ATM Tamil Romantic Novels

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 7

“சரி கிளம்பி வா நான் கீழ ஹாலுல இருக்கேன்” என்றவனோ அவளது முகத்தை ஒரு முறை உற்று நோக்கி பார்த்தவன் அவளது நெற்றி வகுட்டில் குங்குமம் இல்லாமல் இருக்க ட்ரசிங் டேபிளின் மேல் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து வந்து அவளது உச்சியில் குங்குமத்தை வைத்துவிட்டு “இனிமே காலையில குளிச்சு முடிச்சதும் தினமும் உச்சி வகுட்டுல குங்குமம் வச்சிக்கணும். தலை நிறைய மல்லிகைப்பூ வச்சிக்கணும். கை நிறைய கண்ணாடி வளையல் போட்டுக்கணும். என்னோட வெளியில வரும்போது தழைய தழைய பட்டுச்சேலை கட்டிக்கணும். நிறைய முத்து வச்சி கொலுசு போட்டுக்கணும்” என்றவனின் விழிகள் பளபளத்தது.

இப்போதும் அவள் தலையை நாலாப்பக்கமும் ஆட்டினாள். 

“நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன் பூம்பூம் மாடு போல தலையை ஆட்டுற வாயை திறந்து பேசணும்” என்றதும் அவள் அதற்கும் தலையை ஆட்ட “ம்ப்ச் வாயை திறந்து பேசுடி” என்று அவளது தோளில் கையை வைத்தான்.

ஒரே நாளில் அவன் பேசும் அதிரடி பேச்சுகளில் திக்குமுக்காடினாள் சிறுபெண். இப்போது தோளில் கையை வைத்ததும் அவளுக்கு மூச்சு விட முடியவில்லை வாயை திறந்து பேச முற்பட்டால் வெறும் காத்துதான் வந்தது முல்லைக்கு.

“நீ.நீங்க த.தள்ளி இருக்கும்போது பே.பேச வருது. கி.கிட்டக்க இருந்து பேசும்போது பேச்சு வரலை” என்றாள் தடுமாற்ற பேச்சுடன்.

“அப்போ என்கூட தள்ளி நின்னு குடும்பம் நடத்தப்போறியா?” என்றவன் குரல் ஓங்கி வந்தது.

“அ.அது” என்று அவள் பேச்சு வராமல் தடுமாறினாள்.

“நாம தினமும் பேசி பழகப்போறோம் தன்னால பேச்சு வந்துரும் இப்படி பதட்டப்படாதே! இப்போ கிளம்பி வா” என்று எழுந்தவனோ அறையை விட்டு வெளியேறியதும் “அப்பாடா” என்றிருந்தது முல்லைக்கொடிக்கு.

‘ஆமா தினமும் உங்க கூட நேரம் காலம் பார்க்காம உட்கார்ந்து பேச ஆசையா இருக்கு  ஆனா நீங்க பக்கம் வந்ததும் பேச வந்ததெல்லாம் மறந்து போயிடுதே நான் என்ன பண்ணுவேன்! ஒருவேளை சின்னய்யா சொன்னது போல தினம் தினம் அவர் பக்கம் இருந்து பேசினா என் கூச்சம், பயம் எல்லாம் பறந்து போயிடுமோ’ என்றெல்லாம் பலவாறு அவளது மூளையை போட்டு கசக்கிக்கொண்டு எழுந்தவள் தலையை பின்னி போட்டு பேக்கை எடுத்து மாட்டிக்கொண்டு கீழே வந்தாள்.

கீழே ஹாலில் நீலகண்டனும் ராயனும் பேப்பர் படித்துக்கொண்டிருந்தனர். நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு மாடிப்படிகளில் இறங்கி வரும் முல்லைக்கொடியை பார்த்த கோமளமோ “நேத்து வரை எனக்கு கால் அமுக்கி விட்டவ இன்னைக்கு மகாராணி கணக்கா ஒய்யாரமா எட்டு மணிக்கு எழுந்து புறப்பட்டு வரா ஆடி பாடி எல்லாம் நேரம்” என்று வாய்க்குள் முணகிக்கொண்டார்.

ராயனோ பேப்பர் படிப்பதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து பார்த்ததும் “நான் ஒண்ணும் பேசலப்பா” என்று கையை விரித்தார்.

பேக்கோடு வந்த முல்லையை பார்த்தவன் “டிபன் எடுத்து வை முல்லை” என்று பேப்பரை மடித்து டிபாயின் மீது போட்டு எழுந்தான்.

