மோகனம்-15
மறுநாள் அலுவலகத்தில்,
அவனுடைய அறைக்கதவை திறக்க நாடிய போது… உள்ளிருந்து காக்கிச் சீருடை அணிந்து…. சற்று தொப்பை வைத்து.. முறுக்கு மீசையுடன்.. கூடிய ஒரு போலீஸ்காரரொருவர்… வெளியே வருவது புரிந்தது அவளுக்கு.
அவளுக்கோ காக்கிச்சட்டையைக் கண்டதும்… குற்றமுள்ள நெஞ்சல்லவா?? உள்ளுக்குள் அதீதத்துக்கும், அதீதமாய் குறுகுறுக்க…காவல் அதிகாரியின் முகத்தைப் பார்க்கவும் வெகு சிரமப்பட்டுக் கொண்டு நின்றாள்.
நிமிடத்தில்.. அவளது பிறைநுதல் மற்றும் தேகத்திலெல்லாம் வியர்த்து வழியவும் ஆரம்பித்திருந்தது.
இமைகள் படபடக்க… அறை வாசலில் நின்றிருந்தவளை.. காவல்துறை அதிகாரியோ… ஒரு முறைப்புடன்… அவளை ஏற இறங்கப் பார்த்து விட்டு.. மீசையை முறுக்கிக் கொண்டே அங்கிருந்தும் நகர்ந்து போனார்.
இது என்ன புதுமை?? வழமைக்கு மாறாக போலீஸ் எல்லாம் ஆபீஸ் வந்து செல்கிறது என்றெண்ணியவள்… குழம்பிய முகத்துடனேயே …தன் எஜமானனின் அறைக்குள் உள்நுழைந்தாள்.
போலீஸ் எதற்கு வந்து சென்றது… திருட்டு அகப்பட்டதோ..?? என்ற எண்ணம் தோன்ற இதயம் பக்பக்கென்று அடித்துக் கொள்ளலானது.
அது போக, “இன்று காலையிலேயே வரச்சொன்னதும் இதற்காக தானா?”என்ற எண்ணமே… அவளுக்கு நெஞ்சுவலிக்காத குறையைக் கொடுத்தது.
‘அவளது குண்டு பூசணிக்கா இன்று எந்த மூடில் இருக்கிறதோ?? தெரியவில்லையே… இறைவா காப்பாற்று.. எந்த மூடில் இருந்தாலும் திட்டு வாங்காமல் காப்பாற்று” என்றெண்ணிக் கொண்டவளாய்… அவனது அறைக்குள் “எக்ஸ்க்யூஸ்மீ சார்” என்ற வண்ணம் உள்நுழைந்தாள் மதுராக்ஷி.
தனக்குரிய சொகுசு சிஇஓ நாற்காலியில் அமர்ந்திருந்து டெஸ்க்டாப்பில் அதி தீவிரமாக பார்வைப் பதித்திருந்தவனோ.. அவளது மெல்லிய குரலில், நிமிர்ந்து… சிந்தை கலைந்து அவளைத் தான் பார்க்கலானான்.
இன்று அவள் சட்டை மற்றும் பேன்ட் அணிந்து ஆங்கில சேனலில் செய்தி வாசிக்கும் மாடர்ன் லுக்கில் வந்து கண்டிருப்பது கண்டு… சிறு ஏமாற்றம் அவன் கண்ணோடு பிறந்தது.
இன்று அவள் சேலைக் கட்டவில்லையா?? எல்லா நாளும் அலுவலகத்திற்கு சேலைக் கட்டினால் தான் என்ன?? அவனுடைய இரகசிய காதல் மனம்… அவளிடம் மறைமுகமாக குறைப்பட்டுக் கொள்ளவும் செய்தது.
அவளைக் கண்டதும்.. முகம் மலர..தன் நாற்காலியில் நின்றும் எழுந்து… அவளை நாடி அழுத்தமான எட்டுக்கள் எடுத்து வைத்து வந்தவனோ,
“ஒரு குட் நியூஸ்!!!”என்றான் அத்தனை ஆர்வம் விழிகளில் பளிச்சிட.
அவளும் அவன் முகம் என்றுமில்லாமல்.. மலர்வதைப் பார்த்து அதிசயித்த வண்ணம்.. மனதிற்குள் அல்லாடியவளாக, “எ.. எ.. என்ன குட் நியூஸ் சார்?”என்று கேட்டாள்.
அவளது கேள்விக்கு உரிய பதிலாக.. அவன் சொன்ன விடயத்தில்.. அதற்கு மேலும் பேச முடியாமல்… ஷாக் அடித்தது போல நின்று போனவளுக்கு.. ஒரு நிமிடம் மூச்சுப்பேச்சுக்கூட அற்று போனது.
எனில், அஜய்தேவ் அப்படி என்ன பதில் தான் உரைத்தான்??
இதோ!!
மேசையின் மீது பிருட்டம் சாய்த்து நின்றவன்.. மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியவண்ணம்… அவளையே குறுகுறுவெனப் பார்த்தவனாக,
“அந்த திருடியை நான் கண்டுபிடிச்சிட்டேன்..”என்று தான்.. கூறியவன்.. அவளது முகத்தில் தோன்றும் உணர்வுகளை அளவிட்டவனாக நின்றிருந்தான்.
அவளுக்கோ.. அடுத்த நொடி… கண்களின் பிரகாசம் பட்டென்று போனது போல ஓருணர்வு ஏற்பட…. அவனுக்குள்ளோ… அவளது உணர்வுகளையெல்லாம் அச்சொட்டாய் படிப்பது.. ஒரு பெரும் சுவாரஸ்யமாகிப் போனது!!
அவன் அவளையே..இமைக்காமல் பார்த்திருக்கும் பார்வையையும், அந்தப் போலீஸ்காரன்… இங்கிருந்து வெளியேற முன்னம் அவளைப் பார்த்த ஏற, இறங்கல் பார்வையையும்… தனக்குள்ளே நினைவுறுத்திப் பார்த்தவளுக்கு… “அந்தத் திருடி நான் தான்” என்று.. அஜய்யிடம் சிக்கிய ஆதாரங்களை வைத்து கண்டுபிடித்து விட்டார்களோ என்ற எண்ணம் முகிழ்க்க.. தொண்டையில் அடைத்ததை மிடறு கூட்டி விழுங்கிக் கொள்ளவும் செய்தாள் மதுராக்ஷி!!
எனில், இவனுக்கு தெரிந்து விட்டதா.?? அதனால் தான் அவளை ஓயாது பார்த்து வைக்கிறானா??
விழுந்தும் மீசையில் மண் ஒட்டாதது போல.. சர்வ நிச்சயமாக… இவளால் மாத்திரமே சிறப்பாய் நடிக்க முடியும்!!
