ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா)

காதல் தானடி

                என் மீதுனக்கு? 

      [1]

 

எங்கும் கும்மிருட்டு. தன்னைத் தவிர இன்னொரு ஜீவனும் அங்கே இருக்கின்றதை பார்க்க முடியாதளவுக்கு ஒரு கடுமையான இருட்டு.

இருப்பினும் தன் முன்னாடி நின்றிருந்த ஆண்மகன் விட்ட நெடுமூச்சுக்கள் அவள் காதுகளைத் தீண்டிக் கொண்டிருந்தன. 

அறையில் நிலவிய புழுக்கத்தினால், அவன் மேனியில் வழிந்த நூதனமான வியர்வை வாசமும் அவள் நாசியில், அவள் அனுமதி இன்றியே உள்நுழைந்து கொண்டிருந்தன. 

கூடவே அவ்வாண்மகனின் உடல் அசைந்த போது ஏற்பட்ட நுணுக்கமான ஒலி.. இவை தான் அவளைத் தவிர ஓர் ஜீவன் அங்கே இருக்கின்றது என்பதற்கு அவளால் ஆதாரம் காட்ட முடியுமானதாக இருந்தது. 

அது முழுதும் மரத்தினாலான பலகை வீடு. 

அவள் கண்கள் அவ்விடத்தைச் சூழ அலை பாய்ந்தன. இருட்டிலும் பார்க்கக் கூடிய பூனைக்கண்களைக் கடவுள் அவளுக்குப் பரிசளித்திருக்கக் கூடாதா? 

மனதோரம் ஓர் சின்ன அங்கலாய்ப்பு தோன்றி மறைந்தது. 

அங்கணம் அலைபாய்ந்த அவள் கண்கள், அந்தச்சுவர் பலகையின், ஓரத்தில், ஆறரையடி உயரத்துக்கும் மேலே இருந்த ஒரு சதுர வடிவத் துவாரத்தைக் கண்டு கொண்டன. 

அதன் வழியாக, வானத்திலே காய்ந்து கொண்டிருந்த முழுமதியை அவளால் கண்டு கொள்ள முடியுமானதாக இருந்தது. 

இத்தனை நேரமும் நிலவை, முகில் மறைத்திருக்கக் கூடும்!! 

 ஆசைக்காதலனான முகிலின் அணைப்பிலிருந்து வெளிவந்த நிலவு மங்கையின் முகம், முகில் காதலின் அணைப்பு தந்த மகிழ்ச்சியில் பிரகாசமாக ஒளிர்கின்றதோ?

மனதோரம் இம்முறை அவ்விக்கட்டான சூழ்நிலையிலும், கவித்துவமாக எண்ணியது மனம். 

நிலவின் ஒளி.. அந்த பலகைக்கூரை வீட்டையும் அடைய, அவள் விழிகளில் மதியின் ஒளி.. கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கப்படலாயிற்று. 

அவளால் அறையில் சுற்றிலுமுள்ள பொருட்களைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.அதுவொரு அரிசிமூட்டைகள் எல்லாம் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஓர் குடோன். 

கொஞ்சம் பழைய அரிசிமூட்டைகளும் இருந்திருக்க வேண்டும். பழைய அரிசிக்கு என்று வரும் இயற்கையான மணம் அந்தக் குடோன் முழுவதிலும் இருந்து குப்பென்று வீசிக் கொண்டிருந்தது. 

முதலில் மூக்கைப் பொத்திக் கொண்டவள் தான் அவள். தற்போது அந்த நாற்றம் பழகிவிட்டிருந்தது. 

தரையெங்கிலும் காய்ந்த சருகுகளோ, வைக்கோலோ நசநசவென்று மிதிமிதிபட்டுக் கொண்டிருந்தது. 

அவள் முன்னாடி நின்றிருந்தான் அவன்!! எப்பேர்ப்பட்ட நிலையிலும்.. அவனை மேலிருந்து கீழ் வரை அலசியது அவள் கண்கள்;பாழாய்ப்போன அவள் கண்கள்!!

அவனது கழுத்து வரை வளர்ந்திருந்த காற்றில் ஆடும் கேசம், புசுபுசுவென்று கனனங்களை மறைத்து வளர்ந்திருந்த தாடி.. 

இரு தசைக்குன்றுகளை அருகருகே வைத்தாற் போன்று என்று கம்பன் வர்ணித்த ஸ்ரீ இராமபிரான் போன்ற தோள்புஜங்கள்!! 

முறுக்கேறிய கைச்சந்தினை இறுக்கிப் பிடித்திருந்த வெள்ளை ஷேர்ட்டும்,இடுப்புக்கு கீழே வேட்டியும், 

 அந்த ஷேட்டின். திறந்திருந்த மேலிரண்டு பட்டன் வழி தெரிந்த திண்ணிய மார்பும், 

இடுப்பில் வைத்தபடி இருந்த கைகளும், அகல வைத்த கால்களும் என இராஜதோரணையுடன் நின்றிருந்தான் அவ்வாலிபன்!! 

அவனைப் பார்த்த வண்ணமே மேலேறிய அவள் கண்கள், அவனது கண்களை நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டது.

 இத்தனை நேரம் அவள் தன்னை ஏறிடுவதையே பார்த்துக் கொண்டிருந்திருப்பான் போலும் அவனும். 

அவளைப் பார்த்ததும் மெல்ல மேலுயர்ந்தன அவன் புருவங்கள்.

 ‘என்ன?’ என்பது போல அவன் பார்த்து வைத்த பார்வை, ‘ஐய்யயோ அவ்வளவு அப்பட்டமாகவா பார்த்து வைத்தோம்” என்று அசடுவழிய வைத்தது எல்லாம் ஓரிரு நாழிகை தான். 

சட்டென இருக்கும் களேபரமான நிலவரம் புரிய,கைகள் நடுங்க, “இப்போ நாம் எப்படி வெளியில போறது?”என்று கேட்டாள் அவள். 

அவள் குரல் அவளுக்குக் கேட்டதே அதிசயம் போல இருந்தது அவளுக்கு. 

அவள் பயம் அவனுக்குப் புரிந்தது. இருட்டு குடோனில் அவனும், அவளும் மட்டும்!! 

இல்லை ஒரு ஆணும், பெண்ணும் மட்டும்!! பீதிகள் எழுவது இயற்கையே! 

இருவரும் இருவேறு தேவைகளுக்ககாக வந்து மாட்டிக் கொண்டார்கள். தற்போது வெளியில் செல்லும் வழிவகை அறியாது நிற்கின்றார்கள். 

அவள் கைவிரல்களைப் பிசைந்து கொண்டு நின்றாள். இரவில் தனிமையில் வந்து.. குடோனில் மாட்டிக் கொண்டாள் என்று பெரியவர் அறிந்தால் அவள் நிலை?? 

அவள் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்தது; கால்கள் ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அசைந்து கொண்டேயிருந்தது. 

