பூ 2
நண்பனின் முக மாறுதலை அவதானித்த வெங்கட்டோ அவனது முதுகில் அழுத்தம் கொடுத்ததும் பாக்கெட்டில் வைத்திருந்த கூலரை எடுத்து கண்ணில் மாட்டிக்கொண்டான் மயூரன்.
மயூரனை பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான் வெங்கட். காரிலிருந்து இறங்கிய யாழினியோ வுமன் ஸ்டாப்ஸ் பக்கம் சென்றவள் அங்கே நின்ற அனைவருக்கும் “ஹேப்பி பொங்கல்” என்றாள் லேசான புன்னகையுடன்.
யாழினி கழுத்தில் அணிந்திருந்த ஆன்டிக் ஆரத்தை பார்த்து பெரும்மூச்சுவிட்ட சைலஜாவோ “பானு மேம், இந்த ஆரம் ஒரு ஆறு பவுன் இருக்குமா!” கண்ணை உருட்டினாள்.
“பத்து பவுனுக்கு மேல இருக்கும் மேம். கொஞ்சம் அமைதியா இருங்க அவங்க நம்ம ரெண்டுபேரையும் பார்க்குறாங்க என் டிபார்ட்மென்ட் ஹெச்ஓடியும் அவங்க டிபார்ட்மென்ட் ஹெச் ஓடியும் கூட சேர்த்து நாளைக்கு என்னை வச்சி செய்துடுவாங்க” என்றதும் சைலஜா அமைதியாக இருந்துகொண்டாள்.
கருணாகரனின் ஆடி கார் கேம்பஸிற்குள் வரவும் அனைவரும் விலகி வழிவிட்டு நின்றனர். காரிலிருந்து இறங்கிய கருணாகரனோ அனைவரையும் பார்த்து புன்னகை பூத்த முகத்துடன் பூஜை நடக்கும் இடத்திற்கு வந்தவர் மயூரன் பக்கத்தில் நின்று மகனை பார்த்து லேசான புன்முறுவல் பூக்கவும் மயூரனும் கூலரை சரி செய்தபடி “ஹேப்பி பொங்கல்பா” என்றான் லேசான இதழ் விரிப்புடன்.
தீபாராதனை காட்டியதும் கருணாகரன் கிளம்ப “சார் இருங்க ஃபன் கேம்ஸ் டான்ஸ் புரோகிராம் இருக்கு” என்றான் வெங்கட் பவ்யமாய்.
“எனக்கு ஷோரூம் திறப்பு விழாவுக்கு அழைப்பு இருக்கு வெங்கட் நான் கிளம்புறேன். அதான் உங்க காலேஜ் செகரட்டரி இருக்கார்ல” என்றவரோ மகனை பார்க்காமல் சென்று விட்டார். மகன் மேல் மலையளவு கோபம் மருமகளை வஞ்சித்துவிட்டானேவென்று மயூரனுக்கு தந்தை பேசுவது காதில் விழுந்தாலும் அசட்டையாக உட்கார்ந்திருந்தான் அடம்வாதம் பிடித்த மயூரன்.
ஸ்டேஜில் மயூரன் நடுவிதமாக அமர்ந்திருந்தான். வெங்கட்டும் யாழினியும் மயூரனுக்கு பக்கம் உட்கார்ந்திருந்தனர்.
பாட்டு பாடுதல், குழுநடனம், தனிநபர் நடனம் என ஒவ்வொன்றாக ஃபன் கேம்ஸ் ஆரம்பித்தனர். ஆசிரியர்களுக்கும் ஃபன் கேம்ஸ் வைத்திருந்தனர் மாணவர்கள். ஜாலியாக நடனம் ஆடினார்கள் பெண் ஆசிரியர்கள் சில பேர்.
யாழினியை நடனம் ஆடுவதற்கு அழைக்க “நான் வரல நீங்க ஆடுங்க மேம்” என்றாள் தலையை ஆட்டி சின்ன சிரிப்புடன்.
