ATM Tamil Romantic Novels

மோக முத்தாடு அசுரா

2. மோக முத்தாடு அசுரா
இனியாவுடன் சிறிது நேரம் விளையாடிய சிம்மன் “குட்டி ஸ்கூலுக்கு போகனும்ல.. வாங்க சாப்பிட்டு கிளம்பலாம்” என்று இனியாவை தோளில் தூக்கிக்கொண்டு குழந்தையுடன் பேச்சு கொடுத்து கொண்டே டைனிங் டேபிளிக்கு வந்தான்.

அங்கே முல்லைக்கொடி இளம் சந்தன நிறத்தில் சேலையுடன் டைனிங் டேபிளில் உணவை எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.. எப்போதும் கலகலவென சிரித்த முகத்துடன் இருக்கும் முல்லையின் முகம் வர்மன் இல்லாமல் போன நாளிலிருந்து அவளது முகத்தில் சிரிப்புக்கு பஞ்சமானது எண்ணி வருத்தப்பட்ட சிம்மனின் கால்கள் நகர மறுத்து விட்டன. வர்மன் இறந்து விட்டான்.. என்று செய்தி அறிந்தவுடன் முல்லைக்கொடி துடித்த காட்சி இன்னும் சிம்மனின் முன் தோன்றி அவனது நெஞ்சை வாலால் கூறு போட்டு அறுப்பது போல இன்னும் உணர்கிறான்.

வர்மன் இறந்த அன்று காரியத்திற்கு வந்த முல்லைக்கொடியின் அப்பா எம்.எல்.ஏ சந்தானம் “அதான் வர்மன் போய்ட்டான்ல நான், என் பொண்ண என்கூட கூட்டிட்டுப் போறேன்” என்று கை கட்டி வர்மன் போட்டோ முன்பு நின்ற சிம்மனின் முன்னே வந்து நின்றார் சந்தானம்.

சிம்மன் எம் எல் .ஏவை ஒருமுறை அழுத்தமான பார்வை விட்டு அங்கே மடிந்து அழுது கொண்டிருந்த முல்லைக்கொடியிடம் “நீ உங்க அப்பா கூட போறீயம்மா” என்றான் இறுக்கமான வார்த்தைகளில்

“அண்ணா என் வர்மன் கூட நான் வாழ்ந்தது கொஞ்ச நாள். அவர் நினைவுகளும் இந்த இடத்துல தான் இருக்கு.. நான் எங்கயும் போகல.. அவரோட வாழ்ந்த நினைவுகளை சுமந்து கொண்டு இந்த வீட்டுல வாழ ஆசைப்படுறேன்” என்று என்று கூறியவள் தந்தையின் முகத்தை பார்க்ககூட முல்லை விரும்பவில்லை.

எம்.எல்.ஏ சந்தானம் முல்லையின் அருகே போக.. “அண்ணா இவரை எழுந்து வெளியே போகச் சொல்லுங்க.. எனக்கு வர்மாவ ஆள் வச்சு கொன்னது இவரா கூட இருக்காலாம்னு சந்தேகமா இருக்கு” என்று கூறியவளின் குரலில் அத்தனை ஆவேசம் இருந்தது.

வர்மன் முல்லைக்கொடியை திருமணம் செய்த அன்று வர்மனை கொள்ளாம விடமாட்டேன் என்று வஞ்சம் கொண்டு எம்.எல்.ஏ சந்தானம் துள்ளி பேசியது சிம்மன் கண் முன்னே தோன்றியது.

