காதல் தானடி என் மீதுனக்கு?
[7]
தன் இடது மணிக்கட்டில் தொங்கிக் கொண்டிருந்த செப்புக் காப்பைத் தொந்திரவாக எண்ணிக் கொண்டானோ? என்னவோ?
அதைத் தன் வலது கையால் முழங்கைக்கு அருகே வரை மேலேற்றிய சரவணன், தன் பணியாளர்களை நோக்கினான்.
அவனுக்கென்று சொந்தமான அரிசி குடோனில் இருந்த அரிசி மூட்டைகள், குடோனுக்கு வெளியே கிடந்த லாரியில், அவனது பணியாளர்களால் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.
ரொம்பவும் சுறுசுறுப்பாகத் தான் வேலை நடந்து கொண்டிருந்தாலும் கூட, முதலாளியான சரவணனுக்கு இன்னும் வேலை.. துரித கதியில் நடைபெற வேண்டும் என்று தோன்றியது போலும்!!
தன் மிரட்டும் தொனியில் அதிகாரமாகவே சத்தம் போட்டான் சரவணன்.
“என்னலே தேஞ்சிட்டிருக்கீக? சட்டுப்புட்டுன்னு வேலய பாருலேஏஏ!!..”என்ற அவனுடைய கத்தலில், மூட்டைகளை லாரியில் ஏற்றும் பணி.. மின்னல் வேகத்தில் நடைபெறலானது.
அத்தோடு நில்லாமல்… லாரியில் ஏற்றப்பட்ட மூட்டைகளை.. தன் கண்களாலேயே சரவணன் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் தான் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
தன் முதுகில் ஒவ்வொரு அரிசி மூட்டைகளை சுமந்து கொண்டு வந்த பணியாளர்கள், லாரியின் மேல் திட்டில் வைக்க, அதை லாரியில் மேற்பரப்பில் இருந்தவர்கள்.. தூக்கிக் கொண்டு போய் வரிசைக்கிரமமாக அடுக்கிக் கொண்டிருந்த சமயம் அது!!
அந்நேரம் சரவணனுக்குச் சொந்தமான அந்தக் குடோனிற்கு.. கறுப்பு நிற ஜீப் வண்டியொன்று.. வேகத்துடன் வந்து.. ‘யூ டர்ன்’ அடித்து திரும்பி நின்ற தினுசில்….
மழையே இல்லாது தூசி மண்டிக் கிடந்த அந்த மண்ணில் இருந்து மூன்றரையடி உயரமளவுக்கு எழுந்து பரவியது புழுதி!!
பணியாளர்கள் தன் வேலைகளை அப்படியே விட்டு விட்டு, ஸ்டைலாக வந்து நின்ற ஜீப்பையே நோட்டம் விட, யாரும் நினைத்துப் பார்த்திராத வண்ணம் வெள்ளை சட்டை, வேஷ்டி சகிதம்.. புது மாப்பிள்ளைக் கணக்காய் இறங்கினான் பரிதிவேல் வீரன்!!!
அவனது அயோக்கியத்தனத்தை மறைத்து நல்லவன் பாவத்தைத் தரும் முகத்தில்… நெற்றியின் சின்ன விபூதிக் கீற்றுடனும்,
கண்களில் கூலர்ஸூடனும், முறுக்கு மீசையுடனும், கூடவே தூசு படியாத புத்தம் புது காலணிகளுடனும், இறங்கியவனை பணியாளர்கள் வியப்பு மீதூறப் பார்த்துக் கொண்டிருக்க..
வேஷ்டி நுனியை கையில் பிடித்துக் கொண்டு, தன் வலிய தொடை தெரிய நடந்து வந்தவனின் நடையின் கம்பீரம் எழுத்தில் வடிக்கும் தரமன்று!!
அத்தனையொரு கம்பீரம் அவன் நடையில் மிளிர்ந்து கொண்டிருந்தது.
அவன் நடையில் மட்டுமா கம்பீரம் உண்டு? அந்த முரடன் தொட்டது, துலங்கியது என் எல்லாவற்றிலும் கம்பீரம் மிளிரும்!!
‘பரிதிவேல் வீரன்!!’என்னும் தன் பெயரிலேயே கம்பீரம் கொண்டவனாயிற்றே அவன்??
கன்னியர்களை வீழச் செய்யும்.. அவன் இதழ்க்கடையோரச் சிரிப்பு!! போதையேற்றும் அவனது நிமிர்ந்த பார்வை!!
கள்ளுண்ட மந்தியராய் ஆக்கும் மாதுக்களை..அவனது கூன் விழாத விறைத்த நடை..!!
அவன் வாய் விட்டுப் பேசினால் மனம் சொக்கிப் போகும் அவன் பால்!!
இத்தனையிலும் பரிதிவேல் வீரன் ஓர் முரடன்!! யாருக்கும் மண்டியிடாத முரட்டுக்காளை அவன்!!
கண்ணனின் லீலையைக் கோபியர் கொண்டாடியது போல.. அவன் முரட்டுத்தனத்தைக் கொண்டாடவும் இந்த நவீன கண்ணனுக்கு கோபியர் பட்டாளமே உண்டு!!
அவன்… பரிதிவேல் வீரன் தன்னைப் பார்ப்பாரை சிலையாக்கும் வரத்தை வாங்கி வந்திருப்பவனா என்ன?
பரிதிவேல் வீரனைக் கண்டதும் உள்ளூற ஓர் அச்சம் பிறந்ததோ? என்னவோ?.. அவனைக் கண்டதில் அனைவரும் கல்லாய் சமைந்து நிற்க, சரவணனின் முகத்திலோ, தன் முறைப்பெண்ணின் முரட்டுக் கணவனைக் கண்டதும் தாடையென்புகள் இறுகி, முகத்தில், எள்ளும், கொள்ளும் வெடிக்கலானது.
தன் நாசித்துவாரங்கள் இரண்டும் அகல விரிய, செப்புக் காப்பு போடப்பட்டிருந்த கையை இறுக்கி மடக்கிக் கொண்டு, தன்னை நோக்கி நடந்து வரும்.. ‘பரிதிவேல் வீரனை’ சுட்டெரிப்பது போல பார்வை பார்த்தான் சரவணன.
ஆனால் தகிக்கும் அந்தச் சூரியனோ, சரவணனின் பார்வையைக் கால் தூசுக்குக் கூட கணக்கில் கொள்ளாது சரவணனை நோக்கி வந்தான்.
தன் கோபத்தை உள்ளூற அடக்கிக் கொண்ட சரவணன், இயன்றவரை தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான்.
தன் அழுந்த மூடிய இதழ்களில் பட்டென ஓர் நமுட்டுச் சிரிப்பு பரவ, “ஹென்ன ப்பரிதிவ்வேல் வ்வீரன்?? .. இந்தப் பக்கம் வந்திருக்கீக??.. ஏதாவது அரிசி கிரிசி வேணுமோ??..”என்று எகத்தாளமாக கேட்டவன், பரிதியின் பதிலை கொஞ்சமும் எதிர்பார்த்து நிற்கவில்லை.
மாறாக சட்டென்று தன் தலைமைப் பணியாளனின் பக்கம் நோக்கியவன், “ஏலே முனியா… ப்பரிதி ஐயா வண்டியில ஒரு இரண்டு மூட்ட அரிசி ஏத்துலே??..”என்றவன், மீண்டும் மென்னிலாவின் பரிதியை நோக்கி,
நக்கலும், நையாண்டியும் கொப்பளிக்கும் குரலில், “என்ன பரிதி? இரண்டு மூட்ட காணும் (போதும்) தானே?”என்று சொல்ல, தன்னை ‘பிச்சைக்காரன்’ போல நடத்தும் சரவணனின் உள்நோக்கம் புரிந்தாலும்… அதற்கு கோபப்படாமல் அமைதியாகவே நின்றான் பரிதிவேல் வீரன்!!
சரவணனின் தலைமைப் பணியாளன் ‘முனியன்’ தான், ஏற்றிக் கட்டியிருந்த லுங்கியை இறக்கிக் கட்டிய வண்ணம், “சரிய்யா” என்றவாறு,
இரண்டு மூட்டை அரிசியைத் தூக்க குடோனுக்குள் நுழைய ஆயத்தமாக , அதை ‘வேண்டாம்’ என்பது போல ஒற்றைக் கையுயர்த்தித் தடுத்தான் பரிதி.
சூரியன் தன் சீற்றம் தணியாமல்.. சரவணனை நாடிப் போனான்.
தன் எதிராளியின் கண்ணோடு கண் மோத நின்றவன், தனக்கேயுரிய கணீர்க் குரலில், “ம்.. எகத்தாளம்? என்னய பார்த்தா.. சோத்துக்கு லோல் பட்டு.. உன் கிட்ட பிச்ச எடுக்க வந்தவனாட்டமா இருக்கு??”என்று கேட்டவன், தன் முத்து மூரல்கள் தரிசனம் தர அழகாய் நகைத்தான்.
சட்டென மீண்டும் தன் முகத்தை கொடூரமாக மாற்றியவன், “நான் ந்நெனச்சா … உன் இடத்த.. நீய்யே… எழுதி… குடுக்கறாப்ல செஞ்சு போட்டு.. போயிட்ட இருப்பேன் … உன்ன விட அஞ்சு வயசு பெரியவன் நான்…. உன்னய மாதிரி எத்தன பேர நாம் பார்த்திருப்பேன்.. ‘தாத்தா லுங்கிக்குள்ள வளர்ந்த பய’ இப்படியெல்லாம் பேசலாமா சொல்லு.. ??”என்று கேட்க, சரவணன் தன் பற்களை நறுநறுவென கடிக்கும் ஓசை ஏகாந்தமாகக் கேட்டது பரிதிக்கு.
“தாத்தா லுங்கிக்குள்ள வளர்ந்த பய” என்ற வாசகம் சரவணனை சுருசுருவென்று கோபம் ஏறச் செய்தாலும், பரிதியைப் பொறுத்தவரை அது தான் உண்மை!!.
இதயம் ‘திக்திக்’ என்று அடிக்க, நடப்பதையெல்லாம்.. வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த முனியனிடம்.. “டேய் முனியா… ஐயாவுக்கு ஒரு எளநீ வெட்டுப் பார்க்கலாம்.!!”. என்று சொன்னது மட்டும் தான் தாமதம், பரிதிவேலின் மீதிருக்கும் அச்சம் அவனது சொல்லுக்கு அடிபணிய வைத்தது.
அவனும் பவ்வியமாக “சரிங்கய்யா” என்ற வண்ணம் அருகிலிருக்கும் தென்னந்தோப்புக்குள் விரைய, தன் அடியாள் பரிதியின் சொல்லைக் கேட்பது உச்சபட்ச எரிச்சலைக் கொடுத்தது சரவணனுக்கு.
சரவணனின் தாடை பற்றி மெல்ல தன்னை நோக்கி திருப்பிய பரிதிவேல் வீரன், தீவிரமான குரலில்,
“இங்க பாரு கண்ணா.. நான் இங்கன நின்னு பொறுமயா பேசிட்டிருக்க காரணமே எம்பொஞ்சாதி தான்.. தெரிஞ்சோ தெரியாமலே நீ எம்பொஞ்சாதியோடா.. சொந்தக்காரனா போயிட்ட..”என்று சொன்னதும் சீறும் குரலில் இடையிட்டான் சரவணன்!!
“நான் ந்நிலாவோட மொற மாமன்!!..”-என்று சீறியவன், ஏகத்துக்கும் பரிதிவேல் வீரனை முறைத்து வைத்தான்.
அந்த முறைப்பில் பரிதிவேலுக்கு மீண்டும் ஓர் மொட்டுநகை அரும்பியது. தன் கைகளை இடுப்பில் வைத்து கம்பீரம் துளியேனும் குறையாமல் நின்றவன்,
“.. அத நீரு.. முறைச்சிக்கிட்டுத் தான் சொல்லுவியளோ? ரைட்டு விடு… சரி.. ம்மொர்ரற… ம்மாமன்!!”என்றான் நன்றாகவே அழுத்தம் கொடுத்து.
சரவணனுக்கு அவன் பேச பேச.. சீற்றம் அதிகமாகிக் கொண்டே போனது!! ஆனாலும் பரிதிவேலின் செல்வாக்கு.. அவன் மேல் அவனுடைய மூச்சுக்காற்றுப் படுவதையும் கூட யோசிக்க வைத்தது.
முரடன் தான் விட்ட இடத்திலிருந்தே தொடர்ந்தான்.
அவன் விழிகளில் கொலைவெறி தாண்டவமாடியது. “எம்பொஞ்சாதியோட மொர்ற மாமனா போயிட்ட.. இல்லீன்னா.. நீ பண்ணி வைச்சிருக்கற காரியத்துக்கு உன்னய்ய்.. ய… என் க்கையாலயே சாஆஆவ்.. வடிக்கணும் போல தான் இருக்கு.. ஆனா இத தெரிஞ்சா எம்பொஞ்சாதியோட… ‘ரொமான்ஸ் கட்’.. ஆச்சுன்னா?? .. அதனால தான்.. இத்தோட விட்டுட்டுப் போறேன்..”என்று பரிதி மிரட்ட, சரவணனின் ஒற்றைப்புருவம் மெல்ல உயர்ந்தது.
‘பரிதி இத்தோடு விட்டுட்டுப் போகிறானாமா? அப்படியானால் அவன் இதற்கு முன்னம் ஏதாவது செய்திருக்கிறானா?’என்ற கேள்வி எழ… விழிகள் சந்தேகத்தில் இடுங்க,
“நீ என்ன சொல்லுற பரிதி? ?”என்று கேட்டான் சரவணன்.
பரிதியின் குறுஞ்சிரிப்பு இன்னும் கொஞ்சம் அழகாக விரிந்தது.
“ உனக்கு இன்னும் சேதி வரல்ல போல இருக்கே?”என்று கேட்ட வேளை… அந்நேரம் பார்த்து சட்டென சரவணனின் செல் சிணுங்க.. உள்ளுக்குள் பயப்பந்துகள் உருளலாயிற்று மென்னிலாவின் முறைமாமனுக்கு!!
