ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 5
 
 
குழந்தைகளின் உயரத்துக்கு கீழே குனிந்து உட்கார்ந்த மான்வியோ  குழந்தைகளை கைவளைவில் கொண்டு வந்து “யா.யார் கூட வந்தீங்க?” என்றாள் படபடப்பாக அவளது இதயம் மில்லியன் மடங்கு வேகமாக துடித்தது.
 
குழந்தைகள் கைத்தடியை ஊன்றி நின்ற அருணாச்சலம் பக்கம் நின்றிருந்த ஜெயசீலனை கைகாட்டியது. 
 
இரு குழந்தைகளின் கை பிடித்துக் கொண்டு ஜெயசீலன் அருகே சென்றவள் “நீங்களா! ஏங்கப்பா இங்க அழைச்சிட்டு வந்தீங்க. இந்த ஊர்ல என் பசங்களுக்கு ஆபத்து இருக்குனு பல முறை உங்க கிட்ட சொல்லியிருக்கேனே!” என்று  கண்கள் சுருக்கி ஆயாசமாக பார்த்து வைத்தாள்.
 
ஜெயசீலனோ “அம்மாடி” என்று பேச ஆரம்பித்தவரை இடைமறித்த அருணாச்சலமோ “உன் கேள்விக்கான பதிலை நான் சொல்றேன் மான்வி” என்றார் குரலை உயர்த்தி.
 
“உனக்கும் உன் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கொடுப்பேனு சொல்லுவீங்க தாத்தா! அது உங்களால முடியாது என் குழந்தைங்க இங்க இருக்கறது தெரிஞ்ச அடுத்த நிமிசம் உங்க பேரன் மயூரன் வந்துடுவாரு குழந்தைகளை என்கிட்டயிருந்து இரக்கமே இல்லாம பிரிச்சு அழைச்சிட்டு போயிடுவாரு. உங்க மருமக என் குழந்தைகளை கொடுமைப்படுத்துவாங்க! நானும் மறுபடியும் அனல் மேல நிற்கணும் குழந்தைகள் என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட இருக்கவும் மாட்டாங்க. குழந்தைகளுக்காக மட்டும்தான் நான் இந்த உலகத்துல உயிரோடவே இருக்கேன் தாத்தா” என்றவளின் குரல் உடைந்து வந்தது.
 
அருணாச்சலமோ “பேத்தி பொண்ணு நீ  இந்தளவு பயப்பட தேவை இருக்காதுமா! என்னை மீறி மயூரன் குழந்தைகளை அழைச்சிட்டு போக விடமாட்டேன்மா! நீ என்னை நம்பு… இப்ப நீயும் குழந்தைகளும் சென்னையில இருக்க வேண்டிய கட்டாயம். உன் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிடகூடாது! உன் வாழ்க்கைக்கு மயூரன் பதில் சொல்லியே ஆகணும்டா! உன் குழந்தைங்களை பாதுகாக்கணும்னு நீ நினைக்கறது போல நான் என் பேத்தி வாழ்க்கை பூத்து குலுங்கணும்னு நினைப்பேன்ல பேத்தி” என்று மான்வி அழுவதை தாங்க முடியாமல் பேத்தியை அணைத்துக்கொண்டார்.
 
“தாத்தா நீ சொல்றது எல்லாம் சரிதான்! ஆனா ஆனா உங்க பெரிய பேரன் அவனால ஆபத்து இருக்கு நான் எப்படி சொல்வேன்” என்றவளுக்கு உதடுகளுமே துடித்தது.
 
“மறைஞ்சு வாழறவனை பத்தி நீ ஏன்டா கவலைப்படற! அந்த நாயோட பல்லை பிடுங்கி வீட்டை விட்டு அனுப்பியாச்சே பேத்திபொண்ணு! நீ படிச்ச பொண்ணு தைரியமா இருக்கணும்டா! இத்தனை பேர் உன்னை சுத்தி இருக்கோம் நீ இப்படி கலங்கி நிற்கறதை பார்த்து என் மனசு பதறுது முடியலைடா சாமி” என்று ஆதங்கத்துடன் மனம் வெதும்பி நின்றார்.
 