“அம்மாடி.. நீ வர்மன கல்யாணம் பண்ணிக்கிட்டேனு கோவத்துலதான் அப்பா உன்ன வெறுத்தேன்.. ஆனா மகளோட மஞ்சள் குங்குமத்த அளிக்கிற அளவுக்கு நான் கெட்டவன் கிடையாது.. உனக்கு என்னோட வர விருப்பம் இல்லன்னா பரவால.. அப்ப அப்ப வந்து உன்னை பார்த்துட்டு போறதுக்கு மட்டும் அனுமதி கொடுப்பியா” என்று பழம் நழுவி பாலில் விழுவது போல நடித்துப் பேசினார்

சந்தானம் பேச பேச “நீ பேசுவது எல்லாம் நடிப்பு தெரியும் இங்கிருந்து இடத்தை காலி பண்ணுங்க” என்று தந்தையை பார்வையால் எரித்து விட்டு நின்று கூட பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள் முல்லை.. வர்மன் இறக்கும்போது 1 மாத குழந்தை இனியா.. வர்மன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதும் இனியா மட்டும் இல்லையென்றால் இன்னேரம் முல்லையும் இல்லாது போயிருப்பாள்.. குழந்தையின் முகத்தை பார்க்கும் போது அவனது விழிகளை அப்படியே கொண்டிருந்த இனியாவை விட்டுப் போக அவளுக்கு மனம் வருமா.. உருட்டி உருட்டி பார்க்கும் பச்சை மண்ணின் கண்ணைப் பார்த்து உன் அப்பனும் இப்படி பார்த்துதான் என்னை மயக்கிப்போட்டு இப்ப தவிக்க விட்டு போய்ட்டான் .. என்று அவள் கண்ணீர் கன்னத்தின் வெளியே உருண்டோட கண்ணீரை துடைத்து விட்டு குழந்தையின் குட்டி கண்ணில் முத்தமிட்டாள்..

அழுது கொண்டு சென்ற முல்லைக்கொடி எதாவது செய்து கொல்லுவாளோ என்று அச்சப்பட்ட சிம்மன் அவள் சென்ற அறைக்குள் போய் பார்க்க குழந்தையை அணைத்து கொண்டு அழுது கொண்டிருந்தாள்.. பெரும் மூச்சு விட்டு கதவை சாற்றிவிட்டு அவள் மனம் ஆறும் வரை அழுது தீர்க்கட்டும் என்று வெளியே வந்தவன் எம் எல் ஏவின் முன்னே வந்தவன் “இனி உங்களுக்கு இங்க நிற்க வேண்டிய வேலை இருக்காது நீங்க கிளம்பலாம் ” என்றான் கணீர் குரலில்

சிம்மனின் பலத்தை நன்கு அறிந்தவர் சந்தானம் இப்போது அவனை எதிர்த்து நின்றால் தன் தலை தப்பாது என்று பயந்தவர் நின்று பேச முடியாமல் தலை குனிந்து சென்றார்.

இதையெல்லாம் எண்ணியபடி குழந்தையுடன் டைனிங் டேபிளில் வந்தமர்ந்தவன் “ஏன்மா உன்கிட்ட நிறைய கலர் கலரா சேலை இருக்குல்ல.. அதையெல்லாம் உடுத்தாம எதுக்கு இந்த கோலத்துல இருக்க” என்று வருத்தப்பட்டு கேட்டான்

அவன் கேட்ட கேள்விக்குப் பதில் பேசாமல் “அண்ணா இட்லி வைக்கவா.. என்று தட்டில் இட்லியை வைத்துவிட்டு “இனியா வா சித்தப்பா சாப்பிடட்டும்.. ஸ்கூல்க்கு நேராமாச்சு உனக்கு நான் இட்லி ஊட்டுறேன்” என்று குழந்தையை தூக்க கை நீட்டினாள்.

“எனக்கு சித்தா ஊட்டுவாறு.. நீ வேணாம் ரெண்டு வாய் சாப்பாடு ஊட்டுவ.. அப்புறம் என்னைப்பாத்து அழுவ.. நீ அழுவறதப் பார்த்தா எனக்கும் அழுகை வரும் போ நான் உன்கிட்ட சாப்டல” என்று இதழ் பிதுக்கி சிம்மன் மடியில் ஒய்யாரமாய் உட்கார்ந்து கொண்டது இனியா .

