ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 1

கலை அறிவியல் கல்லூரி என்றாலே விழாக்களுக்கு பஞ்சம் இருக்காது. சென்னையில் பிரபலமான ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயிலும் மயூரவாஹனன் கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் பண்டிகை படுஜோராக ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக இனிதே கொண்டாட ஆரம்பித்தனர். 

மாணவர்கள் பட்டு வேஷ்டி சட்டையும், மாணவிகள் பட்டுப்புடவையுமாய் ஆடியோவில்  கேட்கும் பாடலுக்கு ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தனர். 

சென்னையில் ஐந்தரை ஏக்கர் நிலப்பரப்பில் பாதி இடத்தை ஆக்ரமித்து கட்டிய பெரிய பங்களாவிற்குள் “ஏய் அந்த சோபாவுல தூசி இருக்கு பாரு, டைனிங் டேபிள் சுத்தமா இருக்கணும். தரையில முகம் தெரியணும், வள்ளி டிபன் ரெடியா?” என்று ஓங்கி உயர்ந்த அதிகார குரலுடன் சமையலறைக்குள் நுழைந்தார் சந்திரமதி.

“எல்லாம் ரெடிங்க பெரியம்மா” என்ற வள்ளியோ சமைத்த பதார்த்தங்களை ஹாட்பாக்ஸில் போட்டு டைனிங் டேபிளில் அடுக்கி வைத்தார் வள்ளி.

சந்திரமதியோ அவரின் பிரியமான மகன் மயூரவாஹனனுக்கு பிடித்த பன்னீர் கிரேவியை சுவை பார்த்தார். உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தது. சந்திரமதியின் முகம் கடுகடுவென மாறி வள்ளியை பார்த்தவர் “மயூரனுக்கு உப்பு, உரப்பு கூட்டியிருக்கணும்னு பல வருசமா சமையல் வேலை பார்க்குற உனக்கு தெரியாதா வள்ளி?” சுள்லென்று விழுந்தார்.

“மன்னிச்சிடுங்கம்மா இனி சரிபண்ணுக்கிறேன்” என கையை பிசைந்து நின்ற வள்ளியிடம் “நான் தான் உப்பு குறைவா போடச்சொன்னேன்னு சொல்ல வேண்டியதுதானே வள்ளி” என்றபடியே நெற்றியில் விபூதிபட்டையுடன் பட்டுக்கரை வேஷ்டி சட்டையுடன் அங்கே வந்த கருணாகரனோ டைனிங் டேபிளில் உட்கார்ந்தார்.

“உப்பில்லா பண்டம் குப்பைக்குத்தான் போகணும். உங்களுக்கு ஹைபிரஷர் இருக்கு உப்பில்லா சாப்பாடு போடறேன்! என் மகனுக்கு எந்த வித நோயும் அண்டக்கூடாதுனு உப்பும் காரமும் கூட போட்டு தான் செஞ்சு வைக்குறேன்! சமையல் விசயத்துல நீங்க மூக்கை நுழைக்காதீங்க கருணா” என்று எள்ளும் கொள்ளும் வெடிக்க பேசிய மனைவியை முறைத்தவர் “உனக்கெல்லாம் வாய் இல்லைனா நாய் கூட தூக்கிட்டு போகாது டி! காலேஜ்ல ஒர்க் பண்ணுற ஸ்டாப்ஸ் உன் மகன் ரும்க்குள்ள போகவே பயப்படறாங்க தெரியுமா. ஒரு சின்ன தப்பு நடந்திரக்கூடாது! சும்மா தாம் தூம்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்!

அதிலும் வுமன் ஸ்டாப்பை கண்டா உன் மகனுக்கு எட்டிக்காயா கசக்கும் போல வல்லுனு நாயை போல கத்தி வெளியே வரும் போது கண்ணுல கண்ணீரோடதான் அனுப்புவான். கண்ட மேனிக்கு திட்டறதும் இல்லாம அப்பவே அவங்களை வேலையை விட்டு டிஸ்மிஸ் பண்ணிடறான். உன் சீமந்த புத்திரன்.