அவள் .… அகப்பட்டுக் கொண்டாளோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் மிளிர்ந்தாலும்.. அதனை ஒரு சிறிதும் கூட.. காட்டிக் கொள்ளாமல்,
கைகளைப் பிசைந்த வண்ணம்..திக்கித் திணறிய குரலில், “அ.. அதுக்கு தான் அந்த போலீஸூம் வந்துட்டு போறாரா சார்?? என்று அவள் கேள்வியெழுப்ப… சற்றும் தாமதியாமல் வந்தது அவன் பதில்,
“.. அப்சளூட்ளி கரெக்ட்…!!”என்று.
பட்டென நிமிர்ந்து அஜய்யைப் பார்த்த போது.. அவள் கண்டது பொய்யோ மெய்யோ என்ற் ஐயுறும் வகையில்.. நாயகனின் இதழ்களில் மறைந்து ஓடிப் போனது ஒரு குறும்புப் புன்னகை!!
அவன் சிரித்தானா? ச்சேச்சே இருக்காது!!
இரு கால்களை ஊன்றி நின்றிருந்தவனோ… ஒற்றைக்காலை மாத்திரம் ஊன்றியும், மறுகாலுக்கு அழுத்தம் கொடுக்காமல் சாதாரணம் போலும் நின்றது கூட,
அவளை இன்னும் இன்னும் களேபரத்திற்குள்ளாக்கவும் தான் செய்தது!!
“அன்ட் ஒன் மோர் திங்க்… யூ நோ?? திருடி நம்ம ஆபீஸ் தான் வேலை செய்றா” என்று கூற… நுதலோரம் பூத்த வியர்வைமணியொன்று.. துளியாக பரிணாமம் கண்டு.. நெற்றிப் பக்கவாட்டினூடாக வழிந்தோடலானது அவளுக்கு.
கூடவே இலேசாக தலையைச் சுற்றுவது போலிருக்க… அவன் கையில் சிக்கியிருக்கும் தன் ஆதாரங்களைப் பற்றித் தான் சிந்திக்கலானாள் அவள்.
அவள் ஜிம்மி!!
அவள் முந்தானை!!
அதில் சிக்கியிருந்த தலைமயிர்!!
கூடவே அவள் தவறவிட்ட கொலுசு!!
மேற்சொன்ன அத்தனையையும் பார்த்து.. வந்துவிட்டுப் போன காவல்துறை அதிகாரியும் திருடியது அவள் தான் என்று கண்டுபிடித்து கொடுத்து விட்டாரோ?? .
‘திருடி அவள் தான்’ என்பதனை என் வாயால் கூற வேண்டும் என்பதற்காகவா.. இத்தனை பீடிகைகளும்??
அவன், “அந்தத் திருடி..நம் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறாள்” என்று கூறிய போதே… அவளுக்கு இலேசாக கண்கள் கலங்கவாரம்பித்தது.
இப்போது அவன் பார்த்து வைக்கும் ஓயாத பார்வையில்.. அதிகமாக விழிகள் கலங்கத் தொடங்கவே… அவள கண்கள் கலங்குவதைக் கண்டவனோ, “இப்போ ஏன் கண்ணு கலங்குது..?”என்று கேட்டது மாத்திரம் தான் தாமதம்!!
அடுத்த நொடி…. வெட்கம், மானம், ரோஷம், சுடு, சுரணை என எதுவுமேயில்லாமல்..சிறுபிள்ளைகள் சிணுங்கிச் சிணுங்கி அழுவது போலத் தான்… அழுதே விட்டாள்.
கைகளிரண்டையும் பிசைந்து கொண்டு அழுபவளைக் கண்டு… பதறிப் போனவனாய்.. அவளருகில் வந்து, “ஏய்.. இ.. இப்போ என்னாச்சுன்னு அழுவுற மதுரா…?” என்று தான்.. கேட்டான் அவன்.
அவளோ அழுகையை நிறுத்தக் கஷ்டப்பட்டு தேம்பித் தேம்பி அழுத வண்ணம்…, “இ.. இ.. இல்ல சார்.. சத்.. தியமா.. நான் .. உங்க காரைத் திருட அன்னைக்கு வரலை சார்.. இருபது கோடி ரூபா கார்ல… மேக்கப் போடுவீயான்னு.. இன்டர்வீவ்.. அன்னைக்கு.. நீங்க.. திட்.. திட்.. திட்டினீங்கள்ல… அதான் சார் .. நான்.. உ.. உங்க காருக்கு.. கேக் பூசி நலுங்கு வைச்சேன் சார்.. அவ்.. அவ்ளோ தான் சார் செய்தேன்.. மற்றும்படி உங்க காரை திருட நான் வரலை சார்.. நான்.. அஅ.. ந்த மாதிரி குடும்பத்துல பிறக்கலை சார்.. நம்புங்க…” என்று.. ‘ஓஓ’வென ஒப்பாரி வைத்துக் கொண்டே தான் கூறலானாள் அவள்!!
அவள் விழிகளைக் குனிந்து பார்த்தவனுக்கு…அவளின் குழந்தைத்தனமான அழுகையில்.. குபீரிட்டு வெளிப்போந்தப் முனைந்தது ஒரு சிரிப்பு!!
இருந்தாலும் அதனை வெளிக்குக் காட்டாமல்.. மறைத்து கறார்ப் பேர்வழி போல நின்றவனோ, அதிகாரம் தூள் பறக்கும் குரலில்,
“முதல்ல அழுவுறதை நிறுத்து…. சுப்!!! கண்ணைத் துடை!!” என்று இரைந்து கத்திய தினுசில்… மெல்லிழையாள் இதயம் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு தான் நிமிர்ந்து… இனி திட்டப் போகிறானோ என்று கப்சிப்பாகி… இருக்குமிடம் தெரியாமல் அடங்கி நின்றாள்.
இருப்பினும் அழுத அழுகையில்… அழுகையை நிறுத்தினாலும், தேம்பலை நிறுத்த முடியாமல்… இதயம் வேறு விம்மிக் கொண்டேயிருந்தது இடைக்கிடை!!
ஆளுமையான குரலில், “எனக்கு ஏற்கனவே தெரியும் மதுரா..உன் ப்ரெண்டு நிரோ வீட்டுக்கு நீ மிட்நைட்ல பர்த்டே கொண்டாட வந்தது.. உன் தங்கையோட வந்து.. என் காருக்கு கேக்கை பூசினது.. எல்லாமே எனக்கு அப்பவே தெரியும்..”என்று கூற…அவளோ ஆச்சரியத்தில்… வெடுக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்க்கலானாள்.
அனைத்தும் தெரிந்துமா..?? அவளைக் கதற வைத்தான்?? ஈவிரக்கமில்லையா உனக்கு மிஸ்டர். அஜய்தேவ்!!
அது போக, ஒன்றுமே தெரியாதது போல.. கடைசி வரை நடித்து வேறு இருக்கிறானே?? இவன் மதுராக்ஷியை விடவும் மகா நடிகனாக அல்லவா இருந்திருக்கிறான் என்று யோசித்தவள்… விழித்திரை கலங்க… பேசாமல் இருந்த போது.. அவனே தொடர்ந்தான்.