“.. ‘மணியோச வரும் முன்ன.. யானை வரும் பின்ன’ன்னு சொல்றது இது தானா? நான் தான்.. உனக்கு சேதியார மொத.. முன்னாடி வந்து சொல்லிட்டேனா??.. ஃபோன எடுத்து பேசு மோனே..”என்று சொல்ல, பரிதியையும், செல்லையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நின்றான் சரவணன்.
இம்முறை எதை செய்து வைத்திருக்கிறான் இந்தக் குரூரன்?? என்ற அச்ச உணர்வு எழுவதை சரவணனால் எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை.
பரிதிவேல் மற்றவனின் அச்சத்தை இரசித்தான். கூடவே சிரித்த படி, “ம்.. அட்டென்ட் பண்ணிப் போட்டு.. ஸ்பீக்கர்ல போடு மோனே..”என்று சொல்ல, சரவணனின் கைகள் அவ்வாறே செய்தன.
மறுமுனையில் இருந்து வார்த்தைகள் வரும் முன்னம், பதற்றத்துடன், “சொல்லு மணி..”என்றான் சரவணன்!!
மறுமுனையில் இருந்த “மணி”யோ தன் முதலாளியின் குரல் கேட்டதும் பதறி அடித்துக் கொண்டு பேசலானான்.
அவனின் அழுகை சரவணனின் நெஞ்சை உலுக்குவது போல இருந்தது.
“ஐய்யாஆ… நம்ம மில்லு பத்தி எரியுதுய்யாஆஆ…கரண்ட்டு வயரு ஸோட்டானதுல.. எந்திரம்லா வெடிச்சிச் சிதறிப்போயி.. ரொம்ப தீவிரமா எரியுதுய்யாஆஆ.. உள்ளுக்குள்ள இருந்த பாண்டியனும் போய் சேர்ந்துட்டான்யாஆஆ..”என்று கதறி அழ, மில்லுக்குள் இருந்த மனித உயிரும் பலியானது கண்டு.. நெஞ்சு விம்மிப் புடைத்து சிவந்தன சரவணனின் கண்கள்!!
அவை, அதற்குக் காரணமான பரிதிவேலின் கண்களை சுட்டுப் பொசுக்கும் கோபத்துடன் பார்க்க, இம்முறை பரிதி எகத்தாளமான குரலைக் கையாண்டான்.
“அச்சச்சோ ஸாரிடா.. சரவணா!! .. உள்ளாற உன் ஆளு இருந்தத…என் ஆளுங்க கவனிச்சிருக்க மாட்டாங்க.. மில்ல மட்டும் தானே கொளுத்த சொன்னே..”என்றவன் இராவணனோ? முற்காலத்தில் பிறந்த இலங்கையின் அரக்கனோ??
ஓர் உயிர் அநியாயமாக பறிபோனதைப் பற்றிக் கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் பேசுகிறானே? என்றிருந்தது சரவணனுக்கு.
சரவணன் பரிதிவேலை முறைத்த வண்ணமே கல்லாய் சமைந்து விட்டானோ? சரவணனிடமிருந்து வேறெந்த ரியாக்ஷனும் இல்லை.
இவன் தான், “என்ன மொறச்சிக்கிட்டு நிற்கற? ம்மொற.. ம்மாமா!!! .. சீக்கிரம் பயர் சர்வீஸ்க்கு கோல் ப்பண்ணி.. தீய அணைக்கச் சொல்லு.. இல்லீன்னா ஒரு புடி மண்ணு கூட மீயாது… (எஞ்சாது)”என்று சொல்ல, சிவந்த கண்களுடன் வாய் திறந்தான் சரவணன்
“ஃபயர் சர்விஸ்க்கு கோல் பண்ணு மணி.. அப்படியே ஆம்புலன்ஸையும் வரச்சொல்லு.. நான் அங்கன கிளம்பிட்டிருக்கே”என்றவனுக்கு, கோபம் குமிழியிட,செல்லை அணைத்து விட்டு,
சடாரெனப் பாய்ந்து தடாலடியாக, பரிதியின் வெள்ளை சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டான் அவன்!!
சரவணனின் நெற்றியோடு தன் நெற்றி உரச மாரோடு மார் மோத நின்றவன், “என்ன த்தைரியம் இருந்தா.. என் வீட்டு க்கொல்லப்பக்கம் வ்வந்து.. எம்பொஞ்சாதிய கைப்புடிச்சு இழுத்து.. அத்துமீறி இருப்ப?? … அவ பரிதிவேல் வீரனோட பொஞ்சாதீஈ….. இனி அவ கிட்ட வ்வ்..வாலாட்டின இப்படித்தான் நடக்கும்.. !!”என்று சொல்ல,
மென்னிலாவை இவனுக்குத் தெரியாமல்.. சரவணன் சந்தித்ததை எப்படி அறிந்தான்? என்ற அதிர்ச்சியிலேயே அவனை விட்டும் கையை இறக்கினான் சரவணன்.
ஆம், மென்னிலாவை இவன் பார்த்தது.. கட்டியணைத்தது.. அதை அவனது மனைவி உதறி விட்டது என அனைத்தையும்.. வீட்டுக்குப் பின்னாடி பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா மூலம் அறிந்து கொண்டவனுக்கு.. மனைவி மறுக்க மறுக்க சரவணன் அணைத்தது போலவே தோன்றியது.
மனைவியிடம் சரவணன் அத்துமீறியதற்கான தண்டனையே இது!!
பரிதிவேல் வீரன் தொடர்ந்து சொன்னான்.
“இங்க பாரு சரவணா.. எனக்கு உன் ஃபீலிங்க்ஸ் புரியுது.. ஆனா இப்ப அவ எம்பொஞ்சாதி.. ‘பிறன்மனை நோக்கல் குத்தமுன்னு’ வள்ளுவரே சொல்லியிருக்காரு.. அதனால என்ன பண்ற? இன்னமும் மென்னிலா மேல ஆசை வைக்கறது.. அவள நெனச்சு.. தாடி வைக்கறது… இதெல்லாம் விட்டுப் போட்டு.. ஒழுங்கு மரியாதயா.. நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்க… இல்ல நடக்கப் போறதுக்கு நாம்பொறுப்பு கெடயாது!! .”என்று சர்வசாதாரணமாக மிரட்டலையும் விடுத்து விட்டு, அங்கிருந்து நகர, சரவணன் அடக்கப்பட்ட சீற்றக்குரலில் கத்தினான்.
“நீ பார்க்க தான் போற.. ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள்.. என் மென்னிலா என்கிட்ட வரத்தான் போ.. றா..”என்றவனின் குரல் காதல் பரவசத்தில் கொஞ்சம் தழுதழுக்கத் தான் செய்தது.
அவன் சொன்னதில் கோபம் விரவியோட, சட்டெனப் பாய்ந்து, அவன் சட்டையைப் பிடித்த பரிதி..கொடூர விழிகளுடன்,
“வ்வேண்டிக்க.. அப்படியேதும் ந்நடக்கக் கூடாதுன்னு வ்வேண்டிக்க..அந்த நாள் வ்வராம இருக்கணும்னு வ்வேண்டிக்க.. அப்படி அவ்வ.. என் விட்டு உன் கிட்ட வந்தான்னா.. அவளயும் வ்வெட்டுவேன்.. உன்னயயும் வ்வெட்டுவேன்..”என்றவன் அவன் சட்டையை விடுவித்தான்.
பின்பு பெருமூச்சு விட்டு தன் ரௌத்திரம் அடக்கியவன், “சரவணா.. நீ நல்லவன் .. ஒரு கெட்டது பண்ணா உன் மனசு உறுத்தும்.. ‘மத்தவங்க நம்பள பத்தி தப்பா பேசுவாங்களே’ன்ற கவலை இருக்கும்.. ஆனால் ந்நான்??? கெட்டவன்!! .. மத்தவங்க என்னய.. பத்தி என்ன நெனப்பாங்கன்ற கவல கொஞ்சம் கூட கெடயாது.. அதனால சும்மா என் சூட்ட கெளப்பாத.. அது உனக்கு தான் நல்லதில்ல..”என்று சொன்னவன், அங்கிருந்து நகரத் திரும்ப, தலை சீவப்பட்ட இளநீருடன் மரியாதையாக வந்து நின்றான் முனியன்.
அவனைக் கண்டு விஷமமாகப் புன்னகைத்த பரிதிவேல் வீரன், “உங்க நொய்யா தான் ரொம்ப சூடா இருக்காப்ள.. அவருக்குக் குடு”என்றவனாக அவன் திரும்பவும் நடக்க, அவனது புறமுதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்.
‘போ.. பரிதி போ.. ஒரு நாள் நான் பட்ட வலிய.. நீயும் அனுபவிப்ப.. மென்னிலா உனக்கு தகுந்த பாடம் புகட்டுவாள்.. அவ உன் மேல வைச்சது காதல்னு நெனச்சிட்டிருக்கீயா? .. இல்ல.. அது உன்னய பழிவாங்குறதுக்காக நடத்துற நாடகம் தான்’என்று தன்னுள்ளேயே சொல்லிக் கொண்ட சரவணன்…. ‘கர்மா’ செயலாற்றப் போகும் நாளுக்காக காத்திருந்தான்.
****
அங்கே பரிதிவேல் வீரனின் பிரம்மாண்டமான வீட்டில் அவள் மனம் பொருந்திப் போகவில்லையாயினும் கூட, மனம் ஒருமித்துப் போய் விட்டது போலவே நடந்து கொண்டாள் மென்னிலா.
அனைவருடனும் தன் கதாபாத்திரத்துக்கு ஏற்றவாறு ‘எஜமானியம்மா’ என்ற ரோலில் பக்காவாகவே நடித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அதனாலேயே என்னவோ.. அந்த வீட்டில் பரிதிக்கு கிடைக்கும் மரியாதை.. துளியும் குறைவின்றி இல்லத்தின் அரசியான அவளுக்கும் வந்து சேர்ந்தது.
சற்று முன்னர் தான் தலைக்கு குளித்து விட்டு வந்திருப்பாள் போலும். அவளது அடர்ந்த தலைமுடியில் சிலதை ஹேர்கிளிப்பில் அடக்கி.. மிகுதியை சுதந்திரமாக பரவ விட்டிருந்தாள் அவள்.
கணவன், தன் உடலை வெளிக்காட்டும்.. அதிநவீன ஆடைகள் அணிவதில் விருப்பங் கொள்ளவில்லை என்பதை அறிந்திருந்த மென்னிலா..
‘மனமாற்றமடைந்து விட்டாள்’ என்பதை பறைசாற்ற… ஒழுக்கமாக சேலை மட்டுமே அணியவாரம்பித்திருந்தாள்.
கடும்பச்சை நிறத்தாலான சேலை உடுத்தி.. சேலைத்தலைப்பை தன் இடுப்பில் சொருகிய வண்ணம்.. போர்ட்டிகோ வாசற்படிக்கு அருகாமையில் அமர்ந்திருந்தவளின் கைகளில் அடைக்கலமாகியிருந்தது தட்டு நிறைய தானிய மணிகள்!!
‘அடுத்து அவனை எப்படி கவிழ்த்தலாம்??’என்று அதிதீவிர யோசனையுடன்.. போர்ட்டிகோவில் நின்றிருந்த புறாக்களுக்கு எல்லாம்.. கை நிறைய தானியம் அள்ளி விசிறிக் கொண்டே இருந்தாள் மென்னிலா!!
கொக்குக்கு ஒன்றே மதி போல… இவளுக்கும் அவனைப் பழிவாங்குவது ஒன்றே கதி!!
ஏதேதோ தொடர் யோசனைகளின் இறுதியில்… பழைய நினைவுகள் வந்து போக, பழிவாங்கும் உணர்ச்சியின் தீவிரம் அவள் கண்களுக்குள் மிகுதியாகிப் போனது!!
‘நீ இப்போ என்கிட்ட.. உசுரயே தர்றளவுக்கு பாசம் வைச்சிருந்தாலும்.. முன்னாடி நடந்தது எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்துருவேனா பரிதி!! கடவுள் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுப்பான்.. உன் சாவு என் கையில தான்’என்று உள்ளுக்குள் எண்ணிக் கொண்டவள்,
கையில் அகப்பட்ட தானியத்தில் பிரயோகித்த அழுத்தம் காரணமாக.. துகள் துகளாக உடைந்தது அது!!
அவள் கை விரல்கள் தானியத் தட்டில் மெல்ல அலைபாய, தீவிரமாக சிந்தனை வசப்பட்டிருந்தவளுக்கு, யாரோ ஒருவர் தன் முன்னாடி வந்து நிற்பது புரிந்தது.
கூடவே அந்நபரின் பிரசன்னம் அமைதியாகத் தானியம் கொத்திக் கொண்டிருந்த புறாக்களை எல்லாம், பயத்தில் “குறுகுறுத்துக்’ கொண்டே பறக்கச் செய்வதைக் கண்டவள், சட்டென்று சிந்தனை கலைந்தவளாக.. அண்ணாந்து பார்த்தாள்.
அவள் நிமிர்ந்து நோக்கிய போது, அங்கே ஒரு பெண்மணி.. வயது ஐம்பது, ஐம்பத்தைந்தைக் கடந்திருக்கும்!!
முகமெங்கிலும் எரிமலை சீற்றம் வெடிக்க, ரௌத்திரத்துடன் நின்றிருப்பது புரிந்தது.
அவருடைய நெஞ்சு ஆழ ஆழ மூச்சுக்களை விட்டபடி ஏறி இறங்குவதைப் பார்த்தவளுக்கு, அவரின் ரௌத்திரத்தின் வீரியம் எத்தகையது என்பது புரிந்தது.
சட்டெனக்குனிந்து.. அவள் கையில் இருக்கும் தானியத் தட்டை அந்தப் பெண்மணித் தட்டிவிட.. அவள் மேனியெங்கும் தானிய அட்சதைத் தூவப்பட்டு.. நாராசமான ஒலியுடன்.. அவளது வெள்ளைவெளேரென்ற பாதங்களில் வீழ்ந்தது அந்தத் தட்டு!!
அவள் ஆத்திரத்துடன் எழுந்து.. அந்த அதிரடியான பெண்மணியை முறைக்க, அப்பெண்மணியோ, “ந்நீ இங்க என்னடி ப்பண்ற?”என்று கேட்டாள்.
