அத்தியாயம் 10
“இந்தா புள்ள கண்ணை விரிக்காத வா தூங்கலாம் காலையில எழுந்து பரீட்சைக்கு படிக்கணும்ல” முல்லையின் கையை பிடித்தான்.
“பீரியட்ஸ் நேரத்துல பாய்லதான் படுக்கணும்னு அம்மா சொல்லுவாங்க எனக்கு பாய்ல படுத்தாதான் தூக்கம் வரும் இந்த மாதிரி நேரத்துல உங்க மேல உரசக்கூடாதுனு சொல்லியிருக்காங்க சின்னய்யா… நான் வேற அம்மா சொன்னதை மறந்து உங்களுக்கு முத்தம் கொடுத்துட்டேன்” என்றாள் கண்ணை சோளி போல உருட்டிக்கொண்டு.
“பீரியட்ஸ் டைம்ல உனக்கு எந்த அசௌகரியமும் இருக்கக்கூடாதுதான் தள்ளி இருக்கச் சொன்னாங்க பெரியவங்க… காலம் போன போக்குல ஒன்னு ஒன்னா நம்மளே சடங்கு சம்பிரதாயம் எல்லாம் மாத்திக்கிட்டோம் உன்னை நான் தொட்டதால எனக்கு எதுவும் ஆகலையே இப்போ உனக்கு பீரியட்ஸ் ஆன சமயத்துல உடம்பு சரியில்லாம போச்சுனு வைச்சுக்கோ உன்கூட எப்பவும் வீட்டு பெரியவங்க இருக்க முடியுமா. புருசன் பொண்டாட்டிக்குள்ள அருவருப்போ ஒளிவு மறைவோ இருக்க கூடாது இதுதான் என்னோட பழக்கம் சரியா” என்றான் அழுத்தமாக.
ஆனால் அவள் இன்னுமே கண்ணை உருட்டிக்கொண்டிருந்தாள்.
“எனக்கு ஒன்னுனா நீ என்னை பார்த்துப்பல்ல… அது போலத்தான் நானும் உனக்கு உடம்பு சரியில்லாத நேரத்துல உன்னை பார்த்துப்பேன் இப்ப என்னோட மெத்தையில வந்து படு” என பிடிவாதமாக அவளது கையை பிடித்தான்.
“அச்சோ சின்னய்யா சொன்னா கேளுங்க எனக்கு பாய்ல படுத்துதான் பழக்கம் பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரினு அம்மா சொல்லுவாங்க” என்று சிணுங்கி அவனது கையை மெதுவாக விலக்கி விட்டாள்.
“சரி உன்னோட பாய்ன்ட்டுக்கே நான் வரேன்” என்று சலிப்பாக தலையை ஆட்டிவிட்டு விடாப்பிடியாக அவளது கையை பிடித்து எழும்பி நிற்க வைத்தவன் பாயை சுருட்டி ஒரு ஓரமாக வைத்துவிட்டு வாட்ரோப்பிற்கு மேல் இருந்த மெத்தை விரிப்பை எடுத்து வந்து கீழே போட்டவன் “பாய்ல படுக்க வேணாம் மார்பிள்ஸ்ல குளிர் உடம்புக்கு ஒத்துக்காது போயிடும் இந்த மெத்தையில படுத்துக்கோ” என்றபடியே மெத்தை விரிப்பை விரித்து விட்டு தலையணையை எடுத்துப்போட்டு அவளை படுக்கச் சொன்னதும் அவளால் மறுக்கமுடியவில்லை.
உடல் அசதியாக இருக்க மெத்தையில் படுத்ததும் கொட்டாவி விட்டு “குட் நைட் சின்னய்யா” என்று இதழ் விரித்தாள்.
“குட் நைட்” என்றவனோ அவளது பக்கத்திலே படுத்துவிட்டான்.
“அச்சோ சின்னய்யா என்ன பண்ணுறீங்க?” என்று துள்ளி எழுந்து அமர்ந்தாள்.