இன்னும் சமையல ரெண்டு கரண்டி உப்பையும் பத்து பச்சை மிளகாயும் சேர்த்து போடு உன் மகனுக்கு கோபம் அதிகம் வரட்டும். நானும் எங்கப்பாவும் சம்பாதிச்சு கட்டின காலேஜ் பேரை கெடுக்காம இருந்தா சரி… எனக்குனு பத்திய சாப்பாடு செஞ்சு வைச்சிருப்பியே போட்டுத் தொலை சாப்பிட்டு கிளம்பறேன் பொங்கல் செலிபரேஷன்க்கு கிளம்பணும்” என்று மகனை கண்டித்து  முடியாமல் மனைவியிடம் தன் அங்கலாய்ப்பை கொட்டித்தீர்த்தார் கருணாகரன்.

ஆனால் கணவன் இவ்வளவு நேரம் மெனக்கெட்டு பேசியதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல் “மயூரன் கையில காலேஜ் பொறுப்பை ஒப்படைச்சுட்டீங்கல்ல! நீங்க இனி வீட்ல இருந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே! நீங்களும் உங்கப்பாவும் நிர்வாகம் பண்ணிய போது இருந்த ஸ்டுடன்ஸ் எண்ணிக்கையை விட என் மகன் பொறுப்பெடுத்த பிறகு பல மடங்கு பெருக்கி இருக்கான். என் மகனுக்கு எதிலும் பர்ஃபெக்ட்டா இருக்கணும்னு நினைப்பான்! அது உங்க கண்ணுக்கு குத்தமா தெரியுது நான் எதுவும் பண்ண முடியாதுங்க!! நாம என்ன துணிக்கடையா நடத்துறோம் வுமன் ஸ்டாப்கிட்ட சிரிச்சு பேச… முகத்துல சிரிப்போட இருந்தா கோமாளினு நினைச்சு ஏறி மிதிச்சுட்டு போயிருவாங்க! என் மகன் போக்குல விடறதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது. வயசான காலத்துல வீட்டுல இருந்து ரெஸ்ட் எடுக்குற வழிய பாருங்க” என நொடித்து பேசி சப்பாத்தியை தட்டில் வைத்து கருணாகரனுக்கான பத்திய குருமாவை ஊற்றினார் சந்திரமதி.

“எனக்கு இன்னும் தடி போடுற வயசு வரலை. உடம்புல தெம்பு இன்னும் இருக்கு சந்திரா… நான் வியர்வை சிந்தி உழைச்சு உயர்ந்த கல்வி நிறுவனத்துக்கு போக வேண்டாம்னு சொல்ல யாருக்கும் உரிமை நான் கொடுக்கல சரியா.. வீட்டு நிர்வாகத்தை மட்டும் நீ பாரு என் விசயத்துல தலையிடாதே!” என்று குரலை உயர்த்தினார் கருணாகரன்.

கணவரின் குரல் மேலோங்கி வரவும் “நேத்து நைட் மயக்கம் வருது சந்திரானு மாத்திரை போட மறந்துட்டேனு என்கிட்ட சொன்னதா ஞாபகம்… ஒழுங்கா வீம்பு பண்ணாம வயசான காலத்துல புள்ளைங்க கிட்ட பொறுப்பை கொடுத்துட்டு பசங்களுக்கு கல்யாணம் பண்ணுற வழியை பாருங்க” என்ற அழுத்தி கூறியவர் இறுதியாக தான் சொல்வதை கேட்கும்படி செய்து விட்டார் சந்திரமதி. 

கருணாகரன் மனைவியின் அதிகாரப்பேச்சில் அவர் அமைதியானது குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வரக்கூடாதென மட்டுமே! 