மென்னிலா இந்தப் பெண்மணியின் வருகையை உள்ளூற எதிர்பார்த்துத் தான் இருந்தாள்.ஆனால் இன்று யாருக்கும், சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்கக் கூடும் என்று தான் எதிர்பார்த்திருக்கவில்லை.
அவளைக் கண்டதும் பழைய நினைவுகள் எழுந்து.. அவளை எரிக்க, மென்னிலாவின் முகம் குரூரமாக மாறியது.
பற்களைக் கடித்துக் கொண்டே, “அத.. நான் உன்னை ப்பார்த்து கேட்க வேண்டிய க்கேள்வி…??”என்றவள், அப்பெண்மணியை பதிலுக்கு முறைத்துப் பார்த்தாள்!!
அந்தப் பெண்மணியின் அத்துமீறல்.. வந்ததும் நாகரிகமின்றி தட்டைத் தட்டி விட்ட விதம்.. அவளது பேச்சின் போக்கு என எதுவும் சுத்தமாகப் பிடிக்கவில்லை அவளுக்கு!!
மென்னிலாவிடமிருந்து இப்படியான மறுகேள்வி வரும் என்பதை எதிர்பார்த்திராத அந்தப் பெண்மணி சற்றே திகைத்துத் தான் போனார்.
எழுந்த சீற்றத்தில், மென்னிலாவின் பின்னந்தலையை ஒரு உள்ளங்கையால் அழுத்தமாகப் பற்றிக் கொண்டவர், வலியில் துடித்த மென்னிலாவின் முகத்தை குருரமாகப் பார்த்துக் கொண்டு,
“ஓடுகாலி சிறுக்கிக்கு வாய் நீளமாகிருச்சோஓஓ??”என்று கத்திக் கேட்கலானார்.
அந்தப் பெண்மணியின் கை… தோல் திரை விழுந்த கையேயாயினும், ரொம்ப ரொம்ப உறுதியாகவே இருந்தது.
அதிலிருந்து தப்ப முயன்று கொண்டிருந்தவளுக்கு, பெண்மணியின் கேள்வியில் பழைய நினைவுகளின் தாக்கம் எழுந்தது.
‘ஓடுகாலிச் சிறுக்கி’ என்னே பொல்லாத வாசகம் அது??
அந்தப் பெண்மணியின் கோபத்தைக் கண்டு அஞ்சாமல் சொன்னாள்;நெஞ்சு நிமிர்த்தி தைரியமாகச் சொன்னாள்,
“என்னை ஓடுகாலி ஆக்கினதே ந்நீதான்றத மறந்துட்டு பேசாத..”என்று!!!
அவள் அவ்வாறு சொன்னது மட்டும் தான் தாமதம், “என்னடீஈஈ.. திமிராஆஆ..???”என்று கேட்டவள், மென்னிலாவை ஓங்கித் தள்ளினாள் தரையை நோக்கி.
அந்தக் கொடூரியின் தள்ளலில், வாசற்படிக்கு சற்றுத் தள்ளி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூப்பாத்திகளின் கல்லில் போய்.. மென்னிலாவின்.. மிருதுவான நெற்றி எக்குத்தப்பாக மோத, தோல் கிழிந்து குபீரென்று வழிந்தது உதிரம்!!
‘கிர் கிர்’என்று ஓர் ஈர்ப்பு வலி எழுந்து, பின்னந்தலை முதற்கொண்டு வலிக்க, தன் வலியைக் காட்டாமல், ஆவேசமாகவே எழுந்து.. அந்தப் பெண்ணை நோக்கித் திரும்பியவளின் கண்கள் ஆக்ரோஷத்தில் சிவந்திருந்தது.
“எப்படி வ்வேணும்னாலும் வ்வைச்சிக்க.. நான் என் ப்புருஷன் வீட்ல இருக்கேன்.. அதுல உனக்கு எங்க க்குத்துது? கொடையுதூஊஊ? .” என்று அடிக்குரலில் இருந்து சீறிக் கேட்டாள் மென்னிலா.
மென்னிலாவின் தைரியமான பேச்சு, முன்னால் நின்ற பெண்மணிக்குள் உறைந்து கிடந்த ஏகபோக கோபத்தைக் கிளறிவிட,
“ஏய்..என்னடீ..என்னயவே எதிர்த்து பேசுறீயா??”என்று கேட்டுக் கொண்டே மென்னிலாவை நாடி ஓரெட்டு எடுத்து வைத்தாள்.
அவள் சிறிதும் சளைக்காமல் பதிலடி கொடுக்க நாடி, ரௌத்திரம் தாளாமல்,
“ம்மரியாதையா பேசு.. நீ என்ன வேணாலும் பேச.. அத கேட்டுட்டு இருக்க.. நான் ஒண்ணும் உன் வீட்டு வேலக்காரி கெடயாது.. இந்த வீட்டோட எஜமானி..”என்று அவள் சொன்னதும் தான் தாமதம்!!
“கொஞ்சம் இடைவெளி விழுந்ததும்.. உனக்கு குளிரு.. விட்டுப் போச்சுல.. உன்னய என்ன பண்ணுறேன்னு பாரு..”என்று கறுவிக் கொண்டே, அவளை அறைவதற்காக ஓங்கிக் கையை ஓங்கியிருந்தார்.
அந்த கையை தடுக்கப்பார்த்தவள், கண்களில் விழுந்தது.. போர்ட்டிகோ அருகே வந்து நின்ற ஜீப்பும், அதிலிருந்து இறங்கிய அவளது கணவனும்!!
கணவனைக் கண்டதும்.. அந்த வயசான பெண்மணியைத் தாக்க நினைத்த அவளுடைய கொடிய எண்ணம் அப்படியே மனதோடேயே நின்று போயிற்று.
அவள் கண்களில் இதுவரை இல்லாத பரிதவிப்பு கலந்த மென்மை வந்து போனது. பெயருக்கேற்ற மென்மையான மென்னிலாவாகவே மாறிப் போனாள் அவள்.
நெற்றியில் வழிந்த உதிரத்தை உள்ளங்கையால் அழுத்தி.. இன்னும் இரத்தம் வரச்செய்தவளாக, அழும் சின்னக்குழந்தையின் குரலில்,
“நா… நா.. அவர் கூட வா.. வாழணும்..னு ஆசைப்பட்டது தப்பா?? அ.. அவர இப்.. போ வர… மனசார.. கா.. காதலிக்க.. றது தப்பா??அவ.. ரையே உலகம்னு நினைக்.. கறது தப்பா?? .. நீங்.. க என்ன.. சொன்னாலும் சரி.. நான் என் மாமாவ விட்டுப் போக மாட்டேன்.. அவர விட்டு நா.. ன் போகவே மாட்டேஏஏ.. ன்!! ”என்று உணர்ச்சி பூர்வமாகக் கத்த, மனைவியின் வார்த்தைகள்.. அம்முரடனின் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்தது.
மனைவி.. தன்னைக் காதலிப்பதாக சொன்னது… முரடனுக்குள் ஒரு மென்மையைத் தோற்றுவிக்க.. அவளையே தெய்வத்தை பார்ப்பது போல பரவசக்கண்களுடன் பார்த்தான் பரிதிவேல் வீரன்!!
அவனது கற்பாறை இதயத்தில்.. ஜிலுஜிலுவென்ற கூதல் காற்றுடன்.. மழை பெய்தது போன்ற உணர்வு தோன்றி… இதம் கொடுத்தது அவனுக்கு.
இதை எதையுமே கவனியாத அந்தப் பெண்மணி, மென்னிலாவின் கன்னத்துக்கு ஓங்கி அறையப் போக, சட்டென ஈரெட்டுத் தாவி வந்து.. மனைவியின் கன்னம் தீண்ட விழைந்த.. அவரின் கையை இடையில் புகுந்துப் பற்றிக் கொண்டான் பரிதிவேல் வீரன்!!
பரிதி இடையில் வந்ததைக் கண்டு.. ‘இவன் எப்போது வந்தான்?’ என்பது போல அப்பெண்மணி.. விழிகள் அகல கல்லாகி நிற்க, அவனோ, “அக்காஆஆ… என்ன ப்பண்ற.??.”என்று ஆத்திரம் இழையோடக் கேட்டான்.
என்ன?? ஐம்பது, ஐம்பத்தைந்து வயது கொள்ளத்தக்க பெண்மணி.. பின் இருபதுகளில் இருக்கும் வாலிபனான பரிதிக்கு அக்காவா??
அவன் ‘அக்கா’ என்று தானே அழைத்தான்?? அப்படியானால் அவள் ‘அக்கா’ தானே?
மெல்ல தன் கையை இறக்கிய அந்தப் பெண்மணி, கோபாவேசத்துடன், “அவ்வ… எப்படி இங்க..?”என்று கேட்க, இவன் சட்டென இடையிட்டு சொன்னான்.
“நான் தான் கூட்டியாந்தே..!!”- அவன் குரலில் ‘என் பேச்சுக்கு மறுபேச்சில்லை’ என்ற சர்வாதிகாரம் மலையளவு கொட்டிப் போயிருந்தது.
அந்தப் பெண்மணியும், பரிதிவேலும் ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்தும் சீற்றக் கண்களுடன் சளைக்காது பார்த்துக் கொண்டேயிருந்தனர்.
பாசப்பறவைகள் இருவருக்குள்ளும் கோபத்தீ கனன்றெரிவதைக் கூண்கூடாகக் கண்டு கொண்டவளுக்கு, ‘ஆஹா என்னேவொரு அரிய காட்சி?’என்பது போல உள்ளம் பரவசமாகிப் போனது.
‘கல்லுளி மங்குனி’ போல அப்படியே நிற்காமல், மெல்ல நகர்ந்து சென்று, .. கணவனின் முதுகில் பம்மியவளாக, அவனது தோளினை இரு கைகளாலும் பற்றிக் கொண்டு ,
“மாமா..ப.. ப.. பயமா இருக்கு மாமா..???”என்றாள் மிருதுவான குரலில்.
அந்தக் குரலின் பதற்றம்.. அவனது ஹிருதயம் வரை சென்று தாக்கியது!!
அவளை நோக்கித் திரும்பாமலேயே.. அவன் தோள் பற்றிய அவளது விரல்களைப் பிடித்து மென்மையாகத் தட்டிக் கொடுக்க, “ஒண்ணும் ஆகாதுமா.. அதான் நான்.. உன்கூடவே இருக்கேன்ல?”என்று அவன் சமாதானம் செய்ய, அதைப் பார்த்த அந்தப் பெண்மணியான பார்வதியம்மாளுக்கு.. உள்ளே திகுதிகுவெனப் பற்றியெரிந்தது.
பரிதியின் பின்னால் நின்றிருந்தவள்.. அந்தப் பெண்மணியை ‘பார்த்தியா இந்த விஷப்பாம்பு.. இனி என் மகுடிக்கு மட்டும் தான் ஆடும்!!’என்ற இறுமாப்பு ஒளிரப் பார்ப்பதைக் கண்டு, பார்வதியம்மாளின் முகம் இறுகிக் கறுத்துப் போனது!!
கூடவே… மென்னிலா பரிதியிடம் நடிக்கிறாள் என்பது.. அத்தனை களேபரத்திலும்.. அவள் விஷமமாக சிரிப்பதை வைத்து அறிந்து கொண்டார் பார்வதியம்மாள்.
அந்தப் பெரிய நயனங்கள்… இரையைப் பார்க்கும் பெண்புலி போல மென்னிலாவைப் பார்க்க, “என்னடி அவன் கிட்ட நடிக்கிறிய்யாஆஆ??”என்று பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
தன் மனைவியின் காதலை, தமக்கை தவறாகப் புரிந்து கொண்டதில் மனம் வெதும்பிப் போனவன்.. தமக்கையின் அகோரப் பார்வையை அடியோடு வெறுத்தான்.
ஆனால் அந்தப் பொல்லாத பார்வதியம்மாளோ, தன் தம்பியின் பின்னாடி ஒளிந்திருக்கும் மென்னிலாவின் கையை, இமைக்கும் நொடியில் பற்றி..
தன் முன்னாடி இழுக்க முனைய, கணவனின் தோளை இறுக்கிப் பற்றிக் கொண்டே, “மா.. மா.. ”என்றாள் அந்த முரடனின் முரட்டு இதயத்தை கரைக்கும் வண்ணம்!!
தமக்கையின் அத்துமீறலைப் பொறுக்கமாட்டாதவன், மென்னிலாவை.. பார்வதியம்மாளிடம் இருந்து காப்பாற்றுமுகமாக.. அவளை தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கித் தள்ளிவிட்டிருந்தான்.
அந்தப் பெருத்த உடல்க்கார பெண்மணியோ…தம்பியிடமிருந்து இத்தகைய தாக்குதல் வரும் என்று எதிர்பார்த்திராததால்..காற்றில் சமநிலையின்றி உடல் தடுமாற.. மல்லாக்காக விழுந்தாள் தரையில்.
நடப்பதையெல்லாம் சுற்றி நின்று அமைதியாக வேடிக்கைப் பார்க்கும் பணியாளர்களுக்கு மத்தியில்.. தம்பி தன்னைத் தள்ளிவிட்டதை எண்ணும் போது முகமெல்லாம் கறுத்து வாடிப் போனது அவளுக்கு.
முரடனின் முகத்தில் தமக்கையை தள்ளிவிட்ட பரிதாப உணர்வு.. ஒரு துளி கூட இருக்கவில்லை.
மாறாக.. மெல்ல திரும்பி மனைவியைப் பார்த்தவனுக்கு.. அவள் நுதலோரம் வழியும் இரத்தம்…ஒரு மின்னல் நேர இளக்கத்தைக் கொடுக்க, அடுத்த நிமிடம் அவன் முகம் இன்னும் பொல்லாதவனாக அவனை மாற்றியது.
ஒற்றைக் கையால் மனைவியை அணைத்துப் பிடித்து, தன் நெஞ்சில் அவளைப் புதைத்துக் கொண்டவன்,
“இங்கேயிருந்து போயிரூஊஊ.. ‘இனி அவ தான் எனக்கு எல்லாமேஏஏ’.. நான் ம்மிருகமாகுறத்துக்கு முன்னால போயிரூஊஊ!!..” என்றவன், மனைவியை நோக்கித் திரும்பினான்.