“சும்மா சத்தம் போடாதே புள்ள அமைதியா தூங்கு” என்று அவன் அரட்டியதும் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
அவளை விட்டு இடைவெளி விட்டுத்தான் படுத்திருந்தான். ஆனால் அவளது முகத்தில் தூக்கத்தில் கூட குழந்தைதனம் மின்னுவதை கண்டு அவனது உதட்டுக்குள் சிரித்துக்கொண்டான். ஒரு நாளில் இவள் இவனை வசியம் செய்துவிடவில்லை. பலநாளாக இவளது குண்டுகண்கள் இவனை ஏதோ பண்ணியிருக்கிறது. முல்லை மனைவியாக வருவாளென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. தெய்வமாக கொடுத்த தேவதையை அவன் கொண்டாடாமல் இருப்பானா என்ன! பூங்கொடியை மாமன் மகள் என்ற உரிமையில் மணக்க விரும்பினான். ஆனால் முல்லைக்கொடியின் மீது ஒரு வித ஈர்ப்பு துறுதுறுவென்று சுற்றி திரியும் பெண் மீதுள்ள காதலா என்பது அவனுக்கு புரியாத புதிராக இருந்தது.
தன்னை மறைந்து நின்று குறுகுறுவென்று பார்க்கும் முல்லையை அவன் கவனிக்காமல் இல்லை. ஒருநாள் காலை வேளையில் அவனது அறையில் தண்டால் எடுத்துக்கொண்டிருக்கும்போது ரெட்டை சடையும் பாவாடை சட்டையில் தலையை நீட்டி திருட்டுத்தனமாய் தன் அறையை எட்டிப்பார்த்தவளின் ஒற்றை சடையை பிடித்து “இங்க என்ன பண்ணுற?” என்று அவனது கரகரப்பு குரலில் கண்ணை கசக்கி அழ ஆரம்பித்திருந்தாள்.
“இப்ப என்ன கேட்டுப்புட்டேன்னு இப்படி அழுவுற?” என்று அவன் குரல் இன்னுமே உயர்ந்து வர.
“பெ.பெரியம்மா உ.உங்க அறையை சுத்தம் பண்ணச் சொ.சொன்னாங்க” என்று அவள் இதழ் பிதுக்கினாள்.
“சரி சரி அழாதே கண்ணைத் தொடைச்சிக்கோ” என்று அவளது சடையை விட்டு “அறையை சுத்தமா க்ளீன் பண்ணிட்டு போகணும் ஆமா இப்ப என்ன படிக்குற?” என்றான் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு.
“நா.நான் பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எழுதியிருக்கேன் உங்க தங்கச்சி நதியாகூடதேன் படிக்குறேன் உங்களுக்கு தெரியாதா?” என்றாள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு.
“என் தங்கச்சி என்ன படிக்குறானு தெரியும் நீ என்ன படிக்குறேன்னு எனக்கு தெரியாதுமா ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்தணும் இப்படி வந்து மறைஞ்சு நின்னு என்னை எட்டிப்பார்க்க கூடாது” விரல் நீட்டி எச்சரிக்கை செய்து துண்டை எடுத்து தோளில் போட்டு குளிக்கச் சென்றிருந்தான்.
ஷவரை திறந்து நின்றவனுக்கு சின்னப் பெண்ணின் கண்ணீர் அவன் முன்னே வந்து நின்றது.
‘ச்சே அவ சடையை பிடிச்சு இழுத்துட்டோமே வலிச்சிருக்கும்ல எந்த பொண்ணையும் நான் தொட்டு பேசினது கிடையாதே! இந்த பொண்ணை ஏன் தொட்டோம் அந்த பொண்ணோட கண்ணை பார்க்கும் போது எனக்கு ஏதோ ஆகுதே! என்னடா உனக்கு ஏழு கழுதை வயசு ஆச்சு சின்னப் பொண்ணுகிட்ட லவ் வந்திருக்கா என்ன!’ தன்னை தானே கடிந்துக் கொண்டு குளித்து முடித்து வெளியே வரும்போது முல்லை அங்கே இல்லை. அவன் கூறியது போலவே அறையை சுத்தமாக வைத்துவிட்டுச் சென்றிருந்தாள். அவனது இதழில் குறுநகை எட்டிப்பார்த்தது.
இன்று அவள் தனக்கு முத்தம் கொடுக்கட்டுமாவென்று செல்லமாக வெட்கப்பட்டு கேட்டதும் இவனுக்கோ இருபத்தைந்து வயது வாலிபன் போல காதல் ஊற்று பெருக்கெடுத்து ஓடியது! அவனது வெட்கத்தை மறைக்க அரும்பாடு பட்டது அவனுக்கு மட்டுமே தெரியும். அவள் முத்தமிட்டதும் அவளை அள்ளி அணைத்துக்கொள்ள துடித்த கரங்களுக்கு கடிவாளம் போட்டுக்கொண்டிருந்தான்.