ஜெயசீலனோ “நானும் சாந்தியும் உன்னோடவே இருக்கறதா முடிவு பண்ணி வந்திருக்கோம்டா குழந்தைகளோட அப்பாவை தவிர வேற எவனும் குழந்தைகள் நிழலை கூட தொட விடமாட்டேன். நீ கவலைப்படவே வேண்டாம்டா நீ உன் ஹஸ்பன்ட் கூட சேர்ந்து வாழறதை நாங்க பார்க்கணும்!” என்றார் உறுதியான குரலுடன்.
 
“உங்களுக்கு மயூரனை பத்தி தெரியாதுங்கப்பா” என்றவளுக்கு விரக்தி புன்னகை வந்தது.
 
“என் பேரன் உன் விசயத்தல மட்டும்தான் தப்பு பண்ணியிக்கான் மான்வி அவனுக்கு குழந்தைகள் இருக்குனு தெரிஞ்சா குழந்தைகளை அழைச்சிட்டு போகும்போது  குழந்தைகளுக்கு அம்மா வேணும்னு நினைச்சு உன்னையும் கூட்டிட்டு போவான்னு  நம்பிக்கையில நான் குழந்தைகளையும் உன்னையும் என்னோட வச்சிக்க முடிவு பண்ணி உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்! இனி உன்னை எங்கயேயும் விடுவதா இல்லை” என்றார் திடமாக.
 
“குழந்தைகளா நீங்க இந்த பாட்டன் கூடத்தான் இருக்கப்போறீங்க வாங்க” என்று குழந்தைகளை கை நீட்டி அழைக்கவும் குழந்தைகள் ஓடி அருணாசலத்திடம்  அணைப்புக்குள் நின்றுக் கொண்டு மான்வியை பரிதவிப்பாக பார்த்தனர். 
 
“நாம தாத்தாகூட இருப்போம்” என்று மான்வி இதழ் லேசாய் விரித்ததும் 
 
குழந்தைகள் “ஐ ஜாலி ஜாலி” என்று துள்ளி குதித்தனர்.
 
“அட பேரக்குழந்தைகளா இந்த பாட்டனுக்கு வயசாகிடுச்சு” என்று வயிறு குலுங்க சிரித்தவரின் மீசையை பிடித்து இழுத்து வம்பு செய்தனர் குழந்தைகள். அனைவரின் மன இறுக்கத்தையும் குழந்தைகளின் சிரிப்பொலி தளர்த்தெறிந்தது.
 
வீட்டுக்குள் சென்றதும் சாந்தி குழந்தைகளுக்கு பால் ஆத்திக் கொண்டு வரவும் “அம்மா” என்று அணைத்துக்கொண்டாள் மான்வி. 
 
“எங்க மேல கோபம் இல்லையே மான்வி?” என்றவரின் தோளில் சாய்ந்தவள் “எனக்கு அடைக்கலம் கொடுத்தவங்க மேல கோபம் வராதுமா” என்றவளின் கண்ணில் நீர்த்துளி எட்டிப்பார்த்தது.
 
அருணாச்சலத்திடம் விளையாடிய குழந்தைகள் இருவரும் தாயை தேடிவந்து மான்வியின் மடியில் ஏறி உட்காரவும் கண்ணீரை விரலால் துடைத்துக்கொண்டு சாந்தியின் கையிலிருந்து பாலை வாங்கி இருவர் கையிலும் கொடுத்தாள். 
 
இருவரும் சமத்தாக குடித்துவிட்டு மீண்டும் அருணாச்சலத்திடம் ஓடியது விளையாடுவதற்கு. விளையாடி களைத்து உறங்கிவிட்டனர் கவலைகளின்றி அவர்களுக்கு புது சொந்தம் கிடைத்த மகிழ்ச்சியில்.
 
