பூ 8
“பத்திரகாளி போல கண்ணை உருட்டினா நான் பயந்துடுவேனாடி… நீ என் குடும்பத்து மானத்தை வாங்கினதாலதான் என் மகன் உன்னை வீட்டை விட்டு விரட்டி விட்டான்! நீ யோக்கியமானவளா இருந்தா நீ இந்த ஊரை விட்டு ஓடி போயிருக்கமாட்ட! இதே ஊருல இருந்து உத்தமினு காமிச்சுருக்கணும்! குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுனுதானே இருக்கும்! உண்மையை சொன்னா உனக்கு வலிக்குதோ கையை எடுடி! உன்னையெல்லாம் இந்த ஜென்மத்துல பார்க்கவே கூடாதுனு இருந்தேன்! இதோ இந்த கிழவனுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால உன்னை பார்க்க வேண்டிய கிரகம் வந்துருச்சு எனக்கு” என்றவரோ முகத்தை அஷ்டகோணலாக்கி மான்வியின் கைப்பிடியிலிருந்து தன் கையை விலக்கிக்கொண்ட அடுத்த நொடி சந்திரமதியின் கன்னத்தில் அடி இடியாய் விழுந்தது.
சந்திரமதியின் அருவருப்பான பேச்சில் மனம் அடிப்பட்டு சிலையாக நின்றுவிட்டாள் மான்வி. சந்திரமதி பேச ஆரம்பிக்கும்போது கருணாகரன் அருணாச்சலம் இருந்த அறைக்குள் வந்துவிட்டார்.
“இன்னொரு வார்த்தை மான்வியை பத்தி தவறாக பேசின கழுத்தை நெறிச்சு கொன்னு போட்டிருவேன் பார்த்துக்கோ சந்திரா! என் அப்பாவை கிழவன்னு சொல்லுறியாடி… நீயெல்லாம் கிழவி ஆகாம குமரியாகவே வாழ்ந்துடுவியா! மனசாட்சியோடதான் பேசுறியானு எனக்கு சந்தேகமா இருக்கு! இந்த கிழவன் இல்லைனா நீயெல்லாம் எனக்கு பொண்டாட்டியா வந்திருக்கமாட்ட… நெய்யில வறுத்த முந்திரி பருப்பை தினமும் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமா அலுங்காம குலுங்காம உட்கார்ந்து தொண்டைக்குழி வரை முழுங்கிட்டு… தினம் ஒரு பட்டுப் புடவையா கட்டி மினுக்குற காசு யாருதுனு நினைக்குற… இந்த பணமும் பகட்டுக்கும் ஆரம்ப புள்ளி என்னோட அப்பாதான்டி! மான்வியை பேச உனக்கு என்ன தகுதியிருக்கு இது ஹாஸ்பிட்டலனு பார்க்குறேன் இதுவே வீடா இருந்தா உன் பல்லை உடைச்சி கையில கொடுத்திருப்பேன். நானும் போனா போகுதுனு விட்டு பிடிச்சிருந்தேன். உன்னோட ஆட்டம் எல்லை மீறி போகுது. இனியும் சும்மா நின்னு வேடிக்கை பார்த்தா என் முகத்துல மீசை இருக்கறதுக்கு அர்த்தம் கிடையாது. குடும்பம் சீர்குலைய கூடாதுனு நீ பேச்சின பேச்சுக்கெல்லாம் நான் பொறுத்து போனேன் இனிமே மான்வியை அவமானப்படுத்தி பேசினா நான் மனுசனா இருக்கமாட்டேன். தாய் இல்லா பொண்ணுக்கு தாய்க்கு தாயா தாய்மாமன் நான் இருக்கேன்டி!” என்று சந்திரமதியின் தலையில் கொட்டு வைப்பது போல பேசிவிட்டு கண்கலங்கி நின்ற மான்வியை தோளோடு அணைத்துக்கொண்டார்.