அவனது ஏகாந்தமான குரல், அந்த இருட்டையும், நிசப்தத்தையும் ஒரு சேரக் கலைத்தது போல ஓர் தோற்றமயக்கம் அவளுள் தோன்றவாரம்பித்தது. 

“பயப்புடாத… நான் உன் பக்கத்துல தானே இருக்கேன்?.. ஆராவது இந்தப் பக்கம் வர்றாங்களான்னு பார்த்துட்டு வந்துட்றேன்.. நீ இங்கனயே இரு..” என்று சொன்னவன்,அறையின் சதுரத் துவாரத்தை நோக்கி நடந்தான். 

அவன் பேசிய தமிழ்… ஒருவகையான இசைத்தமிழாக அவள் காதில் பாய்ந்தது. 

இருந்தாலும் இருட்டில் அவளுக்கு மிகப் பெரும் துணையாக இருக்கும் அவனை விட்டு அகல்வது, அவளுக்கு சரியான யோசனையாக தோன்றாது போகவே, 

அவள் கைகள் அவளையும் மீறி, அவனது ஷேர்ட்டின் பின்புற நுனியை பிடித்துக் கொண்டது. இதழ்கள் தானாக படபடத்தது. 

“இல்.. இ.. இல்லை.. எ.. எ.. எனக்கு ப.. ப்.. பயமா இருக்கு.. நா.. நான் உங்க கூடவே வரேன்..”என்றாள் அவள் மீண்டும் மென்மையாக. 

அவன் சட்டெனத் திரும்பி அவள் நயனங்களைப் பார்த்தான். அதில் என்ன தோன்றியதோ? ஆனால் அவன் ஓரிரு கணங்கள் இமைக்காது பார்த்துக் கொண்டேயிருந்தான். 

அவன் பார்வை, அவளுள் ஏதோ ஒன்றைச் செய்ய, சட்டென ஒரு தரம் கண்ணிமைத்து, தலை குனித்துக் கொண்டாள் அவள். 

மீண்டும் தலை நிமிர்ந்த போது.. அந்த ஆஜானுபாகுவான உருவம்.. அவளை விட்டும் இரண்டடி நடக்க, அவளும் அவன் பின்னாலேயே சென்றான். 

அந்தக் குடோனின் பாரிய பலகைக்கதவுகளின் இடுக்கு வழி வெளியே பார்க்க முயன்றான் அவன்;முடியவில்லை.பின் திரும்பி வந்து பலகைச் சுவர் மீதிருந்த சதுரத் துவார வழியே எட்டிப் பார்க்க முனைந்தான் அவன். 

சிறிது நேரம் எம்பி எம்பி சதுரத் துவாரத்திட்டைப் பிடிக்க முயன்றவனின் முயற்சி கை கூடியது. 

ஒருகட்டத்தில் அந்தத் துவாரம் வழியே இருகைகளையும் அழுத்திப் பிடித்தவன், வெளியே நடப்பவற்றை எல்லாம் அவதானிக்க முனைந்தான். 

தூரத்தே வண்ண ஒளிவிளக்குகளை சுழலவிட்டாற் போன்று, நில்லாது சுற்றிக் கொண்டிருந்தது ரங்கராட்டினம். கூடவே மினுமினுங்கிக் கொண்டிருந்தது அலங்கரிக்கப்பட்ட கோயில் கோபுரம்!! 

சினிமாப் பாடல்களின் சத்தம் ஒலிபெருக்கிகளே அதிரும் அளவுக்கு, காதைப் பிளந்து கொண்டிருந்தது.

 அறைக்குள் சரிவரப் புகாத ஒலி, அந்த ஓட்டை அருகே நாராசமாகவே.. வந்து கொண்டிருந்தது. 

அது ஊர்த்திருவிழா நடந்து கொண்டிருந்த இனிய இரவு ஊர்மக்களுக்கு!! இவர்களுக்கு? கொஞ்சம் படபடப்பான இரவு!! 

அந்தப்பக்கம் சென்ற மனிதத்தலைகளை நோக்கி, உதவி கேட்டு பெருங்குரலெடுத்துக் கத்தவாரம்பித்தான் அவன். ரொம்ப நேரம் கத்திக் கொண்டேயிருந்தான் அவன். 

உதவி கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையில்.. அவளும் அவனது பக்கவாட்டுத் தோற்றத்தையே பார்த்தபடியிருந்தான். 

அவனின் கூப்பாட்டை விடவும், ஒலிபெருக்கிகளின் ஒலி அடர்த்தியாகக் கேட்க, யாரும் அவன் குரலைக் கேட்பதாகவும் இல்லை; உதவியும் கிடைக்கவில்லை. 

இறுதியில் சோர்ந்து போனவனாக தரையில் குதித்தான் அவன். 

அவனது பரந்த நெற்றியில் பூத்த வியர்வை மணிகள், சந்திரனின் கிரணங்கள் பட்டு, முத்துப் போல பிரகாசித்தது தனியழகாக இருந்தது. 

அவள் எதுவும் கேட்கவில்லை. அவனது முகத்தில் தெரிந்த இறுக்கம், முயற்சி கை கூடவில்லை என்பதைப் பறைசாற்றியது. 

அத்தோடு நின்றானா அவன்? 

இரண்டெட்டில் தாவி வந்து, மூடப்பட்ட பாரிய கதவுகளின் குறுக்கே இருந்த இரும்புக் கொண்டிகளைக் கடினப்பட்டு உயர்த்த முனைந்தான். 

அவன் கால்கள் முன்னொன்றும், பின்னொன்றுமாகத் தரையில் ஊன்றிப் பதிந்தது. அவனது முறுக்கேறிய புஜங்கள் இன்னும் கொஞ்சம் இறுகியது. 

அவன் இன்னும் கொஞ்சம் வலு கொடுப்பதற்காக, பற்களை அழுந்தக் கடித்துக் கொண்டான். 

அவனது பெருமுயற்சியின் பலனாக, நூலளவு அசைந்தது அந்தக்கதவு. 

அவ்வளவு தான்.. அவ்வளவே தான்!! அதன் பிறகு அசைந்து கொடுக்கவே மாட்டேன் என்று பிடிவாதமாக நின்று விட்டது அந்தப் பாழும் பெரும் கதவு. 

துருப்பிடத்த இரும்பு முனைகள் குத்துப்படவே, சட்டென விரல்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டான் அவன். 

அவன் தன் வலியை வெளிக்காட்டக் கத்தவில்லை. இருப்பினும், விரல் நுனியில் இரத்தம் கசிந்தது போலும், வாயில் வைத்து விரல்களை சூப்பிக் கொண்டான் அவன். 

அந்த மென்மையான மங்கைக்கோ வெளியேறுவதற்கு அவன் செய்யும் பிரயத்தனங்களைப் பார்க்க பாவமாகப் போயிற்று. 