அவன் உதிர்த்த வசனங்கள், தன் தமக்கையை நோக்கி அவன் உதிர்த்த வசனங்கள், ‘இனி அவ தான் எனக்கு எல்லாமேஏஏ’ என்ற வசனங்கள் அவள் மனதை மின்னலென தாக்கியது!!
‘ஹப்பா… அவ்வளவுக்கு உனக்கு பொண்டாட்டி மோகம் முத்திப் போயிருச்சாஆ?’என்று கேட்க வேண்டுமாக இருந்தாலும் கூட… அமைதியாக தரையில் விழுந்த பார்வதியம்மாளையே எள்ளி நகையாடும் அவலப்பார்வை பார்த்தாள் மென்னிலா.
அவளது பார்வை.. பார்வதியம்மாளை குன்றிக் குறுக வைக்க.. அதையும் கூட அணுஅணுவாகப் பார்த்து இரசித்தாள் மென்னிலா.
மனைவியை நோக்கிப் பதற்றத்துடன் திரும்பிய பரிதிக்கு காணக்கிடைத்தது எல்லாம்… நடந்தது அனைத்தையும் கண்டு அதிர்ச்சியில் துவண்டு விழப் போன.. மனைவியின் பரிதாபகரமான மென்மையான முகத்தைத் தான்!!
“ஆண்டாளூஊ” என்றவனாகப் பதறியடித்துக் கொண்டு அவனும், மனைவியின் நடிப்பை உண்மையென நம்பி ஓடி வர, அது தான் சந்தர்ப்பமென்று, தன் நெற்றியைப் பிடித்துக் கொண்டு அவன் மார்போரம் சாய்ந்தாள் மென்னிலா.
அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை முரடனுக்கு. யாரையும் பாராமல் அவளைக் குழந்தை போல கைகளில் ஏந்திக் கொண்டவன்… அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.
தம்பி தன்னைத் திரும்பிக் கூட பாராமல் சென்றது உச்சபட்ச அவமானத்தைக் கொடுக்க, வீட்டுக்குள் செல்லும் தம்பதியர்களின் புறமுதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள் பார்வதியம்மாள்.
காதல் வயப்பட்டது போல நடிக்கும் அந்த மாதுவிடம்.. தன் தம்பியை தனியாக விடுவதா?? ஒரே கேள்வி திரும்பத் திரும்ப மனதுக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.
உள்ளே தன்னறைக்கு மனைவியை அழைத்து வந்தவன்.. அவளை மஞ்சத்தின் மீது அமர்த்தியவன், அவளை விட்டும் எழப் போக, அதற்கு விடாமல் அவனது நரம்போடும் முன்னங்கைப் பற்றித் தடுத்தவள்,
சடாரென அவனது தேக்குமரம் போன்ற உரமேறிய முரட்டு மார்பில் தன் தலை புதைத்து விம்மி விம்மி அழுதாள் மென்னிலா.
அவள் அழுவதைக் காணக் காண.. அவனுக்கு உள்ளூற ஏதோ செய்தது. அழுகையைத் தேற்றுவதா? இல்லை மனதார அழட்டும் என்று அழ விடுவதா?? என்று தெரியாமல் முரட்டுக்குழந்தையாக நின்றான் பரிதிவேல் வீரன்!!
மெல்ல அவள் அவனிலிருந்து எழுந்த சமயம்.. அழுது அதைத்துப் போன அவளுடைய முகத்தைப் பார்த்தவனுக்கு.. முகம் வாடிப் போனது !!
கூடவே.. அவள் நெற்றியோரம் வழியும் உதிரம்.. அதில் அம்முரடனுக்குள் ஒருவித வலி எழுந்து பரவ, சற்றும் தாமதியாமல் விரைந்து சென்று..
டிராயரில் கிடந்த முதலுதவி சிகிச்சைப் பெட்டியை எடுத்து வந்தவன்.. ஒரு நடுக்கம் கைகளில் பரவ, அதனை சமாளித்துக் கொண்டு, மனைவியின் நெற்றிக்கு மருந்து போடலானான்! .
ஸ்ப்ரிட்டில் பஞ்சை நனைத்து பட்டும் படாமல் தேய்த்துக் கொண்டே, “நீ ஒண்ணும் அத பத்தி யோசிக்காத ஆண்டாளு.. யாரும் உன்னய நோவிக்க (வேதனைப்படுத்த) விட மாட்டேன்..”என்றவன்,அவளுக்கு வலிக்காமல் மருந்திடலானான்.
என்ன? அவளுக்கு வலிக்காமல் மருந்திடுவது பரிதி வேல் வீரனா? அந்த முரடனா மனைவியிடம் இத்தனை மென்மையாக நடந்து கொள்வது???
கணவனின் விழிகளையே கண்ணீர் மல்கப் பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் மருந்திட்டதும் அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.
சுறாவுக்கு இலக்கான இரண்டு விரல்கள் பறிபோன.. மூவிரல்கள் மாத்திரம் கொண்ட கையது!!!
அதன் புறங்கையில் மையலுடன் முத்தம் வைத்தவள், “’இனி அவ தான் எனக்கு எல்லாமே’ ன்னு சொன்ன ஒத்த வார்த்த போதும் மாமா..”என்றவளுக்கு, அவளையும் மீறி சரேலென வழிந்தது கண்ணீர்!!
மனைவியின் அந்த வார்த்தைகள் அவனை ஏதோ செய்ய, அவள் பின்னந்தலையைத் தன்னோடு பற்றியிழுத்து.. அவளைத் தன் நெஞ்சாங்கூட்டில் சாய்த்துக் கொண்டான் பரிதி!!
அவள் தலை.. அவன் இதயத்தில் அடைக்கலமான சமயம்… உள்ளுக்குள் கனன்ற தீயின் வெம்மையைத் தகிக்க முடியாமல் போனது அவளுக்கு.
காதலா அது?? இல்லை சர்வநிச்சயமாக இல்லை!! அது பழிவெறி மீதூறும் வன்மத் தீயில் விளைந்த வெம்மை!!
மெல்ல மெல்ல அவன் முதுகையும், மார்பையும் தடவிக் கொண்டு ஊர்ந்த கைகள்… மேலேறி மேலேறி.. ஒரு பாம்பு போல… ஊர்ந்து அவனது கழுத்தை நாடிப் போனது!!
இன்னும் கொஞ்சம் அவன் அணைப்பில் இருந்தாலும் கூட.. அவளுள் இருக்கும் பழிவெறி.. கொலைவெறியாக மாறி..அவள் தன் சுயத்தை இழந்து.. அவன் கழுத்தைப் பிடித்து நெருக்கும் அபாயம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே போனது.
மனைவியின் கைகள் தன்னில் ஊர்வதை..அதனை உரிமையாக… காதலாக.. ஆசையாகக்.. கொண்டவன்.. அமைதியாகக் கண்கள் மூடி.. அவளை அணைத்துக் கொண்டேயிருந்தான்.
அவள் கைகள்.. அவன் கழுத்தை நெரிக்க சூதானமான சமயம், தெய்வாதீனமாகப் பார்த்து அவள் சுயச்சிந்தை பெறும் மாதிரியாக… “டாண்.. டாண்.. டாண்”என்று பேரொலியுடன் அலறியது மணிக்கூண்டு!!
அதில் சட்டென நடப்புக்கு வந்தது அவள் மாத்திரமல்ல.. அவனும் தான்.
மெல்ல கண்கள் திறந்தவன்.. அவளைப் பார்க்க, அவள் முகத்தில் தெரிந்த தவிப்பில்.. தன் சூழ்ச்சியைக் கண்டு கொள்வானோ? என்ற அச்சம் உடலெங்கும் விரவிப் பரவியது அவளுக்கு.
அதனாலேயே என்னவோ? அவன் தள்ளிவிட்ட தமக்கையை ஞாபகப்படுத்துவதை விட்டுட்டு, வேறெதையோ அவளிடம் கேட்டு வைக்க முன்வந்தாள் அவள்.
அந்த அழகான முரட்டுச் சூரியனை அண்ணாந்து பார்த்த வன்மம் நிறைந்த நிலா கேட்டது, “இன்னெக்கு நடந்தத கேள்விப்பட்டீங்களா..?”என்று.
“என்னது..?”-புருவமத்தியில் முடிச்சு விழ… இடுங்கிய விழிகளுடன் மனைவியைப் பார்த்துக் கேட்டான் பரிதி.
கணவனின் முகத்தை.. தன் முகத்தை அப்பாவியாக்கிக் கொண்டு பார்த்தவள், “சரவணன் மாமா மில்லுல ஃபயர் ஆக்ஸிடன்ட்டாம்..”என்றாள்.
அவள் அழைத்த ‘சரவணன் மாமா’என்ற அழைப்பு, பரிதிவேலின் முகத்தை விடியாமற் செய்தது. இருப்பினும் அதையும் தாண்டி… அவன் கண்கள் குறுகுறுவென மனைவியையே ஆராய்ந்தது.
“ம்.. ஆமா கேள்விப்பட்டேன்..”என்று சலனமேயில்லாமல் அவன் சொன்னாலும், அவன் முகம் சலனப்பட்டே கிடந்தது.
அங்கே சரவணனிடம், “யார் என்ன நினைப்பாங்கன்ற கவலை இல்லை.. நான் கெட்டவன்’ என்று வீராப்பாக சொல்லி விட்டு வந்த பரிதிக்கு,
சூறாவிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதிலிருந்து.. தன்னை ‘நட்சத்திர நாயகனாகப்’ பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி.. தன்னை தவறாக எண்ணி விடுவாளோ என்ற பதற்றம் பிறந்தது.
‘அரிசி ஆலை தீவிபத்துக்குப் பின்னாடி இருக்கும் காரணகர்த்தா நான் தான்’ என்று மனைவி அறிந்து கொண்டு விட்டாளோ? என்ற கேள்வி உதிக்க… கலவரத்துடன் மனைவி முகம் பார்த்தான் பரிதி.
ஆனால் அவனது அதிர்ஷ்டம்!! நிலா மெய்யாகவே.. தீ விபத்து திட்டமிட்டு நேர்ந்தது என்பதை அறியாமல் போனாள்.
கணவனின் கம்பீரம் கமழும் விழிகளுடன், தன் மிருதுவான விழிகள் கலந்தவள், துக்கமான தொனியில்,
“எல்லாரும் லன்ச் டை.. டைமுக்கு வெளியே சாப்பிட போயிருந்த நேரம் தான் இது நடந்திருக்கு.. ஆனா மில்லுக்குள்ள இருந்த பாண்டியும் செத்துப் போயிட்டானாம்.. அவன் குடும்பத்த நெனச்சா பாவமா இருக்கு மாமா.. பாவம் அவன் பொண்டாட்டி..
ஒரு பொண்ணுக்கு தன்னோட கணவன் இல்லாம வாழ்றது கொடும மாமா!!! .. ஊர் அவள அபசகுனமா பார்க்கும்..எந்த நல்ல காரியத்துக்கும் சேர்த்துக்காது.. ஊருக்குள்ள இருக்க சம் இம்போஸ்டர்ஸ்… அவளைத் தப்பான கண்ணோட்டத்தோட பார்ப்பாங்க.. மனதளவுலேயும், உட.. உடலளவுலேயும்.. ரொம்ப பாதிக்கப்படுவாங்க தெரியுமா?”என்று அந்த முரடனுக்கு அவள் மனதில் படுவதை எல்லாம் எடுத்துச் சொல்லச் சொல்ல, முதன்முறையாக அந்தக் கெட்டவனின் உள்ளத்திலே துளியளவாய் ஓர் குற்றவுணர்வு!!
மென்னிலா தன் கணவனின் உள்ளத்துணர்வுகளை அறியாமல் சொல்லிக் கொண்டே போனாள்.
அவள் மீண்டும் தன் கணவனின் மார்போடு முகம் புதைத்தாள்.
“ஒருவேள.. பாண்டி நிலமையில நீங்க இருந்து..அவன் பொண்டாட்டி நிலமையில நான் இருந்தா..”என்றவள், மேற்கொண்டு தொடராமல் ஓரிரு நிமிடங்களுக்கு நிறுத்தினாள்!!
‘ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பேன்..’என்று நா நுனியளவு வந்தது வார்த்தைகள்!! சொல்லி விடத்தான் அவளுக்கும் ஆசை. அதன் பின் விளைவுகளை சந்திப்பது என்பது கடினம் என்று புரிய தன் பேராவலை அடக்கிக் கொண்டாள் அவள்.
பிறகு போலிக் கண்ணீரை வரவழைத்துக் கொண்டு நா தழுதழுக்க, “நா.. நா.. நானும் சூசையிட் பண்ணியிருந்திருப்பேன் மாமா..”என்று சொல்ல, முரடனின் இதயம் ஒருதரம் நின்று துடிப்பது போலானது.
அனிச்சையாய் எழுந்த கைகள் அவளை இறுக்கி அணைக்க, தவிப்புடன், “என்ன பேச்சு ஆண்டாளு இது..?”என்று கேட்டான் ஆண்டாளின் நவீன மதுசூதனன்.
“உலகத்துல இருக்க.. ஒவ்வொரு உயிரும்.. முக்கியம் மாமா.. மணியன் குடும்பத்துக்கு… நாம ஏதாவது பண்ணலாமா?”என்று மனைவி கேட்க, “சரி” என்று தானாக தலையாடினாலும் கூட.. அந்நொடி கெட்டவனின் மனதில் ஓர் அசௌகரியம் எழுந்தது.
அவன் செய்தது தவறோ.. மனைவி உண்மையை அறிந்தால்??
யார் என்ன நினைத்தாலும் உறுத்தாது என்று சொன்ன மனம்.. மனைவி உண்மை அறிய வரும் போது தன்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்று எண்ணும் போது உறுத்தியது.
அப்படியானால் பக்கா கெட்டவன்…தன் மேல் அளவு கடந்த காதல் வைத்திருக்கும் ஓர் பெண்ணின் அன்பில் கொஞ்சம் கொஞ்சமாக நல்லவனாக மாறிக் கொண்டிருக்கிறானா என்ன?
காதல் தானடி என் மீதுனக்கு?
[8]
அடுத்த நாள் காலை…
தலைக்கு குளித்து விட்டு வந்திருக்கிறாள் என்பதை, அவளது காற்றில் உலர்ந்த கூந்தல் பறைசாற்றிக் கொண்டிருந்தது.
