ATM Tamil Romantic Novels

மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 9

மோகனம் – 9

அலுவலக லிப்ட்டில் கீழ்த்தளத்திலிருந்து ஏறிக் கொண்டவளுக்கு… சரியாக மேல்த்தளத்தில்… அவனது தளம் வர… அவளது இதயம்…. நிமிடமாக ஆக…. அவளையும் மீறி, “பக் பக்” என்று அடித்துக் கொண்டது.

அவள் அணிந்திருந்த சட்டை மற்றும் அலுவலக டெனிமில்… இடது கால் சிறிதாக நொண்டுவதையும், அதே இடது கையில் கட்டினையும் பார்த்து விட்டு…. அவள் தான் நேற்று வந்த திருடி என்று கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம் மதுராக்ஷிக்குள் அதீதமாக இருக்கவே செய்தது.

அதன் காரணமாக உதறலும் எடுக்கவே… தொண்டையில் எச்சில் கூட்டி மிடறு விழுங்கிக் கொண்டே…. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு…. அவனது அறையின் கதவினை… இழுத்துத் திறக்கத் தயாரானாள் மதுராக்ஷி!!

“எக்ஸ்க்யூஸ் மீ சார்” என்றவளுக்கு…ஏனோ வார்த்தைகள் வெறும் காற்றாகத் தான் வரவே… இயல்பிலேயே தெளிவாக ஒலிக்கும் அவள் குரலுக்கும் தான் அன்றென்று பார்த்து என்னவாயிற்று??

மெல்ல தலை மட்டும் நீட்டி… சிஇஓ அறையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு…. அங்கு அவள் கண்ட காட்சி ..மதுராவை வெகு சுளுவில் கதிகலங்கத் தான் வைத்தது.

அங்கே அவள் கண்டது???

தனக்கேயுரிய கச்சிதமான கம்பீரத்துடன்.. முதுகந்தண்டு கூன் விழாமல்… ஜம்மென்று ஒரு மன்னனைப் போல… கறுப்பு நிற கோர்ட் சூட்டில் அமர்ந்திருக்கும் அஜய்தேவ் சக்கரவர்த்தியை மாத்திரமல்ல!!

கூடவே… அவன் மடியில்… சொகுசாக வாலைச் சுருட்டிப் படுத்துக் கொண்டு.. அவன் தடவலின் கதகதப்பில்… விழிகள் சொக்கி குளிர் காயும்… அவள் ஜிம்மி!!!

 ஜிம்மி??

நேற்றிரவு நடந்த கூத்தில்… இவள் தப்பிப்பதற்காக… தேடக்கூட நேரமற்று.. விட்டுப் போன அவள் ஜிம்மி…!!

ஜிம்மியை அலுவலகம் வரை அழைத்து வந்திருக்கிறானா இவன்??

ஜிம்மியைத் தடவித் தடவிக் கொஞ்சிக் கொண்டிருப்பவன்… உள்ளே தலை நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் யௌவன மாதுவைக் காணவில்லையாயினும், அவள் நடப்பதையெல்லாம் படபடப்புடன் கண்ணுற்றுக் கொண்டு தானிருந்தாள்!!

யாருடனும் ஒட்டாத ஜிம்மி.. அவனது தடவலுக்கும், கொஞ்சலுக்கும் கரைந்துருகுவதைப் பார்க்கையில்.. அவளுக்கு கோபம் கோபமாய் வரவே…

நாசித்துவாரங்களிரண்டும் விடைத்தடங்க.. மார்புப் பந்துகள் இரண்டும் ஏறியிறங்க மூச்செடுத்த வண்ணமே… தன் இடது உள்ளங்கைக்கு… வலது முஷ்டி மடக்கி.. குத்து விட்டுக் கொண்டாள் சீற்றத்தில்.

ஏதோ குத்துச்சண்டைக்கு தயாராகும் பாக்ஸரைப் போல்!!

எவனடா நாய்க்கு நன்றியுள்ள மிருகமென்று பெயர் வைத்தது. எனில், அது உண்மையாகவே நன்றியுள்ளதானால்… அவளின் எதிரியான அவனுடன் போய் ஒட்டிக் கொண்டிருக்குமா??

தனக்கு மட்டுமே கேட்கும் முணுமுணுக்கும் குரலில், ஜிம்மியை நோக்கி, “இருக்கட்டும்.. இருக்கட்டும்… நீ என்கிட்ட தானே வந்தாகணும்… அப்போ இருக்கு உனக்கு”என்று கறுவிக் கொள்ளவும் செய்தாள் குறும்புகளின் இளவரசி!!

அதே சமயம்…. ‘ஐயோ இப்பொழுது… அவள் உள்ளே சென்றால்.. ஜிம்மியே அவளைக் காட்டிக் கொடுத்து விடுமே…?’ என்ற எண்ணம் வந்த கணமே… அவள் வாழ்வில் வில்லனாகிப் போன… அவளது பாஸின் கண்களில் நின்றும் நழுவி அகன்று விடத்தான் எண்ணங்கொண்டாள் அழகு மதுராக்ஷி!!

‘கடவுளே… நல்லவேளை அவன் அவளைப் பார்க்கவில்லை. அப்படியே எஸ்ஸாகி விடலாம்’ என்ற எண்ணம் தோன்ற… அறையினுள் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவள் தலையை மெல்ல… ரிவர்ஸில்… பின்னே எடுக்க முற்பட்ட போது, கணீரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு கேட்டது க்ஷத்திரியனின் குரல்!!

அவளைப் பார்க்க கூட செய்யாது… ஜிம்மியைக் கொஞ்சுவதிலேயே கவனம் வைத்திருப்பவன்…“உள்ளே வா மதுரா..”என்று அழைத்தான் உறுதியான குரலில்!!

அவளை வரவேற்கும் விதமாய் அழைத்தாலும் கூட… அதில் ஒரு நிறுவன உரிமையாளனுக்குரிய… அதிகாரத் தோரணையும் மிளிர்ந்திருப்பதையும் அவதானிக்கத் தான் செய்தாள் அவள்!!

அவனது திடுக்கிடச் செய்யும் குரலில்… எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தலையை.. அவள் ரிவர்ஸில் எடுக்க முற்பட்ட போது… அவன் பார்க்கா வண்ணம் தலையை.. பின் கதவில் இடித்துக் கொண்டாள் மதுராக்ஷி!!.

பின்னந்தலைக் கேசத்தை வலியில் இலேசாக நீவி விட்டுக் கொண்டே…. “தேவையா…தேவையா உனக்கு”… என்று மானசீகமாக மனதுக்குள் தன்னைத் தானே நொந்து கொண்டவளுக்கு…. ஓடவும் முடியாத.. இனி ஒளியவும் முடியாத இக்கட்டான நிலையாயிற்றே??

அவனது அதிநவீனர நீள்வட்ட மேசையை நோக்கி.. அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டுக்கும்… எகிறி எகிறி குதித்து… தடதடத்துக் கொண்டேயிருந்தது தத்தையின் பாழும் இதயம்!!

 எந்தநேரமும்.. அவளின் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற அதீத அச்சப் பதற்றம் தோன்ற… திருடி போல்திருதிருவென விழித்துக் கொண்டே அவனருகே பையப் பைய… கால்கள் பின்னித் தழையத் தழைய… இடது காலை இலேசாக விந்தி விந்தி நடந்து சென்றாள் பாவை!!

மனம் வேறு… ‘இறைவா என்னைக் காப்பாற்று.. இவன் கிட்டயிருந்து என்னைக் காப்பாற்று’ என்று கடவுளிடம்… ஓயாமல் இறைஞ்சிக் கொண்டவளுக்கு…

ஏனோ.. குற்றம் செய்து அகப்பட்ட மாணவன்.. தலைமையாசிரியரின் அறைக்குள் நிற்பது போல உச்சக்கட்ட பதற்றமே!!

அஜய்தேவ்வோ… தன்னுடைய சொகுசு சுழல்நாற்காலியில்.. காலுக்கு மேல் கால் போட்டு… அமர்ந்திருந்தவனின் பார்வை… அப்போதும் தன் முன்னே வந்து நிற்பவள் மீது ஒரு துளியளவும் பதியவுமில்லை;கண்கொண்டு ஏறிட்டுப் பார்க்கவுமில்லை!!

அழகனின் கவனமெல்லாம். .அவளின் மல்டிப்பூ வகை நாய்க்குட்டி… ஜிம்மியைக் கொஞ்சுவதிலேயே இருக்க… ஜிம்மியும் அவன் தடவல் சுகத்தில் சொக்கிப் போய்… தன் எஜமானியைக் கண்டு கொள்வதாகவே இல்லை!!

