ATM Tamil Romantic Novels

காதல் தானடி என் மீது உனக்கு !-3 (விஷ்ணுப்ரியா )

காதல் தானடி 

    என் மீதுனக்கு?

      [3]

 

 

எந்த வித மாசுமருவும் அற்று பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது மந்தகாசமான நிலவு!! 

அந்நிலவை உணர்ச்சிகளேயற்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கன்னங்களில் மாத்திரம் காய்ந்த கண்ணீர் கோடுகள்!! 

மனதுக்குள் ‘ஏன் இலங்கை வந்து தொலைத்தோம்?’ என்ற போதும் எழுந்த கவலையில் விம்மிய நெஞ்சம், சுகயீனமுற்றிருக்கும் தாயைக் காணக்கிடைக்கவில்லை என்னும் போது பொருமியது. 

பிறந்த போது.. பட்டு ரோஜாக்குவியலின் மென்மையுடன், அந்த வெண்ணிலவைத் தோற்கும் அழகுடன் இருந்தவளுக்கு.. அவள் தந்தை வைத்த பெயர், “மென்னிலா!”

பெயர் மட்டும் தான் நிலா..!!ஆனால் வானத்து நிலவு… சுதந்திரமாய் இரவு வானில் உலாவ யாரும் தடை போட்டதில்லை. 

ஆனால் இந்நிலவுக்குத் தான் எத்தனை கட்டுப்பாடுகள்? தடைகள்? 

அந்நிலவிடம் இருக்கும் சுதந்திரம் இந்நிலவிடம் கொஞ்சம் கூட இல்லையே? 

அறைக்குள்ளேயே அமர்ந்திருந்த போது.. வெளியே அவனுடைய வண்டி வந்து நிற்கும் அரவம் கேட்டது. 

‘நினைத்தது போலவே புலியிடம் அகப்பட்ட மானாய் உன் குகையில் வந்து சிக்கிக் கொண்டேன்.. இப்போது சந்தோஷமா?”என்று கேட்க வேண்டும் என்ற நப்பாசை, அவள் நெஞ்சமெங்கும் எழுந்தது. 

லண்டனில் இருந்து கொழும்பு வந்து, கொழும்பிலிருந்து இரயில் வழியாக மன்னார் வந்த களைப்பு.. அவள் மேனியை இன்னும் இன்னும் பலவீனமாக்கிக் கொண்டிருந்தது. 

இருப்பினும் அதை அசிரத்தை செய்தவளாக, எழுந்த மென்னிலா , தன்னை முப்பொழுதும் நினைவுகளால் சுட்டெரிக்கும் பரிதியைக் காண விரைந்தாள் . 

அவள் எண்ணியது போல வந்திருந்தது என்னமோ பரிதிவேல் வீரனே தான். 

ஆனால் அவன் கால்களில் எப்போதும் தெரியும் அழுத்தம் அன்று இருக்கவில்லை;மாறாக ஒரு தள்ளாட்டமே தெரிந்தது. 

எப்போதும் நிமிர்வுடன் இருக்கும் அவன் தலை.. நேராக வைத்துக் கொள்ள முடியாதபடி தொங்கியே இருந்தது. 

கூடவே அவனுடைய தாய்மாமா வாசு, அவன் விழுந்து விடாத வண்ணம் கைத்தாங்கலாக பிடித்தவாறு உள்ளே வருவது புரிய, வாசு மாமாவின் கண்களை அளவிடுவது போல உற்று நோக்கினாள் மென்னிலா. 

அவளைப் பொறுத்த வரையில் வாசு மாமா இருதயத் துடிப்பும், இரத்தமும், மூளையும் உள்ள மனிதனே அல்ல!! பரிதிவேலின் தலையாட்டி பொம்மை அவர்!! 

அவன்.. ‘கடலில் குதி’ என்றாலும்.. சிறிதும் யோசியாமல் கடலில் குதிக்கும் மனித ரோபோ அவர்!! 

வாசு மாமாவுக்கோ, போலீஸ் ஸ்டேஷனில் அவளைக் கண்டதிலும் பார்க்க, இப்போது நேருக்கு நேர் அவளைப் பார்க்கின்ற போது முகமெல்லாம் அசடுவழியத் தொடங்கியது. 

அவருடைய ஆருயிர் மருமகனின் மனைவி.. இரண்டு வருடங்கள் கழித்து வீடு வந்திருக்கின்ற நேரம், தன் மாப்பிள்ளை மல்லிகைப் பூ, அல்வா என்று வாங்கிக் கொண்டு, மனைவியைக் காண வருவான் என்று அவரும் நினைக்கவில்லை தான். 

இருப்பினும் இப்படி குடித்து விட்டு வராமல் இருந்திருக்கலாம் என்றெண்ணிய வாசு மாமாவுக்கு, மென்னிலாவை விழியெடுத்துப் பார்க்கவே அவமானமாக இருந்தது. 

நிலாவின் சோர்ந்த விழிகள் பரிதிவேல் வீரனை உச்சாதி பாதம் வரை நோக்கியது. 

அவனுடைய காற்றில் ஆடும் நீண்ட கேசம், அவனுடைய பரந்த நெற்றியின் பாதியை மறைத்து முன்னாடி வீழ்ந்திருந்தது. 

அவனுடைய வெள்ளை வெளேரென்ற ஷேர்ட்டின் இரண்டு பட்டன்கள் திறந்து, அதன் வழியாக வியர்வை மணிகள் பூத்த, அவனுடைய உரமேறிய மார்பின் பாகங்கள் இலேசாகத் தெரிந்தன. 

வலுவான கைகள் சுயாதீனமாகத் தொங்கிக் கொண்டிருக்க, பியர் தொட்டியிலேயே மூழ்கி எழுந்து வந்தவன் போல, அவனிடமிருந்து சாராய நாற்றம் குப்பென்று, வெளியே அடித்துக் கொண்டிருந்தது. 

எதையெதையோ அவன் தெளிவற்ற மொழியில் உளறிக் கொண்டே செல்ல, வாசு மாமா தான், 

அவளை நோக்கி, கனிவான குரலில், “யம்மாடி தப்பா நெனைச்சிக்காதம்மா.. எப்போவும் குடிக்க மாட்டான்.. ஒண்ணு ரொம்ப சோகமா இருந்தால் குடிப்பான்.. இல்ல ரொம்ப சந்தோஷமா இருந்தா குடிப்பான். இன்னைக்கு சோகமும், சந்தோஷமும் கலந்து கட்டி வந்ததுனால அதிகமா குடிச்சிட்டான்மா…நீயொண்ணும் கவலைப்படாதேமா”என்று சொல்ல, அவள் இதழில் ஓர் நமுட்டுச் சிரிப்பு தான் பரவியது. 

துரியோதனனின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க ஒரு கர்ணன் இருந்ததைப் போல, இந்த நவீன துரியோதனனுக்கு வாசு மாமா ஒரு கர்ணனே தான்.

