ATM Tamil Romantic Novels

ஆதித்யனின் அனிச்சம் பூவே

பூ 18

நேகாவோ “பாட்டியா என்னை பார்த்ததும் வாடா குட்டினு தூக்கி கொஞ்சவே இல்லை. சாந்தி பாட்டி கதை சொல்லுவாங்க. என் கூட விளையாடுவாங்க இவங்க என்னமோ என்னை முறைச்சு பாக்குறாங்க!” என்றது இதழை சுளித்து.

வாயை பாரு அவ அம்மாவ மாதிரியே பேசுறா! என்று மனதிற்குள் நேகாவை நொடித்துக்கொண்டாலும் “வாடி ராஜாத்தி என் பேத்தியை பார்த்ததும் வாயடைச்சு போய் நின்னுட்டேன். உங்கம்மா உன்னையும் உன் அண்ணாவையும் எங்க கண்ணுல காட்டாம வச்சிருந்திருக்கா! கொழுப்பு பிடிச்சவ! நீயும் உங்கம்மா மாதிரி வாயாடியா இருக்காதே” என்றார் வெறுப்புடன்.

“ம்மா குழந்தைகிட்ட இப்படியா பேசுவீங்க! நேகா இந்த வீட்டோட இளவரசிமா அவளை இந்த வீட்டுல யாரும் ஒரு வார்த்தை அதட்டி பேசக்கூடாது!” என்று சந்திரமதியை பார்த்துதான் பேசினான்.

“நான் உன் மகளை எதுவும் சொல்லமாட்டேன்பா! என் வீட்டு முதல் பேத்தி இவளை உதாசீனபடுத்துவேனா! நான் போட்டிருக்க நகையெல்லாம் உன் மகளுக்குத்தான்டா தரப்போறேன். எனக்கு அடுத்து இந்த வீட்டோட சாவிக்கொத்தையும் உன் பொண்ணு கிட்டயே கொடுத்துடறேன் போதுமா மயூரா. இப்ப கூட உன் பொண்ணுக்கு தனியா காரம் இல்லாம சமைச்சு வச்சிருக்கேன்டா உன் பொண்ணு மேல அக்கறையோட இருக்கேன் தெரியுமா” என்றிருந்தார் பாசம் பொங்கி வழியும் குரலில்.

நேகாவோ சந்திரமதி பேசுவதை உற்று நோக்கி கேட்டுக்கொண்டிருந்தது. 

சந்திரமதியோ ஆத்தாக்காரி பார்க்கறது போல பார்க்குறா பாரு என்று சமையல் கட்டுக்குச் சென்றவரோ ‘பெரிய சிறுக்கி என் மகன்கிட்ட பாசம் காட்டி மோசம் பண்ணிட்டு போயிட்டா இனி இந்த சின்ன சிறுக்கி என்ன பண்ணிட்டு போறாளோ தெரியலப்பா சாமி. இந்த குட்டி பிசாசை எப்படி சமாளிக்கப்போறேனோ தெரியலை’ என்று புலம்பிக்கொண்டே நேகாவிற்காக காரமில்லாத குழம்பை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிள் வந்தவர் ஹாட்பேக்கில் இருந்த இட்லியை தட்டில் போட்டு குழம்பு ஊற்றி நேகாவிற்கு ஊட்டப்போக “எனக்கு நீங்க ஊட்ட வேணாம். தாத்தா நீங்க ஊட்டுங்க நான் சாப்பிடறேன்” என்றது குட்டி வாண்டு நேகா.

“ஏன் டி நான் ஊட்டக்கூடாது. உனக்காக பார்த்து பார்த்து சமைச்சு வச்சிருக்கேன்! என்னை ஊட்ட வேணாம்னு சொல்லுற!”

“எனக்கு உங்களை பிடிக்கலை” என்று முகத்தை திரும்பிக்கொண்டது.

“அடிகுட்டி கழுதை” என்று மயூரன் நிற்பதை மறந்து வார்த்தையை விட்டார்.

“அம்மா குழந்தையை போய் கழுதைனு பேசுவீங்களா! குழந்தை ஏதோ விளையாட்டா பேசுறா! அதை பெரிசு பண்ணாதீங்க” என்று சந்திரமதியிடம் சண்டைக்கே சென்றுவிட்டான் 

‘வந்த முதல் நாளே என் மகனை எனக்கு எதிரா சண்டை போட வச்சிட்டாளே குட்டி வானரம்’ என்று மனதிற்குள் புகைந்தார் சந்திரமதி.

இந்த சம்பாஷைணைகளை கேட்டுக் கொண்டு வந்த யாழினியோ நேகாவின் அருகே வந்தவள் “ஹாய் பட்டுக்குட்டி நான் உன்னோட பெரியம்மா நான் உனக்கு இட்லி ஊட்டி விடவா?” என்று கையை விரித்தாள்.

