ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 14

நேகாவோ கண்விழிக்கவே இல்லை மருந்தின் வீரியத்திலும் வெகுநேரம் அழுதபடியே இருந்தமையாலும் குழந்தை அசதியில் உறங்கிக்கொண்டிருந்தது. நேகாவின் வலது பக்கத்தில் மயூரனும் இடது பக்கத்தில் மான்வியின் மடியில் அமர்ந்திருந்த நேத்ரனோ மயூரனை முறைத்துக்கொண்டு தங்கை எப்போது கண்விழிப்பாள் என்று பார்த்துக்கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிவிட்டான்.

இரவு எட்டு மணி ஆகியிருக்க மயூரனோ “தாத்தா நீங்க மாத்திரை போடணும்ல கிளம்புங்க நான் இருக்கேன். நேகா கண் விழிச்சதும் அவளை என்கூட அழைச்சிட்டு போயிருவேன்” என்றிருந்தான் தன்னையே அச்சத்துடன் பார்க்கும் மான்வியை பார்த்தபடியே.

மான்வியோ நேகா நிச்சயம் மயூரனுடன்  செல்லமாட்டாள் என்ற நம்பிக்கையில் நிம்மதியாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தாள். தன்னை வேண்டாமென்று ஒதுக்கி வைத்தவன் தன் வயிற்றில் உதித்த மலர்களை ஏற்றுக்கொள்வானா இல்லை ஒதுக்கி விடுவானா என்று தினம் தினம் மருகிக்கொண்டிருந்தவள் குழந்தைகளை ஏற்றுக்கொண்டதில் மனம் நிம்மதி அடைந்திருந்தாள்.

மயூரன் குழந்தைகளை பார்த்ததிலிருந்து அவர்களை தன்னுடன் வைத்துக்கொள்ளவேண்டுமென்று துடிப்பை அவன் கண்ணில் பார்த்ததிலிருந்து என்னையும் உன்கூட சேர்த்துக்க மாட்டியாடா  மாமு என்று அவள் மனதில் ஆசைகள் எழாமல் இல்லை.

அருணாச்சலம் மாத்திரை சாப்பிட நேரம் ஆகியிருக்க அவருக்கும் இட்லியை சாப்பிட வைத்துக்கொண்டிருந்தான் கதிர்.

நேத்ரன் பசியில் எழுந்துவிட்டான். கதிர் கடையிலிருந்து இட்லி வாங்கிவந்திருக்க நேத்ரனுக்கு இட்லியை ஊட்டிக்கொண்டிருந்த மான்வியிடம் வந்த ஜெயசீலனோ “நேத்ரனை அழைச்சிட்டு போறேன் மான்வி நேகா எழுந்தா உன்னை விட்டு நகரவே மாட்டா ரெண்டு பேரையும் மேனேஜ் பண்ணுறது உனக்கு சிரமமா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்த சமயம் டாக்டரை பார்க்கச் சென்றிருந்த மயூரன் உள்ளே வந்தவன் “எனக்கு என் குழந்தையை பார்த்துக்க தெரியும் நீங்க கிளம்புங்க அண்ட் என் குழந்தைகளுக்கு பாதுகாப்பாய் இருந்ததற்கு ரொம்ப நன்றி!” என்று இயல்பான குரலில் கூறிவிட்டு நேகாவின் பக்கம் சென்று அமர்ந்துக் கொண்டான் மயூரன்.

மான்வியோ ‘அப்பாகிட்ட இப்படி உர்னு முகத்தை வைத்து பேசணுமா? நம்ம குழந்தைகளை மார்மேல போட்டு வளர்த்திருக்க பெரிய மனுசனுக்கு ரொம்ப நன்றினு ஒரு வார்த்தையில சொன்னா போதுமா! இந்த நன்றினு சொன்னதே பெரிய விசயம்’ என்று புலம்பிக்கொண்டு நேத்ரனுக்கு சாப்பாடு ஊட்டி முடித்து நேத்ரனை வாஷ்ரூமிற்குள் அழைத்துச் சென்றிருந்தாள் மான்வி.

