ATM Tamil Romantic Novels

உயிர்வரை பாயாதே பைங்கிளி

7

 

மகளுக்கு திருமணம் பேசி முடிப்பது என நினைத்து உடனே மகனுக்கும் சேர்த்தே முடித்து விட வேண்டும் என தையல்நாயகி முடிவு செய்துவிட்டார்…

 

 அவர் முடிவெடுத்தால் போதுமா அவரது மகன் அதற்கு சம்மதிக்க வேண்டுமே??? சொன்னால் தான் தைய தக்கா என்று அவர் தலை மேல் நின்று குதிப்பானே… 

 

முதலில் தங்கை கல்யாணத்திற்கு வா என்று அழைத்து இங்கு வந்ததும் அவன் கையில் காலில் விழுந்தாவது அவன் திருமணத்தையும் நடத்தி முடித்து விட வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் பெண் கொடுக்கும் இடத்திலேயே பெண்ணையும் எடுக்க  முடிவு செய்து விட்டார்… எல்லா ஏற்பாடும் செய்த பின்பு தானே அவர் கிரிதரனை அழைத்தது…

 

இதோ மாப்பிளை வீட்டார்கள் வந்து விட்டனர்… இன்னும் அவரது மகளை காணோம்…

 

“எங்க போயி தொலைஞ்சா இவள்…?? கோவில் மாடு மாதிரி ஆடி அசைஞ்சு இவள் வீடு வந்து வரதுக்குள்ள விடிஞ்சிடும் போலையே… இங்க மாப்பிளை வீட்டுக் காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க… கொஞ்சமாவது கூறு இருக்கா இந்த சின்ன சிறுக்கிக்கு வரட்டும்…(கூற பத்தி இந்த அம்மா பேசுது… )மெத்த படிச்சா மேதாவின்னு நினைப்பு… வரட்டும் வரட்டும்  நான் நினைச்ச மாதிரி எல்லாம் நல்லபடியா நடந்து முடியட்டும் அப்புறம் வச்சிக்கிறேன் இவளுக்கு கச்சேரி…ஐயோ இந்நேரம் பார்த்து எங்கடி போயி தொலைஞ்ச…!!”என வாசலுக்கும் வீதிக்கும் எட்டி பார்த்துக் கொண்டே இருந்தார் தையல் நாயகி…

 

அவருக்கு எப்படியாவது இந்த சம்பந்தம் நடந்தே தீர வேண்டும்…பின்னே ஃபாரின் மாப்பிளை என்றால் சும்மாவா…சொத்து பத்தில் வேறு இவர்களை விட எல்லாமே உசத்தி திருமணம் முடிந்த கையோடு மேனகையை ஃபாரின் அழைத்து கொண்டு போவதாக  பேச்சு வேறு… வெண்ணை திரண்டு வரும் நேரம் பார்த்து இந்த மட்டி பெண் மண் சட்டியை உடைத்து விட கூடாதே அடியே மேனகா சீக்கிரம் வாடி… என்றவருக்கு காலில் சுடுதண்ணி கொட்டியது போல் அவசரம்…

 

இதோ அதோ என்று சோர்வுடன் வீட்டின் வாசல் படியில் கால் வைத்தது மட்டும் தான் அவளுக்கு தெரியும் மறு நொடியே ஈர்ப்பு சக்தியால் உள்ளே இழுத்து தள்ளப் பட்டவளுக்கு ஒரு நிமிடத்தில் உலகமே விளங்கவில்லை… சற்று நின்று நிதானித்த பின்பே  அவளை இழுத்தது அவள் அன்னை என்றும் ஏன் தாமதம் என்று ஏதோ திட்டிக் கொண்டு இருக்கிறார் என்பதும் புரிய… தன் காரணத்தை விளக்கி விடும் முனைப்புடன்…

 

“அம்மா நான் அப்போவே வந்துட்டேன்… அங்கு தெரு முனையில சீரளான் மாமா விழுந்து கிடந்தாரு…!”என அவளை முழுவதும் முடிக்க விடவில்லை…

 