“உன் வாயால சொல்ல வைக்கணும்றதுக்காத் தான்.. இது எல்லாமே…?”என்று சாதாரணமாக அவன் கூற… பட்டென்று இடையிட்ட அவளோ, “அ.. அ… அப்போ அந்த போலீஸ்..?” என்று.. காவல் அதிகாரி வந்து போன காரணம் பற்றித் தான் அப்பாவியாய் வினவினாள்.
என்றுமேயில்லாதவாறு.. இன்று… ஏதோ பெரிய சுவாரஸ்யமான ஹாஸ்யம் கேட்டது போல… தன் முத்துப்பற்கள் பளீச்சிட நின்றிருந்தவனோ, நகைத்த நகைப்பு!!
ஹப்பப்பா?? அவன் நகைக்கும் போது பற்கள் பளீரிட..முகம் பிரகாசமாக.. அழகாய் இருந்தாலும்.. ஏனோ அந்நகைப்பை அவளால் இந்நேரத்தில் இரசிக்கத்தான் முடியவில்லை!!
ஏனெனில்.. இங்கு நகைப்பிற்குள்ளான பொருள் அவள் தானல்லவா??.. என்றெண்ணி அசடுவழிந்து நின்றவளோ.. அவன் சிரித்து முடியும் வரை… அமைதியாய்.. பேந்தப் பேந்த மழலை போல விழித்துக் கொண்டு.. பேசாமல் தான் நின்றிருக்கலானாள்.
இடையிடாத சிரிப்பினூடே.. அவளது எஜமானனும், “அவரு டிப்புட்டி கமிஷ்டர்… என்னோட பர்சனல் விஷயமா வந்துட்டு போறாரு.. பட் அவரும் உன் வாயால.. உண்மையை சொல்ல வைக்க உதவியா இருந்திருக்காரு”.. என்றவன்..
விழிகளை மூடிக் கொண்டு… “இதுக்குப் போய்… ஹஹஹா… சின்னப்பிள்ளை போல கண்ணீர்லாம் விட்டு அழுதுக்கிட்டு… ஹஹஹா.. சில்லி கேர்ள்!!”என்றவன்.. நகைத்தான்.. பேரழகாய் நகைத்தான்!! நிறுத்த மாட்டாமல்.. அவ்வறை முழுவதிலும் அவன் ஏகாந்தக்குரல் எதிரொலிக்க.. நகைத்துக் கொண்டேயிருந்தான்!!
அவன் நகைத்து முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு… பொறுமையை இழுத்துப் பிடித்தவாறு நின்றவளோ, அவன் நகைத்து முடித்ததும்,
ஈனமான குரலில், “ சார் அது தான்.. நான் உண்மையை ஒத்துக்கிட்டேன்ல.. என் ஜிம்மியையும்.. எவிடென்ஸையும் தந்துருங்க சார்.. ப்ளீஈஈஸ்” என்று இழுக்க.. அவனா அவள் கோரிக்கையை ஏற்கக் கூடும்!!
“அப்டியெல்லாம் தர முடியாதேமா” என்று தெனாவட்டான தொனியில் கூற.. மதுராக்ஷிக்கோ.. இனி இது எங்கு போய் முடியுமோ என்று மீண்டும் உள்ளுக்குள் கிலியெடுக்கலானது.
அவன் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடலானவளோ… மீண்டும் உடைப்பெடுத்துக் கொண்டு வந்த கண்ணீருடன்,
“சார் அப்டிலாம் சொல்லாதீங்க சார்.. அப்பா என்னடான்னா. ஜிம்மியைக் கேட்டு கேட்டு உயிர வாங்குறாரு.. நீங்க என்னடான்னா.. ஜிம்மியைத் தர மாட்டேன்னு உயிர வாங்குறீங்க… நான் நீங்க நினைக்கறது போல கிடையாது சார்.. வெத்துப்பீஸூ தான்… தயவு பண்ணி ஜிம்மியையும், எவிடென்ஸையும் தந்துடுங்க சார்.. ப்ளீஈஸ்”என்று அவள் கெஞ்சிக் கேட்க… அவளது கோரிக்கையை மறுபரிசீலனை செய்வது போலத் தான்… அவளை.. தன் தாடைகளை சொறிந்த வண்ணமே பார்த்திருக்கலானான் அஜய்தேவ் சக்கரவர்த்தி!!
கறாரான குரலில் வாய் திறந்தவனோ, “உனக்கு ஜிம்மி வேணும்னா.. நான் சொல்லுறது போல செய்யணும்…”என்றான் புருவங்களிடுங்க யோசனைகள் மாறாது.
ஏதாவது இலேசான காரியங்கள் ஏதேனும் சொல்லப் போகிறானோ என்று எதிர்பார்த்த வண்ணமே… அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு… அவன் கூறியது கேட்டு தலையில் இடி தான் விழுந்தது.
ஏனெனில் அவன் பதிலுக்கு கேட்டதோ?? வேறொருவனுக்கு.. நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம்.. எந்த நல்லாடவனும் கூற விழையாத ஒன்று!!
அப்படி அவன் என்ன தான் சொன்னான் கன்னியவளும்.. விதிர் விதிர்த்துப் போய் சிற்பமாய் சமையும் வண்ணம்!!
தன்னெதிரே குனித்த தலையுடன் நின்றிருந்தவளின்.. நாடியை.. தன்னொற்றை விரலினால் உயர்த்தி, அவளது நீர்த்தேங்கி நிற்கும் விழிகளோடு… தன் மறைத்து வைத்திருக்கும் காதல் நயனங்களை ஒன்றோடு ஒன்றாகக் கலந்தவன்,
“இன்னைக்கு நய்ட்.. என் கூட.. நீ கூர்க் வர..!!”என்றான் அவன்.
ஒரு பெண்ணை… அவனோடு அழைக்கும் இங்கிதமற்ற முறையில்.. விழிகள் பட்டென்று விரிய, “எதே கூர்க்கா?? யூ மீன் கர்நாடக்கா ஹில் ஸ்டேஷன்??”என்று தன் செவிகளில் விழுந்த கூர்க் என்பது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த குடகுமலை தானா என்று திக்குமுக்காடிப் போய்த் தான் கேட்டாள் அவள்.
அவனோ… ஏதும் பேசாமல்.. “ஆம்” என்பது போல தலையை மட்டும் ஆட்டிக் கொண்டே நிற்க… தன் நாடி தாங்கிக் கொண்டிருக்கும் அவன் கையை பட்டென்று தள்ளி விட்டுக் கொண்டே வெளியில் வந்தாள் அவள்!!
சீற்றத்தில் செந்தனங்களிரண்டும் ஏறியிறங்க, இரையும் குரலில், “நான் டாக்கடிவ் (talkative) பொண்ணு தான்.. அதுக்காக நான் அந்த மாதிரியான பொண்ணு கிடையாது…. கூப்பிட்டதும் வர்றதுக்கு வேறு மாதிரி பொண்ணு பார்த்துக்க”என்று வெடித்தவள்,
அங்கிருந்தும் விறுவிறுவென செல்ல எத்தனித்து… திரும்ப… அவளின் முன்கோபத்தினையெல்லாம் சொற்பம் விடாமல் விழிகள் மிருதுவாக இரசித்துக் கொண்டே.. அவளின் முன்னங்கைப் பற்றி.. அவன் நீங்கலைத் தடுத்தான் அஜய்!!
