காதல் தானடி
என் மீதுனக்கு?
[4]
தாயின் சமாதியிலேயே வெகுநேரம் கழித்தவளுக்கு, உள்ளங்கையில் இருந்த தீக்காயம் திகுதிகுவென எரிந்து.. அவளையும் மீறி தலையெல்லாம் சுற்றவாரம்பிக்க, மூர்ச்சையாகி விழுந்தவள் தான், கண்விழித்துப் பார்த்த போது பரிதியின் அறையில் இருந்தாள்.
‘அவள் எப்படி இங்கே மீண்டும்?’ என்ற கேள்வி அவள் மனதினுள் எழாமல் இல்லை. கூடிய சீக்கிரமே அந்தப் பதிலுக்கு விடையும் கிடைத்தது.
பரிதிவேலினைத் தவிர.. வேறு யார் தான் அவளை இங்கே அழைத்து வந்து, அவனுடைய மஞ்சத்திலேயே படுக்க வைக்கவும் கூடும்??
கண் விழித்த கணம், அவள் கண்களில் தட்டுப்பட்டது கைகளில் இருந்த மருந்துப் பொருட்களை அங்கிருந்த டிராயர் மீது வைத்து விட்டு அகன்ற சமையல்காரம்மாள் தான்.
மெல்ல எழ முற்பட்டவளின் நெற்றி வேறு விண் விண்ணென்று தெறிக்க, நெற்றியைப் பிடித்தவளின் உள்ளங்கையில் ஏதோ இறுக்கம் சூழ்ந்து கொண்டாற் போன்ற ஓர் உணர்வு எழவாரம்பித்தது.
தன் வலது உள்ளங்கையை நோக்கிய போது அங்கே கட்டிடப்பட்டிருப்பதைக் கண்டதும், சற்று முன் மருந்துப் பொருட்களை வைத்து விட்டு அகன்ற, சமையல்காரம்மாளின் நினைவு வந்து போனது.
அவள் தான் மருந்திட்டிருக்க வேண்டும்!!
ஆனால் கையில் எந்த எரிவோ, வலியோ தெரியாமல் இருப்பதைக் கண்டவளுக்கு உள்ளூற சிறிதளவு வியப்பு மீதூறியது.
தீக்காயத்தின் எரிவு மரத்துப் போகுமளவுக்கு ஏதாவது தைலங்கள் தன் கையில் பூசப்பட்டிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டாள் மென்னிலா.
தீயின் வடு தந்த எரிவு.. அவ்வளவாக அவளை எரிக்கவில்லையாயினும், நேற்று தன் தாய் முகத்தை இறுதிவரைக் காண முடியாமல் போனதை எண்ணும் போது தீயை விடவும் எரிக்கும் வலியைக் கொடுத்தது அவளுக்கு.
“ந்நிலாஆஆ.. என் ராசாத்தீஈஈ… நிலாஆஆஆ”என்று தாய் கத்தியது… இன்று இந்நொடி கூட.. அவள் காதுகளை ஆக்கிரமித்துக் கொண்டே தானிருந்தது.
உள்ளங்கையில் இடப்பட்டிருந்த கட்டினையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, காதோரம் அசரீரி போல ஒலித்தது…நேற்று அவள் எடுத்துக் கொண்ட சூளுரை!!
“அவனைப் ப்பழிவாங்குவேன்!!!.. அவன் செய்த ஒவ்வொண்ணுக்கும்.. துடிக்கத் துடிக்க வ்வலிக்க வ்வைப்பேன்.. அவன் சாவு என் க்கைய்ல தான்..இது உங்க மேல சத்தியம்மாஆஆ”- தாயின் சமாதி முன் அவள் எடுத்துக் கொண்ட சபதம்!!
அவளது மாசுமருவற்ற மிருதுவான முகத்தில்… யாரும் நம்ப முடியாதளவுக்கு ஓர் குரூரம் கூடிப் போயிருந்தது.
தரையில் கால் பதித்து எழுந்த போது, கால்கள் கூட ஒரு வித இறுக்கமான வலியை அனுபவிப்பது போல இருந்தது அவளுக்கு.
அங்கணம் அவளை நோக்கி வந்த அவ்வீட்டின் தலைமைப் பணியாளன், மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு,மிக மிக பவ்யமாக, “அம்மா.. ஐயா உங்கள சாப்பிட வரச் சொன்னாருமா” என்றதும்,
அத்தனை வலியிலும், ‘ம்முடியாது’ என்று வாய் திறக்கப் போனவளின் மனம், அவள் பேச்சை நிறுத்தி.. இடித்துரைத்தது.
‘அவனைப் பழிவாங்குவதற்காகவென்று சபதம் எடுத்துக் கொண்ட உனக்கு அதை நிறைவேற்றவேனும் தென்பு வேண்டுமே நிலா?’என்று சொல்ல, பணியாளனை கட்டளையிடும் கண்களுடன் பார்த்தவள்,
உறுதியான குரலில், “வரேன்னு போய் சொல்லு”என்றாள்.
தலைமைப் பணியாளனும் தலையாட்டி விட்டு அறையை விட்டும் அகல, அவளுடைய கண்கள்.. அவ்வறையின் வார்ட்ராப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவளுடைய லக்கேஜ்களினைக் கண்டு கொண்டது.
அவை.. அவள் லண்டனிலிருந்து இலங்கை வரும் போது, கையோடு எடுத்து வந்த லக்கேஜ்கள்!!
பரிதி தான்… தாத்தா வீட்டில் அவள் விட்டு வந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லாமலேயே புரிய…அவள் மிருதுவான கண்களில் மீண்டும் தேங்கி நிற்கலாயிற்று உவர் நீர்.
இதற்கெல்லாம் என்ன அர்த்தம்??
இனி நீ எங்கும் போக முடியாது.. இது இராவணனின் கோட்டை.. இனி நீ இங்கே இருக்கப் போவது சீதையின் சிறைவாசம்!! என்று உணர்த்த விழைகிறானா அவன்??
சீதையைத் தேடி ராமன் வந்தது போல.. அவளைத் தேடியும் ஓர் ராமன் வர மாட்டானா? என்ற ஏக்கம் எழ, அவள் கண் முன்னாடி மின்னல் வெட்டினாற் போன்று வந்து போனான் அவளுடைய முறை மாமன் சரவணன்!!
எல்லாமே முடிந்து போன விஷயம்!! இனி பழையதை நினைப்பது உத்தமம் அல்ல!!
இது புதுமாதிரியான மென்னிலா!! பழிவாங்கும் உணர்ச்சியை மட்டும் முதன்மையாகக் கொண்டவளுக்கு.. பிற உணர்ச்சிகள் என்பது தலை தூக்கவே கூடாது!!
அதற்கு மேலும் பழையவைகளைப் பற்றிச் சிந்திக்காமல், மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு எழுந்தவள், வாஷ்ரூம் சென்று தலைக்குக் குளிக்க, காயத்தில் பட்டு வழிந்தோடிய தண்ணீர்.. அவள் உயிரைக் கடைந்தெடுக்குமளவுக்கு வலியைக் கொடுத்தது.
பொறுத்துக் கொண்டாள். கீழுதடு கடித்தவளின் கண்களில் இருந்தும் வழிந்த கண்ணீர், ஷவரின் தண்ணீரோடு இரண்டறக் கலந்து ஓட… அத்தனை வேதனையையும் பொறுத்துக் கொண்டாள் மென்னிலா.
இந்தத் தீக்காயமும் நல்லதற்கே!!
இந்த வலி அவள் அனுபவிக்கும் வரை.. அவளுள் கிடக்கும் பழிவாங்கும் உணர்ச்சியும் ஒரு போதும் உறங்கிவிடாதல்லவா?
அதனால் தீக்காயமும் நல்லதற்கே!! என்றே எண்ணிக் கொண்டாள் அவள்.
ஈரம் சொட்டச் சொட்டக் குளித்து விட்டு வந்தவள், தன் லக்கேஜிலிருந்து.. தன் வெளுத்த தொடைகளை வெளியுலகுக்கு அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் தளர்வான மிடியொன்றை அணிந்து கொண்டவள், தானாகவே தன் கைகளுக்கு மருந்திட்டுக் கொள்ள ஆரம்பித்தாள்.
அங்கிருந்த மயிலிறகும், ஆலிவ் எண்ணெய்யும்.. தீக்காயத்திற்கு இதமானதாகவே இருந்தாலும்.. அவற்றைத் தேய்த்துக் கொள்ளாமல், வெறுமனே கட்டிட்டுக் கொண்டு டைனிங் டேபிளை நாடிப் போனாள்.