அலட்சியமாக மார்புக்கு குறுக்காக கை கட்டிக் கொண்டவள், “நான் எதுக்கு க்கவலைப்படணும்?? க்குடிச்சிட்டு முழுசா வீடு திரும்பி வ்வந்திருக்கறதை நினைச்சா தான்.. க்கவலையா இருக்கு.. இதே க்குடிச்சிட்டு.. வ்வண்டியில் வரும் போது.. மரத்துல.. இல்லைன்னா எதிர்க்க வர்ற வண்டியில மோதியிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்!!” என்றவளை வாசு மாமா, வலி சுமந்த கண்களுடன் பார்த்தார். 

குடித்திருந்தவனுக்கோ, மனைவி பேசியது எல்லாம் கிணற்றில் இருந்து பேசுவது போலக் கேட்க, கடினப்பட்டு தலை தூக்கிப் பார்த்தான் பரிதி. 

முன்னாடி அவனுடைய மனைவி நின்றிருப்பது புரிந்தது அவனுக்கு!! 

அவனது சிவந்த விழிகள்.. மென்னிலாவின் நயனங்களையே ஓரிரு நிமிடங்களாக இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தது. 

நிலவின் நயனங்களில் ஏதோ ஒன்றை.. அந்தத் தகிக்கும் சூரியன் தேடியது. ஆழ ஆழமாகச் சென்று தேடியது. 

அவன் தேடியது அவள் நயனங்களில் இல்லை. அதிருப்தியுடன் திரும்பிய விழிகள் அவன் மாமாவில் தஞ்சம் புகுந்தது. 

அதே தெளிவற்ற போதைக்குரலில், “போடும் மாமா.. அவக்கிட்ட… என்ன பேச்ச்… உ?”என்றவன், தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மெல்ல மாடிப்படியேறினான். 

அவள் வருகையால் அவனுக்குச் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி வருகிறதாமா???

தாத்தாவை அவமானப்படுத்தியதில், சரவணன் மாமாவை இழிவுபடுத்தியதில், அவளை அறைந்ததில் எல்லாவற்றிலும் அவனுக்குச் சந்தோஷம் தானே மிகுந்திருக்க வேண்டும்?? 

துக்கமும் கலந்து கட்டி வந்தது என்பதை,, இந்த வாசு மாமா அவளை நம்பச் சொல்கிறாரா? சரவணன் முன்னிலையில் அவளைக் கேவலப்படுத்தியதில் விளைந்த சந்தோஷமாகத் தானே இருக்கும்?

அவன் அருகாமையில் வரும் போதெல்லாம், அவன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம்.. அவள் தலைமுடியை தானே பிய்த்துக் கொள்ள வேண்டும் போல எரிச்சல் மிகுந்தது அவளுக்கு. 

எதேர்ச்சையாக திம்பியவளின் விழிகளில் பட்டது, அந்தப் பிரம்மாண்டமான ஹாலில் மாட்டப்பட்டுக் கிடந்த ஆறரையடி உயரக் கல்யாணப் புகைப்படம்!! 

பட்டு வேஷ்டி, சட்டையுடன் புதுமாப்பிள்ளைக் கலையுடன் அவனும், ரோஜாப் பூவிதழ்களின் அடர்சிவப்பு நிறத்தில் , தங்க பார்டர் சென்றிருக்கும் அசத்தலான விவாஹாப் பட்டில் அவளும், தன் முத்து மூரல்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த கல்யாணப் புகைப்படம்!!

அவனுடைய வாலிப்பான கையொன்று.. அவளது மென்மையான தோளை கைப்போட்டு அணைத்திருக்க.. அவனது அணைப்பில் பாந்தமாக அடங்கி நின்றிருந்தாள் பெண்!! 

அதைக்கண்டதும்.. அவள் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்கத் துடிக்கும் சில நினைவுகள் கொழுந்து விட்டெரிய, அவன் அருகில் சிரித்துக் கொண்டு நிற்கும் அவளையே அவள் வெறுத்தாள். 

 எங்கிருந்து தான் ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததோ? ஓடிச் சென்று அந்தப் புகைப்படத்தை இரு கைகளாலும் பற்றி.. தன் பலம் கொண்ட மட்டும் இழுத்தாட்டி, ஆட்டிக் கழற்றியவள், சடாரெனத் தூக்கியெறிந்தாள் தரையில்!!

அந்தப் புகைப்படத்தை இதுவரை காலமும் பாதுகாத்து வந்த கண்ணாடிச்சட்டம் சில்லு சில்லாக உடைய, ஹாலே அதிரக் கேட்டது புகைப்படம் விழுந்து நொறுங்கும் ஒலி!!

அந்த அகோர ஒலியில் படியேறிக் கொண்டிருந்தவனின் நடை அப்படியே தடைப்பட்டு நின்றது. 

கண்ணில் இருந்த போதை முற்று முழுதாக அகல பதற்றத்துடன் வெடுக்கெனத் திரும்பியவனின் கண்கள் ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம்… அவளை உச்சாதி பாதம் வரை ஆராய்ந்தது. 

அவளுக்கு ஏதுமில்லை என்பதை அறிந்து சாந்தம் பெற்றவனின் கண்கள்.. அடுத்ததாக பக்கத்திலிருக்கும் விழுந்து கிடந்த புகைப்படத்தில் பதிந்தது. 

அவ்வளவு தான்!! பரிதிவேலின் இதழ்கள் அழுந்த மூடிக் கொண்ட தினுசில், அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக அரக்கத்தனமாக மாறியது. 

அவன் கை முஷ்டியை சட்டென மடக்கிக் கொள்ள, அவனுடைய மாநிறக் கையெங்கிலும்.. விறுவிறுவென ஓடியது பச்சைநிற நரம்புகள். 

அந்த முரடனின் கண்களில் கோபாவேசம் குடிகொள்ள, அவளை நோக்கி அசுரவேகத்தில் வந்தவன் விட்ட பெருமூச்சில், வலிய விலாக்கள் இரண்டும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. 

தன்னெதிரே நிற்கும் கோபம் கொண்ட முரடனை, அசராமல் மறு பார்வை பார்த்தாள் மென்னிலா. 

விழிகளைப் பெரிதாக்கியவனாக அவளைப் பார்த்தவன், “இப்ப்ப… ஏன்டி ஃப்ப்போட்டோவ ஒடச்ச்சே??.. ஏன் ஒடச்ச்சேஏஏ??.. சொல்லூஊஊ..” என்று அவனது வழமையான அதட்டும் தொனியில் அவன் கேட்க, மென்னிலாவின் உடல் உள்ளே துணுக்கம் எய்தத் தொடங்கியது. 

ஆனால் தன் துணுக்கத்தை வெளியே கிஞ்சிற்றேனும் காட்டிக் கொள்ளவேயில்லையே அவள்?