தலையில் அடக்கப்பட்டிருந்த கூந்தலையும் தாண்டி, காதோரம், குப்புறத் திருப்பிப் போட்ட கேள்விக்குறி போல சுருண்டு விழுந்த கார்குழல் கற்றை.. அத்தனை அழகு!!
“அவளும் சுமங்கலி’ என்பதை அடையாளம் காட்டிக் கொண்டிருந்தது நெற்றி வகிட்டில் அவள் வைத்திருந்த குங்குமம்!!
தன் சேலைத் தலைப்பையும், கொசுவத்தையும் தூக்கி இடுப்பில் சொருகியவளது வெண்சந்தன நிற இடுப்பின் மடிப்பு.. ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால் வசீகரம்!!
அவள் கண்களில் இருந்த.. அவளுக்கேயென்றிருக்கும் மிருதுபாவம்… அக்மார்க் தமிழ்ப்பெண்ணான மென்னிலாவை பேரழகியாகக் காட்டிக் கொண்டிருந்தது.
கைகளில் அரிசிமாத் தட்டுடன்.. ஒரு காலில் முழந்தாளிட்டும், மறுகாலில் குந்தவைத்தும் அமர்ந்து.. வாசலில் அழகிய கோலம் போட்டுக் கொண்டிருந்தவளின் முகம் எப்போதும் போல யோசனை வயப்பட்டிருந்தது.
நேற்று வந்த பார்வதியம்மாள் திரும்பிச் சென்றிருந்தாலும் கூட, அவள் இதுவரை அமைதி காப்பது என்னவோ மனதுக்குள் பெரும் நெருடலாகவே இருந்தது.
அந்தக் கிழவியின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கக் கூடும்?? புயலுக்கு முன்னால் வரும் அமைதி தானா இது?? என்ற ஒரு யோசனையும் அவளுள் நிலவவே செய்தது.
கோலத்துக்கு புள்ளி வைத்து அவைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்குங்கால், அவள் அணிந்திருந்த சேலையின் அகன்ற ஜாக்கெட் வழியாகத் தெரிந்த.. வெள்ளை வெளேரென்ற முதுகை…. யாரோ ரொம்ப நேரமாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல உள்ளுணர்வு வாட்டலானது மென்னிலாவை.
கோலத்தின் கடைசி புள்ளிகளையும் இணைத்து விட்டு , தன் நுதலில் பூத்திருந்த வியர்வை மணிகளை புறங்கையால் ஒற்றி ஒற்றி எடுத்துக் கொண்டே.. உள்ளுணர்வு சொன்ன திசையை நோக்கி அண்ணாந்து பார்த்தாள் மென்னிலா.
அங்கே.. வேறு யார் தான் இருந்திருக்கவும் கூடும்? அது சாக்ஷாத் அவளுடைய கணவனே தான்!!
அவனது வீட்டின் மொட்டைமாடி பால்கனித் திட்டில்.. தன் வலிமையான கையினை ஊன்றி நின்றிருந்த வண்ணம்… மறு கையில் காபி கப்புடன் அவளையே தான்.. தாபம் சொட்டச் சொட்டப் பார்த்துக் கொண்டிருந்தான் பரிதிவேல் வீரன்!!
தரையில் அமர்ந்திருந்த வண்ணமே.. சூரியனை அண்ணாந்து பார்த்தது ஓர் அழகிய பகல்நிலவு!!
அவனது பார்வை.. பூனை மீனைப் பார்ப்பது போன்ற பார்வை.. உயிர் உருக்கும் .. அந்தத் தாபப் பார்வையில் ஓரிரு செக்கன்கள் கவரப்பட்டவளாக அவனையே பார்த்தவாறு சர்வமும் மறந்து போனவளானாள் மென்னிலா!!.
அந்தப் பார்வை!!! அது.. அவள் மறக்கத் துடிக்கும் சில நினைவுகளை… இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த காட்சிகளை மனக்கண் முன் நிறுத்தி விட்டுச் செல்லலானது.
அதில் அவளையும் அறியாமல்… அவளுள் ஒரே ஒரு கணம் மென்மையாக காதல் பூக்கள் அரும்ப… அனிச்சைச் செயலாக நிலாவின் முகத்தில் மெல்ல மலர்ந்தது சுந்தரமான வெட்கம்!!
கம்பன் வர்ணித்த ‘அந்திவானச் சிவப்பைக்’ அழகுற கடன் வாங்கிக் கொண்டது மென்னிலாவின் முகம்!!
தலைவனின் காதல் பாபார்வைக் கணைகளைத் தாங்க முடியாது.. மெல்ல தலை குனித்துக் கொண்டாள் அவள்.
புத்துணர்ச்சி தரும் மனைவியின் வெட்கம் ஆண்மகனான அவனுக்கும் ஜிலுஜிலுவென்ற உணர்வைக் கொடுக்க, அவனது புன்னகை அழகாக விரிந்தது.
அவளது சிற்றிடையை கண்களால் பருகிக் கொண்டே.. ஒரு மிடர் காபியைப் பருகினான் மென்னிலாவின் முரடன்!!
மேற்கொண்டு அங்கு நிற்கவே… அவளுக்குக் கூச்சமாகப் போய் விட கணவனைப் பாராமலேயே… வீட்டுக்குள் நுழைந்து, ஹாலைக் கடந்து மாடிப்படியேறப் போனவளை.. அதற்கு விடாமல்.. அவளை சரேலெனப் பற்றியிழுத்து சுவரோரம் சாய்த்தது ஒரு வலிய கை.
அவன் வீட்டில்… அவளை மிக மிக உரிமையாகப் பற்றியிழுக்க.. அந்த முரட்டுக் குழந்தையைத் தவிர யாருக்குத் தான் அத்தனை தைரியம் வரும்??
அவனது திண்மையான மார்புகளுடன்.. கன்னாபின்னாவென்று மோதிக் கொண்டது அவளுடைய மென்மையான கலசங்கள்!!
யார் கண்களுக்கும் உறுத்தாத மாடிப்படிகளின் மறைவின் சுவற்றில்.. தன்னைக் கணவன் பிடித்து சிறை செய்திருப்பது புரிய, மென்னிலாவின் உடல் ஒருவித நெளிவை அவளுக்குப் பரிசளிக்கலானது.
அவன் மூச்சுக்காற்று எக்குத்தப்பாக.. அவளது பிறை நுதலில் மோதிக் கொண்டிருக்க, மென்னிலாவுக்கு அது மிகவும் அவஸ்தையான நொடிகள்!!
இது போதாதென்று அவனது ஓர் கை.. அவளது இடையில் தவழ்ந்து அழுத்திப் பிடிக்க, அந்தப் பிடியிலிருந்து நழுவத் துடித்தாள் மாது.
இருந்தாலும் ஆச்சரியமும் கூட!! மொட்டை மாடியில் இருந்தவன் எப்படி இங்கே ஹாலுக்கு அருகாமையில் இருக்கும் மாடிப்படி அருகே வந்தான்??
மெய்யாலுமே மின்னல் வேகத்தில் வந்திருக்கிறான் தான் என்னும் போது மங்கையின் கண்கள் அகல விரிந்தது.
யாராவது பார்க்கக் கூடும் என்ற நினைவில் மென்னிலாவுக்கு உறுதியான குரலும் தான் எழவில்லை!!
“என்ன பண்றீங்கஹ்? என்னை விடுங்கஹ்?.. இது நம்ம பெட்ரூம்னு நினைச்சீங்களாஹ் மாமாஹ்? .. இது ஹால்..”- காற்றுக்கும் கேட்காத குரலில்.. கிசுகிசுத்தாள் மென்னிலா.
அவளிடையில் பதிந்திருந்த அழுத்தம் இன்னும் கொஞ்சம் இறுக, தன் மார்போடு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
கண்கள் தாபத்தில் சற்றே சிவக்க, “இப்படி கும்முனு இருந்தால்.. எது பெட்ரூம்?? எது ஹால்னு உன் மாமனுக்கு புரிய மாட்டேங்குதே!!.. ஆண்டாளு.. நாம வேணும்னா இந்த ஹால் எல்லாம் இடிச்சுட்டு எல்லாமே பெட்ரூமா கட்டிக்கிடுவோமா?”என்று கண்களில் காதல் கரைமுட்ட அவன் கேட்ட தினுசில்.. நிஜமாகவே சிரிப்பு வந்தது அந்த சுரூபினிப் பெண்ணுக்கு.
வாய் விட்டு அவள் கிளுக்கி நகைக்க, அவளது பளபளக்கும் மோன விழிகளையே கள்ளுண்ட மந்திக் கணக்காய் பார்த்துக் கொண்டேயிருந்தான் பரிதிவேல் வீரன்.
அந்த இடைவெளியில் மனதுக்குள் உதித்த சந்தேகத்தைக் கேட்க நாடி, “ஆமா.. உங்க பின்னாடியே வால் மாதிரி திரிஞ்சிட்டிருப்பாரே உங்க வெல்விஷர்.. அவரை எங்கே ரெண்டு நாளா காணோம்?” என்று கேட்க, அவள் யாரைக் கேட்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.
சத்தமேயின்றி புன்சிரிப்பு பூத்தவன், “நீ என் மாமாவ சொல்லுறியா ஆண்டாளு?? அவரு நம்மட வயல்ல.. அறுவடை நடக்குறதால.. ‘கூடவே இருந்து கவனிச்சுக்குங்க மாமா’ன்னு நான் தான் அனுப்பி வைச்சேன்..”என்று சொல்ல, அவள் இதழ்கள் ஓர் ஓவியம் போல குவிந்தது.
“ஓ…!!”- அதனால் தான் அந்த வயசான மந்தியைக் காணவில்லையா? என்று தோன்றியது அவளுக்கு.
அவன் அண்மையில் குவிந்த… செவ்வரியோடிய இதழ்களைக் காணவும்… உள்ளுக்குள் அனலடித்தது பரிதிவேல் வீரனுக்கு!!
அவளது இதழ்களை பட்டும் படாமல் மெல்ல வருடியது அவளது பெருவிரல்!!
அதில் அவளுக்கு என்னமோ மாதிரியாக .. வருடிய அவனது கையைப் பட்டென்று பற்றியவள், “வேணாம் மாமா.. எ.. எனக்கு.. கூ.. கூச்சமா இருக்கு மாமா”என்றாள் மென்னிலா.
அந்த முரடனின் கண்கள் அவளை மென்மையுடன் பார்த்தது. என்ன தோன்றியதோ தன் சேஷ்டைகள் அடக்கிக் கொண்டு அவளை விட்டான் அவன்.
அவன் கைச்சிறை தன்னிடையை விடுவிக்கவும்.. அதை நம்ப மாட்டாமல் புருவங்கள் இரண்டும் மேலுயர அவனையே பார்த்தாள் மென்னிலா.
நிஜமாகவே அவளை விட்டது அவன் தானா? இல்லை ஏதும் கனவு காண்கிறாளா??
கண் மூடித் திறந்து, “சரி போ..” என்றவன், அங்கிருந்து செல்ல முனைந்தவளின் முன்னங்கையைப் பிடித்து, “ஒரு நிமிஷம்” என்றான்.
படபடக்கும் விழிகளுடன் சூரியன் முன் நின்றாள் அம்மென்னிலா.
அவன் கண்கள் காதலுடன் அவள் உச்சாதி பாதம் ஆராய்ந்தது, “எல்லாமே சரி தான்.. ஆனால் இந்த மல்லிப்பூ மட்டும் குறையுது” என்றவன்… தன் பின்னால் இத்தனை நேரமும் மறைத்து வைத்திருந்த மல்லிகைச் சரத்தை எடுத்து அவள் முன் நேராகத் தொங்க விட்டான்.
அவன் அன்று நடந்து கொள்ளுமாற்றில் இவள் தடுமாறி நிற்க, மெல்ல அவள் பின்னந்தலை நாடிச் சென்றவன்.. மங்கை கூந்தலில் மலர்கள் சூடினான்.
பின் அவளது இருகைச்சந்தைப் பற்றி அவள் பின்புறத்தை தன்னோடு இறுக்கி அணைத்தவன், மல்லிகை மணம் முகர்ந்தவனாக,
“ஆண்டாளு சூடியதை.. கண்ணன் சூடின காலம் மலையேறிப் போயிடுச்சு? இது கண்ணன்.. தன் கையால.. தன்னோட ஆண்டாளுக்கு மலர் சூடும் காலம்!!”என்றவன் சொல்ல, அவன் உதிர்த்த வசனங்களில் ஒருமுறை திகைப்பூண்டை மிதித்தாற் போன்று நின்று விட்டாள் மென்னிலா.
காதில் நுனிமூக்கு உரசி.. கன்னம் இழைந்து.. கன்ன மேட்டில் அழுந்த இதழ் பதித்தவன், “இப்ப தான் நீ என் ஆண்டாளுஹ்”என்றவன், முகம் முழுவதும் திருப்தியுடன் அகல, கண்களில் கண்ணீர் துளிர்க்க சாபம் கொண்ட அகலிகை போலானாள் அவள்.
“ஆண்டாளு சூடியதை கண்ணன் சூடின காலம் மலையேறிப் போயிடுச்சு? இது கண்ணன்.. தன் கையால.. தன்னோட ஆண்டாளுக்கு மலர் சூடும் காலம்!!”- அந்த வசனங்கள்..
அந்த வசனத்தில் அவளுக்குப் பழைய நினைவுகள் உள்ளே கிளர்ந்தெழுந்தன.
என்ன தான் அவன் மொழியும் ஒற்றை ‘ஆண்டாள்’என்னும் வசனம் அருவெறுப்பாக இருந்த போதிலும், ‘ஆண்டாள்’ என்று அவன் சொல்லும் அழைப்புக்கு.. அவன் கொடுத்த விளக்கம் அழகானது;இரம்மியமானதல்லவா?
அவ்விடத்திலேயே நின்றிருந்தவளுக்கு… உடல் தான் அங்கே இருக்க.. நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன.
*****
அப்போது அவள் தென்னிலங்கையில் “மாத்தறை” என்ற இடத்தில் அமைந்திருக்கும் ‘றுஹூணு கேம்பஸில்’ தன் பட்டப்படிப்பை முடித்து விட்டு தன் சொந்த ஊரான.. மன்னாரிற்கே திரும்ப வந்திருந்த நேரம் .
