ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 13
 
 
மான்விக்கோ பூமி உருண்டை சுழல்வதை நிறுத்தியதை போல உணர்வு. அவள் இப்போது என்ன மன நிலையில் உள்ளாள் என்பது அவளுக்கே தெரியாத நிலையில் சிற்பமாய் நின்றிருந்தாள். கண்ணில் கடகடவென கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.
 
எந்த தந்தையையும் பார்க்காத கோலத்தில் பார்த்து நின்றனர் அறியா வயது பாலகர்கள்.
 
சந்திரமதியோ வாயடைத்து பார்த்துக்கொண்டிருந்தார் குழந்தைகளுடன் நின்றிருந்த மான்வியை. இப்போது மயூரனின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை யூகிக்க முடியாமல் மகனின் முகத்தையே பார்த்திருந்தார். மகன் மனதை குழப்பி விடலாமா என்ற கெட்ட எண்ணத்துடன்  “பார்த்தியாடா மயூரா இவ குழந்தைகள் இருக்கறதை நம்மகிட்ட மறைச்சிருக்கா ஒரு வேளை இந்த குழந்தைகள் வேற யாருக்கோ” என்று சந்திரமதி பேச வாயெடுத்தார்.
 
“அம்மாஆஆ பேசாதீங்க” என்று அந்த மண்டபமே அதிரும் வண்ணம் கத்திவிட்டான். 
 
“மயூரா நான் சொல்றதை ஒரு நிமிசம் கேளுப்பா” என்ற சந்திரமதியின் வார்த்தைகள் மயூரனின் காதில் விழவில்லை. அவன்  தன்னையே அச்சத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் மான்வியின் அருகே அழுத்தமான காலடிகளுடன் சென்றுக் கொண்டிருந்தான்.
 
சந்திரமதியோ ‘பாவி மகளே! எப்பாடு பட்டு என் மகன் மனசை மாத்தி நிச்சயதார்த்தம் வரை கொண்டு வந்திருந்தேன் ஒரு நிமிசத்துல எல்லாத்தையும் பாழ் பண்ணிட்டாளே! சதிகாரி. சோத்துல மறைச்சு வச்சிருந்த பூசணிக்காய் போல ரெண்டு குழந்தைகளோட வந்துருக்காளே! மயூரன் என்ன முடிவு எடுக்கப்போறானோ தெரியலை’ என்று பதைப்பதைப்போடு கையை பிசைந்து நின்றிருந்தார்.
 
கருணாகரனோ மான்வியை கோபம் கொண்டு அடித்து விடுவானோ என்ற அச்சத்தில் மான்வியின் அருகே செல்வதற்குள் பளாரென நெருப்பு இடிபோல மான்வியின் கன்னத்தில் அறைந்திருந்தான் மயூரன்.
 
அவளோ “அம்மாஆஆ” என்று கன்னத்தைப் பற்றிக்கொண்டாள். அடுத்த கன்னத்தில் அடிக்கப்போனவனின் காலை பற்றிக் கொண்டு “அம்மாவை அடிக்காதீங்கப்பா” என்ற இரு இனிய குயில்களின் ஓசையில் அப்படியே நின்றது மயூரனின் கைகள்.
 
அவனது கண்களுமே கலங்கிக்தான் இருந்தது. கலங்கிய கண்களுடன் தன்னை முதன் முறை அப்பா என்று அழைத்த குழந்தைகளை பார்த்தான். இந்நேரம் வரை கண்கள் சிவக்க கோபத்துடன் இருந்த மயூரனின் கண்களில் சாந்தம் குடிக் கொண்டது. 
 
குழந்தைகளின் உயரத்திற்கு குனிந்து உட்கார்ந்தவன் “எ.என்ன சொன்னீங்க மறுபடியும் அ.அப்பானு சொ.சொல்லுங்க” என்று குழந்தைகளை மான்வியிடமிருந்து பிரிக்க முயல.
 
“நோ நோ தொ.தொடாதீங்கப்பா நீங்க பேட் அப்பா! நீங்க எனக்கு வே.வேணவே வேணாம் போங்க” என்று அவனது கைகயை தட்டி விட்டு கண்ணை உருட்டி முறைத்தது.
 
