ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 7

 

கருணாகரனும் மயூரனும் ஐ.சி.யுவிற்கு முன்னே வந்தவர்கள் கண்ணாடி வழியே அருணாச்சலத்தை பார்த்தனர். செயற்கை ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு நெஞ்சுக்கூடு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது அருணாச்சலத்திற்கு.

“தாத்தாவுக்கு ஹார்ட்ல பிளாக் இருக்கு சர்ஜரி பண்ணனும்னு சொல்றாங்க ரொம்ப பயமா இருக்கு மாமா” என்றாள் கையை பிசைந்துக் கொண்டு கலங்கிய கண்களுடன். 

மயூரனோ மான்வியின் கண்ணீரை கண்டு காண்டாகி “ரொம்ப சீன் போடாதடி ஐஞ்சு வருசமா கண்காணாத இடத்துல மறைஞ்சு இருந்துட்டு இப்ப வந்து தாத்தாவுக்கு உடம்பு சரியில்லனதும் கண்ணுல டேம்மை திறந்து விடுறா ட்ராமா குயின்” அவள் மறைந்து வாழ்ந்ததற்கு காரணகர்த்தாவே  தான்தானென்று குற்ற உணர்ச்சியில்லாமல் மான்வியை கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“நீ அழாதடாமா இப்பெல்லாம் ஹார்ட்டை வெளியே எடுத்து வச்சு ஆப்ரேசன் பண்ணுறதெல்லாம் சர்வ சாதரணம்கிற அளவுக்கு மருத்துவம் வளர்ந்திருக்கு. நீ பயப்படற அளவு தாத்தாக்கு ஆபத்து இருக்காதுமா கவலைப்படாதே” என்று மருமகளை தேற்றிக்கொண்டிருந்தார் கருணாகரன்.

ஆறுதல் கூறவேண்டிய மயூரனோ கண்ணாடி வழியே அருணாச்சலத்தை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.

அருணாச்சலத்தை பரிசோதித்து வெளியே வந்த டாக்டரிடம் “தாத்தாவுக்கு ஆப்ரேசன் எப்போ ஆரம்பிக்க போறீங்க டாக்டர்?” என்றான் பதட்டம் இல்லாமல்.

“அருணாச்சலத்திற்கு ப்ளட் தேவைப்படுது மயூரன்” என்று கூறியதும்

“எங்க தாத்தாவோட ப்ளட் குரூப்பும் என்னோடதும் ஒன்னுதான் நான் ப்ளட் கொடுக்குறேன் டாக்டர்” என்று முன்னே வந்தாள் மான்வி.

“டாக்டர் என்னோட ப்ளட்டும் தாத்தாவோட ப்ளட்டும் சேம் குரூப்தான் நான் ப்ளட் கொடுக்கறேன்” என மான்வியை முறைத்தபடியே சட்டையை மடக்கி விட்டான்.

“ரெண்டு பேர்ல யார் ப்ளட் கொடுக்கறதுனு டிசைட் பண்ணிட்டு நர்ஸ்கிட்ட சொல்லிடுங்க மதியம் ஆப்ரேசன் ஆரம்பிச்சிடலாம்” என்று இருவரையும் பார்த்து லேசாக புன்னகைத்துச் சென்றார்.

அருணாச்சலத்தின் குடும்ப டாக்டர் பார்த்திபன். 

“எலும்பும் தோலுமா இருக்கறவ உடம்புல ப்ளட் எங்க இருக்கப் போகுதுங்கப்பா தாத்தாக்கு  நானே ப்ளட் கொடுத்துக்குறேன் அவளை ஓரமா போய் அமைதியா உட்காரச் சொல்லுங்க” என்றான் நெற்றியை அழுந்த தேய்த்துக்கொண்டு.

‘மானு டார்லிங் உன்னோட உடம்பு மெத்து மெத்துன்னு பஞ்சு மெத்தை போல புசுபுசுனு இருக்கு’ என்று சொன்னவன் “இப்போ என்னை பார்த்து எலும்பும் தோலுமா இருக்கேனு சொல்லுறியாடா மாங்கா மண்டையா” என்று அவளுக்கு கோபம் சீறி வந்து அவனது தலை முடியை பிடித்து ஆட வேண்டும் என்றிருந்தது மான்விக்கு. ஆனால் தன் கோபத்தை இப்போது காட்டும் நிலையில் இல்லை என்று அமைதியாக கையை கட்டி நின்றாள்.