அவள் அப்போதும்.. திரும்பாமல்.. மூசுமூசுவென பெரும் பெரும் மூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணமே நிற்க, இவனோ அவளை செல்லமாக வையும் குரலில்,
“லூசு.. நீ என் பிஏதானே… பிஏவைத் தானே..அபீஷியல் பிஸினஸ் டிரிப்க்கு.. கூட்டிட்டுப் போக முடியும்…??”என்று கூறிய தினுசில்.. தன் முன்னவசரத் தனத்தில்… அவனை வீணே சந்தேகித்திருப்பதும்.. அப்போது தான் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது அவளுக்கு.
அவன்.. அநாகரிக செயலுக்காக அவளை குடகு மலைக்கு அழைக்கவில்லையா?? வியாபார ரீதியாகவா அழைக்கிறான்??
அவசரப்பட்டுட்டீயே மதுரா!! என்று உள்மனம் வேறு அவளை பழிக்க… முகம் முழுவதும்… அசடுவழியும் புன்னகையை அப்பிக் கொண்டு.. அவள் ஈஈ என்று இளித்து நிற்க.. இவனும் தான் மேற்கொண்டு தொடர்ந்தான்.
அவள் கைகளை விட்டு விட்டு… பழையபடி.. நடந்து சென்று மேசையில் பிருட்டங்கள் சாய்த்து மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டியவனாக.. அவளை ஆழ்ந்து நோக்கிய வண்ணமே தொடர்ந்தான் அவன்.
“த்ரீ டேய்ஸ் டிரிப்.. கர்நாடகா’ஸ் மோஸ்ட் லீடிங் கம்பெனியுடன் ஒரு பிஸினஸ் டீல்… அது முடிச்சதும்.. நெக்ஸ் டே மார்னிங்கே.. ப்ளைட்டில் சென்னைக்கு வந்துரலாம்… அப்படியும் என் மேல நம்பிக்கை வரலைன்னா.. உனக்கு நானொரு உத்திரவாதம் தர்றேன்.. உன் அனுமதி… இல்லாமல்.. என் சுண்டு விரல் கூட உன்மேல படாது.”என்று.. தன் கைகளை உயர்த்திக் காட்டிக் கொண்டு… அத்தனையையும் தெளிவாக விளக்கி முடித்து விட்டு…
அவள் பதிலுக்காக… இக்கடா அக்கடா என்று பறக்கவிருந்த பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அவஸ்தையான நொடிகளுடன் காத்திருந்தான் ஆடவன்!!
அஜய்யைக் காலேஜ் நாட்களிலிருந்தும் தெரியுமாதலால்.. அவன் கொடுத்த வாக்கு.. ஒருபோதும் பொய்க்காது என்றும், அவன் தன் மீது அத்துமீற மாட்டானென்றும்… அவளுக்கு நன்றாகவே தெரியும்.
ஆனாலும்… அவனோடு குடகு மலை என்னும் கூர்க் செல்வது சாத்தியமா?? தந்தை அவளை.. அவனோடு தனிமையில் செல்ல அனுமதிக்கவும் கூடுமா??
தயங்கித் தயங்கி வாய் திறந்த மதுராவோ, “அப்பா இதெல்லாம் அல்லோ பண்ண மாட்டாரு சார்.. கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பெண் இன்னொருத்தரோட.. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் போறது.. அவருக்கு சுத்தமா பிடிக்காது சார்”என்று அப்பயணத்தை எப்படியாவது இரத்து செய்து விடத்தான் பிரயத்தனங்கள் மேற்கொண்டாள்!!
ஆனால் அவனோ.. மதுரா எட்டடி பாய்ந்தால், ஆண்மகன் அவன்.. முப்பத்திரண்டடி பாயவும் தான் சித்தமாகவிருந்தான்.
குறுநகை அவனது இதழ்களில் வந்து போக, “நீ தான் பொய் சொல்வதில் எக்ஸ்பர்ட் ஆச்சே.. ஏதாவது பொய்யை சொல்லி.. இன்னைக்கு நய்ட்… வந்துடு” என்றான் மிக மிக எளிமையாக!!
அவளுக்கோ ‘பொய் எக்ஸ்பர்ட்’ என்றதில் மனதோடு சிறு கோபம் அவன் மேலே!! பொய் சொல்ல காரணமே இவன் தானே!! என்ற ஆதங்கம்!!
இவளுக்கோ சொல்லச் சொல்ல கேட்காமல்.. ஒற்றைக்காலில் நிற்கும் அவன் மீது சினம் சீண்டியெழும்ப… மனத்திற்குள்ளாகவே,
‘ சரியான சேடிஸ்ட் ஹிட்லர்.. பெரிய பில்கேட்ஸ்னு நினைப்பு .. இவனுக்கு?? எத்தனை தடவை சொன்னாலும் உண்மை உறைக்காதா..??’என்று கண்டமேனிக்கு திட்டித் தீர்த்துக் கொண்டு நின்ற போது.. அவளது சிந்தனையை கலைத்தது அஜய்தேவ்வின் குரல்!!
“என்ன யோசிக்கற மதுரா..?? ஒண்ணு கூர்க்குக்கு என் கூட வர ஒத்துக்க.. இல்லை ஜிம்மியையும், மற்ற எவிடென்ஸையும் மறந்துரு.. சிம்பிள்” என்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட.. அதிர்ந்து பதறித் தான்,
“ஏதே..ஜிம்மியை மறந்துர்றதா??”என்று தான்.. திகைத்து விழிக்கலானாள்!!
அவனோ.. அவளைப் பார்க்கும் போது மாத்திரம்.. அத்தனை வேலைப்பளுவிலும்.. சிறுகச் சிறுக மனஅழுத்தம் விட்டகல்வது போன்ற இதம் எழுவதை… மறைத்துக் கொண்டு.. உம்மென்று முகத்துடன் தான் அவள் பதிலுக்காக காத்திருக்கலானான்.
ஆம்.. அவனின் ஸ்ட்ரெஸ் பஸ்டரே அவள் தானல்லவா!!
அஜய்தேவ்.. உம்மென்று வைத்துக் கொண்டிருக்கும் இம்முகத்தை… சற்று நேரத்திற்கு முன்னிருந்த… நகைத்த முகமாய் வைத்துக் கொண்டால் போதும்.
அஜய்தேவ் சக்கரவர்த்தி… பெண்கள் விழுமளவுக்கு ஆணழகன் தான் என்று அவனது உர்ரென்ற முகத்தைக் கூட இரசித்து காம்ப்ளிமென்ட் வேறு பெண் மனத்துக்குள்.