மயூரனோ “ஏன் யாழு காலேஜ் படிக்கும்போது செமயா டான்ஸ் ஆடுவதானே! இதுபோல நேரம் மறுபடியம் அடுத்த வருசம்தான் வரும் இப்ப டான்ஸ் பண்ணுடா” என்றான் நெற்றியை தேய்த்தபடி.
“மாமா நீங்களும் டான்ஸ் ஆட வரீங்களா?” என்று கேட்டுக்கொண்டு நாக்கை கடித்துக்கொண்டாள் யாழினி.
“எனக்கு இப்போ டான்ஸ் பண்ணுற மூட் இல்ல ஒவ்வொரு பாட்டுக்கும் உன் கையும் காலும் நர்த்தனம் ஆடுறதை நான் பாத்துட்டுத்தான் இருக்கேன் இந்த நிமிசம் ப்ரஃபெசர்ங்கிறதை மறந்து என்ஜாய் பண்ணு” என்றான் புன்முறுவலுடன்.
“நீங்க எப்பவும் இது போல சிரிச்ச முகத்தோடவே இருங்க மாமா ! சிரிப்போடு பார்க்கும்போது அழகா இருக்கீங்க” என்றாள் கண்ணைச் சிமிட்டி.
மயூரன் முகம் மாறவும் “தேங்க்ஸ் மாமா” என்ற யாழினியோ ஸ்டேஜை விட்டு இறங்கி டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த பெண் ஆசிரியர்களுடன் நடனம் ஆடத்தொடங்கினாள்.
வெங்கட்டோ நாற்காலியின் கைப்பிடியில் தாளம் போட்டுக்கொண்டிருந்தான்.
“என்ன வெங்கட் உனக்கும் டான்ஸ் ஆடணும்னு தோணுச்சா நீயும் போயேன்”
மயூரன் பக்கம் குனிந்து “நீயும் வாடா நாமளும் டான்ஸ் ஆடலாம் நாம சேர்ந்து ஆடி எவ்ளோ வருசம் ஆகிடுச்சு” என்றான்.
“மூட் இல்லைனு யாழுகிட்ட சொன்னதை காது கொடுத்து கேட்டதானே!” என்றான் கிசுகிசுப்பாக.
“மாமா பொண்ணு கூப்பிட்டு போகாம இருக்கலாம். ஒரு நண்பன் கூப்பிட்டு வராம நீ இருக்கமாட்டேனு ஒரு நம்பிக்கையில கேட்டுட்டேன்பா நீ இல்லாம நான் தனியா ஆட மாட்டேன்” என்று அழுத்திக்கூறிவிட்டு மாணவர்கள் ஆடுவதை பார்த்து கைதட்டிக்கொண்டிருந்தான் வெங்கட்.
கதிரவனோ மைக்கில் “செகரட்டரி சார் நீங்களும் எங்களோட டான்ஸ் பண்ணனும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு… எங்க விருப்பத்தை நிறைவேத்தி வைப்பீங்களா?” என்றதும் மாணவர்கள் “எஸ் செகரட்டரி சார் வாங்க வாங்க டான்ஸ் ஆடலாம்” என்று மாணவர்களின் குரல் அந்த இடத்தை அதிர வைத்தது.
வெங்கட்டை முறைத்தான் மயூரன். அவன்தானே ஸ்டேஜுக்கு கீழே நின்ற லெக்சரரின் மொபைலுக்கு செகரட்டரியை டான்ஸ் ஆட சொல்லி மாணவர்களை கேட்கச் சொல்லுங்கனு மெசேஜ் போட்டு விட்டது.
“இப்போ டான்ஸ் ஆட மூடு வரணுமே செகரட்டரி சாருக்கு” என்றான் கிண்டலாக வெங்கட்.
“தனியா ரூம்க்கு வருவல்ல அப்போ இருக்குடா உனக்கு” என்று எழுந்து விட்டான் டான்ஸ் ஆட மயூரன்.
