வையும் குரலில், “சொன்னா கேட்க மாட்ட… ராத்திரி நேரத்துல வெளிய போறது சேஃபில்ல… சொன்னா கேளு… கோ….”என்று அவள் கத்த…
ஜிம்மியோ இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷமாகி, “அப்போ நீங்க ரெண்டு பேரும் அர்த்த இராத்திரில போறது மட்டும் சேஃப்பாடீ.. இன்னாங்கடி.. தில்லாலங்கடி வேலை இது”என்பது போல மேலும் மேலும் தன் கீச்சுக்குரலுயர்த்திக் கத்தத் தொடங்க..
ஜிம்மியின் எஜமானி மதுராக்ஷிக்கும் தான் கோபம் போனது மூக்குக்கும் மேலே!!!
அதனது காலர்பெல்ட்டையிழுத்துப் பற்றி… சன்னமான குரலில், தங்கையை நாயென்று சுட்டி… “அந்த நாய் தான் என்கூட வரணும்னு அடம்பிடிக்குதுன்னா… இந்த நாயாவது… என் சொல்ப்பேச்சு கேட்குதா…?? உன்னய்ய்ய்…. என்ன பண்றேன் பாரு”என்றபடியே… தன்னோடு வர மறுக்கும் ஜிம்மியை… இழுத்துக் கொண்டு செல்ல முனைய…
ஜிம்மியோ… பாதத்தினை டைல்ஸ் தரையில் ஊன்றிப் பதித்து… அவளோடு வரமாட்டேன் என்பது போல தம் கட்டி நின்று முரண்டு பிடித்தது.
நேரம் இன்னும் இன்னும் சென்று கொண்டேயிருப்பதை அவதானித்த இளையவள் திவ்யாவோ… நாயோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும்…
தமக்கையின் தோள்களைத் தொட்டு, “அக்கா.. இட்ஸ் கெட்டிங் லேட்… பேசாம ஜிம்மியையும் கூட்டிப் போகலாம்க்கா… எதுக்கும் நமக்கும் சேஃப்பா வேற இருக்கும்ல?”என்றாள் சமயோசிதமாக யோசித்து.
மதுராக்ஷிக்கோ…. தங்கை சொல்வது தான் சரியாகப்பட்டதுவோ??
ஏதும் பேசாமல் கீழே ஜிம்மிப் பக்கத்தில் அமர்ந்திருந்தவள்…. ஒற்றைப்புருவம் மாத்திரம் மேலுயர… தங்கையையே இமையாது பார்த்திருந்தாள் அதனை ஏற்றுக் கொள்வதைப் போல.
மோகனம்-7
பூரணை நிலவு மாத்திரம்… மினுக் மினுக்கென்று தன் முழுமுகம் காட்டி.. மேகத்திரள்களினிடையே ஒளிர்ந்து கொண்டிருக்க…. ஆள்நடமாட்டமேயற்ற தெருவில் பயணமாகிக் கொண்டிருந்தது அவர்களின் ஸ்கூட்டி வண்டி!!
வெள்ளைநிற மின்விளக்கொளிகள் ஆங்காங்கே இடைவெளி விட்டுப் பூத்திருந்த கம்பங்களின் மிசை நின்றும்… வெளிவர… இருட்டிலும் தெளிவாகக் காட்சிப்புலனானது அச்சாலை!!
அவளோ… தலையில் கவசத்துடன்… இரவுநேர பைஜாமா உடையில் ஸ்கூட்டியை ஓட்டிக் கொண்டிருக்க… இளையவள் திவ்யாவோ… தமக்கையின் டார்ச்லைட்டை கையில் ஏந்திப் பிடித்துக் கொண்டும்….
தங்கள் வீட்டு பொசுபொசு நாய்க்குட்டி ஜிம்மியை… தனக்கும், தமக்கைக்குமான சீட்டு இடைவெளியில் அமரவைத்துக் கொண்டும் வரலானாள்.
அந்தக் குறும்புக்கார சகோதரிகளுடன்.. உல்லாசமாக இரவில் உலா வரும் ஜிம்மியோ… தன்வெண்ணிற முடிகள் காற்றுக்கு ஆட… தன் நீண்ட நாவை வெளியில் தொங்க விட்டுக் கொண்டே….
காற்றெல்லாம் மேனியில் மோத.. அச்சூழ்நிலையை இரசித்துக் கொண்டே வரலானது.