இனியா பேசியதும் முல்லைக்கு முணுக்கென்று கண்ணீர் எட்டி பார்க்க “ஏண்டா எத்தனை தடவை சொல்றது குழந்தை முன்னால அழாத அவ மனசும் கஷ்டப்படும்” என்று அவள் முகம் நிமிர்ந்து பார்த்தவன் நெற்றியில் திருநீறும் சந்தனமும் மட்டும் வைத்திருப்பதைக் கண்ட சிம்மன் கோவம் கொண்டு “கொடிமா நான் எத்தனை தடைவ உன்கிட்ட சொல்லியிருக்கேன் நெத்தில பொட்டு வைனு.. வர்மனுக்கு பொண்ணுங்க நெத்தில பொட்டு வைக்காம இருந்தா பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்தான.. இங்க பாருடா உன் நெத்தியில பொட்டு வைச்சு கையில வளையல் போட்டு எனக்கு சாப்பாடு போடுற மாதிரி இருந்தா சாப்பாடு போடு.. இல்லைனா நான் வெளியில சாப்பிட்டுக்கிறேன்” என்றான் சற்று கோவமாகவே

“அண்ணா எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிச்சிருக்கு.. நான் வைக்கிற பொட்டு வளையல் எல்லாம் அவர் பார்த்து இரசிக்கிறத்துக்குதான் வைச்சிக்கிட்டேன்.. இப்போ இதையெல்லாம் பார்க்கறத்துக்குத்தான் அவரு இல்லையே” என்று கூறும்போதே கண்ணில் கண்ணீரும் வந்துவிட தேம்பிக்கொண்டு அவளது அறைக்குள் சென்றுவிட்டாள்.

“டேய் வர்மா ஏண்டா இப்படி இந்தப் பொண்ண தவிக்க விட்டு போய்ட்ட.. எனக்கு மனசு வலிக்குதுடா.. நீ செத்துட்டனு என்னால இன்னும் நம்ப முடியலடா.. நீ எங்கயோ இருக்கன்னு என் ஆழ்மனசுக்கு படுதுடா.. ஆனா இந்தப் பொண்ணு வாழ வேண்டிய வயசுல இப்படி வாழ்க்கைய இழந்து நிற்கறத என்னால பார்க்க முடியலடா வர்மா” என்றவனுக்கு.. நெஞ்சை பிசைந்து கொண்டு வந்தது.. அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்மன் அவனுக்கும் கூட கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது..

குழந்தைக்கு தானும் அழுவது தெரிந்தால் அதுவும் அழும்.. உடைந்து விடும்.. இனியாவை வர்மனை போல தைரியமாய் வளர்க்கணும் என்று எண்ணிக்கொண்டு என்று கண்ணீரை உள்ளிழுத்துக்கொண்டு குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட ஆரம்பித்தான்.

இனியா, முல்லையிடம் இருக்கும் நேரம் குறைவுதான்.. சிம்மனின் தோளில்தான் எந்நேரமும் தொங்கிக்கொண்டிருக்கும்.. பள்ளி முடிந்து கூட்டிட்டு வருவதே சிம்மன்தான்.. மாலையில் பள்ளி முன்பு போய் நின்று விடுவான்.. வரும் வழியில் இனியா என்ன கேட்கிறாளோ அனைத்தையும் வாங்கி கொடுத்து கார் நிறைய அள்ளி போட்டு கொண்டு வருவான் சிம்மன் அவனை தவிர வேறு யாரிடமும் குழந்தையை தனியாக விடமாட்டான்.. தனக்கு எதிரிகள் அதிகம் குழந்தையை ஏதாவது செய்துவிடுவார்கள்.. என்று குழந்தையின் மீது கண் கொத்தி பாம்பு போல கண் வைத்து பார்த்திருப்பான்.