மான்வி இரவு உடைக்கு மாறி உறங்கும் குழந்தைகளின் நெற்றியில் முத்தம் கொடுத்தவளுக்கு வழக்கம் போல தூக்கம் வராமல் குத்துகாலிட்டு அமர்ந்து விட்டாள். அவள் மயூரனை விட்டு பிரிந்த நாளிலிருந்து அவளது தூக்கம் கோழித்தூக்கம்தான். மானு டார்லிங் என்று மயூரனின் குரல் அவளை தூங்க விடாமல் அலைக்கழிக்கும் பல இரவுகளில்.
 
“பேத்தி பொண்ணு” என்று அருணாச்சலத்தின் குரலில் இதழில் புன்னகையை மலரவிட்டுக்கொண்டாள். 
 
சாந்தியும் ஜெயசீலனும் பிரயாணம் செய்த களைப்பில் அவர்களை படுக்க அனுப்பியிருந்தாள் மான்வி.
 
“தாத்தா இன்னும் தூங்காம என்ன பண்ணுறீங்க டேப்லட் போட்டாச்சா?” என்று கட்டிலிலிருந்து இறங்கிய அருணாச்சலத்தின் கையை பிடித்து சோபாவில் அமர வைத்தாள்.
 
குழந்தைகளை பார்த்து “ஐந்து வயசு குழந்தைகளை எனக்கு தெரியாம வளர்த்திருக்க! உங்கப்பனும் உங்கம்மாவும் உயிரை விடும்போது என் மகளை பார்த்துக்கோங்கனு கையில சத்தியம் வாங்கிட்டு போயிட்டாங்க! என் பேரன் உன்னை வீட்டை விட்டு அனுப்பினா நீ போயிடுவியா கண்ணு… உன் தாத்தன் உயிரோடதானே இருக்கேன் செத்து போயிடலையே உன் மேல எனக்கு வருத்தம் கண்ணு!” என்றார் ஆதங்கமாக.
 
“தாத்தா எனக்கு குழந்தைகள் இருக்கறதை உங்க கிட்ட கூட நான் மறைச்சு வச்சது தப்புதான்! என்னை மன்னிச்சிடுங்க! உங்க மருமகளை பத்தி தெரியாதா அவங்க சீரியல் வில்லியை விட மோசமானவங்கனு தெரியாதா! அடுத்து உங்க பெரிய பேரன் அவனால என் குழந்தைங்களுக்கு அச்சோ கடவுளே என்னால நினைச்சு பார்க்க முடியலையே” என்று நெஞ்சை பிடித்தவள் குழந்தைகளை ஒரு முறை திரும்பி பார்த்துக்கொண்டாள் கண் முன்னே உறங்குகிறார்கள் என்று தெரிந்தாலும் உடம்பெல்லாம் அவளுக்கு நடுங்கியது.
 
“நான் என் குழந்தைகளை கோழிக்குஞ்சு அடைக்காக்குற மாதிரி பாதுகாப்பா வச்சிருந்தேன் நீங்க என்னை தேடி ஊர் ஊரா அலைஞ்சது எனக்கு தெரியும் தாத்தா, என்னோட பிரண்ட் மாலதி எனக்கு அப்டேட் கொடுத்துட்டு இருந்தா! உங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சுனு தெரிஞ்சுதான் உங்களை பார்க்க வந்தேன்! ஆனா நீங்க உங்க மேல சத்தியம் பண்ணி என்கூட இருக்கணும் பேத்திபொண்ணுனு என்னை இக்கட்டுல கொண்டு வந்து நிறுத்திட்டீங்க. இப்போ என் குழந்தைகளை எப்படி பாதுகாப்பேன் தாத்தா! அதுவும் உங்க ஆசை பேரன் மயூரனுக்கு தெரிஞ்சா என் கண்மணிகளை அவர் கூட அழைச்சிட்டு போயிடுவாரு என்னை அனாதையா தனிமரமா நிற்க வச்சிடுவாரு தாத்தா” என்று நெஞ்சம் குமறி வாய் விட்டு அழுதாள்.
 