‘இதுங்க கூட வெளியில் வர எவ்வளவு டிராமா பண்ண வேண்டியிருக்கு’என்பது போல தன் பெரிய எஜமானியையும், சின்ன எஜமானியையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சொகுசான பயணம் தான் ஜிம்மிக்கு!!
ஸ்கூட்டி ஓட்டிச் சென்று கொண்டிருந்தவளின்… மாசற்ற வதனத்தில்… இரவு நேர கூதலான எதிர்க்காற்று முகத்தில் பட…மரங்களின் பச்சை வாசனையும் வேறு நாசி நிரடி புதுசுகானுபவத்தைக் கொடுக்கலானது அவளுக்கு!!
அப்போது தான் நிச்சயமாக.. மழைத் தூறி ஓய்ந்திருக்க… பாதையும் கூட சிறிதே ஈரப்பதத்துடன்… கழுவி விட்டாற் போல வழுவழுப்பாக இருக்க…மழையின் மண்வாசனையும் கூட இரம்மியம் சேர்த்தது மதுராக்ஷிக்கு!!!
இத்தனை புத்தானுபவங்களையும் கலைக்குமுகமாகக் கேட்டது.. பின்னாடி அமர்ந்து வரும் தங்கை திவ்யாவின் குரல்!!
ஏதோ திடீர் நினைவு வந்தாற் போல.. தமக்கையின் தோள்ப்பற்றி உலுக்கி, “க்காக்கா… அக்கா.. க்கா”என்று “க்கா” போட்ட தினுசில்… ஸ்கூட்டியும் தான் ஆடி ஒருநிலைக்கு வரலானது.
கொஞ்சம் தடுமாறி… வண்டியை நேர்ப்படுத்திக் கொண்டு… கைப்பிடி கண்ணாடி வழியாக தங்கை முகத்தை கோபத்துடன் பார்த்தவள், “இப்போ எதுக்குடீ… ராத்திரி நேரத்துல காக்கா ஓட்டுற?”என்று கேட்டாள்… தன்னை தங்கை அழைக்கும் விதம் கேட்டு!!!
திவ்யாவோ தமக்கையின் கோபத்தையெல்லாம் ஒரு சிறிதும் மனதில் கொள்ளாமல்.. , “அக்கா… நம்ம… நிரோ அண்ணா பர்த்டே எப்போ வருது?? ..”என தன் க்ரஷ்ஷான நிரோ அண்ணாவைப் பற்றிக் கேட்கலானாள்.
வண்டியை ஆட்டிவிட்டு தங்கைக் கேட்ட “அதி முக்கியமான (?)” கேள்வியைக் கண்டு… எரிச்சலுடன், சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி விட்டு… தலையை பக்கவாட்டாகத் திருப்பி தங்கையைப் பார்க்கலானாள் மதுராக்ஷி!!
பற்களை நறுநறுவென கடித்துக் கொண்டு,
“இப்போ ரொம்ப முக்கியம்…வ்வாய மூடிக்கிட்டு வா… இல்ல.. தங்கச்சின்னு கூட பார்க்காம நடு ரோட்டுல விட்டுட்டு போய்டுவேன்”என்று கூற…
அதிர்ந்து விழி விரித்து, “யம்மாடீ… நீ செய்தாலும் செய்வே… நமக்கெதுக்கு வம்பு..” என்றவள்… அதன் பிறகு மறந்தும் கூட வாய் திறவாமல்… வாயை கைக்கொண்டு மூடிக் கொண்டாள் திவ்யா!!
சகோதரிகள் இருவரிடையேயும்… அவர்கள் சென்று சேர வேண்டிய தெருமுனை வருமளவும்… கனத்த அமைதியே நிலவிக் கொண்டிருக்கலானது.
அது.. நிரோஷனாவின் வீடிருக்கும் தெருமுனை.. சென்னையின் பெரும்பெரும் செல்வந்தர்களுக்கென்றே தாரை வார்த்துக் கொடுக்கப்பட்ட… பகுதி!!
தெருவின் இருமருங்கிலும்.. தாழ்வார மதில்ச்சுவர்களைக் கொண்டு.. விஸ்தாரமான மனைகளைக் கொண்ட.. சிறு வட்டாரம்!!