மாணவர்கள் கேட்டு மறுக்க மாட்டான் என்ற நம்பிக்கையிலும் மனம் இறுக்கத்துடன் வாழும் நண்பனை கொஞ்ச நேரமாவது அவன் மனம் இலகுவாகட்டும் என்ற பாசத்தோடு அக்கறையில் இந்த ஏற்பாட்டை வெங்கட் செய்திருந்தான்.
மயூரனும் வெங்கட்டும் ஸ்டேஜ்ஜிலிருந்து சேர்ந்து இறங்கிவந்ததும் பாட்டு போட்டு விட்டனர்.
காட்டுக்குயிலு மனசுக்குள்ளே
பாட்டுக்கென்றும் பஞ்சமில்ல-பாடத்தான்
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலைவிட்டு கச்சைக்கட்டு – ஆடத்தான்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள
பாட்டுக்கொன்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைத்தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்கட்டு – ஆடத்தான்
எல்லோரும் மொத்ததிலே
சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே
உல்லாச நெஞ்சத்திலே… ஹேய்
காட்டுக்குயிலு மனசுக்குள்ள…
மயூரனும் வெங்கட்டும் சேர்ந்து டான்ஸ் ஆட அனைத்து லெக்சரர்களும் பாரம்பட்சமின்றி டான்ஸ் ஆடினர்.
மயூரன் ஆடிக்கொண்டே வந்தவன் யாழினியின் மீது மோதி விட்டான். இருவரின் கண்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக்கொண்டது.
“சாரி தெரியாம இடிச்சிட்டேன் டான்ஸ் பண்ணு” என்று சுதாரித்து பேசி தள்ளி நின்றான் மயூரன்.
அனைவரும் ஆடல் பாடலுடன் சந்தோசத்தில் துள்ளிக்குதித்திருக்கும் நேரம் மயூரன் அருகே வந்த யாழினியோ “மாமா ஐ.லவ்.யூ” என்றாள் தரையை பார்த்தபடி.
யாழினியின் நேரமோ என்னவோ மயூரனுக்கு போன் வர பாட்டுச் சத்தத்தில் “ஹலோ! ஹலோ!” என்று பேசிக்கொண்டே அவனது அறைக்குள் சென்று போன் பேசி வந்தான்.
யாழினியோ ‘இந்த முறையும் நான் ஐ லவ்யு சொன்னது உங்க காதுல விழாம போயிடுச்சுல்ல மாமா’ என்றாள் விரக்தி புன்னகையுடன்.
இறுதியாக உரி அடிக்கும் போட்டி மாணவர்கள் டர்ன் முடிந்து லெக்சரர்ஸ் முறையும் வந்தது. வெங்கட் அடித்து முடித்து அடுத்ததாக கண்ணைக்கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினான் மயூரன்.
அருணாச்சலத்தின் கார் கேம்ப்பஸிற்குள் வந்துக் கொண்டிருந்தது. மான்வியின் இதயத்திற்குள் மின்னல் வெட்டியது. சில வருடங்கள் கழித்து மீண்டும் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். அவளது முகத்தில் வியர்வை பூத்தது.
“சார் இந்த பக்கம் வாங்க! அந்த பக்கம்” என்று ஒவ்வொருவரும் மயூரனை திசை திருப்பிக்கொண்டிருந்தனர். ஒரு முறை அடிக்க உரிப்பானை மேலே போய்விட்டது. மூன்றாவது முறை அடிக்க பட்டென்று உடைந்து அதிலிருந்து மஞ்சள் தண்ணீரும் பானையை சுற்றி வைத்திருந்த மாலையும் மான்வியின் மீது மஞ்சள் அபிஷேகமும் மாலையும் போட்டு மரியாதை செய்தது போல அமைந்து விட்டது.
“ஹேய்” என்று மாணவர்களின் குரல் சத்தத்தில் கட்டியிருந்த கண்ணை திறந்தான்.