“பார்த்தீங்களாப்பா உங்க மருமகள் பண்ணி வச்சிருக்க காரியத்தை எ.எனக்கு பசங்க இருக்கற விசயத்தை என்கிட்ட மறைச்சிருக்கா என்ன தைரியம் இருக்கும் இவளுக்கு! எனக்கு வர கோபத்திற்கு இவ கழுத்தை நெறிக்கணும் போல இருக்கு” என்ற பல்லைக்கடித்து கையை ஓங்கிக்கொண்டு போனான்.
 
“அம்மா எனக்கு பயமா இருக்கு நாம போயிடலாம்” என்று இதழ் பிதுக்கி அழுத நேகாவை தூக்கி வைத்துக்கொண்டாள் மான்வி.
 
நேகாவோ மான்வியின் கழுத்தை கட்டிக்கொண்டது எங்கே தன்னை அப்பா அழைத்துக்கொண்டு போய்விடுவானோ என்ற பயத்தில். 
 
“நா.நாம இப்ப போயிடலாம் குட்டி” என்ற நடுங்கிய குரலுடன் பேசியவள் கண்ணில் கோபக் கனல் வீசி நின்ற மயூரனை ஒரு பார்வை பார்த்து தன் பக்கம் தந்தையை முறைத்துக்கொண்டு விட்டால் அடித்து விடுவான் போல நின்ற நேத்ரனின் கையை பிடித்தாள் மான்வி.
 
“மான்வி ஒரு அடி குழந்தைகளோட எடுத்து வச்ச நான் மனுசனாவே இருக்கமாட்டேன் பார்த்துக்கோ” என சிங்கம் போல உறுமினான். மான்வியின் இதயம் நடுங்கிப்போனது. அவன் கேட்கப்போகும் கேள்விகளுக்கு தன்னிடம் விடை கிடையாதே! என்று நெஞ்சம் கலங்கி நேத்ரனின் கையை இறுக பற்றிக்கொண்டவளோ “அம்மாவை விட்டு போயிடாதே கண்ணா” என்றாள் குழந்தைக்கு மட்டும் கேட்கும்படி.
 
“ம்ம் நான் போகமாட்டேன் மா” என்றது நேத்ரன்.
 
கதிரோ “அண்ணா… அண்ணி” என்று பேச வாயெடுக்க
 
“யாரும் ஒரு வார்த்தை பேசக்கூடாது! எனக்கும் மான்விக்கும் இடையில யாரும் வரக்கூடாது” என்று குறிப்பாக கருணாகரனை பார்த்துக்கூறினான் அழுத்தமாகவும் ஆழமாகவும்.
 
மான்வியின் பக்கம் வந்த மயூரனோ “ஏன்டி குழந்தைகள் இருப்பதை என்கிட்ட மறைச்ச சொல்லுடி?” என்று பற்களை நறநறவென கடித்தான்.
 
சினம் கொண்ட மதம் பிடித்த யானை போல தன் முன்னே ஆக்ரோஷமாக நின்ற மயூரனின் கண்களை பார்க்கவே மான்விக்கு பயமாக இருந்தது. எச்சிலை விழுங்கிக்கொண்டு அவளால் பேச முடியவில்லை கங்கை நதி பொங்கி வழிந்தது போல அவளது கண்ணில் கண்ணீர் மட்டும் வழிந்துக் கொண்டே இருந்தது.
 
“நீ எப்போ என்கிட்ட உண்மையா நடந்திருக்க… உ.உன்னால பேச முடியாதுடி இப்போ சொல்றேன் கேட்டுக்கோ இனிமே என் குழந்தைகள் உன்கிட்ட இருக்க நான் அனுமதி கொடுக்கமாட்டேன்” என்று அடாவடியாக  பேசியதை கேட்டு மான்வி நிலைகுலைந்து போனாள். தரையில் அவளது கால்கள் தடுமாறியது.
 
அடுத்த நொடி மான்வியின் தோளிலிருந்து நேகாவை எடுக்க முற்பட்டான் மயூரன். 
 