நேகாவோ “நா.நான் வரலை தாத்தாகிட்ட சாப்பிட்டுக்குறேன்!” என்றாள் மயூரனை பார்த்து.

“ப்ளீஸ் பாப்பா பெரியம்மா ஆசையா கூப்பிடறேன்ல” என்று நேகாவின் கன்னம் தொட்டு கெஞ்சினாள் யாழினி.

மயூரனோ “ஏஞ்சல் பெரியம்மாதான் சாப்பாடு ஊட்டி விடறேனு சொல்றாங்கல்ல சாப்பிடு ஸ்கூல் டைம் ஆச்சுடா” என்று மணிக்கட்டை திரும்பி வாட்ச்சை காட்டினான்.

முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு “ச.சரி ஊட்டுங்க!” என்றது நேகா

சந்திரமதியிடம் கண்ணைக்காட்டி விட்டு இட்லி தட்டை வாங்கி நேகாவிற்கு இட்லியை ஒரு வாய் ஊட்டியதும் “தூதூஊஊ குழம்புல உப்பு அதிகமாக இருக்கு” என்று துப்பியதும் யாழினியின் முகத்தில் நேகா வாயிலிருந்த துப்பிய இட்லி துகள்கள் யாழினியின் முகத்தில் பட்டதும் அவளுக்கு கோபம் வந்து விட்டது! ‘வானரமே என் மேல துப்புறியா தனியா என்கிட்ட சிக்குவல்ல உன் காதை திருகி தனியா எடுத்துவிடறேன்’ என்று நேகாவை கரித்துக்கொட்டினாலும் “உப்பு அதிகமா இருக்கா வேற குழம்பு ஊத்தி எடுத்துட்டு வரேன்” என்று பொறுமைசாலி பெண் போல எழுந்தாள் யாழினி

மயூரனோ யாழினி கையிலிருந்த தட்டில் இருந்த இட்லியை சாப்பிட்டு பார்க்க உப்பும் காரமும் அதிகமாக இருந்தது. 

“அம்மா குழந்தைக்கு இப்படியா சமைச்சு வைப்பீங்க மான்வி மேல இருக்க கோபத்தை என் குழந்தை மேல காட்டாதீங்க வள்ளியக்கா இனிமே நேகாவுக்கு நீங்க தனியா சமைச்சு வைங்க. இல்லைனா நான் வேற குக் அப்பாயின்மெண்ட் பண்ணிக்குறேன் நாம வெளியே சாப்பிட்டுக்கலாம் ஏஞ்சல்” என்று கருணாகரன் மடியில் அமர்ந்திருந்த நேகாவை தூக்கிக்கொண்டு வெளியேச் சென்றுவிட்டான்.

மழை பெய்ஞ்சு ஓய்ஞ்சது போல இருந்தது அந்த இடம். சந்திரமதியோ “என்னங்க பார்த்தீங்களா உங்க திமிர்காரி மருமக பெத்த பொண்ணை நான் செய்த குழம்புல உப்பு அதிகமா இருக்கு. காரம் அதிகமா இருக்குனு சாப்பிட்ட இட்லியை யாழினி மேல துப்புறா குழந்தையை கண்டிக்காம இவன் என்னமோ என்கிட்ட தைய்யா தக்கானு குதிக்குறான். இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோ தெரியலைசாமி!” என்று புலம்பி தீர்த்தார் சந்திரமதி.

“நீ பண்ணின பாவம் கொஞ்சமா நஞ்சமா சந்திரமதி! இப்போ நம்ம பேத்தி உனக்கு ரிவென்ஞ் கொடுக்குறா! அவ்ளோதான். இன்னும் நீ படவேண்டியது நிறைய இருக்கு சந்திரா… ஒரு தவறும் பண்ணாத என் மருமகளை கொலைகாரினு பட்டம் சுமத்தி ஊரை விட்டு அனுப்பிய பாவம் உன்னை சும்மா விடுமா! இந்த ஜென்மத்துல தப்பு பண்ணினா அடுத்த ஜென்மத்துல தண்டனை கிடைக்கும்கிறது அந்த காலம் இப்போ எல்லாம் உடனுக்குடன் கடவுள் தண்டனை கொடுத்திடறாரு. உனக்கு கவுன்டவுன் ஸ்டார்ட் சந்திரா!” என்று சாப்பிடாமல் கூட எழுந்துச் சென்று விட்டார் கருணாகரன்.

நேகா இந்த வீட்டில் இருக்க கூடாது குழந்தை மயூரனிடம் இருந்தால் நிச்சயம் தன்னை திருமணம் பண்ண மாட்டான் என்று கேவலமான எண்ணத்தில் சந்திரமதி வைத்த குழம்பில் உப்பையும் மிளகாய் பொடியையும் அள்ளி போட்டிருந்தாள் யாழினி.