ஜெயசீலனோ மயூரனிடம் மான்வி பட்ட கஷ்டங்களை எடுத்துகூறினால் குழந்தைகளுடன் மான்வியையும் அழைத்துச் சென்றுவிடமாட்டானா என்ற எதிர்பார்ப்பில் அமைதியாக இருந்த மயூரனிடம் 

“என் பேரன் பிள்ளைங்களா நினைச்சுத்தான் பார்த்துக்கிட்டேன் எனக்குனு எந்த உறவும் இல்லை தம்பி. நாங்க மார்க்கெட் போயிட்டு வீட்டுக்கு வரும் வழியில தான் மான்வி மயங்கி விழுந்து கிடந்தா…  நாங்கதான் அவளை ஹாஸ்பிட்டல் அழைச்சிட்டு போயி அவகிட்ட விவரம் கேட்டதுக்கு அப்போ அவ பேசற நிலைமையில இல்லைபா! பிரம்மை பிடிச்சது போல இருந்தா உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனைனு அவ ஆழமாக எதுவும் எங்க கிட்ட ஷேர் பண்ணலை… மான்வி உங்க போட்டோவை வைச்சு அழுதிட்டே இருப்பா தம்பி… மான்வியை மன்னிச்சு உங்ககூட அழைச்சிட்டு போயிடுங்க என்னோட வேண்டுகோள் தம்பி” என்றவரை நிமிர்ந்து பார்த்தான்.

ஜெயசீலன் மிலிட்டரி மேன் என்பதை பறைசாற்றும் வகையில் வயதாகி இல்லாமல் உடம்பை ஃபிட்டாக வைத்திருந்தார். ஒரு மிலிட்டரி மேன் தன்னிடம் அதுவும் தன் மனைவிக்காக கெஞ்சிக்கொண்டிருந்தது அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

“எங்க பிரச்சனையை உங்ககிட்ட முழுசா ஷேர் பண்ணியிருக்க மாட்டாங்க மான்வி மேடம்! ஒரு பக்கம் நியாயத்தை பார்த்து மான்விக்கு சாதகமா பேசுறீங்க! அவளை நான் எந்தளவு காதலிச்சேனு எனக்கு மட்டும்தான் தெரியும்! உங்கம்மாவை உங்க கண்ணுமுன்னால கத்தியால குத்தினா சும்மா இருப்பீங்களா சொல்லுங்க” என்று அவன் சற்று கோபக்குரலோடு பேசும் நேரம் மான்வி நேத்ரனுடன் வெளியே வந்தாள்.

மான்வியோ “அப்பா நீங்க கிளம்புங்க தாத்தா ரெஸ்ட் எடுக்கணும் தாத்தாவை வீட்டுக்கு அழைச்சுட்டு கிளம்புங்க” என்றிருந்தவளின் பேச்சை கவனிக்காமல் நேத்ரனை பார்த்து மெலிதாய் புன்னகைத்து “வா” என்று கையை அசைத்தான்.

நேத்ரனோ மான்வியின் முந்தானையை இறுக்கி பிடித்தான். 

“உங்கம்மா முந்தானையில ஒட்டிக்கோடா என்கிட்ட வராதே என் மகள் எனக்கு போதும்” என்று உதடு கடித்து கோபத்தை அடக்கினான் மயூரன்.

ஜெயசீலனோ “ஏதும்னா போன் பண்ணுமா நாங்க கிளம்புறோம் மாப்பிள்ளை வரேன் பார்த்துக்கோங்க” என்று பொதுவாக பேசவும் “என் குழந்தைகளை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்று அழுத்திக்கூறியவனிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் மான்வியிடம் தலையசைத்துச் சென்றார் ஜெயசீலன்.

கதிர் அருணாச்சலத்தையும் ஜெயசீலனையும் வீட்டில் விட்டு குழந்தைகளுக்கான இரண்டு செட் உடைகளை சாந்தி கொடுக்கவும் வாங்கிக்கொண்டு ஹாஸ்பிட்டல் வந்துவிட்டான்.