மகனின் பிடிவாதம் தெரிந்த கருணாகரனோ “மான்வி மயூரனே ப்ளட் கொடுக்கட்டும்” என்றிருந்தார்.

மதியம் ஆப்ரேசன் ஆரம்பித்து மாலையில் தான் அருணாச்சலத்தை ஐ.சி.யுவிற்கு மாற்றியிருந்தனர். 

“பேஷண்ட் கண்விழிக்கும் வரை ஐ.சியு உள்ளே யாரையும் விடாதீங்க” என்று நர்ஸிடம் பேசிய படியே வந்த டாக்டரிம் “தாத்தா எப்படியிருக்காரு டாக்டர்?” என்றான் மயூரன் சிறுபதட்டத்துடன்.

“ஆப்ரேசன் சக்ஸஸ் மயூரன்! அவர் ஃபுல் ரெஸ்ட்ல இருக்கணும்! நாளைக்கு காலையிலதான் கண்ணு முழிப்பாரு கண் விழிச்சதும் டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க! அவர்கிட்ட அதிகம் பேச வேணாம்! ஓபி பேசண்ட் வெயிட் பண்ணுறாங்க நான் கிளம்புறேன் மயூரன்” என்று கிளம்பிவிட்டார் .

மான்வியோ அவளை நினைத்துதான் தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது என்ற வருத்தம் அவளை ஆட்டிப்படைத்தது. 

மயூரனுக்கு போன் வரவும் சற்று தள்ளிச் சென்று போன் பேசிக்கொண்டிருந்தான். 

“மான்வி குழந்தைகள் நீ இல்லாம கஷ்டப்படுவாங்க! அப்பா நாளைக்கு காலையில தான் கண்விழிப்பாரு அதுவரை நான் ஒருத்தன் ஹாஸ்பிட்டல இருந்தா போதும் நீ இப்போ கிளம்புடா” என்ற கருணாகரனின்  கையை பிடித்துக்கொண்டு “மாமா என்னாலதானே தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்துருச்சு” என்று இதழ் பிதுக்கி கண்ணீர் வடித்தவளை அணைத்துக்கொண்டு “உன்னால கிடையாதுமா நான் பெத்து வச்சிருக்கேனே சீமந்த புத்திரன் அவனாலதான் தாத்தா இப்ப ஹாஸ்பிட்டல படுத்துக்கிடக்குறாரு” என்று யாரிடமோ போன் பேசிக்கொண்டிருந்த மயூரனை முறைக்க மட்டுமே முடிந்தது கருணாகரனால்.

போன் பேசி முடித்த மயூரனோ மான்வியின் கண்ணீரை துடைத்து விட்டுக்கொண்டிருந்த கருணாகரனை பார்த்து ‘ஸப்பா பாசமலர் படம் ஓட்டுறாங்கப்பா’ என்று தலையை உலுக்கிக்கொண்டான் மயூரன்.

மான்வியின் போன் அடிக்கவும் “சொல்லுங்கம்மா பசங்க என்ன பண்ணுறாங்க?”

“நேகாவுக்கு ஃபீவர் அதிகம் ஆகிடுச்சுமா! கதிர் தம்பிக்கு அப்பா போன் போட்டு நேகாவுக்கு  உடம்பு சரியில்ல ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்னு சொன்னதும் கதிர் தம்பி நம்ம வீட்டுக்கு வந்துட்டாங்க இப்போ அப்பாவும், கதிர் தம்பியும் நேகாவை அழைச்சிட்டு தாத்தாவை அட்மிட் பண்ணின ஹாஸ்பிட்டலக்கு வந்திட்டிருக்காங்க” என்று கூறியதும் மான்விக்கு தூக்கி வாரிப்போட்டது. 

மயூரனோ இன்னமும் போனில்தான் பேசிக்கொண்டிருந்தான்.

சாந்தி போனில் பேசுவது மான்வி பக்கத்தில் நின்ற கருணாகரனும் கேட்டுக்கொண்டுதான் இருந்தார். அவருக்குமே மயூரனை எண்ணி சிறிது கலக்கம் இருக்கத்தான் செய்தது.