அவள் பிறந்தது மட்டும் தான் மன்னார். ஐந்து வயதிலேயே அவள் தாத்தா கொழும்பில் இருக்கும் பிரபல பாடசாலையொன்றில் சேர்த்து விட.. அங்கிருந்த தாத்தாவின் தாய்வழி உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்தாள் மென்னிலா.
அதனாலோ என்னவோ தாத்தா, பரிதி, அவள் மாமா சரவணன் மற்றும் அவள் தாய் ஆகியோர் பேசும் ‘மன்னார்த் தமிழில்’ இருந்து சற்றே வித்தியாசப்பட்டது அவளுடைய தமிழ். அது கொழும்புத் தமிழ்!!
எழுத்து நடையில் இவ்விரண்டு தமிழ்களுக்கும் இடையில் பெருவித்தியாசங்கள் இல்லாவிட்டாலும் கூட.. பேச்சு ஒலியில் சிற்சில வேறுபாடுகள் இருக்கவே செய்தன.
மன்னார் தமிழ் ஒருவித இசைத்தமிழ். மண் வாசனை புழங்கும் மக்கள் உரையாடுங்கால்.. கூடவே ஓர் சந்தமும், மெட்டும் சேர்ந்து சுதி பாடுவது போலவே தோன்றும்!!
கொழும்பிலேயே ஆரம்பப் பாடசாலை முதல், உயர்தரம் ‘விஞ்ஞானப் பிரிவு’ வரை படித்தவளுக்கு, மேற்படிப்புக்காக ‘றுஹூணு’ கேம்பஸில் நுழைவுச்சீட்டு கிடைக்கவே.. நான்கு வருடங்கள் விரும்பியே ‘மெரைன் பயாலஜி’ படித்தாள்.
தன்னுடைய சிறு பராயத்திலிருந்து, இளமைப் பராயம் வரையான காலப்பகுதியில்.. அவள் தன் சொத்து ஊரிற்கு வந்திருப்பது என்பது அரிதிலும் அரிது!!
அவள் வந்த நேரம் பார்த்து..அவளுடைய சொந்த ஊரான மன்னாரில் சித்திரைத் திருவிழாவும் நடைபெற்றுக் கொண்டிருக்க,
மேற்படிப்பு முடித்த கையுடன் ஊருக்கு வந்தவளுக்கு.. அந்தத் திருவிழா கொண்டாட்டமாகவே இருந்தது.
சின்ன வயதில் இதே போல திருவிழாவைச் சந்தித்த ஞாபகம் இலேசுபாசாக உண்டு அவள் சிந்தையில்.
ஆனால் வளர்ந்து ஓர் இளங்கன்னியாக அவள் நின்றிருக்கும் வேளையில் எதிர்கொள்ளும் முதல் திருவிழா என்றால்.. அது இந்தத் திருவிழா தான்!!
இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் கண்டு களித்த திருவிழா.. தன் வாழ்வை ஓர் பாதாளக் குழியில் தள்ளி விடும் என்பது தெரிந்திருந்தால்… அவள் பட்டப்படிப்பு முடிந்த பின்னும் கூட.. மன்னார் வாசலை மிதியாமலேயே இருந்திருக்கவும் கூடும்!!
ஆனால் எல்லாமே விதி!!
இரண்டு வருடங்களுக்கு முதல்… அப்போது அவளுக்கு இருபத்திரண்டு வயது இருக்கும்!!
அந்த கணம் திருவிழாவில் வளைய வந்த… தென்னிலங்கை சென்று படித்து வந்த… மன்னாரின் உயர் ஆளாக மதிக்கப்படும் “ராஜமாணிக்கத்தின்” பேத்தி… அவளும் ஒரு ‘ராஜமாணிக்கம்’ போலவே மக்களால் அவதானிக்கப்பட்டாள்!!
சதுரங்க விளையாட்டு கட்டங்களால் அலங்கரிக்கப்பட்ட.. உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் அழகிய மிடி.. கூடவே தன் மார்பின் மேல் பகுதியில்… நெட்டினால் மறைக்கப்பட்டிருந்து கூட தனியழகு!!
கைகளில் சின்ன வோலட்!! கண்ணிலே ‘பட்டணத்து’ தோற்றத்தைத்தரும் கறுப்பு கூலர்ஸ்!!!
இதழ்களிலே அடர்சிவப்பு நிற உதட்டுச்சாயம்!! கால்களிலே.. எளிமையாக விளக்கின் ‘சின்ட்ரெல்லா பாதணிகள்’ சகிதம்.. அந்தத் திருவிழாவில் வளைய வந்தவள்,
அசல் பக்கிங்காம் மாளிகையின் ‘ரோயல் இயரஸ்’போலவே இருந்தாள்!!
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அவளில் மிளிர்ந்த நேர்த்தி.. யாரையும் ஒருமுறைக்கு பலமுறை திரும்பப் பார்க்க வைப்பது போலவே இருந்தது.
மாதத்தின் பதினைந்து நாட்களாக நடக்கும் திருவிழாவின்.. நான்காவது நாளாக… ‘மன்னார் மைதான பொதுத் திடலில்’ ஆரம்பமாகப் போகும் போட்டிகளுக்காக ஊரே திரண்டு கொண்டிருந்தது அங்கே!!
தன் வோலட்டில் இருந்த கேமராவை எடுத்தவள்.. ஈரம் காய்ந்திருந்த மண்ணையும்,
நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த பனைமரங்களையும்.. கூடவே மைதானத்திடலையும், அதில் இருக்கும் மாந்தர்களையும் வீடியோ எடுக்கலானாள்!!
அப்போது தான் மைதானத்தில் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த மூங்கில் மேடையில் இருந்து, அறிவித்தல் ஒலிப்பதைக் கேட்டு மேடைப்பக்கம் தன் பார்வையைத் திருப்பினாள் மென்னிலா.
அங்கே நடுநாயகமாக.. இராஜதோரணையில் அமர்ந்திருந்த தாத்தாவின் மிடுக்கைக் கண்டதும், அதைத் தன் கேமராவில் வீடியோ எடுத்தவளுக்கு,
தாத்தாவின் செருக்கு மீசை, அவளையறியாமலேயே ‘வாவ்’ போட வைத்தது!!
“வயசானாலும்.. உங்க ஸ்டைலும், கம்பீரமும் மாறவேயில்ல தாத்தா”என்ற அவள் முணுமுணுத்தது யாருக்கு கேட்டதோ இல்லையோ.. மென்னிலாவின் அருகிலேயே வந்து கொண்டிருந்த பதினெட்டு வயதான அவ்வூர் இளம்பெண், ‘மஞ்சு’வுக்கு நன்றாகவே கேட்டது!!
மென்னிலாவுக்கு ஊரைச் சுற்றிக் காட்ட, தேவைப்பட்டால் உதவி ஒத்தாசைகள் செய்ய.. ராஜமாணிக்கத்தால்.. நியமிக்கப்பட்ட பெண் தான் மஞ்சுளா.
தாத்தாவுக்கு பேத்தி கொடுத்த கமெண்டைப் பார்த்து கிளுக்கி நகைத்த மஞ்சுளா, “அம்மா.. இத பெரியவரிட்ட சொல்லுவியளா??”என்று கேட்க, மென்னிலாவின் முகத்தில் அச்சத்தின் ரேகைகள் எழுந்து ஓடியது.
அந்த பயங்கர முரட்டு மீசை என்றால் அவளுக்கு சின்ன வயதிலிருந்தே பயம்!! முரட்டு மீசை மாத்திரமல்ல.. அதைக் கொண்டிருக்கும் தாத்தா மீதும் தான்!!
வெளியூர் சென்று படித்தவளின் ஒரே பலவீனம் எனின் அது அவளது தாத்தா!!
அந்த நேரம் மீண்டும் ஒலிவாங்கி… அந்த மெல்லிய குரல் அறிவிப்பாளரின் குரலில் அலறியது
“ஐம்பது வருடங்களாக… தொடர்ந்து நடக்கும்.. ‘மாட்டு வண்டியோட்டப் போட்டி’… தற்போது நடைபெறவுள்ளது. ஓட்டப் போட்டிக்கு… பெயர் கொடுத்தவர்கள் களத்துக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.”என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவிக்க.. மென்னிலாவின் இதழ்கள் ‘ஆ’வெனப் பிளந்தது.
என்ன மன்னாரில் மாட்டுவண்டி ஓட்டப்போட்டியா?? அதில் என்ன பெரிய ஆச்சரியம்? இலங்கையில் மாட்டுவண்டியோட்டப்போட்டியாஆஆ? என்று கூட வியப்பாக இருந்தது அறிவித்தலைக் கேட்ட மென்னிலாவுக்கு!!
பட்டுத் தாவணி அணிந்து.. அவளுடன் கூடவே வந்து கொண்டிருக்கும் மஞ்சுவின் ஜாக்கெட்டை சுரண்டியவள்,
“ஹேய் மஞ்சு.. எங்க ஊருல மாட்டுவண்டியோட்டப் போட்டியெல்லாம் நடக்குதா என்ன?”என்று கேட்டாள் மென்னிலா.
ஏளனநகையொன்றை குபுக்கென உதிர்த்த மஞ்சுவோ, “உங்களுக்கு தெரியல்லீய்யோ? நீங்க முன்ன பின்ன இங்கன திருவிழாவுக்கு வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்.. பட்டணத்துலேயே படுத்துக்கிட்டா..??எப்படி தெரியும்??”என்று மென்னிலாவின் ‘அபிரசன்னத்தை’ நக்கல் செய்ய, இலேசாக கோபம் போனது மென்னிலாவுக்கு!!
ஆனால் மஞ்சுவின் நல்ல காலம்!! தன் பேத்தியை… தன் வீட்டு பணியாளப் பெண்ணின் மகள் ஏளனம் செய்வதை நல்லவேளை பார்த்திருக்கவில்லை தாத்தா ராஜமாணிக்கம்.
சும்மாவே.. மஞ்சுளா.. மென்னிலாவின் கோரிக்கையின் பேரில்.. அவளை ‘நிலா’ என்றழைப்பதைப் பார்த்து விட்டு, மென்னிலாவின் தாத்தா போட்ட அதட்டல்.. ஹப்பா… இப்போது நினைத்தாலும் பயங்கரமானதாகவே இருந்தது.
‘அவ என்ன உன் கூட பொறந்தவளோ? பேர் சொல்லி கூப்பிடுற? மரியாதையா ‘அம்மா’ன்னு சொல்லூஊஊ’என்று விழியுருட்டி மிரட்டிய கிழவரின் எச்சரிக்கைக்குப் பிறகு… மஞ்சு ‘நிலா’ என்று வானத்து நிலாவைக் கூட சுட்டுவதை விட்டு விட்டாள்!!
இந்நிலையில் மஞ்சுவின் ஏளனம் அறிந்தால்???
மஞ்சுவின் ஏளனத்தை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளாவிடினும் கூட… முன்கோபம் புரையோட, நிலத்தில் ஒற்றைக் காலை அடித்தவளாக,
“ம்மஞ்சூஊஊ…. இப்போ நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லப்போறியா இல்லையா?”என்று சத்தம் போட, தன் ஏளனத்தை அடக்கிக் கொண்டு, எஜமானியம்மாளுக்கு பதில் சொல்லலானாள் அவள்!!
“அது எந்த வருஷமும் நடக்குறது தான்மா.. போன வருஷம் கிளிநொச்சியில நடந்தது… இந்த வருஷம் மன்னார்ல நடக்குது.. தமிழ்நாட்டு தமிழர்களுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாதிரி.. இலங்கை வடதமிழர்களுக்கு இது.. மாட்டுவண்டியோட்டப் போட்டி” என்று எளிமையாக விளக்கம் கூற… மஞ்சு சொன்ன விஷயத்தில் வெகுவாகக் கவரப்பட்டாள் மென்னிலா.
“இன்ட்ரஸ்டிங்க்!!!”- கண்களில் சுவாரஸ்யம் மீதூறச் சொன்னாள் மென்னிலா.
மஞ்சுவோ தொடர்ந்து விளக்கம் கொடுக்க நாடி, “கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியான்னு வடமாகாணத்துல இருக்கற.. அத்தன மாவட்ட மாட்டுக்காரவுக.. அவ்வளவு பேரும் களத்துக்கு வருவாக.. வெத்துறவுகளுக்கு (வெற்றி பெறுபவர்களுக்கு) கிஃபட்டு கிடைக்கும்ல?”என்று சொல்ல.. மென்னிலாவின் கண்கள் களத்தை நோக்கி வந்த மாடுகளை எல்லாம்… சுவாரஸ்யம் மீதூற பார்த்துக் கொண்டே வீடியோ எடுக்கலானாள்.
எல்லாமே… ரொம்ப வாட்டசாட்டமான திமிலும், கூர்மையான கொம்பும் கொண்ட காளைகளாக இருப்பதைப் பார்த்தாள் மென்னிலா.
வண்டிகள் களத்தை நோக்கி ஓட்டி வரப்பட்ட தினுசிலேயே.. புழுதி புயல்வேகத்தில் கிளம்பிக் கொண்டிருந்தது. அப்படியானால் ஓடவாரம்பித்தால்?? என்று தோன்றிய போதே தலைசுற்றியது அவளுக்கு.
மஞ்சுளாவோ, “இந்த வாட்டி தாம்மா… நூற்றிரண்டு சோடி மாடுங்க களத்துக்கு வருது.. இது தான்… கூட(அதிக) மாடுங்க போட்டியில கலந்தக்குற திருவிழா!!”என்று எக்ஸ்ட்ரா தகவல் ஒன்றையும் கொடுக்க, வெள்ளைக்கோட்டுக்குப் பக்கத்தில்.. வந்து நின்ற மாடுகளையெல்லாம் பார்த்தபடி,
“ஓ.. இதுல நம்ம ஊரு மாடு எது..?”என்று கேட்டாள் மென்னிலா.
அவளது கேள்வியில் அடக்கமாட்டாமல் வாய் பொத்தி கிளுக்கி நகைத்த மஞ்சுளா, “போயும் போயும்.. உங்க சரவணன் மாமாவயே.. மாடுன்னு சொல்லிப்போட்டியளே..??”என்று சொல்லத் தான், இம்முறை தன் ஊர் சார்பாக சரவணன் போட்டியில் கலந்து கொள்வதே புரிந்தது!!