“இனி உன் கஷ்ட காலம் முடிஞ்சது பேத்தி பொண்ணு! உன் கண்ணுல தண்ணி வரக்கூடாது சொல்லிட்டேன். சந்திரமதியை கண்டு நீ எதுக்கு பயப்படணும்? அவளை எதிர்த்து நின்னு பதில் பேசின பொண்ணு தானே நீ! இப்போ மட்டும் அவ மேல எதுக்கு பயம் வரணும்? உன் புருஷனை என் மருமக பாசத்தால கட்டி போட்டு வைச்சு இருக்கா! அவனை எப்படி வெளியே கொண்டு வரதுனு எனக்கு தெரியும்! நீ துவண்டு போகாம இருக்கணும்!” என்றவர் மான்வியின் கையில் அழுத்தம் கொடுத்தார்.
 
“உங்க பேரனுக்கு யாழினி கூட நிச்சயம் நடக்க போகுது!  அவர் யாழினி கூட சந்தோசமா வாழட்டும் தாத்தா! என் கூட இருக்கவரை அவருக்கு நிம்மதி இருக்காது” என்றவளின் குரல் கரகரத்து வந்தது.
 
“என் முகத்தை பார்த்து சொல்லு நீ மயூரனை மறந்துட்டனு” மான்வியின் முகத்தை பார்த்தார். 
 
“தாத்தா அவர் என்னை வேண்டாம்னு கழுத்தை பிடித்து வெளியே அனுப்பி இருக்கலாம் அவர் மேல கொள்ளை கோபம் இருக்கு… என்னால அவரை மறக்கவே முடியாது…” என்றாள் கண்ணீல் கண்ணீருடன்.
 
“மயூரன் மட்டும் உன்னை மறந்திருப்பான்னு நீ எப்படி நினைக்கலாம் கண்ணு! ரெண்டு பேரையும் சேர்த்து வைக்காம நான் ஓய மாட்டேன்! நீ தூங்கு கண்ணு” என்று தடியை ஊன்றி எழுந்து அவரது அறைக்குச் சென்றார்  அருணாச்சலம்.
 
மான்வியோ  ஐந்து வருடங்களுக்கு முன் “என் அம்மாவை கொலை பண்ண பார்த்தவ நீ என் கண்ணு முன்னாடி நிற்க கூடாது.”
 
அவள் “மாமா” என்று பேச வாயெடுக்க “மூச் வாயை திறக்காத டி உன்னை நம்பி இருந்தவனுக்கு துரோகம் பண்ணிட்டியே” என்ற வார்த்தையில் செத்தே விட்டாள் மான்வி.
 
தன்னவன் தன்னை கை விடவே மாட்டான் என்று நம்பி இருந்தவளை மயூரன் பேசிய வார்த்தைகள் கேட்டு மான்வி பிரமை பிடித்தவள் போல நின்று விட்டாள்.
 
“ஏய் இன்னுமா நிற்கிற ?” என்று மான்வியின் கழுத்தை பிடித்து ஹாஸ்பிடல் வெளியேக் கொண்டு வந்து விட அவள் தடுமாறி குப்பைத் தொட்டியின் பக்கம் விழுந்து விட்டாள் மழை ஜோவென்று கொட்டியது.
 
ஒரு நிமிடம் கண்ணை மூடி திறந்த மயூரனோ அவளை கை கொடுத்து தூக்கி விட கூறிய மனதை கல்லாக்கிக் கொண்டு ஹாஸ்பிடலுக்குள் சென்று விட்டான்.
 
மான்வியோ இன்று காலையில் தான் கர்ப்பம் தரித்ததை உறுதி செய்திருந்தாள். மயூரனிடம் தாய்மை அடைந்ததை கூற காத்திருந்தவள் தலையில் பெரிய இடி தாக்கி விட்டதே! 
 
கண்ணீரை துடைத்து எழுதவளின் முன்னே “என் தம்பி கைவிட்டா என்னடி நான் உனக்கு வாழ்க்கை கொடுக்குறேன்” என்று நாராசமாக சிரித்து மான்வியின் கையை பிடித்தான் ஜெகதீஷ்.
 