முன்பு சின்னக் கட்டெறும்பு கடித்தாலும்..அதன் வலி பொறுக்க மாட்டாமல் கத்தும் நிலா… இன்று அகோரமான தீக்காயத்தையும் தாங்கிக் கொள்கிறாள்.
அவளுடன் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தையாகப் பிறந்த அந்த மென்மை எங்கே??
இவள் மென்னிலாவா? இல்லை வன்னிலாவா?
அவள் தீக்காயத்துக்கு கட்டுப்போடாமலேயே இருந்திருக்கக் கூடும்.. கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த வெண்தசையைக் காணும் போது.. அவளுக்கே கொஞ்சம் அச்சமாக இருக்க.. அதற்காகத் தான்.. அதை மறைக்கவென கட்டிட்டுக் கொண்டாள்.
சாப்பாட்டு மேசைக்கு அவள் உணவருந்துவதற்காகச் சென்ற போது, புருவமத்தியில் விழுந்த முடிச்சுடன்… முழங்கை ஊன்றிய.. கைகளைக் கோர்த்து.. அதன் மறைவில் இதழ்களை மறைத்த வண்ணம் நேர் கொண்ட பார்வையுடன் அமர்ந்திருந்தான் அவன். திரு. பரிதிவேல் வீரன்!!
அவள் டைனிங் டேபிளில் வந்தமர்ந்த போது.. அவள் அணிந்திருந்த அல்ட்ரா மாடர்ன் உடையில் பரிதிவேலின் முகம் கல்லைப் போலக் கொஞ்சம் கொஞ்சமாக இறுகத் தான் செய்தது.
‘போய் ஒழுக்கமான உடையாய் மாற்றிக் கொண்டு வா’என்று கத்தப் போனவனின் கண்களில் விழுந்தது.. அவள் வெற்றுக்கழுத்தில் தனிமையில் நின்றிருந்த மாங்கல்யம்!!
அவன் கட்டிய மாங்கல்யம்!!
அவளது வெண்ணெயில் குழைத்துக் குழைத்து செய்தாற் போன்றிருந்த கழுத்தில்.. மஞ்சள் மஞ்சேலென்று இருந்த மாங்கல்யம்.. அத்தனை அழகாக இருக்க… பரிதிவேலின் சீற்றம் மெல்ல மெல்ல மட்டுப்படத் தொடங்கியது.
அவனுடைய கண்கள்… தனக்கு எதிரே அமர்ந்திருந்தவளின் பக்கவாட்டுத் தோற்றத்தினை வெகுநாள் கழித்து ஆசையுடன் நிரப்பிக் கொண்டது.
அழகான நீண்ட கருங்கூந்தலை அவளது புஷ்டியான விரல்கள், கொண்டு காதுக்குப் பின் செருக, அவள் கண்களில் விழுந்தது அவளுடைய சிவந்த காது!!
தோடு எதுவும் போடாமல் இருந்த அந்த வெண்மையான காதுகளை தாபத்துடன் கடித்து… நுனிமூக்கு நுழைத்து..கிறக்கத்துடன் ஆயிரம் இரகசியங்கள் சொன்ன அந்த நாள் ஞாபகம் வர.. சட்டென விறைத்தது பரிதிவேலின் உடல்!!
அதற்கு மேலும் அவளைப் பாராமல் தட்டில் கவனம் இருப்பது போலக் காண்பிக்க, பரிதியையே இமைகொட்டாமல் பார்த்திருந்த வாசு மாமா.. தன் மருமகனின் எண்ணப்போக்கினை அச்சொட்டாகப் புரிந்து கொண்டார்.
சமையல்காரம்மாள் சுடச்சுட தோசைகளுடன் வந்து பரிமாற, தோசையை விண்டு சாப்பிட்டுக் கொண்டே, மென்னிலாவை நோக்கிய, அவனின் தாய்மாமாவும்,
சோகம் இழையோடும் குரலில், “நேத்து உன்னய நாங்க தேடாத இடமேயில்ல தெரியுமா?”என்று சொல்ல, வாசு மாமாவைப் பாராமல் வேறெங்கோ பார்த்துக் கொண்டிருந்தவளின் ஒற்றைப்புருவம் மாத்திரம் மெல்ல மேலுயர்ந்தது.
‘ஓ.. மாமனும், மாப்பிள்ளையும்.. இவள் ஊரை விட்டே சென்று விட்டாள் என்று எண்ணி தேடி அலைந்திருக்கின்றனர் போலும்!’ என்று எண்ணிக் கொண்டவளின் இதழ்கள்.. இகழ்ச்சியில் வளைந்தது.
வெள்ளந்தியான வாசு மாமாவோ.. அவள் முகம் போன போக்கைக் கவனிக்காமல் தொடர்ந்து சொன்னார்.
“கடைசில பார்த்தீன்னா.. நீ மயானத்துலேயே மயங்கிக் கெடந்த.. பரிதி மாப்ள தான்.. தூக்கிட்டு வந்து.. உன் காயத்துக்கு மருத்து போட்டான்.. இப்ப கை எப்படியிருக்குமா?”என்று அக்கறையுடன் வாசு மாமா விசாரிக்க, அவள் கேட்கும் கேள்வி கேட்டும், கேட்காதது போலவே அமர்ந்திருந்தாள் மென்னிலா.
ஓ அப்படியானால் அவள் கைகளுக்கு மருந்திட்டது இவனா??
‘தாயின் இழப்புக்கு ஒரு ஆறுதல் வார்த்தையேனும் சொன்னாரா இந்த மனிதன்? யாரிடமும் ஆறுதல் எதிர்பார்க்கும் நிலையில் அவள் இல்லை தான்!!
இருப்பினும் அவரது பேச்சு இவளுக்கு எரிச்சலையே கொடுத்தது.
வெகுநேரம் மென்னிலாவின் பதிலையே எதிர்பார்த்துக் காத்திருந்த வாசு மாமாவுக்கு, அவள் தனக்கு பதிலேயிறுக்காதது ஏனோ அவமானமாக இருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த பரிதிக்கு அவள் மேல் இன்னும் ஆத்திரம் அதிகமாக,அவன் கை முஷ்டி கொஞ்சம் இறுகியது.
மாமாவின் கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டவன், முயன்று வரவழைத்துக் கொண்ட சாதாரண குரலில், “நீங்க சாப்பிடுங்க மாமா”என்றான்.
அந்நேரம் இவள் தட்டில் தோசையை வைத்ததும், தட்டை சடாரெனத் தள்ளி விட்டுக் கொண்டே, சமையல்காரம்மாளை முறைத்துப் பார்த்தாள் மென்னிலா.
அவள் தட்டி விட்டதில், தட்டில் வைத்த சட்னி பட்டென்று தெறித்தது பரிதிவேலின் வெள்ளை ஷேர்ட்டில்!!
பரிதி தன் சட்டையைக் கண்டதும்… அவனுள் சுள்ளென்று ஆத்திரம் மிக, கோபக் கண்களுடன் நிமிர்ந்தவன்… ஏனோ எதுவும் சொல்லாமல்… அழுந்த மூடிய இதழ்களுடன் அவளையே முறைத்துப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான்.
ஆனால் மென்னிலாவோ, சமையல்காரம்மாளை நோக்கி, கோபாவேசத்துடன், “என்ன பார்க்குற?? கையில் காயம்பட்டிருக்கிறவ.. எப்படி தோசையை சாப்பிடுவா.. அப்போ அவ கஷ்டப்படுறதைப் பார்த்து சந்தோஷப்படலாம்ன்னு பார்க்க ஆசையா இருக்காஆஆ..” என்று கத்திக் கேட்க,
அவளை விடவும் வயதான சமையல்காரப்பெண்மணி.. கொஞ்சம் நடுங்கித் தான் போனார்.
“ஐய்யோ.. அப்படிலாம் இல்லேங்கம்மா”என்று அவர் பதற, ஒரு கணம் கண்களை மூடித் திறந்தவள்,
“ப்போ.. எனக்கு ஏதாவது நீராகாரம் கொண்டு வா.. ப்போஓ..” என்று விரட்ட, சமையல்காரம்மாளோ நின்ற இடத்தை விட்டும் நகராமல் பரிதியையே பார்த்தார்.
பரிதிவேல் வீரனும், ஏதும் வாய் திறந்து சொல்லாமல், சமையல்காரம்மாளைப் பார்த்து கண்ணசைக்க, அதன் பிறகே அங்கிருந்து நகர்ந்தாள் சமையல்காரம்மாள்.
ஒரு சில நிமிடங்களில் அவள் சாப்பிடுவதற்கென்றே பழைய சோறு, குளிர்மை தரும் குட்டி மண்பானையில் அடைக்கலமாகி.. மேசையில் இருந்தது.