“நோ! நோ! நான் அம்மாவை விட்டு வரமாட்டேன்ப்பா உங்களை பார்த்தாவே எனக்கு பயமா இருக்கு” என்று குழந்தை கதறியது. 
 
அவனோ “என் குழந்தை என்கூட வரமாட்டேன்னு சொல்றா பாருடி! எந்த தகப்பனுக்கும் இந்த நிலை வரக்கூடாது” என்றவனின் குரல் கமறியது.
 
மான்வியின் தோளில் படுத்திருந்த நேகாவை  வலுக்கட்டாயமாக தோளில் தூக்கி போட்டுக் கொண்டதும் “அப்பா நேகாவை அம்மாகிட்ட கொடுங்க” என்ற நேத்ரனையும் ஒரு கையால் தூக்கிக்கொள்ள நேத்ரனோ மயூரனின் தோளில் கடித்து வைத்தான். 
 
“உங்கம்மா கொடுத்துட்டு போன வலியை விட நீ கடித்த வலி எனக்கு பெரிசு இல்லைடா மகனே! நல்லா கடிச்சிக்கோ” என்று நேத்ரனை பார்த்து ஒற்றை கண்ணைச் சிமிட்டி தன் காருக்குச் சென்றான்.
 
மான்வி “அச்சோ என் குழந்தைகள் மயூ என் பசங்களை என்கிட்ட கொடுத்திருங்க” என்று உயிரை பிடித்துக்கொண்டு மயூரனின் பின்னால் ஓடினாள்.
 
குழந்தைகள் “அம்மா! அம்மா!” என்று கூக்குரலிட்டு தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தனர். மான்வி தன் பின்னால் கதறிக்கொண்டு வருவது அவனது காதில் விழத்தான் செய்தது. செவிடன் காதில் ஊதின சங்கை போல அவளது கதறலை துட்சமாக எண்ணி குழந்தைகளை காருக்குள் உட்கார வைத்துவிட்டு அவர்களுக்கு சீட்பெல்ட் போட்டவனோ மான்வி ஓடிவருவதை கண்டு மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு காரை  வேகமாக எடுத்துவிட்டான்.
 
“நேகா, நேத்ரா” என்று அழுக கூட அவளுக்கு திராணி இல்லாமல் மண் தரையில பொத்தென்று விழுந்து விட்டாள். 
 
கருணாகரனும் கதிரும் ஓடிவந்து மான்வியை தூக்கி விட்டு “அண்ணி நான் உங்களை அண்ணாகிட்ட அழைச்சிட்டு போறேன்… அப்பா அண்ணியை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம் வாங்க” என்று அவனது காரில் ஏறினான்.
 
கருணாகரனோ மனம் துவண்டு போய் நின்ற தன் தங்கை மகளை தோளோடு அணைத்து காருக்குள் உட்கார வைத்ததும் “மா.மாமா எனக்கு என் குழந்தைகளை மயூரன் மாமாகிட்டயிருந்து வா.வாங்கி கொடுத்திடுங்க நானும் குழந்தைகளும் கண்காணாத இடத்திற்கு போய்டுறோம் குழந்தைகளும் நான் இல்லாம இருக்கமாட்டாங்க உங்களுக்கே தெரியும்ல. அதுவும் நேகாவுக்கு ரொம்ப அழுதா மூச்சு முட்டும்” என்று தாயாக துடித்தாள் கருணாகரனிடம்.
 
“நீ இப்படி அழுறதால மயூரன் மனசு மாறப்போறதில்லை. குழந்தைகளை அவனால பார்த்துக்க முடியாதுடா. குழந்தைகளை நான் வாங்கித்தரேன் இப்படியே அழுதுக்கிட்டேயிருந்தா உன் உடம்புதான் வீணாப்போகும்டா” என்று தாயை போல ஆறுதல் கூறி மருமகளை சமாதானம் செய்தார் கருணாகரன்.
 
“அம்மா அம்மா” என்று குழந்தைகள் இருவரும் அழுதது அவள் கண்முன்னே வந்துக் கொண்டே இருந்தது. 
 