சந்திரமதியோ மயூரனுக்கு போன் போட்டு “கண்ணா நீ சாப்பிட்டியா குழந்தை எப்படியிருக்கா! நானும் யாழினியும் ஹாஸ்பிட்டல் வரட்டுமாப்பா?” என்றார் நடிப்பு அக்கறையோடு.

“நீங்க வரவேண்டாம்மா காலையில குழந்தைகளை அழைச்சிட்டு வந்துடறேன்! நீங்க ரெஸ்ட் எடுங்க அண்ட் யாழினிகிட்ட நான் மன்னிப்பு கேட்டதா சொல்லுங்க” என்றதும் அந்த அறையில் இருந்து பக்கத்து மெத்தையில் நேத்ரனின் நெஞ்சில் 
தட்டிக்கொடுத்து கொண்டிருந்த மான்வி சட்டென மயூரனை நிமிர்ந்து பார்த்தாள்.

“யாழினி பாவம்டா நடக்கவிருந்த நிச்சயதார்த்தம் ரெண்டு முறை நின்னுருச்சு. தாய் தகப்பன் இல்லாத பொண்ணு தவிச்சு போய்ட்டா கண்ணா! அப்படியிருந்தும் நேகாவை பார்க்க ஹாஸ்பிட்டல் வரேனு கிளம்பினவளை நான் தான் போக வேணாம்னு தடுத்து வச்சிருக்கேன். நிச்சயதார்த்தம் நின்னுருச்சுனு கவலை இல்லை யாழினிக்கு. நீயும் மான்வியும் ஒன்னு சேரணும்னு என்கிட்டே பேசிட்டிருக்கா மயூரா! குழந்தைகளை நாம அழைச்சிட்டு வந்துடலாம் ஆனா அந்த வாயாடி சிறுக்கி நம்ம வீட்டுக்கு வேணாம்பா… அவ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைச்சா அம்மா வீட்டை விட்டு வெளியே போயிடுவேன். அவளை பார்த்தாலே என்னை கத்தியால குத்தினது நினைவுல வருது” என்று வராத கண்ணீருடன் விசும்பினார்.

கையில் இரத்தக்கறை படிந்த கத்தியுடன் நின்றிருந்த மான்வி தன் கண்முன்னே நின்றிருந்தது மயூரன் மனக்கண்ணில் தோன்ற மறைந்திருந்த கோபம் மீண்டும் முளையிட்டு வந்து “எனக்கும் யாழினிக்கும் நிச்சயதார்த்தம்தானே நின்னது கல்யாணம் நடக்கும்மா உங்களை கொலை பண்ண பார்த்தவளை எப்போதும் வீட்டுக்கு அழைச்சிட்டு வரமாட்டேன் நான் போனை வைக்குறேன்மா” என போனை அணைத்துவிட்டு தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் மான்வியை உறுத்து விழித்தான்.

மான்வியோ மயூரன் யாழினியை கல்யாணம் பண்ணிக்குறேன் என்றதில் அவள் மனம் அடிப்பட்டு போனாலும் தன் துயரத்தை அவன் முன்னே காட்டாமல் நீ யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கோடா என்ற விதத்தில் பார்த்துவிட்டு மகனோடு கண்ணைமூடிப்படுத்துக்கொண்டாள்.

அவள் விழியோரம் கசிந்த நீரை விரலால் துடைத்துக்கொண்டதை மயூரன் கவனிக்கத்தவறவில்லை. உன்னோட கண்ணீருக்கு நீதான் காரணம் நான் இல்லை என்றவன் இதழ் குவித்து ஊதிக்கொண்டு மகள் அருகிலேயே கண்ணைமூடிப்படுத்தவன் எப்படி உறங்கினானென்று தெரியவில்லை. 

மான்வியோ நேகா கண்விழிக்கிறாளா என்று குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தவள் கொஞ்ச நேரத்தில் அவளுமே உறங்கியிருந்தாள்.