காயம்பட்ட வலது கை.. மேசையில் விட்டேற்றியாக கிடக்க, இடதுகையால் பானையைத் தூக்கி.. தொண்டைக்குள் சரித்துக் கொள்ளலானாள் மென்னிலா.
ஆனால் இதுவரை எதையுமே சாப்பிடாமல் இருந்த பரிதிவேல் வீரனின் பார்வை மட்டும், அவளது காயம்பட்ட கைகளிலேயே, உயிர் கரையும் ஓர் பார்வையுடன் பதிந்து இருந்தது.
அதைக் காணாது போனது வெண்ணிலாவின் துரதிர்ஷ்டம்!!
தட்டில் வைக்கப்பட்ட தன் உணவைச் சாப்பிடாமல், ஏதும் பேசாமல் எழுந்தவன் விறுவிறுவென தன் அறையை நோக்கிச் சென்றவன் மாற்றுடை அணிந்து கொண்டு, கார் சாவியையும் எடுத்தவாறு….
அவளைப் பாராதது போல அழுத்தமான காலெட்டுக்களுடன் தன் ஜீப்பை நாடிப் போனாள்.
மாப்பிள்ளை ஜீப்பை நோக்கிச் சென்றதை அவதானித்த வாசு மாமாவும், சரி வர சாப்பிடாமல் அரைகுறை வயிற்றோடு எழுந்து.. லபுக் லபுக்கென்று விரல்களைச் சூப்பியவாறே, தட்டிலேயே கைகழுவி விட்டு வாசலை நோக்கி விரைந்தார்.
அவளோ யார் இருந்தால் என்ன? போனால் என்ன? என்பது போல.. சலனமேயில்லாமல் ஆற, அமர நிதானமாகப் பழைய சோறு குடித்துக் கொண்டேயிருந்தாள்.
அவனைப் போலவே முரட்டுத்தனமாக உறுமிய ஜீப், புழுதியைக் கிளப்பிக் கொண்டு அகல… கண் மண் தெரியாமல் வீதியில் வண்டியை செலுத்திக் கொண்டேயிருந்தான் பரிதிவேல் வீரன்!!
அவன்.. அவளுடைய கண் பார்வையை விட்டு நீங்கிய கணம் தான்.. அவள் முகத்தில் இருந்த இறுக்கம் மெதுவாக அகன்று.. இதயம் இலேசாவது போல இருந்தது.
நேற்று.. தன் தாயை இழந்தவள் போலவா அவள் நடந்து கொள்கிறாள்?? தாயின் இழப்பு அவளைப் பாதிக்கவேயில்லையா என்ன?
பாதித்தது. ரொம்ப ஆழமாக பாதித்திருக்கிறது அதன் வெளிப்பாடு தான்.. புதிதாக உருமாறிப் போன மென்னிலா!!
ஆயினும் தாய்க்காக ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடவில்லையே அவள்?
விடுவாள்… நிச்சயம் விடுவாள்!! அவளது சபதத்தை நிறைவேற்றிய பின்…அவள் விடும் கண்ணீர்.. அவளது தாய்க்கானதாக மாத்திரமே இருக்கும்!
வரண்டு கிடந்த அவளுடைய மனதுக்கு அமைதித் தேவைப்பட்டது. வரண்ட பாலைநிலத்தில் பெய்யும் குளிர்ச்சியான மழை போல.. அவள் மனதுக்கும் குளிர்ச்சி தரும் உபாயம் ஒன்றை அவள் அறிந்தே இருந்தாள்.
அவள் வரண்ட இதயம்.. புத்துணர்ச்சியுடன் சிந்திக்கவேனும்.. அவள் இந்த உபாயத்தை செய்தே ஆகவேண்டும் என்று தோன்ற,
அறைக்கு சென்று தன் லக்கேஜில் இருந்த ஒரு பொருளை தன் பாரிய ஹேன்ட் பேக்கினில் போட்டுக் கொண்டவள், தன் திமிருக்கு இன்னும் அழகைச் சேர்ப்பது போல, கண்களில் ஒரு கூலர்ஸையும் அணிந்தவளாக.. வேகமாக போர்ட்டிகோவை நாடிப் போனாள்.
அங்கே அவள் எதிர்பார்த்தது போலவே, அந்த மெரூன் நிற ஹைபிரிட் காரின், ஒளி ஊடுபுகாத கண்ணாடிகளை, துடைத்துக் கொண்டிருந்தான் டிரைவர் முருகன்!!
வாசற்படிகளை மிடுக்காக கடந்து வந்தவள், கார்க்கதவைத் திறந்த வண்ணம், “முருகா வண்டியை எடு..”என்றாள் அதிகாரத் தோரணையில்!!
முருகனோ உடனேயே வண்டியை எடுக்கவேயில்லை. கார் துடைத்த துண்டை, அக்குளில் அடக்கிய வண்ணம், முருகன் தலையைச் சொறிய.. மென்னிலாவுக்கோ உள்ளே சீற்றம் கனன்றது.
அதில் அவள் நாசி நுனி செர்ரிப் பழம் போல சிவந்து போக, சுட்டெரிக்கும் விழிகளுடன், “இப்ப நீ வண்டிய எடுக்கப் போறியாஆஆ? இல்லையாஆஆ? நீ எடுக்கலைன்னா என்ன? நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்..”என்று திரும்பப் போனவளைத் தடுத்து நிறுத்தியது முருகனின் பதற்றமான குரல்!!
“ஐய்யோ வேண்டாமுங்கம்மா.. நீங்க ஆட்டோவுல தனியா போறது ஐயாவுக்கு தெரிஞ்சா.. என்னய தான வேலையை விட்டுத் தூக்கிப் போடுருவாரு.. நீங்க ஏறுங்கமா.. எங்க போனுமோ.. அங்கன விட்டுர்றேன்”என்று பவ்யமான முகபாவனையுடன் அவன் கெஞ்ச, தன் மிடுக்கு ஒரு துளியேனும் குறையாமல்.. வண்டியில் ஏறிக் கொண்டாள் மென்னிலா.
இப்படி எல்லாரையும் எடுத்தெறிந்து பேசுபவளா அவள்? இல்லையே உயர்ந்தோரையும், தாழ்ந்தோரையும் “ங்க”விகுதி போடாமல் அழைத்துப் பழக்கப்பட்டவள் அல்லவா அவள்.
முருகனுக்கே மென்னிலாவின் புதிய பரிணாமம் அபாயகரமானதாகவே தோன்றியது.
சரியாக அந்த சின்னஞ்சிறு ஊர்களுக்கெல்லாம் பிரதான நகரமாக இருக்கும்.. மன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் அதிவேக நெடுஞ்சாலை வீதி வரவே, முருகனை ஒரு ஓரத்தில் வண்டியை நிறுத்தச் செய்தவள், முருகனிடம் தேவைக்கு அதிகமாகவே பணத்தை நீட்டி, வீதியின் இருமருங்கில் இருந்த கடைகளில் இடதுபுறம் இருந்த ஓர் அதிநவீன கடையைச் சுட்டிக்காட்டி,
“அங்கே போய்… ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்கிட்டு வா”என்றாள்.
ஆம், ஆக்ஸிஜன் எனப்படும் பிராண வாயு விற்கும்.. ஏசியூட்டப்பட்ட அதி நவீன கடையே தான்.
முருகனுக்கு தன் எஜமானியம்மா எதற்கு.. அதை வாங்கி வரச் சொல்கிறாள் என்று புரியாவிட்டாலும் கூட, மென்னிலா சொன்னதை அப்படியே செய்ய நாடி.. வீதியைக் கடந்து.. அந்தக் கடைக்குள் நுழைந்தான்.
செல்லும் முருகனையே இறக்கப்பட்ட கார்க்கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டேயிருந்தவளின் பக்கத்தில் நிழலாடியது போல இருக்க, பட்டெனத் திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்தாள்.
“ஹரீஷ்..” என்றாள் அவளையும் மீறி அதிர்ச்சியில் உறைந்து போன குரலில்.
ஆம், காருக்கு வெளியே நின்றிருந்தது அவளுடைய லண்டன் தோழன், கொழும்புப் பையன் ஹரீஷே தான்.
இருந்த களேபரமான சூழ்நிலையில் உலகம் மறந்திருந்தவள், ஹரீஷக் கண்டதும் தான்… தாத்தா வீட்டிலேயே ஹரீஷை விட்டு விட்டு அவள் வந்ததே ஞாபகத்துக்கு வரலானது.