பின்வாங்காமல் அவனைப் பார்த்தவள், தன் உள்ளத்திலிருந்து பேசினாள். தன் நெஞ்சின் அடியாழத்திலிருந்து தான் பேசினாள். 

அவளது வெண்சங்குக் கழுத்து நரம்புகள் புடைத்து வெளியே வர, ஆக்ரோஷமான தொனியில்,“ஏன்னா.. உன்னோட ந்நான் சிரிச்சிட்டு ந்நின்ன.. அந்த.. ந்நொடிகளை.. வ்வெறுக்குறேன்!!.. உன்னை… என் ம்மனசாஆர… வ்வெறுக்குறேஏன்.. உன் க்கையால த்தாலி வாங்கின அந்த மூமெண்டை.. நான் வ்வெறுக்குறேஏஏன்!” என்று சொன்னவளின் சொற்களில், சீற்றம் வெடித்துக் கிளம்ப, 

“ஏஏஏய்!!!” என்று இரைந்து கத்தியவனாக, அவள் கன்னத்தை பதம் பார்க்க உயர்ந்தது அவன் திண்ணிய கை. 

இடையிட்ட வாசு மாமா தான்.. தன் மாப்பிள்ளையின் கையைப் பிடித்து தடுத்திருந்தார். 

அவர் பிடியிலிருந்த தன் கையை விடுவிக்க முயன்று கொண்டே, வாசு மாமாவை கோபம் தணியாமலேயே பார்த்தான் பரிதி. 

கண்களாலேயே ‘வேண்டாம்’ என்பது போல சைகை காட்டிய வாசு மாமா, “மாப்ள வேண்டா.. குடிச்சுப் போட்டு.. நிதானமிழக்காதிரும்.. பெறவு நீ தான் அரியந்தப்படோணும் (கஷ்டப்பட வேண்டி வரும்)…”என்று சொல்ல, மாமாவின் விழிகளையே பார்த்திருந்தவனின் சீற்றம் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது; மெல்லக் கீழிறங்கியது அவன் கை.

சட்டென அவளுடைய மென்மையான கைச்சந்துகளை அழுத்தமாகப் பற்றி ஆட்டியவனாக,

“எ.. என்னய பிரிஞ்சிருந்த இத்தனை வருஷத்துல… இத்தன வருஷத்துல.. ஒருநாள் கூடவா என் நெனப்பு உனக்கு வரல? .. என் கூட வாழ்ந்த வாழ்க்க நெனப்பு வரல..?”என்று கேட்டான் அவன். 

மென்னிலா எதையும் யோசியாமல் பட்டென்று சொன்னாள், அதுவும் ரொம்ப ரொம்ப மிடுக்காகச் சொன்னாள், 

“லண்டன் போனதும்… உன்னையே நினைச்சிட்டிருந்துப்பேன்னு நினைச்சியா? ஒருத்தனுக்கு ஒருத்தின்ற முட்டாள் கலாசாரம்.. நமக்கே தவிர… அவங்களுக்கு கிடையாது.. க்கடலுக்குள்ள ம்மீனா இல்லை??.. அப்புறம் எப்படி உன்னை நினைப்பேன்..?”என்று. 

“கடலுக்குள்ள மீனா இல்லை??” அந்த வசனம்.. அந்த வசனம்..அவள் பிரயோகித்த அந்த வசனம்!! ஆயிரம் கற்பனைகளையும், அர்த்தங்களையும் கொண்டிருக்கும் அந்த நாராசமான வசனம்… அம்முரடனின் ஹிருதயம் வரை சென்று தாக்கியது. 

கொஞ்சம் தணிந்திருந்த அவன் சீற்றம்.. மீண்டும் அவனுள் கிளர்ந்தெழ, இம்முறை ஓங்கிய அவனது திடகாத்திரமான கை, அதன் திடத்தை.. அவளது மிருதுவான கன்னத்தில் காட்டியிருந்தது. 

காலையிலிருந்து… அவளது பட்டுக்கன்னங்கள் அந்தக் கிழவனிடமும், அந்த முரடனிடமும் மாற்றி மாற்றி அடி வாங்கியதில், அவளுடைய கால்கள் தரையில் நில்லாமல் அசைய, நெற்றியைப் பிடித்துக் கொண்டே அவ்விடத்திலேயே முடியாமல் மயங்கிச்சரிந்தாள் அந்த அபலைப்பெண்!!

மயங்கியவளைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்ற சுயநினைவு கூட அவனிடம் இல்லாத வண்ணம், அவன் காதுகளுக்குள், ‘கடலுக்குள்ள மீனா இல்லை??”என்ற வசனம், அவனை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. 

பக்கத்தில் நின்ற வாசு மாமா தான்.. மென்னிலா தரையில் விழுந்து விடாத வண்ணம், இறுக்கிப் பிடித்துக் கொண்டபடியே பதற்றத்துடன் தன் மாப்பிள்ளையைப் பார்த்து, “என்ன மாப்ள.. இப்டி பண்ணிப் போட்ட?”என்று நொந்து கொண்டவராக, அவளை இரு கைகளிலும் தாங்கிக் கொண்டு அவள் அறைக்குச் சென்றவர், மென்மையாக மஞ்சத்தில் கிடத்தலானார். 

“கடலுக்குள்ள மீனா இல்ல??” அந்த வார்த்தைகள் அவனுள் உறங்கிக் கிடக்கும்.. ஓர் அரக்கனை மானசீகமாக எழுப்பி விட.. மனைவிக்கு என்னானது என்று சென்று பார்க்க வேண்டும் என்று கூடத் தோன்றவேயில்லை அந்த அரக்கனுக்கு!! 

அடித்த போதை முழுவதும் இறங்கியது போல இருக்க, தன் பழைய கம்பீரத்துடன், சிங்கத்தின் தோரணையுடன்.. சினம் குறையாமல் நின்றிருந்தவனின் விழிகள் உடைந்து கிடந்த புகைப்படத்தில் பதிந்தது. 

அவன் கை வளைவில், பாந்தமாக அடங்கி நின்ற மென்னிலாவின் சிரித்த முகம்.. பரிதிவேல் வீரனின் கருத்தைக் கவர்ந்தது. 

கோபத்தின் காரணமாக.. புருவ மத்தியில் விழுந்திருந்த யோசனை முடிச்சு… அவளது சிரித்த முகத்தைக் காணவும் மெல்ல மெல்ல அவிழ்ந்தது. அவன் மனத்தில் விழுந்த முடிச்சைப் போலவே. 

அவளுடைய மதிவதனம்.. அந்த சிரித்த முகம்… அந்த முரடனைக் கட்டிப்போட… அவனது கால்கள் அனிச்சைச் செயலாய்.. அவளது அறை நோக்கி நகர்ந்தது. 

இருள் அடர்ந்த இருட்டு அறையில்.. சாளரம் தாண்டி மதியின் தண்ணொளி வீசிக் கொண்டிருந்தது. 