மான்வியோ “மாமா எப்படியாவது உங்க மகனை இங்கிருந்து வீட்டுக்கு கிளம்பச் சொல்லுங்களேன் குழந்தைகள் அவரு கண்ணுல படக்கூடாது!” என்று கெஞ்சும் பார்வை பார்த்தாள்.

“பேரப்பசங்களை மயூரன் பார்க்கட்டும் கலகம் வந்தாதான் ஒரு தீர்வு வரும்” என தீர்க்கமாக பேசியவரின் கையை பிடித்துக்கொண்டு “விஷப்பரீட்சை வேண்டாம் மாமா ப்ளீஸ் எனக்கு என் குழந்தைகள் வேணும்” என்று கண்ணீர் விட்டவளை கண்டு பெரும்மூச்சு விட்ட கருணாகரனோ  “நான் அவனை வீட்டுக்கு போகச்சொன்னா போவானானு தெரியலைடா மான்வி… அவன் மனசுல என்ன நினைக்கிறானோ அதை மட்டுமே செய்வான்! உனக்காக பேசிப்பார்க்குறேன்” என்று மயூரன் பக்கம் சென்றார் கருணாகரன்.

போன் பேசுவதை நிறுத்தி விட்டு “தாத்தாவுக்கு மெடிசன் ஏதாவது வாங்கணுமாங்கப்பா” என்றான் போனை தள்ளிப்பிடித்தபடி.

“ஃபங்சன் நின்னு போனதுல உங்கம்மா கவலையா இருப்பா நீ கிளம்பி போய் அவளை சமாதானப் படுத்துப்பா! நான் ஹாஸ்பிட்டல இருக்கேன்!” என்றவரை அதிசயத்து பார்த்தான் மயூரன்.

“என்ன அம்மா மேல திடீர் அக்கறை! ஏதோ உள்குத்து இருக்கு போலவே” என்று புருவம் சுருக்கி தாடையை தேய்த்தான் மயூரன்.

“உங்கம்மா எனக்கு பொண்டாட்டிங்கிற அக்கறையில சொல்றேன் தாத்தாவும் நாளைக்கு காலையிலதான் கண் விழிப்பாரு அதுவரை இத்தனை பேர் ஹாஸ்பிட்டல் இருக்க வேண்டிய அவசியம் இல்லைப்பா நீ கிளம்பு” என்றவரை சந்தேகக் கண்கொண்டு பார்த்தவன் “உங்க மருமகளை வீட்டுக்கு அனுப்புங்க நான் ஹாஸ்பிட்டலதான் இருப்பேன். தாத்தா கண்விழிக்காம நான் வீட்டுக்கு போகமாட்டேன்” என்று அடம்பிடித்தவன் அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்துக் கொண்டு மான்வியை ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். 

“டேய்! டேய்! நீ உன்னோட மானுவை சைட் அடிக்கதானே வீட்டுக்கு போகாம ஹாஸ்பிட்டல உட்கார்ந்திருக்கே” என்று அவனது மனசாட்சி அவனை உசுப்பிவிட்டது.

“ஆமா இவ பெரிய தேவலோக ரம்பை, மேனகை நான் இவளை சைட் அடிக்கிறதுக்கு” பொருமிக்கொண்டான் மயூரன்.

மான்விக்கோ அவனது பிடிவாதம் கண்டு அவனது தலையில் ஏதாவது போட்டு உடைத்தால் பரவாயில்லை என்ற அளவிற்கு கோபம் வந்தது இதழ் குவித்து ஊதிக் கொண்டாள்.

மான்வியின் போனில் கதிர் எண் வரவும் “மாமா கதிர் ஹாஸ்பிட்டல் வந்துட்டான் போல நான் கிளம்புறேன் முடிஞ்சவரை நீங்க உங்க மகனை இந்த இடத்தை விட்டு நகரவிடாதீங்க மாமா” என ஐசியுவை விட்டு கிளம்பியிருந்தாள்.