தொண்டையைச் செருமிக் கொண்டே… மெல்லிய குரலில், “குட்மார்னிங் சார்”என்றவளை… அப்போது தான் தன் தீட்சண்யமான கண்கள் கொண்டு… நிமிர்ந்து பார்த்தவன் விழிகள்…தன் அந்தரங்க காரியதரிசியை உச்சாதி பாதம் வரை ஒரு மேம்போக்குப் பார்வை பார்க்கலானது.

உச்சந்தலையில்.. குதிரை வால் போல ஒரு பானிடெயில் கூந்தல் அலங்காரத்தில்.. ஆங்கில செய்திச் சேனல்களில்… செய்தி வாசிக்கும் பெண்களைப் போல… சட்டையும், டெனிமும் அணிந்திருந்தாலும் கூட… அது அவளுக்கு நேர்த்தியாகப் பொருந்தியிருப்பதை அவதானித்தான் அவன்!!

அதே சமயம்.. நீளக்கைச் சட்டையின்.. மணிக்கட்டுக்கு சற்று மேலே வரை… கையை மடித்து விட்டுக் கொண்டவளின் இடது கரத்தில் தெரிந்த கட்டு… அவனின் புருவங்களை இடுங்க வைத்த அதே நேரம்… ஒற்றையிடது புருவத்தை… ஏதோ யோசனையாக மெல்ல மேலுயரவும் வைத்தது.

அவன் கண்களின் தீவிரம் இன்னும் இன்னும் கூடிப் போக, “அது என்ன கையில கட்டு??”என்று அவளது கயல் நயனங்களையே இமையாது கூர்ந்து பார்த்த வண்ணமே கேட்டான் அவளது பாஸ்!!

அவன் இதழ்கள் திறந்து கொண்ட கணத்திலிருந்து… மரண பீதியில்… அடிக்கடி இமைகளை படபடவென அடித்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு…. அவன் கேட்ட கேள்வியின் பின்னர் தான்… சீராக மூச்சு வந்தது.

எனில், நேற்றிரவு.. அவன் வீட்டுக்கு வந்து காரை அலங்கோலப்படுத்தியது அவளில்லை என்று அவனுக்குத் தெரியாதா..??

அப்படித்தான் போலும். இன்றேல்… இப்படியொரு கேள்வியை… காயம் ஏற்படுத்தியவனே… காயத்துக்கான காரணத்தைக் கேட்பானா???

முகத்தை பாவம் போல வைத்துக் கொண்டு…, “அது சார்… வீட்டுப் படியில இருந்து இறங்கி வரும் போது.. ஸ்லிப்பாகி விழுந்துட்டேன் சார்”என்று நடந்த உண்மையை… மறைத்துப் படியிலிருந்து உண்மையாகவெ விழுந்தது போன்று கூற… அவனிடமிருந்து நிமிடமும் தாமதியாமல் வந்தது பதில்!!

அவனோ அவள் விழிகளையே ஆழ்ந்து நோக்கியவனாக, “அப்படீன்னா உன் இடது காலும் அடிபட்டிருக்குமே??”என்று அவன் சரியாய்க் கேட்க… உள்ளிழுக்கப்பட்ட மூச்சும்… உள்ளிழுக்கப்பட்டது உள்ளிழுக்கப்பட்டது போலவே நின்றும் போனது!!

ஒரு கணம்.

ஆனால்… ஒற்றைக் கேள்வியில் தன்முன்னே நின்றிருக்கும் இளம்பெண்ணை அசரடித்தவன்… அவளையே அணுஅணுவாக ஆராய்ந்த வண்ணமே… உள்ளுக்குள் அவளது திகைப்பையெண்ணி சிறு இரகசியப் புன்னகையும் உதிர்த்துக் கொண்டான் அவளறியாமல்!!

சட்டென்று தன்னைத் தானே திருத்திக் கொள்ளுமுகமாக…அவனோ, “ ஐ மீன்… படியில இழுந்து விழுற அநேகம் பேருக்கு.. கால்லேயும் அடிபடுறது யூஷூவல் தான்… அத வச்சி தான் கேட்டேன்…”என்று கூற… அதைக் கேட்டதும்.. தான் நின்ற மூச்சும் திரும்ப வந்தது மதுராக்ஷிக்கு.

அந்த ஏசி அறையிலும்… ‘அகப்பட்டுக் கொண்டோமோ” என்ற நினைவில்… குப்பென்று நெற்றியெல்லாம் மணிமணியாக வியர்க்கத் தொடங்கிற்று அவளுக்கு!!

வியர்த்த பிறைநுதலை.. தன் புறங்கையால்.. ஒற்றி ஒற்றித் துடைத்துக் கொண்டு, சமாளிக்கும் அசட்டுப் புன்னகையுடன்,

“ஓ.. அப்படீங்களா… ஆமா அடிபட்டிருக்கு சார்..”என்று கூற, அங்கிருந்த பதற்றத்தில் அவளொன்று யோசிக்க மறந்தே போனாள்.

படியிலிருந்து விழுபவர்கள் அநேகம் பேருக்கு.. காலில் அடிபடுமென்று அவன் சொன்னதை ஒத்துக் கொண்டாலும் கூட… இவளுக்கு அடிப்பட்டது “இடது காலில் தான்” என்பது அவனுக்கு எப்படித் தெரியும்??

அவளோ.. அத்தோடு அந்த பேச்சை நிறுத்தி விட்டு… அலுவலக வேலைகள் சம்பந்தமாக பேச்சை மாற்றியிருக்கலாம். ஆனால், நுணலும் தன் வாயால் கெடும் என்று சொல்வதில்லையா ??

அது அவள் விஷயத்தில் முற்றிலும் பொருந்திப் போகும் வகையில்… நுணலும் கத்திக் கத்தி சர்ப்பத்திடமே… அகப்பட்டுக் கொள்ளவும் தான் நாடியது.

குறும்பு லீலைகளின் மன்னவளோ.., ஜிம்மியை ஏக்கத்துடன் பார்த்தவளாக,

“யாருடையது சார் இந்த பப்பி?”என்று அவளுக்கும், நேற்றைய இரவு சம்பவத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை… என்பது போல.. அப்பாவியாகத் தான் கேட்டாள்.

அவளின் கேள்வியில் பட்டென்று.. அவளை நிமிர்ந்து பார்த்து, அடக்கப்பட்ட சீற்றக்குரலில்… வெகுவெகு நிதானமாக…

“இது யாரோடதுன்னு உனக்கு தெரியாது… சத்தியமா தெரியாது?? ”என்று… ‘பொய் சொல்லாதே.. இது உன்னுடையதுன்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்’ என்பது போலக் கேட்க… அவளுக்கோ திக் திக்கென்றிருந்தது.

எமகாதகியோ அப்போதும்.. கண்களை கீழே சுழற்றி… எதுவுமே அறியாத பச்சிளம் குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு “ம்ஹூஹூம்… தெரியாது சார்” என்று கூற… அவன் மடியில் இதுகாறும்… சும்மா இருந்த ஜிம்மியும் கூட… தன் பழைய எஜமானியை நோக்கி… வள் வள் என்று கீச்சுக் குரலால்.. குரைத்தது.

ஜிம்மியை யாரென்று தெரியாது என்று கூறியதால்… அதற்கு கோபம் வந்திருக்க… வேண்டும். அதனால் தான் குரைக்கின்றதுவோ… ??

‘ஸாரி ஜிம்மி… ஸாரிடா… என் நிலைமை அப்படிப்பட்டது. என்னிலைமையைப் புரிந்து கொள் ..கண்டிப்பாய் இவனிடமிருந்து உன்னை மீட்பேன்’ என்று ஜிம்மியைப் பார்த்து மானசீகமாய் உரையாடி விட்டு நிமிர்ந்த போது.. அவனது பார்வை அவளிலேயே இருப்பது கண்டு அசடு வழிந்தது மதுவுக்கு.

அவளது ஒவ்வொரு அங்க அசைவுகளையும் கூட.. உற்று உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பவனின் பார்வை… மங்கையவளுக்குள் அசௌகரியத்தை மூட்டலானது.

தன்னைத் தானே தேற்றிக் கொண்டு… அவள் இழுத்துப் பிடித்த அதரங்களுடன்.. வலுக்கட்டாயப் புன்னகை சிந்திய வண்ணம் நிற்க.. அவனிடமிருந்து வெளிவந்தது இரும்புக் குரல்!!