மென்னிலாவோ.. தகிக்கும் சூரியன் தன்னை நாடி வந்தது கூட தெரியாமல்.. மூர்ச்சையாகிப் போய் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றிருந்தாள். 

அவளுடைய பருத்த தனங்கள்.. ஒரு சீராக ஏறி இறங்கிக் கொண்டிருக்க, உலகமேயறியாது.. துயின்று கொண்டிருந்தவளின்.. வீங்கிப் போனக் கன்னங்களில்..அவனது சிவந்த விரல் தடங்கள் தெரிய… அதையே இருட்டில்.. இமைக்கவேயாது பார்த்துக் கொண்டிருந்தான் தகிக்கும் சூரியன். 

அவனுடைய மனம் முழுவதும் தகிக்கும் வெம்மையில்.. வெந்து தணிந்து கொண்டேயிருந்தது. 

***

பரிதிவேல் வீரன்!! அந்த மன்னார் மாவட்டத்திலேயே யாவராலும் அறியப்படக்கூடிய மிகப்பெரிய செல்வந்தன்!! 

மன்னார் மாவட்டத்தில் உள்ள ‘மாந்தை’ என்னும் இடத்தில் இருக்கும், எந்தப் பங்குதாரருமின்றி தனக்கே தனக்கென்று சொந்தமான ஓர் உப்பளத் தொழிற்சாலையை வைத்திருப்பவன்!! 

“மாந்தை”!!. அப்பரும், சம்பந்தரும் தன் திருப்பதிகங்களில் பாடிய அதே “மாதோட்டம்!!” அழகு கொழிக்கும் மாந்தை என்னும் மாதோட்டம். 

நாடு முழுவதும் தன் உப்பளத்திலிருந்து.. உப்பு விநியோகத்திலிருந்து கிடைக்கும் வருவாய் ஒருபுறமிருக்க,

 நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் அவன் வைத்திருக்கும் பனந்தோப்பிலிருந்து உற்பத்தியாகும் பனம்பொருட்கள் மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு புறமிருக்க, 

அவனது சொந்த இறால் பண்ணை மூலம் கிடைக்கும் வருவாய் இன்னொரு புறமிருக்க,

அவன் வைத்திருக்கும் வயல் காணிகளில் விவசாயம் கொழிக்க.. 

இது போதாதென்று தனியார் பேருந்துகள் வேறு.. “பரிதி டிராவல்ஸ்”என்று நாடு முழுவதும் மன்னாரிலிருந்து.. ஓடுவதால் கிடைக்கும் வருமானம் மற்றுமொருபுறமிருக்க,

எப்பக்கம் திரும்பினும் செல்வம் கொழிக்கும் வாலிப வர்த்தகன் அவன்!! 

அவனுக்கு கீழே மாத்திரம் ஆறு இலட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிய.. மன்னார் மாவட்டத்தில் யார் ஆளுங்கட்சியாகப் போவது என்பதைத் தீர்மானிக்கும் “கிங் மேக்கராகக்” கூட இருந்தான் பரிதிவேல் வீரன்!! 

அதனாலேயே என்னவோ.. சட்டவிரோதமாக அவன் பல காரியங்கள் செய்து வந்த போதும் சரி.. ஊரில் அடாவடித்தனம், ரகளை செய்யும் போதும் சரி.. சட்டம் அவன் மீது பாயாமல்.. அவனைக்கண்டு பம்மத்தான் செய்தது. 

என்ன தான் இராத்திரி குடித்து விட்டு அடாவடி, அலப்பறை செய்திருந்தாலும் கூட.. அடுத்த நாள் காலை.. தன் மாந்தை உப்பளத்திற்கு செல்லத் தயாரானவன் முகம்.. அசல் சூரியனின் முகம் போலவே பிரகாசமாக இருந்தது. 

வெள்ளை வேஷ்டி, சட்டை என்பது அவன் உடுத்தும் உடையாக இருப்பினும், அதில் இருந்த அப்பழுக்கில்லாத நேர்த்தி, அவன் ஆழ்மனதுக்குள் இருக்கும் கசடுகளை வெளியே தெரியாமல் மறைத்திருந்தது. 

நெற்றியில் அவன் தீட்டியிருந்த விபூதிக்கீற்று.. அவன் முகத்தை இன்னும் இன்னும் சாந்தமாகக் காட்டிக் கொண்டிருந்தது. 

போர்ட்டிகோவில் வரிசையாக நின்றிருந்தது நவீன ரக கார்கள். ஆனால் அவன் வசிக்கும் ‘சிறுத்தோட்ட’க் கிராமத்தின் வீதியின் தரம் காரணமாக.. அநேகமாக அவன் ஜீப்பில் தான் பயணிப்பதுண்டு. 

‘புகைப்படத்தின் கண்ணாடிச்சட்டத்தை என் கையாலேயே செய்து வருகிறேன்’பேர்வழி என்று வீட்டை விட்டுக் கிளம்பிய, அவனுடைய தாய்மாமன் வாசுவை இன்னும் காணாததால், தன் முரட்டு மணிக்கட்டில் அடைக்கலமாகியிருந்த, கைக்கடிகாரத்தில் மணி பார்த்த வண்ணமே..வீட்டு வாசலின் இறுதிப் படியில் நின்றிருந்தான் பரிதி. 

இன்னும் கண்விழித்து எழாத அவளைச் சென்று பார்க்க வேண்டும் என்று மனம் கிடந்து தவித்தாலும், நேற்றிரவு அவள் பேசிய பேச்சுக்களின் தாக்கம் மீண்டும் அவனை ஆக்ரோஷமாக மாற்றும் என்று கருதியவன்.. அவளைச் சென்று காண வேண்டும் என்றெழுந்த பேராவலை.. வெறியைக் கடினப்பட்டு அடக்கிக் கொண்டான். 

வீட்டிலேயே இருந்தால்… அவள் தன் மீது சிந்தும் வெறுப்பான அமிலப்பார்வை.. தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று விடும் என்றஞ்சித் தான்.. அதிகாலையிலேயே பயணமாக எத்தனித்தான் அவன். 

ஆனால் என்ன? எப்போதும் அவன் செல்லும் இடமெல்லாம் கூட வரும்.. அவன் மாமாவைத் தான் காணவில்லை!! 

விடிந்ததும்.. அவன் வீட்டு முற்றம் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. 

ஒருபக்கத்தில் மாட்டுக் கொட்டிலில் கிடந்த.. மாடுகளைக் கழுவுவதும், தீனி போடுவதுமாக இருந்தனர் பணியாளர்கள். 

இன்னொரு பக்கத்தில்.. அந்தப் பாரிய தோட்டத்தைப் பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது, சுத்தம் செய்வது, பெருக்குவது என்று தீவிரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் இன்னும் சில பணியாட்கள். 