மெல்ல காரை விட்டு இறங்கியவள், தன் கூலர்ஸைக் கழற்ற, ஹரீஷோ.. மெய்யாலுமே அவள் தாயின் இழப்புக்கு வருந்தியவனாக, “ஐம் ஸோ ஸாரி.. ஃபோர் வாட் ஹேப்பன்ட்..”என்று சொல்ல,
பசையற்ற கண்களுடன் அவனைப் பார்த்தவள், “நோ நீட் டு ஸே இட்..”என்று சொன்ன பின்… எதுவும் பேசத் தோன்றாது அமைதியாக அவள் தலையைக் குனித்துக் கொள்ள, ஹரீஷ் தான் தொடர்ந்தான்.
“லண்டன்ல அவ்வளவு தைரியமான வேலை செய்றவ.. இங்கே இருக்கற ஆணாதிக்க சமுதாயத்துக்கு கட்டுப்பட்ற ஒரு பொண்ணா இருப்பன்னு நான் கனவில கூட நினைச்சுப் பார்க்கலை நிலா..”என்று சொல்ல அதை ஆட்சேபிக்க ஏனோ அவளுக்கு மனம் வரவில்லை.
ஹரீஷ் சொல்வது அத்தனையும் உண்மை!!
லண்டனில் அவள் செய்யும் தைரியமான வேலை.. இங்கிருக்கும் பல ஆண்களும் செய்யத் தயங்கும் வேலை.
அப்படியிருக்க அவள் வாழ்க்கையொன்றும் அவ்வளவு தைரியம் நிறைந்ததல்ல என்பது ஏனோ உண்மை!!
தான் பேசியது தோழியின் மனதைக் காயப்படுத்தி விட்டதோ என்று பயந்தவன், சட்டென அதற்கு மன்னிப்புக் கேட்க நாடி “ஏதாவது தப்பா பேசியிருந்தா ஸாரி… நான் கொழும்புக்கு கிளம்பிட்டேன்… அம்மா கூட கொஞ்ச நாள் ஒத்தாசையா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. ஏதாவது ஹெல்ப்னா.. டோன்ட் ஹெஸிடேட் டு கான்டாக்ட் மி.. டெபினீட்ளி… ஐல் பி தேர் பார் யூ..”என்று அவளுக்கு உறுதிமொழி அளித்தவன்,
சாலைக்கு சற்று தள்ளி.. அவனை அழைத்துச் செல்ல வந்திருந்த காரில் ஏறிக் கொண்டான்.
ஏதும் பேசாமல் செல்லும் அவனது காரையே பார்த்துக் கொண்டிருந்தாள் மென்னிலா.
அந்த கணம்.. அவளுடைய டிரைவர் முருகனும் அவள் சொன்ன ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வர… கார் டிக்கியில் ஏற்றப்பட்ட சிலிண்டருடன் தொடர்ந்தது பயணம்.
சரியாக அவளுடைய டிரைவர் வந்து காரை நிறுத்தியது மன்னார் விரிகுடா பக்கம் இருக்கும் கடற்கரையோரம்!!
காருக்குப் பின்னாடி அமர்ந்திருந்த மென்னிலா சாரதியை நோக்கி, “முருகா.. நீ கொஞ்சம் வண்டியை விட்டு இறங்கி நில்லு.. நான் டிரஸ் சேஞ்ச் பண்ணனும்!!”என்றாள்.
எஜமானியம்மாள் சொன்னது காதில் சரி வர விழாத முருகனும், “என்ன சொன்னீங்கம்மா” என்று திரும்பிக் கேட்க,
கொஞ்சம் கடுப்பானவள், “வ்வண்டியை விட்டு இறங்கு.. நான் டிரஸ் சேஞ்ச் ப்பண்ணனும்”என்றாள் அழுத்தமான குரலில்.
முருகனும் எஜமானியம்மாளின் கட்டளைக்கிணங்க.. சட்டுபுட்டென்று காரை விட்டு இறங்கியவன், வெளியே பவ்யமாக காவலுக்கு நிற்க,
மென்னிலா ஒளி ஊடுபுகாத கருங்கண்ணாடிகளின் துணையுடன் உடைமாற்றலானாள்.
அவள் வண்டியை விட்டு இறங்கியதும்.. முற்றிலும் மாற்றமுற்றவளாக.. ஸ்விம் ஸூட்டில் இருந்தாள்.
அவள் கையில் நீந்தும் போது கண்ணுக்கு போடும் கோகுள்ஸ்ஸூம், கால்களுக்கு இடும் நீந்தும் செட்டை போன்ற பாதணிகளும் அடைக்கலமாகியிருந்தது.
கார் டிக்கியைத் திறந்து ஆக்ஸிஜன் சிலிண்டரை காயம்படாத இடதுகையில் ஏந்தியவளாக அவள் கடலை நோக்கி நடக்க, என்ன ஏதென்ற விஷயம் தெரியாமல் பதறிப் போன முருகன், அவளின் புறமுதுகைப் பார்த்துக் கத்தத் தொடங்கினான்.
“அம்மா எங்க போறீக…? ஐயா கேட்டா.. நான் என்னன்னு சொல்லுறது?” என்று கேட்க, அவளிடமிருந்து மின்னல் வேகத்தில் வந்தது பதில்.
“அவன் கேட்டா சாகப் போறேன்னு சொல்லு” என்றவள் கடல் மண்ணில் வெறுங்கால் பதித்தவளாக… கடலை நோக்கி நடந்தாள்.
கடற்கரையில்.. வெயிலுக்கு காயும் கருவாடு போல காய்ந்த வண்ணம் நின்றிருந்தன ஓர் ஆறேழு படகுகள்!!
படகுகளின் ஓட்டுநர் இல்லாமல்.. அவை அனாதையாக இருக்க, ஒரே ஒரு படகுக்காரன் மட்டும் படகில் இருக்கும் வலைகளை சரிசெய்து கொண்டிருந்தான்.
தன்னருகே வந்த பெண்ணைக் கண்டதும் ஏற்றிக் கட்டியிருந்த அந்த மீகாமனின் லுங்கி சட்டெனக் கீழிறங்கியது. அவளை பார்த்து மிகவும் மரியாதையான தொனியில்,
“என்ன மனே இந்தப்பக்கம் வந்திருக்கீக?”என்று கேட்டான்.
“மனே” என்பது அந்தப்பிரதேச மக்கள்.. பெண்களை மரியாதையுடன் விளிக்க உபயோகிக்கும் வட்டார வழக்குப் பெயர்!!
குறிப்பாக முன்னிலைச் சுட்டுப்பெயர். படர்க்கை சுட்டுப்பெயராக உபயோகிக்கப்படாத பெயரும் கூட!!
அவளுக்கு அவன் யாரென்று தெரியவில்லையாயினும், மீகாமனுக்கு அவளைத் தெரிந்து தான் இருந்தது.
தன் முதலாளியின் மனைவியை அவனுக்குத் தெரியாமல் போகுமா என்ன?
தன் நோக்கம் ஒன்றையே குறியாக கருதியவள், அவன் தன்னைக் கண்டு மரியாதை செலுத்திய விதத்தையே உபயோகித்துக் கொண்டவள், “நான் கடலுக்கு போகணும்… போட்ட எடு”என்றாள்.
கடலுக்கு போகணும் என்பதைக் கேட்டு கை, கால்கள் எல்லாம் வெளவெளத்துப் போனான் அந்த மீகாமன்!!
“ஐய்யோ இந்த நேரத்திலயா? வேண்டாம் மனே… இப்போ நேரகாலம் சரியில்லீய்யே? .. பெறவு போய்க்கலாம் மனே.. நானே வந்து சுத்திக் காட்டுறேன்??”என்று சொல்ல, அவளது பிடிவாதம் அவளுடைய கண்ணை மறைத்தது.
அவர் பேசிக் கொண்டிருந்த போது பாதியிலேயே தடுத்து நிறுத்தியவள், “நீ வரலைன்னா நானே நீந்திப் போய்க்கிறேன்”என்றவள், அலை தரும் சீற்றக் கடலை நோக்கிப் பயணமாக, அவசர அவசரமாக ஓடிச் சென்றவர், அவளைத் தடுத்து நிறுத்தி, “மனே.. மனே.. நில்லுங்க… நானே கூட்டிப் போய் விட்டுப்போட்டு வாரேன்”என்று சொல்ல, படகில் ஏறலானாள்.
படகில் ஏறியதும் தன் டீசல் படகை அவர் ஸ்டார்ட்டாக்க, கடல் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு சென்று அந்த மீகாமனின் படகு!!
கரையில் இருந்து கடலை நோக்கும் போது மட்டுமல்ல அழகு!! கடலில் இருந்து கரையை நோக்கும் போதும் அழகு தான்!!
கரையிலே நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த பனை மரங்களும், சவுக்கு மரங்களும் காட்சி தர.. அவற்றுக்கு மேலாக குடை விரித்தாற் போன்று திரண்டிருந்தன முகில்கள்!!