நேகாவோ சட்டென கண்விழித்த நேரம் கதிர் தான் குழந்தையின் எதிரே அமர்ந்திருந்தான்.

நேகா கதிரை பார்த்து லேசாக புன்னகை புரிந்தாலும் மான்வியை கண்களால் தேடியது.

நேத்ரன் பக்கம் படுத்திருந்த மான்வியை பார்த்ததும் “அம்மாகிட்ட போறேன்” என்று எழுந்த நேகாவை தூக்கிக்கொண்டு “சத்தம் போடாத குட்டி” என்று நேகாவை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து “உனக்கு அம்மா, அப்பா, நேத்ரன், நீ, நான்,தாத்தா, பாட்டா எல்லாரும் சேர்ந்து இருந்தா பிடிக்கும்தானே?” என்று குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு கேட்டான் கதிர்.

“ம்ம் பிடிக்கும் ஆனா அப்பாவை பார்த்தா பயமா இருக்கு சித்தா” என்று மயூரன் வந்துவிடுவானோ என்று அறையின் வாசலை பார்த்திருந்தது.

“அப்பா உன்னை எப்பவும் திட்டமாட்டாங்க பாப்பாவை பாசமா பார்த்துப்பாங்க. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை இருக்க போய்தான் ரெண்டு பேரும் பிரிஞ்சு இருக்காங்க… நாம அம்மாவையும் அப்பாவையும் சேர்த்து வைக்கணும் அதுக்கு நீ அப்பாகூட இருந்து நாம அம்மாவை  அழைச்சிட்டு வரலாம் அப்பானு நீ கேட்டினா  உனக்காக மான்வி அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாரு. நாம ரெண்டு பேரையும் பேச வச்சிடலாம். நீ காலையில அப்பாகூட போறேன்னு அம்மாகிட்ட சொல்லிடு அப்போதான் நாம எல்லாரும் ஒரே வீட்டுல சேர்ந்து இருக்க முடியும் நேகாகுட்டி” என்று குழந்தைக்கு புரியும் வகையில் மென்மையாய் பேசினான்.

நேகாவோ ஒரு நிமிடம் தாடையில் கைவைத்து யோசித்தது ஸ்கூல பேரண்ட்ஸ் மீட்டிங் நடக்கும் நாட்களில் தன்னுடன் படிக்கும் மாணவர்கள் அவர்களது அப்பா அம்மாவுடன் வருவதை எத்தனை நாட்கள் ஏக்கமாக பார்த்திருக்கிறோம் என்று எண்ணிப்பார்த்த நேகாவோ “நா.நான் அப்பா கூட போறேன்னு அம்மாகிட்ட சொல்லிடறேன் சித்தா… ஆனா அம்மா நான் அப்பா கூட போறேன்னு சொன்னா சோகமாகிடுவாங்க… அம்மா இல்லாம எனக்கு தூக்கம் வராதே” என்று சிணுங்கவும் செய்தது.

மான்வி சட்டென்று கண்விழித்தவள் நேகா பெட்டில் இல்லாதது கண்டு மயூரனும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்ததை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டாள். நேகாவின் பேச்சு சத்தம் வெளியே கேட்கவும் சட்டென எழுந்து வெளியேச் சென்று பார்த்ததும் “நேகா எப்போ கண்விழிச்சா கதிர் என்னை எழுப்பியிருக்கலாம்ல?” என்றபடியே கதிரிடமிருந்து நேகாவை தூக்கிக்கொண்டாள்.

மயூரனும் பேச்சு சத்தத்தில் எழுந்தவன் வெளியே வந்துவிட்டான். நேகாவோ தலையை தூக்கி மயூரனை பார்த்து விட்டு மீண்டும் தலையை மான்வியின் மார்பில் சாய்த்துக்கொண்டது.

“நேகா அப்பாகிட்ட வரியா?” என்று கையை நீட்டினான் மயூரன்.

வரமாட்டேன் என்று தலையை ஆட்டியது.