யாரை பார்க்கவே கூடாது நினைத்திருத்தானோ அவன் கண் முன்னே அவனின் மானு நின்றிருந்தாள் புது விதமாற்றத்தில் சாதாரண காட்டன் சேலையுடன் தலைமுடியை வளைத்துப்போட்ட கொண்டையும் போட் நெக் கழுத்துமாய் நின்றவளை நெருப்பு கக்கும் பார்வை பார்த்தவன் இருக்கும் இடம் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கை முஷ்டியை இறுக்கி கண்மூடித்திறந்தவன் மைக் கொண்டு வா என்று கதிரவனை கை அசைத்து அழைத்தான் மயூரன்.
மைக் மயூரன் கைக்கு வந்ததும் “ஒன்வீக் பொங்கல் ஹாலி டே ஸ்டுடன்ஸ் என்ஜாய் பண்ணிட்டு வாங்க அகைன் ஹாப்பி பொங்கல்” என்றவனோ அங்கே நிற்க பிடிக்காமல் அவனது அறைக்குள் வேக நடையுடன் சென்றுவிட்டான்.
சிலையாக நின்ற மான்வியின் தோளில் கைவைத்து “வாம்மா நம்ம அறைக்கு போகலாம்” என்று பேத்தியின் கை பிடித்தார் அருணாச்சலம்.
“ஒரு காலத்தில் உன்னை பார்த்துட்டே இருக்க தோணுதுடி மானு” என்று மான்வியின் கன்னத்தில் முத்தமிடுவான் மயூரன். இன்றைக்கோ அவளை ஒரு நிமிடம் கூட நின்று பார்க்க பிடிக்காமல் சினத்துடன் நடந்துச் செல்பவன் முதுகை ஆற்றாமையாக பார்த்தாள்.
‘ஒரு நிமிசம் நான் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்டிருக்கலாம் மயூ! ஏன் மயூ கேட்காம போனீங்க?’ என்று அவளது உள்ளம் உலைக்கலன் போல கொதித்துக்கொண்டிருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் கலைந்துச் சென்றிருந்தனர். சைலஜாவை தவிர வேறு யாருக்கும் மான்வியை தெரியாது.
“வாங்க ஐயா” என்று அருணாச்சலத்திற்கு வணக்கம் வைத்த வெங்கட்டோ மான்வியின் புறம் திரும்பி “எப்படிமா இருக்க என்கிட்ட ஒரு போன் பேச கூட நேரம் இல்லையா! என் போன் நம்பரை பிளாக் பண்ணிட்டியாமா” என்றான் சிறு கோபக்குரலுடன்.
“என் சூழ்நிலை அப்படி அண்ணா என்னை எதுவும் கேள்வி கேட்காதீங்க!” என்று வாயை பொத்திக்கொண்டு அருணாச்சலத்தின் அறைக்குள் ஓடிவிட்டாள்.
அறைக்குள் இருந்த சோபாவில் உட்கார்ந்து முகம் மூடி அழுதவளின் தோளைத்தொட்டு மான்வியின் பக்கம் உட்கார்ந்தாள் யாழினி.
கண்ணீரை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவளிடம் “எதுக்கு மான்வி மறுபடியும் இங்க வந்த மாமாவுக்கு உன்னை பிடிக்காதுனு தெரிஞ்சும் அவர் முன்னால எதுக்கு வந்து அவமானப்படணும்?” என்றாள் யாழினி.
தன் மன பாரத்தை மறைத்துக் கொண்ட மான்வியோ “ஏன் உனக்கு இடைஞ்சலா வந்துட்டேனு கவலையா இருக்கா யாழினி?” என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“நான் எதுக்கு கவலைப்படணும்?” கண்களை உருட்டினாள்.
“உனக்கும் மயூரன் சாருக்கும் கல்யாணம்னு கேள்விப்பட்டேன் நான் திரும்பி வந்தது உனக்கு வருத்தம் வராம இருக்குமா என்ன?” என்றவளை இடைமறித்து.