காக்கைகள் கூட்டம் கூட்டமாகத் திரிய, கழுகுக் கூட்டங்கள் எல்லாம் வானை வட்டமிட்ட வண்ணமும், கால்களில் மீனைப் பற்றியெடுத்துக் கொண்டு பறந்த வண்ணமும் இருக்கக் கண்டாள் மென்னிலா.
கரையில் நின்ற மனிதர்கள் எல்லாம் புள்ளியாகத் தெரியலாயினர்.
உப்புக்காற்று அவள் நாசி வழி நுழைந்து நுரையீரல் அடைய.. அவளது கண்கள் மிருதுவாகிப் போயிருந்தன.
அது அலைகளேயற்ற அமைதியான கடல் பகுதி. அவளது கண்களில் இருவேறு கடல்கள் புலப்பட்டது.ஒன்று இளநீல நிறத்தில் சற்று ஆழமற்ற கடற்பகுதியானால், இன்னொன்று கடும் நீல நிறத்தில்.. மிகுந்த ஆழமான கடற்பகுதி!!
இடம் வந்ததும் முதுகில் சிலிண்டரை மாட்டிக் கொண்டு,தீக்காயத்துக்கு சேதம் இல்லாத வகையில், “வாட்டர் ப்ரூஃப் கையுறையுடனும், கண்களில் கோகுள்ஸையும் போட்டுக் கொண்டவளுக்கு கடலின் அமைதி… சொர்க்கத்தை நாடிப் போவது போன்ற இனம் புரியாத சந்தோஷத்தைக் கொடுத்தது.
“மனே இங்கனயே நீந்துங்…”என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே… அம் மீகாமனின் முகத்தில் கடல்தண்ணீர் புளீச்சென்று பட்டுத் தெறித்தது.
அவள் அவரின் பேச்சைக் கேட்குமளவுக்கு பொறுமை இல்லாமல்.. கடலில் தொபுக்கட்டீர் என்று குதித்ததால் தெறித்த தண்ணீரே அது.
வெகுநேரம் கடலில் நிற்க முடியாமல் டீசல் தீர்ந்து விடும் போல இருக்க..டீசலை நிரப்பிக் கொண்டு வந்து விடலாம் என்றெண்ணி.. படகைக் கரையை நோக்கித் திருப்பலானார் அம்மீகாமன்.
கடலுக்குள் குதித்தவள்.. ஒரு குட்டி மீனைப் போன்ற வேகத்துடன்.. கடலின் தரையை நோக்கி.. குடுகுடுவென நீந்திப் போனாள்.
அவளிடம் கடலைப் பற்றிய பயம் கிஞ்சித்தும் கூட இல்லை!!
கடலா? பயமா? அவளுக்கா?? தரையில் கிடக்கும் கொடிய மனித ஜந்துக்கள் என்றால் தான் அவளுக்குள் பயம்!!
கடல் அவள் தாயைப் போல!! அது அவளது தாய் வீட்டைப் போல.
ஆம், அவளொரு கடல் உயிரியல் நிபுணர். ஹரீஷ் சொன்ன பலரும் செய்ய அஞ்சும்.. தைரியமான வேலை இதுவே தான்.
இதற்கென்றே விஷேட கற்கை நெறிகள் கொண்டிருக்கும் இலங்கையின் றுஹூணு பல்கலைக்கழகத்தில் ‘மெரைன் பயாலஜி” படித்தவள் மென்னிலா.
அவள் கடல் சார் உயிரினங்கள் பற்றிய கற்கைநெறியினை விரும்பிப் பிடித்தாள்;இரசித்துப் படித்தாள். அதனாலோ என்னவோ.. அவளுக்கு ஃபர்ஸ்ட் கிளாஸ் கிடைத்தது.
அவள் திறமைக்காக.. அப்பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளர் பதிவி கிடைக்க இருந்த நேரத்தில்.. அந்தப் பொல்லாத சம்பவங்கள் நடந்தேறியது.
இல்லை.. அவற்றை நினைத்து விடக்கூடாது.பிடிவாதமாக ஒதுக்கித் தள்ளினாள் அவள்.
இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் மட்டுமல்ல, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளில் இருந்தும் அவளுக்கான வேலைவாய்ப்புகள் கிடைக்க, அவள் என்னமோ தேர்ந்தெடுத்தது லண்டனைத் தான்!!
அன்டர்வாட்டர் ஃபில்ம் மேக்கராக பணியாற்றியிருக்கிறாள்; கடல் உயிரின சோதனை கூடத்திலும் பணியாற்றியிருக்கிறாள் அவள்.
“இக்தியோலஜிஸ்ட் நிலா” என்று அவளுடன் பணிபுரியும் ஹரீஷ் அழைக்கும் போதெல்லாம்.. அவளது இதழ்களில் மில்லிமீட்டர் புன்னகை விரியும்.
சிரிப்பேயற்ற முகத்தில்.. மில்லிமீட்டர் புன்னகையே அபூர்வம் என்று கொண்டு.. சிரிப்பதைக் காண வேண்டி.. அடிக்கடி “இக்தியோலஜிஸ்ட் நிலா” என்பான் ஹரீஷூம்.
அவள் உடலைச் சூழக்கிடைத்த தண்ணீரின் அழுத்தம்.. கடல் மாதா தந்த அரவணைப்பின் அழுத்தமாகவே கொண்டாள் மென்னிலா.
சூரியனின் கிரணங்கள்.. தாராளமாகவே கடலினுள் விழுந்து.. மென்னிலாவின் கண்களுக்கு அத்தனையையும் அப்பட்டமாக காட்டிக் கொண்டிருந்தது.
அவள் கடலினுள் சுதந்திரப் பறவையாகிப் போனாள். தரையிலே தான் தடைகளும், கட்டுப்பாடுகளும்!!
ஆனால் கடலினுள் தடை போட யாருண்டு?
அவள் கடலின் தரையை நோக்கி நீந்தி நீந்திச் செல்ல, அவளைக் கடந்து, பல்லாயிரக்கணக்கான சின்னசின்ன மீன்கள் நீந்திச் செல்லும் அழகைக் கண்டாள் அவள்.
சற்று தள்ளி.. செம்மஞ்சள் நிறத்தில் இருந்த பெருவிரல் அளவு நீளமுள்ள மீன்கள்.. அவளைக் கண்டதும் ஓடிப்போய்.. கடல் அனிமனிகள் எனப்படும் கடல் தாவரத்திற்குள் ஒளிந்து கொண்டன.
அவள் அவைகளை நோக்கிப் போக, அடியில் வளர்ந்திருந்த கண்டல் தாவரங்களின் தண்டுகளில் புகுந்து ஒளிந்து கொண்டன அவை!!
அந்த இடம் முழுவதும் முருகைக்கற்பாறைகள் இருக்க… அவற்றுக்கு சேதம் விளைவித்து விடாமல் நீந்திப் போனவள்.. அவளை சட்டைசெய்யாமல் நீந்திச் செல்லும் கடலாமைகளைக் கண்டாள்!!
குதிரை போன்ற முக அமைப்பைக் கொண்ட கடற்குதிரைகள்.. அவளை நோக்கி நீந்தி வர.. கடல் அன்னை தந்த, கண்ணுக்கினிய பரிசுகளைப் பார்த்துக் கொண்டே நீந்தினாள் அவள்.
மென்னிலா நீந்துவதிலும் கூட ஒரு லாவகம் இருந்தது. கையும் காலும் விரிந்து விரிந்து ஒன்றிணைவதில்.. அத்தனை நளினம் அடங்கியிருந்தது.
அவள் முதுகில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்.. தண்ணீரில் பாரமே இல்லாதது போல விளங்க.. அவள் வாயிலிருந்து போய்க்கொண்டேயிருந்தது வாயுக்குமிழிகள்!!
அந்நேரம்.. இன்று ஹரீஷ் கூறிவிட்டுச் சென்ற வார்த்தைகள் காதுக்குள் ஒலிக்க, நிலா மனதளவில் கொஞ்சம் நிலைகுலைந்து போனாள்.
“லண்டன்ல அவ்வளவு தைரியமான வேலை செய்றவ.. இங்கே இருக்கற ஆணாதிக்க சமுதாயத்துக்கு கட்டுப்பட்ற ஒரு பொண்ணா இருப்பன்னு நான் கனவில கூட நினைச்சுப் பார்க்கலை நிலா.” என்ற அவனுடைய வார்த்தைகள்…. திரும்பத் திரும்ப.. திரும்பத் திரும்ப ஒலித்தது செவிகளுக்குள்.