அங்கே வரிசைக்கு அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வீடும்… அவள் வீட்டை விட பலமடங்கு பெரிதாகவே இருந்தது.
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் .. அந் நன்மாடங்கள் எல்லாம், நிலவொளியில் பளபளத்துக் கொண்டிருக்கலானது.
‘ எந்த வீடு… தமக்கையின் நண்பி… நிரோஷனாவின் வீடு’ என திவ்யாவுக்கு சரிவரத் தெரியாதாகையால், தமக்கையின் ஸ்கூட்டி செல்லும் வேகத்துக்கு ஏற்ப… வலதுபுறத்திலிருக்கும்…
ஒவ்வொரு வீட்டு படலைக்குமாக ( Gate என்பதன் தூய தமிழ் பெயர்) … டார்ச் ஒளியினால் அடித்து அடித்து ஆராய்ந்தபடி,
“இந்த வீடாக்கா?? .. இல்ல.. இந்த வீடா? இல்ல இதுவா”எனக் கேட்டு கேட்டு வர, ஓர் வீட்டின் படலையில்.. திவ்யா அடித்த டார்ச்சின் ஒளி… விழுந்தது.
திவ்யாவின் டார்ச்சின் ஒளி வீழ்ந்த இடத்தில் கண்களை எதேர்ச்சையாக ஓடவிட்ட மதுராக்ஷியின் பாதங்களும் தான் ஸ்கூட்டியை விட்டும் தரையில் பதியவே…. வண்டியும் தான் அவள் கட்டுப்பாட்டை மீறி செல்லப் பிரியப்படாமல் அங்கணமே நிற்கலாயிற்று.
அங்கிருந்த அனைத்து வீட்டுப் படலைகளும்… உள்ளே போர்ட்டிக்கோவின் முகப்பு தெரியா வண்ணம்… முழுவதும் மறைத்து அமைக்கப்பட்டிருக்க… இவ்வீட்டின் படலை மட்டும் சற்றே வித்தியாசமாக!!
கம்பி.. கம்பிகள் கொண்ட… மிகப் பிரம்மாண்டமான.. அதே சமயம் புராதன காலத்துப் பாணியில் அமைந்திருக்கலானது படலை!!
அப்படலை திறந்திருக்க வேண்டிய அவசியமேயற்று.. , அந்தப் படலையின் கம்பிகள் வழியே தெரியலாயிற்று உள்ளே… போர்டிக்கோ வரை செல்லும் பாதையும்.. பாதையின் இருமருங்கிலும் காணப்படும் அதிநவீன தோட்டமும்!!
அதனையடுத்து.. போர்ட்டிக்கோவில்.. நின்றிருக்கும் அது!!கார்!!
அந்தக் கார் நின்றிருப்பதைக் கண்டதும்… திகைப்பூண்டுச் செடியை மிதித்தது போல சர்வாங்கமும் உறைந்து விதிர் விதிர்த்துப் போனாள் மதுராக்ஷி!!
அவள் திகைத்து நிற்பதைக் கண்ட திவ்யாவோ… காரணமேதுமறியாமல், தமக்கையின் தோளை மீண்டுமொரு முறை உலுக்கி, “அக்கா… க்கா… என்னக்கா ஆச்சு??”என்று மதுராக்ஷியை நடப்புலகுக்கு கொண்டு வரவும் செய்தாள் அவள்!!
உயிர்ப்பு வரப்பெற்றவளோ.. தங்கை கையிலுள்ள டார்ச் லைட்டைப் பறித்தவளாக, “இப்படி அதைக் கொடு”என்ற வண்ணம்… படலைக் கம்பிகளின் ஊடாக… அந்தக் காரின் இலக்கங்களைப் பார்க்கலானாள்!!
அது அவனது காரே தான்!! ஆம்… அவனது இருபத்தைந்து கோடி மதிப்பு மிக்க அதே கார்!!
மூளையில் ஏதோ மின்னல் வெட்ட… சட்டென படலையோடுள்ள மதில்ச்சுவரின் மேலுள்ள வெள்ளிப்பதாகையின் மீது டார்ச் ஒளியைப் பதிய விடலானாள் அவள்!!
அவள் எண்ணியது போலவே… பதாகை தாங்கிய பேரோ, “மிஸ்டர். அஜய்தேவ் சக்கரவர்த்தி” தான்.