பீடியாட்ரிக் வார்டில் சோர்ந்து போயிருந்த நேகாவை தோளில் போட்டு நடந்துக் கொண்டிருந்தாள். “ம்மா வாயெல்லாம் கசக்குது” என்று அழுத நேகாவை முதுகில் தட்டிக்கொடுத்து “காய்ச்சல் சரியாகட்டும் அம்மா சாக்லேட் வாங்கித்தரேன்டா தங்கம்” என்று குழந்தையை சமாதானம் செய்துக் கொண்டிருந்தவள் மனதிற்குள் மயூரன் இங்கே வந்துவிடுவானோ என்று அவளுக்கு நெஞ்சுக்குழிக்குள் பயப்பந்து உருண்டோடிக்கொண்டிருந்தது. எங்கே மயூரன் வந்துவிடுவானோ என்று கண்ணை சுழட்டி அந்த வார்டை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டேயிருந்தாள் பதட்டத்துடனே.

கதிர் அருணாச்சலம் இருந்த ஐ.சியுவிற்கு சென்று மயூரன் அங்கே இருப்பதை உறுதி செய்து மான்விக்கு போன் செய்து “அண்ணி அண்ணா  ஐ.சியு பக்கம்தான் இருக்காரு நீங்க பயப்படாம இருங்க” என்றவனோ கருணாகரன் பக்கம் சென்று நின்றுக் கொண்டான். 

நேகாவை பரிசோதித்த டாக்டரோ “பொங்கல் நிறைய சாப்பிட்டியா குழந்தை?” என்றபடியே நேகாவின் நாடியை சரி பார்த்துக்கொண்டிருந்தார்.

“கொஞ்சமாதான் சாப்பிட்டேன் டாக்டர்” என்றது குழந்தை இருமியபடியே.

“காய்ச்சலுக்கும், இருமலுக்கும் சிரப் கொடுக்குறேன் சமத்தா குடிச்சிட்டீங்கனா நாளைக்கே காய்ச்சல் சரியாகிடும் பாப்பா” என்று குழந்தையின் கன்னம் தட்டியவர் மருந்துச் சீட்டை நிரப்பி மான்வியிடம் கொடுத்தார்.

“தேங்க்ஸ் டாக்டர்” என மருந்துச் சீட்டை வாங்கி நேகாவை தூக்கிக்கொண்டு வேக நடையுடன் பார்மசி சென்று மருந்துகளை வாங்கிக்கொண்டு காருக்கு பக்கம் போகவும் கார் கதவை திறந்து விட்டார் ஜெயசீலன்.

காருக்குள் ஏறியதும் போனில் “கதிர் உங்க அண்ணா இன்னும் ஐசியு முன்னேதானே உட்கார்ந்திருக்காரு! நீ கிளம்பி வரமுடியுமா?” என்றாள் பதட்டத்துடன்.

“அண்ணா இங்கதான் இருக்காரு நான் ஐந்து நிமிசத்துல வந்துடறேன் இருங்க!” என்றவனோ “நான் கிளம்புறேன்பா ஏதும் வேணும்னா எனக்கு போன் பண்ணுங்க தாத்தா கூட இருப்பதற்கு நான் நைட் வந்துடறேன்” கருணாகரனிடம் கூறிவிட்டு மயூரனை பார்த்தான் அவனோ கண்களை மூடி யோகாசனம் செய்பவன் போல உட்கார்ந்திருந்தான்.

‘அப்பாடா தெய்வம் தியானத்துல இருக்காருப்பா’ என்று நெஞ்சில் கைவைத்து பெரும்மூச்சு விட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே வந்ததும் காரில் ஏறி உடகார்ந்தான் கதிரவன்.

“கதிர் காரை சீக்கிரம் எடு கதிர்” என்று அவசரப்படுத்தினாள் மான்வி. 

கார் ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறியதும்தான் மான்வி சீராக மூச்சு விட்டுக்கொண்டாள். அதுவரை நேகாவை நெஞ்சோடு அணைத்துப்பிடித்துக்கொண்டு ‘கடவுளே மயூரன் எங்களை பார்த்திரக்கூடாது’ என்று ஆயிரம் முறை கடவுளிடம் வேண்டுதல் வைத்துக்கொண்டிருந்தாள் மான்வி.