இனியாவிற்கு நினைவு தெரியும் நாளில் வர்மனின் போட்டோவை காட்டி இது தான் உன் அப்பா.. என்று சிம்மன் சொல்லிக் கொடுக்க.. “அப்பா எங்க போனாரு சிம்மா” என்று அவன் கன்னம் தொட்டு கேட்கும் குழந்தையிடம் என்ன பதில் கூறுவதென தெரியாமல் அவனுக்கு கண்ணை கட்டிக்கொண்டு வரும் .. அப்பா இறந்து விட்டான் என்று ஒருநாள் கூட மறந்தும் குழந்தையிடம் சிம்மம் கூறியதில்லை . பிஞ்சு மனம் வாடக்கூடாதென்று “அப்பா வெளியூர் போய் இருக்கான் இனியா சீக்கிரம் வந்துடுவான்னு தான் சொல்லி வைப்பான்..

:உனக்கு என்ன வேணுமோ அத சித்தப்பா கிட்ட கேளு நான் வாங்கித் தருவேன்” என்று கூற.. குழந்தையும் சிம்மன் வைத்திருக்கும் பாசத்தில் அப்பா என்றொருவனை கேட்க மறந்தது..

வர்மா போன நாளிலிருந்து முல்லை சில நேரம் பிரம்மை பிடித்தது போல் இருப்பாள்.. அவளுக்கு துணையாக மங்கா என்ற ஒரு பெண்ணை வேலைக்கு வந்திருந்தான்.. இனியாவிற்கு பசியாற்றியதும் மங்கா பார்த்திருப்பாள்.. வேலை முடித்து வந்தால் சிம்மன் இனியாவை தூக்கிக்கொண்டு போய்விடுவான்.. அவன் மார்பு மீதே படுக்க வைத்துக்கொள்வான்.. வர்மன் இல்லாத குறையை இனியாவை பார்த்து குறைத்துக்கொண்டான்.

வர்மனும் சில நேரம் அவன் நெஞ்சு மேல தான் படுத்துக்கிடப்பான்.. அதுபோல குழந்தையையும் படுக்க வைத்துக்கொள்வான்.

குழந்தைக்கு சோறு ஊட்டி முடித்ததும் இனியாவிடம் “ஸ்கூல்க்கு போலமா தங்கம்” என்றவன் முல்லைக்கொடியின் அறையை எட்டிப்பார்க்க அது மூடியிருந்தது.. அவள் அழுதுவது சிம்மன் காதுக்குக் கேட்க.. பெரும்மூச்சு விட்டு குழந்தைக்கு டிபனை பாக்ஸில் போட்டு சிநாக்ஸ் தனியாக போட்டு எடுத்துக்கொண்டு “அம்மாகிட்ட போய் சொல்லிட்டு வாடா” என்றான்..

முல்லையின் அழுகையை நிறுத்த குழந்தையால் மட்டுமே முடியும் என்பதை அறிந்து அறைக்குள் குழந்தையை போகச் சொன்னான்.

“சரி சிம்மா” என்று தலையாட்டிக்கொண்டு ரெண்டு சிண்டு ஆட “அம்மா” என்று அழைத்துக்கொண்டே முல்லையின் அறைக்கதவை திறந்தது

குழந்தை வருவதைக் கண்டு கண்ணை துடைத்துக்கொண்டவள் “தங்கம் அம்மாவ மன்னிச்சிரு” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு தூக்கிட்டு வெளியே வந்தாள்.

குழந்தையுடன் வரும் முல்லையை பார்க்க.. இப்போது கொஞ்சம் முகம் தெளிந்திருந்தது.. சிம்மன் கார் சாவியை எடுத்து பேக்குடன் வெளியே போய் காரில் ஏறினான்.

வீட்டைச் சுற்றிலும் காவலுக்கு ஆள் போட்டிருந்தான்.. அதில் சிம்மனுக்கு விஸ்வாசமாய் இருப்பது பொம்மன்தான்.. “பொம்மா எங்கிருக்க” என்று குரல் கொடுத்தான்

“தம்பி இதோ வந்துட்டேன்” என்று அவசரமாய் அவன் முன்னே பவ்யமாய் நின்றார் பொம்மன்..