பெயரோடு.. அவனது நிறுவனப் பெயரும் எழுதியிருக்க… அவளது விழிகளும் தான் ஒரு வித குறும்புத்தனமான வன்மத்துடன் பளிச்சிடலாயிற்று.
எனில், இது அவனது வீடா?!!!
“சந்திரமுகி” படத்தில் வரும் அரண்மனையை விடவும் மிகப் பெரிதாகப்படவே… இதழ்கள் வளைய, முணுமுணுக்கும் குரலில், “யப்பா… பெரிய அப்பாடக்கர் தான்”என்று எண்ணிக் கொள்ளவும் செய்தாள்!!
அதே சமயம்… தமக்கை போலவே… அவ்வீட்டை ஏறிட்டுக் கொண்டிருந்த திவ்யாவோ.. தங்கையின் காதுக்குள்,
“இவ்வளவு பெரிய மாளிகைக்கு… காவலுக்கு.. ஒரு கூர்க்கா கூட இல்லையேக்கா? ஒருவேள பேய்பங்களாவா இருக்குமோ??”என்று விழிகளை அச்சத்துடன் சுழற்றிய வண்ணம் கேட்டாள்!!
தங்கை சொன்னதும் தான் காவலாளியே இல்லாமலிருப்பதை அவதானித்தவளுக்கு…. இம்முறை… மூளையில் ஐடியா பல்ப் ஒளிர..
தன்னைத் திட்டியவனின் காரை விஷமமாகப் பார்த்துப் புன்னகைத்த வண்ணம், “உள்ள இருக்கறது பேய்யில்லைடீ… பூதம்…!!”என்றபடியே.. வண்டியை புருவ மத்தியில் முடிச்சு விழ எடுக்கலானாள் அவள்!!
அஜய்தேவ்வின் வீட்டுக்குச் சற்றுத் தள்ளியமைந்திருக்கும்… அவர்கள் சென்று சேர வேண்டிய “பர்த்டே கேர்ள்” நிரோவின் வீட்டுக்கு முன் சென்று ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு… இருவரும் இறங்கும் போது… வாசலிலேயே காத்திருந்த “இராக்ஷசிகளின் பட்டாளமே” சொல்லிற்று… . அவள் மட்டும் தான் தாமதம் என்று!!
அவள் அங்கே போனவுடன், இதர கேடி நண்பிகள் எல்லாம் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க.. உஷ்ணத்துடன் நின்றவர்களாக அவளை ரவுண்டு கட்டத் தொடங்கினர் மின்னல்கதியில்!!
அவளைச்சூழ… மார்புக்கு குறுக்காக கைக்கட்டியவர்களாக நின்று கொண்ட இளம் குமரிப்பெண்களோ,
“ஏன்டீ லேட்டூ?? ”,
“லூசு.. டையத்துக்கு வரத்தெரியாது..”,
“இவள நம்பி ப்ளான் போட்ட எங்களைச் சொல்லணும்”
“இன்னும் கொஞ்சம் லேட்டாகியிருந்தாலும் பிளான் சொதப்பியிருக்கும்..” என்று ..அவள் கேங்க்கில் இருக்கும் கூட்டுக்களவாணிகள் எட்டு பேரும்… அவளைச் சூழ்ந்து கொண்டு எட்டுவிதமாகத் திட்டலாயினர்.
மதுராக்ஷியோ.. பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு… திரும்பி திவ்யாவையும், திவ்யா கையில் குழந்தை போல ஏந்திப் பிடித்திருந்த ஜிம்மியையும் முறைத்தாள்.
இருவர் மட்டுமே அறியும் முணுமுணுக்கும் குரலில், “எல்லாம் உங்க ரெண்டு பேர்னால தான்.. என்னையும் கூட்டிப் போ கூட்டிப்போன்னு… தொல்லை செய்தது மட்டுமல்லாமல் என் காலத்தை வீணடித்து.. இந்தப் பேய்களிடம்.. திட்டு வேறு வாங்கித் தந்துட்டீங்கள்ல??..எப்பவும் நான்தான் அதுங்கள ஓட்டுவேன்.. இன்னைக்கு… அதுங்கள என்னை ஓட்ட வைச்சுட்டீங்கள்ல?? வீட்டுக்கு வாங்க.. இருக்கு!!”என்று சினத்தோடு புலம்ப…
திவ்யாவும் சரி… ஜிம்மியும் சரி… அவள் கூற்றையெல்லாம் மொத்தமாக உணர்ந்தது போல. இருவரும் திருட்டு விழி விழித்துக் கொண்டே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொள்ளலாயினர்.