பெரியவர் திட்டுவதைக் காட்டிலும், அவன் மேல் கழிவிரக்கம் மிக, மிருதுவான குரலில், 

“முடியலைன்னா விட்டுருங்க.. யாராவது வர்ற வரைக்கும் நாம இங்கேயே இருக்கலாம்.”என்றாள் அவள். 

அவன் மீண்டும் நிசப்தமாக அவளது நயனங்களைப் பார்த்தான். அவளது விழிகளை இந்தப் பார்வைப் பார்த்து வைக்கிறானே? நிஜமாகவே அவள் விழிகளில் என்ன தான் உள்ளது? 

“அப்படின்னா விடியுறவரை இங்கனயே கெடக்கோணும்.. பரவாயில்லீய்யா? நான் புழுக்கம் தாங்கிக்கிடுவேன்.. நீ?? சீமையில இருந்து வந்தவ.. புழுக்கம் தாங்கிக்கிடுவியா?”என்று கேட்டான் அவன். 

அவள் அதற்கு பதிலளிக்கவில்லை. அவளால் புழுக்கம் தாங்க முடியாது தான். ஆனால் சூழ்நிலை?? தாங்கித்தானேயாக வேண்டும்? 

அவள் அணிந்திருந்த வளையல்கள் ஒருபுறம் சலசலக்க, கொலுசும் ஓசையிட, அதை விட இனிமையான குரலில், 

“அப்படி ரொம்ப நேரம்லாம் இங்கே இருக்கணும்ன்ற தேவை வராதுன்னு நெனைக்கிறேன்.. சீக்கிரம் யாராவது வருவாங்க.. என்னை தேடிக்கிட்டு.. இல்ல.. உங்களை தேடிக்கிட்டு.. அப்போ போயிரலாம்”என்று அவள் கூற, 

அவன் தன் பின்புறம் இருந்த மூட்டைக்குவியலின் மீது அயர்வாக உட்கார்ந்த வண்ணம், 

“வெளியே என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு பார்த்தேல்ல? திருவிழா.. பாதிபேர் குடிச்சுப்புட்டு மட்டையாகிட்டு கிடப்பானுக.. மீதிபேரு கறி, சோறுன்னு தின்னுட்டு கிடப்பானுக..ஆருக்கும் நம்ம பேச்சு இப்போதைக்கு கேக்காது.. நாம வெளியே போறது அவ்வளவு சுளு(இலகு) இல்ல..”என்றவன், தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து நின்றான். 

அவளோ என்ன செய்கிறான் என்பது தெரியாமல் பார்த்துக் கொண்டேயிருக்க,

 அவனோ குடோனில் கிடந்த காய்ந்த வைக்கோல்களை ஒன்று சேர்த்து, தன் சட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்த லைட்டர் கொண்டு தீ மூட்டினான். 

திகுதிகுவென பற்றியெரிந்தது வைக்கோல் குவியல். 

அந்தச் சூட்டிலிருந்து வந்த கதகதப்பு வழியாக சற்றே புழுக்கம் அடங்க, மெல்ல மெல்ல தீப்பந்தலின் அருகே அமர்ந்து, முழந்தாளைக் கட்டிக் கொண்டாள் அவள். 

அந்தத் தீ தந்த பொன்னிறத்தில், தங்கத்தில் வார்த்த காவல் சிலை போல அமர்ந்திருந்த அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருக்க, 

அவனோ தன் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான். 

வாயில் சிகரெட்டின் தலையை வைத்து அவன் இரண்டு முறை இழுத்து.. ஊதி, அதன் சுகத்தில் கண்களை மூட… இவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. 

 குரல் செருகிய வண்ணம், “நீ.. நீங்க.. சிகரெட் பிடிப்பீங்களா?..”என்று அவன் லைட்டர் எடுத்த போது, அவளுள் தோன்றிய சந்தேகத்தைக் கேட்க, அவனது விழிகளில் கனல் பறந்தது. 

வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டே அவளை வெறித்துப் பார்த்தவன், 

“ஏன்? சிகரெட் பிடிக்குறதுல என்ன தப்பு?”என்று அவன் தன் பெரிய விழிகளை உருட்டி அதட்டிக் கேட்க, சற்றே பயந்து தான் போனாள் அவள். 

அவள் தலை மறுப்பாக அங்குமிங்கும் ஆட, வாயோ சற்றே திக்க, “தத்.. தப்பேயில்லை.. நீங்க தாராஆஆளமா தம் அடிக்கலாம்..”என்றவள், அதற்கு மேலும் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று கப்பென்று மூடிக் கொண்டாள் வாயை. 

அவளுடைய மௌனவிரதம் ரொம்ப நேரம் எல்லாம் நிலைக்கவில்லை. 

அவன் மீண்டும் அவளது நயனங்களையே பொல்லாத பார்வை பார்க்க ஆயத்தமானான். அவன் பார்வையில் அவள் உடலில் இருந்த ஒட்டு மொத்த உரோமங்களும் கூச்செறிந்தது. 

பின்பு.. அவனுடைய தோள்புஜங்கள் அவள் விட்ட உஷ்ணப்பெருமூச்சினால், உயர்ந்து தாழ, அவனது பார்வையின் வீரியம் அதிகமாகத் தொடங்கியது. 

அவளுக்குள்ளோ சற்றே உதறல் எடுக்கவாரம்பித்தது. 

‘ஐயோ.. இவன் ஏன் இப்படி பார்க்கிறான்.. ராமா.. உடனே மேலே பாய்ஞ்சிருவானோ?’ என்று எண்ணியவளின் இமைகள், அச்சத்தில் படபடத்தன. 

அவனோ பட்பட்டென்று சட்டை பட்டன்களைக் கழற்றி விட்டு, வெற்றுமார்புடன் நிற்க, 

இவளோ ஒரு கையால் இரு விழிகளையும் மூடிக் கொண்டே, பதற்றத்துடன் வாய் திறந்தாள்.

“ஐயோ ராமாஆஆ!!! என்ன பண்றீஈஈங்க?”-விரல்களின் இடுக்குவழி அவனைப் பார்த்துக் கொண்டே கத்தி விட்டாள் அவள். 

அவனோ சட்டையைக் கழற்றி, அதனில் இருந்த வியர்வையைப் பிழிந்த வண்ணம், “புழுக்கமா இருக்குன்னு சட்டைய கழட்டி காயப்போடறேன்..இதையெல்லாமா சொல்லிப்புட்டு செய்யோணும்?”என்று அவன் புரியாதவனாகக் கேட்க, அவளிடமிருந்து ஒரு ஆசுவாசப் பெருமூச்சு.. பின்பு ஓர் சிறிய புன்னகை வெளிப்பட்டது. 

கூடிய சீக்கிரம் அப்புன்னகை அசடு வழியும் புன்னகையாக மாற, ‘ஈஈ’ என்று இளித்து வைத்தாள். 

மஞ்சல்காமாலைக்காரன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் போல இவளுக்கும் அவன் பார்வையெல்லாம் தப்பான பார்வை போல தோன்றுகின்றதோ? 