“கல்யாணத்துக்கு நான் ரெடி பொண்ணு பாருங்கம்மா” என்ற மந்தகாச புன்னகையுடன் அந்த வீட்டின் கலகலப்பாக இருக்கும் கடைக்குட்டி கதிரவன் கருப்புசட்டையும் பட்டுவேஷ்டி சட்டையுடன் காலேஜில் நடக்கும் பொங்கல் விழாவிற்கு தயாராக வந்து உட்கார்ந்தான்.

சந்திரமதியோ “மூத்தவன் இருக்கும்போது உனக்கு என்னடா கல்யாணத்துக்கு அவசரம்… இந்த வருசமாவது அரியர் இல்லாம படிப்பை முடிடா!”  என்று மகனின் தோளில் அடிவைத்து பூரியை தட்டில் வைத்தார்.

“ஹாய் அத்தை குட்மார்னிங்” என்ற குயில் குரலில் மயில் கழுத்து நிறத்தில் காஞ்சிபுர பட்டுப்புடவையில் மிதமான மேக்கப்பில் சந்திரமதியின் முன்னே வந்து நின்றவள் “அத்தை இந்த பட்டுப்புடவையில எப்படி இருக்கேன்?” என்று தலைசாய்த்து கேட்டாள் சந்திரமதியின் அண்ணன் மகள் யாழினி.

“என் மருமகள் அழகு ரதியாச்சே! இந்த பட்டுப்புடவையை உனக்காக உன் மாமன் மயூரன் புடவை தயாரிக்குற இடத்துலயிருந்து வரவச்சான்டியம்மா! என் மகன் செலக்ஷன் எப்பவும் சோடை போகாது வந்து உட்காரு தங்கமே டிபன் வைக்குறேன்” என்று குளோசப் விளம்பரத்தில் வருவது போல பல்லை காட்டிச் சிரித்தவர் யாழினியின் கையை பிடித்து டைனிங் டேபிளில் உட்கார வைத்து அவளுக்கு பிடித்த இடியாப்பமும் தேங்காய் பாலையும் பரிமாறினார். 

கணவன் வயிறார சாப்பிட்டாரா இல்லையா! இல்லை தன் வயிற்றில் பிறந்த மகனுக்கு இரண்டு பூரியை மட்டும் வைத்தோமே அவனுக்கு மறு சாப்பாடு வைப்போம் என்றெல்லாம் சந்திரமதி கவனிக்கவில்லை. மருமகளின் தட்டையே கவனித்துக்கொண்டிருந்தார். யாழினியிடம் மிதமிஞ்சி கொட்டிக்கிடக்கும் பணம் அவரது கவனிப்பிற்கான காரணம்.

கருணாகரனோ பாதிவயிறுடன் எழுந்துச் சென்று விட்டார். ஆனால் கதிரவனோ “அம்மா இங்க ஒருத்தனுக்கு இரண்டு பூரி மட்டும்தான் வச்சிருக்கீங்க என்னையும் கொஞ்சம் கவனிக்குறீங்களா எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு! யாழினி மேடம் காலேஜ்க்கு லேட்டா போனா யாரும் கேள்வி கேட்கமாட்டாங்கம்மா!” என்று அவன் தாய் யாழினியிடம் காட்டும் பணபாசத்தில் காண்டு ஆகி விட்டான்.

“பத்து மணி காலேஜ்க்கு ஒன்பது மணிக்கே காலுல இறக்கை கட்டிப் பறக்குற! நம்ம காலேஜ்தானே பத்து நிமிசம் தாமதமா போனா யார் உன்னை கேள்வி கேட்கப்போறாங்க!” என மகனுக்கு அதட்டிக்கொண்டே இன்னும் ரெண்டு பூரியை தட்டில் வைத்தார் சந்திரமதி.

“உங்க பெரிய மகன் யார் லேட்டா வந்தாலும் கேட்டுக்கு வெளியே நிக்க வைக்க சொல்லியிருக்காரு இன்க்ளுடிங் என்னையும்தான்… ஏன் உன் அருமை மருமகளும் ஒரு நிமிசம் லேட்டா போனா பர்மிசன் போடச் சொல்லிடுவாரு அண்ணா!. நான் சீக்கிரம் கிளம்பணும் உங்க மருமகளை மட்டும் கவனிக்காம என்னையும் கவனிங்க!” என்று கேட்டே விட்டான் யாழினியை பார்த்துக்கொண்டே.