தோழிமார் எண்மரின்… அத்தனைத் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு.. இந்தக் காதில் கேட்டு.. அந்தக் காதால் பறக்க விட்டு விட்டு… சகஜமாய்… பற்களை “ஈ” என்று காட்டிக் கொண்டு வெகுளியாய் சிரிக்கவும் செய்தாள் மதுராக்ஷி!!
அதே சமயம்.. தோழிகளின் கொலைவெறிப்பார்வையை எல்லாம் தன்மீதிருந்தும் திசைத்திருப்ப…தன் கைக்கடிகாரத்தில் மணிபார்த்து விட்டு…
அவசரப்படுத்தும் குரலில், “சரி.. சரி… நான் எங்கே போயிரப்போறேன்.. இங்கே தானே இருப்பேன்… எப்ப வேணும்னாலும் என்னைத் திட்டுக்கலாமே.. ஆனா..பர்த்டே… நம்ம்ம்ம நிரோ பர்த்டே.. செலிப்ரேட் பண்ணனும்ல.. மிட்நைட்டுக்கு இன்னும் 3 நிமிஷம் தான் இருக்கு.. சீக்கரம் வாங்கடீ… ”என்றபடி அவள் தாமதமாக… வந்த கதையை மாற்றி.. தோழிகளை உள்ளே அழைத்துப் போகலானாள்.
ஏற்கனவே திட்டம் போட்டது போல… நிரோ அண்ணனின் உதவியுடன்… அவனுக்கு அழைப்பெடுத்து அறையை விட்டும் கீழே வரச்சொல்லினர்.
நிரோ அண்ணனும்.. வீட்டுக் கதவைத் திறந்து அவர்களை உள்ளேயெடுக்எ…. நிரோவின் அம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் அனைவரும்… நுனிக்கால்விரல்கள் மூலம் நடந்து நடந்து…
மதில்மேல் பூனை போல… நிரோவின் துயில் கலைந்து விடாத வண்ணம்… மெல்ல மெல்ல நிரோவின் அறைக்குச் செல்லலாயினர்.
மதுராக்ஷியின் உயிர்த்தோழி நிரோஷனாவோ,மஞ்சத்தில்… சிறுதுளி ஒளி வீசும் இரவு நேர மேசை விளக்கில்… போர்வையை மார் வரை மூடிக் கொண்டு… நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தாள் எதுவுமே அறியாதவளாக.
தோழிகள் அனைவரும் சேர்ந்து.. வாங்கி வந்திருந்த.. பிரத்தியேகமாக.. நிரோவின் பிறந்தநாளிற்கென்றே செய்யப்பட்ட…. கேக்கின் நடுமத்தியில்…மெழுகுவர்த்தியை பற்ற வைக்கலாயினர் அனைவரும்!!
இரவு நேர அறை வெளிச்சத்தில்… பெண்டுகள் எல்லாம்… வானலோகத்துப் பெண்கள் போல ஒருவித தங்கநிறத்தில் தகதகவென ஜொலிக்க…
மெழுகுவர்த்தி அணைந்து விடாத வண்ணம்.. பைய்யப் பைய்ய.. நிரோவின் மஞ்சத்தினருகே நடந்து சென்று.. மெல்ல அவளை எழுப்பலானாள் மதுராக்ஷி.
“ஹேய்.. நிரோ… நிரோஓ…… எழுந்திருடீ..”என்று மெல்லிய குரலில் சிநேகிதியைச் செல்லமாய் அதட்டிய வண்ணம்.. மதுராக்ஷி.. தன் பிறந்தநாள்த் தோழியை எழுப்ப முனைய.. அவளோ அதைக் கனவென்று நினைத்திருப்பாள் போலும்.
தன் மேல் பதிந்த மதுராக்ஷியின் கையைத் தட்டிவிட்டுக் கொண்டே அரைத்தூக்க விழிகளோடு… உளறும் தூக்கமயக்கக் குரலில்,
“பகல்ல தான்… மாப்பிள்ளைய விரட்டணும்.. கைப்பிள்ளைய விரட்டணும்.. கட்டதொரைய விரட்டணும்னு.. என்னை வைச்சு செய்யுற.. இப்ப ராத்திரி கனவிலயாவது நிம்மதியா இருக்க விட்றீ… பேசாம.. உன் அப்பா பார்க்கிற மாப்ளயே கட்டிக்க… ”என்ற வண்ணம்..