“ஓ குடும்பமாய் சேர்ந்து ரவுண்ட் கட்டி என்னை மிரட்டுறீங்களா! இருங்க எ.என் மகன் வரட்டும் உங்களையெல்லாம் என்ன பண்ணுறேன் பாருங்க” என்று தலையை மேலும் கீழும் ஆட்டி நீலிக்கண்ணீர் வடித்தார் சந்திரமதி.
“உன் மகன்கிட்ட தாராளமா சொல்லுடி எனக்கு பயம் கிடையாது! அவன்கிட்ட சொன்னா உடனே என் கழுத்தை சீவி விடுவான் பாரு! பொண்டாட்டியை வச்சு பொழைக்க தெரியாத போக்கத்தவன்” என்று மயூரனையும் சேர்த்து திட்டிக்கொண்டிருந்த நேரம் கையில் மாத்திரைகளுடன் வந்துவிட்டான் மயூரன்.
சந்திரமதியின் கன்னத்தில் கருணாகரனின் ஐந்து விரல் அச்சு பதிந்து சிவந்திருந்ததை கண்ட மயூரனுக்கு ஏதோ பூகம்பம் நடந்திருக்கு என்று யூகித்துக்கொண்டு கருணாகரனின் பக்கம் நின்ற மான்வியை எரிக்கும் பார்வையுடன் பார்த்தவன் “என்னாச்சுங்கம்மா உங்க கன்னம் சிவந்து கண்ணு கலங்கியிருக்கு யாரு என்ன சொன்னாங்க என்ன நடந்துச்சு!” என்றிருந்தான் குரலை உயர்த்தி அடக்கப்பட்ட கோபத்துடன்.
“மயூரா இ.இதோ இந்த ஓ.” என்று ஆரம்பித்தவள் கருணாகரன் முறைத்த முறைப்பில் “உங்க அப்பாவோட மருமகளை நம்ம குடும்பத்துக்கு அடக்க ஒடுக்கமான மருமகளா இருந்திருந்தா ஐஞ்சு வருசமா ஓடி ஒளிஞ்சு வாழ வேண்டிய அவசியம் வந்திருக்குமானு தான் கேட்டேன்! அதுக்கு இதோ இந்த ராங்கிக்காரி என் கையை மடக்கி பிடிச்சிட்டா வலி உயிரே போயிருச்சுப்பா! அதான் ரெண்டு வார்த்தை கூட போட்டு சேர்த்து பேச்சிட்டேன்! உங்க அப்பா என் மருமகளை எப்படி தரக்குறைவா பேசலாம்னு என் கன்னத்துல அடிச்சிட்டிருப்பா என் கன்னம் சிவந்து போச்சு!” என்று விசும்பலுடனே மகனிடம் குற்றப்பத்திரிகை வாசித்தார் சந்திரமதி.
சட்டென்று அருணாச்சலம் பக்கம் திரும்பியவன் “தாத்தா நான் உங்க மகனை பேசுறேன்னு நீங்க எமோசனல் ஆகாதீங்க” என்றவனோ கருணாகரன் பக்கம் திரும்பி “அப்பா உங்க அருமை மருமக பண்ணியதெல்லாம் உங்களுக்கு மறந்து போச்சா! அம்மா உங்க மருமகளை ரெண்டு வார்த்தை கூட பேசியிருந்தாலும் தவறு கிடையாது ஏன்னா அவளால பாதிக்கப்பட்டது அம்மாதான்! அவங்க இந்த மகாராணியை ஒரு வார்த்தை திட்டினா இவங்க ஒரு அடி குறைஞ்சு போயிடமாட்டாங்க. அடுத்தவங்க முன்னாடி நீங்க அம்மாவை அடிச்சது தப்புங்கப்பா அம்மாகிட்ட மன்னிப்பு கேளுங்க” என்றான் மயூரன் கடுகடுவென குரலில்.