“கதிர் சீக்கிரம் போ” என்று குழந்தைகளை பார்க்க அவசரப்பட்டாள் மான்வி.
 
இந்த முறையும் என் நிச்சயதார்த்தம் நின்று விட்டதே! என்ற யாழினிக்கோ கடலளவு கோபம் வந்தது மான்வியின் மேல். அனர்த்தனமான கோபம் என்று பாவம் அவளுக்கு தெரியாமல் போனது. மாற்றான் தோட்டத்து மல்லிகையை பறிக்ககூடாது என்ற பழிமொழி உண்டு அதே போல அடுத்தவளுக்கு சொந்தமானவனை அபகரிக்க நினைப்பது பஞ்சமகா பாவம் என்பதை மறந்து போனாள் முட்டாள் யாழினி. யாழினிக்கு மயூரன் தன்னை கல்யாணம் பண்ணிக்கொள்ளமாட்டான் நிதர்சனமாக தெரிந்து விட்டது. கழுத்திலிருந்த மாலையை கழட்டி நிலத்தில் போட்டவள் அவளது தோளை பற்றிய சந்திரமதியிடம் “அத்தை மாமா இனிமே எனக்கு கிடைக்கமாட்டாரு” என்றாள் கலங்கிய கண்களுடன். 
 
“குழந்தைகளை மட்டும் அழைச்சிட்டு மான்வியை நடுவீதியில அழவிட்டுத்தானே போயிருக்கான் அந்த ஓடுகாலியை மயூரன் எப்போதும் சேர்த்துக்க மாட்டான். குழந்தைகள் மேல நீ பாசம் காட்டு மயூரன் உன்னை கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பான்” என்று நம்பிக்கை கொடுத்தார் சந்திரமதி. இருவரும் இன்னும் எப்படி மான்வியை மயூரனுடன் சேரவிடாமல் செய்வது என்று திட்டம் போட்டுக்கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.
 
வீட்டுக்கு வந்ததும் காரிலிருந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் போகவும் நேத்ரனோ மயூரனின் கையை கடித்து அவனது இடுப்பிலிருந்து இறங்கி இடுப்பில் கையை வைத்து “அம்மா அழறது உங்க காதுல விழலலையா! இல்லை உங்க காதுல பஞ்சு வைச்சிருக்கீங்ளா! நேகா அம்மா இல்லாம நைட் தூங்கமாட்டா தெரியுமா. அம்மா இல்லாம எங்களை உங்களால பார்த்துக்க முடியுமா! எங்களுக்கு சாப்பாடு ஊட்டத் தெரியுமா! நைட் அம்மாவை கட்டிபிடிச்சு தூங்கினாத்தான் எனக்கு தூக்கமே வரும்… காலையில எழுந்ததும் எனக்கு பிரஷ் பண்ணிவிடுவாங்க! நீங்க இல்லாம நாங்க இருந்துப்போம் அம்மா இல்லாம எங்கனால இருக்க முடியாது! அம்மா இப்போ எங்களை தேடி வருவாங்க நாங்க உங்ககூட இருக்க மாட்டோம்! நேகாவை இறக்கி விடுங்கப்பா” என்றான் ஒவ்வொரு வார்த்தையும் அப்பா அப்பா என்று பேசியவனை மெய்மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான். தன்னையே அவனுக்கு பார்ப்பது போல ஒரு நிமிடம் ஆடித்தான் போனான் மயூரன்.
 
“நல்லா பேச கத்துக்கொடுத்திருக்கா உன் அம்மா… உங்களுக்கு உங்க அம்மா செய்த வேலைகளை எல்லாம் இனிமே நான் செய்வேன்… பெரியமனுசன் போல வாயாடாம ஒழுங்கா அப்பா கூட வாடா” என்று நேத்ரனின் கையை பிடித்துக்கொண்டு அவனது அறைக்குள் சென்றான்.
 
நேகாவோ அவனது அறைக்குள் சென்றதும் “என்னை இறக்கி விடுங்க இல்லைனா நான் உங்க முடியை பிடிச்சு ஆட்டுவேன்!” என்று கண்ணை உருட்டியது.
 