“கையை விடு டா பொறுக்கி நாயே! என் வாழ்க்கையை அழிச்சு போட்டுட்டு இன்னும் என்னடா என்கிட்டே வம்பு பண்ண வந்திருக்க… உன்னை போலீஸ்ல பிடிச்சு கொடுக்குறேன் பாரு” என்று அவனது கையை தட்டி விட்டு ஓட ஆரம்பித்தாள்.
 
மான்வியின் மனதில் தன் வயிற்றில் வளரும் குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதே அவளின் வைராக்கியமாக இருக்க அவள் ஓடிவந்த இடம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் டெல்லி செல்லும் ரயிலில் ஏறி விட்டாள் மான்வி.
 
ஒரு ஒரு ரயில்பெட்டியாக பார்த்துக்கொண்டே வந்தான் ஜெகதீஷ்.
 
முகத்தில் சேலையை போட்டு மூடி படுத்துவிட்டாள் மான்வி.
 
ஜெயசீலன் ரிட்டையர்ட் மிலிட்டரி மேன்! அவரது மனைவி சாந்தி மிலிட்டரியில் டாக்டர் இருவருக்கும் குழந்தைகள் கிடையாது. இருவருக்கும் சர்வீஸ் முடிந்து டெல்லிக்கு வந்துவிட்டனர். காய்கறி மார்கெட் சென்று திரும்பும் வழியில் நடந்து வந்த மான்வி மயங்கி விழுந்த வேளையில் தாங்கிபிடித்திருந்தார் சாந்தி.
 
மான்வியின் கையை நாடி பிடித்து பார்த்து அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளை குளிக்க சொல்லி அவளுக்கு சாப்பாடு போட்டு அவள் ரிலாக்ஸ் ஆனதும் அவளை பற்றிய விபரங்களை மேலோட்டமாக சொல்லிவிட்டாள் மான்வி.
 
மான்வியோ ஜெயசீலன் மிலிட்டரி உடையில் எடுத்த போட்டோ ஹாலில் இருப்பதை பார்த்தவள் இந்த இடம் நமக்கு பாதுகாப்பானது என்று நிம்மதியானவள் “சார் என் குழந்தைகள் பிறக்கும் வரை எனக்கு நீங்க பாதுகாப்பு கொடுக்க முடியுமா?” என்றிருந்தாள் கண்ணீருடன்.
 
“எங்களுக்கு மகனோ மகளோ கிடையாதுமா உன்னை எங்க மகளா பார்த்துக்குறோம் நீ காலம் முழுக்க எங்க கூட இருக்கறதுனாலும் எங்களுக்கு சந்தோசம் தான்மா ஆனா அதுக்கு முன்ன உங்க குடும்பம் பத்தி விளக்கமா எங்க கிட்ட சொல்லிடு!” என்றார் உறுதியான குரலில்.
 
“மயூரவாஹனன் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்  எங்க தாத்தா அருணாச்சலம் ஆரம்பிச்சது. அவருக்கு பிறகு எங்க மாமா கருணாகரன் இப்போ காலேஜ் சேர்மன் அவரோட மகன் மயூரவாஹனன் என்னோட ஹஸ்பன்ட்” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது வாயை பொத்திக்கொண்டு அழுதாள்.
 
சாந்தியோ “கர்ப்பமா இருக்க பொண்ணு இப்படி எமோசனல் ஆகக்கூடாதுமா! நீ எங்க வீட்லதானே இருக்க போற பொறுமையா உன்னை பத்தின விசயங்களை சொன்னா போதும்!” என்றார் அவளின் முதுகை ஆறுதலாக தடவியபடி.
 
“அம்மா உங்க மடியில படுத்துக்கவா? மனசு ரொம்ப கனமா இருக்கு! எனக்கு அம்மா இருந்திருந்தா அவங்க மடியில படுத்திருந்திருப்பேன்” என்றவளின் குரலில் வலி அப்பட்டமாக வந்தது.
 
மான்வியின் கர்ப்பகால மாற்றங்கள் அறிந்த சாந்தியோ “படுத்துக்கோமா” என்று மான்வியை தன் மடியில் படுக்க வைத்து அவளின் தலையை ஆதுரமாய் தடவவும் ட்ரெயினில் சென்னையிலிருந்து டெல்லி வந்த களைப்பில் அயர்ந்து உறங்கினாள் மான்வி.
 