இருப்பினும் வெற்று மார்புடன் நின்றவனைப் பாராமல், தலை குனித்துக் கொண்டே அவள் இருந்த போது, அவளது பின்னங்காலை ஏதோக் கொட்டியது போல இருக்க, 

“ஸ்ஆ…”என்று விழிகள் மூடிக் கத்தினாள் அவள். 

எதிரே இருந்தவன் பதறவில்லை. கதறவில்லை. இருந்த இடத்திலேயே மலை போல நின்ற வண்ணம், 

“என்னாச்சு..?”என்று மட்டும் உணர்ச்சியேயற்ற குரலில் கேட்டான். 

அவள் தன் காலை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்த வண்ணம், விழிகளில் ஒரு துளி நீர் சரேலென வழிய, “த்.. த.. தெரியலைஹ்.. ஏதோ கக்.. கடிச்ச மாதிரி இருக்கு.. விறுவிறுன்னு இரத்தம் மேலேஹ்.. மேலேஹ்.. ஏறுற மாதிரி இருக்கு..”என்று சொல்ல, அப்போது தான் அவன் முகத்தில் சின்னப் புருவச் சுழிப்பு மட்டும் வந்து போனது. 

சட்டென அவளிடம் வந்து மண்டியிட்டவன், அவள் காலைப் பிடித்திழுத்து, மடியில் வைத்துக் கொண்டான். 

பூச்சி கொட்டிய வலியை விடவும், அவனது வலிய கரங்கள் பதித்து… அவன் இழுத்த முரட்டுத்தனமான இழுப்பு தான் அதிகம் வலித்தது அவளுக்கு. 

அந்த வலியில் அவனிடமிருந்து கால்களை.. அவன் எடுத்துக் கொள்ள முனைய, அவன் பிடி இன்னும் கொஞ்சம் இறுகியது. 

திருவிழாவுக்கென அவள் அணிந்த அழகிய தாவணியை அவள் அனுமதியின்றி முழங்கால்வரை மேலேற்றியவன், அந்த நெருப்பின் வெளிச்சத்தில் கடிபட்ட இடத்தைப் பார்க்கலானான். 

அவளது ஆடுதசைக்காலில் ஓரிடத்தில் மாத்திரம்.. சிவந்து வீங்கிப் போயிருந்தது. அடுத்த கணம் ஏதோ பூச்சி கடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவன், 

அவளைப் பார்த்து, “வலிக்கும்.. கொஞ்சம் பொறுத்துக்கிட வேண்டி வரும்”என்று மட்டும் தான் சொன்னான். 

அவன் சொன்ன வார்த்தைகளை அவள் மூளை உள்வாங்குவதற்குள், “ஆஆ”என்று உயிர் போவது போலக் கத்தினாள் அவள். 

அந்த திடகாத்திரமான ஆண்மகன், அவளைக் கடித்த பூச்சி விட்டுச்சென்ற கொடுக்கை, கண்ணிமைக்கும் நேரத்தில் நகங்களால் கிள்ளி வெளியேற்றியிருந்தான். 

அவனது கிள்ளலில்.. அவளுடைய வெளுத்த கால் இன்னும் கொஞ்சம் கன்றிச்சிவக்க, அவனது உடனடி வைத்தியம் மட்டும் தற்போது வலிக்கவாரம்பித்தது. 

அந்த முரட்டு ஆசாமிக்கும்.. அவள் விழியோரம் வந்து நின்ற கண்ணீர் ஏதோ செய்திருக்க வேண்டும். 

அவன் கைகள், அவளது ஆடுதசைக்காலை மென்மையாகத் தடவிக் கொடுத்தது. 

அந்தத் தடவல் கூட கொஞ்சம் முரட்டுத்தனமாகவே இருந்தாலும் கூட, அவன் தந்த வலிக்கு கொஞ்சம் இதமாகவே இருந்தது. 

மெல்ல மெல்ல வலி அகல, கண்களைத் திறந்தாள் அவள். 

அவன் விழிகளும், இவளது கண்மை தீட்டிய அஞ்சனங்களும் உலகம் மறந்து, ஒன்றிலொன்று மூழ்கிப் போகவாரம்பித்தது. 

உலகத்திலேயே அவளொருத்தி மாத்திரம் தான் பெண் என்பது போல.. அவளையே விழியெடுக்க மறந்து பார்த்துக் கொண்டேயிருந்தான் அவன். 

அவன் பார்த்த.. அந்த உயிர் உருக்கும் பார்வையில்.. அவளது மெழுகு இதயம் மெல்ல மெல்ல கரைந்து கொண்டேயிருந்தது. 

***

அவன் பார்த்த பார்வையின் தாக்கம் இன்று இந்நொடியும் கூட அவளைத் தாக்க, இறுகிய முகத்துடன், 

“எல்லாமே நடிப்பு!!! ..”என்று வாய் விட்டே சொன்னாள் அவள். 

அவளது குரலுக்கு இணையாக இன்னோர் குரலாக, ஓர் ஆண்குரல், “யெஸ்.. எல்லாமே நடிப்பு தான்.. பட் ஆக்டிங்க்னு சொல்லவே முடியாதபடி பர்பெக்ட்டா இருக்குல்ல?அது தான் பெஸ்ட் ஆக்டிங்க்”என்று சொல்ல, 

தூக்கிவாரிப்போட்டுக் கொண்டு நிமிர்ந்தவள், அந்த ஆண்குரலுக்குச் சொந்தக்காரனை மலங்க மலங்க விழித்தபடிப் பார்த்தாள். 

பார்த்தால், அவளோடு துணை வந்தவன், அவளது நண்பன் ஹரீஷ் அவள் பக்கத்திலேயே அமர்ந்தவாறு, யூடியூபில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். 

உன்னிப்பாகப் பார்த்த போது.. ஏதோ ஹாலிவுட் படத்தை அவன் செல் வழியாகப் பார்ப்பது புரிந்தது. 

‘ஓ… சினிமாவைப் பார்த்து விட்டா.. நடிப்பு என்றான்?’என்றதும் தான் ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக் கொண்டாள் அதே தாவணிப் பெண். 

தற்போது அல்ட்ரா மாடர்ன் பெண் என்று சொல்வது தான் சாலப் பொருந்தும். 

தூரத்தில் ரயில் விட்ட விஸில் சத்தத்தை அப்போது தான் உணர்ந்தாள் அவள். அவள் “மென்னிலா”. தன் ஊரை நோக்கி நெடுங்காலம் கழித்து, ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த “மென்னிலா”. 

 எதிர்க்காற்று பலமாக வீசிக் கொண்டிருக்க, அவளுடைய கூந்தல் தாறுமாறாக அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆவேசத்துடன் அலை பாய்ந்து கொண்டிருந்தது. 

அப்போது ஜன்னல் வழியாக, தண்ணீர்த் திவலைகள் அவள் முகத்தில் பட்டுத்தெறிக்க, அப்போது தான் அவள் ரயிலில் பயணம் புரிவது புரிந்தது அவளுக்கு. 