“எங்க முடியை ஆட்டுப்பார்க்கலாம்” குழந்தையின் பேச்சில் அவனது கோபமெல்லாம் பறந்து போனது. நேகாவோ மான்வி கண்ணை உருட்டுவது போலவே உருட்டியதை கண்டதும் அவனது நினைவுகள் பல வருடங்களுக்கு முன்னே அவன் வாழ்வில் வீசிய வசந்த காலத்துக்குச் சென்றது.
 
நேத்ரனோ நேகாவிடம் மயூரன் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்க இங்கிருந்து அம்மாவிடம் போய்விடலாம் என்று மெதுவாய் கதவுப்பக்கம் நகர்ந்துச் சென்றான்.
 
மயூரனோ நேகாவை மெத்தையில் உட்கார வைத்து “இறக்கி விட்டேன் போதுமா? அப்பாவும் பாவம் இல்லையா உனக்கு அப்பா வேண்டாமா நீங்க ரெண்டு பேரும் இருந்ததை உன் அம்மா என்கிட்ட மறைச்சிட்டா இராட்சசி” என்றவனோ நேத்ரன் எங்கே என்று திரும்பி பார்க்க கதவு பக்கம் நின்றவனை “டேய் எங்கடா போற?” என்று ஒரே எட்டில் நேத்ரனை தூக்கி வந்து மெத்தையில் நேகாவின் பக்கம் உட்கார வைத்தான். கொஞ்ச கண்ணை கட்டியது மயூரனுக்கு 
 
நேத்ரனோ “அம்மா நாங்க இருக்கறதை மறைச்சிட்டாங்க சரி நீங்க ஏன் அம்மாவை தேடி வரலை? அம்மாவை நீங்க லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கிட்டதா பாட்டா எங்க கிட்ட சொல்லியிருந்தாரே… அப்போ அம்மா மேல பாசம் இல்லையாப்பா உங்களுக்கு!” என்று மயூரனை திக்குமுக்காடச் செய்தான்.
 
ஐஞ்சு வயசுல இப்படியெல்லாம் குழந்தைகள் பேசுவாங்களா என்று மயூரன் பிரம்மிப்பாக பார்த்திருந்தானே தவிர அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவனால் பதில் கூற முடியவில்லை.
 
நேகாவோ “அம்மாகிட்ட என்னை அழைச்சிட்டு போங்கப்பா எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை!” என்று மீண்டும் இதழ் பிதுக்கி அழ ஆரம்பித்தது.
 
மயூரனோ “பாப்பா அழாதடா அப்பா உனக்கு பெரிய பெரிய டால் வாங்கித்தரேன்… அவுட்டிங் கூட்டிட்டு போறேன்… காருல லாங் டிரைவ் போகலாம் உனக்கு பிடிச்ச ஸ்நாக்ஸ் அப்பா வாங்கித்தருவேன்” இன்னும் என்ன என்னவோ சொல்லி நேகாவின் அழுகையை நிறுத்தப்பார்தான். மயூரனால் தாய் பாசத்தை விலை கொடுத்து வாங்க முடியாது என்று படிச்ச முட்டாளுக்கு தெரியவில்லை. 
 
கதிரின் கார் மயூரன் வீட்டுக்கு வந்ததும் காரிலிருந்து இறங்கியவள் நினைவில் மயூரன் தன் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளி ‘இனிமே இந்த வீட்டுக்குள்ள இருக்க தகுதியை நீ இழந்துட்டடி’ என அவன் ஆத்திரப்பட்டு பேசியது அவள் மனக்கண்ணில் இந்த நிமிடம் வந்து போனது. கண்ணை மூடித்திறந்தவள் வாசலில் நின்றுகொண்டு “நேகா, நேத்ரா அம்மா வந்துட்டேன் வாங்க” என்று சத்தம் போட்டு குரல் கொடுத்தாள். குழந்தைகளை எப்படியாவது மயூரனிடமிருந்து அழைத்துச் சென்று விடவேண்டுமென்று…
 