“ஏன்டி உன் மகன்கிட்ட அப்பட்டமா பொய் பேசி தொலையுற! மான்வியை நீ என்ன மாதிரியான வார்த்தை பேசின உண்மையை மட்டும் பேசு! நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்குறேன்” என்று சட்டென சந்திரமதியின் கையை பிடித்து மான்வியின் முன்னே நிறுத்திவிட்டார்.
“அப்பா நீங்க பண்றது ரொம்ப தப்பு! பொது இடத்துல அம்மாவை இப்படியா ட்ரீட் பண்ணுவீங்க! நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல” என்று புருவம் சுருக்கி எகிறினான் மயூரன்.
“நீ படபடனு பொரிஞ்சு தள்ளாம! என்ன நடந்துச்சுனு உங்கம்மா சொல்றதை பொறுமையா கேளுடா… யார் மேல தப்பு இருக்குனு நீயே சொல்லு” என்றார் கருணாகரன் கண்டனக்குரலில்.
“நான் ஒண்ணும் பெருசா பேசல மயூரா! இந்த வாயாடிகிட்ட என்னால பேசி ஜெயிக்க முடியுமா! நீயே சொல்லு!” என்று தான் பேசியதை மகனிடம் பாதி மறைத்து பேசிக்கொண்டே முந்தானையை வாயில் வைத்து விசும்பினார்.
அதுவரை அமைதியாக இருந்த அருணாச்சலமோ “சந்திரமதி உன் நடிப்புக்கு முன்னால சாவித்திரி தோத்துப்போயிடணும் மா இந்த அறையில கேமரா இருக்கு நீ பேசினது ரெக்கார்ட் ஆகியிருக்கும்” என அவரை பயமுறுத்தும் வகையில் பேசினார். சந்திரமதியின் மனதில் கிலி பிடித்து மகனிடம் மாட்டிவிடுவோமென்று அச்சமும் வந்தது.
“ஆமா இவளை ஓடுகாலினு ஒரு வார்த்தை கூட பேசிட்டேன் மயூரா… இவ ஊரை விட்டு ஓடிப்போனவதானே” என்றார் நாக்கில் நரம்பில்லாமல்.
மான்வியோ சந்திரமதியை கூர்பார்வை பார்த்துவிட்டு யாரால இந்த ஊரை விட்டு போகும் நிலை வந்தது என்னும் விதமாக மயூரனை உதடுகள் துடிக்க பார்த்து வைத்தாள்.
கண்ணைமூடித்திறந்த மயூரனோ “அம்மாவை கொல்லப்பார்த்த ஆதங்கத்துல இவளை பேசிட்டாங்க! அம்மா சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றான் முகத்தில் சலனமில்லாமல்.
“நீ எதுக்குப்பா இவகிட்ட மன்னிப்பு கேட்குற வா நாம போகலாம்! நான்தான் ஹாஸ்பிட்டல் வரலைனு உன்கிட்ட சொன்னேன் நீ கேட்டியா இப்ப பாரு கண்டவ கிட்டயெல்லாம் நீ மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கு” என்ற நெருப்பாய் வார்த்தையை அள்ளி வீசினார்.
கருணாகரனோ “என் மருமக கண்டவ கிடையாது! நம்ம வீட்டு குலவிளக்கு… அவளை தரக்குறைவா பேசினா உன் நான்கு அழுகிடும்டி” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சந்திரமதியை அடிக்க கையை ஓங்கிச் சென்றுவிட்டார்.
“கருணா போதும்பா இது ஹாஸ்பிட்டல் கையை கீழ இறக்கு! குடும்ப பிரச்சனைய இங்க விவாதம் பண்ணுறது சரியா படலை எனக்கும் நெஞ்சுக்குள்ள சுருக்குனு வலி வருது” என்று நெஞ்சை நீவிக்கொண்டு மகனை அதட்டினார்.
கருணாகரனோ “மயூரா உங்கம்மாவை கூட்டிட்டு கிளம்பிடு இவளை பார்க்க பார்க்க எனக்கு ஆத்திரமா வருது!” வெடித்தார் கருணாகரன்.