“கெட்டது சனி… உனக்கு என்னடி அந்த குடிகார பயலோட பேச்சு… உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் பள்ளிக்கூடத்துக்கு போனோமா பாடம் நடத்துனோமா வீட்டுக்கு வந்தோமான்னு இருக்கணும்னு… என் குடும்ப மானத்தை வாங்குறதுக்குனே பொறந்து இருக்கான் ஆகாவலி பையன்…அவள் விட்டுட்டு போனா ஊருல வேற பொண்ணா இல்லை… மூக்கு முட்ட குடிச்சுகிட்டு  கண்ட இடத்துல விழுந்து கிடப்பான்… இவனால நாலு நல்ல காரியத்தில் தலை காட்ட முடியல என்னால…எனக்குன்னு வந்து கூட பொறந்து இருக்கான் பாரு சல்லி பயல்… சரி சரி என் வாய பராக்க பாத்துட்டு நிக்காம சீக்கிரம் போய் குளிச்சிட்டு புடவை கட்டிட்டு கீழ வா… என்றவர் மேனகை என்ன சொல்ல வருகிறாள் என்பதை கூட காதில் வாங்காது அவளை பிடித்து இழுத்து போய் அறையில் விட்டு இன்னும் அரை மணி நேரத்தில் அலங்காரம் பண்ணி வர இல்லை… உன் காத பிடிச்சு திருகி இழுத்துட்டு போக நானே வருவேன் என எச்சரித்து விட்டு சென்று விட…

 

ஏன் எதுக்கு என்று புரியாவிட்டாலும் அன்னை சொன்னார் என்பதற்காக புடவை கட்டி பவுடர் பூசி கீழே வந்தால் மேனகா… மிதமான அலங்காரத்திலே ஆளை வசீகரிக்கும் அழகு… மெல்லிய கொலுசு ஒலி சிணுங்க சித்திரப் பாவை நடந்து வந்தாள்… அது வரை சலசலத்து கொண்டு இருந்த கூட்டம் மொத்தமும் அடங்கி போனது… 

 

கூடி இருந்த கூட்டத்தை குழப்பமாக பார்த்தப் படி நின்று இருந்த மேனகையிடம் காபி ட்ரேயுடன் வந்த தையல்நாயகி என்னடி கல்லு மாதிரி பார்த்துட்டு நிக்கிற கூட்டத்தை பார்த்து வணக்கம் சொல்லு சீக்கிரம் சீக்கிரம் என யாருக்கும் தெரியாமல் அவள் கையில் கிள்ளிட… ஆ வணக்கம் என தாமரை மொட்டாக கை கூப்பினாள்… இந்தா இந்த காபிக் கொண்டு போய் அங்க நடுவுல உட்கார்ந்து இருக்குற மாப்பிளை கிட்ட கொடு என அதிகாரமாக ஏவ…

 

“அம்மா என்னமா இது… இப்படி திடீர்னு என்கிட்ட கூட சொல்லத் தோணலையா…!!”என மேனகை தையல் நாயகியிடம்  பாவமாக  கேட்டாள்…

 

“உனக்கு எதை எப்படி பண்ணனும்னு எனக்கு நல்லா தெரியும்… நான் உன் அம்மாடி நான் சொல்றத நீ செய் இப்போ போய் மாப்பிளை கிட்ட சிரிச்ச முகமா இந்த காபி தண்ணிய கொடு…!!” என அவள் கைகளில் ட்ரேயை திணித்து அவளை வலுக்கட்டாயமாக கூட்டத்தின் முன்னால் தள்ளிவிட்டவர்… ஹாஅ அஅது அவளுக்கு கூச்ச சுபாவம் வேற ஒன்னும் இல்லை நீங்க காபி எடுத்துக்கோங்க என சமாளித்து…  மேனகைக்கு சைகை காட்ட அவளும் எதிர்த்து பேசும் திராணி இல்லாது விதியே என நொந்தப் படி தையல் நாயகி சொன்னவாறே செய்தாள்…

 