சின்னப் பெண் தன்னை தாங்குவாளா! அதுவும் படிக்கற பொண்ணு தொந்தரவு பண்ணக்கூடாது என்று தன் ஆசைகளை மனதிற்குள் ஒளித்து வைத்துக்கொண்டான்.
கல்யாணத்தில் ஒரு துளி விருப்பம் இல்லாது இருந்தவனுக்கு கார்த்திகாவின் காதல் விவகாரம் தெரிந்து மண்டபத்தில் இருந்து கொண்டு பாலாஜிடம் ராஜாவை அழைத்து வரத்தான் அனுப்பியிருந்தான். ஆனால் இடையில் முல்லைக்கொடி சிறுபிள்ளைத்தனமாக கார்த்திகாவை மண்டபத்தை விட்டு திருட்டுத்தனமாக காரில் ஏற்றிவிட்டதை ராயன் அவனது அறை ஜன்னல் வழியாக பார்த்துவிட்டான்.
ராயனுக்கு திருட்டுத்தனம், பொய் புரட்டு, ஏமாற்றுவது, துரோகம் என்பதே அவனுக்கு பிடிக்காது அக்மார்க் முத்திரையிட்ட ஒழுக்கமான ஆண்மகன். கோபத்துடன் வெளியே வந்தவன் முல்லையின் கன்னத்தில் இடியென கன்னத்தில் அறைந்திருந்தான்.
அடுத்த வீட்டுப் பெண்ணை அடிக்க உனக்கென்ன உரிமையிருக்கிறது ஏன் சின்னப் பெண்ணை அடித்தாய் என்ற எண்ணத்தில் தவித்துக் கொண்டிருந்தான். அவனது ஆழ்மனமோ இல்லை அவள் தவறு செய்கிறாள் அதனால் தான் அடித்திருக்கிறோம் என்று இரும்பு மனம் கொண்டவனையே அசைத்து பார்த்தாள் முல்லைக்கொடி.
தன்னிடம் அடியை வாங்கிக்கொண்டு அப்பாவியாய் திருதிருவென முழித்துக்கொண்டு நின்ற பெண் மீது பரிவு வந்துவிட்டது ராயனுக்கு.
அதுவும் ராஜா கார்த்திகாவின் கழுத்தில் தாலி கட்டியபிறகு தென்னரசு தனக்கு கல்யாணம் நின்று விட்டது என்று பரிகாசம் செய்த பொழுது அவள் தென்னரசுவை கண்கள் தெறிக்கும் அளவிற்கு முறைத்து நின்றதையும் அவள் உதடுகள் தன்னை கல்யாணம் பண்ணிக்குறேன் என்று அசைந்ததையும் கண்டு முல்லையை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடு தான் முல்லையிடம் தன்னை கல்யாணம் செய்துக் கொள்கிறாயா என்று கேட்டுவிட்டான்.
அவள் கண்களால் சம்மதம் தெரிவித்ததை பார்த்துக்கொண்டுதானே அவள் கழுத்தில் தாலி கட்டினான். “உனக்கு இருக்கு புள்ள” என்று அவள் கழுத்தில் தாலி கட்டும் தருணம் அவளை நிகழ் காலத்திற்கு கொண்டு வந்திருந்தான்.
தூங்காமல் தன் அருகே படுத்திருக்கும் மனைவியின் பௌர்ணமி முகத்தை பார்த்திருந்தான். மூன்றாம்பிறை நெற்றி… காண்டீபனின் கையில் இருக்கும் வில்போல் புருவம்… மான்விழி கண்கள். பால் பன் போல உப்பியிருக்கும் கன்னம். சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அவள் உதடுகள் சாயம் பூசாமலே இளம் சிவப்பு ரோஜாவாய் சிவந்திருக்கும் உதடுகள் தாண்டி கழுத்தில் பதிய அவனது கண்களுக்கு கடிவாளம் போட்டான்.
அதற்கு மேல் போகக்கூடாதென… ஆனால் அவனது மனமோ உன் பொண்டாட்டி நீ பார்க்கலாம் என்று உரிமை கொடுக்க அவளது அழகுகளை தாண்டி அவளது இடை அழகையும் தங்கு தடையின்றி பார்த்து இரசித்தான் கள்ளன் ராயன். இரவு நேர காதலன் ஆகிவிட்டான் போலும்.
காலையில் அலாரம் அடிக்கும் முன்னே “இந்தா புள்ள எழுந்திரு” என்று குரல் கொடுத்தான்.