பேக்கை சோபாவில் வைத்துவிட்டு சமையல்கட்டுக்கு போன முல்லையை “ஏய் நில்லு” என்றதும் 

‘இந்நேரம் வரை இந்த குண்டம்மா என்னை கூப்பிடாம இருந்ததே பெரிய விசயம்’ என்று கண்களை சுழட்டியவளுக்கு இந்த வீட்டோட மூத்த மருமக பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும் என்று ராயன் கூறியது நினைவில் வரவும் கோமளம் பக்கம் திரும்பி நின்று “சொல்லுங்க பெரியம்மா” என்றாள் பவ்யமாய்.

“ஹான் இந்த வீட்டோட மூத்த மருமக எழுந்து வர நேரமா இது! நானெல்லாம் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்த போது காலையில நாலு மணிக்கு எழுந்து குளிச்சு வாசல் தெளிச்சு கோலம் போட்டு பூஜையறையில விளக்கேத்தி ஐஞ்சு மணிக்கு சமையல் ஆரம்பிச்சுடுவேன். நீ என்னடானா சூரியன் சுள்ளுனு எழுந்து வந்து எட்டு மணியாகுது இப்போது தான் எழுந்து அன்ன நடைபோட்டு நடந்து வர ம்ம் நேத்து வரை இந்த வீட்டு வேலைக்காரியா இருந்தவளுக்கு எங்க முறையெல்லாம் உனக்கு எங்க தெரியப்போகுது” என்று முல்லையை காயப்படுத்தவேண்டுமென்று நீட்டி முழங்கி பேசினார்.

நீலகண்டனோ “அக்கா நம்ம வீட்டுக்கு வந்த  மருமகளுக்கு நம்ம வீட்டு பழக்கவழக்கங்களை நாம ஒவ்வொண்ணா சொல்லித்தருவோம் அதைவிட்டு கல்யாணம் ஆன முதல்நாளே முல்லை மனசை இப்படி சங்கடப்படுத்தி பேசணுமா” என்று முல்லைக்காக பரிந்து பேசினார்.

“நேத்து வரை நேரமே எழுந்து வந்து முறைவேலை பார்த்தவதான் இந்த மகாராணி முல்லைக்கொடியம்மா இன்னிக்கு இந்த வீட்டு முதலாளியை கல்யாணம் பண்ணிக்கிட்டதும் எஜமானியம்மா தோரணை வந்துடுச்சோனுதான் இவளுக்கு பாடம் எடுத்தேன் நீலகண்டா” என்றார் இழுவையாக.

“நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் முல்லை இந்த வீட்டோட எஜமானியம்மாதான் பெரியம்மா இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்… என் பொண்டாட்டிக்கு இன்னிக்கு பரிட்சை இருக்கு அவ எழுந்து வேலை செய்ய போறேனுதான் என்கிட்டே சொன்னா நான் தான் அவளை நீ படினு சொல்லி என்னோட இருக்க வச்சிக்கிட்டேன் அவளை இன்னொரு முறை இப்படி எல்லார் முன்னாலும் வைச்சு பேசாதீங்க பெரியம்மா” என்றவனோ “எனக்கு கொடுக்கற மரியாதை என்னோட பொண்டாட்டிக்கும் எல்லாரும் கொடுக்கணும்” என்றான் அங்கிருந்தவர்கள் காதில் விழும்படி. 

“ஓ அப்போ நான் தினமும் உன் பொண்டாட்டிக்கு கால் அமுக்கணுமா ராயா?” என நக்கலாய் பேசியதும்.

“பெரியம்மா இதென்ன விதண்டாவதமா பேசுறீங்க அப்புறம் உங்ககிட்ட இருக்கற சாவிக்கொத்தை வாங்கி என் பொண்டாட்டிகிட்ட கொடுத்துருவேன் பார்த்துக்கோங்க” என்று மெயின் பாயிண்ட் பிடித்து பேசினான்.

“என்னமோ பண்ணுங்கப்பா இந்த வீட்டோட முறை சீர்குலைக்ககூடாதுதான் நான் இவ்ளோநேரம் மூச்சை இழுத்துபிடிச்சு பேசினேன். உன் பொண்டாட்டி நான் ஏன் லேட்டா எழுந்து வந்தேனு கேட்டதும் பரிட்சை இருக்குனு சொல்லியிருந்தா நான் ஏன் இவ்ளோ பேசப்போறேன்” எங்கே தன்னிடம் இருக்கும் சாவிக் கொத்தை வாங்கி முல்லையிடம் கொடுத்துவிடுவானோவென்று அச்சத்தில் எழுந்து அவரது அறைக்குள் வேகமாகச் சென்றுவிட்டார் கோமளம்.