சாஞ்சித்தூபி போல அசராமல் நின்றிருந்தவனின் காதுகளில், அப்போது தான் விழுந்தது யாரோ ஒரு பெண்மணி கதறும் குரல்!! 

சத்தம் வந்த திசையான வீட்டு நுழைவாயில் திசையைக் கூர்ந்து பார்த்த போது, நாற்பது, நாற்பத்தைந்து வயது கொள்ளத்தக்க பெண்மணி, கந்தலான சேலையுடனும்.. நன்றாகவே வரண்டு போன இதழ்களுடனும், ஜீவன் இழந்து போன விழிகளுடனும்.. நின்றிருப்பதைக் கண்டான் பரிதிவேல் வீரன்!! 

அவளை உள்ளே விடாத பணியாளர்கள்.. ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பற்றி வெளியே இழுத்துச் செல்ல முயற்சிக்க, அவற்றுக்கெல்லாம் அடங்கிப் போகாமல் திமிறிக் கொண்டே கத்தலானாள் அந்தப் பெண்மணி. 

“என்னய வ்வி.. விடுங்கஅஅஅ.. ந்நான் அவ்.. வ்வன ப்பார்க்கோணும்.. ந்நான் அவ்.. வ்வன ப்பார்க்கோணும்!!”என்று பைத்தியம் பிடித்தவர் போல, அந்தப் பெண்மணி கத்திக் கொண்டே உள்ளே நுழைய முனைய, அதற்கு விடாமல், தடுத்துக் கொண்டிருந்தனர் பணியாட்கள். 

“அதெல்லாம் முடியாதும்மா.. ஐயா பார்த்துப் போட்டு நமக்கு ஏசறதுக்குள்ள போயிடுங்கமா..”என்று ஒரு சில பணியாட்கள், அந்தப்பெண்மணிக்கு இலவச ஆலோசனை வேறு வழங்க, அவரோ தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டிக் கொண்டு, உள்ளே முன்னேறிக் கொண்டே போனார். 

அந்தப் பெண்மணியின் உடலில் இருந்து தீப்பிழம்புகள் வெளிவருவது போல உஷ்ணம் தகிப்பதையும், அவரது உடல் நடுங்குவதையும்.. அவரைப் பற்றியிருந்த பணியாளர்கள் உணர்ந்து கொண்டாலும் கூட, அவரது குரல் மட்டும் உச்சஸ்தாயியில் வெளிவந்து கொண்டேயிருந்தது. 

“இல்ல!!! ம்முடியாதூஊஊ… ந்நான் அவ்.. வ்வனப் பார்த்துப் போட்டு தான் போவேஏஏன்!!”என்று கத்திய.. பலவீனமான பெண்ணை தடுத்து நிறுத்த முடியாமல் திண்டாடிப் போயினர் வேலையாட்கள். 

பரிதிவேல் வீரனின் கூறிய விழிகள்.. வந்திருப்பது யாரென்பதைக் கண்டு கொண்டதனால், அவனுடைய ஒற்றைப் புருவம் மெல்ல மேலுயர்ந்தது. 

போர்ட்டிகோவில் நின்ற வண்ணமே, கட்டளையிடும் கம்பீரமான குரலில், “முருகாஆஆ!!”என்றவன் அழைத்தது தான் தாமதம். 

அவன் குரலில் அச்சத்தோடு பணிவும் எட்டிப் பார்க்க, கூட்டத்தி ஒருவன் மட்டும் அந்தப் பெண்மணியிலிருந்து பிரிந்து வந்து, ஏற்றிக்கட்டில லுங்கியை இறக்கி, பணிவாக கை கட்டிய வண்ணம், “ஐயா?..”என்றான்.

செருக்கும், மிடுக்குமே உருவாகக் கொண்ட பரிதிவேல் வீரன், தன் கட்டளையை எதிர்பார்த்து நிற்கும் முருகனை நோக்கி, தன் அழுந்த மூடிய இதழ்கள் திறந்து ஒரு வார்த்தையேனும் உதிர்க்கவில்லை. 

மாறாக காற்றில் கையாட்டி, “ம்?” என்று மட்டும் அந்தப் பெண்மணியை விடுமாறு சைகை மாத்திரம் தான் செய்தான்.

அந்தப் பெண்மணியைத் தடுத்து நிறுத்திய அத்தனை கரங்களும், சட்டென்று அவரிலிருந்து விலக, அந்தப் பெண்மணியும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல, விடுவிடுவென்று.. பரிதிவேலினை நோக்கித் தான் பாய்ந்து வந்தார். 

அவர் கண்களும் சரி.. உடலும் சரி ஒருங்கே சோர்ந்து போயிருந்ததை அவதானித்தவனுக்கு, அருகாமையில் வந்த அந்தப் பெண்மணியின் உடலில் இருந்து வந்த உஷ்ண ஜூவாலை அவனையும் தாக்குவது போல இருந்தது. 

அவனோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், தன் முதுகுக்குப் பின் கை கட்டியவனாக, இறுமாப்புப் பார்வை பார்த்த வண்ணம், விட்டத்தை வெறித்துப் பார்த்த படி நிற்க, வந்த பெண்மணியோ.. பரிதிவேல் முன் இரு கை கூப்பி, ஓர் பிச்சைக்காரியைப் போல நின்றார். 

அவர் கண்களில் கோபம் மலையளவு மிகுந்திருந்தாலும், இந்த ராவணனிடம் அடைப்பட்டுக் கிடக்கும், தன் மகள் சீதைக்காக தணிந்து பேச வேண்டிய நிலை அந்தப் பெண்மணிக்கு. 

ஆம், பரிதி முன்னிலையில் கை கூப்பி நின்றிருந்தது, உள்ளே இருந்த மென்னிலாவின் தாயாரே தான்!! 

படுத்த படுக்கையாகிக் கிடந்தவருக்கு.. வலு தந்ததே, ‘மென்னிலா தன்னைப் பார்க்க வந்து விட்டாள்’ என்ற நற்செய்தி தான்!! 

கூடவே.. மகளை இந்த இராவணன் வந்து அழைத்துச் சென்றதும் துர்ச்செய்தியாகக் கிடைக்க, உடல் சுகயீனத்தைத் தூக்கிப் போட்டு விட்டு…. தன் மகளுக்காக.. அவன் வீட்டு வாசற்படியேறி வந்திருந்தார் அவர். 

வலியவன் தன் பக்கம் தர்மமே இல்லாத போதும் குரல் உயர்த்தலாம்; உலகம் கேட்கும்!! 

ஆனால் மெலியவன்?? அவன் எப்போதும் பணிந்து தானே போக வேண்டும்?? அது தானே உலக நியதியும் கூட?? 

மென்னிலாவின் தாயாரும் கூட.. பணிந்து போக வேண்டிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருந்தார். 