 அனைவரும் விடைபெற்று சென்ற பின்பு தனியே தன் அன்னையிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்து விட்டாள் மேனகை… “அம்மா எனக்கு இப்போ கல்யாணம் எல்லாம் வேணாம்மா…!”  என அவள் கூறும் எந்த மறுப்புகளையும் தையல்நாயகி பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை… 

 

 “அம்மா  எது செஞ்சாலும் உன் நல்லதுக்கு தான் செய்வேன் மேனகா… மாப்பிள்ளை வீட்ல எல்லாருக்கும் உன்ன புடிச்சு போச்சு… நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோடையே கல்யாணத்தை வெச்சுக்கலாம் சொல்லிட்டாங்க… கல்யாணம் முடிஞ்ச கையோட உன்னை வெளிநாட்டு கூட்டிட்டு போக போறாராம்…அதுக்கு எதோ லிசாவோ மிசாவோ எடுக்கணுமாமே நாளைக்கு மாப்பிளையே வந்து கூட்டி போறாராம்…கிளம்பி தயாரா இரு… மாப்பிள்ளை கிட்ட பாத்து பக்குவமா இரு ஆம்பளைங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க பொம்பளைங்க நாமதான் புரிஞ்சு நடந்துக்கணும் சரியா… சீக்கிரம் போய் படுத்து தூங்கு  அப்போ தான் காலையில கண்ணு முழிக்க முடியும்…போ  போ  என தட்டி கொடுத்து அனுப்பி விட்டார்… இதற்கு மேல் இதைப் பற்றி பேசாதே என்னும் பொருள் அதில் அடங்கியிருந்தது…

 

 தன் விதியை எண்ணி நொந்தபடி படுக்கையில் விழுந்த மேனகைக்கு  அந்த இரவு தூங்கா இரவாக கண்ணீருக்குள் ஆழ்ந்து போனது…

 

 ஒருத்திக்கு இரவு இப்படி என்றால் மற்றொருத்திக்கோ எப்படியோ??  அங்கு இரவின் மடியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திலோத்தமாவுக்கு… ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக சஞ்சரித்துக் கொண்டிருந்த அவளின் கனவில் ஏற்பட்ட சுழலில், கொஞ்சம் கொஞ்சமாக வலிமை பெற்று அவளை வாரி சுருட்டிக் கொள்ள… சுழலில்  சிக்கிக் கொண்டவளுக்கு கரை சேர வழி தெரியாமல் காப்பாற்ற ஆள் இல்லாமல் மாட்டிக்கொண்டு தனியாக பரிதவித்தவள் கடலுக்குள் முழ்கி தண்ணீருக்கு அடியில் மூச்சுத் திணறல் ஏற்பட… அவள் கை கால்களை அடித்து தப்பிக்க முயல அது முடியாமல் யாரோ அவள் கை கால்களை கட்டி போட்டு இருக்க… மூச்சுக்கு தவித்தபடி மூர்ச்சையாக போன சமயம் உயிருக்காக போராடி அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் திலோ… கெட்ட சொப்பனம், புரியவே சில மணி நேரங்கள் ஆனது…

 

 சொப்பனம் தான் என தெரிந்த பின்னே அவள் உடல் தளர்ந்தது உள்ளம் நைந்தது இதயம் மட்டும் இரட்டிப்பாக துடித்தது…

 

 தைரியமும் தன்னம்பிக்கையும் மிக்கப் பெண் திலோத்தமா… ஆனால் அவள் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அழிக்கக் கூடிய வல்லமை தமிழில் ஒரு சொல்லுக்கு உண்டென்றால் அதற்குப் பெயர் கிரிதரன் என்று அவளே நம்பி இருக்க மாட்டாள்… ஆனால் எப்போது அவன் பெயரை அவள் காதுகள் கேட்டதோ… அப்போது முதல் இனம் புரியாத ஒரு பாரம் அவள் இதயத்தை அழுத்த தொடங்கியது…அதன் விளைவே இந்த கெட்ட சொப்பனம்… 

 