அது தண்ணீர் இல்லை. கற்பாறைகள் மீது ஆக்ரோஷமாகப் பட்டுத்தெறித்த கடல்நீர்!! 

கடலோடு அவளுக்கு இருக்கும் உறவு.. அதை எண்ணும் போது.. அவள் முகத்தில் மென்னகையை எட்டிப்பார்க்க செய்தது. 

அவளோடு, அவள் ஊரைச் சுற்றிப் பார்க்கவென வந்திருந்த கொழும்புப் பையன் ஹரீஷ், செல்லை டெனிம் பாக்கெட்டில் இட்ட வண்ணம், 

“ஹேய் நிலா உன் ஊர் வந்திருச்சு.. இப்படியே உட்கார்ந்திட்டிருந்த… மெயின் ஸ்டேஷன் போய் தான் இறங்க வேண்டி வரும்.. சீக்கிரம் எழுந்திரு”என்று அவளைத் துரிதப்படுத்தினான். 

ஹேன்ட் பேக்கினைத் தோளில் மாட்டிக் கொண்டு எழுந்து, லக்கேஜினையெல்லாம் எடுக்கவாரம்பித்தாள் அவள். 

அது அவளது ஊர். இலங்கையின் மன்னார் மாவட்டத்திலுள்ள “சிறுத்தோட்டம்” என்னும் சிற்றூர் தான் அது. 

அது பிரதான நகர் இல்லையாதலால், அந்த ஊர் தரிப்பிடத்தில், இரண்டு, மூன்று நிமிடம் போலத் தான் வண்டி நிற்கும். அதன் பின் தானாகவே வண்டி கிளம்பி விடவும் கூடும். 

அதனால் இருவரிடமும் ஓர் அவசரமும், பதற்றமும் தொற்றிக் கொண்டது. 

தோழி லக்கேஜினை எல்லாம் சிரமப்பட்டு தூக்குவது பிடிக்காமல், போர்ட்டர் வேலை பார்க்க எண்ணிய நண்பன் ஹரீஷூம், 

“என்கிட்ட கொடு.. நான் எடுத்துக்குறேன்..”என்று அவளிடமிருந்து லக்கேஜினை வாங்க முயல, 

“இல்லை நானே பார்த்துக்கறேன்.. என்னால முடியும் ஹரீஷ்..”என்று நண்பனின் உதவியை மறுத்தாள் நிலா. 

மார்புக்கு குறுக்காக இரு கைகளையும் கட்டிக் கொண்டு, அவளை முறைத்தவன், 

“அதான் நான் எடுத்துட்டு வரேன்னு சொல்றேன்ல? கொடு நிலா…”என்ற அவனது பிடிவாதக்குரல், மென்னிலாவைக் கட்டிப் போட, லக்கேஜை அவனிடம் ஒப்படைத்தாள் அவள். 

‘சிறுத்தோட்டம்’ என்று ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மும்மொழிகளிலும் எழுதப்பட்ட பதாகை அவர்களை வரவேற்க, அவர்களைத் தவிர ரயில் நிலையத்தில் ஒரு ஈ, காக்கை கூட இருக்கவில்லை. 

ஊரடங்கு சட்டம் போட்டாற் போன்று மயான அமைதியாக இருந்தது ரயில் நிலையம். 

ஓரிரு நிமிடங்களில் எல்லாம் அந்தச் சின்னச் சந்தியிலிருந்து மெல்ல மெல்ல நகர்ந்து செல்லவாரம்பித்தது ரயில். 

அவர்கள் கொண்டு வந்த நான்கு லக்கேஜ்களையும் இரண்டிரண்டாக எடுத்துக் கொண்டு போய்… 

அவன் தரையில் வைத்துக் கொண்டிருந்த கணம், அவனுடைய செல் ஒலிக்கவாரம்பித்தது. 

அழைப்பை எடுத்திருப்பது தன் தாய் என்பது புரிய, “யெஸ் மாம்”என்றபடி வாயெல்லாம் பல்லாக, டெனிம் பாக்கெட்டுக்குள் கையிட்ட வண்ணமே பேசவாரம்பித்தான் ஹரீஷ். 

மென்னிலாவோ செல்லில் உரையாடும் நண்பனை தொந்திரவு செய்யப்பிடிக்காமல், 

அமைதியாக கைகளால் சைகை காட்டியவள், ‘வாஷ்ரூம் போய்ட்டு வந்துர்றேன்’என்று வாயால் முணுமுணுத்து விட்டு அகல, 

ஹரீஷூம் ‘சரி’ என்பது போல புன்னகைத்துக் கொண்டே தலையாட்டினான். 

ஹரீஷ் தன் தாய்க்கு மன்னார் வந்து சேர்ந்ததை சொல்லிக் கொண்டிருக்க, மென்னிலாவும் வாஷ்ரூம் சென்றிருக்க..

அப்போது தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது. 

செல்லில் பேசிக் கொண்டு அவன் திரும்பிய வேளை, ஓர் நடுத்தர வயது ஆடவன், பிளாட்பாரத்தில் தலைதெறிக்க ஓடுவதை, விழிகள் இடுங்கப் பார்த்தான் ஹரீஷ். 

பிளாட்பாரத்தில் நின்றிருந்த ஹரீஷின் ஒட்டு மொத்த லக்கேஜையும் தள்ளி விட்டுக் கொண்டு, அறக்க பறக்க ஓடினான் அந்த ஆடவன். 

செல்லில் பேசிக் கொண்டே, லக்கேஜினை விழத்தட்டியவனைப் பார்த்தவனுக்குள் தாறுமாறாக கோபம் ஊற்றெடுக்க, 

“வாட் தி ஹெல் ஆர் யூ டூயிங்க்? ஹேய் மேஏஏன்.. ஒரு ஸாரி கூட கேட்கணும்னு தெரியாதூஊஊ?”என்று கத்த, அதெல்லாம் ஓடுபவன் காதில் விழவேயில்லை. 

அங்கணம் ஓடிய ஓட்டத்தில் தரையில் கால் வழுக்கி, அவன் விழுந்து விட, ஹரீஷூக்கோ, ‘அவனுக்கு நன்றாக வேண்டும்’ என்றே தோன்றியது. 

ஆனால் அவன் லக்கேஜினைத் தள்ளி விட்ட ஆடவனுக்கு, அடுத்து நடந்த அசம்பாவிதத்தை எண்ணும் போது, 

 “அவனுக்கு நன்றாக வேண்டும்”என்று ஏனோ எண்ண முடியவில்லை. 

அந்த விழுந்த நடுத்தர வயது ஆடவனின் பார்வை ஹரீஷையும் தாண்டி, வேறு எங்கோ பயங்கரமாகப் பதிந்தது. 

விழுந்தவனின் பார்வை பதிந்த இடத்தை, ஹரீஷூம் திரும்பிப் பார்த்த போது, அங்கே வெள்ளை வேஷ்டி, சட்டை சகிதம் முறுக்கு மீசையுடன் ஓர் ஆடவன் புயல் வேகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான். 