குரல் நடுங்க, “ப்ப.. ரிதி.. உன்னயக் கெஞ்.. சிக் கேட்டுகிடுறேன் பரிதி.. எம் பொண்ண விட்டு.. ருப்பா.. உனக்கு புண்.. ணியமா போவும்.. எம்பொண்ண தயவு செய்து விட்டுடுப்பா.. அவ ஒரு கொ.. கொழந்தய்.. யா…. அவ.. ஒரு.. வாட்டி பட்டதெ.. ல்லாம் போதும.. ய்யா.. இப்பவா.. வது எம் பொண்ண வாழ விடுய்.. யா”என்று கெஞ்சிக் கண்ணீர் விட, கல்லாகவே சமைந்து நின்றான் அக் கல்நெஞ்சுக்காரன்!! 

சுற்றி நின்ற பணியாளர்கள் அனைவரது கண்களும் கலங்க.. தொண்டை அடைக்க.. அந்தப் பெண்மணியை பரிதாபமாகப் பார்க்க, அந்த அரக்கன் மட்டும் எதுவுமே நடவாதது போல நின்றிருந்தான். 

அந்தத் தாயின் அழுகை இறுதி வரை.. அவனது மூர்க்கத்தனமான இதயத்தை மாற்றவேயில்லை;அந்தக் கண்ணீர் அவனுள் பரிதாபத்தை உண்டு பண்ணவேயில்லை. 

கடினமான முரட்டுக் குரலில், “உங்க பொண்ண எங்கேயும் அனுப்புறதா இல்ல.. தயவு செய்து போயிடுங்க.”என்று சொல்ல, அவரது கண்ணீர் பட்டென்று நின்றது. 

“இல்லஅஅஅஅ!!!! ம்முடியாதூஊஊ..!!- பிடிவாதமான குரலில், வாய் விட்டுக் கத்தினார் மென்னிலாவின் தாயார்!! 

படுத்த படுக்கையாகிக் கிடக்கும் இந்தப் பெண்மணியிடம் இத்தனை சக்தியா?? தாய்ப்பாசம் இத்தகையதொரு பிணைப்பைக் கொடுக்குமா?? 

அவன் எதுவுமே நடவாதது போல, முதுகுக்குப் பின் கட்டிய கையை எடுக்காமல் விறைப்புப் பேர்வழியாக நிற்க, அவனுடைய சட்டைக்காலரைக் கொத்தாகப் பற்றிக் கொண்டார் மென்னிலாவின் தாய் “சிவகாமியம்மாள்”. 

அவரது சிவந்த கீழிமையிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிய, இதழ்கள் அஷ்டகோணலாக வளைந்தது. 

ஆனால் அவர் இதழ்களின் கூப்பாடு மட்டும் ஓயவேயில்லை. 

அவர் விழிகள் அச்சத்தில் மெல்ல மெல்ல விரிய, “என் பொண்ண உன்னய ம்மாதிரி அயோக்கியன்ட்ட வ்விட்டுப் ப்போட்டு.. நான் போவ மாட்டேன்.. நான் ப்போவ மாட்டேன்..!! உன் க்கிட்டேயிருந்தா.. என் ப்பொண்ண நீ கொன்னுப் போடுவ!! ந்நீ கொன்னுப் ப்போடுவ..!!”என்று கத்திய படி அவர் கதற, அவரின் கைகள் தன் மீது பட்டதே தீது என்று கொண்டவன், 

தன் சட்டைக்காலரில் இருந்து வலுக்கட்டாயமாக கையை எடுத்து உதறி விட்டான். 

அந்தப் பேதைத் தாயின் நெஞ்சு முழுவதும், மகளை இங்கேயிருந்து அழைத்துச் சென்றேயாக வேண்டும் என்ற வெறி நாடி, நரம்பெங்கும் பரவி புது சக்தியைக் கொடுக்க, 

“எங்க எம் பொண்ணூஊஊ?? .. எங்க எம் பொண்ணூஊஊ??..”என்று தொண்டைக் கிழியக் கத்திக் கொண்டு, அனைவரையும் மீறி உள்ளே நுழைய முயல, காவலாளர்களும் சட்டென முன்வந்து, சிவகாமியம்மாளை உள்ளே செல்ல விடாது தடுக்க, அவரது தொனி இன்னும் அதிகமானது.

 “விடுங்கடாஆஆ.. எம் பொண்ண.. நான் கூட்டி.. ட்டுப் போயிட்றேன்.. விடுங்.. கடாஆஆ” என்று கத்தியவர், காவலாளர்கள் பிடித்து போர்ட்டிகோவில் தள்ள, வீட்டைப் பார்த்துக் கொண்டே உச்சஸ்தாயியில் தன் மகளை அழைக்கலானார். 

“நிலாஆஆஆஆ!!! என் ராசாஆஆத்தீஈஈஈ!! .. நிலாஆஆஆஆ..” என்று அடிவயிற்றில் இருந்து குரலெழுப்பி அவர் கத்த, தாயின் அழைப்பில்.. உள்ளே இதுவரை நேரம் துயின்று கொண்டிருந்தவளுக்கு விழிப்பு தட்டியது.

சரிவரத் தூக்கம் தெளியாத கண்களுடன் எழுந்தவளுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது. தாயின் குரல் புது உற்சாகம் தர, “அம்மா” என்று முணுமுணுத்தவளாக ஓடிச் சென்று, தன்னுடைய அறைக்கதவைத் திறக்க முற்பட, அது வெளிப்பக்கமாக பூட்டுப் போட்டிருந்ததை அப்போது தான் உணர்ந்தாள். 

தாயின் குரல்.. அவள் லண்டனிலிருந்து யாரைப் பார்க்க ஓடோடி வந்தாளோ.. அவர் குரல்!! நாடி, நரம்பெங்கிலும்… தாய்ப்பாசம் கிளர்ந்தெழ, 

கதவைத் தட்டித் தட்டி, “ப்ளீஈஈஈஸ் கதவைத் திறங்க… நான் வ்வெளிய்யேஏஏ ப்போகணும்… பரிதீஈஈஈ.. பரிதீஈஈஈ.. என்னை வெளியே விடூஊஊ..நான்..என் அம்மாவைப் பார்க்கணூஊம்!! பரிதீஈஈஈ.. பரிதீஈஈஈ!! ”என்று ஆர்ப்பாட்டம் செய்ய, எல்லாருக்குமே தாய் மகள் இருவரின் தவிப்பு.. அவர் தம் முகங்களை வாடிப் போகச் செய்தது. 

ஆனால் யாருக்குமே.. பரிதிவேல் வீரனின் ஆணவமான கண்ணசைவுக் கட்டளையைத் தாண்டி, கதவைத் திறந்து விடும் தைரியம் வரவேயில்லை!! 