யாழினியோ “அத்தை கதிர் இன்னிக்கு சீக்கிரம் போகணும்னு அவரப்படறதுக்கு காரணம் பொங்கல் செலிபரேஷன்ல பொண்ணுங்க கலர் கலரா வருவாங்க சைட் அடிக்க பறக்குறாரு இல்ல கதிர்” என்று யாழினி கிண்டல் செய்து சிரித்தாள்.

“இந்த வயசுல சைட் அடிக்காம வேற எந்த வயசுல சைட் அடிக்க முடியும்! நான் ஒண்ணும் உங்களை போல கிடையாது! அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருள்னு தெரிஞ்சும் நீங்க சைட் அடிக்கல சொல்லுங்க” என்றான் கதிர் வெடுக்கென.

யாழினியின் முகம் அப்படியே சுருண்டு போனது. 

“என்ன பேச்சு இது கதிர் உன்னை விட பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசணும்னு தெரியாதா” என்று கணீர் குரலில் கதிரின் பக்கத்தில் அமர்ந்தான் மயூரவாஹனன். அண்ணன் இப்போது சாப்பிட வருவான் என்று தெரிந்திருந்தால் கதிர் சாப்பிட வந்திருக்கவே மாட்டான். அண்ணனை கண்டால் தலைதெறிக்க ஓடிவிடுவான். தனது படிப்பு பற்றி பேசி கதிர் காதில் இரத்தம் வர திட்டு விழுமே என்று பயந்து ஓடிவிடுவான்.

“கதிர் சின்னப் பையன் ஏதோ தெரியாம பேசிட்டான் விடுங்க மாமா!” என்று சாப்பிட்டு எழுந்து விட்டாள் யாழினி.

‘பெரிய தியாகினு நினைப்பு உனக்கு! காலேஜ்க்கு வாம்மா உன்னை கல்லை கொண்டு அடிக்குறேன்’ என்று மனதிற்குள் மட்டுமே யாழினியை திட்டிக்கொண்டவன் “அண்ணா காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்று பம்மிக்கொண்டு மறுவார்த்தை பேசாமல் வேக வேகமாய் சாப்பிட்டு சிங்கில் தட்டை வைத்து கிளம்பி விட்டான் கதிர்.

சந்தனகலர் பட்டுவேஷ்டி சரசரக்க மெரூன் சில்க் சட்டையில் கையில் ரோலக்ஸ் வாட்சுடன் காற்றில் ஆடும் சிகையை சரி செய்த மகனை கண்கொட்டாமல் இரசித்தபடி நின்றிருந்தார்.

“ம்மா என் முகத்தை பார்க்காம டிபன் வைங்க… எனக்காக ஸ்டுடன்ஸ் வெயிட்டிங்” என்றான் கடிகாரத்தை பார்த்துக்கொண்டே.

“இதோ வைக்குறேன்ப்பா” என்றவரோ ஹாட்பாக்ஸில் இருந்த பூரியை தட்டில் வைத்து மகனுக்கு பிடித்த பன்னீர் கிரேவியை ஊற்றினார். இரண்டு பூரியை சாப்பிட்டு “போதும் மா” என்று எழுந்துவிட்டான்.

“என்னப்பா அதுக்குள்ள எழுந்துட்ட” என்று மகன் முகத்தை கவலையாக பார்த்தார் சந்திரமதி.

சாப்பிட்டு முடித்திருந்த யாழினியோ “மாமா இன்னும் ஒரு பூரி வைச்சிக்கோங்க” என்றாள் அக்கறைப்பேச்சுடன்.