அவளோ “ப்ச் தூக்கம் வருது” என்று அவனது மார்பில் கையை போட்டு அவனுடன் நெருங்கிப்படுத்து ராயனுக்கு பெரும் சோதனையை கொடுத்தாள் முல்லைக்கொடி.
அவளது கையை தன்னிடமிருந்து எடுத்து விட்டு “ஏய் புள்ள” என்று அவளது காதோரம் மெலிதாய் குரல் கொடுத்தான்.
“ம்ம்” என்று சிணுங்கியபடியே கண்விழித்தவளுக்கு ராயனின் முகம் நெருக்கமாய் இருக்கவும் ‘அச்சோ இப்படி நெருக்கமாய் படுத்திருந்தோமா!’ என்று முகத்தில் பயந்தோடு எழுந்து அமர்ந்தவள் பெண்மைக்கே உள்ள பழக்கத்தில் தான் அணிந்திருந்த சுடிதாரை சரி செய்தாள்.
அதுவரை கீற்று புன்னகையடன் இருந்த ராயனின் முகம் அவள் ஆடையை சரி செய்ததும் உர்ரென்று மாறியது என் மேல் நம்பிக்கை இல்லையா உனக்கு என்று முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டான்.
கடுவனின் செய்கை அறியாத பெண்ணோ போர்த்தியிருந்த போர்வையை மடித்து வைத்து விட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து வரும் நேரம் மெத்தை விரிப்பை சுருட்டி ஓரமாய் வைத்திருந்தான். குளித்து வந்தவள் பால்கனியில் எட்டி பார்த்து தண்டால் எடுக்கும் கணவனை ஒரு முறை சைட் அடித்து விட்டு புத்தகத்தை எடுத்து வைத்து விட்டாள் படிப்பதற்கு.
காலை டிபனை ராயனின் அறைக்கே எடுத்துச் சென்றிருந்தார் தையல்நாயகி.
“ஏன்மா அறைக்கு டிபன் எடுத்துட்டு வந்திருக்கீங்க நாங்க கீழே டைனிங் டேபிளுக்கு வருவோம்ல” என்றான் கைகாப்பை போட்டபடியே.
“முல்லை பசி தாங்க மாட்டா நைட்டும் சரியா சாப்பிட்டாளோ என்னவோனு தான் டிபன் கொண்டு வந்திருக்கேன் தம்பி” என்று சமாளித்தார் தையல்நாயகி.
முல்லை கீழே டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை கண்டால் கோமளம் வீட்டுக்கு தூரமான நேரத்துல டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடணுமானு முல்லையை அவமானப்படுத்தி பேசிவிட்டால் ராயனுக்கு கோபம் வந்துவிடும் குடும்பத்தில் பிரச்சனைகள் வரக்கூடாதென மகனுக்கும் மருமகளுக்கும் டிபன் எடுத்து வந்து விட்டார்.
முல்லைக்கும் பசியாய் இருக்க ஷாலுக்கு அவசரமாய் பின்னை குத்திக்கொண்டு தையல்நாயகி போட்டு வைத்த இட்லிக்கு சாம்பாரை ஊற்றி ராயனிடம் கொடுத்தாள்.
அவள் கண்களில் அவளது பசியை உணர்ந்தவன் “நான் பிறகு சாப்பிட்டுக்குறேன் நீ சாப்பிடு” என்று தட்டை அவளுக்கு திருப்பிக்கொடுத்தான்.
அவளோ “நீங்க சாப்பிடாம எப்படி நான் சாப்பிடறது?” என்று தயங்கி கண்ணை உருட்டினாள்.
“எனக்கு இப்போ பசியில்ல ஒன்பது மணிக்கு முக்கியமானவங்களை பார்க்க போகணும் அவங்க கூட டிபன் சாப்பிடலாம்னு இருக்கேன் நீ அதுவரை சாப்பிடாம இருப்பியா புள்ள?” என்றான் உரத்த குரலில்.
“ஏன் தம்பி புள்ளைக்கிட்ட இப்படி முரட்டுத்தனமா பேசுற?” என மகனை கடிந்துக் கொண்டதும்
அவளோ “ஆமாங்க அத்தை என்கிட்ட வேக வேகமா பேசுறாங்க சின்னய்யா” என்றபடியே இட்லியை சாப்பிட ஆரம்பித்தாள். சாமி எனக்கு சோறுதான் முக்கியமென்று…
“நான் சாதாரணமாத்தேன் உங்க மருமக கிட்ட பேசுறேன்… உங்க மருமக என்கிட்ட தைரியமா பேசணும்னு பாடம் எடுக்க வேண்டியதாய் இருக்கு” என இடுப்பில் கைகொடுத்து தன் மனைவியை பார்த்தவாறே பெரும்மூச்சுவிட்டான்.