“பாப்பாவ ஸ்கூல்ல விடணும் கார் எடுங்க” என்று சிம்மன் கார் சாவியை பொம்மனிடம் கொடுக்க.. அவரும் சாவியை வாங்கிக்கொண்டு டிரைவர் சீட்டில் ஏறினார்.

“இனியா குட்டி வாங்க” என்று சிம்மன் கைநீட்ட..

முல்லையின் கையிலிருந்து சிம்மனின் கைக்கு தாவியது இனியா.

குழந்தையை வாங்கியவன் “கொடிம்மா மங்கா மதியம் வந்திடுவா.. பார்த்து பத்திரமா இரு..” என்று கூற..

“சரிண்ணே” என்று அவள் தலையாட்டினாள் ..

இனியா, முல்லைக்கு வாய்திறந்து சிரித்து டாட்டா காண்பித்தது..

இப்படித்தான வர்மனும் சிரிப்பான் என்று எண்ணியவளுக்கு கண்ணீர் மாலையாய் வழிந்தது.. வர்மன், முல்லைக்கொடியை உருகி உருகி காதலித்தவன்.. ஒருவருசம் நகமும் சதையுமாய் வாழ்ந்தவன் வர்மா.. ஒரு பொருளை தொட்டால் கூட அதில் வர்மனின் வாசம் இன்னும் இருப்பதாய் முல்லையின் மனம் துடித்து போய்விடும்.. அவள் அழுவதை தாங்காத சிம்மன் அவன் ஆசையாய் பார்த்து பார்த்து கட்டிய வீட்டை விட்டுட்டு போகலாம்.. என்று கூட சிம்மன் கூறிவிட்டான்.

“அண்ணா இது எனக்கு என் தெய்வம் வாழ்ந்த கோவில் இத விட்டுட்டு என்னை எங்கும் கூப்பிடாதீங்க”. என்று மறுத்துவிட்டாள்.

பள்ளிக்குள் கொண்டு சென்று இனியாவை விட்டுட்டு வந்தவன் தனது அடியாட்களை ஏத்திக்கொண்டான்.. இன்று ஒரு சம்பவம் நடத்த போய்க்கொண்டிருக்கிறான்.. சிம்மனும் ,வர்மனும் கெட்டவர்களை தான் அழித்தார்கள்.. மக்கள் போலீஸ் ஸ்டேசன் போனால் கூட நியாயம் கிடைக்காது.. ஆனால், சிம்மன் வர்மன் கிட்ட போனால் அன்றே நியாயம் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி அவர்களிடம் வந்து தான் புகார் செய்து நிற்பர்.

இன்று காலையில் சிம்மனின் போனுக்கு “என் பெண்ணை ஒருவன் ஏமாத்திவிட்டு.. அவன் வேறு ஒரு பொண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறான்..நீங்கதான் எங்களுக்கு நீதி வாங்கி கொடுக்கணும்” என்று பெற்றவர்கள் கதறி கூற..

“கல்யாண மண்டபம் பெயரைச் சொல்லுங்க.. மத்ததை நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லி போனை அணைத்திருந்தான்

கல்யாண மண்டபத்தின் முன்னே கார் நிற்க.. ஐந்து பேர் இறங்க சிம்மன் சிகரெட்டை எடுத்து பத்த வைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

கல்யாண மண்டபத்திற்குள் ஆட்களுடன் திபு திபுவென நுழைய அங்கே சலசலப்பு சத்தம் கேட்டது
ஐய்யர் மந்திரம் ஓதிக்கொண்டிருக்க.. மணமகன் என்ற போக்கிரி கழுத்தில் மாலையுடன் அமர்ந்திருந்தான்.. அவனுக்கு சிம்மனை கண்டதும் அல்லு விட்டது.. குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்குமே.