அறைக்குச் சென்ற யாழினியோ முகத்தை கழுவி வேற புடவையை மாற்றி விட்டு ஜெகதீஷ்க்கு போன் செய்தாள்.

“சொல்லுங்க மேடம் எனக்கு போன் பண்ணியே ரொம்ப நாளாச்சு” என்றான் தாடையை தேய்த்துக்கொண்டு.

“மாமா உங்களுக்கு ஒரு கோடி அட்வான்ஸ் கொடுக்குறேன் மான்வியையும் அவ குழந்தைகளையும் போட்டு தள்ளிடுங்க” என்றாள் ஈவு இரக்கமில்லா அரக்கி யாழினி.

“ஒரு கோடி எனக்கு பத்தாதே மூணு உயிரை கொல்லணும் யாழுமா எனக்கு 50 கோடி வேணும்” என்றான் யாழினி பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“உன்கிட்டதான் பல நூறு கோடி பணம் இருக்கே யாழுமா ஒரு 100 கோடி கொடுத்தாலும் உன் பணம் குறைஞ்சு போய்ட்டாது” என்று அரக்கனை போல சிரித்தான் ஜெகதீஷ்.

“100 கோடி தரேன் எனக்கு இடைஞ்சலா இருக்க மான்வியையும் அவளோட வாரிசுகளும் உயிரோடவே இருக்க கூடாது. நானும் மயூரன் மாமாவும் சந்தோசமா வாழணும்னா இந்த மூணுபேரும் இருக்கவே கூடாது மாமா” என்றிருந்தாள் மனதில் ஈரமில்லாத சூர்ப்பனகை.

“100 கோடி இன்னும் கொஞ்சம் சேர்த்து கொடுத்திருக்கலாம் என் மாமா பொண்ணுக்காக கொலை பண்ணுறேன்” என்றிருந்தான் தம்பியின் குழந்தைகள் என்றும் பாராமல்.

தன்னை சுற்றி சூழ்ச்சி வேலைகள் நடந்துக் கொண்டிருப்பது அறியாமல் குழந்தையுடன் அருணாச்சலம் வீட்டிற்குச் சென்றான் மயூரன்.

ஹாலில் இளமாறன் அருணாச்சலத்திடம் பேசிக்கொண்டிருந்தான். மான்வியோ இளமாறனுக்கு காபி கொண்டு வந்த நேரம் மயூரன் வீட்டுக்குள் சென்றிருந்தான். மயூரனுக்கோ இளமாறனை பார்த்ததும் அவன் கண்கள் சிவந்து விட்டது. 

“வா மயூரா” என்றவர் “இளமாறன் இவன் என்னோட பேரன் மயூர வாஹனன். மயூரவாஹனன் குரூப் ஆப் இன்ஸ்ட்டியூசன் எம்டி” என்றார் வெள்ளை தாடியை நீவிக்கொண்டு.

மயூரனோ மான்வியை பார்த்தான் அவளோ தரையை பார்த்து தலையை குனிந்துக் கொண்டாள்.

“இளமாறனுக்கு காபி கொடுமா” என்றார் தலைகுனிந்து நின்ற மான்வியிடம்

காபியை இளமாறனுக்கு கொடுத்துவிட்டு சமையல்கட்டுக்குள் சென்ற மான்வியோ நேகாவிற்கு பிடித்த பனியாரத்தை ஹாட்பேக்கில் போட்டுக்கொண்டிருந்த சாந்தியிடம் “ம்மா என்னை கேட்காம பொண்ணு பார்க்க இளமாறனை வரச்சொல்லியிருக்காரு தாத்தா… எனக்கு கல்யாணம் வேணாம்மா இப்படியே நான் இருந்திடறேன்” என்று சாந்தியின் தோளில் சாய்ந்தவளின் காலைக்கட்டிக்கொண்டது நேகா. 

“ம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு ஊட்டி விடுங்க” என்று நேகா வயிற்றை தடவியது.

“என்னது நீ இன்னுமா சாப்பிடலை குட்டிமா” என்று பதறியவள் சமையல்கட்டின் திண்டில் நேகாவை அமர வைத்து ஹாட்பேக்கில் இருந்த பனியாரத்தை காரமில்லா குருமாவை தொட்டு நேகாவிற்கு ஊட்டிவிட்டாள்.

நேகாவோ “அம்மா அந்த வீட்ல இருக்க பாட்டி வைச்ச குழம்புல உப்பும் காரமும் அதிமாக இருந்துச்சு. அப்பா அந்த பாட்டிகிட்ட சண்டைபோட்டு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க” என்றது பனியாரத்தை வாயில் அதக்கிக்கொண்டு.