கிரிதரன் இந்தியா வரப்போகிறான் என்ற தகவல் வந்ததிலிருந்தே… திலோவுக்கு சிறு அச்சம் உள்ளுக்குள் ஓடிக்கொண்டு தான் இருந்தது அதை யாருக்கும் காட்டாமல் மறைத்து வைக்க எவ்வளவு முயன்றாலும் அவளால் அதை கட்டுப்படுத்த  முடியவில்லை…

 

 இரவில் தூக்கம் கெட்டு எழுந்து அமர்ந்தவளுக்கு ஒற்றே சிந்தனையாய் கிரிதரனின் நினைப்பு மட்டுமே… “அவன் வந்தால் என்ன பண்ணுவான்…?

 

 அவனை எப்படி கையாள்வது என்று யோசித்தபடி எழுந்து நடக்க தொடங்க… அவளின் அசைவுகளால் அமைதியான இரவில் சிறு சலனம் உண்டாக… வெளியே திண்ணையில் படுத்து இருந்த பஞ்சாட்சரமும் எழுந்து கொண்டார்…

 

ஆத்தா என்னாச்சு தூக்கம் வரலையா…?? என்றப்படி எழுந்து அமர…

 

 “அச்சச்சோ சாரி மாமா உங்க தூக்கத்தை கெடுத்துட்டேனா… எனக்கு ஒன்னும் இல்ல மாமா சின்ன கெட்ட கனவு அவ்வளவுதான்  தண்ணிக் குடிக்க எழுந்தேன் தெரியாம சத்தம் வந்துடுச்சி நீங்க தூங்குங்க மாமா…!!” என அவரை சமாதானப்படுத்த முயல…

 

“ சரித்தா அப்படியே  தண்ணிய எனக்கு கொஞ்சம் கொண்டு வா நாக்கு வறண்டு போய் இருக்கு…!!” என்றவர் இடையில் எழுந்ததால் தண்ணீர் கேட்க…

 

 இவளும் குடித்துவிட்டு அவருக்கும் கொண்டு போய் கொடுக்க… அதை வாங்கி பருகியவர்  சொம்பை திலோ கையில் கொடுத்துவிட்டு…

 

“ஆத்தா…!!! முன்ன மாதிரி இல்ல இப்ப காலம் மாறி போச்சு…நம்மள மீறி எவனாலும் எதையும் புடுங்கிட முடியாது… நான் இருக்கேன்  ஆத்தா… எல்லாம் நல்லபடியா நடக்கும் மனச  போட்டு ஒலப்பிக்காம…போய் நிம்மதியா தூங்கு… எல்லாம் நமக்கு சாதகமாத்தேன் நடக்கும்…!!” என மருமகள் கலக்கம் அறிந்து ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்…

 

 முதலில் திலோத்தமா   திகைத்தாலும்…பின்பு அவர் கூற வரும் கூற்றில் இருந்த உண்மையை புரிந்து கொண்டவள்… ஆமா நான் இப்ப முன்ன மாதிரி இல்ல… நான் ஏன் பயப்படணும் எதுக்கு பயப்படணும்… அப்படி என்ன பண்ணிடுவான் அவன்… பார்த்துக்கலாம்  என சொல்லி தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டவள்… நிஜமாகவே அவனை எதிர்கொள்ளும் போது இந்த திடம் இருந்த இடம் தெரியாது காணாமல் போகும் என்று அறிந்து இருக்க மாட்டாள்…

 

 இதோ அதோ என்று  விடிந்தால் திலோத்தமாவின் திருமணம்… இரண்டு வீட்டிலும் ஒரே சலசலப்பு… என்னவாக இருக்கும் அடுத்த எபில சொல்றேன் அதான??? (மக்கள்)

ஆத்தி என்ன இப்படி கிளம்பிட்டீங்க (மீ ரைட்டர்)… அப்போ என் டயலாக் (கிளம்பிட்டாங்க ஐயா கிளம்பிட்டாங்க  ) இதானா???

 

3 thoughts on “உயிர்வரை பாயாதே பைங்கிளி”

Leave a Reply to Carmichael Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top