சாந்தியோ ஜெயசீலனை பார்க்க அவரோ “இந்த பொண்ணு சொல்றதை வச்சு பார்க்கும்போது பேரண்ட்ஸும் கிடையாது போல… அவளா எல்லாம் சொல்லும் வரை நாமளா எதுவும் கேட்க வேண்டாம்” என்றிருந்தார் ஜெயசீலன்.
 
இரட்டை குழந்தைகளை சுமந்து மான்வி பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. அதுவும் மயூரன் அவளிடம் கடைசியாக அவள் மனதை காயப்படுத்தி பேசியதெல்லாம் அவளது நினைவுகளில் வந்து போகும் நேரம் சுருண்டு நத்தைக்கூட்டுக்குள் ஒடுங்கிக்கொள்வாள் பெண்ணவள். குழந்தைகள் பிறந்ததும் தான் அவளது முகத்தில் சிரிப்பு தவழ்ந்தது. மகன் மயூரனை உரித்து வைத்திருந்தான்.
 
குழந்தைகள் வளரத் துவங்கியதும் டெல்லியில் இருந்த மாலதிக்கு சொந்தமான பள்ளியில் குழந்தைகளுக்கு அட்மிஷன் போட்டு தானும் அங்கேயே ஆசிரியராக வேலை பார்த்தாள்.
 
அருணாச்சலம் மான்வியை மயூரன் வீட்டை விட்டு அனுப்பி விட்டானென்று தெரிந்த நாளிலிருந்து படுத்த படுக்கை ஆகிவிட்டார். படுக்கையில் இருந்தாலும் கருணாகரன் மூலம் பேத்தியை தேடிக்கொண்டிருந்தார். மான்வி ஜெயசீலனின் பாதுகாப்பில் இருக்கவும் கருணாகரனால் கண்டுபிடிக்க முடியாமல் போனது.
 
அருணாசலத்திற்கு உடம்புநிலையில் தொய்வு ஏற்படவும் அவருக்கு கடைசியாக தன்னை பார்க்கவில்லை என்ற ஏக்கம் வந்துவிடாக்கூடாதென பார்க்க வந்தவளை விடாமல் பிடித்துக் கொண்டார். இரண்டு நாள் அருணாச்சலத்துடன் தங்கிவிட்டு மீண்டும் டெல்லிக்கு வந்துவிட்டாள். குழந்தைகள் இருப்பதை பற்றி அருணாச்சலத்திடம் கூறவில்லை. கொள்ளு பேரனையும் பேத்தியையும் பார்த்துவிட்டால் அவர்களை அழைத்துச் சென்றுவிடுவார் என்ற அச்சத்தில.
 
அருணாச்சலம் பேத்தியை பார்த்ததும் உடல் நலம் தேறி மான்வியை கண்டுபிடித்து அழைத்து வந்துவிட்டார்.
 
விடிய விடிய தூங்காமல் விழித்திருந்த மயூரனின் அறை கதவை தட்டினார் சந்திரமதி. 
 
“மயூ கண்ணா” என்று கதவை தட்டவும் 
 
கதவை திறந்தவன் “கொஞ்ச நேரம் என்னை தொந்தரவு பண்ணாதீங்க கொஞ்சம் தூங்கி எழுந்து வரேன்” என்றவனை 
 
“கண்ணா பொங்கல் வச்சிட்டேன்! நீ தானே எப்பவும் பூஜை பண்ணுவ வாப்பா! சாமி கும்பிட உனக்காக எல்லாரும் காத்திருக்காங்கபா!” என்றார் மயூரனின் கையை பிடித்துக் கொண்டு.
 
“சரி வரேன் மா நீங்க போங்க” என்று பெருமூச்சு விட்டு குளியறைக்குள் சென்று குளித்து வந்தவன் கப்போர்டை திறக்கவும் மான்வியின் புடவை சரிந்து விழுந்தது. 

2 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top