கதவைத் தட்டித் தட்டி சோர்ந்தவள், அறையை விட்டு வெளியேற வழிகள் கிடைக்காதா என்று தேடிப் பார்த்தவளுக்கு, கம்பிகள் கொண்டு அடைக்கப்பட்ட ஜன்னலே தென்பட, 

ஜன்னலோரம் ஓடி வந்து, “அம்மாஆஆஆ!! அம்மாஆஆஆ”என்று உயிர் உருக்கும் குரலில் கத்தினாள் மென்னிலா. 

இதுவரை கேட்காத மகளின் குரல் கேட்ட தாய்க்கு இன்னும் உடல் பலம் சேர்ந்தாற் போன்றிருக்க, மென்னிலாவைக் கண்டு விடும் நோக்கில், சத்தம் வந்த திசையை நோக்கி ஓடப்பார்த்தவரை பற்றிப் பிடித்துக் கொண்டனர் பணியாளர்கள். 

அவர்களின் பிடியிலிருந்து நழுவ, முயன்று கொண்டே, “ராசாத்தீஈஈஈ.. நிலாஆஆஆ.. எஞ்சாமீஈஈஈ!!!”என்று அழுகையுடனேயே.. அவர் கதற, இன்னும் சில பணியாட்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்

அவள் நின்ற ஜன்னல் வழியே புலப்படாத தாயை நோக்கி, தாயைத் தேடி அழும் குழந்தை போல கேவிக் கேவி அழுதவளாக, “அம்மாஆஆஆ… எப்படியா.. வது என்னை இவன் கிட்டே.. யிருந்து கூட்டி.. ட்டுப் போயிடுங்.. கம்மாஆஆஆ.. விட்டுட்டுப் போயிராதீ… ங்கமாஆஆ..” என்று கத்தத் தாயின் ஈரக்குலை நடுங்கியது. 

தாய்-மகள் இருவரினதும் பாச நாடகம் கண்ணுற்றது போதும் என்று கருதினானோ என்னவோ? பரிதி தன் இதர வேலையாட்களை நோக்கி, கண்ணசைத்தது மட்டும் தான் தாமதம், தன் எஜமானரின் கட்டளையை புரிந்து கொண்டாற் போன்று, ஒன்று திரண்டு வந்து சிவகாமியம்மாளைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு செல்ல முனைந்தனர். 

அந்தக் கயவர்கள்.. அந்த வயசான பெண்மணியை இழுத்துக் கொண்டு போய், வீதியில் தள்ள, சமநிலை தடுமாறி.. பலவீனமான உடலுடன் குப்புற விழுந்தார் அவர். 

முழங்கை, கால் எங்கும் சிராய்ந்து இரத்தம் வந்து காந்தினாலும் கூட, அதை விடக் காந்தியது பெற்ற தாயுள்ளம். 

உள்ளே போர்ட்டிகோவில் முன்பிருந்த இடத்தை விட்டும் இம்மியளவும் அசையாத அவ்வீவிரக்கமேயற்ற கொடூரன்.. அவரைப் பார்த்துக் கொண்டே இருக்க, 

அகோரமான விழிகளுடன் எழுந்து கொண்டவர், வீதியில் கிடந்த மண்ணை அள்ளி, அவனிருக்கும் பக்கமாக வீசி எறிந்து, “ந்நீஈஈ ந்.. நல்லாவே இர்.. ருக்க ம்மாட்ட.. ந்நாசமாஆஆ.. ப்போயிர்வ.. ந்நாசமாஆஆ.. ப்போயிர்வ.. அழிஞ்சு ப்போயிர்வ்வடாஆ!!!”என்று கத்த அதையெல்லாம் சட்டை செய்யாதவன், தன் மாமனுக்காகக் காத்திருக்காமல், ஜீப்பில் ஏறி.. அதிவேகமாக வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றான். 

நிலாவுக்கு தாய் சென்ற விஷயம் தெரியக் கூட வெகுநாழியானது. 

அது முன்கூட்டியே தெரியாமல்.. “அம்மாஆஆஆ… எப்படியா.. வது என்னை இவன் கிட்டே.. யிருந்து கூட்டி.. ட்டுப் போயிடுங்.. கம்மாஆஆஆ.. விட்டுட்டுப் போயிராதீ… ங்கமாஆஆ..”என்று தொண்டை வரண்டு போகுமட்டும் கத்திக் கொண்டேயிருந்தாள் அந்த அபலைப்பெண்!! 

இறுதியில் ரொம்பவும் முடியாமல் போய்.. சுவரைப் பிடித்துக் கொண்டே சாய்ந்தவளின் கண்ணிமைகள் காய்ந்து போயிருந்தன;இதழ்கள் வரட்சியில் வெடித்துப் போயிருந்தன. 

அப்போதும் ஓயாமல், “அம்மா.. அம்மா.. அம்மா..”முணுமுணுத்துக் கொண்டேயிருந்தவளுக்கு, நெஞ்சைப் பிசைந்து கொண்டேயிருந்தது. 

அவள் அமர்ந்திருந்த இடம்.. புதைகுழியாகத் தோன்றுவது போல இருக்க… பரந்த நான்கு சுவர்கள் அவளை முட்டுவது போலவே இருந்து மூச்சை அடைக்கலாயிற்று. 

அவள்.. மென்னிலா இருந்த இடத்தை விட்டும் அசையவேயில்லை!! அழுதாள்… கண்ணீர்ச்சுரப்பிகளின் சுரப்பிகள் தீர்ந்து.. அவை வேலை நிறுத்தம் செய்யும் வரை அழுதாள் ; ஓயாது அழுது கொண்டேயிருந்தாள். 

கீழ்வானில் உதித்திருந்த சூரியன்.. நடுவானை அடைந்து.. கொஞ்சம் கொஞ்சமாக மேற்குத் திசையில் சாய்ந்து, இரவும் சூழ்ந்து வானில் நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்த அந்தக் கணப்பொழுது!! 

அழுது அழுது வீங்கிப் போன கன்னங்களுடன், விம்மி விம்மி மூச்சு விட்டுக் கொண்டிருந்த போது, அவளுடைய அறைக்கதவு படாரெனத் திறக்கப்பட்டது. 

வாசல் கதவு பக்கம் விழிகளை ஓட்டியவளின் முன்னே நின்றிருந்தார் பரிதிவேல் வீரனின் தாய்மாமா “வாசு”. 

அவரது வாடிப் போன முகம்… மென்னிலாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது போல ஒரு பகீர் உணர்வைத் தோற்றுவிக்க, 

சோர்ந்து போயிருந்த கால்களில் பலத்தைத் திரட்டிக் கொண்டெழுந்தவள், முதலில் கேட்ட கேள்வி “என்னாச்சு?”என்பது தான். 

வாசு மாமாவுக்கு.. வார்த்தைகள் வெளிவர மறுத்தது. ஆனால் அவர் முகம் மட்டும் ஏதோ அசம்பாவிதம் நடந்தேறியது போல, வாடிக் கறுத்துப் போயிருந்தது. 