“படிக்கற புள்ளதானே கொஞ்சநாள் போச்சுனா சரியாகிடுவா தம்பி நீயும் இரண்டு இட்லி சாப்பிட்டு போ சாமி” என்றவரிடம்
“இல்லம்மா வெளிநாட்டுல இருந்து நம்ம பால்பண்ணையை பார்க்க வராங்க அவங்களுக்கு டிபன் ஏற்பாடு பண்ணியிருக்கேன் அவங்க கூட சாப்பிடலைனா நல்லாயிருக்காதுங்கம்மா” என்றவனோ மூன்று இட்லியை சாப்பிட்டு தட்டில் கைகழுவும் மனைவியை கண்டு “காத்தடிச்சா பறந்துடுவ போலிருக்க இன்னும் ஒரு இட்லி சேர்த்து சாப்பிடு” என்று அவனாகவே இட்லி பாத்திரத்திலிருந்து இரண்டு இட்லியை எடுத்துவைத்தான்.
இங்கே இருப்பது சரியில்லையென்று மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க விரும்பி “தம்பி ராயா அப்பாவுக்கு ராகி இட்லி சூடா ஊத்தி கொடுக்கணும் நீங்க சாப்பிட்டு வாங்க” என்று கொண்டு வந்த இட்லி பாத்திரத்தை எடுத்துச் சென்று விட்டார் தையல்நாயகி.
முல்லையோ ராயன் தட்டில் வைத்த இட்லிகளை சாப்பிட முடியாமல் வாயில் திணித்து அதக்கிக்கொண்டிருந்தாள்.
“சீக்கிரம் சாப்பிடுமா காலேஜ்க்கு டைம் ஆச்சுல” என்று மணிக்கட்டை திருப்பி அவளுக்கு காட்டினான் மணி எட்டு முப்பது ஆகியிருக்க “அச்சோ டைம் ஆச்சு” என்று மளமளவென சாப்பிட்டு முடித்தவளுக்கு விக்கல் எடுக்க “பார்த்து பார்த்து” என்று அவளது தலையை லேசாக தட்டி தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொடுத்தான்.
தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு அவனது முகத்தையே பார்த்திருந்தாள் எனக்கென வந்த ஆண் தேவதையே இவன் அவளது நெஞ்சுக்குள் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
அவள் தோளை தொட்டதும் தட்டில் கையை கழுவி வாஷ் பேஷினில் தட்டை கழுவி ஓரமாக வைத்து விட்டு அவளது பேக்கை எடுத்து தோளில் மாட்டி “போலாங்க சின்னய்யா” என்றதும் அவளது கையில் ஏடிஎம் கார்டை கொடுத்தான்.
“எ.எனக்கு எ.எதுக்கு இது” என்றவளுக்கு வார்த்தைகள் வராமல் தந்தியடித்தது அவன் பார்த்த பார்வையில்.
“ஏன் எதுக்குனு கேட்ககூடாது உனக்கு ஏதாவது வேணும்னா வாங்கிக்கோ” என்றவன் ஏடிஎம் பின் நம்பரையும் அவளிடம் கூறியவன் அவளது கண்களை விடாமல் பார்த்திருந்தான் அவளது கண்கள் ஆயிரம் கதை பேசுகிறதே அவனிடம்.
முல்லை அடுத்த வார்த்தை பேசவில்லை கார்டை வாங்கி பர்ஸிற்குள் வைத்துக்கொண்டு அவன் பின்னே அமைதியாக நடந்தாள்.
வல்லவராயன் தோளோடு உரசி நடந்து வருவதை கண்டு பொருமினார் கோமளம்.
முல்லை ஒடிசலான பெண் கிடையாது அவளை சாப்பிட வைப்பதற்காக காத்தடிச்சா பறந்துடுவ போலவென்று அவளை அதட்டியிருந்தான் ராயன் இருவருக்கும் ஜோடிப்பொருத்தம் அமோகமாக இருந்தது.
ம்க்கும் என்று தோளை வெட்டினார் கோமளம். ராயனோ கோமளத்தை பார்க்க அவரோ தலையை குனிந்துக் கொண்டார்.
இன்றும் பாலாஜியை வீட்டுக்கு அழைத்திருந்தான் ராயன். ஆனால் அவனோ “கிளைண்ட்ஸ் வந்துட்டாங்க ராயா நான் அவங்களை ரிசீவ் பண்ண போயிட்டு இருக்கேன்” என்று கூறிவிட்டான்.