“அம்மா உங்களை வரச்சொன்னது என்னோட தப்புதான் நீங்க இங்க இருந்து அவமானப்படவேண்டாம் வாங்க போகலாம்” என சந்திரமதியின் கையை பிடித்துக்கொண்டு அழைத்துச் சென்றுவிட்டான்.
அருணாச்சலத்தை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அருணாச்சலத்தின் பக்கம் உட்கார்ந்த நேகாவும் நேத்ரனும் “பாட்டா உங்களுக்கு இங்க வலிக்குதா!” அருணாச்சலத்தின் இதயம் இருக்கும் பகுதியை தொட்டுப்பார்த்தனர்.
“வலிக்கல கண்ணுங்களா” என்றார் சோர்ந்த குரலில்.
“பாட்டாவை தொந்தரவு பண்ணக்கூடாதுனு சொல்லியிருக்கேன்ல இரண்டுபேரும் மெத்தையை விட்டு இறங்குங்க” என்று அருணாச்சலத்திற்கு பத்திய சாப்பாடு எடுத்து வந்தாள் மான்வி.
ஒருவாரம் மான்வி காலேஜ்க்கு விடுப்பு கடிதம் எழுதி வெங்கட்பிரபுவிற்கு மெயில் அனுப்பியிருந்தாள் மான்வி.
“நீ பொறுமையா வாம்மா” என்று பதில் அனுப்பியிருந்தான் வெங்கட் பிரபு.
குழந்தைகள் விளையாடி களைத்து மதிய தூக்கத்திற்குச் சென்றிருந்தனர்.
மாலதி ஒரு வாரம் மாணவர்களுடன் டூர் சென்றிருந்தவள் நேற்று இரவுதான் சென்னைக்கு வந்திருந்தாள். அருணாச்சலத்திற்கு ஹார்ட் ஆப்ரேசன் செய்த விசயம் தெரிந்து அருணாச்சலத்தை பார்க்க ஓடி வந்து விட்டாள்.
“தாத்தா இனி அதிகம் எமோசனல் ஆக கூடாது! எண்ணெயில பொரிச்ச ஃபுட் அவாய்ட் பண்ணிடுங்க! மனசுக்குள்ள அழுத்தத்தை வச்சிக்கிட்டு இருக்காதீங்க தாத்தா! நீங்க என்ன நினைச்சு கவலைப்படறீங்களோ எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்” என்று பெரியவரின் கையை பிடித்து அழுத்தம் கொடுத்தாள் மாலதி.
“மான்வி கல்யாணம் பண்ணி வாழ்க்கையை பாதியில இழந்து குழந்தைகளோட தனிச்சு நிற்குறதையும்… நீ கல்யாணமே வேண்டாம்னு சொல்றதையும் கேட்டு இந்த கிழவன் நெஞ்சு பொறுக்கலையே கண்ணுகளா!” என்றவரின் குரல் வலி நிறைந்து வந்தது.
“தாத்தா ப்ளீஸ் நீங்க எமோசனல் ஆகாதீங்க! நா.நான் சீக்கிரம் என் கல்யாண முடிவை எடுக்குறேன்” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.
“என்ன தாத்தாவும் பேத்தியும் எனக்கு தெரியாம ரகசியம் பேசுறீங்க” என்று இருவரையும் செல்ல முறைப்புடன் போட்டு வந்த டீயை மாலதியிடம் கொடுத்தாள் மான்வி.
“இரகசியம் பேசலடி! நம்மை பத்தி இனிமே கவலைப்படக்கூடாதுனு தாத்தாகிட்ட சொல்லிட்டிருந்தேன் அவ்ளோதான்” என்றபடியே டீயை வாங்கி ஒரு மிடறு குடித்தவள் “உன்னோட கையால குடிக்கற இஞ்சி டீக்கு நான் அடிக்ட்டட்” என்று கண்ணைச்சிமிட்டியவள் கடைசி சொட்டு வரை மிச்சம் வைக்காமல் குடித்தாள் மாலதி.