ராயனோ அமைதியாய் நின்ற முல்லையை பார்த்தவனோ வந்து “இந்தா புள்ள டிபன் எடுத்து வை” என முல்லையிடம் கண்ணைக்காட்டி விட்டு “மாமா நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்றவனோ டைனிங் டேபிளுக்குச் சென்றான்.

அமுதாவும் தையல்நாயகியும் கோமளம் பேசியதை கேட்டுக்கொண்டுதான் இருந்தனர். ஹாலில் ராயன் இருக்கவும் தையல்நாயகி சமையல்கட்டுக்குள்ளேயே இருந்து விட்டார்.

அமுதாவோ ‘கல்யாணம் ஆன அடுத்தநாளே கோமளம் அம்மாவிடம் வசை வாங்கிட்டாளே’ என்று கவலையுடன் இருந்தார்.

‘இதுக்குத்தான் என் மகளை இந்த வீட்டுக்கு மருமகளா அனுப்ப தயங்கினேன் இப்போ ராயன் தம்பி இருக்கங்காட்டி கோமளம் அம்மா கொஞ்சமா பேசிட்டு போயிட்டாங்க யாரும் இல்லாத போது என் பொண்ணை யாரு காப்பாத்துவாங்க’ என்று அமுதாவுக்கு பெரும் அச்சம் மூண்டது.

சமையல்கட்டுக்குள் வந்த முல்லைக்கொடியின் முகத்தை ஆராய்ந்தனர் அமுதாவும் தையல்நாயகியும்.

முதலிரவு பற்றி ராயனிடம் பேசியதும் “முல்லை படிக்கற பொண்ணு முதல் இரவு சம்பிரதாயம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று கூறியிருந்தாலும் பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பற்றிக்கொண்டிருக்குமே ஏதாவது தாம்பத்யம் நடந்த சுவடு முகத்தில் தெரிகிறதாவென்று பார்த்தனர் பெரியவர்கள்.

முல்லைக்கொடியின் முகத்தில் கலவரமே தெரிந்தது. தையல்நாயகியோ அவசரமாக முல்லையின் கைபிடித்து “அம்மாடி முல்லை கோமளம் அக்கா பேசினதை மனசுல வச்சிக்ககூடாது. இப்படி முகத்தை பொக்குனு வச்சிக்கிட்டியே என் மனசு அல்லாடுது கண்ணு. முகத்தை சிரிச்சாப்ல வச்சிக்கோ. வீட்டுப் பொண்ணுக்கு உதடு எப்பவும் சிரிக்கணும். வெளியில போற ஆம்பிளைகளுக்கு நம்ம சிரிச்ச முகத்தை பார்த்துட்டு போனா தான் அன்றைய பொழுது சிறப்பா போகும். நம்ம வீட்டுல லட்சுமி கடாட்சமும் தங்கும்” என்று முல்லையின் கன்னத்தை வருடினார்.

“நா.நான் நேரமே எழுந்து கீழ வரேனுதான் சொன்னேன் சின்னய்யாதான் நீ படினு சொல்லிட்டாருங்கம்மா” என்றாள் லேசான பதட்டத்துடன்.

“அத்தைனு வாய்நிறைய கூப்பிடு முல்லை! பரிட்டை முடிஞ்சதும் நேரமே எழுந்து குளிச்சு முடிச்சு கோமளம் அத்தை சொன்னதை செய்துக்கலாம் அவங்க பேசினதை மனசுக்குள்ள போட்டு குழப்பிக்காம ராயனுக்கு டிபனை கொண்டு போய் வை” என்றார் முல்லையின் தலையை வாஞ்சையாக வருடியபடியே.

“ச.சரிங்கத்தை” என்றவளின் உதடுகள் விரிந்தது.

“ம்ம் இதுதான் முல்லை இந்த சிரிப்புதான் நான் எதிர்பார்த்தேன்” என்றவரோ சட்னி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளுக்குச் சென்றார் தையல்நாயகி.

ராயன் தட்டில் இட்லியை வைத்து தக்காளிசட்னியை ஊற்றினாள் முல்லை.  

இட்லி சாப்பிட்டதும் இடியாப்பமும் கொண்டைக்கடலை குழம்பும் பரிமாறினாள். நீலகண்டன் தட்டில் இடியாப்பத்தை வைத்தவள் குழம்பை ஊற்றவும் “போதும் மா” என்று கையை காட்டினார்.

“இன்னும் கொஞ்சம் வைக்குறேன் ஐயா” என்றவளை 

“அப்பானு வாய் நிறைய கூப்பிடுமா” என்றதும் ராயன் நிமிர்ந்து பார்த்தான்.