“போதும் யாழு காலேஜ்ல எல்லா டிப்பார்ட்மென்ட்லயும் பொங்கல் சாப்பிட சொல்லி கொடுப்பாங்க வேண்டாம்னு மறுக்க முடியாதுல அதான் இரண்டு பூரியோட எழுந்துட்டேன் நைட் வந்து மூக்கு பிடிக்க சாப்பிடறேன் போதுமா” என்று இதழுக்கு வலிக்காமல் சிரித்து சிங்கில் கை கழுவி அறைக்குள் சென்றுவிட்டான். 

“ம்ம் என் மகன் வாய் விட்டு சிரிச்சு பல வருசம் ஆச்சு. அந்த சிறுக்கிய என் மகன் எப்போ பார்த்தானோ அந்த நிமிசத்திலிருந்து  என் மகன் சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமா தேய்பிறை சந்திரன் போல குறைய ஆரம்பிச்சுடுச்சு!” என்று மூக்கை உறிஞ்சினார் சந்திரமதி.

“அத்தை அப்படி சொல்லாதீங்க மாமா முகத்துல சிரிப்பை கொண்டு வரது என் பொறுப்பு போதுமா நீங்கதான் இந்த குடும்பத்து ஆணிவேர் நீங்களே இப்படி நொடிஞ்சு நின்னா எப்படி அத்தை!” என்றாள் சந்திரமதியை சமாதானப்படுத்தும்படி.

“கருணா நானும் என்ற பேத்தியும் சென்னை வந்துட்டோம் ப்பா கொஞ்ச நேரத்துல காலேஜ் ரீச் ஆகிடுவோம்” என்றவரிடம் 

“அப்பா உங்க பேரன் மான்வியை அவன் கண்ணு முன்னே வரவே கூடாதுனு சொல்லியிருக்கான்… நீங்க எந்த தைரியத்துல மான்வியை காலேஜ் அழைச்சிட்டு வரேன்னு சொல்லுறீங்கனு தெரியலை. எனக்கு ஒரு ஒரு நிமிசமும் திக்கு திக்குனு இருக்குப்பா” என்றார் கவலையாக கருணாகரன்.

“டேய் என்ற பேத்தியை காலேஜ்க்குள்ள வரவேண்டாம்னு சொல்றதுக்கு உனக்கே உரிமை கிடையாது. என்னோட பணத்துலதான் இந்த காலேஜ் உருவாச்சு அதை நினைவுல வச்சிக்கோங்க அப்பனும் மகனும்” என்றார் வெள்ளை மீசையை முறுக்கியபடி.

“உங்க பேரனால என் தங்கச்சி பொண்ணு மான்விக்கு எந்த அவமானமும் வந்திடக்கூடாது பார்த்துக்கோங்கப்பா” என்றார் எச்சரிக்கும் விதத்தில் கருணாகரன்.

“என்னோட பேராண்டி கோபம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும்டா! நான் பார்த்துக்குறேன் விடு” என்று போனை வைத்து பெரும்மூச்சு விட்டார் அருணாச்சலம். 

தன்னையே கண்கள் தெறித்து விழும் அளவிற்கு முறைத்து பார்த்துக்கொண்டிருக்கும் பேத்தி மான்வியை பார்த்து சிரித்து “எதுக்கு பேத்தி பொண்ணு இப்படி என்னை முழுங்கி விடுறது போல பார்க்குற! நான் என்ன செய்தாலும் உன்னோட நல்லதுக்குத்தான்” என மான்வியின் கன்னத்தை லேசாய் தட்டிகொடுத்தார்.

“உங்களுக்காக மட்டுமே வந்திருக்கேன் தாத்தா!” என்ற மான்வியோ அருணாச்சலத்தின் தோளில் சாய்ந்து கண்ணைமூடிக்கொண்டாள்.

“இனிமே நான் உன்னை பார்க்கவே கூடாது என் கண்ணு முன்னாடி வந்து நின்னா உன்னை கொன்னுடுவேன்டி” என்று தன் கழுத்தை பிடித்து நாயை விரட்டியடிப்பது போல தன்னை விரட்டியடித்தவன் முன்னே மீண்டும் எப்படி போய் நிற்பது என் சுயத்தை இழந்து அவன் முன்னே போய் நிற்க அவசியமா!