அழுதுக் கொண்டிருந்த நேகாவோ தாயின் குரலை கேட்டதும் அழுகையை நிறுத்தி “அண்ணா நம்மளை அழைச்சிட்டு போக அம்மா வந்துட்டாங்க” என மயூரனின் கையிலிருந்து இறங்கி ஓடியது. கதவு பூட்டியிருக்க இரு குழந்தைகளும் வெளியே போக முடியாது மயூரனை திரும்பி பார்த்து “கதவை திறந்து விடுங்க நாங்க அம்மா கிட்ட போகணும் ப்ளீஸ் விடுங்கப்பா” என கெஞ்சி நின்றது.
 
மயூரனின் குழந்தைகள் மான்வி மீது வைத்திருக்கும் பாசம் அவனுக்கு பொசசிவ் தலைதூக்கியது. “இத்தனை நாள் அம்மா கூட இருந்தீங்கல்ல இனி அப்பாகூட இருங்க! என்னை விட்டு உங்கம்மா கூட போகாதீங்க” என்று குழந்தைகளின் காலுக்கு பக்கம் உட்கார்ந்து குழந்தைகளிடம் கண்ணீர் விட்டான்.
 
மான்வி வளர்ந்த வளர்ப்பல்லவா இருவரும். “அம்மா நீங்க நானும் நேகா எல்லாரும் சேர்ந்திருக்கிறதா இருந்தா நாங்க உங்க கூட இருப்போம்” என்று மயூரனிடம் டிமாண்ட் பண்ணியது.
 
மான்வியின் பெயரை கூறியதும் மயூரனின் முகம் கடுகடுவெனவாகியது. “டேய் எனக்கு கோபம் வராது கோபம் வந்தா என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது! உங்கம்மாவை நான் சேர்த்துக்க மாட்டேன்! எங்க இரண்டு பேருக்குள்ள சண்டை உங்களுக்கு சொன்னா புரியாது!” வீம்பு பிடித்தான்.
 
“உங்க ரெண்டு பேருக்கும்தானே சண்டை! நீங்க வேணா அம்மா கூட பேசாம இருங்க. ஆனா நாங்க அம்மா இல்லாம இந்த வீட்ல இருக்கமாட்டோம்” என்று நெற்றி பொட்டில் அடித்தாற் போல பேசினான் நேத்ரன். 
 
பல கல்லூரிகளை அசால்ட்டாக கவனித்தவன் நேத்ரன் பேசியதற்கு பதில் கூற முடியாமல் திண்டாடினான்.
 
“நேகா நேத்ரா” என்று மான்வி கீழிலிருந்து கதறிக்கொண்டிருந்தாள்.
 
அருணாச்சலம் ஜெயசீலனை அழைத்துக்கொண்டு மயூரன் வீட்டிற்கு வந்துவிட்டார்.
 
“தாத்தா இப்போ உங்களுக்கு திருப்தியா? பசங்களை வீட்டுக்குள்ள அடைச்சு வச்சிக்கிட்டாரு உங்க பேரன்” என்று ஆற்றாமையோடு தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள்.
 
“பொறுமையா இருமா நான் அவன்கிட்ட பேசுறேன்” என்று வீட்டுக்குள் போகும் முன் மயூரன் வீட்டுக்கு வெளியே வந்தவன் “எதுக்குடி இங்க வந்து கத்திக்கிட்டு இருக்க குழந்தைகளை உனக்கு தரமுடியாது! நீ கிளம்பு” என்று இரக்கமற்று பேசினான்.
 
“என்னடா நானும் பார்த்திட்டிருக்கேன் ரொம்ப ஓவரா ஆடுற. குழந்தைகளை உன்னால பார்த்துக்க முடியாது. ஒரே நாளுல உன்கிட்ட ஒட்டமாட்டாங்க! இந்த வீட்ல இருக்காளே உன் அம்மா உன் குழந்தைகளை கொல்லக்கூட தயங்க மாட்டா! வீம்பு பண்ணாம இப்போ பசங்களை மான்வி கூட அனுப்பி வை… தாயையும் பிள்ளையையும் பிரிச்ச பாவத்தை தேடிக்காதே மயூரா!” என்றார்.
 