கட்டளையிடும் இராஜதோரணையில், “என்ன ஓகேயா…??” என்று கேட்க… அவளுக்கும் தான் ஏது வேறு வழி!!
விட்டால் அழுது விடும் முகபாவனையுடன், “ஓகே சார்… இன்னைக்கு நய்ட்… கூர்க் போகலாம்”என்று தோய்ந்து போக முகத்துடன் சொல்லி.. அவளும் தலையாட்டி விட்டு வெளியே வர,
அவள் அவ்வறை விட்டு நகர்ந்ததும் தான்… வாய் விட்டு குபீரென்று லாவண்யமாக புன்னகைத்து நிற்கலானான் அஜய்தேவ்!!
அவன் நகைப்பது ஏதுமறியாதவளோ… மனநலம் பிறழ்வானவள் போல, ‘சரி, தந்தையிடம் என்ன கூறி சமாளிப்பது.?? என்ன கூறி சமாளிப்பது?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டே தான்.. அன்றைய நாள் முழுவதும் அலுவலகத்தில் வலம் வரலானாள்.
மிக நீண்ட நெடிய நேர யோசனைக்குப் பிறகு, ‘நிரோ வீட்டில் தந்தையில்லாததால்.. துணைக்கு.. அவள் வீட்டில் தங்கச் செல்கிறேன்.. என்று சொல்லலாமா?’ என்ற யோசனை.. அவளுள் உதிக்க… மறுகணம் ஆயிரம் வால்ட் பல்ப் போட்டது போல.. விகசித்துப் போனது கேடி மதுராக்ஷியின் முகம்!!
மோகனம்-16
அது சென்னையின் மத்தியப்பகுதியில் அமைந்திருக்கும் இடம்!!
மக்கள் நடமாட்டம் இருபத்திநான்கு மணிநேரமும் புழங்கக்கூடிய… பிரதேசத்தில் தான்… விஸ்தாரமான உயர்மாடிக் கட்டிடமாக அமைந்திருந்தது அவளது தந்தை பணிபுரியும் அத்தனியார் மருத்துவமனை!!
அலுவலகம் முடிந்த கையோடு.. தந்தையின் மருத்துவமனைக்கு.. நேரே.. வந்து சேர்ந்திருந்தவள்..தந்தையின் அனுமதியை எப்படியாவது அவர் கையில் காலில் விழுந்தாவது பெற்றுவிடும் எண்ணத்தோடு வந்திருக்கலானாள்.
ஆனால் இங்கோ அவளுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது என்பதை ஆரம்பத்திலேயே அவள் அறிந்திருக்கவில்லை!!
தந்தைக்கென்று பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருக்கும்.. அறையிலிருந்து வெளியே வந்த தாதியிடம்.. இன்முகமாக.. மார்புக்கு குறுக்காக சென்றிருக்கும் ஷோல்டர் பேக்கைப் பிடித்தவாறே,
“அப்பா இருக்காரா??” என்று தான் கேட்டாள் மதுரா.
மருந்துத் தட்டோடு சீரூடையில் வெளிவந்த தாதிப்பெண்ணோ.. மதுரா டாக்ரின் மகள் என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பவளாயிற்றே??
ஆதால் சிரித்துக் கொண்டே… “ஆமா மதுரா… கூடவே உன் அத்தையும் இருக்காங்க… டபிள் லட்டு தான்” என்றவாறு…அங்கிருந்தும் .. நகர்ந்து செல்ல.. இவள் விழிகளும் இடுங்கியது மென்மையாக!!
எதே?? அவள் அத்தையா..??
யாரது??ஒருவேளை தந்தையின் தங்கை… ஊரிலிருந்து வந்துவிட்டாளா?? என்று எண்ணிக் கொண்டே.. கதவை மும்முறைத் தட்டியவாறே, “அப்பா”என்று சிரித்த முகமாக அவள் உள்நுழைய.. அங்கே தந்தைக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தது அவளது சொந்த அத்தை அல்ல??
எனில், அது??
இது அவளது வேண்டாத மாப்பிள்ளையின் பெரியம்மா! ஒருவகையில் அவளின் வருங்கால அத்தை!! அன்று அவளை பெண் பார்த்து ஓகே செய்த உயர்தட்டு வகையறா பெண்மணி அன்றோ இது!!
மதுராவைக் கண்டதும் தந்தை முகம் மலர..வாயெல்லாம் பல்லாக நின்று போனவராக, “வாம்மா..வாட் அ ப்ளெசன்ட் சர்ப்ரைஸ்…உள்ளே வா… யாரு வந்திருக்கா பாரு??” என்றபடி உள்ளே வரவேற்று… அவளது அத்தையைத் தான் அவளுக்கு காட்டவும் செய்தார்!!
அவளோ தந்தையைப் பார்த்துக் கொண்டே கடைக்கண்ணால் அவளது வருங்கால அத்தையைப் பார்க்க… .பார்த்த மாத்திரத்திலேயே.. அன்று ஆளுமையும், கம்பீரமும் கொண்டு.. அவளைப் பெண்பார்க்க வந்த அன்று.. அமர்ந்திருந்த அத்தையின் தோரணையே நினைவு வந்தது அவளுக்கு!!
இதயத்தில் தானாக ஓர் மரியாதை ஊற்றெடுக்க, இரு கரம் கூப்பி, “வணக்கம் அத்தை”என்று அவள் வணக்கம் வைக்க, மாப்பிள்ளையின் பெரிய அன்னையின் பார்வையோ… அவளை உச்சாதி பாதம் வரை நோக்கலாயிற்று.
பெண்பார்க்கும் படலத்தின் நேரம்… பெரும்பாலான பெண்களுக்கு ஒப்பனை செய்து விடுவதால்… பெண்ணின் உண்மை முகம் கூட மாறிப் போய் அல்லவா தோன்றும்??
அதே போல இன்று.. சாதாரண ஆடையில் வந்திருப்பவளின் முகமும் மாறிப் போயிருக்கிறதா என்று தான்.. அவளை ஆய்ந்து நுணுகிப் பார்க்கலானார் அவர்.
இயற்கையாகவே நல்ல அழகி மதுராக்ஷி!!
இன்று ஆபீஸ் விட்டு வரும்போது கலைந்த கூந்தலும், சற்றே சோர்ந்த முகமாக மதுராக்ஷி இருந்த போதிலும்… அப்போதும் லட்சுமி கடாட்சத்துடனேயே.. பொலிவு குறையாமல் இருக்கும்.. இளையவளை இரண்டாம் முறையாகவும் பிடித்துப் போனது பெரியன்னைக்கு!!