அவரது முகத்தைக் கண்டதும் நெஞ்சைப் பிசைவதைப் போன்றிருந்த உணர்வு அதிகமாக, வாசு மாமாவின் கைகளைப் பற்றிக் கொண்டவள், “என்னாஆஆச்சுன்னு கேட்குறேஏஏன்ல?”என்று கீச்சுக் குரலில் கத்திக் கேட்க, அதற்கு மேலும் தாங்க மாட்டாமல்.. உண்மை அத்தனையையும் சொல்லவும், ஒரு நிமிஷம் திகைப்பூண்டை மிதித்தாற் போன்று நின்று விட்டாள் மென்னிலா. 

இதனால் தான் ஏதோ அசம்பாவிதம் நேரப்போவது, நெஞ்சைப் பிசைவது போன்ற ஓர் வலி நெஞ்சில் எழுந்தது? 

இதனால் தானா.. பரந்த அறையும், நிறைந்த காற்றோட்டமும் இருந்தும் மூச்சை முட்டுவது போல ஓர் தோற்றப்பாடு இருந்தது?? 

இதனால் தானா யாரோ சம்மட்டி கொண்டு.. நெஞ்சைப் பிளப்பது போல வலித்தது?? 

இதனால் தானா.. வாசு மாமா உள்ளே நுழையவும், அவளையும் மீறி அவளது உதடுகள், “என்னாச்சு?”என்று கேட்டது?? 

அவள் ஓரிரு நாழிகைகள் விட்டத்தை முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவள் மீண்டும் பிரக்ஞை பெற்ற போது, அவள் எதிரே நின்ற யாரையும் மதிக்கவில்லை. அவள் கால்கள் தன் தாயைப் பார்த்தேயாக வேண்டும் என்ற வெறியில்.. அசுர வேகமெடுத்தது. 

யாருக்கும் காத்திராமல்.. புயல் வேகத்தில் அந்த மாபெரும் நடுக்கூடத்தையும், முற்றத்தையும் கடந்து ஓடித் தெருவை அடைந்தவளின் வெற்றுக் கால்களில் கல்லு மண்ணு குத்திப்பட்டாலும் கூட…அவளின் ஓட்டம் மட்டும் நிற்கவேயில்லை. 

அவள் கால்கள் இறுதியாக ஓய்வடைந்து நின்றது சிறுத்தோட்ட மக்களின் மயானத்தில். 

அங்கிருந்த அத்தனை சவக்கிடங்குகளும் அமைதியாக இருக்க.. ஒன்று மட்டும் அவள் மனம் போலவே ஆக்ரோஷத்துடன் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. 

அது அவள் தாய்!! அது தாய்க்கு வைக்கப்பட்ட கொள்ளி!! அவளது முறைமாமன் சரவணன் தான் வைத்திருக்க வேண்டும். 

ஏன் தாத்தாவும், சரவணனும் அவளிடம் தகவல் சொல்லவில்லை? அவள் வரவே மாட்டாள் என்று முடிவே செய்து கொண்டனரா? இல்லை தகவல் அனுப்பி.. இந்தக் கொடூரன் அவள் காதுகளில் அதை எட்ட விடாமல் செய்தானா?? 

“நிலாஆஆ.. ராசாஆத்தீஈஈ… எஞ்சாமீஈஈ!!”என்ற தாயின் குரல் அசரீரியாக ஒலிப்பது போல இருக்க, அடி நெஞ்சிலிருந்து ஊன் உருக, உயிர்க்கரைய “அம்மாஹ்…கடை..சி வரை.. உன்னைப் பார்க்க.. எனக்குக் கொடுத்து வைக்கலையேமாஆ” என்று முணுமுணுத்தவள்.. அழுதிருப்பாள் என்று நீங்கள் கணித்திருப்பின் அது தவறு!! 

இல்லை .. அவள் அழவேயில்லை. அவள் குரல் தழுதழுத்திருந்தது. ஆனால் அவளுடைய கண்களில் இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர்க் கூட வழியவில்லை; கண்ணீர் வராமல் கூட.. இதழ்கள் வளைத்து அழவில்லை அவள். 

கொழுந்து விட்டெரிந்த அனலின் வெம்மை அவள் உடலில் பட்டுத் தகித்துக் கொண்டிருந்தது. 

அகன்றிருந்த அவளது கண்களின் கருமணியில், கொழுந்து விட்டெரியும் தீச்சுவாலை.. அவள் மனதில் எரிந்த தீச்சுவாலை போலவே தணியாமல் எரிந்தது. 

அனல் ஜூவாலையையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் வன்மமும், குரோதமும் குடிகொண்டிருந்தது. அது அவள் செத்தாலும் கூட தீராத ஓர் வன்மம்!! 

கொழுந்து விட்டெரிந்த சுவாலையில் ஓர் முகத்தின் விம்பம் தோன்றியது. அது அவனின் விம்பம்.. அவளை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்திய அந்த அரக்கனின் முகம். 

தாய் அவனிடம் கதறிய கதறல்கள் எல்லாம்.. இப்போது தான் கேட்பது போல புதிதாக அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. 

வெகுநேரம்.. வெகுநேரம்.. கால் கடுக்கக் கடுக்க நின்றிருந்தவள், எரிந்த தீச்சுவாலை அணைந்து அது நீர்த்துப்போன கங்காக மாறியும் கூட.. அவள் தன் தாயின் மண்ணறையை விட்டும் ஓரடி எடுத்து வைக்கவேயில்லை. 

தன் மனதுக்குள் எழுந்த வன்மம் நொடிக்கு நொடி அதிகமாக.. அவள் ஓர் சபதம் எடுத்துக் கொண்டாள். 

தாயின் மீது எரிந்து தீர்ந்த.. நெருப்புக் கங்கில் தன் உள்ளங்கையை ஓங்கி அடித்து அழுத்தியவள், அவள் கை சுட்டுப் பொசுங்க பொசுங்க ஓர் சபதம் எடுத்துக் கொண்டாள். 

அவளுடைய வெண்தோல் உரிந்து.. உள்ளிருக்கும் சிவந்த தசையும், நரம்பும் எட்டிப் பார்த்தது. 

நெருப்பின் சூடு தந்த வலி.. உடலெங்கும் எழுந்து பரவியது. இருப்பினும் அவள் கண்கள் அப்போதும் அழவேயில்லை. 

நெருப்புக் கங்குகளை ஆக்ரோஷமாகப் பார்த்தவள், சிவந்த விழிகளுடன், “அவனைப் ப்பழிவாங்குவேன்!!!.. அவன் செய்த ஒவ்வொண்ணுக்கும்.. துடிக்கத் துடிக்க வ்வலிக்க வ்வைப்பேன்.. அவன் சாவு என் க்கைய்ல தான்..இது உங்க மேல சத்தியம்மாஆஆ”என்றவள், யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திராத மென்னிலாவாக உருமாறிப் போனாள்.

தொடரும்.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top