ஏதுமறியாத தங்கை முன்.. நிரோ தூக்கத்தில் உண்மையெல்லாம் சாடைமாடையாக உளறி விட்டு… மீண்டும் சாவதானமாய்… ஆழ்ந்த மூச்செடுத்தவளாக படுக்கத் துவங்கினாள் புரண்டு!! .
திவ்யாவோ… தோழி நிரோவின் உளறல் மொழிகள் கேட்டு… ‘அடிப்பாவி… மாப்ளய விரட்ட… கூட்டுப் பிளானா?’ என்றெண்ணிய வண்ணம்.. விழி விரித்து திகைத்துப் பார்க்க…
அதே மனநிலை கொண்ட ஜிம்மியும்… தன் பற்களைக் காட்டிக் கொண்டு எஜமானியைப் பார்த்து, ‘என் பாஸ் ராம்கி சாருக்கே விபூதி அடிக்கப் பார்க்குறீயா?’ என்பது போல உறுமலாயிற்று!!
திவ்யாவையும், ஜிம்மியையும் கடைக்கண்ணால் பார்த்தவண்ணமே…உண்மையெல்லாம் உளறி வைத்த நிரோவின் மீது கோபம் மேலிட..
“ஹேய் நிரோ…எழுந்திருடீ.. லூசு” என்று திட்டி.. அதட்ட எழ வைக்க… அவளும் தூக்கம் கலைந்து.. கண்கள் கசக்கிய வண்ணம் எழலானாள்.
கொட்டாவியை கைமறைவில் வெளியேற்றிக் கொண்டே பார்த்தவளுக்கு… தன் தோழி மதுராக்ஷி உட்பட… இதர தோழிகள் ஒன்பது பேரையும் கண்டு… தலைக்கு மேலுயர்த்தி சோம்பல் முறித்த செய்கை அந்தரத்திலேயே தடைப்பட்டு நிற்க அதிர்ச்சியானாள் நிரோ.
அந்த அதிர்ச்சியினூடே கேக்கை நிரோவின் முன் நீட்டி, “ஹேப்பி பர்த்டே நிரோஓஓ!!!!”என்று மதுராக்ஷி… சரியாக நள்ளிரவு பன்னிரண்டுமணிக்கு…அறையே அதிரும் வண்ணம் கத்திக் கூற,
இதரதோழிகள்.. “பார்ட்டி பாப்பர் (party popper)”ரை வெடிக்க.. அதிலிருக்கும் தங்கநிற காகிதங்கள் எல்லாம் வெடித்தும், பறந்தும் வந்து தூவி விழலானது அவர்களின் மீதினெல்லாம்!!
ஆனந்த அதிர்ச்சி தந்த.. மதுராக்ஷியின் திடீர் பிரசன்னம் கண்டு.. நிரோவின் முகத்தில் சொல்லொணா சந்தோஷம்!!
ஆனந்தத்தில்… கண்களெல்லாம் கலங்க.., “தேங்க்ஸ்டீ”என்றவளாக..மஞ்சத்தினருகே நின்றிருக்கும் மதுராக்ஷியின் இடையூடு கையிட்டு… அவளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டாள் நிரோ.
அந்த இறுகிய அணைப்பில் நின்றும் மீள முடியாமல் வெளியே வரத் துணிந்தவளோ… “போதும்டீ… முதல்ல கேக்கை வெட்டு”என்றபடி… கத்தியை நீட்ட… உயிர்த்தோழியோ. மெழுகுவர்த்திகளையெல்லாம்…. ஊதி அணைத்து விட்டு கத்தியை வாங்கலானாள். .
நிரோ மனமகிழ்வோடு கேக்கினை வெட்ட ஆயத்தமான நேரம்… நம் மதுராக்ஷியோ இதர தோழிகளுடன்… கைகளைத் தட்டிக் கொண்டே,
“ஹேப்பி பொறந்தநாள் டு யூ… ஹேப்பி பொறந்தநாள் டு யூ.”என பிறந்தநாள் பாட்டை தங்க்லீஷ் கலந்து… பாடி மூடிக்க… கேக்கை வெட்டி மதுராக்ஷிக்கு ஊட்டி விடலானாள் நிரோவும்.