“இனிமே எல்லாரையும் முல்லை முறை வச்சு கூப்பிடட்டுமே என்னை அப்பானு அழகம்மையை அம்மானு கூப்பிடட்டும்” என்றார் புன்னகை முகமாக நீலகண்டன். 

அழகம்மையும் டைனிங் டேபிளுக்கு வந்தவர் “ஆமா முல்லை இனிமே என்னையும் அம்மானு கூப்பிடு பூங்கொடி இல்லாத குறையை நீ எனக்கு தீர்த்து வைச்சுடு” என்று முல்லைக்கொடியின் கையை பிடித்துக்கொண்டார்.

“இந்த வீட்டுப் பொண்ணை கொஞ்சாம நேத்து வந்த புதுமருமகளை எல்லாரும் தலையில தூக்கி வச்சு கொண்டாடுறீங்க என்னை யாருமே கண்டுக்கல” என்று முகத்தை ஒரு முழத்துக்கு தூக்கி வைத்து சோகமாக வந்து நின்றாள் நதியா.

“என்ன இருந்தாலும் நீ இன்னொரு வீட்டுக்கு போக போற புள்ள… முல்லை அப்படியில்லையே இந்த வீட்டுல இருக்கப்போற வயசான காலத்துல எங்களை பார்த்துக்க போற பொண்ணு அதுனால நாங்க முல்லையை கொஞ்சுறோம்” என்று கண்ணைச் சிமிட்டி சிரித்தார் அழகம்மை.

கோமளமோ ‘இந்த வேலைக்காரியை தூக்கி வச்சு கொண்டாடுறாங்க ஒருநாள் இவளை தூக்கியெறிய போறாங்க பாரு’ என்று பொறாமையில் பொங்கினார்.

தையல்நாயகியோ “நீதான் எங்க வீட்டு கடைசெல்லக்குட்டி உன்னை யாராவது கொஞ்சாம இருப்பாங்களா உனக்கு பிடிச்ச காளான் பிரியாணி செய்து வச்சிருக்கேன் மதியம் சாப்பாட்டுக்கு எடுத்துட்டு போங்க தங்கம்” என்று மகளின் கன்னத்தை தொட்டு முத்தமிட்டார் தையல்நாயகி.

“ம்க்கும் இவ செய்த பிரியாணியை சாப்பிட்டா எம்புள்ள ஒரு அடி உயரமா வளர்ந்திடப்போறாளாக்கும்” என்று முகத்தை தாடையில் இடித்துக்கொண்டார்.

வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் முல்லைக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்களென வயிற்று எரிச்சலில் இருந்தார் கோமளம்.

கண்ணனோ அவனது அறையிலிருந்து பேக்குடன் சென்னைக்கு கிளம்பி வந்தான்.

கண்ணன் தலையை கண்டதும் வேகமாய் வந்த கோமளோ “இன்னிக்கே சென்னைக்கு கிளம்புறியாப்பா ஒருவாரம் அம்மாகூட இருந்துட்டு போகலாம்ல போன வாரம் புரோக்கர் பக்கத்து ஊர்ல பொண்ணு இருக்கு பொண்ணு சென்னையில தான் வேலை பார்க்குதுனு சொன்னாரு நான்தான் பெரியவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு சின்னவனுக்கு பண்ணனும்னு சொல்லிட்டேன்.

இத்தனை நாள் உன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகட்டும்னு காத்திருந்தேன் அவனுக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சுல்ல அடுத்த மாசமே நல்ல நாள் பர்ர்த்து கல்யாணத்தை பண்ணிடலாம்னு இருக்கேன் என்ன சொல்றப்பா” என்றதும்

“அ.அம்மா நா.நான் என்கூட வேலை பார்க்கற பொண்ணை விரும்புறேன்” என்று கோமளம் தலையில் பெரிய குண்டை தூக்கிப்போட்டான்.

“என்னடா சொல்ற காதல் பண்ணுறியா அந்த பொண்ணு என்ன குலமோ கோத்திரமோ நம்மளை போல வசதியான குடும்பமா இல்லை உன் அண்ணன் ராயன் வேலைக்காரியை கல்யாணம் பண்ணிக்கிட்டானே அதுபோல உன் கம்பெனியை கூட்டி பெருக்குறவளை காதல் பண்ணுறியா சொல்லித்தொலைடா என் வயித்துல நெருப்பை அள்ளிக்கொட்டாதே” என்று சகட்டு மேனிக்கு கத்தினார்.