“பசங்களுக்கு நம்ம ஸ்கூல அட்மிஷன் போட்டுரலாம்லடி” என்றாள் மாலதி.
“போட்டுரலாம்டி நானே உன்கிட்ட அட்மிஷன் பத்தி பேசணும்னு இருந்தேன்! நீ முந்திக்கிட்டு கேட்டுட்ட” என்றாள் புன்னகையுடன் மான்வி.
“ஸ்டாப் மீட்டிங் வச்சிருக்கேன் நான் கிளம்புறேன்டி” என்ற மணிக்கட்டை திருப்பி பார்த்து எழுந்த மாலதியின் கையை பிடித்தவள் “ஒரு ஐஞ்சு நிமிசம் பேசிட்டு கிளம்புடி நாம பேசியே எத்தனை நாட்கள் ஆச்சு என்னோட கொஞ்ச நேரம் நீ இருந்துட்டுதான் கிளம்பணும்” என அன்பு கட்டளை போட்டு மாலதியை தனியாக தோட்டத்து பக்கம் அழைத்து வந்தாள் மான்வி.
இரு தோழிகளும் தோட்டததிலிருந்த கல் பெஞ்சில் உட்கார்ந்தனர். இருவரிடமும் சிறு வினாடிகள் மௌனம் நிலவியது. முதலில் பேச ஆரம்பித்தது மான்விதான். “எனக்காக மயூரன் கிட்ட பேச போய் உன் வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்கிட்டியேடி… எனக்கு உன்னை பார்க்கும்போதெல்லாம் தர்மசங்கடமாக இருக்கு தெரியுமா! நீயும் வெங்கட் அண்ணாவும சேர்ந்து வாழ வேண்டிய வாழ்க்கை என்னால கெட்டுப்போச்சுனு ஒவ்வொரு நாளும் நிம்மதி இழந்து தவிக்குறேன்டி! எனக்காக நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து வாழணும் சரினு சொல்லுடி” என தலையை சாய்த்து கண்ணைச்சுருக்கி மாலதியின் கையை தன் நெஞ்சோடு சேர்ந்து அணைத்துக்கொண்டு கேட்டாள்.
மாலதியோ “உன்னோட வெங்கட் அண்ணாவுக்கு என்னோட சேர்ந்து வாழ விருப்பம் இருந்திருந்தா நான் பேசினது தவறுதான்னு மன்னிப்பு கேட்டு என்கிட்ட வந்திருப்பாருடி. அவருக்கு அவரோட ஈகோ முக்கியம் மான்வி.” என்றாள் விரக்தியாக.
“வெங்கட் அண்ணாகிட்ட உங்க ரெண்டு பேர் கல்யாணம் விசயமா சுமூகமா பேசி அவரை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு” என்றாள் மானசீகமாக.
“நிறைய பேசியாச்சுடி மான்வி… நான் இப்படியே இருந்துடறேன்! அண்ட் உன்னாலதான் என் வாழ்க்கை தண்ணில மிதக்குற படகு போல ஆடல! என் கல்யாணம் நின்னுடுச்சுனு சோர்ந்து போய் நான் உட்காரல… அடுத்து அடுத்து என் வாழ்க்கையோட அடுத்த படிக்கட்டுகளை நோக்கி தினமும் ஓடிக்கிட்டே இருக்கேன்! மாணவர்களோட நான் சந்தோசமா இருக்கேன்! கல்யாணம் பண்ணியிருந்தாகூட நான் என் கேரியர்ல இவ்ளோ சாதிச்சிருப்பேனானு சந்தேகம்தான்… உன்னாலத்தான் வெங்கட் மனசுக்குள்ள எந்த அளவு நான் நிறைஞ்சிருந்தேன்ங்கிற உண்மையெல்லாம் என்னால புரிஞ்சுக்கமுடிஞ்சது! நீ கில்டியா ஃபீல் பண்ண தேவையில்லைடி!” என்றாள் தோளைக்குலுக்கி மெல்லிய புன்னகையுடன்.