“ஆமால்ல.. உனக்கு தெரிய வாய்ப்பில்லல??… சொல்றேன் கேட்டுக்க…நேற்று என்னோட கார திருடுற முயற்சி நடந்திருக்கு…”என்று அவன் நடந்ததையெல்லாம்.. “கார்த் திருட்டு” என்று உருவகித்து… மாற்றிக் கூற டக்கென்று நிமிர்ந்து… அவன் கண்களை பார்த்தாள் மதுராக்ஷி.

அவளின் பார்வையில், ‘இதெல்லாம் உனக்கே ஓவரா இல்லையா?’ என்னும் கேள்வி தொக்கி நிற்கத் தான் செய்தது.

அதைக் கவனியாதவன் போல… மேலே தொடர்ந்தான் அஜய்தேவ்வும்.

 “அதுக்குள்ள கார் கத்த.. அந்தத் திருடி… கையில இருந்த கேக்கை… என் கார்லயும்.. முகத்திலேயும் பூசிட்டு ஓடிப் போயிட்டா…”என்று கூறி முடிக்க… அவள் தன் அகக் கண்களால் அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கலானாள்.

‘ஐயோ ஐயோ… ஐயோ என்னமா புழுகுகிறான்.??நான் காரைத் திருட முயற்சிக்கவில்லையே..?? அதுவும் அவன் என்னைப் பிடிக்க வந்ததால் தானே.. அவன் முகத்தில் கேக்கைப் பூசி விட்டு தப்பிப்பதற்காக ஓடினேன்.?? எல்லாவற்றையும் மாற்றிக் கூறுகிறானே?’ என்றவளுக்கு….

‘பொய்யிப் பொய்யிப் பொய்யி.. யாரும் இவன் சொல்றதுலாம் நம்பாதீங்க’என்று இரைந்து கத்த வேண்டும் போலிருந்தது.

 அதிலும் அவன்.. காரைத் திருட வந்த “திருடி”என்று பெண்பாலில்.. கள்வனை விழிக்கவும்… எதுவுமே தெரியாதவள் போல…

சந்தேகத்துடன் சங்கதி கேட்பவள் போல, “திருடியா??.. அது எப்டி சார் உங்களுக்குத் தெரியும்?..வந்தது திருடனா?இல்ல திருடியான்னு.. ”என்றவளை…. ஒரு சில நிமிடங்கள் ஏதும் சொல்லாமல்.. ஆழமாக அமைதியாக கூர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தான் அஜய்தேவ்!!

‘இந்தக் கேள்வி தற்பொழுது உனக்குத் தேவை தானா என்ன?? நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் அறிந்திருக்கும் உனக்கு இது தேவை தானா?? …

 அவனுக்கும்.. வந்தது “திருடி” என எப்படி அறிந்தான் என்று தெரியும்.. உனக்கும் தெரியும்!!அப்படியிருக்க பாழாய்ப்போன இந்தக் கேள்வி உனக்குத் தேவை தானா??

எப்படி திருடி என்று அறிந்தான் என்பதை… அங்கே அவள் முன்னிலையிலேயே ஒருவேளை அவன் விபரித்தால்..??’என்று மூளை வேறு… அவள் வாய் விட்டுக் கேட்டு வைத்த ஒற்றைக் கேள்விக்காக… அவளை நாக்கைப் பிடுங்குவது போல நாலு கேள்விகள் சரமாரியாகக் கேட்டுக் கொண்டே போனது!!

அதே சமயம் அவளது இதயமோ… ‘சேச்சே… அவன் நல்லவன். நாகரீகம் தெரிந்தவன்.. அப்படியெதுவும் பட்டவர்த்தனமாக இரவு நடந்ததையெல்லாம் என்னிடம் சொல்லிவிட மாட்டான்’ என்று நம்பிக்கையும் கொடுத்தது.

இந்த மூளையும், ஹிருதயமும் ஆளுக்கொரு புறம் நின்று மைன்ட் வாய்ஸில் பேசி பேசி அவளைப் படுத்தும் பாடு!!

தலையைக் குனிய விடாமல் கஷ்டப்பட்டு நிமிர்ந்து வைத்துக் கொண்டு அவனைப் பார்க்கையில்… அவன் பதில் சொல்வதற்காக… மதுராக்ஷியின் அழகு வதனம் தனை ஏறிட்டான்.

பிறகு அவனது அழகிய கண்ணாடி மேசையோடு இணைக்கப்பட்டிருந்த டிராயரை இழுத்துத் திறந்தவன்.. அதற்குள்ளிருந்து.. ஒரு சிறு பெட்டியை எடுத்து.. அவள் முன் வைத்தான்.

‘என்ன இது?’ என்பது போல் மதுராக்ஷி… அவனைப் பார்க்க… நாய்க்குட்டியைத் தன் மடியில் நின்றும்.. கீழே இறக்கி விட்ட வண்ணம்… அவளைப் பார்த்து…

“பிரிச்சுப் பாரு… மதுரா…உனக்குப் பழக்கப்பட்டது தான்”என்று கூறியவன், ஒரு சில கணங்கள் அவளது திகைத்த முகபாவத்தை உள்ளுக்குள் படுசுவாரஸ்யமான புன்னகையுடன்… கள்ளத்தனமாக இரசிக்கத் தான் செய்தான்.

பின்பு.. உடனேயே.. தான் சொல்ல வந்த வார்த்தைகளுக்கு வேற்று அர்த்தம் கற்பிக்கும் முகமாக, “ஐமீன்.. உங்க இனத்துக்கு.. அதாவது… லேடீஸ்க்கு பழக்கப்பட்டது தான்”என்று ஒரு பீடிகையுடன் தொடங்க… அவளுக்கு ஏனோ… அவன் தந்த பெட்டியைத் திறந்து பார்க்க உதறலெடுத்தது.

நகைப்பெட்டியளவான அந்தப் பெட்டியில் என்னவிருக்கும் என்று அவன் பீடிகையிலேயே புரிந்து போனது.

கைகள் நடுநடுங்க.., ‘நான் நினைப்பதாக இருக்கவே கூடாது. நான் நினைக்கும் பொருள் இதில் இருக்கவே கூடாது’ என்று திரும்பத் திரும்ப மந்திர உச்சாடனம் சொல்லிக் கொண்டே… உடலெல்லாம் அட்ரினலின் உரத்துப் பாய… மெல்ல அப்பெட்டியைத் திறந்தாள் மதுராக்ஷி!!

 கைகளோ.. என்ன முயன்றும் முடியாமல்… பட்டவர்த்தனமாக கிடுகிடுவென நடுக்குற்றுக் கொண்டிருக்க… பெட்டியில் துஞ்சிக் கொண்டிருந்த அதை.. நெடுஞ்சாண் கிடையாகத் தூக்கிப் பார்த்தவளுக்கு…. பக்கென்று தூக்கிவாரிப் போட்டது.

அதே தங்கக் கொலுசு!! இனி வசமா மாட்டினோம்!!

முகம் சோர்வதை அவன் முன்னிலையில் காட்டிக் கொள்ளாமல்…. ஏதோ அந்தத் திருடியைப் பற்றிமூன்றாவது மனுஷியைப் போல பேசலானாள்.

வந்தது “திருடி” தான் என்று பிடிவாதமாக இருக்கும் அவன் எண்ணங்களையெல்லாம் குழப்பி திசை திருப்பி விடவும் தான் முயன்றாள் அந்த எமகாதகி!!

 “சார்… தங்கக் கொலுசு… திருடனோடதுன்னு எப்டி சொல்லலாம்??… அது அவன் திருடியிருக்கலாம்ல??.. இதை வைச்சு அவன் திருடி சொல்லலாமா?”என்று அவன் நினைப்பைப் மாற்றப் பார்க்க…

அவனோ தன் முழங்கையிரண்டையும் மேசையில் ஊன்றிய வண்ணம்… அவளையே இமையாது… பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு…அவளின் தகிடு தத்தங்கள் எல்லாம் சிரிப்பை மூட்டினாலும்…

ஒரு சிறிதும் வெளிக்குக் காட்டாமல்… அவளையே இமைக்காமல் பார்த்த வண்ணமே வாய் திறவலானான்.

“சரி.. நீ சொல்ற மாதிரியே.. இந்தக் கொலுச வந்த திருடன் திருடியிக்கலாம்னே… வைச்சிக்கிட்டாலும்.. இதப்பத்தி என்ன சொல்ற?”என்றபடி….. தன்னுடைய டிராயரிலிருந்து ஒரு உறையை எடுத்து மேசை மேல் வைத்தவாறு கேட்டான்.