“பேசி முடிச்சிட்டீங்களா தாத்தா! ஏன் இதோ இவ குழந்தைகளை ஒரு வருசம் இரண்டு வருசம் இல்ல ஐஞ்சு வருசம் என்கிட்டயிருந்து மறைச்சு வச்சிருக்கா! இவளுக்கு நான் தண்டனை கொடுக்க வேண்டாமா! குழந்தைகள் என்னை விரோதியை பார்க்கறது போல பார்க்குறாங்க என் இரத்தம் கொதிக்குது தாத்தா! என்னோட நிலமை எந்த அப்பனுக்கும் வரக்கூடாது” என்றவனின் குரல் பிசிறி தட்டியது.
 
வள்ளியிடம் குழந்தைகளை பார்த்துக்க சொல்லி விட்டு வந்திருந்தான் மயூரன்.
 
“அச்சோ தம்பி பாப்பா மயக்கம் போட்டு பேச்சு மூச்சு இல்லாம இருக்கு” என்ற வள்ளியின் சத்தத்தில் மயூரனுக்கு முன்னே மான்வி வீட்டுக்குள் பதறி ஓடினாள்.
 
மயூரனோ மான்வியின் பின்னால் ஓடினான்.
 
நேகாவை கையில் தூக்கிக் கொண்டு திரும்ப மயூரன் மான்வியை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் கையிலிருந்த நேகாவை வாங்கியவன் வேகமாக மாடிப்படியிலிருந்து இறங்கி காருக்குள் நேகாவை படுக்க வைத்து ஹாஸ்பிடலுக்கு விரைத்திருந்தான். 
 
ஹாஸ்பிடலில் “குழந்தை ரொம்ப நேரம் அழுதாங்கனா மூச்சு மூட்டுமுனு உங்களுக்கு தெரியாதா?” என்று மயூரனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார் டாக்டர்.
 
மயூரனோ “என் குழந்தை எப்போ கண்ணு விழிப்பா அவளுக்கு ஆபத்தும் எதுவும் இல்லையே?” என்றான் பதட்டத்துடன். 
 
“இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன் கொஞ்ச நேரத்துல கண்ணு விழிச்சுருவா… இனிமே குழந்தை அழாம பார்த்துக்கோங்க கண்ணு விழிச்சதும் வீட்டுக்கு அழைச்சுட்டு போகலாம்” என்று கிளம்பி விட்டார்.
 
ஹாஸ்பிடலுக்கு ஓடி வந்த மான்வியோ இன்னமும் மயக்க நிலையில் படுத்திருக்கும் நேகாவை பார்த்தவள் நேகாவின் பக்கம் உட்கார்ந்திருந்த மயூரனின் சட்டை காலரை பற்றிக் கொண்டு “என்னோட தாய் பாசத்தை உங்கனால கொடுக்க முடியாது மயூரன். நேகாவை என் கைக்குள் பொத்தி பொத்தி வளர்த்துக்கேன் தெரியுமா! ஒரு நாளுல நான் தான் அப்பான்னு வந்து நின்னா குழந்தைகள் எப்படி ஏத்துப்பாங்க என் மேல இருக்க கோபத்தை குழந்தையிடம் காட்டி இருக்கீங்க! உங்க கோபம் என் குழந்தையை இப்படி பெட்டுல கொண்டு வந்து படுக்க வைச்சுருக்கு பாருங்க” என்று பத்திரகாளி அவதாரம் எடுத்தாள்.
 
“ஏய் கையை எடுடி உனக்கு குழந்தைகள் மேல என்ன உரிமை இருக்கோ… அதே உரிமை எனக்கும் இருக்கு குழந்தை எழுந்து உன் கூட வரேன்னு சொல்லட்டும் நான் உன் கூட அனுப்பி வைக்குறேன்” என்றவனோ தன் சட்டையை பிடித்திருந்த மான்வியின் கையை எடுத்துவிட்டான் அவளை முறைத்து பார்த்தபடியே.

3 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top