சிகரெட்டை ஊதித்தள்ளி கீழே போட்டு காலில் மிதித்து விட்டு மணமேடையில் ஏறிய சிம்மன் “ஐய்யரே மந்திரத்தை நிறுத்துக்கோ” என்று ஹோமத்தில் பக்கத்தில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஊத்தினான்.. அந்த புகையில் மணமகன் “லொக் லொக்” என்று இருமினான்.

இருமியவன் சட்டையை இழுத்துப் பிடித்து தூக்கி நாலு அறைவிட்டான்.. அவனை பெற்றவர்கள் “எதுக்கு எங்க பையனை அடிக்கீறிங்க” என்று முன் வந்து கேட்க.

அவன் சட்டையில் காலரை இழுத்து பிடித்தபடி “உங்க வீட்ல பெண் பிள்ளை இருக்கா”

“ஆமா இருக்கு”

“நான்.. உங்கப் பொண்ணு வயித்துல குழந்தைய கொடுத்துட்டு ஏமாத்துனா சும்மா இருப்பீங்களா?” என்று கேட்டு விட்டு அவனின் மண்டையில் நச்சென்று ஒரு கொட்டு வைத்தான்.

“அம்மா இவங்க சும்மா சொல்றாங்க” என்று அவன் எகிற..

சிம்மன் தன் சர்ரென்று முதுகில் சொருகி வைத்திருந்த அருவாளை எடுக்க.. பையன் நடுங்கி மூத்திரம் போய் “நா..நான் தான் காரணம்” என்று தொடை நடுங்கி கூற..

சிம்மனின் ஆட்கள் அந்தப் பெண்ணை பெற்றவர்களுடன் கூட்டிட்டு வந்தான்.

அந்த நாதாரி பையனின் பெற்றோர் நல்லவிதமாக இருக்க.. “நாங்க இந்தப் பொண்ணை ஏத்துக்குறோம்” என்று கூறியவுடன் தான் சிம்மன் அவனை அடிப்பதையே விட்டான்..

பெண்ணின் பெற்றோர் “இந்த உதவியை நாங்க வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டோம் நீங்க புள்ள குட்டியோட நூறு வருஷம் வாழணும்” சிம்மனை கையெடுத்துக் கும்பிட்டனர்..

“இந்த பொண்ணு எனக்கு தங்கச்சி போல” என்று கூறினான்..

அவர்கள் பணம் கொடுக்க பணத்தை வாங்க மருத்துவன் “பணத்தை பொண்ணுக்கு என் சார்பா சீரா வைச்சுக்கோங்க” என்று கூறி மீசையை முறுக்கி மண்டபத்திலிருந்து வெளியே வந்தான்.

காரில் ஏறி டேய் “இன்னிக்கு அடுத்து என்ன பிரச்சனைடா வண்டியை ஆபிஸுக்கு விடு” என்று போனை எடுத்து வீட்டுக்கு போன் போட்டு மங்கா வந்துட்டாளா.. என்று தெரிந்து கொண்டு நிம்மதியுடன் தலைசாய்த்து கண்மூடினான்..

சும்மாதான் கண்மூடிப்படுத்திருப்பான் பார்ப்போர் கண்களுக்கு அவன் ஆழ்ந்து தூங்குவது போலிருக்கும்.. வண்டி ஓரடித்தில் நிற்க “என்னாச்சுடா” என்று கண்ணை மூடிக்கொண்டு கேட்க அண்ணே அவசரம் என்றதும் அவன் பேசவில்லை.

கொஞ்ச தூரம் சென்றதும் “காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று கையில் துணிப்பையுடன் ஒரு இளம் பெண் காரின் முன்னே வந்து விழுந்தாள் அவள் வஞ்சிக்கொடி..

3 thoughts on “மோக முத்தாடு அசுரா”

  1. Септики под ключ: современные решения для частного сектора
    септик цена с установкой под ключ [url=http://www.septic-pod-kluch-msk.ru]http://www.septic-pod-kluch-msk.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top