இவற்றையெல்லாம் பார்த்து.. மதுராக்ஷி… தலைச்சுற்றிப் போகாத குறையாக நின்றிருக்க…அதிலிருந்ததுவோ.. அவள் நேற்றிரவு அவனிடத்திலே தவற விட்டுப் போன ஸ்கார்ப்!!

அதைப் பார்த்ததும் அவளிதயம் வேகவேகமாய் அடித்துக் கொள்ள… மனமோ.. கதறி அழாத குறையாக, ‘ ஐயோ இனி அவ்ளவு தான்..இனி மாட்டினோம்….திருடி நான் தான்னு உண்மைய சொல்லிரலாமா??’ என்று கைகளைப் பிசைந்த வண்ணமே எண்ண்ணியபடி.. அப்ரூவராக மாறத் துணிந்து… அவனையே பார்க்க… அவனோ அதிலிருந்து சின்ன போலித்தீன் பாக்கெட்டொன்றை எடுத்து,

“இந்த தலைமுடி.. உன் முன்னாடியிருக்கற ஸ்கார்ப்பில் இருந்தது.. அது வேற… ரொம்ப நீளமா இருக்கு… இவ்ளோ மென்மையான நீளமான முடின்னா… கண்டிப்பா வந்தது திருடி தான்.. இந்த முடிய வைச்சு… திருடியை.. ஈஸியா பிடிச்சிடலாம்”என்றவன்.. நுணுக்கி ஆய்ந்து கொண்டே சொன்ன தினுசில்… அவளுக்கோ அக்கணமேயே..அங்கேயே கண்களை இலேசாக இருட்டிக் கொண்டு… மயக்கமே வந்து விடும் போலிருந்தது!!

இருப்பினும் இறுதி வரை… நடிப்பை தொடரவே முயன்ற குறும்புக்காரியோ… அப்போதும் சந்தேகம் வினவுவது போல, “ஏன் சார்… ஆஆ… ஆஆ.. ஆண்கள் யாருமே நீளமான தலைமுடி வைச்சிக்கிட்டது இல்லையா?? அது எப்டி நீங்க வந்தது திருடி திருடின்னு ஆரம்பத்திலிருந்தே சொல்லலாம்?? ”என அவனைப் பார்த்து அவள் கேட்க..

அஜய்தேவ்வின் சிந்தனையில் வந்து போனது… நேற்று வந்தது ஒரு திருடி என்று அவன் உணர்ந்து கொண்ட தருணங்கள்!!

பின்னாடியிருந்து திருடியைப் பிடிக்கப் போன சமயம்.. அவளது பெண்மை ஹாரனில் அவனது உள்ளங்கைகள் அழுந்துப்பட்டு.. அது அவற்றை அமுக்கி, “பாம்.. பாம்”வாசித்த கதை ஞாபகம் வரவே… ஒரு கணம் சில்லிட்டு அடங்கியது ஆடவனின் தேகம்!!

அதே சமயம் முதலாளியை.. வந்த முதல் நாளிலேயே துருவித் துருவி கேள்வி கேட்கும்.. மதுராக்ஷி மீது.. கோபம் துளிர்க்கவே… சற்றே காட்டமான குரலில்…

 “வந்தது ஒரு திருடின்னு எனக்குத் தெரியும்… எப்படி தெரியும்னு உன்கிட்ட சொல்லணும்னு அவசியமில்லை..காட் இட்?? ”என்று அதிர்ந்த குரலில் கேட்க…. வாலுத்தனம் கொண்ட மதுராக்ஷியிடம் நின்றும் வெளிவந்தது பெரும் மூச்சு!!

‘ஹப்பாடா.. …வந்தது அவள் என்று தெரியாது அவனுக்கு’ என்று தப்புக் கணக்கினை.. சரியாகப் போட்டுக் கொண்டு.. அவள் நிமிர்ந்த வேளை… அவனோ.. தன்னிருக்கையில் நின்றும் எழுந்திருந்தான்!!

தன் ஷூப் பாதங்கள் தடதடக்க.. வலிமையாக நடந்து வந்து.. சரியாக நின்றிருக்கும் அவள் முன்னிலையில்.. மேசையில் பிருட்டங்கள் பதித்து…

சற்றே சாய்ந்து நின்றவன்… மேசையிலிருந்து காபி கப்பை ஏந்தி… அவளது செவ்விய அதரங்களை ஈர்க்கும் பார்வை பார்த்த வண்ணமே காபியை சிப்சிப்பாக அருந்தலானான் !!

அஜய்தேவ்வின் எஞ்ஞான்றும் கண்ணியமான பார்வை.. இன்று சற்றே நெறி பிறழ்ந்து… காபியை உறிஞ்சுவது போல.. இதழ்களை உறிஞ்சும் ஆகர்ஷிக்கும் பார்வை பார்க்கும் கதை அறியாமல் போனாள் அப்பாவி மதுராக்ஷி!!

அவள் தன் நினைவுகளுக்குள்ளேயே உழன்று தவித்துக் கொண்டிருந்த வேளை…, அவள் சிந்தனையைக் கலைக்கும் வண்ணம் கேட்டது அவன் குரல்!!

“இந்த நாயை வளர்த்த திருடி.. நாயைக் கவனிச்சிக்கிறது… இல்லை போலிருக்கு…. கிடைச்சதையெல்லாம் சாப்பிடுது” என்று அவளை இலேசுபாசாகத் திட்ட, பட்டென்று எண்ணவோட்டங்களெல்லாம் கலைந்து.. அவள் திரும்பி ஜிம்மியைப் பார்த்தாள்.

ஜிம்மியோ அவனது அச்சியந்திரத்துக்கு அருகிலிருந்த.. குப்பைத் தொட்டியை மோப்பம் விட்டுக் கொண்டே.. ஏதோ கிளறிக் கொண்டிருந்தது தீவிரமாக.

அவளை மறைமுகமாக.. “கஞ்சப் பிசுநாரி” என்று திட்டாமல்… திட்டிவிட்டானே என்ற கோபம் மேலிட… அவளையுமறியாமல், வீறிட்டெழுந்தவளோ, “அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார்.. ஒரு நாள் டாக் ஃபூட் (Dog food) க்கு மட்டும்… ஐயாயிரம் ரூபா செலவாகும் சார்… ”என்றாள் பொங்கலை அடக்க முடியாது.

அவனோ அருந்திக் கொண்டிருந்த காபிக்கப்.. இதழ்களிலேயே நிற்க.. விழிகளை உயர்த்தி… அவள் முகத்தை… ஆச்சரியத்துடன் பார்த்து, “உனக்கு எப்டி தெரியும்?? ”என்று கேட்க, மறுவிநாடி அதற்கு சீரிய பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறித் தான் போனாள் அவள்!!

“அ.. அஅ… அது வந்து வந்து என் பிரண்டு.. நாய் வளர்க்கிறதால தெரியும் சார்.. ”என்று ஒருவாறு சமாளித்து விட்டு நிமிர… கடைப்பற்களுக்குள் நாக்கினையிட்டு… மந்தகாசமாக அவன் சிரித்த புஞ்சிரிப்பினையெல்லாம்.. பதற்றத்திலேயே சுற்றிக் கொண்டிருந்த மதுரா அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

அவனோ…தன் ஐபேட்டினை எடுத்து.. தட்டித் தட்டி.. ஆராய்ந்து கொண்டே.. அவள் பெயரை அழைத்தான் மதுரமாக!

“மதுஹ்… ரா….”என்று தன் அந்தரங்க காரியதரிசியை.. அந்தரங்கமாக அழைக்கும் அவனழைப்பு.. மதுவும், மதுரமும் அவன் வாய் வார்த்தைக்குள் கொட்டிக் கிடப்பது போல போதையேற்றத் தான் செய்தது அவளை!!

இருப்பினும், ‘இப்போது என்னவோ?’ என்றஞ்சியவளாக நிமிர்ந்த போது.. அவளது முதலாளியோ.. முன்னைய கறார்க் குரலில், “லிசின்!! டு மீ அ ஃபேவர்.. (Do me a favour)” என்று சொல்ல… அவன் வாயிலிருந்து என்ன உதிரப் போகிறதோ என்ற பதைபதைப்பு அவளில் மிகாமலில்லை.

அவளும்… அவனேதும்.. ஏடாகூடமாகக் கேட்டு விடக்கூடாது என மனத்தினுள் எண்ணிக் கொண்டு, தட்டுத் தடுமாறி “சொ.. சொ… சொல்லுங்க சார்”என்றாள் சிறிய தயக்கத்துடன்.