அவனுடைய புருவமத்தியில் விழுந்திருந்தது ஓர் கோப முடிச்சு. 

முற்றிலும் க்ளீன்ஷேவ் செய்யப்பட்ட முகத்தில் தெரிந்த ரௌத்திரத்திற்கு.. கிஞ்சித்தும் பொருந்தாததாக இருந்தது விபூதி. 

அவன் தரையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அசுரத்தனமான எட்டுக்கும் ஆடி அடங்கியது அவன் கேசம்!! 

 மாநிற நரம்புகள் ஓடுவது தெரியும் முறுக்கேறிய கைச்சந்து ஆகியவற்றினைக் கவனித்த போது.. ஆண்மகன் ஹரீஷின் இதயமே சற்றே படபடப்பாகத் துடிக்கச் செய்தது. 

‘என்ன கம்பீரமான வில்லேஜ் மேன்யா?’என்று தனக்குத் தானே எண்ணிக் கொண்டிருந்தவனின் இரசனையை தவிடுபொடியாக்குவது போல நடந்து கொண்டான் அந்தக் கட்டு மஸ்த்தான உடல் கொண்டவன். 

மல்லாக்க விழுந்தவன்.. திரும்பவும் எழுந்து ஓட முடியாத வண்ணம் அவனருகேயே வந்து விட்டிருந்தான் அலைபாயும் கேசத்தான். 

விழுந்தவன் முகத்தில் மரணபயம் தெரிந்தது. கைகள் நடுக்குறத் தொடங்கின. 

சற்றே பின்வாங்கிக் கொண்டே , கை கூப்பியவனாக கண்ணீர் மல்க, 

“ஐய்.. ஐய்.. ஐயா.. வ்.. விட்டுடுங்க ஐயா.. வ்.. விட்டுடுங்க ஐயா.. உங்களுக்கு ப்.. புப்.. புண்ணியமா ப்.. போ… போகும்.. ஐயா நான் புள்ளைக்குட்டிக்காரனுங்க ஐயா..”என்றதெல்லாம் அந்தக் கொடியவனின் மனதைக் கிஞ்சுற்றும் கலைக்கவில்லை. 

அவன் தன் பின்னாடி வந்த சகாக்களிடம் கை நீட்டினான். அந்த நீண்ட கைகளுக்குள் பல மனித இரத்தங்களை சுவை பார்த்த அரிவாள் வைக்கப்பட்டது. 

விழுந்தவன் தன் பிருட்டத்தால் ஊர்ந்து கொண்டே பின்னகர, அவனை நோக்கி அழுத்தமான காலடி எட்டுக்கள் எடுத்து வைத்தவன், 

ஆங்காரமாகக் கத்திக் கொண்டே, அவனது வலது கையை பச்செக்கென்று வெட்டினான். 

அந்தத் திடகாத்திரமான ஆண்மகனின் முகம் எங்கும் பட்டுத்தெறித்தது இரத்தம்!! 

அதனால் விளைந்த அருவெறுப்பு ஏதும் இன்றி.. தன் புஜங்கள் ஏறி இறங்க மூச்சு வாங்கிக் கொண்டே நின்றான் அவன்!!

இரத்தத்தைக் கண்ட பின்னும்.. அவனுடைய கோபாவேசமான சிவந்த முகம் மட்டும் தணியவேயில்லை. 

ஹரீஷோ ஒரு ‘லைவ்’கொலையைப் பார்த்த அதிர்ச்சியில், தன்னுடைய செல் கீழே விழுந்து உடைந்தது கூட தெரியாதளவுக்கு, கல்லாய் நின்றிருந்தான். 

வாஷ்ரூமை விட்டு அப்போது தான் வெளியே வந்திருந்தவள், அந்தக் கொடூர சம்பவத்தைக் கண்ட அதிர்ச்சியுடன்,

 வெட்டியவனின் ஆக்கிரோஷமான முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள் மென்னிலா. 

கை வெட்டப்பட்டவன் துடிதுடித்த வண்ணம் அலறியவனாக மூர்ச்சையாக, பிளாட்பாரம் எங்கும் இரத்தநதி பெருக்கமாக காட்சியளிக்கவாரம்பித்தது. 

வெட்டப்பட்டவனின் இரத்தம் முகமெங்கும் தெறித்திருக்க, அதைப்பற்றி கொஞ்சம் கூட சிரத்தை கொல்லாமல், 

இரத்தம் சொட்டச் சொட்ட அரிவாளை எடுத்துக் கொண்டு செல்லும் அவன் புறமுதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு,

 அடுத்த நிமிடம் விம்பங்கள் எல்லாம், இரண்டிரண்டாக, மும்மூன்றாகத் தெரியவாரம்பித்தது. 

அங்கு நடந்தேறியவற்றைப் பார்த்ததில் அதிர்ச்சியான மென்னிலாவின் மென்மையான இதயம் அதிர்வுற, 

மெல்ல மூர்ச்சையாகித் தரையில் சரியலானாள் மென்னிலா. 

தோழி மூர்ச்சையாவதைக் கண்ணுற்ற ஹரீஷ், ஓடிச்சென்று அவளைத் தோள்களில் தாங்கி, கன்னம் தட்டி, “நிலா.. நிலா..”என்றான் பதற்றமாக. 

முற்றுமுழுதாக மயங்கிச் சரிந்து விட்டவளை இரு கரங்களிலும் ஏந்தியவாறு, அருகில் இருக்கும் பெஞ்சின் மீது கிடத்தியவன், 

அவள் ஹேன்ட்பேக்கிலிருந்து வாட்டர் பாட்டில் எடுத்து, முகத்தில் தண்ணீர் தெளிக்கலானான்.

கொஞ்சம் கொஞ்சமாக மயக்கம் தெளிந்தவளாக, அவள் சுயநினைவு அடைந்து கொண்டிருந்த நேரம், யார் தகவல் தெரிவித்தனரோ? 

வெட்டப்பட்டு இரத்தம் சிந்திய ஆடவனை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து தூக்கிச் செல்ல, திடீரென அவ்விடத்தை போலிஸார் ஆக்கிரமிக்க ஆரம்பித்தனர். 

அந்த இரத்தம் தோய்ந்து கிடந்த இடங்களில் எல்லாம் போலிஸார் ஒன்று, இரண்டு என்று இலக்கமிடப்பட்ட குட்டிப் பதாகைகளை வைத்த வண்ணம் இருந்த நேரம், மெல்ல மெல்ல பழைய நிலைக்கு வந்து கொண்டிருந்தாள் அவள். 

 தன் கார்குழலை காதுக்குப் பின் செருகியவளாக, வரண்ட இதழ்களை ஈரப்படுத்திய வண்ணம் எழுந்தவள், காவல் அதிகாரியைப் பார்த்த வண்ணம், 

தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், 

“அ.. அ.. அவனை நான் பார்த்தேன்..”என்று சொல்ல, அதிர்ந்து ஹரீஷ் மாத்திரமல்ல, காவல் அதிகாரியும் தான். 