“சாப்பாடு ரெடி ரெண்டு பேரும் சாப்பிட்டு வந்து உங்க பேச்சை கண்டினியூ பண்ணுங்க” என்று புன்னகையுடன் அங்கே வந்தார் சாந்தி.
மாலதி மணிக்கட்டை திரும்பி மணியை பார்த்தாள். மணி 1.30 ஆகியிருக்க “ஓ காட் எனக்காக ஸ்டாப் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க நான் இன்னொரு நாள் வந்து சாப்பிடட்டுமா மான்வி?” என்று கெஞ்சுதலாக கேட்டவளை “நாம சேர்ந்து சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு இன்னிக்கு என்னோட சாப்பிட்டுதான் கிளம்புற” என்று கண்களை உருட்டி செல்ல ஆர்டர் போட்டு மாலதியின் கையை பிடித்து டைனிங் டேபிளில் அமர்ந்தவள் “பசங்க எங்க சத்தத்தையே காணோம்?” என்று வினவியவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.
“பசங்களை சாப்பிட வைத்து இப்போ கொஞ்சம் முன்னதான் தூங்கவச்சேன் மாலதி” என்றபடியே மாலதியின் இலையில் பொரியலை வைத்தார் சாந்தி.
“பசங்க சாந்தியம்மா சாப்பாடு ஊட்டினா சமத்தா சாப்பிட்டுக்குவாங்கடி அவங்க என்னை எதிர்பார்க்கமாட்டாங்க நைட் மட்டும் நான் வேணும். ரெண்டு பேருக்கும் என் வயித்து மேல காலை போட்டா தான் தூக்கம் வரும். நேகாவுக்கு உடம்பு சரியில்லைனா என்னை ரொம்ப தேடுவா… என் இடுப்பை விட்டு இறங்கவே மாட்டா… நேத்ரன் சமத்துப்பையன் என்னை அதிகம் தொந்தரவு பண்ணமாட்டான் தலைவலிக்குதுனு சொன்னா அடுத்த நிமிசம் தலைவலி டப்பாவோட நிற்பான்” என்று குழந்தைகளை பற்றி பேசும் போது கண்கள் மின்னியது மான்விக்கு.
சாப்பிட்டு முடித்த மாலதியோ “நாளைக்கு பசங்களை அட்மிஷன் போட அழைச்சிட்டு வந்துடு” என்றவளோ மான்வியை அணைத்துவிட்டுச் சென்றாள்.
குழந்தைகள் இருவரையும் அருணாச்சலம் பக்கம் விடவேயில்லை மான்வி. அருணாச்சலமோ “குழந்தைகள் என்பக்கம் இருந்து கதை பேசிட்டிருந்தா என் வலியெல்லாம் பறந்து போகும் மான்வி குழந்தைகளை என்பக்கம் இருக்க விடும்மா” என்றார்.
குழந்தைகள் அருணாச்சலத்திடம் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தனர். மான்வியோ நோட்ஸ் எடுத்துக்கொண்டிருந்தாள்.
நேத்ரனோ “தாத்தா உங்களுக்கு எங்க அப்பாவை பிடிக்குமா! அவர் ரொம்ப குறும்பு பண்ணுவாரா! கல்யாணம் ஆன பிறகு அம்மாவை அன்பா பார்த்துக்கிட்டாரா இல்லை எப்பவும் திட்டுவாரா!” என்றெல்லாம் கண்களை அகல விரித்து கேள்வி கேட்டனர் இரு குழந்தைகளும்.
“உங்க அப்பாவா சரியான சேட்டைக்காரன்… அதே சமயம் கோபம் எக்கச்சக்கமா மூக்குக்கு மேல வரும் குழந்தைகளா! உங்க அம்மாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான் என் பேராண்டி” என்றதும் குழந்தைகளுக்கு என்ன புரிந்ததோ கிளுக்கி சிரித்து “நாங்க அவரோட கோபத்தை பார்க்கணும் எங்களை ஏன் பார்க்க வரலைனு அவரோட காதை பிடிச்சு கேட்கணும்” என்றது நேகா.