தூங்கிக்கொண்டிருந்த நேகாவை தோளில் தூக்கிக்கொண்டு தனது அறைக்குள் சென்றவள் நேகாவை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு திரும்ப நேத்ரன் “ம்மா” என்று கையை நீட்டி தூக்க சொன்னதும் நேத்ரனை தூக்கி இடுப்பில் வைத்து “என்னோட சின்ன கண்ணன் அம்மாவை தேடினீங்களா?” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டாள். 

“ஆமா” என்று தலையை ஆட்டிய நேத்ரனோ “நேகாவுக்கு ஹாஸ்பிட்டல ஊசி போட்டாங்களா வலிக்குதுன்னு அழுதாளா?” என்று உறங்கும் தங்கையை பரிதாபத்துடன் பார்த்து கேட்டான்  நேத்ரன்.

“நேகாவுக்கு ஊசி போடல கண்ணா! மருந்து மட்டும் கொடுத்திருக்காங்க!” என்று நேத்ரன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தாள்.

“அம்மா பாட்டாவுக்கு நெஞ்சு வலி சரியாகிடுச்சா? எப்போ நம்ம வீட்டுக்கு வருவாரு? நான் பாட்டா கூட யானை சவாரி பண்ண முடியாதா?” என்று அடுக்கடுக்காக பேசிக்கொண்டு வந்தான்  நேத்ரன்.

“தாத்தா வீட்டுக்கு வந்ததும் நீயும் நேகாவும் தாத்தாவை விளையாட கூப்பிட்டு தொந்தரவு பண்ணக்கூடாது! தாத்தாவுக்கு இதயத்துல ஆப்ரேசன் பண்ணியிருக்காங்க!” என்று நேத்ரனின் இதயம் இருக்கும் இடத்தை தொட்டுக்காட்டினாள் மான்வி.

“அப்படியா அப்போ பாட்டாவுக்கு வலிச்சிருக்கும்ல! நான் இனிமே பாட்டாவ விளையாட கூப்பிடமாட்டேன்!” என்றான் கண்ணை உருட்டியபடி நேத்ரன்.

“நீ என்னோட சமத்துப் பையன்ல! இன்னிக்கு நைட் மட்டும் சாந்தி பாட்டி கூட தூங்கிடுறியா கண்ணா?” என்றாள் நேத்ரனை கன்னத்தை பற்றி கொஞ்சும் மொழியில்.

“ஏன்மா நேகாவோட காய்ச்சல் எனக்கும் வந்துடும்னு பயந்து என்னை சாந்தி பாட்டி கூட படுக்க சொல்றீங்களாம்மா நான் உங்கமேல கால் போட்டு படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும் நான் உங்களை விட்டு போகமாட்டேன்” என்று இதழை பிதுக்கி அழுகைக்கு தயாரானான்.

“கண்ணா நீ நல்ல பையன்ல! அம்மா சொன்னா கேட்கணும்!” என்று பேச்சுக்கொடுத்தபடியே சாந்தியின் அறைக்கு நேத்ரனை தூக்கிச் செல்லவும் பால் ஆத்தி எடுத்து வந்தார் சாந்தி.

வெகுநேரம் நேத்ரனை சமாதானப்படுத்தி பாலைக்குடிக்க வைத்து மெத்தையில் அவனை படுக்க வைத்து குழந்தையுடன் படுத்துக்கொண்டாள் மான்வி. தாயின் வயிற்றில் காலை போட்டு கண்ணைமூடி படுத்தவன் சட்டென கண் விழித்து “அம்மா நான் தூங்கினதும் போயிருவீங்கதானே” என்று சிணுங்கியது.

“நேகாவுக்கு காய்ச்சல் சரியானதும் நாம மூணுபேரும் சேர்ந்து தூங்கலாம் அடம்பிடிக்காம தூங்கு கண்ணா அம்மாவுக்கு தலைவலிக்குது” என்றதுமே கண்ணைமூடிப்படுத்துக்கொண்டான் நேத்ரன்.