அந்த சொற்களின் விளைவாக… அவளில் ஆற்றாமை கிளர்ந்தெழ.. அவள் மறக்கத் துடிக்கும் நினைவுகள் வந்து போனது மனதுக்குள்.
அவள் கடலுக்குள் நீந்திய வண்ணமே தலை சிலுப்பிக் கொண்டாள். அந்நினைவுகள் வரவே கூடாது என கடவுளிடம் மன்றாடியும்.. மீண்டும் அந்நினைவுகளிலேயே ஆர்ப்பரித்தது அவளுடைய பொல்லாத மனம்!!
மீண்டும் செவிகளில் யாரோ ஓர் ஆடவனின் குரல் ஒலித்தது. “அவன் மட்டும் குறுக்கால வந்திருக்காட்டி.. நீ இந்நேரம் எனக்கு சொந்தமானவ நிலா”என்று சோகமாய் சொல்லும் ஓர் குரல்!!
அது அவளுடைய மாமா சரவணனின் குரல்!! எல்லாமே கைமீறிப் போனதும்.. அவளது கைகளைப் பற்றி..உள்ளங்கையில் முகம் புதைத்தவாறு… அழுது கொண்டே சொன்ன.. மாமாவுடைய குரல் அது!!!
மீண்டும் அவளது செவிகளை ஆட்கொண்டது கரகரப்பான சற்றே முதிர்ந்த குரல்!!!
“உன்னை பார்க்கவே அருவெறுப்பா இருக்கு..!!” இது அவள் மாலையும், கழுத்துமாக வந்து நின்ற போது.. அவள் தாத்தா சொன்ன ஆசிர்வாத வார்த்தைகள்!!
அந்நினைவுகளிலிருந்து.. அந்த முகங்களின் தாக்கத்திலிருந்தும் வெளிவரத் துடித்தாள் அவள்.
அந்த கணம்… கடலெங்கும் அசரீரி போல ஒலித்தது தாயாரின் குரல்!!
“ந்நிலாஆஆ…. என் ராசாஆஆத்தீஈஈஈ.. ந்நிலாஆஆ”என்று அவளை இறுதியாக அழைத்த தாயின் குரல்!! அவள் அந்தக் குரலில்… ஈர்க்கப்பட்டவளாக… எங்கோ நீந்திப் போனாள்.
அவளைச் சூழ.. அவள் மறக்கத் துடிக்கும் பலவித குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது.
அவளுக்கு தலை வலித்தது.. உள்ளுக்குள் இதயம் தாருமாறாகத் துடிப்பது போல இருந்தது. அதன் விளைவாக அவள் பெரும் பெரும் மூச்சுக்களை எடுக்க பிராண வாயுவும்.. அதன் முடிவெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
சட்டென்று பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்து அவள் நிதர்சன உலகில் கண் விழித்த போது, அவளைச் சூழ இருந்த கடல்நீரின் அழுத்தம் இன்னும் கொஞ்சம் அடர்த்தியாக இருப்பதை உணர்ந்தாள் அவள்.
அப்படியானால் அவள் ரொம்பவும் ஆழமான பகுதிக்கு வந்து விட்டிருந்தாள்.
திரும்பிப் பார்த்த போது.. அவள் இதுவரை கடலின் தரையென்று எண்ணிக் கொண்டிருந்தது கடலின் தரையே அல்ல!!
அது ஓர் கடல்பாறை மேற்பரப்பு!! அம்மேற்பரப்பில் தான் கடல்வாழ் அங்கிகளும் பவளப்பாறைகளும் இருக்க.. அந்த பாறையைத் தாண்டியவளின் கண்கள்.. எல்லையே இல்லாத ஓர் ஆழத்தைக் கண்டது.
பாறை முடிவில் இருந்த பள்ளம்… கீழே கீழே போய்க் கொண்டேயிருந்தது.
அவள் முற்றுமுழுதாக சுயநினைவு பெற்ற போது அவள் விழிகள் கண்ட உருவில் சற்று திக்பிரமை பிடித்தாற் போன்று தான் நின்றாள்.
ஆம், அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது.. கோரப்பற்களைக் காட்டிக் கொண்டு வந்த, ஓர் இராட்சத சுறா!!
அவளொரு கடல்சார் உயிரியல் நிபுணர். சுறா மீனின் கூட்டங்களோடு கூட அவள் அச்சப்படாமல் நீந்தியதுண்டு!!
ஆனால் தனித்து வந்திருந்த சுறா.. தன்னை நோக்கி கோரப்பற்களைக் காட்டிக் கொண்டே வரவும்.. அது தன்னை இரையாகக் கணித்து விட்டது என்று தெள்ளத் தெளிவாக புரிந்தது மென்னிலாவுக்கு.
சுறா மீன்களைக் கண்டால் பயப்படக் கூடாது. பயம் நம் உடலில் அட்ரினலினை சுரக்கச் செய்து.. இதயத்துடிப்பை தாறுமாறாக்கும்!!
இயத்துடிப்பின் வீத அதிகரிப்பு.. சுறா மீன் வேட்டையாடுவதற்கான ஆர்வத்தையும் இன்னும் கொஞ்சம் கூட்டும்!!
அதனால் அமைதியாக அதைத் தாண்டி நீந்திச் செல்ல வேண்டும் என்று அவள் கடல் உயிரியல் நிபுணராக.. நன்றாகவே தெரிந்திருந்தும்… அவளிருந்த சூழ்நிலையில் பதற்றமானாள் மென்னிலா.
சுறாவும் அகோரப் பசியில் இருந்ததுவோ??
தன்னிரையைத் தேடிகோர வேகத்தில் வந்து.. அவளைச் சூழ்ந்து கொண்ட இக்கட்டான தருணம்!!!செய்வதறியாது திகைத்துப் போனாள் நிலா.
****
அங்கே கடலுக்கு வெளியே!!
மன்னார் விரிகுடாவில் பிடிக்கப்பட்ட டன் கணக்கான மீன்களை விடிகாலையிலேயே… கொழும்புக்கு தன் லாறி மூலமாக அனுப்பி வைத்திருந்தவன், இந்த நண்பகல் வேலையில் தான் அதற்கான காசுக்கணக்குகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான்.
மீன் விநியோகக்கணக்குகளை முகாமை செய்யும் முகாமையாளர், அந்த லெட்ஜரில் உள்ள கணக்குகளை விளக்கிக் கொண்டே வர, ஒவ்வொரு வாரத்துக்குமான கணக்குகளின் முடிவில் தன் கையொப்பத்தை வைத்துக் கொண்டே வந்தான் பரிதிவேல் வீரன்!!
எப்போதுமே பரிதிவேல் வீரனுக்கு கழுகுக் கண்கள்.. கணக்காளர் சிற்சில சமயங்களில்.. ஒரு இலக்கத்தை அடுத்து இரண்டு பூச்சியங்கள் வர வேண்டிய இடத்தில்.. மூன்று பூச்சியங்கள் சேர்த்து.. தவறுதலாக எழுதியிருந்தாலும் கூட… அதைத் துல்லியமாக அடையாளம் காட்டிக் கேட்பான் அவன்!!
அதனால் அந்த முகாமையாளர்… இன்று பரிதி என்ன குறை கண்டுபிடிப்பானோ? என்ற நடுக்கத்துடனேயே நின்றிருந்தார்.
அங்கணம்.. அவனுடைய செல் அடிக்கவே எடுத்துப் பார்த்தவனுக்கு, முருகனின் இலக்கங்கள் திரையில் விழவும் கண்கள் மெல்ல இடுங்கியது.
“சொல்லு முருகா” என்று சொன்னவனின் காதுகளில்.. மறுமுனையிலிருந்து எத்தி வைக்கப்பட்ட செய்திகளில் இருந்து… அவனுடைய முழு உடலும் ஒருகணம் விறைத்து அடங்கியது.
அவளுடைய மனைவி மன்னார் விரிகுடா நோக்கிப் பயணமானது தெரிய வரவே, உடனேயே வண்டியை எடுத்துக் கொண்டு, அவன் இருந்த இடத்துக்கு அருகாமையிலேயே இருந்த மன்னார் விரிகுடா நோக்கிப் பயணமானான் பரிதிவேல் வீரன்!!
அவனுக்குள் இனம்புரியாத அச்சம்..இதுவரை அனுபவித்திராத அச்சம்!!! எழுந்து பரவ, கடலை நோக்கி.. கடல் மண் பாதங்களில் பட்டுத்தெறிக்க சிங்கம் போல கம்பீரமாக ஓடி வந்தவனை எதிர்கொண்டது அவளை கடலில் விட்டு விட்டு வந்த மீகாமன்!!
தன் எஜமானனை இதுவரை இத்தனை பதற்றமாக அவன் பார்த்ததில்லை!!