காலேஜ் கேட் முன்னே ராயன் காரை நிறுத்தியவன் “சாய்ந்தரம் காலேஜ் முடிஞ்சதும் நானே வந்து அழைச்சிட்டு போறேன் போன் போடுங்க” என்றவனோ தங்கையின் சோர்ந்த முகத்தை பார்த்தவன் “என்னடா பாப்பா நைட் தூங்காம பரீட்சைக்கு படிச்சியா முகமே சரியில்லையே?” என்று தங்கையின் முகத்தை பற்றினான் லேசாய் சிவந்திருந்தது.
“என்னாச்சு கன்னம் சிவந்திருக்கு?” என்றான் சந்தேக கண் கொண்டு.
“அ.அது தூக்க கலக்கத்துல எழுந்து சுவத்துல இடிச்சுக்கிட்டேன் அண்ணா” என்றாள் தயங்கியபடியே.
“பரீட்சை நேரத்துல படிக்காம மத்த நேரத்துல படிச்சு வச்சிருந்தா இப்படி கண்ணு முழிச்சு படிக்குற வேலை இருந்திருக்காது இனி பார்த்து சூதானமா இருக்கணும்” என தங்கையை கடிந்துக் கொண்டான்.
“சரிங்க அண்ணா” என்றாள் அண்ணன் முகம் பார்க்காமல்.
பாலாஜி போன் போடவும் “இதோ வந்துட்டே இருக்கேன் அவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடு” என்றவனோ முல்லையிடம் தலையசைக்க அவளும் “போய்ட்டு வாங்க” என்று உதடசைத்தாள். புன்னகையுடன் காரை எடுத்திருந்தான் ராயன்.
நதியாவுக்கு முகத்தில் சிரிப்பில்லை. கலகலவென்று பேசிக்கொண்டு வரும் நதியா இன்று அமைதியாய் நடந்து வரவும் முல்லைக்கு சந்தேகம் வந்தது.
“நேத்து ஈவினிங் பாலாஜி அண்ணாகூடதானே வந்த அண்ணா கூட ஏதாச்சும் சண்டை போட்டியா உன் கன்னம் சிவந்திருக்கு? நீ சுவத்துல இடிச்சிக்கிட்டேனு உன் அண்ணாவை நம்ப வைக்கலாம் என்னை ஏமாத்த முடியாதுடி என்ன நடந்துச்சு சொல்லு” என்று மரத்தடியிலேயே நதியாவை நிற்க வைத்துவிட்டாள்.
நதியாவோ நேற்று பாலாஜிக்கும் தனக்கும் நடந்ததை ஒன்று விடாமல் கூறியவள் “பாலாஜியை உயிருக்கு உயிரா லவ் பண்ணுறேன்டி அவர் என்னைய பிடிக்கலனு சொல்லிட்டாரு” என்று விசும்பினாள்.
“பாலாஜி அண்ணாவுக்கு உன் மேல விருப்பம் இருந்தாலும் உன் லவ்வை அவர் எப்பவும் ஏத்துக்க மாட்டாரு நதி உன்னை லவ் பண்ணினா கல்யாணம் பண்ணிக்கணும். பெரியம்மா உன்னை பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. உன் அம்மாவுக்கு பாலாஜி அண்ணாவை கண்டாலே பிடிக்காது அண்ணா வீட்டுக்குள்ள வந்தாவே முறைச்சிக்கிட்டே இருப்பாங்க நான் பல முறை பார்த்திருக்கேன்டி… நீ அண்ணாவை மறந்துட்டு” என்று அவள் பேசும் முன்னே “தயவு செஞ்சு பாலாஜியை மறக்க சொல்லாதடி முல்லை என்னால முடியாது. பாலாஜியை தவிர யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீ முந்தரிக்கொட்டையாட்டம் என் காதல் விசயத்தை யார்கிட்டயும் சொல்லி வைக்காதே” என்று கோபத்துடன் பேசிவிட்டு எக்ஸாம் ஹாலிற்குள் சென்றுவிட்டாள் நதியா .
“இவ எப்படியும் ஏழரையை கூட்டாம விடமாட்டா சின்னய்யாகிட்ட விசயத்தை சொல்லிடணும்” என்று பெரும்மூச்சு விட்டு எக்ஸாம் ஹாலிற்குள் சென்றாள் முல்லைக்கொடி.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
super sis