கால் மேல் கால் போட்டு பெருந்தோரணையுடன் அமர்ந்திருந்த அப்பெண்மணியோ, கம்பீரக்குரலில், “எத்தனையோ பொண்ணுங்க அவன கட்டிக்க வந்த போதும்.. வேணாம் வேணாம்னு மறுத்துக்கிட்டேயிருந்தான்..அப்புறம் ஒருநாள்.. உன்னை எங்கேயோ பார்த்திருக்கான்மா அவன்.. அன்னையிலிருந்து.. இன்னைக்கு வரைக்கும்.. கட்டினா உன்னை தான்னு ஒத்தக்கால்ல நின்னப்போ.. அப்போ காரணம் புரியல…ஆனா.. இப்போ புரியுது..!! இவ்ளோ அழகான பொண்ணு லைப் பார்ட்னரா வர.. யாரு வேண்டாம்னுவா…!!” என்று அவள் அழகை அவள் முன்னாடியே சிலாகித்துக் கூற…
அவளுக்கோ.. ஏனடா.. தந்தையின் மருத்துவமனைக்கு வந்தோமென்று என்னும் வண்ணம்… அந்நாளே, ‘சொய்ங்க்’ என்றாகிப் போனது.
அவளை எங்கோ பார்த்து.. காமுற்ற… மாப்பிள்ளையின் இரு கண்களுக்கும் கொள்ளி வைக்க வேண்டும் போல சீற்றம் சீற்றமாக இருந்தது.
ஒரு பக்கம்.. அவள் இன்னும் கண்கொண்டு பார்த்திராத மாப்பிள்ளையின் கொடுமை!!
மறுபக்கம்.. அவளை கூர்க் வரச்சொல்லி வற்புறுத்தும் அஜய்தேவ்வின் கொடுமை!!
இரு கொடுமைகளும் சேர்ந்து.. அவளை.. இருதலைக் கொள்ளி எறும்பாய் தீண்ட.. மூச்சுமுட்டி தவித்துப் போனாள் அவள்!!
தந்தையிடம் திரும்பியவள்..தான் சொல்ல வந்த காரியத்தை எண்ணி, இடம், பொருள், ஏவல் ஏதும் பார்த்தாளா அவள்??
ஊர் சுற்றும் பெண்ணென.. தன்னை வருங்கால அத்தையும் தப்பாக நினைத்துக் கொள்ளட்டும்!! அப்படியாவது இந்தத் திருமணம் நிற்கட்டுமென்று… வேண்டுமென்றே.. அவர் முன்னிலையிலேயே… தான் தந்தை மருத்துவமனை நாடி வந்த காரியத்தைக் கேட்டாள் அவள்.
தந்தை திட்டக்கூடுமென்று முன்கூட்டியே அறிந்திருந்தாலும் கூட… தைரியமான முகபாவனையுடன், “அப்பா… நிரோ வீட்டில் யாருமில்லைப்பா.. எல்லாரும் ஊட்டி வெட்டிங்க்காக போயிருக்காங்க… அவ வீட்டில் துணைக்கு யாருமில்லைன்னு.. ஒரு த்ரீ டேய்ஸ் ஸ்டே பண்ண கூப்பிட்டாப்பா.. நான் போய் வரட்டாப்பா..??”என்று இதோ வெடுக்கென்று கேட்டும் விட்டிருந்தாள் மதுராக்ஷி.
நிரோ வீட்டில்.. அனைவரும் ஊட்டி திருமணத்துக்கு செல்வதுவும், தோழி மட்டும் தனியாக இருக்க நாடுவதும் உண்மை தான்!!
ஆனால், இவள் அங்கே போக நாடுவது தான் பொய்! ஆம், சர்வ நிச்சயமாக பொய்யே!!!
வருங்கால அத்தையின் முன்… தன் மூத்த பெண் படித்த நாகரிகமென்பது சிறிதும் அற்று… சபை இங்கிதம் கூட இல்லாமல்… உளறி வைத்ததைக் கண்ட ராமகிருஷ்ணனோ… பற்களை நறுநறுவெனக் கடித்துக் கொண்டு..
நெற்றிக்கண் திறந்து சுட்டெரிப்பது போல… அவளையே ஆத்திரத்துடன் முறைத்துப் பார்த்திருக்க.. அவளுக்குள் துணுக்கம் தோன்றினாலும்… ஏதும் பேசாமல் அமைதியானாள் அவள்!!
வருங்கால அத்தையோ ..அவளைப் பற்றி சிறிதும் கெட்டெண்ணம் கொள்ளாமல்.. மாடர்ன் மதர்-இன்-லாவாகவும் தான் மாறிப் போனவராக,
முறைக்கும் அவள் தந்தையை நோக்கி, “இதுக்கு எதுக்கு முறைக்குறீங்க மிஸ்டர். ராமகிருஷ்ணன்..?? சரியா பார்த்தால் பெருமைப்படணும்… இந்த காலத்து பசங்க.. ப்ரெண்டு வீட்டுக்கு நம்மை கேட்காமலேயே போனதுக்கு அப்றம் தான்… கால் பண்ணி.. நான் ஸ்டே பண்ண போறேன்னு சொல்வாங்க.. அந்த வகையில் .. என் மருமக ஒரு படிமேல்… வந்து பர்மிஷன் கேட்டுட்டுப் போகணும் நினைக்கிறாள்ல??” என்று.. அப்போதும் தன் மருமகளை விட்டுக் கொடுக்காமல் கூற.. அதைக் கேட்டு தந்தையின் முகம் மலர்ந்ததென்றால்.. அவள் முகமோ வாடி வதங்கி தொங்கிப் போயிற்று.
அவள். நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று!!
தன் அத்தையிடம் மானசீகமாக, ‘என்னத்தை நீங்க… இப்படியா எனக்கு சப்போர்ட் பண்றது?? என்ன ராமகிருஷ்ணன் இது?? இது தான் நீங்க பொண்ண வளர்த்திருக்க லட்சணமான்னுல கேட்டிருக்கணும்?? இப்படி ஆயிருச்சே ராமா!!”என்று தடுமாறி அல்லாடி தள்ளாடித் தான் நிற்கலானாள்.
தன் உள்மனக்கிடக்கையை.. தனக்குள்ளேயே மறைத்து.. போலிச் சிரிப்பொன்றை, “ஈஈ”யென்று அவர்கள் முன்னிலையில் காட்டிக் கொண்டு.. நிற்க வேண்டியதாக இருந்தது மதுராக்ஷிக்கு!!
சம்பந்தி வீட்டம்மாவின் முன்னிலையில் தான் கறார்ப்பேர்வழி தந்தை என்பதைக் காட்ட விரும்பாத அவளது டாக்டர் தந்தையோ… இயன்றவரை கோபத்தை மறைத்து,
ஈஈயென இழுத்து வைத்த அதரங்களுடன், “சரிம்மா.. போயிட்டு வாம்மா..” என்று கூற… அவளுக்குள் நிஜமாகவே ஆனந்தம் கூத்தாட..
தந்தைக்கும்.. அத்தைக்கும் சேர்த்து.. “தேங்க்ஸ்ப்பா… தேங்க்ஸ் அத்தை..” என்று விட்டு வெளியே வந்தவள்…நெஞ்சு மத்தியில் கைவைத்து… பெருமூச்சு விட்டுக் கொள்ளவும் தான் செய்தாற்.