“மயூரன் மாமா கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லிட்டாங்க! என்னால மறுப்பு சொல்ல முடியலை மான்வி! நீ எங்க இருக்கனு எனக்குத் தெரியலை! இப்ப நீ வந்துட்டல்ல க.கல்யாணத்தை நிறுத்திடறேன் நீயும் மாமாவும் சேர்ந்து வாழ்ந்தா சந்தோசப்படற முதல் ஆள் நான்தான் டி” என மான்வியின் கன்னம் பற்றி அவளது கண்ணீரை துடைத்து விட்டாள்.
“என்னை வேண்டாம்னு தூக்கி போட்டவங்க கூட எனக்கு வாழ விருப்பம் இல்ல யாழு..! நீ. நீ உன் மாமாவை தாராளமா கல்யாணம் பண்ணிக்கலாம் நான் குறுக்கே வரமாட்டேன்” என்றவளோ ஆழ்ந்த பெரும்மூச்சை இழுத்து விட்டுக்கொண்டாள். இந்த வார்த்தையை கூற அவள் பட்ட ரணம் அவளுக்குத்தானே தெரியும்.
“நா.நான் தனியா இருக்கணும் யாழு” என்றாள் கண்களை மூடிக்கொண்டு.
“இப்போ மேடம் எங்க தங்கறதா உத்தேசம்?”
“தாத்தாவுக்குத்தான் தெரியும்” என்றாள் ஒட்டாத வார்த்தையுடன்.
“போன் பண்ணுறேன் பழைய நம்பர்தானே வச்சிருக்க! ” என்றவளிடம்.
“எனக்கு நம்பரை மாத்துற பழக்கம் கிடையாது யாழினி” என்றாள் கண்களை மூடியபடியே மான்வி.
“உனக்கு என் மேல இருக்க கோபம் குறையலடி நான் பொங்கல் ஹாலிடேஸ் முடிச்சு வந்து பார்க்குறேன்… சந்திரா அத்தை மூனு முறை போன் பண்ணிடாங்க பொங்கலுக்கு கிராசரிஸ் வாங்கணும்னு சொல்லியிருக்காங்க நான் கிளம்புறேன்” என்றவளிடம் மான்வி பேசாமல் அமைதியாக இருக்க பெரும்மூச்சு விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள் யாழினி.
மான்வி இருந்த அறைக்கதவை வேகமாக திறந்துக் கொண்டு வந்த மயூரனோ உட்கார்ந்திருந்த மான்வியின் கையை பிடித்து எழுந்து நிற்க செய்தான். அவள் தடுமாறி கீழே விழ போனவளின் கையை மடக்கி பிடித்து
“என் கண்ணு முன்னாடி வரக்கூடாதுனு சொல்லியிருந்தேனடி இப்ப எதுக்குடி வந்த சொல்லுடி?” என்று அவளது கன்னத்தை அழுந்த பற்றினான் அவளுக்கு வலிக்கும்படி
“வலிக்குது மயூ கையை எடுங்க” என்றாள் கண்ணீர் துளிகளுடன்.
“வலிக்கட்டும் டி எனக்கு வலியை கொடுத்துட்டு போனீல்ல நல்லா வலிக்கட்டும்” என்று இன்னும் அவளது தாடையை விட்டு குரல்வளையை பிடித்துவிட்டான் லேசாகத்தான் ஆனால் அவனது கோபத்தின் அளவு எரிமலையாக கொதித்துக்கொண்டிருந்தது.
“கையை எடுடா” என்ற அருணாச்சலத்தின் குரலில் கையை எடுத்த மயூரனோ “நீங்கதான் இவளை இங்க அழைச்சிட்டு வந்தீங்களா தாத்தா! இவ இந்த காலேஜ்ல ஒரு நிமிசம் இருக்க கூடாது. இப்பவே அனுப்பி வைங்க.. இல்லைனா நான் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவேன்” என்றான் ஆக்ரோசத்துடன்.
“உன் வீட்டிலிருந்து நீ என் பேத்தியை நான் இல்லாத நேரத்துல வெளியே தள்ளியிருக்கலாம். நான் இருக்கும் போது என் பேத்தி மேல கையை வைக்குற உனக்கு எவ்ளோ திமிர் இருக்கணும்டா மயூரா” என்றார் அதீத கோபக்குரலுடன்.