தையல்நாயகியோ “அக்கா ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க உங்களுக்கு பிபி அதிகமாயிடும்” என்று கோமளத்தின் அருகே வந்து நின்றார்.

“இந்த வீட்டோட பாரம்பரியத்தை கெடுக்க நான் விடமாட்டேன் நாயகி” என்றவரோ 

“இந்த காதல் கத்தரிக்கா எல்லாம் இந்த வயசுல வருவதுதான் அந்த பொண்ணை மறந்துடு நீ சென்னைக்கு வேலைக்கு போகவேணாம் உன் அண்ணன் பால்பண்ணையில வேலை பாரு அடுத்தமாசம் உனக்கு கல்யாணத்தை நடத்தி வச்சிடறேன் உன் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு எங்க வேணாலும் வேலைக்கு போய்க்கோ” என்று வெடுக்கென்று வார்த்தைகளை வெடிக்கவிட்டார் கோமளம்.

“அம்மா நா.நான் லவ் பண்ணுற தீபாவோட குடும்பம் நம்மளை போல வசதியானங்கங்கதான் நீங்க எதிர்பார்க்கற சீர் சினத்தியெல்லாம் நிறைய செய்வாங்கம்மா அண்ணாகிட்ட சொல்லிட்டேன்” என்றான். 

கண்ணன் பேசட்டும் என்று குமட்டில் கைகொடுத்து உட்கார்ந்திருந்தான் வல்லவராயன்.

“ஓ எல்லாரும் பேசி முடிவு பண்ணிட்டீங்கல்ல. இந்த கோமளத்தை யாரு மதிக்குறா எனக்கு இந்த வீட்டுல மரியாதையே இல்லாம போச்சு”  என்று கண்ணை கசக்க ஆரம்பித்தார்.

முல்லைக்கொடியோ ‘வசதியானவங்கனு சொன்னதும் இந்த பெரியம்மா பாரு அப்படியே பல்டியடிக்குது’ என்று இதழை சுளித்தாள்.

“பெரியம்மா என்ன பேசுறீங்க உங்களுக்கு யாரு மரியாதை கொடுக்காம போனாங்க சொல்லுங்க! கொஞ்ச முன்ன நீங்க முல்லையை அவசரப்பட்டு பேசினதுக்கு நான் பதில் கொடுத்தேன் அவ்ளோதான் நீங்கதான் இந்த வீட்டோட பெரிய மனுசி இப்படியெல்லாம் பேசாதீங்க தம்பி போன முறை விடுமுறைக்கு வந்தப்பவே என்கிட்ட அவன் ஒரு பொண்ணை காதலிக்குறேன்னு சொன்னான் நானும் அந்த பொண்ணோட வீட்டை பத்தி விசாரிச்சிட்டேன்! நமக்கு சரிசமமானவங்கதான் அடுத்த மாசம் கல்யாணத்தை வச்சிடுவோம் நீங்களும் நம்ம வீட்டு பெரியவங்களும் ஒரு எட்டு போய் பொண்ணு வீட்டை பார்த்து உறுதி வார்த்தை பேசிட்டு வந்துடுங்க” என்று அழுத்தி பேசினான்.

கண்ணனோ “தேங்க்ஸ் அண்ணா” என்றான் மெதுவாய் உதடசைத்து.

“நான் பொண்ணு வீட்டை பார்த்துட்டுதான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவேன் கண்ணா” என்றார் கட் அண்ட் அட் ரைட்டாக.

“உங்களுக்கு பொண்ணு பிடிக்கும் பெரியம்மா நான் இவ்ளோதூரம் சொல்லும்போது என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான் உயர்ந்த குரலில்.

“நீ. நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் இருந்தாலும் நானும் ஒருஎட்டு பொண்ணை பார்க்கணும்ல பட்டணத்துல வேலை பார்க்குற பொண்ணு முகத்துல மேக்கப்பை அள்ளிப்போட்டு என் மகனை மயக்கியிருப்பா மேக்கப் இல்லாம பார்க்கணும்” என அடம்பிடித்தார் கோமளம்.

“அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வரதா பொண்ணுவீட்டுக்கு தகவல் அனுப்பிடலாம் போதுமா பெரியம்மா” என்றான் புன்னகையுடன் ராயன்.

“ம்ம் போகலாம்” என்றவரோ “அடுத்து நதியா  படிப்பை முடிச்சதும் அவளுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணிடுவோம்” என்றதும் அதுவரை சிரிப்புடன் இருந்த நதியாவின் முகம் மாறியது.

1 thought on “கடுவன் சூடிய பிச்சிப்பூ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top