“வாட்..?”-காவல் அதிகாரி கேட்காமலேயே, இவளாகச் சொல்லவும், அவனையும் மீறி அதிர்ந்தவனாகக் கேட்டான் ஹரீஷ். 

தரையில் கால்களை அழுந்த ஊன்றி நின்றவள், “எ.. எ.. என்னால அவனை அ.. அ.. அடையாளம் காட்ட முடியும்.. கொன்னவனை அ.. அ.. அடையாளம் காட்ட என்னால முடியும் இன்ஸ்பெக்டர்..”என்று உறுதியான குரலில் கூற, 

ஹரீஷோ நிலாவின் ஓவர் கோர்ட்டினை மென்மையாகப் பிடித்திழுத்தவனாக, காதோரம், 

“நிலா இரத்தத்தை பார்த்ததும் மயங்கி விழுந்துட்ட.. இந்த நிலையில் இது முக்கியமா?”என்று கிசுகிசுக்க, நண்பன் சொன்னது தன் காதில் விழாதது போலவே நடித்தாள் மென்னிலா. 

இன்ஸ்பெக்டரோ புதிதாக ஊருக்கு மாற்றல் பெற்று வந்ததாலோ என்னவோ.. 

 இதற்குப் பின்னுள்ள செல்வாக்கான ஆள்புலத்தை எப்படியாவது கம்பியெண்ண வைக்க வேண்டும் என்ற நப்பாசையுடன்…அவளை மெச்சுதல் பார்வை பார்த்தார். 

கையில் இருந்த காக்கித் தொப்பியை அணிந்து கொண்டவர், “இதை போலிஸ்டேஷன் வந்து கம்ப்ளைன்ட்டா எழுதித் தர முடியுமா?”என்று கேட்க, 

முன்பிருந்ததைப் போல உறுதியான குரலில் சொன்னாள், “நிச்சயமா என்னால முடியும்”என்று. 

அவர் கண்களில் இருந்த மகிழ்ச்சி இன்னும் கொஞ்சம் இரட்டிப்பாக, அவளை அழைத்துக் கொண்டு.. போலீஸ் ஸ்டேஷன் விரையலானார் இன்ஸ்பெக்டர். 

தோழி அவர் பின்னாடி செல்வது சகியாமல், சட்டென மென்னிலாவின் முன்னங்கையைப் பற்றித் தடுத்தவன், 

“ப்ளீஸ்.. நாம இங்கே எதுக்காக வந்திருக்கோம்னு புரிஞ்சுக்கோ நிலா.. இது நமக்கு தேவையில்லாதது”என்று நண்பனாக புத்திமதி சொல்லிப் பார்த்தான் அவன். 

அவளா கேட்பாள்? மென்னிலாவா கேட்பாள்?

ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நாவு நுனியளவு வரை வந்த வார்த்தைகள், அங்கேயே உறைந்து போனது. 

ஏதும் பேசாமல் விறைத்துப் போன உடலுடன் காவல் நிலையம் நோக்கி நடந்தாள் மென்னிலா. 

தோழி தான் சொல்வதைக் கேட்கப் போவதில்லை என்பதை அறிந்தவன், தலை சிலுப்பியவனாக, 

பெருமூச்சு விட்டுக் கொண்டே, அவள் கூடவே நடந்தான். 

அடுத்ததாக நகர்ந்த ஒரு மணித்தியாலம். அந்த அறுபது நிமிடங்களுக்குள் ஏதேதோ நகர்ந்தேறி விட்டிருந்தது. 

காவல் நிலையத்திலிருந்து காற்றில் ஆடும் கேசத்தானுக்கு, தகவல் கொடுக்கப்பட, அடுத்த பத்துப் பதினைந்து நிமிடங்களில் எல்லாம், 

காவல் நிலையம் முன்னாடி சர்ருபுர்ரென்று உறுமிக் கொண்டு வந்து நின்றன நான்கைந்து கார்கள். 

புழுதி பறக்க நின்ற கார்களின்.. நடுமத்தியமான காரில் இருந்து.. தன் வலிய பாதத்தினை அழுத்தமாகப் பதிந்த வண்ணம் இறங்கினான் அந்தக் கொடூரன். அவன் “பரிதிவேல் வீரன்!”

தான் அணிந்திருந்த வெள்ளை வேட்டிக்கரை அழுக்குப்படும் என்று அஞ்சினானோ? என்னவோ? 

வேட்டி முனையை கையில் ஏந்திக் கொண்டே தன் கம்பீரமான கால்தசைகள் தெரிய, போலீஸ் ஸ்டேஷன் படிகளை ஓரெட்டில் தாவிக்கடந்த வண்ணம் உள்ளே நுழைந்தான் பரிதிவேல் வீரன். 

அவன் கண்களில் தெரிந்த இறுமாப்பும், செருக்கும் கலந்த கம்பீரப் பார்வை, அங்கிருந்த அத்தனை பேரையும் கொஞ்சம் ஆட்டிப்படைக்கத் தான் செய்தது. 

ஒரே ஒருத்தியைத் தவிர. அது மென்னிலாவே தான். 

அவள் அந்த இறுமாப்பும், செருக்கும் கலந்த அந்த கம்பீரப்பார்வையை வெறுத்தாள். 

தன்னை அருவெறுப்பாகப் பார்க்கும் பெண்ணொருத்தி அங்கு நின்றிருப்பதை அறியாதவன், 

இன்ஸ்பெக்டர் முன்னாடி போய் நின்று, மேசையில் ஓங்கி ஓர் அடி அடித்தவன், 

பற்களைக் கடித்துக் கொண்டு, கழுத்து நரம்பு புடைத்து வெளித் தெரிய, 

“என் ம்மேல க்கம்ப்ளைன்ட் க்கொடுக்க இந்த ஊருல எவ்வ..னுக்குல த்தைரியம் இர்ருக்கு? எவ்வனோ… ஒர்.. ருத்தன் க்க்கண்டபடி உளறினா.. நீர்ரும் எழுதுருவ்வி.. ய்யளோ? நீரு ய்யாராவது.. *** ****** றவனுக்கு… ***** உனக்குலாம் க்கம்பளைன்ட் ஒரு க்கேடு.. ”என்றவன் பேசியதெல்லாம் யாராலும் கேட்க முடியாத பக்கா கெட்டவார்த்தை வசனங்கள்!! 

எந்தத் தாய்மாரும் தன் பிள்ளை கேட்க அனுமதிக்காத கெட்ட வார்த்தைகள்!!

சுருசுருவென்று கோபம் ஏறிய இன்ஸ்பெக்டரோ, நாராசமான வார்த்தைகளைக் கேட்டு கை முஷ்டியை இறுக்கிக் கொண்டு எழுந்து நின்றவரின் சீற்றத்தைக் கட்டுப்படுத்தியது.. அவன் கூட்டி வந்த பத்துப் பதினைந்து அடியாட்களின் இராட்சதத் தோற்றம். 