அடுத்த கணம்.. அவன்.. அவள் பணிக்கு வந்த முதல் நாளிலேயே.. அவளுக்கு ஏவிய வேலையைக் கேட்டு வாயடைத்துத் தான் போனாள்.

போயும் போயும்.. நிறுவன உரிமையாளரின்.. பிஏயிடமா இந்த வேலைகளையெல்லாம் இந்தக் கம்பெனியில் சொல்வார்கள்??என்ற எண்ணம் அவளுள் துளிர்விடுமளவுக்கு.. அவன் சொன்னது எதனை??

இதோ அவன் சொன்னதுவெல்லாம் கீழ்வருவனவை தான்!!

“க்ளீன் மை கார்!!”என்று அதிகாரத் தோரணையில் கூற.. அவளோ அதைக் கேட்டு சர்வாங்கமும் ஆடிப் போய் திகைப்பூண்டை மிதித்தாற் போலத் தான் ஆனாள்.

என்ன?? அவளிடமா காரைச் சுத்தப்படுத்தச் சொன்னான்??. இந்த நிறுவனத்தில் காரைச் சுத்தம் செய்ய பிஏவா..??

மோகனம் – 10

மிடறு கூட்டி விழுங்கிக் கொண்டே… மருளும் விழிகளுடன், அவளோ, தன் கைக்கட்டினைச் சுட்டிக்காட்டி… “..இந்த நிலைமையில் எப்டி சார்.. வேற யார்க்கிட்ட சொன்னாலும் செய்வாங்களே சார்.. நானேவா செய்யணும்.??” என தயங்கித் தயங்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆனால் அஜய்தேவ் சக்கரவர்த்தியோ.. தன் பேச்சுக்கு மறுபேச்சில்லை என்பது போல.. ஆளுமையான தோரணையில்..

அவள் விழிகளை நேருக்கு நேர் சந்தித்து, “லுக் மதுரா.. திஸ் இஸ் மை கம்பெனி.. நீ என் ஸ்டாப் … நான் என்ன சொல்றேனோ.. அதை செய்றது தான் உன்னோட வேலை…அன்டர்ஸ்டான்ட்???”என்று சற்றே உரத்த தொனியில் இறுதியில்… அவள் நன்றாகவே பயந்து போனவள் தலை,

“ஆமா” என்பது போல மேலும் கீழும் கடகடவென ஆடியது.

நேற்றிரவு அவள் நடத்திய நாடகத்தின்.. அடுத்த காட்சியை வரைய அவனும் தான் சித்தமானானோ??

அவளது சிறு குற்றத்துக்கு தக்க தண்டனை வழங்கி விடும் நோக்கம் அவனிலிருக்கவே, ஐபேட்டில் நின்றும் தலையெடுத்து அவளைப் பார்த்து…

கம்பீரத் தொனியில், “நவ் க்ளீன் மை கார்”என்று சொல்ல… தன் முதலாளியை மறுத்துப் பேசத் தான்… குற்றமுள்ள குறுகுறுக்கும் மனசுக்காரியாலும் தான் முடியுமோ??

கையும், காலும் இழுத்து இழுத்து.. அரைப் பக்கவாதம் வந்தது போல நடக்குமொருத்தி… எப்படி காரினை கழுவுவாள்??

இரக்கமிலாதான்.. அவன் சிந்திக்க வேண்டாமா…??

 இவனெல்லாம் அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா?? இவனைப் பெற்றதும் ஓர் பெண்தானே…??

 எல்லாம் பணக்காரத் திமிர்!! ஆண்கர்வம்!! என்று திட்டிக் கொண்டே… விந்தி விந்தி நடந்து.. தரிப்பிட வளாகத்திற்குச் சென்று சேர்ந்தவளுக்கு…. இந்தக் கம்பெனி உரிமையாளர் அஜய்தேவ்க்கு எதிராக… போர்க்கொடி தூக்க வேண்டும் போலிருந்தது.

அந் நிறுவனத்தின் கார்கள் தரித்திருக்கும் பகுதியோ… சலசலவென மரக்கிளைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று உரசி… இதமான காற்று வீசும்… மரங்களின் வரிசைக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கலானது.

இதர கார்களெல்லாம்… அவ்வவ் அடையாள பிரதேசங்களில் தரிக்கப்பட்டிருக்க… உரிமையாளனான இவனது கார் மட்டும்.. தரித்திருந்த இடம் மட்டும்… சற்று தள்ளி… ஸ்பெஷலாக நின்றிருந்தது.

ஒருவாறு… விந்தி விந்தி வந்து அவள்.. அவனது காரினைப் பார்த்த பொழுது.. அவளுக்கோ.. கண்ணைக் கட்டியது.

நேற்றிரவு அவள் பூசிய கேக்கின் க்ரீமோ.. அவனது பானட்டின் மீது.. காய்ந்து ஒட்டி போயிருக்க… அங்கேயே இரண்டாக மடிந்து அமர்ந்து… சிறு பிள்ளை போல அழாத குறை தான் அவள்!!

“தன் வினைத் தன்னைச் சுடுமெ”ன்று சும்மாவா சொல்லி வைத்தார்கள் பெரியவர்கள்!!

நேற்றிரவு தான் அவள் கைகளாலேயே நலுங்கு வைக்கப்பட்ட அவனது புத்தம் புது வண்டிக்கு… இன்று அவளின் அதே கையால்.. அவள் வைத்த நலுங்கினை.. எடுக்க விழைகின்றான் அஜய்!! .

பெரிய கோடீஸ்வரன் அவனுக்கு.. இந்தக்காரை வெறும் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து கழுவவா ஆட்களா இல்லை??

அவள் தான் ‘திருடி’ என்பதை நிரூபிக்கும் ஸ்கார்ப், கொலுசு, முடி மற்றும் ஜிம்மி ஆகிய.. துருப்புச்சீட்டுக்கள் எல்லாம் அவனிடம் என்னும் போது.. அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடுவது தவிர வேறு வழியில்லை.

அவனது காரினருகே.. ஏற்கனவே… யாரோ இரண்டு வாளி தண்ணீர் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்!!

ஒருவேளை.. அவள் கழுவ வரக்கூடுமென்று.. அறிந்து அவன் திட்டமிட்டுச் செய்த ஏற்பாடாகவும் கூட இருக்கலாம் அல்லவா??

கை கால்கள் இயலாத பிள்ளையை… காரினைக் கழுவச் சொல்லிக் கொடுமைப்படுத்தும்.. பாஸ் மீது சீற்றம் வண்டை வண்டையாக எழுந்தாலும்… அதுவெல்லாம் அடக்கப்பட்ட எரிமலைக் குழம்பாகவே போயிற்று!!

‘எல்லாம் தலைவிதி’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டவள்… கைகள் வலிக்க வலிக்க.. முடியாமல்.. பற்களையும், கீழுதட்டையும் கடித்துக் கொண்டு… கஷ்டப்பட்டுக் கொண்டு…

இரு கையில் தூக்க வேண்டிய அந்த வாளியை… வலது கையால் மட்டும் தூக்க சிரப்பட்டுக் கொண்டிருக்க.. அந்தோ பரிதாபம்!!

இல்லை!! அவளால் அடிபட்ட கையினை வைத்துக் கொண்டு வாளியை என்ன முயன்றும் தூக்கத் தான்… முடியவில்லை.

வந்த கோபத்தில்.. தன் வலிக்காத.. சுயாதீனமான வலது பாதத்தினால்.. அவனது நவீனரக பென்ஸ் காரின் டயருக்கு ஓங்கியொன்று உதைந்தாள்.

அங்கலாய்க்கும் சினந்த தொனியில், “புல்ஷிட்.. ஈ..டியட்.. பூல்”என்று அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்த போது.. அவ்விடம் நோக்கி.. பதற்றத்தோடு ஓடோடி வந்தான் சுத்தம் செய்யும் பணியாள் ஒருவன்.

வயது நாற்பத்தைந்து ஐம்பது மதிக்கத்தக்க அவருக்கு.. தலைமயிர்களெல்லாம் இப்போதே நரைத்திருக்க.. இளநீல நிற வண்ண பணியாள் சீருடையிலிருந்தார் அவர்.

கைகால்கள் இயலாத நிலையில் அப்பெண்.. காரினை சுத்தம் செய்ய முன்வருவது அதீத கவலையைத் தான் கொடுத்திருக்கவும் வேண்டும்!!