சரவணனை தான் உரைத்த மாட்டின் ‘ஆகுபெயராக’ மாற்றி விட்டாளே இந்த மஞ்சுப் பெண்!! என்றிருந்தது அவளுக்கு!!
“ம்மஞ்சூஊஊஊ..” என்றபடி அவளை நோக்கி கண்டனப் பார்வை செலுத்தியவள், உள்ளூற மஞ்சுவின் நகைச்சுவையை எண்ணி சிரிக்கத் தான் செய்தாள்.
மாட்டைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த சரவணனின் விழிகளோ, இத்தனை நேரமும் எங்கும் அலைபாயாமல்.. படிப்பை முடித்து விட்டு வந்த தன் அத்தை மகளையே ஆசையுடன் மேய்ந்து கொண்டிருந்தது.
அவள்.. தன் அத்தை மகள் அல்லவா? மீசை முளைத்த நாள் முதலாய் அவன் ஆசை வைத்திருக்கும் ஒரே பெண்ணல்லவா?? அவனுக்கு அவனுக்கேயென்று சொந்தமான முறைப்பெண் அல்லவா?? வருங்கால மனைவியும் கூட அல்லவா??
அதனால் அவள் போன திசையெல்லாம்.. சரவணனின் கண்களும் போய்க் கொண்டிருந்தது.
அவனிலே ஓர் திண்ணக்கம் உருவாகியிருந்தது!! எப்பாடுபட்டாவது இந்த போட்டியில் ஜெயித்தால்.. பட்டணத்துப் பெண் குயில் முன் ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு அவன் தெரியக் கூடும்?? அதனால் இந்தப் போட்டியில் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற திண்ணக்கமே அது!!
சரவணனைக் கண்டதும் தூரத்தில் இருந்த படியே, சிநேகமாக கையைத் தூக்கியவள், “ஹாய் மாமா” என்று கையைத் தூக்க,களத்தில் நின்றவனுக்கும் அனிச்சையாய் மேலெழுந்தது அவன் கைகள்.
முன்னே பின்னே… “வணக்கம்” தவிர்த்து “ஹாய்” சொல்லி பழக்கப்படாத அவன் கைகள்.. பட்டென மேலெழுந்ததைக் கண்டு.. பின்னந்தலை புன்னகைத்தபடியே தட்டிக் கொண்டான் அவன்!!
மென்னிலா தன் மாமா இருக்கும் இடம் நோக்கி விரையப் போக, அவள் பின்னாலேயே ஓடிய மஞ்சு, “ஹேய் எவ்விடம் போறீகமா..?”என்று கேட்டாள்.
மைதானத்தின் மூங்கில் வேலிகளை.. லாவகமாக குனிந்து தாண்டி, தானும் மைதானத்துக்குள் நுழைந்தவள், மஞ்சுவை நோக்கி, “இரு இரு.. ரிலாக்ஸ்.. இஇப்போ.. வந்துட்றேன்” என்றவள் மெல்ல அந்த மைதானம் கடந்து தன் சரவணன் மாமாவை நாடிப் போனாள்.
சரவணனின் விழிகள்.. தன்னை நோக்கி வரும் நிலாவையே மையலுடன் பார்த்தது. அங்கே குழுமியிருந்த ஆயிரம் பேரையும் தாண்டி… அவள் மட்டுமே அவனின் கண்களில் பதிந்தான்!!
தூரத்திலிருந்து வரும் போதே.. கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டே.. அவன் அருகே வந்து, நிற்க, சரவணனின் கண்ணியம் காக்கும் விழிகள்.. அன்று தறிகெட்டுப் பாய்ந்தது.
அடர்சிவப்பு நிற உதட்டுச்சாயம்.. சரவணனை ஏதோ செய்வது போல இருக்க… அந்த மேலை நாட்டு இளவரசியையே பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்!!
அவளோ கேமராவை ஓட விட்ட வண்ணமே, “மாமா.. இப்போ தான் மஞ்சு சொன்னா.. நீங்களும் ரேஸ்ல கலந்துக்க போறதா.. ஆல் தி பெஸ்ட்!!” என்று மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல்,
புன்னகைகைத்த படியே அவள் கை நீட்ட, அந்த வெண்ணெய் சிலையின் கைகளை கூட இரசித்துப் பார்த்தான் சரவணன்!!
அவள் கையைப் பிடிப்பதே வரமென்று கொண்டவன் கையும் தன் முறைப்பெண்ணை நோக்கி நீண்டது.
கைப்பிடித்துக் குலுக்கியவள், அவனுடைய நரம்போடும் மாநிற ஆர்ம்ஸின் கடினத்தன்மையைக் கண்டு வியந்து தான் போனாள்.
அதைப் பிடித்து அமுக்கிப் பார்த்துக் கொண்டே ஆச்சரியம் மீதூறும் கண்களுடன், “வாவ்!! என்னா ஆர்ம்ஸ்டா??.. நீங்க ஜிம்முக்கு போவீங்களா? ”என்று கேட்டாள்.
“ம்ஹூஹூம்..”என்று தலையாட்டியவனுக்கு, நிலா தன் கட்டுமஸ்தான உடலை ஆச்சரியமாக பார்ப்பது.. உள்ளே நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வைக் கொடுத்தது.
ஆனால் அவளுக்கோ, ‘என்ன ஜிம்முக்கு போகாமலே இப்படி ஆர்ம்ஸா?’என்று வியப்பாக இருந்தது.
கொழும்பில் ஜிம்மிலேயே பாதிநேரம் கழித்தவர்களுக்குத் தான் இந்த மாதிரி முரட்டு கைச்சந்துகள் வாய்க்கப் பெறும் என்று எண்ணியிருந்தவளுக்கு.. மாமா ஜிம் போகாமலேயே இப்படி கட்டுடல் மேனியாக இருப்பது வியக்க வைத்தது!!
போர்ச்’ சிலிருந்து தன் நவீனரக செல்லை வெளியில் எடுத்தவள், சின்னக்குழந்தைகள் போல, “ஒரே ஒரு செல்ஃபீ மாமா.. ‘ஹேஷ்டேக் வித் பாடிபில்டர் மாமா’ன்னு ஃஎப்.பீல போட்டேன்னு வைச்சுக்குங்களேன்.. லைக் பிச்.. ச்சுக்கும்…!!”என்று அழுத்திச் சொல்லி.. குதூகலிக்க… அவன் தலையும்.. அவள் மகிழ்ச்சிக்காக தானாகவே ஆடியது!!
மனதில் எந்த விதமான உள்நோக்கமும் இல்லாமல், மாமனின் தோள் மேல் கையிட்டுக் கொண்டு அந்தரத்தில் செல்ஃபீ ஸ்டிக் வைத்தவள், மாட்டுப்போட்டி நடக்கும் மைதானத்தையும் பின்னணியாகக் கொண்டு.. ஒரு புகைப்படம் கிளுக்கினாள்!!
வெகுவெகு அருகாமையில்.. தாடை உரசும் விரிசலில் அவள் முகம்!! கூடவே அவன் நாசி துளைக்கும் அவளது சென்ட் வாசனை!! நிஜமாகவே அவனுக்கு உள்ளே புல்லரித்தது;உடல் சிலிர்த்துக் கொண்டது.
அந்த நேரம் ஒலிவாங்கியில்,மீண்டும் அதே அறிவித்தல் குரல்!!
“ஓட்டப்பந்தயக்காரர்கள் எல்லாம்.. பந்தய இடத்திற்கு வருகை தரவும்!! யப்பா பத்தொன்பதாவது நம்பர் வண்டி வந்தாச்சாப்பா?? சீக்கிரம் வரச்சொல்லுய்யா” என மேடையில் இருந்து குரல்கள் பதற்றத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது.
சரவணன் போட்டிக்கு நேரம் வந்து விட்டது என்பதை அறிந்து,அவளிடமிருந்து புன்னகைத்துக் கொண்டே விடைபெற்று… அவளைத் தாண்டிப் போனான்.
சரவணனின் நெஞ்சிலோ,மென்னிலாவின் ஒற்றைப் புன்னகையில்.. மழையடித்து… செடி முளைத்து.. பூக்களும் மலர்ந்து.. வாசம் வீசலானது.
மாடுகள் எல்லாம்.. ஓட்டம் ஆரம்பமாகப் போகும் இடத்தை அடைவதை… மீண்டும் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருக்குங்கால்.. வேலி தாண்டி நீண்ட இரு மெல்லிய கரங்கள் அவள் முன்னங்கைப் பற்றி இழுத்தது!!
திரும்பிப் பார்த்த போது அது மஞ்சு எனப் புரிந்தது அவளுக்கு!!
“இங்கன நிக்கக் கூடாது வாங்கமா..”என்று, ‘ராஜமாணிக்கம்’ பார்த்தால் ‘நான் காலி’ என்ற அவஸ்தையில் தவிக்கும் குரலுடன் சொன்னாள் மஞ்சுளா.
தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை மீறி.. உலகத்தை அனுபவிக்க முயலும் இளவரசியைக் கட்டிக் காக்கும் சேடியர் நிலை போன்றது மஞ்சுவின் நிலை!!
மஞ்சுளாவின் இழுப்புக்கு இசைந்து கொடுத்து, மீண்டும் மூங்கில் வேலியைக் குனிந்து கடந்தவளாக பார்வையாளர் பகுதிக்குச் சென்றாள் மென்னிலா!!
பார்வையாளர்களோடு பார்வையாளராக அவள் நின்றிருந்தாலும் கூட, அவளது கால்கள் மட்டும் ஓரிடத்தில் நில்லாமல் சுற்றி வலம் வரவே எத்தனித்துக் கொண்டிருந்தது.
அவள் கைகளில் அடைக்கலமாகியிருந்த நவீனரக கேமரா.. சுற்றிநடப்பதை தனக்குள் அடக்கி விட, கோரப்பசியில் துடித்துக் கொண்டிருந்தது.
மாடுகள் எல்லாம் வெள்ளை கோட்டின் முன் வந்து நிற்க.. காளைமாடுகள் எந்நேரமும் சீறிப்பாய ஆயத்தமாக இருந்தது.
சில மூர்க்கத்தனமான மாடுகள்.. தன் மூர்க்கனாங்கயிறை அறுத்துக் கொண்டு ஓடி விடுவது போல வண்டியை இழுத்துக் கொண்டு நிற்கலானது!!
அவற்றின் கத்தலும், தாடையிலிருந்து வழிந்து கொண்டிருந்த உமிழ்நீரும்.. மண்ணைத் தேய்த்துக் கொண்டிருந்த குளம்புகளும்… அவைகளின் ஆக்ரோஷத்தை உணர்த்த, வண்டிக்காரர்கள் எல்லாம்.. நடுவர் ஆட்டப்போகும் கொடியின் அசைவுக்காக காத்திருந்தனர்.
அந்நடுவரும்.. பட்டென்று தன் பச்சைக் கொடியை ஆட்டவே.. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல பறக்க.. அந்தப் பொட்டல் நிலமெங்கும் உயர எழுந்தது புழுதி!!
எந்த மாட்டுச் சோடி.. எந்த மாட்டுக்காரன் முன்னாடி வருகிறான் என்பதைப் பார்க்கவே முடியாத தூசு மண்டிக்கிடக்கும் புழுதி!!
தன் கேமராவில் வீடியோ எடுத்துக் கொண்டே.. புழுதி பறக்க ஓடிய வண்டிச்சில்லுகளில் எது முன்னாடி வருகின்றது என்று பார்த்துக் கொண்டே.. மைதானத்தை இடமிருந்து வலமாக சுற்றி வரலானாள் மாது!!
அப்போது தான்… அந்தப் புழுதியைக் கிழித்துக் கொண்டு… புயல் வேகத்தில்.. இடியும், மின்னலும் கலந்தடித்தாற் போன்ற அதிரடியில் முந்திக் கொண்டு வந்தது ஓர் காளைமாட்டுச் சோடி!!
அவற்றைக் கட்டுப்படுத்தும் கயிற்றினை ஒரு கையாலும், சாட்டையை மறுகையாலும் பிடித்துக் கொண்டு.. வந்த ஆகாயத்தின் மன்னவனைக் கண்டதும் மங்கையவள் நெஞ்சம் ஒரு முறை திமிறி அடங்கியது.
இதுவரை கேமராவில் நடப்பதை எல்லாம் பார்த்தவளின் பார்வை மெல்ல நிமிர்ந்து.. ஒரு வித அலைப்புறுதலுடன்.. நேரடியாக அவனைக் கண்டது!!
பாய்ந்து வரும் மாடுகளின் திமில் போலவே அலைபாய்ந்து கொண்டிருந்தது அவனுடைய வசீகரமான கேசம்!!
நெற்றிக்கு நடுவில் சின்னதாக விபூதிக் கீற்று இருக்க.. நெற்றியும் சரி, புருவங்களும் சரி, கண்களும் சரி.. ரொம்பவும் இடுங்கி தீவிரமாக இருந்தது!!
அவனது பொசுபொசுவென்ற தாடியோடு சுழித்திருந்தது கன்னங்கரேலென்ற மீசை!!
அவனது இடது நெற்றியோரம் உற்பத்தியான ஒரு வியர்வைத் துளி.. கன்னவோரம் தாண்டி.. சட்டென்று பூமிக்கு அர்ப்பணமானது!!
மாட்டின் கயிறைப் பிடித்திருந்த கைகளின் உரம்.. அதில் ஏறியிருந்த முறுக்கு!! எல்லாமே அவளை ஏதோ பித்துப் பிடித்த ‘மஜ்னு’வின் நிலைக்குத் தள்ளுவது போல இருந்தது!!
‘கூடவே காதில் அவன் அணிந்திருந்த கடுக்கண்!! நெஞ்சில் ஊசலாடிய ருத்திராட்ச மாலை!! திறந்திருந்த பட்டன் வழியாகத் தெரிந்த கற்சிற்பம் போன்ற செதுக்கிய மார்பு!!
அவனிலிருந்து விழியெடுக்க முடியாமல் போனது அவளுக்கு.