தன்னை அணைத்துக்கொண்டு உறங்கிய நேத்ரனின் தூக்கம் கலையாமல் தன்னிலிருந்து பிரித்து பக்கம் இருந்த தலையணையில் படுக்க வைத்துவிட்டு மெத்தையின் ஓரத்தில் தலையணைகளை அணைப்பாக கொடுத்துவிட்டு அவளது அறைக்கு வந்தாள். நேகா உறங்கிக்கொண்டிருக்கவும் குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறி வரவும் நேகா எழுந்து உட்கார்ந்து இரும ஆரம்பிக்க “நேகா குட்டி” என்று பதறியவள்  குழந்தையை தூக்கிக் கொண்டதும் நேகா மதியம் சாப்பிட்ட ரசசாதம் எல்லாம் மான்வி தோளில் அப்படியே வாந்தி எடுத்திருந்தது. 

குழந்தையை தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்று சுடுதண்ணீரில் நேகாவை சுத்தப்படுத்தி தன்னையும் சுத்தப்படுத்திக்கொண்டு குழந்தைக்கு வேறு உடைமாத்திவிட குழந்தை சோர்ந்து மெத்தையில் சுருண்டு படுத்துக்கொண்டது.

மான்வியோ “கடவுளே எனக்கு உடம்பு சரியில்லாம போனா கூட பரவாயில்லை… என் குழந்தைகளை ஏன் சோதிக்கற?” என்றவள் பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டு படுத்திருந்த நேகாவை தூக்கி மடியில் உட்கார வைத்து சாந்தி கொண்டு வந்த பாலை நேகாவுக்கு கொடுக்க “பால் வேண்டாம்”  தலையை ஆட்டி திரும்பிக்கொண்டது நேகா.  அரைடம்ளர் பாலை போராடித்தான் நேகாவுக்கு கொடுத்திருந்தாள் காய்ச்சலுக்கான சிரப்பை கொடுக்கவும் குடித்துவிட்டு மான்வியின் மடியில் படுத்துக்கொண்டது நேகா.

குழந்தையை தட்டிக்கொடுத்து உறங்க வைத்திருந்தாள் இரவு மணி பதினொன்று ஆனது அவளுக்கு காலையிலிருந்து அலைந்துக் கொண்டு இருப்பதால் தூக்கம் கண்ணை சொக்கியது. 

சாந்தி சூடாக தோசை சுட்டு வந்தவர்  “மான்விமா நான் ரெண்டு முறை உனக்கு தோசை சுட்டு வச்சு ஆறிப்போனதுதான் மிச்சம். இரண்டு வாய் சாப்பிடு. சாப்பிட்டு தூங்குமா” என மான்விக்கு சாந்தி தோசை பிய்த்து ஊட்டினார். 

“நீங்க மட்டும் இல்லைனா நான் ரெண்டு குழந்தைகளை வச்சிக்கிட்டு என்ன கதியாகி இருப்பேன்னு எனக்கு தெரியலம்மா” என்றவளின் கண்களில் ஈரம் கசிந்தது. ஒருகாலத்தில் எதுக்காக நாம அழணும் என்று அழுபவர்களை பார்த்து கேள்வி கேட்டவள் இன்று தினம் தினம் அழுதுக் கொண்டிருக்கிறாள்.

இரண்டு தோசை சாப்பிட்டதும் “போதும் நேத்ரன் தனியா தூங்குறான் அவன் பக்கம் போய் படுத்துக்கோங்க நடுவுல எழுந்தா தூங்கமாட்டான்” என கவலையாக கூறியவளிடம்  “அப்பா நேத்ரன் கூட இருக்காருடா இன்னொரு தோசை சாப்பிடு” என்று அவளை கட்டாயப்படுத்தி தோசையை சாப்பிட வைத்து விட்டு சாப்பிட்ட தட்டுடன் சமையல்கட்டுக்குச் சென்றிருந்தார் சாந்தி. 

“நீங்க வீட்டுக்கு கிளம்புங்கப்பா நான் தாத்தா கூட இருக்கேன்” என்று அருணாச்சலத்தை விட்டு மயூரன் பிரியவில்லை.

அருணாச்சலத்தால் தான் மகனுக்கு நடக்கவேண்டிய நிச்சயதார்த்தம் நின்று போய்விட்டது என்று கோபத்தில் பெரியவரை பார்க்க கூட வரவில்லை சந்திரமதி.