இயல்பிலேயே மனிதாபிமானம் கொண்ட அப்பணியாளரோ.. அவளை வாளித் தூக்க விடாமல் தடுத்து நிறுத்தியவராக,

“என்னம்மா.. நீங்க போய் இதையெல்லாம் செய்துகிட்டு.. இங்கே தாங்கம்மா.. நான் க்ளீன் பண்ணி தரேன்.. அதுவரைக்கும் நீங்க இந்த பென்ஞ் மேல உக்கார்ந்துக்கிட்டிருங்க…”என்று சொல்ல… முதலில் நடப்பது நனவு தானா என்று அறியவே.. சில பல நாழிகையானது அவளுக்கு!!

அதற்குள் அப்பணியாளரோ… காரினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்க.. அவள் உடல் வேறு ஒத்துழையாமை இயக்கம் நடத்தவே… பெரிதாக ஏதும் பிகு பண்ணிக் கொள்ளாமல் போய்.. அவளும் அருகே மரநிழலிலே போடப்பட்டிருந்த பெஞ்சில்.. விந்தி விந்திப் போய் அமர்ந்து கொண்டாள் ஒய்யாரமாக!!

கொஞ்சம் கொஞ்சமாக உச்சிக் ஏறிக் கொண்டிருந்த வெயிலிலும், மரங்களின் காற்று சீராய் அடிக்க.. அதனை இதமாக உள்வாங்கிக் கொண்டே.. பெரியவரைப் பார்த்து வாய் திறவலானாள் மதுராக்ஷி!!

“ரொம்ப தேங்க்ஸ்ணே… உங்களுக்காவாவது மனிதநேயம் இருந்துச்சே… இங்கே இருக்கும் பணக்கார முதலைகளுக்கு அந்த ஈவிரக்கமெல்லாம் எங்கே போச்சின்னே தெரியல..கைக்கட்டோட இருக்கற என்னை.. கார் க்ளீன் பண்ண சொன்னா எப்பிடிண்ணே?? ”என்று வந்தவரிடம்.. தன்னை காரினைக் கழுவ.. அனுப்பி வைத்த அவனைப் பற்றித்திட்டத் தொடங்கினாள் மதுராக்ஷி. அவனது மறைமுகமான அன்பின் வீரியம் இன்னதென்று சரிவரத் தெரியாது.

அவள் செய்த தவறுக்கு… தண்டனையின் பய இரேகைகளை அவளுள் விதைக்க வைக்க அஜய்தேவ் நாடினானே ஒழிய.. அவளை.. ஈனமான நிலையில் வைத்து வதைக்க நாடவில்லை அவன்!!

அவள் நிலைமையை எண்ணி… பரிதாப்பட்டு.. அவள் பின்னோடே… இந்த வேலையாளை அனுப்பியதும் கூட.. அவன் தான் என்று தெரியாமல்… அவள் வசைமொழிகள் தொடர்ந்து கொண்டே போனது நான்ஸ்டாப்பாக!!

‘பாஸ் தான் அனுப்பினார்’ என்று தப்பித் தவறியேனும் சொல்லி விடக்கூடாதென்று உத்தரவு வேறு அப்பணியாளருக்கு இடப்பட்டிருக்க… அவள் திட்டையெல்லாம்…

சிறு புன்னகையுடன் இரசித்துக் கொண்டே, “கரெக்ட்டு தான்மா.. வாஸ்தவம் தானுங்கமா”என்று இடைக்கிடை சொல்லிக் கொண்டே காரைத் துப்புரவுப் படுத்தும் பணியை.. அப்பெரியவரும் செவ்வனே செய்தார்.

நேற்று காட்சியகத்திலிருந்து வந்தது போலவே புத்தம் புதிதாக மின்னியது கார்.

வேலை கனகச்சிதமாக முடிந்ததும்.. பெஞ்சிலிருந்து இறங்கி பெரியவரின் அருகே… தன் இயலாமை நடை நடை வந்தவளோ, மனமுருக கைக்கூப்பி, “.. ரொம்ப தேங்க்ஸ்ண்ணே”என்றவளாக.. தன் டெனிம் பையிலிருந்து இருநூறு ரூபா நோட்டுக்களை நீட்ட… பெரியவரோ அதை ஏற்பதாகத் தானில்லை.

அவர், “‘வேண்டாம் வேண்டாம்’”என்ற போதும்.. அவர் கைக்குள் அதைத் திணித்து விட்டு, “அட வைச்சிக்கங்கணணே.. வைச்சிக்கங்க… நைட்டு குவார்ட்டர் கட்டிங்க்கு வைச்சிக்கங்க” என்று அவரை அந்தப் பணத்தை ஏற்க வைப்பதில் வெற்றியடைந்த… திருப்திப் புன்னகையுடன் திரும்பிய போது தான் கண்டான் அவனை!!

அலுவலக சிற்றூழியன்..பாரிய கண்ணாடிக்கதவினை.. இழுத்துத் திறந்து.. அவனுக்காக சல்யூட் வைக்க.. அவனோ.. தன் கையிலிருந்த கூலர்ஸினை…மனம் மயக்கும் பாணியில் கண்களில் போட்டுக் கொண்டே… ஒற்றைக் கை பேன்ட் பாக்கெட்டில் இட்ட வண்ணமே நடந்து வருவது கூட கொள்ளை பேரழகே!!

அவன் கூலர்ஸ் கண்களில் மாட்டிய விதத்தையும், வேக வேக எட்டுக்கள் எடுத்து வைத்து அவன் நடந்த சிம்ம நடையையும்.. தூரத்திலிருந்தே பார்த்திருந்தவளுக்கு… விழிகளில் செக்கன் நேரத்துக்கும் குறைவாக வந்து போனது ஒரு அழகுச் சொக்கலும், கிறங்கலும்!!

தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும்.. ஆங்கிலோ – இண்டியன் வகையறாவைச் சேர்ந்த ஆண்மாடலைப் போல இருந்தவனை… விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்கச் சொல்லி உந்தியது அவள் மனம்!!

அதேசமயம்…கன்னியர்கள் மனம் மயக்கும் அழகனாயிருந்தும் என்ன பயன்?? அவன் மனம்?? அது கொடூர இராக்ஷச மனமல்லவா??

மனத்தில் அன்பிருக்கும் மனமெதுவோ.. அதுவே பேரழகு மனம்!!

 என்றெல்லாம் அவனைப் பற்றி.. அவன் உதவ ஆளனுப்பிய விஷயமறியாது எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு… அவன் தூரத்தில் நடந்து வருவது கண்டு உள்ளுக்குள் உதித்தது ஒரு முரட்டு ஐடியா!!

இந்தக் காரை அவள் கழுவவில்லை. வேலையாள் தான் கழுவித் தந்தானென்று… அவன் அறிந்தால்??

நிச்சயம்.. கழுதை மாதிரி காட்டுக்கத்தல் கத்தக்கூடும் என்று அலறி பயந்து நின்றவளோ… சட்டென்று அருகில் நின்றிருந்த வேலையாளிடம்,

“அண்ணே… இங்க என்ன நடந்தாலும்… என்னை மட்டும் காட்டிக் கொடுத்துடாதீங்கண்ணே… ப்ளீஸ்.. ப்ளீஈஸ்.. “என்று அவரிடம் கெஞ்சும் குரலில்.. இரு கரங்களையும் கோர்த்துக் கூப்பிய வண்ணம் கூறிவிட்டு…அவர் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல்.. தன் அடுத்த வாலுத்தனத்தை காட்டச் சித்தமானாள் மதுராக்ஷி!!

வாளியில் மீதமிருந்த நன்னீரை… சுயாதீனமான அடிபடாத கையில் அள்ளி எடுத்து..தன் உடைகளின் மீது.. நெற்றியின் மீதும் தெளித்துக் கொண்டவளுக்கு.. அது வியர்வை எபெக்ட்டாமாம்!!!

சரியாக… அவன் சுத்தம் செய்யப்பட்ட காரிற்கருகே வந்ததும் தான் தாமதம்.. இதற்காகவே உரிய தருணம் வரும் வரைக் காத்திருந்தவளாக…

அப்படியே..ஒருபக்க நெற்றியைப் பிடித்துக் கொண்டு.. அங்கணமே..தேகம் தள்ளாடி.. தலைச்சுற்றி விழுவது போல விழப்போக… மெய்யாலுமே பதறிப் போனவனோ.. பட்டென்று அவள் இடையூடு கையிட்டு.. அவளைத் தாங்கி தன் நெஞ்சோடு பிடித்துக் கொண்டான் அஜய்தேவ்.