அவனைப் பார்த்ததும் ஏன் இந்த உணர்வு??எந்த ஆணையுமே கண்டிராதது போல ஏன் இந்த உறைவு??
அவள் வாழ்ந்த கொழும்பில் இல்லாத ஸ்டைலிஷ் ஆண்களா?
ஆழ்கடலுக்கு அடியில் அநாயசமாக சுழியோடும்.. அவள் படித்த ‘றுஹூணு கேம்பஸில்’ இல்லாத… தைரியமான ஆண்களா..??
ஆனால் அந்த வெள்ளை மாடுகளின் உரிமையாளனை..பார்த்த நொடியிலேயே இத்தனை வேதியியல் மாற்றங்களையும் அவளுள் தோற்றுவிப்பதற்கான காரணமும் என்ன??
இவனைக் கண்டதும் ஜென்ம ஜென்மமாக எழும் பந்தப் பிணைப்பு உணர்வு தோன்றுவதும் ஏன்?
யாரிவன்? எந்த ஊர்க்காரன்?? வெளி மாவட்டத்தானா? இல்லை மன்னார்க்காரனா??
அவளது கேள்விகளுக்கு எல்லாம் விடையாக ஒலித்தது அறிவிப்பாளரின் குரல்!!
“சீறி வரும் காளைகளை.. ஓட்டி வரும் முரட்டுக்காளை.. மன்னார் மாவட்ட… சிறுத்தோப்பு கிராமத்தின் வீரன்… பரிதிவேல் வீரன்.. தற்போது விரைந்து வந்து கொண்டிருக்கிறார்”என்றது அந்தக்குரல்!!
அவள் காதுகளில் தேன்மழை பொழிந்தது போல ஒரு சுகம்!! அவன், அவளது ஊரைச் சேர்ந்தவனா என்ன??
அவன் பெயர்.. “பரிதிவேல் வீரன்”- மோனக்குரலில் சொல்லிப் பார்த்தவளுக்கு.. உள்ளுக்குள் ஓர் பரவசம் எழுந்து பரவுவது போல இருந்தது.
அடுத்து வந்த கணம்.. அது.. அவள் வாழ்வில் இனிமையான ஓர் கணம்!! அவள் எஞ்ஞான்றும் ஆசைவைக்கும் சுவையான நொடிப்பொழுதுகள் அவை!!
வலது புற பார்வையாளர்கள் பகுதியில் நின்றிருந்தவளை நோக்கி தன் கருமணிகளை மட்டும் மெல்ல திருப்பியவன்,
அவளை… தன் காந்தக் கண்களால் ஈர்ப்பது போல ஓர் பார்வை பார்த்தவாறே அவளைப் பார்த்து விரிந்தும், விரியாதது போல ஓர் மொட்டுநகையொன்று உதிர்க்க.. முதுகந்தண்டு ஜில்லிட்டது அவளுக்கு.
அவன் பார்த்தது மெய் தானா? இத்தனைக் கூட்டத்தின் நடுவிலும் அந்த வீரன் அவளையே ஆகர்ஷிப்பது போல பார்த்தானா? பட்டும் படாமல் சிரித்தானா?? அது மெய்தானா??
அவள் அந்த கணநேரப் பார்வையில் பித்துப்பிடித்தவள் போல.. முன்னேறிச் செல்லும் அவனையே பார்க்க, அவன் முகமோ அடுத்த நிமிடம் இறுக்கமாக மாறிப் போனது.
தன் வெற்றி இலக்கை அடைவது ஒன்று மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டவன் போல அவனது கழுகுக் கண்கள்.. எல்லைக் கோட்டையே அவதானிக்கலானது!!
அந்த நேரம் அவன் வெற்றி இலக்கை அடையத் துணிந்த நேரம்.. அவன் பின்னாடி… பல மாட்டு வண்டிகள் ஆவேசத்துடன் பின் தொடர்ந்து கொண்டிருந்த நேரம்!!
பரிதிவேல் வீரனின் பின்னால் வந்து கொண்டிருந்த மாட்டு வண்டியின் சக்கரம்.. கல்லில் ஏறி இறங்க, தளர்வாக இருந்த ஒரு பக்க அச்சாணி கழன்றதில்.. இடதுபுறம் இருந்த மாடு கட்டவிழ்க்கப்பட்டது தானாகவே.
ஒற்றைச்சில்லுடன் பாதி தூரம் ஓடிய மாடு ஓட்டுநர்.. தபாலென நிலத்தில் விழுந்து புரள,ஒரு மாடு மட்டும் அவ்விடத்திலேயே நின்று போனது!!
எங்கும் புழுதி!! ஆவேசமான மாடுகளின் கதறல்கள்!! கழற்றிவிடப்பட்ட வாயில்லாத ஜீவனுக்கோ.. அனந்தரமான காட்டுக்குள் விடப்பட்டது போல இருந்தது.
அம்மாட்டுக்கு அந்த அசாதாரண சூழல் ஒருவித பயத்தைக் கொடுத்திருக்க வேண்டும்!! இலக்கு எதுவென்றே தெரியாமல்… தன் கால் போன போக்கில் தறிகெட்டு ஓடலானது அது!!
சுற்றி போடப்பட்டிருந்த வேலியை இடித்துக் கொண்டு அது, பார்வையாளர்கள் பக்கமாய் ஓட, வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாரும் பின்னங்கால் பிட்டத்தில் பட.. உயிருக்காக தெறித்து ஓடவாரம்பித்தனர்.
அந்த மன்மதனிலேயே கண்கள் பதித்திருந்த ரதிக்கு, ஆசுவாசமான களம் எப்போது ஆக்ரோஷமாக மாறியது என்றே புரியவில்லை!!
அதிலும் ஏன் மக்கள் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்?? என்று புரியவேயில்லை.
ஓடும் மனிதர்களை எல்லாம்.. அவள் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்த கணம்.. அவளை நோக்கி கோபத்துடன் கதறிக் கொண்டு வந்தது மாடு.
அதன் வருகையை சற்றும் எதிர்பார்த்திராதவள்.. ஒரு கணம் மூச்செடுக்கவும் மறந்து போனவளாகத் தான் நின்றாள்!!
மாடோ.. தன் பாதைக்கு குறுக்கே நிற்கும் அவளை ஆக்ரோஷமாக மூச்செடுத்தவாறு தாக்கவர,
அச்சத்தில் இரண்டெட்டு பின்னாடி நகர்ந்தவள்.. கால் தடுக்கி விழ, அன்று அவள் எண்ணிக் கொண்டது எல்லாம் ‘இன்றோடு அவள் வாழ்நாள் முடியப் போகிறது!’ என்று தான்!!
மேடையில் நின்ற தாத்தாவோ.. பட்டென்று நாற்காலியை விட்டும் எழுந்து கொண்டார்!!
முகமெல்லாம் பதற்றத்தில் வியர்வை பூக்க, தன்னை தாக்க வந்த மாட்டையே.. சிந்தை மறந்தவளாக பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
வரண்ட தொண்டைக்குள் சிக்கி இறங்கியது அவள் விழுங்கிய எச்சில்!!
சரவணனோ களத்தில் வண்டியோட்டிக் கொண்டே திரும்பி, ஆபத்தில் இருக்கும் தன் முறைப்பெண்ணை கண்டு கொண்டான். ஆனால் அவன் அடையப் போகும் வெற்றி எல்லையோ மென்னிலாவை விடவும் வெகுசமீபத்தில் இருந்தது.
வெற்றி இலக்கா? இல்லை அவனது ஆருயிர் முறைப்பெண்ணா? என்று சிந்தித்தவன், மாட்டை.. மென்னிலா இருந்த திசைப்பக்கம் திருப்ப முயற்சி செய்த போது தான் அது நடந்தது!!
மோத வந்த மாட்டைக் கண்டு கண்களை மூடிக் கொண்டு, “ஆஹ்!!” என்று கத்தியிருந்தாள் அவள்!!
தெய்வாதீனம்!! சர்வ நிச்சயமாக தெய்வாதீனம்!!
இதயம் தாறுமாறாக துடித்து அடங்க, வியர்க்க விறுவிறுக்க, கண்கள் திறந்தவள் கண்டது பேரதிசயம்!!
அவளைத் தாக்க வந்த முரட்டு மாட்டின் திமிலை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அதனை முன்னேற விடாமல், மூச்சடக்கிக் கொண்டு நின்றிருந்தான் பரிதிவேல் வீரன்.
அதன் திமிலைக் கட்டியணைத்திருந்த அவனது உரமேறிய கைகளும் சரி, புழுதி பறக்கும் செம்பாட்டு மண்ணில் அவன் கால்கள் தம் கட்டி நின்ற விதமும் சரி…கழுத்து நரம்பு புடைத்து, அவனது முகம் உப்பித் தெரிந்த போதும் சரி..
அவளுள் தோன்றியது எல்லாம் உண்மையிலேயே அவன் பெயருக்கேற்றாற் போலவே வீரன் தான் என்பது தான்!!
அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளிவர முடியாத நிலையில் இருக்க, சற்றே தலை திருப்பி… மென்னிலாவைப் பார்த்தவனின் கண்கள்… அவளை ஒரு நிமிடத்துக்கும் குறைவான மின்னல் வேகத்தில்… கரிசனையுடன் ஆராய்ந்தது.
அப்படியேதும் ஆபத்தில்லை என்று புரிந்ததும் ஆசுவாசப்பட்ட விழிகள், ரௌத்திரபாவம் கொண்டது.
மாட்டை தம் கட்டி நிறுத்தியிருந்ததால், அவன் கழுத்து நரம்புகள் புடைத்து வெளித்தெரிந்து கொண்டிருந்தது
“இன்னும் என்ன ப்பார்த்துட்டிருக்க?? .. எழும்பிப் போஓஓ..!!”- காட்டுக் கத்து கத்தினான் பரிதிவேல் வீரன்!!
அந்தக் கத்தலில் தான் சுயநினைவு பெற்றவள், சட்டுப்புட்டென்று எழுந்து போக.. அவளை நோக்கி ஓடி வந்த மஞ்சு.. அவளை இழுத்துக் கொண்டு அணைக்க, அவனையே நன்றிப் பெருக்குடன் பார்த்துக் கொண்டே சென்றாள் மென்னிலா.
ஆக்ரோஷமான காளையின் திமில் பிடித்து நின்ற.. முரட்டுக்காளையின் உருவம் அப்படியே வரிவடிவமாக பதிந்து போனது அவள் அடிமனத்தினுள்!!
கோபம் தணியாமல் நின்ற மாட்டின் திமிலை விடாதவன்.. அதன் காதுகளில் ஏதேதோ சொன்னான்!! என்ன சொன்னானோ தெரியாது??
ஆனால் வெகுநேரமாக.. அதன் காதுகளில் ஏதேதோ சொல்லிக் கொண்டே.. நெற்றியைத் தடவித் தடவிக் கொடுத்தான் பரிதிவேல் வீரன்!!
அநேகமாக… அதன் பயத்தை போக்க…பாசமாக ஏதாவது மொழிந்திருக்கக் கூடும் என்பதே அங்கிருந்த அனைவரது ஊகம்!!
வழிதவறிய மாட்டின் சீற்றம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, சட்டென யாரையோ நோக்கி கண்ணசைத்தான் பரிதிவேல் வீரன்!!
அவ்விடத்துக்கு விரைந்து வந்தனர் அவனது பணியாளர்கள்!! அவர்கள் மாட்டின் கழுத்தைக் கயிற்றில் கட்டி அழைத்துச் செல்ல முற்பட, மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து புன்னகைத்த வண்ணமே… அனுப்பி வைத்தான் அவன்!!
அவனின் வீரம்.. அங்கிருந்த வாலிபர்களால் கவரப்பட.. நிகழ்ச்சி அறிவிப்பாளரே மேடையிலிருந்து மாலையுடன் ஓடி வந்து, அவனுக்கு அணிவிக்க, ஊரின் இளசுகள் அவனைத் தோள் மேல் தூக்கிக் குதூகலிக்க ஆரம்பித்தனர்.
அந்த நேரம்… எங்கிருந்தோ திரண்ட கருமேகங்கள்..மின்னல் வெட்டி.. இடியும் முழக்கி.. அடித்துப் பெய்தது மழை!!
அவ்வூர்மக்களின் சந்தோஷம்.. வராது வந்த வான்மழையில் இரட்டிப்பானது!!
அவளது கண்கள்.. ஐய்யனார் சிலை போல மிடுக்காக இருந்தவனையே உணர்ச்சிகள் மீதூறப் பார்த்தது.
இலங்கையின் வடபுலத்தாரின் ஆரவாரக் கூச்சலின் சந்தோஷம் தந்த உச்சத்தில், தன் மாலையைத் தூக்கி சுழற்றி அவன் வீச.. அது சரியாக வந்து வீழ்ந்தது அவள் கழுத்தில்.
அவன் தெரிந்து செய்தானோ.. தெரியாமல் செய்தானோ.. அந்த மலர்மாலை.. அவள் மீது வந்த விழுந்த தினுசில் ஆயிரம் சிலிர்ப்புக்கள் ஓடி மறைந்தது பெண்ணுக்குள்.
கூடவே… அவன் அவளையே கள்ளக்கண்ணால் பார்த்த வண்ணம் மந்தகாசப்புன்னகை சிந்துவது போல தோற்ற மயக்கம் தோன்ற… அந்த மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவளாகவே நின்றாள் மென்னிலா.
தன் முறைப்பெண்ணை நோக்கி… பதற்றத்துடன் ஓடி வந்த சரவணன், அவளை அழைத்துக் கொண்டு செல்ல முயல.. கால்கள் தான் நகர்ந்தாலும்.. கண்கள் அந்தச் சூரியனிலேயே நிலைத்திருந்தது!!
பழையதை எண்ணியவளுக்கு.. அனிச்சையாய் காதோரம் ஒலித்தது அவன் மொழிந்து விட்டு சென்றவைகள்!!
“ஆண்டாளு சூடியதை.. கண்ணன் சூடின காலம் மலையேறிப் போயிடுச்சு? இது கண்ணன்.. தன் கையால.. தன்னோட ஆண்டாளுக்கு மலர் சூடும் காலம்!!”
அவர்களின் முதல் சந்திப்பை நினைவுகூரவா அவன் அவ்வாறு சொல்லிச் சென்றான்??
super sis