எல்லாம் தலையெழுத்து!! . அவள் போடும் திட்டங்களெல்லாம் இப்படியாகுமென்று யாரறிவார்??.. ஆனால் பெரியம்மாவைப் பார்க்கும் போது நல்ல பெண்மணி போல் தோன்றியது மதுராக்ஷிக்கு.
பெரிய இடமென்றாலும். ஆடம்பரமேயில்லாமல்.. எளிமையாய் சாதாரணமாய்… ஒரு எளிய விலை சேலை அணிந்திருக்கிறார்களே..??
கழுத்தில் அரைபவுண் தங்கச்சங்கிலி மாத்திரம் அணிந்து.. எளிமையிலும் எளிமையாக இருப்பவரைப் பார்த்ததும்.. பெரும் பெரும் பணக்காரர்கள் எல்லாரும்… இப்படி சாதாரணமாக வளைய வருவது தான் டிரென்ட் போல இருக்கிறது என்று எண்ணிக் கொள்ளவும் செய்தாள்.
****
இரவு எட்டரை மணிக்கெல்லாம் கர்நாடகா செல்லும் விமானம் தயாராக இருப்பதாக அஜய் அழைப்பெடுத்துச் சொல்லவும். மாலை ஏழு மணிக்கெல்லாம்.. தந்தையிடமும், தாயிடமும்.. கூடவே தங்கை திவ்யாவிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டு…மூன்று நாட்களுக்கு தேவையான ஆடைகள், மற்றும் இத்தியாதி பொருட்கள் அடங்கிய பயணப்பையுடன்… கிளம்பத் தயாரானாள் கேடி மதுராக்ஷி!!
ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு… நேரே அவள் அவ்விரவு கவிழ்ந்த நேரத்தில் சென்றது.. அவளது பார்ட்னர் இன் கிரைம்மான நிரோ வீட்டிக்குத் தான்!!
இரவு நேரத்தில்… தன் பெற்றோர்களெல்லாரும் ஊட்டியில் உறவுக்கார திருமணத்துக்கு சென்றிருக்க.. வீட்டில் தனிமையில் இருந்த நிரோவுக்கு அச்சம் கௌவிப் பிடித்தது வீட்டு அழைப்புமணி சப்தம் கேட்டு!!
எதிராளியை பயம் காட்டும், உரத்த குரலில், “யாரது?” என்று கேட்டுக் கொண்டே வந்து கதவு திறந்த நிரோவின்.. விழிகள் திகைத்து விரிய… அங்கே அவளெதிரே பையுடன் நின்றிருந்தது மதுராக்ஷி!!
இரவு நேரத்தில் தோழியா??
தந்தையுடன்.. திருமணம் வேண்டாமென சண்டை பிடித்து விட்டு.. வீட்டை விட்டு ஆத்திரத்தில் பையைத் தூக்கி வந்து விட்டாளா தோழி?? என்று.. நினைத்துக் கொண்ட நிரோவோ… கதவைத் திறந்தவள் இமை கொட்டாது.. மதுராவையே தான் பார்த்துக் கொண்டிருக்கலானாள்.
மதுராவோ நிரோவின் பார்வையில் கடுப்பானவளாக அவளைப் பார்த்து.. “என்ன உள்ளே வான்னு கூப்பிடமாட்டீயா நிரோ?”… என்று முறுவலித்தபடி கேட்க.. அப்போது சிந்தனை கலைந்தவள் போல,
“உ.. உள்ள… வா.. மதுரா.. வா..” என்றபடி மதுராவை உள்ளே அழைத்து அமரவும் செய்தாள்!
தோழியோடு தானும் அமர்ந்த நிரோவோ.. நண்பியை நோக்கி,தீவிரமான முகபாவனையுடன், “சொல்லு என்ன பிரச்சனை??உன் வீட்டுல தகாரறா.. வீட்டை விட்டு வந்துட்டியா??”என்று கேட்டதைக் கண்டு… உள்ளுக்குள் சிரிப்பு சிரிப்பாய் வந்தது.
சிரிப்பை மறைத்துக் கொண்டு, தோழியை கலாய்க்கும் சீரியஸான குரலில் நாயகியோ, போலியாக வேதனைப்பட்டவளாக, “ஆமா.. பெரீய்ய.. சொத்துப் பிரச்சனை.. எனக்கு சேர வேண்டிய பங்கைக் கூட.. திவ்யா பேர்ல எழுதி வைச்சுட்டாரு அந்த ராம்கி..” என்று கூற… நிரோ முகத்திலும் களேபரம்!!
“என்னடீ உளர்ற??” என்று நிரோ புரியாமல் கேட்க… அவளின் முகம் போன போக்கைக் கண்டு.. மதுராவுக்குள் இன்னும் கொஞ்சம் மூண்டது சிரிப்பு.
அவள் வீட்டு சோபாவில் ஹாயாக சாய்ந்தமர்ந்து கொண்டே, “இல்ல… நான் வந்தது என் பாஸோட வீட்டுக்கு..அதாவது உன் எதிர் வீட்டுக்கு”என்று நெட்டிமுறித்தவாறு சொல்ல… வேறுமாதிரியான உணர்வுகளின் வசம் ஆட்பட்டுப் போனாள் நிரோ!!
இரவுநேரத்தில்.. அதுவும் கையில் பையுடன்.. எதிர் வீட்டுக்கு வந்தேன் என்று மற்றவள் கூறவும்.. அதனை வேறுமாதிரி புரிந்து கொண்டாள் நிரோ.
“எதே?? அஜய் சீனியர் வீட்டுக்கா??” என்று விழியகலக் கேட்டவள்…
“ நீ ஏதோ தப்பா முடிவெடுத்திருக்க மதூ…நீ உன் பாஸை உயிருக்குயிராக காதலிச்சிருக்கலாம் அது தப்பில்லை.. ஆனா இந்த நேரத்துல ஓடி வந்த பாரு அது தப்பு!! முதல்ல நீ வீட்டுக்குப் போ.. மறுநாள் காலையில் அங்கிள்கிட்ட… நானே பேசி கல்யாணத்துக்கு ஓகே பண்றேன்” என அவள் புரியாதவளாய் அனைத்தையும் தப்பாக புரிந்து கொண்டு பேசும் நிரோவின் கூற்றில் முகம் கடுத்துப் போனது நாயகிக்கு.
எதையெல்லாமோ… நகைச்சுவையாய் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்த அவள் மனதுக்கு… நண்பி சொன்ன கதையை கனவிலும் நகைச்சுவையாய் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அவன் பெரிய ஹாலிவுட் ஹீரோ.. அவனது பிஏவான இவள்.. அவனை மெய்யுருக.. உயிருருக காதலித்து.. யாருக்கும் தெரியாமல்.. ஓடி வந்து இரகசிய திருமணம் செய்யப் போகிறாளாமா??