அவளும் பக்காவாக.. நிஜமாலுமே மயக்கத்தின் சுழலுக்குள் தள்ளப்பட்டவள் போல.. கண்மணிகள் எல்லாம் மேல் சொருக… மூச்செடுக்க சிரமப்பட்டுக் கொண்டே.. முகம் புதைத்தாள் அவனது நெஞ்சாங்கூட்டுக்குள்!!

அவள் முகத்தை தன்னில் நின்றும் பிரித்து… அவளது அழகிய வளவளப்பான கன்னத்தைத் தட்டித் தட்டி,

“மதுரா.. மதுரா…”என்று அவளை எழுப்ப முனைய… அவனுக்கோ அவளுக்கு என்னானதோ… ஏதானதோ என்ற பதற்றம் உள்ளுக்குள் மலையளவு எகிறி.. அவனுக்குள் உயர் இரத்த அழுத்தத்தையும் கிளறி விட்டிருந்தது!!

தான் அனுப்பி வைத்த பணியாளரிடம்.. சீற்றம் ததும்பும் குரலில்.. “என்ன.. பார்த்துக்கிட்டு நின்னீங்களா??… ஹெல்ப் பண்ணியிருக்கலாமே…”எனக் கோபத்தில் திட்ட…. அவளுக்குள்ளோ.. முதலாளியின் திட்டலுக்கு பயந்து.. பெரியவரும் தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்று கிலியெடுத்தது அவளுக்கு.

எங்கே அவளை அந்த வேலையாள்… ‘இல்ல சார்.. மேடம் தான் உங்கள பார்த்துட்டு வேணும்னு மயங்கி விழுந்திருச்சு?’ சொல்வாரோ??? என்றெண்ணம் வலுக்க.. அவள் தடதடக்க நின்ற நேரம்…

 அவர் அவளைக் காட்டிக் கொடுக்கவில்லை.

அவள் “குவாட்டரிற்காக” கொடுத்த.. இருநூறு ரூபாய் வேலை செய்கிறதென எண்ணிக் கொண்டவளாக மதுராக்ஷி நின்றிருந்த வேளை.

வேலையாளியோ…தன்னை அனுப்பி வைத்த அஜயிடம்.. கைக்கட்டி நின்று பவ்யமாக, “.. நான் எவ்வளோ சொல்லியும் மேடம் கேட்கலை சார்… ஒத்த கையாலேயே எல்லாத்தையும் கழுவினாங்க சார்..”என்று கூற… மதுராக்ஷிக்கோ… இக்கட்டான தருணத்தில் ‘எக்ஸ்ட்ரா பர்பாமன்ஸ்’ செய்யும் அந்த வேலையாளியைக் கோயில் கட்டி கும்பிட வேண்டும் போலிருந்தது.

மதுராக்ஷி இருக்கும் நிலையில் அவள் வேலை செய்யக்கூடாதென்றல்லவா.. துப்புரவுப் பணியாளரை அனுப்பி வைத்தான் அவனும்??

மதுராக்ஷியே… ஈனமான நிலையிலும்.. அத்தனை வேலைகளையும் செய்திருப்பது அறிந்து.. அவனுள் உச்சபட்ச கொந்தளிப்பை பரிசளிக்க.. அப்பெரியவரைத் திட்டிவிட வாயெடுத்த போது அதற்கு விடவில்லை மதுராக்ஷி!!

அவளோ.. உடனேயே இடையில் புகுந்து, இயலாமை நிறைந்த குரலில், “அவரத்.. திட்டாதீங்க சார்.. எல்லா தப்பும் என்னோடது தான்.. நா.. நான் தான்.. கே.. கேட்கல..என்னால முடிய…ல. சார்.. ஐ நீட் த்ரீ டேஸ் லீவ்”என்று கூற…

நல்லவனான அஜய்தேவ் சக்கரவர்த்திக்கும் கூட.. குறும்புக்காரியான மதுராக்ஷியின் நிலை பெரிதும் கவலையையே கொடுத்தது.

இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி… வேலைக்கு மட்டம் போட அவள் மூன்று நாட்கள் விடுப்பு கேட்கும் சூட்சுமம் புரியாது.. வெள்ளந்தியான நாயகனும்,

“ஓகே டேக் தெம்…சரி வா.. கார்ல ஏறு.. உன் வீட்டுல டிராப் பண்றேன்”என்றவனாக… அவளே எதிர்பார்த்திராத தருணம்.. அவளது இடையூடு ஒரு கை… தொடையூடு ஒரு கையிட்டு.. அவளை…

அணைத்துத் தூக்கிக் கொண்டான் குழந்தை போல!!

மின்னல் நேரத்தில்.. அவள் தலை அவனது இதயத்தினருகே வந்த விந்தை அனுமானிக்க சிரமங்கொண்டவளுக்கு.. அவளின் எதிர்ப்பினை கூட பதிவு செய்யக்கூட முடியாமல்… ஏதோ ஈர்த்தது உணர்வு மயக்கம்!!

அவனது ஜார்ஜியன் நாட்டு திரவிய வாசனையோடு.. அவனுக்கே அவனுக்கென்று சொந்தமான வியர்வை வாசனையும் கலந்து கட்டி.. புதுமணமொன்று.. அவளது நாடியை நிரடிச்செல்ல… அவள் கை.. அவளையுமறியாமல் இறுகிப் பற்றியிருந்தது அவனது கழுத்து வளைவினை!!

அவனது ஹிருதயத்தின் துடிப்போசை.. அவள் செவிகளுக்குள் புகுந்து ஓட.. மிக மிக அருகாமையில் அவனின் கம்பீர வதனம்!!

முழுதாக க்ளீன்ஷேவ் செய்யப்பட்ட கன்னத்திலும்… அங்குமிங்கும் முளைத்திருக்கும் தாடி மயிர்கள்.. அவனுடைய ஆண்மையை இன்னும் லாவண்யமூட்ட… அவனிடம் கொஞ்சம் கொஞ்சமாக… தன் சுய உணர்வுகளை பறிகொடுத்துத் தான் நின்றாள் யௌவன மங்கை.

சுற்றி வந்து… காரின் கதவினைத் திறந்து சாரதி ஆசனத்துக்கு பக்கத்தாசனத்தில்… அமர வைத்து… அரைமயக்க நிலையிலிருந்த பேதைக்கு.. சீட் பெல்ட்டும் தான் போட்டு விடலானான் அஜய்தேவ்!!

அக்கணம்.. அவனது இதழ்களுக்கு நேரெதிரே வந்த.. அவளது மெல்லிய அதரங்கள் கண்டு.. … என்னவென்று இனங்காண முடியாத… உள்ளுக்குள் சின்ன அலைக்கழிப்பு… அஜய்க்குள்ளும் வந்து போக… இடம், பொருள், ஏவல் என அனைத்தையும் மறந்து… அவள் இதழ்களை அள்ளிப் பருகிட… ஏனோ மருகித் தவித்தது அவனுள்ளம்!!

அவ்வதரங்களில் நின்றும் வெளிவரும் ஒருவகையான மல்லிப்பூ வாசனை.. அதில் நாழிகைகள் நகர்வது கூடத் தெரியாமல்..மெல்லியளின் இதழோடு.. தன் இதழ்களின் இணக்கம் காட்ட.. அணுஅணுவாக… அவளை அணுகிப் போனான் அஜய்!!

இது… பெண்களிடம் கண்ணியம் காத்து… ஒதுங்கி நிற்கும் அஜய்தேவ் தானா??

இல்லை நல்லவனையும்.. நெறி பிறழும் படி வைக்கிறதா அவள் அழகு!!

அவளது இன்ப இதழ்களைத் தொட.. இம்மி இடைவெளியிருந்த வேளை… இதமான காற்றும் வீச.. அதில் அவளது முன்னெற்றிக் கூந்தல் கலைந்து வந்து.. அவளது ஒருபக்க வதனம் மறைத்து வீழ்ந்தது கூட.. ஆடவனின் இதயத்தை தென்றலாய் வருடித் தான் போனது.

மெல்ல தன் கைகள் கொண்டு… அவளது இதழ்களை மறைத்து வீழ்ந்த கூந்தலெடுத்து அவளது செவிகளின் பின்னே சொருக… அவளது பட்டுப் போன்ற இதழ்களில் பட்டது அவனது முரட்டு உள்ளங்கை!!

அதில் அவன் எஞ்ஞான்றும் அனுபவித்திராத.. ஒரு புது மோகன மயக்கம் அவனுள் வந்து போக… அவளை அக்கணமே ஆட்கொண்டுவிட ஏங்கித் தவித்தது இரகசியக் காதல் மனம்!!