“ரெண்டு பேருக்கும் வாய் ஜாஸ்தியாகிடுச்சு மணியாச்சு தூங்கலாம் வாங்க” என்று இருவரையும் தூக்கிக்கொண்டு அறைக்குச் சென்று படுக்கவைத்தாள்.
“ஏன்மா அப்பாவை திட்டினா உங்களுக்கு கோபம் வருது! பேட் அப்பா” என்று மூக்கை சுருக்கினான் நேத்ரன்.
“உன் அப்பா பேட் அப்பா கிடையாதுடா செல்லம் அவர் நல்லவர்தான்” என்று குழந்தைகளிடம் ஒரு எல்லைக்கோட்டிற்கு மேல் சொல்ல முடியவில்லை அவளால்.
“கண்ணை மூடித்தூங்குங்க” என்று இருவரையும் தட்டி தூங்க வைத்தாள். குழந்தைகள் தூங்கியதும் எழுந்து உட்கார்ந்துக் கொண்டு அவளது போனில் உள்ள மயூரனின் போட்டோவை எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டு ‘மாமு உனக்கு எப்படி என்மேல நம்பிக்கை இல்லாம போச்சு… நாம வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் நம்பிக்கைதானே’ என்றவள் மயூரனின் முகத்தை விரலால் தடவினாள்.
“நீ உன் கணவனுக்கு நம்பிக்கையா இருந்தியாடி! அவன்கிட்ட எல்லா உண்மையும் சொன்னியா! உண்மையை மறைச்சதுனாலதானே நீ வனவாசம் போகவேண்டியிருந்தது!” என அவளது மனதிற்குள் பல எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.
“நான் குடும்ப ஒற்றுமை சீர் குலையக்கூடாதுனுதான் உங்ககிட்ட எல்லாம் சொல்லாம இருந்தேன் மாமு! நான் கன்சீவ்வா இருக்க விசயத்தை உன்கிட்ட சொல்ல வந்த நேரம் விதி நம்மை பிரிச்சிடுச்சு நீ என்னை வெறுத்து ஒதுக்கினாலும் உன்னை என்னால மறக்கமுடியல மாமு டிவோர்ஸ் பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன் உன் சந்தோஷத்துக்காக மட்டும் ஆனா கையெழுத்து போடும்போது என் மனசு என்ன மாதிரி துடிச்சுதுனு தெரியுமா! என் நெஞ்சுக்குள்ள யாரோ கல்லை வைச்சு அமுக்கினது போல பாரமா இருந்துச்சு” என்று வருத்தம்கொண்டு பேசியவள் மயூரனின் போட்டோவுக்கு முத்தம் கொடுத்து படுத்துக்கொண்டவளுக்கு உறக்கம் வரவில்லை என்றாலும் வெறுமனே கண்ணை மூடிக்கொண்டாள்.
பாவம் மான்வி சீக்கிரம் உண்மை கண்டுபிடிச்சு சேரனும் ரெண்டு பேரும் பீளிஸ் எப்படியாவது சேர்த்து வையுங்க 💘💘💘💘💘
Choose only reliable online casinos, for safe gambling.
Choose reliable gaming sites, for guaranteed gambling pleasure.
Guaranteed wins at the best online casinos, for unforgettable gaming emotions.
Play only at the best online casinos, for guaranteed gambling pleasure.
Choose only trusted gambling sites, for safe play and pleasant time.
Play only at reliable online casinos, for safe and enjoyable gambling.
Guaranteed wins at the best online casinos, for unforgettable gaming emotions.
play casino online [url=http://www.royalspins-game.com/]http://www.royalspins-game.com/[/url] .
👌👌👌👌👌👌👌👌👌👌