“இவ பண்ணின காரியத்துக்கு இவளை பூ போட்டு கொண்டாடி இருக்கணுமா தாத்தா. அம்மாவை கொல்லப்பார்த்திருக்கா நல்ல வேளை நான் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு போனதால அம்மாவை காப்பாத்திட்டேன். என் அம்மா உயிரை விட இவ எனக்கு பெரிசு கிடையாது தாத்தா! அப்பவே இவளை நான் கொன்னிருப்பேன் அப்பா தடுத்திட்டாரு! இவ இந்த காலேஜ்ல இருக்கக்கூடாது வெளியே அனுப்பிடுங்க!” என இருமி நின்ற மான்வியை கொலைவெறி பார்வையுடன் பார்த்தான் மயூரன்.
“நா.நான் யாரையும் கொலை பண்ண முயற்சி பண்ணல தாத்தா மறுபடியும் மறுபடியும் எனக்கு கொலைகாரி பட்டம் கட்ட வேணாம்னு சொல்லுங்க” என்றவளை
“ஏய் நான் கண்ணால பார்த்தவன்டி என்கிட்ட மறுபடியும் பொய் சொல்லாதே” என மான்வியை அடிக்க கையை ஓங்கி விட்டான்.
“மயூரா” என்ற அருணாச்சலத்தின் அதட்டலில் கையை மடக்கி டேபிளில் குத்திக்கொண்டான். அவனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.
“என் பேத்தி இந்த காலேஜ்லதான் வேலை பார்ப்பா! அவளை இங்கிருந்து போகச் சொல்ல உனக்கு அதிகாரம் கிடையாது நீ வாம்மா போகலாம்” என்று மான்வியை கையை பிடித்தார்.
“தாத்தா என் பேச்சுக்கு மதிப்பு அவ்ளோதானா! இந்த காலேஜ்ல ஒவ்வொரு கோர்ஸ் வாங்குவதற்கும் யூனிவர்சிட்டி முன்னால நாயா பேயா தூக்கம் கெட்டு கோர்ஸ் அப்ரூவ்ட் வாங்கி வந்த எனக்கு நீங்க கொடுக்கற மரியாதை இவ்ளோதானா!” என்றான் இதழை சுளித்து.
“யாருடா நீ உழைக்கலைனு சொன்னது. உன்னாலதான் இந்த காலேஜ் தரம் உயர்ந்திருக்கு நான் இல்லைனு சொல்லமாட்டேன். என் பேராண்டி திறமையாவன்னு மார்தட்டி பெருமைப்படுவேன். அப்படி நீ நாயா பேயா வேலைபார்த்ததுக்கு வேணா சம்பளமா எடுத்துக்கோடா! ஆனா என் பேத்தியை வெளியே போகச் சொல்ல உனக்கு உரிமை கொடுக்கமாட்டேன்டா! உன் அம்மாவுக்கு நீ, உன் தம்பி, உன்னோட அப்பா எல்லாரும் இருக்கீங்க. என் பேத்திக்கு நான் மட்டும்தான் இருக்கேன். அவளை நீ அம்போனு விரட்டி விட்டமாதிரி நான் என் பேத்தியை விட முடியாதுடா” என்று அழுத்தம் திருத்தமாக பேசியவரின் முன்னால் பேச்சற்று நின்றான் மயூரவாஹனன்.
அருணாச்சலம் மான்வியை அவரது தனி பங்களாவிற்கு அழைத்துச் சென்றார்.
“என் கண்ணு முன்னாடி வரக்கூடாதுனு சொன்னேன்லடி ஆனாலும் நீ வந்துட்ட இனிமேதான் நரகம்னா என்னனு உனக்கு காட்டப்போறேன்டி” மூக்கு விடைக்கும் சினத்தோடு பேப்பர் வெயிட்டை தூக்கி துவற்றில் அடித்தான்.
Nice.semma