அருணாச்சலத்தை வீட்டுக்கு டிஸ்சார்ஜ் பண்ணும் நாளில் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தார் சந்திரமதி. அதுவும் பலமுறை மயூரன் தாத்தாவை பார்க்க வாங்கம்மா என்று கூப்பிட்டதும் வேறு வழியில்லாமல் மகனுக்காக அருணாச்சலத்தை பார்க்க வந்திருந்தார்.

அருணாச்சலமோ சந்திரமதியை பார்த்து “அடடே ஹார்ட் ஆப்ரேசன் பண்ணின மாமனாரை பார்க்க சீக்கிரம் வந்துட்டியே மருமகளே” என்றார் ஏளனப்பேச்சுடன்.

“தாத்தா அதிகம் பேசக்கூடாதுனு டாக்டர் சொல்லியிருக்காரு” என்று அருணாச்சலத்தின் தோளை மெதுவாய் அழுத்தினாள் மான்வி.

“உன்கூட ஒருமணிநேரம் தாத்தா பேசினாரு அப்போவெல்லாம் தாத்தாக்கு ஒண்ணும் ஆகலையேடி எங்கம்மாகிட்ட தாத்தா ஒரு நிமிஷம் பேசினதும் உனக்கு பொறுக்கலையா  தாத்தாவை அம்மா கூட பேச வேணாம்னு சொல்ற” என பல்லைக்கடித்து மயூரன்.

“என்ன அருணாச்சலம் எப்படி இருக்கீங்க?” என்றபடியே டாக்டர் வரவும் மயூரன் தன் கோபத்தை அடக்கிக்கொண்டான்.

அருணாச்சலத்தின் இதயதுடிப்பை செக் பண்ணிய டாக்டர் “பர்ஃபெக்ட் காரம், புளிப்பு நான் சொல்ற வரை சேர்க்க வேண்டாம் இன்னிக்கே டிஸ்சார்ஜ் ஆகிடலாம். ஒரு வாரம் கழிச்சு செக்கப்புக்கு அழைச்சிட்டு வாங்க” என மாத்திரைகளை எழுதிக்கொடுத்துச் சென்றார்.

மயூரன் மாத்திரை வாங்கச் சென்றதும் “என்னம்மா மருமகளே உன் மகன் நிச்சயதார்த்தத்தை நிறுத்திட்டேன் பார்த்தியா! என் பேரன் மயூரன் பொண்டாட்டி என் பேத்தி மான்விதான் தெரிஞ்சிக்கோ ! மயூரனையும் மான்வியையும் சேர்த்து வைக்காம இந்த கிழம் கட்டையில போகாது சந்திரமதி” என்றிருந்தார் அருணாச்சலம்.

“பார்க்கலாம் மாமனாரே ஒரு முறை தோத்துப்போயிட்டேன் அடுத்த முகூர்த்தத்துல என் மகனுக்கும் யாழினிக்கும் நிச்சயதார்த்தம் பண்ணுறேன் பாருங்க! உங்க மருமகளை என் மகன் வெறுத்து ஒதுக்கிட்டான். இனிமே இந்த ஓடுகாலி கூட என் மகன் வாழப்போறான்னு அற்ப ஆசை வைக்காதீங்க மாமா” என்று கிண்டல் செய்து சிரித்தார் சந்திரமதி.

தன்னை ஓடுகாலி என்றதில் மான்விக்கு கோபம் வந்துவிட்டது. பழைய துடுக்குத்தனமான மான்வி வெளியே வந்துவிட்டாள்.

“வார்த்தையை அளந்து பேசுங்க அத்தை” என்று விரலை நீட்டி கண்ணை உருட்டினாள் மான்வி.

“அப்படித்தான் பேசுவேன் என்னடி பண்ணுவ நீ ஊரை விட்டு ஓடின ஓடுகாலிதானே உண்மையை சொன்னா கசக்குதா ஐஞ்சு வருசமா எவன் கூட வாழ்ந்தியோ தெரியல” என்று முகம் சுழித்து பேசிய சந்திரமதியின் கையை மடக்கிபிடித்திருந்தாள் மான்வி.

2 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

  1. Квартиры на сутки в Гродно в пешей доступности от музеев и кафе
    квартиры в Гродно на сутки [url=http://www.newgrodno.ru]http://www.newgrodno.ru[/url] .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top