“ஏன் அப்பாவை பிடிக்கலையா உனக்கு… என்கிட்ட வாடி தங்கம்” என்றபடியே மான்வியின் பக்கம் நெருங்கிச் சென்று நேகாவின் கையை பிடித்து கன்னத்தில் வைத்துக்கொண்டான்.

நேகாவோ நான் போகட்டுமா என்ற விதத்தில் பார்த்தது மான்வியை.

“ம்ம் போ” என்று கண்ணை சிமிட்டினாள்.

என் குழந்தை என்கிட்ட வரதுக்கு உன்கிட்ட பர்மிஷன் கேட்கணுமாடி என்று அவன் தன்மானம் அடிப்பட்டு மான்வியை கரித்துக்கொட்டினாலும் குழந்தையை எப்படியாவது இன்று தன்னுடன் அழைத்துச் சென்று விட வேண்டும் என்ற முடிவில் தன் கோபத்தையெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டு தன்னிடம் தாவும் மகளை வாங்கிக்கொண்டான். இருவரது கைகளும் வெகு காலங்கள் கழித்து உரசிக்கொண்டது. இருவரது கண்களும் சிக்கிமுக்கி கல்லாக உரசிக் கொண்டது.

நேகாவை வாங்கிக்கொண்டு அடுத்த நிமிடம் அறைக்குள் சென்று “பாப்பாவுக்கு பசிக்குதா பால் குடிக்கீறிங்களா?” என்று டேபிள் மீது வைத்திருந்த பிளாஸ்க்கை பார்த்தான். 

நேகாவோ “அம்மா பால் கொடுத்தா தான் நான் குடிப்பேன்” என்றது சன்ன குரலில் ‘இன்னமும் அம்மா பால் கொடுக்குறாளா?’ என்று மயூரன் கண்ணைச் சுருக்கினான்.

நேகா பேசுவதை காதில் கேட்டுக்கொண்டு அறைக்குள் வந்தவள் பிளாஸ்கிலிருந்த பாலை ஆத்தி மயூரன் மடியில் நெளிந்துக் கொண்டு அமர்ந்திருந்த நேகாவிடம் கொடுக்க “நான் உங்க மடியிலிருந்து பால் குடிக்குறேன்” என்றதும் ‘ஓ நான் என்னவோனு நினைச்சேன்!’ என்று பெரும்மூச்சு விட்டான் மயூரன். 

அவன் பெரும்மூச்சிற்கான காரணம் மான்வி புரிந்துக் கொண்டாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

“நாளையிலிருந்து அப்பாகூடதான் நீ இருக்கணும் நானே பாப்பாவுக்கு பால் கொடுக்குறேன்” மான்வியின் முகம் பார்க்காது பாலை வாங்கி மகளுக்கு குடிக்க கொடுத்தான். மயூரன் மகள் தன் கையால் மகளை பால் குடிக்க வைத்ததில் ஆகாயத்தில் றெக்கை கட்டிப் பறந்தான். 

என் மகள் எனக்குத்தான் என்று உரிமை போராட்டம் செய்தான் மயூரன்.

பாலைக்குடித்து விட்டு மான்வியிடம் தாவிய நேகாவை இழுத்துபிடித்து தன் மடியிலேயே வைத்துக்கொண்ட மயூரன் நேகாவிடம் “காலையில நீ அப்பாகூட வரதானே” என்றதும் மான்வி இதயம் தாறுமாறாய் துடித்தது. 

நேகா வரமாட்டேனு சொல்லு என்று பல முறை தனக்குள் சொல்லிக்கொண்டு நேகாவையே பார்த்திருந்தாள் மனம் பதைபதைப்புடன்.

நேகாவோ “நா.நான் அ.அப்பாகூட போ.போறேன்” என்றது சின்னக் குரலில். மான்வியின் கண்ணில் கண்ணீர் கோடுகள்.