ஆழமூச்சொன்றை வெளிவிட்டவாறு அடக்கப்பட்ட சீற்றத்துடன், “மைன்ட் யோர் வர்ட்ஸ்.. மிஸ்டர். பரிதிவேல் வீரன்.. நான் ஒண்ணும் கண்டதையும் கம்ப்ளைன்ட் எடுக்கல.. அய்விட்னஸ் இருக்கு..”என்று சொல்ல, அவனது கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது. 

சிங்கம் பிடரி மயிர் சிலுப்பியது போல, தன் கேசத்தை சிலுப்பிக் கொண்டவன், “எவ்வ.. ன்டா அவ்வ.. ன்..?”என்றபடி திரும்பியவன், அப்போது தான் கான்ஸ்டபிள் அருகே கம்ப்ளைன்ட் எழுதி முடித்தவாறு நின்ற அவளைப் பார்த்தான் பரிதிவேல் வீரன். 

அவளின் அருகில் கொலை நடந்த போது நின்றிருந்த, அதே ஆடவன் நின்றிருப்பதையும் கண்டான் பரிதிவேல் வீரன். 

முதலில் சற்றே அதிர்ச்சி பாவத்தைக் காட்டிய.. அவன் முகம் போகப் போக இறுகிக் கல்லானது.

 அவளை கண்களாலேயே எரித்து விடுபவன் போல நோக்கியவனை, சளைக்காது திரும்பிப் பார்த்தாள் மென்னிலா. 

பின் இன்ஸ்பெக்டரைப் பார்த்தவன், “எவ்..வளோ ஒரு ப்பொட்டச்சி.. கம்ப்ளைன்ட் குடுத்தா எடுத்துருவியளோ? நாளைக்கு அவ்.. வளே வந்து என்.. ******.. **** அப்படின்னு சொன்னாலும்… உடனே கம்ப்ளைன்ட் எடுத்துருவ்வ.. அப்படித்தானே??”என்று கேட்ட தினுசில், 

அவன் உபயோகித்த அநாகரிமான சொற்களில்..

 விறுவிறுவென உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை செக்கச்செவேலெனச் சிவக்க.. கோபம் ஏறலாயிற்று மென்னிலாவுக்கு. 

ஈரெட்டில் விரைந்து வந்து அவனை அடைந்தவள், தன் தனங்கள் இரண்டும் ஏறி இறங்க, ஆத்திரம் தாளாமல் ஓங்கி ஓர் அறை அறைந்தாள் அவனது கன்னத்திற்கு. 

அவள் அறைந்த அறையில் அவள் உள்ளங்கை தான் கன்றிச் சிவந்து திகுதிகுவென எரிந்தது. 

ஆனால் அந்த ஆஜானுபாகுவான ஆண்மகன் ஆடாமல், அசையாமல் அப்படியே தான் நின்றிருந்தாள். 

படபடவென பற்களைக் கடித்துக் கொண்டு, “ந்நீ.. த்த்தப்பு த்தப்பா எதை ப்பேசினாலும்.. அதை இன்ஸ்பெக்டர் வ்வேணும்னா க்கேட்டுட்டு இருக்கலாம்.. என்னால க்கேட்டுட்டு இருக்க ம்முடியாது..”என்று அவள் கத்திய தினுசில், 

உள்ளூற திகைப்பூண்டை மிதித்தாற் போன்று இருந்தது ஹரீஷூக்கு. 

ஹரீஷூக்கோ இரத்தம் கண்டு மயங்கியவளா இது? இப்படி வெட்டியவனையே ஓங்கி அறைந்தது என்றிருந்தது. 

அவனோடு வந்த கூட்டமோ, தங்கள் தலைவன் ஓர் பெண் கையால் அடி வாங்கியதில், “ஏய்!! ஆர் மேல் கை வைக்குற?”என்று அலற, 

திடும்மென்று திரும்பி… ஒற்றைப் பார்வையால் தன் அடியாட்கள் அனைவரையும் அடக்கினான் பரிதிவேல். 

அங்கேயிருந்த தன் நாற்பது, நாற்பத்தைந்து வயதான ஓர் ஆடவனை நோக்கிய பரிதிவேல், “மாமா.. என்ன பண்ணணும்னு தெரியும்ல?”என்று கேட்க, 

“தெரியும் மாப்ள”என்று பவ்யமாக சொன்னான், பரிதிவேலினால் “மாமா”என்றழைக்கப்பட்ட வாசு மாமா. 

அவனுடைய ஒற்றை வார்த்தையில் அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்து விட, காவல் நிலைய படிகளைத் தாண்டி வெளியே சென்றவர், வக்கீலுக்கு அழைப்பெடுக்கலானார். 

மீசையை முறுக்கிக் கொண்டே, அவளது விழிகளை வெளியே வெட்டி எறியும் வெறியுடன் வெறித்துப் பார்த்தவன், “இதுக்க்கு ந்நீ கூடிய சீக்கிரம் அனுபவ்.. விப்படீஈஈ..!!”என்று சொல்ல, அவன் உபயோகித்த “டீ” சூட்டைக் கிளப்பியது அவளுக்கு.

“இப்போ தானே மரியாதைக்குறைவா பேசி ஒரு அடி வாங்கின? மறந்துட்டியா?”என்று இதழ்களில் நமுட்டுச்சிரிப்புடன் கேட்டாள் மென்னிலா. 

“எது அடிச்சீயா? நான் நீ என் கன்னம் கடிச்ச கொசுவ அடிச்சேன்னு தானே நெனைச்சிக்கிட்டே..நீ அடிச்சது கொசுவுக்கே வலிச்சிருக்காதுல??அடுத்த தடவை இன்னும் உர்.. றுதியா அடிக்கணும்..” என்றவன், 

சற்றே குனிந்து அவளைப் பார்த்து சுவாரஸ்யமான சிரிப்புடன், “க்கொசுவ.. சரியா?”என்றவன், 

அவள் எதிர்பாராத வண்ணம் அவள் கன்னத்தைத் தட்டியவனாக, வேட்டியைக் கைகளில் ஏந்திப் பிடித்தவாறே லாக்கெருக்குள் சென்றான் பரிதிவேல். 

அவன் எதற்கு அனுபவிப்பாய் என்றான்? அறைந்ததற்கா? இல்லை அவன் பேரில் புகார் கொடுத்ததற்கா? இல்லை இரண்டுக்குமா? 

அவனைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தாதவளாக பார்வை பார்த்தவள், ‘நீ என்ன செய்திருவன்னு நானும் பார்க்கத் தானே” போறேன்” என்பது போல கறுவியவளாக அங்கிருந்து நகர்ந்தாள். 

 

1 thought on “காதல் தானடி என் மீது உனக்கு!-1 (விஷ்ணுப்ரியா)”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top