அந்தப் பதற்றமான தோற்றமே மீகாமனுக்கு நடந்தது முழுவதையும் சொல்லும் உந்தலை கொடுக்க , அனைத்தையும் முதலாளியிடம் கொட்டினான் அவன்.
ஓரெட்டில் தாவி அம்மீகாமனின் பெனியனைப் பிடித்துக் கொண்டான் பரிதிவேல் வீரன்!!
விட்டால் மீகாமனை அடித்து விடுபவன் போலப் பார்த்தவன், “ய்யோவ்..ந்நீ நியூஸ் பார்க்கல? வடமேல் பருவக்காற்று தப்பிப் போனதுல.. சுறா ம்மீனுங்க ஆக்ரோஷமா.. இரை தேடி மன்னார் விரிகுடா வந்திருக்குன்னு த்தெரியாது??இந்த ந்நிலைமையில அவளைத் தனியா கடலுக்குள்ள போக விட்டுருக்க??”என்று கத்த, பரிதியின் கோபத்தை முன்னாடியே அறிந்து வைத்திருந்தவன் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்.
“ஐயா நான் சொல்லோணுமுன்னு தான் நினைச்சேனுங்கய்யா அம்மா தான் என்னய பேச விடவேயில்ல.. ரொம்ப பிடிவாதமா இருந்தாங்கமா..நானும் டீசலப் போட்டுட்டு திரும்ப அங்கன போயிரலாம்னு தான் ஐய்யா.. கரைக்கு வந்தே.. ”என்று நாக்கு உளறியவனாக அவன் சொல்ல,
பரிதிக்கு அவனுடன் நின்று பேசும் அளவுக்கு பொறுமை இருக்கவில்லை. ஒருதடவைக்கு இருதரம்…. ‘அவளை எங்கே அழைத்துச் சென்று விட்டாய்?’என்று தகவல் கேட்டுக் கொண்டவன்,
அங்கிருக்கும் படகில் ஒன்றைத் தள்ளிக் கொண்டு விரைந்தான் கடலை நோக்கி.
சரியாக… மீகாமன் சொன்ன இடத்துக்கும் முன்பாகவே.. டீசல் அற்று படகு நின்று விடவே…. அவன் நிலை இன்னும் பயங்கரமானது.
அதற்கு மேலும் தாமதிக்காமல், தன் வேஷ்டியை சிங்களவர் பாணியில் தோட்டி போல கட்டிக் கொண்டவன், கைகளை குவித்து நீட்டியவாறு கடலுக்குள் குதித்தான்.
கடலுக்குள்ளே அவன் கண்கள் அவளைத் தான் தேடியது.அவனது கை கால்கள் கடலில் அசைந்த ஒவ்வொரு நொடியும் அவனது இதயத்துடிப்பு ஏகத்துக்கும் ஜாஸ்தியாகவே இருந்தது.
வாளிப்பான கைகளையும், கால்களையும் ஆட்டி ஆட்டி நீந்தியவன் தன் மனைவியைக் கண்களால் துலாவிக் கொண்டே நீந்தினான்.
கண்களுக்கு.. அவளைப் போல கண்ணாடி அணியாமலேயே இருந்திருந்தாலும்.. கடல் நீரில் வெகுநேரம் மூச்சை தம் கட்டி நீந்திப் பழகியிருந்தவனுக்கு… சமாளித்துக் கொண்டு பார்க்க முடியுமானதாகவே இருந்தது.
அவன் விரைந்து நீந்தி “பெரிய பள்ளம்” என்றழைக்கப்படும், ஆழமான கடற்பகுதிக்கு விரைந்தான்.
அங்கே நீந்திச் சென்றவன், பவளப்பாறைகளின் எல்லை முடிவில், பெரிய பள்ளத்தின் தொடக்கத்தில் தன் மனைவியைக் கண்டு கொண்டான்.
அவளுக்கு பின்னாடி.. சுமார் பதினைந்து அடி நீளமுள்ள ஒரு சுறா அகோரப் பற்களைத் திறந்த வண்ணம் வருவதைக் கண்டவனுக்கு, ஏனோ மூச்சை எதுவோ ஒன்று வெளிவர விடாமல் தடுப்பது போன்ற உணர்வு எழுந்தது.
விடலைப் பையனாக இருந்த போது.. சுழியோடியாகக் கூட அவன் பொழுதுபோக்கில் ஈடுபட்டது கை கொடுக்க, இரையாக்கிக் கொள்ள வரும் சுறாவிடமிருந்து எப்படித் தப்பிக்க வேண்டுமென்ற தந்திரம் அவனுக்குத் தெரிந்திருந்தது.
ஆனால் மென்னிலாவின் நிலையோ ரொம்பவும் பரிதாபம்!! .
அவள் பதற்றத்துடன் விட்ட மூச்சுக்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வேறு, முடியும் தருவாயில் வந்திருக்க, அவள் கால்கள் கோரப்பற்கள் கொண்ட சுறா மீன்களின் வாயில் அகப்படப் போன சமயம் அங்கே அவளை காக்கும் ஆபத்பாந்தவனாக வந்தான் பரிதிவேல் வீரன்.
முருகைக் கற்பாறையை தீவிரவெறியுடன்.. ஆட்டி ஆட்டி உடைத்தவன், சுறா மீனை நோக்கி.. அதிவேகமாக நீந்திப் போய்,
அதன் இடது கண்ணில் முருகைக்கற்பாறையால் ஆவேசமாகத் தாக்கலானான்.
காற்றில் இருக்கும் போது அதாவது தரையில் இருக்கும் போது ஒரு பொருளை ஓங்கி அடிப்பது என்பது இலகு.
ஆனால் அதுவே தண்ணீரில் இருக்கும் போது கொஞ்சம் கடினம் தான்!!
மனித உடலை விட அடர்த்தியான இடமான தண்ணீர் சூழ்ந்த ஓரிடத்தில் ஓங்கிக் கையை அசைப்பது என்பது, ஒரு பொருளைத் தாக்குவது என்பது மிக மிகக் கடினம்.
அதிலும் இது உப்புத் தண்ணீர் வேறு!!
கையை ஓங்கும் போது.. அழுத்தம் கொடுக்கும் தண்ணீரையும் சேர்த்து தான் அடிக்க வேண்டும்!!
இருந்தும் பரிதிவேல் வீரன்.. கையை ஓங்கும் போது மெதுவாக ஓங்கி.. சுறாவின் கண்களை நெருங்கும் போது… முருகைக் கற்பாறையால் வலுவாக.. அதன் இடது கண்ணைத் தாக்கினான்.
காயம்பட்ட சுறாவோ.. ஒருமுறை உடலைக் குலுக்கிக் கொண்டு வலியில் துடித்த வண்ணம், வாய்க்கு அருகே அகப்பட்டப் பொருளைத் தாவிக் கடிக்க,
அதன் கோரப்பற்களுக்கு பரிதியின் சின்ன விரலும், மோதிரவிரலும் சேர்ந்து இரையானது.
கடல் எங்கிலும் பரிதிவேலின் இரத்தம் கலக்க, சுறா மீனுக்கு அவனது இரத்த வாசனை வேறு இரையை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறியைக் கொடுக்கலானது.
திரும்பவும் அது, ஆக்ரோஷமாகத் திரும்பி வந்து தாக்க முயல,பரிதி எதற்கும் அஞ்சாதவனாக, மீண்டும் முருகைக் கற்பாறையை ஓங்கினான்.
கடலெங்கிலும் இரத்தம் உறைய.. அவனுடைய சின்ன விரல்.. அந்த ஆழமான பள்ளத்தை நோக்கி கீழே விழுவதைக் கண்டவளுக்கு… ஏனோ தலைசுற்றுவது போல இருந்தது.
அதன் மறுகண்ணையும், பூக்களையும், மூக்கையும் ஓங்கி ஓங்கி அடித்தான் பரிதி. ஆம் சுறாக்கள் தாக்கும் போது இந்த மூன்று உறுப்புக்களையும் தான் தாக்க வேண்டும்!!
இதுவே முதலைத் தாக்கினால்.. அதன் வயிற்றைக் கிச்சுகிச்சு மூட்டிய பின்.. அங்கிருந்து கரையை நோக்கி நீந்த வேண்டும்!!
அவனது தொடர்ந்த தாக்குதலுக்கு இலக்கான சுறா.. வலியில் கடலே அதிர.. ஒருவகையான ஈனமான ஒலியெழுப்பிக் கொண்டு கத்திய வண்ணம் மூர்ச்சையாகிப் போய்.. கீழே விழுந்து கொண்டே போனது!!