கண்மூடியே படுப்பது போல பாவ்லா செய்திருந்த மதுராக்ஷிக்கோ.. இது பெரும் திக்திக் நிமிடங்களாகவே மாறிப் போனது.

விட்டால்.. காருக்குள்ளேயே தப்புத் தண்டா செய்து விடுவானோ என்ற அச்சத்திலிருந்தவளோ… ஏதோ அரை மயக்கத்தில் விழிப்பது போல… ஏதுமறியாத பச்சைப்பிள்ளை முகபாவனையுடன்.. விழித்து..

தனக்கு மிக மிக அருகாமையிலிருக்கும் அவன் முகத்தைக் கண்டு மலங்க மலங்க விழித்து நிற்க… அதுவும் கூட அவனுக்குள் மோகத்தை பரிசளிப்பதாகவே இருந்தது.

ஆனால் இவனோ.. அவள் கண்விழித்த மறுநொடி ஜென்டில்மேன் அவதாரம் பூண்டவனாக… குரலை செருமிக் கொண்டு, “நீ ரெஸ்ட் எடுத்துக்க மதுரா… ஐவில் டேக் கேர்”என்று கூறியவனாக… வண்டியை எடுக்கலானான் அவன்.

அவளது வீடிருக்கும் இடத்தினை.. அவளது “பயோ டேட்டா” பார்த்து அறிந்திருந்தவன்… அவள் வீட்டுக்கான பாதையில் வண்டியை விட…. மீண்டும் கண்களை மூடினால்… போகும் வழியிலேயே சில்மிஷம் செய்து விடக்கூடுமோ என்ற எண்ணம் மிகையிட்டது மதுராக்ஷிக்கு!!

ஆகையால்.. பட்டப்பகல் பொழுதினில்.. மொட்டு மொட்டென்று விழித்துக் கொண்டே அவள் வர… அவளது எழில் வதனத்தை… ரியர்வீவ் கண்ணாடி வழியாக.. இமைக்காமல் பார்த்து வரும் அஜய்…. இவன் புதியவன்!!

சரியாக அவளது வீடு வந்ததும்… இறங்கி வந்து அவள் கதவைத் திறந்து விட்டவன்.. அவளைக் கைத்தாங்கலாக இறக்கி விடத்தான் கை நீட்டுகிறான் என்றெண்ணிக் கொண்டிருந்தவளுக்கோ…இரண்டாம் அதிர்ச்சி காத்திருந்தது அங்கே.

அவள் பக்கமாக நீண்ட கரத்தினை நோக்கி… “வேணாம் சார். நானே உள்ளே போய்க்கிறேன்.. அம்மா பார்த்தால் தப்பா நினைப்பாங்க”.. என்று சொல்லச் சொல்லக்… கேட்காமல்…. அவள் பக்கமாக நீண்ட கைகள்.. அவளது இடையையும், பொசுபொசுவென ஏறிப் போயிருந்த கொழுப்பு மூட்டையிலும் கையிட்டு… மீண்டும் ஏந்திக் கொள்ள..

பிச்சிப்பூவாக விரிந்தது அவள் விழிகள் திகைப்பில்!!

அந்தத் திகைப்பு மாறாமல் நின்றிருந்த கணத்தில்… அரவமேயெழுப்பாமல்… அவளை அநாயசமாக ஏந்தி… அவள் வீட்டு நடுக்கூடத்திற்குள்ளே வந்த.. அந் நெடியவன்…

சோபாவில்… அவளை மலர் போலக் கிடத்தி விட்டு… அவள் கண்களோடு தன் கண்கள் கலந்து… “பத்திரமா பார்த்துக்க..” என்று… ஓர் புன்னகை சிந்தினானே!!

ஹப்பப்பபா!!

மத்தகாசமும், மோகமும்.. சரிவிகித சமனாகக் கலந்து கட்டி அவன் வீசிய மோகனப்புன்னகை தான் அது!!

சோபாவில் கிடந்தவளோ… தன்னை விட்டும் ரிவர்ஸில் தன்னைப் பார்த்துக் கொண்டே செல்பவனை நோக்க.. அழகாய் விழிகள் மூடித் திறந்து.. கண்களாலேயே விடைபெற்றுப் போனான் ஆணழகன் அஜய்தேவ்!!

ஒரு அந்நியன்.. வீட்டுக்குள் மகளைச் சுமந்து வந்து சென்றிருப்பது அறியாத தாயோ சமையர் கட்டில்.. வேலைப்பளுவில் மிகுந்திருக்க… அவளது அன்புத் தங்கை திவ்யாவோ… காலேஜ் சென்றிருக்க….

ஸ்க்ரிட்டு ஆபிசர் ராமகிருஷ்ணனோ… தன் பணிக்காக மருத்துவமனை சென்றிருக்க… புதிதாய் வந்த அந்நியனைக் குரைத்துக் காட்டிக் கொடுத்து…. சத்தம் போட ஜிம்மியும் இல்லை.

ஆகையால்.. மாயவன் வந்து போன வழித்தடமும் அவள் தாயறிய வாய்ப்புமில்லை!!

அவன் வந்து சென்றது கூட.. அவள் உள்மூளை கிரகிக்க முடியாதளவுக்கு… கண்களாலேயே சிரிக்கும் நிழலுருவம் இன்னும் நடுக்கூடத்தில் நின்றிருப்பது போல மாயைத் தோன்ற… வள்ளியின் முருகனைக் கண்டாற் போல… இரசித்த நயனங்களுடன் சிலையாய் சமைந்து அமர்ந்திருந்தாள் பெண்!!

அவன் சிந்திய மோகனப் புன்னகையில்.., ‘அவனெப்படி தன் வீடறிந்தான்?’ என்று சிந்திக்கக் கூட மரத்துப் போனது மங்கையின் மனம்!!

சமையலுக்காக கறிவேப்பிலையெடுக்க… ஒரு கையில் கரண்டியுடனும், சேலைக் கொசுவத்தை ஏற்றி.. இடையில் சொருகிக் கொண்டு.. நடுக்கூடத்திலிருக்கும்.. குளிரூட்டியை நாடி வந்த… தாயோ,

அரவமேயெழுப்பாமல்.. திடுதிப்பென்று வந்து நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கும் மூத்த மகளைக் கண்டு அதிர்ந்து தான் போனார்.

“என்னடீ சீக்கிரம் வந்துட்ட…??”என்று தாயார் கேட்க.. அப்போது தான்.. தன் மாயவலையில் நின்றும் அறுபட்டு வெளியில் வந்தவளோ,

திக்கித் திணறி சமாளிக்கும் குரலில், “அ.. அ.. அது வந்தும்மா.. என் பாஸ்.. ரொம்ப நல்லவரும்மா.. கையும், கால்லயும் கட்டப்பார்த்தவுடன் என்னமா துடிச்சுப் போயிட்டாரு தெரியுமா??… ஸ்டாப் ஃபர்ஸ்ட்… வர்க் நெக்ஸ்ட்ன்னு..என்னை இங்கேயே கொண்டு வந்து விட்டுட்டுப் போறாருமா” என்று அங்கு நடந்த கூத்தையெல்லாம் மறைத்து.. வாய்க்கு வந்த பொய்யைக் கூற தாயும்… அதனை நம்பி விட்டார் மோலும்.

நல்ல மனம் கொண்ட அவள் பாஸையெண்ணி வியந்தவராக, “பாவம் தம்பி.. வெளிய வேற வெயில் கொளுத்துது.. மோராவது கொடுத்து அனுப்பிச்சிருக்கலாம்”என்று கூறிக் கொண்டே சமையலறை நோக்கி விரைய..

இவளோ சோபாவிலேயே ஹாயாக சாய்ந்து கொண்டே.. டீவியை ரிமோட் எடுத்து ஆன் செய்து… பார்த்தவளாக, , “கூப்பிட்டேன்மா… இன்போர்டன்ட் மீட்டிங்க் இருக்கு…இன்னொரு நாள்.. பார்த்துக்கலாம்… சொல்லிட்டு போயிட்டாஆஆஆரு”என்று சமையலறையிலிருக்கும் தாய் கேட்கும் வண்ணம் கத்திச் சொல்லி விட்டு…. தொலைக்காட்சியில்… ஐக்கியமாகிப் போனவள்…

இனி வரும் விடுப்பு மூன்று நாட்களில் அடிக்கப் போகும் லூட்டிகளை உலகம் தாங்குமா?? காண்டாகி போவாரா ராம்கி??

 

 

2 thoughts on “மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே! – 9”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top