நினைவே கசக்க.. சோபாவிலிருந்து வெகுண்டெழுந்தவள், “அட்ச்சீ… எதே அவன லவ் பண்ணி வீட்டை விட்டு ஓடிவந்தேனா.. வாயை பினாயில் போட்டு நல்லா கழுவுடீ… செத்தாலும் சாவேனே தவிர.. அந்த ஹிட்லர மட்டும் கட்டிக்க மாட்டேன்.. அவன் கூட வாழ்ந்தா அது வாழ்க்கையில்ல.. மிலிட்டரி கேம்ப்.. எல்லாமே ஆர்டர்!! பெரிய சார்ள்ஸ் இளவரசன்!!” என்று சொன்னதை மட்டும் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் அஜய்தேவ் கேட்டிருந்தால்??
நிச்சயம் மனமுடைந்து தான் போயிருப்பான்!! அவன் அன்று அதை அறியாமலும் தான் போனது அவன் அதிர்ஷ்டமே!!
அவன் கார்திருடி அவள் என்று கண்டுபிடித்த கதை தொடக்கம்.. இன்று கூர்க் செல்ல அழைத்தது வரை.. அனைத்தையும் ஒன்று விடாமல்… நிரோவுக்கு விளக்க.. அடுத்த கணம் நிரோ முகத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது பயம்.
“எந்த நம்பிக்கையில் அவன் கூட கூர்க்… போகப் போற…?? அதுவும் மூணுநாள்… அவன் சுண்டு விரல்கூட உன் அனுமதியில்லாமல் படாதுனு அவன் சொன்னா.. நம்பிருவீயா?? சுயபுத்தியோட தான்.. இதையெல்லாம் ஒத்துக்கிட்டீயா??”என நிரோ திட்டலானாள் அவளை!!
உண்மையில் நிரோ.. நாயகியின் நலன் கருதி.. அவனைப்பற்றித் தவறாக ஆயிரம் கதை சொன்னாலும் கூட…. அவன்.. தன் மீது அத்துமீற மாட்டானென்ற ஆணித்தரமான நம்பிக்கை .. அவளுள் இருந்தது.
எஞ்ஞான்றும் கீழ்த்தரமாக பெண்ணை நிமிர்ந்துப் பாராதவன் அவன். அதுபோக, “ஓர் நாள் காதலியாக, ஒன் நைட் ஸ்டான்ட்டாக {one night stand) ‘என்றெல்லாம் அவளை அழைக்கவுமில்லையே?? அதனால் அவளது உயிரைப் போல..அவன் தன்மீது அத்துமீற மாட்டானென்று…. அறுதியாக நம்பிக்கை வைத்திருந்தாள் மதுராக்ஷி!!
இருப்பினும் தன் உயிர், உடைமை, மானத்துக்கு என்னமோ ஏதோ ஆகிவிடுமென்று பயப்படும் தோழியின் அன்பையும் உதாசீனப்படுத்த மனம் கூடி வரவில்லை அவளுக்கு.
ஆகையால், தோழியின் மனம் கோணாத வகையில், “இப்போ என்ன பண்ண சொல்ற?? போகலேன்னா.. ஜிம்மி எனக்கு கிடைக்காதே… திருடின்னு சொல்லி ஜெயில்ல போட்டா… என்ன பண்றது?”என்று.. நிரோவிடமே ஆலோசனைக் கேட்கலானாள் அவள்!!
நிரோவோ…மதுராக்ஷிக்கும்மேலே ஒரு படி சென்று… பட்டென இருக்கையில் நின்றும்.. எழுந்து சென்று… நடுக்கூடத்தில் இருக்கும் கேபினட்டின் டிராயரைத் திறந்து.. அதிலிருந்து கன்னங்கரேலென்று பளபளக்கும் ஒரு இரும்பு ரிவால்வரைத் தான் எடுத்து வந்து.. தோழியின் கைகளில் திணிக்கலானாள்!!
மதுராக்ஷி கைகளில் திணிக்கப்பட்ட ரிவால்வரை.. படகடவென கைகள் துணுக்குமுற்று நடுங்கப் பார்த்திருக்க.. நிரோவோ.. தைரியம் மிளிரும் கண்களுடன்,
“இதை எதுக்கும் பாதுகாப்புக்கு வைச்சுக்க…” என்று மீண்டும் திணிக்க.. மதுராக்ஷியோ.. அதனை சரிவர பிடிக்காமல்.. ரிவால்வரை தூக்கி சோபாவில் தான் தூர எறிந்தாள்.
உடலெல்லாம் செக்கனில் வியர்த்துப் போட, “எ.. எ.. என்னால முடியாதுடீ… ரிவால்வர் எடுத்துப்போய் ஏதாவது ஏடாகூடமா நடந்து… கோர்ட்டு கேஸூன்னு அலைய என்னால முடியாது நிரோ.. எனக்கு ஹிட்லர் மேல நம்பிக்கையிருக்கு.. அவன் அப்டிலாம் பண்ண மாட்டான்..”என்று உறுதியாய் கூற நிரோவுக்கோ இரு மனது!!
நண்பியைச் சூழ இத்தனை ஆபத்திருக்க.. கண்காணா மாநிலம் அனுப்பவும் மனமில்லை!! என் ஜிம்மி அவன் வசம் என்று தோழி கண்களைக் கசக்கிக் கொண்டு அழுவதும் கூட பிடிக்கவில்லை!!
அதனால் அரை மனதோடு… துக்கம் அனுஷ்டிக்கும் வதனத்தோடு, “என்ன வேணா பண்ணிக்கோ.. ஆனா அவன்கிட்டயிருந்து பத்தடி தூரம் தள்ளியே நில்லு” என்று புத்திமதி வேறு கூறி.. மதுராவை அனுப்பும் திடமனது பெற்றாள் நண்பி நிரோ!!
நிரோவின் கன்னத்தைச் செல்லமாய் கிள்ளி..” தேங்க் யூ சோ மச்டீ” என்று விட்டு பையைத் தூக்கியவள்.. நண்பியின் எதிர்வீட்டுக்குத் தான் செல்ல ஆயத்தமானாள்.
போனவள் திரும்பி வந்து நிரோவை நோக்கி, மறந்ததை நினைவுகூரும் வகையில்.. “ஆ… அப்பா கால் பண்ணாருன்னா.. இங்கே தான் இருக்கான்னு சமாளி.. அப்பா வீட்டுக்கே வந்துட்டாருன்னா.. வெளிய போயிருக்கான்னு சொல்லி சமாளி என்ன?”.. என்று விட்டு… தன் தோழியை நாடி வந்து..மீண்டுமொருதரம் இறுகக் கட்டியணைத்துக் கொண்டு விடைபெற்றாள் எதிர் வீட்டை நோக்கி.
கூர்க் என்னும் கர்நாடகாவின் குடகுமலைப் பிராந்தியத்திலும் தான்.. இனி என்ன நேர்ந்திட காத்திருக்கிறதோ??
அவள் பாஸ் அஜய்தேவ் சக்கரவர்த்தி தாங்கினாலும்.. குடகுமலை தாங்குமா அவள் குறும்புகளையும், லீலைகளையும்!!
super sis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Super pa
Waiting for Coorg atrocity