அனைவருக்கும் கேக்துண்டுகள் மாறி மாறி ஊட்டிவிட்டு… பெண்களுக்கேயுரிய சிரிப்பின் நாதமும், குதூகலமும் தொற்றிக் கொண்டது அங்கே!!
எட்டுத்தோழிகளும், கூடவே நம் நாயகி மதுராக்ஷி.. அவள் தங்கை திவ்யா மற்றும் ஜிம்மியுமாய் சேர்ந்து.. விதம் விதமான கோலத்தில் செல்ஃபீ எடுக்க.. அவ்விடமே குமர்ப்பெண்களின் அரட்டைகளினாலும், பேச்சுச் சிரிப்புச் சத்தங்களினாலும் அதகளப்பட்டுத் தான் போயிற்று!!
ஒவ்வொரு பருவப்பெண்களின் கைகளிலும் தாவித் தாவிக் கொஞ்சப்பட்டுக் கொண்டிருந்த ஜிம்மியும்.. பெண்களின் மென்மையான முன்னங்கங்களில் நசுங்கப்படும் சுகத்தை அனுபவித்துக் கொண்டே,
நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு…“ஜிம்மி.. ஹாப்பி அண்ணாச்சி”என்பது போல எடுக்கும் செல்ஃபீக்களில் எல்லாம் மகிழ்ச்சி முகம் காட்டி நிற்க.. அதைப்பார்த்து.. கொள்ளென்று நகைத்துப் போயினர் அரிவைப் பருவப் பெண்களும்!!
அச்சமயம்… அது யாருமே எதிர்பார்த்திராத ஓர் சமயம்!!
நிரோவின் மாடியறை சாளரங்களும் தான்.. அன்று இயற்கை காற்று வசதிக்காக திறக்கப்பட்டிருக்க.. இந்த அறை ஜன்னலினூடாக அவன்.. அவன் வீட்டறையிலிருந்து…. இங்கு நடந்தது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது அங்கிருந்த யாருமே அறியாத ஒன்று!!
அவன்??
ஆம், அது சாக்ஷாத் அஜய்தேவ் சக்கரவர்த்தியே தான்!!
அவனது படுக்கையறை சாளரத்தினருகே ஜம்ப்பரின் பாக்கெட்டுக்குள் இருகைகளையிட்ட வண்ணம் நின்று கொண்டு…
நிரோஷனா வீட்டு அறைக்குள்ளேயே கண்களைப் பதித்திருந்தவனின் பார்வை… அங்கே காஞ்சனமங்கையாக மிளிர்ந்து கொண்டிருந்த மதுராக்ஷியையே சுற்றி வட்டமடித்துக் கொண்டேயிருக்கலானது.
அந்தரத்தில் செல்பீ ஸ்டிக்கை நீட்டி.. உதடுகளைப் பிதுக்கி..நாக்கை வெளித்தள்ளி.. இரசித்து இரசித்து அவளெடுத்த செல்ஃபீயாக இருக்கட்டும்!!
அருகிலிருந்த தோழிமார்களை இருகைகளாலும் கட்டிக் கொண்டு… பிறந்தநாள் பெண்ணின் கன்னத்தில் முத்தம் வைத்து.. கன்னங்குழிய குழிய அவள் சிரித்ததாக இருக்கட்டும்!!
இன்னும் ஏன்… தோழியொருத்தியின் ஜடையிழுத்து.. குறும்பு செய்து… இன்னொரு தோழியின் முதுகின் பின்னொளிந்து.. கைச்சந்தினிடுக்கு வழி எட்டிப்பார்க்கும் சுட்டித்தனமாக இருக்கட்டும்!!
முத்துமூரல்கள் தெரிய… தன்னை முறைக்கும் ஜடைக்காரி தோழியிடம் இளித்து வைத்ததாக இருக்கட்டும்!!
அனைத்தையும் சொற்பம் விடாமல் பார்த்திருந்தவனின் மனதுக்குள் என்ன தோன்றியதென… அவன் மட்டுமே அறிவானாயினும், அவளையே இமைக்காமல் வெறித்துப் பார்த்திருந்தது அஜய்தேவ்வின் பார்வை.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis
Super sister… waiting for madhurakshi adutha ragalai…to Ajay