“அடப்பாவிங்களா குழந்தைக்கு போய் எப்படி காரமான குழம்பை வைப்பாங்க அந்த அம்மாவுக்கு மனசாட்சி இருக்கா என்ன?” சாந்தி சந்திரமதியை வசைபாடினார்.

மயூரன் சமையல்கட்டுக்குள் வந்தவன் “எனக்கும் சாப்பாடு ஊட்டு மான்வி பசிக்குது” என்றான் வெகு வருடங்கள் கழித்து.

மான்வி காண்பது கனவா இல்லை நனவா என்று தெரியாமல் நின்றிருந்தாள்

நேத்ரன் யூனிபார்முடன் கிளம்பி சாப்பிட வந்தவன் மான்வியின் பக்கம் நெருங்கி நின்ற மயூரனை பார்த்து அப்பா அம்மாகிட்ட சண்டை போட வந்துட்டாரா என்று சலித்துக்கொண்டு மயூரனை தாண்டிச் சென்று மான்வியின் பக்கம் நின்றுக் கொண்டான் மெய்காப்பாளன் போல.

மான்வியின் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. மயூரனோ மான்வியைத்தான் பார்த்திருந்தான்.

குழந்தைகள் இருவரும் தாயையும் தந்தையையும் பார்த்திருந்தனர்.

மான்வியோ மயூரனை ஒரு பார்வை அழுத்தமாய் பார்த்துவிட்டு அவளது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு “ஏன் மயூரன் என்னை இப்படி உயிரோட சித்ரவதை பண்ணுறீங்க… இத்தனை வருசமாய் எங்க போனீங்க மயூ! இப்பதான் பொண்டாட்டி கண்ணுக்கு தெரியுறேனா.. அதுவும் நான் இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிடுவேனோனு என்கிட்ட வந்து பசிக்குது சாப்பாடு போடுனு கேட்குறீங்க! நான் என்ன மரபாச்சி பொம்மையா ரத்தமும் சதையும் உள்ள மனுஷி… உங்க பொண்டாட்டி உங்க அம்மாவை கத்தியால குத்துறானா அவங்க என்ன வார்த்தை பேசி இருப்பாங்கனு  ஒரு நிமிசம் யோசித்து பார்த்தீங்களா மயூ! நான் ஒத்துக்குறேன் எந்த மகனும் தன் தாயை கத்தியால குத்துறதை பார்த்தா இரத்தம் கொதிக்கும்தான் நான் இல்லைனு சொல்லமாட்டேன்.

ஆனா உங்களை நம்பி காதலிச்ச பொண்ணு உங்க கிட்ட பேச வந்ததை ஒரு நிமிசம் காதுகொடுத்து கேட்டிருக்கணும்ல… கேட்கலையே! வெளியே போடி கழுத்தை பிடிச்சு தள்ளினியேடா! என்னதான் கோபம் இருந்தாலும் பொண்டாட்டியை தேடி வந்திருக்கணும்ல… என்னை உயிருக்கு உயிரா லவ் பண்ணினேனு சொன்னதெல்லாம் பொய்யாடா.. என்னால முடியலையே” என்று வாய்விட்டு கதறி அழுதாள்.

குழந்தைகள் இருவரும் “அம்மா கதவை திறங்க” என்று மான்வியின் அறை முன்னே அழுதுக் கொண்டிருந்தார்கள்

அருணாச்சலமோ “என்னடா பண்ணின என் பேத்தியை!” என்று மயூரனின் சட்டையை பிடித்ததும்

அவரது கையை எடுத்து விட்டு “என் பொண்டாட்டிக்கு மாப்பிள்ளை பார்க்க நீங்க யாரு தாத்தா?” என்றான் அடக்கப்பட்ட கோவத்துடன்.

கதவை வேகமாக திறந்து வந்த மான்வியோ மயூரன் முன்னால் நின்ற குழந்தைளை பார்த்தவள் “அம்மா பசங்களை தோட்டத்துக்கு கூட்டிட்டு போங்க” என்றவுடன் சாந்தி குழந்தைகள் இருவரையும் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

“என்கிட்ட டிவோர்ஸ் பேப்பர்ல கையெழுத்து வாங்கிட்டு போய்ட்டீங்கல்ல அதான் தாத்தா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காரு. உங்க குழந்தைகளை பார்க்கவோ இல்ல உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகறது உங்க விருப்பம் தான் நான் வேண்டாம்னு தடை போட மாட்டேன். ஆனா என்னை க. கல்யாணம் பண்ண வேணாம்னு சொல்ல உங்களுக்கு என்ன  ரைட்ஸ் இருக்கு மயூரன்?” என்றாள் அழுத்தமான குரலுடன்.

4 thoughts on “ஆதித்யனின் அனிச்சம் பூவே”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top