ஆனா தாத்தா நீ என்கூட வந்தாகணும் பேத்திபொண்ணு இந்த தாத்தன் கடைசி காலத்துல உன்கூட இருக்க ஆசைப்படறேன் கிழவனோட ஆசையை நிறைவேத்தி வைக்கணும்னு என் கையை பிடிச்சு அவர் தலைமேல சத்தியம் வாங்கி என்னை நெருப்பு மேல நிக்க வைச்சுட்டாரே! நான் என்ன பண்ணுவேன்! என்று மனதிற்குள் பெரிய போராட்டமே நடத்திக்கொண்டிருந்தாள் மான்வி.

மயூரவாஹனனின் கார் காலேஜ் கேம்பஸிற்குள் நுழைந்ததும் ட்ரம்ஸ் வாத்தியம் அடித்து பபடவென பட்டாசு வெடித்து மயூரனை வரவேற்றனர் மாணவர்கள்.

காரிலிருந்து மயூரன் இறங்கவும் மாடியிலிருந்து பூக்கள் அவன் மீது மலைச் சாரல் போல கொட்டியது. மயூரனின் முகத்தில் விழாக்காலங்களில் மட்டுமே புன்னகையை காண முடியும். லேசாய் பற்கள் தெரிய சிரித்து “தேங்க்ஸ்” என்றான் மாணவர்களை பார்த்து.

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்

நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம்

அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா

இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி

என்ற பாட்டை மாணவர்கள் போட்டு விட்டனர்.  இன்னும் சவுண்ட் அதிகம் பண்ணு அங்கே நின்ற காலேஜ் அட்மின் ஆபிஸர் வெங்கட் பிரபு சைகை காண்பித்தான். 

அங்கே நின்ற மேக்ஸ் டிபார்ட்மென்ட் சைலஜா பக்கத்தில் நின்ற பானுவிடம் “ஏய் சார் கண்ணு காந்தமா இழுக்குது ஹேன்ட்ஸம்மா இருக்கார்டி” என்று கிசுகிசுத்தாள்.

பானுவோ “அடுத்து டிஸ்மிஸ் ஆகப்போறது நீதான்டி” என்றாள் சைலஜாவை முறைத்தபடி சைலஜா வாயை பசைபோட்டு மூடிக்கொண்டாள்.

பொங்கல் விழாவுக்கு வருகை புரிந்த காலேஜ் செகரட்டரி “மயூரவாஹனன் சாரை வருக வருகவென வரவேற்கிறோம்” என்றாள் மைக்கில் காம்பெயரிங் பெண்.

வெங்கட் பிரபுவோ “பொங்கல் வாழ்த்துகள் சார்” என்று மாணவிகள் கையில் வைத்திருந்த மாலையை எடுத்து மயூரன் கழுத்தில் போட்டுவிட்டு மயூரனை அணைத்துக்கொண்டான். 

பாசம் வைக்க! நேசம் வைக்க!

தோழன் உண்டு வாழ வைக்க

அவனைத் தவிர உறவுக்காரன்

யாரும் இங்கில்லே

உள்ளம் மட்டும் நானே

உசிரைக் கூடத்தானே

என் நண்பன் கேட்டா

வாங்கிக்கன்னு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு

நட்பைக்கூட கற்பைப்போல எண்ணுவேன்

சரியாக மாணவர்கள் பாட்டைப்போட்டு “ஓஓஓ” என்று கோரஸ் போடவும் மயூரனின் நினைவுகள் அவனது கல்லூரி காலத்திற்கு ஒரு நிமிடம் சென்று விட்டு வந்தது. அவனது முகத்தில் புன்னகை மறைந்தது.

மயூரனின் புன்னகை மறைவிற்கு காரணமானவள் அவனைத் தேடி வந்துக் கொண்டிருக்கிறாள்.

1 thought on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top