மூர்ச்சையான சுறா கண்விழிப்பதற்குள்.. அன்றேல் இரத்த வாசனை கொண்டு… மிகுதி சுறாக்கள் அங்கு வருமுன்னம், அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவன், திரும்பி தன் மனைவியைப் பார்த்தான்.
அவனது மனைவியோ சிலிண்டரில் இருந்த இறுதி வாயுவும் தீர்ந்து போய்.. விழிகள் மூடி கடலின் அடிக்குள் சென்று கொண்டிருந்ததைக் கண்டான் பரிதி.
வேகமாக நீந்திச்சென்று அவள் கைகளைப் பிடித்துக் கொண்டவன், அவளது சிலிண்டரை அவள் முதுகில் இருந்தும் அவிழ்த்து விட்டான்.
அப்போதும் அவள் மூச்செடுக்க முடியாத வண்ணம் அவள் விழிகள் மூடிக் கிடப்பதைக் கண்டவன், சிறிதும் தாமதியாமல் அவளது வாயோடு தன் வாய் பதித்தான்.
அவனது மூச்சு.. இவளது மூச்சோடு இரண்டறக் கலந்து.. அவள் நுரையீரலை நிரப்ப, குபுக் குபுக்கென்ற சத்தத்துடன் வாயுக்குமிழிகளை விட்டுக் கொண்டே கண் திறந்தாள் மென்னிலா.
அவள் கண்களைத் திறந்ததும் ஜில்லென்ற ஓர் உணர்வு உடல் முழுவதும் பரவ, அவளை இழுத்துக் கொண்டு கடலின் மேல்பரப்பிற்கு வந்தவனுக்கு, அவள் விட்ட பெருமூச்சினைக் காணவுமே தான் உயிர் வந்தது.
அந்நேரம் பார்த்து தெய்வாதீனமாக.. எதிரே இலங்கை தேசிய கொடி பறக்க, ஒரு கப்பல் வர, தத்தளித்த கைகளை காற்றில் ஆட்டி, “ஹெஎஎஎல்ப்!!! .. ஹெஎஎஎல்ப்…”என்று கத்தினாள் அவள்.
தொலைநோக்கி வழியாக அவளைப் பார்த்த கப்பலின் கேப்டன், கப்பலை அவள் இருந்த திசை நோக்கித் திருப்ப,
அங்கே அவளுடன் இருந்த பரிதிக்கோ கை விரல்கள் துண்டானதின் வழியாக, இரத்தம் நிறைய வெளியானதில் கண்கள் சொக்க, கை, கால்களை ஆட்டிக் கொண்டேயிருந்த அவனுடைய போராட்டம் நின்று போனது.
அவனது விழிகளில் இறுதியாக அவள் புறமுதுகைப் பார்க்க, மயக்கத்தில் கண்கள் மூடியவனாக, தண்ணீருக்கடியில், மெல்ல சென்று கொண்டேயிருந்தான் அவன்.
அவளை நோக்கி வந்த படகு இலங்கை கடற்படையினருடை – யது.
அவளை நோக்கி டயரும், லைஃப் ஜாக்கெட்டும் கட்டப்பட்டு வீசப்பட, சட்டென லைஃப் ஜாக்கெட்டை போட்டிக் கொண்டே.. கப்பலோரத்தில் போடப்பட்ட, ஏணியையும் பற்றிக் கொண்டு மேலே வந்தவளுக்கு.. கடுங்குளிரில் உடலெல்லாம் நடுங்கியது.
ஆழ ஆழ பெருமூச்சுக்களை எடுத்து விட்ட வண்ணம் அவள் நடுங்கிக் குலைய, கடற்படையினரால் அவள் மேலே ஒரு கனமான போர்வை போர்த்தப்பட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக குளிர் மட்டுப்பட, அவள் சுறாவின் தாக்குதலுக்கு உள்ளான அதிர்ச்சியில் இருந்தாள்.
அவளிடம் வந்த கப்பலின் கேப்டன், சிங்களத்தில், “ஹலோ மேடம்..ஒயா வித்தரத? நெத்தம் வென கவுருஹரி ஹிட்டியத? (நீங்க மட்டும் தானா?? இல்லை உங்க கூட வேற யாராவது இருந்தாங்களா??)”என்று கேட்க.. அப்போது தான் இன்னும் வந்து கப்பலில் ஏறாத பரிதியின் ஞாபகம் வந்தது.
கேப்டனோ இவளுக்கு சிங்களம் தெரியாது போல என்று எண்ணிக் கொண்டவனாக, “ஹலோ மேடம்..நீங்க மட்டும் தானா?? இல்லை உங்க கூட வேற யாராவது இருந்தாங்களா??”என்று கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.
அவள் செவிகளில் விழவில்லை என்பது போல மீண்டும் அதே கேள்வியைத் திரும்பக் கேட்டார் கேப்டன்.
அவள் அப்போதும் பேசாமல் இருக்க, அவளுடைய ஆழ்மனம் விழித்துக் கொண்டது.
அவளில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது அவளது மனக்குரல்!!
‘சொல்லாதே..அவனும் உன் கூடத் தான் இருந்தான் என்று மறந்தும் சொல்லி விடாதே.. இங்கேயே செத்து மடியட்டும் அவன்!! அவன் உடல் சுறாக்களுக்கு இரையாகட்டும்!! நாளை காலை, யாரும் காணச் சகியாத.. அநாதைப் பிணமாக அவன் உடல் கரையொதுங்கட்டும்!!இது அவனுக்கு கிடைக்கும் சரியான தண்டனை!!”என்றது சாத்தானீய மனம்!!
திரும்பவும் கேட்டது அதே குரல்!! இம்முறை நல்ல விதமாக, “இல்லை.. நீ அவனை இப்படி விட்டுட்டுப் போகக் கூடாது.. அவன் உன்னைத் தேடி வரலைன்னா உன் நிலைமை? அவனது அதே நிலைமை தான் உனக்கும் வந்திருக்கும்!! அவன் உன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறான்… சொல்லு.. அவனைப் பற்றிச் சொல்லு.. அவனைக் காப்பாற்று..”என்று கெஞ்சியது அது!!
அந்த இரண்டு குரல்களும் மாறி மாறிக் கேட்க.. அதற்கிடையில் சிக்குண்டு தவித்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள். அவள் விழிகள் பழிவெறியில் சிவந்து போயிருந்தன.
அவள் கேப்டனின் முகம் நோக்கித் திரும்பவே இல்லை. இருப்பினும் கடலை வெறித்துப் பார்த்தவளாக, ‘என்கூட யாரும் வரலை’ என்று சொல்வதற்காகத் திரும்பிய சமயம், கடற்படை வீரர்களுள் ஒருவன் கத்தினான்.
“கேப்… லுக்.. தேர் இஸ் அ பர்சன்!!..” என்று கத்த, அவன் கையில் தொலை நோக்கி இருப்பதை, வெறுப்புடன் அவதானித்தாள் மென்னிலா.
கடலுக்கடியில் செல்பவனை.. இன்னும் இரண்டு வீரர்கள் தொலைநோக்கி வழியாகப் பார்த்து விட்டு, இருவர் கடலில் குதிக்க, அவனைக் காப்பாற்றுவதற்கான கயிறும் போடப்பட்டது.
பரிதிவேலின் ஆயுள், மென்னிலா கையால் தான் முடிய வேண்டும் என்று எமன் எழுதி வைத்திருந்தானோ என்னவோ.. அன்று அவன் தப்பித்தான்.
அவன் உடலைத் தண்ணீரில் தூக்க இலகுவாக இருந்த போதும், காற்றில் தூக்குவது கடினமாக இருக்க, இன்னொரு வீரனின் உதவியும் தேவைப்பட்டது.
இரத்தம் சொட்டச் சொட்ட கல்லாகிக் கிடந்தவனை, அவர்கள் கப்பல் தரையில் கிடத்த, விழிகள் மூடிய ஓர் கிரேக்கச் சிற்பம் போல.. கட்டுமஸ்தான தேகத்துடன் விழுந்து கிடந்தான் அவளுடைய கணவன்.
அவனுடைய நாடியில் கைவைத்துப் பார்த்து உயிர் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட கேப்டன், “ஹி நீட்ஸ் அ ஃபர்ஸ்ட் எய்ட்.. கமான்.. கமான்..ஹரி அப்..”என்று மற்ற வீரர்களை ஏவ, அவ்விடமே பதற்றமானது.
ஆனால்.. அவள் மட்டும் பதறாமல் சிலையாய் அமர்ந்திருந்தாள்.
அவனையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனது துண்டான இரண்டு விரல்களைப் பார்த்த போது, அவள் உடலில் சொல்லவொண்ணா இதய அதிர்வலைகள் எழுந்து படர்ந்தன.
super sis