மயூரனோ மான்வியை மந்தகாச புன்னகையுடன் பார்த்தான் “என் பொண்ணு என்னோட வரேன்னு சொல்லிட்டா பார்த்தியா என் மகனையும் கொஞ்ச நாளுல உன்கிட்டயிருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிருவேன்” என்ற விதத்தில் அவனது இதழ்கள் ஏளனமாக விரிந்தது.

“நேகா நீ நீ அப்பா கூட போனா அங்க யாரு உனக்கு சாப்பாடு ஊட்டுவாங்க உன்னை பார்த்துக்க யாரும் இருக்க மாட்டாங்க” என்று படபடத்தவளை

“என் பொண்ணை எனக்கு பார்த்துக்க தெரியும்! யாழினி நேகாவை பார்த்துப்பா” என்றான் அழுத்தி.

மான்வியோ குழந்தை முன்னால் விவாதம் பண்ண விரும்பாமல் “என்னால நேகா இல்லாம இருக்க முடியாது ப்ளீஸ் மயூ” என்று அவனது காலருகே உட்கார்ந்து விட்டாள்.

“ஏய் எழுந்திரிடி என் காலை பிடிக்க உனக்கு என்ன தகுதியிருக்கு” என்றதில் அவள் உயிர்க்கூடு துடித்து அடங்கியது.

மயூரன் போட்ட சத்தத்தில் நேத்ரன் எழுந்துவிட்டான். மான்வி கண்ணீரோட இருப்பதையும் நேகா மயூரனின் மடியில் அமர்ந்திருப்பதையும் பார்த்த நேத்ரனோ என்ன புரிந்துக் கொண்டானென்று தெரியிவல்லை.

“அப்பா அம்மாவை எப்போ பார்த்தாலும் திட்டிக்கிட்டேயிருக்கீங்க! நேகா அப்பா மடியிலிருந்து இறங்கி வா நாம வீட்டுக்கு போகலாம்” என அதிகாரம் பண்ணிய  நேத்ரனை பார்த்து “ஹலோ பெரிய மனுசா என் பொண்ணு என்னோட வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டா நீ குதிக்காதேடா” என்றான் சிறு கோபத்துடன்.

நேத்ரனோ “ம்மா நேகா நம்மகூட வரமாட்டாளா!” என்று ஏக்கமாய் மான்வியிடம் கேட்கவும்

மான்வியோ “நேகா அப்பாகூட போறேன்னு சொல்லிட்டா தங்கம் அம்மா என்ன பண்ணட்டும்?” என்றாள் அழுகையுடன்.

“நான் உங்களை விட்டு எப்பவும் யார் கூடவும் போகமாட்டேன்மா உங்களுக்கு நான் இருக்கேன்” என்று மான்வியை தாவி அணைத்துக்கொண்டது நேத்ரன்.

“போடா போடா அம்மா கோண்டு” என்று இதழை வளைத்தான்.

“நீயே அம்மா கோண்டு தான் டா” என்றது மயூரனின் மனசாட்சி.

அடுத்த நாள் காலையில் நேகா மான்வியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துக்கொண்டேயிருந்தது. 

“நேகா நாம கிளம்பலாம் வா” என்று மான்வியிடமிருந்து வெடுக்கென நேகாவை தூக்கிக்கொண்டான்.

மான்வியோ நேகாவுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளை அனைத்தையும் எடுத்து கதிரிடம் கொடுத்து “மருந்து பாட்டில எந்த நேரம் எவ்வளவு அளவு கொடுக்கணும்னு எழுதியிருக்கேன் கதிர் பார்த்து கொடு. குறிப்பா நேகாவை அழுகாம பார்த்துக்கோங்க” என்று பல முறை அழுத்தி அழுத்தி சொன்னதில் 

“எனக்கு தெரியும்” என்று கடுப்பாய் பேசிய மயூரன் நேகாவை சீட்டில் உட்கார வைத்து சீட் பெல்ட் போட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் கண்கள் கலங்கி தன் மகளை பிரிந்த சோகத்தில் நின்றிருந்த மான்வியை ஏளனப்பார்வை பார்த்து காரை எடுத்துச் சென்றான்…

3 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top